நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

Anthony Bourdain

Tuesday, December 04, 2018ண்மையைச் சொல்லப்போனால் Anthony Bourdainஐ அவ்வளவாக நான் பின் தொடர்ந்ததில்லை. அதில் முக்கியமானது, எனக்கு சி.என் .என் தொலைக்காட்சி பிடிப்பதில்லை என்பது ஒருகாரணம். சிஎன்என்னிலேயே அவரது பிரபல்யமான 'Parts Unknown' வந்திருந்தது. அவர் கடந்தவருடம் இலங்கையிற்குப் போனது, அதைப் பற்றிய கட்டுரையொன்றை வாசித்ததிலிருந்துதான் அவரை ஒரளவு பின் தொடரத்தொடங்கியவன். இப்போது அவரது சடுதியான மரணத்தின்போது, நான் இணையத்தில் பின் தொடரும் அநேக 'பயணிகள்' தங்களின் பயணங்களுக்கானதும், தெரு உணவுகளைத் தேடித்தேடிச் சாப்பிடுவதற்கானதுமான முக்கிய புள்ளியாக இருந்தவர் Bourdain என்று எழுதுவதை வாசிக்கும்போது, Bourdainஐ முன்னரே அறிந்திருக்கலாம் போலத் தோன்றுகின்றது.
Bourdain தன்னையொரு பத்திரிகையாளராகச் சொல்வதில்லை. அவர் ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கின்ற உணவை அறிவதில்/ருசிப்பதில்தான் முக்கியம் கொடுக்கின்றார் என்கின்றபோதும், அதனூடு அந்த நாடுகளின்/நகரங்களின் கலாசாரங்கள், அங்கிருக்கும் சமகால முரண்பாடுகள், கடந்தகால வரலாறுகள் என்பவற்றையும் தனது நிகழ்ச்சி மூலம் அறியத்தருகின்றார். ஒருவகையில் அரசியலைப் பற்றிப் பேசவில்லை என்ற தொனியோடு, அரசியலை அவர் பயணிக்கும் இடங்களின் மக்களைக்கொண்டு உணவு அருந்துவதோடு பேச வைக்கின்றார். மேலும் அவர் ஆடம்பர உணவு இடங்களில் சாப்பிடுவதுமில்லை, தெருக்களில் விற்கப்படும் உணவுகளையும், பராம்பரியமாக வீடுகளில் சமைக்கப்படும் உணவுகளையும் எமக்குக் கொண்டுவந்து காட்டுகின்றார். அந்த வகையில்தான் Bourdain பிறரை விட முக்கியமானவராகின்றார் என நினைக்கின்றேன்.
Bourdain இலங்கையிற்குக் கடந்தவருடம் 2017 இரண்டாம் தடவையாகச் செல்கின்றார். முதன்முதலாகப் போனபோது 2008(?) இருந்த நிலைமைகளுக்கும் இப்போதும் இருக்கும் சூழல்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை விபரிக்கின்றார். அதேவேளை போர் முடிந்தவுடன் எல்லாம் இயல்பாகிவிட்டதென்பதை அந்தந்த மக்களின் மூலமாக கேள்விக்குட்படுத்துகின்றார். முக்கியமாக சிங்கள் நாடக நெறியாளரின் நாடகத்தினூடும், அவரோடான உரையாடலினூடாகவும் இலங்கையின் இன்றைய நிலைமையை ஊடறுத்துப்பார்க்கின்றார். 'சமாதானம் வந்துவிட்டது' என்று சொன்னாலும், இன்னும் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதிப்புக்களை, கண்காணிப்பு உலகை இந்த நாடகம் பார்வையாளருக்குக் கொண்டு செல்கின்றது.' Island of Short Memoriesல் இறுதியில் சமாதானம் வந்தது' என்று முடிகின்ற நாடகத்தில், போர் முடிந்தபின் வெற்றி பெற்றவரோ அல்லது தோல்வி அடைந்தவரோ இறுதியில் ஓரே நிலைக்கே போய்விடுகின்றனர். அங்கிருந்தே நம்பிக்கைக்கான ஊற்றுக்கள் திறக்கப்படவேண்டும் எனச் சொல்லப்படுகின்றது.
Bourdain பிறகு 10 மணித்தியாலப் பயணத்தில் யாழ்ப்பாணம் போகின்றார். போரின் வடுக்கள் காட்டப்படுகின்றது. துணைகளை இழந்த பெண்களினதும், பெற்றோரை இழந்த பிள்ளைகளினதும் இடத்திற்குப் பயணிக்கின்றார். அவர்களைப் பற்றியும், அவர்களது எதிர்காலம் பற்றியும் கேட்கின்றார். காளி கோயில் ஒன்றின் முன் சாப்பிட்டுக்கொண்டு காளியின் அர்த்தம் குறித்தும், கோயிலில் எடுக்கப்படும் தூக்குக்காவடி, பறவைக்காவடி, அதற்கு இசைக்கப்படும் இசை பற்றியெல்லாம் விபரங்களையெல்லாம் நம்மோடு பகிர்கிறார். கொடும் போரின் பாதிப்புக்களோடு வந்த மக்கள் இன்னும் தமது கலாசாரத்தை விட்டுக்கொடுக்காது, தமது இழப்பின் வலிகளை இங்கே ஆற்றிக்கொள்கின்றனர் எனவும் அவரும் அங்கே சொல்லப்படுகின்றது.
ஒரு வைத்தியரின் வீட்டில் யாழ்ப்பாணத்தின் அடையாளமான நண்டுக்கறி செய்வது விபரமாகக் காட்டப்படுகின்றது. Bourdain போகும் ஒவ்வொரு இடத்திலும் இந்த போரில்லாக் காலம் எப்படி இருக்கின்றது எனக் கேட்கின்றார். யாழில் ஒலிக்கும் ஒவ்வொரு குரலும், சமாதானம் பிடித்திருக்கின்றது, ஆனால் நீண்டதூரம் போகவேண்டியிருக்கிறதென்றும், 30 ஆண்டுகால போரை நிகழ்த்திய அரசை அவ்வளவு எளிதில் மக்கள் மறக்கவோ, அதில் எளிதில் நம்பிக்கைகொள்ளவோ மாட்டார்கள் எனச் சொல்கின்றார்கள். பின்னர் அவர் குருநகர்(?) கடற்கரையில் மீன் விற்கும் இடத்திற்குச் சென்று அங்கே மாலையில் மீனை கிறில் செய்து பிறரோடு சாப்பிடுகின்றார். மீனவர்கள் போர்க்காலத்தில் பட்ட கஷ்டங்களும் உணவோடு பேசப்படுகின்றது.
இறுதியில் Bourdain அமெரிக்க மக்கள் இலங்கையைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? என்று ஒரு காரணத்தைக் கூறும்படி சிங்கள் நாடக இயக்குநரிடம் கேட்கின்றார். அந்த பெண்ணோ, ஏன் அமெரிக்க மக்கள் இலங்கையைப் பற்றி கவலைப்படவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இலங்கையராகிய நாம் இலங்கையைப் பற்றிக் கவலைப்படவேண்டும். அதுவே எனக்கு முக்கியம் என்கின்றார்.
Bourdain மிகப் பிரபல்யம் வாய்ந்த ஒருவர். இறுதியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த பிரான்சில் Bourdain தற்கொலையை நாடியிருக்கின்றார். பிரபல்யத்திற்கும், புகழுக்கும், தனி மனித அல்லாடல்களுக்கும் இடையில் எவ்விதத் தொடர்புகளுமில்லை என்பதும், நமக்கருகில் இருக்கும் அரிய மனிதர்களைக் கூட நொடிப்பொழுதில் நாம் தொலைத்துவிடக்கூடுமென்பதற்கு Bourdain ஓர் உதாரணம்.

(Jun 11, 2018)

நான்குமணிப்பூ குறிப்புகள்

Saturday, December 01, 2018


ஸ்.பொ (மற்றும் இந்திரா பார்த்தசாரதி) தொகுத்த பனியும் பனையும் தொகுப்பு வந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆகப்போகின்றன. ஐரோப்பா (20), ஆஸ்திரேலியா (9), வட அமெரிக்கா (10) கதைகளென 39 எழுத்தாளர்களின் சிறுகதைகள் இதில் இருக்கின்றன. சிலவேளைகளில் எஸ்.பொவின் 'தமிழ் ஊழியம்' என்பது வியக்க வைக்கக் கூடியது. தனி மனிதராக (மு.தளையசிங்கமும் அப்படிப்பட்ட ஒருவர், எனினும் இளமையில் காலமாகிவிட்டார்) எவ்வித எதிர்பார்ப்புக்களுமில்லாது, படைப்பு மனத்தையும் கைவிடாது தனது இறுதிக்காலம் வரை இயங்கிக்கொண்டிருந்தவர்.

தொடர்ச்சியாக இவ்வாறான தொகுப்புக்களை வெளியிடுவது எஸ்.பொவின் விருப்புக்களில் ஒன்றாக இருந்திருக்கின்றது என்பதை இந்தத் தொகுப்பிற்கான அவரின் முன்னீட்டில் வாசித்தறிந்து கொள்ளலாம். தொகுப்பின் முடிவில் கூட அடுத்த தொகுப்பிற்கான பெயரான 'வேரும் வாழ்வும்' என்று ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார் என்பது தெரிகிறது. மேலும் தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்துகொண்டு தனது கதை எதையும் இதில் சேர்க்காதது எஸ்.பொவிற்குரிய 'புகழ் தேடி' அலையாத முகத்திற்குரிய இன்னோர் அடையாளம்.

இத்தொகுப்பு வெளிவந்து கிட்டத்தட்ட அடுத்து இரண்டு புதிய தலைமுறைகளும் வந்துவிட்டபின்னர், இதைப்போல இன்னொரு தொகுப்பை யாரேனும் இப்போது வெளியிட்டால் கடந்த 25 வருடங்களில் புலம்பெயர் சூழலில் நிகழ்ந்த மாற்றங்களைப் பார்ப்பதற்குச் சுவாரசியமாக இருக்கும். இன்னொருவகையில் புலம்பெயர் சூழல் தேங்கிவிட்டதா அல்லது தொடர்ந்து நகர்ந்துகொண்டிருக்கின்றதா என நம்மை நாமே மறுபரிசீலனை செய்யவும் உதவக்கூடும்.ண்மைக்காலத்தில் தமிழ்ப்படங்கள் அருமையாக வரத்தொடங்கியிருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சிமலை, பரியேறும்பெருமாள், 96, ரூபா,வடசென்னை, (அடுத்து) சூப்பர் டீலக்ஸ் என வெவ்வேறு பின்னணியில் படங்கள் வருவதைப் பார்க்கும்போது தமிழ் இலக்கிய உலகம் மட்டும் ஈயோட்டிக்கொண்டிருப்பது தெரிகிறது. சென்னைப் புத்தகக்கண்காட்சியை ஒட்டி மார்கழி, தைமாதத்தில் மட்டும் திடீரென்று உயிர்பெற்று ஏதோ எல்லோரும் எழுதுகின்றார்கள்/வாசிக்கின்றார்கள் போல ஒரு பிரமையைக் காட்டத்தான் நாம் எல்லாம் 'லாயக்கு'ப்போல. கடந்த 2 வருடத்தில் சட்டென்று மனதைப் பாதித்த புனைவு/அபுனைவுகளை எவ்வளவு துழாவியும் கிடைக்கவில்லை என்பது எவ்வளவு துயரமானது.

இது போதாதென்று நாவல்கள் எழுதுகின்றோமென்று நூற்றுக்கணக்கான பக்கங்களில் எழுதி வேறு எங்கள் பொறுமையைப் பலர் சோதிக்கின்றார்கள். உரையாடல் மூலம் நூறுபக்கங்கள் எழுதுவதை பத்து பக்கங்களில் எப்படிச் சுருக்கியெழுதுவது என்று அறிய, இவர்களை திரும்பவும் பத்தாம் வகுப்புத் தமிழ்ப்பரீட்சை எடுக்க முதலில் அனுப்பவேண்டும். 70களில் எழுதப்பட்ட சிங்கள நாவலான 'அம்பரய' ஒரு இலட்சியவாத நாவலென்றாலும், அது கட்டியெழுப்பும் கிராமத்தையும், அந்த சுமனே பாத்திரத்தையும் நூற்றைம்பது பக்கங்களுக்குள் நம் மனதை உழும்படியாக அதில் எழுதமுடியுமென்றால் ஏன் நம்மால் 500-600 பக்கங்கள் எழுதியும் எதையும் சாதிக்கமுடியவில்லை என்று யோசிக்கவேண்டும்.

நல்ல தமிழ்ப்படங்கள் அண்மையில் வந்துகொண்டிருப்பதற்கும், வரவேற்பைப் பெற்றுக்கொண்டிருப்பதற்கும் பெரும் நடிகர்களின் படங்கள் அதிகம் வராமல் இருப்பதும் அல்லது அவர்களின் படங்களின் தோற்றுக்கொண்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்கும் என நினைக்கின்றேன். அதுபோல இலக்கியம் சார்ந்தும் இந்த 'ஆளுமையான' எழுத்தாளர்களை ஒதுக்கிவைத்துவிட்டு, புதியவர்களுக்கு வழிதிறப்பதும், நல்ல எடிட்டர்களாய் இருந்து நாமே எழுதியதைத் திருப்பத் திருப்பத் திருத்தி எழுதுவதும் அவசியம் போலத் தோன்றுகிறது.சாரு நிவேதிதாவின் 'தேகம்' வாசித்தபோது, நானும் நாவல் எழுதலாம் என்றொரு நம்பிக்கை வந்தது. இப்போது ஆவலுடன் வாசிக்கத் தொடங்கிய எஸ்.ராமகிருஷ்ணனின் 'பதின்', ஏற்கனவே எழுதி வைத்திருக்கும் நாவலை பிரசுரிக்கலாமா என்கின்ற என் அச்சத்தையும் விலக்கி விட்டிருக்கின்றது. அந்தளவிற்கு இந்த இரண்டு நாவல்களுக்கும் நான் நன்றிப்பட்டவன்
.
'குட்டி இளவரசன்' என்கின்ற குழந்தைகளுக்காய் எழுதப்பட்டதாயினும் எல்லோரும் வாசிக்கக்கூடிய நாவல் நம்முன்னே இருக்கின்றது. அதுபோல ஆங்கிலத்தில் Young Adults என்றொரு வகை இருக்கின்றது. இல்லை வளரிளம்பருவக் கதையைத்தான் சொல்லப்போகின்றோம் என்றால், Catcher in the Rye, Lord of the Flies, To Kill a Mockingbirdல் இருந்து, அண்மைக்கால 'வெலிங்டன்' வரை நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் பதின் இவை எதுவாகவும் ஆகாதது மட்டுமில்லை, வாசிக்கவே அலுப்பான நாவலாக இருப்பதுதான் அவலமானது.

மேலும் குழந்தை/பதின்மன்களின் கதைகளின் தொகுப்பு என்று சொல்லிவிட்டு அம்மாவைப் பற்றி முடியும் எல்லா வாக்கியங்களிலும் 'சொன்னாள்', 'இருந்தாள்' என்று பூர்த்திசெய்வதும், கிழவிகள் என்று எழுதும்போதெல்லாம், அங்கே ஒரு மழலைப் பாத்திரம் இருப்பதில்லை வழமையான எஸ்.ராதான் வாக்கியங்களின் பின் சிரித்துக்கொண்டு நிற்கின்றார் என்பது எவ்வளவு அபத்தம்.

எப்போதும் நான் தனவிக்கொண்டிருக்கும் ஜெயமோகன் எழுதிய நாவல்களில் முக்கால்வாசியைத்தான் நான் இதுவரை வாசித்திருக்கின்றேன் ஆனால் எஸ்.ராவினதும், சாரு நிவேதிதாவினதும் அனைத்து நாவல்களையும் இதுவரை தொடர்ந்து வாசித்து வந்திருக்கின்றேன் என்பது ஒருவகையில் அதிசயந்தான். இனி எஸ்.ராவும், சாருவும் எழுதும் நாவல்களை வாசிப்பதைக் கைவிட்டு ஜெயமோகனின் மகாபாரதம் தொடரை வாசிக்கும் காலம் வந்துவிடும் போலத்தான் தோன்றுகின்றது.

