மார்குவெஸ்

மார்குவெஸ்
வாசிப்பு

கள்ளம்

கள்ளம்
வாசிப்பு

கம்பராமாயணம்...

கம்பராமாயணம்...
புனைவு

ஹேமா அக்கா

ஹேமா அக்கா
சிறுகதை

சில 'அரசியல்' பிரதிகள்

Wednesday, March 07, 2012

1,
உலக வரைபடத்தை விரித்து வைத்தால் அதிலொரு சிறு தீவாக மிதக்கும் இலங்கை, பலருக்கு இதமான காலநிலையுள்ள கடற்கரைகள் கொண்ட ஒரு நாடாகத் தெரியலாம். .   ஆனால் இதைப் பூர்வீகத் தாயகமாய்க் கொண்ட  -என்னைப் போன்றவர்களுக்கு-  இலங்கை விதைக்கும் நினைவுகளோ வேறுவிதமானவை. அது போர் என்கின்ற, எதைக் கொண்டு கரைக்கவோ அழிக்கவோ முடியாத, சிவப்பும் கறுப்புமான வர்ணங்களைக் கொண்ட மாபெரும் துயரச் சித்திரம். இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து 1948ல் விடுதலைபெற்றதிலிருந்தே ஒரு கொந்தளிக்கும் எரிமலையாக இருந்து வந்திருக்கின்றது. எப்போது தணலடங்கிய குழப்பாய் இருக்கும், எப்போது சாம்பல் விலத்திக் கொதித்தெழும் என்பதை எவருமே அவ்வளவு எளிதாக எடைபோட்டும் விட முடியாது.

1956ல் தனிச்சிங்களமே கற்கலாமென்கிற சட்டமும் அதன் நிமித்தம் 58ல் நிகழ்ந்த கலவரமும் ஆங்கிலேயர் அகன்றபின்னும் இலங்கை அமைதியாய் இருக்கப் போவதில்லையென்பதை அங்கிருந்த மக்களுக்கு உணர்த்தியது. அதன்பின் 1977ல் நிகழ்ந்த கலவரமும், உச்சக்கட்டமாய் 83 கலவரமும் இலங்கையில் சிறுபான்மையினரின் இருப்பைக் கேள்விக்குரியதாக மாற்றியது. தனிச்சிங்களச் சட்டம் மூலம் வளர்க்கப்பட்ட சிங்களத் தேசியத்திற்கு எதிர்வினையாக முன்வைக்கப்பட்ட அன்றையகால தமிழ்த்தேசியமும் ஒற்றைப் படையாக இருந்ததால், நாம் இன்றும் 50 ஆண்டுகளுக்கு முன் எம் உரிமைகளுக்காய்த் தொடங்கிய அதே இடத்திலிருந்து இன்னமும் நகரமுடியாது உலகிலுள்ள எல்லோரிடமும் கருணையை யாசித்துக் கொண்டிருக்கின்றோம். 1983 கலவரம் பெரும் உணர்ச்சிப்பிளம்பைத் தமிழ் இளைஞர்களிடம் ஏற்படுத்த, வீங்கி வெடித்த இயக்கங்களுக்கு எல்லாம் இந்திய அரசு ஆயுதங்களைக் கொடுத்து தன் 'பெருங்கருணை'யைக் காட்டியது கடந்தகால வரலாறு.

ஒரு சிறு தீவில் ஆயுதங்களைப் பெறுவது என்பதே கடினமாயிருக்க, அளவற்ற ஆயுதங்களோடு திரிந்த இயக்கங்கள் தங்களில் வல்லவர் யாரென்ற போட்டியில் தங்களுக்குள்ளேயே ஜனநாயகமில்லாது அடித்துக் கொண்டதும், முந்திக்கொண்டவர் தப்பிக்கொண்டாரென விடுதலைப் புலிகள் தனிப்பெரும் இயக்கமாக ஈழத்தில் வளர்ந்ததும், பிறகு நடந்தவைகளும் நாம் அறிந்தவையே. என்றும் போல மக்கள் தனிமைப்பட்டுப் போனார்கள், எல்லா அதிகாரங்களுக்கு இடையில் அல்லாடி அல்லாடி நாளாந்த வாழ்வையே ஒரு யுகமாய்க் கழிக்கவேண்டிய இருண்ட காலம் இன்னமும் ஈழத்தில் இருந்து கொண்டுதானிருக்கிறது.

இப்போது நேரடியான ஈழத்து அரசியலை சற்று விலத்தி, அரசியலை முன்வைத்து எழுதப்பட்ட புனைவைகளைப் பார்ப்போம். இதில் என்னை வசீகரித்த மற்றும் என்னால் வாசிக்கப்பட்ட பிரதிகளைப் பற்றியே பேசப்போவதால் விடுபடல்கள் நிச்சயமிருக்கும் என்பதை முன்னரே நினைவூட்ட விரும்புகின்றேன். முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்தினால் மட்டுமின்றி 1981ல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது உட்பட பல நிகழ்வுகளால் நம் ஒவ்வொருவரினதும் வாழ்க்கையையும் அரசியல்மயப்பட்டிருக்கின்றது.. ஆகவே ஈழத்தமிழர்களாகிய நாம் எழுதும் பிரதிகளும் அரசியலை நேரடியாகவோ மறைமுகமோ பேசும் என்பதை கூறித்தான் தெரியவேண்டுமென்பதில்லை.

2.
1960ம் ஆண்டு எழுதப்பட்ட மு.தளையசிங்கத்தின் 'ஒரு தனி வீடு' நாவல், ஈழத்தில் சிங்களவர்Xதமிழர் இனமுரண்பாடுகள் தொடங்குகின்ற புள்ளிகளை முன்வைக்கின்றது. இந்த நாவலின் பின்னணியில் தனிச்சிங்களச் சட்டமும், 1958ம் நடந்த சிங்கள -தமிழ்க் கலவரமும் இருந்திருக்க்கின்றது. இப்பிரதியில் முக்கிய பாத்திரமான சிங்கராசன் 'நான் போராடுவேன், இல்லை நாம் போராடுவோம். நம் சந்ததியார் எல்லோரும் போராடுவோம். நமக்கு ஒரு நாடும் அரசும் ஒரு கூட்டாட்சியின் கீழ் தர மறுத்தால் ஒரு தனிநாடு அல்லது கடல் கடந்த ஒரு பரந்த தமிழ்நாட்டின் கூட்டாட்சியாவது அமைக்கவேண்டும். அதற்காகவது போராடுவோம்' என நாவலில் இறுதியில் கூறுகின்றார். இந்த வாக்கியங்களை நாவல் எழுதப்பட்ட அன்றைய காலத்தில் வைத்துப் பார்க்கும்போது எவ்வளவு விரைவாக இத்தகைய இறுதி முடிவுக்குப் படைப்பாளி வருகின்றார் என்பது சற்று வியப்பு ஏற்படத்தான் செய்கிறது. முக்கியமாய் ஒவ்வொரு விடயத்தையும் மிக நிதானமாய் முன் வைக்கக்கூடிய மு.தளையசிங்கத்திடமிருந்து வருகின்றது என்பதை அவதானிக்கும்போது எத்தகைய நெருக்குவாரத்திலிருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்கவேண்டும் என்பதை உணரமுடியும். எனினும் மு.தளையசிங்கம் 60களின் பிற்பகுதியில் இனவாத சிங்களத் தேசியத்திற்கு எதிராக எழுந்த தமிழ்த் தேசியமும் ஒருவகை ஒற்றைத்தன்மைக்குள் போவதைத் தனது 'மெய்யுள்' கட்டுரைகளில் பின்னாட்களில் எச்சரித்தாலும் 60களில் அவர் எழுதிய 'ஒரு தனி வீடும்', அவரது வேறு சில சிறுகதைகளும் இருவேறு தேசிய இனங்களின் இருப்புக்கள் இனி அமைதியாக இருக்கமுடியாது என்பதைக் கட்டியங்கூறுவதாய் அமைகின்றன.

மு.தளையசிங்கத்திற்கு சற்றுப் பின்னராக நாவல் உலகினுள் நுழைகின்ற கே.டானியல் வர்க்கப் போராட்டங்களினூடே இந்த இனச்சிக்கல்கள் தீர்க்கமுடியுமென்கிற அவதானங்களைத் தனது நாவல்களான 'பஞ்சகோணங்க'ளிலும், 'போராளிகள் காத்திருக்கின்றனர்'களிலும் வைக்கின்றார். கே.டானியலின் பிரதிகளில் அவர் நம்பிய கருத்தியல்கள் முன்னிலைப்படுத்தப்பட்டாலும் அதனூடு அவர் முன்வைக்கின்ற சாதிய ஒடுக்குமுறைகளும், சுரண்டல்களும் எவராலும் எளிதாக ஒதுக்கித்தள்ளவே முடியாதவையே.

1977ம் ஆண்டு கொழும்பு வரை சென்று தீண்டிய கலம்பகத்தைத் தொடர்ந்து 'லங்காராணி' என்கின்ற கப்பலில் யாழை நோக்கிச் செல்லும் கொடும் பயணத்தை அருளர் எழுதுகின்றார். இலங்கை என்ற நாட்டில் தமிழர்களின் இருப்பென்பது எப்போதும் நிச்சயமற்றதாய் இருக்கின்றது என்பதை அகதிகளை ஏற்றிச் செல்லும் கப்பலிலிருக்கும் பாத்திரங்கள் பதிவு செய்கின்றன. கப்பல் பயணம் முடியும்வரை அதிலிருப்பவர்கள் பத்திரமாகப் போய்ச் சேர்வார்களா என்ற பதற்றத்தைத் தந்தபடி நகர்கிறது 'லங்காராணி'யின் பயணம்.

1983ல் கறுப்பு ஜூலைக் கலவரத்தைத் தொடர்ந்து பல்வேறு ஆயுத இயக்கங்கள், இந்திய அரசின் ஆயுத வழங்கல்களுடன் புற்றீசல்களாய் எழுவதும், அவை காலப்போக்கில் தன்னளவில் உள் ஜனநாயகமற்றுப் போனதும் கடந்த கால வரலாறு. அந்தவகையில் ஒருகாலகட்டத்தில் பெரும் இயக்கமாய் இருந்த புளொட்டின் இன்னொரு முகத்தைக் காட்ட கோவிந்தன் 'புதியதோர் உலகத்தை' எழுதுகின்றார். தமிழ்மக்களுக்காய்த் தனிநாடு பெறப் போராட புறப்பட்ட இயக்கம் எப்படி தனக்குள்ளேயே ஜனநாயகமற்றுப் போவதையும், தமிழ்நாட்டில் இயங்கிய புளொட்டின் சித்திரவதைக் கூடங்களையும், அவற்றுள் பலியாகிப் போனவர்களையும், தப்பிப் பிழைத்தவர்களையும் கோவிந்தன் 'புதியதோர் உலகத்தில்' ஆவணப்படுத்துகின்றார்.

செழியனின் 'ஒரு மனிதனின் நாட்குறிப்பு'களில்,  எப்படி ஓர் இயக்கத்தைச் (ஈ.பி.ஆர்.எல்.எப்) சேர்ந்த மூன்று நண்பர்கள் இன்னொரு இயக்கத்தால் (விடுதலைப்புலிகளால்) கொல்லப்படுவதற்குத் தேடப்படுகின்றார்கள் என்பதை மிகுந்த பதற்றமான சூழ்நிலையில் வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அந்த மூன்று நண்பர்களுக்கும் தப்பிப் பிழைக்கும் ஒவ்வொரு நாளும் யுகங்களாய் மாறுவதை வாசிக்கும் நம்மாலும் உணரமுடிகின்றவளவுக்கு செழியன் இப்பிரதியில் மாதம்/திகதியிட்டு எழுதியிருப்பார். அண்மையில் இப்பிரதியில் விடுபட்ட சில நிகழ்வுகளையும் இணைத்து 'வானத்தைப் பிளந்த கதை'யாக செழியன் கனடாவில் வெளியிட்டிருக்கின்றார் என்பதும் கவனிக்கத்தக்கது.

இதே காலத்தையொட்டி விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த மலரவன் எழுதுகின்ற 'போருலா' என்கிற பிரதி வெளிவருகின்றது. இதில் மணலாறிலிருந்து மாங்குளம் இராணுவ முகாமைத் தாக்குவதற்காய் காடுகளினூடு நகர்கின்ற போராளி/களின் வாழ்வு முறை பதிவு செய்யப்படுகின்றது. பின்னர் 2001ல் ஈழத்தில் இருந்த சமாதானக் காலத்தில் மலைமகள் உள்ளிட்ட சில பெண் போராளிகளால் தொகுக்கப்பட்ட 'விழுதுமாகி வேருமாகி' ஆயுதப்போராட்டத்தில் பெண்களின் வகிபாகத்தைப் பதிவு செய்கின்றது. ஜெயசுக்குறு எனப் பெயரிடப்பட்டு -இலங்கை இராணுவம் வவுனியாவிலிருந்து யாழ் நகரை இணைக்க- ஏ9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றுவதற்கென பல்வேறு திசைகளில் தொடங்கிய இராணுவ நகர்வுகளை முறியடித்த சம்பவங்கள் இதிலே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோன்று தமிழ்க்கவியின் 'இனி வானம் வெளிச்சிரும்' நாவல், போராட்டத்திற்கு தன் பிள்ளைகளைக் காவுகொடுத்து தன்னையும் போராட்டத்தில் இணைந்துகொள்கின்ற ஒரு தாயின் மனோநிலையில் எழுதப்பட்டது என்றவகையில் முக்கிய பிரதியாகின்றது.

தேவகாந்தனின் 'யுத்தத்தின் முதலாம் அதிகாரமும்', ஜந்து பெரும் பகுதிகளாய் வெளியிடப்பட்ட 'கனவுச் சிறை'யும் ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் தொடக்க காலங்களிலிருந்து அண்மைக்காலம் வரை  (1981-2001)விரிகின்ற நாவல்களாகவும், வரலாற்றை அறிந்துகொள்ள விரும்புகின்றவர்கள் விரிவாக வாசிப்பதற்கு உதவக்கூடியதாகவும் இருக்கின்றன. எவ்வித ஆர்ப்பாடமுமோ, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் முனைப்போ அற்ற தேவகாந்தனின் படைப்புக்களுக்கு அதற்குரிய இடம் இன்னமும் தமிழ்ச்சூழலில் வழங்கப்படவில்லையென்பது வருந்தப்படக்கூடிய ஓரு விடயமே. புலம்பெயர்ந்து எழுதத்தொடங்கிய ஷோபாசக்தியின் 'கொரில்லா' மற்றும், 'ம்'  புனைவுகள் அது எழுதப்பட்ட விதத்தில், இன்னொரு தளத்திற்கு நகர்த்தக் கூடியதான அழகியலும் எள்ளலும் கொண்டதாக அமைந்தவை. இதேபோல புலம்பெயர்ந்து நடேசன் எழுதிய 'வண்ணாத்திக்குளம்' சிங்கள-தமிழ் உறவை முன்னிலைப்படுத்தி அரசியலைப் பேச முயன்றாலும் இத்தளத்தின் பின்னணியில் எழுபதுகளில் அருள் சுப்பிரமணியம் 'அவர்களுக்கு வயது வந்துவிட்டது' என்பதை எழுதியிருக்கின்றார் என்பதையும் நினைவூட்ட வேண்டியிருக்கிறது.

இதே காலகட்டத்தில் இலண்டனிலிருந்து விமல் குழந்தைவேல் 'வெள்ளாவி'யையும், அண்மையில் 'கசகறணத்தை'யும் எழுதி இருக்கின்றார். இரண்டுமே அரசியல் பிரதிகளாகவே இருக்கின்றன. முக்கியமாய் கசகறணம் கிழக்கில் இருக்கும் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் இருந்த அன்னியோன்னிய உறவையும் அது எவ்வாறு பின்னாட்களில் வன்மமாக மாறுகின்றன என்பதையும் பேசுகின்றது. எனினும் ஒரு நாவல் என்றவளவில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தாது  சிலவிடயங்களை மட்டும் ஆவணப்படுத்துகின்றது என்பதோடு இறுதியில் சுருங்கிப்போவதையும்  குறிப்பிட்டாக வேண்டும். இந்தக் காலங்களிடையே எஸ்.பொன்னுத்துரை(எஸ்.பொ) 'மாயினி' என்கிற நாவலை வெளியிடுகின்றார். ஈழத்து எழுத்தாளர்களிடையே தனித்துவமான மொழியையும், தன் புனைவுகளில் பெரும் பாய்ச்சல்களையும் ஏற்படுத்தியவருமான எஸ்.பொ, 'மாயினி'யை ஒரு தமிழ்த்தேசியப் பிரச்சார நாவலாக கருத்துக்களையும் சம்பவங்களையும் கோர்த்து மட்டும் எழுதியிருப்பது வாசிப்பவருக்கு ஏமாற்றத்தையே கொடுக்கச் செய்யும்.

இதேசமயம் நூறு பக்கங்களுக்குள் அடங்கக் கூடியதாக வந்திருந்தாலும் மெலிஞ்சி முத்தனின் 'வேருலகு' உள்ளடங்கிய குரலில் கறாரான அரசியலை மிகுந்த அழகியலோடு முன்வைக்கின்றது. இதுவரைகாலமும் அவ்வளவு விரிவாக முன்வைக்கப்படாத நாட்டின் உள்ளேயே அகதியாக இடம்பெயரும் வாழ்க்கையின் துயரப்பாடுகளை 'வேருலகு' முன்வைக்கின்றது மட்டுமின்றி எவ்வித இயக்கதையும் சேராத ஓர் அகதியின் பார்வையிலிருந்தும் இக்குறுநாவல் எழுதப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இறுதியில் அண்மையில் வெளிவந்த சயந்தனின் 'ஆறா வடு' இந்திய அமைதிப்படை ஈழத்திற்கு வருகின்ற 87 காலப்பகுதியிலிருந்து 2001ல் சாத்தியமான சமாதானக்காலம் வரை பதிவு செய்கின்றது. இது ஒரு கடற்பயணத்தைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டிருந்தாலும், யாழில் 1995ல் நிகழ்கின்ற பெரும் இடப்பெயர்வு பதிவு செய்யப்படுவதோடு சமாதானக் காலத்தில் இராணுவம் சூழ்ந்த யாழில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற போராளிகளையும், அவர்களின் மனங்களில் சமாதானக்காலம் ஏற்படுத்துகின்ற மாற்றங்களையும் உன்னிப்பாக முன்வைக்கின்றது. இதுவரை சொல்லப்பட்ட கதைகளைத் தாண்டி, எண்பதுகளுக்குப் பின், வரும் தலைமுறையின் வாழ்க்கை இன்னொரு தளத்திற்கு நகர்ந்திருக்கின்றது என்பதற்கு 'ஆறாவடு' நல்லதொரு உதாரணம். எனினும் இந்நாவல் நகர்கின்ற காலப் பகுதியில்தான் வடக்கிலிருந்து முஸ்லிம்களால் துரத்தியடிக்கப்பட்டார்கள் என்பதையும், அது 'ஆறா வடு'வில் பதிவு செய்யப்படவில்லையென்பதையும் பலவீனமாகக் கொண்டுதான் இந்நாவலைப் பற்றிய ஒரு வாசிப்பைச் செய்யமுடியும்.

3.
போர்க்காலச் சூழ்நிலைக்குள் வாழாத பலருக்கு மேற்குறித்த பிரதிகள் புலம்பல் இலக்கியமாகவோ, பிரச்சார அறிக்கைகளாகவோ அல்லது அழகியலற்றதாகவோ தெரியவும் கூடும். ஆனால் யுத்ததிற்குள் வாழ்ந்த ஒருவருக்குத் தப்பிப் பிழைத்தல் என்பது எவ்வளவு சாகசமென்பது தெரியும்.  சொல்லப்படும்  கதைகள் ஒவ்வொன்றின் பின்னாலும், சொல்லாமல் விடப்பட்ட கதைகளின் துயரமும் அதற்குள் கவிழ்ந்திருக்கக் கூடிய மவுனமும் நன்கு புரியும். மூன்று தசாப்த போருக்கிடையில் அல்லாடிய தலைமுறைகள் ஒவ்வொன்றும் மரணத்திற்குள்ளும் வாழ்வதற்கான சிறு பொறியை நம்பிக்கை தளராது தொடர்ந்தேந்தியே வந்திருக்கின்றது. மரணத்தை விட இந்த வாழ்வு மகத்தானது எனக் கூறவே இந்த ஒவ்வொரு புனைவுகளும் முயற்சித்திருக்கின்றன.

எத்தனையோ பல்லாயிரக்கணக்கானவர்கள் பலியாகிப் பலியாகி காலத்தில் காணாமற்போய்விட இன்னமும் உயிரோடு வாழ்ந்துகொண்டிருப்பது என்பது ஒரு பெரும் கனவைப் போலத்தான் தோன்றுகின்றது.  தங்களது துயரங்களை, ஆற்றாமைகளை, நம்பிக்கைகளை, துரோகங்களை, தியாகங்களை, நட்டாற்றில் விடப்பட்டதைத் தனக்குரித்தான மொழியில் எழுத விழையும்போது அவை 'புலம்பல்' இலக்கியமாகவே சிலருக்கு இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் சிறுவயதிலிருந்தே போரையும் இழப்பையும் அகதி வாழ்க்கையையும் அறிந்த என்னைப் போன்றவர்களுக்கு, இன்னமும் வாழ்வின் மீதான நம்பிக்கையை இழக்கக் கூடாதென தோள் மீது கரம்போட்டு வரும் தோழமையைப் போல இந்த பிரதிகளில் சில இருக்கின்றன.

சிலவேளைகளில் இவை பனிபொழியும் பின்னிரவுக் காலங்களில், கடந்த காலங்களை நினைவூட்டி, யன்னலினூடு நிசப்தமான தெருவை நீண்டநேரமாய் வெறித்துப் பார்க்கச் செய்பவையாகவும் ஆக்கிவிடுகின்றன. நடந்துசெல்லும் ஒவ்வொருவரின் காலடித்தடங்களையும் பெரும்பனி அழித்துவிட்டுச் செல்கின்றமாதிரி எனக்குப் பிரியமான மனிதர்களும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் போரின் நிமித்தம் இவ்வாறுதான் சடுதியாய்க் காணாமற்போயிருக்கின்றனர். இதன் நீட்சியில் கவிழும் துயரிலிருந்தும் வெறுமையிலிருந்தும் விடுபடல் என்பது அவ்வளவு சுலபமானதும் அல்ல.


(பெப்ரவரி 12,2012)
நன்றி: அம்ருதா (மார்ச், 2012)
நன்றி: நாவல்களின் முகப்பு கூகுள் தேடல் மற்றும் அவற்றிற்குரிய தளங்கள்

பால் சக்கரியாவின் கதைகள்

Sunday, February 19, 2012

1.
பால் சக்கரியாவின் 'இதுதான் என் பெயர்' கதைகளின் தொகுப்பில் அவரின் பிரபல்யமான இதுதான் என் பெயர் குறுநாவலும் ஏனைய பன்னிரண்டு சிறுகதைகளும் தமிழில் கே.வி.ஜெயசிறியால் 2001ல் மிக அழகாகத் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. 'இதுதான் என் பெயர்' குறுநாவல் கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில் சுகுமாரனால் மொழிபெயர்க்கப்பட்டு 'அகரம்' பதிப்பகத்தாலும் வந்திருக்கின்றது. காந்தியைக் கொல்கின்ற கோட்சேயின் மனோநிலையை காந்தியின் மரணத்தின் பின்னால் தொடர்ந்து செல்வதே 'இதுதான் என் பெயர்'. வித்தியாசமான நடையிலும் உள்ளடக்கத்தாலும் தமிழில் கூட மிக சிலாகித்துப் பேசப்படும் ஒரு படைப்பாக இக்குறுநாவல் இருந்திருக்கின்றது.

இத்தொகுப்பிலிருக்கும் பன்னிரண்டு சிறுகதைகளிலும் பெண்களே முக்கியபாத்திரங்களாக, அவர்களின் தளங்களில் வைத்துப் பேசப்படுகின்ற கதைகளாக ஜெயசிறியால் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்ச் சமூகத்திற்கென சில உறைந்துவிட்ட அடையாளங்கள் இருக்கின்றன. 'கதறக் கதறக் கண்ணீர்' விடச் செல்லி உணர்ச்சிகளின் குவியல்களுக்குள் அமிழவைத்து தம்மை முன்னிறுத்தும் படைப்புக்கள் அவற்றில் ஒருவகை.

இப்படிக் கதறக் கதற அழவைத்து மனித தரிசனங்களையோ/அறங்களையோ அள்ளித் தருவதை விடுத்து, அதிக உணர்ச்சிக்குவியலில்லாது பால் சக்கரியா தன் கதைகள் மூலம் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கின்றார் என்பதற்காகவேனும் நாம் இத்தொகுதியை வாசித்தாக வேண்டும். அது மட்டுமில்லை கதைகளின் உள்ளே எளிய வசனங்கள் மூலம் வாசிப்பவரை இன்னும் எவ்வளவு உச்சங்களுக்கு அழைத்துச் செல்கின்றாரென்பதையும் கவனிக்கவேண்டும்.

