கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

உமா வரதராஜனின் 'மோகத்திரை'

Friday, April 16, 2021

 உமாவின் திரை சார்ந்த கட்டுரையை முதன்முதலில் 'மூன்றாவது மனிதன்' இதழில்தான் வாசித்திருக்கவேண்டும். அப்போது அவர் அதில் தொடர்ச்சியாகப் பத்தி எழுதிக்கொண்டிருந்தார்.   அன்று தமிழில் வரும் எல்லாத் திரைப்படங்களையும் ஒன்றுவிடாது பார்த்துக்கொண்டிருந்த என்னைப்போன்ற ஒருவனுக்கு, அதில் கொஞ்சம் தடாலடியாக உமா எழுதிக்கொண்டிருந்தவை கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், உள்ளிழுத்துக்கொண்டவை. ஆனால் இன்று அவர் எழுதிய கட்டுரைகளை 'மோகத்திரை'யில் தொகுத்துப் பார்க்கும்போது மூன்றாம் மனிதனில் எழுதிய கட்டுரைகள் பின்தள்ளிப் போய்விட, அவர் திரைசார்ந்தவர்களை ஆழமும் விரிவாக எழுதிய நீண்ட கட்டுரைகளே எனக்கு நெருக்கமாகின்றன.

 

இந்தத் தொகுப்பில்  சினிமா அனுபவங்கள். ஆளுமைகள்/அஞ்சலிகள், பத்தி எழுத்துக்கள் என உமா எழுதியவை பகுத்துத் தரப்படுகின்றன. சினிமா ஆளுமைகளில் நடிகை காஞ்சனா பற்றியும், எப்படி திரைப்படம் பார்க்கும் அனுபவங்கள் காலத்தோடு மாறுகின்றன என்பதைப் பற்றியும் எழுதப்பட்டவை என்னளவில் முக்கியமானவை. மற்றவர்கள் திரைப்படங்கள் குறித்து எழுதுவது போலின்றி உமா மெல்லிய நகைச்சுவையுடனும், கறாரான விமர்சனப் பார்வையுடனேயே அநேக கட்டுரைகளை எழுதுகின்றார். உதாரணத்துக்கு 'வேட்டைக்காரன்' படத்தில் எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் படபடவென்று சுட்டபோது ஒருவர் பயத்தால் தியேட்டரை விட்டே ஓடிப்போனார். 'பாசமலர்' பார்த்த துயரத்தில் ஒருவர் செத்தே போனார்' (ப. 41 ) என்றும் 'கதாநாயகன் கதாநாயகியிடம் உச்சிமுதல் உள்ளங்கால்வரை காட்டும் மோப்பசக்தி' (ப 46) என்றும் குறிப்பிடும்போது நம்மையறியாமலே சிரிப்பு  வந்துவிடுகின்றது.

 

இன்னொரு இடத்தில் எப்படி திரை இரசனை காலத்தோடு மாற்றிவிட்டதென்பதை ஒரு காலத்தில் முக்கியமான திரைப்படமாக இருந்த சிறிதரின் கல்யாணப் பரிசை முன்வைத்து இவ்வாறு எழுதுகிறார்: "இன்றைய தினத்தில் 'கல்யாணப் பரிசை' புதுமையான படைப்பாக யாரும் கொள்ளமாட்டார்கள். விக்கல்களுக்கும் கேவல்களுக்கும் மிகைத் தியாகங்களுக்கும் இன்று வரவேற்புக் கிடைப்பதில்லை. தனது குழந்தையை முன்னாள் காதலிக்குக் கல்யாணப் பரிசாக வழங்கிவிட்டு நடையைக் கட்டுவது இன்றைய ரசிகனுக்குப் பெரும் புதுமையாகத் தென்படப்போவதில்லை. மனைவியையே மாற்றானுக்குப் பரிசாக வழங்கிவிட்டு ஸ்லோமோஷனில் நடந்துசெல்லும் பரந்தமனம் கொண்ட கதாநாயகர்கள் தமிழ்த்திரைக்கு இன்று வந்துவிட்டார்கள்." (ப. 60). எனச் சொல்லுமிடம் புன்னகையை வரவழைக்கும் தருணமாகும்.

