கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்
Showing posts with label அனுபவப்புனைவு. Show all posts
Showing posts with label அனுபவப்புனைவு. Show all posts

குறிஞ்சித்திணை நேசம்

Wednesday, June 12, 2024


வசந்தகாலத்தில் வந்திருக்கின்ற இந்தப் பனிப்பொழிவு உன்னை நினைப்பதற்காகத்தான் வந்திருக்கவேண்டும். நிலத்தையும் மரங்களையும் பனி, வெண்முகிலாய்ப் போர்த்தியிருக்க எல்லாமே நிசப்தத்தில் உறைந்திருக்கின்றன. பனி மூடிய மலையுச்சிகளிலும், மரங்கள் அடர்ந்த காடுகளிலும் புத்த மடாலயங்கள் அமைந்திருப்பதற்கு, அது மனதை எளிதாக அழைத்துச் செல்லும் அமைதியின் பாதைகளுக்கு எனலாம். பனியைப் பார்க்க உள்ளம் தன்னியல்பிலே நிரம்பும். இந்த வாழ்வே போதுமென மந்திரம் போல சொற்கள் விரியும். மனிதர்களை அவர்களின் அத்தனை தத்தளிப்புக்களோடு அள்ளியணைக்க நெஞ்சம் ததும்பவும் செய்யும்.


'நமக்கு இரண்டு வாழ்க்கை இருக்கின்றன. எமக்கு ஒரு வாழ்வுதான் இருக்கின்றது என்று உணரும்போது, நமது இரண்டாவது வாழ்க்கை ஆரம்பிக்கின்றது' என கன்பூஸியஸ் கூறியதைப் போல, எனக்காகத் தரப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பத்தில்தான் நானுனது நேசத்தை உணர்ந்து கொண்டேன். முதலாவது சந்தர்ப்பத்தில் காதல் என்ற பெயரில் தன்முனைப்பும், பொறாமையும், கோபமும் கொண்ட ஒருவனாக உன்னைச் சீண்டியபடி இருந்தேன். ஏன் இந்த நேசம் இவ்வளவு நம்மை காயப்படுத்துகின்றது என்று இருவரும் பிரிந்து போனோம்.


நமக்கான பாதைகள் கிளை விரித்து வெவ்வேறானது. காதல் இன்றி வாழ முடியா உயிரிகளென்பதால் அதன்பிறகு நாம் புதிய காதலர்களை அல்லது பழைய காதல்களைச் சந்தித்தபடி இருந்தோம். ஒருநாள் அதிர்ச்சியூட்டும் சம்பவமொன்று எனக்கு நிகழ்ந்தபோது ஒரு புதிய நாட்டிலிருந்து உன்னைத் தொடர்புகொண்டேன். எதையுமே அடுத்து சிந்தித்துப் பார்க்க முடியாத உறைந்தநிலையில் இருந்த என்னை அடுத்தடுத்து என்ன செய்வதென்று தொலைவிலிருந்து நீ வழிகாட்டினாய். அன்று நான், நீ அருகிலிருந்தபோது கவனிக்கத் தவறிய. உனது இன்னொரு விசுவரூபத்தைக் கண்டேன்.

'உனக்கு ஒரு பெண்ணோடு இரண்டு காதல்கள் இருக்கின்றன. நீ அப்பெண்ணோடு ஒரேயொரு காதல் வாழ்க்கைதான் இருக்கின்றது என்று உணரும்போது, உனக்கான இரண்டாவது காதல் அவளோடு ஆரம்பிக்கின்றது' என்று கன்பூஸியஸ் எனக்கு மறைமுகமாகச் சொல்லியிருக்க வேண்டும். எனவே ஒரு புதிய பயணத்துக்குத் திட்டமிட்டபோது உன்னால் கூடவே வரமுடியுமா எனக் கேட்டேன். நீ மறுப்பேதுமின்றி வரச் சம்மதித்தாய்.

நீயொரு சகபயணி அதற்கு மேல் இந்தப் பயணத்தில் எமக்கிடையில் எதுவுமில்லை என்று நான் சொன்னது உன்னைக் காயப்படுத்தியிருக்கும். நீயுன் வாழ்க்கையில் என்னைப் போல எத்தனையோ அரைகுறை ஆண்களைச் சந்திருப்பாய். எனவே அந்த சொற்களைத் துடைத்தெறிந்து விட்டு என்னோடு பயணமானாய்.

ஒரு மலையுச்சி வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தோம். விழிகள் அசையும் பக்கமெல்லாம் மலையும் அதன் பசுமையும். மாலையில் சூரியன் மறைகையில் யாரோ செம்மஞ்சளையும், சிவப்பையும் தெளித்துவிட்டால் போல வர்ணஜாலம். மலையிலிருந்து கொஞ்சம் எம்பிப் பறந்தால் முகில்களை எட்டிப் பிடித்துவிடலாம் போல அவ்வளவு அண்மையில் அவை மிதந்தன.

எம் உதவிக்கென்று நின்ற இளைஞனை ஓய்வெடுக்கச் சொல்லி ஒருநாள் அங்கே சமைத்தோம். நீ பிரியாணியும், நான் கோழிக்கறியும் செய்தோம். மலையின் குளிரில் சுடச்சுட எது சாப்பிட்டாலும் மதுரமாகும். உதவிக்கு நின்ற பையனின் கதை கேட்டோம். அம்மாவோடு சண்டைபிடித்து படிப்பை நிறுத்திவிட்டு நண்பனுக்கு உதவிக்கென வந்தவன், இங்கேயே மாதக்கணக்காக நிற்கின்றேன் என்றான். என்ன இருந்தாலும் அம்மா இல்லையா, அழைத்துப் பேசு என்றோம்.

மாதக்கணக்கில் இந்த மலையுச்சியில் தனிமை வாசத்தில் இருந்தவன், நாங்கள் அங்கிருந்து திரும்புவதற்குள் அம்மாவைக் காணவும், கல்லூரிப் படிப்பைத் தொடரவும் போகத் தயாரானான். 'நாங்கள் என்ன அவ்வளவு மோசமாகவா அவனுக்கு பிரியாணியும், கோழிக்கறியும் செய்து கொடுத்தோம், உடனேயே மலையிலிருந்து இறங்கிப் போகின்றானே' என அவனைப் பார்த்து நானும் நீயும் சொல்லிக் கொண்டிருந்தோம். கைகளில் அப்போதிருந்த கொஞ்சப் பணத்தை அவனது ஷேர்ட் பொக்கட்டிற்குள் திணித்தபோது வேண்டாமென்று அவன் மறுத்தபோதும் எங்களுக்கு தம்பி இருந்தால் என்ற 'சென்டிமெண்டால்' அவனை வாயடைக்கச் செய்தோம். தாயைக் காணும் பயணத்தின் இடைநடுவில் அண்ணா/அக்கா, உங்களோடு நான் சேர்ந்தெடுத்த புகைப்படத்தை அனுப்ப மறக்கவேண்டாம் எனத் திருப்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தான்.

இப்படி மனிதர்களோடு நெருக்கமாகி, அவர்களை அறிந்து பிரிந்து போவதுதானே வாழ்க்கை. அதுபோலவே காதலும் என்ற புரிதல் சட்டென்று எட்டிப் பார்த்தபோது உன்னை அணைத்து கூந்தலைக் கோதிக் கொண்டேன். அப்போது நான் எம்.டி.வாசுதேவனின் 'மஞ்சு'வை வாசித்துக் கொண்டிருந்தேன். நீ மீராவின் 'யூதாஸின் நற்செய்தி'யை வாசித்து அதன் தாளமுடியாத பாரத்தால் அடிக்கடி பெருமூச்சுவிட்டு நிறுத்தி நிறுத்தி வாசித்தபடி இருந்தாய்.

'மஞ்சு'வில் விமலா ரீச்சர் தனது காதலனுக்காய் நீண்ட காலமாக காத்திருக்கின்றார். அவருக்கு அந்தக் காதலனடோடு கழித்த கொஞ்ச நாட்களே என்றென்றைக்குமாய்ப் போதுமாயிருக்கின்றது. விமலா ஆசிரியர் உணர்கின்ற அதே குளிரும், அவர் காதலனுடன் ஊடாடித் திளைத்த பொழுதுகளும் நமக்கு இப்போது வாய்த்திருக்கின்றது. நாம் இந்த மலையுச்சியில் வந்து இப்படி உணர்வோம் என்று முற்கூட்டியே எம்.டி.வாசுதேவன் உணர்ந்து எழுதியிருக்கின்றார் போலுமென நினைத்துக் கொள்கின்றேன்.

மாலையில் பறவைகள் கூடடையும் சத்தம் கேட்கின்றது. சூரியன் மெல்ல மெல்ல வர்ணங்களை இழந்து மலைகளுக்குள் காணாமற் போகின்றது. மலைகளின் வீடுகளின் சமையலறையில் இருந்து புகை எழும்புகின்றது. மனிதர்கள் தம் 'வீடு' அடைந்துவிட்டனர். எனது ஆசிரியரான தாய் அடிக்கடி கூறும் 'I've arrived, I'm home' ஐ என் மனம் தன்னியல்பிலே சொல்லிப் பார்க்கின்றது. 'நான் வந்துவிட்டேன்' என்பது, நான் நிகழில் கணங்களுக்கு வந்துவிட்டேன் என்பதாகும். ஒவ்வொரு மூச்சும், ஒவ்வொரு காலடியும், நாம் இங்கே இப்போது இருக்கின்றோம் என்பதை நினைவுபடுத்துகின்றது. அவ்வண்ணமே நாம் இவ்வாழ்வைச் சந்தித்து, புத்துணர்ச்சியையும், ஆற்றுப்படுதலையும் பெறுகின்றோம்' என்பதையே இந்த 'நான் வந்துவிட்டேன், நான் வீட்டில் (இருக்கின்றேன்)' என்பதன் அர்த்தமாகும்.

அந்தப் பொழுதில் நான் உணர்ந்தது, 'I've arrived, I'm home'! உன் கரங்களை எடுத்துக் கோர்த்தபடி, 'எம்மால் எவ்வளவு தூரம் இயல்பாகப் போக முடிகின்றதோ, அதுவரைக்கும் நீயென் காதலியாக இருக்கமுடியுமா?' எனக் கேட்கின்றேன்.

வியப்பில் விரிந்த உன் விழிகளில், அவ்வளவு புத்துணர்ச்சியான ஒரு சூரிய விடியலை அவ்விரவில் நான் தரிசித்தேன்.

******************** 


(Mar 23)

ஓவியம்: இணையம்

மட்டக்களப்பு – 04

Thursday, August 31, 2023


குறும்பட விழாவில் மூன்று குறும்படங்களைத் திரையிட்டிருந்தனர். அரசு சாரா அமைப்பான CARE இன் ஒரு பிரிவு இதை நடத்தியிருந்தது. ஒரு குறும்படம் நுண்கடன் குறித்தும், மற்ற இரண்டு குறும்படங்கள் இன நல்லிணக்கம் பற்றியும் பேசியிருந்தன. மூன்றில் ஒரு படம் பெண் நெறியாளரால் எடுக்கப்பட்டிருந்தது. இன்னொரு திரைப்படத்துக்கான கதை(?)யை கேஷாயினி எழுதியிருந்தார்.


குறும்படங்கள் திரையிட்டு கலந்துரையாடல் நிகழ்ந்தபோது, என்னருகில் இந்நிகழ்வை ஒழுங்குபடுத்திய ஒரு சிங்கள இளைஞர் அமர்ந்திருந்தார். அவரிடம் அரசு சாரா அமைப்பு இப்படி மட்டக்களப்பில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பற்றி படங்கள் எடுப்பது போன்று தெற்கில் (சிங்களப்பகுதியில்) எடுக்கின்றனவா என வினாவினேன். அரசு மட்டுமில்லை, அரசு சாரா நிறுவனங்களும் எப்போதும் சிறுபான்மையினருக்கு வந்து நல்லிணக்கம் போதிக்க கஷ்டப்படுகின்ற அளவுக்கு நாட்டின் பெரும்பான்மையினரிடம் செல்வதில்லை என்பதை நாமறிவோம். அந்த இளைஞர் மாத்தறை, அம்பாறை, கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் இப்படி வெவ்வேறு தலைப்புக்களில் குறும்படங்கள் தயாரிக்க உதவுகின்றோம் என்றார்.

