கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வாழ்க்கை அல்லது காதல் இப்படியும் இருக்கலாம்...

Saturday, September 14, 2013


Before sunrise (1995)

இருபதுகளில் இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் புத்தபெஸ்டிலிருந்து வியன்னா போகும் ரெயினொன்றில் தற்செயலாய் சந்தித்துக்கொள்கின்றார்கள். இளைஞர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். ஸ்பெயினில் படித்துக்கொண்டிருக்கும் காதலியைப் பார்க்க மெட்ரிக் போக, காதலி இவரைச் சந்திப்பதைத் தவிர்க்கும் துயரத்துடன் ஜரோப்பிய நாடுகளுக்குள் அலைகின்றார். ரெயினில் சந்திக்கும் பெண்ணோ பாரிஸில் படித்துக்கொண்டிருப்பவர். ஹங்கேரியில் இருக்கும் பாட்டியைச் சந்தித்து பாரிஸிற்குத் திரும்பும் வழியிலேயே இந்த அமெரிக்க இளைஞரைச் சந்திக்கின்றார்.

இயல்பான உரையாடலில் தொடங்கும் அறிமுகம், அவர்களின் விருப்புகள், எதிர்காலக் கனவுகள், நிகழ்காலத் தடுமாற்றங்கள் என பகிர்ந்து கொள்வதென நீள்கிறது. பாரிஸிற்கு ரெயினில் போகும் பெண்ணை, தன்னிடம் இரவு அறை எடுத்துத் தங்கக் காசில்லை, விமானம் ஏறும்வரை தெருக்களிலேயே அலையப்போகின்றேன், என்னோடு கூடவே கொஞ்ச நேரம் கழிப்பாயா எனக் கேட்க, வியன்னாவில் தெருக்களில் இருவரும் அலைந்து திரிவதுடன் படம் முடிகிறது.

 மெல்லிய காதல் அந்த சில மணித்தியாலங்களில் முகிழ்ந்தாலும் அமெரிக்க இளைஞன், 'நாங்கள் திருமணம் செய்தால் கூட இன்னும் 10,20 வருடங்களில் எமக்கு அந்தத் திருமண வாழ்க்கை கசந்து போய்விடும் என  அரும்பத் துடிக்கும் எதிர்காலக் கனவுகளைக் கலைக்கிறான். எனினும் அவர்களுக்குள் ஊற்றெடுத்துக் கிளம்பும் காதலை மறுதலிக்க முடியாமல், இன்னும் 6 மாதங்களில் இதேயிடத்தில் இன்னதிகதியில் சந்திப்போம் எனக்கூறி, அதைத் தவிர எவ்விதத் தொடர்புகளையும் பகிராமல் பிரிகின்றனர்.

முற்றுமுழுதாக சில மணித்தியாலங்களுக்குள் நிகழும் கதை மட்டுமின்றி, இரண்டே இரண்டு முக்கிய பாத்திரங்களைக் கொண்டு நகர்த்தப்பட்ட இப்படத்தை முன்னொருபொழுது தற்செயலாகப் பார்த்தபோது மிகவும் வசீகரித்திருந்தது. அதுவும் உரையாடல்களால் மட்டும் இப்படியொரு சுவாரசியமான படத்தை எடுக்கமுடியுமா என்ற வியப்பும் கூடவே வந்திருந்தது. இதில் இரு பாத்திரங்களும் மிக நேர்த்தியாகவும், ஒன்றுக்கொன்று தங்களை விட்டுக்கொடுக்காதும் படைக்கப்பட்டிருக்கும். இந்த உலகில் அனைத்தையும் ஒரு பெரும் புரட்சியினால் மாற்றிவிடமுடியும் என்கின்ற பெரும்பான்மையான ஆண்களின் பிரதிநிதியாக ஜெசி படைக்கப்பட்டதையும், பெரும் புரட்சிகள் எப்போதும் நிகழுமென்று தெரியாது, அதற்கு முன்னர் செய்யவேண்டிய சிறுசிறுவிடயங்கள் இருக்கின்றன, பெரும் புரட்சிக்காய் காத்திருப்பதை விட இவைதான் இன்னும் முக்கியமானவை எனத் துணிந்து கூறும் பெண்ணான செலினையும் கண்டு -என்றென்றைக்குமாய் நினைவில் கொள்ளும் ஒரு படமாக- எனக்குள் இதைச் சேகரம் செய்திருந்தேன்.