'பதின்' வாசித்த சோகத்தை, 'அப்பாவின் துப்பாக்கி' நாவலை வாசித்து பிறகு ஆற்றிக்கொண்டேன். குர்திஷ்காரர்களைப் பற்றிய அவ்வளவு சுவாரசியமான நாவல் அது.

இளையராஜா இசைக்கச்சேரி

Friday, November 30, 2018

Surgeryற்குப் பின், அவ்வப்போது வைத்தியரைப் பார்த்து மூக்கு என்ன நிலையில் இருக்கின்றது என்று சோதித்ததை  விட இந்த 2 வாரங்களில் வெளியே எங்கும் போக இல்லை. இப்படி வீட்டிற்குள் முடங்கிக்கிடந்த என்னைப் பார்த்த நண்பர் , ஒன்று மூக்கை உறிஞ்சுக்கொண்டிருக்கின்றாய் அல்லது முகப்புத்தகத்திற்குள் ஏதேனும் சர்ச்சைகள் வருகின்றவனா என மூக்கை நுழைத்துக்கொண்டிருக்கின்றாய், ஏதேனும் உருப்படியாய் செய்யக்கூடாதா என்றார்.

ஏன் நினைத்த நேரத்திற்கு நித்திரை நன்கு   கொள்கின்றேனே, அது உருப்படியான ஒரு செயல்தானே என்றேன். அவர் முறைத்துவிட்டு, இளையராஜாவின் இசை நிகழ்ச்சியிற்குப் போவாமா என்று இன்று மாலை கேட்டார். நிகழ்ச்சி நடப்பதற்கு மூன்று மணித்தியாலங்களுக்கு முன் கேட்டால், என்ன செய்வதென முதலில் திகைப்புத்தான் வந்தது.

நான் மாயா(M.I.A) , ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோரின் அதிதீவிர இரசிகனே தவிர இளையராஜாவின் இரசிகனல்ல. இவர்கள் இருவரினதும் live concert களை ஏற்கனவே பார்த்துமிருந்தேன்.   'ஏ.ஆர்.ஆர் இரவில் இசையமைப்பார், ஆனால் ராஜா இரவிற்கென இசையமைப்பார்' என சந்தோஷ் நாராயணன் போன்று இசையைப் பற்றி மனோரதியமாய் நான் எழுதுபவனுமனல்ல. அப்போது கூட, 'ஏ.ஆர்.ஆர் இரவில் இசையமைத்தாலும் (அவர் என்னைப்போன்றவர்க்கு) அலுப்பில்லாது 24 மணி நேரமும் துணையிருப்பவர்' என்றுதான் எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

என்னுடைய காலத்துப் பலர் ராஜாவின் இரசிகர்களாக இருந்தாலும், நான் ஏ.ஆர்.ஆரின் இரசிகன். எப்படி ராஜாவின் தீவிர இரசிகர்கள் ராஜாவை விட்டு நீங்கமாட்டாது அடம்பிடிப்பார்களோ, அப்படி ஏ.ஆர்.ஆரின் திறமையும் ஒருபக்கம்  சேடமிழுத்தாலும், நான்  ஏ.ஆர்.ஆரின் இரசிகனே இப்போதும்.

இப்படி ஏ.ஆர்.ஆரை 'வழிபடும்' ஒருவன், ராஜாவின் நிகழ்ச்சியிற்குப் போவதென்பதற்கு இரண்டு காரணம். ஒன்று இனிவரும் காலங்களில் ராஜாவின் இப்படியான இசைநிகழ்ச்சியைப் பார்ப்பது அவ்வளவு அரிதான ஒரு சந்தர்ப்பமாக இருக்கும், ஆகவே நம்மிடையே இருக்கும் அதிசிறந்த கலைஞரான அவரை ஒருமுறையேனும் நேரில் பார்க்க வேண்டும்.  இரண்டாவது அவருக்கென வூடாபெஸ்டிலிருந்து பின்னணி இசைக்க வந்த கலைஞர்கள்.

ராஜா கடந்தமுறை இங்கே இசை நிகழ்ச்சி செய்தபோது செய்த சில சிறுபிள்ளைத்தனங்களை ஏற்கனவே அறிந்திருந்தேன். அது அநேக கலைஞர்களுக்கும் இருக்கும் ஒருவகையான 'கிறுக்குத்தனம்' என்பதாகவும் புரிந்துவைத்திருந்தேன்.

ஆக, அதிகம் எதிர்பார்க்காது போனதால் நிகழ்ச்சி என்னைப் பொறுத்தவரை நிறைவாக இருந்தது. இந்த நிகழ்வில் ராஜா பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. அவரில்லாமலே இந்த நிகழ்ச்சியைச் செய்து முடித்திருக்கமுடியும். அவர் பாடிய 3-4 பாடல்களில், 2 பாட்டை அவராலேயே ஒழுங்காகப் பாடமுடியாதிருந்தது. பெருந்தன்மையாக ஒன்றுக்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். குறைகள் இருப்பதுதானே எல்லாவற்றிற்கும் அழகு. நிறைவின்மையின் வனப்பு அவ்வாறான குறைகளில்லவா ஒளிர்ந்துகொண்டிருக்கும்.

எனக்கு இந்த நிகழ்ச்சியில் ராஜாவைப் பார்த்தபோது, அவர் செய்த சாதனைகளை கடந்தகாலத்தில் போய் ஒருவர் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல, தனது இசையின் நுட்பங்களை ஒருமுறை மீள ஆறுதலாக நின்று இரசிப்பவர் போலத்தான் தோன்றியது. அது ராஜாவின் பலவீனமல்ல. தனது காலம் கடந்துகொண்டுவிட்டதை ஏற்று, அதை இரசிக்கும் சாதித்த ஒருவரின் பயணம் எனலாம்.

ராஜாவை மட்டுமில்லை, ஏ.ஆர்.ஆரையும் கூடக் கடந்து ஒரு தலைமுறை தமிழில் வந்துவிட்டது. நம் ஒவ்வொருவருக்கும் வயதாகிக்கொண்டிருப்பதைக் கூட இப்படி நமது காலத்து இசை/இலக்கியம்/கலை ஆளுமைகளினூடாகக் கண்டும் கொள்ளலாம். ஒருவகையில் அவர்களை அங்கீகரிப்பது, நமது வாழ்வின் இலைகள் நிறமாறவும், பழுக்கத் தொடங்குவதையும் அனுமதிப்பது என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.

நிகழ்வில், ராஜா காரணமேயில்லாமல் எல்லோரும் சத்தம் போடாது கேட்கவேண்டும் ஒரு ஆசிரியரைப் போல வெருட்டினார். இடையில் தான் மிகக் கஷ்டப்பட்டு இங்கே இசை நிகழ்ச்சி தர வந்திருக்கின்றேன் என்றும் சொன்னார். அதைவிட என்னுடைய பாட்டுக்கள் இல்லாது உங்களால் உயிர்வாழமுடியுமா கண்ணா எனவும் சிலாகித்தார். நிகழ்ச்சி முடிய இரண்டு பாட்டுக்கள் இருக்கும்போதே உரிய முறையில் இரசிகர்களிடமிருந்து விடைபெறாது மேடையிலிருந்து ஒன்றும் சொல்லாமலே இறங்கியும்போனார்.

இவையெல்லாம் ராஜாவின் தீவிர இரசிகராய் இருக்கும் ஒருவருக்கு பெரிய விடயங்களல்ல. நமது ஜெயமோகனிடம்  கேட்டால் அந்தக் கர்வந்தான் ஒருவரைக் கலைஞராக்கின்றது என்பார். எனக்கும் ராஜாவின் இசைக்கு அப்பாலான கிறுக்குத்தனங்கள் தெரியும் என்பதால் இவை பெரிதாகத் தெரியவில்லை. எனது நண்பருக்குத்தான் ராஜாவின் இந்த attitude பிடிபடவில்லை. புலம்பிக்கொண்டிருந்தார்.

ராஜாவின் ஒரு நிகழ்ச்சியிற்கு மட்டும் வந்து இப்படி குறைகள் சொல்கின்றீர்கள், தினமும் ஜெயமோகனின் வலைத்தளத்தை வாசிக்கும் என்னைப் போன்றவர்களின்  நிலைமைகளையும் தயவு செய்து நீங்கள் யோசித்துப் பார்க்கவேண்டும் என்றேன். அத்தோடு அவர் அமைதியாகிவிட்டார்.

மற்றும்படி மூன்று மணித்தியாலங்களிற்கு மேலாய் நீண்ட இந்த நிகழ்ச்சி எங்கள் இருவருக்கும் பிடித்திருந்தது. ஓர் அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிடாததில் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

(Apr 02, 2018)

ரொறொண்டோவில் தமிழ்ப்புத்தகங்கள் இரவல் பெறுவது பற்றி..

Sunday, November 11, 2018

1.
ரொறொண்டோ மாநகரசபையின் கீழ் 100 நூலகக் கிளைகள் இருக்கின்றன. அதில் 24 கிளைகளில் தமிழ் நூல்களை நாம் நேரடியாகச் சென்று எடுக்கும் வசதி இருக்கின்றன. ரொறொண்டோவில் -ஆங்கிலம்/பிரெஞ்சு தவிர்ந்த- பிறமொழிகளில் சீன மொழிக்கு அடுத்து, தமிழ்ப்புத்தகங்களை நூலகங்களில் வந்து எடுக்கும் தமிழர்களே இருக்கின்றார்கள். தமிழுக்குப் பிறகே இந்தி உள்ளிட்ட ஏனைய மொழிகள் இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.
எனினும் கடந்த நான்கு வருடங்களில் சடுதியாக தமிழ்ப்புத்தகங்களை நூலகத்தில் எடுத்து வாசிப்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 44%மாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது. 2013ல் ரொறொண்டோ நூலகங்களில் இருந்து எடுக்கப்பட்ட புத்தகங்கள் 163, 077 ஆகவும், பின்னர் 2017ல் 102,015 ஆகி வீழ்ச்சியடைந்திருக்கின்றது.
இன்றைய கூட்டத்தில் இதற்கான காரணங்கள் என்ன, எப்படி இதை மாற்றமுடியும் என்பது பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டிருந்தது. நான் இந்தக்கூட்டத்திற்குப் போனபோது 2 கேள்விகள் கட்டாயம் கேட்கவேண்டும் என்றே போயிருந்தேன். அதே வேண்டுகோளை வந்திருந்த பிறரும் கூறியதால் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
(1) ஈழத் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் ரொறொண்டோவில் இலங்கைப் புத்தகங்கள் அரிதாகவே வாசிக்க நூலகத்தில் கிடைக்கின்றது.
(2) புலம்பெயர்ந்து எழுதும் எழுத்தாளர்களின் படைப்புக்களும் குறைவாகவே காணக்கிடைக்கின்றன (ரொறொண்டோவில் கிட்டத்தட்ட ஒவ்வொருமாதமும் ஏதோ ஒரு தமிழ்ப்புத்தகம் வெளியிடப்படுகின்றது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்).
குறைகேள் நிகழ்வில், வாசிப்பு 44% குறைந்ததற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. அடுத்தடுத்த தலைமுறைகள் தமிழ்ப்புத்தகங்களை வாசிப்பது குறைவு என்பது ஒரு காரணம் என்றாலும், இப்போது அதிக தமிழர்கள் ரொறொண்டோவைத்தாண்டி (ரொறொண்டோவில் வீட்டுவிலை அதிகரிப்பால்) புறநகருக்கு வாழச்சென்றுகொண்டிருப்பதாலும் இந்த வீழ்ச்சி நடந்திருக்கலாம் என்று இலங்கதாஸ் கூறியது கவனிக்கத்தக்கது.
மற்றொரு முக்கிய காரணம் நூலகத்திற்கான புத்தகங்களை எப்படித் தெரிவு செய்கின்றார்கள் என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், கடந்த சில வருடங்களாக ஒரு குறிப்பிட்ட பதிப்பாளர்களின் புத்தகங்களை மட்டுமே இங்கே பார்க்க முடிகிறது என்பதையும் சொல்லியாகவேண்டும். உண்மையில் நூல்களைத் தெரிவு செய்யும் முறையானது இன்னும் சனநாயகத்தன்மையுடன் பல்வேறுவகையான வாசிப்பு நிலைகளைக் கொண்டவர்களின் ஒரு குழுவாக இருக்கவேண்டும் என்பதையும் நாம் பரிந்துரைக்கவேண்டும்.
ரொறொண்டோ நூலகத்தில் வேலை செய்பவர்களும், அதற்கு வெளியே இருக்கும் சிலரும் சேர்ந்தே இந்த நூல்களை வாங்கிக் கொள்கின்றனர். சிக்கல் என்னவென்றால் இன்றைய கூட்டத்திற்கு நூல்களை வாங்கிக்கொடுப்போர் எவருமே வரவில்லை என்பதேயாகும். நான்கு வருடங்களுக்கு முன் கிட்டத்தட்ட ஒரு லட்சம் டொலர்கள் தமிழ் நூல்கள் வாங்க நூலகத்தால் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்றறிந்தபோது வியப்பாக இருந்தது. ஆனால் நமக்குக் கிடைக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை/தரம் போன்றவற்றைப் பார்க்கும்போது அந்த நிதி உரியமுறையில் செலவு செய்யப்படவில்லை என்பதில் ஏமாற்றமாகவே இருக்கின்றது.
எத்தனையோ ஆண்டுகள் ஆனபின்னும், தமிழ் நூல்களை வாங்கி நூலகத்தில் சேர்ப்போர் இற்றைவரை பொதுவெளிக்கு -புலம்பெயர்ந்து புத்தகங்களை வெளியிடும் எம்மிடம்- இன்னும் வரவில்லை என்பது ஒருபுறம் இருக்க, இத்தனை ஆண்டுகளானபின்னும் (முன்னராவது போர் இலங்கையில் நடந்தது என்ற ஒரு காரணம் இருந்தது) இலங்கையில் இருக்கும் வெளியீட்டாளர்களுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்தாமல் இருப்பதை அவ்வளவு எளிதில் கடந்து செல்லமுடியாது.
இலங்கையில் இருந்து கவனிக்கத்தக்க படைப்புக்கள் என வைத்துக்கொண்டால் ஒரு நூறு புத்தகங்கள் வருடமொன்றுக்கு வருமென்றால், அதை சற்றுத்தேடி இங்கே நூலகங்களுக்கு எடுப்பதற்கு இவர்களுக்கு ஏன் ஏலாமல் இருக்கின்றது என்பதும் புரியவில்லை.
ரொறொண்டோ நூலக -தமிழ் தெரியாத- பொறுப்பாளர் ஒருவருடன் தனிப்பட்டு உரையாடியபோது, பல பதிப்பகங்கள் இப்படி நூல்களை வாங்கும்போது, தமது பதிப்புக்களைக் கொடுக்க விரும்பவில்லை எனச் சொன்னார். அப்படி இருக்கமுடியாதென நானும் இன்னொரு நண்பரும் அவருக்குச் சொன்னோம். பதிப்புரிமை சார்ந்து தமது நூல்களைக் கொடுக்க வெகு சில பதிப்பகங்கள் தயங்கி இருக்கலாம். இவ்வாறு ரொறொண்டோ நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொடுக்க மறுத்திருந்தால் யாரேனும் பதிப்பாளர்கள் (இந்திய/இலங்கை) இருந்தால் அறியதரலாம்.
ஏற்கனவே இருக்கும் ஒரு பொறிமுறையை முற்றாக நிராகரித்து, புதிதாக ஒன்றைத் தேடவேண்டும் எனச் சொல்லவில்லை. இருக்கும் பொறிமுறையை இன்னும் செப்பனிடுவதற்கான புதிய அடிகளை ரொறொண்டோ நூலக தமிழ்ப்புத்தகத்தேர்வில் நாங்கள் எடுத்துவைக்க வேண்டியிருக்கின்றது என்பதாலே இதை எழுதுகின்றேன். 2.
நாங்கள் எடுக்கும் புத்தகங்களின் எண்ணிக்கையை வைத்தே ஒவ்வொரு மொழிக்கும் ஒதுக்கும் நிதி ரொறொண்டோவில் இருக்கின்றது. ஆங்கிலம்/பிரெஞ்சு தவிர்ந்து கிட்டத்தட்ட 40 மொழிகளில் நூல்களை இங்கே நூலகங்களுக்கு எடுக்கின்றார்கள் என்பதால், அவர்களின் வேலையின் கடினத்தையும் ஒருவகையில் புரிந்துகொள்ளமுடிகின்றது.
இயன்றளவு தமிழ் நூல்களை நூலகத்தில் எடுப்பதற்கு நாமெல்லாம் முயற்சிக்கவேண்டும். நானெல்லாம் சாதாரணமாக நூலகத்திற்குப் போனாலே ஏதேனும் ஒன்றிரண்டு தமிழ்ப் புத்தகங்களை கூடவே எடுத்து வருகின்றவன். அத்தோடு மூன்றுவாரத்தில் வாசித்து முடிக்கின்றேனோ இல்லையோ எனக்குப் பிடித்த தமிழ்ப் புத்தகங்கள் இருந்தால் பத்து/பதினைந்து என அள்ளிக்கொண்டு வருகின்றவன். அப்படி எடுக்கையில் ஒருநாள் தவணை பிந்தினால் நிறையப் பணத்தை அபராதமாகச் செலுத்தவேண்டி பலமுறை வந்திருப்பினும், புத்தகங்களுக்கும்/பொதுப்பாவனைக்கும் போகும் பணம் ஒருபோதும் வீணாகாது என்பதால் அது குறித்து ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. அண்மையில் 'அந்நியனை'ப் பார்த்து எடுத்துவந்து எங்கையோ தவறவிட்டதால் 25டொலர்கள் தண்டப்பணமும் கட்டியிருக்கின்றேன்.
எமது பிற நண்பர்களையும் நிறையப் புத்தகங்களை எடுக்க வைக்க முயற்சிக்கலாம். மேலும் உங்களுக்கு அருகில் இருக்கும் நூலகத்தில் (24 கிளைகளில் மட்டும் தமிழ்ப்புத்தகங்கள் இருக்கின்றன) தமிழ்ப்புத்தகங்கள் இல்லையென்றாலும், நீங்கள் இணையத்தில்/நேரில் ஓடர் கொடுத்தால் வேறு கிளைகளிலிருந்தாலும் அந்தப் புத்தகங்களை உங்கள் கிளையில் கொண்டுவந்து தருவார்கள். அப்படியும் தமிழ்ப் புத்தகங்களை எளிதாக இரவல் பெறலாம்.
மற்றது முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களில் மட்டும் எழுதுவதோடு நின்றுவிடாது இவ்வாறான பொதுமக்களுக்கான கருத்துக்கேட்டறிதல் நிகழ்ச்சிகளிலும் பெருமளவு கலந்துகொண்டு நமது எண்ணங்களை அவர்களின் செவிகளுக்குக் கொண்டு செல்லலாம். ஏனெனில் எழுதுபவர்கள்/வாசிப்பவர்கள் என்று எனக்குத் தெரிந்த நண்பர்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே இன்றைய கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தார்கள் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
(Oct 16, 2018)

