கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

மாத்தளை

Thursday, August 17, 2023

 -பசுமையின் மாபெரும் வெளி-


நான் அந்த மலையை நோக்கிப் போனபோது இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டும் என்ற நினைப்பே எனக்குள் முதலில் தோன்றியது. மதியத்துக்குப் பிறகு மழை வந்துவிடும் அதற்குள் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றுவிட வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. மழை வந்துவிட்டால் மலைக்குப் போவது கடினமாகிவிடும். ஆனால் நான் அந்த நகரத்துக்குள் நுழைவதற்குள்ளேயே மழை தொடங்கிவிட்டிருந்தது. 


அநேகமாய் நடந்தே அந்த மலையில் வசிப்பவர்கள் நகரத்துக்குக் கீழிறங்கி வருவார்கள். ஒன்றிரண்டு ஓட்டோக்காரர் மட்டும் அந்த உயரத்துக்கு மேலே ஏறி வரச் சம்மதிப்பார்கள். ஒரு ஓட்டோ என்னை ஏற்றிக்கொண்டு மலைக்கு மழையிடையே ஏற்றிக் கொண்டு போனது. ஓட்டோ ஏறமுடியாத இடங்களும் உண்டு. அப்போது இறங்கி நடந்தால்தான் ஓட்டோ ஒருமாதிரி அந்த செங்குத்துப் பாதையில் மேலே ஏறிப் போகும். 


இடையில் இந்த ஒற்றையடிப்பாதையில் கொஞ்சம் சறுக்கினாலே ஓட்டோ அதலபாதாளத்தில் விழுந்துவிடும் என்று அந்த ஓட்டோக்காரர் பயங்காட்டினார். எட்டிப் பார்த்தபோது எனக்கு பசுமைதான், காதலிகளின் முகங்களைப் போல அழகாய்த் தெரிந்தது. அதலபாதாளம், அவர்கள் காதலின் நிமித்தம் தந்த வலிகளைப் போல மறைந்து இருக்கலாம். அதைப் பற்றிய கவலை இப்போது எனக்கேன் என நிம்மதிப் பெருமூச்சை விட்டேன்.


வழியெங்கும் மரங்களின் கிளைகள் பரவி போகும் பாதையைக் குறுக்கிடச் செய்தன. தலையைப் பத்திரமாக உள்ளே வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டேன். எப்போதும் பாதை இப்படித்தானா எனக் கேட்டேன். இல்லை, இப்போது மழையின் நிமித்தம் கிளைகளெல்லாம் வளைந்து இப்படி வரவேற்புக் கோபுரங்கள் ஆகிவிட்டன என்றார் அந்தச் சாரதி.



பயணங்களின்போது மட்டுமல்ல, வாழ்க்கையின் எல்லாக்கட்டங்களிலும் எதையோ இழந்துதான் எதையாவது பெறவேண்டியிருக்கும் என நினைப்பதுண்டு. அடையப்படுவதின் பெறுமதி, இழப்பதை விட மேன்மையுடையதாக இருக்கும்போது மனது நிறைவடைதலின் பூரிப்பில் ததும்பும். அந்தக் கணங்களில், நாம் இழந்தவையும் நமக்கான அடைதல்களுக்குத் துணை செய்தவையே என்ற நன்றியுணர்வு பெருகும். ஒரு காதலின் பிரிவின் வலியைத் தாண்டி இன்னொரு அழகிய காதலைக் கண்டடையும்போது, கடந்து வந்த காதலியை, அவர் பிரியாவிடை தராவிட்டால் இந்தப் புது அனுபவத்துக்கு நுழைந்திருக்கவே முடியாதென்று, அவர் மேல் ஒரு நன்றியுணர்வு தோன்றுவதற்கு நிகர்த்தது இது.


நெடுநேரம் காடுகளில் தொலையும்போதும், கடலில் கரையும்போதும் இவ்வாறான எண்ணம் அடிக்கடி எழும். மேலும் எப்போதும் இந்த இயற்கை நமக்காய்க் காத்திருக்கின்றது. ஆனால் நாம் அதை அனுபவிக்கத் தயாராக இருக்கின்றோமா என்பதுதான் முக்கிய வினா. நாம் வாழும் வாழ்விற்கு நிகரான சமாந்தரமான/இணையான வாழ்வுகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. அது எவ்வாறானாயினும் நமக்குப் பிடித்த ஒரு வழித்தடத்தில் சென்றுகொண்டிருக்கின்றோமா என்பதுதான் நாம் நம்மை நோக்கிக் கேட்கவேண்டியது.


தமக்குப் பிடித்தவற்றுக்காய், தாம் வாழ விரும்பும் வாழ்க்கைக்காக லெளதீக வாழ்வினைத் துறந்து போனவர்களின் மனோதிடத்தை இவ்வாறான பொழுதுகளில் வியப்பதுண்டு. ஏனெனில் விரும்பிய ஒன்றைச் செய்யத் தொடங்கும்போது எத்தனை விடயங்களை/பொறுப்புக்களை நினைத்து ஒவ்வொருவரும் கவலைப்பட வேண்டியிருக்கின்றது. நமக்குள் இருந்து நம்மை அச்சுறுத்தும் நம் சொந்த பயங்களைத் தாண்டுவதென்பது அவ்வளவு எளிதானதல்ல.


என் எல்லா எண்ணங்களையும் கொஞ்சம் ஒதுக்கிவை என்று சொல்வதுபோல மழை விடாது பொழிந்து கொண்டிருந்தது. பசுமை எங்கும் விரிந்து கிடந்தது. பாக்குகளும், மிளகுகளும், ஈரப்பலாக்களும், தென்னைகளும் ஒன்றையொன்று மீறி செழிப்பாக வளர்ந்திருந்தன. சரிவான நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீடே எனது தற்காலிகத் தங்குமிடம். அருகே சுனை பாய்ந்து கொண்டிருந்தது. அதிலிருந்தே குடிப்பதற்கு நீரும், குளிப்பதற்கான நீரும் வந்து கொண்டிருந்தன.


இரவும் பகலுமாய் எந்நேரமும் சுனையின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்த இடத்தில் இருந்து வானமளையும் மலையையும், காடுகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரும் கருங்கற்பாறைகள் வீட்டைச் சுற்றி இருந்தன. அவை 60-70 ஆண்டுகளுக்கு முன் மலையின் உச்சியிலிருந்து மண்சரிவின்போது உருண்ட வந்த பாறைகள் என்றனர். அப்போது இந்த அடிவாரத்தில் இருந்த சிலர் இறந்திருக்கின்றனர். ஒரு தாயும் பிள்ளையும் உணவூட்டிக் கொண்டபோது மரணித்திருக்கின்றனர் எனச் சொல்லப்பட்டது. எனக்கு அது பங்களாதேஷில் பூகம்பம் வந்தபோது கட்டியணைத்தபடி இறந்த ஒரு இணையை இது நினைவூட்டியது. எந்தக் கணத்திலும் மரணம் நம்மை ஆரத்தழுவும் என்று அறிந்தும், அறியாத பாவனைகளோடு இந்த இயற்கையை அடக்கியாள முடியுமென்று இன்னமும் நம்பும் பிடிவாதக்காரர்கள் நாம்.


நான் நின்ற வீட்டினர் தமிழும் சிங்களமும் கலந்த ஒரு பின்னணியுள்ள குடும்பம். பிள்ளைகள் சிங்களத்திலேயே படிக்கின்றார்கள், ஆனால் தமிழ் பேசுகின்றார்கள். அடுத்தடுத்த தலைமுறையில் அவர்கள் முற்றாக சிங்களவர்கள் ஆகிவிடுவார்கள் என நினைக்கின்றேன். அவர்கள் வேட்டையின் மரபை இன்னும் கைவிடாதவர்கள். இப்போதும் காட்டுப்பன்றியும், முள்ளம்பன்றியும், உடும்பும் பிடிக்க வேட்டைக்குத் துப்பாக்கியோடு போகின்றவர்கள். 


ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து இவர்களின் கொள்ளுத்தாத்தா இந்த மலைப்பகுதிக்கு வந்திருக்கின்றார். தான்தோன்றித்தனமாய் பல பகுதிகளுக்கு அலைந்தவர், எவ்வாறு எதன்பொருட்டு அவர் இலங்கையின் இந்தப் பகுதிக்கு வந்தாரென்று தெரியவில்லை. இந்த மலையில் முன்னொருகாலத்தில் தேயிலை/இறப்பர் தோட்டம் ஆங்கிலேயரினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அது எஸ்டேட் ஆக விரிந்தபோது பின்னாளில் பல நூற்றுக்கணக்கானோர் வந்து குடியேறியிருக்கின்றார்கள். இவர்களின் கொள்ளுத்தாத்தா ஆங்கிலேயரோடு வேட்டைக்குப் போகின்றவராகவும், வீடுகளை நிர்மாணிக்கின்றவராகவும், தொழிலாளிகளை வழிநடத்துபவராகவும் இருந்திருக்கின்றார். அவரின் கீழ் சில நூறுபேர் கட்டுமானத்தில் வேலை செய்தனர் என்றனர். எனவே அவரின் பெயரில் இம்மலைகளில் மட்டுமில்லை, நகரத்திலும் நிலபுலங்கள் இருந்திருக்கின்றது. 


பின்னர் ஆங்கிலேயர் இந்த எஸ்டேட்டை கைவிடுகின்றனர்.  இங்கிருந்த தொழிலாளர்களும் வேறு வேறு இடங்களுக்குப் இடம்பெயர, இந்தக் குடும்பமும் அதன் வாரிசுகளும் மட்டும் இந்த மலையில் தங்கிவிட்டார்கள். இப்போது அவர்களின் நிலப்பரப்புகள் சுருங்கிவிட்டன. எவரெவரோ இவர்களின் நகரத்து நிலங்களை சுவீகரித்தும் விட்டார்கள். ஒருவகையில் வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று சொல்லலாமோ என்னவோ? ஆனால் அவர்களுக்கு இன்னமும் தாங்கள் இந்த மலைகளுக்கு உரியவர்கள் என்று கூறுவதிலும், வேட்டையின் நுட்பம் தெரிந்த பெரும் வேட்டைக்காரர்கள் என்பதிலும் ஒருவித கம்பீரமும் பெருமையும் இருக்கின்றது. 


வெளியே கொஞ்ச தூரம் நடந்தாலே மலை அட்டைகள் எம்மையறியாமலே ஏறிவிடுகின்றன. நான் சப்பாத்துபோட்டு அருகில் இருந்த இடங்களுக்கு நடந்தபோது இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் என்னோடும் நேசம் கொண்டன. எப்போதும் கையில் உப்பு கலக்கப்பட்ட போத்தல்களோடு திரிய வேண்டியிருந்தது. உப்புக்கரைசலை ஊற்றினால் -நம்மால் பலன் பெற்றுவிட்டு, நீ யாரென்று பின்னாட்களில் கேட்டு முகஞ்சுழிக்கும் 'உத்தமர்'கள் போல- அட்டைகளும் சட்டென்று உடல் சுருங்கி நம்மைவிட்டு அகன்று விடுகின்றன.


