கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சில சிறுகதைகள்

Friday, February 16, 2018

டத்தில் சயந்தனின் சிறுகதை 'ஸ்துதி' வருவதை அறிந்தபோது. நீண்ட காலத்துக்குப் பிறகு சயந்தனின் கதை வருகின்றதென உற்சாகத்துடன் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். இதுவா கதையென அது முடியும்போது ஏமாற்றமாகவே இருந்தது. இதை எழுத 'ஆதிரை', 'ஆறாவடு' போன்ற எழுதிய ஒருவர் தேவையில்லை, ஒரு அறிமுக எழுத்தாளரே போதுமே எனத்தான் தோன்றியது.
பாலியல் விடயங்களை, முக்கியமாய் பாலியல் தொழிலாளியை/மஸாஜ் நிலையங்களைத் தேடிப்போதல், அது குறித்து எழுதுதல் என்பது எங்களைப் போன்ற ஆண்களுக்கு ஒரு ஈர்ப்புள்ள விடயமாகவே எப்போதும் இருக்கின்றதென நினைக்கின்றேன். இவ்வாறான விடயங்கள் நெடுங்காலமாய் எழுதப்பட்டுமிருக்கின்றன, எனவே நாம் எப்படி வித்தியாசமாக எழுதப்போகின்றோம் என்பதும் நமக்கு முன்னாலுள்ள முக்கிய சவாலாகும்.
இந்த விடயத்தை ஒரு அரசியல் statement ஆக வியட்னாமிய பெண் போராளியினூடாக ஷோபாசக்தி மாற்றியிருப்பார் (தேசத்துரோகி தொகுப்பில், கடைசிக் கதை, பெயர் மறந்துவிட்டது). அதுபோலவே அண்மையில் வந்த 'box கதைப்புத்தகத்திலும்' பெண்புலிகள்/மலையகப் பெண்கள் என பல்வேறு இழைகளினூடாக எவரையும் சந்தேகப்படாமல் அல்லது எல்லாவற்றையும் சந்தேகப்படும்படும்வகையாக அருமையாக எழுதியிருப்பார். நாமிவ்வாறு ஷோபாவைப் போல, இந்தத்திசையில் நின்றுதான் சொல்லவேண்டும் என்கின்ற அவசியமில்லை. ஆனால் இது சிக்கலான விடயமென்றாலும், வாசிப்பவர்களைத் தொந்தரவு செய்வதுமாதிரியாக எழுதமுடியும் என்பதற்காகத்தான் இதைக் குறிப்பிடுகின்றேன்.
யந்தனாவது பரவாயில்லை அண்மையில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய மூன்று கதைகளை வாசித்தபோதும் இன்னும் ஏமாற்றமாக இருந்தது. எஸ்.ராவினது நாவல்களை வாசிக்கும்போது, அவரது முன்னுரைகளிலேயே கதையைச் சொல்லும் முறையை தவிர்க்கவேண்டும் எனச் சொல்லியிருக்கின்றேன (அவரின் முன்னுரையில் இருந்து தப்பினால் கூட, மனுஷ்யபுத்திரன், எங்கே நீ உள்ளே போய் உன்போக்கில் வாசிப்பாய் பார்ப்பம் என்று நந்தி மாதிரி நின்று நாவலின் முழுக்கதையையும் சொல்லிவிடுவார்). நல்ல காலம் இப்போது அவர்களிடையே உரசல் என்பதால் எங்களுக்குக் கொஞ்சம் நிம்மதி.
எஸ்.ராவின் 'கற்பனைச் சேவல்' எழுதப்பட்ட விதத்தில் ஒரளவு நல்ல கதை. ஆனால் பாருங்கள் தலைப்பிலேயே கதையைச் சொல்லிவிட்டார். சண்டைக்குக் கோழிக்கு வளர்ப்பவரைப் பற்றிய கதை. ஆனால் அந்தக் கதையில் அந்தப் பாத்திரத்தை, அவர் வளர்க்கும் கோழியை எவ்வளவு வீரியமாக விபரித்தாலும், அது நிஜத்தில் இப்போது இல்லை, எல்லாமே கற்பனைதான் என்பதை இந்தத்தலைப்பே சொல்லிவிடுகின்றது. பிறகு எப்படி ஒரு வாசகர் அந்தக் கதையினுள்ளே ஊன்றி நின்று வாசிக்க முடியும். மற்ற இரண்டு கதைகளால, 'முதல் காப்பி'யும், 'வெறும் பணமும்' மிகச் சாதாரண கதைகள். இந்தகதைகள் குமுதம் ஒருபக்கக் கதையில் வரக்கூடிய விடயங்களை கொஞ்சம் எஸ்.ரா தன் 'ஸ்டைல் முகப்பூச்சு' பூசி எழுதியிருக்கின்றார். இதையெல்லாம் நல்ல கதைகள் என்று கூறினோம் என்றால் உபபாண்டவம், யாமம், பால்யநதி போன்ற நாவல்/சிறுகதைத் தொகுப்பு எழுதிய எஸ்.ராவையே அவமானப்படுத்துவது போலாகிவிடும்.
இந்த விடயங்களுக்கு அப்பால், திரும்பச் திரும்பச் சொல்வது, நம்மிடையே வெளிப்படையாகப் பேசப்படாத விமர்சன மரபுதான். இன்று ஆகக்குறைந்து உள்வட்டங்களைத் தாண்டி, 'நண்பர்'களாக நமக்கு இருக்கின்றார்களே என்ற அச்சந்தாண்டி வெளிப்படையாக விமர்சித்து எழுதுவது முக்கியமானது. அதுவே ஒரு படைப்பாளியின் வளர்ச்சிக்கு உதவிபுரியும் என்ற புரிதல் நமக்கு வேண்டியிருக்கின்றது. அந்த விமர்சனப் பண்பு வளர அல்லது துணிவாக எழுத்தில் வைக்க நமக்கு நிறைய வாசிப்புத் தேவை. எனெனில் அதுவே, வைக்கும் விமர்சனத்திற்குத் திரும்ப வைக்கப்படும் எந்த எதிர்வினைகளையும் நேரடியாகச் சந்திக்கும் தைரியத்தையும் நமக்குத் தரும்.
(Nov, 2017)