ஞாயிறு குறிப்புகள் - 02

Saturday, November 10, 2018

1.
அண்மையில் வாங்கியிருந்த மெளனியின் முழுத்தொகுப்பைக் கையில் வைத்து நீண்டநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். 24 கதைகளை மட்டுமே எழுதிய ஒருவர் எழுத்தால் இன்னும் உயிர்வாழ்ந்துகொண்டிருப்பது ஒருவகையில் அதிசயம் போலத் தோன்றியது. எழுதிய 24 கதைகளில் அரைவாசியளவுக்கு, சாதாரண கதைகளாக உதிர்ந்துபோக சாத்தியமிருப்பினும் மெளனி இன்றும் நம்மிடையே பேசப்பட்டுக்கொண்டே இருக்கின்றார் என்பதே சிறப்பு.

1936ல் முதல் கதையிலிருந்து ஆறுகதைகள் வரை அந்த ஆண்டிலேயே மணிக்கொடி இதழில் பிரசுரமாயிற்று. அவரது தொடக்கக் கதைகளான 'ஏன்?', 'சுந்தரி', 'காதல் சாலை', 'கொஞ்சத் தூரம்' என்பவற்றை நல்ல கதைகளாக எழுதுவதற்கான முயற்சியென எடுத்துக்கொண்டால், 'குடும்பத் தேர்' நல்ல கதையாகி, 'பிரபஞ்ச கானம்' சிறந்த கலைப்படைப்பாக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. 'பிரபஞ்ச கானம்' கதையைப் பற்றிப் பலர் விரிவாகப் பேசிவிட்டாலும், பிரமிளைப் போல சிலாகித்துப் பேசியவர் எவருமில்லை என்பதே என் துணிபு.

பெரும்பாலான இந்தக்கதைகளில் வரும் முக்கியபாத்திரம் தனக்குள்ளே ஒரு 'ஏன்'ஐ வைத்தபடி அலைந்தபடி இருக்கின்றது. சில கதைகளில் அந்த ஏன்களுக்கு ஒரு விடையைக் கண்டுபிடித்து அமைதிகொள்கின்றது. சிலதில் அந்த ஏன்கள் இன்னும் நிறைய ஏன்களை பெருக்கியபடியும் இருக்கின்றது. 'குடும்பத்தேர்' கதையில் ஒரு மகனுக்கும் தாயுக்குமான உறவு பற்றிப்பேசப்படுகின்றது. இளவயதில் மட்டும் அல்ல, முதியவயதிலும் தாய் ஒரு வழிகாட்டியாக இருப்பதை மகன் பாத்திரம் தெளிவாக உணர்ந்துகொள்கின்றது. தன்னை வெளியுலகம் திறமையுள்ள மனிதன் எனப் பாராட்டுவதெல்லாம் தன் தாயினால் தனக்குக் கிடைக்கும் அணுசரனையால் என்பதைத் தெளிவாகவே மகன் பாத்திரத்திற்கு விளங்குகின்றது.

முதிய வயதில் தாய் இறக்கும்போது அவரின் இழப்பு மகனில் பெரும் வெற்றிடத்தை உருவாக்குவதோடு, தன்னால் எதையும் தாயில்லாது தனித்துச் செய்யமுடியாது என்று பதற்றமும் கொள்ளச் செய்கின்றது.  இவ்வாறு பல்வேறு வகைகளில் குழப்பித் தவிப்பினும் இறுதியில் 'குடும்பம் ஒரு விசித்திர யந்திரம் - பழுதுபட்ட ஒரு பாகத்தினால் அது நிற்பதில்லை. அதற்குப் பிரதி மறுபாகம் தானாகவே உண்டாகிவிடும்.. என எண்ணிக்கொள்கின்றது.  குடும்பம் என்றில்லை, உறவுகள், வேலை என இன்னபலவும் இவ்வாறே ஏதோ ஒருவரால்/ஒன்றால் பிரதிசெய்யப்பட்டுவிடுகின்றது. ஆனால் மனித மனங்கள்தான் இதெல்லாம் இயல்பு என ஏற்றுக்கொள்ளத் தயக்கங்கொள்கின்றன.

இவ்வாறு ஒன்றை ஏதோ இன்னொன்று பிரதிசெய்துவிடும் என்கின்ற மெளனியின் சொற்களை, அவரின் படைப்புக்களை வேறொன்று இன்னும் பிரதிசெய்துவிடாதிருப்பதுடன், அவர் பின்பற்றிய சனாதன வாழ்க்கை முறையைத்தாண்டியும் அவர் படைப்புக்கள் இப்போதும் விகசித்துக்கொண்டிருப்பதுதான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று.

2.

சென்றவாரம் நானும், நண்பரொருவரும் ஒரு நிகழ்வுக்குச் சென்று கொண்டிருந்தோம். நிகழ்ச்சி நடத்துபவர்கள் பற்றிய பெரும் அபிப்பிராயம் இல்லையெனினும், அதில் பங்குபெறும் -தெரிந்த- நண்பருக்குத் தார்மீக ஆதரவு கொடுக்கவேண்டுமென வெளிக்கிட்டிருந்தோம். இவ்வளவு தூரம் போய் நிகழ்ச்சியைப் பார்த்து மனது சோர்வடைந்தால் என்ன செய்வதென, லிங்கன் ஜஸ்கிறிம் பாருக்குக் காரைத் திருப்பியிருந்தோம். இடையில் இன்னொரு நண்பரையும் ஏற்றிவிட்டிருந்தோம்.

இரண்டு வருடங்களுக்கு முன், அடிக்கடி கோடைகாலத்தில் ஐந்தாறு கிலோமீற்றர்களுக்கென நடையுலா போவோம். ஒழுங்காய் வியர்த்து விறுவிறுக்க நடக்கின்றோமோ இல்லையோ நடைப்பவனி முடிந்தவுடன் லிங்கன் ஜஸ்கிறிம் உறுதி என்பது மட்டும் எனக்கு நன்கு தெரியும். அவ்வப்போது நடைக்கு புறமுதுகுகாட்டித் தப்பிக்கும் என்னை, உன்னையெல்லாம், ஊறப்போட்ட அரிசியோடு ஒரு கிழமைக்கு பங்கருக்குள் போட்டு மூடி புளொட்டில் கொமண்டோ ரெயினிங் கொடுப்பது போன்றுதான் தண்டனை தந்து திருத்தி எடுக்கவேண்டும் என்று வேறு, என் நண்பர் பயமுறுத்துவார்.

இப்போதெல்லாம் நாமெல்லோரும் நடப்பதற்கே நேரமில்லாது அலைந்தபடி இருக்கின்றோம் என ஐஸ்கிறிமைச் சுவைத், கதைத்தபடி இருந்தபோதுதான், மேற்குத் தொடர்ச்சிமலை படத்தை எல்லோருமாய்ச் சேர்ந்து வீட்டில்போய்ப் பார்ப்போமா என ஒரு எண்ணம் வந்தது. என் தலைமுறைக்கு மட்டுமில்லை இங்கே பிறந்த தலைமுறையும் கலையின் நுட்பத்தை அறிந்துகொள்ளக்கூடாது எனக் கங்கணம் கட்டியதுமாதிரி, இங்கே தியேட்டர்களில் மேற்குத் தொடர்ச்சி மலையையோ, பரியேறும் பெருமாளையோ திரையிடமாட்டார்கள். ஆக மேற்குத் தொடர்ச்சிமலையை வீட்டில் இருந்தே பார்த்தோம்.

மேற்குத்தொடர்ச்சி மலை பார்க்கும்போது, இரண்டு விடயங்கள் மனதில் ஓடியபடி இருந்தன. இவ்வாறு ஒரு கடூழியமான வாழ்க்கை முறை தரப்படாததால் நாங்கள் பாக்கியசாலிகளா அல்லது  இப்படி இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழமுடியாது சபிக்கப்பட்டவர்களா நாங்கள் என்பதைப் பற்றியது.

நவீனத்துவகால வளர்ச்சி பற்றி விதந்துரைப்பவர்கள் கவனிக்கத் தவறுவது, உண்மையில் இந்த 'வளர்ச்சி'யானது கஷ்டப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை இன்னும் உயர்த்தியிருக்கின்றதா அல்லது இல்லையா என்பதைப் பற்றியாகும். ஏற்கனவே இருந்த வாழ்க்கையைவிட இன்னும் சிக்கலான, புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கையைத்தான் வளர்ச்சி கொடுக்குமென்றால் நாங்கள் நிறையவே யோசிக்கவேண்டும் எனத் தூண்டுவதையும் மேற்குத்தொடர்ச்சிமலை செய்கின்றது.

முழுமையடையாமல் இருப்பதும் கலையின் அழகியல் என நம்புகின்றவன் நான் என்பதால் இப்படத்தில் இருக்கும் தளம்பல்களை இப்போதைக்கு விட்டுவிடலாம். எனினும் இவ்வளவு அன்பாக இருக்கும் மனிதர்கள், பிறரைக் கொலை செய்யவும் போவார்களா என மனம் ஏற்றுக்கொள்ளத்தயங்கியதையும் குறிப்பிடவேண்டும். ஆகக் குறைந்தது திரைக்கதையில் அதற்கான வலுவான பின்னணியை இழைத்திருக்கலாம் என யோசித்தேன். எனினும் அறம், மேற்குத்தொடர்ச்சி மலை என மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து வெளிவருவதும், இவற்றுக்கு தமிழ்ச்சூழல் ஆதரவை மனமுவந்து அளிப்பதும் மகிழ்ச்சி தரக்கூடியவை.

மேலும் இலக்கியம் போலவே சினிமாவையும் ஒற்றை 'அழகியல்' பார்வைக்குள் வலிந்து திணிப்பவர்க்கு மத்தியில், அது மட்டுமல்ல, இப்படி பன்மைத்துவமாக விரிந்து சடைப்பவையும், மக்களின் குரல்களைப் பேசுபவைகளும் கூட கலைகளே என நாம் உதாரணம் காட்டுவதற்கும் இவை நமக்காய் இருப்பதுவும் நிறைவைத்தரக்கூடியது.

3.

ஜி.நாகராஜனின் 'டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழுவேட்டியும் அணிந்த மனிதர்' தொகுப்பை (தொகுத்தவர்: சுரேஷ்குமார இந்திரஜித்) நண்பருக்காய் வாங்கி வந்திருந்தேன். காலச்சுவடு கிளாஸிக்குகளுக்கு அருமையான அட்டைகளை வடிவமைப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டும். இப்போது பெருமாள் முருகனின் நாவல்கள் எல்லாம் ஆங்கிலம்/ஜேர்மனில் மொழியாக்கம் செய்யும்போது, அடுத்து வரும் என் தொகுப்பை அவர்களினூடு போட்டால் ஊர் உலகத்தைச் சுற்றிப்பார்க்க ஒரு வழியுண்டாகுமோ என ஒரு 'நப்பாசை'யும் எனக்குள் இப்போது வருகின்றது.

'டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழுவேட்டியும் அணிந்த மனிதர்'  தொகுப்பில் ஒரு கதை 'நான் புரிந்த நற்செயல்கள்'. இதில் ஒரு இளைஞன், இரண்டு பிள்ளைகளுடன் இருக்கும் பாலியல் தொழிலாளியை மணந்தபின் நல்ல நிலைக்கு இருவரும் வருவார்கள். அதுபோல கதைசொல்லியுடன் ஆங்கிலத்தில் பேசி உடலையும் பகிரும் பெண், பின்னர் ஒரு எம்.எல்.ஏயினது இரண்டாவது மனைவியாகப் போவார் என்றெல்லாம் ஜி.நாகராஜன் 69லிலேயே இந்த விடயங்களை அலசி ஆராயமலே எளிதாகக் கடந்து போய்  விடுவார்.

ஆனால் எனது கஷ்டகாலம் என்னவெனில் ஜி.நாகராஜனின்ன் காலத்தில் நான் வாழாதது. ஆகவேதான் ஜெயமோகன் எழுதும் 'சேர்ந்து வாழ்பவர்கள்' போன்ற கட்டுரை/கடிதங்களை வாசித்து சுவரோடு முட்டி மோத வேண்டியிருக்கின்றது.

சேர்ந்து வாழ்பவர்க்கும் ஒருவகை அறம் இருக்கின்றது என்பது மட்டுமல்ல, மேலைநாடுகளில் 'சட்டப்பூர்வமாக திருமணம் செய்ததைப் போல' பிரிந்துபோகையிலும் அவர்கள் சட்டபூர்வமாக சொத்துக்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என அது (living together) விரித்துப் பேசக்கூடியது.. சேர்ந்து வாழ்ந்தால் என்ன, சட்டப்படி ஊர்கூடித் திருமணம் செய்தால் என்ன, உறவொன்று பிரிகையில் யாரும் மனது நோகத்தான் செய்வார்கள். அது மனித உணர்வுகளோடு சம்பந்தப்பட்டது. சட்டம்/சட்டமில்லை என்பதற்குள் இந்த மென்னுணர்வுகள் ஒருபோதும் கட்டுப்படுவதுமில்லை.

இதையெல்லாம் விடலாம் பாருங்கள் கடைசிவரியில் என்ன சொல்கிறார்

"சரி, அந்த உடலுறவேதான் எவ்வளவுநாள் சுவாரசியமாக இருக்கும்?"

