கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மட்டக்களப்பு – 04

Thursday, August 31, 2023


குறும்பட விழாவில் மூன்று குறும்படங்களைத் திரையிட்டிருந்தனர். அரசு சாரா அமைப்பான CARE இன் ஒரு பிரிவு இதை நடத்தியிருந்தது. ஒரு குறும்படம் நுண்கடன் குறித்தும், மற்ற இரண்டு குறும்படங்கள் இன நல்லிணக்கம் பற்றியும் பேசியிருந்தன. மூன்றில் ஒரு படம் பெண் நெறியாளரால் எடுக்கப்பட்டிருந்தது. இன்னொரு திரைப்படத்துக்கான கதை(?)யை கேஷாயினி எழுதியிருந்தார்.


குறும்படங்கள் திரையிட்டு கலந்துரையாடல் நிகழ்ந்தபோது, என்னருகில் இந்நிகழ்வை ஒழுங்குபடுத்திய ஒரு சிங்கள இளைஞர் அமர்ந்திருந்தார். அவரிடம் அரசு சாரா அமைப்பு இப்படி மட்டக்களப்பில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பற்றி படங்கள் எடுப்பது போன்று தெற்கில் (சிங்களப்பகுதியில்) எடுக்கின்றனவா என வினாவினேன். அரசு மட்டுமில்லை, அரசு சாரா நிறுவனங்களும் எப்போதும் சிறுபான்மையினருக்கு வந்து நல்லிணக்கம் போதிக்க கஷ்டப்படுகின்ற அளவுக்கு நாட்டின் பெரும்பான்மையினரிடம் செல்வதில்லை என்பதை நாமறிவோம். அந்த இளைஞர் மாத்தறை, அம்பாறை, கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் இப்படி வெவ்வேறு தலைப்புக்களில் குறும்படங்கள் தயாரிக்க உதவுகின்றோம் என்றார்.

கலந்துரையாடலில் குறும்படங்களின் கதைகளை விட தொழில்நுட்பம் பற்றியதாக விவாதம் நீண்டு சூடு பிடித்தது. நிறைய இளைஞர்/யுவதிகள் வந்திருந்ததைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு இளைஞர் குழாம், குறும்படம் இயக்கிய பெண் நெறியாளரை மட்டும் ‘corner’ செய்து தொடர்ந்து கேள்விகள் கேட்டு குழப்பிக் கொண்டிருந்தது. அந்த இளைஞர்கள், நெறியாளர் voice over (இங்கே நமது கெளதம் வாசுதேவன் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பில்லை) இல் கதையின் பெரும்பாகத்தைச் சொல்லிக் கொண்டு போகின்றார், அது எப்படி காட்சிகளில் கதை சொல்லாது voice over சொல்வது என்பது அவர்களின் வாதம். நானும் காட்சிப்படுத்தல் சார்ந்து அந்த இளைஞர்களின் பக்கம் என்றாலும், அந்த நெறியாளருக்கு அவர் எடுக்க விரும்பும் படைப்பை எப்படி எடுப்பதற்கும் சுதந்திரம் இருக்கின்றது, எனவே ஏன் இப்படி எடுக்கப்பட்டது என்று கேட்பதைவிட, எடுக்கப்பட்டதின் உள்ளே என்ன உள்ளதென்பது பார்ப்பதே நியாயம் என்றேன். மேலும் எழுத்தைப் போலவே, திரைப்படங்களுக்கும் வெவ்வேறு பள்ளிகள் இருக்கின்றனதானே, எனவே எல்லாவற்றையும் நாம் மதிக்கக் கற்றுக்கொள்ளல் கலைக்கு நலம் பயக்கும் எனவும் சொன்னேன்.

கலந்துரையாடலில் எனது கேள்வியாக ஒன்றை ஒழுங்கு செய்தவர்களிடம் கேட்டேன். இங்கே இன நல்லிணக்கம் பற்றி எடுக்கப்பட்ட இரண்டு குறும்படங்களும் தமிழ்-முஸ்லிம் இனங்களைப் பற்றியே எடுக்கப்பட்டிருக்கின்றது. ஏன் எவரும் தமிழ்-சிங்கள அல்லது சிங்கள-முஸ்லிம் இன நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாக எடுக்கவில்லை எனக் கேட்டேன். இதற்கு அரங்கில் இவை ஈஸ்டர் குண்டுவெடிப்பு ஏற்பட்டபின் தமிழ்-முஸ்லிம் உறவின் விரிசல் இன்னும் விரிவானதால் அதையே முன்னிலைப்படுத்தினோம் என்றார்கள். ஈஸ்டர் குண்டுவெடிப்பால் சிங்களவர்களுந்தானே முஸ்லிம்கள் மீது அதிக காழ்ப்பை வெளிப்படுத்தினார்கள் அல்லவா
? எல்லாப் பாடங்களும் முதலில் நம்மைப் போன்ற ஒடுக்கப்படும் சிறுபான்மையினருக்குத்தான் கற்பிக்க வருவார்கள் போலும் என எண்ணிக் கொண்டேன்.

நிகழ்வு முடிந்தபோது, கேள்விகள் கேட்ட உற்சாகமாய் இருந்த இளைஞர்களிடம் போய்க் கதைத்தேன். உங்கள் வயதில் நானும் இப்படித்தான் இருந்தேன், அது தவறில்லை. ஆனால் நீங்கள் அதைச் செயற்பாட்டிலும் காட்டுங்கள் என்றேன். அவர்களும் திரைப்படங்களோடு சம்பந்தப்பட்டவர்கள் என்பதால், பிரசன்ன விதானகே, அசோக ஹந்தகம போன்றவர்கள் ஏதேனும் பட்டறைகளைச் செய்ய வந்தால்ல் தவறாது அவற்றில் கலந்துகொள்ளுங்கள் என்றேன். இந்த நெறியாளர்கள் மிக எளிமையானவர்கள், ஆனால் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ விடயங்கள் இருக்கும் எனச் சொன்னேன். என் கைவசம் அப்போதிருந்த திரைப்படங்கள் சம்பந்தமான தொகுப்பான உதிரும் நினைவின் வர்ணங்களின்ஒரு பிரதியையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு விடைபெற்றேன்.

ரவு, மீண்டும் ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டத்திற்குப் போவதற்கு நாம் இருவரும் தயாரானோம். இரவென்பதால் பஸ்களும் அவ்வளவாய் வருவதாய்க் காணவில்லை; தெருவில் போகும் எந்த ஓட்டோவை மறித்தாலும் அதற்குள் ஆட்கள் இருந்தார்கள். ஹனீபா எங்களுக்காய் வந்து நின்று எப்போது வருவீர்களென்று அழைப்பு எடுத்துக் கொண்டிருக்க, வலியோடு இருப்பவரை நாங்கள் கஷ்டப்படுத்துகின்றோம் என்றும் கவலையாக இருந்தது. கொஞ்சத்தூரம் நடந்துபோய் ஊறணி நாற்சந்தியில்(?) ஓட்டோ எடுப்போமென நாமிருவரும் ஏறாவூர்ப் பக்கம் நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

ஒருமாதிரி ஓட்டோவைப் பிடித்து ஏறாவூருக்குப் போனபோது நேரம் இரவு ஏழரைக்கு மேலாகிவிட்டது. நம் காலத்தைய சிறந்த கதைசொல்லி ஹனீபா நமக்காய்க் காத்திருந்தார்.
 ஹனீபா  எப்போதும் என் பிரியத்துக்குரிய முன்னோடி. நமக்காய் உடல் நோவெல்லாம் தாங்கி, தொலைதூரம் தாண்டி வந்து காத்திருந்தார். அவர் தோளணைத்து கரம் பிடித்து முதற் காதலில் இருந்து, கண்டி பெரஹரா யானை, ஜானகிராமனின் நாவல், அரசியல் வரை பலதும் உரையாடினோம். நம்மைச் சேய்களென முன்னே வழிநடத்திச் செல்லும் நம் காலத்தைய வேழம் அவர். களிப்பும், எள்ளல்களும் நிறைந்த கதைகளின் வற்றாத ஊற்றாக நடமாடுபவர். அவருக்குக் என் "தாய்லாந்தை"க் கையளித்தேன். ஹனீபாவின் அண்மையில் வெளிவந்த எண்ட சீவியத்திலிருந்து’  நூல் பற்றியும் நமது பேச்சு  நீண்டது. அதன்  அடுத்த பாகமும் நுஹ்மானின் முன்னுரையுடன் தயாராகிவிட்டது, முதல் தொகுப்பை விட இது இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்றார்.

 

அவர் விடைபெற்றபோது நெஞ்சு நிறைந்த பிரியங்களால் அவர் கைகளில் முத்தமிட்டு அனுப்பி வைத்தேன். ஒரு கணம், நாளை கனிந்து போகும் என் முதுமையின் விம்பத்தை அவரில் பார்த்துத் திகைத்தேன். அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு போய் ஓட்டோவில் ஏற்றியபோது "டேய் நான் 100 மீற்றர், 200 மீற்றர் runnerடா" என்ற அவரின் அந்த இளமைக் குரலைக் கேட்டுப் புன்னகைத்தேன். எந்த ஒரு முத்தத்தினாலும் தீர முடியாதது நமது இந்த இலக்கியப் பித்து.


இதை எழுதும்போதுதான் ஹனீபாவின் சிறப்பிதழை ஓட்டமாவடி அறபாத் உள்ளிட்ட நண்பர்கள் வெளியிட்டதும், அதில் என் ஒரு கட்டுரை பிரசுரமானதும் நினைவுக்கு வந்தது. அறபாத் தொகுப்பை கனடாவுக்கு அனுப்பட்டா என அன்றையபொழுது கேட்டபோது, வீணான செலவு வேண்டாம், நான் இலங்கைக்கு வரும்போது பெற்றுக்கொள்கின்றேன் எனச் சொல்லியிருந்தேன். அதை அறபாத்திடம் இப்போது கேட்டு வாங்க மறந்துவிட்டேன். சரி அடுத்தமுறை கிழக்குக்குப் போகும்போது அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியதுதான். கடந்தமுறை ஓட்டமாவடி அறபாத்தின் வாடிவீட்டில் ஹனீபாவோடு இரவிரவாக இருந்து நாம் இலக்கியம், இன்னபிற பேசியிருந்தோம். இம்முறை அவருடன் இப்படியான ஒரு அவசர குறுகிய சந்திப்பாகப் போய்விட்டதில் சற்றுக் கவலைதான்.

ஹனீபாவைச் சந்திக்கப் போனதில் அங்கே நின்ற குர்ஜித், டீன் கபூர், பர்ஸான் போன்ற நண்பர்களைச் சந்திக்கவும், அவர்களோடு அளாவளாவவும் முடிந்தது. குர்ஜித்தை கடந்தமுறை சாய்ந்தமருதில் சந்தித்திருந்தேன். அவரின் எழுத்து நடை எனக்குப் பிடிக்கும். அவர் நண்பர்களைப் பற்றி மட்டும் எழுதாது, இன்னும் விரிந்த தளத்தில் வேறு விடயங்களையும் எழுதவேண்டும். டீன் கபூரை இம்முறைதான் முதன்முதலில் சந்திக்கின்றேன். அண்மையில் வெளிவந்த அவரின் கவிதைத் தொகுப்பை அன்புடன் தந்திருந்தார். பர்ஸான் தற்சமயம் முழுநேரத் தொழிலாக இயற்கை விவசாயத்தில் இறங்கிவிட்டார் எனச் சொன்னார்.