Before Sunset (2004)

Before sunrise கொடுத்த உற்சாகத்தின் மிகுதியில் அதன் தொடர்ச்சியாக வந்த Before Sunset ஐ  தேடத்தொடங்கினேன். அந்தப் படமும் எனக்கு அவ்வளவு ஏமாற்றத்தைத் தராது மிகவும் கவர்ந்திருந்தது. இப்போது ஜெசி அவரின் முப்பதுகளில் இருக்கின்றார். இடைப்பட்ட காலங்களில் அவர் ஒரு நாவலாசியருமாகிவிட்டார். அவர், தான் செலினை வியன்னாவில் சந்தித்த நிகழ்வை மையமாகக் கொண்டு நாவலொன்றும் எழுதியிருக்கின்றார். அத்துடன் ஜெசி அமெரிக்காவில் ஒருவரைத் திருமணம் செய்து அவர்களுக்கு இப்போது ஒரு குழந்தையும் இருக்கின்றது. தன் நாவலை அறிமுகப்படுத்த ஜெசி பாரிசுக்கு வந்த பொழுதில், புத்தகக் கூட்டத்தில் இந்த நாவலில் வருகின்ற பெண்ணை அந்த ஆண் பாத்திரம் மீண்டும் சந்திக்கின்றதா ஒரு கேள்வி கேட்கப்படுகின்றது. அதற்கு பதிலளிக்க முற்படும் ஜெஸி, ஓரு ஓரத்தில் புன்ன்கையோடு காத்திருக்கின்ற செலினை –கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களின் பின் -கண்டுகொள்கிறார். ஜெசிக்கு அன்றிரவு அமெரிக்காவிற்குச் செல்வதற்கான விமானம் இருக்கின்றது.

வியன்னாவின் தெருக்களில் அலைந்தமாதிரி ஜெசியும் செலினும் பாரிஸ் தெருக்களில் நிறையக் கதைத்தபடி அலையத் தொடங்குகின்றனர். ஜெசிக்கு திருமணம் ஆகியதுபோல, செலினுக்கும் ஒரு புகைப்படக்கலைஞர் காதலராக இருக்கின்றார். செலின் அவருக்கு எப்போதும் ஆர்வம் இருக்கும் சூழலியல் துறையில் வேலை செய்துகொண்டிருக்கின்றார்.

ஒரு கட்டத்தில் ஜெசி, தன் திருமண வாழ்வில் சந்தோசம் எதுவுமில்லை, மகனுக்காய் மட்டுமே திருமண வாழ்க்கை தொடர்கிறது என்கிறார். செலினும் தன் காதலர் அடிக்கடி வெவ்வேறு நாடுகளுக்கிடையில் அலைவதால் தங்களுக்குள்ளும் இடைவெளி விழுந்துவிட்டதென்கிறார். இடையில் ஜெசி, வியன்னாவிற்கு தாங்கள் சந்தித்த ஆறு மாதங்களுக்குப் பின் அதேயிடத்திற்கு வந்தபோது செலின் ஏன் வரவில்லை எனக் கேட்கிறார். அதே நேரத்தில் செலினின் பாட்டியார் இறந்துவிட்டதால்  தன்னால் வரமுடியவில்லையென இயலாமையுடன் கூறுகின்றார். ஒரு குறிப்பிட்ட நாளில் சந்திப்பதைத் தவிர வேறு எந்தத் தொடர்புகளும் அவர்களுக்கிடையில் இல்லை என்பதும் ஏற்கனவே நாம் அறிந்ததே.

செலினின் அபார்ட்மென்டிற்கு ஜெசி போகின்றார். கிற்றாரில் தேர்ச்சி பெற்ற செலினை தனக்காக கிற்றாரை இசைக்கச் சொல்கிறார் ஜெசி. செலின் இசைக்கிறார். பிறகு ஜெசி ஸ்ரிரீயோவில் போடும் பாடலுக்கு செலின் நடனமாடுகின்றார். பாடலின் நடுவில் செலின், 'உனக்கான விமானத்திற்கு நேரமாகிவிட்டது' என்கின்றார். 'எனக்குத் தெரியும்' என தன் திருமண மோதிரத்தை ஒருவித அந்தரத்துடன் ஜெசி பார்ப்பதுடன் படம் முடிகிறது.


Before Midnight (2013)

ஜெசிக்கும் செலினுக்கும் இப்போது திருமணமாகிவிட்டது. அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகளும் இருக்கின்றன.  செலினும் ஜெசியும் முதன்முதலாக வியன்னாவில் சந்தித்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகிவிட்டன என்பது நமது ஞாபகத்திற்காய்.