இப்படி ஒருவர், சேர்ந்து வாழ்வதை உடலுறவுக்காய் மட்டுமென கொடூரமாகச் 'தொகுத்துச் சுருக்கி'ப் பார்க்க முடியுமா என்ன? இஃதென்ன கொடுமை. சட்டப்படி திருமணம் செய்துவிட்டால் மட்டும்  ஜெயமோகனின் பார்வையில் 'அந்த உடலுறவு சாகும்வரை சுவாரசியமாக இருக்கும்' போலும்.

ஜெயமோகனை எதிர்த்துப் பேசினால் கூட இப்போது பா.ஜ.கவை எதிர்த்துப் பேசுவதைப் போலப் பயமாக இருக்கிறது. அழகிய பெரியவன் அவரின் கதை பற்றிச் சொல்லிவிட்டார் என்பதற்காய் அவரை ஒருபக்கம் போட்டுத்தாக்குகிறார். ஜெயமோகனைப் போலவே அழகிய பெரியவனுக்கும் படைப்பில் உயர்வும், வீழ்ச்சியும் இருக்கின்றன. ஒருவர் தன் படைப்பைப் பற்றி விமர்சித்து விட்டாரென்பதற்காய் அவரின் முழுப்படைப்பையும் உதறித்தள்ளுவது ஒரு படைப்பாளிக்கு  அழகும் அல்ல. ஆனால் அதையேதான் ஜெயமோகன் விடாது செய்தும் கொண்டிருப்பார்.

இப்போது 'சேர்ந்துவாழ்தல்' குறித்து அவர் எழுதியது அவ்வளவு அபத்தமாக இருக்கின்றதென என்னைப் போன்ற ஒரு வாசகர் சொன்னால் அவர் கேட்கமாட்டார் என்பது தெளிவு. ஆனால் எந்த விடயமெனினும் சாப்பாட்டு மேஜையில் தன் பிள்ளைகளோடு விவாதிப்பவர் என்கின்ற ஜெயமோகன் அவரின் மகனிடமோ அல்லது மகளிடமோ இதையும் உரையாடியிருந்தால் அவர்கள் இப்படி அவரைப் போல அபத்தமாகச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பது மட்டும் திண்ணம்.


('ஞாயிறு குறிப்பு'களை எழுதச் சொல்லி உற்சாகமூட்டிய ஜெயந்தன் நடராஜனுக்கு, 
 நன்றியுடன் இந்தக் குறிப்புகள்..)

ஞாயிறு குறிப்புகள்

Monday, October 22, 2018

1.

ண்மையில் இந்தியா சென்றபோது கேரளாவே பயணத்தின் இலக்காக இருந்தாலும், திரும்புகையில் சென்னையிலிருந்து விமானம் ஏற விரும்பியதற்கு, புத்தங்களை வாங்கவும், இயன்றால் நண்பர்களைச் சந்திக்கலாம் என்பதாகவுமே இருந்தது. சென்னையில் நின்ற சொற்பநாட்களில், எதிர்பாராத நடந்த நிகழ்வால் எதெதெற்கோ அலையவேண்டியதால், நினைத்தவற்றைச் செய்து முடிக்கவில்லை. பயணங்கள் என்பதே எதிர்பாராத தருணங்களின் கூட்டுருவாக்கந்தானே, ஆகவே அப்படியானதில் பெரிதாக  ஏமாற்றம் எதுவும் இருக்கவில்லை.

ஒரு புத்தகக் கடைக்கு மட்டும் போய் ஆறாயிரம் ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கியதைத் தவிர, நான் விரும்பிய பல புத்தகங்களைத் தேடி வாங்க முடியவில்லை என்கின்ற சிறு துயர் மட்டும் இருந்தது. ஏற்கனவே தமிழ்ச்சூழலில் சிறந்த படைப்புக்கள் என சிலாகிக்கப்பட்ட  சில புத்தங்களை  வாங்கி வந்து வாசித்தபோது பல ஏமாற்றத்தையே தந்திருந்தன.ஒன்று எனக்கு வயதாகி வாசிக்கும் ஆர்வம் இப்போது இல்லாது போயிருக்கவேண்டும். இல்லாவிட்டால் தமிழ்ச்சூழல் துதிகளின் பின்னே மட்டும் வலம் வரத்தொடங்கியிருக்கவேண்டும்.

இன்று தமிழ்ச்சூழலில் பகிடிக்கவிதைகளை எழுதுகின்றார் என்று சிலாகிக்கப்படும் ஒருவரின் அண்மைத் தொகுப்புக்கள் இரண்டையும் வாங்கியிருந்தேன். முகநூலில் இதைவிட நன்றாகவே எழுதுகின்றார்களே, இதிலென்ன இருக்கின்றதென வியப்பதற்கென நினைத்தேன். இன்னொருவரின் தொகுப்பும் அப்படி ஒரு அனுபவத்தைத் தந்திருந்தது. அச்சில் வெளியாகும் அவரின் சிறுகதைகளை நான் விரும்பி அவ்வப்போது வாசிக்கின்றவன். ஆனால் ஒரு தொகுப்பாய் அவரின் கதைகளை வாசிக்கையில் ஜெயமோகனின் பாதிப்பு அப்பட்டமாகத் தெரிந்தபோது சற்று ஏமாற்றமாக இருந்தது.  அதற்காய் இங்கே எனக்குப் பிடிக்காத புத்தகங்களைப் பட்டியலிடப்போவதில்லை. ஆகவே இதைத் தொடர்ந்து பேசாது விடுவோம்.

அவ்வாறே தமிழ்ச்சூழலில் மிகவும் பாராட்டப்பட்ட இன்னொரு தொகுப்பை வாசித்துக்கொண்டிருந்தேன். அந்தத் தொகுப்பு ஓரு நகரத்தில் முக்கிய சம்பவத்தைப் பற்றி பல்வேறு பார்வைகளில் கதைகளைச் சொல்கின்றது. அந்தச் சோகமான சம்பவம் குறித்து நாம் மிகவும் கவலைப்படவும் வெட்கப்படவும் வேண்டுந்தான். ஆனால் ஏற்கனவே விபரமாகப் பேசப்பட்ட சம்பவத்தை புனைவிற்குள் கொண்டுவரும்போது நிகழ்ச்சிகளை அப்படியே பேசுவது மட்டும் என்பது புனைவிற்கு நியாயம் சேர்க்காது. அது அதற்கப்பாலும் விரிந்து சென்று வாசிப்பவரோடு உரையாடவேண்டும்.

இந்தக் குறையோடு, ஏற்கனவே ஒரு தரப்பை எதிர்த்தரப்பாக முன்வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்ததும் அதில் அலுப்பாக இருந்தது. புனைவு அப்படி ஒரு எதிர்த்தரப்பை தெளிவான 'எதிரியாக முன்வைக்கும்போதே' அதிலொரு பிரச்சாரத்தன்மை வந்துவிடுகின்றது. மேலும் ஒரு சம்பவமே பிரதான நிகழ்வென்பதால் தொகுப்பாக வாசிக்கும்போது கூறியது கூறல் மாதிரி பல கதைகளில் ஒரே விடயம் குறிப்பிடப்படுவது மாதிரி இருந்தது (உதாரணத்திற்கு 'கொல்லப்பட்ட பொலிஸ்காரர் உண்மையில் இந்து இல்லை. கிறிஸ்தவர். ஆனால் இந்துத்துவ அமைப்புக்கள் இந்து எனச்சொல்லி கலவரத்துக்கு வித்திட்டன' என்பது மூன்று நான்கு கதைகளிலாவது ஒரேமாதிரி வந்துகொண்டிருந்தது).

அப்படியிருந்தும் நம்பிக்கை இழக்காது தொடர்ந்து கதைகளை வாசித்துக்கொண்டிருந்தேன். ஆச்சரியமாக இந்தத் தொகுப்பை விலகிச் செல்ல முடியாதென்பதற்காய் எனக்கு இறுதிக்கதையான '144' காத்திருந்தது. ஒரேயொரு கதையால் என்னை அ.கரீமின் 'தாழிடப்படாத கதவுகள்' தொகுப்பு பின்னர் பிடித்தமாகிப்போயிருந்தது. ஏன் '144' கதை எனக்குப் பிடித்திருந்தது என்றால், அந்தக் கதை கோவைக் கலவரத்தோடு '144' என்ற பெயரைப் பாவிக்காது எங்கும் பொதுக்கூட்டம் போடமுடியாது என்ற சட்ட உத்தரவை 'துப்பறியும்' ஒரு பத்திரிகையாளனின் பார்வையில் கதையில் சொல்லப்பட்டு, அது இறுதியில் எதிர்பாராத ஒரு கோணத்தில் வந்து நிற்பதால் ஆகும்.

இங்கே கதை, இந்துக்களின் வன்முறையை மட்டுமில்லை, அதற்காய் எதிர் வன்முறையைக் கையாண்ட முஸ்லிம்களால் தன் காதலியையும், தன்னிரு கால்களையும் இழந்த ஒரு அப்பாவியின் கதையைச் சொல்கின்றது. அத்தோடு எப்படி இந்துத்துவ அமைப்புக்கள் தலித்துக்களை தமது வன்முறைக்குப் பாவிக்கின்றார்கள் என்பதையும் கவனப்படுத்தியிருக்கின்றது (குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதலிலும் எப்படி தலித்துக்கள் பகடைக்காய்களாகப் பாவிக்கப்பட்டார்கள் என்பதை நாம் அந்த வன்முறை குறித்த ஆய்வுக்கட்டுரைகளிலிருந்து அறியமுடியும்)

கோவையில் நடந்த வன்முறையில் இந்துத்துவ அமைப்புக்களின் தந்திரங்களை நாம் நன்கறிவோம். ஆனால் புனைவில் அதை செய்தி அறிக்கையாக நாம் எழுதித் தீர்த்துவிடமுடியாது. ஏனெனில் இவ்வாறான 'எரியும் பிரச்சினைகளில்' புனைவு பாதிக்கப்பட்டவருக்குள் ஊடுருவுவதைவிட, பாதிப்பைச் செய்தவர்களிலும் (நடுநிலைப் பூனைகளாக அலைபாய்வர்களிடையேயும்) சென்று அவர்களைக் குற்ற மனதுடையவராக உணரச்செய்வதிலுமே அதிகம் மினக்கெடவேண்டும் என நினைப்பவன் நான்.

மிகுதி அநேக கதைகளிலும் இந்துத்துவக் கும்பல்களை எதிர்த்தரப்பாக வைத்து ஒருவகை பிரச்சார நெடியில் சொல்லப்பட்டதைவிட, கரீம் இதில் மனித மனங்களுக்குள் இன்னும் ஆழமாகப் போகின்றார். வன்முறை என்பது ஒரு தரப்புக்கு மட்டும் உரியதாக இருப்பதில்லை. அது உக்கிரமாகும்போது இரண்டு தரப்பையும் - முக்கிய இதில் பங்கேற்காத அப்பாவிச்சனங்களையும்- பலியெடுக்கும் என்பதையும் இந்த '144' கதை விபரிக்கின்றது என்பதாலே இந்தத் தொகுப்பை நான் விலத்திவைக்கமுடியாததாகச் செய்திருந்தது.

2.

ப்படிப் புத்தகங்களை வாசிக்கும்போதுதான் அண்மைக்காலமாக நம்மவரிடையே இருந்தும் உருப்படியாகப் பேசக்கூடிய எந்தப் படைப்பும் வரவில்லை என்ற எண்ணமும் ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு வருடங்களுக்கு(?) முன்னர் ஈழ/புலம்பெயர் படைப்புக்கள் சிலதைப் பட்டியலிட்டு நாம் நம்பிக்கை கொள்ளும் ஆண்டுகளாக இனியிருக்கும் என ஓரிடத்தில் எழுதியிருந்தேன். ஆனால் இப்போது அது கானல் நம்பிக்கை போலத் தோன்றுகின்றது. நம்மிடையே constructive ஆன விமர்சனந்தான் இல்லையென்றால், எழுதுவதற்கு நிறைய விடயங்கள் இருந்தாலும் பொறுமையாக இருந்து எழுதுவதற்குக் கூட நம்மிடையே ஆட்களே இல்லாது அல்லாடிக்கொண்டிருக்கின்றோம்.

சி.மோகன் இப்போது தனக்குப் பரிட்சயமான படைப்பாளிகளைப் பற்றி எழுதுவதைப் போன்று கூட ஏன் நம்மிலிருந்து எவரும் வெளிவரவில்லை என நினைத்து ஏங்க வேண்டியிருக்கிறது. சி.மோகனை நீண்டகாலம் பின் தொடர்பவர்க்கு இந்தத் தொடர்களில் எழுதப்படும் முக்கால்வாசியை சி.மோகன் ஏற்கனவே எழுதிவிட்டார் என்பதை அறிவார்கள். இந்தத் தொடரில் இருந்து நான் புதிதாக எதையும் பெரிதாக அறிவதற்கில்லை எனினும் தொடர்ந்து அதை வாசிக்கத்தான் செய்கின்றேன். சுந்தர ராமசாமி, ஜெயமோகன், முருகேசபாண்டியன் (என் தொடக்க வாசிப்பில் பாதிப்புச் செய்த 'இலக்கிய நண்பர்கள்' தொகுப்பு) போன்றவர்கள் தொடர்ந்து தமக்குப் பிடித்த ஆளுமைகளை எழுதி எழுதி நம் சூழலில் அவர்களின் இடங்களை நிரூபிக்கின்றனர்.

கு.அழகிரிசாமி பிடித்த அளவுக்கு புதுமைப்பித்தனோ, இல்லை நகுலன் கவர்ந்த அளவுக்கு மெளனியோ என்னைப் பாதிக்கவில்லை என்றாலும், அவர்களும் தவிர்க்கமுடியாதவர்கள் என்றளவுக்கு ஓர் எண்ணம் என்னில் ஆழ ஊன்றியிருப்பதற்கு இவர்களைப் போன்றோர்கள் எழுதியிருப்பதை வாசித்ததே ஒரு காரணமாகச் சொல்லவேண்டும். ஆனால் நம் சூழலில் பார்த்தால் வ.அ.ராசரத்தினம் போன்றோர் எழுதிய ஒரு சில நீங்கலாக பதிவுகளே இல்லை எனலாம். அந்தளவுக்குச் சோம்பலாகவும், அநேகவேளைகளில் தேவை இல்லாதவற்றுக்கு நேரத்தைச் செலவழிப்பவர்களாகவும் இருக்கின்றோம்.

எப்போதும் சொல்வதைப் போல நம்மிடையே பெரும்பாலானோர் இன்னும் தம் அரசியலில் இருந்தே இலக்கியத்தைப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இலக்கியத்தினூடு அரசியலைப் பார்ப்பவர்கள் மிக அரிதே. இப்படிச் சொல்வதால் 'அரசியல் நீக்கம் செய்து இலக்கியம் படைப்பது' என்பதல்ல அர்த்தம்.


3.

ண்மையில் ஒரு ஸ்பானியத் திரைப்படம் Nuestros amantes (Our Lovers) பார்த்தேன். ஒரு பெண்ணும், ஆணும் சந்தித்துப் பழகுகின்றார்கள். ஒரே ஒரு விதி, இரண்டு பேரும் காதலில் விழுந்துவிடக்கூடாது என்பது. அந்தக் கதையினூடாக அவர்களின் கடந்தகாலம் வருகின்றது. அது எங்கையோ இவர்களிடையே இடைவெட்டுவதும் சொல்லப்படுகிறது. கனவு காண்கின்ற ஒரு பெண்ணுக்கும், கனவு காண்பதையே விட்டுவிட்ட ஒரு திரைக்கதை ஆசிரியனுக்கும் இடையிலான உரையாடல்களாலே படம் நகர்த்தப்படுகின்றது.