அன்றைய மாலையில் ஜெய்சங்கர் தனது குழுவினருடன் கூத்து சார்ந்த நிகழ்வுகளைச் செய்துகொண்டிருந்தனர். அதையும் அவ்வப்போது போய் எட்டிப் பார்த்தேன். அதன் பிறகு பறங்கிய சமூகத்தின் இசை நிகழ்வு நடந்தது. ஒருவகையில் பார்த்தால் கிழக்கு மாகாணந்தான் எல்லாவித இனக்குழுக்களையும் அதனதன் இயல்புகளோடு இப்போதும் தாங்கிக்கொண்டிருக்கின்றது போலத் தோன்றியது. பல்வேறு இன/சமூகக்குழுக்களின் பராம்பரிய கலைவடிவங்களுக்கான ஓர் தளமாக இந்தப் புத்தகக் கொண்டாட்டம் இருப்பதைப் பார்க்க இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்த நாள் காலை மட்டக்களப்பு நகரைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம். காந்தி பூங்கா அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அருகிலிருந்த மட்டக்களப்பு நூலகத்தில் இருக்கும்போது மலர்ச்செல்வன் வந்து சந்தித்தார். அவரோடு கொஞ்சநேரம் இலக்கியம் பேசியபின்
, அவர் என்னை கல்லடிப் பழைய பாலத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் கூட்டிச் சென்றார். அப்போது நான் இந்திய இராணுவப் பின்னணியில் எழுதும் நாவல் பற்றி அவருக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன். தனக்கும் இந்திய இராணுவ காலத்தில் மிகக் கசப்பான அனுபவங்கள் இருக்கின்றன என்று சொல்லி, எந்த இடத்தில் இந்திய இராணுவத்தோடு இயங்கிய தமிழ்த் தேசிய இராணுவம்தன்னைப் பிடித்தது, பிறகு அவர்களிடமிருந்து தான் எப்படித் தப்பித்தேன், எங்கே சில நாட்களாக எவரினதும் கண்களிலும் படாது பதுங்கியிருந்தேன் என்று சில இடங்களைக் காட்டிக் கொண்டு போனார். 'வடமாகாணத்தைப் போன்றல்லாது கிழக்கு மாகாணத்து இந்திய இராணுவ காலம் வித்தியாசமானதாக இருக்கும், நிச்சயம் நீங்கள் இவற்றைப் பதிவு செய்யவேண்டும்' என்றேன். அத்தோடு மலர்ச்செல்வன் மட்டக்களப்பு நூலகத்தோடு இணைந்து சில வாரங்களுக்கு முன், மூன்று நாட்கள் புத்தகக் கண்காட்சியை மட்டுநகரில் ஏற்பாடு செய்திருந்தார். அந்த அனுபவங்கள் பற்றியும், அதைத் தொடர்ந்து செய்யவேண்டியன் அவசியம் பற்றியும் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

அன்றைய மாலை
, கேஷாயினியும் அவரது துணைவரும், எமக்கான இரவுணவை வேண்டாம் வேண்டாமென மறுத்தபோதும் செய்து கொண்டு வந்திருந்தார்கள். இறால் பிரட்டல், மீன் குழம்பு, மீன் பொறியல், மீன் சொதி என ஒரு அறுசுவை விருந்து பிட்டோடு தந்தார்கள். மட்டக்களப்புக்கு வந்த பாக்கியத்தை நான் இப்போது அடைந்தேன் என்றெண்ணியப்படி நன்கு இரசித்துச் சுவைத்துச் சாப்பிட்டேன்.

அன்றைய இரவு நான் கொழும்புக்கும், வடகோவையார் யாழ்ப்பாணத்துக்கும் போகும் பஸ்களைப் பதிவு செய்திருந்தோம். இரவு 9 மணியளவில், வாவியில் பாடும் மீன்கள் ஒளிர மட்டக்களப்பை விட்டு நாங்கள் நீங்கினோம்.

****************************

 

(Jun 01, 2023)


மட்டக்களப்பு – 03

Wednesday, August 30, 2023


றாவூர்ப் புத்தகக் கொண்டாட்டத்திற்காக, ஊறணியில் இருந்து பஸ் காலையில் எடுத்தாலும் வெயில் சுட்டெரித்தது. ஏறிய பஸ்சில் மருதமுனையில் இருந்து வந்த ஜமீலும் இருந்தார். வடகோவையார் அவரோடு பேச்சுக் கொடுக்க, நான் வாவியை யன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டுப் போனேன். ஏறாவூரில் இறங்கி ஒரு கடையில் தண்ணீர் வாங்கியபோது, அந்தக் கடைக்காரர் எங்கே போகின்றீர்கள் எனக் கேட்டார். போகும் இடத்தைச் சொன்னபோது, முதல்நாள் இரவு வாசிப்பின் அவசியம்பற்றி, ‘அலைபேசிகளைச் சும்மா துழாவுவதை விட்டுவிட்டு  புத்தகங்களைத் தேடி வாசியுங்கள்என்ற பஷீர் ஷேகுவின் பேச்சைப் பற்றி அந்த கடைக்காரர் நினைவூட்டிப் பேச எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவரோடு கொஞ்ச நேரம் புத்தக வாசிப்புப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, நடுத்தெருவில் கத்தரி வெயிலில் காய்ந்துகொண்டிருந்த வடகோவையாரும், ஜமீலும் எங்கே என்னைக் காணவில்லை எனத் தேடி வந்தனர்.


பஸ்சில் இருந்து இறங்கி உள்ளே கொஞ்சத்தூரம் வாவிக்கரையோரமாக நடந்துபோய்த்தான் புத்தகக் கண்காட்சியை அடைய முடியும். ஏற்கனவே கால் நோவோடு (காதல் நோவல்ல) அல்லாடிக் கொண்டிருந்த வடகோவையார் கஷ்டப்படத் தொடங்கினார். கண்காட்சியை அடைந்தபோது வெயிலின் உக்கிரத்தைத் தணிக்க, கடற்கரையோரமாகப் போவோம் என்று இருவரையும் கூட்டிச் சென்றேன். மருதமரங்களை நிறைய நாட்டி ஓர் அழகான பூங்காவை அருகில் உருவாக்கியிருந்தார்கள். வெயிலுக்கு அது நன்கு இதமாக இருந்தது. ஜமீலிடம் உங்கள் ஊரின் பெயரும் மருதமுனை என்றால் நிறைய மருதமரங்கள் இருக்குமே எனக் கேட்டேன். இல்லை, இப்போது வீடுகள் நிறையக்கட்டி, மருதமரங்களே கிட்டத்தட்ட அடையாளம் இல்லாமல் போய்விட்டன என்றார். சில வருடங்களுக்கு முன் அக்கரைப்பற்றில் ஹசீனின் வீட்டில் நின்று, ரியாஸ் குரானாவோடு அவரின் மோட்டார்சைக்கிளில் சென்று மருதமுனைக் கடற்கரையில் நண்பர்கள் சிலரைச் சந்தித்தது நினைவில் மேலேறி வந்து மிதந்தது.

மருதமரங்களோடு கொஞ்சம் சல்லாபித்து விட்டு கண்காட்சிக்குப் போனபோது கூத்து மீளுருவாக்கம்குறித்து நல்லதொரு கருத்தரங்கு போய்க்கொண்டிருந்தது. பேசிய அனைவரும் அந்தத் துறைசார்ந்தவர்கள் என்பதால் சுவையானதாகவும் சுவாரசியமானதாகவும் நிகழ்வு இருந்தது. என்ன சிக்கல் அங்கே இருந்ததென்றால், ஒரு சிலர் நேரக்கட்டுப்பாடில்லாது நீண்ட பேச்சுக்களை அளிக்கையில் மூளை தகவல்களைச் செரிக்கச் சிரமப்படத் தொடங்கியது. காலை 11இற்குத் தொடங்கிய அமர்வு, வரவாளர்கள் பேசி முடிக்க மதியம் 2இற்கு மேலாகிவிட்டது. விளையாட்டு மைதானத்தில் நடுவில் கூடாரம் அமைத்த அரங்கின் மேலே வெயிலோன் கூடவே நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தார். வாரவிறுதி என்பதால் மைதானத்துக்கு வந்த மாணவர்கள் ஓட்டம்/தடைதாண்டிய ஓட்டம்/குண்டெறிதல் போன்றவற்றில் பயிற்சியும் பெற்றுக் கொண்டிருந்தனர். அது யாழில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கழிந்த என் பதின்மக் காலங்களை நினைவுபடுத்தியது.

கூத்து மீளுருவாக்கத்தில், நான் நிதானமாகக் கேட்ட ஓரிரு உரையை வைத்து சில கேள்விகளை அரங்கில் கேட்டேன். அளிக்கப்பட்ட ஒரு பேப்பரில், கூத்து மீளுருவாக்கம், சு.வித்தியானந்தனால் செய்யப்பட்டது என்று கருத்தை மறுத்து, அது 2000களில் ஜெய்சங்கரால் கிழக்கில் செய்யப்பட்டது என்று கூறப்பட்டது. எல்லாக் கலைகளிலும் ஏற்பும் மறுப்பும் இருப்பது இயல்பானதே. ஒன்றையென்று ஏற்றும் மறுத்தும் வளர்வதே கலை. என் கேள்வியாக கூத்து மீளுருவாக்கம் 2000களில் செய்யப்பட்டது என்றால் அது மற்றப் பகுதிகளிலும் (மலையகம், வன்னி, யாழ்) இந்த மீளுருவாக்கம் ஒரே நேரத்தில் நடைபெற்றதா? அவ்வாறு நடைபெறாமல் 2000களில் கிழக்கில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் செய்யப்பட்டது என்றால் பொதுவாக கூத்தில் மீளுருவாக்கம் செய்யப்பட்டது என்று சொல்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்று கேட்டேன். அதன் தொடர்ச்சியில் கூத்து மீளுருவாக்கம் கிழக்கில் செய்யப்பட்டபோது என்னென்ன சவால்களை நீங்கள் எதிர்கொண்டீர்கள் எனவும் கேட்டேன்.

என் மட்டுப்படுத்தப்பட்ட கூத்து அறிவைப் பொறுத்தவரை (புலம்பெயர்தேசத்திலே
யே அதிகம் கூத்துக்களைப் பார்த்திருக்கின்றேன்) யாழ்ப்பாணத்தவர்களிலே ஊருக்கு ஊர் கூத்துக்களின் தனித்துவமான தன்மைகளும், அவர்களிடையே மரபுமான பிரதிகள் மீளுருவாக்கம் செய்யப்படும்போது சர்ச்சைகள் தோன்றுவதையும் அறிந்திருக்கின்றேன். 
கிழக்கில் மரபான பிரதிகளும், கூத்துக்கான ஆட்டமும்/இசையும் மாற்றப்படும்போது எவ்வாறு அது உள்வாங்கப்பட்டதென்றும் எனது கேள்வியை இன்னும் விரித்துக் கேட்டேன். ஜெய்சங்கர் இதற்கான விளக்கத்தை தன் கள ஆய்வுகளையும் அனுபவங்களையும் முன்வைத்தும் விரிவாகத் தந்திருந்தார்.

