கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

எங்கள் குடும்பச் செல்வங்கள்

Sunday, May 22, 2005

{யாழ் இனிது குழல் இனிதென்பர் மழலைமொழி கேளாதோர்}

P5070010
எழில்

'மனதில் உறுதி வேண்டும்,
வாக்கினில் இனிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின் பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்படவேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்'

P5070017
ஈழன் (தமிழுக்கு) மக்ஸீம்(ரஷ்யனுக்கு)

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை'

File0001
மயூரதி

'நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்;
அமிழ்ந்து பேரிருள் அறியாமையில்
அவலமெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகும்'

P4260005
கீர்த்திகன்

'சிரித்துரை கூறியும், செள்ளென விழுந்தும்,
கேலிகள் பேசிக்கிளறியும் இன்னும்
எத்தனை வகையிலோ என் வழிக்கவனைக்
கொணர்ந்திட முயன்றேன்; கொள் பயனொறில்லை'

கவிதைவரிகள்: பாரதியார்

Friday, May 20, 2005

வசந்தகாலத்தில்
வருகின்ற வாரயிறுதிகளுக்கு
தனித்துவமான வனப்புண்டு

இயற்கையின் விசித்திரங்களுடன்
விரிகின்ற மலர்களும்
அதன்,
வர்ணங்களையும் வாசத்தையும்
தம்முடன் காவிச்செல்கின்றதான
பிரமையைத்தரும் பெண்களும்
புத்துணர்ச்சி ஊட்டுவர்
மனதுக்கு

நண்பர்கள் கூட்டம்
நல்ல உணவு விடுதிகள்
திரைப்படங்கள்
அரையிருட்டுக் கிளப்புக்கள்
சிலவேளைகளில்
இத்தனையாம் மணித்துளியில் விழிக்கவேண்டுமென்ற
அவதியில்லா ஆனந்தச்சயனம்
இப்படித்தான்
பொழுதுகள் கழியும் பலருக்கு

கிளப்பிற்கு வரும்
அறிமுகமில்லா நங்கைகளுடன்
whine-up செய்தாடப் பிரியப்படும்
சிலருக்கு
மானப்பிரச்சினையாகி விடுகின்றது
தாம் அழைத்துச்செல்லும்
சகோதரிகளை தோழிகளை
யாரோ ஒரு அந்நியன்
கூட ஆடவரும்படி அழைக்கும்போது

இழுத்து மூடிய
கதவைத்துளைத்து
குண்டொன்று பாய
காலணியைக் கழற்றிய நிலையிலேயே
சரிந்து வீழ்கின்றாள்
ஒரு பெண்

அவள்
ஆவிபிரியும் கடைசிக்கணங்களை
நிராதரவாய் பார்க்கும் தகப்பன்
சித்தம் குழப்புகின்றான்

அனைத்து அடையாளங்களும் மறைத்து
தலைமறைவு வாழ்க்கையில்
வெற்றுப்பொழுதுகள் கழிக்கும்
*Bullet
நீயும் அறிதல் கூடும்
உனனிடம் இருப்பதுவும்
ஒரு உயிர்
அதைக் காவுகொள்ள காத்துக்கொண்டிருப்பதுவும்
ஒரு புல்லட்தான்
என்று.

*ஒரு சூட்டுச்சம்பவ கொலைவழக்கில் தேடப்படும் ஒருவரின் nick name

Untitled

Wednesday, May 11, 2005

ஒவ்வொருவரின் வருகைகளும்
கண்காணிக்கப்பட்டு
அவர்களின் முன்/பின் கதைகள்
மூச்சுக்கூட விடமுடியா
பெரும்புகையாய் கிளம்பும்
விழாக்கள்
மனதிற்கு உவப்பில்லாதவை

பிரியமானவர்களின் விருந்துகள்
புறக்கணிக்கமுடியாதன.

பிறரைக் காயப்படுத்தித்தான்
நம்பிக்கைகள்
வாழவேண்டுமென்பதில்லை
மனிதர்கள் முக்கியம்
எனக்கு.

