நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

போர்னோகிராபி தடை - ஒரு எதிர்வினை

Thursday, June 30, 2016

ஷோபாசக்தியிற்கு வரவர என்னவாயிற்றென புரியவில்லை. இப்போதெல்லாம் மிகவும் ஒற்றைப்படையாக எழுதிக்கொண்டே போய்க்கொண்டிருக்கின்றார். போர்னோகிராபியை தடைசெய்வது பற்றியெழுதிய அவரது பதிவு ஒருவகை 'உணர்ச்சி' வாசிப்பில் எல்லோருக்கும் உற்சாகமளிக்கக்கூடியது. ஆனால் ஆழமாகப் பார்த்தால் எவ்வளவு அபத்தமெனத் தெரியும்.

'தடை' என்ற வார்த்தையை மிக நிதானமாகவே நாம் பாவிக்கவும், அனுமதிக்கவும் வேண்டியிருக்கின்றது. அதிலும் மிகுந்த அதிகாரங்கள் நிரம்பிய 'அரசு' மற்றும் 'அரசாங்கம்' என்பவற்றினூடாக வரும் 'தடை' என்பவை குறித்து இன்னும் கவனமாகவும் இருக்கவேண்டியிருக்கிறது. எனெனில் அரசு தனக்குப் பிடிக்காத எல்லாவற்றையும் 'தடை'க்குள் கொண்டுவர இந்தத் 'தடை'கள் ஒருவகையில் எளிதாய்க் காரணமாகிவிடும்.

இன்று தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் 'டாஸ்மாக்' தடை போராட்டங்கள் குறித்து கருத்துச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு உதாரணத்திற்கு குடியினாலும் கூடத்தானே (தரவுகள் கூட ஆதாரமாய் இருக்கும்) நிறைய குடும்பவன்முறைகள் நடக்கின்றன, எத்தனையோ சிறுவர்களின் வாழ்க்கை பாழாக்கப்படுகின்றன எனச் சொல்லி இந்தியா முழுக்க முற்றாக குடியை அரசு 'தடை' செய்யவந்தால் ஷோபாவின் பதில் என்னவாக இருக்கும்? அவரின் 'போர்னோ லொஜிக்'கின்படி இதற்கும் ஆதரவாகவே இருக்குமெனவே நம்புகின்றேன். இதை இன்னும் நீட்சித்து மாடு சாப்பிடக்கூடாது, கோமியம் மட்டுமே குடிக்கவேண்டும் என்று நிறைய தடைகளைச் சொல்லிக்கொண்டு போகலாம். ஆகவேதான் மீண்டும் மீண்டும் 'தடை' என்பதை அதுவும் முக்கியமாய் அதிகாரம் நிறைந்த அரசிடம் இருந்து எழும்போது மிகக்கவனமாக இருக்கவேண்டும் எனச் சொல்ல விரும்புகின்றேன்.

போர்னோகிராபியில் பாவிக்கப்படும்/பண்டமாக்கப்படும் பெண்கள் குழந்தைகள் குறித்து எல்லோருமே கவலைப்படத்தான் வேண்டும் ஆனால் அதேசமயம் ஷோபா மென்மையாகக் குறிப்பிட்டு தப்பித்துச்செல்லும் இவ்வாறாக கடத்தப்படும் பெண்களும், சிறார்களும் அதிகளவில் பாலியல் தொழில்களுக்கே பயன்படுத்தப்படுகின்றனர் என்பதே உண்மை. ஏன் அரசோ அல்லது ஷோபாவோ போர்னோகிராபியைத் தடைசெய்யமுன்னர் அல்லது தடைசெய்கின்ற சமாந்தரத்தில் பாலியல் தொழிலையும் தடைசெய்யவேண்டுமென முதலில் கோரக்கூடாது. இன்னமும் இந்தியாவில் சில விதிமுறைகளுடன் பாலியல் தொழில் செய்யலாமெனவே சட்டம் சொல்கின்றது. கனடாவில் கூட பாலியல் தொழில் செய்யலாம், ஆனால் விதிமுறைகள் இருக்கின்றன. இந்த 'விதி'கள் கூட பாலியல் தொழிலாளர்க்கு எதிராகத்தான் இருக்கின்றதே தவிர, அவர்களைத் தேடிச் செல்வோருக்கு எதிராக அல்ல என்பதையும் நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டும். ஆகவேதான் இங்கேயிருக்கும் பாலியல் தொழிலாளர்கள் விதிமுறைகளைத் தங்களுக்குச் சாதகமாய் மாற்றும்படி கனடா நீதிமன்றங்கள் எங்கும் ஏறியபடி இருக்கின்றனர்.