 

இந்தத் தொகுப்பில் பாலுமகேந்திரா, மகேந்திரன், காஞ்சனா, சிறிதர் போன்றோர் பற்றி உமா எழுதியவை தன்னளவில் முழுமையானவை. பாலுமகேந்திராவைச் சந்தித்ததைப் போல, எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம்.செளந்தரராஜன் ஆகியோரை நேரில் சந்தித்து உமா எழுதிய கட்டுரைகள் சுவாரசியமானவை. எம்.எஸ்.வியும், டி.எம்.எஸ்ஸும் அவர்களின் அந்திமக் காலத்தில் இருக்கின்றார்கள். உமா இரசித்த இவர்களின் பாடல்களை அவர்களுக்கு  நினைவூட்டுகின்றார். அவர்களால் இவர் குறிப்பிடும் எல்லாப் பாடல்களையும் மீளக்கொணர முடியாவிட்டாலும், இப்படியொருவர் தங்களின் பாடல்களை நினைவுபடுத்துகின்றாரே என நெகிழ்ச்சிகொள்கின்றனர்.

 

மகேந்திரன், பாலச்சந்தர்,பாலுமகேந்திரா, சிறிதர் போன்றோரைப் பற்றி விரிவாக எழுதிய உமா, ஏன் ருத்ரைய்யா பற்றி எழுதவில்லையென யோசித்துப் பார்த்தேன். ஓரிரு படம் என்றாலும் தமிழ்த்திரைச்சூழலில் ருத்ரைய்யாவின் 'அவள் அப்படித்தானுக்கு' ஒரு முக்கியமான இடம் இருக்கின்றது. எத்தனையோ திரைப்படங்கள் குறிப்பிடப்பட்டும் இந்தத் தொகுப்பில் ஒரேயொரு இடத்தில் மட்டுந்தான் போகின்றபோக்கில் அவள் அப்படித்தான் குறிப்பிடப்படுவது சற்று வியப்பாகவே இருந்தது.

 

இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தவை சினிமா அனுபவங்கள், ஆளுமைகள்/அஞ்சலிகள் என்கின்ற முதலிரு பகுதிகளாகும். உமாவின் வீட்டுக்குப் போயிருந்த ஒவ்வொருபொழுதும் அவரின் தனிப்பட்ட நூலகத்தைப் பார்க்கவே ஆவல் கொள்வேன். அங்கே நூல்களும், திரைப்படங்களும் மிகுந்த நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கும். அதேயளவு நேர்த்தியுடனும், இரசனையுடனும் கூடவே மெல்லிய நகைச்சுவையுடனும் உமா இத்தொகுப்பிலிருக்கும் கட்டுரைகளையும் எழுதியிருக்கின்றார்.

..............................

(Nov 29, 2020)

நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்

Wednesday, April 07, 2021

 1.

வான்கோவின் ஓவியங்களைப் பார்ப்பதற்காய் சில வருடங்களுக்கு முன்னர் Musée d'Orsay இற்குப் போயிருந்தேன். வான்கோ உள்ளிட்ட பலரின் ஓவியங்களைப் பார்த்தபோது, கூட வந்திருந்த நண்பர் தர்மு பிரசாத், இப்போது எங்களோடு இந்திரன் இருந்திருந்தால் இன்னும் ஆழமாய் இந்த ஓவியங்களைப் பார்த்திருப்போம் எனச் சொன்னார். எனக்கும் அந்தக் கணத்தில் சி.மோகன் எங்களோடு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென ஓர் எண்ணம் இடைவெட்டிப் போனது.


'நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்' என்ற நூல், கடந்த நூற்றாண்டில் ஓவியக்கலையில் ஏற்பட்ட மாற்றங்களின் தொடக்கப் புள்ளிகளையும், அதன் ஆரம்பகர்த்தாக்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. தொழிற்புரட்சி நடந்து, புகைப்படக் கருவி அறிமுகப்படுத்தப்பட்ட, அதுவரை ஓவியம் என்பது தத்ரூபமாய் பிரதியெடுப்பது என்பது நிலையிலிருந்து தன்னை மாற்றிக்கொள்ளவேண்டியிருந்தது. அப்போதுதான் இம்பிரஷனிசம் தோன்றுகின்றது. 


கிளாட் மோனே போன்றவர்கள் இம்பிரஷனிசத்தை ஆரம்பித்து வைக்க, அதன் நீட்சியின் பின் - இம்பிரஷனிசத்தை பால் ஸிஸான், வான்கோ போன்றவர்கள் முன்னெடுக்கின்றார்கள். அப்படிப் பின் இம்பிரஷிசத்தில் தொடங்கினாலும், பால் காகின் ஒரு ஸிம்போலிஸ்டாக பின்னாட்களில் மாறுகின்றார்.


2.

பாரிஸில் வான்கோவைப் பார்க்கபோனபோது, தற்செயலாக அங்கே பால் ஸிஸானுக்கான சிறப்பு ஓவியக்கண்காட்சி நடைபெற்றது எனது நற்பேறு எனச் சொல்லவேண்டும். பால் ஸிஸானை, பிகாஸோ தனது ஆசானாகக் கொள்கின்ற அளவுக்கு பிகாஸோ போன்றவர்களை ஸிஸான் பாதித்திருக்கின்றார். பால் ஸிசானுக்கும், எழுத்தாளர் எமிலி ஸோலாவுக்கும் இடையிலிருந்த அரிய நட்பைப் பார்க்க விரும்புவர்கள் "Cezanne and I(Emily Zola)" என்ற திரைப்படத்தைப் பார்க்கப் பரிந்துரைப்பேன்.


பின் - இம்பிரஷனிசத்திலிருந்து, பிகாஸோ அவரின் பிரசித்தமான கியூபிஸத்தை முன்னெடுக்கிறார். இன்னொருபுறத்தில் குறுகிய காலத்தில் நின்று நிலைத்த ஃபாவிஸத்திற்கு உதாரணமாக ஹென்றி மத்தியூஸின் ஓவியங்கள் ஆகின்றன. 


எப்படி புகைப்படக் கருவியின் அறிமுகம் ஓவியங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதோ, அவ்வாறே முதலாம்/இரண்டாம் உலகப்போர்கள் அனைத்துக் கலைகளையும் குலைத்துப்போட்டதுபோல ஓவியத்திலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. உலகப்போர்கள் ஏற்படுத்திய மாற்றங்களினூடாக எல்லாவற்றையும் மறுவரைவு செய்யவேண்டிய நிலையில் அரூப ஓவியங்கள் (abstract)  தோன்றத்தொடங்கின்றன. 


அதன் தொடர்ச்சியில், எல்லாவற்றுக்கும் காரண காரியங்கள் இருப்பதை நிராகரித்து சர்ரியலிஸம் அறிமுகமாகின்றது. அதன் உச்சத்தைத் தொட்டவராக சல்வடோர் டாலி நமக்கு ஓவியங்களினூடாக அறிமுகமாகின்றார். இதுவரை ஐரோப்பாவிற்குள் சுழன்றாடிய ஓவியக்கலையின் புதிய பாய்ச்சல்கள் அமெரிக்காவிற்குள் நிகழத்தொடங்கின்றன. 


உலகப்போரின் நிமித்தம் சலிப்பும் வெறுமையும் அடைந்த கலைஞர்கள் அமெரிக்காவுக்குக் குடியேறவும், புதிதாக 'நியூயோர்க் பள்ளி' என்ற அடையாளத்தோடு அரூப வெளிப்பாட்டியம் (abstract impressionism)  நமக்கு ஜாக்சன் போலாக் போன்றவர்களினூடு அறிமுகமாகின்றது. 


