புத்தரும் நானும்

புத்தரும் நானும்
அனுபவப்புனைவு

சிறுகதைத்தொகுப்பு

சிறுகதைத்தொகுப்பு
திறனாய்வு

கள்ளி

கள்ளி
கதை

கவிதை

கவிதை
ஆங்கிலம்

நயோமியின் 'What lies between us'

Sunday, September 24, 2017


வாழ்க்கையின் திசைகளை எவை தீர்மானிக்கின்றன என்பதை மனிதர்கள் எவரும் அறியார். வீசும் காற்றிற்கேற்ப வளையும் நாணல்களைப் போல மனிதர்களுந்தான்  விரும்பியோ விரும்பாமலோ தம்மை  மாற்றவேண்டியிருக்கின்றது என சொல்கின்றது நயோமியின் 'எங்களுக்கிடையில் என்ன இருக்கின்றது' என்கின்ற இந்நாவல். கங்கா என்கின்ற சிறுமி, வளரிளம் பருவப்பெண்ணாகி, ஒரு குழந்தையிற்குத் தாயாகும்வரையான தன் கதையைச் சொல்லத் தொடங்குகின்றார். இலங்கையில் கண்டியில் வசதி வாய்ந்த குடும்பத்தில் கங்கா பிறந்தாலும் பெற்றோருக்கிடையில் இருக்கும் சிக்கலான உறவால் கங்காவின் குழந்தைப் பருவம் சுமூகமாக இருப்பதுமில்லை. பெற்றோரிடம் கிடைக்காத அமைதியை கங்கா தன் வீட்டில் சமையல் செய்து வரும் சீதாவிடமும், தோட்டவேலை செய்யும் சாம்சனிடமும் தேடுகின்றார்.

மழைக்கால நாளொன்றில் ஆற்றில் தற்செயலாய் விழுந்து கங்காவின் தகப்பன் இறந்துபோகின்றார். அந்த மரணத்தோடு தோட்டவேலை செய்யும் சாம்சனும் காணாமற்போகின்றார்.  தன் கணவன் இல்லாது இலங்கையில் என்ன செய்வது எனக் கலங்கும் கங்காவின் தாயாரை, அமெரிக்காவிலில் குடும்பத்தோடு வாழும் அவரின் சகோதரி அமெரிக்காவிற்கு அழைக்கின்றார். கங்காவின் பதின்மம் அமெரிக்காவில் தொடங்குகின்றது என்கின்றபோதும் அவருக்கும் தாயாருக்குமான  'கதைக்கப்படாத விடயங்களின் நிமித்தம்' ஒரு இடைவெளி வருகின்றது.

கங்கா பாடசாலைப் படிப்பை முடித்து பல்கலைக்கழகத்தில் தாதிகளுக்கான படிப்பை முடித்து வேலை செய்யத் தொடங்குகின்றார்.  வயதேற ஏற திருமணம் என்பதைப் பற்றி யோசிக்காது கங்கா இருப்பது அவரின் தாயாருக்கு கவலையாக இருக்கின்றது. கங்காவிற்கு திருமணத்தில் மட்டுமில்லை, ஆண்களுடான உறவுகளுடனும் அவருக்கு நிறைந்த சிக்கல்கள் இருக்கின்றன. ஏன் தன்னை விரும்பும் ஒவ்வொரு ஆணையும் ஒரு எல்லையிற்குப் பிறகு அனுமதிப்பதில்லை என்பதற்கும் கங்காவிற்கும் தெளிவான காரணங்கள் தெரிவதேயில்லை. இது குறித்து நீட்சியாக யோசிக்கும்போதே, கங்கா தன் சிறுமிப்பராயத்தில் பாலியல் வன்முறைக்குட்பட்டதை நினைவு கூருகின்றார். அந்த நினைவுகள் ஒவ்வொருமுறையும் அவரைத் துன்புறுத்தும்போதும் அதன் ஆழத்திற்குள் போய் சிடுக்கை அவிழ்க்கமுடியாது இடையில் வெளியே வந்தும்விடுகின்றார்.

நீண்ட தனிமையின் பின் கங்கா, அவருக்குப் பிடித்த காதலை ஒரு ஓவியனிடம் கண்டுகொள்கின்றார். அவரொரு வெள்ளையினத்தவராக இருப்பதால் கங்காவின் தாயால் இந்த உறவை ஏற்றுக்கொள்வதில் தயக்கமாய் இருக்கின்றது. சில வருடங்கள் சேர்ந்து வாழும் கங்காவும் அவரது காதலனும், பின்னர் திருமணஞ்செய்தும் கொள்கின்றார்கள். திருமணவாழ்வில் கங்காவிற்கு தன் குழந்தைமையில் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுங்கனவுகள் வருகின்றபோதும், கணவன் உறுக்கிக்கேட்கும்போதும் அவரால் நடந்ததைப் பகிர்ந்துகொள்ளமுடியாது இருக்கின்றது.

திருமண உறவில் அவர்களுக்குக் குழந்தையும் பிறக்கின்றது. குழந்தையின் மீது அளப்பரிய காதல் இருந்தாலும் சிறுவயது நினைவுகளால் கங்காவினால் அவரது குழந்தையிற்கு ஒரு நல்லதொரு தாயாக இருக்கமுடியாதிருக்கின்றது. பல்வேறு சம்பவங்களின் நீட்சியில் கங்காவின் கணவர் குழந்தையையும் எடுத்துக்கொண்டு கங்காவைப் பிரிந்து குழந்தையுடன் தனித்து வாழத்தொடங்குகின்றார். சிறுவயது பாலியல் துஷ்பிரயோகத்தோடு, இப்போதும் குழந்தையும் பிரிக்கப்பட்ட துயரில், கங்கா இன்னும் ஆழமான உளவியல் சிக்கலுக்குள் போகின்றார்.

இந்தப் பிரச்சினைகளுக்கிடையில் கங்கா ஒருமுறை தாயுடன் பேசும்போது அவர் குழந்தையாக இருக்கும்போது பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர், அவர் மிகவும் நேசித்துக்கொண்டிருந்த  ஒருவர் என்பதை அறிந்து இன்னும் அதிர்ச்சியாகின்றார். அன்றையகாலத்தில் தனக்கொரு வழியும் இருக்கவில்லை எனத் தாயார் இதுவரை மறைத்து வைத்ததன் துயரத்தைச் சொல்லி அழுகின்றார்.

தன்னை பாலியல் வன்முறை செய்தவர் யாரென்ற அதிர்ச்சியில், இதுவே தாயில்லாது தந்தையோடு மட்டும் வாழும் தன் மகளுக்கும் நிகழப்போகின்றது என்ற அச்சத்தோடு கங்கா ஒரு விபரீதமான முடிவை எடுக்கின்றார். அது தன்னோடு, தன் குழந்தையும் தற்கொலைக்கு எடுத்துச் செல்வது. பிறகு என்ன நடந்தது, கங்காவி ஏன் அவ்வாறான பாரதூரமான முடிவை எடுக்க முன்வந்தார் என்பதை நாவலை வாசிக்க விரும்புவர்க்காய் இப்போதையிற்கு விட்டுவிடலாம்.

குழந்தைப் பருவம் என்பது எல்லோருக்கும் மிக முக்கியமானது. போர்க்காலத்தில் வாழ்கின்ற ஒரு குழந்தையினதோ அல்லது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் குழந்தையினதோ, பிறகான வளர்ந்த காலங்கள் என்பது ஒருபோதும் இயல்பாய் இருப்பதில்லை. அதிலும் முக்கியமான சிறுவயதில் நடந்த கொடும் விடயங்களைப் பகிரமுடியாது தவிர்ப்பவர்களின் வாழ்க்கை என்பது இன்னும் சிக்கலாய் கங்காவினதைப் போலவும் ஆகிவிடுகின்றது.  அது இலங்கையில் வாழ்ந்தாலென்ன, அமெரிக்காவில் வாழ்ந்தாலென்ன, நடக்கும் பின் விளைவுகள் என்பது நாம் நினைத்துப் பார்க்கமுடியாதவையாய் இருக்கின்றன.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தமது உளக்கிடக்கைகளைப் பேசுகின்ற வெளிகள் உருவாக்கப்படவேண்டும். அதுமட்டுமின்றி அவர்கள் தாம் பாதித்த கதைகளைக் கூறும்போது அவர்களை எதன்பொருட்டும் விலத்தவோ, தவறாக நினைக்கமாட்டோம் என்கின்ற நம்பிக்கைகளையும் கேட்பவர்கள் வழங்கவேண்டும். அவ்வாறு இல்லாதுவிடின் இவ்வாறான கங்காக்கள் நம்முன்னே உருக்குலைந்துபோவதற்கு நாமும் தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஒரு காரணமாய் ஆகிவிடவும் கூடும்.

(நன்றி: 'அம்ருதா', புரட்டாதி, 2017)

தோழர் விசுவானந்ததேவன் நூலை முன்வைத்து..

Friday, August 25, 2017


பொது வாழ்வாயினும் தனிப்பட்ட வாழ்வாயினும் அடிக்கடி நாம் கேட்டிருக்கக்கூடிய ஒரு விடயம் Learn from your mistakes என்பது. கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வது என்பது நல்லதொரு விடயமே. ஆனால் மாற்றம் என்பதே மாறாததே என்று புத்தரிலிருந்து மார்க்ஸ் வரை அடித்துச் சொன்னதன்பிறகு, நாம் கடந்தகாலத் தவறுகளிலிருந்து எதைக் கற்றாலும் அதைக் கொண்டுபோய் எங்கே பிரயோகிப்பது என்பதில் சிக்கலுள்ளது. மேலும் நேற்றையகால நிலைமை போல இன்றும் எதுவும் மாறாமல் இருப்பதில்லை, அதுவும் முக்கியமாய் போராட்ட நிலவரங்கள் எப்போது மாறிக்கொண்டிருப்பவை.

எனவே நாம் ஏன் சற்று மாற்றி யோசிக்கக்கூடாது? கடந்தகாலத் தவறுகளைக் கற்றுக்கொள்வதைப் போன்று, கடந்தகாலத்தின் அருமையான விடயங்களை நாமேன் அதிகம் சுவீகரித்துக்கொள்ளக்கூடாது. அதன் மூலம் இன்னுமின்னும் நல்ல விடயங்களை நோக்கி நாமேன் நகரக்கூடாது. ஈழப்போராட்ட இயக்கங்களில் வரலாற்றைப் பார்க்கும்போது வாழும்போதே தன்னை மீண்டும் மீண்டும் விமர்சித்துக் கொண்டும் (Learn from the mistakes of the past), அதே சமயம் நல்ல விடயங்களை நோக்கி நகர்ந்துகொண்டும் இருந்த தலைமைத்துவப் பண்பு கொண்ட ஒருவர் யாரென நினைக்கும்போது விசுவானந்ததேவன் முன்னுக்கு வருகின்றார். எப்போதும் சிறுகுழுக்கள் மீதும், மாற்றம் என்பதே மிக மெதுவாகவே நடப்பது என்றும், நாம் சரியென நினைப்பதை எங்கிருந்தும் எப்போதும் தொடங்கலாமென நம்புபவர்க்கு விசுவானந்ததேவன் மிக நெருக்கமானவராகத் தெரிவதிலும் அவ்வளவு பெரிய வியப்பில்லை.

சண்முகதாசனின் மார்க்சிச-லெனிச கட்சியில் இணைந்து, பின்னர்   தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT ), தமிழீழமக்கள் விடுதலை முன்னணி (PLFT ) போன்றவற்றைக் கட்டியெழுப்பிய விசுவானந்ததேவன், தன்னை மீண்டும் மீண்டும் சுயவிமர்சனம் செய்து சிங்களப் பேரினவாதமே எமது மிகப்பெரும் எதிரி என்பதில் உறுதியாய் இருந்து தொடர்ந்து அதற்கெதிரான போராட்டங்களை நோக்கியே முன்னகர்ந்தபடி இருந்திருக்கின்றார்.

விசுவானந்ததேவனின் வாழ்வென்பதே 34 வருடங்கள்தான். ஆனால் அவர் மரணித்து 30 வருடங்கள் கடந்தபின்னும் இன்னும் அவரைப் பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கின்றோம் என்றால், அவர் தான் நம்பிய கொள்கைகளுக்காய் இறுதிவரை சமரசம் செய்து கொள்ளாமல் இருந்திருப்பது ஒரு முக்கிய காரணமாகும். அவருடைய இந்தக் குறுகிய வாழ்வில் அவர் நடந்துசென்ற பாதை நீண்டது. ஒவ்வொருபொழுதும் சூழலுக்கேற்ப தன்னை மாற்றியமைத்தபடி இருந்திருக்கின்றார்; பல்வேறு தளங்களில் தனது உரையாடலை போராட்டம் குறித்து தொடர்ச்சியாக நடத்தியுமிருக்கின்றார்.

'பிரிவினைக்கும் தேசியமுறைக்கும் எதிராக தமிழ் மக்களே ஒன்றுபடுவீர்' என்ற ஒன்றுபட்ட இலங்கையிற்குள் போராட இடதுசாரிகளோடு சேர்ந்து தொடக்கத்தில் குரல்கொடுத்த விசு, 'பாட்டாளி வர்க்கத் தலைமையை உத்தரவாதம் செய்ததன் பின்னால்தான் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடமுடியும் என அமைப்பினால் (NLFT ) முன்வைக்கப்பட்ட கருத்து தவறாதென நாம் கருதுகிறோம். போராட்டம் முனைப்படைந்து ஏனைய வர்க்கங்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், தேசிய விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகியிருந்து பாட்டாளிவர்க்கத்தை அணிதிரட்டுவது என்பது சாத்தியமற்றது' என்று கூறியதோடல்லாது, 'ஏனைய வர்க்கங்களால் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இப்போராட்டத்தில் பல குறைபாடுகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இப்போராட்டம் தேசிய விடுதலைக்குரிய சகல பரிணாமங்களையும் கொண்டிருக்கவில்லை.' என எச்சரித்துமிருக்கின்றார்.

மேலும் 'இந்நிலையில் இயங்கியல் ரீதியாகப் பார்க்குமிடத்து முற்போக்குத் தேசியவாதத்தை வளர்த்தெடுக்காமல், தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்காமல் பாட்டாளிவர்க்கத் தலைமையை உத்தரவாதம் செய்ய முடியாது. தமிழீழ ஜனநாயகப் புரட்சியையும் நிறைவு செய்ய முடியாது. எனவே இப்போராட்டத்தை புதிய ஜனநாயகப் புரட்சியாக முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே எமது இலக்குகளை அடையமுடியும்' எனவும் NLFTயிலிருந்து PLFT ஆக பிரிகின்றபோது விடுத்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

அறுபதுகளில் வலுவாக இயங்கியதோடல்லாது, சாதி எதிர்ப்புப் போராட்டங்களையும் முன்நின்று நடத்திய இலங்கை இடதுசாரிகள் பின்னாட்களில் தேசிய இனப்பிரச்சினை குறித்து சரியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறியதும் விசு மேலே குறிப்பிட்ட அதே புள்ளிதான். ஆகவேதான் தீவிர தமிழ்த்தேசியவாதிகள் தேசிய இனப்போராட்டத்தை கையிலெடுக்க, பல்வேறு காலகட்டங்களில் இனக்கலவரங்களால் கொந்தளித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் 80களில் ஆயுதப்போராட்ட இயக்கங்கங்களில் நம்பிக்கைகொண்டு பெரும் எண்ணிக்கையில் போய்ச் சேர்ந்ததும் அதன் பின்னர் நிகழ்ந்தவையும் வரலாறு.

பிற்காலத்தில் சண்முகதாசன் போன்ற ஆளுமைமிக்க இடதுசாரிகள் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான தமது கருத்துக்களை மாற்றியபோதும், தேசிய இனப்போராட்டம் ஆயுதந்தாங்கிய இயக்கங்களினால் திரும்பிவராத இன்னொரு நிலைமைக்கு மட்டுமில்லை, இடதுசாரிகள் மீண்டும் தலைமைதாங்கக்கூடிய களநிலைமைகளை விட்டும் வெளியே போய்விட்டது என்பதாய் இருந்ததுந்தான் பெருந்துயரம்.

விசுவானந்ததேவன், தேசிய இனப்போராட்டத்தில் இடதுசாரிகளின் தலைமை சரியான முடிவை எடுக்கவில்லை என விலகிப்போகின்றபோதும், அவரை மறைமுகமாக ஒரு அரைகுறை இடதுசாரி எனப் பல மரபார்ந்த இடதுசாரிகள் இத்தொகுப்பில் குறிப்பிட விழைகின்றனர். இன்னுமொன்றையும் கவனிக்கவேண்டும், விசு மிக நிதானமாக வர்க்கப் போராட்டம்/ தேசிய இனப்போராட்டம் என்பதை அந்த வயதில் பார்க்கின்றார் என்கின்றபோதும் இறுதிக்காலகட்டங்களில் ஆயுதப்போராட்டத்தின் மூலமே நமது இலக்குகளை அடையலாம் என்ற முடிவுக்கு வருகின்றார். தனது தோழர்களிடமே 'ஆயுதப் போராட்டம் தமிழ் மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட போராட்டம். இப்போராட்டத்தில் யார் தலைமையேற்கப் போகின்றார்களோ , அவர்கள் மட்டுந்தான் அடுத்த கட்டத்தை தீர்மானிப்பார்கள்' (ப 192) எனத் தெளிவாக எதிர்காலத்தை ஒரளவு கணிக்கவும் செய்கின்றார்.