அங்கே ஓரு பதின்மன் இருந்தான். சிங்களத்தில் படித்துக் கொண்டிருந்தாலும் தமிழ் மீதான ஆர்வத்தில் வீட்டுச் சுவரில் பாரதியார் கவிதையை எழுதி வைத்திருந்தான். அவனோடு பேசிக் கொண்டிருந்தேன். உரையாடல் எப்படி வளர்ந்ததோ தெரியாது என்னையறியாமல் என் பதின்மங்கள், காதல்கள், பயணங்கள் எனப் பகிரும்படியாக அந்த இரவு நீண்டது. அந்த மலையிலிருந்து இறங்கி நீண்டதூரம் நடந்து படிக்கப்போகும் அவன் எனக்குப் பலரை நினைவுபடுத்தியிருக்கலாம். வெள்ளையுடையுடன் சேற்றில்/மழைநீரில் அசுத்தமாகாது, அவ்வளவு தூரம் அவன் நடந்துபோவதே எனக்கு வியப்புத்தான். ஆகவே அவனிடம், நீ கற்கின்ற இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உன் வாழ்க்கையை, உன் மூதாதையரின் கதையை எப்படியேனும் பதிவு செய் என்றேன். ஏனெனில் எல்லோருக்கும் இது வாய்ப்பதில்லை. நான் இங்கே தங்கி நின்ற சில நாட்களிலே எவ்வளவை அவதானிக்கின்றேன். நீ இங்கே வாழ்ந்து கொண்டிருப்பவன். இந்த இயற்கையோடு உள்ளுறைந்து கிடப்பவன். நான் அந்நியன். எதைச் சொன்னாலும், எழுதினாலும் நகரத்துக்காரனின் ஆதிக்கம் இருக்கும், உனக்கது அப்படியல்ல என்று எதையெதையோ எல்லாம் அவனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அடுத்த நாள் மாலையில் அவன் தங்கை முறையானவள் வந்து வெசாக் கூடுகள் செய்து தரச் சொல்லி இவனிடம் கேட்டாள். இவன் கொஞ்சம் சலித்தபடி மூங்கில்கள் வெட்ட மலையேறிப் போனான். நாளை ஒளியேறும் இவர்களின் பரிசுத்தமான வெசாக்கூடுகளிலே எனக்கான புத்தர் உள்ளுறைந்து இருக்கின்றான்.


அந்த மாலை வளர்ந்தோருக்கான இரவு. நான் வாங்கிப் போன செம்மது அவர்களுக்கு கேலிக்குரிய குடிவகை. நாமெல்லாம் வேட்டையில் மட்டுமில்லை, குடியிலும் பெருங்குடியர்கள், இதெல்லாம் உதவாது என்றார்கள். எனவே அரக் (சாராயம்) முழுப்போத்தலை உள்ளூர் வாசத்துடன் இறக்கினோம். மலையின் உச்சியில் ஒரு நாடோடி, கித்துள் கள் கொண்டுவர, மதியம் மலையேறிச் சென்று அதை அருந்தி மாலை சூரியன் மறையும்வரை மலைச்சிகரத்தில் போதையோடு கழித்த நாட்கள் பற்றி கதையதையாக அவர்கள் சொன்னார்கள். இது வெறும் மலை மட்டுமில்லை எதுவும் எளிதாக விளையும் பொன்னான பூமியுங்கூட. அங்கே சிவமூலிகைகளும் தேடினால் கிடைக்கும். அன்னமாய் மேலுலகையும், பன்றியாய் கீழுலகையும் கடுமையாய்த் தேடியவர்க்கு அருள்பாலித்தவன் நமது சிவன். தேடலைப் பொறுத்துக் கிடைக்கும் மூலிகை, அந்த மாலைக் குளிருக்கு வெம்மையின் உச்சம் ஏற்றுபவை.


இந்த மனிதர்களுக்கு இந்த மலையே வாழ்வு. அதற்குள் மிளகும், பாக்கும், ஈரப்பலாக்காய்களும், வாழைகளும், அவக்காடோக்களும் போதுமென்றளவுக்கு விளைகின்றன. வேட்டைக்காலங்களில் நல்ல சுவையான இறைச்சிகள் கிடைக்கின்றன. என்ன வேண்டும் இந்த வாழ்வுக்கு என்ற அலட்சியத்தோடும் கம்பீரத்தோடும் திரியும் வாழ்வு அவர்களுக்கு. என்றாலும் அவர்களுக்குள்ளும் பிரச்சினைகள் இருக்கின்றன. அதை அலசு ஆராய்வதால் என்ன பயன்? நாம் அங்கு போய் வாழவா போகின்றோம்? எந்த மனிதர்கள்தான் சிக்கல்கள் இல்லாது இருக்கின்றனர்.


எனக்கு அந்த மலைக்கும் காட்டுக்கும் இடையில் குடில் அமைத்து வாழும் ஆசை எழுந்தது. ஆனால் என்னால் ஒருநாள் கூட தனித்து அங்கே வாழமுடியாது என்பதும் புரிந்தது. ஐயோ, இந்த சுனைநீர் இவ்வளவு குளிருகின்றதே நீராட வேறு வழியிருக்கா என்று யோசிக்கும் சாதாரண ஒருவன் நான். இவர்கள் இந்த நிலப்பரப்பில் தகவமைத்துக் கொள்ள எவ்வளவு காலம் ஆகியிருக்கும். அது வாழையடி வாழையாக வாழ்ந்து வந்த பரம்பரைக்கு, இந்த மலை எங்கள் மலையென்று கொடுத்த மாபெரும் வைராக்கியம் அல்லவா? ஒரு நேரச் சாப்பாடு இல்லையென்றால் கனிதரும் மரங்களைத் தேடியோ அல்லது துப்பாக்கி தூக்கிக் கொண்டு வேட்டையாடப் போகும் அவர்களைப் போன்ற சாகசக்காரனோ அல்ல நான். 


நான் அந்த இயற்கைக்குள் இருந்து வாசித்து எழுத விரும்புகின்றவன். என் தனிமையை நீ கெடுக்கிறாய் எனச் செல்லமாய்க் கோபித்தபடி என் காதலியின் கதகதப்பான அரவணைப்புக்குள் உறங்க விரும்புகின்ற சாதாரணமானவன். எனவே இந்த மலையில் என்றென்றும் வாழும் என் கனவு வெறும் பகற்கனவே. ஆனாலும் அடிக்கடி இவ்வாறான மலைகளையும் காடுகளையும் தேடிப் போகவே என்றும் பிரியப்படுவேன். 


மலைகளினதும் காடுகளினதும் கதைகளை, மனிதர்கள் தம் இரத்தமும் வியர்வையும் கலந்து சொல்கின்றபோதே அவை மாமலைகளாகவும், பெருங்காடாகவும் மாறுகின்றன. 


மாமலைகளையும் பெருங்காடுகளையும் கடந்து செல்லுமொருவன், தன் மூதாதையர் சுதந்திரமாய் உலாவித் திரிந்த குறிஞ்சித்திணையினதும், முல்லைத்திணையினதும் ஒருதுளி வாழ்வையேனும் அகத்தில் தரிசிக்கவே செய்வான். 


அதுவே இயற்கை அவனுக்கு அளிக்கும் மாபெரும் கொடை!


**********************************


(நன்றி: 'அம்ருதா' - ஆவணி, 2023)

காதலின் வரலாற்று அடையாளம்

Wednesday, August 16, 2023

 

Mt. Lavinia 


ஒரு காதல், அந்தக் காதலியின் பெயரால் ஒரு நகரையே உருவாக்குமா? அப்படி உருவாகிய நகரில், அந்தக் காதலனும் காதலியும் கழித்த அதே மாளிகையில் நானொரு பொழுது இருந்தேன்.


அவன் இலங்கையின் முதல் ஆங்கிலேயக் கவர்னராக இருந்தான். தனது பதவியேற்பு விழாவில் நடனம் ஆட வந்த நடனக்காரி மீது மையல் கொண்டான். அவ்வளவு உக்கிரமான காதல் அது. அவன் நாட்டின் உயர்ந்த பதவியில் இருப்பவன். அவளோ இலங்கையில் ஒதுக்கி வைக்கப்பட்ட தலித் சமூகத்துப் பின்னணியில் வந்தவள். நாடுகளைப் பிடிப்பதில் இரும்பு மனிதன் எனப்பட்ட ஒருவன், மண்ணிற வர்ணம் மேனியில் ஒளிரும் ஒரு பெண்ணின் முன் சரணடைகின்றான். கொழும்பு பெருநகரில் இருந்து அலைகள் கொஞ்சும் கடற்கரையில் ஓர் அரண்மனையைத் அவளுக்காகக் கட்டத் தொடங்குகின்றான்.


அவனது நடனக்கார காதலியை அந்தஸ்து காரணமாக அவ்வளவு எளிதில் அவன் சந்திக்க முடியாது. எனவே தனது அரண்மனையில் இருந்து 600 மீற்றருக்கும் நீளமான ஒரு சுரங்கப் பாதையை அவளுக்காக அமைக்கின்றான். காதலியின் வீட்டு கிணற்றிலிருந்து தொடங்கி அந்தப் பாதை அவனின் அரண்மனையில் செம்மது சேமிக்கும் நிலவறைவரை நீள்கின்றது.


காதலி இரகசியமாக இரவுகளில் இந்தச் சுரங்கத்தினூடாக வந்து அவனோடு பொழுதைக் கழித்து விட்டு சூரியன் உதயமாக முன்னர் சென்றுவிடுவாள். அந்த உக்கிரக் காதல் 5 வருடங்களுக்கு மேலாக நீண்டது. சூரியன் அஸ்தமிக்காத இராஜ்ஜியம் காலனித்துவப்படுத்திய ஒரு தீவில், ஓர் அரசனுக்குரிய அதிகாரத்தில் இருந்தவனை ஒரு தலித் பெண் தன் நடனமாடிய கால்களில் சரணடைய வைத்தாள் என்பது ஓர் அதிசயமல்லவா?


இந்தக் காதல், பின்னாளில் இளமை துள்ளும் சிலியின் இராஜதந்திரியாக வந்து ஒரு அருந்தியப் பெண்ணை அவளின் விருப்பமின்றி கொழும்பில் புணர்ந்து போய்விட்ட பாப்லோ நெரூதாவின் உடல் வேட்கையைப் போன்றதல்ல.  இது அவ்வளவு பரிசுத்தமானது காதலி தலித்தாக இருந்ததை உதறித்தள்ளி, உரிய இடத்தை காதலின் பொருட்டு கவர்னரின் நேசம் கொடுத்துமிருந்தது.


46 வயது திருமணமாகாத இந்த கவர்னரின் காதலை, உள்ளூர்ச் சாதிமான்களாலும், பிரிட்டிஷ் அதிகாரத்தாலும் தாங்க முடியாது போயிருக்கின்றது. ஆகவே கவர்னரை திரும்பவும் மால்டாவுக்கு (Malta) மீள்க என்று ஆணையை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் பிறப்பிக்கின்றது. காதலியைத் தன்னோடு கூட்டிச் செல்லமுடியாத துயரோடு கவர்னர் திரும்புகின்றான். காதலிக்கு பின்னர் என்ன நடந்ததென்று பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன.