நெளிநெளியான
வர்ணம்பூசிய கூந்தற்கற்றைகளை
அலட்சியமாய் ஒதுக்கிவிடும் பெண்களை
இன்னொருமுறை திரும்பிப் பார்க்காமல்
இருக்க முடிவதில்லை

சூழலின் இறுக்கந்தளர்த்தி
சிறுபுன்னகையுடன்
இவர்களை இரசிக்கத்தொடங்கினால்
விழாக்களின் உயிர்ப்பை
அறிந்துகொள்ளலாம்
சிலவேளைகளில்

இன்றைய விருந்தில்
தேனீக்களாய் பறந்துதிரிந்து
அறுசுவையுணவு பரிமாறிய
வளரிளம்பெண்கள் சிலிர்ப்பூட்டினர்
கோடைகாலத்து சிறுமழைபோல

அவர்களுடன் உரையாடுவதற்கான
காலமும் தனிமையும்
கனிந்தபோதும்
இப்படி
இயல்பாய் சிரித்துப்பழகுபவர்களை
'வேசிகள்' என விளித்து
நக்கலும் (பாலியல்) சேட்டைகளும் செய்யும்
என்னைப்போன்றவர்களின்
நினைவுவர
விலகிப்போகின்றேன்
புன்னகைகளுடன்

முகஞ்சுழிக்காது
அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றும்
அவர்களை
ஒரு மேசையில் அமர்த்தி
சில மெழுகுதிரிகளை ஒளிரவிட்டு
ஆறுதலாய்
உணவு பரிமாறும் ஆசை
எழுகிறது எனக்குள்

விழாவின் முடிவில்
எஞ்சியிருந்த
அலங்கரிக்கப்பட்டிருந்த பலூன்களை
ஒன்றாய் இணைத்து
நிலவினொளியில் பறக்கவிடுகையில்
குதூகலத்துடன்
ஆடத்தொடங்குகின்றான்
அண்ணாவின் மகன்

அவன் நடனம் கண்டு
கலகலவெனச் சிரிக்கும்
அந்தப்பெண்களை அவதானிக்கையில்
என் ஆயுட்காலத்தின் எந்தக்கணத்திலும்
பெண்களை
வெறுக்கமுடியாது போலத்தான் தோன்றுகின்றது.

May 07/05
...dedicated to one of my brother's sons...

ராப் பாடல்களினூடு ஒரு சிறு பயணம்

Thursday, May 05, 2005

சென்ற வருடத்துப் பிற்பகுதியில்தான் ராப் பாடல்களை ஆர்வத்துடன் கேட்கத்தொடங்கியிருந்தேன். மென்மையான பாடல்களில் ஆரம்பித்து, கானாப் பாடல்களில் வெறிபிடித்து அலைந்த ஒருவன், ராப் பாடல்களை நோக்கிப் பயணிப்பது பெரிய விடயமல்ல. ராப் பாடல்களைக் கேட்கக்கேட்க அந்தக் கலைஞர்களின் பின்புலம் பற்றி அறியும் ஆவல் தொற்றிக்கொள்ள, ராப் பாடல்களுக்கான சஞ்சிகைகளையும், அவர்களைப் பற்றி வெளிவந்த திரைப்படங்களையும் பார்க்கத்தொடங்கினேன். அண்மையில் டூபாக்(Tupac)கின் வாழ்க்கை வரலாற்றை ஒரு ஆவணமாகக் காட்சிப்படுத்தும், Tupac:Resurrection என்ற படத்தையும், அதற்கு முன் Eminem, Eminemவாக நடித்து வெளிவந்த, 8 Mile படத்தையும் பார்த்திருந்தேன்.ராப் பாடல்களிலும் கானாப் பாடல்களிலும் பல ஒற்றுமைகளை அவதானிக்கலாம். இரண்டுமே விளிம்புநிலை மனிதர்களின் ஆளுமையை விரித்துச் சொல்பவை; வரிகளில் கெட்ட வார்த்தைகள் மிகச் சாதாரணமாய் புழங்கும். கானாப் பாடல்களைப் போல, அநேக ராப் பாடல்களும் கணநேரத்தில் தோன்றுபவை. 8 miles படத்தைப் பார்த்தால் மிக அழகாக இதையெல்லாம் காட்சிப்படுத்தியிருப்பார்கள். உடலை முறிக்கும் தொழிற்சாலைகளில் கிடைக்கும் ஓய்வுநேரத்தில் ஒருவர் சும்மா ஒரு பாடலைத் தன்பாட்டில் தொடங்க, அப்படியே சங்கிலி இணைப்புக்களாய் மற்றவர்கள் தொடர்ந்தபடி இருப்பார்கள். ராப் பாடல்களுக்கான போட்டிகளில் கொடுக்கப்படும் பீட்ஸ¤ற்கு(beats) உடனேயே பாடல்களைப் புனைந்தபடி, லயத்தையும் தவறவிடாமல் இருக்கவேண்டும் என்பது முக்கிய நிபந்தனை.