ந்தத் தொகுப்பை வாசிக்கும்போது, விசு எவ்வளவு சனநாயகவாதியாக இருந்திருக்கின்றார் என்பது நன்கு விளங்கும். உதாரணமாக NLFT-PLFT பிளவு வந்தபோதும், ஒவ்வொரு பக்கமும் இருக்கும் இயக்கத்தவர்களின் எண்ணிக்கையிற்கேற்ப தமக்குரிய சொத்துக்கள்/வளங்களைப் பிரிக்கின்றார். கருத்து முரண்பாட்டால் பிரிகின்றோமே தவிர நாங்கள் எப்போதும் ஒரு இலக்கிற்காய்ப் போராடுகின்றவர்கள் என்ற அவருக்கிருந்த தெளிவு, வேறு எந்த இயக்கத்தலைமையில் இருந்தவர்களில் காணமுடியாத ஓர் அரியபண்பு இது. மேலும் பல்வேறு இயக்கங்களின் தலைமைகள் மீது முரண்பட்டு பல போராளிகள் அடுத்து என்னசெய்வது என்று திகைக்கின்றபோடும் விசு அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதில் பின் தங்காது நிற்கின்றார்.

புளொட்டின் உட்படுகொலைகளை உலகிற்கு அறிவித்த கோவிந்தனின் 'புதியதோர் உலகம்' விசுவின் உதவியில்லாதவிடத்து அவ்வளவு விரைவில் அன்று வந்திருக்காது. அதுபோலவே எஸ்.வி.ஆரிடம் கேட்டு தமிழாக்கம் செய்த நூலான 'புரட்சிகர மக்களை ஆயுதபாணியாக்கலும் மக்கள் படையும்' நூலை புளொட்டால் படுகொலை செய்யப்பட்ட சந்ததியாருக்கு காணிக்கை செய்யும்படியும் கேட்டதாக எஸ்.வி.ஆர் குறிப்பிடுகின்றார். மேலும் இயக்கங்களில் விலகி என்னசெய்வதென்று அறியாது சிதறித்திரிந்தவர்களுக்காய் தமிழகத்தில் ஒரு பண்ணையை விசு தனது தோழர்களுடன் தொடங்கியிருக்கின்றார். அதற்கான நிதி அவரிடம் போதியளவு இல்லாதபோது அவர் தனது முன்னாள் தோழர்களான NLFT ஐ நாடி அந்தப் பண்ணையைத் அமைத்தும் இருக்கின்றார். இத்தகைய தோழமையுணர்வை நாம் பிற இயக்கத்தலைமைகளிடம் சல்லடை போட்டுத் தேடித்தான் பார்க்கவேண்டும்.

களப்போராளியாக மட்டுமில்லாது நூல்களை நிறைய வாசிப்பவராகவும் எழுதுபவராகவும் இருக்கும் விசுவை, சிலசமயங்களில் சே  குவேராவைப்  போல கற்பனை செய்துபார்க்கவும் மனம் அவாவிக்கொண்டிருந்தது. 'புதுசு' என்ற இலக்கிய இதழை அன்றைய மகாஜனக்கல்லூரி உயர்தர மாணவர்கள் நடத்திக்கொண்டிருந்தபோது, அவர்கள் சிறியவர்கள் என விலத்தாது அவர்களை அழைத்துப் பேசியதோடல்லாது அந்த இதழில் எழுதவும் செய்கின்றார். அந்த இளைஞர்களோடு இலக்கியம் என்றால் என்ன விவாதிக்கவும் பின்னின்ற்காது இருக்கின்றார். மேலும் கலைகளினூடாக மக்களை அரசியல்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்து 'திருவிழா' நாடகத்திற்கு மிகவும் உற்சாகத்தைக் கொடுக்கின்றார்.

அதுமட்டுமின்றி, மலையக நண்பர் ஒருவரின் கவிதையை ஒரு சஞ்சிகையிற்கு அனுப்ப அதன் நீளங்காரணமாக வெட்டி அவர்கள் பிரசுரிக்க, அந்த சஞ்சிகைக்குழுவோடு சண்டைபிடித்து அடுத்த இதழில் முழுக்கவிதையையும் வெட்டாது விசு பிரசுரிக்க வைக்கின்றார். எஸ்.வி.ஆர் மொழிபெயர்த்த நூலில் எஸ்.வி.ஆரின் பெயர் தவறவிடப்பட்டதற்கு வருத்தமும் மன்னிப்பும் கோரி விற்கப்படாதிருந்த எல்லாப் பிரதிகளிலும் எஸ்.வி.ஆரின் பெயரைப் பதியவும் செய்திருக்கின்றார். அண்மையில் ஒருவர் விசு பற்றி எழுதிய பதிவொன்றிலும் விசுவைத் தான் சந்தித்தபோது ஆதவனின் 'காகித மலர்களை' விசு வாசித்துக்கொண்டிருக்கின்றாரென பதிவு செய்திருக்கின்றார். அந்த வகையில் எப்போதும் வாசிக்கவும், அதன்மூலம் வேறுவகையில் சிந்திக்கவும் முயற்சித்த விசு இன்னும் நெருக்கமாகின்றார்.

இதேபோல, தமிழ்நாட்டில் தங்கியிருந்த காலகட்டங்களில் தனியொருவனாக அஸாம், மணிப்பூருக்கெல்லாம் சென்று அங்கு நடக்கும் போராட்டங்களை எல்லாம் அறிந்துகொண்டாரென, தமிழ்நாட்டில் இருப்பவர்க்கு கூட அவ்வளவு அக்கறையில்லாத காலத்தில் அதைச் செய்தரென இந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருகின்றது.

ன்று 80களில் இயக்கங்களிலிருந்து வெளிவந்த பலரைச் சந்திக்கும்போது, மக்களுக்கு ஏதோ செய்யவேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் அவர்கள் மீது மதிப்பிருந்தாலும், பெரும்பாலானோர் எப்படி அன்றி இயக்கங்களிலிருந்து வெளியேறினார்களோ அதற்கப்பால் பரவலான வாசிப்போ, அவர்கள் வெளியேறபின்னர் களநிலவரங்கள் எப்படி மாறின என்பது குறித்தோ சிறிதுகூட அக்கறையில்லாதபோது ஒருவித அயர்ச்சியே அவர்களுடனான உரையாடல்களில் எப்போதும் எட்டிப் பார்த்தபடியிருக்கும். உண்மையில் களப்பணியில் மட்டுமில்லை கருத்துருவாக்கத் தளத்திலும் இயங்கப்போகின்றோம் என்றால் விசுவிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு எமக்கு நிறைய விடயங்கள் உள்ளன என்றுதான் கூறுவேன்.

விசுவின் மறைவின் 30 வருடங்களின் பின் இந்த நூல் வருவது ஒரு முக்கிய நிகழ்வாகும். இவ்வாறு விசுவைப் போலப் பலரது, வாழ்வு ஈழப் போராட்டத்தில் அவணப்படுத்த வேண்டியிருக்கின்றது. ஆனால் இத்தொகுப்பிலிருந்து ஒரு முழுமையான விசுவானந்ததேவனை உருவாக்க முடியுமா என்பதிலும் சிக்கலிருக்கின்றது. நானறிந்து விசு NLFTயில் இருந்தபோது மத்திய குழுவில் இருந்தவர்கள் என அறியப்பட்ட முக்கியமான பலர்  இத்தொகுப்பில் எழுதவில்லை. அதேபோல 'புதுசு' சஞ்சிகையிலிருந்து NLFTயின் ஆதரவாளர்களாக அல்லது உறுப்பினர்களாக இருந்தவர்களில் பாலசூரியன் தவிர வேறு எவரினதும் பதிவுகளுமில்லை.  இயக்கம் சார்ந்த பத்திரிகை/சஞ்சிகை  வெளியீடுகளில் பங்காற்றி, இறுதிக்காலத்தில் விசுவுடன் மிக நெருக்கமாகவும் இருந்த சிலரும் இதிலில்லை. இன்னும் நானறிந்து விசுவின் இயக்கத்தில் தலைமறைவாகி இயங்கியவர்கள் எனக்கேள்விப்பட்டவர்களையும் காணவில்லை.

விடுபடுதல் இயல்பெனினும் இவர்களையும் இத்தொகுப்பில் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
மேலும் PLFT தோன்றுவதற்கான காரணங்களை முன்வைக்கும் அறிக்கை இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டிருப்பதுபோல அதற்கு முன் விசுவானந்ததேவன் தலைமை தாங்கிய NLFT உருவாக்கப்பட்டதற்கான அறிக்கையையும் நிச்சயம் இணைத்திருக்கவேண்டும். எனெனில் அதிலும் விசுவின் பெரும் பங்களிப்பு இருக்கின்றது.

'நாங்கள் வரலாற்று ஆசிரியர்களாக இருக்கப்போகின்றோமே தவிர, வரலாற்றை மாற்றுபவர்களாக இருக்கமாட்டோம்' என்று விசு இயக்கங்களுக்கிடையிலான பிளவுகளின்போது மனம் நொந்ததுதான் இதைச் சொன்னார் என்றாலும், வரலாற்றில் ஏற்கனவே இழைத்த தவறுகளை விடாது அடுத்த சந்ததி தன்னை மாற்றிக்கொள்ள விசுவானந்ததேவன் ஒரு ஆசிரியராக என்றைக்கும் இருப்பார்.

கியூபாவில் ஃபிடல் காஸ்ரோ  முதல் புரட்சியின்போது தோற்று, இரண்டாவது தரையிறக்கலின்போது 80ற்கு மேற்பட்ட தோழர்களில் பெரும்பாலானோர் இறக்க எஞ்சியோர் 15 பேராக இருந்தபோதும், வரலாற்று ஆசிரியராக கடந்தகாலத்தவறைக் கற்றறிந்து, வரலாற்றை மாற்றியவராக ஃபிடல் தன்னை ஆக்கிக்கொண்டார். அதுபோலவே, எதிர்காலத்தில் விசுவின் கனவுகள் பலிக்குமாயின் அவரும் வரலாற்று ஆசிரியரிலிருந்து தன்னை விடுதலை செய்து , வரலாற்றை மாற்றப்போகின்றவர்களுக்கு ஒரு உதாரணமாகவும் மாறக்கூடும்.


(விசுவானந்தேவனோடு கூடவே கொல்லப்பட்ட இன்னொரு தோழரான, எனது நண்பர் போலின் சகோதரர் நரேஸின் நினைவுகளிற்கு இது...)

(நன்றி: 'அம்ருதா' - ஆவணி, 2017)

அ.முத்துலிங்கத்தின் 'பிள்ளை கடத்தல்காரன்'

Wednesday, July 12, 2017


தேர்ந்தெடுத்த சொற்கள், அங்கதச்சுவை மற்றும் வித்தியாசமான கதைக்களன்கள் என விரிகின்ற அ.முத்துலிங்கத்தின் கதைகள் வாசிப்பதற்கு சுவாரசியமானவை. 'பிள்ளை கடத்தல்காரன்' என்கின்ற இத்தொகுப்பில் அ.மு, 2012ன் பின் எழுதப்பட்ட 20 கதைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. சியரா லியோன், இலங்கை, பாகிஸ்தான், கனடா எனப் பற்பல இடங்களுக்குக் கதைகள் பாய்ந்தபடியே இருக்கின்றன. 'முதல் ஆச்சரியம்' என்கின்ற சியரா லியோனிலிருந்து இலங்கையிற்குக் கதைசொல்லி பொதியொன்று அனுப்புகின்ற கதையை எத்தனை முறை வாய்த்தாலும் சிரிப்பில்லாது வாசித்துவிட முடியாது.

அதுபோல் 'நான் தான் அடுத்த கணவன்' என இந்தியாவிலிருக்கும் பத்மப்ரியாவையே முதன்முறை திருமனஞ்செய்ய முடியாது போய், 2வது முறை இன்னொருவனால் ஏமாற்றப்பட்டு, மூன்றாவது கணவனாக ஆகும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது தயக்கமின்றி அவரை மணக்கப்போகும் ஒரு ஆணின் அப்பாவித்தனம் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டாலும் அதை மீறி பத்மப்ரியா மீது இந்தக் கனடா ஆணுக்கிருக்கும் பிரியம் வாசிப்பவர்களால் புரிந்துகொள்ளமுடியும்.

இன்னொரு கதையான 'அது நான் தான்' மற்றொரு சுவாரசியமான கதை. ஒருவர் கனடாவிலிருந்து இலங்கை ஒருபோய் ஒரு பெண்ணை யுத்தக்காலத்தில் மணஞ்செய்கின்றார். திருமணம் முடிந்த சொற்பநாட்களுக்குள் அவர் கனடாவிற்குத் திரும்பியும் விடுகின்றார். மனைவியைக் கனடாவிற்குக் கூப்பிடும்போது அது அவர் மணம்முடித்த பெண்ணல்ல, வந்திருப்பது வேறு ஒருவர் என்பது புரிகின்றது. ஆனால் அந்தப் பெண்ணோ அது நான்தான் நான்தான் என அடம்பிடிக்கின்றார். ஒருகட்டத்தின்பின் இந்தச் சந்தேகத்தை விட்டுவிட்டு அந்தப் பெண்ணோடே, இந்த ஆண் வாழத்தொடங்குகின்றார். இவர்களுக்குப் பிள்ளைகள் பிறந்து வளர்ந்தும் விடுகின்றன. இடையில் ஒருநாள் ஒரு தொலைபேசி அழைப்பு வந்து, 'மூன்று நாட்கள் உங்களுடன் வாழ்ந்திருக்கின்றேன். நீங்கள் கட்டிய தாலி இன்னும் கழுத்தில் தொங்குகின்றது. நான் வெளிநாடு போகப்போகின்றேன். என்னை இனித்தேடி இலங்கை வரவேண்டாம்' என ஒரு பெண் தொலைபேசிவிட்டு வைத்தும் விடுவாள்.

ஒருநாள் சட்டென்று இவரது மனைவி நான் உண்மையைச் சொல்லப்போகின்றென நள்ளிரவில் எழுப்புகின்றார். இவரும் இறுதியில் உண்மை வரப்போகின்றதென ஆவலுடன் எழும்பினால், "நான் உங்களுக்கு உள்ளதைச் சொல்லப் போகின்றேன். இந்த விசயத்தை இனிமேல் நீங்கள் என்னிடம் கேட்கக்கூடாது. இது எங்களுக்காகவும், எங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்காகவும்.' அந்தக் கணத்தில் அவன் மனம் உருகியது. 'எத்தனை கொடூரமாக நடந்துகொண்டேன்' என்று நினைத்தான். 'நீங்கள் சத்தியம் செய்து கொடுக்கவேண்டும்.' 'சத்தியம்' என்றான் வசந்தகுமாரன். 'நீங்கள் தாலி கட்டிய பெண் வேறு யாருமல்ல. அது நான்தான்' என்றாள் சிரித்துக்கொண்டே (ப 68)."

இறுதியில் வசந்தகுமாரன் வேலையில் தீர்க்கமுடியாத விடயங்களைப் புதிர்களின் பட்டியலில் சேர்ப்பதுபோல, தனது மனைவி உண்மையில் யாரென்றும், ஏன் இப்படி மாறி வந்தார் என்பதையும் தீர்க்கமுடியாத விடயங்களின் பட்டியலில் சேர்ந்துவிடுவோம் என நினைத்துக்கொள்கின்றார்.

ந்தத் தொகுப்பில் 'நிலம் என்னும் நல்லாளும்', 'ஆதிப்பண்பு'ம் முக்கியமான கதைகளாய் தம்மை ஆக்கிக்கொள்கின்றன. 'நிலம் என்னும் நல்லாளில்' சைமன் என்பவர் இயக்கத்தில் சேர்ந்து இறுதியில் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி கனடாவிற்கு வருகின்றார். அவரின் பெற்றோர் வசதியான வாழ்க்கையை வாழ்பவர்கள். சைமனை எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஒரு திருமணத்தைச் செய்துவிட்டு நிம்மதியாக வாழச்சொல்கின்றார்கள். அவரால் கடந்தகால நினைவுகளிலிருந்து தப்பிவெளியே வரமுடியவில்லை. ஒருநாள் கொடும்பனிக்குள் தனியே போய் சிலநாட்களின் பின் உயிரற்ற உடலமாகக் கண்டெடுக்கப்படுகின்றார். பிறந்தநாட்டில் சொந்த நிலத்திற்காய்ப் போராடிய சைமனுக்கு ஒரு துண்டுகூடச் சொந்தமாக இல்லாவிட்டால்கூட, அவரைப் புதைப்பதற்கு கனடாவில் ஓரிடமிருக்கிறதென உணர்த்தியபடி கதை முடியும். அதுபோல 'ஆதிப்பண்பு'  பெரும் ஆபத்தினிடையேயும் மனிதர்களிடையே, பிறருக்கு உதவும் மனப்பாங்கை கனடாவில் அதிகூடிய குளிர்பிரதேசமான நியூபவுண்லாண்டில் காப்பற்றப்பட்ட ஒரு வைத்தியரின் கதையைக் கூறுகின்றது.