கலந்துரையாடலில் குறும்படங்களின் கதைகளை விட தொழில்நுட்பம் பற்றியதாக விவாதம் நீண்டு சூடு பிடித்தது. நிறைய இளைஞர்/யுவதிகள் வந்திருந்ததைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு இளைஞர் குழாம், குறும்படம் இயக்கிய பெண் நெறியாளரை மட்டும் ‘corner’ செய்து தொடர்ந்து கேள்விகள் கேட்டு குழப்பிக் கொண்டிருந்தது. அந்த இளைஞர்கள், நெறியாளர் voice over (இங்கே நமது கெளதம் வாசுதேவன் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பில்லை) இல் கதையின் பெரும்பாகத்தைச் சொல்லிக் கொண்டு போகின்றார், அது எப்படி காட்சிகளில் கதை சொல்லாது voice over சொல்வது என்பது அவர்களின் வாதம். நானும் காட்சிப்படுத்தல் சார்ந்து அந்த இளைஞர்களின் பக்கம் என்றாலும், அந்த நெறியாளருக்கு அவர் எடுக்க விரும்பும் படைப்பை எப்படி எடுப்பதற்கும் சுதந்திரம் இருக்கின்றது, எனவே ஏன் இப்படி எடுக்கப்பட்டது என்று கேட்பதைவிட, எடுக்கப்பட்டதின் உள்ளே என்ன உள்ளதென்பது பார்ப்பதே நியாயம் என்றேன். மேலும் எழுத்தைப் போலவே, திரைப்படங்களுக்கும் வெவ்வேறு பள்ளிகள் இருக்கின்றனதானே, எனவே எல்லாவற்றையும் நாம் மதிக்கக் கற்றுக்கொள்ளல் கலைக்கு நலம் பயக்கும் எனவும் சொன்னேன்.

கலந்துரையாடலில் எனது கேள்வியாக ஒன்றை ஒழுங்கு செய்தவர்களிடம் கேட்டேன். இங்கே இன நல்லிணக்கம் பற்றி எடுக்கப்பட்ட இரண்டு குறும்படங்களும் தமிழ்-முஸ்லிம் இனங்களைப் பற்றியே எடுக்கப்பட்டிருக்கின்றது. ஏன் எவரும் தமிழ்-சிங்கள அல்லது சிங்கள-முஸ்லிம் இன நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாக எடுக்கவில்லை எனக் கேட்டேன். இதற்கு அரங்கில் இவை ஈஸ்டர் குண்டுவெடிப்பு ஏற்பட்டபின் தமிழ்-முஸ்லிம் உறவின் விரிசல் இன்னும் விரிவானதால் அதையே முன்னிலைப்படுத்தினோம் என்றார்கள். ஈஸ்டர் குண்டுவெடிப்பால் சிங்களவர்களுந்தானே முஸ்லிம்கள் மீது அதிக காழ்ப்பை வெளிப்படுத்தினார்கள் அல்லவா
? எல்லாப் பாடங்களும் முதலில் நம்மைப் போன்ற ஒடுக்கப்படும் சிறுபான்மையினருக்குத்தான் கற்பிக்க வருவார்கள் போலும் என எண்ணிக் கொண்டேன்.

நிகழ்வு முடிந்தபோது, கேள்விகள் கேட்ட உற்சாகமாய் இருந்த இளைஞர்களிடம் போய்க் கதைத்தேன். ‘உங்கள் வயதில் நானும் இப்படித்தான் இருந்தேன், அது தவறில்லை. ஆனால் நீங்கள் அதைச் செயற்பாட்டிலும் காட்டுங்கள் என்றேன். அவர்களும் திரைப்படங்களோடு சம்பந்தப்பட்டவர்கள் என்பதால், பிரசன்ன விதானகே, அசோக ஹந்தகம போன்றவர்கள் ஏதேனும் பட்டறைகளைச் செய்ய வந்தால்ல் தவறாது அவற்றில் கலந்துகொள்ளுங்கள் என்றேன். இந்த நெறியாளர்கள் மிக எளிமையானவர்கள், ஆனால் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ விடயங்கள் இருக்கும் எனச் சொன்னேன். என் கைவசம் அப்போதிருந்த திரைப்படங்கள் சம்பந்தமான தொகுப்பான ‘உதிரும் நினைவின் வர்ணங்களின்’ ஒரு பிரதியையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு விடைபெற்றேன்.

இரவு, மீண்டும் ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டத்திற்குப் போவதற்கு நாம் இருவரும் தயாரானோம். இரவென்பதால் பஸ்களும் அவ்வளவாய் வருவதாய்க் காணவில்லை; தெருவில் போகும் எந்த ஓட்டோவை மறித்தாலும் அதற்குள் ஆட்கள் இருந்தார்கள். ஹனீபா எங்களுக்காய் வந்து நின்று எப்போது வருவீர்களென்று அழைப்பு எடுத்துக் கொண்டிருக்க, வலியோடு இருப்பவரை நாங்கள் கஷ்டப்படுத்துகின்றோம் என்றும் கவலையாக இருந்தது. கொஞ்சத்தூரம் நடந்துபோய் ஊறணி நாற்சந்தியில்(?) ஓட்டோ எடுப்போமென நாமிருவரும் ஏறாவூர்ப் பக்கம் நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

ஒருமாதிரி ஓட்டோவைப் பிடித்து ஏறாவூருக்குப் போனபோது நேரம் இரவு ஏழரைக்கு மேலாகிவிட்டது. நம் காலத்தைய சிறந்த கதைசொல்லி ஹனீபா நமக்காய்க் காத்திருந்தார்.
 ஹனீபா  எப்போதும் என் பிரியத்துக்குரிய முன்னோடி. நமக்காய் உடல் நோவெல்லாம் தாங்கி, தொலைதூரம் தாண்டி வந்து காத்திருந்தார். அவர் தோளணைத்து கரம் பிடித்து முதற் காதலில் இருந்து, கண்டி பெரஹரா யானை, ஜானகிராமனின் நாவல், அரசியல் வரை பலதும் உரையாடினோம். நம்மைச் சேய்களென முன்னே வழிநடத்திச் செல்லும் நம் காலத்தைய வேழம் அவர். களிப்பும், எள்ளல்களும் நிறைந்த கதைகளின் வற்றாத ஊற்றாக நடமாடுபவர். அவருக்குக் என் "தாய்லாந்தை"க் கையளித்தேன். ஹனீபாவின் அண்மையில் வெளிவந்த ‘எண்ட சீவியத்திலிருந்து’  நூல் பற்றியும் நமது பேச்சு  நீண்டது. அதன்  அடுத்த பாகமும் நுஹ்மானின் முன்னுரையுடன் தயாராகிவிட்டது, முதல் தொகுப்பை விட இது இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்றார்.

 

அவர் விடைபெற்றபோது நெஞ்சு நிறைந்த பிரியங்களால் அவர் கைகளில் முத்தமிட்டு அனுப்பி வைத்தேன். ஒரு கணம், நாளை கனிந்து போகும் என் முதுமையின் விம்பத்தை அவரில் பார்த்துத் திகைத்தேன். அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு போய் ஓட்டோவில் ஏற்றியபோது "டேய் நான் 100 மீற்றர், 200 மீற்றர் runnerடா" என்ற அவரின் அந்த இளமைக் குரலைக் கேட்டுப் புன்னகைத்தேன். எந்த ஒரு முத்தத்தினாலும் தீர முடியாதது நமது இந்த இலக்கியப் பித்து.


இதை எழுதும்போதுதான் ஹனீபாவின் சிறப்பிதழை ஓட்டமாவடி அறபாத் உள்ளிட்ட நண்பர்கள் வெளியிட்டதும், அதில் என் ஒரு கட்டுரை பிரசுரமானதும் நினைவுக்கு வந்தது. அறபாத் தொகுப்பை கனடாவுக்கு அனுப்பட்டா என அன்றையபொழுது கேட்டபோது, வீணான செலவு வேண்டாம், நான் இலங்கைக்கு வரும்போது பெற்றுக்கொள்கின்றேன் எனச் சொல்லியிருந்தேன். அதை அறபாத்திடம் இப்போது கேட்டு வாங்க மறந்துவிட்டேன். சரி அடுத்தமுறை கிழக்குக்குப் போகும்போது அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியதுதான். கடந்தமுறை ஓட்டமாவடி அறபாத்தின் வாடிவீட்டில் ஹனீபாவோடு இரவிரவாக இருந்து நாம் இலக்கியம், இன்னபிற பேசியிருந்தோம். இம்முறை அவருடன் இப்படியான ஒரு அவசர குறுகிய சந்திப்பாகப் போய்விட்டதில் சற்றுக் கவலைதான்.

ஹனீபாவைச் சந்திக்கப் போனதில் அங்கே நின்ற குர்ஜித், டீன் கபூர், பர்ஸான் போன்ற நண்பர்களைச் சந்திக்கவும், அவர்களோடு அளாவளாவவும் முடிந்தது. குர்ஜித்தை கடந்தமுறை சாய்ந்தமருதில் சந்தித்திருந்தேன். அவரின் எழுத்து நடை எனக்குப் பிடிக்கும். அவர் நண்பர்களைப் பற்றி மட்டும் எழுதாது, இன்னும் விரிந்த தளத்தில் வேறு விடயங்களையும் எழுதவேண்டும். டீன் கபூரை இம்முறைதான் முதன்முதலில் சந்திக்கின்றேன். அண்மையில் வெளிவந்த அவரின் கவிதைத் தொகுப்பை அன்புடன் தந்திருந்தார். பர்ஸான் தற்சமயம் முழுநேரத் தொழிலாக இயற்கை விவசாயத்தில் இறங்கிவிட்டார் எனச் சொன்னார்.

அன்றைய மாலையில் ஜெய்சங்கர் தனது குழுவினருடன் கூத்து சார்ந்த நிகழ்வுகளைச் செய்துகொண்டிருந்தனர். அதையும் அவ்வப்போது போய் எட்டிப் பார்த்தேன். அதன் பிறகு பறங்கிய சமூகத்தின் இசை நிகழ்வு நடந்தது. ஒருவகையில் பார்த்தால் கிழக்கு மாகாணந்தான் எல்லாவித இனக்குழுக்களையும் அதனதன் இயல்புகளோடு இப்போதும் தாங்கிக்கொண்டிருக்கின்றது போலத் தோன்றியது. பல்வேறு இன/சமூகக்குழுக்களின் பராம்பரிய கலைவடிவங்களுக்கான ஓர் தளமாக இந்தப் புத்தகக் கொண்டாட்டம் இருப்பதைப் பார்க்க இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்த நாள் காலை மட்டக்களப்பு நகரைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம். காந்தி பூங்கா அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அருகிலிருந்த மட்டக்களப்பு நூலகத்தில் இருக்கும்போது மலர்ச்செல்வன் வந்து சந்தித்தார். அவரோடு கொஞ்சநேரம் இலக்கியம் பேசியபின்
, அவர் என்னை கல்லடிப் பழைய பாலத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் கூட்டிச் சென்றார். அப்போது நான் இந்திய இராணுவப் பின்னணியில் எழுதும் நாவல் பற்றி அவருக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன். தனக்கும் இந்திய இராணுவ காலத்தில் மிகக் கசப்பான அனுபவங்கள் இருக்கின்றன என்று சொல்லி, எந்த இடத்தில் இந்திய இராணுவத்தோடு இயங்கிய ‘தமிழ்த் தேசிய இராணுவம்’ தன்னைப் பிடித்தது, பிறகு அவர்களிடமிருந்து தான் எப்படித் தப்பித்தேன், எங்கே சில நாட்களாக எவரினதும் கண்களிலும் படாது பதுங்கியிருந்தேன் என்று சில இடங்களைக் காட்டிக் கொண்டு போனார். 'வடமாகாணத்தைப் போன்றல்லாது கிழக்கு மாகாணத்து இந்திய இராணுவ காலம் வித்தியாசமானதாக இருக்கும், நிச்சயம் நீங்கள் இவற்றைப் பதிவு செய்யவேண்டும்' என்றேன். அத்தோடு மலர்ச்செல்வன் மட்டக்களப்பு நூலகத்தோடு இணைந்து சில வாரங்களுக்கு முன், மூன்று நாட்கள் புத்தகக் கண்காட்சியை மட்டுநகரில் ஏற்பாடு செய்திருந்தார். அந்த அனுபவங்கள் பற்றியும், அதைத் தொடர்ந்து செய்யவேண்டியன் அவசியம் பற்றியும் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

அன்றைய மாலை
, கேஷாயினியும் அவரது துணைவரும், எமக்கான இரவுணவை வேண்டாம் வேண்டாமென மறுத்தபோதும் செய்து கொண்டு வந்திருந்தார்கள். இறால் பிரட்டல், மீன் குழம்பு, மீன் பொறியல், மீன் சொதி என ஒரு அறுசுவை விருந்து பிட்டோடு தந்தார்கள். மட்டக்களப்புக்கு வந்த பாக்கியத்தை நான் இப்போது அடைந்தேன் என்றெண்ணியப்படி நன்கு இரசித்துச் சுவைத்துச் சாப்பிட்டேன்.

அன்றைய இரவு நான் கொழும்புக்கும், வடகோவையார் யாழ்ப்பாணத்துக்கும் போகும் பஸ்களைப் பதிவு செய்திருந்தோம். இரவு 9 மணியளவில், வாவியில் பாடும் மீன்கள் ஒளிர மட்டக்களப்பை விட்டு நாங்கள் நீங்கினோம்.