ராப் பாடல்களின் ஒரு முக்கிய ஆளுமைகளில் ஒருவராக இருப்பவர் Tupac. தனது இருபத்தைந்து வயதிலேயே வன்முறைக்கு இரையாகிவிட்டாரென்றாலும், அவர் அந்தக்குறைந்த வயதிலேயே தனது சமூகத்திற்காய் சிந்தித்து, அரச அதிகார மையங்களுக்கு எதிராய் கடும் விமர்சனத்தை தனது பாடல்களிலும், நேரடிப்பேச்சிலும் வைத்திருக்கின்றார். ஒரு பேட்டியில் டூபாக் கூறுவார், அமெரிக்கா அரசாங்கம், FBI, பொலிசார் எல்லாமே ஒருவிதமான காங்குகளாலேயே நடத்தப்படுகின்றது. ஆனால் கறுப்பின மக்கள் மட்டுமே காங்குகளாய் இருக்கின்றார்கள் என்று கூறப்படுவதிலேயே ஆரம்பிக்கின்றது, கறுப்பின மக்களுக்கெதிரான நிறவெறி என்று. இன்னும், அமெரிக்கா அரசாங்கம் உண்மையில் வீதியில்திரியும் வன்முறைக்கும்பல்களை, சரியான வேலைத்திட்டங்களுடன் முற்றாக இல்லாமற்செய்துவிடமுடியும், ஆனால் அவையிற்கு அப்படிச் செய்துவிடுவதிலோ, கறுப்பின மக்கள் வன்முறையற்ற வாழ்வு வாழ்வதிலோ அரசாங்கத்திற்கு விருப்பமில்லை. அதனால்தான் அரசமைப்புக்கள் எதுவுமே உருப்படியாகச் செய்யாமல் இருக்கின்றன என்று. தனது வாழ்க்கை, Thug Life என்று பிரகடனப்படுத்தி (இப்போது இந்த வார்த்தை ராப் பாடல்களில் சாதாரணமாகிவிட்டாலும்) டூபாக்தான் இதை முன்வைத்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன். தன்னைப் போன்ற மக்கள் வன்முறையை வாழ்வு முறையாகத் தேர்ந்தெடுக்க திணிக்கப்பட்டு இருக்கின்றார்களே தவிர, விரும்பி இந்த வாழ்க்கை முறையை ஏற்றவர்களில்லை என்று இறுதியாய் சிறையில் இருந்து வந்த சமயத்தில் கொடுத்த ஒரு நேர்காணலில் சொல்கின்றார். பசியில் இருக்கும் ஒருவன் உணவு வேண்டுமென்றால், முதலில் ஒரு வீட்டின் கதவைத் தட்டலாம். திறக்காவிட்டால், உடைத்து விட்டு கேட்கலாம். அதுவும் சாத்தியமில்லையென்றால் திருடியே கொள்ளலாம் என்று வெளிப்படையாகக் கூறுகின்றார். டூபாக் எந்த வன்முறை recordம் இல்லாமல் ஒரு கறுப்பர் என்ற அடையாளத்திற்காகவே சும்மா முதலில் சிறையில் அடைக்கப்படுகின்றார் (பதின்ம வயதில் சிறைக்குப்போகும் கொடுமையைப் போல ஒன்றும் இல்லையென்ற்கின்றார். அதுவும் அங்கே கிட்டத்தட்ட 30, 40 வயதில் இருப்பவர்களுடன் பழகும்போது வாழ்க்கையே நிலைகுலைந்து போய்விடும் என்று, அப்படியொருத்தரும் பதின்மவயதில், சிறைக்குச் செல்லாதீர்கள் என்று எச்சரிக்கவும் செய்கின்றார்). பிறகு அதுவே அவரை வன்முறையாளனாக்கின்றது. முதலில் துவக்கெடுத்துச் சுட்டதும் பொலிசாரை நோக்கித்தான். அப்படியே தொடங்கிய வன்முறைக்காய், அவர் இசைத்தட்டுக்கள் விற்று வந்த பணத்தின் பெரும்பகுதியை (கோர்ட், கேஸ்) என்று செலவழித்துமிருக்கின்றார். பிறகு வன்முறை வழக்குகளுடன், பெண்கள் மீதான் பாலியல் குற்றச்சாட்டுக்களும் தொடர அவர் வாழ்வில் நிம்மதியில்லாமல் அலையத்தொடங்குகின்றார். அரசாங்கத்தின் மீது கடுமையாக விமர்சனங்கள் வைக்கத்தொடங்க, அவர்மீது பல பொய்யான வழக்குகள் எல்லாம் அரச தரப்பால் தொடரப்படுகின்றன. எனினும் அதையும் மீறி, அவரது இசைத்தட்டுக்கள் மிகப்பெரும் வரவேற்பை இரசிகர்களின் மீது பெறுகின்றன. அதற்கு இன்னொருகாரணம்,மிகக்கடுமையான வார்த்தைப் பயன்பாடுகளும், பாடல் வரிகளை அரசியல்படுத்தியமையும். இவ்வாறு ஒரு போராட்டம் குணம் டூபாக்கிற்கு எப்படி வருகின்றதென்றால், அவரது தாயிடமிருந்தும், புறக்கணிப்பிலிருந்தும் என்றும் நாம் கண்டுகொள்ளலாம். டூபாக்கின் தாயார் கறுப்பின மக்களின் எழுச்சிக்காய் போராடிய, Black Panthers இயக்கத்தில் தீவிரமாய் இயங்கிய ஒரு பெண்மணியாவார். கிட்டத்தட்ட டூபாக்கைக் கருவாக வயிற்றில் தாங்கிய அதிககாலங்களில் டூபாக்கின் தாயார் சிறையில்தான் கழித்திருக்கின்றார். . தனது தாயின் போராட்டக்குணம்தான் தனக்கும் வந்திருக்கின்றது என்று டூபாக் பலவிடங்களில் கூறியிருக்கின்றார். இளவயதில் தான் வளர்ந்த இடத்தில் இருந்த ஏழ்மையைக் காணச்சகிக்காது நீயுயோர்க், நியூஜேர்சி, லொஸ் ஏஞ்சல்ஸ் என்று ஓவ்வொரு இடமாய் ஓடிப்போனபோதும், எங்கேயும் கறுப்பினமக்களின் வாழ்க்கை ஒரேமாதிரி மிகவும் கொடுமையாக இருந்தைப் பார்த்த கோபந்தான் தன்னை இப்படியொரு போராட்டப்பாட்டுக்காரனாக ஆக்கியது என்கின்றார் டூபாக். 25வயது வயதில், மைக் டைசனின் பிரபல்யம் வாய்ந்த ஒரு குத்துச்சண்டைப் போட்டியைப் பார்த்துவருகின்றபொழுதில், தெருவோரத்தில் சுடப்படுகின்றார். முதலில் பலமுறைகள் சுடப்பட்டும், தப்பிய அவர் இந்தமுறையும் திரும்பிவருவார் என்ற நம்பிக்கையில் இருந்த அவரது இரசிகர்களால் டூபாக்கின் இளவயது மரணத்தைத் தாங்கமுடியாமல் போகின்றது. இன்றும், கிட்டத்தட்ட பத்துவருடங்கள் ஆனபின்னும், டூபாக் எந்த இசைத்தட்டு வந்தாலும் சிலவாரங்களாவது (எம்ஜிஆர் படங்கள் போல) billboardல் முதலிடத்தில் இருக்காமற் போவதில்லை (அண்மைக்கால உதாரணம், Eminem தயாரித்த, டுபாக்கின் Loyal to the Game).