போர்னோகிராபியை விட பாலியல் தொழிலுக்காகவே பெண்கள் சிறுவர்கள் பல மில்லியன்களில் கடத்தப்படுகின்றனர். மிக மோசமாகச் சித்திரவதை செய்யப்பட்டு 'தொழிலுக்கு'ப் பழக்கப்படுத்தப்படுகின்றனர். சென்ற வாரம் கூட இது குறித்து நிறையத் தகவல்களுடன் ஒரு தேவாலயத்தின் முன் Human Trafficking ற்கு எதிராகக் கையெழுத்து வைக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தனர். எனக்கு கையெழுத்திடுவதில் மறுப்பபெதுவுமில்லையெனினும் மதம் சார்ந்தவர்களினூடாக -பல விடயங்களில் அவர்களின் நம்பிக்கையோடு ஒத்துவராததால்- முதலில் தயக்கமிருந்தது. எனினும் நல்லவை நடக்கும்போது முழுச்சித்திரத்தையும் பார்க்கத்தேவையில்லை என்ற அடிப்படையில் கையெழுத்திட்டிருந்தேன். கனடாவில் கூட இப்படி பெண்கள் கடத்தப்பட்டு தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றார்களா என கூடவே வந்த நண்பருக்கு வியப்பு. அந்த நண்பரைப் போலவே பலர் இன்னும் அப்பாவிகளாய் இங்கு இருக்கின்றனர் என்பது வேறு விடயம். கனடாவிற்குள்ளும் அமெரிக்காவிற்குள்ளும் இதற்காய் கடத்தப்படுகின்றவர்கள் உலகத்திலேயே பெரும் விகிதத்தில் இருக்கின்றார்களென்பதையே தரவுகள் சொல்கின்றன.

ஆக, போர்னோகிராபியை ஷோபா தடைசெய்யக் கோருவதைப் போல, நாம் பாலியல் தொழிலைத் தடை செய்ய இந்தியாவில் மட்டுமில்லை உலகெங்கும் கோருவோம். அவ்வாறே எழுதி ஆதரவு காட்டாது மட்டுமில்லாது, போர்னோவைத் தடைசெய்வதற்கு ஆதரவு கொடுத்து நமது 'பெருந்தன்மை'யைக் காட்டுவதைப் போல, ஆண்களாகிய நாம் பாலியல் தொழிலாளிகளைத் தேடிப் போவதையும் முதலில் நிறுத்தியும் கொள்வோம்.

றுதியாய் ஷோபா எழுதுவது இன்னொரு வகையான க்ளிஷே...
"நாளை நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைகள், துணையோடு சம்போகத்தில் ஈடுபடும் காட்சி இவ்வகை இணையத்தளங்களில் 'லைவ்'வாக ஒளிபரப்பப்படுவதற்கு எல்லாவகையான சாத்தியங்களும் உண்டென்பதை மறவாதீர்கள்."

இதைத்தான் பெண்கள் முகநூலில் படம்போடுவதிலிருந்து எல்லாவற்றுக்கும்... பெண்களே கவனம் எச்சரிக்கை என எல்லோரும் எழுதித் தீர்க்கின்றார்கள். நீங்களுமா ஷோபா? உடல் குறித்தோ செக்ஸ் குறித்தோ நாம் குற்றங் கொள்ளத்தேவையில்லை.