அவள், காதல் பிரிவுத் துயரத்தில் மலையுச்சியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்தாள் என்பது ஒரு கதை. இன்னொன்று, அவள் இன்னொரு நகரான காலிக்குப் போய் அங்கே வீடு வாங்கி, வசதியாக அமைதியாக இறுதிக்காலத்தில் வாழ்ந்தாள் என்பது இன்னொரு கதை. எந்தக் கதையானாலும் அவளின் அந்தக் காதல் அவ்வளவு அழகானது. அது எப்படியெனில் அந்த கவர்னர் பிறகு எவரையும் திருமணம் செய்யாமலே அவளின் நினைவோடு அப்படியே ‘பிரமச்சாரி’யாக இறுதிவரை இருந்திருக்கின்றான் என்று வரலாறு எழுதியிருக்கின்றது.




நான் இந்த காதல் மாளிகையின், இப்போது ஹொட்டலாக மாற்றப்பட்டிருக்கும் ஓர் அறையில் இருந்து அலையடிக்கும் கடலைப் பார்த்தபடியிருக்கின்றேன். இந்தக் காதலனும் காதலியும் துள்ளித் திரிந்து காதல் சரசம் செய்த நினைவின் சுவடுகளை எனக்குள் வரைந்து பார்க்கின்றேன். நளினமான அவளின் நடன உடலில் எத்தனையெத்தனை மீன்கள் துள்ளி ஓடியிருக்கும். எத்தனையோ நாடுகளைக் கடந்துவந்த ஒருவன், அந்தப் பெண்ணின் மேனியில் தன் நிம்மதிக்கான வரைபடத்தைக் கண்டுபிடித்தான் என்பது ஓர் அதிசயமல்லவா? மனிதர்கள் பிரமாண்டமாய் கட்டும் கட்டடங்களை உலக அதிசயம் என்கின்றார்கள்; எனக்கென்னவோ இப்படி நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத வெவ்வேறு தேசத்து மனித மனங்கள் நேசத்தின் ஆழத்தில் பிணைந்துகொண்டு வாழ்வைக் கொண்டாடுவதுதான் பேரதிசயமாக இருக்கிறது.


ஹொட்டலின் மேற்றளத்திற்குப் போகின்றேன். இப்போது சூரியன் தகதகவெனப் பொன்னிறத்தில் மேற்கில் சாயத் தொடங்குகின்றான். என்றோ ஒருநாள் இப்படி ஆதவன் கடலோடு அணையத் தொடங்குவதை, என்னைப் போல அந்தக் காதலனும் காதலியும் அணைத்திருந்தபடி பார்த்திருப்பார்கள் அல்லவா. அப்போது அவர்கள் தங்கள் காதல் நாளை என்னவாகும் என்று யோசித்திருப்பார்களா? அப்படி யோசித்திருந்தால் அவர்கள் இந்த உக்கிரமான சாகசக் காதலுக்குள் இறங்கியிருக்கவேமாட்டார்கள். உடல் வேட்கை மட்டும் அந்தக் கவர்னருக்கு இருந்திருந்தால் நாங்கள் இப்போது நூற்றாண்டுகள் கடந்தும் இந்தக் காதலைப் பேசிக் கொண்டிருக்கமாட்டோம்.


என் அன்றைய கனவுகளில் இந்தக் காதலனும் காதலியும் சுழன்று ஆடியபடி இருந்தார்கள். சிலவேளைகளில் அது என் கனவில்லாது, நனவிலி மனம் அசைபோட்டதோ தெரியாது. கடந்த நூற்றாண்டுகளில் எத்தனை சுரங்கங்கள் மனிதர்களால் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால்  காதலுக்கென ஒரு சுரங்கம் அமைத்த  இந்த கவர்னர் ஒரு வியப்பல்லவா? பின்னர் வந்த நூற்றாண்டில் அந்தச் சுரங்கம் மூடப்பட்டு, ஒரு பகுதி மட்டும் மிச்சமாக இருக்க, அதன் மீது பெருநகர் கட்டப்பட்டுவிட்டது. ஆனால் அந்தக் காதல் என்றும் அழிக்கப்படாது ஒரு காதலியின் பெயரால் நிமிர்ந்து நிற்கின்றது.


அந்த நகர் Mount Lavinia. அந்த நடனத் தாரகை காதலியின் பெயர் Lavinia!


நான் காலை தூக்கங் கலைந்தபோது மழை பெய்யத் தொடங்கியிருந்தது. எனக்குப் பிடித்தமான சாம்பல் நிறத்தை வானம் போர்த்தியிருந்தது. பெருங்கடலில் மழைத்துளிகள் வீழ்ந்து கலப்பதைப் பார்ப்பது என்பது பேரானந்தமானது. பின்னர் அந்தப் பேரின்ப நிலை மாறி மனது கதகதப்பான தியான நிலையானது. 


கடற்கரையில் நடக்கவேண்டும், நீச்சல்குளத்தில் குளிக்கவேண்டும் என்று முதல் நாளிரவு திட்டமிட்ட எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்து மணிக்கணக்காய் மழைபெய்யும் பரவச நிலையை அனுபவிக்கின்றேன்.


இந்த வாழ்வில் ஒரு மழைத்துளியென நானும் என் வாழ்வும் நாளை சுவடுகளற்றுக் கரைந்து போகும் என நினைக்கையில் எனக்குள் எழுவது அச்சமா, அமைதியா என்பதை நான் உணரேன். ஆனால் இந்தக் கணத்தில் அந்தக் காதலின் நூற்றாண்டுகாலத் தொடர்ச்சியென என்னை நான் எண்ணிக் கொண்டேன்.


ஆகவேதான் அன்பே, கடல் பார்க்கும் அறைக்குள் இருந்து ஏதெனக் காரணம் தெரியாது விழிக்குள் மழைபெய்ய நானுன்னை நேசத்துடன் இப்போது அணைக்கின்றேன்!


***************************


(Sir Thomas Maitland என்கின்ற இலங்கைக்கான முதலாவது ஆங்கிலேய ஆளுநர் (1805-1811), தாழ்த்தப்பட்ட ரொடிய சமூகத்தைச் சேர்ந்த நடனக்காரியான Lavinia Aponsuwa வை காதலிக்கின்றார். அந்தக் காதலியின் பெயரால் ஆளுநரின் ஆணையின்படி Mount Lavinia என்றழைக்கப்பட்ட நகர் பின்னர் சிங்களத்தில் கல்கிஸ என மாற்றப்பட்டாலும், ஆங்கிலத்தில் Mount Lavinia என்றே இப்போதும் அழைக்கப்படுகின்றது. அது காதல் கொடுத்த மாபெரும் அடையாளம்)


நன்றி: 'அம்ருதா', ஆவணி-2023


Pages & Coffee

Monday, August 07, 2023

 

சில ஊர்களின் தனித்துவப் பெயர்கள் என்னைக் கவர்ந்திழுப்பதுண்டு. அப்படித்தான் இந்தக் கஃபேயின் பெயரும் என்னை அப்படி ஈர்த்திருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் நான் அந்த கஃபேயிற்குப் போகும்போது மூடிவிடுவார்கள். ஒரு கஃபேயை மாலை ஏழு மணிக்குள் கதவடைப்பது என்பது மிக்க அநியாயம். இவர்களுக்கு ‘இரவு என்பது ஏழு மணிக்குப் பிறகுதான் இன்னும் இளமையாக இருக்கும்’  என ஒருவரும் சொல்லியிருக்க மாட்டார்கள் போலும். இறுதியில் உள்ளே நுழையும் சந்தர்ப்பம் நேற்று அமைந்தது. கஃபேயின் பெயரைப் போல நிறையப் புத்தகங்கள் சுற்றிலும் அடுக்கப்பட்டிருந்தன.


சில இடங்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும், அதற்குள் இருக்கும் அதிர்வுகள் நமக்குப் பொருந்தாதிருக்கும்.  எந்தக் கணத்தில் என்றாலும் எம்மை அமைதியிழக்கச் செய்து வெளியேற்றிவிடும் பதற்றத்தை அவை தன்னகத்தே கொண்டிருக்கும். இந்த கஃபேயிற்குள் நுழைந்தபோது வேறொரு அதிர்வு வந்திருந்தது. கொழும்பில் சில கஃபேயிற்குள் சேகுவரா, மார்க்ஸ், முகமது அலி, ஜான் லெனன் என நமக்குப் பிடித்தவர்களைக் கொண்டு அலங்கரித்திருப்பார்கள். முன்னர் இவர்கள் உண்மையான இடதுசாரிப் பின்னணியில் வந்திருப்பார்களோ என்ற தோற்றமயக்கமுற்று கஃபேக்களை நிறுவியவர்களின் பின்னணியை அறிய ஆவலுறுவதுண்டு. இப்போது கப்பிட்டஸிஸ்ட் மட்டுமில்லை, மார்க்சியர்கள் கூட இறுதியில் நவ தாராளவாதத்தில் வந்து சேரும் நுட்பமான இடங்களைக் கண்டு ஏமாறாமல் இருக்கக் கற்றுக் கொண்டாயிற்று. மேலும் நாமென்ன புரட்சி செய்யவா கஃபேக்களுக்குப் போகின்றோம், முதலீட்டியத்தின் முக்கிய கூறான நுகர்வோரின் ஓர் அங்கமாக எப்போதோ ஆகியும் விட்டோம் அல்லவா?

Latte & Waffle இற்கு உத்தரவு கொடுத்துவிட்டு அங்கிருந்து ஜே.கிருஷ்ணமூர்த்தியின் நூலொன்றை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். ஜே.கே நம்மைச் சரியாக நமது பின்னமைப்பியல்வாதிகளின் நூல்களைப் போலக் குழப்புவார். ஆனால் சரடொன்றைக் கண்டுபிடித்துவிட்டால் நமக்குச் சுவாரசியமாகிவிடுவார். நான் எடுத்து வாசிக்கத் தொடங்கிய பக்கங்களில் ‘விடுதலை/விடுபடுதல்’ பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அதைப் பேசுவதற்கு முன் நமது ‘பயங்களை’ப் பற்றி பேசுதல் முன்நிபந்தனை என்றபடி எங்கோ இழுத்துக் கொண்டு சென்றார்.