'லூக்கா 22:34' கதை கனடாவில் வீடு விற்க/வாங்குவதற்கு முகவராய் இருக்கும் ஒருவர் இலங்கையில் ஒரு பெண்ணைத் திருமணஞ்செய்து வந்து அவரைத் துன்புறுத்துவதையும், அந்தப் பெண் ஒருகட்டத்தில் இவரை நுட்பமாகப் பழிவாங்குவதையும், இன்னொரு கதையான 'கடவுச் சொல்' வயதானவர்களின் விடுதியில் மகளால் தங்கவைக்கப்படும் ஒரு முதிய பெண்மணியின் தனிமையையும், அவருக்குப் பேரன் மீதிருக்கும் பிரியத்தையும் சொல்கின்றது.

மண்ணெண்ணெய்க்காரன், கனடாவிற்கு அண்மையில் கப்பலில் அகதிகளாய் அடைக்கலம் தேடி வந்த 76பேர்களில் ஒருவரின் கதையைப் பற்றியும், 'வால்காவிலிருந்து கனடாவரை' அன்றையகால இயக்கங்களில் ஒன்று தண்டனையாக பெரும்நூல்களை தன் உறுப்பினர்களுக்கு வாசிக்கக் கொடுப்பதையும் நகைச்சுவையாகச் சொல்கின்றது.

அ.முத்துலிங்கம் அங்கதம் கலந்த கதைகளைச் சொல்லும் ஒரு சிறந்த கதைசொல்லி என்பதை எவரும் அவ்வளவு எளிதில் மறுக்கமுடியாது. இதில் கூட அருமையான சில கதைகள் இருக்கின்றன. ஆனால் வாசிக்க இன்பந்தரும் கதைகள் எல்லாம் காலம் கடந்தும் அதே வாசிப்பனுபவத்தையோ மறக்கமுடியாதவையாகவோ ஆகியும் விடுவதில்லை. எந்தக் கதையை வாசித்தாலும் அங்கத்ததை அ.மு எளிதாகக் கலந்துவிடுகின்றார். அதுவே அ.மு எழுத்துக்களின் பலமாகவும் பல இடங்களில் பலவீனமாகவும் தெளிவாகவும் தெரிகின்றன.

மேலும் அ.முவிடம் இருக்கும் சிக்கல் என்னவென்றால் அவர் அங்கதத்தில், பல்வேறு சந்தர்ப்பங்களில் அவற்றுள் இருக்கக்கூடிய அரசியலையும், அதன் தீவீரத்தன்மையையும் மறைத்துவிட முயற்சிக்கின்றாரோ என்பது. அ.முவிற்கு நாடுகள் பல செல்லும் சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன. பல்வேறுபட்ட மக்களோடு கலாசாரங்களோடு நெருங்கிப்பழகவும் முடிந்திருக்கின்றது. ஆனால் சியரா லியோனில் இருக்கும் தபால்காரரை அறிமுகப்படுத்தும்போது அவரின் உதடுகள் குதிரைகளினதைப் போல மேல்நோக்கி இருக்கும் என போகின்றபோக்கில் எழுதிச் செல்கின்றார். இப்படி ஒருவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பார் என்றால் அவர் ஒரு நிறவாதியென  (racist) இங்கு கடும் விமர்சனம் வந்திருக்கும்.

அதுபோலவே 'ரயில் பெண்' என்கின்ற கதையில் அறிமுகப்படுத்தபப்படும் சோமாலியர் ஒருவரை சோமாலி சோமாலி என்றே கதை முழுதும் எழுதப்படுகின்றது. அந்தக் கதையில் வரும் மகேஷிடம் அந்த சோமாலியர் பெயரென்ன எனக்கேட்டு அறிமுகப்படுத்தும்போதாவது அந்தச் சோமாலியர் தன் பெயரைச் சொல்லியிருக்கமாட்டாரா என்ன? மேலும் 'சின்னச் சம்பவம்' கதையில் தமிழ் பெண்ணைத் திருமணஞ்செய்து, அப்பெண்ணைக் கொடுமைப்படுத்தும் ஒருவர் கென்யாக்காரராகவே இருக்கின்றார்.

'கடவுச் சொல்' கதையில் மகள் ஒருவர் யூதரை மணந்தததால் அவர்களின் கலாசாரத்தில் ஒட்டாத தன் தாயை முதியவர் இல்லத்திற்கு அனுப்புகின்றார். இந்தத் தாய் தனித்து தன் மகளை இலங்கையில் வீட்டு வேலை செய்தே வளர்க்கின்றார். அவ்வாறு தன் தாய் மிகக்கஷ்டபட்டு வளர்த்ததை அறிந்தபின்னும் தாயோடு கோபித்து தனியே முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிடுகின்றார்.
இவை தற்செயலானது என எடுத்துக்கொண்டாலும்,  ஏன் அ.மு தேர்ந்தெடுக்கும் அநேக எதிர்மறைப் பாத்திரங்கள் எப்போதும் விளிம்புநிலையைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர் என்பதில் கேள்விகள் வருவதும் இயல்பானதே.

இன்னொரு கதையான 'சூனியக்காரியின் தங்கச்சி' கதையிலும் ஒரு முன்னாள் சிங்கள இராணுவத்தினன், இராணுவத்திலிருந்து தப்பிவந்து கனடாவில் அகதியாய் அடைக்கலம் புகுகின்றான். அவனுக்கு வேலைகள் கொடுத்து ஒருகட்டத்தில் தன் படுக்கையறையும் பகிர்ந்துகொண்ட அமண்டா இந்தக் கதையைச் சொல்கின்றார். அவரை 'மேம்' என்றழைப்பது கூட ஒரு அடிமையின் மனோநிலை என்றாலும், நிறையப்புத்தகங்கள் வாசிக்கும் அமெண்டா தன்னை அப்படியழைப்பதை எப்படி மறுக்காதிருந்திருப்பார் என்பது முதல் வினா. கடைசியில் படுக்கையைப் பகிர்ந்தபின்னர்,  அமெண்டா என்று தன்பெயரைச் சொல்லியழைக்க அமெண்டா கூறினாலும், அகதியாகிய அர்ஜூனா ரணதுங்க அதை மறுக்கின்றார். அதுகூடப் பரவாயில்லை. இறுதியில் கதையை முடிக்கும்போது எனக்கொரு அகதியைத் தெரியும் என்று அமெண்டா சொல்கின்றாரே தவிர அகதியாகிய அர்ஜூனா என்றெழுத எது அமெண்டாவையல்ல, அ.முவைத் தடுக்கின்றது என்று யோசிக்கும்போது அவர் எப்போதுமே தன் முக்கிய கதாபாத்திரங்களை மேல்நிலையில் வைத்துச் சொல்ல விழையும் பிரயத்தனங்களே இவையெனப் புரிகின்றன. ஆகவேதான் அ.முவின் அங்கதம் அருமையாக இருந்தாலும் அதில் மூழ்கி இந்தக் கதைகளிலிருக்கும் அரசியலை நாம் மறந்துவிடக்கூடாதென எச்சரிக்கவேண்டியிருக்கின்றது.

மேலும் அவரது கதையான 'பதினொரு பேய்கள்' காலச்சுவடில் வெளியாகிய அன்றே நாம் எல்லோரும் கடுமையாக விமர்சித்தோம். அங்கதம் என்ற பெயரில், முதன்முதலாகப் பெண்களையும் தமது இயக்கத்தில் சேர்ந்துகொண்ட தோழர்களையும், அவ்வாறு இணைந்து கொண்ட பெண்ணொருவரை மிகமோசமாக சித்தரிப்பதன் மூலம் இயக்கத்தை மட்டுமில்லாது, இயக்கப்பெண்களையும் மிக மோசமாகக் காட்டப்படுவதையும் நாம் எதிர்த்தோம். இந்தளவு எதிர்ப்பு வந்தபின்னும் 'பதினொரு பேய்களை' இத்தொகுப்பில் சேர்த்துக்கொள்ளும் அ.முவின் அரசியலை எந்தவகையிலும் நியாயப்படுத்திவிடமுடியாது. எத்தனையோ நூற்றுக்கணக்கான கதைகளை எழுதிய அ.மு இந்த ஒரு கதையை சேர்க்காதுவிட்டால் குறைந்துவிடப்போவதில்லை. அன்றையகால எதிர்ப்பில் தன் இணையதளத்திலிருந்து இந்தக்கதையை நீக்கிய அ.மு இங்கே இணைத்திருப்பதையும் சேர்த்தே நாம் அவரின் விளிம்புநிலை மக்கள் மீது கொண்டிருக்கும் 'அக்கறை'யையும் வாசிக்கவேண்டும்.

அங்கதம் அரசியலுக்கும் இலக்கியத்திற்கும் அணிசேர்ப்பவைதான். அது குறித்து சிக்கலில்லை. வாழ்க்கையிற்கும் அவசியமானதுதான். ஆனால் நமது அங்கதம் இன்னொருவரை/இன்னொன்றை கீழ்நிலையாக்கி காயப்படுத்தித்தான் வெளிப்படும் என்கின்றபோது அது இன்னொரு முகத்தைப் பெற்றுவிடுகின்றது. அ.முத்துலிங்கம் என்கின்ற ஒரு படைப்பாளி அடிக்கடி சறுக்கிப்போய் வீழ்ந்துவிடுகின்ற மிக முக்கியபுள்ளியும் இதுவேதான்.


(நன்றி: 'அம்ருதா' - ஆடி 2017,  எழுதியது, மார்கழி 12, 2016)

நூல் வெளியீடு

Friday, June 23, 2017


பேயாய் உழலும் சிறுமனமே- நூல் வெளியீடு

Monday, June 19, 2017

எனது மூன்றாவது தொகுப்பின் வெளியீட்டு விழா


பிரான்ஸ்

Friday, May 05, 2017

(கலையும், இலக்கியமும், இன்னபிறவும்)

இலங்கை, இந்தியாவிற்கு அவ்வப்போது போகும்போதெல்லாம் பிரான்சில் தரித்து நின்று போகும் சந்தர்ப்பங்கள் வாய்த்தபோதும், ஒருபோதும் விமானநிலையத்தை விட்டிறங்கிப் போனதில்லை. இம்முறை இலங்கையிற்கான பயணத்தைத் திட்டமிட்டபோது, பிரான்ஸையும் சிலநாட்கள் பார்ப்பதென தீர்மானித்திருந்தேன்.

தங்குவதற்கான இடத்தை airbnbயினூடு பதிவுசெய்து விட்டு பாரிஸிலிருந்த நண்பர்களைச் சிலரைத் தொடர்புகொண்டு வருகையை அறிவித்தேன். நான் தங்கி நின்ற வீடும், ஷோபாசக்தி மற்றும் தர்மினியின் வீடும் ஐந்து நிமிட நடைத்தொலைவில் இருந்தது எதிர்பார்க்காத ஒன்று. காலையிலே அவர்களின் வீட்டில் இருந்து கதைத்துக்கொண்டு தர்மினி செய்துதந்த பிரியாணி மற்றும்கோழிக்கறியையும், ஷோபா தன் கைவரிசையைக் காட்டவேண்டுமென சமைத்த நண்டுக்கறியையும் சுவைத்துச் சாப்பிட்டுவிட்டு, அப்போது பாரிஸ் நடைபெற்றுக்கொண்டிருந்த உலக நாடக தினத்திற்கு நாங்கள் எல்லோரும் புறப்பட்டுச் சென்றோம்.

பல்வேறு நாடுகளிலிருந்து நாடகக்குழுக்கள் வந்து அதை ஓரிடத்தில் ஒருங்கிணைக்கின்றார்கள் என்பதில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த அரங்கு நாடகம் செய்வதற்கு ஏற்ற அரங்காக மாற்றப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, மேடையேற்றிய நாடகங்கள் பல வெறுப்பேற்றிக்கொண்டிருந்தன. பார்வையாளர்களும் வருவதும் போவதுமாய், இடையில் கதைத்தும் கொண்டிருந்தனர். இது பாரிஸில் என்றில்லை, ரொறொண்டோ போன்ற இடங்களிலும் நாடகங்கள் நிகழும்போது நடப்பவைதான்.

இன்றும் ஒரு சினிமாவை தியேட்டருக்குப் போய்ப் பார்க்கும்போது, உரிய நேரத்திற்குப் போகவும், இடைநடுவில் அமைதியாக இருந்தும் பார்க்கும் எவராலும், ஏன் நாடகங்களை அதே இயல்புடன் இரசிக்கமுடிவதில்லை என்பது பற்றி நாம் யோசிக்கவேண்டியிருக்கின்றது. கனடாவில் இருந்து வந்தவர்கள் செய்த நாடகமே கவனிக்கத்தக்கதாய் இருந்தது. தமிழகத்திலிருந்து வந்த நாசர் தன் உரையில், மேடையேற்றப்பட்ட நாடகங்களை மெருகேற்ற இன்னும் இடமிருக்கின்றதென்று நாசூக்காய்ச் சொன்னார். உரியவர்கள் அதைக் காதுகொடுத்து கேட்டிருப்பார்களோ தெரியவில்லை.

அடுத்த நாள் லூவர் (Louver) மியூசியம் போவதெனத் தீர்மானித்திருந்தேன். லூவருக்குப் போவதற்கு முதலில் எனக்கு அவ்வளவு பெரிய ஈடுபாடு இருக்கவில்லை. முக்கிய காரணம் அதன் விசாலமான பரப்பு. அவ்வளவு படைப்புக்களை ஆறுதலாகப் பார்ப்பதென்பது ஒருநாளில் இயலாத காரியம். நான் பார்க்க விரும்பியது வான்கோவின் படைப்புக்கள் இருந்த Musee d'Orsay. அத்தோடு அது லூவரோடு ஒப்பிடும்போது சிறிதாக இருப்பதால் ஆறுதலாக ஓவியங்களைப் பார்க்கவும் முடியுமென நினைத்திருந்தேன். எனினும் பாரிஸுக்குப் போய் ஈபிள் டவரையும், லூவர் மியூசியத்தையும் பார்க்கவிட்டால் அதுவென்ன பாரிஸ் பயணமென்று யாரும் கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தால் லூவருக்குள் நுழைந்தேன்.

பல்வேறு நுழைவாயில்கள் இருந்த லூவருக்குள் (முன்னாள் அரசதானி) எந்தத் திசையால் போவதென்பதில் தொடக்கத்திலேயே சிக்கல் வந்துவிட்டது. மேலும் உள்ளே நுழைந்தபின்தான், ரிக்கெட்டோடு, audio guideயும் சேர்த்து எடுக்காததன் அபத்தம் தெரிந்தது. உள்ளே படைப்புக்களின் விபரிப்புக்கள் பிரெஞ்சில் மட்டுமில்லாது ஆங்கிலத்திலும் இருக்குமென்று நம்பியிருந்தேன். ஆனால் அங்கே ஆங்கிலம் தவிரந்த பிற ஜரோப்பிய மொழிகளிலேயே இருந்ததால், ஒவ்வொரு ஆக்கத்தினதும் விபரங்களை அறிவது மிகக் கஷ்டமாக இருந்தது.

நான் சென்ற நுழைவாயிலில் நிறையச் சிற்பங்கள் இருந்தன. அவை அன்றைய கால கிரேக்கப் படைப்புக்கள். எவ்வித கிளர்ச்சியையோ, தேவையற்ற வெட்கமோ இல்லாது எல்லோரும் ஆறுதலாய் நிர்வாண உருவங்களை இரசித்துக்கொண்டிருந்தார்கள். அப்படியே இந்தச் சிற்பங்களைப் பார்த்தபடி, இஸ்லாமிய கலைப் பகுதியிற்குள் நுழைந்தேன். அவை வித்தியாசமான கலைப்படைப்புக்கள். ஒவ்வொரு சிறிய விடயத்திற்கும் நிறைய மினக்கெட்டிருந்தார்கள். அந்தப் பகுதியிற்குள் நுழைந்தபோது எனக்கு ஒரான் பாமுக் 'எனது பெயர் சிவப்பில்' விபரிக்கும் நுண்ணோவியங்களே நினைவின் முன் வந்து நின்றன.