ஜெய்சங்கர் இதற்கு விளக்கந் தந்தனால், அவரைப் போன்றவர்கள் ஒரு தசாப்தத்திற்கு முன் பறையை பல்கலைக்கழக மட்டங்களில் கொண்டு வந்தபோது ஏற்பட்ட சர்ச்சையை முன்வைத்தும் கேள்வி கேட்டேன். ஒரு சமூகம் பறையடிப்பதாலேயே இழிவாக்கம் செய்யப்பட்டு அதை ஒருபொழுது கைவிட்டபோது இதை அதன் பாதிப்பு/அவமானங்களைத் தாங்காதவர்கள் நம் தமிழர் இசைஎன அதை முன்னோக்கி எடுத்து செல்வது நியாயமா என்பதே என் கேள்வியாக இருந்தது. இன்றைக்கு பறை பழக்குபவர்கள்/பழகுபவர்கள் இந்தக் கேள்வியை எதிர்கொண்டு அதற்கு உகந்த நியாயத்தை அளிக்காது அதை எடுத்துக் கொண்டு செல்வதில் சிக்கல்கள் புலம்பெயர் தேசங்களிலும் இருக்கின்றது என்றும் குறிப்பிட்டேன்.

ஜெய்சங்கர் இது குறித்து ஒரு நீண்ட விளக்கத்தைத் தந்தார். நான் அதில் உடன்படவும் மறுக்கவும் நிறையப் புள்ளிகள் இருந்தாலும், ஜெய்சங்கர் நிதானமாக என் கேள்வியை எதிர்கொண்டு பதிலளித்தது நிறைவாக இருந்தது. இவ்வாறான விடயங்கள் இன்னும் இவ்வாறான பொதுக்களத்தில் நிதானமாக பல்வேறு தரப்புக்களுடன் உரையாடப்பட வேண்டியவை. அந்த அரங்கில் இருந்த அனைவரும் கூத்து மீளுருவாக்கம்குறித்து எதிர்க்கருத்துக்களாயினும் அதைச் செவிமடுத்து உரையாடக் கூடியவர்களாக இருந்தது மகிழ்ச்சியைத் தந்தது. இந்நிகழ்வில் கிழக்குப் பழங்குடி மக்களைப் பிரதிநிதிப்படுத்துபவர்களும் வந்திருந்தனர். அவர்களும் கூத்துக்கள் குறித்தும், மீளுருவாக்கம் பற்றியும் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இவ்வாறு இந்நிகழ்வு நீண்டதால் புத்தகக் கண்காட்சிக்கு இடையில் வந்துபோன சில நண்பர்களுடன் பேசமுடியாதும் போனது சற்றுக் கவலைதான். வடகோவையாரும், அம்ரிதா ஏயெமும், நானும் சற்று நேரம் அரங்கில் இருந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு அம்ரிதா ஏயெம் பஸ்ஸெடுத்து அவரது வீட்டுக்குப் போக, நாங்கள் அருகிலிருந்த ஒரு கடையில் சாப்பிட்டுவிட்டு ஊறணிக்குப் பஸ்ஸில் புறப்படத் தொடங்கினோம்.


மாலை 4 மணியளவில் குறும்பட விழா ஒன்று ஊறணி அமெரிக்கன் மிஷன் தேவாலயத்தில் நடக்க இருந்தது. அதில் பார்வையாளராகக் கலந்துகொள்ள கேஷாயினி எனக்கும் வடகோவையாருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். விடுதிக்கு வந்த வடகோவையார் வெயிலில் நடந்து உருகி, 'என்னால் குறும்பட விழாவுக்கு வரமுடியாது, அவ்வளவு களைப்பாக இருக்கிறது, அறைக்குள் இருந்து ஓய்வெடுக்கப்போகின்றேன். நீ மட்டும் அங்கே போய்விட்டு வா' என்றார். அத்துடன் மாலையில் மீண்டும் புத்தகக் கண்காட்சிக்குப் போகவும் வேண்டியிருந்தது. நமது பிரியத்துக்குரிய எஸ்.எல்.எம்.ஹனீபா நம் இருவரையும் சந்திப்பதற்காய் ஓட்டமாவடியில் இருந்து அங்கே வருவதாகச் சொல்லியிருந்தார்.

நான் குறும்பட விழாவுக்கு செல்வதற்கு ஆயத்தமாகத் தொடங்கினேன்.

*************************************


(Jun, 2023)


கார்காலக் குறிப்புகள் - 20

Tuesday, August 29, 2023

 

ஹொலிவூட் 1920களில் மெளனப் படங்களில் இருந்து, பேசும் படங்களுக்கு மாறுகின்ற காலகட்டதைப் நுட்பமாய்ப் பேசுகின்ற திரைப்படம். அந்தக் கதையை விளிம்புநிலை மனிதர்களின் பார்வையினூடு முன்வைக்கின்றது. ஒரு மெக்ஸிக்கன் குடியேறி ஹொலிவூட் என்னும் பிரமாண்டத்தில் பங்கு பெறுவதற்காக வருவதையும், அவன் அங்கே விளிம்புநிலை நடிகையாக இருக்கும் நியூ ஜேர்ஸியைச் சேர்ந்த பெண் மீது காதல் கொள்வதையும் முக்கிய களமாகக் கொண்டு அவர்கள் எவ்வாறு ஹொலிவூட்டில் முக்கியமானவர்களாக மாறி, பின் வீழ்ச்சியடைகின்றார்கள் என்பது முக்கிய கதைக்களன் என்றாலும், அதனூடு ஹொலிவூட்டில் நடக்கும் பல்வேறு மாற்றங்களை -கறுப்பினத்தவர்கள் மீதிருக்கும் இனவாதத்தையும், அவர்களின் திறமைக்காக மீறல்கள் நிகழ்வதையும், வணிக நோக்கத்திற்காக அந்த 'கறுப்பு' அடையாளம் சுரண்டப்படுவதையும்- உயர்குடிகளின் பகட்டான போலியான வாழ்க்கை முறையையும் அற்புதமாக இப்படம் சித்தரிக்கின்றது.



அதிலும் மெளனப்படக் காலங்களில் மிகப்பெரும் நடிகனாக ஒரு ஸ்டூடியோவில் விகசித்துக் கொண்டிருக்கும் நாயகன், பின்னர் பேசும் படங்களில் நடிக்கும்போது வீழ்ச்சியடைவதை (சார்ளி சப்ளினுக்கும் இது நிகழ்ந்தது) ஒரு முக்கிய உபகதையாக இது சொல்கின்றது. வீழ்ச்சியடையும் நாயகன், அவனுக்காக திரைக்கதை எழுதும் பெண்மணியிடம் 'நீயும் என்னை கைவிட்டுவிட்டாயா?' என வினாவுகின்ற காட்சியில், அந்த எழுத்தாளப் பெண், 'உனக்கான காலம் முடிந்துவிட்டது. அதை தெளிவாக விளங்கிக் கொள்' என்பாள். நீயும், நானும் புகழ் என்னும் வெளிச்சத்தில் ஒரு பொழுது பிரகாசித்தவர்கள். ஆனால் நம்மை இயக்குபவர்கள் இருட்டில் நிற்பவர்கள். ஒரு வீடு எரியும்போது எல்லாமே சாம்பலாகிப் போனாலும், கரப்பான்பூச்சிகள் தப்பியோடிவிடும். அவை இருளுக்குள் அஞ்ஞானவாசம் இருந்து அடுத்த சந்தர்ப்பங்களுக்காய் காத்திருக்கும். அவ்வாறுதான் இந்த ஸ்டூடியோக்களும், அதன் தயாரிப்பாளர்களும்.

மக்கான காலம் முடிந்துவிட்டது மட்டுமின்றி, இதைப் போல நானும், நீயும் சந்தித்து இபபடி உரையாடுவதைப் போல, நூற்றுக்கணக்கானவர்கள் புகழின் உச்சியில் இருந்து வீழ்ச்சியுறுவதைப் பற்றி எதிர்காலத்திலும் பேசத்தான் போகின்றார்கள். 'நமக்கான காலம் முடிந்துவிட்டது' என்ற உண்மையை முதலில் ஒப்புக்கொள். ஆனால் ஒரு காலத்தில் நாம் ஒளிர்விட்டு ஒளிர்ந்தவர்கள். அதை எதிர்காலத்தில் யாரோ ஒருவன் கடந்தகாலத்தைத் துழாவும்போது நம்மை கண்டுபிடிப்பான். நமது பொற்காலத்தை நாம் இங்கே இல்லாதபோது 50 வருடங்களின் பின்னால் திரும்பக் கொண்டுவருவான். இந்தக் கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்வதுதான் நாம் இனி செய்ய வேண்டியது என்பாள் அந்த திரைக்கதை எழுத்தாளர்.

தமிழில் அசோகமித்திரன் இந்தப் பின்னணியில் வேலை செய்திருக்கின்றார். சில புனைவுகளையும் எழுதியிருக்கின்றார் என்பதும் நினைவுக்கு வந்தது. நாயகன், ஹெமிங்வேயைப் போல துப்பாக்கியால் தன் முடிவைத் தேடிக் கொள்கின்றான். திரையுலகின் உச்சத்துக்குப் போல நியூ ஜேர்ஸி நாயகி இளமையிலே புகழ் வெளிச்சத்தில் இருந்து இல்லாமற் போகின்றாள். அவள் மீது காதல் பித்துப் பிடித்த மெக்ஸிக்கோ குடியேறி மீண்டும் 20 வருடங்களுக்குப் பிறகு மனைவி பிள்ளையுடன் அந்த ஸ்டூடியோவை வந்து பார்க்கின்றான். ஒருகாலத்தில் அந்த ஸ்டூடியோவின் முக்கிய அச்சாக சுழன்ற அவனுக்கு வாயிலைத் தாண்டி உள்ளே போக அனுமதியில்லை. காலம் தன் அச்சில் எதையும் பொருட்படுத்தாது  சுழன்று கொண்டிருக்கின்றது.

 ***********


(Jul 08, 2023)


மட்டக்களப்பு – 02

Monday, August 28, 2023

 

ரு நகரத்திற்குப் போனால் அதன் நூதனசாலைகளைத் தேடிப் போய்ப் பார்ப்பது என் வழமையாக இருக்கும். அதுபோல எங்கெங்கெல்லாம் புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றதோ அவற்றையும் தவறவிடாது சென்று பார்ப்பேன். சில புத்தகக் கண்காட்சிகளை அவை சிறிதோ பெரிதோ- புகைப்படங்களில் பார்த்து என் நினைவின் சேகரங்களைப் பத்திரப்படுத்தி, அடிக்கடி மீள மீள அசை போட்டபடியிருப்பேன். ஓரிடத்திற்கு போக வேண்டும் என்று விரும்பினால், அது அப்போது சாத்தியமில்லை என்று தெரிந்தாலும், அந்த இடத்தைத் தொடர்ந்து manifest செய்துகொண்டிருந்தால் பின்னர் ஒருபொழுது அது நிச்சயம் நிகழும் என்பது என் பாமர நம்பிக்கை. அவ்வாறு மனதில் உருப்போட்டு உருப்போட்டே பொருளாதார நெருக்கடி பிதுக்கியபோதும், முதன்முதலாக சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சில வருடங்களுக்கு முன் போய் இறங்கியிருக்கின்றேன். இலங்கையில் பிரமாண்டமாக பண்டாரநாயக்க சர்வதேச அரங்கில் நடக்கும் புத்தகக் கண்காட்சியிலும் சில தடவைகள் பங்குபெறும் வாய்ப்பைக் காலம் தந்திருந்தது.