****************************

 

(Jun 01, 2023)


மட்டக்களப்பு – 03

Wednesday, August 30, 2023


ஏறாவூர்ப் புத்தகக் கொண்டாட்டத்திற்காக, ஊறணியில் இருந்து பஸ் காலையில் எடுத்தாலும் வெயில் சுட்டெரித்தது. ஏறிய பஸ்சில் மருதமுனையில் இருந்து வந்த ஜமீலும் இருந்தார். வடகோவையார் அவரோடு பேச்சுக் கொடுக்க, நான் வாவியை யன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டுப் போனேன். ஏறாவூரில் இறங்கி ஒரு கடையில் தண்ணீர் வாங்கியபோது, அந்தக் கடைக்காரர் எங்கே போகின்றீர்கள் எனக் கேட்டார். போகும் இடத்தைச் சொன்னபோது, முதல்நாள் இரவு ‘வாசிப்பின் அவசியம்’ பற்றி, ‘அலைபேசிகளைச் சும்மா துழாவுவதை விட்டுவிட்டு  புத்தகங்களைத் தேடி வாசியுங்கள்’ என்ற பஷீர் ஷேகுவின் பேச்சைப் பற்றி அந்த கடைக்காரர் நினைவூட்டிப் பேச எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவரோடு கொஞ்ச நேரம் புத்தக வாசிப்புப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, நடுத்தெருவில் கத்தரி வெயிலில் காய்ந்துகொண்டிருந்த வடகோவையாரும், ஜமீலும் எங்கே என்னைக் காணவில்லை எனத் தேடி வந்தனர்.


பஸ்சில் இருந்து இறங்கி உள்ளே கொஞ்சத்தூரம் வாவிக்கரையோரமாக நடந்துபோய்த்தான் புத்தகக் கண்காட்சியை அடைய முடியும். ஏற்கனவே கால் நோவோடு (காதல் நோவல்ல) அல்லாடிக் கொண்டிருந்த வடகோவையார் கஷ்டப்படத் தொடங்கினார். கண்காட்சியை அடைந்தபோது வெயிலின் உக்கிரத்தைத் தணிக்க, கடற்கரையோரமாகப் போவோம் என்று இருவரையும் கூட்டிச் சென்றேன். மருதமரங்களை நிறைய நாட்டி ஓர் அழகான பூங்காவை அருகில் உருவாக்கியிருந்தார்கள். வெயிலுக்கு அது நன்கு இதமாக இருந்தது. ஜமீலிடம் உங்கள் ஊரின் பெயரும் மருதமுனை என்றால் நிறைய மருதமரங்கள் இருக்குமே எனக் கேட்டேன். இல்லை, இப்போது வீடுகள் நிறையக்கட்டி, மருதமரங்களே கிட்டத்தட்ட அடையாளம் இல்லாமல் போய்விட்டன என்றார். சில வருடங்களுக்கு முன் அக்கரைப்பற்றில் ஹசீனின் வீட்டில் நின்று, ரியாஸ் குரானாவோடு அவரின் மோட்டார்சைக்கிளில் சென்று மருதமுனைக் கடற்கரையில் நண்பர்கள் சிலரைச் சந்தித்தது நினைவில் மேலேறி வந்து மிதந்தது.

மருதமரங்களோடு கொஞ்சம் சல்லாபித்து விட்டு கண்காட்சிக்குப் போனபோது ‘கூத்து மீளுருவாக்கம்’ குறித்து நல்லதொரு கருத்தரங்கு போய்க்கொண்டிருந்தது. பேசிய அனைவரும் அந்தத் துறைசார்ந்தவர்கள் என்பதால் சுவையானதாகவும் சுவாரசியமானதாகவும் நிகழ்வு இருந்தது. என்ன சிக்கல் அங்கே இருந்ததென்றால், ஒரு சிலர் நேரக்கட்டுப்பாடில்லாது நீண்ட பேச்சுக்களை அளிக்கையில் மூளை தகவல்களைச் செரிக்கச் சிரமப்படத் தொடங்கியது. காலை 11இற்குத் தொடங்கிய அமர்வு, வரவாளர்கள் பேசி முடிக்க மதியம் 2இற்கு மேலாகிவிட்டது. விளையாட்டு மைதானத்தில் நடுவில் கூடாரம் அமைத்த அரங்கின் மேலே வெயிலோன் கூடவே நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தார். வாரவிறுதி என்பதால் மைதானத்துக்கு வந்த மாணவர்கள் ஓட்டம்/தடைதாண்டிய ஓட்டம்/குண்டெறிதல் போன்றவற்றில் பயிற்சியும் பெற்றுக் கொண்டிருந்தனர். அது யாழில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கழிந்த என் பதின்மக் காலங்களை நினைவுபடுத்தியது.

கூத்து மீளுருவாக்கத்தில், நான் நிதானமாகக் கேட்ட ஓரிரு உரையை வைத்து சில கேள்விகளை அரங்கில் கேட்டேன். அளிக்கப்பட்ட ஒரு பேப்பரில், கூத்து மீளுருவாக்கம், சு.வித்தியானந்தனால் செய்யப்பட்டது என்று கருத்தை மறுத்து, அது 2000களில் ஜெய்சங்கரால் கிழக்கில் செய்யப்பட்டது என்று கூறப்பட்டது. எல்லாக் கலைகளிலும் ஏற்பும் மறுப்பும் இருப்பது இயல்பானதே. ஒன்றையென்று ஏற்றும் மறுத்தும் வளர்வதே கலை. என் கேள்வியாக கூத்து மீளுருவாக்கம் 2000களில் செய்யப்பட்டது என்றால் அது மற்றப் பகுதிகளிலும் (மலையகம், வன்னி, யாழ்) இந்த மீளுருவாக்கம் ஒரே நேரத்தில் நடைபெற்றதா? அவ்வாறு நடைபெறாமல் 2000களில் கிழக்கில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் செய்யப்பட்டது என்றால் பொதுவாக கூத்தில் மீளுருவாக்கம் செய்யப்பட்டது என்று சொல்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்று கேட்டேன். அதன் தொடர்ச்சியில் கூத்து மீளுருவாக்கம் கிழக்கில் செய்யப்பட்டபோது என்னென்ன சவால்களை நீங்கள் எதிர்கொண்டீர்கள் எனவும் கேட்டேன்.

என் மட்டுப்படுத்தப்பட்ட கூத்து அறிவைப் பொறுத்தவரை (புலம்பெயர்தேசத்திலே
யே அதிகம் கூத்துக்களைப் பார்த்திருக்கின்றேன்) யாழ்ப்பாணத்தவர்களிலே ஊருக்கு ஊர் கூத்துக்களின் தனித்துவமான தன்மைகளும், அவர்களிடையே மரபுமான பிரதிகள் மீளுருவாக்கம் செய்யப்படும்போது சர்ச்சைகள் தோன்றுவதையும் அறிந்திருக்கின்றேன். 
கிழக்கில் மரபான பிரதிகளும், கூத்துக்கான ஆட்டமும்/இசையும் மாற்றப்படும்போது எவ்வாறு அது உள்வாங்கப்பட்டதென்றும் எனது கேள்வியை இன்னும் விரித்துக் கேட்டேன். ஜெய்சங்கர் இதற்கான விளக்கத்தை தன் கள ஆய்வுகளையும் அனுபவங்களையும் முன்வைத்தும் விரிவாகத் தந்திருந்தார்.

ஜெய்சங்கர் இதற்கு விளக்கந் தந்தனால், அவரைப் போன்றவர்கள் ஒரு தசாப்தத்திற்கு முன் பறையை பல்கலைக்கழக மட்டங்களில் கொண்டு வந்தபோது ஏற்பட்ட சர்ச்சையை முன்வைத்தும் கேள்வி கேட்டேன். ஒரு சமூகம் பறையடிப்பதாலேயே இழிவாக்கம் செய்யப்பட்டு அதை ஒருபொழுது கைவிட்டபோது இதை அதன் பாதிப்பு/அவமானங்களைத் தாங்காதவர்கள் ‘நம் தமிழர் இசை’ என அதை முன்னோக்கி எடுத்து செல்வது நியாயமா என்பதே என் கேள்வியாக இருந்தது. இன்றைக்கு பறை பழக்குபவர்கள்/பழகுபவர்கள் இந்தக் கேள்வியை எதிர்கொண்டு அதற்கு உகந்த நியாயத்தை அளிக்காது அதை எடுத்துக் கொண்டு செல்வதில் சிக்கல்கள் புலம்பெயர் தேசங்களிலும் இருக்கின்றது என்றும் குறிப்பிட்டேன்.

ஜெய்சங்கர் இது குறித்து ஒரு நீண்ட விளக்கத்தைத் தந்தார். நான் அதில் உடன்படவும் மறுக்கவும் நிறையப் புள்ளிகள் இருந்தாலும், ஜெய்சங்கர் நிதானமாக என் கேள்வியை எதிர்கொண்டு பதிலளித்தது நிறைவாக இருந்தது. இவ்வாறான விடயங்கள் இன்னும் இவ்வாறான பொதுக்களத்தில் நிதானமாக பல்வேறு தரப்புக்களுடன் உரையாடப்பட வேண்டியவை. அந்த அரங்கில் இருந்த அனைவரும் ‘கூத்து மீளுருவாக்கம்’ குறித்து எதிர்க்கருத்துக்களாயினும் அதைச் செவிமடுத்து உரையாடக் கூடியவர்களாக இருந்தது மகிழ்ச்சியைத் தந்தது. இந்நிகழ்வில் கிழக்குப் பழங்குடி மக்களைப் பிரதிநிதிப்படுத்துபவர்களும் வந்திருந்தனர். அவர்களும் கூத்துக்கள் குறித்தும், மீளுருவாக்கம் பற்றியும் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இவ்வாறு இந்நிகழ்வு நீண்டதால் புத்தகக் கண்காட்சிக்கு இடையில் வந்துபோன சில நண்பர்களுடன் பேசமுடியாதும் போனது சற்றுக் கவலைதான். வடகோவையாரும், அம்ரிதா ஏயெமும், நானும் சற்று நேரம் அரங்கில் இருந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு அம்ரிதா ஏயெம் பஸ்ஸெடுத்து அவரது வீட்டுக்குப் போக, நாங்கள் அருகிலிருந்த ஒரு கடையில் சாப்பிட்டுவிட்டு ஊறணிக்குப் பஸ்ஸில் புறப்படத் தொடங்கினோம்.


மாலை 4 மணியளவில் குறும்பட விழா ஒன்று ஊறணி அமெரிக்கன் மிஷன் தேவாலயத்தில் நடக்க இருந்தது. அதில் பார்வையாளராகக் கலந்துகொள்ள கேஷாயினி எனக்கும் வடகோவையாருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். விடுதிக்கு வந்த வடகோவையார் வெயிலில் நடந்து உருகி, 'என்னால் குறும்பட விழாவுக்கு வரமுடியாது, அவ்வளவு களைப்பாக இருக்கிறது, அறைக்குள் இருந்து ஓய்வெடுக்கப்போகின்றேன். நீ மட்டும் அங்கே போய்விட்டு வா' என்றார். அத்துடன் மாலையில் மீண்டும் புத்தகக் கண்காட்சிக்குப் போகவும் வேண்டியிருந்தது. நமது பிரியத்துக்குரிய எஸ்.எல்.எம்.ஹனீபா நம் இருவரையும் சந்திப்பதற்காய் ஓட்டமாவடியில் இருந்து அங்கே வருவதாகச் சொல்லியிருந்தார்.

நான் குறும்பட விழாவுக்கு செல்வதற்கு ஆயத்தமாகத் தொடங்கினேன்.

*************************************


(Jun, 2023)


மட்டக்களப்பு – 02

Monday, August 28, 2023

 

ஒரு நகரத்திற்குப் போனால் அதன் நூதனசாலைகளைத் தேடிப் போய்ப் பார்ப்பது என் வழமையாக இருக்கும். அதுபோல எங்கெங்கெல்லாம் புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றதோ அவற்றையும் தவறவிடாது சென்று பார்ப்பேன். சில புத்தகக் கண்காட்சிகளை – அவை சிறிதோ பெரிதோ- புகைப்படங்களில் பார்த்து என் நினைவின் சேகரங்களைப் பத்திரப்படுத்தி, அடிக்கடி மீள மீள அசை போட்டபடியிருப்பேன். ஓரிடத்திற்கு போக வேண்டும் என்று விரும்பினால், அது அப்போது சாத்தியமில்லை என்று தெரிந்தாலும், அந்த இடத்தைத் தொடர்ந்து manifest செய்துகொண்டிருந்தால் பின்னர் ஒருபொழுது அது நிச்சயம் நிகழும் என்பது என் பாமர நம்பிக்கை. அவ்வாறு மனதில் உருப்போட்டு உருப்போட்டே பொருளாதார நெருக்கடி பிதுக்கியபோதும், முதன்முதலாக சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சில வருடங்களுக்கு முன் போய் இறங்கியிருக்கின்றேன். இலங்கையில் பிரமாண்டமாக பண்டாரநாயக்க சர்வதேச அரங்கில் நடக்கும் புத்தகக் கண்காட்சியிலும் சில தடவைகள் பங்குபெறும் வாய்ப்பைக் காலம் தந்திருந்தது.