இப்படியே சிற்பங்களையும், அவை உயிர்பெற்றுவிட்டனவோ என எண்ணவைக்கும் அணங்குகளையும் பார்த்துக்கொண்டிருந்தால், மியூசியத்தை மூடிவிடுவார்கள் என்ற அச்சத்தால் சிற்பங்களைத் தவிர்த்து ஓவியங்களைப் பார்க்கப் போயிருந்தேன். முதலில் பிரெஞ்சுக்காரர்களின் இம்பிரஷனிச ஓவியங்களைப் பார்த்துவிட்டு, பிறகு இத்தாலிய ஓவியர்களைப் பாக்கத் தொடங்கினேன். எத்தனை வகையான ஓவியங்கள். அளவிலும் அவ்வளவு பெரியவை. ஒருகட்டத்தில் இனிப்புக்களைச் சாப்பிடும்போது திகட்டுமே, அதுபோல மனதிற்குள் நுழைய ஓவியங்கள் மறுத்தன. மைக்கல் ஏஞ்சலோவின் 'மோனலிசா’விற்கு பெருமளவில் சனங்கள் அடிபட்டுப் பார்த்துக்கொண்டிருந்தனர். அதைவிட வேறொரு புறத்தில் இருந்த Raphel லினதோ, Giuseppe Arcimboldoலினதோ ஓவியங்களை போகின்றபோக்கில் பலர் கடந்துகொண்டிருந்தனர். Arcimboldoவின், மரக்கறி/பழங்களைக் கொண்டு வரைந்த பருவ கால ஓவியங்கள் (four seasons) மிகப் பிரசித்தம் பெற்றவை.

தொடர்ந்து மாடவிதானங்களில் வரையப்பட்ட ஓவியங்களை ஆறுதலாய் யன்னல்கரைகளில் இருந்து இரசித்தேன். இடையிடையே எகிப்து, சீனா, இத்தாலி, கிரேக்கமென அவர்களின் கலாசாரம் சார்ந்த படைப்புக்களையும் இந்த மாடவிதானங்களின் கீழே காட்சிப்படுத்தியிருந்தது நன்றாக இருந்தது. ஒரு அரசரின் சேகரிப்பிலிருந்த முழுப்பகுதியையும் அதில் காட்சிப்படுத்தியிருந்தார்கள். பொன் நிறத்தில் அந்த நீண்ட ஹோல் மினுங்கிக்கொண்டிருந்தது.

Dan Brown னின் 'Angels and Demons' நாவலையோ அல்லது திரைப்படத்தையோ பார்த்தவருக்கு லூவர் மறக்கமுடியாத மனப்பதிவாக இருக்கும். ஒருபக்கத்தில் செயின் நதி ஓடிக்கொண்டிருந்தது. லூவரின் கண்ணாடி பிரமிட்டுக்கு முன் நின்று படம் எடுப்பவர்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். வேலைக்குப் போய்விட்டு சைக்கிள்களிலும், நடந்தும் பலர் போய்க்கொண்டிருந்தனர். ஒரு வாகனத்தில் ஆயுதங்களுடன் பிரான்சு இராணுவம் இரவுக் காவலுக்காய் வந்திறங்க- அது எந்த இராணுவமாய் இருந்தாலும் தன்னியல்பிலே ஒருவித அச்சம் வர- அந்த இடத்தை விட்டு விலகி தூரத்தில் ஒளிர்ந்தபடி இருந்த ஈபிள் டவரைப் பார்த்தபடி ஒரு ஓரத்தில் போய் அமர்ந்தேன்.

நண்பரொருவர் வேலை முடித்து வந்து இணைய, இரண்டு பேரும் ஈபிள் டவரைப் பார்ப்போமென நடக்கத் தொடங்கினோம். கதையின் சுவாரசியத்தில் போகும் திசையைத் தாண்டி வேறெங்கோ நடந்து போய்த் திரும்பி வந்தோம். ஈபிள், அன்றையா இரவில் பிங் வர்ணத்தில் புற்றுநோயிற்கான விழிப்புணர்விற்காய் ஒளிர்ந்துகொண்டிருந்தது. ஏற்கனவே எத்தனையோ முறை புகைப்படங்களிலும், திரைப்படங்களிலும் பார்த்துவிட்டதால், அது ஒரு உயர்ந்த கோபுரம் என்பதற்கப்பால் பெரிய மனவெழுச்சி எதையும் தரவில்லை.
ஆபிரிக்கர்கள்/தென்கிழக்காசியர்கள் சுற்றுலாப் பொருட்களை ஈபிள் டவருக்கு முன் விற்றுக்கொண்டிருந்தனர். எந்த நேரமெனினும் பொலிஸ் வந்தால் பாய்ந்தோடுவதற்கான முன்னேற்பாடுகளோடு அவர்கள் இருந்ததைப் பார்த்தபோது ஷோபாசக்தி 'தீபன்' படத்தில் பொருட்களை விற்றுத்திரியும் காட்சி நினைவிற்கு வந்தது. நானும் நண்பரும் இலக்கியம், நமக்கு இன்று அவசியமாய்த் தேவைப்படும் விமர்சன மரபு எனத் தொடங்கி மலையாளப்படங்கள் வரை, ஈபிள் டவரைப் பார்த்தபடி பாலத்தடியில் இருந்து கதைக்கத் தொடங்கினோம்.

போகும்வழியில் டயானாவின் நினைவிடத்தைப் பார்த்தோம். முன்பு ஒரு பாலத்தில் இந்த காதல் பூட்டுக்களைக் (Love Locks) கட்டிவிட்டு காதலர்கள் போய்விட, ஒருகட்டத்தில் பாலமே எடையின் காரணமாய் சரியும் அபாயம் இருந்தததால் அவற்றை அறுத்தெறிந்தார்கள் என்பதை வாசித்திருந்தேன். டயானா நினைவிடத்திலும் நிறைய காதல் பூட்டுக்கள் இருந்தன. இது எவரும் எங்களைப் பிரித்துவிடக்கூடாதென்கின்ற காதலர்களின் ஒருவகையான பிரார்த்தனை. அருகில்தான் டயானாவின் கார் விபத்தில் சிக்கிய இடம் இருக்கிறதென நண்பர் சொல்லிக்கொண்டு வந்தார்.

மறுநாள், நானும் நண்பர்களுமாய் கொஞ்ச நேரம் பாரிஸைச் சுற்றிப் பார்ப்போமென மெத்ரோவிற்குள் நுழைந்தோம். நாம் இதுவரை செய்த பாவங்களுக்குப் பரிகாரமாய் முதலில் பிகாலிற்குள் (பாரிஸின் முக்கியமான சிவப்புவிளக்குப் பகுதி) போய் இறங்கினோம். எவ்வித வர்ணங்களுமில்லாது சோபையிழந்த பிகாலிற்குள் நடந்தபடி moulin rogueற்கும் ஒரு வணக்கம் வைத்துவிட்டு, நெப்போலியன் தான் ஈட்டிய வெற்றிகளை நினைவுபடுத்தக் கட்டிய Arc de Triomphe ற்குப் போனோம். ஆனால் இது முழுதாக கட்டி முடிந்தது, நெப்போலியன் காலமாகிய பின்னராகும். இந்த இடத்தில் பன்னிரண்டு தெருக்கள் சந்திக்கின்றன. எவ்வித சிக்னல் விளக்குகளும் இல்லாது எல்லா வாகனங்களும் ஓர் ஒழுங்கில் நகர்ந்தபடி இருந்தன. அங்கிருந்து Arc de Triomphe அருகில் போவதென்றால் தெருவால் நடந்துபோகமுடியாது. உள்ளே மெத்ரோவிற்குப் போகும் பாதைபோல இருக்கும் ஒன்றினுள் இறங்கித்தான் போகவேண்டும். அங்கே இராணுவ மரியாதை ஒன்றிற்குத் தயார்படுத்திக்கொண்டிருந்தார்கள். நாங்கள் அதிலிருந்த சிற்பங்களை நிதானமாய்ப் பார்த்துவிட்டு திரும்பவும் லாச்சப்பலுக்கு ரெயினெடுத்துப் போனோம்.

மாலை 7.00 மணியளவில் எங்களது பாரிஸின் சொர்க்க நடை தொடங்கியது. நடப்பதற்கு தயாரா என நண்பரும் கவிஞருமான வாசுதேவன் கேட்க, நான் உற்சாகமாய் ஒரு புதிய அனுபவத்திற்குத் தயாரானேன். ரெயினெடுத்து பாரிசின் பழமை வாய்ந்த இடங்களுக்குள் புகத்தொடங்கினோம். ஒவ்வொரு இடத்தையும் இரசித்து, மிக அழகாக வர்ணித்துக்கொண்டிருந்த வாசுவின் முன் பாரிஸ் இன்னொரு பரிணாமத்தைப் பெறத்தொடங்கியது. பிரெஞ்சுப் புரட்சி என்ற ஒரு அருமையான நூலையும் வாசு எழுதியிருக்கின்றார்.

செயின் நதியை ஊடறுத்த பாலத்தில் நின்றபோது, நான் வூடி அலனின் midnight in paris திரைப்படத்தை நினைவுபடுத்தினேன். இந்த இடத்தில்தான் midnight in paris படத்தில் காதலிக்காய் இறுதிக்காய் காத்திருக்கும் காட்சி எடுக்கப்பட்டதென அவர் சொல்ல ஒரு தற்செயலான நிகழ்வாய் அது ஆகிவிட்டது. நிறையப் பெண்கள் போய்க்கொண்டிருந்தனர் என்றபோதும் மழை பெய்யாததால் - midnight in parisல் வருவதுபோல- நானெனது பாரிஸ் காதலியைக் காணும் அரிய தருணத்தைத் தவறவிட்டுவிட்டேன் போலும்.
பிறகு அப்படியே நடந்து Serbone பல்கலைக்கழகத்தைச் சென்றடைந்தோம். என் பிரிய தெரிதா, ஃபூக்கோ போன்றவர்கள் படித்த/படிப்பித்த இடத்தைக் கண்டவுடன் மனம் அப்படியே பரபரப்பில் பறக்கத் தொடங்கியது. அந்த வளாகத்தின் ஒருபகுதியைச் சுற்றி வந்து சில புகைப்படங்களைப் பல்வேறு கோணங்களில் எடுத்தோம். துயரமென்றவென்றால் அந்தப் படங்களெல்லாம் தற்செயலாய் நண்பரின் கமராவிலிருந்து அழிந்துவிட்டன என்பதுதான். தொடர்ந்து லத்தீன் குவாட்டர் என்னும் கடைகளால் நிரம்பியிருக்கும் பாரிஸின் பிரசித்தம்பெற்ற அழகிய பகுதியையும் நடந்தே கடந்தோம்.

பின்னர் பூக்கோவின் பெண்டுலம் இருக்கும் Panthéon ஐ சென்றடைந்தோம். இந்தப் பெண்டுலம் தான் உம்பர்த்தோ ஈக்கோவின் நாவலுக்கு முக்கிய உந்துதல் என்பதை பலர் அறிவர். அந்தக் கட்டத்தின் மேலே எழுதியிருந்த 'Aux grands hommes la patrie reconnaissante' வார்த்தைகளை மீண்டும் மீண்டும் வாசித்து வாசு புளங்காகிதம் அடைந்துகொண்டிருந்தார் (தமிழாக்கம், 'இந்த உயரிய நாடு உயரிய மனிதர்க்கே' என்ற அர்த்தத்தில் வருமென நினைக்கின்றேன்).

இவ்வாறு இடங்கள் மட்டுமில்லாது வாசுவின் அருமையான விளக்கங்கள், அந்தந்த இடங்களோடு ஒன்றித்து நம்மையும் வரலாற்றின் தடங்களுக்குக் கூட்டிச் செல்ல செல்ல அந்த இரவு மிக இனிமையாக கழிந்துகொண்டிருந்தது. இது போதாதென்று அங்குமிங்குமாய் ஒவ்வொரு புது இடங்களிலும் உள்ளூர் பியர்களை அருந்தியருந்தி நகர்ந்துகொண்டிருந்தோம். அப்படியே நடந்துபோய் 'கிளியோபத்ரா அழகிகள்' அதிகம் உலாவும் தெருக்களினூடாகவும் கூட்டிச்சென்றார். பாரிஸ் வந்துவிட்டு அழகிகளுக்கு வணக்கம் செல்லாவிட்டால் அந்த சாபத்தைத் தாங்கமுடியாதென்று பேசியபடி ஷேகஸ்பியர் புத்தகக் கடைகளை வந்தடைந்திருந்தோம். midnight in parisலும் இந்த இடம் வருகின்றது. அதற்கு அருகிலிருந்த ரெஸ்ரோரண்டில் இருந்து மதுவை அருந்திவிட்டு மீண்டும் நடக்கத் தொடங்கினோம். காதலின் அழகிய இரவு முடிந்துவிடக்கூடாதென நினைப்பதுபோல இந்த இரவும் முடிந்துவிடக்கூடாதென நினைத்தபடி தொடர்ந்து அலைந்துகொண்டிருந்தோம்.

அடுத்தநாள் காலை நண்பரொருவர் Place de la Concorde கூட்டிச் சென்றார். அழகான fountain களும், சிற்பங்களும் கொண்ட விசாலமான இடம். இங்கேதான் பிரசித்திபெற்ற மிக உயரமான 'கில்லட்டின்' இருக்கின்றது. பிரெஞ்சுப் புரட்சியின்போது இங்கேதான் பதினாறாம் லூயிஸ் மன்னர் தூக்கிலிடப்பட்டவர். ஒருபுறத்தில் செயின் நதி, இன்னொருபுறத்தில் பூந்தோட்டமென ஆறுதலாக உலாத்திப் பார்ப்பதற்குச் சிறந்த ஓரிடம் இதுவாகும்.

பின்னர் மாலை, நம்மவர்களால் 'வெள்ளைச் சேர்ச்' எனப்படும் Sacré-Coeur இடத்தைப் போய்ப்பார்த்தோம். இரவு நேரமாகையால் அதன் படிகட்டுக்களில் ஏறாமல் மேலே செல்லும் tram ல் ஏறிப் போனோம். இந்தத் தேவலாயம் எனக்கு மொன்றியலில் இருக்கும் Saint Joseph தேவலாயத்தை ஞாபகப்படுத்துகிறதென நண்பருக்குச் சொல்லிக்கொண்டு வந்தேன். மொன்றியலில் மேலடிவாரத்தை அடைவதற்கு முழங்காலில் படிக்கட்டுக்களில் ஏறிப் போகும் பலர் இருக்கின்றார்கள். அவ்வாறு ஏறினால் அவர்கள் வைத்த பிரார்த்தனைகள் நிகழும் என்பது ஒரு ஜதீகம். பாரிஸ் தேவாலயத்தில் உள்ளே போய்ப்பார்த்தோம். இந்தத் தேவாலய முன்றலில் நின்று பாரிஸை panoramaவாகப் பார்க்கலாம். இரவென்பதால் வித்தியாசமாக இருந்தாலும், பகலில் பார்க்கும்போது இன்னும் அதன் எல்லைகள் மேலும் விரிந்தபடியிருக்குமென நினைக்கின்றேன்.

இடையில் மாறவேண்டிய தரிப்பிடத்தை மாறி இன்னொருமுறை Moulin Rouge ஐ இரவில் ஒருமுறை தரிசித்து விட்டு லா சப்பலில் இருந்த உணவகத்தில் இரவுணவை முடித்துவிட்டு தங்குமிடத்தை அடைந்தேன். அடுத்தநாள் காலை எனக்கு இலங்கை செல்வதற்கான விமானம் இருந்தது.

இந்தப் பாரிஸ் பயணம் கோமகன், பிரசாத், நெற்கொழுதாசன், தர்மினி, ஷோபா சக்தி, வாசுதேவன் எனப் பலர் நண்பர்களின் உதவியில்லாவிட்டால், ஒரு மறக்கமுடியாத பயணமாக மாறியே இருக்காது. இந்த நண்பர்களோடு மேலும் சந்தித்த பல நண்பர்களோடு உரையாடியதை வைத்துப் பார்க்கும்போது கனடா போன்ற நானிருக்கும் நாட்டைவிட இவர்கள் மிக உற்சாகமாய் ஏதோ ஒருவகையில் கலை இலக்கியங்களில் இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள் போலத்தோன்றியது. இத்தனைக்கும் நான் சந்தித்த நண்பர்கள் பலரின் வழக்குகள் நிராகரிக்கப்பட்டும், நிரந்தர வதிவிடப் பத்திரங்களோ இல்லாதுதான் பிரான்சில் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் நிறைய வாசித்துக்கொண்டும், உரையாடிக்கொண்டும் இருக்கின்றர்கள். பிரசாத், தர்மினி போன்றவர்கள் 'ஆக்காட்டி' சஞ்சிகையையும், கோகமன் 'நடு' என்கின்ற இணைய சஞ்சிகையையும், சதா, விக்ரம் போன்றவர்கள் குறும்பட/திரைப்பட முயற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றர்கள். ஷோபா சக்தி, வாசுதேவன், தர்மினி, நெற்கொழுதாசன் போன்றோர் தொடர்ச்சியாக தம் தொகுப்புக்களையும் வெளியிட்டும் கொண்டிருக்கின்றார்கள். இது நான் சந்தித்த நண்பர்களைப் பற்றியது. நான் சந்திக்காத/அறியாத இன்னும் பலர் இவ்வாறு இயங்கிக்கொண்டிருப்பார்கள்.