மேலும் எனக்கு சின்ன புத்தகக் கடைகள் பிடிப்பது போல, சிறியதாக நடக்கும் புத்தகக் கண்காட்சிகளும் பிடிக்கும். தொடர்ந்து ஊக்கத்தோடும், விருப்பத்தோடும் இந்நிகழ்வுகள் ஆரம்பித்து பின்னர் காலத்தின் நீட்சியில் பெரிதாக வளரும். இன்று பெரும் செலவில் நடக்கும் சென்னை புத்தகக் கண்காட்சி 20/25 வருடங்களுக்கு முன் எவ்வளவு சிறியதாக ஆரம்பித்திருக்கும் என்பதைப் பழைய புகைப்படங்களைப் பார்த்தாலே தெரியும். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இப்போது புத்தகக் கண்காட்சிகளும், விற்பனைகளும் நடைபெறத் தொடங்கியிருக்கின்றன. உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரமின்மைகளைத் தாண்டி இந்நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவோர் உண்மையிலே போற்றுதற்குரியவர்கள்.

கடந்தமுறை அக்கரைப்பற்றில் நிகழ்ந்த புத்தகக் கண்காட்சியை இம்முறை ஏறாவூரில் நண்பர்கள் ஒழுங்குபடுத்தியிருந்தார்கள். நானும் வடகோவையாரும் வெள்ளியிரவு ஏறாவூர் புத்தகக் கண்காட்சிக்குப் போனோம்.  நாம் அங்கே நுழைந்தபோது வாசிப்பின் முக்கியத்துவம்பற்றிய பேச்சு மேடையில் போய்க் கொண்டிருந்தது. வடகோவை வரதராஜரைக் கண்டுவிட்டு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் ஒரு உரையை ஆற்றக் கேட்டனர். அவர் உரை எதையும் நிகழ்வுக்காய்த் தயாரித்து வரவில்லை எனினும் குறுகிய உரையெனினும் நல்லதொரு பேச்சை வழங்கியிருந்தார். என்னோடு திரியும் இந்த மனிதருக்கு இன்னமும் அறிவு வற்றிப் போகாமலிருக்கின்றது என்பது எனக்குப் பெரும் வியப்பாயிருந்தது.

அந்த உரையின் முக்கிய கேள்வியாக, 'ஏன் நாம் வீதிகளில் பழமரங்களை நடுவதில்லை?' என்பது இருந்தது. இலங்கையைப் பொறுத்தவரை எனக்கு அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. கனடாவில் இப்படி பழமரங்களைத் தெருக்களில் நடும்போது, பெரும் செலவு (high maintenance) அதைப் பராமரிக்கத் தேவையாயிருக்கின்றது என்றொரு காரணத்தைச் சொல்கின்றார்கள். அதே சமயம் அங்கே சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள் வீட்டு முன்றலில் பழமரங்களை நடாவிட்டாலும் (ஒவ்வொரு வீட்டின் முன்னும் ஆகக்குறைந்தது ஒரு மரத்தையாவது நகரசபை நாட்டிப் பராமரிக்கும்), பின்வளவுகளில் விரும்பிய எத்தனை பழமரங்கள் என்றாலும் நடலாம். எனக்கு கனடாவில் சொந்தமாக வீடு இல்லாததால், பூசலார் நாயனார் போல எனக்குப் பிடித்த மரங்களை  மனதுக்குள் வளர்த்து பழங்களைப் பறித்துச் சுவைத்துக் கொண்டிருப்பேன்.

ஏறாவூர் புத்தகக் கண்காட்சியில் புத்தகக் கடைகள் என்றால் பத்திற்கும் குறைவானவையே. அதிலும் எனக்குப் நெருக்கமான புத்தகங்களை இரண்டோ மூன்று கடைகளில்தான் வைத்திருந்தனர். சிராஜ் மஸூர் போன்ற நண்பர்களை முதன்முதலாக நேரில் சந்தித்து உரையாடினேன். இதற்கிடையில் 9 மணிக்குள் திரும்பிப் போய்விடவேண்டும் என்று வடகோவையார் அந்தரப்பட்டுக் கொண்டிருந்தார். ஏன் 9 மணியோடு ஊறணிப் பக்கம் ஊரடங்குச் சட்டமோ எனக் கேட்டேன். இல்லையடா வயிறு ஏதோ செய்கின்றது, போகின்ற வழியில் ஏதாவது கடையில் வேப்பெண்ணெய் போத்தல் இரண்டு வாங்கிக் கொண்டுபோக வேண்டும் என்றார் அவர்.

டுத்த நாள் காலையிலே சென்று புத்தகக் கண்காட்சிக்குப் போய் புத்தகங்களோடும் நண்பர்களோடும் ஆறுதலாய்க் கழிப்பதென தீர்மானித்திருந்தோம். ஊறணியிலிந்து ஏறாவூர்க்கு போவதற்கு மட்டுமே 1500 ரூபாவை முதல் நாளிரவு ஓட்டோவுக்குக் கொடுத்திருந்தோம். டேய் நான் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு வர பஸ்ஸுக்கே இந்தளவு பணம் செலவழித்தது இல்லையேஎன வடகோவையார் புலம்பிக் கொண்டிருந்தார். அதற்காக நீங்கள் ஒவ்வொருநாளும் யாழுக்குப் போய் திரும்பி ஏறாவூருக்குப் வரமுடியுமா, வெற்றிலை பாக்கைப் போட்டுவிட்டு சலம்பாமல் இருங்களென' எரிச்சலோடு சொன்னேன். என்ன ஆனாலும் நாளைக்கு பஸ்ஸில் ஏறித்தான் ஏறாவூருக்குப் போவதென்று நாங்கள் இருவருன் தீர்மானித்தோம். பஸ்ஸில் ஒருவர் அங்கே போவதற்கு செலவு 100 ரூபாய்க்கும் குறைவானது.

காலையில் விழித்தபோது காலைச் சாப்பாட்டை ஹொட்டலை நடத்துபவர்கள் வாங்கித் தருகின்றோம் என்றார்கள். வந்த நாளிலிருந்து Fried Rice, கொத்துரொட்டியென்று சாப்பிட்டோமே தவிர, மட்டக்களப்புச் சாப்பாடு எதுவும் உருசித்துப் பார்க்கவில்லை. எனவே இடியப்பம், புட்டோடு மட்டுநகர் கறிகளைச் சுவைப்போம், வாங்கி  வாருங்கள் எனச் சொன்னோம். அவர்களோ எல்லாம் இங்கே எட்டு மணிக்கு முன்னர் முடிந்துவிட்டன என்று பரோட்டாவை வாங்கி வந்து எங்களைக் கவலைப்படச் செய்தார்கள்.

இதற்கிடையில் வடகோவையாருக்கு அறம்புறமாய் தொலைபேசி அழைப்புக்கள் வந்துகொண்டிருந்தன. ஐயா, உங்களை நேரில் பார்க்கவேண்டும், எங்கள் வீட்டுக்கு வந்து விருந்துண்ணுங்கள்’ என்று அவரின் தோழிகளின் அழைப்புக்கள் வேறு. எமக்காய் அறுசுவை மதியவுணவு கல்முனையில் செய்து வைத்திருக்கின்றேன் என்று சொன்ன உமா வரதராஜனின் அழைப்பை,  உமாவின் வீடு 50 கிலோமீற்றர்கள் தொலைவிலிருக்கின்றது, எனக்கு காலும் வலிக்கிறது, அங்கே போவது கடினம் என்று சொல்லி நிராகரித்த வடகோவையாருக்கு அவரின் ஒரு தோழி கூட கடைசிவரை சாப்பாடு போடாதது மட்டுமில்லை, சந்திக்கக் கூட வரவில்லை என்பது பெருஞ்சோகந்தான்.

இனிக்க இனிக்க தொலைபேசியில் பேசும் என் புலம்பெயர் நண்பர்கள்தான், இலங்கைக்கு வரும்போது என்னைச் சந்திக்காமல் திரும்பிப் போகின்றார்கள் என்று நினைத்தேன். இப்போது மட்டக்களப்பாரும் என்னை இப்படிக் கைவிட்டு விட்டார்களே என்று அவர் சொல்லிப்  புலம்பிக் கொண்டிருந்ததைப் பார்க்க எனக்கே பாவமாய்த்தான் இருந்தது. இப்போது மட்டக்களப்பார் அரசியலில் மட்டுமில்லை, காதல்களிலும் யாழ்ப்பாணிகளைச் சரியாகப் புரிந்துகொண்டுவிட்டார்கள், இனி ஏமாற்றுவது அவர்களைக் கடினம் என்று நான் சொன்னேன். அப்படியெனில் உனக்கு மட்டும் 3 கிரஷ் இருக்கிறது என்று சொல்கின்றாயே, எப்படி அது சாத்தியம் என்றார். அதற்குத்தானே 15 வருடங்களுக்கு முன்னரே யாழ்ப்பாணியின் சோக வாக்குமூலம்என்றொரு கதையை எழுதி சொந்த ஊருக்குத் துரோகம் செய்துவிட்டதாக பொதுவில் அறிவித்துவிட்டேன் என்றேன்.


இதுவரை வருந்திக் கொண்டிருந்த வடகோவையாருக்கு இப்போது உற்சாகம் கொப்பளிக்கத் தொடங்கிவிட்டது. 'நான் யாழ்ப்பாணம் போனதும் இப்படி ஒரு கதையை யாழ்ப்பாணிகளைத் திட்டி எழுதுகின்றேன். தோழிகளைச் சம்பாதிக்கின்றேன்' என்றார். 30 வருடங்களாக கதைகளை மீண்டும் எழுதமாட்டேன் என்று அடம்பிடித்த நீங்கள் இந்தக் காரணத்துக்காக கதைகளை எழுதத்தொடங்கினால் அவமானமாக இருக்காதா எனக் கேட்டேன். 'இப்படித்தானடா நான் குண்டசாலையில் இருக்கும்போது ஒரு சிங்களப் பிள்ளை, என் குரல் ஜெயகாந்தனின் சிம்மக்குரல் மாதிரி இருக்கிறது..எனக் காலையிலே ஒரு கதையைச் சொல்லி இல்லாத மீசையை முறுக்கத் தொடங்கினார்.

நான் உடனேயே 'தயவு செய்து நிறுத்துங்கள், பஸ்ஸுக்குப் போக நேரமாகிவிட்டது'  என்றேன். நேற்று இரவு வேப்பெண்ணெய் குடித்துவிட்டு என்னைத் தூங்கவிடாது இரவிரவாய் ஒரே காதல் பிதற்றல். இதற்குச் சில நாட்களுக்கு முன்தான்,  கனடாவில் இருக்கும் செல்வத்தார் பனிவிழும் பனைவனம்என்று ஒரு புத்தகத்தின் அரைவாசிவரை அவரின் முதல் காதலியான பத்மினியை பற்றி உருகி உருகி அவர் எழுதியதை வாசித்து மனம் நொந்துமிருந்தேன். இவர்கள் ஒரேயொரு காதலை வைத்தே இப்படி நாளும் பொழுதும் உருகியும், 200 பக்கங்களில் புத்தகங்களில் எழுதுவார்கள் என்றால், என்  இருபதுக்கும் காதல் கதைகளைச் சொல்லத் தொடங்கினால் இவர்களால் தாங்கமுடியாது போகும். அவற்றை எழுதத் தொடங்கினால் அது 'வெண்முரசை' விட, 25,000 பக்கங்கள் தாண்டிய பெருங்காப்பியமாக இருக்கும். சொல்லத் தொடங்கினால் 'ஆயிரத்தொரு அரேபிய இரவுகளை' விட நீண்டபடி வருடக்கணக்கில் போகும்.