மேலும் எனக்கு சின்ன புத்தகக் கடைகள் பிடிப்பது போல, சிறியதாக நடக்கும் புத்தகக் கண்காட்சிகளும் பிடிக்கும். தொடர்ந்து ஊக்கத்தோடும், விருப்பத்தோடும் இந்நிகழ்வுகள் ஆரம்பித்து பின்னர் காலத்தின் நீட்சியில் பெரிதாக வளரும். இன்று பெரும் செலவில் நடக்கும் சென்னை புத்தகக் கண்காட்சி 20/25 வருடங்களுக்கு முன் எவ்வளவு சிறியதாக ஆரம்பித்திருக்கும் என்பதைப் பழைய புகைப்படங்களைப் பார்த்தாலே தெரியும். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இப்போது புத்தகக் கண்காட்சிகளும், விற்பனைகளும் நடைபெறத் தொடங்கியிருக்கின்றன. உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரமின்மைகளைத் தாண்டி இந்நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவோர் உண்மையிலே போற்றுதற்குரியவர்கள்.

கடந்தமுறை அக்கரைப்பற்றில் நிகழ்ந்த புத்தகக் கண்காட்சியை இம்முறை ஏறாவூரில் நண்பர்கள் ஒழுங்குபடுத்தியிருந்தார்கள். நானும் வடகோவையாரும் வெள்ளியிரவு ஏறாவூர் புத்தகக் கண்காட்சிக்குப் போனோம்.  நாம் அங்கே நுழைந்தபோது ‘வாசிப்பின் முக்கியத்துவம்’ பற்றிய பேச்சு மேடையில் போய்க் கொண்டிருந்தது. வடகோவை வரதராஜரைக் கண்டுவிட்டு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் ஒரு உரையை ஆற்றக் கேட்டனர். அவர் உரை எதையும் நிகழ்வுக்காய்த் தயாரித்து வரவில்லை எனினும் குறுகிய உரையெனினும் நல்லதொரு பேச்சை வழங்கியிருந்தார். என்னோடு திரியும் இந்த மனிதருக்கு இன்னமும் அறிவு வற்றிப் போகாமலிருக்கின்றது என்பது எனக்குப் பெரும் வியப்பாயிருந்தது.

அந்த உரையின் முக்கிய கேள்வியாக, 'ஏன் நாம் வீதிகளில் பழமரங்களை நடுவதில்லை?' என்பது இருந்தது. இலங்கையைப் பொறுத்தவரை எனக்கு அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. கனடாவில் இப்படி பழமரங்களைத் தெருக்களில் நடும்போது, பெரும் செலவு (high maintenance) அதைப் பராமரிக்கத் தேவையாயிருக்கின்றது என்றொரு காரணத்தைச் சொல்கின்றார்கள். அதே சமயம் அங்கே சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள் வீட்டு முன்றலில் பழமரங்களை நடாவிட்டாலும் (ஒவ்வொரு வீட்டின் முன்னும் ஆகக்குறைந்தது ஒரு மரத்தையாவது நகரசபை நாட்டிப் பராமரிக்கும்), பின்வளவுகளில் விரும்பிய எத்தனை பழமரங்கள் என்றாலும் நடலாம். எனக்கு கனடாவில் சொந்தமாக வீடு இல்லாததால், பூசலார் நாயனார் போல எனக்குப் பிடித்த மரங்களை  மனதுக்குள் வளர்த்து பழங்களைப் பறித்துச் சுவைத்துக் கொண்டிருப்பேன்.

ஏறாவூர் புத்தகக் கண்காட்சியில் புத்தகக் கடைகள் என்றால் பத்திற்கும் குறைவானவையே. அதிலும் எனக்குப் நெருக்கமான புத்தகங்களை இரண்டோ மூன்று கடைகளில்தான் வைத்திருந்தனர். சிராஜ் மஸூர் போன்ற நண்பர்களை முதன்முதலாக நேரில் சந்தித்து உரையாடினேன். இதற்கிடையில் 9 மணிக்குள் திரும்பிப் போய்விடவேண்டும் என்று வடகோவையார் அந்தரப்பட்டுக் கொண்டிருந்தார். ஏன் 9 மணியோடு ஊறணிப் பக்கம் ஊரடங்குச் சட்டமோ எனக் கேட்டேன். இல்லையடா வயிறு ஏதோ செய்கின்றது, போகின்ற வழியில் ஏதாவது கடையில் வேப்பெண்ணெய் போத்தல் இரண்டு வாங்கிக் கொண்டுபோக வேண்டும் என்றார் அவர்.

அ
டுத்த நாள் காலையிலே சென்று புத்தகக் கண்காட்சிக்குப் போய் புத்தகங்களோடும் நண்பர்களோடும் ஆறுதலாய்க் கழிப்பதென தீர்மானித்திருந்தோம். ஊறணியிலிந்து ஏறாவூர்க்கு போவதற்கு மட்டுமே 1500 ரூபாவை முதல் நாளிரவு ஓட்டோவுக்குக் கொடுத்திருந்தோம். ‘டேய் நான் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு வர பஸ்ஸுக்கே இந்தளவு பணம் செலவழித்தது இல்லையே’ என வடகோவையார் புலம்பிக் கொண்டிருந்தார். ‘அதற்காக நீங்கள் ஒவ்வொருநாளும் யாழுக்குப் போய் திரும்பி ஏறாவூருக்குப் வரமுடியுமா, வெற்றிலை பாக்கைப் போட்டுவிட்டு சலம்பாமல் இருங்களென' எரிச்சலோடு சொன்னேன். என்ன ஆனாலும் நாளைக்கு பஸ்ஸில் ஏறித்தான் ஏறாவூருக்குப் போவதென்று நாங்கள் இருவருன் தீர்மானித்தோம். பஸ்ஸில் ஒருவர் அங்கே போவதற்கு செலவு 100 ரூபாய்க்கும் குறைவானது.

காலையில் விழித்தபோது காலைச் சாப்பாட்டை ஹொட்டலை நடத்துபவர்கள் வாங்கித் தருகின்றோம் என்றார்கள். வந்த நாளிலிருந்து Fried Rice, கொத்துரொட்டியென்று சாப்பிட்டோமே தவிர, மட்டக்களப்புச் சாப்பாடு எதுவும் உருசித்துப் பார்க்கவில்லை. எனவே இடியப்பம், புட்டோடு மட்டுநகர் கறிகளைச் சுவைப்போம், வாங்கி  வாருங்கள் எனச் சொன்னோம். அவர்களோ எல்லாம் இங்கே எட்டு மணிக்கு முன்னர் முடிந்துவிட்டன என்று பரோட்டாவை வாங்கி வந்து எங்களைக் கவலைப்படச் செய்தார்கள்.

இதற்கிடையில் வடகோவையாருக்கு அறம்புறமாய் தொலைபேசி அழைப்புக்கள் வந்துகொண்டிருந்தன. ‘ஐயா, உங்களை நேரில் பார்க்கவேண்டும், எங்கள் வீட்டுக்கு வந்து விருந்துண்ணுங்கள்’ என்று அவரின் தோழிகளின் அழைப்புக்கள் வேறு. எமக்காய் அறுசுவை மதியவுணவு கல்முனையில் செய்து வைத்திருக்கின்றேன் என்று சொன்ன உமா வரதராஜனின் அழைப்பை,  உமாவின் வீடு 50 கிலோமீற்றர்கள் தொலைவிலிருக்கின்றது, எனக்கு காலும் வலிக்கிறது, அங்கே போவது கடினம் என்று சொல்லி நிராகரித்த வடகோவையாருக்கு அவரின் ஒரு தோழி கூட கடைசிவரை சாப்பாடு போடாதது மட்டுமில்லை, சந்திக்கக் கூட வரவில்லை என்பது பெருஞ்சோகந்தான்.

இனிக்க இனிக்க தொலைபேசியில் பேசும் என் புலம்பெயர் நண்பர்கள்தான், இலங்கைக்கு வரும்போது என்னைச் சந்திக்காமல் திரும்பிப் போகின்றார்கள் என்று நினைத்தேன். இப்போது மட்டக்களப்பாரும் என்னை இப்படிக் கைவிட்டு விட்டார்களே என்று அவர் சொல்லிப்  புலம்பிக் கொண்டிருந்ததைப் பார்க்க எனக்கே பாவமாய்த்தான் இருந்தது. இப்போது மட்டக்களப்பார் அரசியலில் மட்டுமில்லை, காதல்களிலும் யாழ்ப்பாணிகளைச் சரியாகப் புரிந்துகொண்டுவிட்டார்கள், இனி ஏமாற்றுவது அவர்களைக் கடினம் என்று நான் சொன்னேன். அப்படியெனில் உனக்கு மட்டும் 3 கிரஷ் இருக்கிறது என்று சொல்கின்றாயே, எப்படி அது சாத்தியம் என்றார். அதற்குத்தானே 15 வருடங்களுக்கு முன்னரே ‘யாழ்ப்பாணியின் சோக வாக்குமூலம்’ என்றொரு கதையை எழுதி சொந்த ஊருக்குத் துரோகம் செய்துவிட்டதாக பொதுவில் அறிவித்துவிட்டேன் என்றேன்.


இதுவரை வருந்திக் கொண்டிருந்த வடகோவையாருக்கு இப்போது உற்சாகம் கொப்பளிக்கத் தொடங்கிவிட்டது. 'நான் யாழ்ப்பாணம் போனதும் இப்படி ஒரு கதையை யாழ்ப்பாணிகளைத் திட்டி எழுதுகின்றேன். தோழிகளைச் சம்பாதிக்கின்றேன்' என்றார். ‘30 வருடங்களாக கதைகளை மீண்டும் எழுதமாட்டேன் என்று அடம்பிடித்த நீங்கள் இந்தக் காரணத்துக்காக கதைகளை எழுதத்தொடங்கினால் அவமானமாக இருக்காதா’ எனக் கேட்டேன். 'இப்படித்தானடா நான் குண்டசாலையில் இருக்கும்போது ஒரு சிங்களப் பிள்ளை, என் குரல் ஜெயகாந்தனின் சிம்மக்குரல் மாதிரி இருக்கிறது..’ எனக் காலையிலே ஒரு கதையைச் சொல்லி இல்லாத மீசையை முறுக்கத் தொடங்கினார்.

நான் உடனேயே 'தயவு செய்து நிறுத்துங்கள், பஸ்ஸுக்குப் போக நேரமாகிவிட்டது'  என்றேன். நேற்று இரவு வேப்பெண்ணெய் குடித்துவிட்டு என்னைத் தூங்கவிடாது இரவிரவாய் ஒரே காதல் பிதற்றல். இதற்குச் சில நாட்களுக்கு முன்தான்,  கனடாவில் இருக்கும் செல்வத்தார் ‘பனிவிழும் பனைவனம்’ என்று ஒரு புத்தகத்தின் அரைவாசிவரை அவரின் முதல் காதலியான பத்மினியை பற்றி உருகி உருகி அவர் எழுதியதை வாசித்து மனம் நொந்துமிருந்தேன். இவர்கள் ஒரேயொரு காதலை வைத்தே இப்படி நாளும் பொழுதும் உருகியும், 200 பக்கங்களில் புத்தகங்களில் எழுதுவார்கள் என்றால், என்  இருபதுக்கும் காதல் கதைகளைச் சொல்லத் தொடங்கினால் இவர்களால் தாங்கமுடியாது போகும். அவற்றை எழுதத் தொடங்கினால் அது 'வெண்முரசை' விட, 25,000 பக்கங்கள் தாண்டிய பெருங்காப்பியமாக இருக்கும். சொல்லத் தொடங்கினால் 'ஆயிரத்தொரு அரேபிய இரவுகளை' விட நீண்டபடி வருடக்கணக்கில் போகும்.

பஸ்ஸில் ஏறாவூருக்குப் போகின்றோம், வெயிலும் உக்கிரமாக இருக்கின்றதென்று sun burn நடப்பதைத் தவிர்க்க, வடகோவையாருக்கு என்னிடம் இருந்த Sun screen lotionஐ எடுத்துக் கொடுத்தேன். அவர் ஏதோ fair & lovely என்ற நினைப்பில் முகத்தில் அப்பி தேய் தேய் என்று 'சிவாஜி'யில் வந்த ரஜினி போல தேய்த்துக் கொண்டிருந்தார். ஐயோ, இது UV கதிர்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும் லோஷன்,  இப்படி இதை நீங்கள் முகத்தில் தேய்த்தால், சூரிய பகவான் நேரடியாகவே உங்கள் முகத்தில் வந்து குடியேறிவிடுவார் என்று சொல்லி அதைப் பாய்ந்து போய் பறித்தெடுத்தேன்.