வாசிப்பின் தீவிரத்தைக் கூட்டிய காலங்களில் அன்று பாரிஸிலிருந்து வந்துகொண்டிருந்த உயிர்நிழல், எக்ஸில், அம்மா போன்ற இதழ்களே இன்னொரு திசையை எனக்குக் காட்டியிருந்தன. இந்த இதழ்களில் அரைவாசி அக்கப்போர்களே நிகழ்ந்தாலும் பல புதிய விடயங்களை அறியக்கூடியதாகவும் இருந்தது. ராஜநாயஹம் எழுதிய சாரு நிவேதிதா பற்றிய கட்டுரையே எனக்கு முதன்முதலில் சாருவை அறிமுகப்படுத்தியது. கவிஞர் திருமாவளவனை மிக நெருக்கமானவராய், என் கவிதைகள் பற்றி எப்போதும் கருத்துக்கள் பரிமாறும் ஒருவராக இந்தச் சஞ்சிகைகளால்தான் சாத்தியமாகின. சாரு குறித்த தேடல் பிறகு மைக்கேல் 'ஜீரோ டிகிரி'யை எனக்கு நேரில் கொண்டுவந்து தரும்படி வாசிப்புப் பைத்தியமாக்கியது. மேலும்‘விஷ்ணுபுரம்’ குறித்த என் பார்வைகளை நேரில் வைப்பதற்காய் ஜெயமோகனைச் சந்திப்பதற்காய், அன்றைய காலத்தில் என் பல்கலைக்கழகத்திலிருந்து பலநூறு மைல்கள் தாண்டி ரொறொண்டோ வர இவையே உந்தியும் தள்ளியுமிருந்தது.

வாசிப்பதென்பது நாமறியாத மனிதர்களை நிலப்பரப்புக்களை அறிமுகப்படுத்துவது போல, பயணங்களும் நமக்குப் பழக்கமில்லா மொழிகளிடையேயும், அந்நிய மனிதர்களிடையேயும் நம்மை உலவச் செய்கின்றன. நம்மிடையே இருந்த அச்சங்களையும், கற்பிதங்களையும் அவை கழற்றியெறியச் செய்கின்றன. ஒவ்வொரு பயணங்களின் முடிவிலும். நாம் பார்த்த இடங்களைவிட, அந்த இடங்களை அடைவதில் பெற்ற அனுபவங்களே முக்கியமாகிவிடுகின்றன. சிலவேளைகளில் இந்த அனுபவங்கள் நமக்கு மறக்கமுடியாத அரிய மனிதர்களையும் அறிமுகப்படுத்தியும் விடுகின்றன.
------------------------------------------------

(நன்றி: 'அம்ருதா' - மாசி)

Unearthed -10 years in Sri Lanka (2005-2015)

Thursday, April 06, 2017

Kusal Pereraவின் 2005-2015ற்குமிடையில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். தனியே சிங்கள மக்களைப் பற்றியோ, தமிழர்களை எதிர்த்தரப்பாகவோ பார்க்காது அவர் இரு இனங்களுக்கிடையிலான சிக்கல்களை நிதானமான தொனியில் பேசுவது கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிக்க ஆவலான மனோநிலையைத் தந்துகொண்டிருக்கிறது. இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள்/அரசியல்கட்சிகளை மட்டுமின்றி இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு, இலங்கையில் செல்வாக்குச் செலுத்திய/செலுத்தும் புள்ளிகளை தெளிவாக இனங்காட்டுகின்றார்.  1983 கறுப்பு ஜூலை பற்றிய கட்டுரையில் எவ்வித சமரசமுமின்றி சிங்கள இனவாதிகளின் மிலேச்சத்தனத்தைக் கண்டிக்கின்றார்.

தமிழ் இயக்கங்களில் புலிகளும் புளொட்டும் ஒருகாலத்தில் வேகமாக வளர்ந்தோங்கியது என்றும், புளொட் தொடக்ககாலங்களில் சிங்கள இடதுசாரிகளிளோடு சேர்ந்து இயங்கி ஆட்சியை மாற்றியமைப்பதன் மூலம், தமக்கான கோரிக்கையை அடையலாம் என நினைத்ததும், புலிகளின் தலைவர் தமிழரின் செழிப்பான காலமாயிருந்த சோழர் காலத்து அடையாளங்களை மீட்டுயிர்ப்பதன் மூலம் ஒரு வீரமரபை உருவாக்கி, தனிநாடு அடையலாமென அங்கே மினக்கெட்டாரெனவும் வரலாற்றை குஸல் பெரேரா மீள்பரிசீலனை செய்கின்றார். மேலும், புலிகளின் கரும்புலிகள் பற்றி மேலெழுந்தவிதமாய் எழுதாது, அதை தமிழர்களின் தற்கொலைகளின் மரபிலிருந்து விளங்கிக்கொள்ள முயல்கின்றார். கிட்டத்தட்ட அவ்வகையான கட்டுரைகளை தமிழில் தமிழவனும் நாகார்ஜூனனும் எழுதியதும் நினைவிற்கு வருகின்றது.
ஒரு போராட்டத்தில் தற்கொலைப்படையாளிகளாவது குறித்து நமக்கு ஏற்றுக்கொள்ளமுடியாக் கருத்துக்கள் இருப்பினும், ஏன் இதுவானது (தற்கொலைப்படை மட்டுமின்றி,  அமைதியான போராட்டங்களில்  தம் உரிமைகளை வென்றெடுப்பதற்காய் தற்கொலை செய்துகொள்வது வரை) தமிழ் மரபில் மிகவும் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதற்கு பண்பாட்டின் அடித்தளங்களுக்குள் போகாது, அதன் நீட்சியை நாம் மேலெழுந்தவாரியாகக் கதைப்பதன் மூலம் வெட்டியெறிய முடியாது என்பதே நிதர்சனமாகும்.

இன்னும், 'குழந்தை' ம.சண்முகலிங்கத்தின் நாடகங்கள், அசோக ஹந்தகமவின் 'இனி அவன்' போன்றவை குறித்தும் விரிவாக எழுதியுள்ளதோடு, தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் குறித்தும் ஆராய்கின்றார்.  இலங்கையில் மொழிக்கான போராட்டங்கள் ஆயுதப்போராட்டமாய் மாறியது போல, ஏன் இந்தியாவில் தனித்தமிழ்நாடு கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதும் வன்முறைக்குள் இறங்கவில்லை என பெரியாரை முன்வைத்து பேசுவது, அதுவும் முக்கியமாய் சிங்களத்தரப்பில் பேசப்படுவது கவனிக்கத்தக்கது.
ஒரு மனிதாபிமானி எப்படி இருக்கலாம் என்பதற்கு குஸல், இந்திய அரசின் பிரதிநிதிகளுக்கு, பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்குமான மரணதண்டனையை இரத்துச் செய்யச் சொல்லி எழுதும் கடிதம் முக்கியமானது. போர் தின்றுவிட்ட ஒருநாட்டின் 30 மில்லியன் மக்களின் பிரதிநிதிகளின் ஒருவனாய் போர் எவ்வளவு பாதிப்புக்களை ஏற்படுத்துமென எனக்கு நன்குதெரியுமென அவர் தொடங்கும்  இந்தக் கட்டுரையை, நாம் தனிப்பட்ட சிங்களவரின் செயல்களை முன்வைத்து பொதுப்புத்தியாக எழுதும் நம்மிடையே இருக்கும் சிலருக்கான எதிர்வினையாகக் கூட இதனைக் கொள்ளலாம். மேலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எப்படி தமது கோரிக்கைகளில் இருந்து விலகிக் கொண்டிருப்பதையும், முக்கியமாய் புனர்வாழ்வு முகாங்கள் குறித்து அவர்கள் எதுவுமே செய்யாது தோற்றுப்போயினர் என்பதையும் சுட்டிக்காடுகின்றார்.

இதை வாசிக்கும்போது தமிழில் யாரெனும் ஒருவர் கடந்த பத்தாண்டுகளாய் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து, அவற்றை வாசித்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென யோசித்தேன். அரிதாக ஒரு சிலர் தவிர்த்து,  தமிழில் இருக்கும் அரசியல் ஆய்வாளர்கள் என்பவர்களோ, அறிவுஜீவிகள் என்பவர்களோ குறுகிய வட்டத்திற்குள் சுழல்கின்றவர்களே என்ற நினைப்பு சோர்வைத் தந்து, அவற்றைத் தொகுக்காமல் விட்டாலே தமிழ்ச்சமூகத்திற்கு அவர்கள் செய்யும் பெரும் உதவியாக இருக்கும் போலவும் தோன்றியது.

'Political Opposition in a Nihilistic Sinhala Society'  என்பதில் எப்படி இலங்கையிலிருக்கும் புத்தமதத்தையும் அதைப் பின்பற்றுபவர்களையும் விமர்சனம் செய்கின்றார் எனப் பாருங்கள்;

தனிமைப்படுத்தி, உளைச்சலுக்குள்ளாக்கும்  இன்றைய நுகர்வோர் வாழ்வானது மனிதர்களை புதிய  மத விடயங்களை நோக்கி ஓடச்செய்கிறது. இது புதிய ஆச்சிரமங்களையும், கொண்டாடப்படும் பிக்குகளையும் உருவாக்கி, ஹீனயான புத்த கொள்கையை இன்னும் பரவச்செய்கிறது. ஹீனயானமானது ஒருவகையில் சிங்கள அரசிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதுடன், தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதையும் நியாயப்படுத்துகிறது.
இப்படியான தனிமைப்பட்டதும், உள்ளொடுங்கியதும் , வித்தியாசமான சிந்தனைகளுமற்ற ஒரு சமுகம் அரசின் ஒடுக்குமுறையை எதிர்க்க முடியுமா? அரசியல் பிரச்சினைகளை கூட்டுணர்வோடு சமூகத்தளத்தில் பேசித்தீர்க்க முடியுமா? மேலும் அறிவுத்தகைமையுடைய ஒரு எதிர்க்கட்சி இல்லாதபோது இந்தப்பிரச்சினைகள் எதுவும் தீர்ந்துவிடாது என்கிறார் குஸல். இப்படி 2011ல் மகிந்த ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்டாலும் இப்போதும் எதிலும் பெ ரிய மாற்றம் வந்துவிடவில்லை என்பதே யதார்த்தமும் ஆகும்.

(நன்றி: 'பிரதிபிம்பம்')

Mariano Azuela வின் 'வீழ்த்தப்பட்டவர்கள்'

Friday, February 24, 2017

(தமிழில் அசதா)


19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த மெக்ஸிக்கோப் புரட்சி, 30 வருடங்களாய் ஆட்சியில் இருந்த டயாஸ் மொறியை பிரான்ஸிற்குத் தப்பியோட வைத்தது. அதன் பிறகு புரட்சிப்படையினருக்குத் தலைமை வகித்த மடேரோ ஜனநாயக முறையில் நிகழ்ந்த தேர்தலில் வெற்றி பெறுகின்றார். எனினும் வலதுசாரிகளால் இவரொரு மிகுந்த தாராளவாதியெனவும், புரட்சியை நடத்திய படையினரால் இவரொரு அதிதீவிர வலதுசாரியெனவும் விமர்சிக்கப்பட்டு ஆட்சியேறிய சில வருடங்களில் கொல்லப்படுகின்றார். 1910ல் புரட்சியை நடத்தி, ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திய மெக்ஸிக்கோ அடுத்த 10 வருடங்களில் மிகப்பெரும் உள்நாட்டுப் போரில் சிக்கித் திணறியுமிருக்கின்றது. வழமை போல அந்நிய சக்தியான அமெரிக்காவின் ஆதிக்கம் இந்த உள்நாட்டுக்குழப்பங்களில் இருந்ததும், கிட்டத்தட்ட மில்லியனுக்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டதும் கடந்தகால வரலாறு.

இந்த மெக்ஸிக்கோப் புரட்சி பற்றி உள்ளிலிருந்து எழுந்த ஒரு குரலாக Mariano Azuela எழுதிய 'The Underdogs' 1915ல் வெளிவந்திருக்கின்றது. அசதா 'வீழ்த்தப்பட்டவர்கள்' என்ற தலைப்பில் இந்த நாவலைத் தமிழாக்கியிருக்கின்றார். மரியானோ, நிஜ வாழ்க்கையில் ஒரு மருத்துவராக இருந்ததோடன்றி புரட்சிப்படையோடு ஒரு மருத்துவராகப் பல்வேறு பகுதிகளில் பயணித்துமிருக்கின்றார் என்பதையும் நினைவூட்டிப் பார்த்தால், இந்த நாவலில் அசலும் கற்பனையும் நாம் பிரித்துப் பார்க்காது இடைவெட்டிக்கொண்டு போவதும் இயல்பானது எனத்தான் கொள்ளவேண்டும்.

நாவலில் சாதாரண தோட்டக்காரனான டிமிட்ரியோ, நகரமொன்றுக்குப் போகும்போது அங்குள்ள நகரத்தலைவனோடு ஒரு சச்சரவில் ஈடுபடுகின்றான். நகரத்தலைவனோ அன்றைய ஆட்சியிலிருக்கும் பெடரல்களை இவன் மீது ஏவிவிடுகின்றான். இதனால்  தன் குடும்பத்தைப் பிரிந்து மலையில் தலைமறைவாக வாழும் அவனோடு, இப்படி பல்வேறு நிலைகளில் பெடரல்களின் மீது கோபங்கொண்ட ஏழைக்குடியானவர்கள் ஒரு இருபது பேர்கள் வந்து சேர்கின்றார்கள். இவர்களைத் தேடி வரும் பெடரல்களின் பெரும்படையை துப்பாக்கிச் சண்டையில் அடித்துத் துரத்துகின்றார்கள். இந்தச் சண்டையில் காயப்படும் டிமிட்ரியோவைத் தூக்கிக்கொண்டு தப்பும் இந்தப்படையினர் மிகவும் வறுமையான குடியானவர்களின் குடியிருப்புக்களில் தலைமறைவாகின்றனர்.

அங்கே இவர்களோடு மருத்துவம் படித்த, பத்திரிகையிலும் எழுதும் செர்வாண்டிஸ் வந்து சேர்கின்றான். முதலில் செர்வாண்டிஸை, பெடரல்களின் அனுப்பு ஒரு உளவுக்காரனென நினைத்து பயங்கரமான தண்டனை கொடுக்கும் டிமிட்டியோவின் படையினர் இறுதியில் அவன் உண்மையிலே அன்று பல்வேறு பகுதியில் பெடரருக்கு எதிராக நடக்கும் மெக்ஸிக்கோ புரட்சியில் பங்குபெறத்தான் வந்திருக்கின்றான் என்ற உண்மையை அறிந்துகொள்கின்றனர்.

புரட்சி மீது மிகப்பெரும் விருப்பும், புரட்சிக்காரர்கள் பற்றி பல்வேறு கதைகளையும் கேள்விப்பட்டு புரட்சிப்படையில் சேர வந்த செர்வெண்டிஸுக்கு, டிமிட்ரியோவின் படையினரைப் பார்க்க மிகுந்த ஏமாற்றமாய் இருக்கின்றது. அற்புத குதிரைகளுடனும், நேர்த்தியான ஆடைகளுடனும், திடமான ஆண்களுமாய் புரட்சிக்காரர்கள் இருப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பிற்கு எதிர்மாறாய் அவர்கள் இருக்கின்றார்கள்.

டிமிட்ரியோவின் காயம் ஆற, அவனது படை பெடரல்களின் அருகிலிருந்த நகரங்களில் தாக்கப் புறப்படுகின்றது. எவ்வித பயமுமின்றி பாய்ந்து போரிடும் அவர்களின் போர்த்திறமையைக் கண்டு பலர் டிமிட்ரியோவோடு வந்து இணைகின்றார்கள். அதுவரை பெடரல்களின் அடக்குமுறையில் இருந்த சாதாரண மக்களும் இவர்களை ஒவ்வொரு நகரிலும் ஆதரிக்கின்றார்கள். பெடரல்கள் பற்றிய தகவல்களை இவர்களுக்கு வழங்குகின்றார்கள். இன்னொரு திசையில் தலைமை தாங்கிக்கொண்டிருக்கும் புரட்சிப்படையின் கேணலால் கூட வெற்றி கொள்ள முடியாத பெடரல்களின் உறுதிமிக்க நகரொன்றை பின்புறத்தால் நுழைந்து, நுட்பமாய் டிமிட்ரியோவின் படையினர் வெற்றிகொள்ள இவனின் புகழ் எங்கும் பெறுகின்றது. புதியவர்கள் எல்லாத்திசையிலிருந்தும் இவர்களோடு சேர்ந்துகொள்கின்றார்கள்.

பெடரல்களின் இறுதிக்கோட்டையையும் டிமிட்ரியோவின் படைகள் ஏனைய புரட்சிப்படைகளோடு சேர்ந்து வெற்றிகொள்ள பெடரல்களின் அட்டகாசம் அடங்குகின்றது. புதிய ஆட்சிமாற்றம் நிகழ்கின்றது. டிமிட்ரியோ ஜெனரலாக பதவியுயர்வு பெறுகின்றான். அவனோடு கூடவே இருந்த செர்வாண்டிஸ் மேஜர் தரத்திற்கு வருகின்றான். இப்போது பெரும்படையோடு இருக்கும் டிமிட்ரியோடு பிளாண்டியும், இன்னொரு பெண்ணும் சேர்ந்தும் கொள்ள, டிமிட்ரியின் படைகள் நகரங்களில் புகுந்து சூறையாடத்தொடங்குகின்றார்கள். மதுவும், மாதுவும் வேண்டிய கொண்டாட்டத்தில் குடியானவர்களின் சொத்துக்களை அபகரித்து, எதிர்ப்பவர்களைச் சுட்டுந்தள்ளுகின்றார்கள். யாருக்காய் போராடப்போனார்களோ அவர்களே வெறுக்கின்ற படைகளாக டிமிட்ரியோவின் ஆட்கள் ஆகிவிடுகின்றனர்.

