கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

எக்ஸோராக் குறிப்புகள்

Friday, January 28, 2011

 1.0 வாசிப்பு/திரை

ஜே.எம்.கூட்ஸியின் 'The Master of Petersburg'  நாவ‌ல் Dostoyevsky யை முக்கிய‌ பாத்திர‌மாக‌க் கொண்ட‌ க‌தை.  அவ‌ரின் வ‌ள‌ர்ப்பு ம‌க‌ன் பாவ‌ல், ஒரு கிள‌ர்ச்சி இய‌க்க‌த்தில் இருந்து கொல்ல‌ப்ப‌ட‌,  இற‌ந்த‌ த‌ன‌ய‌னின் நினைவுத்த‌ட‌ங்க‌ளைப் பின் தொட‌ரும் த‌ந்தையொருவ‌ரின் க‌தை.  இந்த‌க் க‌தை ம‌காஸ்வேதா தேவியின் '1084ன் அம்மா' (Mother of 1084) ஐ சில‌வேளைக‌ளில் எம‌க்கு நினைவுப‌டுத்த‌லாம். ம‌காஸ்வேதா தேவியின்  க‌தையில் ந‌க்ச‌லைட்டில் இருந்த‌ ம‌க‌ன் கொல்ல‌ப்ப‌ட‌ அவ‌னைத் தேடும் தாயிற்குப் ப‌திலாக‌ இங்கே ஓர் த‌ந்தை. ‌ம‌கா ஸ்வேதாதேவியின் க‌தையில் வ‌ரும் அன்னை, த‌ன‌து ம‌க‌ன் இற‌க்க‌முன்ன‌ர் இன்னும் ந‌ன்கு அறிந்துகொண்டிருக்க‌லாமே என்று த‌விப்ப‌தைப் போல இங்கே பியோடோரும் த‌ன‌து வ‌ள‌ர்ப்பு ம‌க‌னிற்கு ந‌ல்ல‌தொரு த‌ந்தையாக‌ இருந்திருக்கலாமே என்று ஆத‌ங்க‌ப்படுகின்றார். உண்மையில் இந்த‌க்க‌தையில் வ‌ள‌ர்ப்பு ம‌க‌ன் பாவெலின் பாத்திர‌த்தினூடாக‌ Dostoyevsky யின் இள‌மைப் ப‌ருவ‌த்தையே கூட்ஸி மீள்வுருவாக்க‌ம் செய்கின்றார்.

த‌ம் வாழ்க்கைக்கால‌த்தில் த‌ம்மை விட‌ இள‌மையான‌வ‌ர்கள் இற‌ந்துபோவ‌தைப் பார்ப்ப‌து என்ப‌து மிகுந்த‌ கவ‌லைக்குரிய‌து; அதுவே பிள்ளைக‌ளாக‌ அமைந்துவிட்டால் இன்னும் கொடுமையான‌து.  நிகிலிஸ்டுக்க‌ளோடு இணைந்து போராடிய‌ Dostoyevsky  பின்னாளில் எப்ப‌டியொரு 'கொன்ச‌ர்வேடிவ்' ஆகின்றார் என்ப‌து சுவார‌சிய‌ம். அது போராட்ட‌ங்க‌ளின் வீழ்ச்சியா அல்ல‌து த‌னிம‌னித‌ர்க‌ளின் மாற்றமா என‌ உள்ளோடிப் பார்ப்ப‌து சில‌ புதிய‌ வெளிச்ச‌ங்க‌ளை ந‌ம‌க்குத் த‌ர‌க்கூடும்.  'The Master of Petersburg' மற்றும் Mother of 1084 கதைகளோடு நீட்சித்துப் பார்க்க 'வார்சோவில் ஒரு கடவுளிலும்' ஒரு பகுதி வருகிறது. அங்கே இப்படி ஒரு தலைமறைவு இயக்கத்தில் இருந்து கொல்லப்படுகின்ற ஓர் இளம்பெண் வருகின்றார் என நினைவு.