மட்டக்களப்புக்கு புத்தகக் கொண்டாட்டத்திற்கென வந்து, புத்தகங்களைப் பார்த்ததையோ இடங்களைப் பார்த்த்தையோ விட மிச்ச எல்லாவற்றையும் செய்தாயிற்று என நான் நினைத்துச் சலித்துக் கொண்டு ஊறணியில் இருந்து ஏறாவூருக்கு வடகோவையாரோடு பஸ் எடுத்தேன்.

**********************


(May 23, 2023)


மட்டக்களப்புப் பயணம் – 01

Sunday, August 27, 2023



ம
ட்டக்களப்புக்குப் போவதற்கு, ஏறாவூரில் நிகழ்ந்த புத்தகக் கண்காட்சி ஒரு காரணம். மற்றக்காரணம் அங்கே வடகோவை வரதராஜரின் புதிய நூலொன்று ‘கஸல்’ பதிப்பகம் ஊடாக வெளிவருவதாகவும் இருந்தது. என்னோடு வேறு சில நண்பர்களும் மட்டக்களப்புக்கு வருவதாக இருந்தாலும். கொழும்பிலும், பாசிக்குடாவிலும் எழுத்தாளர் ஒருவரால் நிகழ்ந்துவிட்ட சில அசம்பாவிதங்களால் தயக்கத்துடன் அவர்கள் பின்வாங்கிவிட்டார்கள்.

நான் மட்டும் விடிகாலை
6 மணிக்கு கொழும்பிலிருந்து மட்டுநகருக்கு ரெயின் எடுத்து, மாலை 3.30 மணிக்கு மட்டக்களப்பு ரெயின் ஸ்ரேசனின் போய் இறங்கினேன். கடந்த சில மாதங்களாக வடகோவையாரை யாழை விட்டுப் பெயர்த்தெடுத்து எங்கேயாவது நண்பர்களுடன் சேர்ந்து சந்திப்பதற்கென திட்டமிடுவேன். அவரோ, அவர் வளர்க்கும் ஆடு, நாய், பக்கத்து வீட்டு பர்வதம் மாமி ஆகியோர் தான் ஊட்டி விடாவிட்டால், பட்டினி கிடந்து வாடிவிடுவார்கள் எனச் சொல்லி, வீட்டை விட்டுப் புறப்படவே  தயங்கிக் கொண்டிருப்பார்.


நேரத்தைப் பொன் போல
ப் போற்றுவோருக்கு உரியவை இரவுநேர அதிதுரித பஸ்கள். இயற்கையையும், கிராமப்புறங்களையும் ஆறுதலாக இரசித்து, ரெயினுக்குள் விற்கப்படும் கச்சானையும், வடையையும், ஹெலப்பவையும் (இலையப்பம்) சுவைத்தபடி போகின்ற என்னைப் போன்றவர்கள் பயணிப்பதற்கு ரெயினே பொருத்தமானது. இலங்கையில் ரெயினில் போவோர் சில நேரம் திகைக்கும் இடங்களுண்டு. முன்னே போய்க் கொண்டிருக்கும் ரெயின், சட்டென்று எங்கேயாவது ஸ்ரேசனில் நிறுத்தி பின்பக்கத்தால் ஓடத் தொடங்கும். அப்படித் திகைத்து பதறக்கூடாதென்று சில ரெயின்களில் முதல்தர வகுப்புக்களில் நம் இருக்கைகளை 360 டிகிரிகளில் மாற்றுகின்ற வசதிகளையும் செய்திருக்கின்றார்கள்.


இப்படி ஒரு வசதி இந்த முழுதீவு நாட்டுக்கும் இருந்தால் ஆபிரிக்காப் பக்கமோ, அமெரிக்காப் பக்கமோ இந்த நாட்டையும் அவ்வப்போது சுக்கான் பிடித்துக்கொண்டு படகைப் போல நகர்த்திக் கொண்டு வந்தால், என்னைப் போன்றவர்கள் கனடாவில் இருந்து  நிறையப் பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து விமானம் எடுத்து வரும் கஷ்டமும் இருக்காது.


நான் மட்டுநகர் போவதற்குள், காலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து பஸ்ஸெடுத்து வடகோவையார் அங்கே வந்து சேர்ந்து விட்டிருந்தார். அவர் வீட்டில் வளர்த்த ஒரு தறுதலை ஆட்டுக்கு என் பெயரை வைத்ததாலோ என்னவோ பாசம் பொங்கி, ‘நீ வந்தால்தான் நான் சாப்பிடப் போவேன்’ என்று உருகியுருகி மெஸெஜ் அனுப்பிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இயலாமல், ‘உங்களுக்குப் பசித்தால் போய்ச் சாப்பிடுங்கள்’ என்று சொன்னேன். நம்மைப் போன்ற ஆண்களுக்கு எங்கே சொந்தப்புத்தி இருக்கின்றது? 'உங்களுக்குப் பசித்தால் போய்ச் சாப்பிடுங்கள்’ என்று இவன் சொல்கின்றான் இதன் அர்த்தம் என்ன என்று வடகோவையார் தன் கிரஷிற்கு அனுப்பி இதை decode செய்யக் கேட்டிருக்கின்றார். 


அந்தக் கிரஷோ, ‘உங்களைப் போய்ச் சாப்பிடுங்கள் என்று நேரடியாகச் சொல்லவில்லை, உங்களுக்குப் பசித்தால் மட்டும் போய்ச் சாப்பிடுங்கள் என்றுதான் சொல்லியிருக்கின்றான். ஆகவே நீங்கள் போய்த் தனியே சாப்பிடவேண்டாம், பிறகு அவன் கோபித்து அடுத்தவேளைச் சோற்றில் நஞ்சைக் கூட வைத்துவிடுவான்' என்று பயமுறுத்தியிருக்கின்றார். பாவம் வடகோவையார், நான் போகும்போது சாப்பாடில்லாது அரைமயக்க நிலையில் அறைக்குள் அலைந்தபடி இருந்தார்.

நாங்கள் அங்குமிங்கும் அலைந்து ஒரு கிலோமீற்றர் நடந்து போய்ப் பார்த்தபோதும் சாப்பாட்டுக் கடை தென்படவில்லை. ‘கமகம’ என்றும் ‘ஓலை’ என்றும் நல்ல பெயர் வைத்திருந்தார்களே தவிர சாப்பாட்டுக் கடையைத் திறந்து வைத்தாரில்லை. பிறகு ஓட்டோ ஒன்றைப் பிடித்துப் போய்ச் சாப்பிட்டு வந்தோம். அங்கே நல்ல பால் அப்பமும் கிடைத்தது. அந்தக் கடையில் சுடச்சுட போட்டுத்தந்த தேநீரின் சுவையோ அருமை.

யாழ்ப்பாணத்தில் ஒரு ஒழுங்கான, சுடச்சுடத் தேநீர் விற்கும் கடையையே இப்போது எளிதில் காணமுடியாது. கொழும்பில் அப்படிக் கேட்பதே பெரும் பாவம். கொழும்பில் ஒரு கஃபேயில் ரீ கேட்க, 800 ரூபாய் பில் வந்தது. ரீயிற்கு எங்கே பால் என்று கேட்க, அதற்கும் 400 ரூபாய் மேலதிகமாக எடுத்து, ஒரு பாற்தேத்தண்ணி 1200 ரூபாவா என்று எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்கள். அதன் பிறகு கொழும்பில் கடைகளில் ரீயே கேட்பதில்லை.


எமக்குப் பக்கமாய் சாப்பாட்டுக் கடைகள் மட்டுமில்லை, நாங்கள் போக வேண்டிய ஏறாவூர் புத்தகக் கண்காட்சி கூட, 10 கிலோமீற்றர் தொலைவில் இருந்தது. ஏன் இப்படி நடுவாந்திரமான ஊரில் இடம் எடுத்தீர்கள் என வடகோவையாரைக் கேட்டேன். அவரோ, இந்த ஊர்ப் பெயர் ஒரு பொம்பிளைப் பிள்ளையின் பெயர் போலக் கிடந்தது. அதில் நான் மயங்கி மற்ற வசதிகளைப் பார்க்காது இந்த இடத்தில் ரூமைப் பதிவு செய்துவிட்டேன், மன்னித்துவிடு என்றார்.

ஊரின் பெயர் ஊறணி!

அழகான பெயர்தான். அறையிலிருந்து பார்த்தால் கடலும் தெரியும். ஏதேனும் பாவம் செய்தால் போவதற்கு பக்கத்தில் அமெரிக்கன் மிஷன் தேவாலயமும் இருந்ததுதான். ஆனால் அதற்காய் யாரேனும் ஒருவர் மற்ற வசதிகளைப் பார்க்காது, ஊரின் பெயரை மட்டும் பார்த்து மயங்குவார்களா என்ன?

இதற்கிடையில் அவர் மட்டக்களப்பார் பாயோடு ஒட்ட வைத்துவிடுவார்கள் என்றொரு ஜதீகக் கதை இருக்கிறது
, எதற்கும் mattress இற்குக் கீழே மாந்தீரிகம் வைத்த பாய் எதுவும் இருக்கா என்று தேடிப்பார் என்றார். எனக்கு வந்த எரிச்சலுக்கு, அந்தச் சனம் அப்பாவிச் சனம், என்னுடைய இப்போதைய 3 கிரஷ்கள் மட்டக்களப்புத்தான். நம்மடைய யாழ்ப்பாணிகள்தான் தந்திரமாக இங்கே வந்து இந்த ஊர் செழுமையையும், பெண்களின் அழகையும் கண்டு பாயோடு ஒட்டிக்கொள்கின்றவர்கள். ஏனென்றால், பாருங்கள் யாழ்ப்பாணிகள் என்ற பெயரிலே இருப்பதென்ன? ‘பாணி’தானே. அந்தப் (பனங்காய்ப்)பாணியை ஒட்டிக்கொண்டு மட்டக்களப்புக்கு வந்து இங்கிருப்போரோடு ஒட்டிப்போட்டு, ஏதோ மட்டக்களப்பார் பாயோடு ஒட்ட வைக்கின்றவர்கள் என்று கதையை இந்த யாழ்ப்பாணிகள் மாற்றிவிட்டனர் என்றேன்.

இவ்வளவும் நான் சொன்னதன் பிறகு, வடகோவையார் ‘ நீ இப்படிச் சொன்னது எனக்குச் சரியான கவலையாக இருக்கிறது’ என்றார். எதையெதையோ வாய்க்கு வந்ததை எல்லாம் நான் பேச அவர் மனமுடைந்துவிட்டாரோ என்று நினைத்து ‘ஏன்’ எனக் கேட்டேன். ‘இல்லையடா உண்மையிலை உனக்கு மட்டக்களப்பில் 3 கிரஷ் இருக்கா? எனக்கு இந்த வயசில் யாழ்ப்பாணத்தில் கூட ஒரு கிரஷும் இல்லையே. என் வாழ்விற்கு அர்த்தமே இல்லாமற் போச்சுதடா?’ என்றார்.

எனக்கு வந்ததே ஒரு விசர்!

இந்த மனிதரோடு இரண்டு நாள்கள் பகலும் இரவும் திரிந்தாலே, சொந்த செலவில் நானே எனக்கு சூனியம் வைத்து பைத்தியமாகப் போகின்றேன் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, இரவு புத்தகக் கண்காட்சிக்குப் போகத் தயாரானேன்.

*********************

 

(May 21 , 2023)


இனியும் மலர்கள் விரியும், வாழ்வு துளிர்க்கும்!

Friday, December 16, 2022


1.


கரும்சாம்பல் மூடி மழை பொழிந்துகொண்டிருந்த வானம் சட்டென்று மாறி, வெயில் எறிக்கும் கதகதப்பான பொழுதானால் நீங்கள் என்ன செய்வீர்கள்? வேலையால் வீட்டுக்கு வந்ததும் வராததுமாய், நடப்பதற்கான காலணிகளை அணிந்தபடி, குளிருக்கு இடையில் 'வராது வந்த மாமணி'யாய் வந்த இந்த இதமான‌காலநிலையை வரவேற்கப் போவீர்களா, இல்லையா?


எந்த ஒரு விடயத்துக்கும் 'தொடக்க நிலைதான்' அறியமுடியா எல்லாச் சாத்தியங்களையும் கொண்டு வரும். ஆகவேதான் ஸென்னில் தொடர்ந்து தொடக்கநிலை மனதை (beginner’s mind) பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். கற்றுத் தேர்ந்துவிட்ட ஒரு மனதிலிருந்து புதிதாய் எதுவும் முகிழ அவ்வளவு சாத்தியமிருப்பதில்லை. இளவேனில் காலத்துக்கான துளிர்கள் மெல்ல அரும்புவது, அந்தத் ‘தொடக்கநிலை’யை நமக்குக் காட்ட விரும்பும் இயற்கையின் குதூகலம் போலும். 