பாரிஸில் பார்த்த ஓவியங்கள் பற்றிய சில குறிப்புகள்

Wednesday, February 14, 2018

தேனும் ஒரு மியூசியத்திற்குப் போகும்போது, அங்கே நமக்கு அறிமுகமான ஓவியர்களின் படைப்புக்கள் இருக்கின்றதென அறியும்போது மனதில் உற்சாகம் இயல்பாய் ஊற்றெடுக்கும். அவ்வாறே, இதுவரை அறிந்திராத ஓவியர்களின் ஓவியங்களையும் தற்செயலாய்ப் பார்க்கும்போது, உங்களைச் சிலவேளைகளில் அவை அதிகம் கவர்ந்துவிடவும் செய்யலாம். இதை அறியாக் கணங்களின் வனப்பு என்றுகூட சற்று அழகியலாக நாம் அழைத்துக்கொள்ளலாம்.
பாரிஸிலிருந்த Musée d'Orsay்குப் போனபோது, எனக்கு வான்கோவினது படைப்புக்களைப் பார்க்கவேண்டுமென்பதே முக்கிய நோக்கமாக இருந்தது. ஏற்கனவே ஹாலண்டிலிருந்த வான்கோ மியூசியத்திற்குப் போயிருந்தபோது, வான்கோவின் மிகுதி முக்கியமான ஓவியங்கள் பாரிஸிலிருப்பதை அறிந்திருந்தேன். வான்கோவைப் பார்க்க Musée d'Orsay போனபோது, சிறப்புக் காட்சியாக இம்பிரஷனிசக் கால பிரபல்யமான ஓவியங்களை வைத்திருந்தது கூடுதலாகக் கிடைத்த இன்னொரு விருந்து.

