கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ப்யூகோவ்ஸ்கியின் 'பெண்கள்

Wednesday, August 22, 2018

Women by Charles Bukowski

ப்யூகோவ்ஸ்கியின்  பெரும்பாலான படைப்புக்களில் வரும் கதாபாத்திரமான ஹென்றி ஸ்நாஸ்கியே இதிலும் வருகின்றது. ஒருவகையில் இது புனைவுகளில் ப்யூகோவ்ஸ்கியை பிரதிபலிக்கும் ஒருபாத்திரம் எனலாம்.

வழமைபோல ஹென்றி இந்தப் புதினத்திலும் பெருங்குடிமகனாகவும், பெண்களை வசியம் செய்பவராகவும் இருக்கின்றார். நூறு அத்தியாயங்களுக்கு மேலாக நீளும் இப்புதினத்தில், ஆகக்குறைந்தது 75ற்கு அத்தியாயங்களுக்கு மேலாக அவர் பெண்களைப் படுக்கைக்கு அழைத்துச் செல்வதும், குடிபோதையில் இருப்பதுவுமே எழுதப்பட்டிருக்கும். ஆனாலும் குறிப்பிட்ட சிறு வட்டத்திற்குள் நாவல் சுழன்றாலும் மிகுந்த சுவாரசியமாகவும், எள்ளல் நடையுமாகவும் எழுதப்பட்டிருப்பதால் நாவலை அலுப்பின்றி வாசிக்கமுடிகின்றது.

இவ்வாறு அவர் வலைவிரிக்கும்/அவருக்காய்க் கிடைக்கும் பெண்களைப் பற்றிச் சொன்னாலும், ஹென்றியின் தனிமையும், இருத்தல் பற்றிய அவரின் தேடல்களும் இறுதிப்பகுதியில் ஒருவகையான கனத்தைக் கொடுக்கின்றன. பெண்களை உடலாகவே - இன்னும் குறிப்பாகச் சொன்னால் பெண்களின் கால்களை அந்தளவிற்கு இரசிக்கும்- ஹென்றிக்குத் தன் சுயம் எதுவென்ற பிணக்குப்பாடுகள் அவருக்குள் எழுகின்றது. ஒரு Thanks Giving நேரத்தில் ஒரு பெண்ணைச் சந்திக்கவேண்டியிருப்பதால், இன்னொரு பெண்ணிற்கும் இந்த விடயத்தைச் சொல்லவேண்டுமே என்ற மனஅழுத்தத்தில், அழுது தீர்க்கின்ற ஒரு குழந்தைத்தனமான அவரின் இன்னொரு பக்கத்தையும் பார்த்து வாசிக்கும் நாங்கள் திகைத்து நிற்கின்றோம்.

இவ்வாறு இப்படி எந்தப் பெண்ணுக்கும் 'பொய்' சொல்லக்கூடாது/ஏமாற்றக்கூடாது என நினைக்கின்ற ஹென்றி இனித் திருந்திவிடுவார் என்றால் பிறகு அவர் இது எப்போது நடந்தது என்பது மாதிரி, நம்மை ஏமாற்றிவிட்டு மீண்டும் பழைய 'தேடலுக்கு'ச் சென்றுவிடுவார். தனது வேலையை விட்டு, முழுநேர எழுத்தாளரான ஹென்றிக்கு, தனக்குப் பெரும் பணமும், விமானச் சீட்டும், தங்குவதற்கும் இடமும் தந்து கவிதைகளை வாசிக்க வைக்கும் பல்கலைக்கழகங்கள்/மியூசியங்கள்/தனிப்பட்டவர்களின் மதுபான விடுதிகள் என்பவை ஒருவகையில் ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது.

