கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

காகிதப்பூ குறிப்புகள்

Tuesday, September 29, 2015

 தீபன் (Dheepan)

தீபன் படம் பல சிக்கலான விடயங்களைப் பேச முயல்கின்றது. ஷோபா, காளீஸ்வரி மற்றும் சிறுமியாக நடித்தவரின் நேர்த்தியான நடிப்புடன், திரைப்படமாக்கமும் சிறப்பாகவே இருக்கின்றது. எனினும் விளிம்புநிலை மனிதர்களை முக்கிய பேசுபொருளாகவும், கதாபாத்திரங்களாகவும் கொண்ட இப்படம் யாருடைய குரலாக ஒலிக்கின்றதென்பதில் நிறையக் குழப்பங்கள் இருக்கின்றன. எந்தப் படமாயினும் அது நிறைவுறும்போது நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ அது எடுத்துக்கொள்ளும் விடயத்திற்கு genuineவாக இருப்பதை உணரும்போது அப்படத்தை நமக்கு நெருக்கமானதாய்க் கொள்ளமுடியும்.
உதாரணமாய் பிரசன்ன விதானகேயின் With You Without You, 'தீபன்' திரைப்படம் போலவே மிகச்சிக்கலான விடயத்தை இன்னும் சிக்கலான பாத்திரங்களினூடாகப் பேசுகின்றது. ஒரு முன்னாள் இராணுவத்தினன், தனது சக இராணுவத்தினர் ஒரு தமிழ்ப்பெண்ணை கூட்டாய்ப்பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு வரும்போது, பொய்ச்சாட்சியம் கூறுகின்றவன் என்கின்ற பெரும்பான்மை இனப்பாத்திரம் அத்திரைப்படத்தில் ஒருவருக்குக் கொடுக்கப்படுகின்றது . அதே நபர் பின்னர் ஒருகட்டத்தில் தமிழ்ப்பெண்ணைத் திருமணஞ்செய்யும்போது எழும் கேள்விகளும், அறச்சிக்கல்களுமே அப்படத்தின் அடிநாதம். ஆனால் இத்தகைய குழப்பமான சூழலுக்குள் With You Without You முடியும்போது கூட, அதற்குள் ஒடுக்கப்பட்டவருக்காய் ஒலிக்கும் ஒரு குரலை ஒருவர் எளிதாக அடையாளங்கண்டு கொள்ளமுடியும்.

ஆனால் தீபன் படம் அகதிகள்/குடிவரவாளர் என்கின்ற விளிம்புநிலை மக்களின் கதையைக் கூறமுயன்றாலும் அதன் genuineவான குரலை விளிம்புநிலை மக்களுக்குச் சார்பாகக் கண்டுகொள்ள என்னால் முடியாதிருந்தது என்பது ஒரு கவலையான விடயமெனத்தான் கூறவேண்டும். இன்று உலகமெங்கும் -முக்கியமாய் ஐரோப்பாவில்- அகதிகள் பிரச்சினை பற்றியெறியும்போது, அகதிகள் சார்பானதும் அக்கறையுமானதுமான ஒரு திரைப்படமாய் அவ்வளவு எளிதாய் தீபனை முன்வைக்கமாட்டேன்.

பருக்கை

வீரபாண்டியன் எழுதிய 'பருக்கை' நாவலை கடந்த சில வாரங்களாக வாசிக்கத் தொடங்கி நேற்றிரவுதான் முடித்திருந்தேன். இவ்வளவு நாட்கள் நீண்டதற்கு இந்நாவலின் பேசுபொருள் முக்கியம் என்பதாலும், அதேசமயம் நாவலாக அது உருப்பெறவில்லை என்பதாலும் இழுபட்டுக்கொண்டிருந்தது. மேலும் 'பருக்கை' சாகித்ய அகடமியின் 'யுவ புரஸ்கர்' விருதையும் பெற்றது என்பதால் - வேறு சில நாவல்களை இடையில் கைவிட்டதுபோல - கைவிடாது தொடர்ந்து ஆறுதலாக வாசித்துக்கொண்டிருந்தேன்.

நாவலின் முக்கியம் என்பது, கிராமங்களிலிருந்து பெருநகரங்களுக்கு படிப்பிற்காய் வரும் மாணவர்களின் தங்குமிட, உணவுப் பிரச்சினைகள் பற்றியது. மேலும் நாவல் தமிழில் முதுகலை படிக்கும் மாணவர்களைச் சுற்றிச் சுழல்வதால் (சென்னைப் பல்கலைக்கழகம்?) தமிழ்ச்சூழல் பற்றிய சூழலை கொஞ்சமேனும் அறிவது சற்றுச் சுவாரசியமாக இருந்தது.

நாவலில் பசி பற்றியே அநேக பக்கங்களில் பேசப்படுகின்றது. ஏழ்மையின் காரணமாக படித்துக்கொண்டே பல மாணவர்கள் திருமண/பிறந்தநாள் விழாக்களில் உணவைப் பரிமாறுபவர்களாக இருக்கின்றார்கள். படிக்கும் செலவிற்கான கொஞ்சப் பணமும், சாப்பிடுவதற்கான உணவும் கிடைக்குமென்றே மாணவர்கள் இந்த வேலைக்குப் போகின்றார்கள். ஆனால் அதிகவேளைகளில் இறுதியில் உணவு முடிந்து சாப்பிடமுடியாது போகின்றது அல்லது உணவிருந்தும் வயிறு விரைவில் நிரம்பி விரும்பியதைச் சாப்பிட முடியாது போய்விடுகின்றது.

பசி என்பது எத்தகைய அவலமானது என்பதை இந்த நாவல் கொண்டு வந்திருந்தாலும், ஒரே மாதிரியான சம்பவங்கள் ஒரே மாதிரியான உரையாடல்கள் வருவதால் மிகுந்த அலுப்பாக இருந்தது. தமிழில் முதுகலை படித்து இப்போது மேற்படிப்பில் ஆய்வாளராக இருக்கும் வீரபாண்டியனுக்கு தமிழில் 'கூறியது மீளக்கூறல் குற்றம்' என்பது தெரியுமெனவே நம்புகின்றேன். திரும்பித் திரும்பி ஒரே சூழலில் ஒரேமாதிரியான விடயங்களை கூறினால் கூட, அதை வேறுவகையான வடிவங்களில் சொல்ல முயற்சிக்காது நாவல் ஒரேமாதிரியே நீண்டு முடியும்போது நாவலில் பாத்திரங்கள் எப்போது பந்தி முடிந்து தாம் பசியாறலாம் என்று காத்திருப்பதுபோல வாசிக்கும் நமக்கும் எப்போது நாவல் முடியும் என்ற அலுப்பே வருகின்றது.

இந்த நாவலை பாண்டிச்சேரி எம்.கண்ணன் திருத்திக் கொடுத்திருந்ததாகவும், பதிப்பாளர் 60-70 பக்கங்கள் எழுதிக்கொண்டிருந்தபோதே பதிப்பாக்கலாம் என உற்சாகம் கொடுத்ததாகவும் வீரபாண்டியனின் நேர்காணல் ஒன்றில் வாசித்தேன். முதன்முதலில் நாவல் எழுதும் எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்காத விடயங்கள் இவை. ஆனால் இதை 250 பக்கங்கள் நீளும் நாவலாக எழுதாது இன்னும் சுருக்கி நூறுபக்கங்களுக்குள் திருத்தமான குறுநாவலாக பிரசுரித்திருக்கலாம் என்ற எண்ணமே வந்திருந்தது.