எமது உடல்களும் சம்போகங்களும் எந்தக்கணத்திலும் திறந்தவெளியில் அவிழ்த்துவிடப்படக்கூடிய அந்தரங்கமற்ற இன்றைய காலத்தில் அவ்வாறு சித்தரிக்கப்பட்டால்/காட்டப்பட்டால் அதற்காய் எமது காதலிகளோ மகள்களோ சகோதரிகளோ கவலையோ குற்றமோ -முக்கியமாய் உங்களை நீங்களே கொல்லத்தேவையில்லை என- அவர்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்வோம். அவ்வாறாக திறந்தவெளியில் இந்த விடயங்களை காட்சிப்படுத்துபவனே, தான் ஒரு சக மனிதப்பிறவியாக இருக்கச் சாத்தியவன் அல்ல என அவன் குற்றவுணர்வையும் வெட்கத்தையும் கொள்ளவேண்டுமே தவிர, உங்களில் எந்தத் தவறுமில்லையென நமக்குத் தெரிந்த பெண்களின் ஆழ்மனதில் பதிய வைப்போம்.

மேலும் இன்றைய சூழலில் போர்னோகிராபியால் மட்டுமல்ல நம்மைப் போன்ற ஒருகாலத்தில் காதலன்களாகவோ துணைவர்களாக நெருங்கிப் பழகிய ஆண்களாலேயே பல நெருக்கமான புகைப்படங்களும்/விடீயோக்களும் வெளியிடப்படுவதையும் நாம் மறந்துவிடவும் கூடாது.

ஆகவே எல்லோருடனும் சேர்ந்து தொபுக்கடீரென விழுந்து நம்மை நியாயவான்களாய்க் காட்டமுன், ஆண்களாகிய நாம் இவற்றை அதிகாரம் கொண்டு தடைசெய்வதைவிட, நம்மிலிருந்து எப்படித் தொடங்கலாம் என சிந்தித்துப் பார்க்கலாம்.

எனவே மீண்டும் கூறுகின்றேன் போர்னோகிராபியைத் தடை செய்வதற்கு முன் பாலியல் தொழிலைத் தடை செய்யுங்கள். இந்த இரண்டையும் செய்வதற்கு முன் ஆண்களாகிய நாங்கள் பாலியல் தொழிலாளிகளைத் தேடிப் போவதை முதலில் நிறுத்திக்கொள்வோம்.

(Aug 06, 2015)

ஷோபா சக்தியின் பதிவு: https://www.facebook.com/shoba.sakthi.1/posts/10207207104757453?hc_location=ufi

பெருமாள் முருகனின் 'ஆலவாயன்'

Wednesday, June 22, 2016


மாதொருபாகனில்' பொன்னா குழந்தையில்லாது பதினான்காம் திருவிழாவில் இன்னொரு ஆடவனோடு உறவுகொள்வதாகவும், காளி அதைக் கேள்விப்பட்டு கோபத்துடன் வீடு திரும்புவதுமாய் முடிகிறது. மாதொருபாகனில் எவ்விதமான முடிவை இறுதியில் காளி எடுக்கின்றார் என்பது வாசகருக்கு திறந்தவெளியாக விடப்பட்டிருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக பெருமாள் முருகனின் எழுதிய இரண்டு நாவல்களில் ஒன்றே 'ஆலவாயன்'. மற்றது 'அர்த்தநாரி'.