இந்த‌ நூலை சா.தேவ‌தாஸ் 'பீட்ட‌ர்ஸ்பர்க் நாய‌க‌ன்'  என‌த் த‌மிழாக்க‌ம் செய்திருக்கின்றார். அதையே நானும் வாசித்தேன்.  சா.தேவ‌தாஸ் நிறைய‌ நூல்க‌ளை த‌மிழாக்க‌ம் செய்திருக்கின்றார், அந்தவகையில் அவரைப் பாராட்ட வேண்டும். ஆனால் இந்நூலைத் தமிழில் வாசித்தபோது நெருடிய ஒரு சிறுவிடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும்.  உதார‌ண‌த்திற்கு He came and left என்ப‌தை 'அவ‌ன் வ‌ந்து(விட்டு) போனான்' என‌ச் சொல்ல‌லாம். 'அவ‌ன் வ‌ந்தான் ம‌ற்றும் போனான்' என‌ எழுதினால் கூட‌ த‌வ‌றில்லை என்றால்கூட‌ எளிதான‌தை நாம் தேர்ந்தெடுக்க‌லாம். இவ்வாறு ப‌ல‌ இட‌ங்க‌ளில் 'ம‌ற்றும்' பாவிக்க‌ப்ப‌டுவ‌து ச‌ற்று உறுத்துகின்ற‌து.  'AND' என்ப‌த‌ற்கு 'ம‌ற்றும்' என்ப‌தை எல்லா இட‌ங்க‌ளிலும் பாவிக்க‌ வேண்டுமா என்ப‌தை தேவ‌தாஸ் ம‌றுப‌ரிசீலிக்க‌ வேண்டுமென்ப‌து என் விருப்பு.
 .....................
Australia' திரைப்ப‌ட‌த்தின் க‌தை ராணி கொமிக்ஸ் மாதிரியான‌ க‌தைப்புத்த‌க‌த்தில் அட‌க்கிவிட‌க்கூடிய‌து. மந்தைக‌ளை நெடுந்தூர‌ம் ஓட்டிச்சென்று குறிக்க‌ப்ப‌ட்ட‌ கால அவ‌காச‌த்திற்குள் இறைச்சிக்காய் விற்ப‌தே க‌தைக்க‌ரு. வ‌ழ‌மை போல‌ வில்ல‌ன்/ காத‌ல்/ நாய‌க‌ன்/நாய‌கி இங்கும் இருக்கின்றார்க‌ள். ஆனால் இப்ப‌ட‌த்தை க‌வ‌ன‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கு இன்னொரு கிளைக்க‌தையாக‌ வ‌ரும் ஆஸ்ரேலியாவின் பூர்வீக‌க்குடிக‌ள்.  ஒருவித‌ மாந்தீரிக‌த்த‌ன்மையுட‌ன் பூர்வீக‌க்குடிச் சிறுவ‌ன் ஒருவ‌ன் திரைப்ப‌ட‌ம் முழுதும் தொட‌ர்ந்து வ‌ருகின்றான். ப‌ட‌த்தின் எந்த‌ இட‌த்திலும் அந்த‌ப் பூர்வீக‌க்குடிச் சிறுவ‌னின் பாத்திர‌ம் சிதைக்க‌ப்ப‌டாம‌ல் எடுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. அவ‌ர‌வ‌ர் அவ‌ர‌வ‌ர் இய‌ல்பின்படி விட‌ப்ப‌டுத‌ல் மிக‌ முக்கிய‌ம் என்ப‌தை மென்மையாக‌ வ‌லியுறுத்தி இத்திரைப்ப‌ட‌ம் முடிகின்ற‌ காட்சி அருமையான‌து.
 .....................
Tin Drum (த‌க‌ர‌ மேள‌ம்) என்கின்ற‌ குந்த‌ர் கிராஸின் நாவ‌லை அதேபெயரிலேயே ப‌ட‌மாக்கியிருக்கின்றார்க‌ள். த‌க‌ர‌ மேள‌த்தோடு திரியும் வ‌ள‌ராத‌ ஒஸ்கார் உண்மையில் ஒரு ப‌டிம‌மே. போரின் நினைவுக‌ளுக்கான‌ ப‌டிம‌ம் என‌க் குறிப்பிட்டுச் சொல்ல‌லாம். ஒருவ‌ர் எவ்வ‌ள‌வுதான் வ‌ள‌ர்ந்தாலும் போரின் நினைவுக‌ளிலிருந்து என்றுமே த‌ப்பியோட‌முடியாது; அதைக் க‌ட‌ந்துபோவ‌து என்ப‌தும் மிக‌க் க‌டின‌மான‌து.  