3.


சி.மோகனின் இந்த நூலை வாசிக்கும்போது, நாம் இந்த ஓவிய வகைகளையும், அவை ஏன் தோன்றியன என்பதையும் எளிதாக அறியமுடியும். மோகன், ஒவ்வொரு முக்கியமான ஓவியர்களின் மூன்று ஓவியங்களையும் இந்தக் கட்டுரைகளில் எடுத்துக்கொண்டு, அவை பற்றி விரிவாக நமக்கு அறிமுகஞ்செய்கின்றார். இந்த ஓவியங்களை நாம் ஏற்கனவே பார்த்திருந்தாலும், நாம் கவனிக்காதுவிட்ட புள்ளிகளை நம்மை உன்னிப்பாகப் பார்க்கச் செய்வதில்தான் இந்தப் புத்தகம் முக்கியமாகின்றது. உதாரணத்துக்கு மோகன்,  டாலியின்  'புனித அந்தோணியாரின் இச்சை' (The Temptation of St. Anthony)  என்ற ஓவியத்தை விபரிக்கும்போது, இதில் இவ்வளவு நுணுக்கமான விடயங்கள் இருக்கின்றதா என்று எனக்கு வியப்பு வந்தது.


நான் வான்கோவின் மிகப் பெரும் இரசிகன். வான்கோவைத் தற்செயலாக ஆம்ஸ்டடாமில் பார்க்கத் தொடங்கி, அவரைத் தேடி பாரிஸ், நியூ யோர்க் என்றெல்லாம் போயிருக்கின்றேன். வான்கோவிற்கு அடுத்து யார் என்றால்  டாலியும், ப்ரீடா காலோவும், பால் காகினும், கிளிம்டும் எனக்குப் பிரியமானவர்கள். பிகாஸோ பலருக்குப் பிடிக்கும் என்றாலும் என்னை அவர் அவ்வளவு ஈர்த்ததில்லை. அதனால்தான் ஸ்பெயினுக்குப் போனபோது கூட பிகாஸோவைத் தேடிப் போகவேண்டுமென உந்துதல் அடைந்ததில்லை. ஆனால் சூரிச்சில் டாலியின் 'நினைவின் விடாமுயற்சி' (The Persistence of Memory)யை உலோகங்களால் உருக்கி முப்பரிமாணமாகச் செய்திருந்த காட்சியறையில், அந்தக் கடிகாரத்தைப் போல காலத்தின் முன் உருகி நின்றிருக்கின்றேன். 


இந்த நூலில் ஒவ்வொரு ஓவியமும் வர்ணத்தோடு அசல் ஓவியத்துக்கு நிகராக அச்சிடப்பட்டிருப்பதால், மோகன் இவை பற்றி விபரிக்கும்போது அதை நாம் இன்னும் நெருக்கமாகப் பார்க்கமுடிகின்றது. தற்செயலானது என்றாலும் மோகன் இதில் விபரிக்க எடுத்துக்கொண்ட ஓவியங்களில் அரைவாசிக்கும் மேலானவற்றை நான் நேரிலே பல்வேறு மியூசியங்களில் பார்த்திருக்கின்றேன் என்பது எனக்களிக்கப்பட்ட வெகுமதியெனத்தான் கொள்ளவேண்டும். 


இப்படி வெகு நேர்த்தியாகவும், சிரத்தையாகவும் ஒவ்வொரு ஓவியர்களையும் அவர்களின் ஓவியங்களையும் மோகன் அறிமுகப்படுத்தியதைப் போல,  இவ்வாறாக நமது ஈழத்து ஓவியர்களையும் யாரேனும் நமக்கு அறிமுகப்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்குமென ஒரு பெருமூச்சு வந்து மறைந்துபோனது.

..........................................