ஆலவாயன்' காளி தனக்கான முடிவை எடுத்து தூக்கில் தொங்குவதுடன் தொடங்குகின்றது. 'அர்த்தநாரி'யில் (அடுத்து வாசிக்க இருப்பது) காளி உயிருடன் இருப்பதாய் வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. உண்மையில் 'ஆலவாயன்' முழுக்க முழுக்க பெண்களை வைத்து எழுதப்பட்ட பிரதியெனச் சொல்லப்படவேண்டும். பொன்னா எப்படி காளியின் தற்கொலையைத் தாங்கிக்கொள்கின்றார், அந்தத் துயரிலிருந்து எவ்வாறு மீள்கின்றார் என்பதெல்லாம் மிக விரிவாக எழுதப்பட்டிருக்கின்றது. அவரது தயாரும், மாமியாரும் அவரைத் துயரிலிருந்து மீட்டெடுப்பது மட்டுமில்லாமல், பொன்னா பதின்காம் நாள் திருவிழாவிற்குப் போனதால்தான் காளி தற்கொலை செய்தார் என்பதையும் மிக நுட்பமாக வேறுகதையொன்றை கட்டியெழுப்பது மூலம் மறைத்து அவர்கள் பொன்னாவைக் காப்பாற்றுகின்றனர். துயரிலிருந்து மீளும் பொன்னா, எப்படி காளி செய்த தோட்ட(காட்டு) வேலைகளை தானே தனித்த்ச் செய்யத்தொடங்குகின்றார் என்பதையும், அவரின் தாயார்/மாமியார் எவ்வாறு அந்த மீளுயிர்ப்புக்கு ஒத்துழைக்கின்றனர் என்பதாகவும் கதை நீளும். இதற்கிடையில் பொன்னா கர்ப்பமாகுவதும், அதை காளியின் மூலமே பொன்னா கர்ப்பமானார் என்றமாதிரி தாயும்/மாமியும் ஊரை நம்பவைக்கின்றனர். இந்த உண்மை தெரிந்த வேறு சிலரும் அந்த உண்மையை வெளியே வரச்செய்யாது பொன்னாவைக் காப்பாற்றுகின்றனர்.

ருவகையில் பார்த்தால் இந்தக் கதை பொன்னா கர்ப்பமாவதிலிருந்து 'ஆலவாயன்' என்கின்ற தன் ஆண் குழந்தையைப் பிரசவிக்கின்றவரை நீள்கின்றதெனச்  சொல்லலாம். நாவலில் ஒரு குறிப்பிட்ட சாதியின் பழக்க வழக்கங்கள், உறவுகளுக்கிடையிலான ஊடாட்டங்கள், வாழ்வு முறையில் ஒருவகையான மானுடவியல் பிரதியாக பார்க்கக்கூடியதாய் இருக்கின்றதென்றாலும் சிலவேளைகளில் ஒரு நாவலுக்குரிய மீறிய சித்தரிப்புக்கள் தேவையா என அலுப்பும் வரத்தான் செய்கின்றது. ஆனால் நாவலுக்குள் நல்லாயன் என்கின்ற ஒரு பாத்திரம் வந்தவுடன் நாவல் சுவாரசியமாகிவிடுகின்றது. தான் தோன்றித்தனமாய் எங்கும் அலைந்து திரியும் நல்லாயன் பாத்திரத்தினூடாக அதே குறிப்பிட்ட சாதியின் கீழ்மைகளும், கள்ளத்தனங்களும் நகைச்சுவையாக எடுத்துரைக்கப்படுகின்றது.

ஒரு குறிப்பிட்ட சாதியின் கதையென்றாலும் அந்தச் சாதியின் காட்டில் வேலை செய்யும் பெண், சாமீ என்றும் கவுண்டச்சி எனவும் சாதிக்குரிய மரியாதை கொடுத்து அழைக்கும்போது பொன்னு என்று மட்டும் கூப்பிடு அது போதுமென பொன்னா சொல்லும்போது சாதியை மீறும் தருணங்களை பெருமாள் முருகன் சுட்டவிழைவது இதத்தைத் தருகின்றது.

இது முழுக்க முழுக்க பெண் பாத்திரங்கள் நடமாடும் பிரதியென்றபோதும், இவ்வளவு நுட்பமாய் பெண்களை எப்படிப் படைக்கமுடிந்ததென வியப்பே வந்தது. இந்த இடத்தில் இமையத்தின் பெண் பாத்திரங்கள் - முக்கியமாய் 'எங் கதெ' - ஏனோ நினைவிற்கு வந்தது. பெருமாள் முருகனின் அநேக நாவல்களை வாசித்தவன் என்றவகையில் அவரளவிற்கு பெண்களை சித்தரிக்கும் எல்லைக்கு வருவதற்கு இமையம் போன்றவர்க்கு நீண்டகாலம் எடுக்குமெனவே தோன்றியது.