அத்துய‌ர‌மே என்றுமே வ‌ள‌ராத‌ ஒஸ்காராக‌ இங்கே ப‌டிம‌மாக்க‌ப்ப‌டுகின்ற‌து. 2ம் உல‌க‌ப்போருக்கு முன், இந்நாவ‌லின் பின்புல‌மாக‌க் காட்ட‌ப்ப‌டும் ந‌க‌ரான‌ டான்ஸிக் ஒரு சுத‌ந்திர‌ம் உள்ள‌ பிர‌தேச‌மாக‌வே  இருந்திருக்கிற‌து. போரின் பின்ன‌ர் போல‌ந்தின் ஒரு ப‌குதியாக‌ப் போய்விட்ட‌து (இந்ந‌க‌ரிலேயே குந்த‌ர்கிராஸ் பிற‌ந்தார் என்ப‌தும் குறிப்பிட‌த்த‌க்க‌து) டென்ஸிக்கில் இருப்பவ‌ர்க்கு போர் ந‌ட‌க்கும்போது எந்த‌ப் ப‌க்க‌ம் சேர்வ‌து என்ற‌ சிக்க‌ல்க‌ள் வ‌ருகின்ற‌து. ஒஸ்காரின் ச‌ட்ட‌பூர்வ‌மான‌(?) த‌க‌ப்ப‌ன் (அல்பிர‌ட்) நாஸிக‌ளின் ப‌க்க‌ம் சேர்கிறார். ஒஸ்காரின் அம்மா உற‌வு வைத்துக்கொள்ளும் ‍-ஒஸ்காருக்கு நெருக்க‌மான‌- ஜான் போலிஷ்கார‌ர்க‌ள் ப‌க்க‌ம் இணைந்துகொள்கிறார். ஒஸ்காரின் ச‌ட்ட‌பூர்வ‌மான‌ த‌ந்தை யார் என்ப‌தே ஒருவித‌ப் புதிருட‌ன் தான் இத்திரைப்ப‌ட‌த்தில் இருக்கும். அல்பிர‌ட்டும், ஜானும் வெவ்வேறுகால‌க‌ட்ட‌த்தில் போரால் இற‌ந்தும் விடுகின்றார்க‌ள். த‌க‌ர‌ மேள‌ம் ஒரு நெடும்க‌தை. ஒஸ்காரின் பாட்டியில் இருந்து ஆர‌ம்பித்து ஒஸ்காரின் பிள்ளை(?)வரை நீளும் பெரும் குடும்ப‌த்தின் க‌தை.  போரின் அழியா வ‌டுக்க‌ளையும், போருக்குள் ந‌க‌ரும் வாழ்வையும், அத‌ன் பிற‌ழ்வுக‌ளையும் மிக‌த் த‌த்ரூப‌மாக‌ச் சித்த‌ரிக்கின்ற‌து.
 .....................
தேவ‌தாசிக‌ள் ப‌ற்றி அருமையான‌ க‌ட்டுரை ஒன்றை 'வெளி' ர‌ங்க‌ராஜ‌ன் எழுதியிருக்கின்றார். 'பாஸிச‌ம்' போல‌,'ஆணாதிக்க‌ம்' என்ற‌ சொற்பிர‌யோக‌ம் பாவித்து பாவித்து அத‌ன் அர்த்த‌ம் நொய்மைய‌டைந்துவிட்ட‌து என்ற‌ எண்ண‌ம் என‌க்குண்டு. ஆண்ம‌ன‌ம் இய‌ங்கும் வித‌மே மிக‌ அலாதியான‌து. கோரைப்புற்க‌ளைப் போல‌ எங்கு வேண்டுமானாலும் ப‌ட‌ர்ந்து த‌ன‌க்கு வேண்டிய‌தை உறிஞ்சிவிட்டு, தான் பாவிக்கும் வ‌ள‌ங்க‌ளை ச‌க்கைக‌ளாக‌ தூர‌ எறிந்துவிட்டு ந‌க‌ர‌க்கூடிய‌து. இதை இன்னும் கொஞ்ச‌ம் நீட்சித்தால் 'ப‌ய‌முறுத்தும்' அள‌வில் ஏகாதிப‌த்திய‌த்திற்கும் ஏற்றிச் செல்ல‌லாம்.  ஆண் ம‌ன‌தை இழை இழையாக‌ பிரித்துப் பார்த்தால‌ன்றி ஒரு சிறுமாற்ற‌த்தையும் ஆண்க‌ளிடையே ஏற்படுத்திவிட‌முடியாது.  ஆக‌வேதான் 'ஆணாதிக்க‌ம்' என்ற‌ எந்த‌ அதிர்ச்சியையும் த‌ராத‌ நொய்ந்த‌ சொல்லை வைத்து பொதுத்த‌ள‌த்தில்  நாம் எதுவும் செய்துவிட‌முடியாது என‌க்கூறுகின்றேன். இனி உள்நுழைந்து இழைக‌ளை அறுத்து அறுத்துப் பார்த்தாலே ந‌ம்மை நாமே விம‌ர்சிக்கும் சிறுவெளியையாவ‌து அடைய‌முடியும்.