என்கின்றபோதும் திருவண்ணாமலையில் செங்கம் என்ற ஊரிலிருந்து வறுமையான குடும்பத்திலிருந்து வந்த ஒருவரின் நாவலுக்கு, தமிழ்ச்சூழலில் சிலரால் நிறுவப்பட்ட 'அழகியல்' வடிவங்களை மட்டும் பொருத்திப் பார்ப்பதிலும் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. உரையாடல்களில் தகுந்தமாதிரி பழமொழிகளையும் சொலவடைகளையும் பாவிக்கும் வீரபாண்டியன், இன்று நாவல்கள் மட்டுமில்லை, சிறுகதைகள் கூட உரையாடல்களில் பெரும்பகுதி தங்கியிருப்பதிலிருந்து நகர்ந்துவிட்டதென்று புரிந்துகொள்வாராயின் 'பருக்கை'யை விட இன்னும் செறிவான நாவல்கள் அவரிடமிருந்து முகிழக்கூடும்.

Irrational Man

ம்முறையும் வூடி அலன் ஏமாற்றவில்லை. பின் நவீனத்துவத்தை பயில்வதன் ஆர்வமுள்ள மாணவனாகிய என்னை எப்போதும் இருத்தலியம் அதேயளவிற்கு ஈர்த்துக்கொண்டேயிருக்கின்றது. இருத்தலியத்தை பல பின் அமைப்பியலாளர்/ பின் நவீனத்துவர்கள் நிராகரித்தபோதும் இரண்டுமிடையில் ஏதோ ஒருவகையான ஊடாடல் இருப்பதை அல்லது அவ்வாறு நினைத்துக்கொள்வது எனக்குப் பிடித்தமானது. அதேபோன்று பின் நவீனத்துவம் புத்தரிடமிருந்து நிறைய எடுத்துக்கொண்டிருக்கின்றது என்றே என் வாசிப்புக்களின் அடிப்படையில் நம்புகின்றேன், அவை பற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கின்றதா/ விவாதிக்கப்பட்டிருக்கின்றதா என்பதும் என் இன்றைய தேடலாக இருக்கின்றது.

இப்படத்திலும் காண்ட், ஹெடெக்கர், சார்த்தர், சிமோ தீ பூவாவிலிருந்து தஸ்தயேவ்ஸ்கி(குறிப்பாய் 'குற்றமும் தண்டனையும் ') வரை நிறையப் பேர் சாதாரண உரையாடலில் வந்துகொண்டிருக்கின்றனர். தத்துவம் என்பது பெரும்பாலும் verbal masturbation போன்றது, அதற்கும் யதார்த்தத்திற்கும் ஒருபோதும் தொடர்பில்லையென தத்துவம் கற்பிக்கும் பேராசிரியர் சொல்லிக்கொண்டிருப்பார். நமது இருத்தல் குறித்தும், நமக்கு கற்பிக்கப்பட்ட ஒழுக்கம் குறித்தும், நாம் எதனை அறங்களாகக் கொள்ளமுடியுமென தொடர்ச்சியாக கேள்விகளை எழும்பிக்கொண்டிருக்கும் ஒரு சுவாரசியமான திரைப்படம்.

இமையத்தின் 'எங் கதெ'

Wednesday, September 23, 2015


ம் தமிழ்ச்சூழலில் நல்ல படைப்புக்கள் கவனிக்கப்படாது ஒதுக்கப்படுவதும், 'சுமாரான' எழுத்துக்கள் உயர்வுநவிற்சியாக்கம் செய்யப்படுவதும் காலங்காலமாக நிகழ்ந்து வருகின்றவைதான். அந்தவகையில் இமையத்தின் 'எங் கதெ' யிற்கு வழங்கப்பட்ட/வழங்கப்படுகின்ற மதிப்பீடுகள் சற்று அதிகமோ எனத்தான் இக்(குறு)நாவலை வாசித்து முடித்தபோது தோன்றியது.

'எங் கதெ' அதற்குரிய பலவீனங்களுடன் ஒரு புதிய வகை எழுத்தை முன்வைத்ததா என்றால் அதுகூட நிகழவில்லை. இவ்வாறான தனியன்களின் குரல்களாக அண்மையில் ஒலித்த 'மஞ்சள் வெயில்', 'கானல்வரி', 'மூன்றாம் சிலுவை' போன்றவற்றிற்கு இருந்த கவித்துவமான/தனித்துவமான நடைகூட 'எங் கதெ' யில் சாத்தியப்படவில்லை. இறுதியில் விநாயகம் அடைகின்ற 'தரிசனத்தை'க்' கூட எஸ்.பொ 50களிலேயே 'தீ'யில் தொட்டுவிட்டார். எப்போதும் ஈழத்தமிழரின் படைப்பென்றால் ஒரளவு அலட்சியமாக இருக்கும் தமிழக வாசகர்க்கு வேண்டுமானால், ஜெயமோகன் 'கன்னியாகுமரி'யில் கூட இன்னும் விரிவாகச் சொல்லியிருக்கின்றார் என்று இந்தப்பொழுதில் நினைவுபடுத்திவிடலாம்.

உறவுகளுக்கிடையில் வரும் துயரமாயிருந்தாலென்ன, துரோகமாயிருந்தாலென்ன அது ஆணுக்கும் பெண்ணுக்கும் வலியையும் உளைச்சலையுமே தரக்கூடியவை. அதிலெந்த சந்தேகமும் எழப்போவதில்லை. அதுபோலவே ஒவ்வொருவருக்கும் இந்த உறவுகள் குறித்துச் சொல்ல தனித்துவமான கதைகளும் நிச்சயம் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதை ஒருவரை குற்றவாளியாக்குவதன் மூலந்தான் நம்முடைய நியாயங்களையோ, ஏமாற்றங்களையோ சொல்லவேண்டுமென்ற அவசியமில்லை.

விநாயகத்திற்கு கமலாவுடனான உறவு வரும்போதும் ஊரும் உலகமும் சொல்கின்ற அதே விசமான வார்த்தைகளைத்தான், பின்னர் விநாயகம் கமலா மீது அவநம்பிக்கை உருவாகும்போது, கமலாவின் விம்பம் மீது வீசச் செய்கின்றார். இழந்துபோன உறவுக்காய் காலம் முழுக்க ஏங்கிக்கொண்டிருப்போர் என்று ஒருவகையினர் இருக்கின்றார்கள். அதுபோல உறவொன்றில் இருக்கும்போது வேறு உறவுகளை நாடிப்போகின்ற இன்னொரு வகையினரும் இருக்கின்றார்கள். இதற்கு இடைநடுவில், இருக்கும் உறவொன்றே போதுமென்று நிம்மதியடைபவர்களும் நிறையப்பேர் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் தமக்கான நியாயங்களையும், விருப்பங்களையும் எந்தப் புள்ளியில் நின்றாலும் சொல்லக்கூடியவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் சொல்லும் கதை எதுவாயினும் அதற்கு நியாயமிருப்பினும் அது இன்னொருவரை மிதித்துப்போட்டுத்தான் எழுதவோ/சொல்லப்படுமாயின் அது குறித்து நிறையக் கேள்விகள் எனக்கு வரவே செய்யும். அதுவே எங் கதெ'யை வாசிக்கும்போது தோன்றியது.


உறவுகளில், ஒருவர் எவ்வளவோ நிராகரிப்புக்களையோ, அவமானங்களையோ செய்தால் கூட, திரும்பித் திரும்பி அந்த நபரை நோக்கிச் செல்வதற்கான -வெளியே இருப்பவர்களால் விளங்கிக்கொள்ளமுடியா- காரணங்கள் பலருக்கு இருக்கக்கூடும். ஆனால் அதை விநாயகம் போன்றவர்கள் கமலாவை 'வேசி' என அழைத்துக்கொண்டோ, தன்னை அவர் பாவித்திருக்கின்றார் எனத் திட்டிக்கொண்டோ திரும்பத் திரும்பப் போகின்றபோது வினாயகத்தின் நேசம் எத்தகையதென்ற கேள்விகளே எழும்புகின்றன. அது கமலா எந்தப் பொழுதிலும் விநாயகத்தால் நிராகரிக்கப்படமுடியாதவர் என்பதை விட, சீண்டப்பட்ட ஒரு ஆணின் பழிவாங்கும் உணர்ச்சியே நமக்குத் தெரிகின்றது.