பஸ்ஸில் ஏறாவூருக்குப் போகின்றோம், வெயிலும் உக்கிரமாக இருக்கின்றதென்று sun burn நடப்பதைத் தவிர்க்க, வடகோவையாருக்கு என்னிடம் இருந்த Sun screen lotionஐ எடுத்துக் கொடுத்தேன். அவர் ஏதோ fair & lovely என்ற நினைப்பில் முகத்தில் அப்பி தேய் தேய் என்று 'சிவாஜி'யில் வந்த ரஜினி போல தேய்த்துக் கொண்டிருந்தார். ஐயோ, இது UV கதிர்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும் லோஷன்,  இப்படி இதை நீங்கள் முகத்தில் தேய்த்தால், சூரிய பகவான் நேரடியாகவே உங்கள் முகத்தில் வந்து குடியேறிவிடுவார் என்று சொல்லி அதைப் பாய்ந்து போய் பறித்தெடுத்தேன்.

மட்டக்களப்புக்கு புத்தகக் கொண்டாட்டத்திற்கென வந்து, புத்தகங்களைப் பார்த்ததையோ இடங்களைப் பார்த்த்தையோ விட மிச்ச எல்லாவற்றையும் செய்தாயிற்று என நான் நினைத்துச் சலித்துக் கொண்டு ஊறணியில் இருந்து ஏறாவூருக்கு வடகோவையாரோடு பஸ் எடுத்தேன்.

**********************


(May 23, 2023)


மட்டக்களப்புப் பயணம் – 01

Sunday, August 27, 2023



ட்டக்களப்புக்குப் போவதற்கு, ஏறாவூரில் நிகழ்ந்த புத்தகக் கண்காட்சி ஒரு காரணம். மற்றக்காரணம் அங்கே வடகோவை வரதராஜரின் புதிய நூலொன்று ‘கஸல்பதிப்பகம் ஊடாக வெளிவருவதாகவும் இருந்தது. என்னோடு வேறு சில நண்பர்களும் மட்டக்களப்புக்கு வருவதாக இருந்தாலும். கொழும்பிலும், பாசிக்குடாவிலும் எழுத்தாளர் ஒருவரால் நிகழ்ந்துவிட்ட சில அசம்பாவிதங்களால் தயக்கத்துடன் அவர்கள் பின்வாங்கிவிட்டார்கள்.

நான் மட்டும் விடிகாலை
6 மணிக்கு கொழும்பிலிருந்து மட்டுநகருக்கு ரெயின் எடுத்து, மாலை 3.30 மணிக்கு மட்டக்களப்பு ரெயின் ஸ்ரேசனின் போய் இறங்கினேன். கடந்த சில மாதங்களாக வடகோவையாரை யாழை விட்டுப் பெயர்த்தெடுத்து எங்கேயாவது நண்பர்களுடன் சேர்ந்து சந்திப்பதற்கென திட்டமிடுவேன். அவரோ, அவர் வளர்க்கும் ஆடு, நாய், பக்கத்து வீட்டு பர்வதம் மாமி ஆகியோர் தான் ஊட்டி விடாவிட்டால், பட்டினி கிடந்து வாடிவிடுவார்கள் எனச் சொல்லி, வீட்டை விட்டுப் புறப்படவே  தயங்கிக் கொண்டிருப்பார்.


நேரத்தைப் பொன் போல
ப் போற்றுவோருக்கு உரியவை இரவுநேர அதிதுரித பஸ்கள். இயற்கையையும், கிராமப்புறங்களையும் ஆறுதலாக இரசித்து, ரெயினுக்குள் விற்கப்படும் கச்சானையும், வடையையும், ஹெலப்பவையும் (இலையப்பம்) சுவைத்தபடி போகின்ற என்னைப் போன்றவர்கள் பயணிப்பதற்கு ரெயினே பொருத்தமானது. இலங்கையில் ரெயினில் போவோர் சில நேரம் திகைக்கும் இடங்களுண்டு. முன்னே போய்க் கொண்டிருக்கும் ரெயின், சட்டென்று எங்கேயாவது ஸ்ரேசனில் நிறுத்தி பின்பக்கத்தால் ஓடத் தொடங்கும். அப்படித் திகைத்து பதறக்கூடாதென்று சில ரெயின்களில் முதல்தர வகுப்புக்களில் நம் இருக்கைகளை 360 டிகிரிகளில் மாற்றுகின்ற வசதிகளையும் செய்திருக்கின்றார்கள்.


இப்படி ஒரு வசதி இந்த முழுதீவு நாட்டுக்கும் இருந்தால் ஆபிரிக்காப் பக்கமோ, அமெரிக்காப் பக்கமோ இந்த நாட்டையும் அவ்வப்போது சுக்கான் பிடித்துக்கொண்டு படகைப் போல நகர்த்திக் கொண்டு வந்தால், என்னைப் போன்றவர்கள் கனடாவில் இருந்து  நிறையப் பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து விமானம் எடுத்து வரும் கஷ்டமும் இருக்காது.


நான் மட்டுநகர் போவதற்குள், காலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து பஸ்ஸெடுத்து வடகோவையார் அங்கே வந்து சேர்ந்து விட்டிருந்தார். அவர் வீட்டில் வளர்த்த ஒரு தறுதலை ஆட்டுக்கு என் பெயரை வைத்ததாலோ என்னவோ பாசம் பொங்கி, ‘நீ வந்தால்தான் நான் சாப்பிடப் போவேன் என்று உருகியுருகி மெஸெஜ் அனுப்பிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இயலாமல், ‘உங்களுக்குப் பசித்தால் போய்ச் சாப்பிடுங்கள்என்று சொன்னேன். நம்மைப் போன்ற ஆண்களுக்கு எங்கே சொந்தப்புத்தி இருக்கின்றது? 'உங்களுக்குப் பசித்தால் போய்ச் சாப்பிடுங்கள்என்று இவன் சொல்கின்றான் இதன் அர்த்தம் என்ன என்று வடகோவையார் தன் கிரஷிற்கு அனுப்பி இதை decode செய்யக் கேட்டிருக்கின்றார். 


அந்தக் கிரஷோ, ‘உங்களைப் போய்ச் சாப்பிடுங்கள் என்று நேரடியாகச் சொல்லவில்லை, உங்களுக்குப் பசித்தால் மட்டும் போய்ச் சாப்பிடுங்கள் என்றுதான் சொல்லியிருக்கின்றான். ஆகவே நீங்கள் போய்த் தனியே சாப்பிடவேண்டாம், பிறகு அவன் கோபித்து அடுத்தவேளைச் சோற்றில் நஞ்சைக் கூட வைத்துவிடுவான்' என்று பயமுறுத்தியிருக்கின்றார். பாவம் வடகோவையார், நான் போகும்போது சாப்பாடில்லாது அரைமயக்க நிலையில் அறைக்குள் அலைந்தபடி இருந்தார்.

நாங்கள் அங்குமிங்கும் அலைந்து ஒரு கிலோமீற்றர் நடந்து போய்ப் பார்த்தபோதும் சாப்பாட்டுக் கடை தென்படவில்லை. கமகமஎன்றும் ஓலைஎன்றும் நல்ல பெயர் வைத்திருந்தார்களே தவிர சாப்பாட்டுக் கடையைத் திறந்து வைத்தாரில்லை. பிறகு ஓட்டோ ஒன்றைப் பிடித்துப் போய்ச் சாப்பிட்டு வந்தோம். அங்கே நல்ல பால் அப்பமும் கிடைத்தது. அந்தக் கடையில் சுடச்சுட போட்டுத்தந்த தேநீரின் சுவையோ அருமை.

யாழ்ப்பாணத்தில் ஒரு ஒழுங்கான, சுடச்சுடத் தேநீர் விற்கும் கடையையே இப்போது எளிதில் காணமுடியாது. கொழும்பில் அப்படிக் கேட்பதே பெரும் பாவம். கொழும்பில் ஒரு கஃபேயில் ரீ கேட்க, 800 ரூபாய் பில் வந்தது. ரீயிற்கு எங்கே பால் என்று கேட்க, அதற்கும் 400 ரூபாய் மேலதிகமாக எடுத்து, ஒரு பாற்தேத்தண்ணி 1200 ரூபாவா என்று எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்கள். அதன் பிறகு கொழும்பில் கடைகளில் ரீயே கேட்பதில்லை.


மக்குப் பக்கமாய் சாப்பாட்டுக் கடைகள் மட்டுமில்லை, நாங்கள் போக வேண்டிய ஏறாவூர் புத்தகக் கண்காட்சி கூட, 10 கிலோமீற்றர் தொலைவில் இருந்தது. ஏன் இப்படி நடுவாந்திரமான ஊரில் இடம் எடுத்தீர்கள் என வடகோவையாரைக் கேட்டேன். அவரோ, இந்த ஊர்ப் பெயர் ஒரு பொம்பிளைப் பிள்ளையின் பெயர் போலக் கிடந்தது. அதில் நான் மயங்கி மற்ற வசதிகளைப் பார்க்காது இந்த இடத்தில் ரூமைப் பதிவு செய்துவிட்டேன், மன்னித்துவிடு என்றார்.

ஊரின் பெயர் ஊறணி!

அழகான பெயர்தான். அறையிலிருந்து பார்த்தால் கடலும் தெரியும். ஏதேனும் பாவம் செய்தால் போவதற்கு பக்கத்தில் அமெரிக்கன் மிஷன் தேவாலயமும் இருந்ததுதான். ஆனால் அதற்காய் யாரேனும் ஒருவர் மற்ற வசதிகளைப் பார்க்காது, ஊரின் பெயரை மட்டும் பார்த்து மயங்குவார்களா என்ன?

இதற்கிடையில் அவர் மட்டக்களப்பார் பாயோடு ஒட்ட வைத்துவிடுவார்கள் என்றொரு ஜதீகக் கதை இருக்கிறது
, எதற்கும் mattress இற்குக் கீழே மாந்தீரிகம் வைத்த பாய் எதுவும் இருக்கா என்று தேடிப்பார் என்றார். எனக்கு வந்த எரிச்சலுக்கு, அந்தச் சனம் அப்பாவிச் சனம், என்னுடைய இப்போதைய 3 கிரஷ்கள் மட்டக்களப்புத்தான். நம்மடைய யாழ்ப்பாணிகள்தான் தந்திரமாக இங்கே வந்து இந்த ஊர் செழுமையையும், பெண்களின் அழகையும் கண்டு பாயோடு ஒட்டிக்கொள்கின்றவர்கள். ஏனென்றால், பாருங்கள் யாழ்ப்பாணிகள் என்ற பெயரிலே இருப்பதென்ன? ‘பாணிதானே. அந்தப் (பனங்காய்ப்)பாணியை ஒட்டிக்கொண்டு மட்டக்களப்புக்கு வந்து இங்கிருப்போரோடு ஒட்டிப்போட்டு, ஏதோ மட்டக்களப்பார் பாயோடு ஒட்ட வைக்கின்றவர்கள் என்று கதையை இந்த யாழ்ப்பாணிகள் மாற்றிவிட்டனர் என்றேன்.

இவ்வளவும் நான் சொன்னதன் பிறகு, வடகோவையார் நீ இப்படிச் சொன்னது எனக்குச் சரியான கவலையாக இருக்கிறதுஎன்றார். எதையெதையோ வாய்க்கு வந்ததை எல்லாம் நான் பேச அவர் மனமுடைந்துவிட்டாரோ என்று நினைத்து ஏன்எனக் கேட்டேன். இல்லையடா உண்மையிலை உனக்கு மட்டக்களப்பில் 3 கிரஷ் இருக்கா? எனக்கு இந்த வயசில் யாழ்ப்பாணத்தில் கூட ஒரு கிரஷும் இல்லையே. என் வாழ்விற்கு அர்த்தமே இல்லாமற் போச்சுதடா?’ என்றார்.