2.
'யாருக்குத் தெரியும்' கதை, யேசுவின் பிறப்பானது, எரோது அரசனுக்கு கெட்ட காலத்தைக் கொணரும் என காலத்தைக் கணிக்கும் ஒருவன் கூறியதுடன், ஏரோது அரசன் இயேசு பிறந்த அதேகாலத்தில் பெத்லகேமில் பிறந்த குழந்தைகளை எல்லாம் கொல்லச் சொல்கிறான். இக்குழந்தைகளை அளவுக்கணக்கில்லாது கொல்லும் ஒரு படைவீரனுக்கும் ஒரு பாலியல் தொழிலாளிக்கும் இடையில் நடக்கும் கதையேயிது. அந்தத் தொழிலாளி தொடர்ந்து படைவீரனின் மனச்சாட்சியை உலுக்கும்படியாகக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார். ஓரிடத்தில் 'நீங்கள் கொன்ற குழந்தைகளுக்கு நீங்கள் அவர்களைக் கொல்லப் போவது முன்பே தெரியுமா?' எனக் கேட்கிறாள். அதற்கு அந்தப் படைவீரன், 'எனக்குத் தெரியாது. குழந்தைகளுக்கு மரணமுண்டா? அவர்களுக்கு மரணத்தைப் பற்றிச் சிந்திக்கத் தெரியுமா?' எனப் பதிலளிக்கிறான்.

இன்னோரிடத்தில் படைவீரன் கூறுகின்ற இடம் மிக நுட்பமானது. யேசுவிற்கான ஒரு விமர்சனமாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். 'இத்தனை ஆயிரம் குழந்தைகளுடைய குருதியினூடுதான் ஒரு இரட்சகன் வருகின்றானா?' எனக் கேட்கிறான். எவ்வளவு கூர்மையான பார்வை. அதற்குப் பதிலாக இன்னொரு இடத்தில் பாலியல் தொழிலாளி கூறுகிறாள், 'ஓர் இரட்சகன் மகிமையோடுதானே வரவேண்டும்? அந்தக் குழந்தை இந்தக் குருதிச் சிதறல்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாமா? அவன் எப்படி இந்தக் கடனை அடைப்பான்?" என்கிறாள்.

இப்படி நீளுமோர் உரையாடலில், 'அவனை நீங்கள் அடையாளம் கண்டிருந்தீரேனில், நீங்கள் முதல் கொன்றது அவனையாயிருந்தால், மற்றக் குழந்தைகள் சாக நேர்ந்திருக்காது' என அந்தப் பாலியல் தொழிலாளி கூறுகின்றார், அதற்கு அந்தப் படைவீரன், 'ஆனால் அப்போது இரட்சகனின் வரவு சம்பவித்திருக்காது. இனியாவது, சாத்தியமுண்டு அல்லவா' என்கிறான்.

இந்த உரையாடல் இயேசுவின் பிறப்பிற்கு மட்டுமில்லை, இன்னும் எத்தனையோ பேருக்கும் வரலாற்றில் பொருந்தக் கூடியதாகவல்லவா இருக்கிறது. எத்தனையெத்தனை அரசர்கள் தங்கள் பெயரை நிலைநாட்ட தங்களை இரட்சகராக வேடம்பூண எவ்வளவு கொடும் விடயங்களை நிகழ்த்திப் போயிருக்கின்றனர். இந்தக் கதை முடியும் தருணம் கூட ஓர் அற்புதமான இடம். பாலியல் தொழிலாளிகள் தங்களிடம் வைத்து இயேசுவைக் காப்பாற்றித் தப்பச் செய்கின்றனர். தங்களால் பிரதியுபகாரம் செய்யவில்லையே யேசுவின் பெற்றோர் வருந்தும்போது, 'உங்கள் மகன் வளர்ந்து ராஜாவாகும்போது, நாங்கள் வேசிகள் என்றாலும் எங்களையும் காப்பாற்றச் சொல்' என்கின்றாள்.

'மந்திரவாதம்' என்கின்ற கதை மிகுந்த சுவாரசியமானது. பாலக்காட்டிலிருக்கும் அய்யர் குடும்பத்தைச் சேர்ந்த ராமானுஜம் சென்னையில் ஐ.ஐ.டியில் படிக்கப்போய் அங்கும் திறமைச்சித்தி பெற்று அமெரிக்காவிற்கு மேற்படிப்புப் படிக்கப்போகின்றார். சென்னைக்குப் போகும்போது ராமானுஜம், சுகுமாரன் அழீக்கோட்டின் 'தத்வமஸி' படித்துக் கொண்டுபோகின்றார். ராமனுஜத்தின் ஆய்வு கடந்தகாலத்திற்கு சென்று பார்ப்பதும், பிற ஜீவராசிகளுடனும் தொடர்பு கொள்வதும் எப்படியெனப் பார்ப்பது. அமெரிக்காவில் ஒரு யூதப் பெண் ராமானுஜத்துடன் நட்பாகின்றாள். ஒருநாள் அவள் , 'ராமு, நான் என்னுடைய பாப் நடனம் செய்யும் கால் விரல்களால் உன்னுடைய குண்டலினியை உணரவைக்கிறேன். என் அறைக்கு வா, உன்னுடைய லட்சியத்தை அடைய நான் உதவுகிறேன்' என்கிறாள்.உடல் விட்டு உடல் பாய்கின்ற வித்தை தெரிகின்ற மெலிசா, 'டியூனர் நான் தருகிறேன். ரீஸிவராவதற்கான வழி நீ கண்டுபிடி. மந்திரங்களின் நாட்டிலிருந்து வரும் நீதானா ஆத்மீய டியூனர் இல்லையென்று சொல்கிறாய்? ஒரே ஒரு மந்திரம் போதாதா, அடைப்பதற்கும் திறப்பதற்கும், வேறுபடுத்திக் காட்டவும்? அதை நான் உனக்குத் தருகிறேன்!' என்கிறாள்.

ஒருநாள் ராமானுஜத்தால் கடந்தகாலத்திற்குப் போக முடிகிறது: அவன், 'மெலீசா, எனக்குப் பயமாயிருக்கு. நான் பயந்தது சம்பவிக்கத் தொடங்கிவிட்டது. எனக்குள்ளே பாய்ந்து வரும் சப்தங்களின்மீது எனக்கொரு கட்டுப்பாடுமில்லை. இறந்த காலத்திலிருந்தும், நிகழ் காலத்திலிருந்தும் சப்தங்கள், கலைக்கப்பட்ட கூட்டின் தேனீக்களைப் போல என்னைச் சுற்றி அழுத்துகிறது மெலீசா. வெள்ளப் பெருக்கில் ஒழுகிவரும் மரமும், ஜடமும், இலையும், கொடியும், கவிழ்ந்த படகும், தகர்ந்த வீடும் போல அவை வந்து கொண்டேயிருக்கிறது. பிரபாகரனின் கடமையை நிறைவேற்ற சென்ற அந்தப் பெண் மனித வெடிகுண்டு தனக்குள்ளேயே முணுமுணுப்பதைக் கேட்டேன். ஹிட்லர் தற்கொலை செய்வதற்குமுன் தன் நாய் ப்ளோண்டியை வெடிவைத்த போது அவன் காதலி ஈவா ப்ரெளன் விம்மி விம்மி அழுவதைக் கேட்டேன். பாபர் மசூதியின் மகுடத்தைத் தாங்கியபடி ராமர் விக்கிரகத்தின்மீது விழுந்து இறந்த கரசேவகரின் கடைசிக் கூச்சலைக் கேட்டென்...

மரணமடைந்த சிறிகிருஷ்ணனின் மனைவிகளை அர்ச்சுனன் பாதுகாப்பு இடத்திற்குக் கொண்டு போகும்போது, அவர்களைக் காமுகர்களான தஸ்யூக்கள் கவர்வதன் கூச்சலைக் கேட்டேன். வாஸ்கொடகாமா கேரளக் கடற்கரையை வந்தடைந்தவுடன் சிறுநீர் கழிப்பதும், கெட்ட வாயுவை வெளியேற்றும் சத்த்ததையும் கேட்டேன், அப்போது அவர் 'ஈஸ்வரா' என்றார். மார்க்ஸ் வீட்டு வேலைக்காரியிடம், 'வேகம்! வேகம்! அவள் இப்போது வந்திருவாள்' என்று ரகசியமாகச் சொல்வதும் கேட்டேன். இந்திரா காந்தி வெடியேற்றவுடன் சொல்வதைக் கேட்டேன். என்னையா...! என்னையா..! அய்யோ!'

இது மட்டுமில்லை சுவாரசியமான பகுதி, மெலீசா பாண்டிச்சேரியின் அம்மாவின், 'கேள்விகளும் பதில்களும் - 1995' எடுத்து 166ம் பக்கம் வாசித்துப் பார். சரீரத்தை விட்டிறங்கி உலாவினால் பலவற்றையும் பார்க்கலாம் என்று சொல்கிறார்கள்.' என ராமானுஜத்தின் பதற்றங்களுக்கு இப்படிப் பதில் கூறுவதுதான்..

இத்தகைய ஆய்வுகளோடு அமெரிக்காவில் அலையும் ராமானுஜத்திற்கு ஏதோ நடந்துவிட்டதென இந்தியாப் பெற்றோர் அவரை அழைத்து திருமணம் ஒன்றைச் செய்ய முயல்கின்றனர். கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் அலையக்கூடிய மனோநிலையைக் கொண்ட ராமானுஜத்திற்கு மெலீசா சொல்லிக்கொடுத்த மந்திரம் இந்தியா வரும்போது மறந்துவிடுகின்றது. ஒரே சத்தங்களால் நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றது ராமானுஜத்தின் உலகம். தனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதென்று மணம் முடிக்கின்ற நாயர் பெண்ணிடம் கூறுகின்றார். அந்தப் பெண்ணோ, 'இந்தப் பைத்தியம் பரவாயில்லை. நான் நினைச்சேன், சில மலையாள ஆம்பிளைகளுக்குள்ள sexual vulgarity ஏதாவதாய் இருக்குமென்று'  எனப் பயப்பிட்டதாய் கூறுகின்றார்.

கட்டிலில் முயங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண் சப்தங்களால் திணறிக்கொண்டிருந்த ராமானுஜத்தைப் பார்த்து ' என் பிரியமான பைத்தியக்காரா, நான் உன்னை sound proof ஆக்குகிறேன்' என்கிறாள். நாங்கள் இருவருமே இப்போது பைத்தியந்தான் இப்போது ஏதும் வித்தியாசமிருக்கா எனச் சொல்லும் அந்தப் பெண் 'இந்த அவஸ்தையை சம்ஸ்கிருதத்தில் என்னவென்று சொல்வாங்க தெரியுமா' என்கிறாள். என்ன என ராமானுஜம் கேட்க, 'தத்வமஸி!' என அவள் கூற இப்போது ராமானுஜம் துள்ளிக் குதிக்கிறான். இதுதான் அவன் மறந்துபோன மந்திரம். மிகுந்த சுவாரசியமான பல விடயங்களை கேள்விக்குள்ளாகும் இந்தக் கதை இத்தொகுப்பிலே பிடித்தமான சிறுகதைகளில் ஒன்று.

3.
'ஒரு கிறிஸ்மஸ் கதை', ஒரு பாலியல் தொழிலாளியைத் தமது அறையிற்கு அழைத்துச் செல்லும் இரு நண்பர்களின் கதை. தன்னைப் புணர்ந்த அவர்களிடம் நான் உங்களுக்கு என்ன அடையாளமாய் த் தெரிகின்றேன் என்கிறாள் அந்தப் பெண். '...நான் வேசி. இதன் அர்த்தம் என்ன? நான் எங்கிருந்தோ வந்து உங்கள் கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் கேட்க வேண்டாமா? இதன் பொருள் என்னவென்று? நான் வேசியாகாதிருந்தால் என்னவாக இருந்திருப்பேன்? எனக்கிது புரியவில்லை. நான் யார்? மனைவியா, மகளா, அம்மாவா, சகோதரியா, அண்ணியா, தங்கச்சியா, காமுகியா, வேசியா? எனக் கேட்க இவ்விரு நண்பர்களும் திணறுகிறார்கள்.

அவளில் பரிதாப்பட்டு 'உன் பெயர் என்ன?' என இவர்கள் கேட்கும்போது, 'இப்போதுதான் என் பெயரை விசாரிக்கத் தோன்றியதா? இவ்வளவு நேரமும் யாருடன் பேசிக் கொண்டிருந்தீர்கள்? யாருடன் படுத்துக் கொண்டிருந்தீர்கள்?' என அந்தப் பெண் கேட்கும் கேள்விகள் கூர்மையானவை. இறுதியில் அந்தப் பெண்ணைப் புணர்ந்தபோது அவள் ஏற்கனவே கர்ப்பமாயிருக்கின்றாள் என உணர்கின்றபோது இவ்விருவர்களுக்கும் குற்ற உணர்வு பெருகத் தொடங்குகின்றது. ஒரு பாலியல் தொழிலாளி எப்போதும் புணர்ந்துகொண்டிருப்பவள் என கட்டியமைத்துக்கொண்டிருக்கும் விம்பங்களுக்கு அப்பால் அவளும் எல்லோரையும் போல சாதாரண இயல்புகளுடைய பெண்தான் என, அந்தப் பெண்ணின் கேள்விகளைக் கொண்டே நுட்பமாய் சக்கரியா எழுதிக்கொண்டுப்போகும் இந்தக் கதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதொன்று.

இன்னொரு கதையான, 'அன்னம்மா டீச்சர்: சில நினைவுக் குறிப்புகளில் அன்னம்மா ரீச்சர் தன் குடும்பத்தைத் தாங்கும் ஒருவராய் தன் 39 வயதுவரை வாழ்வதைக் கூறுகின்றது. இயேசுவே ஒரேயொரு துணையாய் அவருக்கு இருக்கின்றது. 33 வயதைக் கடக்கும்போது அவர் இயேசுவிடம் தன் தம்பியாக இருக்க வேண்டிக்கொள்கிறார். எனெனில் இயேசு 33 வயதில் இறந்துபோகின்றார். இறுதியில் அவர் மரணங்கூட மர்மமாய் முடிந்துபோகின்றது மட்டுமின்றி, இதுவரை அவர் தாங்கிவந்த குடும்பத்திற்கே பெறுமதி இல்லாதவர் போல ஆகிப்போவதை மிக இயல்பாய் சக்கரியா சித்தரித்திருக்கின்றார். அதுவும் இறுதியில் அன்னம்மா ரீச்சரை ஒளிந்திருக்கும் பார்ப்பவர் அன்னம்மா ரீச்சரின் பிரமைக்குள் வரும் இயேசுவா அல்லது ரீச்சரின் சொந்தத் தம்பியா என மயக்கத்தோடு முடித்த இடம் அருமையானது.

இந்தத் தொகுப்பில் 'மந்திரவாதம்' போல குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொருகதை, 'இரண்டாம் குடியேற்றம்'. இவ்வளவு நுட்பமாய் தாய் வீட்டிலிருந்து மணமாகிப் போகப் போகும் ஒரு பெண்ணின் மனது ஆணொருவர் சித்தரிக்கவில்லையெனத்தான் கூறவேண்டும். மிகுந்த கடவுள் பக்தியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த ஆஷா மேத்யூ, ஒரு மனோதத்துவ நிபுணருக்கு எழுதும் கடிதமே இந்தக் கதை. எல்லோருக்கும் இனியவராக, எந்தச் சோலி சுரட்டைகளுக்கும் போகாத ஆஷாவிற்கு மாப்பிள்ளை பார்த்து ஒருவரைத் திருமணம் செய்கின்ற காலத்தை நேரும்போதுதான் ஆஷாவிற்கு ஒரு யோசனை வருகிறது. இவ்வளவு காலமும் இருந்த வீட்டைவிட்டு இன்னொரு வீட்டிற்குப் போகும்போது தனக்கு அவர்களைப் பற்றி அந்த வீட்டைப் பற்றி, அங்குள்ள மனிதர்களைப் பற்றி, அவர்களுக்கு பிற ஜீவராசிகளுடன் உள்ள உறவைப் பற்றி என்ன தெரியுமென யோசிக்கிறார்.

அவருக்கு தான் ஏதோ பாதாளத்திலிருந்து விழுவது மாதிரி இதைப் பற்றி யோசிக்கும்போது கனவு வருகின்றது. ஆஷாவின் தாத்தா ஒரு நாத்திகார் ஆயினும், வீட்டிலுள்ள மிகுதி அனைவரும் மிகுந்த கடவுள் பக்தியுள்ளவர்கள். எனவே இவ்வாறு இதுவரை தெரியாத வீட்டில் இனிச் சாகும்வரை வாழவேண்டும் என்றால், திருமணத்திற்கு முன் ஒருமாத காலமாகினும் தான் -திருமணம் செய்யும் ஜோயியின் வீட்டில்- தங்கவேண்டும் என்பதே ஆஷாவின் நிபந்தனை. அதை வீட்டிலிருப்பவர்கள் எல்லாம் கேலி செய்கின்றார்கள். பைத்தியம் பிடித்துவிட்டதென்கிறார்கள். தாத்தா மட்டுமே, 'மகளே நான் உன்பக்கம்தான், ஆனால் உனக்கும் எனக்குமான கால இடைவெளியில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. நான் கிழவனும் நாத்திகனுமாயிருக்கிறேன். உனக்கொரு ரக்ஷா மார்க்கம் சொல்லித்தர என்னால் முடியுமானால் எவ்வளவு நன்றாயிருக்கும். உன்னை ஆண்டவன் காப்பாராக' என்கிறார். ஆண்டவன் பெயரை நாத்திகரான தாத்தா கூறுகின்றாரேயென 'ஆண்டவனா?' என ஆஷா திகைக்க, 'ஆம் மகளே. அந்தக் கடைசி வைக்கோல் துரும்பாவது உனக்கிருக்கட்டும்' எனத்தாத்தா கூறுகின்ற இடம் மிக நெகிழ்வானது. இறுதியில் அந்தக் கடிதத்தில் ஆஷா, 'ரக்ஷா மார்க்கம் உண்டா? என் தேவைகள் தவறானவையா? நானொரு மனநோயாளி தான?' என மனோதத்துவருக்கு எழுதும் கடிதத்தை முடிக்கின்றார். ஆனால் பதில்கள் இன்னும் தெரியாது ஆஷாவைப் போன்ற பலரின் பல்லாயிரக்கணக்கான கடிதங்கள் காற்றில் பறந்தபடியே இருக்கின்றன. இதே போன்ற இத்தொகுப்பிலிருக்கும் 'குழியான்களின் பூந்தோட்டம்' மற்றும் 'கன்னியாகுமரி' கதைகளும் நினைவில் நிற்கக்கூடியவையே. எப்படி ஆண்களின் நிறங்களற்ற வாழ்வைப் பெண்கள் வர்ணமயமாக்கிவிடுகின்றனர் என்பது மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

சக்காரியாவின் இந்தக் கதைகளை வாசிக்கும்போது அவர் மொழியின் மீதும் வரலாற்றின் மீதும் செய்யும் பரிசோதனைகளே மிகவும் ஈர்த்துக்கொண்டிருந்தன. அதற்கோர் எளிய உதாரணமாக 'இதுதான் என் பெயரை' எப்படி எழுதியிருப்பாரென வாசித்துப் பார்த்தாலே நன்கு புலப்படும். மேலும் சக்காரியா தன் கதைகளில் ஒரு தெளிந்த முடிவை அள்ளிக்கட்டிக் கொடுத்து வாசகர்களை இவ்வளவும் போதுமென அனுப்பிவிடுவதில்லை என்பது குறிப்பிடவேண்டியது. மயக்கந்தரும் தொனியில் முடியும் சக்கரியாவின் கதைகள் உங்களுக்குப் பிடித்தமான முறையில் வாசித்தும் ஆய்ந்தும் பார்ப்பதற்கான வெளிகளைத் தருகின்றன. மேலும் பெண்களைப் பற்றி கூறும்போது அவர்கள் இயல்பாய் இருக்கின்றார்கள். அளவுக்கதிகமான உணர்ச்சிக்குவியல்களாகவோ கண்ணீர் சிந்துபவர்களாக சித்தரிக்கப்படாதது நிம்மதியைத் தருகின்றது. இச்சிறுகதைகளில் வரும் ஆண்கள் கூட தங்கள் பாத்திரங்களைத் தாண்டி மனோரதியவெளியில் அவ்வளவாய்ப் பறப்பதுமில்லை. எல்லாவற்றையும் விட பொதுவெளியில் தன் மேன்மையையும் அதிகாரத்தையும், மமதையும் காட்டத் துடிக்கின்ற ஆண்களைக் காமத்தின் கணங்களில் எளிதாய்க் கைப்பற்றி அவர்களை ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிடுகின்ற நுட்பமான பெண்களையும் இந்தக் கதைகளில் தரிசித்தும் கொள்ளலாம்.

Feb 18, At 2.12a.m
(நான் கடந்துசெல்லும் கடினகாலங்களில் துணையிருக்கும் நண்பருக்கு...)

வர்ணங்களில் தெறிக்கும் வாழ்க்கை : வின்சென்ட் வான்கோ

Friday, February 03, 2012

1.
தான் உருவாக்க‌ விரும்பிய‌ க‌லைக்கும், உள்ம‌ன‌தின் கொந்த‌ளிப்புக்க‌ளுக்கும் இடையில் அல்லாடிய‌ ஒரு க‌லைஞ‌ன் வான்கோ. ஒல்லாந்தில் பிற‌ந்து, பிரான்சில் கோதுமை வ‌ய‌லுக்குள் த‌ன்னைத்தானே சுட்டு வீழ்ந்து கிட‌ந்த‌ வான்கோவின் வாழ்வு முழுவ‌தும் ஒழுங்குக‌ளைக் குலைத்த‌வை, உல‌கோடு ஒட்டாது த‌ன‌க்கான‌ வெளியைக் க‌ண்டுபிடிக்க‌ முய‌ற்சித்த‌வை. ஆக‌வேதான் தான் நேசித்த‌ (க‌ர்ப்பிணியாக‌ இருந்த‌) பாலிய‌ல் தொழிலாளியை வீட்டுக்கு கொண்டு வ‌ந்து த‌ங்க‌ வைக்க‌ வான்கோவினால் முடிந்த‌து; இன்னொரு ச‌ம‌ய‌த்தில் ச‌க‌ ஓவிய‌னோடு வாக்குவாத‌ப்ப‌ட்டு, த‌ன் காதை அறுத்து ஒரு பெண்ணிட‌ம் அவ‌ரால் கொடுக்க‌வும் முடிந்திருந்த‌து. அநேக‌ க‌லைஞ‌ர்க‌ளைப் போல‌ உய‌ரிய‌ படைப்பு நிலைக்கும் பித்த‌ நிலைக்கும் இடையிலிருக்கும் நூலிழையின் த‌ருண‌ங்க‌ளுக்குத் த‌ன்னையே தாரை வார்த்து, இள‌வ‌ய‌திலேயே ம‌ர‌ணித்துபோன‌ ஒரு ப‌டைப்பாளிதான் வான்கோ.

இன்றைய‌ ம‌திப்பில் மில்லிய‌ன் டொல‌ர்க‌ளுக்கும் மேலாக‌ விற்க‌க்கூடிய‌ ஓவிய‌ங்க‌ளை வ‌ரைந்திருக்கும் வான்கோ, த‌ன‌து வாழ்க்கைக்கால‌த்தில் ஒரேயொரு ஓவிய‌த்தை ம‌ட்டுமே விற்க‌ முடிந்திருக்கின்ற‌து என்ப‌து கச‌ப்பான க‌ட‌ந்த‌கால‌ வ‌ர‌லாறு. 'ப‌டைப்பைப் பார் ப‌டைப்பாளியைப் பார்க்காதே' என்கிற‌ கால‌க‌ட்ட‌த்தில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும், வான்கோவின் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்வை அறியும்போது அவ‌ர‌து ஓவிய‌ங்க‌ளின் அட‌ர்த்தி ந‌ம‌க்கு இன்னும் அதிக‌ நெருக்க‌த்தையும் நெகிழ்வையும் த‌ருப‌வையாக‌ மாறிவிட‌வும் செய்கின்ற‌ன‌. த‌ன‌து வாழ்வின் க‌ச‌ப்புக்க‌ளையும், பிற‌ழ்வுக‌ளையும் வ‌ர்ண‌ங்க‌ளில் குழைத்து த‌ன் சுய‌த்தை விடுத‌லை செய்ய‌ முய‌ன்ற‌ ஒரு க‌லைஞ‌னாக‌வும் வான்கோவை நாம் அடையாள‌ங் க‌ண்டு கொள்ள‌ முடியும். 'என‌து ப‌டைப்புக்க‌ளே என‌து வாழ்க்கை' என‌க் குறிப்பிடும் வான்கோ, 'ப‌டைப்பாளி ஒவ்வொருவ‌ரின‌தும் உன்ன‌த‌ ப‌டைப்புக்க‌ளின் அர்த்த‌ங்க‌ளை விள‌ங்குவ‌த‌ன் மூல‌ம் க‌ட‌வுளை நோக்கி நாம் ந‌க‌ர‌முடியுமென‌' த‌ன் ச‌கோத‌ரான‌ தியோவிற்கு எழுதும் க‌டித‌மொன்றிலும் குறிப்பிடுகின்றார்.