இன்றைய பொழுதில் அதிகம் பேசப்படும் ராப் கலைஞர்களில் முக்கியமானவர்கள், எமினமும், 50centம். இவர்கள் இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் single mothersல் வளர்க்கப்பட்டவர்கள். இன்னமும் தமது தந்தை யார் என்ற உண்மை தெரியாதவர்கள் (பிரபல்யமான பொழுதில் அதை அறிவதில் தங்களுக்கு எந்த விருப்பமும் இல்லையெனவும் பிரகடனப்படுத்தியவர்கள்) இவர்கள் இருவரினதும் தாயார்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள். 50Centன் தாயாரை யாரோ சுட்டுத்தான் கொன்றிருக்கின்றார்கள். தாயாரைக் கொன்றவர் குறித்து அறியும் ஆவல் இருக்கின்றதா என்று வினாவியபோது, தனது தாயார் 15வயதிலேயே குழந்தையைப் பெற்றெடுத்தவர். பிறகு cracks விற்றுத்தான் வாழ்க்கையை நடத்தியவர். கட்டாயம் அவர் crackஆல் அல்லது துவக்கால் இறப்பதைத் தவிர வேறொரு முடிவை எப்படி எதிர்பார்க்கமுடியும் என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். எமினமின் பாடல்கள் கிட்டத்தட்ட டூபாக்கின்(அதிக கடுமை இல்லையெனினும்) பாடல்களுக்கு அண்மையாக உள்ளன. அமெரிக்கா அரசாங்கத்தையும், ஈராக் போரையும் நிர்த்தாட்சணமின்றி Mosh என்ற பாடலில் விமர்சிக்கின்றார். அவ்வாறே, மைக்கல் ஜாக்சனின் குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தையும் கிண்டலத்துப் பாடுகின்றார். மைக்கல் ஜாக்சனின் பாடல்குறித்து பலரிடமிருந்து, மிகக்கடுமையான விமர்சனம் வந்திருக்கின்றது. எனினும் அவர் தான் கூறியது சரியென்று, எந்தச் சமரசமும் செய்யாது இன்னும் இருப்பது அவர் மீதான நம்பிக்கையை அதிகரிக்கின்றது. அந்தப்பாடலில்கூட (Just Lose it), தனக்குக் கூட ஒரு ஆளுமையாக இருந்த மைக்கல் ஜாக்சனின் இன்றைய காலத்து வீழ்ச்சியைத்தான் எமினிம் கூறுகின்றார்.