(Nov 25, 2020)

வனம் திரும்புதல் - பொ.கருணாகரமூர்த்தி

Saturday, April 03, 2021

பொ.கருணாகரமூர்த்தி புலம்பெயர்ந்த சூழலில் நெடுங்காலமாக எழுதிக்கொண்டிருப்பவர்.  1985 இல்  'ஒரு அகதி உருவாகும் நேரம்' வெளிவந்திருப்பதை அவரது முதல் பிரசுரமான படைப்பாகக் கொண்டால், கிட்டத்தட்ட 35 வருடங்களாக சலிக்காது எழுதிக்கொண்டிருப்பவர் என்று அவரை சொல்லலாம். 'வனம் திரும்புதல்' - நல்ல கதைகளும், சாதாரண கதைகளும், கதைகள் என்பதற்காக எழுதப்பட்ட கதைகள் சிலவும் என எல்லாம் சேர்ந்து ஒரு தொகுப்பாக வந்திருக்கின்றது.'காலச்சிமிழ்', 'இராணுவத்தில் சித்தார்த்தன்', 'Donner  Wetter', 'ஸோபிதாவுக்கு பெர்லின் காட்டுதல்' என்பவை நல்ல வாசிப்பனுபவத்தைத் தருபவை.


'Donner Wetter'  ஜேர்மனியர் ஒருவரின் இனவெறியை அற்புதமாக எள்ளல் தொனியில் பழிவாங்கி எதிர்கொண்டு கடந்து செல்லும் கதையாகும். மேற்கத்தைய நாடுகளில் நாம் எதிர்கொள்ளும் இனவாதம் நுட்பம் நிறைந்தது. அதை நாம் பல்வேறு வழிகளில் கடந்து வந்தவர்கள்/வந்துகொண்டிருப்பவர்கள். ஆகவே இந்தக் கதை நமக்குரிய நுட்பமான பழிவாங்கலாக நினைத்து நெருக்கங்கொள்ளக்கூடிய கதையாகவும் இருக்கின்றது. 'காலச்சிமிழில்' மரணத்தை எதிர்நோக்கி படுக்கையில் கழிக்கும் ஒருவர் தன் கடந்தகாலங்களை நினைத்துப்பார்க்கும் நனவோடையாகும். இறுதியில் உறவுகள், பிள்ளைகள் மட்டுமில்லை மனைவி கூட தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என்கின்ற புரிதலுடன் விடைபெறும் ஒரு மனித உயிரியைப் பற்றிய கதையெனச் சொல்லலாம். 


'இராணுவத்தில் சித்தார்த்தன்' என்பது அதன் தலைப்பே கதையின் தன்மையைச் சொல்லிவிடும். புலிகளில் சேர்ந்து மரணமுற்ற ஒருவனின் சகோதரி, புலம்பெயர்ந்த தேசத்தில் திருமணத்தின் நிமித்தம் நாட்டை விட்டு வெளியேற ஏற்படும் சிக்கலை எப்படி ஒரு இராணுவத்தளபதி தீர்த்துவைக்கின்றார் என்பதாகும். 'ஸோபிதாவுக்கு பெர்லின் காட்டுதல்' என்பது ஐரோப்பாவுக்கு வருகின்ற ஒரு நடிகை, அவரின் மீது பித்துப்பிடித்து அலையும் சிலரை எப்படி எல்லாவற்றையும் வழித்துத் துடைத்து அனுப்பிவிடுகின்றார் என்பதைப் பற்றியதாகும். இவ்வாறு தென்னிந்திய திரைநட்சத்திரங்கள் எப்படி நம்மவர்களின் வருமானங்களையும்/சேமிப்புக்களையும் அழித்துச்செல்லுதல் என்பது இற்றைவரை நடந்துகொண்டிருப்பதுதான். எத்தனை அனுபவங்கள் வந்தாலும், தென்னிந்தியத் திரைமோகம் என்பது நம்மவர்களைப் பாடங்கள் எதையும் கற்றுக்கொள்ளாமல் தடுத்தும் கொண்டிருக்கின்றது. 