வான்கோ அவ‌ர் வ‌ரைந்த‌ ஓவிய‌ங்க‌ளின் அள‌வுக்கு, நிறைய‌க் க‌டித‌ங்க‌ளையும் எழுதியிருக்கின்றார் என்ப‌தை நீண்ட‌கால உழைப்பின் பின், அண்மையில் ஆய்வாள‌ர்க‌ள் உல‌கிற்கு வெளிக்கொண‌ர்ந்திருக்கின்றார்க‌ள். கிட்ட‌த்த‌ட்ட‌ ஆறு தொகுதிக‌ளாக‌ வெளிவ‌ந்த‌ க‌டித‌ங்க‌ளின் பெரும் தொகுப்பில் வான்கோவை இன்னும் நெருக்க‌மாக‌ உண‌ர்ந்து கொள்ள‌வும் முடியும்.. வான்கோ தான் வ‌ரைந்து தியோவிற்கு அனுப்பிய‌ ஒவ்வொரு ஓவிய‌த்தோடும், அவை பற்றிய த‌ன‌து நீண்ட‌ குறிப்புக்க‌ளையும் எழுதி அனுப்பியிருக்கின்றார் என்ப‌து கூடுத‌ல் செய்தி. அது ம‌ட்டுமில்லாது, இந்த‌க் க‌டித‌ங்க‌ளை ஆதார‌மாக‌க் கொண்டு, வான்கோவின் விரிவான‌ வாழ்க்கை வ‌ர‌லாற்று நூல் (Van Gogh: The Life) சென்ற‌ ஆண்டு வெளியிட‌ப்ப‌ட்டும் உள்ள‌து.

2.
சென்ற‌ வ‌ருட‌த்தின் இறுதியில் ஜ‌ரோப்பாவிற்குப் போகும் என் ப‌ய‌ண‌த்தில் சில நாட்க‌ள் ஹொல‌ன்டில் க‌ழிக்க‌லாமென‌ நானும் ந‌ண்ப‌ரும் திட்ட‌மிருந்தோம். குறுகிய‌கால‌ த‌ரித்த‌லில் முக்கிய‌மாய் ஆம்ஸ்டடாமில் எதைப் பார்க்க‌வேண்டுமென‌ எண்ணிய‌போது முதலில் நினைவுக்கு வ‌ந்த‌து வான்கோ மியூசிய‌ம். வான்கோவின் அசலான 200ற்கு மேற்ப‌ட்ட‌ முக்கிய‌ ஓவிய‌ங்க‌ளையும் 400ற்கு மேற்ப‌ட்ட‌ கோட்டோவிய‌ங்க‌ளையும் அங்கே த‌ரிசிக்க‌ முடியுமென்ப‌து மிக‌வும் கிள‌ர்ச்சியைத் த‌ந்துகொண்டிருந்த‌து. மிக‌வும் சொற்ப கால‌மே (37வ‌ய‌துவ‌ரை) வாழ்ந்த‌ வான்கோ, ஓவிய‌ங்க‌ளை வ‌ரைய‌த் தொட‌ங்கிய‌தே த‌ன‌து இருப‌துக‌ளின் பிற்ப‌குதியில் என்ப‌தை ந‌ம்மில் ப‌ல‌ர் அறிந்துமிருப்போம். ப‌த்து வ‌ருட‌ங்க‌ளுக்கும் குறைவான‌ கால‌ப் ப‌குதியில் முறையான‌ ஓவிய‌க் க‌ற்கையே இல்லாது எப்ப‌டி வான்கோவினால் உச்ச‌த்தை அடைய‌ முடிந்திருக்கின்ற‌து என‌ப‌து என‌க்குள் எப்போதும் சுவார‌சிய‌மூட்டுகின்ற‌ வினாவாக‌ இருந்து கொண்டிருக்கின்ற‌து. தொட‌க்க‌த்தில் இருண்ட‌ வ‌ர்ண‌ங்க‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌ வான்கோ (உருளைக்கிழ‌ங்கு சாப்பிடுப‌வ‌ர்க‌ள் : Potato Eaters), பிரான்சுப் ப‌ய‌ண‌த்தின்பின் பிர‌காச‌மான‌ நிற‌ங்க‌ளைத் தேர்வு செய்து கொள்ள‌த் தொட‌ங்குகின்றார். அத‌னால்தான் வான்கோவின் பிர‌ப‌ல்ய‌மான‌ சூரிய‌காந்திக‌ள் ம‌ட்டுமின்றி, அட‌ர்ந்த‌ இர‌வில் தெறிகும் நில‌வு கூட‌ (The Starry Night) சூரிய‌னைப் போன்று பிர‌காச‌மாய் இருக்கின்ற‌து. த‌ன‌து ச‌கோத‌ர‌ரான‌ தியோவிற்கு குழ‌ந்தை பிற‌ந்துவிட்ட‌து என‌ அறிந்து அப்பிள்ளையின் நினைவாக‌ அவ‌ர் அனுப்பி வைக்கின்ற‌ பூக்க‌ள் நிர‌ம்பிய‌ அல்ம‌ண்ட்ஸ் (Almond Blossom) ஓவிய‌த்தில் கூட‌ அந்த‌ப் பிர‌காச‌த்தை அனுப‌விக்க‌ முடியும்.

ஆம்ஸ்ட‌டாமில் அமைந்திருக்கும் 'வான்கோ மியூசிய‌ம்' சுவார‌சிய‌ம் மிகுந்த‌தாக‌ இருந்த‌து. அங்கே வான்கோ வ‌ரைந்த‌ ஓவிய‌ங்க‌ளை ம‌ட்டுமின்றி, வான்கோவைப் பாதித்த‌ ய‌ப்பானிய‌ ஓவிய‌ங்க‌ள், வான்கோவின் பாதிப்பில் அவ‌ரைப் பின்ப‌ற்றி வ‌ரைந்த‌ ஓவிய‌ர்க‌ளின் ஓவிய‌ங்க‌ள், வான்கோவின் வாழ்க்கை வ‌ர‌லாறு என‌ப் ப‌ன்முக‌ப்ப‌ட்ட‌ காட்சிய‌றைக‌ளுட‌ன் அந்த‌ மியூசிய‌ம் இருந்த‌து. எந்த‌ உய‌ரிய‌ க‌லைஞ‌னும் வான‌த்திலிருந்து வ‌ந்து குதிப்ப‌வ‌ன‌ல்ல‌ என்ப‌த‌ற்கிண‌ங்க‌ வான்கோ ந‌க‌ல் செய்து வ‌ரைந்து ப‌ழ‌கிய ஓவிய‌ங்க‌ளும், அத‌ன் அச‌ல் பிர‌திமைக‌ளும் இந்த‌ மியூசிய‌த்தில் காண‌க்கிடைப்ப‌தென்ப‌தும் சுவார‌சிய‌மான‌து. வான்கோவின் ஓவிய‌ங்க‌ள் அவ‌ர‌து ம‌ர‌ண‌த்தின் பின் பிர‌ப‌ல்ய‌ம‌டைய‌க் கார‌ண‌மாக‌ இருந்த‌ தியோவின் மனைவியின் புகைப்ப‌ட‌ங்க‌ளிலிருந்து, வான்கோவின் அரிதான் ஒரு புகைப்ப‌டமும் இங்கே காண‌க்கிடைக்கின்ற‌து. அந்தக் க‌றுப்பு வெள்ளைப் புகைப்ப‌ட‌ம் தொலைவிலிருந்து எடுக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து; வான்கோ த‌ன் தோழியொருவ‌ருட‌ன் உரையாடிப‌டி நீண்டு விரியும் தெருவில் ந‌ட‌ந்துகொண்டிருக்கின்றார்.

பிரான்சிலிருந்த‌ கால‌ப்ப‌குதியில் வான்கோ இம்பிர‌ஸனிச (Impressionism) பாதிப்பில் ஓவிய‌ங்க‌ளை வ‌ரைய‌த் தொட‌ங்கினாலும், அவ‌ரின் ஓவிய‌ங்க‌ள் இம்பிர‌ஸனிசத்தின் பிறகான‌ கால‌த்துக்குரிய‌தாக‌ (Post Impressionism) விம‌ர்ச‌க‌ர்க‌ள் வரைய‌றுக்கின்றார்க‌ள். வான்கோ ப‌ய‌ன்ப‌டுத்தும் தூரிகையின் கீற‌ல்க‌ள் த‌னித்துவ‌மான‌வை. ஓவிய‌ங்க‌ளுக்கு அருகில் நெருங்கி நின்று பார்க்கும்போது அலைய‌லையாய், சுருள்சுருளாய் வான்கோவின் தூரிகை நிக‌ழ்த்தும் மாய‌ஜால‌ங்க‌ளை அறிந்துகொள்ள‌லாம். அதேச‌ம‌ய‌ம் எந்த‌வொரு ஓவிய‌த்தைப் பார்க்கும்போதும் அத‌த‌ற்கான‌ இடைவெளியில் நின்று பார்க்க‌வேண்டும் என்ப‌தை, வான்கோவின் 'கோதுமைவ‌ய‌லில் காக‌ங்க‌ள்' எம‌க்கு உண‌ர்த்தியிருந்த‌து. அருகில் நின்று பார்க்கும்போது சாதார‌ண‌ 'வ‌ர்ண‌ப்பூச்சாய்'த் தெரிந்த‌ இந்த‌ ஓவிய‌ம், இடைவெளியை அதிக‌ரித்த‌போது மிக‌த் த‌த்ரூப‌மான‌ ப‌டைப்பாய் ம‌ன‌தில் வியாபித்த‌தையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

முக்கிய‌மாய் அவ‌ர் உள‌விய‌ல் சிகிச்சை பெற‌த் தொட‌ங்கிய‌ கால‌த்தின் பின் அவ‌ர‌து ஓவிய‌ங்க‌ள் பெரும் மாற்ற‌த்தை அடைந்திருக்கின்ற‌ன‌. ஒரு க‌டித‌த்தில் 'நான் தூரிகையால் அல்ல‌ என‌து இத‌ய‌த்தால் வ‌ரைப‌வ‌ன்' என‌ எழுதுகின்ற‌ வான்கோவின் தூரிகையின் அலைவுறும் வ‌ர்ண‌ங்க‌ள், அவ‌ருக்குள்ளே கொந்த‌ளித்துக் கொண்டிருக்கின்ற‌ ம‌ன‌தைப் பிர‌திப‌லிப்ப‌வையாக‌க் கூட‌ இருந்திருக்க‌லாம். எப்போதும் த‌ன‌க்குள்ளிருக்கும் திற‌மையைப் பிற‌ருக்கும் ப‌கிர்ந்து கொள்ள‌வேண்டுமென‌ ஆசைப்ப‌டுகின்ற‌வ‌ராய் இருந்த வான்கோ ஓவிய‌ம் வ‌ரைவ‌த‌ற்கான‌ தாள்க‌ள்/தூரிகைக‌ள் போன்ற‌வ‌ற்றை இள‌ஓவிய‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்கியிருக்கின்றார்; மேலும் தான் வ‌ரையும் ஓவிய‌ங்க‌ளை பிற‌ரும் பார்க்க‌ வேண்டுமென்ப‌த‌ற்காய் த‌ன் வீட்டு ய‌ன்ன‌ல்க‌ளில் காட்சிக்காய் வைத்துமிருக்கின்றார். அது ம‌ட்டுமின்றி ப‌ல‌ ஓவிய‌ர்க‌ளை இணைத்து கூட்டாக‌ வாழும் முறையை பிரான்சிலிருந்த‌போது ந‌டைமுறைப்ப‌டுத்த‌ முய‌ன்றிருக்கின்றார்.

இறுதியில் அவ‌ரின் க‌ன‌வுக்கு இண‌ங்கி அவ‌ர‌து இட‌த்திற்கு இன்னொரு பிர‌ப‌ல்ய‌மான‌ ஓவிய‌ரான‌ போல் காகெயின் (Paul Gaugain) வ‌ந்திருக்கின்றார். அந்த‌க் க‌ன‌வு முய‌ற்சி எப்ப‌டித் துய‌ர‌ முடிவுக்கு வ‌ந்த‌து என்ப‌தும், அத‌ன் நீட்சியில் வான்கோ த‌ன் காதை வெட்டி ஒரு பாலிய‌ல் தொழிலாளிக்குக் கொடுத்தார் என்ப‌தும் இன்னொரு கிளைக்க‌தை. காகெயின் வ‌ந்து த‌ங்கியிருந்த‌ கால‌ப் ப‌குதியில் -காகெயின் அறையை அழ‌காக்க‌த்தான்- வான்கோ த‌ன் பிர‌ப‌ல்ய‌ம் வாய்ந்த‌ சூரிய‌காந்திக‌ளை வ‌ரைய‌ந்தொட‌ங்கினார் என்ப‌தையும் நாம் நினைவு கூர்ந்துகொள்ள‌லாம்.

3.
வான்கோ மியூசிய‌த்தில் ஒரு ப‌குதியில், வான்கோ பிரான்சில் தான் இருந்த‌ அறையை வரைந்த‌ மாதிரி (Bedroom in Arles) அமைத்திருக்கின்றார்க‌ள். இந்த‌ அறையை -சிறுசிறு மாற்றங்களுடன் - மூன்றுவித‌மான‌ வ‌டிவங்களில் வான்கோ வ‌ரைந்திருக்கின்றார். அத‌ன் முத‌ல் பிர‌திமை ஆம்ஸ்ட‌டாம் மியூசிய‌த்திலும் ஏனைய‌வை பாரிஸ், சிகாகோ போன்றவ‌ற்றிலும் இருக்கின்ற‌ன. அன்றைய‌ கால‌த்தில் கான்வாஸ் தாள்க‌ளின் விலை கார‌ண‌மாக‌ அநேக‌ ஓவிய‌ர்க‌ள் தாம் ஏற்க‌ன‌வே வ‌ரைந்த‌ ஓவிய‌ங்க‌ளின் மேல் வேறு ஓவிய‌ங்க‌ளை செலவைக் குறைப்ப‌த‌ற்காய் வ‌ரைந்திருக்கின்றார்க‌ள். வான்கோவும் அவ்வாறு ஒரேதாளில் ஒன்றுக்கு மேற்ப‌ட்ட‌ ஓவிய‌ங்க‌ளை வ‌ரைந்திருக்கின்றார். அந்த‌ ஓவிய‌ங்க‌ளை இன்றைய‌ ந‌வீன‌ தொழில்நுட்ப‌ வ‌ச‌திக‌ளுட‌ன் எப்ப‌டிப் பிரித்தெடுத்தார்க‌ள் என்ப‌தை விரிவான‌ ப‌டிமுறையுட‌ன் வான்கோ மியூசிய‌த்தில் காட்சிப்ப‌டுத்தியிருந்தார்க‌ள். இந்த‌ விட‌ய‌த்தை விய‌ந்து சில‌ ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் பேசிக்கொண்டிருந்த‌போது ஏற்க‌ன‌வே வ‌ரைந்த‌ ஓவிய‌ம் அவசியமில்லையென‌த்தானே அத‌ன் மேல் இன்னொரு ஓவிய‌த்தை வான்கோ வ‌ரைந்திருப்பார், அவ்வாறு ம‌றைந்து கிட‌க்கும் ஓவிய‌த்தைக் க‌ண்டுபிடிப்ப‌தென்ப‌து  ஓவிய‌ர் ஒருவரின் த‌னிப்ப‌ட்ட‌ உரிமையை மீறுவ‌தாக‌ அல்ல‌வா இருக்கிற‌தென‌ ஒரு ந‌ண்ப‌ர் கேட்டிருந்தார். ந‌ண்ப‌ரின் வாத‌மும் ஏற்றுக் கொள்ள‌க்கூடிய‌துதான். ஆனால் விதிவில‌க்குக‌ளும் இருக்கின்ற‌துதான் அல்ல‌வா? இல்லாதுவிட்டால் த‌ங்க‌ள் ப‌டைப்புக்க‌ளைத் தம் ம‌ர‌ண‌த்தோடு எரித்துவிட‌வேண்டும் என்று கூறிய‌ காஃப்காவையோ சிவ‌ர‌ம‌ணியையோ நாம் இன்று வாசித்துக் கொண்டிருக்க‌ முடியாத‌ல்ல‌வா?

இறுதியாய் 'ஸ்ராரி நைட்' (இது ஆம்ஸ்டடாமில் இல்லை) ப‌ற்றியும் 'கோதுமை வ‌யலில் காக‌ங்க‌ள்' ப‌ற்றியும் குறிப்பிடாம‌ல் இருக்க‌முடியாது. 'கோதுமை வ‌ய‌லில் காக‌ங்க‌ள்' வான்கோவின் இறுதிக்கால‌ங்க‌ளில் வ‌ரைய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. மேற்கு வாழ்வில் காக‌ங்க‌ள் ம‌ர‌ண‌த்தின் குறியீடு என்ப‌தும் வான்கோ த‌ன் ம‌ர‌ண‌ம் நெருங்குவ‌தைத்தான் இவ்வோவிய‌ம் மூல‌ம் குறிப்பால் உண‌ர்த்த‌ விரும்புகின்றார் என‌வும் நாம் விள‌ங்கிக் கொள்ள‌லாம். உய‌ரிய‌ க‌லைக்கும் பித்த‌ நிலைக்கும் எப்போதும் தொட‌ர்பு இருப்ப‌து என‌று கூற‌ப்ப‌டுவ‌துபோல‌ ம‌ன‌தின் பெரும் கொந்த‌ளிப்பால் த‌த்த‌ளித்த‌ வான்கோ த‌ன் 37 வ‌ய‌தில் த‌ன்னைத் தானே சுட்டுக் கொல்கிறார். ஆனால் சூரிய‌காந்திக‌ளில், கோதுமைவ‌ய‌ல்க‌ளில், ந‌ட்ச‌த்திர‌ இர‌வுக‌ளில் த‌ன் த‌னித்துவ‌த்தை உண‌ர்ந்திப் போந்த‌ ஒரு க‌லைஞ‌ன், த‌ன் ம‌ர‌ண‌த்தின் ஒரு நூற்றாண்டு தாண்டியும் இன்றும் பிர‌காசித்துக் கொண்டிருக்கின்றான்.

------------------
நன்றி: அம்ருதா (பெப்ரவரி/2012)
ஓவியங்கள்: வான்கோ

ஒரு க‌விதை: மூன்று த‌மிழாக்க‌ம்

Wednesday, November 16, 2011

Midwinter
by Thomas Transtromer

A blue glow
Streams out from my clothes.
Midwinter.
A clinking tambour made of ice.
I close my eyes.
Somewhere there's a silent world
And there is an opening
Where the dead
Are smuggled over the border.

[Translated from the Swedish by Robert Bly]

இடைப‌னிக்கால‌ம்

ஒரு நீல‌ ஒளிர்வு
என‌தாடைக‌ளிலிருந்து பிர‌வாகித்து வ‌ருகிற‌து.
இடைப‌னிக்கால‌ம்.
க‌ணீரெனும் ராம்போரின் ப‌னியாலான‌து
நானென‌து விழிக‌ளை மூடுகின்றேன்
எங்கேயோ இருக்குமோர் நிச‌ப்த‌ உல‌கில்
ஓரு திற‌ப்புள‌து
அங்கே இற‌ந்த‌ உட‌ல்க‌ள்
எல்லை தாண்டிக் க‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌.
..............

இம்மாத‌க் கால‌ச்சுவ‌டை இணைய‌த்தில் மேய்ந்து கொண்டிருந்த‌போது த‌ற்செய‌லாய் சுகுமார‌ன் மொழிபெய‌ர்த்திருந்த‌ தோம‌ஸ் (டி)ரான்ஸ்ரோம‌ரின் (Thomas Transtromer)க‌விதைக‌ளை வாசித்தேன். சுவீட‌னைச் சேர்ந்த‌ க‌விஞ‌ரான‌ ரான்ஸ்ரோம‌ர் இம்முறை இல‌க்கிய‌த்திற்கான‌ நோப‌ல் ப‌ரிசைப் பெற்ற‌வ‌ர் என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம். சுகுமார‌னின் மொழிபெய‌ர்ப்பை வாசித்த‌போது, இக்க‌விதைக‌ளில் சில‌வ‌ற்றை ஏற்க‌ன‌வே த‌மிழில் வாசித்த‌ நினைவு வ‌ர‌ ஜெய‌மோக‌னின் த‌ள‌த்தைத் தோண்டினேன். அங்கே கார்த்திக் என்ப‌வ‌ரும் ஏற்க‌ன‌வே மொழிபெய‌ர்த்திருந்த‌தை ஜெய‌மோக‌ன் ப‌கிர்ந்திருப்ப‌தைக் க‌ண்டுபிடித்தேன்.

சுகுமார‌ன், கார்த்திக் இர‌ண்டு பேரின‌தும் த‌மிழாக்க‌ங்க‌ளை வாசித்த‌பின், இந்த‌க் க‌விதையை நான் த‌மிழாக்க‌ம் செய்தால் எப்ப‌டியிருக்குமென‌ முய‌ற்சித்துப் பார்த்தேன். பிற‌கு அந்த‌ த‌மிழாக்க‌த்தை என‌து ந‌ண்ப‌ருக்கு வாசிக்க‌ச் சொல்லி அனுப்பியிருந்தேன். அவ‌ர் சில‌ திருத்த‌ங்க‌ளை செய்திருந்தார். அதைவிட‌ இன்னொரு சுவார‌சிய‌மான‌ விட‌ய‌ம் அவ‌ரும் இப்போது சுவீட‌னில்தான் இருக்கின்றார்.

உண்மையில் க‌விதைக‌ளைத் த‌மிழாக்க‌ம் செய்த‌தைவிட‌, க‌விதையை முன்வைத்து எங்க‌ளுக்கிடையில் ந‌ட‌ந்த‌ உரையாட‌ல் இன்னும் சுவார‌சிய‌மாக‌ இருந்த‌து. ஒரு கவிதை -முக்கிய‌மாய் வேறொரு மொழி/க‌லாசார‌ப் பின்ன‌ணியில் வ‌ருகின்ற‌ ப‌டைப்பு- ப‌ல்வேறு வ‌கையில் வாசிக்க‌க் கூடிய‌தாக‌ இருப்ப‌து..., அதைத் த‌மிழாக்க‌ம் செய்கையில் ந‌ம் ஒவ்வொருவ‌ரின் ம‌னோநிலைக்கு ஏற்ப‌ எவ்வாறு வேறுப‌ட‌க்கூடுமென‌... ப‌ல்வேறுபுள்ளிக‌ளில் நின்று யோசிக்க‌ முடிந்திருந்த‌து.

இந்த‌ 'இடைப‌னிக்கால‌ம்' என்கின்ற‌ க‌விதை முற்றுமுழுதாக‌ ஒரு ப‌னிக்கால‌ப் பின்ன‌ணியைக் கொண்டுவ‌ருகின்ற‌து.  இந்த‌ப் பனிக்கால‌ம் எந்த‌ உண‌ர்வை சுகுமார‌னுக்கோ, கார்த்திக்கிற்கோ கொடுக்கின்ற‌தோ தெரியாது அதை ஒவ்வொரு வ‌ருட‌மும் அனுப‌விக்கும் சூழ‌லில் வாழும் என‌க்கு அது என் வாழ்வில் ஒரு ப‌குதியை பிர‌திப‌லிப்ப‌து போல‌த் தோன்றிய‌து.

ப‌னிக்கால‌ம் என்ப‌தே அநேக‌ம் இருளாக‌வும் -கோடைகால‌த்தைப் போன்ற‌ல்லாது- மிக‌ அமைதியாக‌வும் இருக்கும். அப்ப‌டியெனில் ஏன் ஒரு ராம்போரின் ஒலியை இங்கே க‌விஞ‌ர் கொண்டுவ‌ருகின்றார் என‌ யோசித்தேன். அதுவும் முக்கிய‌மாய் அடுத்த‌டுத்த‌ வ‌ரிக‌ளில் நிச‌ப்த‌ உல‌கைப் பேசும் க‌விஞ‌ர் ஏன் 'ஒலி'யைக் கொண்டுவ‌ருகின்றார் என‌  நானும் ந‌ண்ப‌ரும் விவாதித்திருக்கின்றோம். தோல் வாத்திய‌வ‌கையைச் சேர்ந்த‌ ராம்பூரில் எப்ப‌டி 'Clinking ' ஓசை வ‌ருகின்ற‌து என்ப‌து இன்ன‌மும் யோசிக்க‌வைத்த‌து. உலோக‌வகை வாத்திய‌ங்க‌ளில் அல்ல‌வா 'Clinking' ச‌த்த‌ம் பொதுவாக‌க் கேட்கும்.