ஆலெஸில் படுக்கையறை/Bedroom in Arles (Van Gogh)

இந்த ஓவியத்தை பிரான்ஸில் இருந்தபோது வான்கோ வரைந்திருந்திருக்கின்றார். 1886-1888 இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 200ற்கு மேலான ஓவியங்களை பித்துப்பிடித்தது போல அவர் வரைந்திருக்கின்றார். 37 வயதில் தற்கொலை செய்த வான்கோ அவரது ஓவியங்களை 27 வயதிற்குப் பிறகுதான் வரையத்தொடங்கியிருக்கின்றார்; இந்தக் குறுகிய காலத்தில் அவர் வரைந்தவையோ 900ற்கு மேற்பட்ட ஓவியங்களாகும்.
இந்த ஓவியம் 'மஞ்சள் படுக்கையறை' எனவும் அழைக்கப்படுகின்றது. வான்கோவையைப் போல மஞ்சள் ஓவியத்தை அவ்வளவு அழகாகவும், அதிகமாகவும் பாவித்த ஓவியர்கள் வேறு யாரேனும் இருக்கின்றார்களா எனத் தெரியவில்லை. அந்தளவிற்கு அவரது சூரியகாந்தி பூக்களிலிருந்து கோதுமை வயல்கள் வரை மஞ்சள் வர்ணம் எங்கும் பரவிப் படர்ந்தபடியே இருக்கின்றது. இந்தச் சரிவக வடிவுள்ள அறை வான்கோ வசித்த இடமுமாகும். சுவர்களில் மாட்டப்பட்டிருக்கும் ஓவியங்கள் வான்கோ தன்னைப் பாதித்த இரண்டு ஓவியர்களை வரைந்து கொளுவியிருக்கின்றார்கள். The Poet(Boch) என்றும், The Lover (Millet) எனவும் பெயரிடப்பட்ட இந்தத் தனி ஓவியங்களும், வான்கோவின் சேகரிப்பில் இருப்பதை நாம் காணமுடியும்.
இந்த ஓவியத்திற்கு ஒரு சிறப்பு இருக்கின்றது; வான்கோ இந்தப் படுக்கையறை ஓவியத்தை மூன்று முறை வரைந்திருக்கின்றார். முதல் ஓவியம் வரைந்தபின் அது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அதை வான்கோ, அவரது சகோதரரான தியோவிற்கு அனுப்பியபோது, தியோ இன்னொருமுறை வான்கோவை வரைந்து அனுப்பும்படி கேட்க அதே அளவீடுகளில் வான்கோ திருப்பி இரண்டாவது ஓவியத்தை வரைந்திருக்கின்றார். பின்னர், இன்னும் வர்ணத்தைத் திருத்தி, முன்னரே விட குறைந்த அளவீட்டில் மூன்றாவது ஓவியத்தை தனது தாயிற்கும், சகோதரிக்கும் அனுப்புவதற்காய் வரைந்திருக்கின்றார். ஆனால் இந்த மூன்றாவது ஓவியம், முதலிரு ஓவியங்களை விட பொருட்கள் இருக்கும் இடங்களில் மாறியிருக்கின்றது. இதில் கொளுவியிருக்கும் ஓவியங்கள் முன்னர் இருந்ததைப் போல அல்ல. இதில் புதிதாய் இருக்கும் ஒரு ஓவியம் வான்கோவினது சுய பிரதிமை போலத் தென்படுவதை நாம் அவதானிக்கலாம்.
இதன் முதல் ஓவியத்தை நான் ஆம்ஸ்டடாமில் இருந்த 'வான்கோ மியூசியத்தில்' பார்த்திருக்கின்றேன். இதன் மூன்றாவது ஓவியத்தை பாரிஸில் இருந்த Musée d'Orsayல் பார்க்கமுடிந்தது ஓர் அரிய வாய்ப்புத்தான் எனத்தான் சொல்லவேண்டும்.

 பாம்பாட்டி /The snake charmer (Henri Rousseau) 