இதற்கு முன் அந்த அரும்புகள் மரத்தின் எந்தப் பாகத்தில் மறைந்து இருந்தன. இனி தளிராகி, குருத்திலையாகி, கடும்பச்சை நிறமாவதற்கான பச்சையத்தை இந்தத் துளிர்கள் எதில் ஒளித்து வைத்திருக்கின்றன.


இதைத்தான் இன்னொருவகையில் ஸென் ‘நாம் இறப்பதுமில்லை, பிறப்பதுமில்லை’ என்று சொல்கின்றது. இதை வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் எடுத்து வாசித்தால் புரிந்து கொள்வதற்கு ஏதுமில்லை. நாம் பிறக்கும்போது அதுவரை எங்கோ ஒரு 'சூனியத்தில்' இருந்த ஒன்று உடல் என்கின்ற வடிவத்தைப் பெறுகின்றது. பின்னர் இறப்பின்போது மீண்டும் வெறுமைக்கு அல்லது சூனியத்துக்குத் திரும்பிப் போகின்றது. 


இல்லாமையிலிருந்து இருத்தல்களும், இருத்தல்களிலிருந்து இல்லாமைகளும் ஒரு வட்டமாக சுழன்றுகொண்டிருப்பதால் 'எதுவும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை' என்பதை, வார்த்தைகளின் எளிய அர்த்தத்தைத்தாண்டி, ஆழமாய் விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் அது அவ்வளவு எளிதானதும் இல்லை.


2.


வழமையாக ஒரு பூங்காவிலிருந்து இன்னொரு பூங்காவிற்கு நான்கைந்து கிலோமீற்றர்கள் நடப்பவன், ஆனால் இப்போது பாலத்துக்குக் கீழே திருத்தும் வேலை நடப்பதால், அந்தப் பாதையை இடையில் மூடிவிட்டார்கள். வேலை ஒன்றை எப்படி இழுத்து இழுத்துச் செய்வதில் நமது நகரத்தார் புகழ்மிக்கவர்கள் என்பதால் எப்படியும் இந்த கோடையில் அதைத் திறக்க மாட்டார்கள் என்பது உறுதியென அவன் நினைத்துக்கொண்டான். மேலும் புத்தரிலிருந்து மார்க்ஸ் வரை சொன்னது மாதிரி, ‘எதுவுமே நிரந்தரமில்லை, எல்லாமே மாறிக்கொண்டிருப்பவை' என்பதால் இது குறித்து எந்தப் பொல்லாப்புமில்லை. ஆனால் நமக்களிக்கப்படும் வாய்ப்புக்கள் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. சந்தர்ப்பங்கள் மாறமுன்னர் அதையதை அனுபவித்துவிடும் விழிப்பு இருத்தல் முக்கியம். அனுபவித்தவற்றை விட, தவறவிட்டவைகளின் கழிவிரக்கத்தில் கழிந்த கடந்தகாலங்களை எண்ணி அவனுக்கு மெல்லிய சிரிப்பும் வந்தது. வார்த்தைக்கும் வாழ்க்கைக்குந்தான் எவ்வளவு பெரிய‌இடைவெளி!


நல்லவேளையாக கடந்த கோடையில் இன்னொரு மாற்று பாதையைக் கண்டடைந்துவிட்டதால், அடைபட்ட வழி குறித்து கவலைப்படாது புதிதாய்க் கண்டுபிடித்துவிட்ட தடங்களில் அவன் நடக்கின்றான். அங்கே பெருமரங்களும், மழைநீர் சேர்ந்து சலசலத்தோடும் சிற்றாறும் இருப்பதால் அது ஓர் அருமையான வழித்தடம். ஆகவே ஒரு பாதை அடைபட்டால் எல்லாம் முடிந்துவிட்டதெனக் கவலைப்படத் தேவையில்லை. வேறொரு வழி நாம் அதுவரை கண்டுணராத‌புதிய அனுபவங்களைத் தருவதற்காக திறபடலாம். 


இது பாதைக்கு மட்டுமில்லை, வாழ்க்கைக்கும் பொருந்தும்.


நடப்பதற்கான ஒரு வட்டப்பாதையை வழமைக்கு மாறாக, நடந்து முடிக்கும் இடத்திலிருந்து தொடங்குகின்றான். அதே பாதை, ஆனால் வேறொரு கோணத்தில் பார்வைகள் மாறுகின்றன. முன்னர் ஏறவேண்டிய மேட்டு நிலம் இப்போது சரிவான பள்ளமாக‌-தேர்ந்தெடுத்த பாதையின் நிமித்தம்- புதிய அவதாரம் கொள்கின்றது. ஆக ஒரே பாதையில் நடந்திருக்கக் கூடியவர்கள், அவரவர்கள் தேர்ந்தெடுக்கும் திசையின் நிமித்தம் அதன் மேடு பள்ளமாகவும், பள்ளம் மேடாகவும் மாறும்போது, ஒருவர் தான் சொல்வது/பார்த்ததுதான் உண்மையென விவாதிப்பது எவ்வளவு தூரம் சரியான பார்வையென்பது கேள்விக்குரியதே. ஆகவேதான் ஸென், நல்லது, கெட்டது என எதையும் அடையாளப்படுத்த வேண்டாமெனச் சொல்கின்றது.  எதைக் காண்கின்றோமோ அதை அப்படியே பார்க்கச் சொல்கின்றது. எந்த லேபிள்களும் எதற்கும் ஒட்டாதிருக்கத் தெரிந்தவர்கள் மேன்மக்கள். 


ஒருவர் ஞானமடையத்தான் தியானம் செய்கின்றார் என்றால், அந்தக்கணத்திலேயே நிர்வாணம் அடைவதிலிருந்து அவர் விலகிப் போய்விடுவார் என திரும்பத் திரும்ப ஸென் நமக்குத் தெளிவுறுத்துகின்றது. 


மரங்கள் இன்னமும் முழுமையாகப் பசுமை போர்க்கவில்லை, ஆனால் பொன்மஞ்சள் நிறத் தளிர்கள் வரத் தொடங்கிவிட்டன. மனிதர்களே இல்லாத பொழுது இயற்கையை நிதானமாக இரசிக்க முடிகிறது. இன்னொரு வகையில் நாங்கள் எமது எல்லா 'பைத்தியக்காரத்தனத்தோடும்' தனிமையில்தான் இயல்பாக இருக்க முடிகிறது. நதி ஓடும் ஒலியை, அது உருவாக்கும் குமிழ்களை, வாத்துக்கள் பறந்து நீரில் சிறகுகள் நனைப்பதை என எல்லாவற்றையும் ஆறுதலாக அவதானிக்க அவனது மனதுக்குள் ஒரு வெம்மை பரவுகிறது 


வழமையாக நடக்கத் தொடங்கும் பாதையெனில் அங்கே ஒரு பெரும் சாம்பல்கல் இருக்கும். அதில் அமர்ந்தபடி நதியை இவன் பார்ப்பான். சிலவேளை அப்படியே விழிகளை மூடியபடி அமைதியில் அமிழ முயல்வான். ஒருநாள் இந்தச் சூழலில் அவ்வளவு காணமுடியாத ஒரு பச்சைப் பாம்பு அருகில் வந்து எட்டிப் பார்த்ததைக் கண்டு வெருண்டோடியிருக்கின்றான். பாவம் அந்தப் பாம்புதான் என்ன செய்யும். அதன் வசிப்பிடத்துக்கு மனிதன் ஒருவன் வந்து இடையூறு செய்தால் அது விநோதமாக வேடிக்கைதானே பார்க்கச் செய்யும்.


3.


'ஓநாய் குலச்சின்னம்' நாவலில் கால்நடைகளை மேய்த்தபடி புல்வெளிகளை அழியாமல் வைத்திருக்கும் நாடோடிகளுக்கு ஓநாய்கள் தெய்வத்துக்கு நிகர்த்தவை. ஒநாய்களைத் தேவையில்லாமல் கொன்றாலோ, பழிவாங்கினாலோ அவர்கள் டெஞ்ஞர் என்ற சொர்க்கத்துப் போகவே முடியாது. நாடோடிகளையும் அவர்களின் கால்நடைகளையும் அடிக்கடி காயப்படுத்திக் கொல்லும் ஓநாய்களுக்கே, தமது இறந்த உடல்களை இந்த நாடோடிகள் உண்ணக் கொடுக்கின்றனர். நன்றாக ஓநாய்களால் உண்ணப்படும் உடலே உடனே சொர்க்கத்துக்குப் போகும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆகவேதான் சீனக்காரர்களுக்கு நாய்களைப் பிடிப்பதில்லை, என்றாலும் சிலபகுதிகளில் நாய்களைச் சாப்பிடுவார்கள் என்று இந்த மங்கோலிய மேய்ச்சல்நில நாடோடிகள் அறியும்போது, 'எப்படி உங்களால் நீங்கள் வெறுக்கும் ஒரு பிராணியை பிறகு உணவாகச் சாப்பிட முடிகின்றது' என்று கேட்கின்றனர். 


இப்போது எதிர்த்திசையில் நடந்துகொண்டிருப்பதால், ஆறு ஓடும் கரையில் இருந்து 'ஸென் மனம்; தொடங்குபவர்களின் மனம்' கேட்கத் தொடங்குகின்றான். எப்போது எதில் அவன் அமிழ்ந்து தன்னைத் தொலைத்தானோ சட்டென்று கட்டுக்கயிறு இல்லாது வந்த நாயொன்றால் விழித்தெழுகின்றான். நாய்களைப் பிடிக்கும், ஆனால் சிறுவயதில் பல நாய்களிடம் ஆறாத்தழும்புகளையெல்லாம் பெற்றுவிட்டாதால், எப்போதும் ஒரு பயம் அவனுக்கிருக்கும்.  அந்த நாயை வளர்ப்பவர் தூரத்தில் வர, அருகில் வரும் நாயை அரவணைப்பதா, இல்லை துரத்துவதா என்ற குழப்பமெழ, தகாதகர் கூறிய மத்தியபாதையே நல்லதென துரத்துவதைப் போல மெல்ல pet செய்து விடுகின்றான்.


'அந்த மனிதன் சும்மா தன்பாட்டில் இருக்கின்றான், அவனையேன் கஷ்டப்படுத்துகின்றாய், அன்பே' என்று நாயின் சொந்தக்காரர் சொல்லியபடி வருகின்றார். 'பரவாயில்லை' என இவன் சொல்கின்றபோது, 'இந்த நாள் அழகான நாள்' என்று சொல்லியபடி அவர் கடக்கின்றார். இவன் நினைவுகளில் மூழ்கின்றான். 'ஓநாய்குலச்சின்னத்தில்' நாடோடிகளின் வாழ்க்கையைக் கற்க மங்கோலிய மேய்ச்சல் நிலம் செல்லும் சீன மாணவன் ஒரு ஓநாயை,  குகையில் இருந்து குட்டியாக எடுத்து வளர்க்கின்றான். அதற்கு பால் கொடுக்க ஒரு நாயைத் தேர்ந்தெடுத்து, அதன் பிற குட்டிகளோடு இந்த ஓநாயையும் சேர்த்துவிடுகின்றான். நாய் எப்படிப் பால் கொடுத்தாலும் ஓநாய் தன்னியல்பை விடாது மூர்க்கமாகவே நடந்துகொள்ளும். 


ஆண் என்பதாலோ அல்லது தன்னியல்பாகவே வந்துவிட்ட மமதையோடு அவன் போனால் கூட, தம் நெஞ்சங்களைத் திறந்து அரவணைத்த காதலிகளை நினைத்துக் கொள்கின்றான். தானொரு ஓநாய்தான், ஒருபோதும் கருணையுள்ள நாயாக மாறமுடியாது அதில் சந்தேகமில்லையென தனக்குத் தானே சொல்லிக் கொள்ளவும் செய்கின்றான்.


4.


ஜப்பானிய தேநீர் கலையை உலகிற்கு அறிமுகப்படுத்திய Sen Rikyu, ஒவ்வொரு தேநீர் நிகழ்வின்போதும்,  தான் ஒவ்வொரு கணங்களிலும் இறந்து பிறப்பதாகச் சொல்லியிருக்கின்றார். ஏனெனில் அவ்வளவு விழிப்புடன் அந்தத் தேநீர்க்கலையை நிகழ்த்தும் அற்புதம் பெற்றவர் அவர். தியானம் மூலம் வரும் விழிப்பும் இப்படி கணங்களில் இருந்து எழுவதேயாகும். இவ்வாறு கணங்களில் இருப்பையும் இறப்பையும் கண்டுணர்கின்ற Sen Rikyu, தன்னோடு சூழவிருப்பவர்களுக்கு ஒரு அருமையான தேநீர் விருந்தை இறுதியாகக் கொடுத்துவிட்டு தனக்கான தற்கொலையை நிதானமாகச் செய்து கொளகின்றார். ஒவ்வொரு கணங்களில் இருப்பையும், இறப்பையும் கண்டுணர்ந்தவர்க்கு, உடல் நீங்கிச் செல்லல் அவ்வளவு கடினமாக இருக்காது போலும்.