எனக்கு வந்ததே ஒரு விசர்!

இந்த மனிதரோடு இரண்டு நாள்கள் பகலும் இரவும் திரிந்தாலே, சொந்த செலவில் நானே எனக்கு சூனியம் வைத்து பைத்தியமாகப் போகின்றேன் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, இரவு புத்தகக் கண்காட்சிக்குப் போகத் தயாரானேன்.

*********************

 

(May 21 , 2023)


கார்காலக் குறிப்புகள் - 19

Saturday, August 26, 2023

 

ண்மையில் சில புனைவுகளை வாசித்து முடித்திருந்தேன். எவையும் அவ்வளவு பெரிதாக ஈர்க்கவில்லை. எல்லாவற்றிற்கும் உழைப்புத் தேவை. எழுத்து சார்ந்தும் அது இருக்கிறது என்ற புரிதல் இருக்கிறது. எனவே இப்போது எதிர்மறையான விமர்சனங்கள் இருப்பின் அதை நேரடியாக முன்வைப்பதில்லை. அவ்வகை விமர்சனங்கள் தேவையில்லை என்பதால் அல்ல; அதைவிட எவ்வளவோ நல்ல படைப்புக்கள் கவனிக்காமல் இருக்கின்றன என்பதன் நிமித்தம் எனக் கொள்க.

மற்றும்படி வாசிப்பில் வரும் ஏமாற்றங்களை, சலிப்புக்களை மறைமுகமாகச் சொல்வது போதுமென்று நினைக்கின்றேன். அதாவது அவ்வாறு குறிப்பிடும்போது அந்தப் படைப்பாளியும், அந்தப் படைப்பை வாசித்தவர்களும் புரிந்துகொள்ளுமளவிற்கு மறைமுகமாய்ச் சொல்லிவிட்டு நகருதல் நலம்.

ஓர் எழுத்தாளர் பால்ய விவாகத்தையும், கைம்பெண்களையும் பின்னணியில் வைத்து எழுதிய ஒரு புனைவை வாசித்தேன். ஒரு சில வரலாற்று நிகழ்வுகளுடன் ஒரு கற்பனைப் பாத்திரத்தை முன்வைத்து அது எழுதப்பட்டாலும், அது ஒரு அலுப்பான வாசிப்பையே தந்திருந்தது. கிட்டத்தட்ட கட்டுரை மொழியிற்கு அண்மையாக எந்த பாத்திரங்களுக்குள்ளும் அவ்வளவு உள்நுழைந்து போகாத எழுத்து அது. இதைவிட அந்தக் குறிப்பிட்ட பின்னணியில் ஒரு கட்டுரையை (அது ஒரு புத்தகமாகவும் ஏற்கனவே வந்திருக்கின்றது) வாசித்து விட்டுப் போகலாம் என்ற நினைப்பே வந்தது.


சிலவேளைகளில் ஒரு நாவலை வைத்து படைப்பாளியை மதிப்பிடக்கூடாது. எல்லாப் படைப்பாளிகளுக்கும் சரிவுகளும் உண்டென்பதால், அவர் ஒரு பாடகியைப் பின்னணியாக வைத்து எழுதிய இன்னொரு நாவலையும் இதே காலகட்டத்தில் வாசித்தும் பார்த்தேன். அதுவும் ஏமாற்றத்தையே தந்திருந்தது. எல்லாமே வாழ்வில் ஓர் ஒழுங்கில் நடப்பதற்கு எதற்கு ஒரு புனைவு வேண்டியிருக்கின்றது. சில அத்தியாயங்களில் ஒரு தெறிப்பு வந்து மர்மமான நாவலாக ஆகிவிடும் சந்தர்ப்பத்தையும் கடைசி அத்தியாயங்களில் ஒரு கலக்கு கலக்கி அதையும் ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிட்டார் எழுதியவர். இத்தனைக்கும் அந்த எழுத்தாளர் நீண்டகாலம் எழுதிக் கொண்டிருப்பவர்; நிறைய விருதுகளையும் பெற்றிருக்கின்றார். அவ்வாறானவர்களுக்கு காலம் மன்னிப்பை ஒரு கருணையாக வழங்கலாம், வாசகர்களிடம் தொடர்ந்து அதையே எதிர்பார்த்தால் வாசிப்பவர்கள் பாவமில்லையா?

ஜெயமோகனின் 'வெள்ளையானை'யையும் இப்போதுதான் வாசிக்க சந்தர்ப்பம் வந்தது (நன்றி: ரொறொண்டோ நூலகம்). அது ஒரு முக்கியமான களத்தில் விரிகின்ற நாவல் என்றாலும், ஜெமோவின் கவனிக்கத்தக்க நாவலுக்குள் -என் வாசிப்பில்- வராது. எப்படி மாரி செல்வராஜின் 'மாமன்னன்' சொல்கின்ற செய்தி/அரசியல் முக்கியமானதோ, அதேபோல் அது முழுமையான படைப்பாக நிறைவைத் தராததைப் போல, ‘வெள்ளையானையையும் சொல்லலாம்.

எனினும் நாம் ஒரு வரலாற்றை மீள நினைக்க வைத்ததற்காக
'வெள்ளையானை'யை வரவேற்க வேண்டும். இன்று மெரீனா கடற்கரையோரமாக விவேகானந்தர் இல்லமாக நிமிர்ந்து நிற்கும் அந்தக் கட்டடத்தை எத்தனை பேர் எளிதாகக் கடந்து போயிருப்போம். ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன் அது ஒரு ஜஸ்ஹவுஸாக இருந்து, அங்கே எப்படி தலித்துக்கள் நடத்தப்பட்டார்கள் என்பதையும், அப்போது தமிழகத்தை உலுக்கிய பெரும் பஞ்சத்தின் அவலத்தையும் இந்த நாவலினூடு நாம் அறிந்து கொள்கின்றோம். அந்தப் பஞ்சந்தான், பிரிட்டிஷ்காரர் இலங்கையில் தேயிலை பயிரிடத் தொடங்கியபோது தமிழகத்திலிருந்து மக்களை-  இடையில் உயிரிழந்தாலும் பரவாயில்லையென- கடல் கடந்து அலையலையாக அனுப்பி வைத்திருப்பதில் பெரும் பங்கு வகித்திருக்கும் என்று நினைக்கின்றேன். இந்நாவலில் அந்தப் புலம்பெயர்வு பற்றிய குறிப்புகள் இல்லை; அது இந்நாவலின் களத்துக்கு அவ்வளவு முக்கியமுமல்ல.

ஜெயமோகன் ஒரு வரலாற்று நிகழ்வை -ஜஸ்ஹவுஸ் வேலைநிறுத்தத்தை- சுவாரசியமான புனைவாக்க முயன்றளவுக்கு, மேற்சொன்ன எழுத்தாளர்க்கு பால்யவயது திருமணங்களையும், அதனால் இளவயதில் கைம்பெண்ணாகும் பெண்கள் அந்த மரபுகளை உடைத்து முதற்சிறகை விரித்த வரலாற்று நிகழ்வுகளையும் நம்மைப் பாதிக்கச் செய்யுமளவுக்கு எழுதமுடியாது போனது ஒருவகையில் கவலையானது.

இப்படியாக இன்னொரு படைப்பாளியின் சிறுகதைத் தொகுப்பையும் வாசித்தேன். அவர் ஒரு மூத்த படைப்பாளியின் தீவிர வட்டத்துக்குள் இயங்கி வருபவர். அந்த மூத்த படைப்பாளியும் தன் வட்டத்துக்குள் இருக்கும் இவரைப் போன்றவர்களைத் தொடர்ந்து முன்னிறுத்துகின்றவர்தான். இந்த இளம் படைப்பாளிக்கு சொல்வதற்குக் கதைகள் இருக்கின்றன. ஆனால் மூத்த படைப்பாளியின் பாதிப்பிலிருந்து வெளியில் வராதது போல இவரது கதைகளை வாசிக்கும்போது தோன்றியது. இவருக்கு மட்டுமில்லை, அந்தப் படைப்பாளியைச் சுற்றியிருப்பவர்களின் சிலரின் படைப்புக்களை அண்மைக்காலமாக வாசிக்கும்போது அந்தப் பாதிப்பு தெளிவாகத் தெரிகின்றது. அந்தப் படைப்பாளியைப் போலவே கதைகளைத் தொடங்குகின்றார்கள். கதைக்கான களங்களும் கூட ஏற்கனவே அவர் எழுதியவற்றுக்கு அண்மையாகவே இருக்கச் செய்கின்றன. மூத்தபடைப்பாளி கூட சில இடங்களில், 'ஒருவர் ஆசிரியராக இருந்தால் கூட, நீங்கள் அந்த ஆசிரியரிடம் முழுதாக உங்கள் சுயத்தை கையளிக்கத் தேவையில்லை' என்றுதான் கூறுகின்றார். ஆனால் அவரைச் சுற்றியிருப்பவர்களுக்குத்தான் தமது ஆசிரியரை விட்டு வெளியே வருதல் கடினமாக இருக்கின்றது போலும்.

வ்வாறு அண்மையில் பல கதைகளை வாசித்து ஒருவித சலிப்பு மனோநிலையில் இருந்த எனக்கு தற்செயலாக இங்குள்ள நூலகத்தில் எடுத்து வாசிக்கத் தொடங்கிய சர்வோத்தமன் சடகோபனின் 'முறையிட ஒரு கடவுள்' மிக நிறைவான வாசிப்பைத் தந்தது. அவரது எழுத்து நடையே இன்றைய தேய்வழக்கு மொழியில் இல்லாது ஒரு புத்துணர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. மேலும் 15 கதைகளையும், 150 பக்கங்களுக்குள் முடித்தும் விடுகின்றார். சிக்கனமான மொழி, ஒருவகையில் அசோகமித்திரன் போன்றவர்களை நினைவூட்டினாலும், சர்வோத்தமனின் கதைகளின் அனேக பாத்திரங்கள் குடும்பத்திலிருந்தும், சமூகத்திலிருந்தும் அந்நியமாகின்றவை. அவை அந்நியமாவதால் சமூகத்தைப் பழிப்பதில்லை, அவை தமக்கான வாழ்வை கண்டடைகின்றன. சில பாத்திரங்கள் இப்படி அந்நியமாதலால் தற்கொலைக்கு முயற்சித்தாலும், தற்கொலையைச் செய்துகொண்டாலும், அவை கூட 'சும்மா ஒரு தற்கொலை' என்கின்ற வகைக்குள் அடங்குவதில்லை.

ஏற்கனவே பழக்கப்பட்ட மொழியிலிருந்து ஒரு படைப்பாளி தனக்கான சொந்த மொழியைக் கண்டடைவது, அந்தப் படைப்பாளி வாசகர்களுக்குக் கொடுக்கின்ற முக்கிய வெகுமதி என்பேன். சர்வோத்தமன் அதை இந்தத் தொகுப்பில் அவரின் முதல் தொகுப்பு என்று நாம் உணராவண்ணம் செய்திருக்கின்றார். மேலும் இந்தக் கதைகளை வாசிக்கும்போது சர்வோத்தமனுக்கு இருக்கும் ஆழமான வாசிப்பு நமக்கு எளிதாகத் தென்படும். அவற்றை திளைக்கச் திளைக்கச் சொல்லாமல், போகின்றபோக்கில் அவர் கதைளுக்கான களங்களோடு இணைத்துச் சொல்லுவதைக் குறிப்பிடவேண்டும். அண்மையில் வாசித்தவற்றில் ஜே.பி.சாணக்யாவின் 'பெருமைக்குரிய கடிகாரத்திற்கு',  பிறகு என்னை வசீகரித்த ஒரு சிறுகதைத் தொகுப்பு சர்வோத்தமனின் 'முறையிட ஒரு கடவுள்' என்று சொல்வேன்.