தமக்குரிய அல்லது தமக்கு வழங்கப்பட்ட எல்லாப் பாடுகளையும் சகித்துக்கொண்டு அதற்குள்ளால் தமக்கான வாழ்வை வாழ்கின்ற பெண்களை மிக இயல்பாகக் கொண்டுவந்த பெருமாள் முருகனைத்தான் இனி எதையும் எழுதக்கூடாதென்று பயமுறுத்திய குரல்களை நினைக்கும்போது, அவர்கள் எந்தத்திசை நோக்கி தம் சமூகத்தைக் கொண்டுசெல்லவிரும்புகின்றார்கள் என்று யோசிக்காமல் இருக்கவும் முடியவில்லை.

(Jan 24, 2016)

புலம்பெயர் வாழ்வு பற்றிய ஓர் ஆய்வு

Thursday, June 16, 2016

  'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்' - த. வெற்றிச்செல்வன்

சிலவாரங்களுக்கு முன் நூலகத்திற்குச் சென்றபோது 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்' என்ற ஆய்வுநூலைப் பார்த்தேன். இந்நூலை த.வெற்றிச்செல்வன் தனது முதுகலை ஆய்விற்காக எழுதியிருக்கின்றார். ஆய்வுப் பேராசிரியர்/ நண்பர்கள் இது அவ்வளவு எளிதான் காரியமில்லை என்றபோதும் சோர்வடையாது ஒரளவு பரவலாக வாசிக்கவும் தகவல்களையும் சேகரிக்கவும் வெற்றிச்செல்வன் செய்திருக்கின்றார் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. சுமதி, வசந்தி ராஜா, திருமாவளவன், செழியன், பிரதீபா, செல்வம் என கனடாவிலிருக்கும் நிறையப்பேரின் கவிதைகளும், ஏனைய பிற படைப்புக்களும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன. அண்மையில் காலமான திருமாவளவனின் கவிதைகள் நிறைய இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. திருமாவளவன் இந்த நூலைப் பார்த்திருப்பாரோ தெரியவில்லை. பார்த்திருந்தால் நிச்சயம் அவர் மகிழ்ந்திருப்பார்.

ஒரு கவிதைத் தொகுப்பை நான் வெளியிட்டதே எனக்கு கிட்டத்தட்ட மறந்துபோன நிலையில் எனது கவிதைகள் சிலவும் இந்த நூலில் காணக்கிடைத்தது என்னளவில் ஆச்சரியமே. ஆனால், நான் கொழும்பில் வசித்துக்கொண்டிருப்பதாய் உசாத்துணையில் தவறாக எழுதப்பட்டுமிருந்தது.

இதில் சேர்க்கப்பட்டிருக்கும் கவிதைகளில் ஒன்று இலங்கையில் இந்திய அமைதிப்படை வந்த காலங்களில் நிகழ்த்திய கொடுமைளையே பேசுகின்றது. அது மட்டுமின்றி என் சிறுகதைத் தொகுப்பில் முதலாவதாய் இருக்கும் கதையான 'ஹேமாக்கா' கூட இந்திய அமைதிப்படைக்காலம் பற்றியது. அதிகாரத்தை கையில் வைத்தபடி, அமைதிப்படை காலத்திலிருந்து இன்றும் தமிழகத்திலுள்ள அகதி முகாங்கள் வரை பெண்கள் மீதான் பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துகொண்டிருப்பதை பாலன் எழுதிய 'சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்' என்ற நூலில் கூடக் காணலாம். 