என‌க்கு மிருத‌ங்க‌த்தில் இருக்கும் சொற்ப‌ அனுப‌வ‌த்தை வைத்து, பிற‌கு  இதை ஒப்பிட்டுப் பார்த்தேன்.. மிருத‌ங்க‌த்தின் தொட‌க்க‌ப் பாட‌மாய் என‌க்கு க‌ற்பித்து த‌ந்த‌ 'தா/தீ/தொம்/ந‌ம்' இல் வ‌ரும் 'ந‌ம்' ற்கு நாம் சுட்டுவிர‌லால் அடிக்கும்போது, தொட‌ர்ந்து அதிரும் ஒரு ஒலி வ‌ரும். ஆக‌, தோல் வாத்திய‌த்தில்கூட‌ இந்த‌ க‌ணீரென்று ஒலிக்கும் ச‌த்த‌த்தைக் கொண்டுவ‌ரலாம் என‌ நினைக்கின்றேன். இன்னும் எளிதாக‌ச் சொல்வ‌தென்றால் முக்கிய‌மாய் இந்த‌க் க‌விதைக‌ளை தொட‌க்க‌த்தில் ஜெய‌மோக‌னின் த‌ள‌த்தில் வாசித்திருக்கின்றேன் என்ப‌தால், அவ‌ரைச் ச‌ந்தோச‌ப்ப‌டுத்த‌ இந்த‌ உதார‌ண‌த்தை எடுத்துக் கொள்கின்றேன்.  நாம் 'ஓம்' என்று உச்ச‌ரிக்கும்போது 'ம்' ஐ நீண்ட‌நேர‌த்திற்கு உச்ச‌ரித்தால் ஒரு ஒலி வ‌ருமே.  அவ்வாறு ச‌ட்டென்று ஒரு அடி அடித்துவிட்டு கைக‌ளை ராம்போரிலோ/த‌பேலாவிலோ இருந்து எடுத்துவிட்டால் தொட‌ர்ந்து அதிர்ந்துகொண்டிருக்கும்.அதைத்தான் இங்கே க‌விஞ‌ர் உண‌ர்த்துகின்றார் என‌ நினைத்துக்கொண்டேன். அந்த‌ அதிர்வும் சூழ்ந்திருக்கும் ப‌னிக்கால‌நிலையும் அவ‌ர‌து க‌ண்க‌ளை மூடி ம‌ன‌தைப் பார்க்க‌ வைக்கின்ற‌து.

அடுத்து 'Opening' என்ப‌த‌ற்கு 'திற‌ப்பு' என்ப‌தை பாவித்திருக்கின்றேன், ம‌ற்ற‌வ‌ர்க‌ள் 'விரிச‌ல்', 'பிள‌வு' என்ப‌தைப் பாவித்திருக்கின்றார்க‌ள்.  அது ம‌ர‌ண‌த்திற்கு பின் ந‌ம‌க்கு என்ன‌ நிகழ்கிற‌து என்ப‌து தெரியாத‌தால் 'திற‌ப்பு' என‌ப் ப‌ய‌ன்ப‌டுத்தல் பொருத்த‌மாய் இருக்கும் என்ப‌து என் துணிபு.    இந்த‌ அடிப்ப‌டையிலேயே என் த‌மிழாக்க‌ம் இருந்த‌து.  நிச்ச‌ய‌ம் நான் வாசிப்ப‌துபோல‌த்தான் இந்த‌க் க‌விதை இருக்க‌வேண்டுமென்றில்லை. நான் எப்ப‌டி வாசித்தேன், எத‌ன‌டிப்ப‌டையில் த‌மிழாக்கினேன் என்பத‌ற்கே இந்த‌க் குறிப்பு.

இறுதியில் இவ்வாறு இந்த‌க் க‌விதையை விரிவாக‌ வாசிக்க‌ உந்தித்த‌ள்ளிய‌ சுகுமார‌ன் ம‌ற்றும் கார்த்திக்கின் மொழிபெய‌ர்ப்புக்க‌ளுக்கு ந‌ன்றி. இந்த‌க் க‌விதையை நாங்க‌ள் மூன்று பேரும் வாசித்து விள‌ங்கிக்கொண்ட‌து போல‌வ‌ன்றி நீங்க‌ளும் வேறுவ‌கையில் வாசிக்க‌லாம்/வாசித்திருக்க‌லாம்.

இக்க‌விதையை த‌மிழாக்க‌ம் செய்த‌போது, ஒரு சிறுக‌விதை எவ்வ‌ள‌வு விரிவான‌ வாசிப்பைத் த‌ருகின்ற‌து என‌த்தான் விய‌ந்தேன். மேலும் இப்போது இங்கும் ப‌னிக்கால‌மாய் இருப்ப‌தால் இந்த‌க் க‌விதை இன்னும் நெருக்க‌த்தை உண‌ர்த்திற்றோ தெரிய‌வில்லை.


நன் பனிக்காலம்
-தமிழாக்க‌ம்; சுகுமார‌ன்

ஒரு நீல வெளிச்சம்
என் ஆடைகளிலிருந்து கதிர்வீசுகிறது
நன்பனிக் காலம்
பனிக்கட்டிகளின் டாம்போரின்களின்* ஓயாத பேச்சு
என் விழிகளை மூடுகிறேன்

மரித்தவர்கள்
எல்லை தாண்டிக் கடத்தப்படும்
பிளவு இருக்கிறது அங்கே
அங்கே இருக்கிறது ஓர் ஒலியற்ற உலகம்.

* டாம்போரின் - கஞ்சிரா போன்ற தாளவாத்தியம்.
.....

இடைகுளிர்காலம்(Midwinter)
-த‌மிழாக்க‌ம்: கார்த்திக்

என் உடைகளிலிருந்து
நீல நிறம் வெளிச்சம் ஒளிர்கிறது
இடைகுளிர்காலம்

பனிக்கட்டிகளின் டாம்பொரின்* சடசடப்பு

கண்களை மூடிக்கொள்கிறேன்
அங்கொரு நிசப்த உலகுண்டு
இறந்தவர்கள் எல்லைதாண்டி கடத்தப்படும்
ஒரு விரிசல் இருக்கிறது

டாம்பொரின்* கஞ்சிரா போன்றது

.............
ஆங்கில‌த்தில் ரான்ஸ்ரோம‌ரின் க‌விதைக‌ளையே மொழிபெய‌ர்த்த‌  Robert Blyன்   க‌விதைக‌ளையே என‌து த‌மிழாக்க‌த்திற்கு எடுத்துக் கொண்டேன். சில‌வேளைக‌ளில் சுகுமார‌னோ, கார்த்திக்கோ வேறு ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்பிலிருந்து த‌மிழாக்க‌ம் செய்திருக்க‌லாம் என்ப‌தையும் சுட்டிக்காட்ட‌ விரும்புகின்றேன்.
.................

முத‌ல் க‌விதையைத் த‌மிழாக்கிய‌போது வ‌ந்த‌ உற்சாக‌த்தில் இக்க‌விதையையும் த‌மிழாக்க‌ம் செய்தேன்.

April and Silence
 by Tomas Tranströmer

Spring lies abandoned.
A ditch the color of dark violet
moves alongside me
giving no images back.

The only thing that shines
are some yellow flowers.

I am carried inside
my own shadow like a violin
in its black case.

The only thing I want to say
hovers just out of reach
like the family silver
at the pawnbroker’s.

~ from The Winged Energy of Delight, Selected
Translations, Robert Bly (Perennial, 2004)


இள‌வேனிலும் அமைதியும்

வ‌ச‌ந்த‌ம் கைவிட‌ப்ப‌ட்டுக் கிட‌க்கிற‌து.
அட‌ர்ந்த‌ ஊதாக் கால்வாய்
எதையும் பிர‌திப‌லிக்காது
ந‌க‌ர்கிற‌து என்னோடு.

ஒளிர்வ‌ன‌
சில‌ ம‌ஞ்ச‌ட் பூக்க‌ள் ம‌ட்டுமே

க‌றுப்புப் பெட்டிக்குள்
வைக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ய‌லினைப் போல‌
என‌து நிழ‌லுக்குள் நான் காவ‌ப்ப‌டுகின்றேன்.

நான் கூற‌விரும்பும் ஒரேயொரு விட‌ய‌மும்
அட‌குக்க‌டையில் வைத்த‌
வீட்டு வெள்ளி போல‌
அடைய‌முடியாத் தூர‌த்தில் மின்னுகின்ற‌து.

ஹ‌ருக்கி முர‌காமியின் 'இருளின் பின்'

Friday, November 04, 2011

After Dark by Haruki Murakami

1.
ஹ‌ருக்கி முர‌காமியின் 'இருளின் பின்' (After Dark), ஒருநாளின் ந‌ள்ளிர‌விலிருந்து விடியும் வ‌ரை ந‌ட‌க்கும் நிக‌ழ்வுக‌ளைக் கொண்ட‌ ஒரு நாவ‌லாகும். இந்நாவ‌லில் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப‌படும் எல்லாக் க‌தாபாத்திர‌ங்க‌ளும் அவ‌ர்க‌ள் அறிந்தோ அறியாம‌லோ இன்னொரு பாத்திர‌த்தை/நிக‌ழ்வைப் பாதிக்கின்ற‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள். இக்க‌தையில் மேரி, எரி என்கின்ற‌ இரு ச‌கோத‌ரிக‌ளைச் சுற்றியே க‌தை நிக‌ழ்கின்ற‌து. மேரி என்கின்ற‌ 19வ‌ய‌து இளைய‌ ச‌கோத‌ரி, ரோக்கியோவின் க‌ளியாட்ட‌ப் ப‌குதியுள்ள‌ ஓர் உண‌வ‌க‌த்தில் யாருக்காவோ/எத‌ற்காக‌வோ காத்திருப்ப‌துட‌ன் தொட‌ங்கும் க‌தை,  இறுதியில் மேரி அடுத்த‌ நாள் காலை த‌ன் வீட்டுக்குத் திரும்புவ‌துட‌ன் முடிவ‌டைகிற‌து. இந்த‌ இடைவெளியில் அவ‌ர் ச‌ந்திக்கும் ம‌னித‌ர்க‌ள் ம‌ற்றும் நிக‌ழும் ச‌ம்ப‌வ‌ங்க‌ள் மிகுந்த‌ சுவார‌சிய‌மாக‌ இந்நாவ‌லில் விப‌ரிக்க‌ப்ப‌டுகின்ற‌து.

மேரிக்கு எரி என்கின்ற‌ மூத்த ச‌கோத‌ரி ஒருவ‌ர் இருக்கின்றார். அவ‌ரைப் போன்று தான் மிகுந்த‌ அழகில்லை என்கின்ற‌ எண்ண‌மும் மேரிக்கு இருக்கின்ற‌து. த‌ம‌க்கை வ‌ச‌தியான‌ ஜ‌ப்பானிய‌ர்க‌ள் ப‌டிக்கும் க‌ல்லூரிக்குக் க‌ற்க‌ப்போக‌, அங்கே க‌ற்ப‌து பிடிக்காத‌ மேரி சீன‌க்குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் நிர‌ம்பியிருக்கும் ப‌குதியிலுள்ள‌ ஒரு சீனக்க‌ல்லூரிக்குப் ப‌டிக்க‌ப் போகின்றார்.  அழ‌கான‌ எரி த‌ன் இள‌ம்வ‌ய‌திலேயே ப‌தின்ம‌ர்க‌ளுக்கான‌ ச‌ஞ்சிகைக‌ளில் மொட‌லிங் செய்ப‌வ‌ராக‌, ரிய‌லிட்டி ரீவிக்க‌ளின் நிக‌ழ்ச்சிக‌ளில் ப‌ங்கேற்ப‌வ‌ராக‌ புக‌ழ்பெற்று விடுகின்றார். சீன‌ப் ப‌ள்ளிக்குப் போகும் மேரி சீன‌மொழியில் பேசுவ‌தில் வ‌ல்ல‌வ‌ராய் இருப்ப‌துட‌ன், த‌ன் த‌ம‌க்கைக்கு நேர் எதிரான‌ குண‌ங்க‌ளுடைய‌வ‌ராக‌ இருக்கிறார்.

த‌ன் வீட்டை விட்டு ஓடிவ‌ந்திருக்கின்றாரா அல்ல‌து யாரையாவ‌து ச‌ந்திக்க‌ வ‌ந்திருக்கின்றாரா என்கின்ற‌ எவ்வித‌த் தெளிவும் இல்லாது, க‌ஃபேயில் ஆறுத‌லாக‌ புத்த‌க‌ம் ஒன்றை வாசித்துக்கொண்டிருக்கும் ஒருவ‌ராக‌ மேரி, ஹ‌ருக்கி முர‌காமியால் வாச‌க‌ர்க‌ளுக்கு அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்றார். அங்கே த‌ற்செய‌லாய் ஓரு இளைஞ‌னை மேரி ச‌ந்திக்கின்றார். அவ‌ன் மேரியின் ச‌கோத‌ரியான‌ எரியை அறிந்த‌வ‌ன். மேலும் மேரியையும், எரியோடு சேர்த்து சில‌வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் நேர‌டியாக‌ச் ச‌ந்தித்துமிருக்கின்றான். ஆனால் மேரிக்கு இந்த‌ இளைஞனை அவ்வ‌ள‌வு ஞாப‌க‌ம் இல்லை. இளைஞ‌ன் மேரியோடு பேசுவ‌தில் ஆவ‌லாக‌ இருப்ப‌வ‌னாயிருப்பினும் மேரிக்கு அவ‌னோடு அள‌வ‌ளாவுவ‌தில் அவ்வ‌ள‌வு விருப்ப‌மில்லை. இளைஞ‌ன், எரி இப்போது எப்ப‌டி இருக்கின்றார் என‌க் கேட்கிறார். மேரி, தன் ச‌கோத‌ரி நீண்ட உற‌க்க‌த்தில் இர‌ண்டு மாத‌ங்க‌ளாய் இருக்கின்றார் என்கின்றார்.  இதைக் கேட்கும் அந்த‌ இளைஞ‌னுக்கு ம‌ட்டுமில்லை, வாசிக்கும் ந‌ம‌க்கும் எப்ப‌டி ஒருவ‌ர் இர‌ண்டு மாத‌ங்க‌ளாய் -கோமாவும் இல்லாம‌ல்- நீண்ட‌ உற‌க்க‌த்திலிருக்க‌ முடியும் என்ற‌ விய‌ப்பு ஏற்ப‌டுகிற‌து.

இப்போது க‌தை மூத்த‌ ச‌கோத‌ரியான‌ எரியை நோக்கித் திரும்புகின்ற‌து. அவ‌ர் மேரி கூறிய‌தைப் போல‌வே நீண்ட‌ தூக்க‌த்திலேயே இருக்கின்றார். வாசிக்கும் எம்மை ந‌க‌ரும் விடீயோக் க‌ம‌ராவைப் போல‌ எரியை அவ‌தானிக்கும்ப‌டி முர‌காமி அழைத்துச் செல்கின்றார். எரியுட‌ன் அவ‌ரைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு ம‌னித‌னும் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்றான். அவ‌னுக்கு வாசிக்கும் எங்க‌ள் வ‌ச‌திக்காய் 'முக‌மில்லாத‌ ம‌னித‌ன்' (The man without face ) என‌ ஒரு பெய‌ரை முர‌காமி த‌ருகின்றார்.  ஏன் எரி இப்ப‌டி நீண்ட‌ தூக‌த்தில் இருக்கின்றார்? யார் அந்த‌ 'முக‌மில்லாத‌ ம‌னித‌ன்'?  நாவ‌ல் முடியும்வ‌ரை அவை சுவார‌சிய‌மான‌ புதிர்க‌ளாய் அவிழ்க்க‌ப்ப‌டாம‌ல் இருக்கின்ற‌ன‌.

இப்போது மீண்டும் க‌தை, க‌ஃபேயிலிருக்கும் மேரியை நோக்கித் திரும்ப‌ தொட‌ங்குகின்ற‌து.  வ‌ந்த‌ இளைஞ‌ன், தான் த‌ன் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் இந்ந‌ள்ளிர‌வு முழுக்க‌ இசைநிக‌ழ்வுக்காய் ப‌யிற்சி எடுக்க‌ப்போகின்றேன் என‌வும் பயிற்சியின்போது இன்னொரு இடைவெளி எடுக்கும்போது மேரி க‌ஃபேயிலிருந்தால் வ‌ந்து தான் ச‌ந்திப்ப‌தாக‌வும் கூறி விடைபெறுகின்றான். நேர‌ம் ந‌ள்ளிரவைத் தாண்டியும் விட்ட‌து. ந‌க‌ரிலிருந்து புற‌ப்ப‌டும் க‌டைசி ரெயினும் போய்விட்ட‌து. இனி விடிகாலை வ‌ரை மேரி த‌ன் வீட்டுக்குத் திரும்ப‌முடியாது என்ப‌தும் அந்த‌ இளைஞ‌னுக்குத் தெரியும்.

மேரி இப்போது ஏற்க‌ன‌வே தான் வாசித்துக்கொண்டிருக்கும் புத்த‌க‌த்தில் ஆழ்ந்துவிடுகின்றார். அப்போது அசாதார‌ண‌ உய‌ர‌மும், எடையும் கொண்ட‌ ஒரு பெண்ம‌ணி மேரியைத் தேடி அந்த‌க் க‌ஃபேயிற்கு வ‌ருகின்றார். மேரியிட‌ம், தான் ஒரு சிக்க‌லில் மாட்டிக்கொண்டிருக்கின்றேன், உன‌க்குச் சீன‌மொழி பேச‌முடியுமென‌ உன்னை ஏற்க‌ன‌வே ச‌ந்தித்துச் சென்ற‌ இளைஞ‌ன் கூறியிருக்கின்றான். உன்னால் என‌க்கொரு மொழிபெய‌ர்ப்பாள‌ராக‌ இருந்து உத‌வ‌முடியுமா? என‌க் கேட்கின்றார். இத‌ற்கு முன் அறிமுக‌மேயில்லாத‌ பெண்ணோடு மொழிபெய‌ர்ப்பாள‌ராக‌ச் செல்வ‌தா அல்ல‌து வேண்டாமா என‌ மேரி முத‌லில் யோசித்தாலும் ஹ‌ரோக்கி என்கின்ற‌ அப்பெண்ம‌ணியோடு அவ‌ர் நிர்வாகிக்கும் 'ல‌வ்' ஹொட்ட‌லுக்குச் செல்கின்றார்.

போகும் வ‌ழியில் ஹ‌ரோக்கி தான் ஒரு ம‌ல்யுத்த‌ வீராங்க‌னையாக‌ (Wrestler)  இருந்த‌தாக‌வும் போட்டிக்களுக்காய்ப் ப‌ல‌ நாடுக‌ளுக்குச் சென்ற‌தாக‌வும், ஒரு நிக‌ழவில் த‌ன் முள்ள‌ந்த‌ண்டு பாதிக்க‌ப்ப‌ட்ட‌திலிருந்து போட்டிக‌ளில் தொட‌ர்ந்து ப‌ங்குபெற‌ முடியாம‌ல் போய்விட்ட‌து என்கின்றார். இப்போது வ‌ருமான‌ம் ஏதுமில்லாம‌ல், இந்த‌ ல‌வ் ஹொட்ட‌லை நிர்வகிப்ப‌வ‌ராக‌ வேலை செய்கின்றார் என‌வும் கூறுகின்றார் ஹ‌ரோக்கி. மேலும், 'இந்ந‌க‌ரில் ந‌ள்ளிர‌வில் என்ன‌ செய்துகொண்டிருக்கின்றாய்?' என‌ மேரியிட‌மும் கேட்கின்றார். மேரி மெள‌ன‌மாய் இருப்ப‌தைப் பார்த்து, 'உன்னைப் போன்றே பதின்ம‌ங்க‌ளைத் தாண்டியே நானும் வ‌ந்திருக்கின்றேன். உன்னைப் போன்ற‌ பெண்க‌ள் இக்க‌ளியாட்ட‌ப் பிர‌தேச‌ங்க‌ளுக்கு ந‌ள்ளிர‌வுக‌ளில் வ‌ர‌க்கூடாது. எதுவுமே ந‌ட‌க்க‌லாம். ப‌க‌லில் பார்க்கும் இட‌ம் போல‌ இது இர‌வில் இருப்ப‌தில்லை. இர‌வில் இத்த‌கைய‌ இட‌ங்க‌ள் இன்னொரு முக‌மூடியை அணிந்துகொள்கின்ற‌ன‌' என்கிறார் ஹ‌ரோக்கி. மேலும் தான் நிர்வாகிக்கும் ல‌வ் ஹோட்ட‌ல்க‌ளில் அநேக‌மாய் இர‌வைக் க‌ழிக்க‌ இணைக‌ளும், பாலிய‌ல் தொழிலாள‌ர்க‌ளுமே வ‌ருவார்க‌ள் என‌வும் கூறுகின்றார்.

2.
ல‌வ் ஹொட்ட‌லின் நான்காம் மாடியில், சீன‌மொழி ம‌ட்டும் பேச‌க்கூடிய‌ பெண் அடிவாங்கி இர‌த்த‌க் காய‌ங்க‌ளோடு மூலையில் ஒடுங்கிக்கிட‌க்கிறார்.  மேரி, தான் பொலிஸின் ஆளில்லை, த‌ன்னை ந‌ம்பிக் க‌தைக்க‌லாம் என்கின்ற‌போதும் முத‌லில் அந்த‌ச் சீன‌ப் பெண் த‌ய‌ங்குகின்றார். இறுதியில் அந்த‌ப்பெண் தான் இந்த‌ நிலைக்கு வ‌ந்த‌ நிலைமை ப‌ற்றிக் கூறுகின்றார். பாலிய‌ல் தொழில் செய்வ‌த‌ற்கென‌ ஜ‌ப்பானில் இய‌ங்கும் ஒரு சீன‌க்குழுவால் அவ‌ர் ஜ‌ப்பானுக்கு க‌ள்ள‌மாக‌ வ‌ர‌வ‌ழைக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார். அந்த‌ப் பெண்ணுக்கும் மேரியின் வ‌ய‌தே இருப்ப‌தால் மேரிக்கும் அவ‌ர் மீது ஒருவித‌ப் ப‌ரிவு வ‌ருகிற‌து.

அன்று வாடிக்கையாள‌ரோடு வ‌ந்த‌ இப்பெண்ணுக்கு மாதாந்த‌ உதிர‌ப்பெருக்கு ஏற்ப‌ட்டுவிட‌, வாடிக்கையாள‌ ஆண் கோப‌த்தில் இவ‌ரைத் தாக்கிவிட்டு இவ‌ர‌து உடைக‌ள் உட்ப‌ட‌ அனைத்து உடைமைக‌ளையும் எடுத்துக்கொண்டு போயிருக்கின்றார். உடைகளை எடுத்துச் சென்ற‌துகூட‌ -இந்த‌ வ‌ன்முறையை- உட‌னேயே வேறு யாருக்குத் தெரிவித்து எவ‌ரும் வ‌ந்துவிட‌க்கூடாது என்கின்ற‌ முற்பாதுகாப்பிற்காக‌வே ஆகும். ஆடைக‌ளில்லாதுவிடின் உட‌னேயே வெளியே ஓடிப் போய் இப்பெண் எவ‌ரிட‌மும் உத‌வி கேட்க‌முடியாத‌வ‌ல்ல‌வா?

இறுதியில் அப்பெண்ணுக்கு மாற்றுடை கொடுத்து, அவ‌ர் யாருடைய‌ க‌ட்டுப்பாட்டில் இருக்கின்றாரோ அந்த‌ச் சீனக்குழுவுக்கும் செய்தி கொடுக்க‌ப்ப‌ட்டு அப்பெண்ணை அந்த‌க்குழு பொறுப்பெடுத்துக் கொள்கின்ற‌து. த‌ன‌து ஹொட்ட‌ல் அறைக்கு உரிய‌ ப‌ண‌ம் த‌ராத‌ற்கு ம‌ட்டுமின்றி, ஒரு பெண்ணின் மீது மூர்க்க‌த்த‌ன‌மாய் தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌த‌ற்குமாய் அந்த‌ வாடிக்கையாள‌ர் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌வேண்டுமென‌ வீறாப்பில், ஹ‌ரோக்கி பாதுகாப்புக் க‌ம‌ராக்க‌ளை பின்னோக்கிச் சுழ‌ற்றி அந்த‌ வாடிக்கையாள‌ரைக் க‌ண்டுபிடித்து ப‌ட‌த்தைப் பிர‌தி எடுத்தும் கொள்கின்றார். மேலும் சீன‌க்குழுவிற்கும் தொலைபேசி அழைத்து அந்த‌ வாடிக்கையாள‌ர் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌வேண்டுமென்ப‌த‌ற்காய் அந்த‌ப் புகைப்ப‌ட‌த்தையும் அவ‌ர்க‌ளிட‌ம் ஹ‌ரோக்கி கொடுத்துவிடுகின்றார்.

