கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்
Showing posts with label கார்காலக் குறிப்புகள். Show all posts
Showing posts with label கார்காலக் குறிப்புகள். Show all posts

கார்காலக் குறிப்புகள் - 167

Wednesday, November 18, 2026

 

சி.அ.யோதிலிங்கத்தோடு எனக்கிருந்த தொடர்பு ஆறேழு வருடங்கள் இருக்கக்கூடும். அந்தக் காலம் ஈழத்தில் இறுதி யுத்தம் முடிவடைவதற்கும் முடிந்த மூன்று ஆண்டுகள் வரையானது. அவரோடான  நேரடி உரையால்களை விட, அவரைப் பற்றி அவரது நண்பர்கள்/ குடும்பத்தவர்களின் அனுபவங்கள், அவர் எழுதிய நூல்களினூடாகவே நிறைய அறிந்துகொண்டேன்.

80களில் பல இயக்கங்கள் தோன்றியபோது ஒரு இயக்கத்தோடு இணைந்து கொண்டு செயற்பட்டதும், பிறகு வேறொரு இயக்கத்தால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் வந்து தலைமறைவு வாழ்க்கைக்குப் போனதும், பிறகு மீண்டும் அவரைக் கொல்லத் தேடித் திரிந்த இயக்கத்துக்கு அவர் ஆதரவாக செயற்படத் தொடங்கியதுமென அவரது அரசியல் வாழ்க்கை ஒரு Case Study இற்குரியது.

அதனால்தான் ஈழப்போராட்டம் குறித்து எழுதப்படும் -அது எத்தரப்பாயினும்- ஒற்றைத்தன்மையான கதையாடல்கள் எவ்வளவு பலவீனமானது என்று சொல்லிவருகின்றேன். செழியன் எழுதிய 'ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து'வில்,  செழியனோடு சகோதர இயக்கத்தால் உயிர் பறிக்கப்படும் ஆபத்துக்கு அஞ்சி தலைமறைவாகும் மூன்று பேரில் ஒருவராக யோதிலிங்கம் இருந்திருக்கின்றார்.

பின்னர் செழியன் அதை வேறு  தனது அனுபவங்களோடு 'வானத்தைப் பிளந்த கதை'யாக சேர்த்து மீள வெளியிட்டபோது மணி(?) என்ற பெயரில் முதல் பிரதியில் மறைக்கப்பட்ட யோதிலிங்கத்தின் உண்மையான பெயரோடு அது வெளிவந்திருந்தது.

அதேவேளை யோதிலிங்கம் எப்போதும் அரசியல் களத்திலே நிற்கின்றவராக இருந்திருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் எப்படி ஒரு இயக்கத்தால் கொல்லப்படுவதற்காகத் தேடப்பட்டாரோ, பின்னர் கொழும்பில் இருந்த காலத்திலும் அவரது அரசியல் செயற்பாட்டால் இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டு சிறைக்குள்ளும் இருந்தவர்.

நான் அவரோடு பழகிய காலம் யுத்தம் மிக மோசமாக நடந்த காலம். யுத்தம் முடிந்தபோது இனி ஈழப்போராட்டத்தை புலம்பெயர்ந்தவர்களே - முக்கியமாக மாணவர்கள்- தலைமையேற்பார்கள் என்ற அதீத நம்பிக்கையில் அவர் இருந்தார். ஆனால் இங்குள்ள களநிலைமைகளை ஓரளவு தெரிந்த நானும் நண்பரும் அது அவ்வளவு சாத்தியமில்லை எனச் சொல்லியிருந்தோம்.

சிலவேளைகளில் பெனடிக் அண்டர்சன் எழுதிய ' Imagined Communities' இல் வரும் ஒரு தேசியத்தை எமது புலம்பெயர் தேசத்தின் அடுத்த சந்ததிகள் கொண்டு செல்லலாம் என்று சொன்னதாக ஞாபகம் (நம் தமிழ்ச்சூழலில் பெனடிக் அண்டர்சனின் இந்த நூல் 'தேசியம் ஒரு கற்பனையே' என மிக மோசமாக விளங்கப்பட்டிருப்பது வேறு விடயம்). அண்டர்சன் ஒரு போதும் இதை கற்பனை என்றோ போலி என்றோ சொல்லவில்லை. தமது சொந்த தாயகத்தைவிட்டு வெளியேறிய மக்கள், தமது சொந்த நாடு கலாசாரம் மொழி என்பதை தமது மனங்களில் காவியபடி இருப்பார்கள் என்பதையே எழுதுகிறார்..

அதை ஒருவகையில் தேசியம் என்பதற்கு ஒரு நிலப்பரப்பு வேண்டும், அங்கு மட்டுந்தான் மக்கள் வாழ வேண்டும் என்ற கருத்தாக்கத்தை விட்டு விலகி, தமது தாயக நிலப்பரப்பைத் தாண்டியும் மக்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் இருந்து தமது மொழி, கலாசாரம் போன்ற விடயங்களில் ஒன்றிணைவதும் அதைத் தமது மனங்களில் தொடர்ந்து காவிக்கொண்டு இருப்பதும் பற்றியே அண்டர்சன் இந்நூலில் அதிகம் பேசுகிறார்.  

அதையேதான் இன்றைய நம் புலம்பெயர்ந்த யதார்த்தமாக இருப்பதை நாம் யுத்தம் முடிந்த இந்த 17 வருடங்களில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

*

சி.அ.யோதிலிங்கத்தின் வாழ்க்கையில் நான் வியக்கும் ஒரு விடயம் அவர் எப்போதும் அரசியல் பிரக்ஞையோடு களத்தில் செயலாற்றிக் கொண்டிருந்ததையாகும். 1980களிலிருந்து பெரும்பாலும் மக்களோடு அவர் இறுதிவரை இருந்திருக்கின்றார்.

அரசியல் செயற்பாடுகளில் இருக்கும் பலர் என்ன செய்வார்கள் என்றால், ஒரு கட்டத்தில் அரசியலிலிருந்து விலகி குடும்பம் பிள்ளைகள் என்று போய்விடுவார்கள். பிறகு பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி அவர்கள் தம் சொந்தக்கால்களில் நிற்கும்போது, ஒரு சிலர் மீண்டும் அரசியல் களத்துக்கு வருவார்கள்.

யோதிலிங்கம் அப்படிப்பட்டவரல்ல. அவருக்கு குடும்பம் பிள்ளைகள் என்று இருந்தபோதும் 80களின் நடுப்பகுதியிலே மிக ஆபத்தான அரசியல் சூழலில் களத்தில் நின்றவர். அவ்வாறே பிறகான காலத்திலும் அரசியலில் இருந்து ஒதுங்காது நின்றவர்.

ஓர் ஆசிரியராக கற்பித்துக்கொண்டு ஓய்வு நேரத்தில் நூல்களை எழுதிக் கொண்டும் அவர் தொடர்ந்து இருந்திருக்கலாம். ஆனால் அவர் தனது 50வது வயதிலே ஆசிரிய பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று முற்றுமுழுதாக அரசியலுக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்.

அப்போது அவரின் பிள்ளைகள்  சொந்தக்கால்களில் நிற்காத மாணவர்களாக இருந்தார்கள் என்பது வேறுவிடயம். எனவே அவருக்குள் சமூகப் பொறுப்புணர்வு, அரசியல் என்ற வகைப்பாட்டினூடு அவ்வளவு ஆழமாக ஊடுருவியிருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் நாம் யோதிலிங்கத்துக்கு, செழியனுக்கு மிகுந்த ஓத்தாசையாக இருந்த அவர்களின் துணைகளையும், பிள்ளைகளையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். இன்றுவரைக்கும் ஈழப்போராட்டம் என்பது பெண்களின் பங்களிப்பு இல்லாது ஒரு அடி கூட நகர்ந்ததில்லை. ஆனால் ஈழப்போராட்டத்தில் (சி.புஸ்பராணியின் 'அகாலம்' நீங்கலாக) பெண்களின் வகிபாகம் முறையாக இன்றுவரை ஆவணமாக்கப்படவில்லை என்பது துயரமானது.

யோதிலிங்கம் போன்ற எமது இயக்கங்களில் இருந்தவர்கள் தமது வாழ்க்கையை எழுத்தாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருப்பவன் நான். முக்கியமாக பல்வேறு ஆயுத இயக்கங்களின் சார்பாக இயங்கி, பின்னர் ஈழப்போராட்டம் முடிந்தபோது  சில அரசியல் கட்சிகளில்  இயங்கி, அவற்றில் நம்பிக்கையிழந்து தனது அரசியல் நம்பிக்கைகளுக்காக கட்சி சாராத ஓர் அமைப்பை நிறுவி புதிய தலைமுறைகளுக்கு அரசியலைப் போதித்த சி.அ.யோதிலிங்கம், தான் கடந்து வந்த அரசியல் அனுபவப் பாதையை எழுதாமல் போனது எமக்குப் பேரிழப்பே.  

இன்றைக்கு ஒரு குறுகிய எல்லையைத் தாண்டிப்போக முடியாத அரசியல் எழுத்துக்களையும்/பேச்சுக்களையும் ஒருபக்கம் கொஞ்சக்காலம் ஒதுக்கிவிட்டு, எந்த இயக்கத்தவர்களாயினும் தமது அரசியல் வாழ்க்கையை ஒவ்வொருவரும் பதிவு செய்ய வேண்டுமென மனம் அவாவி நிற்கின்றது. அதுவே அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு அடுத்து வரும் சந்ததிகளுக்கு விட்டுச் செல்லும் முக்கிய செய்தியாக இருக்குமென நான் நம்புகின்றேன்.

சி.அ.யோதிலிங்கத்துக்கு எனது அஞ்சலி!

***

(கீழே வருவது 2008இல் அவரது நூலொன்றை வாசித்துவிட்டு நானெழுதியது)

வரலாறு என்பது அந்தந்தக்கால அதிகார வர்க்கத்தின் விருப்பு வெறுப்புகளை அதிகளவு பிரதிபலிக்கின்றது என்றாலும் நம் அனைவருக்கும் வரலாறு ஏதோ ஒருவிதத்தில் அவசியமாகின்றது. ஆகக்குறைந்தது கடந்தகாலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளிலிருந்து தப்பிப்போவதற்காகவேனும் வரலாற்றைக் கற்றல் முக்கியமாகின்றது. போர் மிகக்கொடூரமாய் திணிக்கப்படும் எமது தேசத்தில் வரலாறு மீதான வாசிப்புக்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டேயுள்ளன. எண்பதுகளில் போர்ச்சூழலோடு பிறந்த/வளர்ந்த சமுகத்திற்கு அதற்கு முன் ஈழத்தில் நிகழ்ந்த சாதியெதிர்ப்புப் போராட்டங்கள் குறித்த மிகக்குறைந்த அறிதலே இருக்கின்றது. போர் அரக்கன் எல்லாவற்றையும் தீராப்பசியுடன் தின்றுவிழுங்கும் காலகட்டத்தில் இருந்துகொண்டு வரலாற்றை வாசித்தல் என்பது கூட ஒருவகையில் அபத்தந்தான். எனினும் எமக்கு என்றொரு பூர்வீகநிலம் ஈழம் என்ற அழகிய தீவில் இருந்தது என்பதற்காகவும், எப்படி எமது இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை எதிர்காலச்சந்ததிக்குத் தெரியப்படுத்தவேனும் பிரதிகளில் வரலாறு தொடர்ந்து ஆவணப்படுத்தப்படல் அவசியமாகின்றது.

 



'இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் தீர்வு யோசனைகளும்' என்ற சி.அ.யோதிலிங்கம் எழுதியுள்ள நூல், இலங்கையில் ஆங்கிலேயர் காலத்திலிருந்தே முகிழத்தொடங்கிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைப்பற்றி உரையாடுகின்றது. சோல்பரி, டொனமூர் போன்ற அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களோடு, சென்ற மாதமளவில் கைவிடப்பட்ட புலிகள் X இலங்கை குடியரசு ஒப்பந்தம் வரை இந்நூல் விரிவாக அலசுகினறது.

ஒவ்வொரு யாப்பின் அலகுகள் குறித்தும் பேசும் அதேநேரம் ஒவ்வொரு யாப்புச் சீர்திருத்தமும் ஏன் இறுதியில் தோல்வியடைந்தது என்ற புள்ளிகள் குறித்தும் இந்நூலில் விவாதிக்கப்பட்டிருப்பது கவனத்திற்குரியது. மேலும், இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு, இனித் தீர்வுகள் வரையப்படுகின்றபோது சிறுபான்மை இனங்களாக உள்ள முஸ்லிம் மக்களினதும், மலையக மக்களினதும் அபிலாசைகளும் உள்வாங்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் இதில் பேசப்படுவது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

தனியே யாப்புகள், அவற்றின் குறைபாடுகள் என்ற எல்லைக்குள் சுருங்காது, 'இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு, அதிகாரப் பங்கீடு விடயங்களில் சர்வதேச அனுபவங்கள்' என்று குறிப்பிட்டு அமெரிக்கா, இந்தியா, சுவிஸலாந்து, சோவியத் யூனியனின் அரசியல் யாப்புகள் குறித்தும் கவனம் குவிக்கப்பட்டிருப்பது நல்லதொரு விடயமாகும்.

ஈழத்தமிழர் வரலாற்றில் சாதி மேலாண்மையாக இருந்த கட்சியாக குற்றஞ்சாட்டப்படுகின்ற தமிழர் கூட்டணி கூட 1972ல் ஆறம்சக்கோரிக்கையில், 'சாதியையும், பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பதையும் அரசியல் யாப்புச் சட்டம் மூலம் ஒழித்தல் வேண்டும்' என்பதை ஒரு கோரிக்கையாக முன்வைத்ததையும் கவனிக்கவேண்டும். மேலும் இந்நூலில் யாழ்ப்பாணத்தமிழரின் பூர்வீகம் குறித்து ஆராயும் பகுதியும் சுவாரசியமானது.

யாழ்ப்பாணத்தவர்களின் பூர்வீகம் குறித்து பல்வேறு கருதுகோள்கள் ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகளினடிப்படையில் முன்வைக்கப்பட்டாலும், கேரள மாநிலமென இப்போது அழைக்கப்படும் பிரதேசங்களிலிருந்து குடிபெயர்ந்தவர்களே யாழ்ப்பாணத்தவர்களாய் இருக்கக்கூடுமென்பது கவனிக்கத்தக்க ஒரு புள்ளியாகும். ஆரம்பத்தில் தமிழ் (சேரன் ஆண்ட) நிலப்பரப்பாக இருந்த பிரதேசம், பின்னாளில் தமிழ், சமஸ்கிருதக் கலப்பில் மலையாள மொழியை உருவாக்கி கேரளாவாக மாறியதாய் ஆய்வுகள் கூறுகின்றன. மொழி, இன்ன்பிற என்பவை மிகவிரைவில் அழியவோ திரிபடையவோகூடியதென்றாலும் ஒரு சமூகத்தின் கலாசாரம்/பண்பாடு என்பவை அவ்வளவு இலகுவில் அழியமுடியாது. அந்தவகையில் கலாசாரம்/பண்பாடு/ உணவுப்பழக்கங்களில் மிக நெருக்கமான உறவுகள் கேரளாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் உள்ளதை நாமறிவோம். மிக விரிவான ஆய்வுகள் இவ்விரு பிரதேசங்களிலும் செய்யப்படுங்கால் சுவாரசியமான பல உண்மைகள் எதிர்காலத்தில் சிலவேளைகளில் வெளிப்படவும்கூடும்.

மேலும் கொழும்பு போன்ற பெருநகரங்களில் சுத்திகரிப்புத் தொழிலைச் செய்வதற்காய்க் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 'அருந்ததியர்' சமூக மக்கள் பற்றிச் சில குறிப்புகள் இந்நூலில் வருகின்றது. விளிம்புநிலை மனிதர்களாக்கப்பட்ட இச்சமூக மக்கள் பற்றிய ஆய்வுகளும், ஆவணங்களும் இலங்கை வரலாற்றில் மிகக்குறைந்தளவே (அல்லது முற்றாகவே இல்லை) போலத்தான் தெரிகின்றது. இந்தப்புள்ளி குறித்து, இனி இலங்கையின் இனங்களைப் பற்றி எழுதும் அரசியல் ஆய்வாளர்களும், சமூகவியலாளர்களும் கவனத்தில் கொள்ளுதல் அவசியமாகும் ('அருந்ததியர்: வாழும் வரலாறு', மாற்கு எழுதி, பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் வெளியிட்ட நூலையும் ஈழத்திலிருக்கும் அருந்ததியர் வரலாற்றிற்கு உசாத்துணை நூலாகக் கொள்ளலாம்).

சி.அ.யோதிலிங்கத்தின், 'அரசறிவியல்: ஓர் அறிமுகம்', 'ஒப்பியல் அரசாங்கம்' போன்ற பிற நூல்களை வாசித்திருந்தாலும், அவை உயர்தர வகுப்பு மாணவர்களைக் கவனத்திற்கொண்டு எழுதப்பட்டதால் என்னை அவ்வளவாய் ஈர்த்ததில்லை. இந்நூலும் மாணவர்களை முக்கிய வாசகர்களாய்க்கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் பிறரும் அலுப்பில்லாது வாசிக்க முடிகின்ற பிரதியாய் இருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இன்று கிழக்கு மாகாணங்களில் சிங்களக்குடியேற்றங்களால், தமிழர்களின் எத்தனையோ பூர்வீகநிலங்கள சூறையாடப்பட்டு சிங்களமயமாக்கப்பட்டு வரலாற்றின் பக்கங்களிலிருந்து அகற்றப்பட்டிருக்கின்றன.