Henri Rousseau இந்த ஓவியத்தை, அவரது தாயார் இந்தியா பற்றிக் கூறிய தொன்மக் கதைகளைக் கேட்ட பாதிப்பில் வரைந்திருக்கின்றார். பாம்பைத் தோளில் போட்டு, புல்லாங்குழல் ஊதும் ஒரு கரிய உருவம். அந்த 'இசையில் மயங்கி' மரத்திலிருந்து தலையை நீட்டும் ஒரு நீண்ட பாம்பும், மேலும் புற்றரையில் ஆடுவதைப் போன்ற பாவனையில் சில பாம்புகளும், ஒரு நாரையும், புல்லாங்குழல் இசைக்கும் உருவத்திற்கு அப்பால் துலங்கும் நிலவும், நிலவின் ஒளிபட்டு முன்னே ஒளிரும் செடிகளுமென ஒருவித மாயநிலைக்கு நம்மை எடுத்துச் செல்லும் ஓவியமாக இது இருக்கின்றது.
பிரெஞ்சு ஓவியரான Henri Rousseau நினைக்கும்போது, அவரது The Sleeping Gypsy மற்றும் The Dream ஆகியவற்றைத் தவிர்த்து அவரை நினைவுகூரவே முடியாது. 40 வயதிற்குப் பிறகு ஓவியங்களை வரையத்தொடங்கி, அவரது ஓவியங்கள் சிறுபிள்ளைத்தனமாய் இருக்கின்றன என அவரது காலத்திலேயே விமர்சித்து ஒருவகையில் ஒதுக்கப்பட்டவரும் கூட. அப்படியிருந்தும் பிக்காஸோ , Rousseau தெருவில் ஓவியம் வரைந்து விற்றுக்கொண்டிருக்கும்போது அவரது மேதமையைக் கண்டுகொண்டு அவரை வீடுதேடிப் போய்ப் பார்த்திருக்கின்றார். அநேக கலைஞரைப் போல வறுமையுடன், சிறு ஓய்வூதியப் பணத்தோடு, தெருக்களில் வயலின் வாசித்துக்கொண்டும் வாழ்ந்து இறந்த Rousseau வின் படைப்புக்கள் அவரது மரணத்தின் பின்னேயே கவனிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

புல்வெளியில் மதியவுணவு /Luncheon on the Grass (Edouard Manet)

மானேயின் 'புல்வெளியில் மதியவுணவு' என்ற ஓவியம் மிகப் பிரபல்யம் வாய்ந்தது. யதார்த்த ஓவியப்பாணியிலிருந்து இம்பிரனிலிசத்திற்கு நகர்ந்த ஓவியர்களில் முக்கியமான ஒருவராக மானே குறிப்பிடுகின்றார். இந்த ஓவியத்தில் பெண்களோ நிர்வாணமாய் இருக்க, அதில் வரையப்பட்டிருக்கும் ஆண்களோ நேர்த்தியாக அன்றைய காலத்துப் பிரெஞ்சு மக்கள் அணியும் ஆடைகள் அணிந்திருப்பதும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது. இதிலிருக்கும் நிர்வாணப் பெண் ஓவியத்திற்காய், பிரான்சில் அன்றிருந்த கலைகளுக்கான காட்சிக்கூடத்தில் இந்த ஓவியம் காட்சியிற்கு வைப்பதற்கு, அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
உண்மையில் இந்த ஓவியம் அதன் வரைதல் முறையிலும் பல்வேறு குழப்பங்களை உருவாக்கியிருந்தது. யதார்த்தபாணி ஓவியம் போல இது உடனே தெரிந்தாலும், வரையப்பட்ட நிர்வாணப் பெண்ணின் உருவம் வெளி சூரிய வெளிச்சத்திற்கு ஏற்ப வரையப்பட்டிருக்கவில்லை. ஏதோ ஒரு உள்ளக அறையில் நிறைய வெளிச்சத்துடன் இருப்பதுபோல வரையப்பட்டிருக்கின்றது.அதேபோன்று பின்னணியில் தண்ணீரில் கையளைந்தபடி இருக்கும் பெண்ணும், தூரத்தில் இருப்பவர் சிறிதாகத் தெரியவேண்டுமென்கின்ற ஓவிய அளவீடுகளின்படி வரையப்படவில்லை.
மிகத் தத்ரூபமாக யதார்த்தப் பாணி ஓவியங்களை இதற்கு முன் வரைந்த Manet, இதை ஓவியம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என இறுக்கமான சட்டகங்களை வைத்திருந்த அன்றையகால ஓவிய மதிப்பீட்டாளர்கள் மீது வைத்த விமர்சனமாக ஒருவகையில் எடுத்துக்கொள்ளலாம் எனச் சொல்கின்றார்கள். நான் வரையும் ஓவியத்தை நான் விரும்பியபடி வரைவேன், உங்களின் அளவிற்கோ, விருப்பிற்கோ ஏற்ப வரையப்படுவதல்ல ஓவியம் என்று அன்றே Manet அதிகாரத்திற்கு எதிராகக் கேள்வி எழுப்பியதாகவும் நாம் விளங்கிக்கொள்ளலாம்.