பின்னர் சட்டென்று எவற்றிலிருந்து விடுதலையை நமது மனம் வேண்டுகின்றது என்று கேள்வி கேட்கத் தொடங்கினார். நமது மனதுக்கு உவப்பான சந்தோசம், பேருவுகை போன்றவற்றிலிருந்து விடுதலையை நாம் ஒருபோதும் கேட்பதில்லை. துயரம், வலி போன்ற நமக்குப் பிடிக்காத உணர்ச்சிகளில் இருந்து மட்டுமே நாம் விடுபடுதலை வேண்டுகின்றோம். அப்போது நாம் ஒரு பக்கத்தை எடுத்து மற்றதை விலத்துகின்றோம். ஆனால் மகிழ்ச்சியும், துயரமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாது. ஒன்றைத் தக்கவைத்து, மற்றதில் விடுபடுதல் சாத்தியமானதுமல்ல, அது உண்மையான விடுதலையுமல்ல. மனதில் எதுவும் எஞ்சியிருக்காத தனிமையிலிருந்து வருவதே விடுதலை என்கிறார். ஹிப்பிக்கள் இந்தச் சமூகத்திலிருந்து வெளியேறி அலைந்து திரிந்தது முக்கிய நிகழ்வென்றாலும், அவர்கள் அதை தாங்கள் வாழும் சமூகத்திலிருந்து எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம் என்று நினைப்போடு செய்ததால் அது முழுமையான விடுதலை இல்லை, ஏனெனில் அங்கே ஏதோ ஒன்று இன்னும் மிஞ்சியிருக்கின்றது என்கின்றார் ஜேகே.



இவ்வாறு வாசித்து மனம் விடுதலையை அலசிக் கொண்டிருந்தபோது, வாங்கிய Latteஇற்காக பணம் செலுத்தப் போனேன். அங்கு நின்ற பெண், ‘நீங்கள் எழுதுகின்றவரா?’ எனக் கேட்டார். முதன்முதலாக ஒரு கஃபேயில் randomமாக ஒரு பெண் இப்படிக் கேட்கின்றாரே என வியப்பாக இருந்தது. அத்தோடு நிறுத்தாமல் என்ன எழுதுவீர்கள், புத்தகங்களின் பெயர்கள் என்ன என்றெல்லாம் கேட்டார் (இதற்காகவே இந்தக் கஃபேக்கு 7 மணிக்கு முன்னர் அடிக்கடி வரவேண்டுமென நினைத்தேன்).

நான் இப்படி அன்போடு அந்தப் பெண் ‘குசலம்’ விசாரித்ததில் கரைந்து போய் நிற்பதை, மறுகரையில் இருந்த என் தோழி மோப்பம் பிடித்திருக்க வேண்டும். ஜே.கேயின் விடுதலையை நான் வாசிக்கத் தொடங்கியபோது அவருக்கு Modern Love Chennai இன் ‘மார்கழி’யை என் அலைபேசியில் Amazon Prime ஊடு பார்க்கக் கொடுத்திருந்தேன். என்னையும் கூடச் சேர்ந்து அதைப் பார்க்கக் கேட்டபோது, என் மருமகளின் வயதில் இருப்பவர்க்கான எபிசோட்டை நான் பார்க்கமாட்டேன் என நிராகரித்திருந்தேன். ஆனால் அவ்வப்போது வாசிப்பின் இடையில் எட்டிப் பார்த்தபோது அதன் மலை/மழை பின்னணி, அந்த அப்பாவித்தனமான பதின்மக்காதல், எதிர்ப்பால் உடல் மீது வரும் முதன்முதலான ஈர்ப்பு எல்லாம் நாமெல்லோரும் கடந்து வந்திருக்கக் கூடியதுதான் என நினைத்துக் கொண்டேன்.

Modern Love Chennai  இல் வரும் நம்மாளின் எபிசோட் பார்ப்பதென்றால், வேண்டுமெனில் நானும் சேர்ந்து பார்க்கின்றேன் என்றேன். அது தியாகராஜன் குமாரராஜா. எனக்கு அவரின் திரைப்படங்கள் பிறரைப் போல அவ்வளவு கவர்ந்ததில்லை. ஆனால் அவரின் எளிமையும், ஒருவகை நாடோடித்தன்மையும் பிடிக்கும். அண்மையில் மிஷ்கின் கூட நானொரு குழந்தமையைக் கொண்ட ஒருவனைச் சந்தித்தேன், அவன் பின்னர் கொண்டு வர மறந்ததேனெனச் சொல்லி தான் வரைந்த ஓவியத்தை அனுப்பினான் என்று குமாரராஜா பற்றிச் சொல்லியிருப்பார்.

கஃபேயில் ஒலித்த ஒரு எப்ஃ.எம்மில் consensual sex பற்றிய உரையாடல் போகும்போது ‘நினைவோ ஒரு பறவை’ பார்க்கத் தொடங்கினோம். இலங்கையில் ஆங்கில வானொலிகள் மிக முன்னோக்கிய நிலையில் இருந்ததை வேறு சந்தர்ப்பங்களிலும் கண்டிருக்கின்றேன். கனடாவிலிருக்கும் நம் தமிழ் வானொலி ஆட்கள் இவற்றைப் பார்த்தாவது உருப்படியான நிகழ்ச்சிகளை அலுப்பில்லாது செய்வது எப்படியெனக் கற்க வேண்டும். 

நம்மாள் ஏமாற்றவில்லை, ஆனால் இந்தளவுக்குக் காதலை இழுத்திருக்கத் தேவையில்லை. காதல் இப்படி அவ்வளவு அழகாக எல்லோருக்கும் வாய்க்குமா தெரியவில்லை. ஆனால் கற்பனைகள் விரிய விரிய எல்லாவற்றுக்கும் அழகு கூடிவிடுகின்றன. நாம் அதற்குள் நுழையும்போது ஒரு படைப்பின் பாத்திரங்களாய் நாங்கள் உணரவும் தொடங்கிவிடுவோம். அப்போது அந்தக் காதலை நாங்களும் வாழத் தொடங்குகின்றோம்.

மற்ற எபிசோட் போலில்லாது இது நீண்டதென்பதால், இது முடிவதற்குள் கஃபேயை மூடிவிடப்போவதாகச் சொன்னார்கள். நல்லவேளையாக அதன் ஒருபகுதியாக வெளியே தேமாப்பூ மரம் சூழ சில பெஞ்சுகள் இருக்க நாம் அங்கே போய் அதை முழுதாய்ப் பார்த்தோம்.

பிறருக்கு தேமாப்பூ, எனக்கு அது வெள்ளையாக இருக்கும்போது பாதிரிப்பூதான். மரத்திலிருந்து உதிர்ந்த சில பாதிரிப்பூக்களை எடுத்து தோழிக்குக் கொடுத்தேன். அவர் அதைச் சூடிக்கொண்டு நான் உனக்கு, உன் பிரியமுள்ள புத்தரா என்றார். நீங்கள் புத்தரென்றால், நான் இன்னமும் ‘பாவங்கள்’ செய்தபடி புத்தரின் காலடிக்கு வந்துவிடாத ஆமிரபாலி என்றேன்.

இவ்வாறு இந்த மாலை/இரவு ஒருவகைப் பேருவுகையைக் கொண்டு வந்திருந்தது. புத்தகங்கள் சூழ, யன்னலுக்குள் மரங்கள் அசைவதைப் பார்த்து, ஜேகேயின் நூலை வாசித்து அசைபோட்டபடி, ‘நினைவு ஒரு பறவை’யாக அவ்வப்போது சிறகடிக்க நான் அமைதியையும் உணர்ந்தேன்.

சிலவேளைகளில் கணங்களில் நிகழக்கூடிய விடுதலைதான் எனக்கு வாய்த்திருக்கின்றதோ என்னவோ. ஓஷோ தியானத்தில் வரும் Valleys and Peaks ஐ, சிலவேளைகளில் நாங்கள் love making இன் போது அந்தக் கணநேரத்து Peaks களை உணரமுடியும் என்கின்றார். ‘நினைவோ ஒரு பறவை’யில் நாயகி orgasm இன் பொழுது தனக்குள் short term memory loss ஆகி தான் இன்னொரு பிரபஞ்சத்தில் நுழைந்துவிடுவதான பிரமை வருகின்றது என்கின்றாள்.

ஏதோ ஒருவகையில் நாம் நமது நாளாந்த நெருக்கடியிலிருந்து கொஞ்சப் பொழுதாவது விடுதலையாக வேண்டும்.

எழுதுகின்றவனா எனக்கேட்டு என் பொழுதுக்கு வர்ணமூட்டிய இந்தப் கஃபே பெண்ணுக்கு ஒரு புன்னகையைப் பரிசளிக்க வேண்டும். ஜேகேயை வாசித்து, என் அத்தனை குழப்பங்களோடும்  நான் அவரைப் புரிந்துகொள்ள rephrase செய்ததைப் பொறுமையாகக் கேட்ட என் தோழியை நேசத்துடன் அரவணைக்க வேண்டும். இவையும் கணங்களில் நிகழக்கூடிய விடுதலைதான்.


இந்த இரவு இன்னும் இளமையாகவே இருக்கின்றது!

*************************************


(May, 2023)


பாவாவின் (Geoffrey Bawa) 'லுனுகங்க'

Wednesday, August 02, 2023

 

பாவாவின் வடிவமைப்புகளுக்கு ஒரு தனித்துவம் இருப்பதுபோல, அவருக்கு தேமாப்பூக்கள் அளவிறந்த ஈர்ப்பு இருக்கின்றது. அவர் வடிவமைத்த கட்டடங்கள் ஓவ்வொன்றின் அருகாமையிலும் இந்த தேமாப்பூ மரங்கள் விரிந்து நிற்கும். இவ்வாறே பாவாவின் சகோதரரான Bevis Bawa வின் பெந்தோட்டையில் இருக்கும் வீட்டிற்கும், தோட்டத்திற்கும் போனபோது, இந்த தேமாப்பூ மரங்களே தனித்து அந்த வீட்டுக்கு முன்னாள் நின்றன. ஜிப்ரி பாவாவைப் போல அவரது சகோதரரும் தோட்டக்கலை வல்லுனர் ஆவர் (Landscape Architect).


ஜிப்ஃரி பாவா கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக (1948-1998) லுனுகங்காவோடு தொடர்புபட்டவர் எனவே தொடர்ச்சியாக இந்த வீட்டின் அமைவிடங்களை மட்டுமில்லை, அது சூழ்ந்திருந்த நிலப்பரப்பையும் மாற்றிக்கொண்டேயிருந்தவர். பாவாவிற்கு எப்போதும் பாவித்து எறியப்படும் பொருட்கள் மீது அதிக ஈர்ப்பு இருந்திருக்கின்றது. அவரின் தோட்டத்தை அழகுபடுத்தும் பெரும்கலயங்கள் ஏற்கனவே ஆங்கிலேயரால் கைவிடப்பட்ட சீனத்துப் பொருட்கள். அவ்வாறே முன்பு புகையிரத நிலையங்கள் பாவிக்கப்பட்ட மரப்பெஞ்சுகளையும் எடுத்துக் கொண்டு வந்து பாவித்திருக்கின்றார்.

 

Geoffrey Bawa ஒரு தலைசிறந்த architect என்பது நம் அனைவர்க்கும் தெரியும். அவர் 1919இல் இலங்கையில் பிறந்து, இங்கிலாந்தில் சட்டத்தில் பட்டம் பெற்றவர். பின்னர் 2ம் உலக மகாயுத்தகாலத்தில் இலங்கைக்கு வந்து சட்டத்துறையில் வேலை பார்க்கின்றார். எனினும் தாயாரின் மறைவையடுத்து, தனது தொழிலைக் கைவிட்டு ஐரோப்பா, அமெரிக்கா எனப் பயணிக்கத் தொடங்கினார். இத்தாலியில் வீடு வாங்கி அங்கேயே வாழ நினைத்த பாவாவை இலங்கை மீண்டும் இழுத்துக் கொண்டு வருகின்றது.