நகைச்சுவையாக ஏனோதானாக பார்த்துக்கொண்டிருந்த திரைப்படத்தில் Truman Capoteம் Charles Bukowskiம் வந்தபோது எனக்குச் சுவாரசியம் கூடியது. அதிலும் அந்தப் பெண் ப்யூகோவ்ஸ்கி எப்படி seduce செய்வார் என்று எனக்குச் செய்துகாட்டு என்கின்றபோது அந்த ஆண் நான் fuck machine கதைகளை எழுதியவென நடித்துக்கொண்டிருக்கும் போது, நீ அவரின் 'piece of meat'ஐப் பாவிக்காது என்னை எப்படி நெருங்குவாய் என எதிர்க்கேள்வி கேட்கும் பெண்ணின் பாத்திரம் சிலாகிக்கக்கூடியது. அது போலவே அந்தப் பெண் பாத்திரம் தன் பழைய காதலன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் அவனில் இருக்கும் சில நல்ல விடயங்களால் அவனை விலத்த முடியாது என்பார். திரைப்படங்களில் வேண்டுமானால் ஒருவன் கெட்டவன் என்று பெயர் சூட்டிவிட்டு எளிதாக விலத்தி விட்டு வந்துவிடலாம், ஆனால் யதார்த்த வாழ்க்கையில் ஒருவன் கெட்டவன் போலத் தெரிந்தாலும், முற்றாக விலக்கமுடியாது என்பார்.

இந்த இருவரும் தங்கள் பழைய காதலர்களிடம் பிடித்த விடயம் என்ன பிடிக்காத விடயம் எனப் பட்டியலிடும்போது இந்தப் பெண் தன் பழைய காதலனான கவிஞனிடம் பிடித்த விடயம், 'அவனுக்குள் இருக்கும் ஒரு குழந்தை' என்பார். பிடிக்காத விடயம் எதுவெனும்போது 'அந்தக் குழந்தைக்கு தான் ஒரு வளர்ந்த ஆண் என்பது அநேக பொழுதுகளில் தெரியாமல் போய்விடுவதுதான்' என்று சொல்கின்ற இடமும் அழகு.

Our Lovers, Once Again, Sudani from Nigeria போன்ற திரைப்படங்களைப் பார்க்கும்போது, பெரும் பணத்தைத் செலவு செய்யாது, நட்சத்திரங்களுக்காய் காத்திருக்காது, எளிய கதைகளால் பார்ப்பவரை எப்படி இலகுவாகக் கட்டிப்போட முடிகின்றது என்று வியக்கவும், நம் தமிழ்ச்சூழலில் இப்படியெல்லாம்  எப்போது வருமென ஏங்கவுந்தான் முடிகிறது.

(Sep 30, 2018)

வாசிப்பெனும் பாய்மரக்கப்பலில்..

Wednesday, October 17, 2018

1.

ஜீ.முருகனின் கதைகளை (’ஜீ.முருகன் சிறுகதைகள்') அண்மையில் வாசித்து முடித்திருந்தேன். இத்தொகுப்பில் 50 கதைகள் இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன் ஜீ.முருகனின் ‘மரம்’ குறுநாவலைத் தற்செயலாகக் கண்டெடுத்து வாசித்ததுபோது வியப்பேற்பட்டது போலவே இப்போது முழுத்தொகுப்பாய் அவரின் கதைகளை வாசிக்கும்போதும் வசீகரிக்கின்றது.

பெருந்தொகுப்புக்களின் முக்கிய சிக்கலென்பது வாசிப்பில் நம்மை ஏதோ ஒருவகையில் அலுப்படையச் செய்துவிடும். ஆகவேதான் எனக்குப் பிடித்த படைப்பாளிகளாயினும், அவர்களின் பெருந்தொகுப்புக்களை வாங்கிவிடவோ வாசிக்கவோ தயங்கிக்கொண்டிருப்பேன். ஆனால்  ஜீ.முருகனின் இந்தத் தொகுப்பு அலுப்பே வராமல் என்னை  வாசிக்கச் செய்திருந்தது.  நமது சூழலில் இவ்வாறு நறுக்காகவும், நுட்பமாகவும் எழுதும் ஜீ.முருகன் இன்னும் அதிகம் கவனிக்கப்பெற்றிருக்கவேண்டுமே என்ற எண்ணமும் இன்னொருதிசையில் போய்க்கொண்டிருந்தது.

இவ்வாறு இன்னும் பல எழுத்தாளர்கள் கவனிக்கப்படாமலே இருக்கின்றார்கள். வாசிப்பின் சுவாரசியம் என்பதே, ஒரு பெரும் திரள் ஓடிக்கொண்டிருக்கும் திசைக்கு இன்னொரு திசையில் எமக்குப் பிடித்தமானவற்றை நாமே கண்டுபிடித்து நமக்கு நெருக்கமாக்கிக்கொள்வதுதான். அந்த உருசியை அறிந்துகொண்டபின் ‘பரப்பியசத்திற்குள் விட்டில் பூச்சியாக விழாது/மயங்காது’ மேலும் மேலும் நம் சிறகுகளை விரித்துச் செல்லமுடியும். இவ்வாறுதான் அண்மையில் நண்பரொருவருக்கு ரமேஷ் பிரேதனை அறிமுகப்படுத்தியிருந்தேன். ரமேஷின் ‘ஐந்தவித்தானை’ வாசித்தபின் ஒரு புதிய வாசிப்புத் திசை தெரிந்ததில் அவர் மகிழ்ந்துகொண்டிருந்தார்.

எழுத்தை செய்நேர்த்தியாக – ஒருவகை தொழில்நுட்பத்துடன்’– அதில் ஒருகுறிப்பிட்ட காலம் ‘உழல்கின்ற’ எவராலும் செய்யமுடியும். ஆனால் மனம் ஊறி எழும் எழுத்துக்கள் அரிதாகவும், இலைமறை காய்களாகவுமே பெரும்பாலும் இருக்கும். ஆகவேதான் என் வாசிப்பில் தொடக்கத்தில் பெரும் அதிர்வை உண்டாக்கிய 'ஜே.ஜே.சிலகுறிப்புகளை' இன்று மீள வாசிக்கும்போது அதன் ‘செய்நேர்த்தி’யை மட்டும் வியக்கவும், அதேகாலகட்டத்தில் எழுதப்பட்ட, சாவை நோக்கி தொடர்ந்து கேள்வி எழும்புகின்ற சம்பத்தின் 'இடைவெளி'யை இப்போது நெருக்கமாகவும் கொள்ளவும் முடிகின்றது. இதன் அர்த்தம் ‘இடைவெளி’, ‘ஜே.ஜே.சிலகுறிப்புகளை’ தாண்டிவிட்டதென்பதல்ல. 'இடைவெளி' அதனளவில் முழுமையடையாது இருப்பினும், அது எழுப்பிய கேள்விகள் உண்மையிலே சாவு குறித்து என்னவென்று அறிய விரும்பிய மனத்தின் தேடல் என்றவகையில் என்னால்  இடைவெளியைக் கொண்டாடவும் முடிகின்றது.

அதேபோன்றுதான் அநேகர் வியக்கின்ற சு.வேணுகோபாலை முதன்முதலாக அவர் யாரென்று தெரியாமலே 2000களின் தொடக்கத்தில் கிளிநொச்சியில் ‘அறிவமுதில்’ வாங்கி வாசித்தபோது மட்டுமல்ல, இப்போதும் ஒரு வாசிப்பிற்காய் அவரின் ‘களவு போகும் புரவிகளை’ மீண்டும் புரட்டும்போதுகூட தொலைவிலேயே நின்று புன்னகைக்கின்றார். ஆனால் 2000களின் தொடக்கத்தில் இளம் எழுத்தாளராக நாஞ்சில் நாடனால் அறிமுகப்படுத்தப்படுகின்ற எம்.கோபாலகிருஷ்ணனின் (சூத்ரதாரி) ‘பிறிதொரு நதிக்கரை’ என்னை எளிதாக உள்ளிழுத்துக்கொள்கின்றது.

ஜீ.முருகனைப்போல, சூத்ரதாரியைப் போல அதிக ஆர்ப்பாட்டமில்லாது எழுதிக்கொண்டிருக்கும் பலர் நம்மிடையே இருக்கக்கூடும். அவ்வாறானவர்களை நாமாகத் தேடிக்கண்டுபிடிக்கும்போது கிடைக்கும் வாசிப்பின் சுவை என்பது அலாதியானது. எல்லோருக்கும் வாசிக்கின்றார்களே என ஒரு படைப்பாளியை, கும்பலோடு சேர்ந்து தேடியோடாமல் நமக்குரிய வாசிப்பின் ஊற்றுக்களைக் கண்டுபிடிப்பதே – முக்கியமாய் நிறையப் படைப்புக்கள் வெளிவரும் இன்றையகாலகட்டத்தில்- வாசிக்கும் நமக்குத் தேவையாக இருக்கின்றது. அவ்வாறாக நமக்குரிய படைப்பாளிகளை/படைப்புக்களை நெருக்கமாக்கிக்கொள்ளும்போது சிலவேளைகளில் அது நமது அலுப்பான பொழுதுகளைக் கூட சிலிர்ப்படையச் செய்துவிடக்கூடும்.


2.

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்ஜின் ’துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ அண்மையில் வந்த சிறுகதைத் தொகுப்புக்களில் விலகி நிற்கும் தனித்துவமான பனுவலாகும். வாசிப்பவர் கதைகளின் ஏதேனும் ஒரு குவிமையத்தில் நிலைகுத்துவதைத் தவிர்த்து, பல்வேறு திசைகளில் வாசிப்பில் உடைப்புக்களைச் செய்து சிதறவிடுவதை இத்தொகுப்பின் சிறப்புக்களில் ஒன்றாகச் சொல்லலாம். இவ்வாறான நீண்ட வாக்கியங்களில் கதை சொல்வதில் இருக்கும் அழகும் ஆபத்தும் என்னவென்றால் வாசிப்பவருக்கு அலுப்புவராமல் நகரச் செய்வது என்பதேயாகும். அந்தவகையில் மட்டுமில்லாது, நிறையக் கதைகளைச் (9 கதைகள் மட்டுமே) சேர்க்காமலும் இத்தொகுப்பு கச்சிதமாக வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.

‘தந்திகள்’ மற்றும் ‘உடைந்துபோன ஒரு பூர்ஷ்வா கனவு’ வேலை இழந்துபோன ஒருவனின் கதையைச் சொல்கின்றது. தகவல் தொழில்நுட்பத்தில் வேலை செய்பவன் திடீரென்று வேலையிலிருந்து அனுப்பப்படுவதால் அவனது வாழ்வு குலைக்கப்படுகின்றது என்பதை வழமையாக அலுப்பாகச் சொல்லப்படும் மொழியிலிருந்து விலகிச் சொல்வதால் இவ்விரு கதைகளும் பிடித்துப்போகின்றது. 'தந்திகள்' கதை, வேலை இழந்தவன் பத்து மாதங்களாகியும் இன்னொரு வேலையை எடுக்கமுடியாது திண்டாடுவதால் அவனது மனைவி அவனை விட்டு விலகிப்போக, ஒரு இறந்துபோன –உடல்கெட்டுப்போகாத- பூனையோடு வாழ்பவனின் கதையென்றால், மற்றக் கதையில் வாடகைக்கொடுக்கப் பணமில்லாததால் தம்பதியினர் தேடி வாங்கிய பச்சைவர்ண ஸோஃபாவை விற்று, தமது 2வது ஆண்டு திருமணநாளுக்கு நண்பர்கள் என்ன பரிசைக்கொண்டு வருவார்கள் என்று யோசிப்பதில் போகும் நாட்களைப் பற்றியது. இரண்டிலும் வேலை இழப்பைப் பற்றிச் சொன்னாலும், இன்னொருவகையில் வேலையில்லாத் துயரத்தை விட, வேலையில்லாத நாட்களில் வாழ்க்கையை இரசிப்பவனின் பொழுதுகள் ஊடுபாவாக மறைந்துகிடப்பதையும் வாசிப்பவர்கள் உணர்ந்துகொள்ளமுடியும்.

இந்தத் தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்த கதைகளாக ‘நாளை இறந்துபோன நாய்’, ‘வலை’, ‘உடற்பயிற்சி நிலையத்துக்குச் செல்பவர்கள்’ மற்றும் ‘தந்திகள்’ போன்றவற்றைச் சொல்வேன்.

ஹருக்கி முரகாமியின் கதைகளை வாசிக்கும்போது ஒரே ஒரு பாத்திரம் அல்லது அதன் சாயல்கள்தான் அநேக கதைகளில் தொடர்ந்து வருகின்றனவோ என நினைத்துக்கொள்வேன். அவ்வாறுதான் இத்தொகுப்பிலும், ராக் இசை கேட்கும், நீட்ஷேயை/காப்ஃகாவை/போர்ஹேஸை நிறைய வாசித்த, துணையோடோ/துணையின்றி இருந்தாலோ தனிமைக்குள் அமிழ விரும்பும் ஒருவனே பாலசுப்ரமணியன் பொன்ராஜ்ஜின் எழுத்தில் இருந்து எழுந்து வருகின்றாரோ என நினைக்கத் தோன்றுகின்றது.

யதார்த்தக் கதைசொல்லல்களின் சோர்விலிருந்து விடுபடவும், நமது மனது எண்ணற்ற திசைகளில் சிந்திப்பதைப் போல எழுத்துக்களினூடாக ஒரு வாசிப்பைச் செய்ய விரும்புவர்களும், இத்தொகுப்பை துணிந்து வாசிக்கத்தொடங்கலாம்.
------------------------------------

(நன்றி: 'அம்ருதா' - ஐப்பசி, 2018)


ஐந்து முதலைகளின் கதை

Friday, October 12, 2018

ரவணன் சந்திரனின் 'ஐந்து முதலைகளின் கதை'யை இப்போதுதான் வாசித்து முடித்தேன். நான் வாசிக்கும் அவரின் முதல் நாவலும் இதுவே. நூலகத்தில் இதைக்கண்டு  எடுத்துவரும்போது நண்பர், 'உனக்குத்தானே சரவணன் சந்திரன் பிடிப்பதில்லை, பிறகேன் எடுத்து வந்தாய்' என்றார் . உண்மைதான், நான் எனக்குப் பிடித்த/வாசித்த படைப்பாளிகள் என்று நண்பருடன் அவ்வப்போது பேசும்போது சரவணன் சந்திரன் என் உரையாடலில் ஒருபோதும் வந்ததில்லை. அத்துடன் சரவணன் சந்திரன் எழுதிக்குவிக்கும் வேகத்தில், நான் அவரை எனக்குரிய ஒரு படைப்பாளியாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் உண்மை

இப்போது சரவணனே பரவாயில்லை என்றளவிற்கு பெருமாள் முருகன்  அவ்வளவு எழுதிக்குவிக்கின்றார் என்பது வேறுவிடயம். காலச்சுவடில் ஒருகாலத்தில் வேலை பார்த்த சரவணன் சந்திரனோ அல்லது அதனோடு இப்போதும் நெருக்கமாக இருக்கும் பெருமாள் முருகனோ, காலச்சுவடைத் தொடங்கிய சுந்தர ராமசாமி தன் வாழ்க்கைக் காலத்தில் மூன்றே முன்று நாவல்களை மட்டும் எழுதினார் என்ற அரிய விடயத்தையும் கொஞ்சம் கற்றுக்கொண்டிருந்திருக்கலாம்.

நண்பரிடம் நான் கூறினேன், 'உண்மைதான், சரவணனின் எழுத்து நடை எப்படியிருக்கின்றது என்பதற்காகவேனும் நான் ஒருமுறை அவரை வாசித்துப் பார்க்கவேண்டும் என்பதற்காய் எடுத்தேன்' என்று. சரவணனின் நடை மட்டுமில்லை, அவரின் ஐந்து முதலைகளின் கதை கூட எனக்கு ஒருவகையில் பிடித்திருந்தது. கோவாவிற்கு போனாலென்ன, தாய்லாந்திற்குப் போனாலென்ன, அந்த நிலப்பரப்பின்/மக்களின் பின்னணி பற்றிய எந்தப் பிரக்ஞையின்றி அரைகுறையாய் கதைகள் எழுதும் அராத்து போன்றவர்களை விட சரவணன் சந்திரன் எவ்வளவோ மேலே உயர்ந்து இந்த நாவலில் நிற்கின்றார்.