இவ்வளவு மதிப்புக்கொடுத்து வாசிக்கக் கேட்க, என்னிடம் என்ன இருக்கின்றதென அவருக்கே அவரில் வியப்பாக இருக்கின்றது. அதேசமயம் யாரெனும் எவரும் தமது படைப்புக்களை வாசிக்கவும், அது பற்றிக்கருத்துச் சொல்லவும் கேட்கின்றபோது,  தயவுதாட்சண்யம் காட்டாது, முடியாதென நிராகரித்தும்விடுகின்றார். பிறர் தனக்கு முன், அவர்களின் கவிதையை வாசித்துக் காட்டுவதைக் கூட மூர்க்கமாக மறுதலித்துவிடுவார்.
பெண்களும், குடியும் தனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது என்று ஹென்றி சொல்வதில்லை, ஆனால் இவ்விரு விடயங்களுமே தனது வாழ்க்கைத் தேர்வாக இருக்கின்றது என்பதையே தொடர்ந்து இந்நாவலில் ஹென்றியின் பாத்திரம் வலியுறுத்தியபடி இருக்கின்றது. ஹென்றியின் குடிப்பழக்கம் பார்த்து பலர் அவர் விரைவில் இறந்துவிடுவார் என்று எச்சரிக்கின்றனர். அப்படி சொல்லும் அனைவரிடம் தான் 80 வருடங்கள் இருப்பேன் என்றும், அப்போது தனக்கு ஒரு 18 வயது பெண் காதலியாகவும் இருப்பார் என்றும் உறுதியாய்ச் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்.


ஹென்றி சந்திக்கும் ஒவ்வொரு பெண்களும் வெவ்வேறு கதைகளைத் தமக்குள் கொண்டிருப்பவர்கள். அதிலும் சாரா என்கின்ற பாத்திரம் சுவாரசியமானது. ஹென்றிக்குப் பிடித்த பெண் சாரா என்றாலும், சாரா ஒரு இந்தியச் சாமியாரைப் பின் தொடர்பவர். அந்தச் சாமியார் திருமணத்திற்கு முன் எவ்வித உடல்சார்ந்த உறவும் வைத்திருக்கவும் கூடாது என்று போதித்துவிட்டு இறந்தும்விட்டார்.  ஆகவே சாமியாரிடம் போய் 'இது சிக்கலாக இருக்கின்றது மாற்றுங்கள்' எனவும் கேட்கமுடியாது. ஹென்றிக்கோ சாராவின் உடல் மீது ஈர்ப்பு, அதேசமயம் அதற்காக இவரால் சாராவைத் திருமணமும் செய்யவும்முடியாது. இவர்களுக்கிடையிலான இந்த உறவு பற்றிய அத்தியாயங்களை வாசிக்கும்போது நம்மையறியாமலே ஒரு புன்னகை வந்தபடியே இருக்கும்.

ஒரு கவிதை வாசிப்பிற்காகப் போய் ஓரிடத்தில் தங்கும்போது, ஹென்றிக்கு அடுத்த அறையில் தனது படைப்பை வாசிப்பதற்காக வில்லியம் பாரோஸோம் வந்திருப்பார். அப்போது ஹென்றியிடம் அவரைச் சந்திக்கப் போகின்றீர்களா என ஒருவர் கேட்கும்போது வேண்டாம் என மறுப்பார். ஹென்றி தனது படைப்புக்களைப் பற்றி பிறர் புகழ்வதைக் கேட்பதைத் தவிர்ப்பதைப் போல, தன் சமகாலத்து படைப்பாளிகளையும் விட்டு விலகியே நிற்கின்றார். அதுபோலவே ஹெமிங்வே பற்றி இந்நாவலில் பேச்சு வரும்போது, ஹெமிங்வே நன்றாக எழுதக்கூடியவர்தான், ஆனால் அவரின் எல்லா நாவல்களிலும் போரை எப்படியேனும் கொண்டுவந்துவிடுவார் எனச் சொல்லி ஹென்றி சலிக்கின்றார்.

ஹென்றி என்கின்ற பாத்திரம் கூட்டத்தை வெறுக்கின்ற, தனிமையை விரும்புகின்ற, எங்கேயும் பயணிக்க விரும்பாத ஒரு சிறு உலகிற்குள் தன்னை அடைத்து வைத்திருக்கின்ற ஒன்றாகவே நமக்குக் காட்டப்படுகின்றது. ஆனாலும் இந்தக் குறுகிய உலகத்திலிருந்து ஹென்றியின் வாழ்வு சுழன்றாலும் அந்த வாழ்வை ப்யூகோவ்ஸ்கி விபரிக்கும்போது நமக்கு ஒருபோதும் அலுப்பு வருவதில்லை. ப்யூகோவ்ஸ்கியைப் போல பெண்களை இந்தளவிற்கு ஆன்மாவில்லாத உடல்களாக ஒருவர் சித்தரிக்கமுடியுமா எனத் திகைப்பு வந்தாலும், அவரை அறியாமாலே முக்கியமான எல்லா இடங்களிலும் பெண்களை வியந்துகொண்டிருக்கின்ற பகுதிகளையும் அவரால் தவிர்க்கமுடியாது இருப்பதையும் குறித்தாக வேண்டும்.