டிமிட்ரியோ தான் இப்படி மாறிவிட்டான் என்றால், புரட்சி மீது நம்பிக்கைகொண்ட மருத்துவனாய் இருக்கின்ற செர்வாண்டிஸ் எல்லோரையும் விட பணத்தாசை பிடித்தவனாக மாறுகின்றான். அவனைக் காதலித்த இரு பெண்களையும், சொத்துச் சேகரிக்கும் பேராசையில், பிறருக்கு அவர்களை அடகு வைக்கின்றான. அவன் மீதான காதல் பித்தத்தில் இருக்கும் கமீலாவின் காதலை மறுக்க அவனுக்கு தன் பிறப்பால் வந்த அந்தஸ்துதான் ஒரு காரணமென்றாலும், அவளை நம்பவைத்து டிமிட்ரியோவின் இச்சையிற்கு அடிபணியவைப்பது அதிகார இச்சையின் இன்னொரு பக்கம். படித்தவர்கள் விரும்பினால் சமூகத்தை எந்த இழிநிலைக்கும் கொண்டு செல்லத்தக்கவர்கள் என்பதற்கு செர்வாண்டிஸ் மிகச்சிறந்த உதாரணம்.

புரட்சி வென்றபின், இப்போது புரட்சிப்படைகள் தங்களுக்குள் அடிபடத்தொடங்குகின்றார்கள். 'டிமிட்ரியோ நீ எந்தப் பக்கம்?' என ஒரு ஜெனரல் கேட்கின்றபோது, 'எனக்கு புரட்சிபற்றி எதுவும் தெரியாது, போராட மட்டுமே தெரியும்' என்று சொல்லி, ஜெனரல் கூறும் ஒரு பக்கம் நின்று மீண்டும் சண்டை பிடிக்கச் செய்கின்றான். இம்முறை முன்போல மக்களின் ஆதரவு இவர்களுக்கு இல்லை. மேலும் இவர்களின் படையில் இருந்தவர்களுக்கு எதிராகவே இவர்கள் போராடுவதும் கடுமையாக இருக்கின்றது.
மீண்டும் தன் சொந்த ஊரான மலைகளின் தேசத்திற்குப் போய் தான் பழைய தோட்டக்காரனாக ஆகிவிடுவேன் என டிமிட்டிரியோ அடிக்கடி கனவு காண்கின்றான்.

ருகட்டத்தில் அவன் பெடரல்கள் தன்னைக் கடந்தகாலத்தில் துரத்தும்போது தப்பியோடச் சொன்ன தன் மனைவியையும், பிள்ளையும் காண்கின்றான். மனைவி எல்லாவற்றையும் விட்டுவிட்டு தன்னோடு வந்து சாதாரண வாழ்வு வாழச் சொல்கின்றாள். ஆனால் டிமிட்ரியோவின் காலம் கடந்துவிட்டது. இயல்பான வாழ்க்கையிற்கு இனி என்றென்றைக்குமாய்த் திரும்பிடமுடியாத ஒரு வாழ்வைத் தேர்ந்தெடுத்துவிட்டான்.

செர்வாண்டிஸ் தப்பி வேறிடத்திற்குப் போய், மக்களிடமிருந்து அபகரித்த சொத்தைவைத்து, தன் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டான். இப்போது டிமிட்ரியோவின் படையில் முக்கிய கேணலாய் இருக்கும் தன் நண்பனை, எல்லாவற்றையும் கைவிட்டு பணத்தை அபகரித்துக்கொண்டு மெக்ஸிக்கோ சிட்டிக்கு வரச்சொல்கின்றான். தானும், அவனுமாய்ச் சேர்ந்து ஒரு புதிய உணவகத்தைத் தொடங்கி நிறையச் சம்பாதிக்கலாமென ஆசை காட்டி கடிதம் எழுதுகின்றான்.

டிமிட்ரியோவின் படைகள் மலைக்கிராமத்தில் இருந்தாலும், ஒரு காலத்தில் அவனின் நண்பர்களாய் இருந்து இப்போது எதிர்ப்படைகளாய் இருந்தவர்கள் இவனைச் சுற்றி வளைக்கின்றார்கள். இவனின் மிகத்திறமை வாய்ந்த தளபதிகள் எல்லாம் இவன் கண்முன்னே கொல்லப்படுகின்றார்கள். இவர்களின் படையை விட எண்ணிக்கையில் அதிகமான எதிரிப்படைகள் சூழ்வதை அசட்டை செய்து எதிரிகளைக் குறி பார்க்க துப்பாக்கியை உயர்த்துவததோடு இந்நாவல் முடிகின்றது.

மெக்ஸிக்கோ புரட்சி ஒரு வரலாற்று நிகழ்வு. ஆனால் அதற்காய் மிகப்பெரும் விலையும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஒரு எதிரியை வீழ்த்தத் தொடங்கிய புரட்சி அது எதிர்பார்த்திருக்கவே முடியாத பல திசைகளில் மாறி மாறி இன்னுமின்னும் அழிவையும் கொடுத்திருக்கின்றது. ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள் எப்போதும் புரட்சியை இருகரங்கொண்டே ஆதரிக்கின்றார்கள். புரட்சியும், புரட்சிக்காரர்களுந்தான் பலவேளைகளில் தடம் புரண்டுவிடுகின்றார்கள். 30 வருடங்களாய் மேலாய் இருந்த ஒரு சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தத் தொடங்கிய மெக்ஸிக்கோப் புரட்சியில், புரட்சியில் பங்குபெற்றியவர்களே தங்களுக்குள் அடிபடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டு விடுகின்றது.. எப்போதுபோல மக்களே Underdogsயாய் முன்பும் இருந்தார்கள், பிறகு புரட்சி நடந்தபின்னும் அதேநிலையில்தான் இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது என்பதைத்தான் இந்த நாவல் மறைமுகமாய்ச் சொல்கின்றதோ?

(நன்றி: 'பிரதிபிம்பம்')

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் – பதின்ம வயதின் அற அலைச்சல்

Wednesday, February 22, 2017

-அனோஜன் பாலகிருஷ்ணன்
Post-war காலப் பகுதியில் வெளியாகிய பல்வேறு கதைகள் பெரும்பாலும் ஒத்த தன்மைகளைக் கொண்டிருப்பதை அவதானிக்க இயலும். பெரும்பாலான கதைகள் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் நாயகன் முன்னாள் போராளி ஒருவரைத் திருமணம் செய்ய இலங்கைக்கு வருவார்; ஆனால், அவ்வீட்டுக்கு அருகிலிருக்கும் உள்ளூர்வாசியொருவர் பொறாமையில் அம்முன்னாள் போராளியைப்பற்றித் தவறாகச் சொல்ல நாயகன் அதனை நம்பி விட்டுவிட்டு மீண்டும் தான் வாழும் நாட்டுக்குச் செல்வார். (புலம்பெயர்ந்த நாம் உதவிசெய்ய வந்தாலும் உள்ளூர் வாசிகள் விடுவதில்லை என்ற தொனி அதிலிருக்கும்) இல்லையெனில் முன்னாள் போராளிகள் வெவ்வேறு விதமாகச் சமூகத்தினால் புறக்கணிக்கப்படுவதை மீண்டும்….மீண்டும் தேய்வழக்குடன் கற்பனைவளமின்றி எழுதியதாகவிருக்கும். இல்லையெனில் இலங்கையில் வாழ்ந்த நிகழ்வுகளில் எஞ்சியதை வைத்து ஏதோவொரு கதையை எழுத முயல்வதாக இருக்கும்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களிடம் எதிர்பார்ப்பது என்ன? அங்கிருக்கும் வாழ்க்கையை, புலம்பெயர்ந்து அந்நாட்டுப் பண்பாட்டுச்சூழலில் புகும்போது ஏற்படும் முரண் இயக்கங்களை வைத்துக்கொண்டு நுண்மைகளோடு எழுதப்படும் கதைகளைத்தான். ஆனால் அவ்வாறு எழுதப்படும் கதைகள் ஒப்பீட்டு அளவில் மிகக்குறைவானவை என்பதே உண்மை.
பத்திகளைச் சலிப்பில்லாமல் எழுதுவதற்குப் பெயர்போன இளங்கோ [டி.சே.தமிழன்] அபூர்வமாக எழுதிய புனைவுகளில் சிலவற்றை ஏற்கனவே முன்னம் வாசித்திருக்கின்றேன். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இயல்பாக எழும் சிக்கல்களை வைத்து, பதின்ம வயதுகளில் புலம்பெயர்ந்த ஒருவனின் பார்வையில் நகரும் கதைகளாக அவையிருந்தன. இளங்கோவின் சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் புத்தகம் கைக்குக் கிடைத்தபோது ஆர்வமாகத் தட்டிப்பார்த்தேன். மொத்தம் பன்னிரண்டு கதைகள்.
‘கோபிகா ஏன் அப்படிச்செய்தாள்’ சிறுகதை நீண்ட நாட்களுக்குப் பின் நாட்டுக்கு வரும் ஒருவரின் பார்வையில் நகரும் கதை. நீண்ட நாட்களுக்குப்பின் தாய்நாடு வரும்போது ஒருவித மிதப்பான பார்வையில் புறச்சூழலை அவதானிக்கிறார் கதைசொல்லி. மச்சாள்காரி விழுந்து விழுந்து கவனிக்கின்றாள். அவளின் கணவர் சிவா இயக்கத்தில் இருந்துவிட்டு இடைவிலகி வந்தவர். அதற்குக் காரணமாகவிருக்கும் சம்பவம் சுவாரசியமானது. கோபிகாவைக் காதலித்த கபிலன் இயக்கத்துடன் தொடுப்பில் இருந்தவர். தனிப்பட்ட துரதிர்ஷ்டமான சம்பவத்தினால் ஏற்கனவே இயக்கம் மீது கடும் சினத்திலிருக்கும் கோபிகாவின் தகப்பன் வேறொருவருக்குக் கோபிகாவை திருமணம் செய்துவைக்க முயல்கிறார். கோபத்தில் கிளர்ந்தெழுந்த கபிலன் தகப்பன் இல்லாத நேரம் கோபிகாவின் வீட்டில் புகுந்து கோபிகாவின் காலில் வெட்டி விடுகிறான். ஒரு காலில் மூன்று விரல்கள் செயலிழந்து விடுகின்றன. தடுக்க வந்த தாய்க்கும் வெட்டு. பிற்பாடு அவன் வன்னிக்குச் சென்று முற்றுமுழுதாக இயக்கத்துடன் இணைந்துவிடுகிறான். அங்குதான் கபிலனுக்குச் சிவா அறிமுகமாகிறான். சிவாவுடன் நண்பனாக இருந்த கபிலன் சொல்லாமல் கொள்ளாமல் ஒருநாள் இயக்கத்தைச் சுழித்துவிட்டுப் படகேறி இந்தியா சென்றுவிடுகிறான். அந்தச் சம்பவத்தால் சிவா பங்கருக்குச் செல்ல நேர்கின்றது. அப்படியே இடைவிலகி இயக்கத்தைவிட்டு வந்தவர்தான் சிவா. இந்தியா சென்ற கபிலன் ஒரு பெண்ணோடு காதல்வயப்பட்டு அப்பெண்ணைக் கடத்த முயன்று மாட்டுப்பட்டுச் சிறைவாசம் சென்று இறுதியில் பம்பாய்ச் சென்றுவிடுகிறான். இந்தக் கதைகளைக் கேள்விப்படும் கதை சொல்லிக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. அதைவிடப் பெரும் அதிர்ச்சிதரும் விடயத்தைக் கேள்விப்படுகிறான், அது கோபிகா ஒருநாள் கடிதம் எழுதிவிட்டுக் கபிலனை தேடிப்போய்விட்டாள் என்பதே. அதை மட்டும் கதை சொல்லியால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. கதைக்குள் எங்கையோ ஒர் ஒருமை புதைந்திருக்கின்றது. அதைக் கண்டறியவே அவனால் முடியவில்லை. அந்தத் திகைப்புப் புதிதாக வாங்கிக்கு அடித்த வார்னிஷ் நிறப்பூச்சில் ஒட்டிய தூசு போலத் துடைத்தெறிய முடியாமல் இருக்கின்றது. கோபிகா ஏன் அப்படிச்செய்தாள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறும்போது மக்களும் இயக்கத்தை அவ்வாறு நேசித்திருப்பார்களோ என்று அவனுக்குத் தோன்றுகின்றது. நேசித்த இயக்கம் என்னதான் நேசித்தவர்களுக்கே துன்பம் தந்தாலும் இயக்கத்தை அவர்கள் வெறுக்கவே இயலவில்லை. அதுவே தவிர்க்க இயலாத பொது மனநிலையாக இருக்கின்றது. வெறும் கதை சொல்லலால் நகரும் இக்கதை புறச்சூழல் வழியே கேள்விப்படும் கதைகளை அடுக்கி ஒரு புனைவாக எழுகிறது. கணவாய் கறியும் புட்டும் மாம்பழமும் சாப்பிட்டு ருசி காணும் சில நுண்மையான அவதானங்களோடு நகர்கின்றது.
‘பனி’ என்கின்ற கதை இத்தொகுப்பில் எனக்குப் பிடித்த கதைகளில் ஆகச்சிறப்பானது. கனடாவுக்குப் பதின்மவயதில் விசா இல்லாமல் குடியேறவரும் ஒருவனைப்பற்றிய கதை. சடகோபன் விசா இல்லாமல் கனடாவிற்கு வந்து நாட்டில் கடுமையான யுத்தம் என்று இமிகிரேஷன் அதிகாரிகளுக்கு முன் கையைத் தூக்குகிறார். அங்கிருந்து கனடா வாழ்க்கை அவருக்கு ஆரம்பமாகிறது. வீட்டில் இரண்டு தங்கைச்சிகள், அவர்களை மறந்திடவேண்டாம் என்று அம்மா தினமும் நச்சரிப்பு. பாடசாலைக்குச் செல்வதும் பகுதிநேர வேலைகளுக்குச் செல்வதுமாக அவனது பொழுதுகள் நீளுகின்றன. எப்போதும் வேலையும் படிப்புமாக இருக்கும் அவனுக்குப் பிலிப்பைன்ஸ் வம்சாவளியைச் சேர்ந்த பெண் தோழியாக அறிமுகமாகிறாள். அவளுடனான ஊடல்கள் அவனுக்கு மகிழ்ச்சியையும் விடுதலையையும் தருகின்றன. எந்த நாட்டுப் பெட்டைகளுடனும் திரி; ஆனால், பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரி மட்டும் வேண்டாம் அவர்கள் நச்சரித்து உன்னிடம் இருக்கும் பணத்தையெல்லாம் கறந்துவிட்டுக் கழற்றி விடுவார்கள் என்று வழமையான தமிழ் மனநிலையில் உபதேசம் செய்கிறார்கள். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அவளுடன் இனிமையாக நாட்களைக் கழிக்கிறான். வாரத்தில் ஆறு நாட்களைக் குடும்பத்துக்கு உழைப்பதற்கும் மிகுதி ஒரு நாளை அவளுக்காகவும் ஒதுக்கி வைத்திருந்தான். இளமையின் தனிமைகளை வெற்றிடங்களை நிரப்பிக்கொள்ளப் பெண்வாசம் தேவையாக இருக்கின்றது. நிராகரிக்க முடியாத அடிப்படை மனித இயல்பாக அது இருக்கின்றது. இறுதியில் அவளின் உறவை இவனே வெட்டிவிட வேண்டியதாகின்றது. காலம் செல்லச்செல்ல பொருளாதாரம் விரிய தங்கச்சிமாருக்குத் திருமணம் செய்து தன் மீது சுமத்தப்படப் பொறுப்புகளைக் களைகிறான். இலங்கையில் இருந்து வரும் சுகந்தி என்ற பெண்ணோடு அவனுக்கும் திருமணம் நிகழ்கிறது. திருமணத்திற்குப் பிறகு அவனது வாழ்க்கை ஒரு நிலையான நிலைக்கு வரும் என்று எதிர்வு கூறியபோதும், அது முற்றிலும் சிதைகின்றது. சுகந்திக்கு இலங்கையில் இறுக்கமான காதல் இருந்தது, அதிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எறியப்பட்ட தாபங்கள் இன்னும் ஓயாமல் இருக்கின்றது. உடலுறவில் இருந்து அனைத்துச் செயற்பாடுகளிலும் அவளது வெறுப்புக் கசிகிறது. ஒரு கட்டத்தில் அவள் இவனிடம் இருந்து விவாகரத்துப் பெற்று இலங்கைக்கே சென்று விடுகிறாள். வேகமாகச் சிதையும் அவனது உளவியல் மனப்பிறழ்வுக்குக் கொண்டு செல்கின்றது.
இக்கதை ஆழமாக, புலம்பெயர் தேசத்தில் வாழ முனையும் தமிழ் மனநிலையைப் பேசுகின்றது. ஒவ்வாத தேசத்தில் கிடைக்கும் இன்பங்கள் பல இடங்களில் தேவையாக இருந்தாலும் அதை மறுக்கும், வெட்டும் இடங்கள் தமிழ் மனநிலை புனிதப்படுத்தும் இடங்கள். பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரியின் உடலும் முத்தமும் சுட்டெரிக்கும் காமத்தை ஈடுசெய்யத் தேவையாக இருக்கின்றது, அதே நேரம் அவளை மணமுடிக்கத் தமிழ்மனம் தடையாக இருக்கின்றது. திருமண உறவின் மூலமாகத் தமிழ்ப் பெண்ணின் யோனியே தமிழ் ஆணின் விறைத்த குறிக்குத் தேவையாக இருக்கின்றது. தன் தாய் நாட்டில் இருக்கும் ஒரு பெண்ணைத் தேடி அவன் மனம் அலைகின்றது. அங்கிருக்கும் பெண்களே உகந்தவர்கள், தமிழ்ப் பண்பாட்டில் ஊறியவர்கள், குடும்பம் என்று வந்தால் அவர்களிடம் தஞ்சம் அடைவதே வசதியானது என்று ஆண் மனம் அல்லலுறுகின்றது. சுற்றித் திரிய வேற்று நாட்டுப் பெண்கள் தேவையாக இருக்கின்றது, குடும்ப உறவுக்குத் தமிழ்ப் பெண் தேவையாக இருக்கின்றது. இவ் முரண்புள்ளிகளைப் ‘பனி’ சிறுகதை தொட்டுச் செல்கின்றது.
சுகந்தி விவாகரத்துக் கேட்கும்போது தன் காதல்கதையைச் சொல்கிறாள். “அப்படியெனில் ஏன் என்னை விருப்பம் இல்லாமல் கலியாணம் செய்தனீர்?” என்று திரும்பிக் கேட்கும்போது, எல்லாம் மறந்திடலாம் என்று நினைச்சன். ஆனால், முடியவில்லை என்ற இலகுவான ஒரு பதிலைச் சொல்கிறாள். அப்ப இதற்கெல்லாம் நானா பலியாடு என்று சடகோபன் கத்துகிறான். சக மனிதன் பற்றி அக்கறை கொள்ளாத ஆதிப் பண்பான மனித இயல்பு வெளிப்படும் தருணம் அது. அந்த நேரத்தில் அவனுக்கு “என்னைக் கலியாணம் செய்யும்போது சுகந்தி வெர்ஜின் இல்லையா?” என்ற கேள்வி எழுகிறது. தமிழ் மனநிலையை ஒளிபாய்ச்சிக் காட்டும் இடங்களவை.
‘கொட்டியா’ என்ற சிறுகதை கொழும்பில் வெளிநாடு செல்வதற்காகத் தங்கி நிற்கின்ற பொடியனைப் பற்றிய கதை. யுத்தம் வடபகுதியில் தீயாக எரிகிறது. கொழும்பிலும் தாறுமாறாகக் குண்டுகள் வெடிக்கின்றன. தமிழர்கள் தங்கியிருக்கும் இடங்களெல்லாம் ராணுவம் திடீர்…திடீர் பரிசோதனைகளைச் செய்கின்றது. அச்சமயம் அறையொன்றில் தங்கியிருக்கும் பதின்ம வயது பொடியனின் அனுபவங்கள்தான் கதை. ஒரு முறை சோதனைக்கு வரும் இராணுவச் சிப்பாய் நித்திரையில் இருந்த இவனை எழுப்பும்போது இவனின் குறியைப் பிடித்துவிடுகின்றான். எப்படி அவன் இதைப் பிடிக்கலாம்? என்ற திடுக்கிடல் அரியண்டமாக அவனைக் கொல்கின்றது. கதை வளர்ந்து செல்லும்போது அதிலிருந்து விலகிப் பெண்களின் மனதைப் பேசும் ஒரு கதையாக முடிவில் எஞ்சுகின்றது.
தமிழர்கள் சோற்றுக்கு வழியில்லாவிட்டாலும் உளவுபார்க்காமல் உயிர்வாழ மாட்டார்கள் என்று குறிப்பிடப்படும் இடங்கள் கூர்மையான நகைச்சுவையை உணர்விக்கும் இடங்கள். புறநிலைத் தகவல்களில் குறிக்கப்பட்டிருக்கும் அரசியல் கிண்டல்கள், தமிழர்களின் பாரம்பரியங்களைக் கிண்டல் செய்யும் இடங்கள் அனைத்தும் கதையைச் சுவாரஸ்யம் குன்றாமல் வாசிக்க வைக்கின்றது. இக்கதையின் கூறு முறையில் இருக்கும் சிக்கல் கதையின் போக்கைச் சாதாரண டெம்பிளேட் கதையாக மாற்றிவிடுகின்றது. கதையின் ஆரம்பத்தில் இராணுவ வீரன் அவனது குறியைத் தடவியதும், அவனது சிங்களக் காதலி அவனுடைய குறியைத் தடவிக் கசப்பான அனுபவத்தை இன்பமாக மாற்றுவதோடு அச்சித்திரிப்புக்கள் ஓய்ந்துவிடுகின்றன. கதையின் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்த்திச்செல்ல அச்சித்தரிப்பு உதவவில்லை. அதே இறுதிவரையான கதையின் போக்கைத் தீர்மானிக்கும் குவிவு மையமாக இருந்திருந்தால் இக்கதை சிறப்பான கதையாகியிருக்கும்.
‘மூன்றுதீவுகள்’ கதையும் சாதாரண டெம்பிளேட் வகையில் சிக்கி வெற்று வார்த்தைகளாக இறுதியில் எஞ்சும் கதையாக மாறிவிடுகின்றது. ஒரு புதுவித நிலப்பரப்பில் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் இரகசியத்தை ஒரு புள்ளியில் விளங்கிக்கொள்ளுதல், பின் வலிந்த முடிவு என்று நகருகின்றது.
பொதுவான இளங்கோவின் கதைகள் அதிகம் நுண்தகவல்களைக் கதைகளோடு சொல்கிறது. புறவயமான சித்திரிப்புகள் தமிழ் மனநிலையைப் பகிடி செய்துகொண்டு முன்னே நகருகின்றது. அகவயமான சித்திரிப்புகள் கதைகளில் இல்லை. அவற்றை ஆழமாகப் பேச எந்தக்கதைகளும் அதிகம் மினக்கெடவில்லை. விதிவிலக்காக ‘கள்ளி’ கதை. வழக்கமாக இலங்கை எழுத்தாளர்கள் எழுதும் குடும்பச் சித்திரத்தை, அல்லது வெற்று அரசியல் கோஷத்தை நோக்கிச் செல்லாமல் கனடிய/ அந்நிய புலம்பெயர் தேச வாழ்க்கைச் சூழலை நோக்கிச் சென்றிருப்பது ஒரு முக்கியமான இலக்கியக்கூறு. அ.முத்துலிங்கம் எழுதிக்காட்டிய புலம்பெயர் மக்களின் வாழ்க்கை அதிகம் பிளாஸ்டிக்தனம் கொண்டது. அங்கு இயல்பான இலங்கையர் ஒருவரைக் காண இயலாது. படித்த மேட்டிமைத்தனம் வாய்த்த மனித உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாத ஒருவரையே நோக்க இயலும். இளங்கோவின் கதையில் உள்ள இலங்கையர்கள் யாழ்ப்பாணத் தமிழ் மனநிலையில் இருந்து கொண்டு அங்கு எழும் காமம்,குரோதம் அதில் மறைந்து எங்கோ ஓர் இடத்தில் மேலெழும் அறத்தின் வெளிப்பாட்டில் தத்தளிப்பவர்கள்.
ஒரு சம்பவத்தை உண்மையாக நிகழ்ந்ததை அச்சொட்டாக அப்படியே எழுதுபவர் புனைவு எழுத்தாளரே அல்ல. அது அவரது வேலையும் அல்ல. அவர் முழுக்கமுழுக்கக் கற்பனையால் ஓர் உலகத்தைப்படைத்து மெய்நிகர் வாழ்க்கையைக் காட்டும்போதுதான் அது நிகழும். அத்தகைய கற்பனைத் திறன் இக்கதைகளில் இருக்கின்றன என்பதும் உண்மை.
சிக்கல் இல்லாமல் இயல்பான மொழி நடையுடன், அயர்ச்சியைத் தூண்டாது எழுதப்பட்டுள்ளன இக்கதைகள். ஆனால்,உத்திகளில் இருக்கும் வெற்றிடம் பழைமையானது. ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் சித்திரித்து அவர்களுக்கு இடையில் எழும் பிணக்குகளைத் தொடர்வுபடுத்தும் முறையிலிருந்து இளங்கோ வெளிவரலாம். ஆயினும், நிகழ்வுகளிலிருந்து நினைவுகளுக்குச் சென்று அதன் உட்குறிப்புகளை உணர்த்திவிட்டு மீண்டும் வருதல் என்னும் சில உத்திகள் சிறப்பாக இக்கதைகளில் அமைந்துள்ளன. நம்பகமான ஒரு வாழ்க்கைச் சித்திரத்தை அளிப்பது இக்கதைகளில் நிகழ்ந்துள்ளது. அதனாலேயே இலங்கைச் சிறுகதைகள் என்ற அளவில் இக்கதைகள் நிச்சயம் வாசிக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன.
நன்றி  : ஆக்காட்டி இதழ்-13
(http://www.annogenonline.com/2017/02/13/sampal-vaanathil-maraiyum-varairavar/)