அப்போது (1948) இல்,  பெந்தோட்டைக்கு அருகில் இந்த  15 ஏக்கர் நிலப் பரப்பை வாங்குகின்றார். அதற்கு லுனுகங்கா என பாவா பெயரிடுகின்றார். சிங்களத்தில் உப்பு ஆறு என்று அர்த்தம் வரக்கூடியது. பாவா இந்த இடத்தில் இத்தாலியன் தோட்டமொன்றை வீடொன்றுடன் சேர்த்து அமைக்க முயல்கின்றார். எனினும் காடு அடர்ந்த இந்த இடத்தில் அவரது முயற்சி, அவருக்கு தோட்ட/வீடு வடிவமைக்கும் அறிவு இல்லாததால் தோல்வியடைகின்றது. பின்னர் பாவா மீண்டும் இங்கிலாந்துக்கு architecture படிக்கச் சென்று, பட்டத்துடன் தனது 38வது வயதில் இலங்கைக்குத் திரும்புகின்றார்.

பாவாவின் வடிவமைப்பில் இருக்கும் பல கட்டடங்கள் இப்போது பொதுமக்களின் பார்வைக்கு இல்லை. அவை இப்போது சுற்றுலாப் பயணிகளுக்கான சொகுசான விடுதிகளாக இங்கே மாற்றப்பட்டிருக்கின்றன. பாவா அன்றைய காலத்தில் 15 ஏக்கராக நிலத்தை வாங்கியபோது, அதற்கான வருடாந்த வரியை நிறையச் செலுத்தவேண்டியிருந்தது. எனவே இந்த நிலத்தை ஒரு பண்ணையாக மாற்றியிருக்கின்றார். வேளாண்மை செய்யும் நிலத்துக்கு வரி குறைவு. அன்று கோழிப்பண்ணையாக இருந்த இடம், பின்னர் கண்காட்சிக் கூடமாக இருந்து, இப்போது பயணியர் தங்கும் விடுதியாகிவிட்டடது.

இந்த நிலப்பரப்பைப் போல 10 ஏக்கர் நிலப்பரப்பை அருகிலுள்ள வாவிக்கு நடுவிலும் வாங்கியிருக்கின்றார். இன்றுவரை அதில் எதுவும் நிர்மாணிக்காமல் பறவைகளுக்கான காடாக அதை அப்படியே விட்டு வைத்திருப்பது மகிழ்வு தரக்கூடியது.

 

எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் (ஒரு தமிழர்) பாவாவிற்கு விருப்பமான இடங்களை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வந்தார். பாவா காலையில் தேநீர் அருந்தும் இடத்துக்குத் தொலைவில் வாவி இருந்தாலும் அதைப் பார்க்கும்படியாக்க நிலப்பரப்பை அவர் மாற்றி அமைத்திருக்கின்றார். அதுபோலவே இன்றும் நிறையத் தேமாப்பூக்கள் அழகு சேர்க்க, நெல் விதைக்கும் நிலன்கள் இருக்கின்றன. பாவா உள்ளே அமைத்திருக்கும் குளம் வண்ணத்துப்பூச்சியின் வடிவிலானது. இந்த நிலப்பரப்பு ஒருகாலத்தில் தேயிலை/இறப்பர் தோட்டமாக இருந்தாலும் பாவா நிறைய பழமரங்களை நட்டு வளர்த்திருக்கின்றார். அந்தப் பராம்பரியம் பாவா காலமாகி 20 வருடங்களான பின்னும் தொடர்கின்றது.  எனவே போகும் வழியெங்கும் ஏதேனும் ஒரு பழத்தை நாங்கள் சுவைத்துக் கொண்டு போகமுடியும். நான் நாவல்பழம், வெரலு, ஈச்சம்பழம் இன்னும் பெயர் நினைவில் நிற்கா சில சிங்களப்பெயருள்ள பழங்களைச் சுவைத்துப் பார்த்தேன்.

பாவா இறுதிவரை திருமணம் செய்யாதிருந்தவரென்றாலும், அவருக்கு இருபாலினரிலும் காதலர்கள் இருந்திருக்கின்றனர் என எமது வழிகாட்டி சொன்னார். பாவா தன் காதலர்களுடன் தனிமையில் இருக்கும் இடத்தோடு எமது லுனுகங்கா பயணம் முடிந்தது. பாவா கடைசிக்காலங்களில் ஸ்ட்ரோக் வந்து கோமாவிற்குள் போனவர்.   லுனுகங்காவிலிருந்து கொழும்புக்குச் சென்று கடைசி சில வருடங்கள் இந்தச் சிக்கலுடன் உயிர் வாழ்ந்தவர்.


அவரின் இறுதிவிருப்பப்படியே அவரின் அஸ்தி லுனுகங்காவில் வீசப்பட்டது. அதற்கென ஒரு சிறு அடையாளம் ஒரு மரத்தின் கீழ் எவ்வித பெயர்/வாசகமின்றி இருக்கின்றது. அந்த மரத்தின் (பெயர் மறந்துவிட்டேன்) பூக்கள் அவ்வளவு வாசனையானது. அந்த வாசத்தைப் போல பாவாவும் நீண்டகாலம் மக்களின் மனங்களில் இருந்து மறையாது வாழக்கூடும்.

 

********************


(May, 2023)

 


கொழும்பு - Gallery Cafe

Wednesday, July 26, 2023

 

தேமாப்பூ மீது மாமழை பொழிகிறது


கடும் வெயிலில் நெரிசல் நிறைந்த தெருக்களில் நடந்தபடி இருக்கின்றேன். கொஞ்ச நேரத்திலே உடல் Steam Bath எடுத்தது போல வியர்வையில் நனைந்துவிடுகின்றது. மேலைத் தேசங்களில் உள்ளறைக்குள் சூட்டைக் கூட்டி கஷ்டப்பட்டு hot yoga பழகுபவர்கள், இங்கே சும்மா நடந்தாலே போதும். வெயில், வியர்வைச் சுரப்பிகளை ஆலிங்கனம் செய்யும். தெருக்களின் சமதரையற்ற தரை, யோகாவின் அனைத்து ஆசனங்களையும் வளைவு சுழிவுகளுடன் எளிதாய்க் கற்றுத் தரும்.

எனினும் நான் இந்த நகரை, நாட்டை முன்னெப்போதும் இல்லாதளவுக்கு நேசிக்கின்றேன். வானில் அலைந்து திரிந்த பறவையொன்று தரைக்கு வந்து ஓய்வெடுப்பதைப் போல நான் இந்த நாட்களை ஆறுதலாக அனுபவிக்கின்றேன். எனக்கும், கழிவுநீரோடும் கான்களுக்கும் எந்த ஜென்மத்து உறவோ தெரியாது. இந்நகருக்கு முதன்முதலில் பதின்மத்தில் போரின் நிமித்தம் இடம்பெயர்ந்து வந்தபோது இந்த கழிவுநீர் கான்களோடு தொடங்கிய உறவு இன்னும் அறுபடுவதாய்க் காணோம். அன்று ஒவ்வொரு முடக்கிலும் நிற்கும் இராணுவத்தைத் தாண்டிப் போகும் பயம் ஒருபுறம் என்றால், மறுபுறம் வாடகை வீட்டின் தெருவோடு சமாந்தரமாக ஓடும் கழிவாற்றிலிருந்து எந்தக்கணம் விடுபடுவேனோ என்ற பதற்றத்தோடு விடுவிடுவென நடப்பதுண்டு.

கழிவு நீராறு இருப்பின் நுளம்புகளின் தொலை இன்னும் மிகுதியாகவும் இருக்கும். இன்றும் எத்தனையோ இரவுகள் கொசுவலையைப் போட்டும், விடிகாலைவரை நித்திரை வராத நாட்கள் நிறைய இருக்கின்றன.
நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் சரிந்து கிடக்கின்றது. விலைவாசியோ விமானமேறி தினம் தினம் வானத்தில் வைகுண்டம் தேடிப் பறக்கின்றது. இந்த நாடு மனிதர்கள் வாழத் தகுதியற்ற நாடென்று காண்பவர்களில் பலர் சொல்கின்றார்கள். கொதி அரசியலை மட்டுமல்ல, மென் நகைச்சுவையைக் கூடச் சகிக்காது கலைஞர்களை சிறைக்கு அனுப்புகின்றார்கள். இவ்வாறு அரசியலிலும், பொருளாதாரத்திலும் இரும்புத் திரைகள் ஒன்றன்பின் ஒன்றாக நாட்டை மூடியபடி இருக்கின்றன.

அப்படியெனில் எதனால் இந்த நாட்டில் இன்னமும் உலாவிக் கொண்டிருக்கின்றேன். ஒரு அந்நியனாக மாறிவிட்டதால்தான் இவை எல்லாம் அந்தந்த நேரத்துப் பிரச்சினைகள் போல உதறிக்கொண்டு தாமரை இலை நீர் போல எடுத்துக் கொள்கின்றேனா? நான் இங்கே பிறந்து பதின்மம் வரை அதன் அத்தனை கசடுகளோடும், இரத்த ஆறுகளோடும் வளர்ந்திருக்கின்றேன் என்பது ஓர் உதிர்ந்து போன கனவா?


நேற்று ஒரு ஓட்டோக்காரரைச் சந்தித்தேன். அவிசாவளையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரின் தந்தையார் ஒரு கடையில் அடிநிலைப் பணியாளராகத் தொடங்கி, பின் அந்தக் கடையை சொந்தமாக வாங்கி நடத்தியிருக்கின்றார். 83 தமிழின அழிப்பில் பக்கத்துக் கடை எரிக்கப்பட, இவரின் தந்தையாரின் கடை அரைகுறையாக எரிவதில் இருந்து தப்பித்திருக்கின்றது. ஒரு குழு கடையை எரிக்க, இன்னொரு குழு கடைக்குள் இருந்த உடைமைகளைச் சூறையாடிச் சென்றது என்றார். பின்னர் கிடைத்த பணத்துக்கு கடையை ‘அடிமாட்டுக்கு’ விற்கவும், தன் தந்தையார் இந்தத் துயரத்தால் நோய்வாய்ப்பாட்டு இறந்தார் என்றார். பக்கத்துக்குக் கடை அனலைதீவுக்காரருக்குரியது. அவரின் கடை எரிந்தபோது, கடையென்ன கடை உயிரல்லவா முக்கியம் தப்புவோம் என்றபோது, எனக்குத் தெரிந்த இந்தச் சுற்றமும் நட்பும் தன்னைப் பாதுகாக்கும் என்றவரை அந்த ஊர்க்காரர் யாரோதான் எரியூட்டிக் கொன்றனர் என்றார்.