இத‌ற்கிடையில் மேரியைக் கொண்டுபோய் க‌ஃபேயில் மீண்டும் விட்டுவிடும் ஹ‌ரோக்கி, இர‌வில் த‌ங்குவ‌த‌ற்கு ஓரிட‌ம் வேண்டுமென்றால் த‌ன் ஹொட்ட‌லுக்கு எந்த‌ நேர‌மும் வ‌ர‌லாம் என‌ அழைப்பையும் விட்டுச் செல்கின்றார். மீண்டும் தேநீரும்,பாட‌லும், புத்த‌க‌ம் வாசிப்ப‌துமாய் மேரி இருக்க‌, இசைப் ப‌யிற்சிக்குப் பின்பான‌ இடைவேளையில் முத‌லில் மேரியைச் ச‌ந்திக்க‌ அந்த‌ இளைஞ‌ன் வ‌ருகின்றான். அவ‌ன், தான் இனி இசைக்குழுவை விட்டு முற்றுமுழுதாக‌ வில‌கி, விரைவில் ச‌ட்ட‌ம் ப‌டிக்க‌ப் போவ‌தாய்க் கூறுகின்றான். அதைத் தேர்ந்தெடுத்த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ளையும், த‌ன் எதிர்கால‌க் க‌ன‌வுக‌ளையும் மேரியுட‌ன் ப‌கிர்கிறான். மேரி முத‌ற் ச‌ந்திப்பைப் போல‌வ‌ன்றி, இப்போது அவ‌னோடு அளவ‌ளாவ‌த் தொட‌ங்குகின்றார். அப்போதுதான், அவ‌ன் மேரியின் ச‌கோத‌ரியான‌ எரி ஒருநாள் த‌ன்னோடு சில‌ த‌னிப்ப‌ட்ட‌ விட‌ய‌ங்க‌ளைப் ப‌கிர்ந்தாள் என்கின்ற‌ விட‌ய‌த்தைக் கூறுகின்றான். அத்துட‌ன் அவ‌ள் நிறைய‌ மாத்திரைக‌ளையும் எடுத்துக்கொண்டிருக்கின்றாள் என்ப‌தையும் தெரிவிக்கின்றான். மேரிக்கு த‌ன் த‌ம‌க்கை எளிதில் வெளிவ‌ர‌முடியாத‌ பெரும் சிக்க‌லில் மாட்டியிருக்கின்றாள் என்ப‌து விள‌ங்குகின்ற‌து.

3.
க‌தை இப்போது சீன‌ப்பெண்ணை மூர்க்க‌மாய்த் தாக்கிய‌ வாடிக்கையாள‌னைச் சுற்றி ந‌கர‌த்தொட‌ங்குகின்ற‌து. அவ‌னொரு மென்பொருள் நிறுவ‌ன‌த்தில் வேலை செய்கின்றான். அதிக‌மாய் இர‌வில் த‌ன் வேலைத்த‌ல‌த்தில் த‌ங்கி நெடுநேர‌ம் வேலை செய்யும் ஒருவ‌னாக‌ இருக்கின்றான். அன்றும் த‌ன‌க்குக் கிடைத்த‌ இடைவெளியில்தான் சீன‌ப்பெண்ணைக் கூட்டிக்கொண்டு ல‌வ் ஹொட்ட‌லுக்குப் போயிருக்கின்றான். மீண்டும் த‌ன் வேலைத்த‌ள‌த்திற்கு வ‌ரும் அவ‌ன் நிதான‌மாக‌ வேலையை முடித்து, யோகா செய்து ச‌வ‌ர‌ஞ்செய்து வீட்டுக்குப் புற‌ப்ப‌டுகின்றான். போகும்வ‌ழியில் ம‌னைவி பால் வாங்கி வ‌ர‌ச் சொன்ன‌து நினைவுக்கு வ‌ருகின்ற‌து. பால் வாங்கும் க‌டையின் முன்னாலிருக்கும் குப்பை போடும் இட‌த்தில், தான் அப‌க‌ரித்து வ‌ந்த‌ சீன‌ப்பெண்ணின் ஆடைக‌ள் தோற்பை உள்ளிட்ட‌ எல்லாவ‌ற்றையும் வேறொரு பையினுள் பாதுகாப்பாய்ப் போட்டு வைத்துவிடுகின்றான். ஆனால் அந்த‌ப் பெண்ணின் கைத்தொலைபேசியை ம‌ட்டும் வேண்டுமென்றே க‌டையிலுள்ள‌ விற்ப‌னை பொருட்க‌ளிடையே ம‌றைத்து வைத்தும் விடுகின்றான்.

மேரியோடு க‌தைத்துக் கொண்டிருந்த‌ இளைஞ‌ன் மீண்டும் இசைப்ப‌யிற்சி செய்வ‌த‌ற்காய்த் திரும்புகின்றான். மேரியை காலைச் சாப்பாட்டுக்காய்க் கூட்டிக்கொண்டு போக‌ விரும்புவ‌தாய்க் கூறிவிட்டுப் போகின்றான். அவ‌னும் சில‌ பொருட்க‌ளை வாங்க‌ வேண்டி க‌டையொன்றுக்குப் போக, அந்த‌க்க‌டையில் ம‌றைத்து வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ கைத்தொலைபேசி ஒலிக்க‌, யாரோ த‌வ‌றவிட்டுச் சென்றுவிட்டார்க‌ள் போலும், போனைத் தேடுகின்றார்க‌ள் போலும் என‌ தொலைபேசி அழைப்பை எடுக்கின்றான். எதிர்முனையில், 'நீ என்ன‌ செய்துவிட்டுப் போனாய் என்று எங்க‌ளுக்குத் தெரியும், இத‌ற்கான‌ விலையை நீ ஒருநாள் கொடுப்பாய்' என‌ அச்சுறுத்தும் குர‌ல் கேட்கின்ற‌து. இந்த‌ இளைஞ‌னுக்கு விய‌ப்பாயிருக்கிற‌து. த‌ன் நிலையை விள‌ங்க‌ப்ப‌டுத்த‌வும் அவ‌னுக்கு எதிர்முனையில் பேசிய‌வ‌ன் ச‌ந்த‌ர்ப்ப‌ம் கொடுக்க‌வில்லை. ப‌ய‌த்தோடும் ப‌த‌ற்ற‌த்தோடும் அந்த‌க்க‌டையை விட்டு இந்த‌ இளைஞ‌ன் ந‌க‌ர்ந்து செல்கின்றான்.

...இவ்வாறாக‌ நாவ‌ல் இன்னும் நீளும். ஹ‌ருக்கி முர‌காமியின் நாவ‌ல்க‌ளில் வ‌ரும் முக்கிய‌ ஆண்பாத்திர‌ங்க‌ள் அநேகமாய் த‌னிமைப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாய் அல்ல‌து த‌னிமையை விரும்புவ‌ர்க‌ளாய் இருப்ப‌வ‌ர்க‌ளாய் ப‌டைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தைப் போல‌ இதில் வ‌ரும் இளைஞ‌னும் இருக்கின்றான். முக்கிய‌மாய் பெண்க‌ள் மீது ஈர்ப்பிருப்பவ‌ர்க‌ளாய் இருப்பினும் அவ‌ர்க‌ளை க‌வ‌ர‌முடியாத் தாழ்வுண‌ர்ச்சியுட‌ன் இருப்ப‌வ‌ர்க‌ளாய் முர‌காமியின் அநேக ஆண்பாத்திர‌ங்க‌ள் ப‌டைக்க‌ப்ப‌ட்டிருக்கும். இந்நாவ‌ல் ந‌ள்ளிர‌வில் தொட‌ங்கி விடிகாலையில் முடியும் குறுகிய‌ கால‌ப்ப‌குதிக்குரிய‌ க‌தை என்றாலும் ஹ‌ருக்கி முர‌காமி த‌ன் எழுத்தால் எம்மையும் அந்த‌ச் சூழ‌லுக்குள் ஒரு பார்வையாள‌ரைப் போல‌ ஆக்கிவிடுகின்றார்.

மேரி ஒவ்வொரு பாத்திர‌த்தையோ, ச‌ம்ப‌வ‌ங்க‌ளையோ ச‌ந்திக்கும்போது ந‌ம‌க்கு அடுத்து என்ன‌ ந‌ட‌க்க‌ப்போகின்ற‌தோ என்கின்ற‌ ப‌த‌ற்ற‌ம் வ‌ந்துவிடுகின்ற‌து. அதேபோல் மேரியின் ச‌கோத‌ரியான‌ எரி ப‌ற்றி விப‌ரிக்கப்ப‌டும்ப‌குதிக‌ள் முழுதுமே ஒருவித‌ மாய‌ ய‌தார்த்த‌த்தில் எழுத‌ப்ப‌ட்டிருக்கும். மேரி, எரி த‌ங்க‌ள் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கின்றார் என‌த்தான் கூறுகின்றார். அப்ப‌டியாயின் அவ‌ர் தூங்குவ‌தைப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த‌ 'முக‌ம‌ற்ற‌ ம‌னித‌ன்' யார்? அதும‌ட்டுமில்லாது ஒரு அத்தியாய‌த்தில், தூக்க‌த்திலிருந்து ச‌ற்று விழிக்கும் எரி, நில‌த்திலிருக்கும் ஒரு பென‌சிலை எடுக்கின்றார். பிற‌கு பார்த்தால் அதே பென்சிலே சீன‌ப்பெண்ணைத் தாக்கிய‌ வாடிக்கையாள‌ன் வேலை செய்யும் மேசையில் இருப்ப‌தாய்க் கூற‌ப்ப‌ட்டிருக்கும். இவ்வாறாக‌ எரியின் உற‌க்க‌மே ப‌ல்வேறு வித‌மான‌ விசித்திர‌ப்புதிர்க‌ளால் நெய்ய‌ப்ப‌ட்டிருக்கும். இருநூறு ப‌க்க‌ங்க‌ளுக்கும் குறைவான‌ நாவ‌ல் என்றாலும் வாசிப்புச் சுவார‌சிய‌த்திற்கு குறைவே இல்லாத‌து.

ஹ‌ருக்கி முர‌காமிக்குப் பிடித்த‌மான‌ பூனைக‌ள் இந்நாவ‌லிலும் முடிவ‌த‌ற்கு சில‌ அத்தியாய‌ங்க‌ள் முன் பூங்காவில் தோன்றுகின்ற‌ன‌. மேரியும், அந்த‌ இளைஞனும் ரூனா மீனை அப்பூனைகளுக்கு சாப்பிட‌க் கொடுத்து அவைக‌ளை வ‌ருடிய‌படி இருக்கின்ற‌ன‌ர். ஒருவ‌கையில் பார்த்தால் இந்த‌ப் பூனைக‌ளைப் போல் நாமும் வாழ்வில் யாருடைய‌தோ அர‌வ‌ணைப்புக்காக‌ காத்திருக்க‌வோ அல்ல‌து அலைக்க‌ழிய‌வோ வேண்டியிருக்கிற‌து அல்ல‌வா?
............

Photos: Thanks to Google Images (search words: after dark, haruki murakami)

ஓர் அநாம‌தேய‌த் தீவு by Yi Mun-Yol

Thursday, October 06, 2011

-வாசிப்பு-

கொரிய‌ எழுத்தாள‌ரான‌ ஜி முன்-யோல் (Yi Mun-Yol) எழுதிய‌ 'ஓர் அநாம‌தேய‌த் தீவு' (An Anonymous Island) சிறுக‌தை அண்மையில் நியூயோர்க்க‌ர் இத‌ழில் வெளிவ‌ந்திருக்கின்ற‌து. இதுவே நியூயோர்க்க‌ரில் வெளிவ‌ந்த‌ முத‌லாவ‌து கொரிய‌க் க‌தை என்கிறார்க‌ள்.  ஜி முன்-யோல் 1948ம் ஆண்டு சியோலில் பிற‌ந்த‌வ‌ர்.

'ஓர் அநாம‌தேய‌த் தீவு' க‌தை, ஆணொருவ‌ர் தொலைக்காட்சியைப் பார்த்து இன்றைய‌ இளைஞ‌ர்க‌ள் எல்லாம் கெட்டுப் போய்விட்டார்க‌ள் என்று அங்க‌லாய்ப்ப‌துட‌ன் தொட‌ங்குகின்ற‌து. கிள‌ப்பில் ந‌ட‌ன‌மாடும் இளைஞ‌ர்க‌ளைக் கூட‌,  'ந‌ட‌ன‌மாடுப‌வ‌ர்க‌ள்' என்று கூறாது தொலைக்காட்சி 'உட‌ல்க‌ள் உர‌சுப‌வ‌ர்க‌ள்' என‌ப் புதுப்பெய‌ர் சூட்டி விம‌ர்சிக்கின்ற‌து. ஆணும்((க‌ண‌வ‌ர்), தொலைக்காட்சியும் இப்பெண்ணுக்கு ப‌ழைய‌ நினைவுக‌ள் சில‌வ‌ற்றைக் கிள‌றிவிடுகின்ற‌ன‌.

சில‌ கால‌த்திற்கு முன், இப்பெண் ஆசிரிய‌த்தொழில் பார்ப்ப‌த‌ற்காய் ந‌க‌ர‌த்தை விட்டொதுங்கிய‌ ஒரு தொலைதூர‌ ம‌லைக்கிராம‌த்திற்குச் செல்கின்றார். அக்கிராம‌த்திற்குச் சென்றிற‌ங்கும்போது ஒரு க‌டைக்கார‌ர், அழுக்கான‌ ஆடையுட‌னும் தாறுமாறான‌ த‌லைம‌யிருட‌னும் இருக்கும் ஒருவ‌னைத் திட்டிக் கொண்டேயிருக்கின்றார். அவ‌ன் அதைப் ப‌ற்றிக் க‌வ‌லைப்ப‌டாது எதுவும் பேசாது த‌ன்பாட்டில் இருக்கின்றான்.  இப்பெண், தான் இங்குள்ள‌ பாட‌சாலைக்கு புதிய‌ ஆசிரிய‌ராக‌ வ‌ந்திருக்கின்றேன் என்கின்றார். கிராம‌ம் ஓர் ஒதுக்குப்புற‌த்தில் இருக்கின்ற‌தென்றால் ம‌றுப‌க்க‌ம் பாட‌சாலையும் இன்னும் மோச‌மான‌ நிலையில் இருக்கிற‌து. ஆசிரிய‌த் தொழிலில் ஒன்றிப்போகும் இப்பெண், அந்த‌த் த‌றுத‌லை இளைஞ‌ன் எவ்வித‌ வேலையும் செய்யாம‌ல், த‌ங்குவ‌த‌ற்கு ஓர் ஒழுங்கான‌ வீடும் இல்லாம‌லும் வாழ்ந்து கொண்டிருப்ப‌தைக் காண்கிறார். ஆனால் அவ‌னுக்கு மூன்று நேர‌மும் சாப்பாடும், த‌ங்கிப் ப‌டுப்ப‌த‌ற்கு இட‌ங்க‌ளும் அந்த‌ ஊரில் கிடைத்துக்கொண்டிருப்ப‌துதான் இவ‌ருக்கு இன்னும் ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கின்ற‌து.  எந்த‌ வீட்டுக்குச் சாப்பாடு வேண்டும் என்று போனாலும் அங்கிருக்கும் பெண்க‌ள் அவ‌னுக்கு ம‌ன‌முவ‌ந்து உண‌வு ப‌ரிமாறுகின்றார்க‌ள். த‌டை எதுவும் கூறாம‌ல் ஆண்க‌ளும் அவ‌னைத் த‌ங்க‌ள் வீட்டுக்குள் அனும‌திக்கின்ற‌ன‌ர்.

நாட்க‌ள் செல்ல‌ச் செல்ல‌ ஓர் உண்மையை இந்த‌ ஆசிரிய‌ர் க‌ண்டுகொள்கின்றார். இக்கிராம‌ம் முழுதும் ஒரேயொரு இன‌க்குழு (Clan) ம‌ட்டுமே இருக்கின்ற‌து. ஆக‌ எல்லோருக்கும் எல்லோருமே உற‌வின‌ர்க‌ளாக‌வோ, தெரிந்த‌வ‌ர்க‌ளாக‌வோ இருக்கின்றார்க‌ள். இந்த‌ இளைஞ‌ன் ம‌ட்டுமே வெளியில் இருந்து வ‌ந்த‌வ‌னாக‌ இருக்கின்றான். அப்ப‌டியெனில் எப்ப‌டி இவனை இவ‌ர்க‌ள் ஏற்றுக்கொண்டார்க‌ள்? எத‌ற்காய் ம‌ன‌ங்கோணாம‌ல் மூன்று வேளையும் உண‌வு ப‌ரிமாறுகின்றார்க‌ள்?

இந்த‌ இளைஞ‌னுக்கும் அந்த‌ ஊரில் இருக்கும் அநேக‌ பெண்க‌ளுக்கும் இடையில் இர‌க‌சிய‌(?) உற‌வு இருக்கின்ற‌து.  சில‌ பெண்க‌ளுக்குப் பிற‌க்கும் குழ‌ந்தைக‌ள் கூட‌ அவ‌னின் சாய‌லுட‌ன் இருப்ப‌தாய் ஊர்ப்பெண்க‌ள் த‌ங்க‌ளுக்குள் கிசுகிசுத்தும் கொள்கின்றார்க‌ள். அவ‌னிட‌ம் எழுத‌ப்ப‌டாத‌ ஒரு கொள்கை இருக்கின்ற‌து. அநேக‌மாய் ம‌த்திய‌ வ‌ய‌தில் இருக்கும் பெண்க‌ளோடே உற‌வு கொள்கின்ற‌வ‌னாக‌வும், ஒரு முறை உற‌வு கொண்ட‌ பெண்க‌ளிட‌ம் மீண்டும் சென்று அவ‌ர்க‌ளை சிக்க‌லில் மாட்டிவிடாம‌லும் இருக்கின்றான். இப்போது இந்த‌ ஆசிரிய‌ருக்கு அவ‌ன் இங்கே இருப்ப‌த‌ற்கான‌ அரைவாசிக்கார‌ண‌ம் புரிந்துவிடுகின்ற‌து; பெண்க‌ள் எத‌ற்காக‌ அவ‌னைத் த‌ங்க‌ளுக்கு அருகாமையில் வைத்துக் கொள்ள‌ விரும்புகிறார்க‌ள் என்ப‌தை.  ஆனால் அவ‌ன் இவ்வாறு த‌ம் பெண்க‌ளுட‌ன் உற‌வு கொள்கின்றான் என்று தெரிந்தும் ஆண்க‌ள் ஏன் அவ‌னை அடித்துத் துர‌த்தாம‌ல் த‌ங்க‌ள் கிராம‌த்திற்குள் வைத்திருக்கின்றார்க‌ள் என்ப‌தைத்தான் இந்த‌ ஆசிரிய‌ரால் புரிந்துகொள்ள‌ முடியாதிருக்கின்ற‌து.

இந்த‌ ஆசிரிய‌ர் ப‌டிக்கும் கால‌த்திலேயே ஒருவ‌ரைக் காத‌லிக்கின்றார். திரும‌ண‌ நிச்ச‌யார்த்த‌ம் முடிந்திருக்கும் பொழுதில் காத‌ல‌னுக்கு விய‌ட்னாமில் யுத்த‌ம் செய்வ‌த‌ற்கான‌ அழைப்பு வ‌ருகின்ற‌து. ஒருமுறை இவ‌ரின் காத‌லன் விடுமுறையில் இவ‌ரைப் பார்க்க‌ இந்த‌ ம‌லைக்கிராம‌த்திற்கு வ‌ருவ‌தாய்க் க‌டித‌ம் எழுதுகின்றார். காத‌ல‌ன் வ‌ந்திற‌ங்க‌வேண்டிய‌ அந்த‌க் கிராம‌த்திற்கான‌ க‌டைசிப் பேரூந்தும் வ‌ந்து போய்விட்ட‌து. இந்த‌ப் பெண் ப‌ஸ் நிலைய‌த்தில் காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துட‌ன் த‌ன் வீட்டுக்குத் திரும்புகின்றார். ம‌ழை பொழிய‌த்தொட‌ங்குகின்ற‌து.  கிடைக்காத‌ தாப‌ம் ம‌ன‌திற்குள் பெருக‌த் தொட‌ங்குகிற‌து.

ஓரிட‌த்தில் ம‌ழைக்காய் ஒதுங்கும்போது ஓருட‌ல் த‌ன்னை இழுத்து அணைப்ப‌தைக் காண்கிறார். ஆசிரிய‌ர் த‌ன் எதிர்ப்பைக் காட்டுகின்றார். யாரென‌ முக‌த்தைப் பார்க்கும்போது அது அந்த‌ த‌றுத‌லை இளைஞனாக‌ இருப்ப‌தைக் காண்கின்றார். 'நீ என்னைத் துர‌த்தாதே, உன‌து உட‌ல் இன்னும் கொதித்துக் கொண்டிருப்ப‌தை என்னால் உண‌ர‌முடிகின்ற‌து. நீ யாரையோ எதிர்ப்பார்த்து அவ‌ர் வ‌ர‌வில்லையென்ற‌ ஏமாற்ற‌த்துட‌ன் இருப்ப‌தையும் நான் அறிவேன்' என்கின்றான். இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் இடையில் உட‌லுற‌வு நிக‌ழ்கிற‌து. இப்போது நினைத்துப் பார்த்தால், 'அந்த‌ முய‌க்க‌ம் நினைவில் நிற்க‌க்கூடிய‌ ம‌கிழ்ச்சி த‌ரும் விட‌ய‌மாக‌ இல்லாவிட்டாலும், அவ‌ன் என்னை வ‌ற்புறுத்திப் புண‌ர‌வில்லை; அந்த‌ நேர‌த்தில் அது என‌க்கும் தேவையாக‌ இருந்த‌து' என‌ இப்பெண் நினைத்துக் கொள்கின்றார். இந்த‌ உற‌வு நிக‌ழ்ந்து முடிந்த‌பின் இப்பெண் இவன் த‌ன் உற‌வைப் ப‌ற்றிக் கிராம‌த்த‌வ‌ர்க‌ளிட‌ம் கூறிவிடுவானோ என்று அஞ்சுகின்றார். அவ‌ன் வேறு எவ‌ருக்கும் இவ‌ர்களின் உற‌வைச் சொல்லாத‌தைப் போல‌, பிற‌கு ஒருமுறை கூட‌ இந்த‌ ஆசிரிய‌ரைத் தேடி மீண்டும் உற‌வுக்காய் வ‌ர‌வும் இல்லை.

இப்போது இந்த‌ ஆசிரிய‌ருக்கு, யார் எது கேட்டாலும் அவ‌ன் வாய் திற‌ந்து பேசாது ம‌வுன‌மாய் இருப்ப‌த‌ன் கார‌ண‌ம் விள‌ங்குகின்ற‌து. அவ‌ன் த‌ன‌து இர‌க‌சிய‌ங்க‌ளை யாருக்கும் சொல்ல‌ விரும்புப‌வ‌னும் இல்லை, யாரையும் காட்டிக் கொடுப்ப‌வ‌னும் இல்லை. இறுதியில் இந்த‌ இளைஞ‌னை அந்த‌ ஊர் ஆண்க‌ள் ஏன் ச‌கித்துக் கொள்கின்றார்க‌ள் என்ப‌தற்கான‌ கார‌ண‌மும் தெரிகிற‌து. இந்த‌க் கிராம‌ம் முழுதும் ஒரேயொரு இன‌க்குழு  ம‌ட்டும் இருப்ப‌தால், ஒரு பெண் வேறு ஆணைத் தேடிப் போனால் அது உட‌னே கிராம‌த்திற்குத் தெரிந்துவிடும்; தேவையில்லாத‌ சிக்க‌ல்க‌ள் உற‌வுக‌ளுக்குள் ஏற்ப‌ட்டுவிடும்.  ம‌ற்ற‌க் கார‌ண‌ம், இவ்வ‌ள‌வு அல‌ங்கோல‌மான‌ ஒருவ‌னைத் தேடி ஒரு பெண் போகின்றாள் என்றால், அப்பெண்ணின் க‌ண‌வ‌ன் பாலிய‌ல் விட‌ய‌த்தில் எவ்வ‌ள‌வு செய‌ல‌ற்ற‌வ‌னாக‌ இருக்கின்றான் என்ப‌து விள‌ங்கும். ஆக‌ இந்த‌ விட‌ய‌த்தை பொதுவில் வெளிப்ப‌டுத்த‌ ஆண்க‌ள் ஒருபோதும் விரும்புவ‌தில்லை; எனெனில் பிற‌கு அவ‌ர்க‌ளின் ம‌திப்புச் ச‌மூக‌த்தில் இல்லாம‌ற் போய்விடும் (அதாவ‌து இந்த‌ த‌றுத‌லையிட‌மே உன‌து ம‌னைவி போகின்றாள் என்றால் உன‌து பெறும‌தி தான் என்ன‌?' என‌ பிற‌ர் கேள்விக‌ளால் துளைத்துவிடுவார்க‌ள்). ஆக‌ இந்த‌க்காரண‌ங்க‌ள்தான் ஆண்க‌ளும் அந்த‌ இளைஞ‌னை விரும்பியோ விரும்பாம‌லோ ஏற்றுக்கொள்கின்றார்க‌ள்.