இத்தொகுப்பில் வந்த கதைகள் பல்வேறு சஞ்சிகைகளில் வந்தாலும் 'காலம்' இதழில் வெளிவந்த கருணாகரமூர்த்தியின் கதைகளே பெரும்பாலும் என் வாசிப்பில் சிறந்த படைப்புக்களாக இருப்பது தற்செயலானது என்றாலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. அவ்வாறேதான் ஜேர்மனியில் இருக்கும் பார்த்திபனின் கதைகளைத் தொகுப்பாக வாசித்தபோதும், காலம் இதழில் வெளிவந்த கதைகளே என்னை அதிகம் கவர்ந்தவையாக இருந்தன. 


கருணாகரமூர்த்தியின் எழுத்து நடை எப்போதும் அலுப்பில்லாது வாசிக்கக்கூடியது. ஆனால் அதில் சிக்கல் என்னவென்றால், அவர் இலங்கை மொழியில் எழுதுகின்றாரா, புலம்பெயர் நடையில் எழுதுகின்றாரா, இல்லை தமிழ்நாட்டில்  கிட்டத்தட்ட வழக்கொழிந்துவிட்ட அஹ்ரகார பாஷையில் எழுதுகின்றாரா எனத் திகைக்கவேண்டியது. அந்தத் திகைப்பு எப்படி இருக்குமென்றால் ஒரு கதையில் வரும் பாத்திரமே அந்நியனாகவும், அம்பியாகவும், ரெமோவும் பல்வேறு மொழிநடையைப் பேசுகின்ற நிலையைப் போன்றதாகும். இதை கருணாகரமூர்த்திக்கு அவரின் படைப்புக்களை வாசிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே சுட்டிக்காட்டி வருகின்றேன். மேலும் இது  புத்தகமாகப் பிரசுரிக்கும்போது நல்லதொரு எடிட்டரை வைத்து எளிதாகக் களைந்துகொள்ளக்கூடிய விடயமும் ஆகும்.  


சிலவேளைகளில் கருணாகரமூர்த்தி இதை தனக்குரிய தனித்துவமாக வைத்திருக்க விரும்புகின்றாரோ தெரியாது, அப்படியிருப்பின் அதில் பெருமை கொள்ளக்கூடிய நிலை எதுவுமில்லையெனத்தான் தாழ்மையுடன் சொல்லவேண்டியிருக்கும்.

 

மற்றும்படி 'வனம் திரும்புதலை'  சுவாரசியமாக வாசிக்கக்கூடிய ஒரு தொகுப்பெனச் சொல்லலாம். ஆனால் இது இவரது சிறந்த தொகுப்பெனச் சொல்லமாட்டேன். கருணாகரமூர்த்தியை அவரின் தொடக்ககாலக் கதைகளாலும், 'பெர்லின் நினைவுகள்' என்கின்ற சுவாரசியமான நனவோடைதோயும் படைப்பினூடாகவுமே நினைவில் வைத்திருக்க நான் விரும்புவேன். 

..........................

(Nov 20, 2020)

அமைதி என்பது நாமே - திக் நியட் ஹான்

Thursday, April 01, 2021

(தமிழில்: ஆசை)


1.

எனக்கு Thay (Thich Nhat Hanh)  எப்போது அறிமுகமானவர் என்பது சரியாக ஞாபகமில்லை. ஏழு வருடங்களுக்கு முன் ஓஷோவின் உரைகள் முழுவதையும் கிட்டத்தட்டக் கேட்டிருக்கின்றேன். ஓஷோ நம்முள்ளே வைத்திருக்கும் அனைத்தையும் உடைத்தெறியககூடியவர் என்பதை நாம் அறிந்ததே. ஒரு கருத்தாக்கத்தை அவர் உடைத்து இதைத்தான் கட்டியெழுப்ப விரும்புகின்றார் என்று  நமது மனம் இன்னொன்றைக் கற்பனை செய்வதை, அதையும் அடுத்தடுத்த உரைகளில் உடைத்தெறிந்து விட, நாம் பரிதாபமாய் விடப்பட்டிருப்போம். ஓஷோ எனக்கு தோளில் கைகளைப் போட்டபடி தொடர்ந்து நடந்துவரக்கூடிய ஒரு உற்றதோழர், ஆனால் அவரை ஒரு வழிகாட்டியாக மனது ஒருபோதும் நினைத்ததில்லை. 