 'வைக்கோல் குவியலும்' (The haystack) 'பாதை'யும் (The Path) / Edouard Vuillard

Edouard Vuillard இம்பிரஷனிசத்திற்குப் பிறகான ஓவியங்களை வரைந்தவர் எனச் சொல்லப்படுகின்றார். இவர் அன்றைய பிரான்சில் பிரபல்யமாக இருந்த Nabis என்ற ஓவிய இயக்கத்தில் இருந்திருக்கின்றார். தமிழ்ச்சூழலில் ஒருகாலத்தில் ஒருகுழு கலை கலைக்காகவே என்ற மந்திராடனத்தை உச்சரித்துக்கொண்டிருந்ததைப் போல, கலைஞர்கள் உயர்வானவர்கள்/கலை எல்லோராலும் எளிதில் விளங்கமுடியாத ஒரு சிறுவட்டத்திற்குமட்டுமே உரியதெனவும் ஒருகாலத்தில் இந்தக்குழு நம்பியிருக்கின்றது. அவ்வாறு, தாம் வரைகின்ற எல்லாவற்றிற்கும் அப்பாலும் 'குறியீடுகள்' இருக்கின்றன என பிரகடனப்படுத்திக்கொண்டிருந்தவர்களில் Edouard Vuillardம் ஒருவர்.
Nabis என்ற அமைப்பைத் தொடங்கி ஒரு புது ஓவியப்பாணியைத் தொடங்க விரும்பினாலும் இறுதியில் அவரவர் அவர்களின் பாணியில் ஓவியங்களை வரைந்திருக்கின்றனர். அதற்குச் சான்றாக Edouard Vuillardவின் 'பாதை'யும் (The Path) 'வைக்கோல் குவியலும்' (The haystack) எனத்தலைப்பிடப்பட்ட இவ்விரு ஓவியங்களும் இருக்கின்றன.

ஆயிரத்தொரு இரவுகள் / One thousand and one nights (Vittorio Zecchin)

இதை வரைந்த Vittorio Zecchin இத்தாலியைச் சேர்ந்தவர். இன்னும் திருத்தமாகச் சொல்வதனால் வெனிசிலுள்ள Murano என்ற தீவைச் சேர்ந்தவர். இந்த ஓவியத்தின் பெயர் 'ஆயிரத்தொரு இரவுகள்'. இதில் இளவரசர்களும் இளவரசிகளும் பரிசில்களைச் சுமந்துகொண்டு சுல்தானிடம் செல்கின்றனர். சுல்தானின் மகளை, அலாவுதீனுக்குப் பெண் கேட்பதற்காய் இவர்கள் பரிசுப் பொருட்களுடன் செல்வதையே Zecchin இதில் காட்சிப்படுத்துகின்றார்.
மிக ஆறுதலாகப் பார்க்கும்போது Zecchin செய்திருக்கும், வரைதலின் நுட்பம் நமக்குப் புலப்படும். ஒருவகையில் பார்த்தால் இது கிளிம்டின் (Klimt) ஓவியப்பாணியை நினைவூட்டுகின்றது. முக்கியமாய் கிளிம்டின் 'முத்தம்' என்கின்ற ஓவியத்தை. வியன்னாவில் அதை நேரடியாகப் பார்த்தபோது, 'மோனாலிசா'வைக் கூட கொஞ்சம் தள்ளியிரும் பிள்ளாய் என விலத்திவைத்து இரசிக்ககூடிய அவ்வளவு அற்புதமான ஓவியம் அது.
ஆக, ஏற்கனவே அறிமுகமான படைப்பாளிகளுக்காய் மியூசியத்திற்குப் போகும்போது, புதிதாய் நம் மனதை வருட/திகைக்கவைக்கும் இவ்வாறான ஓவியங்களையும் தற்செயலாய் கண்டடையும்போது அது இன்னும் சுவாரசியமான அனுபவமாய் மாறிவிடுகின்றது.
----------------------------
(நன்றி: 'அம்ருதா', மாசி, 2018)