தொடக்கத்திலேயே சமூகத்தால் அவ்வளவு ஏற்றுக்கொள்ளப்படாத ஓர் உறவையே வேண்டி நிற்கும் விநாயகம், பின்னாட்களில் கமலா தனக்கான ஒரு தேர்வைத் தேர்ந்தெடுக்கும்போது, கமலாவை குற்றவாளியாக்கி வாசகர் முன் வைப்பதன் மூலம் அவர் மீண்டும் பொதுச்சமூகம் எப்படி சிந்திக்குமோ அப்படியே சிந்திக்கப்பார்க்கின்றார். எத்தனையோ ஆண்கள் கமலாவை நேசிக்க விரும்பியபோதும் கமலாவின் தேர்வு விநாயகமாய், ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. அப்படியொரு தேர்வின் மூலமே விநாயகத்தால் கமலாவுடன் நெருக்கமாகிப் பழக முடிகின்றதென்றால், அவ்வாறே கமலா இன்னொரு தேர்வை நோக்கி நகரும்போது அது ஏன் அவ்வளவு தவறாகி விடுகிறது.

மலாவிற்கு தேர்வென்பதே ஒருபோதும் இருக்கவில்லையென்றால், விநாயகம் ஒருபோதுமே கமலாவின் வாழ்விற்குள் நுழைந்தே இருக்கமாட்டார். இந்த முக்கிய புள்ளியை விநாயகம் கண்டடைவதாய் நாவலின் இறுதிப் பகுதி அமைந்திருக்குமானால் நாவல் இன்னும் எனக்கு நெருக்கமாகிவிட்டிருக்கும். எஸ்.பொ 50களில் வைத்த முடிவையே இங்கே முடியும்போது விநாயகம் எடுக்கும்போது இவ்வளவு நேரமும் கமலாவை இந்தளவிற்கு வெறுத்திருக்கவே தேவையில்லை எனவே தோன்றுகின்றது.

ஆண்களாகிய எமக்கு விநாயகத்தின் வாழ்வோடு ஒத்திசைந்துபோகக்கூடிய நிகழ்வுகள் எங்கேயாவது ஒரு காலப்பகுதியில் நடந்திருக்க முடியும். நமக்கு வழங்கப்பட்ட புறக்கணிப்புக்களையும், மெளங்களையும் கண்டு மிகுந்த உத்தரிப்பை நாம் அடைந்திருக்கவும் கூடும். காலம் என்கின்ற அருமருந்தன்ன விடயம் ஆற்றுவதற்கு கைவசம் இருப்பது ஒருபுறம் இருந்தாலும், நாம் அவர்கள் மீதான நேசத்தையும் வெறுப்பின் மூலமோ/விஷவார்த்தைகளாலோ அன்றி, நமக்கு அவர்கள் தந்துவிட்ட அருமையான பொழுதுகளின் மூலமே அவர்களை நினைவுகொள்ளல் சாலவும் சிறந்தது.

'நீ யார்கூட வேணுமின்னாலும் இரு. எப்படின்னாலும் இரு. ஆனா உசுரோடு இரு. இதுதான் என் ஆச' என விநாயகம் இறுதியில் வந்தடையும் புரிதலுக்கு அவர் எடுத்துக்கொண்ட பாதைதான் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.

நீ தேர்ந்தெடுத்துக்கொண்ட பாதைகள் எனக்கு உவப்பானவை இல்லை. ஆனால் எனது நேசத்தின் திசைகள் எப்போதும் உன்னை நோக்கி விரிந்தபடியே இருக்கும். உன்னை நினைவுகொள்வது கூட உன்னை வெறுப்பதாலோ, உன்மீது மூர்க்கம் கொள்வதாலோ அல்ல; உன்னோடு இருந்த இனிமையான காலங்களால் அவற்றை நினைவுகூர்வேன் என விநாயகம் இடைநடுவிலேயே முடிவுசெய்து இறுதியில் இந்த மேற்கூறிய முடிவுக்கு வந்தடைந்திருந்தால் இன்னும் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?


( நன்றி: கூகுள் தேடல், இமையத்தின் புகைப்படம்)

புதிய அனுபவங்களுக்கான சில வரைபடங்கள்

Monday, September 21, 2015

(ஊர்வசியின் 'இன்னும் வராத சேதி', ஒளவையின் 'எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை', கீதா சுகுமாரனின் 'ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை'  ஆகிய தொகுப்புக்களை முன்வைத்து...)


ன்றைய காலத்தில் கவிதைகளின் வகிபாகம் என்னவாக இருக்கின்றது? கவிதைகளை யார் வாசிக்கின்றார்கள் அல்லது யாருக்காக எழுதப்படுகின்றன. கவிதைகள் என்றில்லாது ஏனைய எல்லாக் கலைப்படைப்புக்களுக்குமாய் இந்தக் கேள்விகளை நாம் எழுப்பிப் பார்க்கலாம்.  எண்ணற்ற இலத்திரனியல் உபகரணங்கள் சூழ்ந்திருக்க, இன்னொரு பக்கத்தில் நமது ஆசைகள் தினமும் பெருக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், கலைக்கான இடம் என்னவென்று யோசிக்க வேண்டியிருக்கின்றது. இந்த இயற்கையைப் போல கலைப்படைப்புக்களுக்கும் நமதான வாழ்க்கைவெளியில் மிதந்தபடியிருக்கின்றன. எந்த ஒருவரால் நின்று நிதானித்து இயற்கையை இரசிக்கமுடிகிறதோ, அவர்களால் கலைகளை உள்வாங்குவதும் எளிதாக அமைந்துவிடுகிறது.

கவிதைகளை வாசிக்க பொறுமையான  ஒரு சூழலே வேண்டியிருக்கின்றது. நல்லதொரு கவிதையை பறந்துகொண்டிருக்கும் ஒரு பறவைக்கு உவமித்துப் பார்க்கின்றேன். அதன் பறத்தல் என்பது கணந்தோறும் வெவ்வேறு நிலைகளில் இருப்பதைப் போல, சிறப்பான ஒரு கவிதை வாசிக்கும் ஒவ்வொருபொழுதும் புதுப்புது வாசிப்புக்களை நமக்குத் தரக்கூடும். நீங்கள் சரியான கணத்தில் ஒரு கவிதையின் ஆன்மாவை பிடித்துவிட்டீர்களென்றால், கவிதையென்று பறக்கும் பறவை, உங்களுக்கு தன் ஞாபகமாய் ஒரு சிறகைக் கூட தந்துவிடக்கூடும்.

ஒரு கவிதை, வாசிக்கும் எல்லோருக்கும் ஒரேவிதமான வாசிப்பைத் தரவேண்டும் என்று எதிர்ப்பார்க்க முடியாது. பறவையின் பறத்தலுக்கு அதன் இறக்கைகள் மட்டும் காரணமாய் அமைவதில்லை.  அது பறந்துகொண்டிருக்கும் வெளியில் வீசும் காற்றோ, பொழியோ மழையோ கூட பறத்தலைத் தீர்மானிக்கக் கூடும். அதுபோலவே, ஒரு கவிதையை வாசிக்கும்போது நாம் இருக்கும் சூழல்,  நமக்கு அந்தப்பொழுதில் வாய்க்கின்ற மனோநிலை என்பவை நம் வாசிப்பைப் பாதிக்கக்கூடும். எனவேதான் ஒரு சமயம் எமக்குப் பிடிக்காத அல்லது தவறவிட்ட கவிதை பின்னொருமுறை வாசிக்கும்போது மிகப்பிடித்தமாகிப் போய்விடுகின்றது. இதை எப்படி இவ்வளவு காலமும் தவறவிட்டிருந்தோம் என மனது வியந்து பார்க்கிறது.