அவ்வாறு இழக்கப்பட்ட பிரதேசங்களைக் கண்டுபிடிக்கவும் எமக்கான நியாயங்களை சர்வதேசத்தின் முன் எதிர்காலத்தில் கேட்கவும் இவ்வாறான விடயங்கள் ஆய்வுத்தரவுகளின் அடிப்படையில் ஆவணமாக்கப்படவேண்டும்.

மேலும் இந்நூல், தமிழில் அரசியல் குறித்து எழுதப்படும் பல பிரதிகள் போலவன்றி -ஏதோ ஒரு பக்கத்தை மட்டும் நியாயப்படுத்துவதில் நிற்காது- முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் குறித்தும் அக்கறையான பார்வைகளை முன்வைப்பதால் முக்கியமானது ஆகின்றது.


***

(Oct 09)

 

கார்காலக் குறிப்புகள் - 166

Sunday, November 01, 2026

பெருமாள் முருகனின் 'சோரகவி மரபு: பதிப்பும் திருட்டும்' நூல் குறித்து..

***

 

இன்று புத்தர் கற்பித்தவை என்று சொல்லப்படுபவை ஒரு நீண்ட மரபில் பேணிக் காக்கப்பட்டு ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்பட்டு வந்து கொண்டிருப்பவை. அவ்வாறே நமது சங்க இலக்கியப்பனுவல்களும் தொடர்ச்சியாக ஏதோ ஒருவகையில் பேணப்பட்டு நூல் வடிவங்கள் பெற்றிருக்கின்றன. அந்த ஆக்கங்களில் இடைவீழ்தல், இடைநீக்கல், இடைச்செருகல் நிகழ்ந்திருக்கலாமென்றாலும் ஏதோ ஒருவகையில் சங்க இலக்கியங்களின் அசல் காப்பாற்றப்பட்டு வந்திருப்பதாலேயே தமிழ் மொழியின் தொன்மையை நாம் இன்று பேச முடிகின்றது.

வாய்மொழியாகவும் பின்னர் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு வந்த இந்தப் பனுவல்கள் அச்சியந்திந்திரங்களின் அறிமுகத்தால் அச்சிலும் வந்தாலும், இவற்றைன் பின்னால் பலரின் பேருழைப்பு இருக்கின்றது என்பதை நாமறிவோம். சங்க கால இலக்கியங்களைப் பேசும்போது மறைமுகமாக இவற்றை எடுத்து வந்தவர்களினதும், பாடபேதங்களைக் களைந்தவர்களினதும் பங்களிப்பு இல்லாதுவிட்டால் இன்று நாம் அசலான சங்க இலக்கியப் பாடல்களையோ அதன்பின்னால் எழுதப்பட்ட பனுவல்களையோ எளிதில் அறிந்திருக்க முடியாது.

 


அவ்வாறானவர்களின் உழைப்பையும் பங்களிப்பையும் அறிமுகம் செய்கின்ற ஒரு சிறந்த நூலாக பெருமாள் முருகனின் 'சோரகவி மரபு: பதிப்பும் திருட்டும்' என்பதைச் சொல்ல முடியும். இந்நூலில் இருக்கும் கட்டுரைகள் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை. சோரகவி மரபு என்ற தலைப்பின் கீழ் பெருமாள் முருகன் சுமார் 20 வருடங்களுக்கு முன் எழுதி இடைநிறுத்திய தொடரும் இந்நூலின் பிறபகுதில் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

எனக்கு சோரகவி மரபுத் தொடரின் கீழ் வரும் ஒன்பது கட்டுரைகளை விட, வெவ்வேறு தலைப்பில் கீழ் எழுதப்பட்ட மற்றக் கட்டுரைகளே அதிகம் பிடித்திருந்தது. இத்தொகுப்பின் முதலாவது கட்டுரையான 'அகராதி நோக்குப் பதிப்பில்' , சங்க இலக்கியம் முழுவதையும் ஒருசேரப் பதிப்பித்தவர் ச.வையாபுரிப் பிள்ளை (1940) என்பதை அறிந்துகொள்கின்றோம்.

அதேவேளை ஈழத்தைச் சேர்ந்த சி.வை.தாமோதரம்பிள்ளையாலே முதன்முதலில் 1887இல் கலித்தொகை பதிப்பிக்கப்படுவதன் மூலம் சங்க இலக்கிய பதிப்பு தொடங்கப்பட்டது என்பதை பெருமாள் முருகன் நேர்மையாகப் பதிவு செய்கின்றார்.

*

தாமோதரம்பிள்ளையால் தொடங்கப்பட்ட சங்க இலக்கியப் பதிப்பின் இன்னொரு பரிணாமத்தை உ.வே.சாமிநாதயைய்யர் உருவாக்குகின்றார். இவர்களின் தொடர்ச்சியில் முழு சங்க இலக்கியத்தையும் ச.வையாபுரிப் பிள்ளை இரண்டு பகுதிகளாக 'சைவ சித்தாந்த மகா சமாஜம்' மூலம் வெளியிடுகின்றார்.

இந்தக் கட்டுரையில் மட்டுமில்லை, தனிக்கட்டுரையாக எழுதப்பட்ட இன்னொரு கட்டுரையான 'உண்மைப் பாஷாபிமானம்' மூலமாகவும், நாம் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு சங்க இலக்கியங்கள் மீதிருந்த ஆழமான பற்றைக் கண்டுகொள்கின்றோம். வ.உ.சி தனியே 'கப்பலோட்டிய தமிழனாக' தமிழர் தம் மனங்களில் தேங்கிப் போனவர் என்றாலும் அதைத்தாண்டி வ.உ.சி செய்த சங்க இலக்கியப் பதிப்புக்களை, முக்கியமாக தொல்காப்பியப் பதிப்புகள் குறித்து பெருமாள் முருகனின் கட்டுரையில் கண்டறிந்து கொள்கின்றோம்.

வ.உ.சி தனியே தொல்காப்பியத்தில் மட்டும் நிற்காது, அவருக்கு அறக்கோட்பாடுகள் மீதிருந்த ஈடுபாடால், அவர் திருக்குறள் அறத்துப் பாலுக்கு உரை எழுதியிருக்கின்றார் என்பதும், சிறைக்குள் இருந்த காலத்தில் அறத்துப்பாலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்ததாகவும் அவரது 'மனம் போல வாழ்வு' நூலை வாசிக்கும்போது அறியக்கூடியதாக இருக்கிறது என்கிறார் பெருமாள் முருகன். தனியே வ.உ.சியின் பங்களிப்பு என்று இக்கட்டுரைய எழுதாமல், தொல்காப்பியத்தில் நிகழ்ந்த இடைச்செருகல், பாடபேதங்கள், போலி நூல்கள் என்று பலவிடயங்களை பெருமாள் முருகன் தொட்டுச் செல்வது சுவாரசியமானது.

அதேபோல இத்தொகுப்பில் இருக்கும் 'புலமையும் படைப்புணர்வும்' கட்டுரை புனைவில் சிறந்து விளங்கிய கு.அழகிரிசாமியை பழ்ந்தமிழ் இலக்கிய பதிப்பில் ஒருவராக நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. புனைவெழுத்திலும் அதேவேளை பழந்தமிழ் இலக்கியத்திலும் ஒருசேரக் கால்பதித்து நின்றோர் அரிதே. அந்தவகையில் நவீன சிறுகதையாளரான மு.அழகிரிசாமி பழந்தமிழ் இலக்கியப் பதிப்பிலும் தீவிரமாக ஈடுபட்டார் என்பது அறிவது வியப்பூட்டக்கூடியதே. எப்படி வ.உ.சியை 'கப்பலோட்டிய தமிழனாக' மட்டும் சுருக்கினோமோ, அவ்வாறே மு.அழகிரிசாமியையும் ஒரு புனைவெழுத்தாளராக மட்டும் நாம் சுருக்கிவிட்டோம் என்றுதான் அவரின் பங்களிப்பை அறியும்போது நமக்குத் தோன்றும்.

அழகிரிசாமி  'காவடிச் சிந்து' நூலைப் பதிப்பிக்கும்போது சும்மா வீட்டுக்குள் இருந்து நூலை பதிப்புக்கு அனுப்பாது, பல கிராமங்களுக்கு சென்று ஏடுகள் பலதைத் தேடியும், பலரை அதைப் பாடச் சொல்லிக் கேட்டும் குறிப்புகளை சேகரித்தோடல்லாது, அச்சுப்பிரதி, ஓலைச்சுவடிப் பிரதி, கள ஆய்வில் சேகரித்தவை என்பவற்றைக் கொண்டு பாட பேத வேறுபாடுகளையும் கவனமாக நுணுக்கி ஆராய்ந்தே அந்த நூலை பதிப்பித்திருக்கின்றார். அதேபோன்று கம்பராமாயணத்தின் பாலகண்டம், ஆரணிய காண்டம், சுந்தர காண்டம் போன்றவற்றையும் அழகிரிசாமி பதிப்பித்திருக்கின்றார். தனியே பதிப்பிக்காது, கம்பராமாயணத்தின் அசலில் கைவைத்த செருகுகவிகள் பற்றிய குறிப்பையும் தனது பதிப்புரையில் குறிப்பிட்டிருக்கின்றார். அவரின் வார்த்தைகளில் கூறுவதனால், 'கம்பராமாயணத்தைக் கவிதை உணர்ச்சியோடு படிப்பவர்கள் பல பகுதிகளைச் செருகுகவிகள் என்று கூறும் நிலைக்கு வருவார்கள் என்பது திண்ணம். அப்போது புத்தகத்தில் பாதியோ அலல்து பாதிக்கும் அதிகமோ செருகுதான் என்று அவர்கள் கண்டு உணரக் கூடும்' என்கின்றார்.

*
'கண்ணைக் கொடுத்த நூல்' என்ற தலைப்பில் பெருமாள் முருகன் 'புறத்திரட்டு' நூல்களைப் பேசுவது அவ்வளவு சுவாரசியமானது.

புறத்திரட்டு என்பவை அசலான நூல்களே அல்ல. அவை ஒவ்வொருவரும் தம்மைக் கவர்ந்த பாடல்களை மனப்பாடம் செய்யும்பொருட்டு பல்வேறு மூல நூல்களில் இருந்து எழுதிவைத்த பாடல்களின் தொகுப்பாகும்.  இந்தப் 'புறத்திரட்டு'ப் பாணியே பிற்காலத்தில் பிரசங்கம்/கதாகலாட்சேபம் செய்பவர்களுக்கு உதவியது என்கின்றார் பெருமாள் முருகன். தொடக்கத்தில் இத்தகை புறத்திரட்டு நூல்களை எவரும் பதிப்பிக்கவில்லை என்றாலும், முதன்முதலாக 'புறத்திரட்டை'ப் பதிப்பித்த ச.வையாபுரிப் பிள்ளை இது 13/14ம் நுற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப் பெற்றிருக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

வ.உ.சா ஒருகாலத்தில் வறுமைக்குச் சென்றபோது அவர் தமது குடும்பத்தவர் செய்த தொழிலான காலட்சேபம்/உபந்நியாயம் செய்யப் போகின்றார். அவருக்கு இந்த புறத்திரட்டு நூல்களே உதவியிருக்கலாம் என பெருமாள் முருகன் பல்வேறு உதாரணங்கள் மூலம் நமக்குக் காட்டுகின்றார். அதேவேளை இப் புறத்திரட்டில் தமிழர் மரபான அகமும் புறமான திணைப்பாடல்கள் இருந்திருக்கலாம் என்றாலும், ஏதோ ஒருகட்டத்தில் அறவுணர்வை வலியுறுத்தும் நோக்கில் அகப்பாடல்கள் இந்த புறத்திரட்டில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்பது ஒரு முக்கிய அவதானமாகும்.

*
'தமிழில் நவீன இலக்கியச் செம்பதிப்புகள்' என்ற கட்டுரை ஆ. இரா. வேங்கடாசலாபதி பதிப்பித்த 'புதுமைப்பித்தன் கதைகளோடு' (2000) தொடங்குகின்றது என்கின்ற அவதானத்தை பெருமாள் முருகன் முன்வைக்கின்றார். இந்தக் கட்டுரை மட்டுமில்லை 'நவீன இலக்கியப் பதிப்பு முன்னோடி', 'புதுமைப்பித்தனின் காசு' போன்ற கட்டுரைகளும் ஆ.இரா.வேங்கடாசலபதியின் பதிப்புக்களையே நவீன பதிப்புக்களாக நிலை நிறுத்த முயல்கின்றவை எனச் சொல்லலாம்.

நமக்கு இந்தப் புள்ளியில் மாறுபாடான கருத்துக்கள் இருந்தாலும், வேங்கடாசலபதி தமிழின் பதிப்புக்களுக்கு ஒரு புது முன்னுதாரணத்தைக் கொடுத்தவர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்தப் பதிப்புக்களை முன்னோடியாகக் கொண்டு பெருமாள் முருகன் தான் தொகுத்த 'கு.ப.ராவின் சிறுகதை'களைப் பதிப்பித்தார் எனவும் சொல்கின்றார். மேலும் இதுவரைகாலமும் தொகுப்பாசிரியர் என்றிருந்ததை தமிழில் பதிப்பாசிரியர் என்கின்ற இன்னொரு கட்டத்துக்கு வேங்கடாசலபதி நகர்த்தியிருக்கின்றார் என்பதும் கவனிக்கத்தது.

இன்னொரு கட்டுரையான 'எம்முளும் உளனொரு பொருநன்' தமிழ்ன் கலைக்களஞ்சியம் குறித்த முக்கியமான கட்டுரையாகும். தமிழின் கலைக்களஞ்சியத்தை இதுவரை நான் பார்த்தவன் இல்லை என்றாலும், அது ஆங்கிலக் கலைக்களஞ்சியத்தை விட வித்தியாசமாக இருக்கின்றதென நினைக்கின்றேன். ஏனெனில் பெருமாள் முருகன் தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் இருந்து மா.கிருஷணின் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து 'பறவைகளும் வேடங்தாங்கலும்' என்ற தொகுப்பை பெருமாள் முருகன் வெளியிட்டிருக்கின்றார். அவ்வாறே இக்கலைக்களஞ்சியத்தில் இருந்து தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் கட்டுரைகளும் தொகுத்து ஒரு தனி நூலாக வெளிவந்ததென பெருமாள் முருகன் குறிப்பிடுகின்றார். மேலும் இதில் நவீன தமிழ் இலக்கியத்தில் பங்களித்தவர்களின் கட்டுரைகளும் தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் இருக்கின்றதென்கின்றார்.

ஆக ஆங்கிலக் கலைக்களஞ்சியம் போலவல்லாது, தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் கட்டுரைகள் எழுதியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றதென நினைக்கின்றேன். இஃதொரு சுவாரசியமான வித்தியாசம். அதுபோல இந்தக்கட்டுரையில் பெருமாள் முருகன், வேங்கடாசலபதி எழுதிய 'கலைக்களஞ்சியத்தின் கதை' என்கின்ற நூலைப் பற்றியும் குறிப்பிடுகின்றார். எவ்வாறு தமிழில் கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டது, யார் யார் பங்களித்தார்கள், (மறைமலையடிகள் உட்பட) யார் யார் பங்களிக்க மறுத்தார்கள்,  ஏன் திராவிட கட்சிப் பாரம்பரியத்தைச் சேர்ந்த க.அன்பழகன் போன்றோர் எதிர்த்தார்கள் என்பதெல்லாம் அதில் எழுதப்பட்டிருக்கின்றது என்கின்றார்.

இன்னொரு கட்டுரையான 'வாசகருக்கு வழிகாட்டும் பதிப்பு' எப்படி ஒரு பதிப்பைச் சரியாகப் பதிப்பிக்க முடியும் என்பதற்கான உதாரணமாக புதுச்சேரியில் கவர்னரின் மொழிபெயர்ப்பாளராக இருந்த ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் நாட்குறிப்புகள் பதிப்பிக்கப்பட்டதைப் பற்றி விரிவாக பெருமாள் முருகன் ஆராய்கிறார்.