ஒரளவு பிரபல்யமான எழுத்தாளராகிவிட்ட ஜெசியை, கிறீக்கிலிருக்கும் ஒரு எழுத்தாளர் தனது இருப்பிடத்திற்கு கோடையைக் கழிக்க அழைப்பு விடுகின்றார். ஜெசி, செலினோடு, ஜெசியின் முதல் திருமணத்தில் பிறந்த மகனுடனும் சேர்ந்து விடுமுறையைக் கிறீக்கில் கழிக்கிறார். மகனை அமெரிக்காவிற்கு விமானம் ஏற்றிவிடும் ஜெசிக்கு தனது மகன் பதினமத்தில் இருக்கும் பருவத்தில் தான் தன் மகனுக்கு அருகில் இல்லையே என்ற ஏக்கம் வருகின்றது.

மகனை விமானம் ஏற்றிவிட்டு திரும்பும்வழியில் தன் ஏக்கத்தை செலினுக்குச் சொல்கிறார். அதிலொரு திட்டமாய் அமெரிக்காவில் போய் இருக்கலாமா என செலினிடம் ஜெசி கேட்க, ஜெசி தனது வேலை/கனவு அமெரிக்காவிற்குப் போனால் கலைந்துவிடுமெனச் சொல்கிறார். உரையாடல் தீவிரமாய் ஒருகட்டத்தில் நீள, இது நாம் இருவரும் பிரிந்துபோகின்றதற்கான புள்ளி போலும் என செலின் கூறுகின்றார் (குண்டு வெடிப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது).

இப்படியே உரையாடி உரையாடி எழுத்தாளரின் வீட்டை அவர்கள் அடைகின்றார்கள். அங்கே பல்வேறு எழுத்தாளர்களுடன் வைனும் மதிய உணவுமாய் உற்சாகமான பேச்சு நடக்கின்றது. சிலர் தமது இழந்துபோன துணைகளின் துயரங்களைப் பகிர்கின்றார்கள். அங்கேயிருக்கும் எழுத்தாளரின் பேரனும் அவரது காதலியும் -செலின்/ஜெசி- போன்றவர்களின் பார்வையைப் போன்று அல்லாத வேறு ஒரு வாழ்க்கையின் திசையைப் பற்றி உரையாடுகின்றார்கள்.

 இதன் தொடர்ச்சியில், கிறீக் நண்பர்கள், ஜெசியும், செலினும் ஓர் இரவைக் குழந்தைகளின் தொல்லையில்லாது தனிமையைக் கழிக்க ஒரு உயர்ந்த ஹொட்டலை பதிவு செய்து கொடுக்கின்றார்கள். ஏற்கனவே உறவு உடைகின்ற நிலையில் இருப்பதாய் நினைக்கின்ற செலின் தாங்கள் இரவு  அங்கே போய்த் தங்கப்போவதில்லை என முதலில் மறுக்கின்றார். பின்னர் நண்பர்களின் வற்புறுத்தலால் இருவரும் ஹொட்டலுக்குச் செல்கின்றார்கள்

அங்கே அழகாய்த் தொடங்கும் இரவு, ஜெசியின் மகன் தொலைபேசியில் பேசும்போது, செலின் ஜெசியிடம் பேசக்கொடுக்காது விடுவதுடன் வேறு நிறத்தைப் பூசிக்கொள்ளத் தொடங்குகின்றது. ஒரு எழுத்தாளனாய் இருக்கும் ஜெசி, புத்தகம் எழுதுவதிலும், அதைப் பிரபல்யமாக்க வெவ்வேறு நகரங்களுக்கு அலைவதிலும் மட்டுமே கவனமாய் இருக்கிறானே தவிர, தன்னையோ தன் பிள்ளைகளையோ கவனிப்பதில்லை எனக் குற்றஞ்சாட்டுகின்றார் செலின். மேலும் ஜெசியினால் தன் career முற்றாக அழிந்துவிட்டது எனவும் அவர் பட்டியலிடுகின்றார். இப்போது கூட தனக்குக் கிறீக்கிற்கு கோடை விடுமுறைக்கு வர விருப்பமிருக்கவில்லை. நீங்கள் எழுத்தாள ஆண்கள் உங்கள் நாவல்களைப் பற்றி உரையாடுவதிலும் அடுத்து என்ன எழுதுவது எனக் கதைத்துக்கொண்டும் உலாத்திக்கொண்டும் இருக்கின்றீர்கள், என்னைப் போன்ற பெண்கள் சமையலறையில் இருந்துகொண்டு சாலாட் செய்தும், குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு காலத்தை வீணாக்க வேண்டுமென தொடர்ந்து செலின் குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போகின்றார்.