இங்கே ஊர்வசியின் 'இன்னும் வராத சேதி', ஒளவையின் 'எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை', கீதா சுகுமாரனின் 'ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை' ஆகிய தொகுப்புக்களை எடுத்துக்கொள்கின்றேன்.  அவை குறித்து தொகுத்து சில கருத்துக்களைச் சொல்லவேண்டியிருப்பதால் அவற்றுக்கிடையிலான பொதுவான தன்மைகளைப் பேசுவதாக இது அமையக்கூடும்.  என்றாலும், ஒவ்வொரு தொகுப்பும் அதன் அதனளவில் தனித்துவமானவையே என்பதை முதலிலேயே குறிப்பிட விரும்புகின்றேன்.


ர்வசி 35 வருடங்களுக்கு மேலான காலத்தில் 25ற்கும் குறைவான கவிதைகளே எழுதியிருக்கின்றார் .  குறைவாக எழுதுதலில் நிறைவைக் காண்பவராகவோ அல்லது எழுதும் மனோநிலை வாய்க்கும்போது மட்டும் எழுதுகின்ற ஒருவராகவோ ஊர்வசி இருக்கக்கூடும்.

ஊர்வசியின் கவிதைகளில் அநேகமானவை பிரிவையும், காத்திருப்பையும், தனிமையையும் முன்னிறுத்துகின்றன. காத்திருப்பு என்பது வருடங்களில் மட்டுமில்லை தசாப்தங்கள் தாண்டியும் நீள்வதை அவரின் கவிதைகளில் நாம் காணலாம். 80களில் ஈழப்போராட்டம் பல்வேறுதிசைகளில் முளைவிட்டெழும்ப காதலனிற்காய் காத்திருப்பதிலிருந்து அவரது தனிமை தொடங்குகின்றது.  காதலன் அல்லது நண்பன் தன் தலைமறைவு வாழ்க்கையில் அவ்வப்போது வந்து சேருவதற்காய் தன் வீட்டில் தனித்திருப்பதிலிருந்து தொடங்கி, 2000ம் ஆண்டளவில் வேறொருவனுடன் நடந்து திரிகையிலும்  பழைய காதலனை இன்னும் நினைப்பதாய்க் கூறுகையில், முடிவுறாத காத்திருப்புக்களின் துயரமும், வெறுமையும் நமக்குள்ளும் படிகின்றன.

ஊர்வசியில் தொடக்க காலக்கவிதைகளில் உள்ள இந்தப் பிரிவும் காத்திருப்பும் நமக்கு சங்ககாலக் கவிதைகளை நினைவுபடுத்துகின்றன. போருக்காகவோ பொருள் ஈட்டுவதற்காகவோ தூரதேசம் போகும் துணைகளின் வருகையிற்காய் காத்திருக்கும் சங்ககாலப் பெண்களின் சாயல்கள் ஊர்வசியின் கவிதைகளில் தெரிகின்றனர். ஆனால் அதேபெண்கள் இங்கே போராட்டப் போகின்ற ஆண்களுக்குக் காத்திருந்த நிலையிலிருந்து மாறி,  பின்னர் போராட்ட இயக்கங்களில் இணைய விரும்பும் மனக்கிடக்கைகளையும் வெளிப்படுத்துகின்றனர்.  'ஏன் இன்னமும் நான் வீட்டுக்குள்/ இருக்க வேண்டும்? / என்ன/ நான் எழுதுவது புரிகிறதா உங்களுக்கு?' என ஊர்வசி ஒரு கவிதையில் முன்வைப்பது வீடுகளிலிருந்து வெளியேறி போராட்டக்களங்களங்களுக்கு  வந்துவிட்ட, இன்றைய பெண்களின் முதல் பறத்தலை.

காத்திருப்புக்களே ஊர்வசியின் முக்கிய பேசுபொருளாக கவிதைகளில் இருப்பினும் அதனூடு அன்றைய அரசியல் நிலவரங்களையும் அவர் சொல்லிப் போகின்றார். நமது இயல்பான வாழ்வு முறை மெல்ல மெல்ல ஒடுக்குமுறையும் கண்காணிப்பும்  சேர்ந்து பதற்றமாகிக் கொண்டுபோவதைப் பதிவுசெய்கின்றார்.

நேரடியாகவே அரசியலைப் பேசும் கவிதையான 'சிறையதிகாரிக்கு ஒரு விண்ணப்பம்' கவிதை:
'ஐயா, என்னை அடைத்து வைத்திருக்கின்றீர்கள் /நான் ஆட்சேபிக்கவும் முடியாது/ சித்திரவதைகளையும்/ என்னால தடுக்க முடியாது/ எனெனில்/நான் கைதி / நான் கோருவது விடுதலை எனினும் /உங்கள் வார்த்தைகளில் /'பயங்கரவாதி'
எனத் தொடங்குகின்ற கவிதையை 84ல் எழுதினாலும் இன்றும் பொருந்தக்கூடிய ஒன்று. பல்லாண்டுகளாய் பல்வேறு காரணங்களுக்காய் சிறைகளுக்குள் அடைபட்டிருக்கும் பலருடைய குரல் இதுவாகும். அதேபோல் 'இடையில் ஒருநாள்'  ஒரு தலைமறைவுப் போராளி வீடு வந்துசென்றபின், இராணுவம் வந்துசெய்கின்ற சித்திரவதைகளை சித்தரிக்கின்றது. 'நீ போய்விட்டாய் நாள் தொடர்கிறது' எனக் கவிதை முடியும்போது அந்த தலைமறைவுப் போராளிக்குத் தெரியாத, தாங்கள் படும் கஷ்டங்களைச்  சொல்ல விழைகிறது.  ஆயுதமேந்திப் போராடப் போனவர்கள் மட்டுமில்லை, பொதுசனங்களாய் இருந்தவர்களும் கண்காணிப்புக்களையும், விசாரணைகளையும் எதிர்கொள்ளவேண்டிய அவலச்சூழலின் ஒரு தெறிப்பாக இக்கவிதை இருக்கிறது.

இன்னொரு நேரடி அரசியல் கவிதை, 2014ல் எழுதப்பட்ட 'நேற்று நடந்தது' என்கிற கவிதை. இது ஈழத்தில் ஆயுதப்போராட்டம் முடிவுற்ற பின்னர் வந்த பெரும் வெற்றிடம் குறித்துப் பேச விழைகிறது. போராட்டப்போன தம்பி இறந்துவிட்டானா இல்லை காணாமற்போய்விட்டானா அல்லது சிறையில் இருக்கின்றானா என்ற பல்வேறு வினாக்கள் தொக்கு நிற்க இக்கவிதை எழுதப்பட்டிருக்கின்றது. பல்லாயிரக்கணக்கான மக்களும் போராளிகளும் வரலாற்றில் எந்த சுவடுகளுமின்றி அழிக்கப்பட்ட காலத்தில் ஒரு  சிறு சாட்சியம் இது.

ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, ஊர்வசியின் கவிதைகளில் அநேகம் ஏதோ ஒன்றிற்கான காத்திருப்பாகவோ அல்லது எவருடைய வருகையிற்கான எதிர்பார்ப்பாகவோ இருக்கின்றன. அதுவே இன்னொருவகையில் 'இன்னும் வராத சேதி' என இத்தொகுப்பிற்கான தலைப்பாகவும் ஆகியிருக்கின்றது. 80களில் யன்னல் ஓரங்களில் எவரினதோ வருகையிற்காய் அமைதியில் உறைந்து காத்திருப்பதாய்க் கவிதைகளில் சித்தரிக்கப்பட்டாலும் இரண்டாயிரத்திற்குப் பின்பான கவிதைகளில், இனி நிகழவே முடியாத சந்திப்புக்களின் சலிப்பை மீறி, உயரப் பறப்பதற்கான அவாவே ஊர்வசியில் மேவி நிற்கின்றன. ஆகவேதான், காத்திருப்பை விலத்தி "இனி நான் பறப்பேன்/  ஒரு மரக்கிளை போதும்/இடையிடையே ஓய்வெடுக்க" என ஒரு சுய பிரகடனத்தைச் செய்கின்றார்.