*

இக்கட்டுரையில் பின்னால் ஒன்பது கட்டுரைகளாக இருப்பது பெருமாள் முருகன் சோரகவி மரபு என்ற தலைப்பில் எழுதிய ஒன்பது கட்டுரைகள்.  தமிழில் இலக்கியத் திருட்டுகளை அந்தக்காலத்திலே பல்வேறு பெயர்களில் பிரித்து வைத்திருக்கின்றார்கள் என்பது சுவாரசியமானது. அது 'சோரகவி, சார்த்துகவி, பிள்ளைக்கவி, வெள்ளைக்கவி' திருட்டுக்கள் எனப் பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

சோரகவி என்பது ஒருவன் பாடிய பாக்களை வேறொருவனுக்குக் கொடுப்போன் கள்ளக்கவி ஆகும் வகையைச் சேர்ந்தது. அதுபோல சார்த்துக்கவி என்பது ஏற்கனவே ஒருவன் பாடியுள்ள பாடலின் சந்தத்தில் வேறொரு பாடல் புனைவோன் செய்யும் திருட்டாகும். பிள்ளைக்கவி என்பது சொந்தச் சிந்தனை ஏதுமின்றி முன்னோரை அப்படியே பின்பற்றி கவி எழுதும் திருட்டாகும். வெள்ளைக்கவித் திருட்டு பொருத்தமற்ற சொற்களைக் கொண்டு கவி புனைவோர் செய்யும் செயலாகும். நமது ஈழ/புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் கவனம் கொள்ளவேண்டிய ஒரு திருட்டைப் பற்றியும் பெருமாள் முருகன் சொல்கிறார். அது ' எழுதியவர் சம்மதத்தோடு பிறருக்குக் கொடுக்கப்படாலும் கூட இவையும் கள்ளக்கவி என்றுதான் தமிழ் மரபு கூறுகின்றது' என்கின்றார்.

இந்த வகையில் தமிழில் நடந்திருக்கும் திருட்டுக்களை ஆய்வு செய்யும் நோக்கில் இதிலிருக்கும் ஒன்பது கட்டுரைகள் இருப்பினும், இந்த நூலின் முன்னே இருக்கும் கட்டுரைகளின் தரத்துக்கு இக்கட்டுரைகள் இல்லை என்றே சொல்வேன். இந்தத் திருட்டுக்களை எழுத்தில் பதிவு செய்வது முக்கியம் என்றாலும், இந்நூலுக்கு இவை தேவையில்லை என்பது போலவே எனக்குத் தோன்றியது.

அண்மையில் ஓர் அரங்கில் சல்மான் ருஷ்டி நேர்காணல் கொடுக்கும்போது, ஏன் அதிகாரத்தில் இருப்பவர்க்கு எழுத்தாளர்கள் அச்சுறுத்தலாக இருக்கின்றார்கள். இத்தனைக்கும் இந்த எழுத்தாளர்களிடம் பணமோ, அதிகாரமோ இல்லையென்றாலும் ஏன் அவர்களைக் கண்டு அதிகாரம் அஞ்சுகிறது? ஏனெனில் சர்வாதிகாரிகள் அதிகாரபூர்வமாக (official) தம்மைப் பற்றி பெருந்திரளுக்குள் ஒன்றை நிறுவ முயல்கின்றபோது, ஒரு நூல் அதனுள்ளே அதிகாரபூர்வமற்ற(unofficial) முறையில் அந்த அதிகாரத்துக்கு எதிரானவற்றைப் பேச முயல்கின்றது. அதனால்தான் அதிகாரம் எழுத்தைக் கண்டு அஞ்சுகிறது என்று சொல்லியிருப்பார்.

அவ்வாறே நூல்களில் சொல்லப்படுபவை அவ்வளவு எளிதில் அழிவதில்லை. பெருமாள் முருகன் இந்த நூலில் முன்னுரையில் மலையாள மனோரமாவில் 'தமிழக இசை' பற்றி அங்கயற்கண்ணி எழுதிய கட்டுரையை அன்றைய ஜெயமோகனின் 'சொல் புதிது' களவாடி அவரின் மனைவி பெயரில் வெளியிட்டது என்பது குறித்த வரலாற்றை விரிவாகப் பேசுகின்றார். அசல் கட்டுரையை எழுதிய அங்கயற்கண்ணியைப் பெருமாள் முருகன் நேரில் சந்தித்திருக்கின்றார் என்பது சுவாரசியமானது. இந்தத் திருட்டை பொ.வேல்சாமி போன்றவர்கள் அம்பலப்படுத்தப்படும்வரை மெளனம் காத்த ஜெயமோகன் பின்னர் 'தீம்தரிகிட' இதழ் மூலம் மன்னிப்புக் கேட்டார் என்று பெருமாள் முருகன் எழுதுகின்றார். அதேவேளை அப்படி மன்னிப்புக் கேட்ட ஜெயமோகன், அங்கயற்கண்ணியே கலைக்களஞ்சியத்தைப் பார்த்து எழுதினார் என்றும், இன்னொருபொழுது 'சொல் புதிது' இதழ் பணிகளைச் செய்த சரவணன்1978 இப்படிச் செய்துவிட்டார் என்று குழப்பகரமான பதில்களைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார் என்றும் பெருமாள் முருகன் இந்த இலக்கியத் திருட்டைப் பற்றி விரிவாகப்  பதிவு செய்திருக்கின்றார்.

என்கின்றபோதும் இந்த இலக்கியத் திருட்டுக்கள் பற்றிய முன்னுரையோ, அல்லது பிற்பகுதியில் சேர்க்கப்பட்ட கட்டுரைகளோ அவ்வளவு வளத்தை இத்தொகுப்புக்குச் சேர்க்கவில்லை என்றே சொல்வேன். மேலும் சோரகவிக்கு அன்று என்ன அர்த்தம் இருந்தாலும் இன்று சோரம்போதல் என்ற சொல்லோடுதான் மனம் அதிகம் தொடர்புபடுத்திப் பார்க்க விழைகிறது. அந்தச் சொல்லே காலாவதியாகிப் போய்க்கொண்டிருக்கின்ற காலத்தில் பெருமாள் முருகன் வேறொரு தலைப்பில் இந்நூலுக்கு தலைப்பு வைத்திருக்கலாமோ என்றும் தோன்றுகின்றது.

*

இந்த நூலின் முற்பகுதியில் இருக்கும் கட்டுரைகளே இந்தத் தொகுப்பை அவ்வளவு முக்கியப்படுத்துகின்றது. இன்று தமிழ்ச்சூழலில் பதிப்புச்சூழலில் இயங்குபவர்கள் நிச்சயம் இந்நூலை ஒரு உதவிக் கையேடாகக் கொள்ளலாம் என்று சொல்லுமளவுக்கு விரிவாகப் பல விடயங்கள் பதிப்புகள் சார்ந்து எழுதப்பட்டிருக்கின்றது.

இந்த நூலை வாசிக்கும்போது எப்பாடுபட்டேனும் 'கலைக்களஞ்சியத்தின் கதை'யைப் பெற்று வாசித்துவிட வேண்டும் என்ற ஆவல் வந்திருந்தது. அதுபோலவே பழந்தமிழ் இலக்கியம் என்றாலே சற்று பயத்துடன் ஒதுங்கி நிற்கும் ஒருவனான என்னையே பெருமாள் முருகன் தொல்காப்பியம் பற்றிக் குறிப்பிட்டவற்றைப் வாசித்தவுடன், உடனேயே 'தொல்காப்பியம்: ஒரு பனுவலின் நெடும்பயணம்' என்ற சிலம்பு நா.செல்வராசு அவர்கள் எழுதிய நூலை எடுத்து வாசிக்க வைத்திருக்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

ஒரு புனைவெழுத்தாளர் ஒரு அல்புனைவாளராகவும் இருக்கும்போது அவரின் எழுத்துக்கள் வித்தியாசமான பார்வையைத் தருவதாக மட்டுமில்லை  ஒரு புனைவைப் போல வாசிக்கச் சுவாரசியமாக இருக்கும் என்பதற்கு இந்த நூல் நல்லதொரு உதாரணமாகும். கு.அழகிரிசாமி எப்படி புனைவெழுத்தாளராக இருந்துகொண்டு பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றி எழுதவும், பதிப்பிக்கவும் முடிந்ததோ, அவருடைய தொடர்ச்சியாக நான் பெருமாள் முருகனையும் நினைத்துக் கொள்கின்றேன்.  அவ்வாறு இருதுறைகளிலும் காலூன்றியவர்கள் அரிதே. ஆனால் அதுவே சிறப்பானதும் கூட.

*** 

 

(Oct 06, 2026)


கார்காலக் குறிப்புகள் - 165

Friday, October 30, 2026

 

'டோரதி' திரைப்படம் குறித்து பலர் விரிவாக எழுதிவிட்டதால் அது குறித்து பேசப் போவதில்லை. இந்தத் திரைப்படத்தை ஒரு முக்கிய திரைப்படமாக அங்கீகரித்து அதேவேளை அதன் மீது காத்திரமான விமர்சனங்களை முன்வைக்கும் தருமராஜ்ஜினதும், பிரபாகரினதும் பதிவுகளை வாசிக்க நண்பர்களைப் பரிந்துரைக்கின்றேன்.




இப்போது 'டோரதி' திரைப்படம் குறித்து பேசப்படுவதால் இதே பின்னணியில் எட்டு வருடங்களுக்கு முன் கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் நெறியாளாரான லெனின் எம். சிவத்தின் 'ரூபா' (Roobha) படத்தை நினைவுபடுத்த வேண்டியிருக்கின்றது.

'ரூபா'வின் கதை புலம்பெயர்ந்த சூழலில் நடைபெறுவது. கனடாவில் வாழ்கின்ற ஒரு  தமிழர் ஒரு பார் வைத்திருக்கின்றார். அவர் ஒரு குடும்பஸ்தர் - மனைவியும் பிள்ளையும் இருக்கின்றனர். மிகை குடியாலும், புகைபிடிப்பதாலும் வாழ்வை அழித்துக் கொண்டவர். கிட்டத்தட்ட அவரின் வாழ்வு நோயின் நிமித்தம் ஆபத்தான நிலைக்குப் போகின்றபோது ரூபா என்கின்ற அழகிய பெண்ணை அவரது சொந்த பாரில் வைத்துச் சந்திக்கின்றார்; காதலில்/காமத்தில் வீழ்கிறார்.

ஒரு மோட்டலுக்கு (?) அப்'பெண்ணை' அழைத்துச் செல்லும்போதே அவர் ஒரு திருநங்கை என்று கண்டுகொள்கிறார். இதில் இரண்டு வகை கதை சொல்லப்பட்டிருக்கின்றது. ஒரு தமிழ் குடும்பஸ்தவனின் பார்வையில் ஒன்று. மற்றொன்று ரூபா என்கின்ற திருநங்கை கடந்துவந்த பாதை. அவர் மும்பாயில் பிறந்து பெற்றோரால் அவரின் பாலினம் அங்கீகரிக்கப்படாத சூழ்நிலையில் வீட்டை விட்டு வெளியேறி அவர்களின் தெய்வமான மார்தாவின் முன் குறியறுக்கும் காட்சி மட்டுமில்லை, அந்தத் தெய்வமே ஒரு தொன்மமாக ரூபா படத்தில் தொடக்கத்திலிருந்து வருவதாகக் காட்டப்படுகின்றது.

ஒருவகையில் தருமராஜ் முன்வைக்கும் பால்புதுமையினரின் பிரச்சினைகளை, ஆணாதிக்கத்தின்/ ஆணவக்கொலை/சாதிப்பெருமிதங்களின் பின்னணியில் வைத்து டோரதியில் திரைப்படமாக்கியது சரியா என்ற கேள்வியை ரூபாவின் மீதும் முன்வைத்துப் பார்க்க முடியும்.

ரூபா இயன்றளவு அதை திருநங்கைகளின் தனித்த பிரச்சினையாக முன்வைத்துப் பேசுகின்றது எனச் சொல்லலாம். ரூபா மீதும் நாம் அந்தக்காலத்தில் விமர்சனங்களை முன்வைத்திருந்தோம் என்பது வேறுவிடயம்.

முக்கியமாக ஓர் அசலான திருநங்கையை நடிக்க வைக்காமல் ஏன் ஒரு ஆணை எப்படி (இது டோரதிக்கும் பொருந்தும்) திருநங்கையாக நடிக்க வைப்பது என்பது என்னைப் போன்றவர்கள் நெறியாளரிடம் கேட்ட/கேட்க விரும்பிய கேள்வி. தனிப்பட்டு லெனின் நண்பர் என்பதால், அவர் அப்போது ஒரு தமிழ் திருநங்கை நடிகையாக கிடைக்கவில்லை என்றும், அதன் பின்னரே நடிகர்களான தனுஜா போன்ற திருநங்கைகள் பொதுச்சூழலில் தங்களை வெளிப்படையாக அறிவித்து இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்ததாகவும் சொன்னது ஞாபகம்.

இப்போது நண்பர்களாக இருப்பவர்களின் படைப்புக்களைப் பற்றி எதைச் சொல்லவும் பயமாக இருக்கின்றதெனினும், லெனின் தனது புதுப்படத்துக்கான திரைக்கதையையும் அண்மையில் அனுப்பி வாசித்துக் கருத்துக்களை கேட்கும் நல்லதொரு நண்பர் என்பதால்  இப்போது இதையெல்லாம் கிண்டிக் கிளறுவதால் மற்றவர்கள் போல கோபித்துக் கொள்ளமாட்டார் என்று நம்புகின்றேன் (Disclaimer முக்கியம்).

அதேவேளை லெனின்,  ரூபா திரைப்படம் வந்தபோது எமது தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்துக்கு மட்டுமில்லை, தனக்குமே திருநங்கைகள் குறித்த ஆழமான புரிதல் தொடக்க காலத்தில் இருந்ததில்லை என்பதை தனது நேர்காணல்களில் தொடர்ச்சியாக நினைவுபடுத்திக் கொண்டிருந்தவர் என்பதாகவும் நினைவிருக்கிறது.

*
ஆக டோரதிக்கு முன்னரே ரூபா என்கின்ற திருநங்கைகளை பின்னணியாக வைத்து ஒரு முழுநீளப்படம் வந்திருக்கின்றது என்பதை நம் தமிழ்ச்சமூகத்துக்கு நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. அதில் வைக்கப்பட்ட காம/முயக்க காட்சிகளில் கூட லெனின் எவ்வித சமரசத்துக்கும் வரவில்லை என்றாலும், ஆனால் அவ்வாறான காட்சிகளை  ஏற்றுக்கொள்ள புலம்பெயர்ந்த தமிழ்ப் பொதுச்சமூகம் இன்னும் தயாராக இருக்கவில்லை என்றும் தனிப்பட்ட பேச்சில் லெனின் சொல்லியிருந்தது ஞாபகம். அதன் நிமித்தம் 'ரூபா' ஒருவகை மெளனத்தால் நம்சூழலில் நிராகரிக்கப்பட்டும் இருக்கும் என்பது என் பார்வை.


 

இதே பின்னணியில் இப்போது வந்த டோரதி, ரூபா போலவன்றி பொதுச்சமூகத்தை கவனத்தில் கொண்டு அல்லது கார்த்திக் சுப்புராஜ்ஜின் வார்தைகளில் சொல்வதனால் 'கமர்ஷியலாக' இதை ஆக்குவதைத் தொடக்கத்திலிருந்தே தீவிர யோசித்தே திரைக்கதை அமைத்தேன் என்று சொல்கின்றார். அதனால்தான் படத்தில் இடைவெளிவரை ஓர் ஆண் திருநங்கையாக மாறுவதன் மாற்றங்கள் துளிகூடக் காட்டவில்லை. பிறகு பிளாஷ்பேக்கில் மட்டும் டோரதியோடு பழகும்போது அவர் அந்த அடக்கிவைக்கப்பட்ட ஆண் உடலிலிருந்து வெளியேற முயலும் ஒருவராகக் காட்சிப்படுத்தப்படுகின்றார்.

அசல் வாழ்க்கையில், ஒரு ஆணைச் சிறுவயதில் தெரிந்த அவரின் நண்பரான கார்த்தி இந்த மாற்றங்களை எளிதில் கண்டடைந்திருப்பார். ஏனெனில் கார்த்தி மட்டுமே சுப்புவோடு தொடர்ந்து அருகில் இருப்பவர். டோரதி கூட பிறகுதான் வருகின்றவர். இது ஒரு அசலான திருநங்கையின் வாழ்வைத் தேடும் இரசிகருக்கு நெருடலாக இருக்கக்கூடும். ஆனால் இது அனைவரையும் கவரும் திரைப்படமாக வேண்டிய கட்டாயம் இருப்பதில் இடைவேளை வரை மூடிமறைக்கப்படும் இந்த சமரசங்களும் புரிந்து கொள்ளக்கூடியதே.

இதை ரூபாவில் லெனின் எளிதாகத் தாண்டியிருப்பார். ஏனெனில் கதையே ஒரு பெண்ணாக மாறிவிட்ட திருநங்கையைச் சந்திப்பதுடந்தான் தொடங்குகின்றது. அங்கிருந்துதான் கதை, அந்தப் பெண் ஒரு திருநங்கை என்று அறியப்படும்போது நனவிடைதோய்தலுக்குப் போகின்றது. டோரதியிலோ இதற்கு மாறாக சிறுவயதிகளில் இருந்து இரண்டு நண்பர்களின் கதை என்கின்ற  ஒரு நேர்கோட்டுத் தன்மையில் இடைவேளைவரை கதை போகின்றது.

இப்போது இந்த இரண்டு திரைப்படங்களைப் பற்றிப் பேசுவது/விமர்சிப்பது என்பது கூட அவற்றிற்கான முக்கியத்துவத்தை அங்கீகரித்து, அவை நம் தமிழ்சூழலில் கவனிக்கத்தக்க படைப்புக்கள் என்பதாலே அன்றி,  Queer சமூகம் மீது வெறுப்பும் வசையும் கொண்ட கூட்டத்திற்கு நம் விமர்சனங்கள் ஒருதுளியும் துரும்பாகப் போய்விடக்கூடாது என்ற கவனத்தோடு நாமெல்லோரும் உரையாட விரும்புகின்றோம் என்பதையும் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.