2.0 சுய பிரகடனம்

இந்த‌ப் புதுவ‌ருட‌த்தில் நிறைய‌ {வாசிக்க‌வேண்டும், திரைப்ப‌ட‌ங்க‌ளைப் பார்க்க‌வேண்டும்} என‌ உறுதிசெய்துகொண்டிருக்கின்றேன். ஏற்க‌ன‌வே ருவீற்ற‌ரைத் தூர‌ வில‌த்தி வைத்த‌துபோல‌ ஃபேஸ்புக்கையும் அவ்வ‌ப்போதும‌ட்டும் அவ‌சிய‌ம் இருந்தால் ம‌ட்டும் எட்டிப்பார்ப்ப‌தாய் முடிவு செய்திருக்கின்றேன். இவை எல்லாம் எளிது. ஆனால் இனிக் கூற‌ப்போகின்ற‌ விட‌ய‌த்தை எவ்வாறு காப்பற்ற‌ப் போகின்றேன் என‌த்தெரிய‌வில்லை.

ஆம் ந‌ண்ப‌ர்க‌ளே...! ஜெய‌மோக‌னுட‌னான‌ என‌து ப‌த்தாண்டுப் 'ப‌கை'யை முடித்து வைக்க‌லாமென்று நினைக்கின்றேன். 2001ல் அல்ல‌து 20002ல் 'டிசே த‌மிழ‌னுக்கு' என‌ ஜெய‌மோக‌ன் ப‌திவுக‌ள் விவாத‌க்க‌ள‌த்தில் எழுதிய‌தை ந‌ன்றியுட‌ன் நினைவுகூர்ந்து ஒரு ப‌கைம‌ற‌ப்புக் க‌டித‌ம் கூட‌ அவ‌ருக்கு எழுத‌லாமோ என்று யோசித்த்துக் கொண்டிருக்கின்றேன். 'ப‌கைம‌ற‌ப்பு', 'மீள் ந‌ல்லிண‌க்க‌ம்' என‌ எல்லாத் திசைக‌ளிலிருந்தும் இப்போது பேசிக்கொண்டிருக்கின்ற‌ன‌ர். அத‌ற்கு நான் என்ன‌ செய்ய‌லாம் என்று யோசித்துப் பார்த்த‌தில் நான் யாரோடு க‌ட‌ந்த‌ கால‌த்தில் அதிக‌ 'ப‌கை' கொண்டேனோ அவ‌ரோடு ப‌கை ம‌ற‌ப்புக் கொள்வ‌து ந‌ல‌மென்று நினைத்தே இதை முடிவுசெய்திருக்கின்றேன். ப‌த்தாண்டு கால‌ப் ப‌கையை ச‌ட்டென்று முறிக்க‌ ம‌ன‌சுக்கு க‌ஷ்ட‌மாக‌த்தான் இருக்கின்ற‌து, என்ன‌ செய்ய‌ வ‌ய‌தும் போகின்ற‌து அல்ல‌வா? 

ஈழ‌த்து அர‌சிய‌ல் போல‌ இர‌ண்டு த‌ர‌ப்புக்குமான‌ 'ப‌கை ம‌ற‌ப்பு', 'மீள் ந‌ல்லிண‌க்க‌ம்' போன்ற‌வ‌ற்றை ஒருத‌ர‌ப்பே முடிவு செய்வ‌துபோல‌ என்னால் ஜெய‌மோக‌ன் விட‌ய‌த்தில் செய்வ‌த‌ற்கான் அதிகார‌ம் இருக்கா என்று தெரிய‌வில்லை. ஆக‌வே நான் ஜெமோவோடு 'ப‌கை ம‌ற‌ப்பு' ம‌ட்டும் செய்கின்றேன். 'மீள்ந‌ல்லிண‌க்க‌ம்' சாத்திய‌மா என்ப‌தை ஜெமோவோடு இணைந்துதான் முடிவு எடுக்க‌வேண்டும். ஆனால் இத‌ற்கான‌ ந‌ல்லெண்ண‌ச் சமிக்ஞையாக‌ க‌ன‌டாவில் 'ஜெயமோகன் வாசக‌ர் வ‌ட்ட‌ம்'  ஒன்றைத் தொட‌ங்க‌லாம் என‌வும் இருக்கின்றேன். இத‌ற்கு 'கால‌ம்' செல்வ‌மோ, அ.முத்துலிங்க‌மோ நான் த‌ம‌து இலக்கிய உரிமையைப் ப‌றிப்ப‌தாய் ஆட்சேபிக்க‌மாட்டார்க‌ள் என‌வும் ந‌ம்புகிறேன். 