கீதா சுகுமாரனின் 'ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை'  தொகுப்பு  அகவெளிகள், மூத்தோள், கடத்தல் என மூன்று பகுதிகளாய் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

அகவெளியிலுள்ள கவிதைகள் சிலதில் ஏதோ ஒன்றிற்காய் அச்சப்படுகின்ற மனதாய் 'அங்குமிங்கும்', 'குற்றவுணர்வு' மற்றும் 'சுமை' போன்ற கவிதைகள் இருக்கின்றன. கீதாவின் கவிதையில் நிறையப் பாம்புகள் வருகின்றன. ஆனால் அது ஆண்களின் கவிதைகளில் சித்தரிக்கப்படுகின்ற காமத்திற்கு நிகர்த்த ஒன்றாக இல்லை.  அச்சத்தையும் குற்றவுணர்வையும் பெருக்கியபடி கீதாவின் கவிதைகளில் அரவங்கள் நெளிந்தபடியிருக்கின்றன.

அதேபோன்று அகவெளிகளிலுள்ள கவிதைகள் பல, இயல்பான நேசத்தை வேண்டி நிற்பதோடு  அல்லாது அது கிடைக்காத தருணங்களில் எழும் வெப்பியாரங்களையும் சித்தரிக்கின்றது. ஊர்வசியின் கவிதையான 'பேசப்படாத மெளனங்களில்'தன் துணையை கிணற்றடிக்கு அழைத்துச் சென்று, நிலவு மறையும்வரை நள்ளிரவுக்கப்பாலும் பேசிக்களிக்கும் தருணம் அமையாது, வீட்டுக்கதவு இறுக்கி அறைந்து மூடப்படுவதைப்போல், கீதாவின் 'உறவு' கவிதை... 'அவனுக்கு/ எரியும் அடுப்பும் நீல விளக்கும் சூழும்/ நான்கு சுவர்கள் மட்டுமே விருப்பு' என வீட்டுக்கு வெளியே உலாத்த விரும்பும் ஒரு பெண்ணின் மனது காட்டப்படுகின்றது.

தொழில்நுட்பம் மிக உச்சத்திலிருக்கும் இந்தக்காலம் மனிதர்களுக்கு எல்லாவற்றையும் வீட்டுக்குள் கொண்டுவந்துவிடுகின்றது. ஆனால் அதுவே  மனிதர்களை இன்னும் தனிமைப்படுத்தவும் செய்கின்றது.  அநேக பெண்களுக்கு வீடு ஒரு சிறையாக இருக்கின்றது அல்லது அங்கே தாம் இயல்பின்றி இருப்பதாய் எண்ணச் செய்கின்றார்கள். வெளியே விரிந்துகிடக்கும் உலகில் தமது காலடிகளைப் பதிக்க விரும்புகின்றனர். அது நிகழாத சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்களுக்குள்  மருகவும் குறுகவும் செய்கின்றனர் என்பதேயே  கீதாவினதும் ஊர்வசியினதும் கவிதைகள் ஏதோ ஒருவகையில் சொல்ல முயல்கின்றன.

கீதாவினது கவிதைப்பிரிப்புக்களில் என்னை அதிகம் வசீகரித்தது, மூத்தோள் பகுதியிற்குள் இருக்கும் கவிதைகள். இதில் புராண/இதிகாசங்களில் வருகின்ற பெண் பாத்திரங்கள் மீள்வாசிக்கப்படுகின்றார்கள்.  இதுவரை காலமும்  முக்கிய மையங்களாய் இருந்த ஆண் பாத்திரங்களைத் தவிர்த்து,  விளிம்புநிலையிலிருந்த பெண் பாத்திரங்கள் இதில் முன்னிநிலைப்படுத்தப்படுகின்றனர். இது ஒருவகையான பின்நவீனத்துவ சிறுகதையாடல்களின் வாசிப்பெனவும் எடுத்துக்கொள்ளலாம். சீதையும் நல்லதங்காளும் 'இருவர்' கவிதையில் அவர்களுக்கு நிகழ்ந்த வாழ்க்கைச் சம்பவங்களினால் தொடர்படுத்தப்படுகின்றனர். இன்னொரு கவிதையான 'தரமதி அரிச்சந்திரனில்' சந்திரமதி எனப்படுகின்ற தரமதியும் கஸ்தூரிபாயும் ஒப்பிடப்படுகின்றனர். அதிலும் 'ஒரேயொரு பொய்யாவது சொல்லியிருக்கலாம்/ ஒரேயொருமுறை வாக்கு தவறியிருக்கலாம்/ குடிதான் மூழ்கிவிட்டதே/........ கஸ்தூரிபாயாவது தப்பியிருப்பாள்' என்று முடிகின்ற இடம் வலிமையானது.  ஆண்களின் கெளரவங்களுக்காய் அவர்களின் கொள்கை வீம்புகளுக்காய்  சிலவேளை  இறுதியில் பலியாக்கப்படுவதும் பெண்களே என்பதையும் இந்தக் கவிதை சுட்டிநிற்கின்றது.

இந்தச் சிறுகதையாடல் இன்னும் உச்சம் பெறுவது  'நீதியின் மனைவி' கவிதையில்,
'என் அனுமதியின்றி /புத்தனைத் தேர்க்காலிட்டவனே /ஈடுசெய்ய /தேர்களுமில்லை /புதல்வர்களுமில்லை/கொலையென்றானபின் /மகனும் /கன்றும் ஒன்றுதான்
தாயென்றானபின்/நானும் பசுவும் ஒரே நிறம்/எனது மணிதான் எங்கே?'
என்கின்ற கவிதையில் ஒலிக்கின்ற நியாயத்திற்கு யாரால் பதில் சொல்லமுடியும்? கன்றின் கொலைக்கு தன் மகனைப் பலிகொடுக்கின்ற மன்னன், தன் மகனை இழந்து தவிக்கின்ற அன்னைக்கு எந்த நீதியைக் கொடுப்பான்? ஆக நாம் அறம், நீதி என்று நினைத்த அல்லது கற்பிக்கப்பட்ட விடயங்களில் கூட இன்னமும் கேட்கப்படாத கேள்விகள் இருக்கின்றன அல்லவா?

தலைவிகள் மற்றும் தலைவிகள் -02 கவிதைகளில், ஆண்களின் உலகில் பெண்களுக்கான இடம் எதுவெனக் கேட்கின்றன. தலைவிகள் கவிதையில் மன்னர்கள் வெல்லும்போது, பொருள் கொடுக்கும்போது அவர்களை மறந்துவிடாது விதந்து  பாடப்பட்ட பாடல்கள் இன்றும் இருக்கும்போது, அம்மன்னர்களின் மனைவிகளுக்கு பெயரற்ற முகங்கள் மட்டுந்தானே  எஞ்சி இருக்கின்றன எனக் கேட்கப்படுகின்றது.

அதுபோலவே 'ஆதிமந்தி', 'ஆட்டனத்தி', 'மருதி' எனப் பெயரிடப்பட்ட இம்மூன்று கவிதைகளில் ஒரு முக்கோணக்காதல் கூறப்பட்டு, மருதி என்னும் பெண் தற்கொலை செய்வது குறித்துப் பேசப்படுகின்றது.
இவ்வாறு மூத்தோள் என்ற பகுப்பில் நிறையப் பெண்கள் வருகின்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே அவர்களுக்கென சொல்லப்பட்டிருக்கும் கதைகளிலிருந்து விலத்தி,  வேறு கதைகளைக் சொல்பவர்களாய், நம் மனச்சாட்சியை அசைக்கும் கேள்விகளை எழுப்புவர்களாய் கீதாவின் கவிதைகளில் புதிதாய் முளைத்து வருகின்றனர்.


ஒளவையின் கவிதை என்றவுடன் எனக்கு உடனே எப்போதும் நினைவுக்கு வருவது
'எனது இருப்பை/ உறுதிப் படுத்த/ பிறந்த மண்ணின் எல்லையைக் கடந்தேன்/இறுதியாக/ பாதங்களில் ஒட்டியிருந்த செம்மண்ணையும்/தட்டியாயிற்று/
செம்மண்ணும் போயிற்று/ எம் மண்ணும் போயிற்று/ போ' என்கின்ற எல்லை கடத்தல் கவிதை.