***

(Sept 29)

கார்காலக் குறிப்புகள் - 164

Tuesday, October 13, 2026

 கலைஞர்களாக இருப்பது...

***

பாடகர் Ed Shreen ஐ அறியாதவர்கள் மிகச் சொற்பமாகவே இருப்பார்கள். அவருடைய Thinking Out Loud, Shape of You போன்ற பல பாடல்களுக்கு நான் தீவிர இரசிகனும் கூட. ஆனால் இப்போது அவர் ஒரு சிக்கலில் மாட்டியிருக்கின்றார்.

அவர் தனது இசை நிகழ்ச்சிகளை பிரமாண்டமாய் பல்வேறு நாடுகளில் நடத்திக் கொண்டிருக்கின்றார். அதில் பல கலைஞர்கள் அவருடன் இணைந்து  பாடிக் கொண்டிருக்கின்றனர். அப்படி ஒரு நிகழ்ச்சியில் இன்னொரு பாடகர்/ராப்பரான  Macklemore, வெளிப்படையாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவைத் தெரிவித்திருக்கின்றார்.

 
இப்படி பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்தால் இஸ்ரேலிய ஆதரவு பெரு முதலாளிகள் என்ன செய்வார்கள். எட்டிடம் தொடர்ந்து Macklemore நிகழ்ச்சியில் சேர்த்தால் பிரமாண்ட அரங்குகளில் நிகழ்வுகளை நடத்த இடம் தரமாட்டோம் என்று மிரட்டியிருக்கின்றனர்.

நமது பையன் எட் பயந்துபோய் Macklemore ஐ தனது நிகழ்வுகளில் இருந்து அகற்றியிருக்கின்றான்.
அதன் பிறகு நடந்ததுதான் நம் தமிழ்ச்சூழலில் இருக்கும் எழுத்தாளர்கள், பாடகர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது.

*

எட்டின் நிகழ்வில் Macklemore போல வெவ்வேறு Actகளில் பங்குபற்றிய இசைஞர்கள்  இப்போது Macklemore இற்கும் பாலஸ்தீனத்துக்கும் ஆதரவு தெரிவித்து இந்த இசை நிகழ்வுகளிலிருந்து முற்றாக வெளியேறியிருக்கின்றனர்.

அதைத்தான் அசலான கலைஞர்கள் செய்வார்கள் அல்லவா?

இவர்கள் எட்டின் நண்பர்களாகவும், எட்டின் மூலமாகவே இவர்களின் இசைப்பாதை செழுமையானது என்கின்றபோதும் இவர்கள் பிரபல்யமா, அறமா என்ற கேள்வி வந்தபோது, அறத்தின் பாதையைத் தெளிவாகத் தெரிந்தெடுத்திருக்கின்றனர்.

அதிலும் ஐரிஷ் பின்னணியில் வந்த Rowe and Beoga கலைஞர்கள் விடுத்த அறிக்கையில்...
"நாங்கள் காலனித்துவத்தைப் புரிந்துகொண்ட ஐரிஷ் மக்கள். பாலஸ்தீனத்திற்கான ஐரிஷ் கலைஞர்கள் இயக்கத்தின் நிறுவன உறுப்பினர்களான நாங்கள் நீதியின் பொருட்டு அர்ப்பணிப்புள்ள செயற்பாட்டாளர்களும் கூட, அவ்வாறே மேலும் தொடர்ந்து  இருப்போம்.'  என்று சொல்லியிருக்கின்றார்கள்.

அதிலும்,  எட் ஷீரனைத் தனது நண்பர் என்று குறிப்பிட்ட ரோவ், எட்டே தனது வாழ்க்கையையே மாற்றியவர் என்று கூறினாலும்,.

"ஆனால் ஐரிஷ் மக்களாகிய எங்களுக்கு இனப்படுகொலை, கட்டாயப் பஞ்சம், வன்முறையான ஆக்கிரமிப்பு ஆகியவை பற்றி மிக நன்றாகவே தெரியும். மேலும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, நியாயமான குரல்களை எழுப்புபவர்களை மௌனமாக்க பில்லியனர்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்றும் தெரிவித்திருக்கின்றார் என்பதுதான் நாம் அவதானிக்க வேண்டியது.

இன்னொரு கலைஞரான லூக்கஸ் கிரஹம் ( Lukas Graham):

“நீங்கள் பெரும்பணத்தை வைத்திருப்பதால், ஒரு உரையாடலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் உரிமையை உங்களுக்குத் தந்துவிடாது. யார் பேச வேண்டும் அல்லது எந்தத் துயரத்தை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்பதை ஒருவரின் வங்கிக் கணக்கு இருப்பு ஒருபோதும் தீர்மானிக்கக் கூடாது” என்று நேரடியாகவே பெரும் முதலாளிகள் எந்த அரசியலை நாம் பேசவேண்டும் என்று சொல்வதற்கு எதிராகப் பேசியிருக்கின்றார்.

"Artists must not be silenced when they speak up for the oppressed" என்று அதில் விலகிய இன்னொரு கலைஞரான  Finneasவும் கூறியிருக்கிறார்.

நம்பிக்கை தருகின்ற புதுத்தலைமுறைகள்..!

***

(உதவிய தளங்கள், CBC and CityTV News)

 

கார்காலக் குறிப்புகள் - 163

Saturday, October 10, 2026

 

கடந்த ஞாயிறு மாலையில் நான் வசிக்கும் இடத்திற்கருகில் இருக்கும் நாற்சந்தியில் ஒரு விபத்து. காரும் மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்டன. மோட்டார்சைக்கிளில் வந்த முப்பதுகளையொட்டிய இளைஞன் மரணமாகியிருந்தான்.  ஆம்புலன்ஸ்கள் அறம்புறமாக ஓடித்திரிந்தன. நாற்சந்தியை மூடி விசாரணைக்காக மணித்தியாலக்கணக்கில் வைத்திருந்தார்கள்.

நான் அந்த இறந்துபோன இளைஞனைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அவன் விபத்தைச் சந்திக்க  ஒரு நிமிடம் முன்னர்வரை எத்தனை கனவுகளுடள் பறந்து கொண்டு இருந்திருப்பான் என்று நினைவுகள் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அப்போது மீள்வாசிப்பில் இருந்த உமா வரதராஜனின் 'எல்லாமும் ஒன்றல்ல' தொகுப்பில் அவர் தனது நண்பரான வீ.ஆனந்தனைப் பற்றி எழுதியது ஞாபகத்துக்கு வந்தது. 



ஒரு எழுத்தாளராகப் பரிணாமித்துக் கொண்டிருந்த ஆனந்தன் அப்போது தபால்காரராக வேலை செய்து கொண்டிருந்திருக்கின்றார். உமா தனது நண்பர்களுடன் வியூகம் என்ற இலக்கிய அமைப்பாக எண்பதுகளில் ஒன்றாகச் சேர்ந்து இயங்கிக் கொண்டிருந்த ஒரு சிலரில் ஆனந்தன் ஒருவர்.

ஆனந்தன் தனது வேலை நிமித்தம் செல்லும்போது பஸ் தரித்து நிற்கும் பதினைந்து நிமிட இடைவெளியில் அடிக்கடி உமாவை சந்தித்துவிட்டுப் போவார். அப்படி ஒரு நாள் (சரியாகச் சொல்வதனால் ஒரு மார்கழி 05) உமாவைச் சந்தித்துவிட்டு பஸ்ஸில் ஏறிப்போகும் ஆனந்தன் அடுத்த 45 நிமிடங்களில் இராணுவத்துக்கும் இயக்கத்துக்கும் நடக்கும் சண்டையில் மாட்டுப்பட்டு இறந்து போகின்றார்.

உமா, ஆனந்தனின் நினைவை இப்போது ஆனந்தன் உயிரோடு இருந்திருந்தால் எப்படி இருப்பார் என்று நனவிடை தோய்கின்றார். அப்படித் தோய்ந்தொழுகி ஆனந்தனைச் சந்தித்த முதல் சந்திப்புவரை எங்களை இழுத்துச் செல்கிறார். ஆனந்தன், அவருக்குள் எழுந்த ஆர்வத்தால் தன் இயல்பிலே மலையாள மொழியைக் கற்று அம்மொழியிலிருந்து கதைகளை மொழிபெயர்த்திருக்கின்றார். உமா ஒருவரை நினைவுகூரும்போது அவர்களின் நினைவை மட்டுமில்லை, அந்தக் காலத்தை, அவர்கள் வாசித்த நூல்கள் என்று பலவற்றை எழுந்தமானமாக, ஆனால் நுட்பமாக எழுதிச் செல்கின்றார்.

ஆனந்தனின் நினைவை மீட்கும்போது, 'பன்கர் வாடி, இலட்சிய இந்து ஹோட்டல், நீலகண்டப் பறவையைத் தேடி, சோர்ட் -உனது பெருகும் வெள்ளம், சம்ஸ்க்கார், சித்தார்த்தா, அழிந்தபிறகு, மண்ணும் மனிதரும், செம்மீன், அண்டைவீட்டார் போன்ற மொழிபெயர்ப்ப்புக்களை வாசித்துவிட்டு மணிக்கணக்கில் (ஆனந்தனுடன்) பேசியிருக்கின்றோம்' என்று எழுதும்போது நாம் ஆனந்தனின் நினைவுடன் அவர்கள் வாசித்த நூல்களை, நாம் வாசிக்கவேண்டிய நூல்களுக்கான குறிப்புகளை நினைவுக்குறிப்பு ஒன்றிலிருந்தும் பெற்றுக் கொள்கின்றோம்.

உமா 'வியூக'க் கால நண்பராக இருந்த ஆனந்தனை மட்டுமில்லை, அவர்களின் குழுவில் இருந்த நற்பிட்டிமுனை பளீலையும் இப்படியான ஆயுதங்களுக்கு பலிகொடுத்திருக்கின்றார்.

*
இப்படி கொல்லப்பட்ட நிஜவாழ்வில் உமாவுக்கு நெருக்கமான, அவரின் கதைகளில் மிஸிஸ் சமரவீரா என்று வருகின்ற ஷாந்தினி சமரவீரா என்கின்ற ஒரு வைத்தியரைப் பற்றியும் அறிகிறோம். அவர் வங்காளத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதை உமாவின் அல்புனைவுகளின் வழி கண்டுகொள்கிறோம்..

இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் பிறந்த ஷாந்தினி, சமரவீரா என்கின்ற சிங்களவரைச் சந்தித்து திருமணம் செய்கின்றார். பின்னர் இருவரும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் கிழக்கிற்கு (கல்முனைக்கு) பணி நிமித்தம் வருகின்றார்கள். ஒருநாள் ஷாந்தினியை ஒரு இயக்கக்காரன் (அல்லது அப்படி தன்னைச் சொல்லிக்கொண்டவன்?) கப்பம் கேட்டு ஷாந்தினியை மிரட்டுகின்றான். அவர் அதைக் கொடுக்க மறுக்கும்போது ஷாந்தினியின் கழுத்தை வெட்டிவிட்டுப் போகிறான்.  குற்றுயுயிரும் குலையுயிருமாகக் கிடந்த ஷாந்தினியை எவராலும் காப்பாற்ற முடியவில்லை. இந்தியாவில் எங்கோ பிறந்து சிங்களவரை மணந்து கடைசியில் ஒரு தமிழரால் கொல்லப்பட்ட ஷாந்தினி கல்முனையில்தான் மீளாத்துயில் கொள்கின்றார் என்று உமா எழுதுகின்றார்.

ஆக இப்படியான சூழலில் இருந்துதான் எங்களின் முன்னோடிகள் இலக்கியத்தை வளர்த்தார்கள், எழுதிப் பார்த்தார்கள் என்றறியும்போது நமக்குள் பதற்றம் மீளவும் வருகின்றது. ஆனால் அதை எவ்வித உயர்வுநவிற்சியும் ஆக்காது இயல்பென்றுதான் போர்க்காலத்தில் இருந்த அனைத்து படைப்பாளிகளும் எளிதாகச் சொல்லிக் கடப்பார்கள் என்பது வேறுவிடயம்.

இத்தகை துயரத்தையும் பதற்றத்தையும் யுத்த நிலத்தினுள் வாழ்ந்திடாத எந்தத் தமிழ் மனதாலும் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ளவும் முடியாது.

***

 

கார்காலக் குறிப்புகள் - 162

Friday, October 02, 2026

 

எனது வாசிப்பின் தொடக்க காலங்களில் புதுமைப்பித்தனையும், அழகிரிசாமியையும் வாசித்தபோது ஏனோ புதுமைப்பித்தனை விட அழகிரிசாமியின் கதைகள் அதிகம் என்னை வசீகரித்துக் கொண்டன. இப்போது மீண்டும் இருவரையும் மீள வாசித்தால் அதே எண்ணம் இருக்குமா என்று தெரியாது. ஆனால் அழகிரிசாமியின் மீது இன்னும் வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.

அண்மையில் கு.அழகிரிசாமியின் நாட்குறிப்புகள் (1951-1970) பெருந்தொகுப்பாக பழ.அதியமானால தொகுக்கப்பட்டது வெளிவந்தது.  இரண்டு தொகுதிகளாக ஆயிரம் பக்கங்கள் அளவில் அது அமைந்திருக்கின்றது. எனக்கு அது இன்னும் கிடைக்காததால் முழுமையாக வாசிக்கவில்லை. ஆனால் ஏற்கனவே இந்த நூலின் வெளியீட்டு விழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் உரையாற்றியதைக் கேட்டிருக்கின்றேன். இப்போது அதில் தேர்ந்தெடுத்த சில பக்கங்களை (1961-1967) வாசிக்க 'தினவு' இதழின் மூலம் சந்தர்ப்பம் வாய்த்தது.
 
 

 

முழுமையாக இத் தொகுப்பை வாசிக்காமல் கருத்துச் சொல்வது முறையல்ல என்றாலும் அழகிரிசாமி அவரது சமகாலத்து எழுத்தாளர்கள் மீது கறாரான விமர்சனத்தைக் கொண்டிருந்தார் என்பது தெரிகிறது. ஜானகிராமனின் 'அம்மா வந்தாளை', அழகிரிசாமி 'மிகவும் மெல்லிய குரலில் இறுதியில் பலஹீனமாகக் கதையைச் சொல்லி (ஜானகிராமன்) முடித்திருக்கிறார்' என்று எழுதுகின்றார்.

அழகிரிசாமி, புதுமைப்பித்தனை, சுந்தர ராமசாமியை, ஜெயகாந்தனை, ஜானகிராமனை தமிழ்நாட்டின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் என்றும், இப்போது சிறுகதைகளின் பொற்காலம் என்றும் குறிப்பிடுகின்றார். அழகிரிசாமி நன்றாக கதைகள் எழுதினாலும், இந்தப் பட்டியலுக்குள் தயக்கமின்றி வரக்கூடியவர் என்றாலும், நமது சமகாலத்து எழுத்தாளர்கள் போல தனது பெயரைச் சேர்க்கும் 'பேராசை' எதுவும் அழகிரிசாமிக்கு இல்லாதது மகிழ்ச்சியாக இருந்தது.

அதுமட்டுமில்லாது அவர் யாரை இந்தப் பட்டியலில் இருந்து நிராகரிக்கின்றார் என்பதைப் பார்ப்பதும் சுவாரசியமாக இருக்கும்: 'மெளனி, ராமாமிருதம், கு.ப.ரா, பிச்சமூர்த்தி ஆகியவர்களைத் தலைசிறந்த எழுத்தாளர்கள் என்று பிரச்சாரம் செய்து ஊரை ஏமாற்றுகிற ஆசாமிகளைக் கடுமையாகத் தாக்கி கட்டுரைகள் எழுதவேண்டும்' என்று ( ஆகஸ்ட் 21, 1966 ஞாயிறு) குறிப்பில் எழுதுகிறார்.

ஆக அன்றும் ஒரு படைப்பாளி ஆதரித்த/நிராகரித்த எழுத்தாளர்கள் என்றொரு பட்டியல் இருந்திருக்கின்றது. ஆனால் அப்படிச் செய்தும் அவர் ஆதரித்த, நிராகரித்த இரண்டு தரப்புமே இன்றும் காலத்தில் இருந்து உதிர்ந்து போகாது இருக்கவும் செய்கின்றனர். ஆகவேதான் நானும் ஒரு பெருங்குடைக்குக் கீழே ஒற்றைப்படையாக எல்லோரையும் எழுத்தின் நிமித்தம் கொண்டு வராதீர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றேன். மேலும் ஒரு தரப்பு நிராகரித்தவுடன், மறுதரப்பும் காலத்தில் இல்லாமல் போய்விடும் என்பதும் இல்லை. இன்றும் மெளனியும்,கு.ப.ராவும் நம் வாசிப்புக்களில் இருந்து மறைந்து போய்விடவும் இல்லை.