நமது அறிவுஜீவிதப் பாவனைகளை ஒருவர் உடைந்தபின் யாரோ ஒருவரிடம் சரணாக அடைந்தால் நல்லதென மனது சோர்வுகொள்ளும். அப்படியான ஒரு பொழுதில்தான் தாயைக் கண்டுகொண்டேன். அவர் மிக எளிமையானவர். ஓஷோ போல அறிவுத்தளத்தில் வைத்து புத்தரை அணுகியவரில்லை. ஒஷோவின் உரையைக் கேட்பதுபோல தாயைத் தொடர்ந்து உற்சாகத்துடன் கேட்கமுடியாது. காதல் என்றால் என்ன என்று கேட்டால் கூட, ஒரு குறிப்பிட்ட சொற்களுக்குள் நின்று சொல்லிவிட்டு தாய் நகர்ந்துவிடக்கூடியவர், ஓஷோ என்றால் ஒரு பெருமழையைப் பொழிந்துவிட்டுத்தான் ஓய்வார். ஆகவே ஓஷோவின் உரைகளை நேரடியாகக் கேட்டது போலில்லாது, தாயை அவரின் நூல்களை வாசிப்பதினூடாகத்தான் நெருக்கங்கொண்டேன்.


இவ்வாறு தாயிடம் நெருக்கம் கொண்டு என் நண்பருக்கு அறிமுகஞ்செய்ய, நாங்கள் தாயை பிரான்சிலிருக்கும் அவர் வசித்துவந்த Bordeaux இற்குத் செல்லக்கூட தயார்படுத்தியிருக்கின்றோம் (இப்போது உடல்நல நிமித்தம் காரணமாக தாய் வியட்னாமுக்குத் திரும்பிவிட்டார்). அதன் நீட்சியில் நான் தாயினுடைய நூல்களில் வந்தவற்றை தமிழாக்கம் செய்து ஒரு முகநூல் பக்கத்தையும் தமிழில் அவருக்காகத் திறந்துமிருக்கின்றேன். பின்னர் அந்த நண்பரின் நிமித்தம், தாயினுடைய ஒரு நூலை முற்றாக மொழிபெயர்த்து கடந்தவருடத்தின் தொடக்கத்தில் முடித்துமிருந்தேன். இவ்வாறு தாயைப் பின் தொடர்ந்து வருபவனாக இருந்த எனக்கு ஆசை, தாயினுடைய ஒரு நூலை தமிழாக்கம் செய்திருக்கின்றார் என்று அறிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.


2.

இந்த வருடம் சென்னைப் புத்தகக் கண்காட்சியிற்குச் சென்றபோதே க்ரியா பதிப்பகத்தில் இதை வாங்க முடிந்தது.  நல்லதொரு வடிவமைப்பில்/மொழிபெயர்ப்பில் வந்திருக்கின்றது. ஏற்கனவே கூறியதுமாதிரி தாய் மிக நேரடியாக எளிமையான வார்த்தைகளில் பேசுகின்றவர். எனவே தாயை அவ்வளவு அறியாத ஒரு வாசகருக்கு இது ஏற்கனவே சொல்லப்பட்டுவிடயங்கள் போன்று வாசிப்பில் இலகுவாகக் கடந்துபோகக் கூடியது. 