தமிழ்நாட்டில் மணல் அள்ளுவதில் கொள்ளையடிக்கத் திட்டமிட்ட குழுவைச் சேர்ந்த ஒருவன் சட்டென்று (சசிகலாவின் கைகளிலிருந்து?) அதிகாரம் கைமாறுவதால், வேறொரு நாட்டிற்கு தப்பியோட வேண்டியிருக்கின்றது. அப்படி வேறொரு நாட்டிலிருந்து அடுத்த வியாபாரத்திற்கு வலையை விரிக்கும்போதுதான், அப்போதுதான் 'சுதந்திரமடைந்த' கிழக்கு திமோர் சிக்குகின்றது. கடலட்டை வியாபாரத்தை ஐந்து முதலைகளுடன் தொடங்குவதுதான் இந்த நாவல். வியாபாரம் என்ற பெயரில் எப்படி அந்நாட்டை இவர்கள் உட்பட பலர் சுரண்டுகொண்டிருக்கின்றனர் என்பது இந்த நாவலினூடு விபரிக்கப்படுகின்றது. கதைசொல்லி தான் செய்யும் சுரண்டல்களோடு, உள்ளூர் மக்களின் மனோநிலைகளையும் நமக்கு மறைக்காமல் விபரிக்கும்போதுதான் இந்த நாவல் முக்கியமாகின்றது.

வாசிக்க அலுப்பில்லாத ஒரு மொழிநடை என்றாலும், அடிக்கடி கதைசொல்லி 'நான் உண்மையாக சத்தியமாக சொல்கின்றேன்' என்பதெல்லாம் ஏன் இதில் வருகின்றது என்று புரியவில்லை. சரவணன் சந்திரன் சுயசரிதையா எழுதுகின்றார், இல்லை புனைவுதானே எழுதுகின்றார், பிறகேன் இப்படி சுயவாக்குமுலங்கள் இந்தநாவலில் வருகின்றன என்பது விளங்கவில்லை. அதேபோல வியாபாரத்தில் எப்படி இந்தக்கதைசொல்லி ஏமாற்றப்படுகின்றார் என்பது குறித்தும் விபரிக்க அதிகம் மெனக்கிடவில்லை. எல்லா முதலைகளும்- கதை சொல்லி உள்பட- அடுத்தவரை வாரிக்கொண்டிருக்கும்போது, ஏன் இப்படி எல்லாவற்றையும் விட்டுவிட்டு பிறகு தமிழகம் திரும்புகின்றார் என்பதும் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை.
நாவலின் முக்கால்வாசிப்பகுதியிலிருந்து 'நான் மீண்டும் திரும்பிவருவேன், மற்ற முதலைகளுக்கு என்னை நிரூபித்துக்காட்டுகின்றேன்' என்று அடிக்கடி சொல்லப்படுகின்றது. அப்படி ஏதாவது நிகழுமா என்று இறுதிவரை சென்றுபார்த்தால் அதற்கான எந்தத் தடயமும் தென்படவில்லை.

தைகளைப் பற்றிச் சொல்லும்போது தேய்வழக்காகி விட்ட உதாரணமான, கதையில் துப்பாக்கியைப் பற்றிக் குறிப்பிட்டால் கதை முடிவதற்குள் வெடித்தாகிவிடவேண்டும் என்பதுபோல, ஏன் கிழக்கு திமோருக்கு மீண்டும் திரும்பிவரவில்லை என்பதையோ அல்லது ஏன் திரும்பிவரமுடியாமல் போனது என்பது பற்றியோ சரவணன் சந்திரன் இந்தநாவலில் இறுதியில் (மணல் மாஃபியா மீண்டும் திரும்பிக்கிடைக்கின்றது என்பது தவிர) அழுத்தமாய் எழுதியிருக்கலாம். சிலவேளை அவர் அடுத்த 2 வருடங்களில் எழுதிமுடித்தத அவரின் மற்ற 5 நாவல்களில் ஒன்றில் இதைச் சொல்லியிருக்கவும் கூடும். ஆனால் தனித்து ஒரு நாவலை மட்டும் வாசித்த/வாசிக்கும் என்னைப்போன்ற வாசகர்களையும் அவர் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மற்றும்படி 'ஐந்த முதலைகளின் கதை'யை வாசித்தபிறகு அவரின் பிற நாவல்களையும் வாசித்துப் பார்க்கலாம் என்கின்ற ஆர்வத்தை இது கொடுத்திருக்கின்றது. 'உயிர்மை' போன்ற பதிப்பகங்களால் சிலவேளை அளவுக்கதிகமாய் ஊதிப்பெருப்பிக்கப்படும் விம்பங்கள் குறித்து (அவர்கள் நல்லதொரு படைப்பாளியாக இருப்பினும்) எனக்கு ஓர் ஒவ்வாமை இருக்கும். அப்படி முன்னர் விநாயக முருகனையும் விலத்தி வைத்திருந்து பின்னர் அவரின் 'ராஜீவ் காந்தி சாலை'யை தற்செயலாக வாசித்து, அடுத்த அவரின் நாவலான 'சென்னைக்கு மிக அருகிலே'யும் தேடிவாசித்தேன் (எனினும் அவரின் அண்மைய நாவலான 'நீர்' என்னைக் கவரவில்லை). அப்படித்தான் சரவணன் சந்திரனையும் வைத்திருந்தேன் (ஆமாம், இப்போது உயிர்மையில் இருந்து எம்பிப்பறந்து கிழக்குப் பதிப்பகத்திற்கு இவரும் போய்விட்டார் அல்லவா?). ஆனால் ஐந்து முதலைகளின் கதை'யை வாசித்தபின் மற்ற நாவல்களையும் தேடி வாசிக்கலாம் போலத் தோன்றுகின்றது.

எனது முகநூல் நண்பராகவோ அல்லது நான் பின் தொடர்பவராகவோ இல்லாத சரவணன் சந்திரனின் முகநூலை, இந்தப் பதிவை எழுதுவதற்கு முன்னர் அவர் தற்சமயம் என்ன எழுதுகின்றார் எனப் பார்ப்பதற்காய்ச் சென்று 'நோட்டம்' விட்டேன். ஓரிடத்தில் சரவணன் சந்திரன், 'என்னால் எழுதாமல் ஒருநாள் கூட இருக்கமுடியாது, அவ்வளவு பதற்றம் வந்துவிடும்' என்பது மாதிரியாக எழுதியிருந்தார். சிலருக்கு சிகரெட் புகைக்காவிட்டால் வேலை ஒன்றும் செய்யமுடியாது போன்ற மனப்பிராந்திதான் இதுவும், எளிதாய் மாற்றிவிடலாம் முக்கியமாய் பார்வதிபுரம் பக்கம் போய்விடாதீர்கள் எனச் சொல்லலாமென நினைத்திருந்தேன். ஆனால், அந்தோ என்ன பரிதாபம், மேலும் வாசித்துக்கொண்டு போனால், ஜெயமோகனைப் போய்ச் சந்தித்து அவர் தனக்கு மாம்பழங்கள் கொடுத்து அனுப்பியிருந்ததாகவும் ஒரு குறிப்பைப் போட்டிருந்தார்.

இனிச் சொல்வதற்கு ஏதுமில்லை, ஆகக்குறைந்தது அவர் எழுதிய மிகுதி ஐந்து(?) நாவல்களையாவது என்னைப்போன்ற வாசகர்கள் வாசித்து முடிப்பதற்கு - புதிதாய் எந்த நாவலையும் வெளியிடாது- கொஞ்சக்காலம் அவகாசம் தாருங்கள் என்று அவரிடம் கெஞ்சுவதைத் தவிர வேறு வழியில்லை.

(Jun,2018)

தமிழ் கவியின் 'இனி ஒருபோதும்'

Thursday, October 11, 2018

மகாலத்தில் எழுதுகின்ற ஈழத்தவர்களில் இருவர், எதேனும் கருத்துக்கள்  கூறினால் தூரத்துக்குப் போய்விடுவேன்.  புனைவுக்கு வெளியில் இவர்கள் இப்படி அபத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தாலும் இந்த இருவரும் புனைவில் என்னைத் தொடர்ந்து தேடி வாசிக்கச் செய்பவர்கள்.  அதில் ஒருவர் தமிழ் கவி (நல்லவேளையாக நான் அவரோடு முகநூலில் நண்பராக இல்லை).

அவருடைய நாவல்களில் 'இருள் இனி விலகும்' தவிர்த்து, 'இனி வானம் வெளிச்சிரும்', 'ஊழிக்காலம்' என்பவற்றை ஏற்கனவே வாசித்திருக்கின்றேன்.  'இனி ஒருபோதும்' அவரது நான்காவது நாவல். 1990களின் நடுப்பகுதியில் தொடங்கி, 2009ல் பெரும்போர் நிகழ்ந்தகாலப்பகுதி வரை நீளும் கதை. 'ஊழிக்காலத்தை' ஏற்கனவே வாசித்தவர்க்கு அதில் வரும் பாத்திரங்கள் இதில் வருவதையும், அந்த நாவலின் சம்பவங்கள் பல இதற்குள்ளும் இடைவெட்டுவதையும் எளிதாகக் கண்டுபிடிக்கமுடியும்.

தமிழ் கவியின் எழுத்தின் பலமும், பலவீனமும் நேரடியாகச் சம்பவங்களால் அவரது நாவல்கள் அனைத்தையும் நகர்த்திக்கொண்டு செல்வது. எல்லாவற்றையும் உரையாடல்களால் கொண்டு செல்லுதல் சரியான உத்தியா என நான்கு நாவல்களை எழுதிவிட்ட அவர் இனியாவது தீவிரமாகப் பரிசோதிக்கவேண்டும்.

தனது இரு மகன்களையும் போராட்டத்துக்குப் பலிகொடுத்து, புலிகளின் கலை பண்பாட்டு நிகழ்வுகளில் இணைந்து பணியாற்றும் பார்வதி, வறுமையின் கொடுமையிலிருக்கும் தனது பேரப்பிள்ளையான மீனாவைத் தன்னோடு கொண்டுவந்து வளர்க்கத் தொடங்குகின்றார். நாவல், பார்வதி, மீனா, மற்றும் மீனா மையல் கொள்ளும் மது என்கின்ற மூன்றுபேரின் பார்வைகளில் கொண்டு செல்லப்படுகின்றது.

கிளிநொச்சியை இலங்கை இராணுவம் கைப்பற்ற அகதியாக இடம்பெயரும் பார்வதியும் அவரது குடும்பவும், பின்னார் புலிகளால் கிளிநொச்சி மீளவும் கைப்பற்றப்படும்போது அங்கே வாழச் செல்வதும், பின்னர் இறுதியுத்தத்தில் இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றும்போது, உயிரைத் தப்பவைக்க ஓடத்தொடங்கி 'வெள்ளைமுள்ளிவாய்க்காலில்' வந்து நிற்கும்வரை கதை நீள்கின்றது.

தனது பேத்தியின் 'வெறித்தனமான' காதலைப் புரிந்துகொள்வது, அதன் நிமித்தமும், கட்டாய ஆட்சேர்ப்பின் அழுத்தத்தாலும், மீனா தானாகவே புலிகளில் சென்று சேர்வதையும் ஏதோ ஒருவகையில் பார்வதி -மனதுக்கு உவப்பில்லையெனினும்- ஏற்றுக்கொள்கின்றார்.

இறுதிக்கட்டபோரின்போது தப்பி தங்களோடு வரக்கேட்கின்றபோது தனக்குக் கீழே இருக்கும் போராளிப் பிள்ளைகளை பாதுகாப்பாக அனுப்பியபின் வருகிறேன்  எனச் சொல்லும் மீனா இறுதியில் 'காணாமற்போகின்ற' ஒருவராக கதையில் ஆவதுகூட, இன்று ஏறக்குறைய போர் முடிந்து 10 ஆண்டுகளாகியபின்னும், வலிந்து காணாமற்போனவர்களைத் தேடி நமது அன்னையர்கள் நடத்தும் போராட்டங்களுக்கான பின்னணியை நம்மைப் புரிந்துகொள்ளக் கோருகின்றது.


போர், அவ்வப்போது வரும் சமாதானக் காலங்களில் கொஞ்சம் அமைதி, பின்னர் மீண்டும் போர், தனிப்பட்ட இழப்பு, வறுமை, வெளிச்சூழல் அழுத்தங்கள் என இன்னபிறவற்றுக்களுக்கும் இடையில் வாழ்வின் மீதான பிடிப்பைக் கைவிடாத  பார்வதி பாத்திரத்தில் நாம் எண்ணற்ற நம் அன்னைமார்களின் 'வைராக்கியத்தை'க் கண்டுகொள்ள முடியும். அதேவேளை பார்வதி பாத்திரம், பிற பாத்திரங்கள் தன்னைப் பற்றி -உதாரணத்திற்கு தொலைக்காட்சி/வானொலிகளில் பங்குபற்றி நிறைய இரசிகர்கள் இருக்கின்றார்கள் என- புகழ்வதற்கும் கொஞ்சம் கடிவாளம் போட்டிருக்கலாம்.

மீனாவின் காதலை சீதனத்தை மறைமுகமாய் காரணங்காட்டி உதாசீனம் செய்கின்ற மதுவின் குடும்பத்தினரை, மதுவின் தாய் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினராக இருப்பதைக் காட்டிக் குத்திக்காட்டுவதையும், தாங்கள் ஏதோ மாப்பாணர் சாதி எனவும், திருமண சம்பந்தங்களை வெள்ளாளர்களோடோ வைத்துக்கொள்பவர் என ஆற்றாமையில் எனினும் அவ்வாறு சொல்வதை நாவலில் கட்டாயம் தவிர்த்திருக்கவேண்டும். பார்வதி என்கின்ற பாத்திரம் தன்னை சீதன மறுப்பாளராகவும், சாதி மறுப்பாளராகவும் காட்டிக்கொள்கின்றபோது தன் பேத்திக்கு ஒரு துர்ச்செயலாக  இது நிகழும்போது வேறு விதத்தில் அதை எதிர்கொண்டிருக்கமுடியும். ஆனால் சுய சாதிப்பெருமை எங்கோ இருந்து இங்கே வரும்போது தன் சுயசாதி அடையாளத்தை அழிக்கமுடியாத ஒரு அவலமாகவே பார்வதியின் பாத்திரம் நமக்குள் வந்துசேர்கின்ற அபாயமும் நிகழ்ந்துவிடுகின்றது. அதிலும் மதுவின் தாயார் ஒரு சின்னமேளக்காரி என்றும், மதுவின் தகப்பனோடு அவர் ஓடிப்போய் மணம் செய்தவர் எனத் தூற்றவும் இங்கே செய்யப்படுகின்றார்.

அதேவேளை மீனாவின் தகப்பன் அவரது இரண்டாவது மனைவியாக கவிதாவை (மீனாவின் தாயார்) கடத்திக்கொண்டு மணம் செய்வதை பிடிக்காதுபோயினும் பார்வதி அதை பிறகான காலத்தில் ஏற்றுக்கொள்கின்றார். அந்த மனிதரை மதுவின் தாயாரை சாதியின் பெயரில் நிமித்தம் இழிவு செய்வதுபோல, எவ்வகையிலும் கீழிறக்குவதில்லை. ஆக பார்வதி என்கின்ற பாத்திரத்திற்குள்ளே தனது மகள்கள் ஒருவனுக்கு இரண்டாம் மனைவியாகப் பலவந்தமாகப் போய்விடுவதை விட,  தனது பேத்தியின் திருமணத்தை ஏதோ ஒருகாரணத்தால் மறுப்பதுதான் பெரிதாக விடயமாகப் போய்விடுகின்றது.

இவ்வாறான பலவீனங்கள் மற்றும் மிக மோசமாக திருத்தம் செய்யப்படாத வாக்கிய அமைப்புக்கள் ('செய்தனீங்கள்' என்ற போன்ற பேச்சு வழக்கு வருகின்ற இடங்களில் எல்லாம் என்பது 'செய்த நீங்கள்' என்று அனேக இடங்களில் பிரிக்கப்பட்டு வாசிப்பையே திகைக்கச் செய்கின்றன)  மற்றும் சிறுபிள்ளைத்தனமான முன்னட்டை வடிவமைப்பு போன்றவை இருந்தாலும் விலத்திவைக்காது வாசிக்கலாம். ஏனென்றால் போர் நடந்த நிலத்தில் நேரடிச் சாட்சியாக நின்ற தனிப்பட்ட  ஒருவரின் ஒரு காலத்தைய ஆவணமாக இது இருப்பதாலாகும்.