இன்னொரு சுவாரசியமான குறிப்பு, பாரதி படங்களைப் பல்வேறு பகுதிகளில் திறந்து வைக்கும் நிகழ்வில் அழகிரிசாமி ஆங்கிலமொழி மூலம் படிக்கும் கல்வியை நிறுத்தி, தனித் தமிழின் மூலம் கற்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றார். அதேவேளை இன்னொரு இடத்தில் 'இன்று இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் நகரில் காலிகள் விஷமம் மிகுதியாகி, தெருவில் நடமாடுவதே பயங்கரமாக இருந்தது' என்று 1965இல் எழுதிய குறிப்பில் சொல்கிறார்.

*

இவையெல்லாவற்றையும் விட ஒரு சாதாரண மனிதராய் குடும்பம் என்ற அமைப்புக்குள் நாளாந்தத்தில் அல்லாடிய ஒருவராக அழகிரிசாமியைப் பார்க்க முடிகிறது.

1966இல் எழுதிய குறிப்பில், 'இன்று இரவு 8 மணி வரையிலும் ஒரு கப் காபிகூடக் குடிக்காமல் பட்டினி கிடந்தேன். என் பட்டினியைப் பற்றியோ, பசித்துடிப்பு பற்றியோ, உயிர்த்துடிப்பு பற்றியோ கவலைப்படாதவர்கள் மத்தியில் இப்படிப் பட்டினி கிடந்து அவதிப்படவும் அவமானப்பட்டுப் புழுங்கவும் வேண்டிய ஒரு கட்டம், என் 43வது வயதில், 4 பிள்ளைகளுக்கு தகப்பனான பிறகும் வரும் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்? இதைவிடப் பெரிய எத்தனை கொடுமைகளுக்கு ஆளாக வேண்டி இருக்குமோ தெரியவில்லை' என்று சொல்லிவிட்டு நாளை தீபாவளி என்று எழுதுகிறார்.

இன்னொரு இடத்தில் (1967), 'மறுபடியும் வீட்டில் எனக்குச் சுமுகமான சூழ்நிலை இல்லாமல் போய்விட்டது. மிகவும் கசந்து போயிருக்கிறேன். என் அன்பை எவ்வளவு தூரம் உதாசீனம் செய்ய முடியுமோ அவ்வளவு தூரம் உதாசீனம் செய்யவும், என்னைப் பற்றி இழிவாக நினைக்கவும் ஒவ்வொருவரும் ஏன் இப்படிக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்' என்று சுயவிரக்கத்தில் கரைகின்ற அழகிரிசாமியையும் நாம் இங்கே காண்கின்றோம்.

புதுமைப்பித்தனின் வறுமை நாம் அறிந்தது. அழகிரிசாமியும் வறுமை துரத்தத்தான்  இலங்கைக்கும், மலேஷியாவுக்கும் வேலை தேடிப் பயணித்தவர் என்று தெரிந்தாலும் அவர் சென்று கொண்டிருந்த வறுமையும் குடும்பச்சுமையும் இவ்வளவு ஆழமானது என்பது இந்தக் குறிப்புகளை வாசிக்கும்வரை எனக்குத் தெரிந்ததில்லை.

ஆனால் இதைத் தாண்டி அழகிரிசாமி இலக்கியத்தில் உண்மையோடு இயங்கியதால்தான் அவரின் கதைகளை மட்டுமில்லை அவரின் வாழ்க்கையைப் பற்றியும் நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றோம். ஏதோ ஒரு தருணத்தில் இலக்கியத்தைக் கைவிட்டு ஒரு சாதாரண 'குடும்பஸ்தவனாக' அழகிரிசாமி ஆகியிருந்தால், அவர் இந்தளவுக்கு அடுத்த தலைமுறைகளால் நினைவுகூரப்பட்டிருப்பாரா என்பதும் கேள்விக்குறியானது.

புதுமைப்பித்தன், அழகிரிசாமி, பிரமிள் போன்றோரின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, இன்று ஒரளவு சொகுசான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு நாமேதான் தமிழ் இலக்கியத்தை வாழ வைத்துக் கொண்டு இருப்பதான பிரமைகளில் தம்மை மட்டுமில்லை  நம்மையும் மூழ்கடிக்கும் சில இலக்கியவாதிகளைப் பார்க்கும்போது நமக்கு மெல்லிய புன்னகை வருகின்றதல்லவா?

***

 

கார்காலக் குறிப்புகள் - 161

Thursday, October 01, 2026


இன்று காரில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. சும்மாவே தெரிந்த நண்பர்கள் அழைத்தாலே எங்கேயாவது போய் ஒளிந்துகொள்பவன் நான். ஆகவே தெரியாத இலக்கத்தில் இந்தியாவிலிருந்து வந்தது என்பதால் அப்படியே விட்டுவிட்டிருந்தேன்.

பிறகுதான் தெரிந்தது அது எனது நாவலான 'மெக்ஸிக்கோ'வை வாசித்துவிட்டு ஒருவர் அழைத்திருக்கின்றார். என் படைப்பை வாசித்துவிட்டு அப்படியே அவர் போயிருக்கலாம். ஆனால் எனது தொலைபேசி இலக்கத்தை என் பதிப்பாளரிடமிருந்து வாங்கி தனக்கான நேரத்தைச் செலவிட்டு அழைத்தது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

இத்தனைக்கும் மெக்ஸிக்கோ வெளிவந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாகின்றது. இன்றைக்கும் அது வாசிக்கப்படுவதும், யாரையோ பாதிக்கச் செய்கின்றது என்பதும் என்னளவில் நிறைவளிப்பது.


மெக்ஸிக்கோ வாசித்தவர் எனக்கு ஒரு voice note அனுப்பியிருந்தார். அதன்பிறகு தொலைபேசியில் அழைத்திருக்கின்றார்.  அலைபேசியை சில நாட்களுக்கு முன் மாற்றியதால் Whatsapp Notificationஐ  turn on செய்யவும் இல்லை. இதனால் நான் இவற்றைக் கவனிக்காதது மட்டுமில்லை, மெக்ஸிக்கோவின் பதிப்பாளரான வேடியப்பன் அனுப்பியிருந்த தகவலையும்  அப்போது பார்த்திருக்கவில்லை.

Uploaded Image

இவ்வாறு மெக்ஸிக்கோ கவனிக்கப்படுவது ஒருபுறமிருக்க அதைச் சிலர் நிராகரிக்கவும் செய்கின்றனர். அதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எந்தப் படைப்பும் எல்லோருக்கும் ஏற்ற படைப்பாக ஒருபொழுதும் ஆவதில்லை. ஒரு விமர்சனத்தில் எதையாவது கற்றுக்கொள்வதற்கு இருந்தால் அது மிக நல்லது; காழ்ப்பாக தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக எழுதப்பட்டிருந்தால் அதை நிராகரித்தும் செல்லலாம்.  ஒரு வாசகருக்கு படைப்பை ஏற்கும்/நிராகரிக்கும் உரிமை இருப்பதைப் போல, ஒரு படைப்பாளிக்கும் ஒரு விமர்சனத்தை ஏற்கும்/நிராகரிக்கும் சுதந்திரம் இருக்கின்றது.

மேலும், ஒரு படைப்பு எப்படி ஒரு தரப்பால் நிராகரிக்கப்பட்டாலும், அதை ஏற்றுக்கொள்ளும் வாசகர்களால் காலத்தின் நீட்சியில் தொடர்ந்து கொண்டு செல்லப்படும் என்று நம்புகின்றவன் நான். அப்படி இல்லாதுவிட்டால் அவர்களின் காலத்தில் நிராகரிக்கப்பட்ட காஃப்கா வான்கோ போன்ற அரிய படைப்பாளிகள் இன்று நமக்குக் கிடைத்திருக்க மாட்டார்கள்.

ஆக எந்தப்படைப்பாயினும் அது அசல்தன்மையில் இருந்தால் அதற்கான வாசகப்பரப்பைப் பெற்றுக் கொள்ளும். அதை நாம் காலமான நமது முன்னோடி எழுத்தாளர்களின் இன்றும் காலத்தால் கரையுண்டு போகாத அவர்களின் படைப்புக்களில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.

*
இதையேன் இவ்வளவு விபரமாகச் சொல்கின்றேன் என்றால், நேற்று நண்பர் ஒருவரோடு பேசும்போது இன்று ஈழத்திலும், புலம்பெயர்ந்தும் இருந்து வரும் 'பாவனை' எழுத்துப் படைப்புக்கள் பற்றிய பேச்சு வந்தது. நண்பர் இன்னொரு தனது நண்பரிடம், அவரில் சமகாலத்தில் எழுதும் படைப்பாளியின் பாதிப்பு அப்பட்டமாகத் தெரிகின்றதே என்றபோது, தனது 'குருவின்' பாதிப்பு படைப்பில் இருப்பது தனக்குப் பெருமைதான் என்று மற்றவர் சொல்லியிருக்கின்றார்.

நான் சொன்னேன், காலமான படைப்பாளிகளின் பாதிப்பு இருந்தால் கூட கொஞ்சம் சகித்துக்கொள்ளலாம்; சமகாலத்தில் எழுதும் ஒரு படைப்பாளியின் பாதிப்பு இருந்தால் அதை ஏன் ஒருவர் வாசிக்கப் போகின்றார். அசலாக அதை எழுதும் 'குரு' எழுத்தாளர்களே நமக்குப் போதுமே என்றேன்.

 "பிதாவே, இவர்களை மன்னியும்; தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்" என்று இயேசு தன்னைச் சிலுவையில் அறையும்போது சொன்னதைக் கூட இவர்களுக்குச் சொல்லமுடியாது. ஏனெனில் இவ்வாறு பாவனை செய்து 'அதே நடையில்' எழுதுவதை தெரிந்தே செய்கின்றவர்களுக்கு நாம் எதைச் சொன்னாலும் இந்தப் 'பித்தம்'  இப்போது தெளியப் போவதில்லை.

ஆனால் அவர்கள் எழுதும்போது ஒன்றைக் கவனத்தில் கொள்ளலாம். உண்மையிலே எழுத்து எனக்கு அந்தரங்கமான மகிழ்வையும் நிறைவையும் இப்படிப் பாவனை/பாதிப்போடு எழுதுகின்றபோது தருகின்றதா, இல்லையா? என்று.

சிலவேளை தங்களுக்குள் ஏதோ ஒரு தருணத்தில் ஆழ்ந்து பார்க்கின்றபோது அவர்களைப் போன்றோர் தமது தனித்துவத்தை எழுத்தில் கண்டடையக்கூடும். அப்படி எழுதுகின்ற எழுத்துக்களே அவர்களை வாசகர்களுக்கு ஞாபகப்படுத்துமே தவிர, பாவனை எழுத்துக்கள் அல்ல.

*
மெக்ஸிக்கோ வாசித்துவிட்டு பேச விரும்பிய நண்பரின் அழைப்பை நான் எடுத்திருந்தாலும் எனக்குப் பேசுவதற்கு நாவல் குறித்து எதுவும் இருக்கப் போவதில்லை. எழுதியவர் அந்த நாவலைப் பற்றிப் பேச பிரதிக்கு அப்பால் என்ன சுவாரசியமாக இருக்கப் போகின்றது.

கடந்தகாலத்தில் அவ்வாறு மெக்ஸிக்கோ பற்றியோ மற்ற என் படைப்புக்கள் பற்றியோ பேச விரும்பியவர்களுடன், நான் வேறு விடயங்களைப் பேசியே கடந்து வந்திருக்கின்றேன்.

ஒருவர் ஒரு படைப்பை வாசித்துவிட்டு நேரமெடுத்து அது குறித்து பேச விரும்புகின்றார் என்று அறிவதே எனக்குப் போதுமானது. அது எனக்குத் தரும் நிறைவை வேறு எதுவும் தரப்போவதில்லை.

அத்துடன் என் படைப்பை வாசித்து ஒருவர் தனது கருத்தை எழுத்திலோ/பேச்சிலோ பகிரும்போது அவரை வாசகராக அல்ல, அவரை நண்பராகவே நான் ஒவ்வொருமுறையும் நினைத்துக் கொள்வதுண்டு.

இப்போது மெக்ஸிக்கோ வாசித்து என்னோடு பேச விரும்பிய நண்பருக்கு நன்றி. நீங்கள் இந்த அழகிய கோடை நாளை இன்னும் வனப்புடையதாக எனக்கு ஆக்கியிருக்கின்றீர்கள்.

அவ்வாறே பதிப்பாளர் வேடியப்பனுப்புக்கும் மிக்க நன்றி.

***

 

கார்காலக் குறிப்புகள் - 159

Tuesday, September 15, 2026

 

தனிமையின் நூறு ஆண்டுகள் - வெப் சீரிஸ்/சீஸன் 02
***

அண்மையில் 'தனிமையின் நூறு ஆண்டுகள்' இரண்டாம் சீஸன் வெளிவந்திருக்கின்றது. முதலாம் பாகம் மகோந்தாவைக் கட்டியெழுப்பிய ஹோஸே அர்க்காத்தியோவின் மரணத்துடன் நிறைவு பெற்றது, அத்தொடரைப் பார்த்தவர்களுக்கு (2024) ஞாபகம் இருந்திருக்கும்.

இத்தொடர் கிட்டத்தட்ட நாவலின் முழுக்கதையையும் சொல்லி முடிப்பதாக அமைந்திருந்தாலும், Finale இம்மாத முடிவில் வெளியிடுவதாகச் சொல்லியிருக்கின்றார்கள். அநேகமாக 3 எபிசோட்களாக அது அமையலாம் என நினைக்கின்றேன். ஏனெனில் கதையின் நாயகி உர்சுலா இறந்துவிட்டார். உர்சலாதான் கதையின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை முதுகெலும்பாக தொடர்ந்து வந்து கொண்டிருந்ததை நாவலை வாசித்தவர்க்குத் தெரிந்திருக்கும்.



இந்த இரண்டாம் பகுதியில் இரட்டையர்களான அவுரேலியானோ செகுந்தோவினதும், ஹேசே அர்க்காதியாவினதும் கதைகள் விரிவாகச் சொல்லப்படுகின்றது. இருவருமே இரண்டு வேறுபட்ட வாழ்வைத் தெரிவு செய்கின்றார்கள்.

இதுவரை லிபரல்களாக மத நம்பிக்கை இல்லாது (கர்னல் அவுரேலியானோவின் யுத்தங்களே லிபரல்களுக்கும், மத நம்பிக்கையுடைய மிதவாதிகளுக்கும் இடையில் நடைபெற்றது என்பது நமக்குத் தெரியும்) தலைமுறை தலைமுறையாக இருந்த புயேந்தியா குடும்பத்துக்குள் முதன்முதலாக அவுரேலியானோ செகுந்தோவின் மனைவி பெர்னாண்டா மூலம் அனைத்துமே மாறுகின்றது. தீவிர மதப்பற்றுள்ள பெர்னாண்டாவினால் லிபரல் குடும்பத்தின் 'கட்டற்ற சுதந்திரம்' கட்டுப்படுத்தப்படுகின்றது/கேள்விக்குட்படுத்தப்படுகின்றது.

என்கின்றபோதும் புயேந்தியாஸ்கள் தமது லிபரல்தன்மையை காலத்துக்காலம் தொடர்ச்சியாகக் கைவிடாது காவியபடி வந்தபடி இருக்கின்றார்கள். அதை ஆண்கள் மட்டுமில்லை பெண்களான அமரந்தாவும், அழகி ரெமிதியாஸும் கூட அந்தத் தன்மையை எவருக்கு முன்னும் விட்டுக் கொடுக்காதவர்களாகவே இருக்கின்றார்கள்.

மூதன்னை உர்சுலா மட்டும் மத நம்பிக்கையுள்ள பெர்னாண்டாவை விளங்கிக் கொள்கின்றார். ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டென்பதை பெர்னாண்டா தனது மகளான மேமேயையும், மகனான அர்க்காதியோவையும் தீவிர மத நம்பிக்கையுள்ளவர்களாக வளர்க்கும்போது  இடையீடு செய்வதில் நிரூபிக்கின்றார்.

மேமே கன்னியாஸ்திரியாகவும், ஹேசோ அர்க்காதியோ  ஒரு இறையியலாளனாக வத்திக்கானில் கற்பவனாகவும் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களை ஒரு தீவிர விசுவாசமிக்க கத்தோலிக்கர்களாக பெர்ணான்டாவால் ஒருபோதும் வளர்க்க முடியவில்லை.

அதேசமயம் தனது மகள் மேமே மத நம்பிக்கையை விட்டு விலத்தி ஒரு கறுப்பின இளைஞனோடு காதல் சரசம் செய்வதை பெர்ணான்டாவால்  சகிக்க முடிந்ததில்லை. ஆகவே அந்த இளைஞனை ஒரு திருடன் போல ஆக்கி மகாந்தோவின் பொலிஸைக் கொண்டு கொன்றுவிடுகின்றார்.

அப்படி மேமேயின் காதலைக் கொன்றாலும், அதற்குள் அவர் அந்த கறுப்பின இளைஞனின் கருவை ஏற்றுக்கொள்கின்றார். மேமேயிற்குப் பிறப்பவனே இந்த நாவலின் கடைசித்தலைமுறையாகச் சொல்லப்படும் அவுரேலியானோ. ஆனால் அவன் ஒரு 'பாஸ்டர்ட்டாக' இருப்பதால் அவனுக்கு காலம் காலமாக வழங்கப்படும் புயேந்தியாஸின் குடும்பப் பெயர் கொடுக்கப்படுவதில்லை.
*
இரட்டையர்களில் ஒருவனான அவுரேலியானோ செகுந்தோ இப்படி தீவிர மத நம்பிக்கையுள்ள பெர்னாண்டாவின் காதலில் வீழ்ந்து தன் வாழ்வை சீரழித்து, குடும்பத்தின் தடுமாற்றங்களைப் பார்க்கின்ற ஒரு தோல்வியுள்ள இல்லறத்தவனாக இருக்கின்றான்.