தமிழகத்திலிருக்கும் சில இலக்கிய/ அரசியல்வாதிகளுக்கு அவர்களின் தலையில் ஆணியடித்து இதைச் சொன்னால் கூட விளங்காது அல்லது விளங்காதமாதிரி நடிப்பார்கள். ஆனால் எனது கவிதையை உதாரணங்காட்டும் வெற்றிச்செல்வனால் கூட ஏன் இது இந்திய அமைதிப்படை நிகழ்த்திய அட்டூழியங்களென பதிவு செய்யமுடியாதிருக்கின்றது என யோசிக்கின்றேன். சிலவேளைகளில் அவரின் ஆய்வுச்சூழல் இடங்கொடுக்கவில்லையோ தெரியாது.

ஆனால் நாங்கள் என்றுமே மறந்துவிடாது -சொற்களால் எதுவும் நிகந்துவிடப் போவதில்லையெனினும்- தொடர்ந்து அதைப் பேசுவோம்.

அமைதியின் மணம்
-----------------------------

ஒவ்வொரு
பெருந்துயர்களின் பின்னும்
நீளும் நம்பிக்கையின் துளிர்ப்பிலே
வாழ்வு பெருகும் எமக்கு
நேற்றுப்பரவிய வெறுமை
துடைத்தெறித்து
நாளையை மீண்டும் சுகிக்க
எங்கிருந்தோ எழும் மிடுக்கு

அவ்வாறான மகிழ்வின்சாயல் கலந்துருகியகணத்தில்
புத்தரையும் காந்தியையும் குழைத்துப்பூசியபடி
அந்நியமான சிலர்
எங்கள் தேசத்தில் பரவினர்
எந்தக்கேள்விகளுமில்லாது
சிரித்தபடிவந்தவர்கள்
முகங்கள் இறுகியபடி
முள்ளுக்கம்பிகளுக்குள் புதைந்ததற்கு
காலம்மாறி வீசிய
அமைதியின் புயலும் காரணமெனலாம்

பிறகு எண்ணெய் மணமும்
அணிவகுப்புத்தடமும்
கலந்து பெருக பீதியில் உறைந்தன
தெருக்கள்
பொழுதெல்லாம் விழிமூடாது
ஊர்களின் அமைதிக்காய்
ஒற்றைக்கால் தவமியற்றியவர்கள்
அதிகாலையில் மட்டும்
துயின்றுபோகும் அதிசயம்
உருக்குலைந்த உடல்கள்
பனிப்புகாரில் மிதக்கையில் மட்டுமே நிகழ்ந்தன

சாரமும்
கைகள் பின்னே வளைக்கப்பட்டிருக்கும் கோலமும்
விழிகள் வெறித்தபடியிருக்கும் கோரமும்
அரணுக்குள்ளிருப்பவர்கள்
அழிவுகளில்லாது திரும்பிச்செல்லல் கூடாதென
நெஞ்சு விம்மித்தணியும்

எதிர்வீட்டு அக்காவின்
ஆடைக்குள் குண்டிருப்பதாய்
எச்சில் தெறிக்கும் பரிகசிப்புடன்
அமைதியானவர்கள் முலைகள்திருகி
கூட்டாய்ப்படர்கையில் அசையாய்ச்சாட்சிகளாவது
நானும் மதியவெயிலும்

நிகழ்வுகளின் தொடர்ச்சியில்
ஆழ்மனதின் துலங்கல்கள் சிதைவுற
மழலையாகிச் சிரித்தபடி
காணாமற்போனாள் அக்கா
ஓர்நாள்

இப்போது புலம்பெயர்வாழ்வு.
நினைவுகளின் செட்டையைக்கழட்டிவிட்டு
துருவக்கரடியின் தோலான போர்வைக்குள்
நடுநடுங்கியபடி விரகமெழும்
உறைபனிக்காலம்

நேற்று நடந்தவையெதுவும்
என்னைப்பாதிக்காதெனும் திமிருடன்
கொஞ்சம் கொச்சைத்தமிழும்
அதிகம் ஆங்கிலமும்
நாவில் சுழலும் அன்புத்தோழியுடன்
மரபுகளைச் சிதைத்தபடி
கலவியும் கிறங்கலுமாய்
கழிகிறது வாழ்வு

எனினும் அவள் முலைகள் சுவைத்து
முயங்கும்பொழுதெல்லாம்
எண்ணெய் பிசுபிசுக்கும்
அமைதியின் மணமும்
குறியென விறைத்துநிற்கும்
துப்பாக்கிமுனையின் நினைவும்
ஏனோ பீறிட்டெழுகிறது
எல்லாவற்றையும் புறக்கணித்து.