ஜெசி இடைமறித்து, செலின் வேலைக்குப் போகும் நேரத்தில் எல்லாம் தானே வீட்டிலிருந்து குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் என்றும், உங்கள் மீதிருக்கும் காதலால்தான் அமெரிக்கா கூட போகாமல் பாரிஸில் இருக்கின்றேன் எனவும் கூறுகின்றார். இடையில் செலின் யாரோ ஒரு புத்தக விற்பனையாளப் பெண்ணோடு ஜெசி உறவு கொண்டவரா எனக் கேட்கிறார். அதை ஓமென ஒப்புக்கொள்ளும் ஜெசி, நீ கூட உன் பழைய காதலனைச் சந்தித்தபோது உறவுகொண்டாய் என்பதை அறிவேன், ஆனால் இவற்றை எல்லாம் மீறி எனக்கு உன் மீதும் நம் இரட்டைக் குழந்தைகள் மீதும் நேசம் இருக்கின்றது' என்கிறார்.

மேலும் செலின் - ஜெசி உறவு சிக்கலாகின்றது.  தான் சொல்லும் எதையும் செவிமடுக்காதவன் ஜெசி என மேலும் மேலும் செலின் குற்றஞ்சாட்டுகின்றார். உரையாடல் ஓரிடத்தில் தீவிரமாகி, 'இனி என்னிடம் உனக்கான காதல் எதுவும் இல்லை' என அந்தக் ஹொட்டலை விட்டு செலின் வெளியே போய்விடுகின்றார்.

செலினும் ஜெசியும் சேர்ந்தார்களா? திரைப்படம் முடியும்போது அவர்களின் பாத்திரங்கள் எந்தப் புள்ளியில் விடப்படுகின்றன என்பதை இன்னும் இப்படத்தைப் பார்க்காதவர்களுக்காய் விட்டுவிடுவோம். இரண்டு மணித்தியாலயம் நீளும் இப்படத்தில் தொடக்கத்தில் உள்ளே நுழைய சற்று அலுப்பாயிருந்தாலும், ஜெசியும் செலினும் தங்களுக்கிடையில் உரையாடத் தொடங்க நேரம் போனதே தெரியாமல் படம் முடிந்திருந்தது. அவ்வளவு ஆழமாய் உரையாடலை மட்டும்  முன்வைத்தே படத்தை நகர்த்தியிருப்பார்கள். இப்படத்தில் தெரிந்த ஒரு குறைபாடு என்னவென்றால், முதல் 2 படங்களிலும் ஆண் பாத்திரத்திற்கு நிகராய் படைக்கப்பட்ட பெண் பாத்திரம -சற்று விலத்திவைக்கப்பட்டு- எப்போதும் குறைகளை மட்டும் ஒப்புவிக்கும் பெண்ணாய் செலின் ஆக்கப்பட்டுவிட்டாரோ போலத் தோன்றியது.

எங்கோ ஓரிடத்தில் இருவரும் சமரசமாக வேண்டும் என்பதே குடும்ப அமைப்பு முன்வைக்கும் நிபந்தனை. படத்தைப் பார்க்கும்போது பாத்திரங்கள் குடும்ப அமைப்புக் குறித்து நிறையக் கேள்விக்குட்படுத்தும் என நினைத்துக்கொண்டிருந்தேன். விரும்பிச் செய்யும் சமரசங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே. ஆனால் பிடிக்காமல் செய்யும் சமரசங்கள் பிறகு குற்றச்சாட்டுக்களாய் அலையத் தொடங்கும்போது, அது எல்லோரையும் காயப்படுத்தச் செய்வதுடன் கடந்த காலத்து இனிமையான நாட்களைச் சிதைக்கவும் செய்கின்றன.

இப்படம் முடிந்துவரும்போது, நண்பர் கூறினார், 'இவ்வாறான படங்களைப் பார்க்கும்போது மனது எங்கும் வெற்றிடமே உருவாகிறது' என்று. எனக்கென்னவோ இவ்வாறான படங்கள் இந்த வாழ்க்கை - முக்கியமாய் குடும்ப அமைப்பு- எவ்வளவு சிக்கலானது என்பதையும், அங்கே பரஸ்பர புரிந்துணர்வும் விட்டுக்கொடுத்தலும் இன்றி எதுவுமே சாத்தியப்படாது' என்பதை மீளவும் நினைவுபடுத்துகிறது போலவும் தோன்றியது.

0000000000000000000000000000000