இப்படி எனக்குச் சொன்னவருக்கு இன்னும் துயரம் முடியவில்லை. திறந்த விஸா இனவழிப்பால் பாதிக்கப்பட்டவர்க்கென இங்கிலாந்து கொடுக்க, இவரின் மூத்த சகோதரர் அடுத்த ஆண்டில் இங்கிலாந்து சென்றிருக்கின்றார். சென்ற சகோதரர் ஏதோ நோயின் நிமித்தம் 2 வருடங்களில் இங்கிலாந்தில் இறக்க இன்னொரு சோகம் இவரின் குடும்பத்துக்குள் நிகழ்ந்திருக்கின்றது. இவை நிகழ்ந்து கிட்டத்தட்ட 40 வருடங்களாகி விட்டன. இன்னமும் அந்தத் துயரங்களைக் கைவிடமுடியாத ஒருவரின் தடயங்களை அவரின் முகத்தில் நான் பார்த்தேன்.

ஒவ்வொரு காதல் பிரிவின்போதும் நமது வேதனைதான் உலகின் மகத்தான வேதனையென நாம் எண்ணிக்கொள்வோம். அதுபோல் இந்த வாழ்வில் நம்முடைய வாழ்க்கைக் கதைதான் சோகமானது என்று எண்ணி மறுகும்போது, இன்னொருவர் வந்து அப்படியில்லையென தன் கதையால் எட்டியுதைப்பார்.



நான் அலைந்து கொண்டிருக்கும் பறவை போல என்னை உருவகித்திருந்தேனோ? ஒரு பறவை தன் பாதங்களை பனி மலையில் கொஞ்ச நேரம் விட்டுச் செல்வது போலத்தான் இந்த வாழ்வும் மரணமும் என்று ஸென் கூறுகின்றது. ஆனாலும் அந்த சொற்ப நேரச் சுவட்டுக்குள்ளேயே நாம் வாழ்வென நினைத்ததில் பெருமளவு இருப்பது துயரத்தின் அழியாக் கோலங்களே. எம் எல்லோர்க்கும் கிடைத்த அனுபவங்களைப் பார்த்தால், சித்தார்த்தருக்கு முன்னரே புத்தனாக நாட்டையும், வீட்டையும் விட்டு வெளியேறுகின்றவர்களாக நாங்கள்தான் இருக்கவேண்டும்.

என்னால் எதையும் மாற்றமுடியாது என்பதால் மட்டுமில்லை, என்னையே என்னால் எளிதாக மாற்றமுடியாது என்று தெரிந்தும் நான் இந்த நாட்டையும், இந்த வாழ்வையும் அதன் அத்தனை பலவீனங்களோடும் நேசிக்கின்றேன்.

இப்போது இந்நகருக்குரிய மாலைநேர மழை பொழியத் தொடங்குகின்றது. மிகுந்த மனோரதியமான ஓரு கஃபேயிலிருந்து நீர்த்தாரைகள் வீழ்வதைப் பார்க்கின்றேன். நீர்வண்ணங்களில் வரையப்பட்ட ஒரு கலைஞரின் ஓவியங்கள் சுற்றிலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சுருட்டப்பட்ட இலைகளில் பொதியப்பட்ட கறிகளோடு, சுடுசோறும், வாயில் வைத்தால் கரைந்துபோகின்ற இங்கே இதுவரை சாப்பிட்டிராத அவ்வளவு உருசியுடைய மாட்டிறைச்சியைச் சுவைக்கின்றேன்.

ஓர் ஒரத்தில் மண்ணிற வர்ணத்தில் தியானத்தில் இருக்கும் புத்தரை சாப்பிட அழைக்கின்றேன். நான் மாமிசம் சாப்பிடுபவனல்ல என்று தெரிந்தும் என்னை அழைக்கும் உன் குறும்புத்தனம் பிடித்திருக்கின்றதென அவர் தன் அசையா விழிகளால் சொல்கின்றார்.

தேமா மரங்களின் மீது இப்போது மழை சோவெனப் பொழிகிறது. காற்றின் துணையுடன் மரத்தில் இருந்து இறங்கி வரும் ஒரு தேமாப் பூவை நிலத்தில் விழாது நான் கையில் ஏந்துகின்றேன்.

அதை புத்தருக்கு முன் வைத்து, ‘புத்தர்’ என மனம் முழுதும் நிறைத்து வைத்திருக்கும் என் அனைத்துக் கற்பிதங்களையும் இல்லாமற் செய்ய வேண்டுகின்றேன். இப்போது நிறைந்து நிற்கும் என் மனதில் பொழியும் மழை தேமாப்பூவையும், புத்தனையும் ஆரத்தழுவிப் போகின்றது.

இவ்வுலகில் என் இருப்பு என்பது இக்கணத்தில் கடந்து போகின்ற ஒரு வாசனை. அவ்வளவேதான்!

*********************************


(Jun 07, 2023)


சென்னை

Sunday, July 23, 2023


சிலவற்றை நிறைய யோசிக்காது செயற்படுத்தியாக வேண்டும். "தாய்லாந்து" புதினத்தின் கதைசொல்லி ஒரு நண்பனின் திருணத்துக்காய் சென்னைக்குப் போவதற்குத் தயார்ப்படுத்துவதுடன் கதை தொடங்கும். அதுபோல இப்போது நண்பரொருவனின் திருமணம் சென்னையில் நடக்கையில் போவதா இல்லையா என்ற குழப்பத்தில் இருந்தவனை, கூடவே புத்தகக் கண்காட்சிக்கும் சேர்த்து சென்னைக்கு இழுத்துக் கொண்டு வந்துவிட்டது.


புனைவு போல ஒரு வாழ்வு!


ஒரு ஓவியருக்கு ஓவியக் கண்காட்சிகள் போல, ஒரு இசைஞருக்கு இசை நிகழ்ச்சிகள் போல, நம்மைப் போன்று எழுதவும் வாசிக்கவும் விரும்புபவர்க்கு இப்படியான புத்தகக் கண்காட்சிகள் எனலாம். ஆனால் இங்கே நாமெல்லாம் உதிரிகள். நமக்குப் பிடித்த எழுத்தாளர்கள் எதிரே கடந்துசெல்கையில் புன்னகைக்கவோ அல்லது அருகில் நம்மோடு நடந்து வருபவர்க்கு இவரின் இன்னின்ன புத்தகங்கள் நமக்குப் பிடிக்குமென மனம் கனிந்து பேசிக்கொண்டோ போகலாம்.

இந்தக் கண்காட்சியில் நிறைய நண்பர்களைச் சந்திக்கலாமெனினும், சிலரோடு மட்டுமே ஆறுதலாகப் பேச முடியும். ஒரு காலையில் 24 மணித்தியால விமானப் பயணத்தில் வந்து சேர்ந்தவனுக்கு காலநிலை, வாகனங்களின் பேரிரைச்சல்கள், நேரமாற்றங்கள் எல்லாம் சர்ரிலிய அனுபவத்தைக் கொடுக்கும். பிறகு ஊரோடு ஒத்துப்போக எல்லாம் இயல்பாகிவிடும்

'தாய்லாந்து' வெளிவந்திருந்த "எதிர்" நண்பர்கள் உற்சாகமாய் வரவேற்றனர். "மெக்ஸிக்கோ"வை பதிப்பித்த டிஸ்கவரி புக் பாலஸ்" வேடியப்பன், உங்கள் நூல்கள் அனைத்தும் விற்றுவிட்டன. அதற்கான ரோயல்டி தருகிறேன், மெக்ஸிக்கோ இன்னொரு பதிப்பு வெளியிடுவோம் என்று "பொங்கல் போனஸாக" இன்ப அதிர்ச்சி தந்தார். எப்போதும் போல என் தமிழகப் பயணங்களை இலகுவாக்கும் இனிய நண்பர் தளவாய் சுந்தரம் எனக்கான sim card உடன் என்னைச் சந்திக்க வந்திருந்தார்.


இன்று பொங்கல் என்பதால் ஒரு சிறுபயணம் செய்து
பொங்கலை எப்படி சென்னை கொண்டாடுகிறது என்று பார்ப்போம் என வடபழனி முருகன் கோயில் வரை போயிருந்தேன். விடிகாலையிலே கோலங்கள் போடப்பட்டு, கரும்புகள், இஞ்சி, மஞ்சள், தோரணங்கள் கட்டப்பட்டு ஒவ்வொரு வீடும் களை கட்டியிருந்தது. வடபழனி முருகன் கோயிலில் ஓரிடத்தில் தமிழில் அர்ச்சனை செய்யலாமென எழுதப்பட்டிருந்தது நிறைவாயிருந்தது. எப்போதும் போல கோயில் கோபுரங்களையும், உள்ளேயிருக்கும் பழைய சிற்பங்களையும் பார்க்கவே எனக்கு விருப்பம் நிறைய இருக்கும். எனவே அவற்றை இரசித்துப் பார்த்துவிட்டு, அங்கே தரப்பட்ட சர்க்கரைப் பொங்கலையும் உருசித்துச் சாப்பிட்டு விட்டு, அருகிலிருந்த ஒரு கடையில் வத்தகைப்பழ (தர்ப்பூசணி) ஜூஸ் குடித்துவிட்டு தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஜீவா பூங்காவிற்கு அருகில் பணம் மாற்றுவதற்காய்ப் போயிருந்தேன். கடந்தமுறை சென்னை வந்தபோதும் ஆடைக் கடைகளுக்கு போய்விட்டு இங்கே வந்திருந்தேன். நடேசன் பார்க் என்றால் அங்கே இருந்து எப்போதும் எழுதிக் கொண்டிருக்கும் அசோகமித்திரனின் படிமம் தோன்றுவதில்லையா? அது போலத்தான் இதுவும். ஒரு தீவிர மார்க்ஸியரான ஜீவாவின் பெயரில் இருந்த பூங்காவின் உள்ளே பிள்ளையார் கோயில் இருந்ததை முதன்முறை இருளில் பார்த்தபோது சற்று வியப்பாயிருந்தது. இம்முறை பகலில் உள்ளே போய்ப் பார்க்கையில் ஒருபக்கம் பிள்ளையாரும், இன்னொரு பக்கம் ஜெய் மாதாவும் பொங்கலுக்கான அலங்காரத்துடன் வீற்றிருந்தனர். உள்ளே சிலர் விஷ்ணுவைப் போல கவலைகள் எதுவுமின்றி நிம்மதியாய்த் தூங்கிக்கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் இளஞ்சோடியொன்று ‘instagram reels’  இற்கான காணொளியைச் சளைக்காது திரும்ப திரும்ப எடுத்துக் கொண்டிருந்தனர்.

ஜீவா பார்க்கில் இருந்தபடி பொங்கல் நாளன்று தமிழக தியேட்டர் அனுபவத்தை ஒருமுறை அனுபவித்துப் பார்க்கலாமென்று ‘வாரிசு’க்கும் ‘துணிவு’க்கும் முயன்றபோது நீயெல்லாம் ‘காணும் பொங்கலுக்கே இலாயக்கு’ என்று ஒரு ரிக்கெட்டுக்கும் கிடைக்கவில்லை. ஜீவா பார்க்கிற்கு முன்னால் இருந்த மரங்களில் கிளிகள் மட்டும் பாட்டுப் பாடி என்னைத் தேற்றி அனுப்பி வைத்தன.