ஏன் இதை அழுத்திச் சொல்கின்றேன் என்றால் இவ்வாறு இன்னொரு புனைவை வாசிக்கத் தொடங்கியபோது,  அது அஷோக ஹந்தமகவின் 'இது எனது நிலவில்' ('This is my moon') சித்திரிக்கப்பட்ட தமிழ்ப்பெண்ணை விட மோசமாக இருந்ததால் தொடகத்திலேயே வாசிப்பதை நிறுத்திவைத்திருந்தேன்.

அந்தவகையில் தமிழ் கவி போன்றவர்கள் நிறைய எழுதவேண்டும்; ஆண்களாகிய நாம் பெண்களை எவ்வாறு விளங்கிக்கொள்வது என்பதைவிட, ஆகக்குறைந்தது போர்சூழலில் இருந்த பெண்களை எப்படி மோசமாகச் சித்தரித்து எழுதக்கூடாது என்பதற்காகவேனும்.

(Sep 16, 2018)

ராஜசுந்தரராஜனின் 'நாடோடித்தடம்'

Tuesday, October 02, 2018

டந்த நான்கு நாட்களாக ராஜசுந்தரராஜனின் 'நாடோடித்தடத்தை' வாசித்துக்கொண்டிருந்தேன். இவ்வாசிப்பிற்கிடையில் வேறு ஒரு படைப்பை வாசித்து தலையில் முட்டி, எதையாவது அதுகுறித்து எழுதித்தொலைத்துவிடுவேனோ என்ற பதற்றத்தை விலத்தி, தன் தடத்தில் சுவாரசியமாகத் தொடர்ந்து கொண்டு சென்றதற்கு ராஜசுந்தரராஜனுக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும்.

நமது முன்னோடிகளிடம், ஒரு நல்ல படைப்பை எப்படி எழுதுவது என்பது கற்றுக்கொள்வதற்கு மட்டுமின்றி, ஒரு மோசமான படைப்பை எவ்வாறு எழுதாமல் தவிர்ப்பது என்பதற்கும் அவர்களிடமே செல்லவேண்டியிருக்கின்றது. அவ்வாறு சமகாலத்தில் எழுதுபவர்களுக்கு பரவலாக வாசிக்கும் ஒரு அரியபழக்கம் இருக்குமாயின்,, எத்தனையோ ஆக்கங்களை வாசித்து நாமும் மன அழுத்ததிற்குள் போகாது தப்பியிருக்கலாம் தப்பியிருந்திருக்கலாம்.

இந்தத் தொகுப்பிலிருக்கும் 21 ஆக்கங்களிலும் எடுத்துக்கொள்ளும் விடயங்கள் -முக்கியமாய் தமிழ்ச்சூழலில்- சிக்கலானதும், அதேசமயம் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு தமக்கான தீர்ப்புக்களைச் சொல்லக்கூடியதுமான விடயங்கள்தான்.  எனினும், எவ்வளவு நளினமாகவும், தன்னையொரு புனிதமானவனாகவும் இதில் இட்டுக்கட்டாததுமாதிரி, மற்றவர்களையும் எந்த ஒருபொழுதிலும் இழித்துக்காட்டாததுமாக ராஜசுந்தரராஜன் எழுதியிருப்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் 'பெண்கள்' (Women) நாவலை வாசிக்கும்போது ஏற்பட்ட உணர்வைப் போன்றே நாடோடித்தடத்திலும் பெண்களே எல்லாப் பதிவுகளிலும் (சிலவேளைகளில் போதும் போதுமென்ற அளவுக்கும்) வருகின்றனர். ப்யூகோவ்ஸ்கி,  தனது alter  egoவாய்,  ஒரு ஹென்றி சின்னாஸ்கியை உருவாக்கியதைப் போல எல்லாம் கஷ்டப்படாது, ராஜசுந்தரராஜன்  நான் என்கின்ற தன்னிலையாலே எல்லாக் கதைகளையும் எவ்வித ஒளித்தல் மறைத்தலின்றிச் சொல்லிப்போகின்றார்.

ராஜசுந்தரராஜனின் 'நான்', தான் காதலித்த பெண்களிலிருந்து, தேடித்தேடிப்போன பாலியல் தொழிலாளர்களை வரை எவ்வித ஏற்றந்தாழ்வுகளின்றி  அப்படியே காட்சிப்படுத்துகின்றனர். இவையெல்லாம் ராஜசுந்தரராஜனின் வேலை நிமித்தம் ஏற்படுகின்ற இடமாற்றங்களால் அன்றி, அவருக்குள்ளே இருக்கும் ஒரு விட்டேந்தியான  ஒரு நாடோடியினாலே சாத்தியமாகியிருக்கின்றது என்பதை வாசிக்கும் எவரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

தேசாந்திரிகளாகவும், இந்திய மரபை அறிந்துகொள்வதற்காகவும் பயணப்பட்டோம் என்று சொல்லி தமிழில் எழுதப்பட்டவற்றை வாசித்தவர்க்கு, இந்த நாடோடித்தனம் ஒருவகையில் அதிர்ச்சியையே கொடுக்கும். இது இந்தியாவில் என்றில்லை, எந்த ஒரு நாட்டின் மக்களோடும் அவர்களின் கலாசாரத்திற்குள் 'அந்நியராக' இல்லாது ஒன்றாகக் கலக்கத்துடிக்கும் எந்த மானிடர்க்கும் வாய்க்கக்கூடியதே.

அண்மையில் ஒருவர் இங்கிலாந்திற்கு 'பப்'ற்குள் போக எனக்கு விருப்பமில்லை என்று தன் பயண அனுபவங்களில் எழுதியதை வாசித்தபோது, இவர்கள் ஏற்கனவே தீர்மானித்துவிட்ட தம் பயணங்களைச் செய்கின்றார்களே தவிர ஒரு உண்மையான பயணத்திற்குள் ஒருபோதும் உள்நுழைந்துவிடமுடியாது என்றே நினைத்தேன். ஒரு சமூகத்தின் கலாசாரத்தின்/பண்பாட்டுப்பின்புலத்திற்கு நம்மை நெருக்கமாக்கவேண்டுமென்றால் அந்தச் சமூகத்தில் கப் 'காபி' குடிப்பது ஒரு பண்பாடாக இருந்தால் என்ன, கஞ்சா அடிப்பது கூட அவர்களின் பண்பாடு என்றால் அதற்குள் நுழையாமல்விடின் நீங்கள் ஒரு கலாசாரத்தின் சிறுதுளியையும் தீண்டமுடியாது. ஆனால் நம் பலரின் பயணங்கள் அவ்வாறிருப்பதில்லை என்பதுதான் துயரமானது.


நாடோடித்தடத்தில் பெண்களைப் பற்றி இல்லாத எந்தப் பதிவும் இல்லையெனவே சொல்லலாம்,  இருப்பினும், ராஜசுந்தரராஜன் அதற்கூடாக அவரது பயணங்கள் நடக்கும் நிலப்பரப்பு,  அம் மக்களின் வாழ்க்கைமுறை, மொழிகளின் சிக்கல்கள் போன்றவற்றின் குறுக்குவெட்டுமுகங்களை நமக்கு  முன்வைக்கின்றார் (வெவ்வேறு புதிய மொழிகளை எப்படிக் கற்றார் என ஒரு பதிவில் சொல்லும் இடம் மிகுந்த சுவையானது, அவ்வாறே அவர் ஜோதிடம் கற்கும் இடமும்). மேலும் தனது 'நானுக்குள்' அவ்வப்போது அவிழ்ந்துவிடும் தரிசனங்களையும் அதன் பின்னணியோடு முன்வைக்கின்றார். மீனா (என்று உளவியல் சிக்கலுள்ள பெண்), அவருக்கு முன் ஆடைகளை அவிழ்த்து தன்னைக் கொடுக்க முனைவதும், பிறகு அந்தப் பெண் இறந்தபின், ஒரு வேட்டைக்களத்தில் பலநூறு மின்மினிப்பூச்சிகள் பறக்கும்போது அந்த மீனாவின் தரிசனம் கிடைப்பதும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. 

அதைவிடச் சுவாரசியமாக அவர் எத்தனையோ வருடங்களின் முன் சந்தித்த பல மனிதர்களைத் திருப்பிச் சந்திக்கின்றார். இடைப்பட்ட காலங்களில் நமக்குத் தெரியாத அவர்களின் வாழ்க்கை நமக்குக் கிறுக்கியகோடுகளாக தெளிவும்/தெளிவுமின்றித் தெரிகின்றன. அதேவேளை மனிதர்களை அரிதாகவே மீண்டும் நம் வாழ்வில் சந்திப்போம், அப்படி அவர்களை மீண்டும் ஏதோ ஒரு வட்டத்தில் வைத்து சந்திக்கின்றோம் என்றால் அவர்களோடு நமக்கு கடந்தகாலத்திலோ, எதிர்காலத்திலோ (சிலவேளைகளில் பிறப்புக்கு முன்/பின் கூட) ஏதோ ஒருவகையில் தொடர்புஇருக்கலாம். ஆகவே அவர்களுக்கு கவனம் கொடுங்கள், அவர்களை மதிக்கக் கற்றுக்கொடுங்கள் என (ஒரு மேடையில்) உரையாற்றுகிறார். இவ்வாறு இரண்டையும் இணைத்துப் பார்த்தல் சுவாரசியமான முடிச்சு.

இந்த நாடோடித்தடத்தில் வரும் தன்னிலையின் வாழ்வு அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாதது. திருமணம் வேண்டாம் என்கின்ற நினைப்போடு பரத்தைகளோடு தனது காமத்தைப் பகிர்ந்துகொள்ளும் இந்த 'நான்' என்கின்ற தன்னிலை, இறுதியில் தனது அக்கா மகளையே மணஞ்செய்கின்றது. தொழிலின் நிமித்தம் நகரங்கள் எங்கும் அலையும்போது, அந்தப் பெண்ணுக்கு வேறொரு ஆணோடு தொடர்பு(?) ஏற்பட்டுக் குழந்தையும் பிறக்கின்றது. அந்தத் துயர் - ஏன் இப்படி எனக்கு ஏற்பட்டது என்பதைத் தேடுவதற்கான தன்னையே கிடத்தி ஒரு மரணப்பரிசோதனை செய்கின்றமாதிரியான ஒரு தொகுப்பாகவே இதைக் கொள்ளலாம்.

இத்தொகுப்பில் குறிப்பிட வேண்டிய இன்னொன்று, பொறியியல் விடயங்கள் அழகாக விபரிக்கப்பட்டுள்ளதோடு, பொறியியல் சொற்களுக்கு உரித்தான தமிழ்ச்சொற்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோன்று திருக்குறள்/சங்கப்பாடல்கள்/நவீன கவிதைகள்/மேற்கத்தைய இலக்கியங்களில் இருந்து, பொருத்தமான பகுதிகள் பாவிக்கப்பட்டிருப்பதை வாசகராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது. ஏதோ ஒரு நேர்காணலில் பேட்டி கேட்பவரை சிவசங்கரி seagullற்கு தமிழில் சொல் இருக்கிறதா எனச் சற்றுத்திமிருடன் கேட்பதைப் பார்க்கும்போது, ஒரு தமிழ்நாட்டுக்கரையில் சிறுவன் ஒருவன் அதே பறவையைச் சுட்டிக்காட்டி 'கடல்புள்ளு' என்று சொன்னதை  ஓரிடத்தில் நினைவுகூர்கிறார்.

அதேமாதிரி ஒரு கவிஞர் நுங்கம்பாக்கம் வந்து பூனைமாதிரி நெடுக்கும் குறுக்குமாய் நடக்கும்போது, அதைக்கண்டு பஸ்ஸிலிருந்து இறங்கும் இந்த 'நான்', விடயத்தை அறிந்தபின், இந்தப்பக்கம் இல்லை மற்றப்பக்கம் பூக்கடைப் பக்கம் நின்றால் நீங்கள் தேடியது கிடைக்கும் என்று  கூறுவது நமது இலக்கியமும்/இலக்கியவாதிகளும் அதேதான், புனிதப்படுத்தல்கள் எல்லாம் போலித்தனமானது  என்பது நமக்குப் புரியும்.


வ்வாறாகப் பற்றியெரியும் பாலியல் வேட்கையை அவ்வளவு எளிதில் தமிழில் எழுதிவிடமுடியாது. வேண்டுமெனில் கலைத்துவம் இல்லாது, எங்களை மன அழுத்ததிற்குள்ளாகும் 'ஆபாசமாக' (நிர்வாணத்தை இங்கே குறிப்பிடவில்லை) எழுதுவதற்கு பலர் இருக்கின்றார்கள். ஆனால் பெண் உடல் மீதான பித்தைக் கைவிடமுடியாதும், அதேவேளை அந்தப்பெண்களை எங்கேயும் கீழிறக்கிவிடாதும் எழுதுதல் எல்லோர்க்கும் வாய்க்காது. கயிற்றைக் கட்டிவிட்டு அதன்மேல் நடந்துபார்க்கும் வித்தைதான் இது. தனது மனைவிதான், ஆனால் அதே மனைவிக்கு இன்னொருவருக்குப் பிறந்த ஒரு குழந்தைக்கு, பிறகு ஒரு 'ஆயனாக' மாறுவதென்பது எல்லோராலும் முடிவதன்று.

ஒருவகையில் பார்த்தால் நாடோடித்தடங்கள்  பலதிசைகளிலும் அலைவுற்றாலும், 'கடவுச்சொல்'லில் ராஜசுந்தரராஜன் கூறும் 'என் காதலி இன்னொருவனுக்கு மனைவியாகிப் போனாள் என்பதைக் காட்டிலும், என் மனைவி இன்னொருவனுக்கு காதலியாகிப் போனாள் என்பதில் மிகுந்த துயரம் எங்கிருந்து வருகிறது' என்பதையே, இந்தத் தொகுப்பின் ஒவ்வொரு ஆக்கங்களும் தம்மளவில் பதில்களைத் தேடுகின்ற நுண்ணிழைகளைக் கொண்டிருப்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

தமிழ்ச் சூழலில் ஒருபக்கத்தில் பயணங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டு,  மறுபுறத்தில் சிக்கலான ஒரு மனிதனின் இருப்பை இந்தளவுக்கு ஆழமாகப் பார்க்கத் துணிந்த இன்னொரு தொகுப்பை அவ்வளவு எளிதில் உதாரணமாகச் சொல்லமுடியாது என்பதே 'நாடோடித்தடத்தின்'  சிறப்பாகும்.

(செப் 04, 2018)

ஸ்பெயின் - 03

Monday, October 01, 2018

Catalonia: தனிநாடு சாத்தியமா?

ஸ்பெயினுள்ள கட்டலோனியா ஒரு நீண்டகால வரலாற்றை உடைய நிலப்பரப்பாகும். ஃபிராங்கோவின் காலத்தில் தனது சுயநிர்ணய உரிமைக்காகக் கடுமையாகப் போராடித் தோற்றுமிருக்கின்றது. எனினும் ஃபிராங்கோவின் சர்வாதிகார ஆட்சியின் பின், தனக்கான பல உரிமைகளை மீளப்பெற்றதோடல்லாது, 2006ல் கட்டலோனியா ஒரு 'தேசமாக'வாவும் (nation) பிரகடனப்படுத்த ஸ்பெனிய அரசால் அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. எனினும் 2010ல் 'தேசமாக' இருக்கும் உரிமை உட்பட பல பறிக்கப்பட்டுமிருந்தது.