ஒரு நாவல் மற்றும் ஒரு திரைப்படம்

Saturday, February 18, 2017

மனாமியங்கள்

சல்மாவின் `மனாமியங்களில்` மெஹரும், பர்வீனும் துயரங்களின் கடலில் தத்தளித்தபடி இருக்கின்றார்கள். எப்போதெனினும் நம்பிக்கையின் ஒரு இறகு அலைகளில் மிதந்து வந்து கரையேற்றாத எனத் தங்களுக்குள் கரைந்தபடி கனவுகள் காண்கின்றார்கள். ஒருவகையில் மனாமியங்கள் மூன்று தலைமுறைப் பெண்களின் கதைகளைச் சொல்ல விழைகிறது. மூத்ததலைமுறை எல்லாவற்றையும் தன்னியல்பிலே ஏற்றுக்கொள்கின்றது. பர்வீன்/மெஹர் போன்ற அடுத்த தலைமுறை தனக்கான தவறுகளிலிருந்து பலவற்றைக் கற்றாலும், மீளத் திரும்ப முடியாக் காலங்களிற்குள் சிறைப்படுகின்றார்கள். அடுத்த தலைமுறையாக வரும் சாஜிதாவிற்கு முன்னிருந்த தலைமுறைகளைவிட நடந்துசெல்வதற்கான எல்லைகள் நீண்டபடி இருக்கின்றன. எனினும் எங்கோ அது அடைபட்டுவிடும் என்கின்ற பதற்றங்களும் பயங்களும் கூட ஒரு நிழலைப்போலப் பின்தொடர்ந்தபடி இருக்கின்றன.

சாதாரண பெண்களுக்கு இருக்கின்ற குறுகிய பரப்பிற்குள் நின்றே கதையைச் சொல்லவேண்டிய நிர்ப்ப்பந்தம் இருக்கின்றபோதும், கிட்டத்தட்ட 300 பக்கங்கள் நீளும் நாவலில் அவ்வப்போது ஒன்றையே திரும்பத்திரும்ப வாசிக்கின்றோமோ என்ற சலிப்பு வருகின்றது. இதுதான் இயல்பு அல்லது யதார்த்தம் எனச் சொன்னாலும், ஏன் சல்மா `நடக்காத விடயங்களை` நோக்கி நகரவில்லை என்ற கேள்வி வந்துகொண்டேயிருந்தது. கணவன் இரண்டாந்திருமணம் செய்தபின், தனக்கான இன்னொரு திருமணத்தைச் செய்கின்ற மெஹருக்கு குழந்தைகள் பிரிக்கப்படுகின்ற துயரம் இருந்தாலும், ஆகக்குறைந்தது அபியோடு கொஞ்சக்காலம் எனினும் மகிழ்ச்சியாக இருந்திருக்கூடாதாவென யோசித்துப் பார்த்தேன். அவ்வாறே பர்வீனுக்கு கணவனின் தள்ளிவைப்பிற்கு பின் அரிதாகக் கிடைக்கும் நட்பான மூர்த்தியோடு தொலைபேசி உரையாடல்களுக்கு அப்பால் இன்னும் சற்று நகரமுடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்..

அலுக்க அலுக்க துயரத்தையும், அழுகையையும் (அதுதான் நம் பெரும்பாலானர்க்கு வாழ்க்கையில் இயல்பு என்றாலும்) நாவல் முழுதும் சொல்லிக்கொண்டிருக்காது வேறு பல சாத்தியங்களையும் மனாமியங்கள் பரிசோதித்துப் பார்த்திருக்கலாம். இன்னும் புதிய பல வெளிச்சங்களை அது இந்த நாவலுக்குக் கொடுத்திருக்கவும் கூடும். என்றபோதும் முஸ்லிம் பெண்பாத்திரங்களை முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவலினூடு இன்னும் நெருக்கமாக முஸ்லிம் கலாசாரத்தையும், அது பெண்களுக்கு நெகிழ்வாகத் திறக்கும் யன்னல்களையும், அவ்வப்போது நெரித்து மூடும் கதவுகளையும் அறிந்துகொள்ளலாம்.


Papa 
(Hemingway in Cuba)

எர்னெஸ்ட் ஹெமிங்வே கியூபாவில் இருந்தபோது நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கின்றது. ஹெமிங்வேயிற்கும், மியாமியில் இருக்கும் ஓர் இளைய பத்திரிகையாளருக்கும் முகிழும் நட்பு பற்றியும், அவரினூடாக ஹெமிங்வேயின் இறுதிக்கால வாழ்வின் சிக்கல்கள் சித்தரிக்கப்படுகின்றன. கியூபாவில் பாட்டீஸ்டா ஆட்சிக்காலத்தில் ஃபிடலின், இராணுவத்தலைமையகத்தைக் கைப்பற்றும் முயற்சி தோற்கடிக்கும்போது ஹெமிங்வே சாட்சியாக நிற்கின்றார். ஏற்கனவே ஸ்பானிய உள்நாட்டுப்போரில் கிளர்ச்சியாளர்களின் பக்கம் நின்று போராடிய ஹெமிங்வே, கியூபாவிலும் புரட்சியாளர் பக்கம் நிற்கக்கூடுமென்ற சந்தேகத்தில் அமெரிக்க உளவுத்துறையும், கியூப அரசும் அவரை நெருக்கடிக்குள்ளாக்கும்போது, ஹெமிங்வே அங்கிருந்து தப்பி அமெரிக்காவிற்கு சென்ற 18 மாதங்களின் பின் தற்கொலை செய்துகொள்கிறார்.


எழுத்தின் மீது பித்துப் பிடித்தலைந்த ஹெமிங்வேயிற்கு இறுதிக்காலங்களில் எழுதுவது கைநழுவிப்போவது பிரச்சினையைக் கொடுக்கின்றது. அதுபோலவே அவருக்கும் அவரது மனைவிற்குமான பிணக்குகள், ஹெமிங்வேயிற்கு இயல்பாகவே அவரின் குடும்ப மரபணுக்களால் கடத்தப்பட்டிருக்கும் உளவியல் சிக்கல்கள் என நாம் இந்தத் திரைப்படத்தில் வேறொருவிதமான ஹெமிங்வேயைப் பார்க்கின்றோம். இவ்வளவு அற்புதமாய் எழுதிய, நோபல் பரிசு போன்ற புகழ் வெளிச்சத்தில் மினுங்கிய ஹெமிங்வே அகமும் புறமுமான நெருக்கடிகளால் இறுதியில் அடம்பிடிக்கும் ஒரு குழந்தையைப் போல ஆகிவிடுகின்றார். ஆனால் அதைத் துயரமாக அல்ல, இவ்வாறு ஆகுதலும் மனித வாழ்வில் இயல்புதானென ஹெமிங்வே மீது பித்துப்பிடித்தலைபவர்கள் (என்னைப் போன்றவர்கள்) அவரை வெறுக்காது, இன்னமும் நெருக்கான ஒருவராய் தமக்குள் ஆக்கியும் கொள்ளவே செய்வார்கள்.