**********

 

(Jul 19, 2023)


கார்காலக் குறிப்புகள் - 18

Tuesday, August 22, 2023

 Biopics

*************

டந்த சில நாட்களாகப் பார்த்த திரைப்படங்கள் எல்லாம் Biopic ஆக இருந்தது தற்செயல்தான். சல்வடோர் டாலியின் 'Dali Land ', எல்விஸ் பிரிஸ்லியின் 'Elvis' ஆகிய திரைப்படங்களையும், ஆர்னால்ட் ஸ்வாஸ்நேக்கரின் 'The Schwarzenegger' அன்னா நிக்கோல் ஸ்மித்தின் 'Tragic Beauty: Anna Nicole Smith' போன்ற ஆவணப்படங்களையும் பார்த்திருந்தேன்.

அமெரிக்காவில் பல பாடகர்கள், நடிகர்கள் புகழின் உச்சத்தில் போய் அழிந்து போவது ஓரு இயல்பு போல ஆகிவிட்டது. மைக்கல் ஜாக்சன், பிரின்ஸ், விட்னி ஹியூஸ்டன் போன்றவர்களின் இழப்புக்கள் எதனால் ஏற்பட்டது என்று தெளியும்போது எல்விஸ் பிரின்ஸியினதும், அன்னா ஸிமித்தினதும் சடுதியான இளம் வயது மரணங்கள் எப்படி ஏற்பட்டிருக்கும் என்பது எளிதாக விளங்கும். இதையெல்லாம் தெரிந்து கொண்டே தம்மைத் தாமே அழிக்க இந்தப் புகழ் வெளிச்சங்களுக்கு விட்டில் பூச்சிகளைப் போல இன்னமும் பலர் பறந்து போய்க் கொண்டிருக்கின்றனர்.

அதேவேளை டாலியும்
, ஸ்வாஸ்நேக்கரும் ஒருவகையில் தப்பி 70 ஐத் தாண்டி வாழ/வாழ்ந்து கொண்டிருக்க முடிந்திருக்கின்றது. டாலியையும், ஸ்வாஸ்நேக்கரையும் ஒரு புள்ளியில் எளிதாக இணைத்துப் பார்க்க முடிகிறது. அவர்கள் இருவருக்கும் இருந்த திறமைகளுக்கு அப்பால், தமது திறமை/படைப்பை விற்கும் சாமர்த்தியம் தெரிந்திருக்கின்றது. Surrealismஐ தனது படைப்பில் அதன் உச்சத்திற்குக் கொண்டு சென்றாலும், டாலி தன் eccentric தன்மையால் அவரது காலத்தைய கலைஞர்களை விட பெரும் பணம் சம்பாதிக்கும் ஒருவராக தன்னை மாற்றிக் கொண்டவர். ஆர்னால்ட்டும் தனது திறமையை விற்கும் தகுதியுடையவர். ஆகவேதான் அவர் தான் திரைப்படங்களில் நடிக்க முன்னரே ஒரு மில்லியனராக நான் மாறிவிட்டேன். எனக்குப் பணம் பெரும் விடயமாக இருக்கவில்லை என்கின்றார்.

நேற்று எங்கள் நகருக்கு புதிய நகரபிதாவைத் (Toronto Mayor) தேர்ந்தெடுத்திருந்தனர். அதற்கு முன் தொடர்ச்சியாக மூன்று முறை வென்றவர் இடைநடுவில் தனது பதவியை இராஜினாமாய்ச் செய்யவேண்டியதாகப் போய்விட்டது. காரணம், அவர் அந்தப் பதவியில் இருந்துகொண்டு தன்னோடு வேலை செய்த ஒரு பெண்ணோடு உறவுகொண்டிருந்தது பொதுவெளிக்கு வந்து விட்டமையாலாகும். எல்லா ஆண்களும் அவமானப்பட்டு வெளியேறும் பொதுவான இடமாக இதுவே இருக்கின்றது. திருமணம் செய்தவர்களை அதிகம் ஈர்க்கும் ஒரு டேட்டிங் தளமான Ashley Madison னின் தாரக மந்திரமே 'Life is short. Have an affair'. அதில் கிட்டத்தட்ட 65 மில்லியன் அங்கத்தவர்கள், 45இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கின்றார்கள் என்கின்றார்கள்.

எங்கள் நகரபிதாவைப் போலவே
, ஸ்வாஸ்நேக்கரும் 'Life is short. Have an affair' என்று அவரது மனைவி நான்கு பிள்ளைகளுடன் இருக்கும்போது, அவரின் வீட்டு வேலைக்கு வந்த பெண்ணோடு உறவு கொண்டு, அது வெளிச்சத்துக்கு வந்து அவருக்கும் விவாகரத்தானது. தனக்கு எல்லாம் எப்படி வேண்டும் என்று மிகவும் கணக்கிட்டு உடல் வளர்த்தோன் (body builder), நடிகர், அரசியல்வாதி என பல்வேறு பரிமாணங்கள் எடுக்கும் ஆர்னால்ட் திருமணத்துக்கு மீறிய உறவையும் கணக்கிட்டுச் செய்தாரா, இல்லையா என்பது அவரது தனிப்பட்ட விடயம். ஆனால் genuine ஆக அவர் இந்த ஆவணப்படத்தில் இது குறித்துப் பேசுகின்றார். ஆனால் அதே சமயம் இவற்றை 'அந்தந்த நேரத்து நியாயம்' என்று ஆண்களைப் போல பெண்களும் தமது இவ்வாறான பலவீனங்களை வெளிப்படையாகப் பேச அவர்களுக்குரிய வெளிகள் இருக்கின்றனவா என்பதே கேள்வி. அது அன்னா நிக்கோலுக்கு, ஆர்னோல்ட் போல இல்லை என்பதே கவனிக்க வேண்டியது.

அன்னா மூத்த மகனின் இழப்பின் துயரத்தில் இருக்கும்போதே
, அவருக்கு பிறந்த புதுக்குழந்தையின் தகப்பன் யாரென்ற செய்திகள்/நீதிமன்ற விசாரணைகள் தொடங்கிவிட்டன. அவரின் புகழின் சரிவோடு, மகனின் சடுதியான இழப்பு, அன்னாவை அவர் தன் முடிவைத் தேடிச்செல்வதை விரைவுபடுத்துகின்றது. மகன் இறந்த சில மாதங்களில் அன்னா தனக்கான முடிவை, மர்லின் மன்றோவைப் போலத் தேடிக் கொள்கின்றார்.

ஆக புகழும், பெரும் பணமும் இங்கே எல்விஸ், அன்னா போன்றவர்களுக்கு எந்த நிம்மதியையோ, சந்தோசத்தையோ பெரிதாகக் கொடுக்கவில்லை. பாடகர்கள், நடிகர்களை விட அவர்களுக்குரிய முகவர்கள், தயாரிப்பாளர்கள் அரங்கின் முன்னணியில் வராமல் செழிப்பானதொரு வாழ்க்கையை வாழவும் கூடும். அவர்களுக்கு இவர்கள் தங்க முட்டையிடும் வாத்துக்கள். எப்போது இந்தப் பாடகர்கள்/நடிகர்களை விட இன்னும் அதிக தங்க முட்டையிடும் வாத்துக்கள் வருகின்றனவோ அவர்களைத் தேடிப் போகவும் இவர்கள் தயங்கமாட்டார்கள். ஒரு காலத்தில் மில்லியனராக இருந்த டாலி கூட கடைசிக்காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டார் என்றுதான் டாலியோடு கூட இருந்த ஒரு இளைஞனின் பார்வையில் 'DaliLand' இல் சித்திரிக்கப்படுகின்றது.

நமக்குச் சிறந்த வாழ்க்கையென சட்டகங்கள் இட்டு காட்டப்படுபவை எல்லாம் தோற்ற மயக்கங்கள்தானோ? அப்படியெனில் எது எமக்கான வாழ்க்கை என்பதற்கு எந்த முன்னுதாரணமும் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? அதேவேளை சர்ச்சைகள் நிறைந்த, tragedy ஆன முடிவை நோக்கிச் செல்லும் வாழ்க்கையைத் தேடுவதுதானா மனிதர்களின் ஆழ்மன இச்சையாக இருக்கின்றதா என்ற கேள்வியையும் நாம் கேட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது.

****************


(June, 2023)

'தாய்லாந்து' - சரவணன் மாணிக்கவாசகம்

 

'தாய்லாந்து' - இளங்கோ:

ஆசிரியர் குறிப்பு:

யாழ்ப்பாணம் அம்பனையில் பிறந்தவர். பதினாறு வயதில் கனடாவிற்குப் புலம்பெயர்ந்தவர். கவிதைகள், சிறுகதைகள், நாவல் தவிர, கட்டுரைகள், விமர்சனம் போன்றவற்றையும் எழுதி வருகிறார். இது இவரது ஏழாவது நூல்.

ஒரே நாட்டில் பிறந்தவர்கள், போரால் புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று, பின் இந்தியாவில் சந்தித்து, தாய்லாந்திற்கு சென்று காதலை வளர்க்கும் கதை. பயணக் கட்டுரை போல் ஆரம்பிக்கும் நாவல், பின் பலபக்கங்களுக்கு உணர்ச்சிப் பிதற்றல்களைப் பரிமாற்றம் செய்துபின் Pre-honeymoon ஆகிறது.

இயக்கத்தில் இருந்தவர்கள் போருக்குப்பின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப சிரமப்படுவதை, ஒருவருக்கொருவர் உளவாளி என்று சந்தேகம் கொள்வதை, மழைவிட்டும் தூவானம் போல் பழைய சச்சரவுகள் வேறுவேறு நாடுகளிலும் தொடர்வதைச் சொல்வதுடன், ஒரு காதல்கதையையும் சொல்ல முயன்றிருக்கிறார் இளங்கோ.

காதலர் இருவருக்கும் பெயரில்லை, சொல்லப் போனால் இந்தக் கதையின் எந்தக் கதாபாத்திரத்திற்கும் பெயர் குறிப்பிடப்படவில்லை. நண்பன், மாமா, மகள் என்று கடக்கப்படுகிறது. வழமைக்கு மாறாக காதலி ஆளுமை மிக்கவளாகவும், காதலன் அதில் ஆழ்ந்து போகிறவனாகவும் வருகிறார்கள். நாவலின் Presentation யுத்தியும் வித்தியாசமாக அமைந்திருக்கிறது. ஒரு காதல் உடைவதில் ஆரம்பிக்கும் நாவல், அடுத்த காதலைப் பல பரிசோதனைகளுக்கு உள்ளாக்குகிறது.
Romance in different flavor.

பிரதிக்கு:

எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ. 180.