2001.11.02
அதிகாலை 4.04

நிலம் தாண்டி நீளும் மழை

Friday, June 10, 2016

 Maheshinte Prathikaaram & Charlie (மலையாளம்)

டந்த வாரவிறுதியில் அவ்வப்போது பெய்துகொண்டிருந்த மழையோடு (ஆலங்கட்டி மழை உட்பட) இரண்டு மலையாளப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். Netflixல் இனிப் பார்ப்பதற்கு நல்ல திரைப்படங்கள் இல்லையென, 'How to be Single' என பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டிருந்த எனக்கு 'Maheshinte Prathikaaram'ம் 'Charlie'யும் மிகுந்த குதூகலத்தைத் தந்திருந்தன. அந்தப் படங்களை பார்த்த நீட்சியில் 'கலை ஏன் நமக்குத் தேவை அல்லது எது கலையாகிறது' என ஒரு கட்டுரையை எழுதத் தொடங்கி, இடைநடுவில் எழுதுவதை விட அனுபவங்களோடு கரைதலே இனிதென வாரவிறுதியைக் கடந்து வந்தாயிற்று.

தமிழ்நாட்டு நிலப்பரப்பும், மக்களும் தொலைவிலிருந்த எனக்கு நெருக்கமானதிற்கு முக்கிய காரணம், சிறுவயதுகளிலிருந்து வாசித்த கலை, இலக்கியப் படைப்புக்கள் எனச் சொல்வேன். ஆனால் எழுத்தினூடாக எனக்குள் கட்டியமைக்கப்பட்ட நிலவரைவியலை தமிழகத் திரைப்படங்கள் எதுவுமே நெருக்கமாக நின்று கற்பிக்கவில்லை என்பது ஒருவகையில் துயரமானது. தமிழ்த்திரைப்படங்களில் கற்பித நிலப்பரப்புக்களே (அது தவறில்லையெனினும்) பெரும்பான்மையென்றாலும் அவைகூட என்னை அவ்வளவாகக் கவர்ந்ததில்லை.

ஆனால் மாறாக மொழியே பரிட்சயமில்லாத மலையாளத் திரைப்படங்கள் கேரளாவின் நிலப்பரப்புக்களை மிக விசாலமாகவும், ஆழமாகவும் எனக்குள் கட்டியெழுப்பியிருக்கின்றது. ஆகவேதான் தமிழ்நாட்டிற்குள் பயணிப்பதைவிட நிலம்சார்ந்து பயணிக்க கேரளா என்னை எப்போதும் ஈர்த்துக்கொண்டேயிருக்கிறது.

Maheshinte Prathikaaramலும் Charlieயிலும் கதைகள் மிக எளிமையானவை. ஆனால் கேரளாவின் நிலப்பரப்புக்களினூடும் அவர்களின் கலை/ கலாசாரங்களின் ஊடும் அவர்கள் அதை நம்மைப் பாதிக்கும் வகையாகக் காட்சிப்படுத்துகின்றனர். சார்ளியில் முக்கிய இரண்டு பாத்திரங்களும் ஒருமுறையேனும் இறுதிவரை சந்திக்கமாட்டார்கள். ஆனால் பல்வேறு சந்தர்ப்பங்களினூடாக தொய்வே ஏற்படாதமாதிரி கதையைக் கொண்டு சென்றிருப்பார்கள். துல்காருக்கு அவர் ஏற்கனவே நடித்த 'நீல ஆகாசம் பச்சைக்கடல் சுவர்ணபூமி' போல அலைகின்ற ஒருவனின் கதாபாத்திரந்தான் (இங்கே கேரளாவிற்குள் அலைகின்றார்). துல்காருக்கோ, பார்வதியிற்கோ உணர்ச்சிவசமான எந்த கடந்தகாலத்தையும் காட்டாமல் அலைகின்ற இருவர் என்கின்ற அலைவரிசையில் மட்டும் இணைவதைக் காட்டும் முறைகூட பிடித்திருந்தது.