இறுதியில் இந்த‌ ஆசிரிய‌ர் த‌ன் காத‌ல‌னை ம‌ண‌முடிப்ப‌த‌ற்காய் இக்கிராம‌த்தை விட்டு ந‌க‌ர‌த்திற்குத் திரும்புகின்றார். இவ‌ர் போகும்போது, புதிய‌ ஓர் ஆசிரியை ஊருக்குள் வ‌ருகின்றார். இவ‌ர் கிராம‌த்திற்கு முத‌ற்த‌ட‌வை வ‌ந்த‌போது எப்ப‌டி அந்த‌ இளைஞ‌னைக் க‌ண்டு முக‌ஞ்சுழித்தாரோ அப்ப‌டியே இந்த‌ப் புதிய‌ ஆசிரியையும் அவ‌னின் த‌றுத‌லைக் கோல‌ங்க‌ண்டு முக‌ஞ்சுழிக்கின்றார். அவ‌னைப் ப‌ற்றி தான் அறிந்த‌ எல்லா விட‌ய‌ங்க‌ளையும் இவ‌ருக்குக் கூறிவிடுவோமா என‌ இந்த‌ ஆசிரிய‌ர் நினைக்கின்றார். இறுதியில் அவ‌ராக‌வே அவ‌ருக்குரிய‌ தேர்வைப் பொறுத்து அவ‌னை அறிந்துகொள்ள‌ட்டுமென‌ நினைத்து ஒன்றும் கூறாம‌ல் இந்த‌ ஆசிரிய‌ர் கிராம‌த்தை விட்டுப் போகின்றார். அவ‌ன் ஓர் அர‌ச‌னைப் போல‌ புன்ன‌கைத்து ஆசிரிய‌ருக்கு விடைகொடுக்கின்றான். அந்த ஊரில் அவ‌ன் ஓர் 'அநாம‌தேய‌த் தீவாக‌'  என்றும் இருப்பான் என்ப‌தாய்க் க‌தை முடியும்.
..........
Sep 23/2011(இந்த‌க் க‌தையை நியூயோர்க்க‌ரில் வாசித்துவிட்டு அதுப‌ற்றிச் சில‌ குறிப்புக்க‌ளை எழுதிவைத்திருந்தேன். ஐரோப்பாவிலிருக்கும் என் ந‌ண்ப‌ர், த‌ன‌து கொரிய‌ ந‌ண்ப‌ருக்கு அவ‌ர‌து காத‌ல‌ன் அழ‌கான‌ காத‌ற்க‌டித‌த்தை த‌ன் கைப்ப‌ட எழுதியிருக்கின்றார் (அந்த‌க் காத‌ல‌ன் கொரிய‌ இராணுவ‌த்தில் இருக்க்கின்றார்; அது அவர்க‌ளுக்கு க‌ட்டாய‌ ஒரு சேவை) நீயும் இருக்கின்றாயே என்ன‌ என‌க்குச் செய்தாய்? என‌க் கேட்டிருந்தார். என்னால் ஒரு க‌டித‌ந்தான் எழுத‌ முடிய‌வில்லை, ஆக்க‌குறைந்த‌து வாசித்த‌ க‌தையைப் ப‌ற்றியாவ‌து எழுதி ந‌ண்ப‌ருக்கு அனுப்புவோம் என‌ இதை அனுப்பியிருந்தேன். ஆக‌, என் ந‌ண்ப‌ருக்கும் இக்க‌ண‌த்தில் ந‌ன்றி)

ஹருக்கி முரகாமியின் 'பூனைகளின் நகரம்'

Monday, September 26, 2011

-வாசிப்பு: Town of Cats by Haruki Murakami-

ஹ‌ருக்கி முரகாமியின் புதிய‌ சிறுக‌தையான‌ 'பூனைக‌ளின் ந‌க‌ர‌ம்' (Town of Cats), ஒரு த‌ந்தையிற்கும் ம‌க‌னிற்கும் இடையினான‌ உற‌வையும் வில‌க‌லையும், விடை காண‌முடியா சில‌ கேள்விக‌ளையும் முன்வைக்கிற‌து. மிக‌ ஏழ்மையில் வாழ்ந்த‌ த‌க‌ப்ப‌ன் த‌ன் ம‌க‌னையும் ஏழ்மை தெரிந்து வாழ‌வேண்டும் போல‌ வ‌ள‌ர்க்கின்றார். த‌க‌ப்ப‌ன் ஒரு ஜ‌ப்பான் தொலைக்காட்சி நிறுவ‌ன‌த்திற்கு, அவ‌ர்க‌ளின் வாடிக்கையாள‌ரின் வீடுக‌ளுக்குச் சென்று சேவைக்கான‌ ப‌ண‌த்தை சேக‌ரிக்கும் தொழிலைச் செய்கின்றார். எல்லோரும் விடுமுறையில் இருக்கும் ஞாயிற்றுக்கிழ‌மைக‌ளில் கூட‌ வீடுக‌ளைத் த‌ட்டி ப‌ண‌த்தை அற‌விடுகின்றார். ஞாயிற்றுக்கிழ‌மைக‌ளில் பாட‌சாலை இல்லாத‌தாலும், சிறுவ‌ன் பிற‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளிலே தாய் இற‌ந்துவிட்ட‌தால் வீட்டில் ஒருவ‌ரும் இல்லையென்ற‌ப‌டியாலும், ம‌க‌னையும் ஞாயிற்றுக்கிழ‌மைக‌ளில் த‌ன் வேலைக்குத் த‌க‌ப்ப‌ன் கூட்டிச்செல்கின்றார்.

த‌ன் வ‌ய‌தொத்த‌ சிறுவ‌ர்க‌ள் எல்லாம் ஞாயிறுக‌ளில் குதூக‌ல‌மாய்க் க‌ழிக்க‌ தான் ம‌ட்டும் இப்ப‌டித் த‌ந்தையோடு அலைய‌வேண்டியிருக்கிற‌தே என‌ இச்சிறுவ‌ன் வ‌ருந்துகின்றான். வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌த் த‌ந்தை த‌ன்னை ஒருவ‌கையில் த‌ன் தொழிலுக்குப் பாவிக்கின்றார் என‌வும் இச்சிறுவ‌ன் எண்ணிக்கொள்கின்றான். எனெனில் வீடுக‌ளைத் த‌ட்டும்போது, சிறுவ‌னை முன்னேவிடும்போது ப‌ண‌ம் கொடுக்காது சும்மா சாட்டுச் சொல்ப‌வ‌ர்க‌ள் கூட‌ குறுகுறுப்புட‌ன் உரிய ப‌ண‌த்தைக் கொடுத்துவிடுகின்றார்க‌ள். த‌ந்தையுட‌ன் இனியும் ஞாயிறுக‌ளில் வ‌ர‌ப்போவ‌தில்லையென‌ ப‌தினொரு வ‌ய‌தில் ம‌கன் ம‌றுத்துக் கூறுகின்றார். அப்ப‌டி வ‌ர‌வில்லையெனில் உன‌க்கு உண‌வுமில்லை, த‌ங்குவ‌த‌ற்கு வீடுமில்லை என‌த் த‌ந்தை கூறுகின்றார். இந்த‌ விட‌ய‌ம் அந்த‌ச் சிறுவ‌னின் ஆசிரிய‌ருக்குத் தெரிந்து அவ‌ர் த‌ந்தைக்கும் ம‌க‌னுக்கும் இடையில் ச‌ம‌ர‌ச‌ம் செய்கின்றார். ஆனால் அன்று தொட‌ங்கிய‌ தகப்பனிற்கும் மகனிற்குமான விரிச‌ல் வாழ்வில் என்றுமே ஒட்ட‌முடியாத‌ சம்ப‌வ‌மாக‌ ஆகிவிடுகின்றது.

வ‌ருட‌ங்க‌ள் பல உருண்டோடிவிட்ட‌ன. இப்போது த‌க‌ப்ப‌ன் டோக்கியோவை விட்டுத் தொலைவில் வயதானவர்களைப் ப‌ராம‌ரிக்கும் விடுதியொன்றில் இருக்கின்றார். அவ‌ர் அங்கே போய்ச் சேர்ந்த‌த‌ன்பின் ஒன்றிர‌ண்டு த‌ட‌வைக‌ள்தான் ம‌க‌ன் போய்ப் பார்த்திருக்கின்றார். ந‌ல்ல‌ வேலையில் இருக்கும் ம‌க‌ன் ஒரு ஞாயிற்றுக் கிழ‌மை த‌ன் த‌ந்தையைப் பார்க்க‌ப் போக‌லாம் என்று வெளிக்கிடுகின்றார். ரெயில் ப‌ய‌ண‌த்தில் ஒரு ஜேர்ம‌னிய‌ நூலை வாசிக்க‌த் தொட‌ங்குகின்றார். அந்த‌ நாவ‌லின் பெய‌ரே 'பூனைக‌ளின் ந‌க‌ர‌ம்'.

Haruki Murakami
ஒரு ந‌க‌ரில் ஒருவ‌ன் இருக்கின்றான். அவ‌ன் ப‌ய‌ண‌ம் செய்ய‌ விரும்புகின்ற‌வ‌னாக‌வும், எந்த‌த் திட்ட‌மிட‌ல் இல்லாம‌ல் இட‌ங்க‌ளுக்குப் ப‌ய‌ணித்துக் கொண்டிருக்கின்ற‌வ‌னாக‌வும் இருக்கின்றான். ஒருமுறை ரெயினில் போகும்போது, ஒரு அழ‌கான‌ இட‌த்தைக் கண்டு அந்த‌ இட‌த்தில் இற‌ங்கிவிடுகின்றான். இவ‌ன் ம‌ட்டுமே அந்த‌ புகைவ‌ண்டி நிலைய‌த்தில் இற‌ங்கி ந‌ட‌ந்து போகின்றான். அந்த‌ ந‌க‌ர‌த்தில் எவ‌ர‌து ந‌ட‌மாட்ட‌ங்க‌ளையும் காண‌முடிய‌வில்லை. ஏதோ பெரிய‌ அழிவு ந‌ட‌ந்து ம‌க்க‌ள் எல்லாம் இட‌ம்பெய‌ர்ந்து போய்விட்டார்க‌ள் என‌ நினைத்துக் கொள்கின்றான். ம‌னித‌ர்க‌ள் ந‌ட‌மாட்ட‌மில்லாத‌தால் அடுத்த‌ இரெயினில் ஏறிப்போகலாம் எனவும் நினைத்துக்கொள்கின்றான். இரவாகின்ற‌து. அந்த‌ ந‌க‌ர‌த்துக்குப் பூனைக‌ள் வெவ்வேறு இடங்க‌ளிலிருந்து வ‌ர‌த் தொட‌ங்குகின்ற‌ன‌. அவை ம‌னித‌ர்களைப் போல் மூட‌ப்ப‌ட்ட‌ க‌டைக‌ளைத் திற‌க்கின்ற‌ன‌. வியாபார‌ம் செய்கின்ற‌ன‌. உண‌வுக்க‌டைக‌ளில் உண‌வ‌ருந்துகின்ற‌ன‌. தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. ந‌க‌ர‌ம் இப்போது க‌ளைக‌ட்டி விட்ட‌து. பூனைக‌ளின் ந‌க‌ர‌த்தை அந்த‌ ந‌க‌ரிலிருக்கும் ம‌ணிக்கூட்டு கோபுரத்துக்கு மேலே ஏறியிருந்து இவ‌ன் வேடிக்கை பார்க்கின்றான். இவ்வாறான‌ பூனைக‌ளின் ந‌க‌ரைப் பார்த்து விய‌ப்ப‌டைந்து அடுத்த‌ நாளும் த‌ங்கி நின்று பூனைக‌ளை நடவடிக்கைகளை இலயித்துப் பார்க்கின்றான்.

மூன்றாவ‌து நாளும் இப்ப‌டி ம‌ணிக்கூட்டுக் கோபுர‌த்தில் இருந்து வேடிக்கை பார்க்கும்போது அத‌ன் கீழே இருந்து பெரிதாகச் ச‌த்த‌ம் வ‌ர‌, அங்கே கூடும் பூனைக‌ள் ம‌னித‌வாச‌னை வ‌ருவ‌தை அறிந்து ம‌ணிக்கூட்டு கோபுர‌த்தின் உச்சிக்கு ஏறி வ‌ருகின்ற‌ன‌. அவை ப‌டை ப‌டையாக‌ வ‌ருவ‌தைக் க‌ண்டு இவ‌ன்,த‌ன்னை அவை தாக்க‌ப்போகின்ற‌தென‌ அஞ்சி ஒடுங்கிய‌ப‌டி இருக்கின்றான். ஆனால் பூனைக‌ளால் அவனைக் காண முடியவில்லை. ம‌னித‌வாச‌னை வ‌ருகின்ற‌து என்று ம‌ட்டும் அவை தங்களுக்குள் கூறிக்கொண்டு போகின்ற‌ன‌. இப்ப‌டிப் பூனைக‌ளைச் ச‌ந்தேக‌ப்ப‌ட‌வைத்த‌தால் இனியும் இங்கு இருந்தால் ஆப‌த்து என‌ அடுத்த‌ நாள் வ‌ரும் ரெயினில் ஏறிப் போக‌த் த‌யாராக‌ ஸ்ரேச‌னுக்குப் போகின்றான். அவ‌னைக் க‌ட‌ந்து ம‌தியமும் மாலையும் ரெயின் போகின்ற‌து. ஆனால் அவ‌னுக்காக‌ ஸ்ரெச‌னில் ரெயின் நிற்க‌வேயில்லை. அந்த‌ ரெயினை ஓட்டும் எஞ்சினிய‌ரைக் கூட‌ அவ‌னால் அவ‌தானிக்க‌ முடிகிற‌து; ஆனால் அவன் அங்கே நிற்ப‌தாக‌வோ அல்ல‌து அங்கே ஓரு ஸ்ரேச‌ன் இருப்ப‌தாக‌வோ எதையும் க‌ண‌க்கெடுக்காது ஒவ்வொரு முறையும் ரெயின் இவனைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கின்ற‌து. இறுதியில் அவ‌ன் முற்றுமுழுதாக‌த் தான் 'தொலைந்துவிட்டேன்' என்பதை உண‌ர்கிறான். மேலும் இது பூனைக‌ளின் ந‌க‌ர‌ம‌ல்ல‌. இது ஒருவ‌ர் த‌ன்னைத்தானே தொலைத்துக் கொள்வதற்கான ந‌க‌ர‌மே என்ப‌தைக் க‌ண்ட‌டைகிறான். இனி எந்த‌ ரெயினும் நிற்க‌ப்போவ‌தில்லை. தான் ஏற்க‌ன‌வே வ‌ந்திருந்த‌ உல‌கிற்கு த‌ன்னால் ஒருபோதும் இனி என்றைக்குமாய்த் திரும்ப‌முடியாது என்ப‌தை உண‌ர்கின்ற‌தாய் அந்த‌ ஜேர்ம‌னிய‌க் க‌தை முடியும்.

இக்க‌தையை வாசித்த‌ப‌டி த‌ந்தை வ‌சிக்கும் ந‌க‌ருக்கு ம‌க‌ன் போகின்றான். இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாய்த் த‌ந்தையைப் பார்க்க‌வில்லை. த‌ந்தையோ அவ‌னை யாரென்று கேட்கின்றார். 'உங்க‌ள் ம‌க‌னைத் தெரிய‌வில்லையா? என‌ இவ‌ர் கேட்க‌, 'என‌க்கு ஒரு ம‌க‌னும் இல்லை' என்கின்றார் தந்தை. 'நான் உங்க‌ள் ம‌க‌னில்லை என்றால், நான் யார்?' என்கின்றார் இவர். த‌ந்தையோ 'You were nothing, you are nothing, and you will be nothing.” என்கிறார். த‌ந்தை இப்ப‌டிக் கூறிய‌வுட‌ன் இவ‌ருக்குத் தான் வாசித்த 'பூனைக‌ளின் ந‌கர‌த்தில்' கதாபாத்திரமாய் வ‌ந்த‌ தொலைந்த‌ ம‌னித‌னைப் போல‌ ஆகிவிட்டேன் போல‌த் தோன்றுகின்ற‌து.

இதுவ‌ரை ஓர் இர‌க‌சிய‌மாக‌ தனக்குள் வைத்திருந்து, த‌ந்தையிட‌ம் கேட்காத‌ கேள்வியைக் கேட்கின்றார், 'நான் உங்க‌ள் சொந்த‌ ம‌க‌ன் இல்லையா?'. எனெனில் உண்மையில் ம‌க‌னிற்குத் தெரியும், த‌ன‌து தாய் தான் பிற‌ந்த‌வுட‌ன் இற‌க்க‌வில்லை. அவ‌ர் கிட்ட‌த்த‌ட்ட‌ ம‌க‌ன் பிறந்து ஒன்ற‌ரை வ‌ருட‌ங்க‌ளுக்குப் பின்தான் இற‌ந்திருக்கின்றார் என்று. ஆனால் எப்போது த‌ன் தாயைப் ப‌ற்றிக் கேட்டாலும் த‌ந்தை தாயைப் ப‌ற்றிக் க‌தைப்ப‌தை ஒருபோதும் விரும்புவ‌தில்லை என்ப‌தையும் மகன் நினைவில் கொள்கிறார். ம‌க‌னின் நினைவுக‌ளில் தாய்...
Tengo fundamentally disbelieved his father’s story. He knew that his mother hadn’t died a few months after he was born. In his only memory of her, he was a year and a half old and she was standing by his crib in the arms of a man other than his father. His mother took off her blouse, dropped the straps of her slip, and let the man who was not his father suck on her breasts. Tengo slept beside them, his breathing audible. But, at the same time, he was not asleep. He was watching his mother.

உண்மையை அறிவ‌த‌ற்கு இதுதான் த‌ருண‌ம் என‌ த‌ந்தையிட‌ம் தொட‌ர்ந்து ம‌க‌ன் கேள்விக‌ளைக் கேட்கின்றார். த‌ந்தையோ சாம‌ர்த்திய‌மாய் இவ‌ரின் கேள்விக‌ளைத் த‌விர்த்த‌ப‌டி வேறெதுவோ பேசியப‌டி இருக்கின்ரார். த‌ந்தையிற்கு மகன் 'பூனைக‌ளின் ந‌க‌ர‌ம்' க‌தையை வாசித்துக் காட்டுகின்றார். இறுதியில் 'ஒரு வெற்றிட‌ம் எப்போதும் வெற்றிட‌மாய் இருப்ப‌தில்லை, அது எதையாவ‌து கொண்டு தன்னைத்தானே நிரப்பிக் கொள்கிறது, அப்ப‌டித்தான் தானும்' என்கின்றார் த‌க‌ப்ப‌ன். ஆனால் தான் உண்மையான‌ ப‌யோலாஜிக்க‌ல் ம‌க‌னா என்பத‌ற்கான‌ ப‌திலை த‌க‌ப்ப‌ன் மகனுக்கு கூற‌வேயில்லை. உன்னால் 'ஒரு விள‌க்க‌மில்லாது ஒன்றை விள‌ங்கிக்கொள்ள‌ முடியாவிட்டால், ஒரு விள‌க்கம் இருந்தால் கூட‌ அதை உன்னால் விள‌ங்கிக் கொள்ள முடியாது' என்பதை ம‌ட்டும் அடிக்க‌டி கூறும் த‌ந்தையின் வாச‌க‌த்தோடு ம‌க‌ன் விடைபெற க‌தை முடிகின்ற‌து.

ஹ‌ருக்கி முராகமி இந்த‌க்க‌தை, எவ்வ‌ள‌வு சிக்க‌லில்லாத‌ வ‌ச‌ன‌ங்க‌ளுட‌ன் உள்ம‌ன‌தின் ஆழ‌ங்க‌ளுக்குச் செல்ல‌ முடியும் என்ப‌த‌ற்கு ஓர் உதாரண‌ம். அவ‌ரின் மொழியின் அழ‌கிற்கு இந்த‌ப் ப‌குதியை வாசித்துப் பார்க்க‌ வேண்டும்.
While math was like a magnificent imaginary building for Tengo, literature was a vast magical forest. Math stretched infinitely upward toward the heavens, but stories spread out before him, their sturdy roots stretching deep into the earth. In this forest there were no maps, no doorways. As Tengo got older, the forest of story began to exert an even stronger pull on his heart than the world of math. Of course, reading novels was just another form of escape—as soon as he closed the book, he had to come back to the real world. But at some point he noticed that returning to reality from the world of a novel was not as devastating a blow as returning from the world of math. Why was that? After much thought, he reached a conclusion. No matter how clear things might become in the forest of story, there was never a clear-cut solution, as there was in math. The role of a story was, in the broadest terms, to transpose a problem into another form. Depending on the nature and the direction of the problem, a solution might be suggested in the narrative. Tengo would return to the real world with that suggestion in hand. It was like a piece of paper bearing the indecipherable text of a magic spell. It served no immediate practical purpose, but it contained a possibility.

தந்தைகளுக்கும் மகன்களுக்குமான உறவென்பது எப்போதும் விசித்திரமானதே. அன்பு காட்ட விரும்புகின்ற தருணங்களில் கூட விலத்தி நிற்கும் பொழுதுகளே பலருக்குச் சாத்தியமாகின்றது. அண்மையில் ஓர் ஆய்வின்படி, ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் பெற்றோருக்கு ஒரு பிள்ளை மட்டும் அதிகப் பிடித்த பிள்ளையாகி விடுகின்றது என்பது இயல்பு எனக் கூறுகின்றார்கள் (இறுதியாய் வந்த Timeஇல் இது பற்றிய கட்டுரை உள்ளது). சிலவேளைகளில் வளர்ந்த மகனுக்கும் தகப்பனுக்கும் இருக்கின்ற விலகல் கூட இயல்போ எனக்கூட எமக்குத் தோன்றக்கூடும். காஃப்கா தன் தந்தைக்கு எழுதி அனுப்பாத கடிதமும் இந்தக்கணத்தில் நினைவுக்கு வருகின்றது.
......................

நியூயோர்க்கரில் வந்த கதை
Timeல் வந்த கட்டுரையோடு சம்பந்தப்பட்ட விடீயோ
ஓவியம்: நன்றி  The New Yorker

துயில் - 02

Monday, September 05, 2011

(இதன் சுருக்கிய வடிவம் 'தீராநதி' செப்ரெம்பர் இதழில் வெளியாகியது)
3.
எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் 'யாம‌ம்' நாவ‌லுக்கு விம‌ர்ச‌ன‌ம் எழுதிய‌போது, 'யாம‌ம்' கால‌னித்துவ‌த்தை ஒரு எதிர்ம‌றையாக‌ ம‌ட்டும் பார்க்கின்ற‌து என்ற‌ குறிப்பை எழுதியிருந்தேன். ஆனால் 'துயிலில்' கால‌னித்துவ‌த்தின் இருப‌க்க‌ங்க‌ளும் மிக‌ அவ‌தான‌மாக‌ முன் வைக்க‌ப்ப‌டுகின்ற‌து என்ப‌தைக் குறிப்பிட்டாக‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு தொக்காட்டை அண்டியிருக்கும் ஒரு பூசாரி (அவ‌ரே வைத்திய‌ராக‌வும் அம்ம‌க்க‌ளுக்கு இருக்கின்றார்) ம‌ன‌ம் பிற‌ழ்ந்த‌ ஆண்/பெண்/குழ‌ந்தைக‌ளைச் ச‌ங்கிலியால் க‌ட்டி தான் அவ‌ர்க‌ளின் நோய்க‌ளைத் தீர்க்கின்றேன் என‌ ச‌வுக்கால் தின‌ம் அடிக்கின்றார். இத‌னை அவ‌தானிக்கும் ஏல‌ன்ப‌வ‌ர் இது மிருக‌த்த‌ன‌மான‌து என‌ வ‌ருந்துகின்றார். ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌த்தை இப்ப‌டியே தொட‌ர‌விடாது நிறுத்த‌வேண்டும் என‌ பாதிரியாரிட‌ம் முறையிடும்போது, நாங்க‌ளும்(வெள்ளைய‌ர்க‌ளும்) அப்ப‌டித்தானே க‌ட‌ந்த‌கால‌ங்க‌ளில் நோயாளிக‌ளுக்கு ம‌ருத்துவ‌ம் செய்திருக்கின்றோம் என‌ப் பாத‌ர் குறிப்பிடுகின்றார். எப்போதும் கீழைத்தேய‌ ம‌க்க‌ளைக் 'காட்டுமிராண்டிக‌ளாய்' விம‌ர்சிக்கும் வெள்ளையின‌த்த‌வ‌ர்க‌ளின் தோன்ற‌ல்க‌ள்தான் மிக‌க்கொடூர‌மான‌ சிலுவைப்போர்க‌ளை நிக‌ழ்த்தினார்க‌ள் என்ப‌தையும், தேவால‌ய‌ங்க‌ளுக்கு எதிரான‌ க‌ருத்துரைத்த‌ பெண்க‌ளைச் சூனிய‌க்காரிக‌ளாய் உயிரோடு எரித்த‌வ‌ர்க‌ளும் என்ப‌தையும் நாம் ம‌ற‌ந்துவிட‌முடியாது அல்ல‌வா?