உண்மையில் தாய் இதை தன்னை நாடி வருபவர்க்கும்,  தியானத்தில் ஆர்வம் இருப்பவர்களுக்குமான, கையேடாகத்தான் இதிலுள்ள பலவற்றைப் பேசுகின்றார். தியானத்தில் திளைத்த மனதுக்கு சொற்கள் ஏதும் பயனைப்  பெரிதாகக் கொடுத்துவிடாது. கொஞ்ச எளிமையான சொற்களே போதும். ஒருவகையில் நாம் வாழ்க்கையின் தத்துவார்த்த விடயங்களுக்குச் செல்லாமல், இந்தக்கணத்தில் இருப்பதைப் பற்றித்தான் அதிகம் பேசுகின்றார். அலைபாயும் மனதை எளிமையான வார்த்தைகளின் வழி நம்மை மீளமீள நிகழுக்கு இழுத்துவருகின்றார்.


இந்த நூலில் இறுதிப்பகுதியில் மேற்கத்தைய நாடுகளிற்கான - முக்கியமாய் அமெரிக்காவிற்கான- பெளத்தம் பற்றி தாய் பேசுகின்றார். சிலவிடயங்களை அதற்காய்த் தெளிவாக வரையறுக்கவும் செய்கிறார். இந்தியாவில் தோன்றிய புத்தரை எப்படி சீனாவும், திபெத்தும் தமக்குரிய புத்தராக சுவீகரித்து, தமக்கென சீனப்புத்தர், திபெத்திய புத்தரென ஆக்கியதோ அப்படி அமெரிக்காவும் தனக்கான புத்தரை தன் கலாசாரம்/நிலப்பரப்புகேற்ப கண்டுபிடிக்கவேண்டுமென வலியுறுத்துகிறார். அவ்வாறு இல்லாதவிடத்து புத்தரை நம்மால் முழுமையாக அறிந்துகொள்ளமுடியாதெனச் சொல்கிறார். 


மேலும் அமெரிக்காவில் புத்தரையும், பெளத்தத்தையும், அவரவர் தமது மன அழுத்தங்களிலிருந்து விடுபடவே பெரும்பாலும் தேடி வருகின்றனரே தவிர, வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வருவதில்லை எனவும் குறிப்பிடுகின்றார். பலர் தமது நாளாந்த வாழ்க்கையிலிருந்து தம்மை அறுத்துக்கொண்டே புத்த ஆலயங்களைத் தேடி அமைதி கிடைக்குமென வருகின்றனர். அங்கு வந்து தியானத்தின் மூலம் இன்னொரு சமூகத்தை உருவாக்கி வாழத்தொடங்கும்போது அது வெளியில் கடினமாகி இருப்பதைவிட இன்னும் கடினமாக இருக்க, அதிலிருந்தும் அந்நியப்படுகின்றனர் என தாய் எச்சரிப்பதும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது. இவ்வாறாக தாய் மேற்குலகிற்கான பெளத்தம் பேசுகின்ற இந்தப் புள்ளிகள், நம்மைப் போன்ற புலம்பெயர்ந்தோருக்கும், புத்தரை அறிய விரும்புகின்றவர்க்கும் முக்கியமானதென நினைக்கிறேன்.


எங்கிருந்தும், எவற்றிலிருந்தும்  நாம் எளிதாகத் தப்பித்துவந்துவிடமுடியாது, எதுவாயினும் நேரடியாகச் சந்தித்து அதைக் கடந்துவருவதன் மூலமே நாம் நிகழில் இருக்கமுடியும். இதைத்தான் புத்தர்  suffering தவிர்க்கமுடியாது ஆனால் painஐ வேண்டுமானால் குறைக்கலாம் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கின்றார்.


தாயை விரும்புகின்றவர்க்கு இந்த நூலைத் தமிழில் வாசிப்பது மகிழ்ச்சி தரக்கூடியது.  'Being Peace' என்ற தலைப்பை 'அமைதி என்பது நாமே' என்பதைவிட இன்னும் தெளிவாக தமிழாக்கி இருக்கலாம் போலவும் தோன்றியது.

...................


(Nov 14, 2020)