அவன் நடந்த தன் வட்டத்தைப் பூர்த்தி செய்யும் இடத்துக்கு வந்தபோது, நாயோடு எதிர்த்திசையில் போனவரை மீண்டும் சந்திக்கின்றான். எதிர்த்திசை என்றாலும் வட்டம் உங்களை மீண்டும் சந்திக்க வைக்கும். நல்ல மழை பெய்ததால் உலாப்போகும் பாதை பல இடங்களில் சகதியாக இருந்ததை அவன் ஏற்கனவே அவதானித்திருந்தான். நாயோடு வந்தவர், ‘நான் வந்தவழியில் சறுக்கிவிழுந்துவிட்டேன், நீ கவனமாக நடந்துபோ என்று தனது சேறு அப்பிய ஜீன்ஸைக் காட்டுகின்றார். ‘கவனமாக நடப்பேன், எச்சரித்தமைக்கு நன்றி’யென அவருக்கு விடைகொடுத்து நகர்கின்றான்.


வீட்டுக்கு வந்தவுடன் பின் வளவில் நேற்று சிறுதளிராக இருந்த மரத்தில் இருந்தவை அனைத்தும், பொன்மஞ்சள் சிற்றிலைகளாக‌விரிந்து காற்றில் அசைவதை ஒருநாளில் நடந்துவிட்ட அற்புதமென நினைக்கின்றான். ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கும்போது பின்னிரவில் ஆஸ்மா தொந்தரவு செய்கின்றது. தலையணைகளை முதுகில் வைத்து நிமிர்ந்து இருந்தால் கொஞ்சம் சுகமாகவிருக்கும். ஆனால் இதுவும் ஓர்நாளில் சட்டென்று நடந்துவிடக் கூடியது நிகழ்வுதான். ஒவ்வொரு கணத்திலும் இறப்பும் இருப்பும் நிகழ்ந்துகொண்டிருப்பதை உணர்ந்தால் இதையும் சகித்துக் கொள்ளலாம். ஓர் அழகான நாளைப் போல இதுவும் கடந்துபோகும்.


ஒருபோதும் தம்மை வந்தடையும் பாதைகளை மூடிவிடாத காதலிகளின் கருணையின் பொருட்டும், இனியும் மலர்கள் விரியும், வாழ்வு துளிர்க்கும்!


****************


(நன்றி: "அம்ருதா" -மார்கழி, 2022)


புத்தர் ஞானமடைந்தபோது பார்த்த அதே நிலவு!

Monday, October 31, 2022


வழமையாக நடக்கும்போது நான்கைந்து கிலோமீற்றர்கள் நடப்பதுண்டு. இடையில் ஓய்வெடுத்து/இரசித்து/தரிசித்து/படங்காட்டிப் போனால் கூட ஒன்று/ஒன்றரை மணித்தியாலங்கள்தான் எடுக்கும். இன்று சூரிய ஒளியோடு தொடங்கிய நடையை முடித்து வருவதற்குள் இருண்டு நேரமாகிவிட்டது. 


அப்படி ஆனதற்கு, நான் நடந்தபடி கேட்கத் தொடங்கிய அலன் வாட்ஸின் 'The way of Zen' என்னை அமைதிக்கு அழைத்துச் சென்று, அது தற்செயலாக புத்த பூர்ணிமாகவும் இருந்து எனக்கும் புண்ணியம் கிடைத்திருந்தால் கூட,  பரவாயில்லை என்றிருந்திருப்பேன்.


ஆனால் நடந்தது அதுவல்ல!


நடந்து கொண்டிருக்கும்போது 'காலம்' செல்வத்தார் அழைத்து, 'என்னடா செய்கிறாய்' என்றார். "நடந்தபடி 'மான்'களை இரசித்துக் கொண்டிருக்கின்றேன்" என்றேன் நான். 

இந்தப் பாதையில் அவ்வப்போது மான்கள் தென்பட்டாலும், நான் சொன்னது அந்த 'மான்'களை அல்ல. செல்வத்தாரும் பாரிஸ் தெருக்களிலே 'மான்'களைத் தேடித் திரிந்த அனுபவம் உள்ளவர் என்பதால் அவருக்கு இந்தவகையான code words நன்கு விளங்கும்.


'நானொருத்தன்  என்ன செய்வதென்ற பதைபதைப்பில் இங்கே இருக்கிறேன், உனக்கு இப்போது மான்கள்தான் தேவைப்படுகிறதா' என்றார் செல்வத்தார். 'அப்படி என்ன நடந்தது? அடுத்த இயல்விருதை முத்துலிங்கத்தார் ஞாபக மறதியில் தனக்குத்தானே அறிவித்து விட்டாரோ?' என்று கேட்டேன்.


ஏன் நான் அப்படிக் கேட்டேன் என்றால், ஏற்கனவே தமிழ் விக்கிபீடியாவுக்கு இயல்விருது கொடுத்துவிட்டு, இப்போது அ.மு தமிழ் விக்கி என்று அதே பெயரில் ஏதோ தொடங்குகின்றார்கள் என்று அதற்கும் வாழ்த்துமேல் வாழ்த்து எழுதி அனுப்பிக்கொண்டிருப்பதை அவதானித்திருந்தேன்.

 

சிலவேளை இலக்கிய உலகில் முதலில் விருதைக் கொடுத்துவிட்டு, பிறகு சில ஆண்டுகளுக்குப் பின் நித்திரையில் இருந்து விழித்தமாதிரி 'இப்போது தொடங்கியதற்கு' வாழ்த்து எனச் சொல்வார்களோ தெரியாது. 


'உந்த விசர்க்கதைகளை விட்டிட்டு, நான் சொல்லுறதை கேளடா?' என்று செல்வத்தார் கொஞ்சம் கோபத்தோடு சொன்னார்.


'சரி சொல்லுங்கள்' என்றேன்.


'இல்லையடா. நான் சியா-60 இற்கு ஒரு வாழ்த்து அனுப்பியதிலிருந்து எனக்கு சிங்காரச் சென்னை, சிங்கப்பூர் என எல்லா இடத்திலிருந்தும் நிறைய வாசகிகள் கடிதம் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். என் துணைவியார் இதைப் பார்த்துவிட்டால் என்னவாகும் என்று எனக்கு  ஒரே பதட்டமாயிருக்கிறது' என்றார்.



பத்து வருடங்களுக்கு முன் செல்வத்தார் ஒரு வீட்டில் வசித்துக் கொண்டிருந்தார். அதன் நிலவறையை ஒரு பெண்மணிக்கு வாடகைக்குக் கொடுத்திருந்தார். என் வீட்டை விற்கப்போகின்றேன், நீங்களும் காலி செய்யவேண்டும் என்று செல்வத்தார் சொன்னபோது, அந்தப் பெண்மணி ஆயிரம் law கதைத்து வீட்டை விட்டுப் போகமாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பெயர் சியாமளா. 


சியாமளாவை எப்படி துரத்துவது என்று மூளையைக் கசக்கிப் பிழிந்ததில் இறுதியாய் செல்வத்தார் கண்டடைந்த ஒரே வழி, தன்னிடம் விற்காமல் இருந்த புத்தகங்களை அவரின் கதவுக்கு முன்னால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகமாய் அடுக்கிவிடுவதுதான். அவை அப்படியே உயர்ந்து உயர்ந்து ஒருநாள் சியாமளாவால் கதவைத் திறக்க முடியாமல் யன்னலை உடைத்து  தப்பி ஓடிவிடுவார் என்பதாக செல்வத்தாரின் திட்டமிருந்தது.


ஆனால் எத்தனையோ புத்தகங்கள் அடுக்கியும் அசையாத சியாமளா, ஒரேயொரு புத்தகத்தைக் கண்டு வெருண்டு, அடுத்தநாளே அறையைக் காலி செய்துவிட்டு போய்விட்டார். அது என்ன புத்தகம் என்றால், பின் தொடரும் நிழலின் குரல். அதை வாசித்துத்தான் சியாமளா பயந்து போனார் என்று நீங்கள் நினைத்தால் தவறு. அவர் அந்தப் பெயரை முன்னட்டையில் பார்த்தவுடனேயே ஏதோ மலையாள மாந்தீரிகத்தில் ஆயிரம் பக்கத்தில் சூனியம் வைத்துவிட்டார்கள் என்று கிலி பிடித்துத்தான் ஓடியிருக்கின்றார்.


என்றாலும் ஏன் செல்வத்தார் இப்போது பதைபதைக்கின்றார் என்பது எனக்கு இன்னும் சரியாக விளங்காததால்,


' கனடாவில் இருக்கின்ற சியாமளாக்காவுக்கு 60 என்று நீங்கள் வாழ்த்து எழுதினால் ஏன் உங்களுக்கு வாசகிகள் சிங்கப்பூரில் இருந்தெல்லாம் கடிதம் எழுதுகின்றார்கள்' என்று கேட்டேன்.


'நாசமாய்ப் போறவனே. நான் சியா-60 என்று ஸ்டைலாகச் சொன்னது சியாமளாவுக்கு 60 வயதாகியதை அல்ல, சியமந்தகம்-60 என்று ஜெயமோகனுக்கு வாழ்த்தெழுதியது பற்றி' என்று செல்வத்தார் மறுமுனையில் இருந்து ஆக்ரோஷமாகக் கத்தினார்.


'இப்படிக் கத்தினால் இப்போது அமெரிக்காவில் நிற்கின்ற உங்கள் நண்பர் ஜெமோ எல்லாவற்றையும் விட்டுவிட்டு,  நயாகரா நீர்வீழ்ச்சியால் எம்பிக் குதித்து உங்களுக்கு ஏதோ ஆபத்தென பறந்து வந்துவிடுவார், கவனம்' என்றேன். உடனே செல்வத்தார் 'ஓம் சாந்தி ஓம் சாந்தி' என்று தன்னை அமைதிப்படுத்தத் தொடங்கவும் அவரது துணைவியார் அருகில் வரவும் சரியாக இருந்தது.


'அங்காலை இருந்து ஒருத்தன் சியாமளா சியாமளா என்கின்றான். இங்காலை இருந்து நீங்கள் சாந்தி சாந்தி என்கிறீர்கள். எந்த வயதில்தான் திருந்தப்போகின்றீர்கள்' என்று திட்டு விழுவதும் எனக்கு நன்கு கேட்டது.


'இல்லையப்பா சியாமளாவுக்கு வாழ்த்தெழுதியது பற்றி..ச்ச்சீ..சியமந்தகத்திற்கு பதிவெழுதியது பற்றி நாங்கள் இரண்டு பேரும் கதைத்துக் கொண்டிருந்தம்' என்று செல்வத்தார் மறுமுனையில் பம்மத் தொடங்கினார்.


இதுக்குப் பிறகும் இனி வாசகிகள் கடிதங்களை எழுத, செல்வத்தார் வாசிப்பார் என்று நம்பிக்கை எனக்கு இல்லாமல் போய்விட்டது. 


என்றபோதும் நான் நம்பிக்கை இழக்காமல், 'இஞ்சை போனை கட் செய்யமுன்னர், எனக்கும் உங்களுக்கு அனுப்பியதுபோல, வாசகிகள் கடிதம் எழுதுவது எப்படி என்று ஜடியா தாருங்கள்' எனக் கேட்டேன்.


'உன்னுடைய கொழுப்புக்கு,  உனக்கு அறுபது வயசானாலும் ஒருத்தியும் எழுதமாட்டாள்கள், இருந்து பார்' என்று போனை அவர் நிலத்தில் கோபத்தில் எறிந்தது கேட்டது.


அப்போது நிலவு வானில் எழுந்ததைப் பார்த்தேன். புத்தர் ஞானமடைந்தபோது பார்த்த அதே நிலவு. 


புத்தருக்கு ஞானம் அவரின் 35 வயதில் கிடைத்ததென்கின்றனர். எனக்கு 60இல் இல்லாவிட்டாலும், என் 61வது வயதிலாவது யாரேனும் சியாமளாவோ, சாந்தியோ ஒரு வாசகர் கடிதம் எழுதாமலா போய்விடுவார்கள் என்று என்னைத் தேற்றியபடி நடக்கத் தொடங்கினேன்.


ஓம் சாந்தி, ஓம் சாந்தி!