ஜெமோவோடு பகை மறப்புச் செய்வதற்கு அடிப்படையான 3 காரணங்கள்
(1) எனது வாசிப்புக்களின் அடிப்படையில் நான் நம்பியவர்கள்/ வழிகாட்டுவார்கள் என நினைத்தவர்கள் எதிர்வேகூறமுடியாச் சறுக்கல்களை சந்தித்தமை; தாம் கூறியவைக்கு மாறாக தம் போலியான முகங்களைக் காட்டியமை
(2) ஜெமோவை எப்படி 2000 வாசிப்பு/விவாதங்களினூடாக அறிந்தேனோ ...அதேபோல அவர் இன்றும் இருக்கின்றார். அன்று அவரை எதிர்க்க என்ன என்ன காரணங்கள் இருந்தனவோ அதே  இன்றும் அதே விடயங்கள் மாறாது இருக்கின்றன...ஆகவே அவர் அந்தவகையில் தான் சொன்னவற்றுக்கு எதிராக எந்த வேசமும் போடாமல் இருக்கின்றார் என்பது நிரூபணமாகிறது. இந்த பத்து வருடத்தில் அவரும் மாறவில்லை, அவரோடு சமரசமாகின்ற அளவுக்கு எந்தப் புள்ளியும் எனக்கும் தெரியவில்லை. பிறகும் ஏன் வீணாகப் பகையை வளர்ப்பான் என்றே 'பகை மறப்பு' எனும் முடிவுக்கு வந்திருக்கின்றேன்.
(3) நமக்கு ஏற்புடையதோ இல்லையோ தமிழ்ச்சூழலில் அருகிப்போய்விட்ட ஒரு விவாதச் சூழலை அவர் உருவாக்கிக்கொண்டிருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். எல்லா விவாதத்தின் முடிவிலும் தனது 'நான்' ஐ முன்னிறுத்தினாலும் என்னைப் பொறுத்தவரை அவற்றுக்கிடையில் இருந்து ஏதோ ஒன்றிரண்டு நல்ல விடயங்களையாவது பொறுக்கவோ புதிதாக அறிந்துகொள்ளவோ முடிகிறது என்பதும் உண்மை.
 
இறுதியாய்...
ந‌ண்ப‌ரிட‌ம் கேட்டேன்.... நான் என் 'ப‌கை ம‌ற‌ப்பு' விட‌ய‌த்தில் உங்க‌ளுக்குப் பிடித்த‌ ஒருவிட‌ய‌த்தைச் செய்திருக்கின்றேன். உங்க‌ளுக்கு அப்ப‌டி ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் வ‌ந்தால் என்ன‌ செய்வீர்க‌ள் என‌க் கேட்டேன். அவ‌ர் தன‌து க‌ட‌ந்த‌கால‌த்தில் த‌ன்னை நேசித்த‌, ஆனால் த‌ன்னால் நேசிக்க‌ ச‌ந்த‌ர்ப்ப‌மும் சூழ‌லும் வாய்க்காத‌ ஆண்க‌ளுக்கு நேச‌த்துட‌ன் க‌டித‌ம் எழுதுவேன் என்றார்.

என் ந‌ண்ப‌ரைப் போல‌ உல‌க‌த்திலிருக்கும் பெண்க‌ள் அனைவ‌ரும் இவ்வாறாக‌ 'ப‌கை ம‌ற‌ப்பு'ச் செய்ய‌த் துணிவார்க‌ளாயின் என் வாழ்க்கைக்கால‌ம் முழுதும் தின‌ம் ஒரு காத‌ற் க‌டித‌மாவ‌து என‌க்குக் கிடைக்கும் சந்தர்ப்பம் இருக்கிறது என நினைக்கிறேன். 


(புதுவருடத்து உறுதிமொழிகள் தக்கவைக்கப்படின் இவ்வாறான குறிப்புகள் அவ்வப்போது உங்களை வதைக்கக்கூடும்...)