(நன்றி: 'பிரதிபிம்பம்')

ஒரு குறுகிய திருமணத்தின் கதை

Tuesday, February 14, 2017

(The Story of a Brief Marriage By Anuk Arudpragasam)

1.
நெடும் வருடங்கள் நடந்த ஒரு யுத்தத்தில் ஒரு நாளைப் பிரித்தெடுத்து நிதானமாய்ப் பார்த்தால் என்னவாகும்? உயிர் தப்பியதே அதிசயமாய் ஒரு புறமிருக்க, அந்த நாளொன்றில் இந்தளவு சம்பங்கள்  நிகழ்ந்ததா என ஒருவகையில் திகைக்க வைக்கக்கூடும். அனுக் அருட்பிரகாசம் எழுதிய The Story of a Brief Marriage,  எறிகணைத்தாக்குதலில் காயமடையும் ஆறுவயதுச் சிறுவனை, இந்நாவலின் முக்கிய பாத்திரமான தினேஷ் வைத்தியசாலைக்குள் தூங்கிக்கொண்டு வருவதோடு தொடங்குகின்றது. அதேபோல நாவல் முடிவதும் மிகக்கொடூரமான எறிகணைத்தாக்குதலோடுதான். ஆனால் ஒரு பகலிலிருந்து அடுத்த நாள் விடிவதற்குள்  நாவல் முழுவதும் நகர்ந்தும் முடிந்து விடுகின்றது.

நம் வாழ்வில் ஒருநாளில் நிகழ்வதை, மிக மெதுவாகச் சுழற்றிப் பார்த்தால் எப்படியிருக்குமோ, அப்படியே இந்த நாவல் கொடும் யுத்தச் சூழலின் ஒரு நாளை மிக மிக மெதுவாக நகரவிட்டு பின் தொடர்ந்தபடி இருக்கின்றது. இங்கே இராணுவம் பற்றியோ, அதை நடத்திக்கொண்டிருக்கும் அரசு பற்றியோ எதையும் நேரடியாகச் சொல்லாமல் யுத்தத்தின் பயங்கரத்தை எழுத்துக்களால் அனுக் கொண்டுவருகின்றார். புலிகளைக் கூட இயக்கம் (movement) என அடையாளப்படுத்துகின்றாரே தவிர, அவர்களைப் பற்றி எந்த விரிவான சித்திரங்களும் இல்லை. இன்னுஞ் சொல்லப்போனால் எறிகணைகள் விழுந்து வெடிக்கின்றதான சித்தரிப்புக்களில்லை. ஆனால் எறிகணைகள் ஏவப்பட்டதுடன் ஆரம்பிக்கும் உத்தரிப்புக்களும், எறிகணைகள் வெடித்தபின் மாறும் கொடும் சூழல் பற்றியும் விரிவான காட்சிகள் இதில் இருக்கின்றன. `வன்னி யுத்தம்` நூலில் , மரணத்தை விட மரணம் எப்போதும் நெருங்கும்/நிகழும் என்கின்ற அச்சமே தனக்கு யுத்தகாலத்தில் மிகப்பெரும் மனப்பாரத்தைத் தந்தது என எழுதியவர் கூறுவதைப்போல, இங்கே யுத்த காலத்தில் வாழ நேர்ந்தவர்களின் அவதிகளும்/ அச்சங்களும் எழுத்தில் முன்வைக்கப்படுகின்றன.

தூக்கி வந்த சிறுவனின் காயத்தின் நிமித்தம் இனி கையை வெட்டியகற்றியவுடன்  தப்பிவிடுவான் என கதைசொல்லி நினைக்கையிலே, யுத்தம் என்பது உடல் உறுப்புக்களை இழப்பதையெண்ணிக் கவலைப்படும் காலத்தைத் தாண்டி, உயிரோடு எஞ்சுதலே பெருங்காரியம் என்கின்ற சூழ்நிலைக்கு மனிதர்களைக் கொண்டுவந்துவிட்டதை உணர்கின்றோம். தினேஷ், பின்னர் தற்காலிக மருத்துவமனையாய் அமைக்கப்பட்ட கொட்டகையைச் சூழ இருந்த பிணங்களைத் தோண்டிப் புதைக்கின்றார்.

அந்தப் பொழுதிலே தினேஷைப் பற்றி அறிந்த வைத்தியர் சோமசுந்தரம் தனது மகளை மணக்கமுடியுமா என்பதைக் கேட்கின்றார். வைத்தியர் சோமசுந்தரம், தனது மகனையும் மனைவியையும் யுத்தத்தின் நிமித்தம் இழந்தவர். உயிரோடு எஞ்சியிருக்கும் தன் 18வயதிற்குட்ட மகளையும் இயக்கத்தின் கட்டாய ஆட்சேர்ப்பில் இழந்துவிடுவேனோ என்ற பயத்தில் திருமணம் ஒன்றை செய்துவைக்க முயல்கின்றார். நேரங்கிடைக்கும்போதெல்லாம் வைத்தியசாலைப் பகுதியில் வந்து தேவையான உதவிகளைச் செய்யும் தினேஷும் காட்டையண்டிய பகுதியில், இயக்கத்தின் கண்களில் அகப்படாது மறைந்தபடி வாழ்கின்றார்.

தினேஷூம், தாயும் சில மாதங்களாய் யுத்தத்தின் நெருக்குவாரத்தில் ஒவ்வொரு இடங்களாய் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஓரிடத்தில் இன்னொரு குடும்பத்தோடு தங்கி நிற்கின்றனர். அந்தக் குடும்பத்து மகனை இயக்கம் யுத்தகளத்திற்குக் கொண்டு சேர்த்திடும் என்ற பயத்தில், அந்தக் குடும்பம் எண்ணெய் பரலுக்குள் நிலத்தில் புதைத்து மகனை மறைத்து வைக்கின்றது. இப்படி ஒளிந்துகிடப்பதன் அவஸ்தையில் ஒருநாள் வீட்டிற்கே சொல்லாமலே அந்த இளைஞன் இயக்கத்தில் சேர்ந்துவிடுகின்றான். பிறகு அவன் களத்தில் மரணமானபோதும், அந்தத் தாய் தன் மகன் இறக்கவில்லை என தொடர்ந்து தன் நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்கின்றார். எனது மகன் பிறக்கமுன்னர் எப்படி எனது கருவாக என் உடலில் தங்கியிருந்தானோ அப்படியே இப்போதும் உருவமின்றி இருக்கின்றான் எனச் சொல்கின்றார். அப்போது இந்த 'நினைவுகளின் குழப்பத்தை' வித்தியாசமாக நினைக்கும் தினேஷ், பின்னர் தன் தாய் கண்முன்னே துப்பாக்கிகளின் சன்னத்தில் சரிவதைப் பார்க்கும்போது, தன் தாயையும் இப்படியே நினைவுகொள்கின்றார்.

சோமசுந்தரம் திருமண சம்பந்தத்தைச் சொல்லும்போது, காயப்பட்ட ஒரு ஐயரை வைத்து திருமணத்தைச் செய்யலாம் என்கின்றார். பிற்பகலில் தினேஷ் வைத்தியரின் தரப்பாள் குடிலைத்தேடிப் போகும்போது, வைத்தியரின் மகள் கங்கா நிற்கின்றார். இருவரும் வைத்தியரைத்தேடிப் போகும்போது, காயப்பட்ட ஐயர் வைத்தியரின் உதவியில்லாது மரணிப்பதைக் காண்கின்றனர். கங்கா, தினேஷ் இருவருக்கும் இதில் முழுச்சம்மதமா என்று என யோசிக்க அவகாசம் கொடுக்காது வைத்தியர் தன் முன்னிலையில் திருமணத்தை அவர்களுக்குச் செய்துவிடுகின்றார். இறந்துபோன கங்காவின் தாயாரின் தாலியை தினேஷ் அணிந்துவிட, அவர்களைத் தனியேவிட்டு சோமசுந்தரம் வைத்தியசாலைக்குப் போகின்றார். யுத்த நேரத்தில் அவ்வப்போது சந்தித்ததைத் தவிர, வேறெந்த தொடர்புமில்லாத இருவர் இப்போது கணவன் -மனைவி ஆகிவிட்டனர்.

2.
யுத்தகாலத்தின் நெருக்கடிகளை மிக விரிவான சித்திரிப்புக்களை அனுக் தரும்போது நமக்கும் அதற்குள் நிற்பதுபோலத் தோன்றுகின்றது. மலசலம் கழிக்கக் கஷ்டப்படுவதிலிருந்து, எத்தனையோ நாட்கள் குளிக்காமல் இருந்து முதல் தடவை குளிப்பது, நகங்களை எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு வெட்டுவது என எல்லாவற்றையும் தினேஷூடாக சித்தரிக்கும்போது, மானுட விழுமியங்கள் எல்லாமே எப்படி யுத்தக்காலத்தில் அர்த்தமிழந்து போகின்றதென்பதை நாம் அறிகின்றோம்.

திருமணம் ஆகிவிட்ட கங்காவைப் பார்த்து, 'உனக்கு இது மகிழ்ச்சியா?' எனக் கேட்கும்போது, 'மகிழ்ச்சியோ துக்கமோ தங்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என அறியக்கூடியவர்களுக்கு மட்டும், எங்களுக்கு அப்படி எந்தத் தெரிவுமே இல்லையே ' என அந்தக் கேள்வியைத் தட்டிக்கழிக்கும் போது அவர்களின் வாழ்க்கையை அவர்கள் தீர்மானிக்கமுடியாத கட்டத்திற்கு யுத்தம் அவர்களைக் கொண்டுவந்துவிட்டதையும் அறிகின்றோம்.

அனுக்கின் இந்த நாவலில் எனக்கு மிகப்பிடித்த விடயங்களில் ஒன்று என்னவென்றால், அவர் சாதாரண மக்களின் நிலையை, அவர்களுக்கிருந்த தெரிவுகள் எவை அன்று இருந்தனவோ, அதற்குள் நின்று இந்த நாவலை எழுதியிருப்பது. அதற்கு அப்பால் போய் அரசையோ, புலிகளையோ, இடங்கிடைக்கின்றதேயென விளாசவுமில்லை. இப்படியான நிலையில்தான் மக்கள் அன்று வாழவேண்டியது என்று போருக்கு வெளியில் இருந்தவர்க்கு ஒரு கதையை அனுக் சொல்கின்றார். போர் என்பது நீங்கள் கற்பனையே செய்யாத தளங்களில் மனித வாழ்வை எப்படிக் கீழ்நிலைக்குக் கொண்டு போகின்றதெனவும் -ஒருநாளைச் சித்தரிப்பதன் மூலம்- காட்டுகின்றார்.

முக்கியமாய் ஒரு அத்தியாயத்தில், திருமணம் முடிந்தபின் கூடாரத்தில் தினேஷூம், கங்காவும் தனித்திருக்கும் நேரத்தில் யுத்தத்தின் மத்தியில், இந்த யுத்தம் எப்படி உடல்களின் மீதான இயல்பான வேட்கையையும் இல்லாமற் செய்துவிடுவதை அவர் விபரித்திருக்கும் முறை கவனிக்கத்தக்கவை. பலநாட்களாய் தூக்கமே இல்லாதிருக்கும் தினேஷ் (அவருக்கு எவ்வளவு முயன்றாலும் நித்திரையே வருவதில்லை) கங்காவிற்கு ஒரு அதிசயமான பிறவியாக இருக்கின்றார். இடையில் ஏதோ காட்டின் கரையிலிருந்து ஒலிவர, இயக்கந்தான் ஆட்களைச் சேர்க்க வந்துவிட்டார்களோ என  இருவரும் அஞ்சுகின்றனர்.

தினேஷ்,  வெளியில் போய்ப் பார்க்கின்றேன் எனப் புறப்படும்போது, காயம்பட்ட காகத்தைப் பார்க்கின்றார். அந்தக் காகத்திலிருந்து வேறொரு கதை முகிழ்கின்றது. எத்தனை மாதக்கணக்காய் காகம், குயில் இன்னபிற பறவைகளைக் காணவில்லையென அவர் நினைக்கத்தொடங்குகின்றார். காயம்பட்ட காகம் ஒரு பாதுகாப்பான இடத்திற்குப் போகும்வரை நிதானமாய் இருந்து பார்த்துவிட்டு வரும் தினேஷிடம், கங்கா 'பறக்க முடியாத பறவைகள் நீண்டகாலம் வாழ முடியாதல்லவா?' எனச் சொல்லும்போது அதற்கு வேறொரு அர்த்தம் வருகின்றது.

கங்காவின் தோளில் தன்  தாயின் இழப்பிலிருந்து எல்லாவற்றையும் அடக்கிவைத்த தினேஷ் அழுகின்றார். அதுவரை நீண்டகாலமாய் தொலைந்து போயிருந்த தன் நித்திரையைக் கண்டுகொள்கின்றார். விடிகாலையில்  துயிலெழும்போது கங்கா காணாமற் போய்விடுகின்றார். கங்கா தன்னோடு எப்போதும் காவியபடி இருக்கும் ஒரு பையையும் கூடவே கொண்டு சென்றுவிடுகின்றார். ஒவ்வொரு பொழுதும் அதற்குள் என்ன இருக்கிறதெனத் தேடவிரும்பும் தினேஷின் ஊடாக வாசிப்பவர்களுக்கும் அந்த மர்மம் எழுந்தபடி இருக்கின்றது. இறுதி முடிவும் நாவல் தொடங்குவதைப் போல துயரமானதுமிகக் குறுகிய திருமணம் ஒருநாளில் முடிந்தும் போகின்றது. ஆக அந்த ஒருநாள் என்றென்றைக்குமாய் மறக்கமுடியாத ஒருநாளாய் தினேஷின் வாழ்வில் ஆகிப்போகின்றது.

3.
அனுக் அருட்பிரகாசம் கொழும்பில் வசிக்கின்றவர். இப்போது தத்துவவியலில் கலாநிலைப் பட்டத்தை கொலம்பியா பல்கலையில் படித்துக்கொண்டிருக்கின்றார். யாழ்ப்பாணப் பெற்றோருக்குப் பிறந்தவர். தமிழ் தன் வீட்டு மொழியென்றாலும், முதலாம் வகுப்பிலிருந்து ஆங்கிலத்தில் கற்றவர். தமிழிலும் எழுதுகின்றவர்/எழுத விரும்புகின்றவர். கொழும்பு அறிவுஜீவிகளைக் கூட்டம் மீது எரிச்சல்வந்தே தான் நிறையப் புத்தகங்களை வாசித்து தன்னைத் தனிமைப்படுத்தியதாய்க் கூறுகின்றார். ஆங்கிலம் ஒரு காலனித்துவமொழி என்கின்ற புரிதல் இருப்பதாய் கூறும் அவர், தமிழிலும் எழுத விருப்பம் என்கின்றார். போர் பற்றி நேரடிச் சாட்சிகளின்  கதைகளை கேட்டு பதிவு செய்யப்போன தான், அதை பின்னர் இவ்வாறான நாவலாக மாற்றியதாய் ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். போர் பற்றி தான் வாசித்தவற்றையும், தொலைக்காட்சிகளில் பார்த்த திரைப்படிமங்களும் தன்னைப் பாதித்து இதை எழுத வந்ததாகவும் கூறுகின்றார். தனது கலாநிதிப் பட்டத்தை முடித்துவிட்டு இன்னும் சில வருடங்களில் இலங்கை போய்விடுவேன் எனவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஈழத்தில் நடந்த யுத்தத்தோடு சம்பந்தப்பட்டு வரும் புனைவு மற்றும் புனைவுகளில்லாதவற்றை ஓரளவு வாசித்த அளவில், அநேகமானவர்கள் தமிழில் வாசிக்காதவர்கள்/தமிழை வாசிக்கத் தெரியாதவர்கள் எழுதியதன் பலவீனம் அவர்களின் சித்தரிப்புக்களில் எப்படியேனும் தெரியும். அந்தப் பலவீனத்தை அனுக் தாண்டியிருப்பதற்கு அவருக்குத் தமிழ் பரிட்சயமாக இருப்பது முக்கிய காரணம் என நினைக்கின்றேன். அத்துடன் அடிக்கடி பல இடங்களில்  ஏலவே குறிப்பிட்டதைப் போல, மிகச்சிறிய நாவல்களையும்  நுட்பமான சித்தரிப்புக்களுடன் எழுதவேண்டுமென்பதற்கிணங்க இந்த நாவல் 200 பக்கங்களில் அடக்கப்பட்டு இருப்பது பிடித்திருந்தது.  நாவலில் கூறப்பட்ட சம்பவங்களும், அனுபவங்களும் தமிழில் நாம் ஏற்கனவே வாசித்திருக்கக்கூடிய/ அறிந்திருக்கக்கூடியதுதான். ஆனால் இந்த நாவலின் சிறப்பம்சம் என்னவென்றால் அதன் சித்தரிப்புக்கள், ஆங்கிலச் சூழலிற்கு அவ்வளவு பரிட்சயமில்லாதது. முக்கியமாய் அரசு X புலிகள் என எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் மேற்குலகிற்கு, அவர்களும் பங்காளிகளான ஈழயுத்ததின் கோரத்தை அவர்களின் மொழியிலே முன்வைத்து, இந்தச் சாதாரண மக்களுக்கான நியாயம் என்னவாக இருக்குமெனக் கேட்க விழைவதாகும்.

(நன்றி: 'அம்ருதா' - மாசி/2017)