50Cent ஒரு முக்கிய பாடகர் என்பதைவிட, அவரது கோமாளித்தனங்கள்தான் முக்கியமானது. அவர் ஆரம்பத்திலேயே தனது கொள்கை என்னவென்பதைச் சொல்லிவிடுகின்றார். Get rich or Die trying என்றுதான் கூறிக்கொண்டு வருகின்றார். இன்றைக்கு மிகப்பெருஞ்செல்வந்தராகிவிட்டார். அவரது G-unitம், ஆடை விற்பனைகளும் வெற்றி நடைபோடுகின்றன. அண்மையில் வெளிவந்த The Massacre இன்னும் billboardல் முதலிடத்தில்தான் நிற்கின்றது. இந்த இசைத்தட்டை வெளிவந்த ஒருவாரத்தில், கிட்டத்தட்ட 1.8 மில்லியன பிரதிகள் விற்கப்பட்டிருக்கின்றன. 50Centன் வாய் சும்மா இருக்காது. ஜோர்ஜ்.புஷ் மாதிரி யாரையாவது எதிரிகளை உருவாக்கிக்கொண்டேயிருப்பார். ஏற்கனவே Fat Joe, Jadakissயோடு beefs செய்தது காணாது என்று இப்போது The Game என்பவரோடு சண்டைபிடிக்கத்தொடங்கிவிட்டார். அதன் எதிரொலிதான், நியுயோர்க்கிலுள்ள ரேடியோ நிலையத்தருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சண்டை. அதில் The Gameன் நண்பர் படுகாயமடைந்திருக்கின்றார். இத்தனைக்கும் சில மாதங்களுக்கு முன்தான், 50Cent, The Gameயோடு சேர்ந்து The Documentary என்று ஒரு இசைத்தட்டை வெளியிட்டிருந்தார். நிலைமை இன்னும் கடுமையாகப் போகப்போகின்றது என்று உணர்ந்த, 50Cent பிறகு The Gameயோடு, ஒரு இணக்கத்தைச் சேர்ந்து செய்திருந்தார். இந்தக் கூட்டத்தை, அமெரிக்கா/கனடா ஊடகங்கள், ஒரு சமாதான உடன்படிக்கைக்கு நிகராய் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்திருந்தன. இன்னும் 50Cent, குண்டுதுளைக்காத இரண்டு ஜீப்புகளை ஒவ்வொன்றும் ஒரு லட்சத்திற்கும் மேலாகச் செலவு செய்து, நியுயோர்கிலும், லொஸ் ஏஞ்சலிலும் வைத்திருக்க்கின்றார். இவ்வளவு செலவு செய்து வைத்திருந்தும், '........ guys don't like to shoot me' என்று அவ்வவ்போது கவலைப்படுகின்றார். அண்மையில் G-unit குழுவிலுள்ள Lloyd Banksன் விருந்திற்கு, supriseயாய் கலந்துகொண்டு, (bullet-proofs அங்கியுடன்) ஒரு பாடலையும், சனங்களுக்கருகில் நின்று 'பயமில்லாமல்' பாடியுமிருக்கின்றார். கிட்டத்தட்ட ஒன்பது முறைகள் சூடுவாங்கியவர், என்பதால் நிரம்ப எண்ணிக்கையான பாதுகாவலர்களுடன் திரிபவர். இத்தனை அபத்தங்கள் இருந்தாலும், 50Cent அருமையாகப் பாடக்கூடியவர் என்பதை மறுக்கமுயாது. காமத்தை அப்படியே மனதில் வழியவிடும், Candy Shop என்ற் ஒரு பாடலிற்காகவே அவரது இறுதி இசைத்தட்டை வாங்கலாம்.