இதன் நீட்சியோடும், ஸ்பெயினில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினாலும், கட்டலோனியாவின் தன்னொரு தேசமாகப் பிரகடனப்படுத்தும் குரல் அண்மையில் வெளிக்கிளம்பத் தொடங்கியது. கட்டலோனியா பிரதேசத்தினூட நிறையப் பொருளாதாரத்தை (கிட்டத்தட்ட மொத்த ஸ்பெயினில் 20%) பெறுகின்ற மத்திய அரசு, கட்டலோனியா மக்களுக்கு அதை உரியமுறையில் திரும்பித்தராது, அதிக வரிகளையும் மக்களுக்கு விதித்தமையும், கட்டலோனியா தனிநாட்டுக்கோசத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

இதன் நீட்சியில் ‘கட்டலோனியா எமக்கே’ என்ற குரல் வலுத்து, தம்மையொரு தேசமாக்கவேண்டுமென்று ஒன்றிணைந்த கட்சிகள்  தேர்தலில் வெற்றி பெற்றுமிருந்தன. அதன் தொடர்ச்சியில், சென்ற ஒக்ரோபரில் தனிநாட்டுக்கு கட்டலோனியாவின் மக்கள் (90%) ஆதரவளித்திருந்தனர். எனினும் நாம் கவனிக்கவேண்டிய விடயம் என்ன என்றால் இப்படி பெரும்பான்மையாக (90%) தனிநாட்டுக்கு வாக்களித்திருந்தாலும், இங்கே வாக்களித்தவர்கள் மொத்த கட்டலோனியா பிரதேசத்தின் 40% வீதம் மட்டுமே ஆகும். ஆக தனிநாடு வேண்டுமா அல்லது வேண்டாமா என்று வாக்களிக்காதவர்கள் கிட்டத்தட்ட 60% ஆனோர் என்பதாகும்.

மேலும் 2017 ஒக்ரோபர் 27ல் கட்டலோனியா தனிநாடாகப் பிரகடனப்படுத்த, மத்தியில் இருந்த வலதுசாரி அரசு அதைக் கொடுமையாக அடக்குகின்றது. இந்தத் தேர்தல் செல்லுபடியாகது என்று சட்டத்தினூடாக கட்டலோனிய அரசைக் கலைக்கின்றது. இதற்காய்ப் போராடிய பல்வேறு கட்சித்தலைவர்களைக் கைதுசெய்ய, சிலர் தப்பி பிற ஐரோப்பிய நாடுகளுக்குள் அடைக்கலந்தேடுகின்றனர்.

நான் பார்சிலோனாவிற்குப் போனபோது ஒருபக்கத்தில் நாளாந்த வாழ்க்கையும், மறுபுறத்தில் கட்டலோனியா தனிநாட்டுக்கோரிக்கையினால் சிறைவைக்கப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்ய நடந்த கூட்டங்களையும் பார்த்திருந்தேன். கட்டலோனிய தனிநாட்டுக் கோரிக்கை வந்தபோது, அவர்கள் ஏற்கனவே கட்டலோனியாவிற்கு இருக்கும் கொடியின் ஒருபகுதியை நீல வர்ண முக்கோணத்தையும் சேர்த்திருந்தனர். இது கியூபாவின் கொடியின் வடிவத்திற்கு அண்மையாகவும், ஒருவகையில் தனிநாட்டுக்கோரிக்கை அதைக் குறிப்பதாகவும் சொன்னார்கள்.

அடுத்தடுத்த வீடுகளில் தனிநாட்டுக்கோரிக்கைக்கும், அதேவேளை ஸ்பெயினோடு சேர்ந்திருக்க ஆதரவளிக்கும் கொடிகளையும் பார்த்தேன். எதை ஆதரிக்கின்றார்களோ அதை வெளிப்படையாக உணர்த்தும் ஒரு சுதந்திர நிலைமை இன்னமும் கட்டலோனியாவில் இருப்பதை அவதானிக்கமுடிந்தது. இலங்கை போன்ற நாடுகளில் 'தேசம்', 'சுயநிர்ணய உரிமை' என்பவற்றை இப்படிப் பொதுப்படையாக முன்வைத்துவிட்டு வீடுகளில் நிம்மதியாக வாழமுடியுமா என்ற யோசனைதான் அப்போதுதான் வந்தது.

கட்டலோனியா தன்னை தனிநாடாகப் பிரகடனப்படுத்தினாலும் உலகில் எந்த நாடுமே அதை அங்கீகரிக்கும் சமிக்ஞைகள் எதுவும் அண்மையில்லை. படுகொலைகள் நடந்த கொஸாவைக்கூட இன்னும் பல நாடுகள் தனித்த நாடாக அங்கீகரிக்கத் தயாரில்லை என்பதும் அண்மைக்கால உதாரணம்.

எனினும் கட்டலோனியா நிச்சயம் இந்தப் போராட்டங்களினூடாக மிக வெளிப்படையாக தன்னையொரு 'தேசமாக' காட்டப்போகின்றது. அதை நோக்கி எப்படி அவர்கள் நகர்கின்றார்கள் என்பதே நாம் கற்றுக்கொள்ளவேண்டியது. அதுமட்டுமில்லாது ஸ்பெயினின் மற்றப் பிரதேசமான பாஸ்கில் தனிநாடு கோரிப்போராடிய இயக்கம் தனது தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடுகின்றோம் என்று கடந்தமாதத்தில் அறிவித்தபின்னும், சில நாட்களுக்கு முன் பல்லாயிரக்கணக்கான மக்கள்  200கிலோமீற்றர்களுக்கு நீளத்திற்குக் கரங்களை கோர்த்து,  ஒரு ஆர்ப்பாட்டத்தின் மூலம், தமது 'தனித்தேச' விருப்பைப் பொதுவெளியில் காட்டியிருக்கின்றார்கள் என்பதையும் நாம் அவதானிக்கவேண்டும்.


Hospital de Sant Pau 

நீண்டகாலத்திற்கு வைத்தியசாலையாக இயங்கிய இந்த இடம், அண்மையில் கலாசார மையமாகவும், நூதனசாலையாகவும் மாற்றப்பட்டிருக்கின்றது. யுனெஸ்கோவின் World Heritage Siteகளில் ஒன்றாகவும் இது இருக்கின்றது. அந்தோனியோ கெளடியின் பிரபல்யம் வாய்ந்த Sagarida Familla விற்கு அருகில் -10 நிமிட நடையில்- அமைந்திருக்கின்றது. இன்னமும் கட்டிமுடிக்கப்படாது வளர்ந்துகொண்டேயிருக்கும் பிரமாண்டமான Sagarida Familla தேவாலயத்தைவிட, Sant Pau என்னை இதன் எளிய/திருத்தமான வடிவமைப்பால் அதிகம் கவர்ந்திருந்தது.


Paella

Paella என்பது ஸ்பெயினில் பிரசித்தமான உணவாகும். உண்மையில் இது ஸ்பெயினில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் உணவாக, உள்ளூர் ஸ்பானியர்களாகக் கொள்ளப்பட்டாலும், நம்மைப் போன்ற பயணிகள் இதை ஸ்பெயினின் தேசிய உணவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

Paella என்று பெயரிருந்தாலும் பை(ய்)யா என்றே உச்சரிக்கப்பட்டிருக்கின்றது. இந்த உணவின் அநேகமான எல்லாவகையையும் சுவைத்திருந்தேன். தனியே மரக்கறிகளால் மட்டும் ஆனது, தனியே கடல் வகையால் மட்டும் ஆனது, கடல் உணவும், கோழியும் கலந்தது என பல்வேறு வகையில் பைய்யா தயாரிக்கப்படுகின்றது. சோற்றுடன் கலந்து பரிமாறப்படும் எதுவுமே எனக்குச் சொர்க்கம் போன்றதென்பதால் நானும் ருசித்து ருசித்து பைய்யாவைச் சாப்பிட்டேன்.

என்றேனும் ஒருகாலம் நானுமொரு சிறு உணவகம் அமைத்து, சாப்பிடுபவர்களும் என்னை நம்பி வந்தால், நானும் இப்படி இலங்கையில் வைத்து பைய்யாவைச் சுடச்சுடப் பரிமாறுவேன் எனக் கூடவே சாப்பிட்டுக்கொண்டிருந்த நண்பருக்குச் சொன்னேன்.

'ஓ.. நீ வழமையாக அவிக்கும் சோற்றுக்குள் மரக்கறிகளையும், கொஞ்சம் மைசூர்ப் பருப்பையும் போட்டு வேகவைத்து இதுதான் எங்கள் அம்பனை இராசதானியின் தேசிய உணவென்று பரிமாறுவாயே, அதுதானா உனது Jaffna style Paellaவா' என்று கேட்டார் நண்பர்.

நல்லதொரு எழுத்தாளன் ஆவதுதான் கனவாகிப்போய்விட்டதென்றால், சிறந்ததொரு சமையற்காரன் ஆகவும் இந்தச் சமூகம் விடாதென்று நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன்.
....................


நன்றி: 'அம்ருதா' - ஆவணி, 2018

ஸ்பெயின் - 02

Sunday, September 30, 2018

Plaza de Sant Felip

இந்தப் பிளாஸாவையும், இதனோடிருக்கும் தேவலாயத்தையும் பல்வேறு திரைப்படங்களில் நாங்கள் பார்த்திருப்போம். முக்கியமாக எனக்குப் பிடித்த ‘Vicky Christina Barcelona’ மற்றும் ‘Perfume’ல் எளிதில் அவதானித்திருக்க முடியும். Vicky Christina Barcelonaவில், அந்தோனியோ விக்கியோடும், கிறிஸ்டீனாவோடும் சேர்ந்து உணவருந்தும்போது, விக்கியின் கால்களைத் தடவி தவறான சமிக்ஞையைக் கொடுக்கும் காட்சி உங்களுக்கு நினைவில் வரக்கூடும். அது இந்த இடத்திலேயே படமாக்கப்பட்டிருக்கின்றது.

பின்னாட்களில் திரைப்படங்களினால் பிரபல்யம் வாய்ந்ததாக இந்த இடம் ஆகிவிட்டாலும் இதற்குள் ஒரு சோகமான வரலாறு இருக்கின்றது. ஸ்பெயினில் சர்வாதிகாரி பிரான்ஸிக்கோ ஃபிராங்கோவிற்கு எதிராக உள்நாட்டு யுத்தம் (1936-1939) நடைபெறுகின்றது. பார்சிலோனா உறுதியாக பிராங்கோவிற்கு எதிராகப் போராடியபோது, முற்றுகையை உடைக்க பிராங்கோ விமானத்தாக்குதல் நடத்துகின்றார். இந்தப் பிளாஸாவில் இரண்டு குண்டுகள் விழுகின்றன. முதல் குண்டில் இந்தத் தேவாலயத்தில் அடைக்கலம் புகுந்த மக்களில் 30 பேரும், பிறகு 12 பேரும் கொல்லப்படுகின்றனர். இதில் 20 பேரளவில் சிறுவர்களாக இருந்ததனர் என்பது பெருஞ்சோகம். இத்தாக்குதல் நிகழ்ந்த சேதத்தை இப்போதும் மறக்கவிடாது நினைவூட்டியபடி பாதிக்கப்பட்ட சுவர் பாதுகாக்கப்படுகின்றது.

பார்சிலோனா பல்வேறு விடயங்களுக்கு பிரபல்யம்வாய்ந்தெனினும், இன்றும் அதன் பெரும்பகுதியாக அரசவிழ்ப்பாளர்கள் (anarchists) இருக்கின்றார்கள் என்றும், அதற்கென தனியே ஒரு walking Tour இருக்கின்றதென எங்களுக்கு இந்த இடத்தின் விபரங்களைச் சொல்லிக்கொண்டிருந்த சுற்றுலா வழிகாட்டி கூறியிருந்தார்.

இந்தச் சேதமடைந்த சுவருக்கு இன்னொரு கதையும் சொல்லப்படுகின்றது. ஃபிராங்கோவிற்கு எதிராகப் போராடிய அரசவிழ்ப்பாளர்கள், பலரை இதேயிடத்தில் சுட்டுக்கொன்ற பிராங்கோ அரசு, அதை மூடிமறைக்கவே விமானக்குண்டுத்தாக்குதலை நடத்தியது என்றும் சொல்கின்றார்கள். எதுவாயிருந்தாலும், இலங்கையைப் போலவே தனது சொந்த மக்கள் மீது குண்டுத்தாக்குதலை நிகழ்த்திய ஒரு கொடுங்கோல் அரசுதான் ஃபிராங்கோவினுடையது என்பதும், பிறநாடுகள் பல 2ம் உலக மகாயுத்தத்தோடு ஜனநாயக ஆட்சியிற்கு வந்தபோதும், ஸ்பெயின் ஃபிராங்கோ மரணமாகிய 1975ம் ஆண்டுவரை சர்வாதிகார ஆட்சியிற்குள் இருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.


Churros

ஸ்பெயின் போனால் churros சாப்பிடாமல் வந்தால் 'சாபம்' கிடைக்குமென்று சாப்பாட்டுப் பிரியர்கள் கூறுகின்றார்கள். அதுவும் Churros , அதனோடு பிரத்தியேகமாய்த் தரும் சொக்கிலேட்டிற்குள் அமிழ்த்தி சாப்பிட்டால் அமிர்தமாக இருக்குமாம்.

இப்படி ஸ்பெயினில் Churros ஐச் சாப்பிட்ட ஆர்வத்தில், இன்னொரு நாட்டில் இருந்த ஆஜெண்டீனா கடையில் Churros வாங்கினால், அவர்கள் சீனியை மட்டும் மேலே தூவிவிட்டுத் தந்திருந்தார்கள். எனக்கென்னவோ அது எங்களின் வாய்ப்பனின் ருசி போல இருந்தது. வாய்ப்பனில் இருக்கும் வாழைப்பழம் மட்டும் அதில் 'மிஸ்ஸிங்'காக இருந்தது. ஆக கற்றுக்கொண்ட பாடம் என்னவெனில் ஸ்பெயினிற்குப் போய், ஸ்பெயின் பெண்களின் கைகளிலிருந்து Churros வாங்கிச் சுவைத்தால் மட்டுமே அது Churros ஆகும்.


La Rambla

“The happiest street in the world, the street where the four seasons of the year live together at the same time, the only street on Earth that I wish would never end, rich in sounds, abundant of breezes, beautiful of meetings, ancient of blood: Rambla de Barcelona.”
-Federico García Lorca

La Rambla என்பது மரங்களும், பூக்கடைகளும், தெரு ஓவியங்களும், இன்னபிறவும் சூழந்த மிக அழகான கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீற்றர்கள் நீளும் ஒரு தெருவாகும். ஒரு முனையில் Plaça de Catalunya விலிருந்து தொடங்கி இன்னொருமுறையில் மிக உயரத்தில் வீற்றிருக்கும் கிறிஸ்தோபர் கொலம்பஸின் சிலையோடு முடிகின்றது. கொலம்பஸின் சிலையோடு பார்சிலோனாவின் கடல் தொடங்குகின்றது. கைகளால் காற்றின் திசையில் சுட்டிக்காட்டும் கொலம்பஸ் குறிப்பது அவர் 'கண்டுபிடித்த' அமெரிக்கா என்று பலர் சொன்னாலும், இந்தச் சிலை உண்மையான திசையின்படி சுட்டுவது அதற்கு எதிர்த்திசையிலான எகிப்தை என்று எங்களின் வழிகாட்டி நகைச்சுவையாகச் சொன்னார். Plaça de Catalunya என்பது ஒருவகையில் பார்சிலோனாவின் மத்தி. ஒரு திசையில் இதன் பழமை வாய்ந்த நகரான Gothic City இருக்கின்றதென்றால் அதன் மறுதிசையில் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகு எழுப்பப்பட்ட நவீன கட்டங்கள் விகசித்து நிற்கின்றன.


இருபக்கமும் மரங்கள் சூழ்ந்த La Rambla வினூடு நடந்துபோனால், மர்லின் மன்றோ மாடியில் காட்சியளிக்கும் Erotic Muesum ஐயும், மிகப் பிரசித்தம் பெற்ற உணவுச்சந்தையான La Boqueríaவையும் நீங்கள் எளிதில் அடையமுடியும். மனதை இதமாக்கிவிடும் இந்தத் தெருவில்தான் சென்ற வருடம் ஆவணியில் ஒருவர் வேகமாய் வாகனத்தை ஓட்டி 15 பேருக்கு மேலான மக்களைப் பலியெடுத்தும், இன்னும் பலரைக் காயங்களுக்கும் உட்படுத்தியதுமானதுமான துரதிஷ்டவசமான சம்பவமும் நிகழ்ந்திருந்தது.