Charles Bukowski
ஹென்றி தனக்குள் வைத்திருக்கும் பாதுகாப்பு வளையங்களை உடைத்து, உள்நுழைந்து பெண்களெல்லாம் ஏன் ஹென்றி இப்படியிருக்கின்றார் என்கின்ற வினாவை எழுப்பாமல் செல்வதில்லை. தன்னையறியாமலே தன்னை அவ்வப்போது திறந்துவிடும் ஹென்றி தனது இளமைக்காலம் ஒழுங்காகக் கழியாததால்தான், தான் தனது 50/60களில் தன்னைவிட 20/30 குறைந்த பெண்களைத் தேடிப்போகின்றேன் என்றும், தன்னால் உண்மையாக எவரையும் காதலிக்கத்தெரியாதும் என்றும் வாக்குமூலங்களையும் கொடுத்துவிடுகின்றார்.
ஹென்றி என்பது ப்யூகோவ்ஸ்கியின் alter ego ஆக இருப்பதுபோல, அவரது படைப்புக்களில் வருவதைப் போலத்தான் இத்தனை பெண்களைச் சந்தித்திருப்பாரோ என்று நாம் அந்தளவிற்கு வியக்கவோ/வெறுக்கவோ தேவையில்லை. அதுவே புனைவு ஒரு படைப்பாளிக்குத் தரக்கூடிய பெரும் சுதந்திரம். அதை ப்யூகோவ்ஸ்கி அருமையாகப் பாவித்திருக்கின்றார். அவ்வளவுதான்.

ப்யூகோவ்ஸ்கியின் எந்தப் புனைவை வாசிக்கத் தொடங்கினாலும் அதற்கு முன் நிபந்தனையாக நமது யதாத்த வாழ்வு முன்வைக்கும் ஒழுக்கம்/அறம் சார்ந்த மதிப்பீடுகளை சற்றுக் கழற்றிவைத்தாலே, அவரின் படைப்புக்களைப் பின் தொடர்ந்து போகமுடியும். இல்லாவிட்டால் தொடக்கத்திலேயே அவரின் படைப்புக்கள் நம்மைச் சுழற்றித் தூர எறிந்துவிடும். ப்யூகோவ்ஸ்கியின் உலகில் எவ்வித நியாய அநியாயங்களுக்கும் இடம் இருப்பதில்லை போல எவை குறித்த மதிப்பீடுகளுக்கும், பிறர் தன்னை இப்படி அடையாளப்படுத்திவிடுவார்களோ என்கின்ற பயங்களுக்களுக்கும் இடமில்லை.இப்படித்தான் நான் இருக்கின்றேன், உங்கள் மதிப்பீட்டு வளையங்களில் எனக்கேதும் அக்கறையில்லை என்றே ஹென்றி ஸ்நான்ஸ்கி -நேரடியாகச் சொல்லாமல்- தன்னைப் பிரகடனப்படுத்துகின்றார். அதை ஏற்றுக்கொள்வதா இல்லை என்பது வாசிக்கும் நமது தெரிவே தவிர, இதில் ப்யூகோவ்ஸ்கி நம்மை எதையும் வற்புறுத்தப் போவதில்லை.

ப்யூகோவ்ஸ்கியின் படைப்புக்களிலிருந்த பாத்திரங்களின் தனிமையையும்,  அதேவேளை அவர் கைவிட்ட  'அறங்களை'யும் இணைத்து படைப்புக்களை உருவாக்கும் ஒருவராக ஹருக்கி முரகாமியை கற்பனை செய்து கொள்வது எனக்குப் பிடித்தமாயிருக்கின்றது. அவ்வாறு தமிழ்ச்சூழலில் ப்யூகோவ்ஸ்கியின் பாதிப்போடு எழுதத் தொடங்கி அதைப் பிற்காலத்தில் முற்றாகச் சிதைத்த ஒருவரென நினைக்கும்போது சாரு நிவேதிதா நினைவிற்கு வருகின்றார்.

...................................

நன்றி: நடு