தமது வீடுகளை, பூர்வீகக் கிராமங்களை, ஏன் நாடுகளின் எல்லைக் கோடுகளைத் தாண்டிய துயரில் இருக்கும் எவருக்கும் எளிதில் நெருக்கமாகிவிடக்கூடிய ஒரு கவிதை இது.

எந்த வயதென்று இல்லாது எல்லாப்பெண்கள் மீதும் பாலியல் வன்முறைகள் நடக்கும் நமது காலத்தில், ஓளவை  'என்னுடைய சிறிய மலர்' கவிதையில் பெண் குழந்தைகளை வெளியாட்களிடம் மட்டுமல்ல, அவரவர் தந்தைகளிடமும் மாமாக்களிடமும் கூட கவனமாயிருக்கும்படி எச்சரிக்கை செய்கின்றார்.


ஈழத்தில் இறுதி ஆயுத போராட்டத்தில் நிகழ்ந்த பேரழிவுகளை 'மீதமாக உள்ள வாழ்வு' மற்றும் 'அஞ்சலி' கவிதைகள் பாடுகின்றன. இதே ஒளவைதான் ராஜினி திரணகமவினதும், விஜிதரனினதும் படுகொலைகள் பற்றித் துயரத்துடனும் எழுதியிருக்கின்றனர். இழப்பென்பது, உயிரிழத்தல் என்பது அது யாரென்றாலும் எந்த அரசியல் நம்பிக்கையுடன் இருக்கின்றார்களோ அதைத்தாண்டி நம் மனங்களை வேதனைப்படுத்துபவை. மரணங்களை எந்தக் கவிஞராலும் கொண்டாட முடியாது. ஆகவேதான் ராஜினி திரணமகா, விஜிதரன் போன்ற பொதுமக்களில் ஒருவராக பொதுமக்களளோடு நின்றவர்களின்  மரணங்களை நினைவுகூர்ந்து ஓளவையால் எழுதமுடிகிறது. இறுதிப்போர்க்காலங்களில் போராளியாக நின்ற இசைப்பிரியா போன்ற பல நூற்றுக்கணக்கான பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரமான மரணங்களைப் பற்றியும் அதே துயரத்துடனும், வலியுடனும் பதிவு செய்யமுடிகின்றது. அறம் பிறழாத படைப்பாளி என்பவர்கள், இப்படித்தான் எல்லா அரசியல் நம்பிக்கைகளையும் தாண்டி ஒடுக்கப்படுபவர்களின் பக்கம் நின்று பேசமுடியும். குரலற்றவர்களுக்கான குரல்களாய் இருக்க முடியும்.

ஓளைவையின் கவிதைகள் முக்கிய கவிதைகளாக 'சொல்லாமல் போகும் புதல்வர்கள்' மற்றும் 'வீடு திரும்பிய என் மகன்' என்பவற்றைப் பார்க்கின்றேன். போராடப் போவதற்காய் சொல்லாமல் போகும் புதல்வர்கள், இயக்கங்களில் இணைந்துவிட்டு திரும்பும்போது எப்படி எல்லா மென் உணர்வுகளையும் தொலைத்த மகன்களாய் மாறுகின்றார்கள் என்பதை மிக அற்புதமாய்க் காட்டுகின்றார். இரண்டு வெவ்வேறு கவிதைகளுக்கு இடையில் எப்படி காலமும் மனிதர்களும் முகங்களைத் தொலைத்துவிட்டன/ர் என்பதை நாம் கண்டுணரமுடியும்.

சொல்லாமல் போகும் புதல்வர்களைப் பற்றி தாயிற்கு சோகம் நெஞ்சை அரித்தாலும் ' மகனே/சிட்டுக்குருவியைப் போலத்தான் பறந்தாய்!/ ஆயினும் காலம் உன்னை வளர்த்திருக்கும்/ மனிதநேயத்தை இழந்துவிடாதே/ மக்களை இன்னும் நேசிக்கப் பழகு' எனத்தான் சொல்கின்றார்.

பின்னர் 'வீடு திரும்பிய மகனில்'  எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துப்போவதைத் தாய் பார்க்கின்றார்
'நண்பனைச் சுட்டுவிட்டு வந்து/ வீரம் பேசினான்/ விடுதலை பற்றி/ ஆயுதம் பற்றி/ எல்லைப் புற மக்களைக் கொல்வதைப் பற்றி/ நிறையவே பேசினான்' எனச் சொல்லிவிட்டு 'இப்போது நான்/ தாயாக இருத்தல் முடியாது/ என்று தோன்றுகின்றது/ ...துரோகி என்று/என்னையும் புதைப்பானோ/ஒரு நாள்?' எனத் தாயே தன் மகனைப் பார்த்து அஞ்சுமளவிற்கு சூழல் கொடூரமாய் மாறுகிறது.

எங்கள் எல்லோரினதும் விடுதலைக்காய்த்தான் பிள்ளைகள் துப்பாக்கி தூக்கினார்கள் என்று போராளிகளை அரவணைத்த தாய்களை, தலைமேல் தூக்கிக் கொண்டாடிய மக்களை பிறகொருகாலத்தில் எதற்காகத்தான் இவர்கள் துப்பாக்கி தூக்கினார்கள் என்று வருத்தபடவைக்கும் அளவிற்கு அல்லவா, நமது இயக்கங்கள்  அனைத்தும் பிற்காலத்தில் மாறியிருந்தன.

ஊர்வசியும், ஒளவையும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் எழுத வந்தவர்கள் என்பதற்கப்பால்,இவர்கள் இருவரினதும் தொடக்க கால அநேக கவிதைகளில் ஊடுபாவுகின்ற 'காத்திருப்பு' என்ற புள்ளி கவனிக்கத்தக்கது. ஒளவையும் அரசியல் நிமித்தம் தலைமறைவுக்குப் போகின்ற நண்பனுக்காய்/காதலுக்காய் காத்திருப்பதையும், தான் நினைத்த காதல் சிலவேளைகளில் தடம்மாறிப்போவதையும் பதிவு செய்கின்றார். ஆயுதப்போராட்டமும், தீவிர கண்காணிப்பும் தொடங்குகின்ற 80களில் பெண்களின் இருப்பு அல்லது வகிபாகம் குறித்த சில முக்கிய புள்ளிகளையாவது ஒளவையினதும் ஊர்வசியினதும் கவிதைகளில் நாம் கண்டுகொள்ளலாம். அதேவேளை போராட்டப்போகின்ற ஆண்களுக்கு துணைநிற்கின்ற இவர்களின் கவிதைகள், அதே ஆண்களுடனான நேசத்தில் அசமத்துவம் வருகின்றபோதும், அவற்றையும் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. முக்கியமாய் ஒளவை தன் கவிதைகளில் போராட்டத்திற்கான ஆதரவு நிலையை மட்டுமில்லாது அது திசைமாறிப் போய்க்கொண்டிருந்தபோதும் நேர்மையாகப் பதிவு செய்திருக்கின்றார். அதேபோன்று போராட்டங்களைத் திசை திருப்பியவர்கள் மீது விமர்சனம் வைத்தபோதும், போராட்டத்திற்கான காரணங்கள் இன்னமும் இருப்பதை மறைக்கவோ அல்லது போராட அர்ப்பணிப்புடன் போய் மரணித்தவர்களையோ நினைவுகூரவோ அவர் தயங்கவில்லை என்பதையும் அண்மையில் எழுதப்பட்ட  கவிதைகள் சொல்கின்றன.

'சரணடைந்த உங்களிடம்/ஆயுதம் இல்லை/விழிகள் ஒளி இழந்திருந்தன/இதழ்கள் உலர்ந்து காய்ந்திருந்தன./ எல்லாவற்றையும் இழந்தபின்/ சிறு வெள்ளைத் துகில்/உடல் மறைக்க/கொலைக்களத்தில்/யுத்த வெ(ற்)றிக்குப் பலியிடப்பட்டீர்கள்
பாழும் வெளி அது/பசித்திருந்ததோ உடல் புசிக்க'
என்றேதான் ஒளவை எழுதுகின்றார்.