மாலையில் நமது செல்வத்தாரின்
'பனிவிழும் பனைவனம்' புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கு, கனடா மாதிரியில்லாது நேரத்துக்குப் போகவேண்டுமென்று நந்தனம் போயிருந்தேன். செல்வத்தாரின் ரேஞ்சே இப்போது வேறுமாதிரி என்பதால் நாங்கள் போய்ச் சேர்ந்து அரைமணித்தியாலத்துக்குப் பிறகு - அவரின் அன்றைய தலை புரட்சித்திலகம் போல- கூட்டத்துக்கு தாமதமாக வந்து சேர்ந்தார். அதுகூடப் பரவாயில்லை, நாமெல்லாம் காலச்சுவடு அரங்கின் முன்றலில் நிகழ்வு நடக்கப் போகின்றதென்று காத்திருக்க, அவர் இலக்கியம் என்பது உள்வட்டத்துக்கு உரியதென்று காலச்சுவடு அரங்கின் பின்கோடியில் வைத்து பெருந்தலைகளுடன் அதை நடத்தி முடித்தார். அந்தக் கோபத்தில் நான் அவரின் 'பனிவிழும் பனைவனத்தை' வாங்காது பகிஷ்கரிப்புச் செய்தேன். செல்வத்தாரினால் நடந்த ஒரேயொரு நல்ல விடயம், காலச்சுவடு அரங்கில் பத்தினாதனைச் சந்தித்து கொஞ்ச நேரம் ஆறுதலாகப் பேச முடிந்தது என்பதே. எனக்கும் அவருக்கும் சில விடயங்களில் ஒற்றுமை இருக்கின்றதென்று இருவரும் பேசிக்கொண்டோம். ஆனால் அவரை இன்னமும் எந்த நிலப்பரப்பிலும் வேர்கொள்ள விடாத நுண்ணதிகாரத்தின் துயரம் எம்மைப் போன்ற எவராலும் துளியும் உணரமுடியாதது.

செல்வத்தார் தன் இரசிகைகளுக்கு கையெழுத்திட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அஜிதனை அறிமுகப்படுத்தி விட்டிருந்தார். அஜிதன் நான் அவரின் 'மைத்ரி'க்கு எழுதிய விமர்சனத்தை யாரோ நண்பர் அனுப்ப வாசித்தேன் எனச் சொன்னார். எப்போதும் தொடக்கத்தில் கொஞ்சம் கறார், பிறகு போகப்போக மனம் கனிந்துவிடும் எனச் சொல்லி, அவரின் வல்லினக் கதையையும் வாசித்தேன் எனச் சொன்னேன். அகழில் அடுத்த கதை வரப்போகின்றதென்றார். என் விமர்சனம் வேறு,  ஆனால் அஜிதன் எதையும் சுதந்திரமாகப் பேசக்கூடிய, உடனே நட்பு கொள்ளக்கூடிய ஒருவராகத் தெரிந்தார்.

முதல் நாளன்று சாரு நிவேதிதா கண்காட்சி முடியும்போது காரொன்று வந்து நிற்க ஸ்டைலாக ஏறிப்போனதைக் கண்டிருக்கின்றேன். படையப்பாவில் ரம்யாகிருஷ்ணன் சொல்வதைப் போல, வயதாலும் அந்த ஸ்டைலும் திமிரும் இன்னும் போகவில்லை போல சாரு இருந்தார். இன்று ஜீரோ டிகிரி பதிப்பகத்தில் சாருவின் ஒரு நூலை வாங்கி கையெழுத்திட்டு பாரிஸ் பயணங்கள்/ஆபீதின் கதைகள் பற்றிக் கதைப்போமா என்கின்ற ஆசை வந்தது. ஆனால் எனக்கும் இந்த சர்ச்சைகள்/நிரூபித்தல்கள் போன்றவற்றில் இருந்து விலகிப்போகும் காலம் கனிந்துகொண்டிருப்பதால் சாருவை அருகில் பார்த்தும், மூன்று முறைக்கு மேலாய் அவரைப் புத்தகக் கண்காட்சியில் கண்டபோதும் ஒவ்வொரு முறையும் விலத்தி விலகி வந்திருந்தேன். செல்வத்தாரின் புத்தக நிகழ்வில் இமையம், ‘எழுத்தை மட்டும் வாசித்துவிட்டு எழுத்தாளரைச் சந்திப்பதைத் தவிர்ப்பது’ நல்லதென்ற தொனியில் கூறியதைப் போல சாருவையும் இப்படியே ஒரு தொலைவில் வைத்து இரசிப்பது போதும் போல.

வயசாகிக் கொண்டிருப்பதால் இப்போது புத்தகக் கண்காட்சிக்குள் நடந்து திரிவதே பெரும் கஷ்டமாக இருக்கிறது. பதின்மங்களில் நின்றபடி 8 மணித்தியாலங்கள் வேலை செய்ததால் வந்த முள்ளந்தண்டு வலி இப்போது மீண்டும் உலுக்கியெடுக்கத் தொடங்கியிருக்கின்றது. இனியான காலங்களில் தனியே புத்தகக் கண்காட்சிக்கு என இவ்வளவு தூரம் பயணித்து வருவேனா என்பதில் நம்பிக்கை குறைந்து வருகின்றதென நண்பரிடம் சொன்னேன். செல்வதாரும் இனி இலக்கியத்தால் பயனில்லையென, அவர் வெளியிடும் 'காலம்' புது இதழ் வெளிவந்ததைக் கூட மறந்துவிட்டு, இயக்குநர்கள், பாடகர்களுக்கு கதை/ பாட்டுச் சொல்லிக் கொடுக்கப் போயிருக்கின்றார் என்றொரு கதையும் கேள்விப்பட்டேன். நானும்  இனி சென்னைக்கு வந்தால் நடிகைகளை மட்டும் சந்திக்கச் செல்லலாமென நினைக்கின்றேன்

ஆண்ட்ரியாவுக்கு பொங்கல் வாழ்த்துகள்.

*************************


(Jan 16, 2023)

யாழ்ப்பாணம்

Friday, July 07, 2023

 

யாழில் நிற்பதற்கு இம்முறை புதியதொரு ஹொட்டலைத் தேர்ந்தெடுத்தேன். அங்கே நின்ற இரண்டு நாட்களுக்குள் மூன்று அறைகள் மாற்றப்பட்டிருந்தேன். அவ்வளவு குழறுபடிகள். அவர்கள் 'Booking.com' இல் சொல்லியபடி அங்கே வசதிகளும் இருக்கவில்லை. எங்கெங்கோ எல்லாம் அலைந்தவனுக்கு இதெல்லாம் பெரிய விடயமில்லை. ஆனால் என்னைப் பார்க்க நண்பர்கள் வந்தபோது புதிய விதிகளை விதித்தார்கள். நீங்கள் எனக்கு சொல்லப்பட்ட அறையையோ, குறிப்பிட்ட வசதிகளையோ செய்து தரவில்லை, அப்படியிருந்தும் அமைதியாக இருந்தேன், ஏன் இப்போது மட்டும் என் நண்பர்கள் பார்க்க வரும்போது தடுக்கின்றீர்களென அவர்களோடு கொஞ்சம் எகிறினேன்.


இவ்வாறு கட்டுநாயக்கா எயார்போட்டில் என் லக்கேஜ்ஜை எடுத்துவிட்டு வெளியே வரும்போது என்னை மட்டும் ஒருவர் தடுத்துவிட்டு, பெட்டிகளைத் திறக்கச் சொன்னார். அவரின் பாவனையும், கேட்ட மொழியும் இனவெறி பிடித்தவர் என்பதைச் சொல்லாமற் சொல்லியது. சரி பெட்டிகளைத் திறந்து காட்டுகிறேன் என்று ஒரு பக்கமாய் ஒதுங்கினேன். முன்னால் சென்ற நண்பர் என்ன நடந்ததெனக் கேட்டார். This guy asking me to open my luggage என்றபோது, வந்த எரிச்சலில் guy இற்கு முன்னர் f word பாவித்துவிட்டேன். நண்பருக்கு நான் சொன்னதைக் கேட்டுவிட்ட இந்த அதிகாரிக்கு இன்னும் இரத்தக் கொதிப்பு வந்துவிட்டது. 


சிலவேளைகளில் பேச்சு வழக்கில் f word பாவிப்பது போல இதை நான் அங்கே பாவித்தது தவறுதான். இது நான் தடுத்தவரை நோக்கிச் சொன்னது இல்லை, என் நண்பருக்கே சொன்னேன். ஆனால் இதையே நான் தமிழில் சொல்லியிருந்தால் இவருக்கு விளங்கியிருக்கவா போகிறது. உடனே கோபம் வந்துவிட்ட அவர் என் பெற்றோர், எங்கள் சந்ததியென எல்லோரையும் இழுத்தார். நான் எதுவுமே பேசவில்லை. ஒரு சுற்றுலாப் பயணியை இப்படித்தான் வழிநடத்துவரா என்ற யோசித்தபடி, அவரைப் படமெடுக்க முயன்றேன். உடனே என் அலைபேசியைப் பறித்து கேஸ் போடபோகின்றேன் என போனை என் அனுமதியில்லாமல் எடுத்துக் கொண்டு அருகிலிருந்த அலுவலகத்துக் கூட்டிச் சென்றார். அவரை பார்த்தல்ல, என் நண்பருக்குத்தான் இதைச் சொன்னேன் என்பதால் எனக்கு அவர் எந்தக் கேஸ் போட்டாலும் (ஆகக் கூடியது என்ன செய்வார்கள், இலங்கைக்குள் செல்ல அனுமதிக்காது, கனடாவுக்கு அப்படியே திரும்ப அனுப்புவார்கள், அவ்வளவுதானே) அதை எதிர்கொள்ளலாம் என அவரைப் பின் தொடர்ந்து சென்றேன்.


இலங்கைக்குள் நுழைந்த அந்த ஞாயிறு Sunday Times எடுத்து வாசித்தபோது, முக்கிய செய்தியாக சுற்றுலாப் பயணிகளை இலங்கையில் தற்சமயம் மோசமாக வழிநடத்துவது பற்றிய செய்திகள் வெளிவந்திருந்தன. ரெயினில் போன சுற்றுலாப் பயணிக்கு செருப்பால் எறிந்தது, ஓட்டோவில் விமானநிலையத்துக்கு aggressive ஆக அழைத்துச் செல்ல முயன்ற ஆட்டோக்காரரின் விடீயோ என பல்வேறு வகைச் சம்பவங்கள்! இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சரும் இவை குறித்து கண்டித்ததுடன் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனச் சொல்லியிருந்தார். அதை வாசித்தபோது சாதாரண/விளிம்புநிலை மனிதர்களை விடுங்கள், முதலில் உங்கள் விமான நிலையத்தில் இந்த அதிகாரநிலை அதிகாரிகளுக்கு எப்படி பயணிகளை வரவேற்பது என்பதைக் கற்றுக்கொடுங்கள் என எண்ணிக்கொண்டேன்.