******************


நன்றி: சரவணன் மாணிக்கவாசகம்

https://www.facebook.com/saravanan.manickavasagam.7/posts/pfbid02n7R5rwRVaQLtdbJv7fWjaJ6Hd57k2w6LCkrzRS4YaX9TKYzgrCEQEdo6D9uEg8X1l


கார்காலக் குறிப்புகள் - 17

Sunday, August 20, 2023

 

சகீனாவின் முத்தம்

************

"ற்செயல் என்பது கிடையாது. சில நிகழ்வுகளின் முந்தைய தொடர்பு விதிகள் நமக்குப் புலப்படுவதில்லை. அவ்வளவுதான்." என்ற வரிகளோடு தொடங்குகின்றது 'சகீனாவின் முத்தம்' என்கின்ற இந்த நாவல். அதற்கேற்ப இந்நாவலில் தற்செயல் போல நிகழ்கின்ற பல சம்பவங்களுக்கு ஏதோ காரண காரியங்கள் இருக்கின்றன. பெருநகரத்தில் வசிக்கின்ற வெங்கட் என்கின்ற வெங்கட் ரமணனின் பார்வையில் கதை சொல்லப்படுகின்றது.

வெங்கட்டிற்கு விஜி என்கின்ற மனைவியும், 20 வயதில் இருக்கின்ற ரேகா என்கின்ற மகளும் இருக்கின்றனர். நாவலின் தொடக்கத்தில் ஒரு அரசியல் கட்சி சார்ந்த குழு வெங்கட்டின் மகள் ரேகாவோடு பேச வேண்டும் என்று வீட்டுக்கு வந்து வெங்கட்டை அதட்டுகின்றனர். ரேகாவோ வெங்கட் பிறந்த தொலைதூர ஊரான சிறு கிராமத்துக்குச் சென்றிருக்கின்றார். அவ்வாறு சென்ற ரேகாவைக் காணவில்லை என்று வெங்கட்டும், விஜியும் பதட்டப்பட்டு அந்த ஊருக்குப் புறப்படுகின்றார். அந்தப் பயணத்தோடு வெங்கட் தன் சிறுவயது அனுபவங்களையும், அவரின் குடும்ப வரலாற்றையும் வாசகர்க்குச் சொல்லத் தொடங்குகின்றார்.

பெருநகரில் மத்தியதர வர்க்கமாய், மனைவி பிள்ளையோடு வெங்கட் வாழ்ந்தாலும், அவரின் கதைசொல்லலில் அவரையறியாமலே அவர் இந்த சமூகத்தின் அனைத்துப் பிற்போக்குத் தனங்களின் பிரதிநிதியாக இருப்பதைக் காண்கின்றோம். ஒரு தேர்தலின்போது பெண்கள் இப்படித்தான் ஆடைகள் அணியவேண்டும் என்கின்ற அரசியல்வாதிக்கு எதிராக மனைவியும், மகளும் இருந்தாலும், வெங்கட் அந்த அரசியல்வாதிக்கு -நேரடியாகச் சொல்லாவிட்டாலும்- வாக்குப் போடுகின்றார்.

இந்த ஆடை பற்றி குடும்பத்தில் நடக்கும் விவாதத்தின்போது வெங்கட்டின் மனைவி விஜி தன் தோழியான அனகாவின் கதையைச் சொல்வார். அனகாவின் கணவன் வியாபாரம் செய்பவன். ஆசிரியராக இருக்கும் அனகாவை வேலையை விட்டுவிட நச்சரிப்பவன். சேலை இல்லாமல் வேறு ஆடை அணிய விடாதவன். அவனோடு வாழ்வதென்பதே அவமானம் என்று அனகா சொல்கின்றாள். மேலும் 'அவனுடன் படுப்பது என்றால் மிகவும் அசிங்கமாகத் தோண்டும். அவன் கைபட்டாலே போதும் வாந்தி வரும். என்ன செய்வது என் தலையெழுத்து' என்று சொல்லி அனகா அழுகின்றாள்.

அவ்வாறு ஆடைகளின் கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் ஒரு 'கலாசார காவலனே' தேர்தலில் வெல்கின்றான். இதனால் விஜியும், ரேகாவும் கோபமடைகின்றனர். ரேகா அப்போது சொல்கின்றாள், 'அம்மா இவனுக்கு ஓட்டுப்போட்ட இத்தனை இலட்சம் பேரில் பாதிக்கு மேல் ஆண்களாக இருப்பார்கள். திருமணம் ஆனவர்கள் நிச்சயம் இதில் கால்வாசிப் பேர் இருப்பார்கள். அவர்கள் மனைவிகளின் பாடு என்னவாகும்' என்கின்றாள்.

அதற்கு விஜி கொடுக்கும் பதில்தான் சுவாரசியமானது: 'அனகாவின் கணவனைப் போல எல்லாவற்றையும் திறந்து வைப்பது ஒருவகை. ஆகக்குறைந்தது எதை சகித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதாவது தெரிந்திருக்கும். ஆனால் இரகசியமாகச் சாணி திங்கும் இந்த துரோகிகள்தான் மிகவும் அசிங்கம். வாய் நாறடித்தாலும் திங்கவில்லை என்று வெட்கமில்லாமல் பொய்சொல்லி சாதிப்பார்கள்' என்கின்றார்.

உண்மையில் இதுதான் இன்று சமூக வலைத்தளங்களில் மட்டுமில்லை, யதார்த்ததிலும் நடந்துகொண்டிருக்கின்றது. தம்மை முற்போக்கானவர்களாய்க் காட்டிக் கொண்டிருக்கும் பலரின் முகமூடிகளுக்குப் பின்னால் இருப்பது படுபிற்போக்குத்தனமே. இதை இந்த நாவலில் பல்வேறு தளங்களில் வெங்கட் என்கின்ற பாத்திரத்தின் மூலம் விவேக் ஷான்பாக் காட்டுகின்ற இடங்கள் ஆழமானவை.

ரேகா காணாமல் போய்விட்டார் என்று தேடிக் கொண்டிருக்கும்போதுதான் ரமணன் என்கின்ற வெங்கட்டின் மாமாவின் கதை சொல்லப்படுகின்றது. வெங்கட்டின் தாயின் தம்பியான ரமணனை அவனுக்குப் பெற்றோர் இல்லாது போகின்ற சின்ன வயதிலேயே நுட்பமாக அவனுக்குரிய சொத்தை வெங்கட்டின் தகப்பனாரும், சித்தப்பாவும் சுவீகரிக்கின்றார். வெங்கட்டின் தாயோ அவர் இறக்கும்வரை தம்பிக்குரியதை தம்பிக்குக் கொடுத்துவிடவேண்டும் என்று ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

நகரத்தில் படித்துக் கொண்டிருக்கும் ரமணன் ஊருக்கு வரும்போதெல்லாம் ஓர் எளிய மனிதனாக இருப்பான். நகரில் இருந்து அவன் எழுதும் கடிதங்கள் எல்லாம் எளிதில் வாசிக்க முடியாத எழுத்தில் எழுதப்பட்டிருக்கும். ஒருநாள் ரமணனின் கடிதம் வருகின்றது. அதில் தன்னை பொலிஸ் தேடிக் கொண்டிருக்கின்றது என்றும்
, இனி அவர்கள் என்னை உயிருடன் விடமாட்டார்கள் என்றும், முகவரி உள்ள தனது கடிதங்கள் உள்ளிட்ட எல்லா அடையாளங்களையும் அழித்துவிடச் சொல்கின்றான். தனக்கிருக்கும் ஒரு சொத்தான தோட்டக்காணியை மட்டும் தனது காதலி தேடி ஊருக்கு வந்தால் அவளுக்குக் கொடுக்கும்படியும், இல்லாவிட்டால் தங்கள் வீட்டில் வேலை செய்யும் நான்கு வேலைக்காரர்களுக்கு அதைப் பகிர்ந்துகொடுக்கும்படியும் சொல்கின்றான்.

நேரடியாக இந்த நாவலில் அடையாளப்படுத்தபடாவிட்டாலும் நக்சலைட்டாக ஆகிவிட்டான் என்பது புரிகின்றது. பிறகு ரமணன் கூறியதுமாதிரியே பொலிஸ் அவனைத் தேடி ஊருக்கு வருகின்றது. இவையெல்லாம் ரேகா ஒரு துப்பறியும் பத்திரிகைக்குக் கட்டுரை எழுதுவதற்காகத்தான் காணாமல் எங்கேயோ போய்விட்டாள் என்கின்றபோது வெங்கட்டுக்கு நினைவில் வருகின்றன.

அவரது குடும்பத்து பல இரகசியங்கள் இப்போது வெளிவரத் தொடங்குகின்றன. விஜியும், ரேகாவும் தன்னை விட்டு விலத்திப் போகின்றனர் என்று தெரிகின்றது. அதைவிட வெங்கட் தன்னை ஒரு முற்போக்காளன் என்று சொல்லிக் கொண்டாலும் அவனின் பிற்போக்குத்தனங்களினால் இது நிகழ்கின்றது என்பதை அறிந்தாலும், அநேக ஆண்கள் போல தன்னை அவர் திருத்திக் கொள்ளவும் தயாரில்லை.

ரேகா எதற்காகக் காணாமற் போனாள், மீண்டும் நகர் திரும்பும்போது ஏன் வெங்கட்டின் வீட்டில் திருடர்கள் உட்புகுந்தார்கள், ரமணனின் காதலி அவர்களைத் தேடி வந்தாளா போன்றவை அறிவதன் மூலம் நாவலில் தொடக்கத்தில் சொல்லப்பட்டது போல "தற்செயல் என்பது கிடையாது. சில நிகழ்வுகளின் முந்தைய தொடர்பு விதிகள் நமக்குப் புலப்படுவதில்லை" என்பதை மீண்டும் நாங்கள் நினைவூட்டிக் கொள்ளலாம்.

ஒரேவிதமான யதார்த்தக் கதைகளை விதந்தோத்துகின்ற இன்றைய தமிழ்ச்சூழலில் இது வித்தியாசமான வாசிப்பைத் தருகின்றது. கடந்து போன காலங்களை மட்டுமில்லை, நம் சமகாலத்தையும் எப்படி விமர்சனரீதியாக அணுகிப் பார்க்கலாமென்பதற்கு இந்த நாவல் நல்லதொரு உதாரணம். விவேக் ஷான்பாக் கன்னடத்தில் எழுதியதை கே. நல்லதம்பி தமிழில் அழகாகத் தந்திருக்கின்றார்.

தாறுமாறான கையெழுத்தில் எழுதப்படும் ரமணனின் கடிதத்தை வாசிக்கும்போது 'சகீனாவின் முத்தம்' என்று இருப்பதைக் கண்டு வெங்கட்டின் குடும்பம் ரமணன் தன் காதலி சகீனா முத்தம் கொடுத்ததைப் பற்றி எழுதியிருக்கின்றான் என்று நினைக்கின்றனர். ஆனால் பின்னர் அந்த வரிகளைச் சரியாக வாசிக்கும்போது ரமணன் சொல்லியிருப்பது 'சாவிலிருந்து முக்தி அடைவது எளிது' என்பதை அவர்கள் அறிகிறார்கள்.

ஒரு போராளியாகப் போயிருக்கின்ற ரமணன் தன் முடிவை உணர்ந்து சொல்கின்ற வரிகள் இவை. சகீனாவின் முத்ததிற்கும், சாவிலிருந்து முக்தி அடைவது எளிதிற்கும் இடையில் இருப்பது, காலவெள்ளத்தில் கரைந்து போய் மறக்கடிக்கப்பட்ட ஒரு மனிதனின் பெரும் போராட்ட வாழ்க்கை!

*******************

('சகீனாவின் முத்தம்' - விவேக் ஷான்பாக், தமிழில் கே.நல்லதம்பி)

(Jun, 2023)