ர்வசியினதும் ஓளவையினதும் கீதாவினதும் கவிதைகளை வாசிக்கும்போது உறவுகள் என்பது ஒருபோதுமே மகிழ்ச்சியையோ இதத்தையோ தரமாட்டாதோ என யோசிக்க வைத்தது. இது அவர்களின் கவிதைகள் என்றில்லாது பொதுவான ஆண்/பெண் கவிஞர்கள் எழுதும் அநேக கவிதைகளை முன்வைத்தும் இதைக் கேட்கலாம். மிகுந்த உற்சாகந்தரும் நேசம் பிறகேன் சலித்துப் போகின்றது?அல்லது நாங்கள் நிறையக் கனவுகளை யதார்த்ததிற்கு பொருந்தாது கண்டுகொண்டிருகின்றோமா? அல்லது பிரிவையும் துயரத்தையும் எழுதினால்தான் அவை கவிதைகளாகும் என்று ஒருவகையான கற்பிதங்களுக்குள் சிக்கியிருக்கின்றோமா? என எல்லோரும் சேர்ந்து யோசித்துப் பார்த்தால் நல்லது.

காதலை எழுதுவதென்றால் கூட நம்மோடு இருந்து பிரிந்துவிட்டுப் போன காதலையோ அல்லது நமக்கு நிகழச் சாத்தியமற்ற  நேசத்தைத்தானே ஏதோ ஒரு துயர் தொக்குநிற்க எழுத விழைகிறோம். நம்மை சிலிர்க்க வைக்கும் அல்லது நமக்கான பொழுதுகளுக்கு வர்ணங்களை வாரியிறைத்துக்கொண்டிருக்கும் இதமான காதலை ஏன் நாம் அவ்வளவு எழுதுவதில்லை அல்லது ஏன் எழுதத் தயங்குகின்றோம் என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பிப் பார்க்கலாம்.

படைப்புக்களைத் தொகுப்பாக்கும்போது அவற்றில் எல்லாமே சிறந்த படைப்புக்களாய் இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கமுடியாது. நாம் எளிதாய்க் கடந்துவிடமுடியாத சில படைப்புக்கள் இருந்தாலே அது ஒரு கவனிக்கத்தொரு தொகுப்பாக என்பதாகவே என் வாசிப்பை வைத்திருக்கின்றேன். இந்தத் தொகுப்புக்களில் சில கவிதைகளாக முழுமைபெறாத மற்றும் வடிவங்களில் சட்டென்று முறிந்துபோகின்ற கவிதைகளும் இருக்கின்றன. ஆனால் இவற்றை மீறி எனக்கு இந்தத் தொகுப்புக்கள் அனைத்தும் பிடித்திருக்கின்றன. ஒவ்வொன்றயும் பலதடவைகளுக்கு மேலாய் வாசித்தபோதும் அலுத்துப்போகாத  வாசிப்பு அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.

ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கையில் வாழ்வதற்கான உயிர்ப்பை உலர விடாதிருக்கின்றனர். இன்னமும் சேதி வராவிட்டால் பரவாயில்லை இனி பறக்கப்போகின்றேன் -அவ்வப்போது ஓய்வெடுக்க ஒரு கிளை மட்டும் போதும்- என்கின்றனர். எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை என்றாலும் எல்லா வலிகளையும் தமது துயரங்களாகப் பார்க்கும்  கனிந்த மனதுடையவர்களாகவும் இருக்கின்றனர்.

பெண்களுக்கான சுதந்திரமே ஆண்களாகிய நம்மையும் பலவற்றில் இருந்து விடுதலை செய்யக்கூடும் என்ற திசையில் நின்று யோசித்துப் பார்க்கின்றேன். அந்தவகையில் இந்தத் தொகுப்புக்களில் பெண்கள் தமது விருப்புக்களின் பறத்தல்களை நிகழ்த்திக்காட்டுகின்றனர். நாமும் அவர்களின் கவிதைகளினூடு சிறகை விரிக்கும்போது புதிய அனுபவங்களுக்கான சில வரைபடங்களை கண்டடையவும் கூடும்.


(நன்றி: 'அம்ருதா' - ஐப்பசி, 2015 இதழ்)

ஒரு கவிதை: பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழியாக்கம்

Monday, September 14, 2015


ஒரு குளிர்கால இரவில்
காதல் கணகணப்படுப்பாய் நுழைகையில்
தழுவிக்கொள்ளும் ஆன்மாவில்
உதிர்கின்றன நினைவின் வர்ணங்கள்;
கடந்தமுறை புதர்படர்ந்த ஒற்றையடிப் பாதையில்
வந்துபோன நேசமும்
சாம்பல்நிற முயலின் வடிவில் இருந்ததும் தற்செயலானதல்ல


ஒவ்வொரு முறையும் அறைகளை இறுகப் பூட்டி
சாவிகளை தோட்டதிற்குள் எறிந்தாலும்
வருகின்றவர்களிடம் நுட்பமான சாவிகள் இருக்கின்றன
மறுக்கவும் மறுகவும் செய்கின்ற கடுங்குரல் மீறி
கதவுகளைத் திறந்து இசையை மீட்கையில்
நேசத்தின் அலைவரிசையிற்குள் போவதைத் தவிர
வேறு வழிகளிருப்பதுமில்லை

தேநீர்க் கடையில் மென் சிவப்பு கேசத்தை விசுக்கியபடி
எழுதுபவரைச் சந்திப்பது இதுவே முதன்முறையென்றபோது
வாதைகளைச் சந்திப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கையில்
இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லையெனும் முணுமுணுப்பை
சுண்டி விசிறியது மூக்குத்தியின் வெளிச்சம்

விருந்தொன்றின் பின்னான மென்னிரவில்
இழுத்தணைத்து முத்தமிட்டபோது
இந்தவழியும் 'ரோமிற்கா' என அச்சமுறும்;
'நீண்டநாட்களின் பின் ஸ்பர்சித்த உதடுகள் உனது'
கேட்டகணத்தில் கடந்தகாலத்தில் விடாதுபறந்த துயரப்பறவை மறைய
பனியைத் தெளிக்கிறது புதியதோர் வானம்

மைக்கல் ஆஞ்சலோவின்
'டேவிட்டின்' வலதுகை தொடுமிடும் நின்று
'முன்னே இன்னொருபடி நகருவோமா'வென மலர்கையில்
இருண்ட மனதின் இன்னொர் கரை அறியாது
வளர்க்காதே நம்பிக்கையையென வெட்டிப் புதைக்கையில்
துடிதுடித்த விழிகளில் சாய்ந்து போனது
எழுத்தின் பசிய கிளைகள்.

காலத்தின் அந்திவரை 'கோடேயிற்காய்க் காத்திருப்பவர்க்கு'
இறுதியில் மிஞ்சுவது எதுவுமே இல்லையென்றாலும்
கடந்துபோக முடியாக் கணகணப்பு அடுப்பாய்
பற்றியெரிகிறது மீண்டும்
இந்தப் பாழாய்ப்போன நேசம்.

(கார்த்திகை, 2014)

00000000000000000000000000000000

Lorsque l'amour entre, par une nuit d'hiver, comme le feu de la cuisine
les couleurs tombent avec douceur sur l'âme qui l'embrasse.
Ce n'était pas par hasard que l'amour, qui m'a croisé la fois précédente
sur le sentier du buisson, avait la forme d'un lapin gris. 


Même si, à chaque fois, je jette les clés dans le jardin
après avoir hermétiquement fermé les chambres,
Celles qui viennent possèdent des clés subtiles.
Malgré la voix rogue qui nie et qui hésite,
lorsqu'elles ouvrent les portent et jouent de la mélodie,
on ne trouve aucun chemin pour échapper à leurs harmonies d'amour.