அதேவேளை மற்ற இரட்டையரான ஹோசே அர்க்காதியோ, எதிர்காலத்தைக் கணிப்பிடாது வெள்ளையினத்தவர்க்கு தங்கள் வளமான வாழைமரத்தோட்டங்களைத் தாரை வார்த்து, பிறகு  சக தொழிலாளர்களுடன் சேர்ந்து தமது அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் ஓர் அவல வாழ்க்கையை வாழ்கின்றார்.

ஒருமுறை எதிர்ப்பு ஊர்வலத்துக்குப் போகும் தொழிலாளர்களைக் கலைந்து செல்ல பொலிஸும், வெள்ளையின முதலாளிகளும் கேட்க, அதை மறுப்பதால் துப்பாக்கிச் சூடு கொடூரமாக நடத்தப்பட்ட 3000 இற்கும் மேற்பட்டார் கொல்லப்பட்டு ஒரேயிரவில் 'காணாமல்' ஆக்கப்படுகின்றார்கள். கொல்லப்பட்ட உடல்களாஇ அதேயிரவில் இரெயினில் நிரப்பி கடலில் கொட்டச்செல்லும்போது தற்செயலாக உயிர்தப்பி வந்த ஹோசே அர்க்காதியோ மனப்பிறழ்வுக்கு உள்ளாகின்றார்.

அதன்பிறகு புயேந்தியாஸின் வீட்டுக்குள் 'செத்துப்போனவனாக' தலைமறைவு வாழ்க்கையை காலம் முழுக்க வாழ்கின்றார். அந்த மனப்பிறழ்வோடு புயேந்தியாஸ்களின்  கடந்தகாலத்தைப் பதிவு செய்தபடி தனி அறைக்குள் முடங்கிக் கிடக்கின்றார்.

இந்தச் சகோதரர்கள் இரட்டையர்களாகப் பிறந்தமாதிரி ஒரே நேரத்தில் இருவரும் இறந்தும் போய்விடுகின்றார்கள்.

*

எனக்கு இந்த இரண்டாம் ஸீஸனில் பிடித்தது அமரந்தா இறந்து போகின்ற நிதானமாகும். அமரந்தா ஓர் இரவில் நாளையுடன் தன் வாழ்வு முடியப்போகின்றது என்று குடும்பத்தினர் முன் அறிவிக்கின்றார். அமர்ந்தாவின் மரணத்தை மார்க்வெஸ் விபரிக்கும் முறை எனக்கு புத்தரை நினைவுபடுத்தியபடி இருந்தது. நிதானமாக தன் இறுதி நாளை அமரந்தா அறிவித்துவிட்டு உங்களுக்கு ஏற்கனவே இறந்தவர்க்கு செய்தி அறிவிக்கவேண்டுமெனில் என்னிடம் எழுதித் தாருங்கள் என்கின்றார்.

அடுத்தநாள் அமரந்தா மரணிப்பதை ஊரை கூடி வந்து பார்க்கின்றது. பலர் ஏற்கனவே இறந்துபோன தங்கள் உறவுகளுக்கான செய்திகளை அமரந்தாவிடம் கொடுக்கின்றனர். அமர்ந்தா நிதானமான சவப்பெட்டியில் ஏறியமர்கின்றார். அவரின் தாயாரான மூதன்னை உர்சுலா, அமர்ந்தா ஒரு கன்னி என்று அறிவிக்க அமர்ந்தா நிதானமாகக் கண்ணை மூடுகின்றார்.

அவ்வாறே அழகி ரெமேதியாஸின் மரணத்தை மார்க்குவெஸ் விபரித்ததும் அவ்வளவு அற்புதமாக இருக்கும். ரெமேதியாஸின் பூவுலோக வாழ்வை அவ்வளவு பரிசுத்தமானது என்றால் அவளின் மரணமோ ஒரு தேவதைக்கு நேர்வதைப் போன்று நிகழ்கின்றது.

*

இதற்கிடையில் பல்வேறு கொலைமுயற்சிகள், தற்கொலை முயற்சிகளில் எல்லாம் இருந்து தப்பிய கர்னல் அவுரேலியாவும் இறுதியில் இறந்துபோகின்றார். ஆனால் அதற்கு முன்னர் அவருக்கு பல்வேறு பெண்களின் மூலம் பிறந்த 17 வளர்ந்த குழந்தைகளை அவருக்கு எதிரானவர்கள் மிக கச்சிதமாகத் திட்டம் போட்டு கொன்றுவிடுகின்றார்கள். ஒருகாலத்தில் வீரநாயகனாக லிபரல்களால் போற்றப்பட்ட கர்னல் இப்போது தோல்வியின் நாயகன். அவரால் மகோந்தாவில் நடக்கும் மாற்றங்களுக்கு எதிராக எந்தப் புரட்சியையும் அல்ல, ஒரு சொல் எதிர்த்துக் கூட கதைக்க முடியாது நிலை. அவரது மரணம் ஒரு கையறு நிலையைப் போல இறுதியில் நிகழ்ந்து விடுகின்றது.

நாவலை அதுவும் மிகச் சிறந்த நாவலை திரைத்தொடர் ஆக்குவது என்பது சிக்கல்கள் நிறைந்தது. அவ்வாறான முழுமையின்மைக்கு இடையிலும் இந்தத் திரைத்தொடரைப் பார்க்கும்தோறும் மீண்டும் மீண்டும் காபோ எழுத்துலகின் மாஸ்டர் தானென்பதை எனக்குள் நிரூபித்தபடி இருந்தார். இவ்வளவு விரிவான கற்பனையுடன் காபோ  இதை எழுத எத்தனைபேரின் அகவுலகத்தில் அவர் நீத்திச் சென்றிருப்பார் என்பது எண்ணிப் பார்க்க பார்க்க மனம் சிலிர்த்தது.

இறுதியில் (இன்னும் சீரிஸில் வரவில்லை) எத்தனையோ தலைமுறைகளின் கனவுகளும், வெற்றிகளும், இரகசியங்களும், காதலும், துரோகங்களும், தோல்விகளும்  இணைந்து எழுந்த மகோந்தாவும் புயேந்தியாஸுக்களும் எல்லோரின் நினைவுகளிலிருந்தும் என்றென்றைக்குமாக அழிந்து போகப் போகின்றார்களல்லவா?

'ஏனெனில் தனிமையின் நூறு ஆண்டுகளுக்காக என்று விதிக்கப்பட்ட வம்சங்களுக்குப் பூமியில் இரண்டாவது வாய்ப்பு கிடையாது.'

***

கார்காலக் குறிப்புகள் - 158

Friday, September 11, 2026

 


நேற்று ஐரோப்பாவிலிருக்கும் நண்பரொருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது பெத்ரோ அல்மதோவரின் புதிய படமான 'Bitter Christmas'ஐ பார்த்ததை நண்பர் சொன்னார்.  ஐரோப்பாவில் வெளியிடப்பட்டாலும், அல்மதோவரின் இந்தப் படம் இன்னும் அமெரிக்காப் பக்கம் வெளியிடப்படவில்லை. எங்களுக்கும் வரும் மாதம் நிகழும் திரைப்படவிழாவில் (TIFF) திரையிடப்படும்போதுதான் பார்க்கும் சந்தர்ப்பம் வரும்.

Bitter Christmas ஒரு படைப்பாளிக்கு வயதாகும்போது அவரது படைப்புத் திறமை முடங்கிப் போவதன் அவதியைப் பற்றிப் பேசுகின்றதாக அமைந்திருக்கின்றது என்று நண்பர் கதையின் தன்மையை மேலோட்டமாகச் சொன்னார். எனக்கு அல்மதோவர் பிடித்த நெறியாளர் என்றாலும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வந்த  'The Room Next Door' இன்னமும் பார்க்காதது நினைவுக்கு வந்தது.

Uploaded Image

நண்பர் அதையும் பார்த்துவிட்டார். அது கவித்துவம் நிறைந்த திரைப்படம் கட்டாயம் பார்க்க வேண்டும் என்றார். நான் அதை நண்பருடன் உரையாடியபின் பார்க்கத் தொடங்கியிருந்தேன் என்றாலும் அது புற்றுநோயின் பின்னணியில் இரண்டு பெண்களுக்கிடையிலான உறவைப் பற்றிப் பேசுவதால் என்னால் தொடர்ந்து பார்க்க முடியாத ஒரு அவதியில் அரைவாசியோடு நிறுத்திவிட்டிருந்தேன்.

நண்பர் இப்படி அவர் பார்த்த திரைப்படங்களைச் சொன்னபோது, நீங்கள் இவற்றையெல்லாம் பதிவு செய்திருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு ஞாபகத்தில் ஏதோ ஓரிடத்தில் நிற்க, அதைத் தேடிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்திருக்கும், இப்போதெல்லாம் இப்படியான அரிய விடயங்களைப் பகிரும் இடமாக சமூக வலைத்தளங்கள் இல்லாமல் போய்க்கொண்டிருப்பது கவலையானது என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஒரு நல்ல புத்தகத்தையோ/திரைப்படத்தையோ/இசையையோ தேடிப் பார்த்தல் மற்றவர்கள் பகிரும்போதே அது சாத்தியமாகின்றது. அது இல்லாதபோது ஒரு குறிப்பிட்ட சிறுவட்டத்துக்குள்ளே அன்றன்றைக்கு நடக்கும் 'கிளர்ச்சியூட்டம் சம்பவங்களை' மட்டும் பேசுவதுடன்/அறிவதுடன் நமது நாளாந்தம் (நண்பர் அதை அன்றாடம் என்று உபயோகிப்பார்) முடிந்துவிடுகின்றது என்றேன் .

*

இப்படி அல்மதோவரின் திரைப்படத்தைப் பார்த்து எனக்குள் வந்த பதற்றத்தை, அமெரிக்காவின் கவிஞரனா மேரி ஒலிவரின் (Mary Oliver: Saved by the Beauty of the World ) ஆவணப்படத்தைப் பார்த்து இயல்புநிலைக்குக் கொண்டுவந்தேன். எஸ்.ராமகிருஷ்ணனின் ஒரு பதிவைப் பார்த்தே இப்படி ஓர் ஆவணப்படம் மேரி பற்றி வந்திருப்பதை அறிந்திருந்தேன். இயற்கையோடு வாழ்ந்து  இயற்கையை நுட்பமாக இரசித்து அதை தன் எளிமையான வார்த்தைகளுக்குள் மேரி கொண்டு வந்திருந்தாலும்  நாம் அவரின் கவிதைகளை வாசிப்பதுனூடாக  ஒரு மீப்பெரும் உலகை நமக்குள் சிருஷ்டிக்க முடியும்.

மேரி தொடர்ச்சியாக காடுகளுக்குள் போய்க் கொண்டிருந்தவர். அதுபோல தினமும் எழுதுவதை ஒரு தீவிர 'சடங்காக' வைத்திருந்தவர் அவரது பதின்ம வயதில் வீட்டை விட்டு ஓடிப்போய் ஒரு வாரமாக காட்டுக்குள் வாழ்ந்தும் மேரி இருந்திருக்கின்றார். அவர் இயற்கையையும் உயிரினங்களையும்  இந்தளவு தனது படைப்புக்களில் கொண்டுவந்ததைப் போல வேறு சிலரே இருப்பார்கள். மேரி ஓரிடத்தில் இன்று நாம் இயற்கையிடம் இருந்து அந்நியமாகும்போது இந்த வாழ்க்கை இரசிக்கும் அழகிலிருந்தும் விலகிப் போகின்றோம் என்கின்றார்.  ஒருவர் பெருநகரத்தில் சூரியன் உதிப்பதையே பார்க்காத கடட்டக்காட்டுக்குள் வாழும்போது, அவர் ஷேக்ஸ்பியரின் ' "It is the east, and Juliet is the sun" என்பதை எப்படி புரிந்துகொள்வார் என்று மேரி ஓர் உரையாடலில் கேட்கின்றார். இயற்கையிடமிருந்தே நாம் எல்லாவற்றையும் கற்றிருக்கின்றோம் என்றால் இயற்கையிடமிருந்து விலகும்போது நமது வாழ்க்கை அவ்வளவு ஆழமாக இருக்குமா என்பது நாம் ஒவ்வொருவரும் நமக்குள் எழுப்பிப் பார்க்க வேண்டிய கேள்வியாகும்.

Uploaded Image

நமது தமிழ்ப் படைப்பாளிகள் போலவே மேரியினது இளமைக்கால வாழ்வு வசதியானதல்ல. ஆனால் அவர் ஒரு கவிஞராவது என்பதில் பதின்மத்திலிருந்தே தீவிரமாக இருந்திருக்கின்றார்.  அதேவேளை அவர் உள்ளடங்கியவராக, தனது கவிதைகளைப் பொதுவெளியில் வாசிக்க விரும்பதாவராகவே நீண்டகாலம் இருந்திருக்கின்றார்.

தற்பாலினரான மேரி அவரது நீண்டகாலத் துணையை இழந்ததன் பின்னரே, பொதுவெளிக்குப் போய் கவிதைகளை வாசிக்கவும், கவிதைகளைப் பற்றிப் பேசவும் செய்திருக்கின்றார்.  மேரியின் இந்த ஆவணப்படத்தைப் பார்க்கும்போது, நாங்களும் மேரியுடன் காடுகளுக்குள் உலாவுவது போலவும், சிறு உயிரிகளையும் அவ்வளவு வியப்புடன் பார்ப்பது போலவும் எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. ஒருவகையில் மேரி  எப்படி இந்த உலகைப் பார்த்தவர் என்பதை அவரில்லாத காலத்தில் எங்களை இந்த ஆவணப்படத்தின் மூலம் பார்க்க வைப்பது சுவாரசியமானது.

மேரி தனது முதிய காலத்தில்தான் அவரின் பால்யகால மனவடுக்களைப் பேசுகின்றார். அவர் அவரது குடும்பத்தினரால் பாலியல் வன்முறைக்குள்ளானவர். ஒருவர் தன் உடல் குறித்த பிரக்ஞையை அடைந்தபின், பாலியல் துஷ்பிரயோகம் ஆகும்போதே எவ்வளவோ பாதிப்பை அடையும்போது ஒரு குழந்தை தனது உடல் குறித்து விழிப்புணர்வு இல்லாதபோது அதற்குள் சென்று வருவது என்பது இன்னும் கொடுமையானது. ஆகவேதான் இவ்வாறு துஷ்பிரயோகங்களுக்கு ஆகின்றவர்களுக்கு கனவுகள் கூட துர்க்கனவுகளாக வந்து கொண்டிருக்கின்றன.

மேரி தனது மனவடுக்களைப் புதைத்துவிட்டு தன் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்தினாலும் (அதுதான் இப்படியான துஷ்பிரயோத்துக்கு ஆளாகின்றவர்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு துயரமான வழியும் கூட), அவரை அந்த நினைவுகள் தொடர்ந்து துரத்திக் கொண்டிருந்ததை அவர் இது குறித்து பிற்காலத்தில் தனது மனதைத் திறந்து காட்டும்போது நாம் காண்கின்றோம்.

மேரியின் கவிதைகளை வாசித்துவிட்டு அவருக்குக் கடிதம் எழுதும் பலர், 'மேரி நீங்கள் என் வாழ்க்கையைக் காப்பாற்றினீர்கள்' என்று எழுதியிருக்கின்றனர். மேரியோ அவரின் வாழ்வை கவிதைகளுக்குள் நுழைந்தன் மூலம் முதலில் காப்பாற்றியிருக்கின்றார். இல்லாவிட்டால் மேரியால் அவரது வாழ்வைத் தொடர்ந்து பதற்றங்களில்லாது கொண்டு சென்றிருக்க முடியாது. கலை ஒருவகையில் ஆற்றுப்படுத்துவதாகவும், அதேவேளை ஒருவரின் சிருஷ்டித்திறனை முகையவிழ்க்க வைப்பதாகவும் இருப்பதுதான் எவ்வளவு அருமையானது.

*

கடந்த வாரம் இங்குள்ள நண்பரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, நமக்கு வயதாகும்போது இப்படி வாசிக்கவும் எழுதவும் முடியுமா, அப்படி இவை நம்மைக் கைவிட்டால் நமது நிலைமை என்னாவகும் என்று நினைக்க அச்சமாக இருக்கிறது என்றார். உண்மையில் இதற்கான பதில்கள் நம் எவரிடமும் இல்லை. ஆனால் நண்பரிடம், 'எது அப்போது நமக்கு தரப்போகின்றதோ, அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான், இப்போது அதையெல்லாம் நினைத்து அவ்வளவு கவலைப்படத் தேவையில்லை' என்றேன் என்றாலும் எனக்குள்ளும் அந்தக் கேள்வி இருக்கத்தான் செய்கின்றது.