அதுதான் இங்கே நினைவூட்ட‌ப்ப‌டுகின்ற‌து. அதேபோன்று இந்திய‌(த‌மிழ்)ம‌ன‌ங்க‌ளில் அக‌ற்ற‌முடியாக் க‌ச‌டாய் ஒளிந்திருக்கும் சாதி ப‌ற்றியும் துயிலில் நுட்ப‌மாக‌ப் பேச‌ப்ப‌டுகின்ற‌து. ஏல‌ன் ப‌வ‌ர் த‌ன்னிட‌ம் வ‌ரும் நோயாளிக‌ளை ஒரே மாதிரியாய் ந‌ட‌த்துவ‌து தொக்காடு கிராம‌த்திலிருக்கும் உய‌ர்சாதியின‌ரால் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட‌ முடியாதிருக்கின்ற‌து. ஏல‌ன் ப‌வ‌ரோடு வேலை செய்யும் சீபாளியின் குடும்ப‌ம் கிறிஸ்த‌வ‌ம‌த‌த்திற்கு மாறிய‌பின்ன‌ர் கூட‌, சீபாளி எல்லோரும் வ‌ழிப‌டும் தேவால‌ய‌த்தினுள் உள்ளே வழிப‌ட‌ அனும‌திக்க‌ப்ப‌டாம‌ல்தான் இருக்கின்றார். இந்த‌ச் சாதியின் அர‌சிய‌லை அங்கே மேற்கிலிருந்து வ‌ரும் பாதிரியார் கூட‌ ம‌த‌ம் மாற்ற ந‌ட்வ‌டிக்கைக்காய் அவ‌ர்க‌ளைத் த‌ந்திர‌மாய்ப் பிரித்து வைத்தே பாவிக்கின்றார் என்ப‌தையும் நாம் க‌வ‌னித்தாக வேண்டும். ஆனால் மானுட‌த்தின் மீதான உண்மையான‌ அக்க‌றையுள்ள‌ ஏல‌ன் ப‌வ‌ரால் அதை ஒருபோதும் ஏறுக்கொள்ள‌ முடிய‌வில்லை. இவ்வாறு எல்லா ம‌க்களையும் சாதி அடிப்ப‌டையில் பகுக்காது, ம‌னித‌த்தின் அடிப்ப‌டையில் ஒன்றாக‌ப் பாவித்த‌தே இறுதியில் ஏல‌ன் ப‌வ‌ரின் உயிரையும் ப‌றித்திருக்கின்ற‌து என்ப‌தை நுட்ப‌மாய் எஸ்.ரா நாவ‌லில் எழுதியிருக்கின்றார்.

ஊர் ம‌க்க‌ள், த‌ங்க‌ளுக்கு சீக்கு நோயைப் ப‌ர‌ப்புகின்றார் என்ற‌ குற்ற‌ச்சாட்டின்பேரில் ஒரு பாலிய‌ல் தொழில் செய்யும் பெண்ணை உயிரோடு அடித்துக்கொல்லும் முய‌ற்சியில் ஈடுப‌டுவ‌தை ஏல‌ன் ப‌வ‌ர் த‌டுத்து நிறுத்துகின்றார். அந்நிகழ்வே அதுவ‌ரை அவ‌ரை த‌ங்க‌ளில் ஒருவ‌ராக‌ நினைத்த‌ ஊர்ம‌க்க‌ளிட‌மிருந்து ஏலன் ப‌வ‌ரை வில‌த்தி வைக்கின்ற‌து ம‌ட்டுமின்றி, க‌த்தோலிக்க‌ச் ச‌பையிலிருந்தும் அவ‌ரை நீக்க‌ச் சொல்லியும் க‌ட்ட‌ளையும் இட‌ப்ப‌டுகின்ற‌து. ஒரு முக்கிய‌மான‌ பாத‌ரால் ஏல‌ன் ப‌வ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌தால் வ‌ங்காள‌த்திலிருந்து ஒரு உய‌ர்ம‌ட்ட‌க்குழு இச்ச‌ம்ப‌வ‌த்தை தீர‌ விசாரிக்க‌ தொக்காட்டிற்கு அனுப்ப‌ப்ப‌டுகின்ற‌து. அக்குழு இறுதியில் என்ன‌ முடிவை எடுத்த‌து என்ப‌தும், ஏல‌ன் ப‌வ‌ரின் இன்னொரு க‌னவான‌ க‌ல்வி க‌ற்க‌ வாய்ப்பேயில்லாத‌ அம்ம‌க்க‌ளுக்கு ஒரு பாட‌சாலை அமைத்துக்கொடுத்த‌ல் நிக‌ழ்ந்த‌தா என்ப‌தையும் வாசிப்ப‌வ‌ர்க‌ளுக்காய் விட்டுவிட‌லாம்.

தொக்காடு தேவால‌ய‌த்தின் திருவிழாவிற்காய் ப‌ல‌ர் ப‌ல்வேறு திசைக‌ளில் இருந்து வ‌ந்துகொண்டிருக்கின்றார்க‌ள். தொக்காடு தேவால‌ய‌த்திற்கென‌ ஒரு ஜ‌தீக‌ம் உண்டு. நோயாளிக‌ள் த‌த்த‌ம் இட‌ங்க‌ளிலிருந்து கால்ந‌டையாக‌வே ந‌ட‌ந்து திருவிழாவிற்கு வ‌ந்துசேர்ந்தால் அவ‌ர்க‌ளின் தீர்க்க‌முடியாப் பிணிக‌ள் எல்லாம் தீர்ந்துவிடும் என்ப‌து. ஆக‌வே ப‌ல்வேறு வித‌மான‌ நோயாளிக‌ள் திருவிழாவிற்காய் ந‌ட‌ந்து வ‌ந்துகொண்டிருக்கின்றார்க‌ள். அவ்வாறு வ‌ந்து சேரும் நோயாளிக‌ள் இடையில் த‌ங்கிச்செல்லும் இட‌மாக‌ எட்டூர் இருக்கின்ற‌து. அங்கே 'அக்கா' என‌ எல்லோராலும் அன்பாக‌ அழைக்க‌ப்ப‌டும் பெண்ம‌ணி எல்லா நோயாளிக‌ளையும் ப‌ரிவாக‌க் க‌வனிக்கின்றார்; அவ‌ர்க‌ளுக்கு உண‌வூட்டுகின்றார், ஆறாத‌ காய‌ங்க‌ளைச் சுத்த‌ம் செய்கின்றார்; எல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ நோயாளிக‌ள் ம‌ன‌ந்திற‌ந்து பேசுவ‌தை பொறுமையாக‌ இருந்து கேட்கின்றார். அக்கா ஒரு ம‌ருத்துவ‌ர‌ல்ல‌, ஆனால் நோயுற்ற‌வ‌ர்க‌ள் எல்லோரும் த‌ம‌து நோய்க‌ள் ப‌ற்றிப் பேச‌வும், த‌ம்மோடு பிற‌ர் ப‌ரிவோக‌ இருப்ப‌தையும் விரும்புகின்ற‌வ‌ர்க‌ள் என்கிற‌ நோயாளிக‌ளின் உள‌வியிய‌ல் ந‌ன்க‌றிந்த‌வ‌ர்.

பிணியின் பாதி தீர்வது, நோயாளிக்குத் தான் த‌னியாள் அல்ல‌ என்ப‌தை உண‌ர‌ச்செய்வ‌து, மிகுதிப் பாதியை கொடுக்கும் ம‌ருந்துக‌ள் தீர்க்கும் என்ப‌தை அக்கா ந‌ன்க‌றிந்த‌வ‌ர். ஆக‌வே நோயாளிக‌ளை ம‌ன‌ந்திற‌ந்து பேசும்போது அவ‌ர்க‌ள் ஏற்க‌ன‌வே த‌ம் வாழ்வில் செய்த‌ பாவ‌ங்க‌ளும் கூட‌த்தான் ஒரு நோயாக‌ கூட‌ இருந்து உறுத்திக்கொண்டிருக்கின்ற‌து என்ப‌தை அக்கா அவ‌ர்க‌ளுக்குப் புரிய‌ வைக்கின்றார். பாவ‌ங்க‌ளிலிருந்து விடுப‌ட‌ல் என்ப‌து நாம் பாவ‌ம் செய்த‌து யாரிட‌மோ அவ‌ர்க‌ளைத் தேடிச்சென்று எம‌து த‌வ‌றுக‌ளைக் கூறி ம‌ண்டியிடுவ‌துதான் என்கின்றார். அக்காவைத் தேடி தொழுநோயாளிக‌ள் ம‌ட்டுமின்றி ப‌ல்வேறு பிணிக‌ளோடு இருப்ப‌வ‌ர்க‌ளும் வ‌ருகின்றார்க‌ள். ஒருமுறை எப்போதும் போதையில் மித‌ந்த‌ப‌டி இருக்கும் ஒரு குடிகார‌னைச் ச‌ந்திக்கின்றார் அக்கா. ஆனால் அவ‌ன் த‌ன‌து அன்பு புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌தாலேயே குடியைக் கார‌ண‌ங்காட்டி எல்லோரையும் வெறுக்கின்றான் போன்ற‌ த‌ந்திர‌த்தைச் செய்கின்றான் என்ப‌தை அக்கா அவ‌னிட‌ம் க‌ண்டுபிடிக்கின்றார். தான் இதுவ‌ரை நுட்ப‌மாய் ம‌றைத்துவைத்திருந்த‌ உண்மையை அக்கா ச‌ட்டென்று க‌ண்டுபிடித்த‌தைக் குடிகார‌னால் தாங்க‌முடியாதிருக்கின்ற‌து. ஆக‌வே அக்காவை மூர்க்க‌மாய்த் தாக்குகின்றான். அதேபோன்று த‌ம‌து 50 வ‌ய‌துக‌ளில் வீட்டால் துர‌த்த‌ப‌ட்ட‌ 70 வ‌ய‌துக‌ளில் இருக்கும் இரு முதிய‌வ‌ர்க‌ளும் அக்காவைத் தேடி வ‌ருகின்றார்க‌ள். அவ‌ர்க‌ள் தாங்க‌ள் அக்கா செய்யும் ந‌ல்ல‌ப‌ணிக‌ளைக் கேள்விப்ப‌ட்டு அவ‌ருக்கு சில‌ நாட்க‌ள் உத‌வ வ‌ந்த‌தாக‌க் கூறுகின்றார். அக்கா நெகிழ்கின்றார். 50 வ‌ய‌துவ‌ரை தாங்க‌ள் வேலை, குடும்ப‌ம் என‌ ஒரு குறுகிய‌ வ‌ட்ட‌த்திற்குள் வாழ்ந்துகொண்டிருந்தோம், வீட்டிலிருந்து துர‌த்த‌ப்ப‌ட்ட‌பின் தான் உல‌க‌ம் எவ்வ‌ள‌வு விரிந்த‌து என்று தெரிகிற‌து என‌ச்சொல்லும் அம்முதிய‌வ‌ர்க‌ள் முதுமையிலும் வாழ்வு அழகுதானென‌க் கூறுகின்றன‌ர். இப்ப‌டி அக்காவின் எட்டூர் ம‌ண்ட‌ப‌த்திற்கு வ‌ருகின்ற‌ ப‌ல‌ரின் க‌தைக‌ள் கூற‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒவ்வொருவ‌ரின் க‌தைக‌ளும் ஏதோ ஒருவ‌கையில் ந‌ம்மைப் பாதிக்க‌ச் செய்கின்ற‌தோடு அவ‌ர்க‌ள் எம‌க்கு ஏற்க‌ன‌வே தெரிந்த‌ ந‌ம்மோடு உலாவுகின்ற‌ ம‌னித‌ர்க‌ள் போன்ற‌ நெருக்க‌த்தையும் வாசிக்கும் ந‌ம‌க்குள் ஏற்ப‌டுத்த‌வும் செய்கின்ற‌ன‌ர்.

4.
இவ்வாறு இருநூற்றாண்டுக‌ளில் நிக‌ழும் க‌தைக‌ள் வெவ்வேறு மாந்த‌ர்க‌ளினூடாக இந்நாவ‌லில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. தொக்காடு கிராம‌த்தில் எப்ப‌டி கிறிஸ்த‌வ‌ம் ப‌ர‌வுகின்ற‌து என்ப‌திலிருந்து, தொக்காடு தேவால‌ய‌ம் எவ்வாறு க‌ட்ட‌ப்ப‌ட்ட‌து என்ப‌து வ‌ரை நுண்ணிய‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளால் துயிலில் எழுத‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ஒவ்வொரு த‌னிம‌னித‌னும் தன் வாழ்வையும் தான் ச‌ந்தித்த‌ ம‌னித‌ர்க‌ளையும் ப‌ற்றியும் எழுத‌த்தொட‌ங்கினாலே அது எவ்வ‌ள‌வோ ப‌க்க‌ங்க‌ளுக்கு நீள‌க்கூடிய‌தாக‌ இருக்குமென்றால், இரு நூற்றாண்டுக‌ளுக்கு முன் எழுப்ப‌ப்ப‌ட்ட‌ தேவால‌ய‌த்தைப் ப‌ற்றிய‌ க‌ட‌ந்த‌கால‌த்தையும் நிக‌ழ்கால‌த்தையும் எழுத‌த்தொட‌ங்கினால் ஒருபோதுமே முடிவ‌டையாத‌ அள‌வுக்கு க‌தைக‌ள் என்றுமேந் நுரைத்துத் த‌தும்ப‌க் கூடிய‌ன‌தான். என‌வேதான் தொக்காடு தேவால‌ய‌த்தை ஒரு முக்கிய‌ மைய‌மாய் வைத்து எழுத‌ப்ப‌ட்ட‌ துயில் நாவ‌லும் அது கூறுகின்ற‌ க‌தைக‌ளை விட‌ சொல்ல‌ப்ப‌டாத‌ க‌தைக‌ளைத் த‌ன்ன‌க‌த்தில் உள்ள‌ட‌க்கியிருக்கின்ற‌து என்ப‌தை நாம் உய்த்துண‌ர்ந்து கொள்ள‌லாம். துயிலில் விட‌ப்ப‌ட்ட‌ இடைவெளிக‌ளைக் கொண்டு நாம் எம‌க்கான‌ க‌தைக‌ளைக் கூட‌ க‌ட்டியெழுப்பிக்கொள்ள‌லாம். உதார‌ண‌மாக‌ துயில் நாவ‌லில் வ‌ருகின்ற‌ முக்கிய‌ பாத்திர‌மான‌ அக்கா ஒரு குடிகார‌னால் தாக்க‌ப்ப‌ட்டு ம‌ய‌க்க‌ம‌டைவ‌தோடு இந்நாவ‌லிலிருந்து இல்லாம‌ற் போய்விடுகின்றார். ஆனால் அக்காவின் பாத்திர‌த்தை வாசிக்கும் ந‌ம‌க்கு, அந்த‌ அக்காவிட‌ம் ந‌ம‌க்குச் சொல்வ‌த‌ற்கு இன்னும் நிறைய‌க் க‌தைக‌ள் இருக்குமென்ப‌தை அறிவோம். அழ‌க‌ரின‌தோ, ஜ‌க்கியின‌தோ சிறுவய‌து அனுப‌வ‌ங்க‌ள் விரிவாக‌ச் சொல்ல‌ப்ப‌ட்ட‌துபோன்று அக்காவின‌து க‌ட‌ந்த‌கால‌ம் துயிலில் கூற‌ப்ப‌டாது விட‌ப்ப‌ட்டிருக்கும் இடைவெளியைக் கூட‌ நாம் ந‌ம‌க்குத் தெரிந்த‌ ஒரு அக்காவின் நினைவுக‌ளை ந‌ன‌விடைதோயச் செய்வ‌தாக‌க்கூட‌ மாற்றிக்கொள்ள‌லாம்.

19ம் நூற்றாண்டின் இறுதிப்ப‌குதியில் ஒரு பெண் அநியாய‌மாக‌ தொக்காடு தேவால‌ய‌ முன்ற‌லில் கொல்ல‌ப்ப‌டுகின்றார். அவ‌ரின் அதுவ‌ரை கால‌ச்சேவையை நினைவூட்டிக்கொண்டிருந்த‌ க‌ட்ட‌ட‌மும் பின்னாட்க‌ளில் அடையாள‌மின்றிப்போகின்ற‌து. ஆனால் அவர் எழுதிக்கொண்டிருந்த‌ க‌டித‌ங்க‌ளின் மூல‌ம் அவ‌ரின் நினைவுக‌ள் மீண்டும் தூசி த‌ட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌. க‌டித‌ம் ஒரு முக்கிய‌ ஆவ‌ண‌மாய் க‌ட‌ந்த‌கால‌ வ‌ர‌லாற்றை மீள‌க் க‌ட்டியெழுப்புகிற‌து. அதேபோன்று கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு நூற்றாண்டுக்குப் பின்னாலும் தொக்காடு தேவால‌ய‌ச் சூழ‌லில் கொலையொன்று நிக‌ழ்கின்ற‌து. ஆனால் சென்ற‌ நூற்றாண்டைப் போல‌ல்லாது, த‌ன‌க்குச் செய்ய‌ப்ப‌டும் அநியாய‌ம் க‌ண்டு பொங்கியெழுந்து ஒரு பெண்ணே அக்கொலையைச் செய்கின்றாள். ஒரு நூற்றாண்டு இடைவெளியில் கால‌ம் மாறிக்கொண்டிருப்ப‌தை இதைவிட‌ நுட்ப‌மாக‌ உண‌ர்த்தி விடமுடியுமா என்ன‌?

துயில் நாவ‌ல் நோய்மையை ம‌ட்டும் பேசாது வெவ்வேறுவித‌மான‌ ம‌ருத்துவ‌முறைக‌ள் ப‌ற்றியும் ஆழ‌ விவாதிக்கின்ற‌து. மேலைத்தேய‌ ம‌ருத்துவ‌ முறையில் தேர்ச்சி பெற்ற‌ ஏல‌ன் பவ‌ர், கீழைத்தேய‌ நாடுக‌ளில் த‌லைமுறை த‌லைமுறையாக‌ குறிப்பிட்ட‌ குடும்ப‌ங்க‌ளிடையே க‌ற்றுக்கொடுக்கப்ப‌டும் கீழைத்தேய‌ ம‌ருத்துவ‌ முறைக‌ளைப் ப‌ற்றி அறிய‌வும் ஆவ‌ல் உள்ள‌வ‌ராக‌ இருக்கின்றார். இம்ம‌ருத்துவ‌முறை இந்திய‌ ச‌மூக‌ங்க‌ளில் ஒதுக்க‌ப்ப‌ட்ட‌ சாதிக‌ளிடையே இருந்து வ‌ருவ‌தையும் அதனால் இவ‌ர்க‌ளிட‌ம் சிகிச்சை பெற‌ உய‌ர்சாதி ம‌க்க‌ள் விரும்புவ‌தில்லை என்ப‌தையும் அவ‌தானிக்கின்றார். மேலும் இந்திய‌ ம‌ருத்துவ‌முறைக‌ள், மேலைத்தேய‌ ம‌ருத்துவ‌த்தைப் போல‌ த‌னிப்ப‌ட்ட‌ நோயிற்கு ம‌ட்டும் சிகிச்சையைத் தேடுவ‌தை விடுத்து, அது முழுமனித‌னுக்குமான‌ உட‌ல்ந‌ல‌த்தைக் க‌வ‌ன‌த்தில் கொள்கின்ற‌து என்கின்ற‌ புரித‌லுக்கும் ஏல‌ன்ப‌வ‌ர் வ‌ருகின்றார். இய‌ற்கையோடு அதிக‌ம் வாழும் இந்திய‌ ம‌க்க‌ள் த‌ம‌து ம‌ருந்துக‌ளையும் இய‌ற்கை வ‌ள‌ங்க‌ளிலிருந்து பெற்றே த‌யாரிக்கின்றார்க‌ள் என்ப‌தையும், அவ்வாறு மேலைத்தேய‌ ம‌ருந்துக‌ள் த‌யாரிக்க‌ப்ப‌டுவ‌தில்லை என்கின்ற‌போது, துயிலில் வ‌ரும் உள்ளூர் ம‌ருத்துவ‌ர் அதை ந‌ம்ப‌முடியாத‌வ‌ராக‌ இருக்கின்றார் என்ப‌தும் குறிப்பிட‌ப்ப‌டுகின்ற‌து.

மேலும் துயில் நாவ‌லில் தொக்காடு தேவால‌ய‌த்தின் திருவிழா ப‌ற்றிய‌ வ‌ர்ண‌னைக‌ள் வித‌ந்து கூற‌க்கூடிய‌து. தேர்ந்த‌ ஒரு ஒளிப்ப‌திவாள‌ர் காட்சிப்ப‌டிம‌ங்க‌ளாக்குவ‌தைப் போன்ற‌ நேர்த்தியுட‌ன் திருவிழா நாட்க‌ள் எஸ்.ராவின் எழுத்தால் காட்சிப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌. இன்னுஞ்சொல்ல‌ப்போனால் தேவால‌ய‌த்தின் உள்ளே நிக‌ழும் திருவிழாவைவிட‌, அத‌ன் சுற்றுச்சூழ‌லே அதிக‌ம் வ‌ர்ணிக்க‌ப்ப‌டுகின்ற‌து. ஒருவ‌கையில் பார்த்தால் இந்நாவ‌ல் விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளை முக்கிய‌ பாத்திர‌ங்க‌ளாக‌க் கொண்டே க‌ட்டியெழுப்ப‌ப்ப‌டுகின்ற‌து என‌க்கூட‌ச் சொல்ல‌லாம். ஓரு நிர‌ந்த‌ரமான‌ இருப்பில்லாது எப்போது அலைந்துகொண்டிருக்கும் அழ‌க‌ர், பாலிய‌ல் தொழில் செய்யும் ஜ‌க்கி ம‌ற்றும் டோலி, நோயாளிக‌ளைப் மிக‌க் க‌னிவுட‌ன் ப‌ராம‌ரித்து அனுப்பும் அக்கா, த‌ன‌க்கான எல்லா வ‌ச‌தி வாய்ப்புக்க‌ளையும் உத‌றிவிட்டு சேவை செய்வ‌த‌ற்கென‌ வ‌ரும் ஏல‌ன்ப‌வ‌ர் என‌ அனைவ‌ருமே விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளாக‌ இருக்கின்றார்க‌ள், அல்ல‌து விளிம்புநிலை மனித‌ர்களோடு சேர்ந்து வாழ‌ விரும்புகின்ற‌வ‌ர்க‌ளாக‌ இருக்கின்றார்க‌ள். மேலும் எஸ்.ராவின் அநேக‌ நாவ‌ல்க‌ளில் வ‌ருப‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள் இய‌ல்புக்கு அப்பால் சென்று த‌ங்க‌ளைப் ப‌ற்றி அல‌ட்டிக் கொள்வ‌துமில்லை. அவ‌ர்க‌ளின் தின‌வாழ்வென்ப‌தென்ப‌தே புற‌ நெருக்க‌டிப் பெருஞ்சுழிக‌ளுக்கு எதிராக‌த் துடுப்புப் போடுவ‌தாக‌ இருக்கும்போது உள்ம‌ன‌த் த‌ரிச‌ன‌ங்க‌ளுக்காய் நின்று நிதானிக்க‌வும் முடியாது. அந்த‌ இய‌ல்பு துயிலின் பாத்திர‌ங்க‌ளுக்கு இருப்ப‌தால் தான் நாவ‌ல் வாசிப்ப‌வ‌ர்க‌ளை உள்ளிழுத்துக் கொள்கிற‌து.

இந்நாவ‌லை வாசித்துக்கொண்டிருந்த‌போது காண‌க்கிடைத்த‌ சில‌ எதிர்ம‌றையான‌ புள்ளிகளையும் குறிப்பிட‌வேண்டும். ஒவ்வொரு அத்தியாய‌த்திலும் ஒரு சில‌ எழுத்துப் பிழைக‌ளென‌ நாவ‌ல் முழுதும் எழுத்துப்பிழைக‌ள் ம‌லிந்து கிட‌க்கின்ற‌ன‌. எஸ்.ராவின் 'உப‌பாண்ட‌வ‌ம்' வாசித்த‌ நாட்க‌ளிலிருந்து இதை அவ‌தானிக்கின்றேன் என்றாலும், இவ்வ‌ள‌வு க‌டும் உழைப்போடு எழுத‌ப்ப‌டும் ஒரு நாவ‌லில் இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளையும் க‌ளைய‌வேண்டுமென‌க் க‌றாராக‌ கூற‌வேண்டியிருக்கின்ற‌து. அதைவிட‌, சில‌வேளைக‌ளில் பாத்திர‌ங்க‌ளில் பெய‌ர்க‌ள் மாற்றி மாற்றி வ‌ந்திருக்கின்ற‌ன‌. உதார‌ண‌த்திற்கு ஜ‌க்கி தான் அவ‌ரின் த‌க‌ப்ப‌னோடு மிக‌வும் நெருக்க‌மாயிருக்கின்றார். ஆனால் சில‌ ப‌க்க‌ங்க‌ளைத் தாண்டிய‌பின் ஜ‌க்கியின் த‌ங்கையான‌ டோலிதான் த‌க‌ப்ப‌னுக்கு நெருக்க‌மாயிருக்கின்றார் என்ப‌துபோல‌ பெய‌ர் ஆள்மாறாட்ட‌ம் ந‌ட‌ந்திருக்கும். இவ்வாறான‌ விட‌ய‌ங்கள் வாசிப்ப‌வ‌ரை நிச்ச‌ய‌ம் குழ‌ப்ப‌வே செய்யும்.