Lorsque je lui ai dit que c'était la première fois que je voyais une personne qui écrivait dans le salon de thé balançant ses cheveux rougeâtres,
Le bijou accroché à son aile narinaire scintillait pour murmurer que cela n'était pas étonnant qu'il y ait tant de possibilités de harcèlements.

Au cours d'une nuit douce, après le festin,
lorsque qu'en serrant contre moi je l'embrassais,
le cœur craignait que ce chemin n'aille encore à Rome.
Lorsque j'entends dire: "Tes lèvres sont celles que j'ai sens tant de temps après",
L’oiseau de la mélancolie qui volait dans le dans le passé disparait
et un nouveau ciel envoie des nuées.

Lorsque s'épanouit un désir d'avancer la main un peu plus loin
que l'endroit où se posait la main droite de "David de Michael Ange",
un autre côté du cœur l'enterre en interdisant la confiance inconsciente
et les branches fraiches de l'écriture s'inclinent sur les yeux palpitant

Bien qu'il ne reste rien pour ceux qui attendent Godot jusqu'à la fin des temps,
A nouveau s'enflamme l'amour comme le feu incontournable de la cuisine.

Elanko Dse (Traduit par Vasudevan)

00000000000000000000000000000000

Love sneaks in again in the middle of a winter’s night
Like the warmth of a fireplace, while in its embrace
All the shades of life’s memories are shed
And the grey hare it appeared as last time
In that lonely trail covered by bramble bush
Begins to make sense at last

Countless times have the doors been shut
Tight with the keys, thrown into the garden’s pit
Yet newer ones come with subtler keys
That pass over my scornful shrill with a comfort
the losing defence of my reluctant voice doesn’t have
And when the doors open for melody’s reign
But for the harmony of giving into love, all plot is lost

Caressing the low lines of your red hair when you said
‘It was the first time you met a writer, I did muffle
In the myriad ways to hurt myself , I have in my head
This isn’t a special one, with a cause to baffle
But it did reach you, when the glint in the stud
You wear on the nose, tipped it away without a ruffle

And then in the lightness of the night that followed the feast
I pulled you over, hugged and kissed you
Fearing all the while whether ‘this road too would lead to Rome’
And when you said you hadn’t done this in a long time
Just then, the old songbird, with that relentless sorrow
From my past vanishes to nest its swansong forever into a mound
Of fresh snow that falls from a future sky

Standing beneath Michael Angelo’s David, within touching distance
Of his right hand, the heart blooms for a forward stance
But the darker shores of my forlorn heart quick to their feet
Crush remaining hopes with a fair warning, dumped as a peat
on my beautiful little trepidating eyes, come to rest
the hungry boughs of my colorful words

Nothing is the reward that awaits those who wait
For Godard, till the end of time, we all know, is forever late
But this hopeless love that burns again, in a twist of fate
Has too much warmth to pass over for another date

Elanko (Translated by Bhuvaneshwaran Velusamy)

போராளியின் காதலி

Tuesday, September 01, 2015

மது இறுக்கமான சமூகத்திற்குள்ளிலிருந்து, தன்னையும் ஒருவித குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிக்கொண்ட ஒரு பெண்ணின் வாழ்வு எப்படி போராட்டத்தினூடு விரிகின்றது என்பதை இப்புனைவு பேச முனைக்கின்றது. பெற்றோர்/உறவுகளோடு அவ்வளவு ஒன்றமுடியாத, சாதியத்தை ஏதோ ஒருவகையில் எதிர்க்கின்ற இப்பெண், தன்னோடு வைத்தியசாலையில் இணைந்து பணியாற்றிய போராளிக் காதலனைத் தேடி புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த வன்னிக்குள் செல்கின்றார். பல சாதாரண மக்களுக்கு, போராளிகள் மீது ஒருவகை வெறுப்பும், அந்நியத்தன்மையும் இருப்பதை மட்டுமின்றி எமக்கிடையேயிருக்கும் சாதியமும் இப்புனைவின் தொடக்கப்பகுதிகளில் விரிவாகச் சொல்லப்படுவதை முக்கியமாகக் குறிப்பிடவேண்டும். போராட்டத்தை ஒருவகை வீரதீர சாகசமாக மட்டும் மிகவும் அழகியல்படுத்தப்படும் இன்றைய நிலையில் யதார்த்தம் என்பது பலவாறான புள்ளிகளிலிருந்தும் பார்க்கப்படவேண்டும் என்பதையும்  நாவலின் இந்தப்பகுதிகள் சித்தரிக்கின்றன.

இறுதி ஆயுதப்போராட்டம் வன்னிக்குள் உக்கிரமாகின்ற காலத்தில் வைத்தியசாலையில் வேலை செய்கின்றவர்களின் மிகவும் துயராந்த வாழ்வு முறையும், காயப்பட்டும், இனித் தப்பவேமுடியாதென குற்றுயிராய் வருகின்ற உடல்களோடும் போராடுகின்ற -நாம் நம் கற்பனைகளில் வரைந்து பார்க்கவே முடியாத- பல இடங்கள் இந்நாவலில் வருகின்றன. 2009ல் யுத்தம் முடிந்து தடுப்பு முகாமில் இருந்தபோது எழுதப்பட்ட நாவல் இதென நினைக்கின்றேன். எனவே அதற்குரிய பலவீனங்கள் பல இருந்தாலும், நாம் கடந்து செல்ல முடியாத ஒரு புதினமாகவே கொள்கின்றேன். முக்கியமான வைத்தியசாலைகளில் கொண்டுவரப்படும் காயப்பட்டவர்களைப் பற்றிய சித்தரிப்புக்களை அவ்வளவு எளிதில் எவராலும் கடந்துவரமுடியாது.

வாசித்துக்கொண்டிருந்த ஒருகட்டத்தில் உடல் முழுதும் வியர்த்து, வயிறெல்லாம் பிரட்டுகின்ற நிலைமையில், இந்நூலை வாசிக்காது இரண்டு நாட்களுக்கு தவிர்த்துமிருந்தேன். பிறகு தொடர்ந்த வாசிப்பிலும் இவ்வாறான சம்பவங்கள் எழுதப்பட்ட இடங்களை மேலோட்டமாய் வாசித்து தாண்டிச் சென்றிருக்கின்றேன். அந்தளவிற்கு கோராமான, எழுத்தில் வைக்கப்பட்டபோதுகூட மிக உக்கிரமான பகுதிகள் அவை.

இந்நாவலின் ஆசிரியரான வெற்றிச்செல்வி, 90களில் புலிகளோடு இணைந்து அவரது 19வது வயதில் வெடிவிபத்தொன்றில் வலது கையையும், கண்களில் ஒன்றையும் இழந்தவர். முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற ஆயுதப்போராட்டத்தின் இறுதிநாட்கள் வரை இருந்து, ஒன்றரை வருடத்திற்கு மேலாய் இலங்கையரசின் 'புனர்வாழ்வு' மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர். இன்று தனது சொந்த ஊரான மன்னாரில்(?) வசித்துக்கொண்டு மாற்றுத்திறனாளிகளோடு இணைந்து பணியாற்றுவதும், எழுதுவதுமாய் இருப்பதாய் அவரைப் பற்றிய குறிப்புகள் கூறுகின்றன.

இன்று ஈழத்திலும் புலம்பெயர்ந்தும் எழுதப்பட்ட புதினங்களின் பெரும்பாலானவற்றை வாசித்தவன் என்ற அடிப்படையில் ஒன்றையே மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட விழைகின்றேன். இவ்வளவு மிகக்கொடுரமான காலத்தின் நேரடியாகவோ/நேரடியற்றோ சாட்சியங்களாக இருக்கும் நாம் எந்தவகையான அரசியலைப் பேசுவதாயினும் மிகநிதானமாவும், மிகுந்த பொறுப்புணர்வுடன் நம் ஒவ்வொரு வார்த்தைகளையும் பேசவேண்டும் என்பதையே.

(ஆடி 27, 2015) 
நன்றி: கூகுள் (படங்கள்)