Snopp Dogg கிட்டத்தட்ட டூபாக் போல பிரபல்யமானவர். இவரில் என்னை வியக்க வைப்பது இவருக்கு ஒழுங்காக நடனமாடவோ அல்லது ஊடகங்கள் முன்வைக்கும் 'ஆண்மை'க்குரிய உடலமைப்போ இல்லாமலே இரசிகர்களை எப்படி ஈர்த்துக்கொண்டார் என்பது. இவரது அண்மைய வரவான, Rhythm & Gangsta: The Masterpiece ல் உள்ள பாடல்களில், 'Drop it like it's hot' மிகப்பிரபல்யம் வாய்ந்தது. அந்த இசைத்தட்டில் ஒரு பாடலில், 'leave her, dunt hit her' என்ற வரிகள் வரும் இன்னொரு பாடலும் எனக்குப் பிடித்தமானது. வழமையான Bitches, M****F** போன்ற வார்த்தைகள் இருந்தாலும், ஆகக்குறைந்தது, விலகிப்போகும் பெண்ணிற்கு வன்முறையால் பதில் சொல்லாது, சும்மா விலகிவிடு என்று அவர் சொல்வதை, அவரது இரசிகர்கள் கொஞ்சமாவது கவனிக்கத்தான் செய்வார்கள் என்று நம்புகின்றேன். அவரது நேர்காணலில் ஒரு நிருபர் இப்படிக் கேட்பார், 'Drugs அடிக்கின்றீர்களா?' என்று அவர் 'இல்லையே அதை நிறுத்தி கனகாலம் ஆயிட்டேதே' என்பார். 'அப்படியா? எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டன?' என்று நிருபர் ஆச்சரியத்துடன் திரும்பிக்கேட்க, 'ம்...சில வாரங்களாய்த்தான்' என்று அவர் கூறியதிலுள்ள நகைச்சுவையை இரசித்துமிருக்கின்றேன்.