எங்கோ தொலைவில் முற்றிலும் வேறுப‌ட்ட‌ ப‌ண்பாட்டுச் சூழலில் பிற‌ந்து இந்தியாவிற்கு சேவையாற்ற‌ வ‌ரும் ஏல‌ன் ப‌வ‌ர், த‌ன் துணையை விலத்திவிட்டுப் போவ‌த‌ற்கான‌ எத்த‌னையோ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் வாய்த்தும், த‌ன்னைப் ப‌ய‌ன்ப‌டுத்துகின்றான் க‌ண‌வ‌ன் என்கின்ற‌ புரித‌லோடு அழ‌க‌ரோடு அலையும் சின்ன‌ராணி, நோயாளிக‌ளை ஆற்றுப்ப‌டுத்த‌வும், அவ‌ர்க‌ளுக்கு விருந்த‌ளிப்ப‌துமே த‌ன் க‌டனென‌ அத‌ற்காய் த‌ன் வாழ்நாளை முற்றுமுழுதாக‌ செல‌வ‌ழிக்கின்ற‌ன‌ கொண்ட‌லு அக்கா...என‌ இந்நாவ‌லில் முக்கிய‌ பெண் பாத்திர‌ங்க‌ள் அனைத்துமே த‌ம் வாழ்வைப் பிற‌ருக்காய் அர்ப்ப‌ணித்து அதில் ஏதோ ஒருவ‌கையில் நிறைவைக் காண்ப‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள். த‌னிந‌ப‌ர் சார்ந்து எல்லாமே வ‌லியுறுத்த‌ப்ப‌டும் இன்றைய‌ உல‌க‌ ஒழுங்கில் மேற்குறித்த‌ பாத்திர‌ங்க‌ள் சில‌வேளைக‌ளில் விசித்திர‌ப் புதிர்க‌ளாக‌ வாசிப்ப‌வ‌ர்க‌ளுக்குத் தெரிய‌வும் கூடும். அத‌ன் நிமித்த‌ம் வ‌ரும் விய‌ப்பே, அண்மையில் வாசித்த‌வ‌ற்றில் 'துயிலை' ஒரு முக்கிய‌ நாவ‌லாக‌ வைத்துப் பார்க்க‌த் தோன்றுகின்ற‌தோ தெரிய‌வில்லை.

எழுதியது: ஆனி/2011
நன்றி: தீராநதி- புரட்டாதி/2011

எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் 'துயில்'

1.
நாம் எத்த‌னையோ இட‌ங்க‌ளுக்கு நம் வாழ்வில் ப‌ய‌ணித்திருப்போம். அவ்வ‌வ்விட‌ங்களின் இய‌ற்கையின‌தோ, க‌ட்டிட‌க்க‌லையின‌தோ அழ‌கைக் க‌ண்டு ம‌ன‌ஞ்சிலிர்த்து இர‌சித்துமிருப்போம். ஆனால் எப்போதாவ‌து நாம் நின்று இர‌சிக்கும் இட‌த்தின் நில‌விய‌லும் வாழ்விய‌லும் எவ்வாறு சில‌ தசாப்த‌ங்க‌ளுக்கோ, நூற்றாண்டுக‌ளுக்கு முன்னே இருந்திருக்கும் என்று யோசித்த‌துண்டா?  அவ்வாறு பிர‌பல்ய‌ம் வாய்ந்த‌ ஒரு தேவால‌ய‌த்தின் வ‌ர‌லாற்றையும், அத‌னோடு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளையும் விரிவாக‌ப் பேசுகின்ற‌ ஒரு நாவ‌ல்தான் எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் 'துயில்'.

இத்தேவால‌ய‌ம் பிற்கால‌த்தில் (அல்ல‌து நிக‌ழ்கால‌த்தில்) நோய்மையுற்ற‌வ‌ர்க‌ளுக்கு ந‌ம்பிக்கை த‌ரும் ஓரிட‌மாய்த் திக‌ழ்வ‌தால் நோய்மை ப‌ற்றியும் இந்நாவ‌லில் பேசப்ப‌டுகின்ற‌து. ஆக‌ ஒரு தேவால‌ய‌த்தின் வ‌ர‌லாற்றை ம‌ட்டுமின்றி நோய்மையுற்ற‌வ‌ர்க‌ளின‌தும், நோய் தீர்ப்ப‌வ‌ர்க‌ளின‌தும் உள‌விய‌லையும் பேசுவ‌தால் த‌மிழில் த‌வ‌ற‌விடாது வாசிக்க‌வேண்டிய‌ ஒரு நாவ‌லாகிவிடுகின்ற‌து 'துயில்'. தொக்காடு என்ற‌ தேவால‌ய‌மே இந்நாவ‌லில் வ‌ரும் அனைத்துப் பாத்திர‌ங்க‌ளையும் இணைக்கும் மைய‌ச் ச‌ர‌டாக‌ இருக்கிற‌து. தொக்காடு தேவால‌ய‌த்தின் திருவிழாவிற்குச் செல்வ‌த‌ற்கு த‌யாராகும் மாந்த‌ர்க‌ளோடு தொட‌ங்கும் நாவ‌ல், இறுதியில் தொக்காடு தேவால‌ய‌த்தின் தேர்த்திருவிழாவோடு நிறைவுபெறுகிற‌து. இந்த‌ இடைவெளியில் ஐநூறு ப‌க்க‌ங்க‌ளுக்கும் மேலாய் நீளும் நாவ‌லில் ப‌ல்வேறு திசைக‌ளில், ப‌ல்வேறு மாந்த‌ர்க‌ளினூடாக‌ க‌தைக‌ள் ந‌க‌ர்கின்றன‌ ம‌ட்டுமின்றி இருவேறு நூற்றாண்டுக‌ளுக்கும் அத்தியாய‌ங்க‌ள் மாறி மாறி அலையுறும்போது வாசிப்பு இன்னும் சுவார‌சிய‌மாகின்ற‌து.

தொக்காடு தேவால‌த் திருவிழாவில் க‌ட‌ற்க‌ன்னி ஷோ நட‌த்துவ‌த‌ற்காய் த‌ன் ம‌னைவி சின்ன‌ராணி ம‌ற்றும் ம‌க‌ள் செல்வியோடு புகைவ‌ண்டிக்காய் காத்திருக்கின்ற‌ அழ‌க‌ரோடு க‌தை ஆர‌ம்பிக்கின்ற‌து. தொலைவிட‌ங்க‌ளிலிருந்து தொக்காடு போகின்ற‌ அனைவ‌ரையும் இணைக்கின்ற‌தாய் இந்த‌ ரெயில் ப‌ய‌ண‌ம் இருக்கின்ற‌து. அந்த‌ ரெயில் முழுதும் அழ‌க‌ர் குடும்ப‌த்தோடு ப‌ல்வேறு பிணிகளால் பீடிக்க‌ப்ப‌ட்டு ச‌மூக‌த்தால் வில‌த்த‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌ர் ப‌ய‌ணிக்கின்ற‌ன‌ர். அழ‌க‌ருக்கு எப்ப‌டி தான் க‌ட‌ல்க‌ன்னி ஷோ திருவிழாவில் ந‌ட‌த்தி நிறைய‌ப் ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌லாம் என்கின்ற‌ க‌ன‌வு இருக்கின்ற‌தோ அதேபோன்றே இந்நோயாளிக‌ளும் இத்தேவால‌ய‌த்திற்குப் போவ‌தென்ப‌து த‌ம் பிணியை ஏதோவொரு வ‌கையில் தீர்க்கும் அல்ல‌து குறைக்கும் என்கின்ற‌ ந‌ம்பிக்கையைத் த‌ம் வ‌ச‌ம் வைத்திருப்ப‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள். நீளும் இந்த‌ ரெயில் ப‌ய‌ண‌த்தில் பிற‌கு தேவால‌ய‌த்திற்குக் காணிக்கை கொடுப்ப‌வ‌ர்க‌ளும் ஏறிக்கொள்கின்றார்க‌ள். கூட‌வே வெயிலும்/வெம்மையும் ஒரு பாத்திர‌மாய் எல்லா நிலைக‌ளிலும் வ‌ந்து கொண்டிருக்கின்ற‌து. எஸ்.ராம‌கிருஷ்ணனின் அநேக‌ படைப்புக்க‌ளில் வெயில் ஒரு முக்கிய‌ இட‌த்தை எடுத்திருப்ப‌தை அவ‌ர‌து நாவ‌ல்க‌ளை வாசிக்கும் நாம‌னைவ‌ரும் அறிவோம். வெயிலை இந்த‌ள‌வு விரிவாக‌வும் உக்கிர‌மாக‌வும் எஸ்.ராவைப் போல‌ வேறெந்த‌ப் ப‌டைப்பாளியும் த‌மிழில் எழுதியிருக்கமாட்டாரென‌வே ந‌ம்புகின்றேன். நாவ‌லின் பாத்திர‌ங்க‌ளினூடாக‌ வெயில் விப‌ரிக்க‌ப்ப‌டும்போது வாசிக்கும் ந‌ம் விழிகளிலும் விர‌ல்க‌ளிலும் வெம்மை ஏறுவ‌து போன்ற‌ உண‌ர்வைத் த‌விர்க்க‌வும் முடிவ‌தில்லை.

அழ‌க‌ரின் ம‌க‌ள் செல்வி இர‌யில் பெட்டியெங்கும் காற்றைப்போல‌ சுழித்துச் சுழித்து ஓடிக்கொண்டிருக்கின்றாள். நோயாளிக‌ள்/நோய‌ற்ற‌வ‌ர்க‌ள் என்ற‌ பாகுபாடில்லாது எல்லா ம‌னித‌ர்க‌ளோடும் ஒட்டிக்கொள்ளவும் அவ‌ள் செய்கின்றாள். அவ்வாறான‌ ஒரு பொழுதில் ஒரு தொழுநோயாளியால் செல்விக்கு க‌தையொன்று சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. தொக்காடு தேவால‌ய‌த்திற்கு அருகில் ம‌ர‌ங்க‌ளின் திருவிழா வ‌ருட‌ந்தோறும் ந‌டைபெறும் என‌வும், அத்திருவிழாவில் எல்லா இட‌ங்க‌ளிலிருந்தும் ம‌ர‌ங்க‌ள் சென்று அங்கே ஒன்று கூடுமென‌வும், தான் அந்த‌ திருவிழாவை த‌ன் சிறுவ‌ய‌தில் க‌ண்டிருக்கின்றேன் என‌வும் அந்த‌த் தொழுநோயாளி செல்விக்குக் க‌தை கூறுகின்றார். செல்வி இந்த‌க்க‌தையை எவ்வாறு எடுத்துக்கொள்கின்றார் என்ப‌தை விள‌ங்கிக்கொள்ள‌ நாம் துயிலில் இறுதி அத்தியாய‌ங்க‌ள் வ‌ரை காத்திருக்க‌ வேண்டும்.

நீளும் இந்த‌ ரெயில் ப‌ய‌ண‌த்தோடு அழ‌க‌ரின் சிறுவ‌ய‌துக் க‌தையும் கூற‌ப்ப‌டுகின்ற‌து. அழ‌க‌ர் த‌ன் தாயை சிறுவய‌திலேயே இழ‌ந்துவிடுகின்றார். அவ‌ரின் த‌ந்தையார் ஒரு தியேட்ட‌ரில் காவ‌லாளியாக‌ வேலை செய்கின்ற‌வ‌ராக‌ இருக்கின்றார். அழ‌க‌ரின் வீட்டில் ச‌மைய‌ல் ஒருபோதும் நிக‌ழ்வ‌தில்லை; அருகிலுள்ள‌ ஒரு சாப்பாட்டுக் க‌டையிலேயே மூன்று நேர‌மும் அழ‌க‌ர் சாப்பிட‌ த‌ந்தை ஏற்பாடு செய்திருக்கின்றார். குடிகார‌ராக‌வும் இருக்கும் அழ‌க‌ரின் த‌க‌ப்ப‌ன் தியேட்ட‌ரில் இர‌வுக்காட்சிக‌ள் முடிந்த‌வுட‌ன் அதிக‌வேளையில் அங்கேயே இர‌வில் உற‌ங்கிவிடுப‌வ‌ராக‌வும் இருக்கின்றார். த‌னியே வீட்டில் உற‌ங்கும் அழ‌க‌ருக்கு இர‌வு அச்ச‌மூட்டுவ‌தாக‌வே இருக்கின்ற‌து. ஒருநாள் இர‌வு அழ‌க‌ர் த‌ந்தை த‌ங்கும் தியேட்ட‌ருக்கு இர‌வில் போகின்றார். அங்கேயே உற‌ங்கிவிடும் அழ‌க‌ருக்கு, அவ்விர‌வில் த‌ன் த‌க‌ப்ப‌னாருக்கும் சாப்பாட்டுக்க‌டைக்கார‌ரின் ம‌னைவிக்கும் இருக்கும் இர‌க‌சிய‌ உறவு தெரிந்துவிடுகின்ற‌து. த‌க‌ப்ப‌னும் அப்பெண்ம‌ணியும் ச‌ல்லாபிக்கும் காட்சியையும் அழ‌க‌ர் க‌ண்டுவிடுகின்றார். அப்பெண்ம‌ணி அவ்விட‌த்தை விட்டு ந‌க‌ர்ந்த‌தும், த‌க‌ப்ப‌ன் அழ‌க‌ர் த‌ம்முற‌வைக் க‌ண்ட‌த‌ற்காய் அடித்து உதைக்கின்றார். அத‌ன் நிமித்த‌ம் கோப‌ம் கொள்ளும் அழ‌க‌ர் சாப்பாட்டுக்க‌டைக்கார‌ரின் வீட்டுக்குக் கல்லெறிகின்றார். இனியும் இங்கிருந்தால் த‌க‌ப்ப‌ன் த‌ன்னைக் கொல்லாம‌ல் விட‌மாட்டார் என‌ அஞ்சும் அழ‌க‌ர் ஊரைவிட்டு ஓடுகின்றார். அன்று தொட‌ங்கும் அழ‌க‌ரின் ஓட்ட‌ம் நாவ‌ல் முடியும்வ‌ரையில் ஓரிட‌த்தில் த‌ங்க‌முடியாத‌ வாழ்வின் ஓட்ட‌மாய்ப் ப‌டிம‌மாக்க‌ப்ப‌டுகின்ற‌து.

இவ்வாறாக‌ ஊரை விட்டோடும் அழ‌க‌ர் இன்னொரு ந‌க‌ர‌த்திலுள்ள‌ சாப்பாட்டுக் க‌டையில் வேலை செய்ய‌த் தொட‌ங்குகின்றார். அந்த‌ச் சாப்பாட்டுக்க‌டையும் த‌ன் வீழ்ச்சியைச் ச‌ந்திக்கும்பொழுதில் ஜ‌க்கி என்னும் பெண்ம‌ணியைச் ச‌ந்திக்கின்றார். அப்போது அழ‌க‌ருக்கு ப‌தினாறு வ‌ய‌து. த‌ன‌க்கு உத‌வி செய்ய‌ த‌ன்னோடு கூட‌ வ‌ந்துவிடுகின்றாயா என‌க் கேட்கும் ஜ‌க்கியோடு அழ‌க‌ர் போய்விடுகின்றார்.

ஜ‌க்கி, த‌ன‌து த‌ங்கை டோலி ம‌ற்றும் ப‌ல‌ பெண்க‌ளையும் இணைத்து பாலிய‌ல் தொழில் செய்கின்றார். அவ‌ர்க‌ளுக்கு வேண்டிய‌ எல்லா உத‌விக‌ளையும் செய்கின்ற‌வ‌ராக‌ இருக்கும் அழ‌க‌ருக்கு முத‌ன்முத‌லான‌ பாலிய‌ல் உற‌வும் அங்கிருக்கும் பெண்க‌ளில் ஒருவ‌ரோடு நிக‌ழ்கிற‌து. வாடிக்கையாள‌ரின் விருப்ப‌த் தேர்வாக‌ இருக்கும் ஜ‌க்கியின் த‌ங்கை டோலி ஒருநாள் காணாம‌ற்போக‌ ஜ‌க்கி ம‌ன‌ம் உடைந்து போகின்றார். இறுதியில் தான் இனித் தொழில் செய்ய‌ப்போவ‌தில்லையென‌ த‌ன்னிட‌ம் இருக்கும் பெண்க‌ளுக்குப் ப‌ண‌த்தைப் பிரித்துக் கொடுத்து அவ‌ர்க‌ளை அனுப்பிவிடுகின்றார். த‌ன் பூர்வீக‌ ஊர் போகும் ஜ‌க்கியோடும் தானும் வ‌ர‌ப்போகின்ற‌தாய் கூறும் அழ‌க‌ரை 'என்னோடு வ‌ந்தால் உன் வாழ்வு சீர‌ழிந்துவிடும் என்னைவிட்டுப் போய்விடு' என‌ ஜ‌க்கி அழ‌க‌ருக்கு அறிவுரைகூறி அனுப்பி வைக்கின்றார். அழ‌க‌ர், தான் முத‌ன் முத‌லில் உட‌லுறவு வைத்துக்கொண்ட‌ பெண்ணோடு சேர்ந்து ஊரூராய்ச்சென்று நாக‌க‌ன்னி ஷோ ந‌ட‌த்துகின்றார். ஒருநாள் அந்த‌ப்பெண்ணும் அழ‌க‌ரைக் கைவிட்டு விட்டு வேறு யாரோ ஒருவ‌ரோடு ஓடிவிடுகின்றார். இறுதியில் தான் செய்யும் வேலையை மாற்றிக் கூறி சின்ன‌ராணியைத் திரும‌ண‌ஞ் செய்கின்றார். திரும‌ணத்தின்பின்னே சின்ன‌ராணிக்கு அழ‌க‌ரின் உண்மை முக‌ம் விள‌ங்குகின்ற‌து.  வேறு வ‌ழியில்லாத‌ கார‌ண‌த்தால் அழ‌க‌ரின் வ‌ற்புறுத்த‌லில் த‌ன‌து வாழ்வை நொந்த‌ப‌டி க‌ட‌ற்க‌ன்னியாக‌ வேட‌ம் போட்டு ஊரூராய் சின்ன‌ராணி அழ‌க‌ரோடு செல்ல‌த் தொட‌ங்குகின்றார்.

இன்னொரு கிளைக்க‌தையாக‌ ஜ‌க்கி, டோலியின் சிறுவ‌ய‌துக் க‌தைக‌ள் கூற‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஜ‌க்கி/டோலியின் த‌ந்தை ஒரு த‌மிழ‌ராக‌வும், தாய் ஒரு ம‌லையாளியாக‌வும் இருக்கின்றார்க‌ள். த‌ந்தையின் மீது பெருவிருப்புள்ள‌ ஜ‌க்கியால் த‌ந்தை நோயுற்று ம‌ர‌ண‌முறுவ‌தைத் தாங்கிக்கொள்ள‌ முடிய‌வில்லை. வ‌றுமையாலும், உரிய‌ உத‌வியுமில்லாத‌தால் ஜ‌க்கியும் டோலியும் பாலிய‌ல் தொழில் செய்ய‌த் த‌ள்ள‌ப்ப‌டுகின்றார்க‌ள் என்ப‌தாய் அவ‌ர்க‌ளின் க‌தை நீளும்.

2.
இவ்வாறு அழ‌க‌ர்,சின்ன‌ராணி, செல்வி, ஜ‌க்கி, டோலி என‌ 1980க‌ளில் நிக‌ழும் ப‌ல‌ க‌தைக‌ள் ச‌ங்கிலி இணைப்புக்க‌ளாய் நீளும்போது, இவ‌ற்றுக்குச் ச‌மாந்த‌ர‌மாய் 1870க‌ளில் நிக‌ழும் ஏல‌ன் ப‌வ‌ர் என்கின்ற‌ இயேசுவிற்கு த‌ன்னை அர்ப்ப‌ணித்த ம‌ருத்த‌வ‌ரின் க‌தையும் கூற‌ப்ப‌டுகின்ற‌து. ஏல‌ன் ப‌வ‌ர் அமெரிக்காவில் ம‌ருத்துவ‌ம் ப‌டித்த‌வ‌ர். அங்கேதான் அவ‌ர் முத‌ன்முத‌லாக‌ ம‌ருத்துவ‌ம் ப‌டிக்க வ‌ருகின்ற‌ இந்திய‌ப் பெண்ணைச் ச‌ந்திக்கின்றார். சேவை செய்வ‌தில் மிகுந்த‌ விருப்புள்ள‌ ஏல‌ன் ப‌வ‌ர் உல‌கின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் ம‌ருத்துவ‌ராக‌ப் ப‌ணியாற்றி, இறுதியில் தொக்காட்டிற்கு வ‌ருகின்றார்.

வெயில் எரிக்கும் தொக்காட்டில் எவ‌ருமே, (ஆங்கிலேய‌) ம‌ருத்துவ‌ம் அறிந்த‌ ஏல‌ன் ப‌வ‌ரைத் தேடி வ‌ர‌வில்லை.  ஏல‌ன் ப‌வ‌ரும் அவ‌ருக்கு உத‌வியாய் இருக்கும் சீபாளி என்கின்ற‌ சிறுமியும் நோயாள‌ர்க‌ளுக்காய்ப் ப‌ல‌ மாத‌ங்க‌ளாய் காத்திருக்கின்றார்க‌ள். ஏல‌ன் ப‌வ‌ருக்கு ம‌ருத்துவ‌ம் செய்ய‌ இட‌த்தை ஒழுங்கு செய்யும் பாத‌ருக்கும் ஏல‌ன் ப‌வ‌ர் மீது ஒருவ‌கையான‌ வெறுப்பே இருக்கின்ற‌து. த‌ம‌க்கான‌ நோயையும் த‌ம் வாழ்வின் ஒரு ப‌குதியாக‌ ஏற்றுக்கொண்டிருக்கும் தொக்காட்டு ம‌க்க‌ளுக்கு நோயிலிருந்து விடுத‌லை என்ப‌து குறித்து அக்க‌றைய‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ இருக்கின்றார்க‌ள். த‌ன்னிட‌ம் ம‌ருத்துவ‌ம் பார்க்க‌ வ‌ருவ‌த‌ற்கு ம‌க்க‌ளை ஈர்க்க‌வேண்டுமென்றால் முத‌லில் அவ‌ர்க‌ளின் ந‌ம்பிக்கையைப் பெற‌வேண்டும் என்கிற‌ புரித‌லை ஏல‌ன்ப‌வ‌ர் க‌ண்ட‌டைகின்றார். ஆனால், தேவால‌ய‌த்திற்கு அருகிலிருக்கும் ம‌ருத்துவ‌னைக்கு வ‌ந்தால் பாத‌ரைப் போல‌ ஏல‌ன் ப‌வ‌ரும் த‌ங்க‌ளை ம‌த‌ம் மாற்றிவிடுவார் என‌ ம‌க்க‌ள் அஞ்சுகின்ற‌ன‌ர். அந்த‌ அச்ச‌த்தைப் போக்கி, தான் மத‌ம் மாற்ற‌மாட்டேன் நீங்க‌ள் உங்க‌ள் ம‌த‌ந‌ம்பிக்கையுட‌ன் இருந்த‌ப‌டியே ம‌ருத்துவ‌ம் பார்க்க‌ வ‌ர‌லாம் என்கின்றார் ஏல‌ன் ப‌வ‌ர். கால‌ப்போக்கில் அம்ம‌க்க‌ளின் ந‌ம்பிக்கைக்குரிய‌வ‌ராக‌வும், அவ‌ர்க‌ளில் ஒருவ‌ராக‌வும் மாறிவிடும் ஏல‌ன்ப‌வ‌ர், எது ந‌ட‌ந்தாலும் த‌ன் இற‌ப்புவ‌ரை தொக்காடு ம‌க்க‌ளோடு இருக்க‌ப் போவ‌தாய் நினைத்துக்கொள்கின்றார்.

த‌மது நோய் குறித்து அறியாமையால், நீண்ட‌கால‌மாய் இருந்த‌ ம‌க்க‌ளின் சில‌ நோய்க‌ளைத் தீர்த்து வைக்கின்றார் ஏல‌ன்ப‌வ‌ர். ஆனால் இதைத் தேவால‌ய‌த்தின் பாத‌ர், இயேசுவின் அருளாலேயே இந்த‌ அற்புத‌ங்க‌ள் நிக‌ழ்கின்ற‌ன என‌ ம‌த‌ம் மாற்றும் த‌ன் பிர‌ச்சார‌த்திற்குப் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்கின்றார். இந்நோய்க‌ள் அறிவிய‌லால்தான் தீர்ந்திருக்கின்ற‌ன‌ ம‌த‌த்தினால் அல்ல‌ என்ற‌ குழ‌ப்ப‌ம் ஏல‌ன் ப‌வ‌ருக்கு வ‌ந்தாலும் அவ‌ர் இவ்விட‌ய‌த்தை அத‌ன்போக்கிலேயே விட்டுவிடுகின்றார்.

(இன்னும் வ‌ரும்)
ஆனி/2011
 நன்றி: தீராநதி (செப்ரெம்பர்/2011)