நான் நின்ற ஹொட்டலில் அனுபவங்கள் எதிர்மறையாக இருக்கின்றதேயென சலித்துக் கொண்டபடி, ஒருநாள் காலையில் அங்கு உணவருந்தப் போனேன். நான் முரண்பட்ட மானேஜர் ஒட்ட வெட்டிய தலையோடு, கை முழுதும் tattoo வோடு macho வாக இருந்தார். அவரைப் பார்த்த என் நண்பர், ஆள் பழைய ஆர்மிக்காரனோ தெரியாது, சும்மா அவரோடு தனவாதே என்றார். எதற்கு வம்பென வாயைச் சாப்பிடுவதற்கு மட்டுமே திறப்பதென அதற்குப் பிறகு முடிவு செய்திருந்தேன். இரண்டு குழல் பிட்டும்,பூரியும், கோழிகறியும், பருப்பும், சம்பலும், சொதியுமென ஆற அமர்ந்து காலை உணவைச் சாப்பிட்டேன்.

பரிமாறிக்கொண்டிருந்தவருக்கு அப்படியொரு களையான முகம். பேச்சுக் கொடுத்தபோது மட்டக்களப்புப் பக்கம் சொந்த ஊரென்றார். சாப்பாடும் நன்றாக இருந்தது. மற்ற இடங்களில் உணவும், சேவையும் சிறப்பாக இருக்கும்போது நம்மியல்பிலே Tips கொடுப்பதைப் போல அவருக்குக் கொடுத்தபோது, அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். சரி ஒரு விருந்தினர் வீட்டுக்குப் போகும்போது ஏதாவது வாங்கிப் போவதில்லையா, அப்படி பொருள் வாங்கிச் செல்ல மறந்த சந்தர்ப்பமாக இதை நினைத்து இந்த அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் எனச் சொன்னபோதும் அதை வாங்க மறுத்தார். வேண்டுமெனில் மட்டுநகர் வந்தால் என் ஊருக்கு வாருங்கள், அப்போது விருந்தாளியாக ஏதேனும் வாங்கிக்கொண்டுவந்தால் பார்ப்போம் என அதே அப்பாவித்தனமான சிரிப்போடு சொன்னார்.

பயணிக்கும்போது பல இடங்களில், நல்ல அனுபவங்களைப் பெறுவதுபோல, பயணிகள் என்று தெரிந்து, இவர்கள் திரும்பி வரப்போவதில்லையென அறிந்து அறாவிலை கேட்கப்படுவதையும், ஏமாற்றப்படுவதையும் அனுபவித்திருக்கின்றேன். ஆனால் இப்படியொரு அருமையான மனிதரைக் கண்டதும், இந்த ஹொட்டலில் நான் சந்தித்த அனைத்து எதிர்மறை அனுபவங்களும் பண்ணைக் கடலில் மறைந்த சூரியனைப் போலக் கரைந்து போயின.

ஒரு நல்ல மனிதரை, ஒரு நல்ல அனுபவத்தை நீங்கள் சந்திக்கையில், ஒரு பயணம் இனிதாக நிறைவுபெறத் தொடங்குகின்றது.


***************

 

(Mar 10, 2023)


சென்னை

Wednesday, July 05, 2023

வசந்த முல்லையும், சுறாப்புட்டும்...


சென்னையில் ஒரு இரவு பயங்கரப் பசியில் இருந்தேன். கடைகள் எல்லாம் பூட்டும் தருவாயில் இருந்தன. ஓர் உணவகத்தில் உணவு ஏதும் எடுத்துக் கொண்டு போய், விடுதியில் ஆறுதலாக இருந்து சாப்பிடலாமென தீர்மானித்திருந்தேன். மெனுவைப் பார்த்தபோது சுறாப்புட்டு வசீகரித்தது. இது பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேனே தவிர அதுவரை இதைச் சாப்பிட்டதில்லை. கடைக்காரரிடம், அண்ணா ஒரு சுறாப்புட்டு பார்சல் என்று கூலாக் கூறிவிட்டுக் காத்திருந்தேன். இடையில் சந்தேகம் வர, இதனோடு சாப்பிட ஏதும் கிரேவி வேண்டுமா என்று கேட்டேன்; dry ஆகத்தான் இருக்கும், ஆனால் அப்படியே கூடச் சாப்பிடலாம் என்று அவர் ருசி காட்டினார்.


நான் காத்திருந்த சுறாப்புட்டு கையில் வந்தது. ஆனால் எனக்கு ஒரே அதிர்ச்சி. 300 ரூபாய் சுறாப்புட்டு ஒரு குட்டி டப்பாவில் தரப்பட்டது. நான் யாழ்ப்பாணத்து முட்டைப்பொறியல் பிரட்டித் தரும் புட்டைப் போல அல்லவா, இந்தச் சுறாபுட்டை எதிர்பார்த்திருந்தேன். திகைப்போடு கடைக்காரரிடம், "அண்ணா, சுறா இருக்கிறது, எங்கே புட்டு?" என்றேன். தம்பி இதுதான் சுறாப்புட்டு என்று அவர் அடம்பிடித்தார். எனக்கு அவ்வளவு கோபம். விஜய்தான் ‘சுறா’ என்று ஒரு படம் நடித்து எங்களை ஏமாற்றினார் என்றால், நீங்கள் புட்டுத்தராமல் சுறாப்புட்டு தந்து என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என்று கடைக்காரரைத் திட்டிவிட்டு இன்னொரு தெருக்கடையில் பரோட்டாவும், பன்னீர்க்கறியும் வாங்கிச் சாப்பிட்டு என் வயிற்றெரிச்சலைக் கரைத்துக் கொண்டேன்.

இப்படி சுறாப்புட்டோடு சுதாகரித்திருக்க வேண்டும். ஆனால் சிங்காரச் சென்னையை காதலிகளை விடக் கூட காதலித்ததாலோ என்னவோ அடுத்த நாள்,'வசந்தமுல்லை' என்ற படம் பார்க்கப் போனேன். பகலில் சென்னை வெயில் சுட்டெரிப்பதால் மதியக்காட்சிக்கு ஏஸிக்குள் நிம்மதியாய் இருக்கலாம் என்பதும் படம் பார்க்கப் போனதற்கு இன்னொரு காரணம். ஒவ்வொரு பயணங்களிலும் புதிதாய் எதையாவது கற்கவேண்டும், அதுவரை தாண்டாத எல்லைகளைக் கடக்க வேண்டும். இல்லாவிட்டால் ஊர்சுற்றுவதில் என்ன பயன். 'வசந்தமுல்லை'யின் டிரெயிலர் பார்த்தபோது ஒரு அமானுஷ்யப் படம் போலத் தெரிந்தது. நான் இப்படியான அமானுஷ்ய/பேய்ப் படங்கள் பக்கம் போவதில்லை. அவ்வளவு பயம். இம்முறை இப்பயத்தைக் கடந்து -புதுவிடயமொன்றைப் பயணத்தின்போது கற்பதற்காக- வசந்தமுல்லைக்குப் போனேன்.

படத்தின் தொடக்கக் காட்சி சத்யம் தியேட்டரில் நடக்கும். அது காட்சிப்படுத்தப்பட்ட சத்யம் தியேட்டரில்தான் நானும் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு சண்டைக்காட்சி தியேட்டர் washroom இல் நடக்கும். எனக்குப் பிடித்த மசாலா 'டீ' எவ்வளவு இங்கே குடித்தாலும், இனி கழிப்பிடப் பக்கம் போவதில்லையென அப்போதே தீர்மானித்தேன். அநேகமாய் பேய் அங்கிருந்துதான் வெளிவரப் போகின்றதென்று இருக்கையை இன்னும் கைகளால் இறுக்கப் பிடித்தேன்.

அடுத்த காட்சி மூணாறிலோ
, இடுக்கியிலோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும். மர்மமான சூழல். அதன் பின்னணியில் ஒரு பாடல் நன்றாக ஒளிப்பதிவும் செய்யப்பட்டிருந்தது. மவனே/மவளே நீ எந்தப் பாலினப் பேயாக இருந்தால் என்ன, நானே இடுக்கியில் நள்ளிரவில் ஏலம் கள்ளமாகப் பிடுங்கத் தனியே போயிருக்கின்றேன். உன்னைச் சமாளிக்கத் தயார்' என்று வசந்தமுல்லையில் வரும் பேயைச் சந்திக்க அறைகூவல் விடுத்தேன். மனதுக்குள் வீர சபதம் எடுத்தது, பக்கத்து இருக்கையில் இருந்த பெண்ணுக்கு எப்படிக் கேட்டதோ தெரியாது, "அண்ணா, நீங்கள் நம்ம சீமானின் விடீயோக்கள் தினமும் பார்ப்பீர்களோ" என்று கேட்டார். "இல்லையே, நான் காலையில் கண் விழிப்பதே, என் குரு நித்தியானந்தாவின் சொற்பொழிவுகளோடுதான்’ என்றேன். ‘அய்யோ, அது இன்னும் ஆபத்தானதே' என்று காலியான இருக்கை தேடி அடுத்த வரிசைக்கு அவர் எழும்பிச் சென்றுவிட்டார்.

எப்படா பேய் வரும் வருமென்று எதிர்பார்த்த எனக்கு, படம் முடியும்வரை பேயே வராதது சுறாப்புட்டில் புட்டு இல்லாதது மாதிரி ஏமாற்றமாக இருந்தது. அதுகூடப் பரவாயில்லை, தூக்கம் ஒழுங்காக இல்லாதுவிட்டால், சிந்திப்பது குழம்பும் என்று 5 நிமிடக் குறும்படத்தில் சொல்லவேண்டிய செய்தியை ஏன் 2 மணித்தியாலப் படத்தில் நீட்டித்துச் சொன்னர்களோ தெரியவில்லை.

இந்தத் துயரத்தை நண்பர் ஒருவருக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன். வசந்தமுல்லைக்குப் போனபோது கூட பக்கத்து அரங்கில் தீபிகா படுகோனேயின் "பதான்" போய்க் கொண்டிருந்தது. ஏற்கனவே தேசப்பற்று என் இரத்தத்தில் உயர் அழுத்தத்தில் இருப்பதால் பேய்ப்படம் பார்த்து, அதைக் கீழே இறக்கத்தான் வசந்தமுல்லைக்குப் போனேன், ஆனால் பேயைக் கண்ணில் காட்டவில்லை என அவருக்குச் சொன்னேன். அவரோ, நீ இலங்கைத் தமிழ்ப் பாடத் திட்டத்தில் 'வசந்தமுல்லை பந்தடித்தல்' என்ற காமக் கிறங்கல் பகுதியைப் படித்த ஞாபகத்தில் ஒரு செமி போர்ன் படத்தை எதிர்பார்த்து ‘வசந்தமுல்லை’க்குப் போயிருப்பாய், உன்னை வைத்து நன்கு செய்துவிட்டார்கள் என்று சொல்லிவிட்டு ஹா ஹா எனச் சிரித்தார். 

இறுதியில் ஒரு மோகினியை எப்படியோ  நான் சந்தித்துவிட்டேன் என்று அவருக்குச் சொல்லவில்லை.

 
************


(Feb 13, 2023)