ராப் கலைஞர்கள் தமது திசையை இன்றைய காலகட்டத்தில் மாற்றிவிட்டனரென்ற குற்றச்சாட்டை சில கட்டுரைகளில் வாசித்திருக்கின்றேன். பத்து வருடங்களுக்கு முன்வரை அதிகாரங்களுக்கெதிராய் அறைகூவல் விடுபவையாய் இருந்தவை, இன்று காமத்திலும், தனிநபர்/குழு வன்முறையோடு தேங்கிவிடுகின்றன என்று கூறுகின்றனர். தமது ஆலபங்களை பிரபல்யப்படுத்துவதற்காய், ராப் பாடகர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கின்றனர் என்ற விமர்சனங்கள் இருக்கின்றன. Janet Jackson, Super Bowlல் தனது மார்பைக் காட்டியதும், 50Cent, The Gameயோடு சுடுபட்டதும் கூட தமது ஆல்பங்களை விளம்பரப்படுத்தும் உத்திகளே என்கின்றனர். ராப் பாடல்களில் மிக முக்கியமான குறையாக நான் பார்ப்பது அவை பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறையும், பாடல்களைக் காட்சிப்படுத்தும்போது பெண்களைக்காட்டும் முறையையும்தான். இப்படியான் சித்தரிப்புக்கள்தான் பெண் ராப் பாடகர்களின் பாடல்களிலும் இருப்பது கண்டு வியந்துமிருக்கின்றேன். ஏன் பெண் பாடகிகளால் இந்த ஆணாதிக்கத்தன்மையைப் பிரித்துணர முடிவதில்லை என்று யோசித்திருக்கின்றேன். இல்லாவிட்டால், இப்படியிருப்பதுதான் கலாச்சாரம் என்று ஆக்கிவிட்டார்களோ தெரியவில்லை. பதினமத்தைக் கடந்த என்னைப் போன்றவர்களுக்கு ராப் பாடல்கள் வாழ்வில் பெரிதாய் எதையும் திசை திருப்பிவிடப்போவதில்லை. ஆனால் பதினமத்தில் இருப்பவர்களுக்கு இந்தப்பாடல்கள் பெண்கள் பற்றிய பிழையான புரிதல்களைக் கொடுத்துவிடக்கூடும். உண்மையில் என்னைப் பொறுத்தவரையில் ராப் பாடல்களை ஆர்வமாகக்கேட்கத்தொடங்கிகாலத்தின்பின் பல விசயங்களை அறிந்திருக்கின்றேன்/பெற்றிருக்கின்றேன் என்றுதான் சொல்லவேண்டும். முக்கியமாய், சரியென்று நான் நினைப்பதை, பிறரின் முகத்திற்கு நேரெதிரே சொல்லும் துணிவு, எனக்கு இன்றைய பொழுதில் ஒரளவுக்காவது இருக்கின்றதென்றால், அது ராப்பாடல்களின் மூலம் வந்தது என்றுதான் கூறுவேன். வாழ்வில், எத்தனையோ புனிதப்பிரகிருதிகள் உடைந்துபோவதைப் பார்க்கும்போது, தாங்களும் பலவீனமான ஆகிருதிகள் என்பதை மறைக்காமல், பாடிக்கொண்டிருக்கும் ராப் பாடகர்களையும் சமூகத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமுமில்லை.

(குறிப்பு: மேலேயுள்ளவை நான் வாங்கிய சில இசைத்தட்டுக்களின் முகப்புப் படங்கள்)