ஆனால் இப்படி யோசித்துப் பார்க்கலாம். நாங்கள் இன்று வாழும் வாழ்வு குறித்து பத்து வருடங்களுக்கு முன் நமக்குத் தெரிந்திருக்குமா? அல்லது நாம் பத்து வருடங்களுக்கு முன் கனவு கண்ட வாழ்க்கையையா இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா? ஏன் நம்மில் எவரேனும் இப்படி சில வருடங்களுக்கு முன் கோவிட் வந்து நம் அனைவரையும் முடக்கும் என்று யோசித்துப் பார்த்திருப்போமா? இல்லைத்தானே.

இந்தவேளையில்தான் ஸென் உள்நுழைந்து இப்படியான பதற்றங்களை எனக்குள் நிதானப்படுத்தும். இந்த வாழ்க்கையில் அவசரப்படுவதற்கு அவ்வளவு முக்கியமானது என்று ஒன்றுமே இல்லை என்று எங்களுக்கு நாங்களே அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் மேரியைப் போன்ற ஒரு வாழ்க்கையை காடுகளுக்கு அருகாமையில் வாழ்வதற்கு இல்லை, அவரின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளக்கூட நம்மால் எளிதாக முடியாது.

இந்த வாழ்வு நமக்கு ஒரேயொரு முறை என்றும், மரணம் என்பது நிச்சயமானது என்றும் நம் அனைவருக்கும் நன்கு தெரியும். ஆனால் ஏன் இந்த வாழ்க்கையை இப்படிப் பதற்றங்களோடும், அவசரகதியோடும் எதிர்கொள்கின்றோம்  என்பதுதான் எவ்வளவு முரண்நகையானது.

 

கார்காலக் குறிப்புகள் - 157

Tuesday, August 25, 2026

 

'கடலோடிகள்' என்கின்ற இந்தத் தொகுப்பில் நான்கு எழுத்தாளர்களின் பத்துக் கதைகளை எழுத்துக்கினியவனும், அனுஜா பிரகாஷூம் தமிழாக்கியிருக்கின்றனர். அழகு சுப்பிரமணியத்தினதும் (3), து.தம்பிமுத்துவினதும் (3) கதைகள் பற்றியே இங்கே எழுத விரும்புகின்றேன். இரண்டு பேருமே சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கல்வி கற்பதற்காக இங்கிலாந்து சென்று, அங்கே இலக்கியத்தில் சுடர் விட்டு ஒளிர்ந்தவர்களாவர்.

அழகு சுப்பிரமணியம் பதினைந்து ஆண்டுகள் இங்கிலாந்து வாசத்துக்குப் பிறகு யாழ்ப்பாணம் வந்து தனது வாழ்வை முடித்துக் கொண்டவர். தம்பிமுத்துவோ இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா என்று பல்வேறு நாடுகளுக்கிடையே அலைபாய்ந்து திரிந்தவர்.
 



இவர்கள் இருவருக்கும் எப்படி எழுத்துத் திறமை இருந்தவோ, அவ்வாறே குடிபோதையும் அவர்கள் இருவரையும் கடைசிவரை விடாது துரத்தியிருக்கின்றது. அதனால் இன்னமும் ஒளிர்விட்டு ஒளிர்ந்திருக்கக்கூடிய நட்சத்திரங்கள் இடைநடுவில் வால்வெள்ளியாக விரைவில் ஒளிர்ந்து இருட்டாகி விடைபெற்றுக் கொண்டவர்களோ என்ற எண்ணம் எனக்கிருக்கின்றது.

இவர்களின் இருவரினதும் கதைகளை வாசிக்கும்போது எப்படி இவர்கள் அன்றைய கால யாழ்ப்பாணத்தை ஆங்கிலத்தில் நுட்பமாக எழுதியிருக்கின்றார் என்ற வியப்பே ஏற்படும். ஈழத்துச் சூழலில் மண் மணம் கவிழும் கதைகள் தமிழில் எழுதப்படும் காலம் அல்லது அதற்கு முன்னரே மிக நுட்பமாக தமிழ் கலாசாரத்துக் கதைகளை ஆங்கிலத்தில் எழுதியிருக்கின்றார்கள் என்பதுதான் கவனிக்கத்தக்கது.

இன்றைக்கு கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு அவர்களின் கதைகளை வாசிக்கும்போது நாம் அன்றைய யாழ்ச்சூழலில் உலாவிக் கொண்டிருப்பது போலத் தெரிகின்றது. தம்பிமுத்துவும் அழகு சுப்பிரமணியமும் எப்படி மேற்தட்டு மக்களின் வாழ்வியலை எள்ளலுடன் கேலி செய்கின்றார்களோ, அதேயளவிற்கு விளிம்புநிலை மனிதர்களைப் பரிவுடன் அணுகின்றார்கள் என்பதையும் இக்கதைகளினூடு நாம் அவதானிக்க முடியும்.

உதாரணத்திற்கு அழகுவின் 'கூலிக்கு மாரடிப்பவர்கள்' கதையையும், தம்பிமுத்துவின் 'மரமேறி' கதையையும் வாசிப்பவர்கள் அதை உணர்ந்து கொள்ள முடியும். கூலிக்கு அழுபவர்கள் கதையில், ஆதிக்கசாதி தலைவர் வீட்டில் ஒரு சாவு விழுந்துவிட  மரணவீட்டிற்கு கூலிக்கு அழுபவர்களை அழைத்து வரச் சொல்லப்படுகின்றது. ஆனால் அதேசமயம் இந்த விளிம்புநிலை மனிதர்களின் வீட்டிலும் சாவீடு நடக்கின்றது. அவர்கள் தமது சொந்த சோகத்தை ஆற்றமுடியாது, ஆதிக்கசாதி சா வீட்டுக்கு கூலிக்குப் பாட அழைத்து வரப்படுகின்றார்கள். அப்போது இந்தச் சா வீடுகளில் நிகழும் சம்பவங்களை அழகு சுப்பிரமணியம் அருமையாக எழுதிச் செல்கின்றார்.

அதுபோல தம்பிமுத்துவின் 'மரமேறி' கதையில் இப்படி மரமேறியான வேலுவின் கதை சொல்லப்படுகின்றது. வேலு, அச்சுவேலிக்கு கொழும்பிலிருந்து விடுமுறைக்குச் செல்லும் கதைசொல்லிக்கும், அவரின் சகோதரருக்கும் தென்னைமரமேறி இளநீர் வெட்டிக் கொடுப்பவர். அவர்களின் தாத்தாவுக்கு தென்னையிலிருந்து கள் இறக்குபவர். இத்தனைக்கும் வேலு வசதியில் குறைந்தவரல்ல. அவருக்கு நிறையத் தென்னைகளுடன் சொந்தமாகத் தோப்பும் இருக்கின்றன. ஆனால் கதைசொல்லியின் தாத்தா மீதிருக்கும் அன்பால் இவர்களின் தென்னைகளிலும் ஏறி இறங்குகின்றவர்.

இந்தக் கதையின் தம்பிமுத்து, மரமேறி வேலுவுக்கும், இவர்களின் பூட்டனாருக்கு நல்ல உறவு இருந்தாலும், சாதியின் நுட்பமான தடுப்புச் சுவர்கள் பற்றியும் பேசுகின்றார்.  அதுவேதான் இந்தக்கதையை அசல்தன்மையுடன் வாசகர் முன்னால் வைக்கின்றது எனச் சொல்வேன்.

எப்படி அழகு சுப்பிரமணியத்தின் 'கூலிக்கு மாரடிப்பவர்கள்' கதையில் செத்தவீட்டில் அழும் நிலைமை விபரிக்கப்படுகின்றதோ, இந்த 'மரமேறி' கதையிலும் ஒரு மரணம் நடந்துவிட இப்படி கூலிக்கு அழுபவர்கள் சித்தரிக்கப்படுகின்றார்கள். ஒருவகையில் அழகும், தம்பிமுத்துவும் மத்தியதர உயர்வர்க்க வாழ்க்கை வாழ்ந்தாலும், அவர்களாலும் சமூகத்தில் அடிநிலையில் இருந்த மக்களை எழுத்துக்களால் நெருங்க முடிந்திருக்கின்றது என்பதுதான் முக்கியமானது.

*

இந்த 'கடலோடிகள்' தொகுப்பில் தம்பிமுத்துவின் 'மாதுளை மரம்', 'மரமேறி', 'பூட்டனாரும் பேய்பூதங்களும்' ஆகிய மூன்று கதைகளை எழுத்துக்கினியனும், அனுஜாவும் தமிழாக்கியிருக்கின்றனர்.  தம்பிமுத்து தன்னையொரு கவிஞராகவே வாழும் காலத்தில் முன்வைத்தவர். அவர் இங்கிலாந்தில் (அமெரிக்காவிலும்) தொடர்ந்து நடத்திய Poetry London (/New York) சிற்றிதழே கவிதைகளுக்கென்றே நடத்தியவர். அவ்வாறான தம்பிமுத்து அமெரிக்காவில் வாழ்ந்த காலத்திலே கதைகளை எழுதத் தொடங்கியவர். வெளியாகிய கதைகள் ஐந்துதான் என்கின்றனர். சிலவேளைகளில் அதற்கு மேலும் எழுதி சிலது வெளிவராதிருக்கக்கூடும்.

இந்தக் கதைகளை தமிழாக்கிய எழுத்துக்கினியனோடு தனிப்பட்ட பேச்சில், அவர் தம்பிமுத்துவின் ஒரேயொரு மகளான சகுந்தலாவோடு தொடர்பில் இருப்பதை அறிந்துகொண்டேன். எனவே தம்பிமுத்துவின் புதிய கதைகளை எழுத்துக்கினியன் கண்டெடுத்து இனி வரும் காலங்களில் நாம் தமிழில் வாசிக்கும் சந்தர்ப்பம் வரக்கூடும் என நம்புகின்றேன்.

தம்பிமுத்துவின் 'மாதுளை மரம்' நியூ யோர்க்கர் இதழில் வெளிவந்திருந்தது. இவ்வளவு காலமாகியும் இன்னும் வேறெந்த தமிழ் எழுத்தாளரின் கதை நியூ யோர்க்கரில் வெளியாகியதாக ஆதாரபூர்வமான சாட்சிகள் எதுவுமில்லை என்கின்றபோது தம்பிமுத்துவின் கதை கடந்த நூற்றாண்டின் 50களில் வெளிவந்திருக்கின்றது என்பதையிட்டு ஈழத்தமிழர்களாகிய நாம் பெருமை கொள்ளலாம்.

ஒருவகையில் பார்த்தால் தம்பிமுத்து கதைகளை எழுதப்போகின்றபோது அவர் இளமைக்காலத்தில் விடுமுறையில் கழித்த யாழ்ப்பாணத்தை (அச்சுவேலி) பின்னணியாகக் கொண்டுதான் கதை எழுதியிருக்கின்றார் என்பது புரிகின்றது. இந்த மூன்று கதைகளிலும் அச்சுவேலி எங்கோ ஓரிடத்தில் வெளிப்படையாகப் பதிவு செய்யப்படுகின்றது. ஆக ஒரு மனிதனின் சிறுவயது/பதின்மவயது ஒருவரின் படைப்பில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தும் என்பதற்கு தம்பிமுத்துவின் கதைகளை உதாரணமாகக் கொள்ளலாம்.

*

அழகு சுப்பிரமணியம் இருபதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியிருக்கின்றார். அவரின் ஒரு குறிப்பிட்ட சிறுகதைகள் 'நீதிபதியின் மகன்' என்ற பெயரில் ராஜ சிறிகாந்தனால் தமிழாக்கப்பட்டிருக்கின்றது. அப்படி தமிழாக்கப்படாத மூன்று கதைகளை எழுத்துக்கினியவன் தமிழாக்கியிருக்கின்றார்.

அழகுவின் 'பெரிய பிள்ளை (The big Girl) எழுதிய காலத்திலே கவனத்திற்குள்ளான கதை. அதே பெயரிலேதான் அழகு தனது முதலாவது சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டும் இருந்தார். ஒருவகையில் பார்த்தால், இந்தத் தொகுப்பில் இருக்கும் 'பெரிய பிள்ளை'யும், 'பெரிய கடைச் சந்தி'யும் ஒன்று மற்றதன் தொடர்ச்சி எனச் சொல்லலாம்.

'பெரிய பிள்ளை' ஒரு செல்வாக்கான யாழ்ப்பாணத்துப் பெரிய மனிதர் தனது மகளை படிப்பதற்கான யாழ்நகரிலுள்ள புளியடி (வேம்படி) பாடசாலைக்கு அனுப்புவதுதான் கதை. இந்தக் கதையில் திருமதி இராமசாமி தனது மகளை வேம்படி பாடசாலை மாட்டுவண்டிலில் கொண்டுபோய் விடுதியில் விட்டு விட்டு திரும்புவதுதான் கதை. இரண்டாவது கதையான 'பெரிய கடைச் சந்தியில்' யாழ் நகருக்கு திருமதி இராமசாமி தனது நகருக்கு மாட்டு வண்டியில் திரும்புகின்ற பயணத்தைப் பற்றியது. திருமதி இராமசாமிக்கு அதுவரை காலமும் தன்னோடு வளர்ந்த மகள் பார்வதியை புளியடி பாடசாலை விடுதியில் தனியே விட்டுவிட்டு வந்தது கவலையைக் கொடுக்கின்றது. வழிமுழுதும் வண்டிலுக்குள் இருந்து அழுகின்றார். வண்டியோட்டியோ 'இப்படியே அழுதபடி வந்தால், பெரியகடைச் சந்தியில் இருக்கும் வம்பன்கள் வேறுவிதமாகக் கதைப்பார்கள்  ஆகவே அழாமல் இருங்கள்' எனச் சொல்கின்றார்.

இந்தக் கதையில் திருமதி இராமசாமியின் பயணத்தினூடாக அன்றைய யாழ்ப்பாணத்தின் வெளிச்சூழலை அழகு அற்புதமாகக் காட்டுகின்றார். இவ்வளவு நுணுக்கமாக எப்படி ஆங்கிலத்தில் அழகுவால் எழுத முடிகின்றது என்று வாசிப்பவர் வியக்காமல் இருக்க முடியாது.

மூன்றாவது கதையான 'மதமாற்றத்தில்'தான் அழகு என்கின்ற படைப்பாளின் ஆளுமை விகசிப்பதை நாம் காண்கின்றோம். வேலைக்காக மதம் மாறிய ஒருவரால் கடைசிவரை 'சிவன் சிவன்' என்று இந்துக்கடவுளளை உச்சரிப்பதை மாற்றமுடியாது. அந்த ஒரு காரணத்தை வைத்தே இந்த ஆசிரியரின் மீது பொறாமை கொள்ளும் சக ஆசிரியர் அவரின் பதவியுயர்வை தடுக்க நினைக்கின்றார். இறுதியில் மதம் மாறி சிவன் சிவன் என்று உச்சரிக்கின்ற அந்த ஒடுக்கப்பட்ட ஆசிரியருக்கு அவரது பதவி உயர்வு கிடைக்கின்றதா இல்லையா என்பதுதான் கதை. இந்தக் கதையை தீவிரமாகவும், அதேவேளை நகைச்சுவையுணர்வு பொங்க அழகு எழுதியிருப்பதுதான் சிலாகிக்கத்தக்கது.

*

இவர்கள் இருவரின் கதைகளோடு வி.வி.கணேஷானந்தனினதும், வஜ்ர சந்திரசேகரினதும் தலா இரண்டு கதைகள் இத்தொகுப்பில் தமிழாக்கப்பட்டிருக்கின்றது. இந்தத் தொகுப்பை வாசிப்பவர்கள் அதை வாசிக்கட்டுமென அவர்களின் கதைகளைப் பற்றிப் பேசுவதை இங்கே தவிர்க்கிறேன்.

சமகால எழுத்துக்களில் ஒருவித அலுப்பு வந்து நான் பழைய ஈழத்து எழுத்தாளுமைகளைத் தேடத் தொடங்கியபோது அழகுவும் தம்பிமுத்துவும் என்னை அவ்வளவு பாதிப்புச் செய்தனர். அவர்களது படைப்புக்கள் மட்டுமில்லை, எந்தப் பிரபல்யம்/புகழ் எது குறித்தும் கவலைப்படாது தாம் நம்பிய கலையில் ஊன்றித் திளைத்தது என்னை அவர்களை மேலும் மேலும் அறியவேண்டும் என்கின்ற வேட்கையை ஏற்படுத்தியது.

அதே சமகாலத்தில் தமிழுக்கு கிடைத்த பேறாய் எழுத்துக்கினியவனும், அனுஜாவும் இவர்கள் இருவரின் கதைகளையும் தமிழாக்கம் செய்யத் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கின்றது. தமிழில் எழுதப்பட்ட கதைகளைப் போல இவர்களின் மொழிபெயர்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு குறையாக அல்ல, ஆனால் விரும்பினால் கவனிக்கலாம் என்று தமிழாக்கம் குறித்து ஒரு விடயத்தை அவர்களிடம் சொல்வேன். இந்தளவுக்கு யாழ் வட்டாரமொழியில் கதாபாத்திரங்கள் பேசுவதை மாற்றத் தேவையில்லை என்று சொல்வேன். கொஞ்சம் நியமத்தமிழின் பக்கம் சென்று பார்க்கும்போது இன்னும் இறுக்கமான கதைகளாக தமிழுக்கு வரும்போது இவர்களின் இருவரின் கதைகள் இருக்கும் போலத் தோன்றியது. விரும்பியனால் தமிழாக்கிய இருவரும் இந்தப் புள்ளி குறித்து சற்று யோசித்துப் பார்க்கலாம்.