Maheshinte Prathikaaram திரைப்படம் இன்னும் ஆழமாய் கேரளாவின் உட்கிராமங்களில் இறங்குகின்றது. சிறு ஊர்களிலிருந்து இருந்து பிறந்து வளர்ந்த நமக்குத் தெரியும், சிறுசிறு பிரச்சினைகளுக்கே உறவுகள்/நட்புகள் சண்டை பிடிப்பதும், பகைத்துக் கொள்வதும் பற்றி. இதில் ஊர்ச்சந்தியில் தற்செயலான நிகழும் ஒரு சண்டையைத் தடுக்கப்போகும் ஒருவன் இன்னொருவனால் அவமானப்படுத்துகின்றான். ஒரு அப்பாவியான அந்தப் பாத்திரம், எப்படி தன்னை அவமானப்படுத்தியவனை பழிவாங்குகின்றது என்பதையும் அந்தப் பழிவாங்குதல்வரை செருப்பைக் காலின் அணியமாட்டேன் என சூளுரைத்து செருப்புப் போடாமல் திரிவதுந்தான் முழுக்கதையும்.

துல்காருக்குள் இயல்பாகவே ஒரு துள்ளல் இருப்பதைப் போல, எனக்குப் பிடித்த பகத் ஃபாசிலுக்குள் எப்போதும் ஒரு தனிமை விரிந்துகொண்டிருக்கும் என எண்ணிக்கொள்பவன் நான். அவருடைய அநேக திரைப்படங்களில் எத்தகைய கதாபாத்திரமாய் இருந்தாலும், அந்தத் தனிமையை நாம் எளிதாகக் கண்டுகொள்ளமுடியும். இங்கே அவருக்கும் தந்தையிற்குமான அவ்வளவு பேசாத உறவு அந்தளவு இயல்பானது, அவரின் காதல் முறிவின்போது, 'நீ அவளை நிறைய நேசித்தாய் அல்லவா?' எனக் கேட்பது, ஊர் மக்கள் முன்னர் வேட்டி கழன்று விழ அடிவாங்க அவமானப்பட்டபின், 'அடித்தாயிற்று அல்லவா, இனி அவனை விட்டுவிடுங்கள், வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுங்கள்' என தந்தையிற்கும் மகனுக்குமான ஒரு இடைவெளி இருந்தாலும் அதை மீறி உள்ளேயூறும் நேசம் அருமையாக வந்திருக்கும்.

இந்த இரண்டு திரைப்படங்களிலும் நிலப்பரப்பு, நாயகர்கள் என்பதற்கு அப்பால் பெண்களின் பாத்திரங்களும் அருமையாக அமைக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதைகள் ஆழமாக இல்லாவிட்டால் கூட, கதாபாத்திரங்களை வலுவாக்கிவிட்டால் ஒரு திரைப்படம் நம்மால் எளிதில் கடக்க முடியாதவையாக மாறிவிடுகின்றது என்பதற்கு இவை நல்ல உதாரணங்கள்.
எது கலையாக மாறுகிறது அல்லது ஏன் கலை நமக்குத் தேவையாகிறது என்பதற்கு இந்த இரண்டு திரைப்படங்களும் சில புள்ளிகளை என்னளவில் விட்டுச் சென்றிருந்தன.

மகிழ்ச்சியான மனோநிலையின் தீற்றை ஏதோ ஒன்று உங்களில் பற்றவைத்துவிட்டால் அந்த நாள் இன்னும் அழகாவிடுகிறது. அந்தத் தருணங்களை உருவாக்கியவர்களை நன்றியுடன் நினைத்துக்கொள்ளத் தொடங்கிவிடுவீர்கள். மழை பிறகு மனதிற்குள்ளும் பொழியத் தொடங்கிவிடும்.

(மே 19, 2016)