*********************


(May 16, 2022)

வேலைக்குச் செல்லுதல்

Tuesday, December 28, 2021

நெடும் மாதங்களுக்குப் பிறகு, முழுநேரமாக வேலைத்தளத்துக்குப் போகத் தொடங்கியிருந்தேன். எல்லாமே ஒருவகை சர்ரியலிசம் போலத் தோற்றமளித்துக் கொண்டிருந்தன. சூரியனே வெளிவரத் தயங்கும் பனிக்காலத்தில் விடிகாலையில் எழுந்து பஸ், ரெயின் என எடுத்துப் போவதை நினைக்க ஒருவகை அயர்ச்சி வந்தது. போக வரவென கிட்டத்தட்ட இரண்டரை மணித்தியாலங்கள் எடுக்கும் பயணம் அவ்வளவு மனதுக்கு உவப்பாவதில்லை.


ஆனால் இந்த வகைப் பயணங்களில் புத்துயிர்ப்புத் தருவது என்னவென்றால், வெவ்வேறான மனிதர்களைச் சந்திப்பதும், அவர்கள் வாசித்துக் கொண்டிருக்கும் நூல்களைப் பார்ப்பதுந்தான். இன்று பெரும்பாலானவர்கள் அலைபேசியிலே புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்துக்குப் போய்விட்டார்கள் என்றாலும், அரிதாக அச்சுப் புத்தகங்களை கைகளில் வைத்து வாசிக்கும் சிலரை ரெயில் பயணங்களில் சந்திப்பதுண்டு. அப்படி அவர்கள் எதையாவது வாசிக்கையில் அந்தப் புத்தகங்களின் பெயர்களை நினைவில் வைத்து பிறகு நான் தேடிப் பார்ப்பேன். பிடித்தால் நூலகத்தில் இரவல் பெற்றோ அல்லது புத்தகக்கடையில் வாங்கியோ வாசிப்பேன். அந்தச் சந்தர்ப்பங்கள் அலைபேசியில் பிறர் புத்தகங்களை வாசிக்கும்போது எனக்குக் கிடைப்பதில்லை.

நீண்டநாட்களின் பின் ரெயினில் போகையில், எல்லாமே பதற்றத்தைத் தந்துகொண்டிருந்தபோது, சில பெண்கள் புத்தகங்களை கையில் வைத்து வாசித்துக் கொண்டு வந்ததைப் பார்த்தபோது, எனக்கான உலகம் சுழலத் தொடங்கிவிட்டதென்று உள்ளே நினைத்துக் கொண்டேன். எனக்கு மறுபுறத்தில் இருந்தவர் 'Dear Life' என்கின்ற நூலை வாசித்துக் கொண்டிருந்தார். அநேகமாய் அது வாழ்க்கை முன்னேற்ற வகையில் ஒன்றாக இருக்கும் என நினைக்கின்றேன். நானும் மனம் சற்று சோரும்போது இவ்வாறான அபுனைவுகளில் சென்றடைவதுண்டு. அது பெரும்பாலும் புத்தரோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கும். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் எளிமையாக வார்த்தைகளில் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் ஸென் வகையாக இருக்கும்.

எனக்கு எதிரில் இருந்த பெண் இன்னொரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார். அது 'Between Two Kingdoms: A Memoir of a Life Interrupted' என்கின்ற நூல். அடடா இது நான் வாசிக்கத் தொடங்கி இடைநடுவில் விட்டு வந்த நூல் என்று அந்தப் பெண்ணோடும் நூலோடும் ஒருவகை நெருக்கம் வந்தது. ஒருவகையில் இதைப் பயணநூல் என்றவகையில்தான் சென்றடைந்திருந்தேன். ஒரு பெண் பல்வேறு உறவுகளில் இருந்து, ஒருகட்டத்தில் பாரிஸுக்கு வேலை நிமித்தம் செல்கின்றார். அப்போதுதான் அவர் அமெரிக்காவில் இறுதியில் டேட்டிங் செய்துகொண்டிருந்த இளைஞரை தீவிரமாக நேசிப்பதாக உணர்கின்றார் (எப்போதும் தொலைவில் விலகிப்போனால்தான் காதல் இனிக்கிறது). அதை அந்தக் காதலனுக்குச் சொல்ல அவர் அமெரிக்காவில் செய்த வேலையை விட்டு இந்தப் பெண்ணைச் சந்திக்கப் பிரான்ஸுக்குப் போகின்றார். அவர்கள் இருவரும் ஐரோப்பாவிற்குள் பயணிக்கும் பெருங்கனவுகளோடு இருக்கும்போது, இந்தப் பெண்ணை புற்றுநோய் தாக்குகின்றது. அதிலிருந்து தொடங்குவது மிகுந்த கடின பயணம்.

அவர் அமெரிக்காவுக்கு வைத்தியத்தின் நிமித்தம் திரும்பி வந்து அதிலிருந்து மீள்வதுதான் மிச்சக்கதையாக இருக்கும். என்னிடம் அந்த நோயினதும் வலியினதும் தீவிரத்தை வாசிக்கும் உறுதியான உள்ளம் இல்லையென்பதால் அந்த நூலை இடைநடுவில் கைவிட்டிருந்தேன். Suleika Jaouad வை நோய் தாக்கும்போது அவருக்கு 22 வயது. அவ்வளவு இளமையில் ஒருவரை எளிதில் குணப்படுத்த முடியாத நோய் தாக்குவதென்பது எவ்வளவு கொடுமையானது, இதிலிருந்து மீண்டுவந்து சொன்ன கதைதான் 'Between Two Kingdoms'.

இவ்வாறு அந்த நினைவுகளோடு ரெயினில் Toronto Downtown வந்திறங்கினால் அது பழைய உற்சாகம் எதுவுமில்லாது கருஞ்சாம்பல் போர்த்தியது போல உள்ளேயும் சோம்பிக் கிடந்தது. ஆனால் சனநெருக்கடி எனக்கு எப்போதும் ஒருவகை விலகலைத் தருவதால் இது குறித்து எந்த முறைப்பாடுகளும் இருக்கவில்லை. பொதுவிடம் எங்கும் முகக்கவசம் அணியவேண்டியது கட்டாயம் என்பதால், கண்ணாடியில் புகைபடிந்து எரிச்சலை இந்தக் குளிர்காலம் தந்துகொண்டிருந்தது. யாராவது ஒரு பெண் 'உனது கண்களாக நானிருப்பேன், கண்ணாடி எதற்கு கண்ணாளனே' என்று எனது இந்தச் சலிப்பை துடைத்தெறிந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பை வழித்தெறிந்து தெருக்களினூடு நடந்துபோய்க் கொண்டிருந்தேன். 'நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை' என என்னை ஆறுதற்படுத்த ஒரு கோப்பிக்கடை எதிரில் தெரிய மனது பின்னர் தெளிவாயிற்று.

வீட்டில் இருந்து வேலை செய்யும்போது சோம்பலில் எவருக்கும் தொலைபேசி அழைத்துப் பேச விரும்பாத எனக்கு இப்போது யாரோடேனும் பேசவேண்டுமென உற்சாகம் கொப்பளிக்கத் தொடங்கியது. நீண்டநாள் பேசாத நண்பருக்கு தொலைபேசினேன். ஏன் இவ்வளவு நாளும் என்னோடு பேசவில்லை என்று கேட்காத அளவுக்கு என்னைப் புரிந்துகொண்டவர் அவர் என்பதால் உடனேயே ஏதோ ஒரு விடயத்தைத் தீவிரமாக இரண்டுபேரும் பேசத் தொடங்கிவிட்டோம். அவரே எனது ப்யூகோவ்ஸ்கி கவிதைகளை இப்போது திருத்தஞ்செய்தும் தருகின்றவர்.

ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நண்பருக்கு என்று அடுத்த நாள் இன்னொரு நண்பருக்குத் தொலைபேசினேன். அவர் இன்னும் மழை அங்கே பெய்துகொண்டிருக்கிறது என்றார். என் கிரஷ்களுடன் எனது மென்னுணர்வுகளை வளர்க்கும் நேரங்களில், முகநூலில் என்ன இப்போதைய ட்ரெண்ட் என்று அவரிடந்தான் கேட்டுப் பெரும்பாலும் தெரிந்துகொள்வேன். தொடக்க காலத்தில் கிரஷ் என்றுதான் சொல்லிதான் நாம் பேசத்தொடங்கியதாக ஞாபகம். இப்போதும் அப்படித்தான் இருக்கின்றோமா என்று தெரியவில்லை. அவரிடம் அடுத்தமுறை இதைக் கேட்கவேண்டும்.

எனக்கு ஒருவிடயம் எதிரே இருப்பவர் சொல்வது நியாயமாக இருந்தாலும், ஒருவகை உரையாடலுக்காய் சிலவேளைகளில் வேண்டுமென்றே மறுமுனையில் நிற்பவன் போலப் பேசிக்கொள்வேன். தூத்துக்குடி விமான நிலையப் பதிவு பற்றி நண்பர், எழுதியவரின் பெயரில் சாதி இருக்கும் நுட்பம் குறித்து விமர்சிக்க நான் இன்னொருமுனையில் நின்று பேசிக்கொண்டிருந்தேன். பிறகு ஜெய்பீம் படத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த இலக்கிய சாதிக்குஞ்சுகள் பற்றிப் பேச்சு நீண்டது. இத்தனைக்கும் சாதியச் சூழலில் வாழாத பெருநகரத்தில் வாழும் அவர் அவ்வளவு உறுதியாக சாதியெதிர்ப்பு விடயங்களில் இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

நான் என் வாழ்வில் இதற்கு முன் வேறு விடயங்களில் நெருக்கமாக இருந்தும் சாதிவிடயங்களில் தம் முகங்களைக் காட்டிய நண்பர்களை/இலக்கியவாதிகளை விலகிவந்த சில சம்பவங்களைச் சொன்னேன். மற்றும்படி இலக்கியவாதிகள், செயற்பாட்டாளர்களில் பெரும்பான்மையோர் எவ்வளவு முற்போக்கு பேசினாலும், தமது சொந்த விடயங்கள் என வரும்போது எப்படி தம் அசல் முகங்களைக் காட்டுவார்கள் என்பது நாமெல்லோரும் அறிந்ததுதானே என்றேன். இதைவிட இவ்வாறான விடயங்களைப் பேசாமல், முரசறைவித்துப் பொதுவெளியில் தெரிவிக்காமல் சாதாரணமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் எவ்வளவோ போற்றுதற்குரியவர்கள்.

'நான் தெரியாத விடயங்களை ஒருபோதும் எழுதுவதில்லை' என்று ப்யூகோவ்ஸ்கி ஒரு கவிதையில் சொல்வதைப் போல, இவர்களால் வாழமுடியாத அல்லது விரும்பாத வாழ்வைப் பேசாமல் விட்டாலே பெரும்விடயமென்பேன் என எங்கள் உரையாடல் நீண்டபடி போனது.

அத்தோடு, இவ்வாறான அடையாளங்களில் இருப்பவர்களை - எழுத்தாளார்கள், செயற்பாட்டாளர்கள்- திருவுருவாக்கம் செய்யாமல் அவர்களும் சாதாரண மனிதர்களேயென தொடர்ந்து நினைவுபடுத்தியபடி இருப்பது முக்கியமானது. எழுதுபவர்கள் எழுதும்போது மட்டுமே படைப்பாளியாகின்றார்கள், உன்னதம் என்கின்ற நிலையை அந்தக்கணங்களில் சிலவேளைகளில் அடையவும் செய்கின்றார்கள். மற்றும்படி அவர்கள் சாதாரணத்திலும் சாதாரணத்தவர்கள். அப்படி இல்லையென்று சொல்பவர்கள் இருந்தால், ஓர் இலக்கியவாதியின் பெயரோடு வாருங்கள். உரையாடிக்கொள்ளலாம் எனச் சொன்னால் எல்லோரும் பின் வாங்கிவிடுவார்கள் என்றேன்.

இவ்வாறு உச்சக்கொதிநிலையில் நின்று பேசியபோது, எனக்குச் சற்றுப் பிந்தி வேலையைத் தொடங்கும் மேனேஜர் வந்துவிட்டதும் தெரியவில்லை. அய்யோ அவர் வந்துவிட்டார் இன்றைக்கு என்ன பூகம்பமோ தெரியவில்லை என்றேன். நீ வேலை செய்யும்போதுமட்டுமே வேலைக்காரன், இப்போது என்னோடு பேசிக்கொண்டிருப்பதால் 'பேசுபவன்' மட்டுமே என்றார் நண்பர். இது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் என் மானேஜருக்கு விளங்கவேண்டுமே என்று நினைத்தபடி, வேலை இருக்கையில் ஒரு கள்ளப்பூனையைப் போலப் போய் அமர்ந்தேன்.

காதலிலும், காதலிக்கும்போது மட்டும் காதலனாக இருந்தால், எந்த நேரமும் தொணதொணத்துக்கொண்டிருக்கும் அந்த 24 மணித்தியாலயக் காதலன் என்ற பெரும் தொல்லையில் இருந்தும் நாம் தப்பிக்கலாம். மகிழ்ச்சியாகக் காதலிப்பவர்கள் இப்படித்தான் பகுதிநேரக் காதலர்களாக இருக்கின்றார்கள் போலும்.

**************************
(Nov 20, 2021)