அழகு சுப்பிரமணியன் இருபதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியவர். 'நீதிபதியின் மகன்' தொகுப்பில் பன்னிரண்டு கதைகள் இருக்கின்றன. எழுத்துக்கினியன்/அனுஜா இதுவரை தமிழாக்காத அழகுவின் கதைகளை தமிழாக்கி ஒரு தனித் தொகுப்பாக வெளியிடலாம். அதுபோல தம்பிமுத்துவின் கதைகள் உள்ளிட்ட பொயட்ரி இலண்டனில் அவர் எழுதிய அற்புதமான ஆசிரிய தலையங்கள், விமர்சனங்கள் என்பவற்றைத் தொகுத்து தம்பிமுத்துவுக்கெனவும் ஒரு தொகுப்பு வெளியிடலாம்.

தமிழிக்கு ஒரு நல்நிகழ்வாய் எழுத்துக்கினியன்/அனுஜா போன்றவர்கள் இரண்டு மொழிகளிலும் தமிழாக்கும் வல்லமை உடையவர்களாக இருக்கின்றார்கள். எனவே அவர்களைப் போன்றவர்களின் தமிழாக்கங்களை/அதற்கு அவர்கள் கொடுக்கும் உழைப்பை மதிக்கின்றவர்களாக நம் சமூகம் இருந்தால் இன்னும் நிறைய வளங்களைத் தமிழுக்கு அவர்கள் கொண்டுவந்து சேர்ப்பார்கள் என நினைக்கின்றேன்.

***

 

கார்காலக் குறிப்புகள் - 156

Tuesday, August 18, 2026

 

 கால்பந்தாட்டக் குறிப்புகள் - 02

***

இதுவரை ஆர்ஜெண்டீனாவின் ஆட்டங்கள் சோபிக்கவில்லை. நடுவர்களின் ஆதரவும் இருக்க அளாப்பி விளையாடுகின்றார்கள் என்கின்ற விம்பமும் இருந்தது. இன்று அதை மறுதலித்து எதிரணியினரே ஒப்புக்கொள்ளும்படி நன்றாக விளையாடினார்கள்.

ஐரோப்பிய நாடுகளுக்கு ஒருவிதமான ஆட்ட வியூகங்கள் இருப்பதுபோல, தென்னமெரிக்கா நாடுகளுக்கு எப்போதும் முன்களமே வலுவாக இருக்கும். ஆகவேதான் அவர்களால் நிறையக் கோல்களை எதிரணியினர் அடித்தாலும், விடாமுயற்சியுடன் திரும்பி வந்து விளையாடி உலகக்கோப்பைகளை வெல்ல முடிந்தது.

Uploaded Image
அதேசமயம் பிரேசில் போன்ற நாடுகள் முன்கள வீரர்களின் கவனம் செலுத்தும்போது, பின்களம் வலுவற்று இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஜேர்மனி அவர்களுக்கு ஏழு கோல்கள் அடித்த சம்பவத்தை உதாரணத்துக்குச் சொல்லலாம். அதேபோன்று தென்னமெரிக்கா நாடுகளுக்குள் (கோஃபா கப்) விளையாடும்போது ஒரு உத்தியையும், உலக்க்கோப்பைக்காக விளையாடும்போது (அதிகம் ஐரோப்பா நாடுகளோடு) வேறொரு உத்தியையும் கையாள வேண்டியிருக்கும்.

இதைச் சரியாகக் கணித்து கடந்த சில உலகக்கோப்பை ஆட்டங்களில் (2014 இல் இருந்து) விளையாடுவது ஆர்ஜெண்டீனா. அதை அதிகம் கவனம் கொள்ளாது இன்னும் strikers/forwards மீது கவனம் குவித்து தொடர்ச்சியாக பிழை விட்டுக்கொண்டிருப்பது பிரேசில்.

பிரேசில் கடந்த நான்கைந்து உலகக்கோப்பைகளில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறிய அனைத்து ஆட்டங்களையும் பார்த்தால், அவர்கள் அவ்வளவு மோசமாக விளையாடி இருக்க மாட்டார்கள்; முன்கள வீரர்கள் இயன்றளவு கோல்களை அடிக்க முயற்சித்திருப்பார்கள். அதேசமயம் பிரேசிலிடம் ரொனால்டோ/ரொனால்டீனா போன்றவர்களுக்குப் பிறகு சிறந்த ஸ்ரைக்கர்ஸ் (நெய்மார் இருந்தாலும், அவரொருவரால் ஆட்டங்களின் நிலைமையை மாற்றியமைக்க முடியவில்லை). வரவில்லை. எனவே தொடர்ச்சியாக பிரேசிலால் வெல்ல முடியவில்லை.

ஆர்ஜெண்டீனாவுக்கு மரடோனாவுக்குப் பிறகு மெஸ்ஸி என்கின்ற தங்கமுட்டையிடும் வாத்துக் கிடைத்திருக்கின்றது. அதேவேளை ஆர்ஜெண்டீனா முன்களத்தை வலுவாக்கியதுபோல பின்களத்தையும் பிரேசிலைப் போலவன்றி வலுவாக்கியிருந்தது.

இந்த உலகக்கிண்ணத்திலே அதை எளிதாகப் பார்க்கலாம். ஆர்ஜெண்டீனாக்காரர்கள் ஐரோப்பியர்கள் போல tough ஆட்டம் விளையாடினார்கள். இந்த அரையிறுதி ஆட்டத்தில் கூட இடைவெளியின் முன் ஆர்ஜெண்டீனா நிறைய ஃபவுல்கள் விட்டார்கள். இடைவெளியின் பின் ஒன்றுக்கு மேற்பட்ட மஞ்சள் அட்டைகளையும் பெற்றார்கள்.

ஆர்ஜெண்டீனா சுதாகரித்துக் கொண்ட ஆட்ட வியூகத்தை பிரேசில் தவறவிட்டது. நோர்வேயுடன் அவ்வளவு மென்மையான ஆட்டத்தை ஆடியது. நோர்வைக்காரர்கள் தங்களுக்குள் வைத்து நீண்டநேரம் விளையாடிய பந்தைப் பறிக்கக்கூட  பிரேசில்காரர்கள் ஃபவுல் விடத் தயாராக இருக்கவில்லை. பிரேசில் அன்று தோற்ற ஆட்டத்தில் பிரேசில் பெற்ற ஒரேயொரு மஞ்சள் அட்டை நெய்மாருடையது. அதுவும் ஆட்டம் முடிகின்ற கட்டத்தில்.

இவ்வாறு சொல்வதால் நான் ஃபவுல் ஆட்டங்களுடன் அழுகுணி ஆட்டம் ஆடவேண்டும் என்று சொல்ல வரவில்லை. இன்னும் இப்படி மென்மையாக விளையாடி கோல்களைப் போட்டு ஆட்டத்தைச் சோபிக்கச் செய்வதற்காகத்தான் பிரேசில் ஆதரவாளனாக இருக்கின்றேன். ஆனால் உலகக்கோப்பையில் வெல்லவேண்டும் என்றால் கடுமையான ஆட்டத்தை முக்கியமாக ஐரோப்பிய நாடுகளுடன் ஆடாவிட்டால், அவ்வளவு எளிதாக வெல்லமுடியாது. அதற்கு இன்றையகால பிரேசில் சிறந்த உதாரணம்.

இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து விட்ட பிழை (கடந்த உலகக்கிண்ண ஆட்டங்களிலும் இதைச் செய்திருக்கின்றது), ஒரு கோலை அடித்தவுடன் தடுப்பாட்டம் ஆடும் நிலைமைக்குப் போய்ச் சேர்ந்திருந்தது. இதே தடுப்பாட்டம் மெக்ஸிக்கோவுடன் ஆடும்போது இங்கிலாந்துக்கு சாதகமாக இருந்து வெற்றியையும் பெற்றுக் கொடுத்திருந்தது. ஆனால் ஆர்ஜெண்டீனா இன்னொரு மெக்ஸிக்கோ இல்லை.

Uploaded Image


இங்கிலாந்து, தொடர்ச்சியாக இந்த உலகக்கிண்ணப் போட்டிகளில், பின்னாலிருந்து வந்து கோல்களை இறுதி 20/30நிமிடங்களில் அடித்து ஆட்டங்களை வென்ற ஆர்ஜெண்டீனாவுடன் இப்படி பின்னே நின்று தடுக்கும் ஆட்டம் விளையாடியது அவர்கள் விட்ட பிழை. நோர்வே பிரேசிலுக்கு ஒரு கோல் அடித்துவிட்டு தடுப்பாட்டம் ஆடவில்லை. பந்தை மைதானத்தின் நடுவிலும், பிரேசிலின் பெனால்டி பெட்டிக்குள்ளும் தொடர்ந்து தள்ளியபடியே இருந்தார்கள். அதனால்தான் பிரேசிலால் அவ்வளவு கோலடிக்கும் சந்தர்ப்பங்களை உருவாக்க முடியவில்லை.

இன்று இங்கிலாந்து ஒரு கோல் போட்டபின், பின்களத்தில் தடுப்பாட்டத்தில் கவனத்தைக் குவித்தபோது, தொடக்கத்திலே சில கோல்கள் இங்கிலாந்து கோல்கீப்பரால் இலாவகமாக தடுக்கப்பட்டன. அப்போதே இங்கிலாந்து சுதாகரித்திருக்க வேண்டும். இத்தனைக்கும் இங்கிலாந்து மிகச் சிறந்த strikers/midfields ஐ கொண்ட அணி. களத்தில் மட்டுமில்லை, reserve ஆகக்கூட ரஷ்பார்ட், ஷக்கா போன்ற வீரர்கள் இருந்த ஒரு அணி.

எனினும் எல்லா நேரங்களிலும் எதிரணி கோல்களை முதலில் அடித்தபின் மீண்டு வந்து அதைவிட கூடிய கோல்களை அடித்து வெல்வதென்பது இலகுவல்ல. அதிலும் ஆர்ஜெண்டீனா அடித்த (அடிக்காத சில கோல்கள்) கோல்களில் மெஸ்ஸியின் பங்களிப்பு மிகச் சிறப்பானது. மெஸ்ஸி இந்தப் பந்துகளை பெனால்டி பெட்டிக்குள் அனுப்பாவிட்டிருந்தால் ஆர்ஜெண்டீனா கோல்களை அடித்திருக்கவே முடியாது.

மெஸ்ஸி ஒரு கட்டத்தில் தன்னால் பெனால்டி பெட்டிக்குள் போய் கோல்களை அடிக்கமுடியாது என்பதை உணர்ந்து பின்னாலே நின்று பெரும்பாலும் விளையாடியதை நாம் பார்த்திருப்போம். பிரான்ஸ் தோற்ற போட்டியில் எம்பாவேவின் கால்களுக்கு பந்தே வரவில்லை. அவர் சிலவேளை மெஸ்ஸியைப் போல சற்று பின்னே நின்று விளையாடியிருந்தால் பிறர் மூலம் கோல்களை அடிக்கும் சந்தர்ப்பங்களை  பிரான்ஸிற்கு உருவாக்கியிருக்கக்கூடும்.

இன்று ஆர்ஜெண்டீனாவின் நாள். அவர்கள் சிறப்பாகவே விளையாடினார்கள். இதுவரை நாட்களில் அவர்கள் மீதிருந்த விமர்சனத்தைத் தாண்டி, இன்று அவர்களை மனந்திறந்து பாராட்டலாம்.

அதுவும் ஐரோப்பா நாடொன்றுக்கு எதிரான வெற்றியென்பது இன்னும் மகிழ்ச்சி தரக்கூடியது!

****
(Jul 11)


பிரேசில்காரரே, பிரான்சுக்காரன்கள் ஆடுகின்ற ஆட்டத்தைப் பார்த்தால் நாங்கள் அவர்களைச் சந்தித்தால்  அவர்கள் ஜேர்மன்காரர்கள் நமக்கு 7 கோல்கள் அடித்ததை விட அடிக்காமல் அனுப்பமாட்டாங்கள் போல இருக்கிறது.

இதற்கிடையில் அடுத்த சுற்றில் நாங்கள் நோர்வேக்காரன்களைச் சந்திக்கப் போகின்றோம். அவர்கள் கடைசி ஆட்டத்தில் வென்றபின் மைதானத்தில் தாங்கள் கடலோடிகளின் கலாசாரத்தில் வந்தவர்கள் என்று Viking Row செய்து வீரம் காட்டுகின்றார்கள். ஐவரி கோஸ்ட்டை வென்றதற்கே ஆ, ஊ என்று படகு வலித்து இப்படி படங்காட்டுகின்றவர்கள் நமக்கு என்ன வைத்துச் செய்யப் போகின்றார்களோ தெரியவில்லை என மனம் பதறுகிறதே.

மேலும் ஜேர்மனி முதல் knock out இலே தோல்வியடைந்து நாட்டுக்குத் திரும்பிப் போனதற்கு, முதலில் நான்கு சாம்பியன்ஸ் வென்ற அவர்களை அனுப்பிவிட்டு, அடுத்து ஐந்து சாம்பியன்ஸ் வென்ற பிரேசில்காரர்களுக்குத்தான் மலையாள மாந்தீரிக செய்திருக்கின்றோம் என்று கேரள ஆர்ஜெண்டீனா இரசிகன் எனக்கு எச்சரிக்கை செய்தபடி இருக்கின்றான்.

பிரேசிலினின் ஜாம்பாவன்களாக இருந்த ரொனால்டோ, ரொனால்டீனோ எல்லாம் உங்களுக்காக ஒவ்வொரு ஆட்டத்தை நேரடியாகப் பார்க்க வருகின்றார்கள். தங்களுக்கு அடுத்த தலைமுறை சாம்பியன்ஸ் வெல்லவேண்டும், அதைத் தமது கண்களால் நேரடியாகப் பார்க்க வேண்டும் என்று வரும் அவர்களின் பொருட்டாவது, ரியோ கடற்கரை மணலில்  பெண் பிள்ளைகளுக்கு கலர்ஸ் காட்டுவதற்காக விளையாடுவது போன்று அல்லாது professional ஆக, நாங்கள் சுண்டெலிகள் அல்ல, சிறுத்தைகள் என்று பாய்ந்து விளையாடவேண்டும்.

இன்றைய ஆட்டங்களில் நான் கொங்கோ, செனகல், பொஸ்னியா வெல்லவெண்டும் என்று விரும்புகின்றேன்.

Uploaded Image

ஆனாலும் வெல்லப்போவது என்னவோ இவற்றுக்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து, பெல்ஜியம், ஐக்கிய அமெரிக்காவாக இருக்கப் போகின்றதென்றாலும், எப்போதும் போல வலிமையும்/வளங்களும் குறைந்த நாடுகளுக்கு என்னுடைய ஆதரவு.

அதுவும் போர் நிறைந்த சூழலில் இருந்து வந்து குழுநிலை ஆட்டங்கள் அனைத்தையும் சமனிலைப்படுத்தி, மூன்று ஆட்டங்களிலும் வியப்பைத் தந்த ஈரான் இந்த knock out சுற்றுக்கு வராதது கவலையே. அதேபோல  தேவதைக் கதையைப் போல மிகச்சிறு தீவான Cabo Verde இந்தச் சுற்றுக்கு வந்திருப்பதும், மெஸ்ஸியின் ஆர்ஜெண்டீனாவைச் சந்திக்க இருப்பதும் மகிழ்ச்சியான விடயமே.

***
(Jul 01)


மெஸ்ஸி மூன்று உலகக்கிண்ண இறுதியாட்டங்களை விளையாடப் போகின்றார் என்பது நினைவுக்கு வந்தபோதுதான், பிரேசிலின் பீலேயும் அப்படி விளையாடி இருப்பார்தானே என்று தேடிப் பார்த்தேன். பீலே 1958, 1962, 1970 பிரேசில் சாம்பியன்ஸ் ஆனபோது இருந்தவர் என்றாலும், 1962 இல் காயம் காரணமாக பீலே இறுதிப் போட்டியில் பங்கேற்றவில்லை. ஆக பீலே இரண்டு உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் மட்டுமே பங்கு பற்றியிருக்கின்றார்.

மெஸ்ஸி இப்போது 2014, 2022, 2026 இறுதிப்போட்டிகளில் பங்குபற்றுகின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கின்றார். பிறகுதான் இன்னொரு விடயம் ஞாபகத்துக்கு வந்தது. பிரேசிலுக்குப் பீலேயிற்குப் பிறகான பொற்காலம் என்றால் அது 90 களிலும் 2000களின் தொடக்கத்திலும் இருந்திருக்கின்றது.

பிரேசில் 1994, 1998, 2002 என எந்த நாட்டினராலும் எளிதில் முடியாத சாதனையாக தொடர்ந்து இறுதியாட்டத்துக்கு வந்திருக்கின்றனர். அதில் 1994, 2002 இல் சாம்பியன்ஸ் ஆனார்கள். 1998 இல் பிரான்ஸிடம் இறுதிப்போட்டியில் 3-0 என்று தோற்றிருந்தனர்.

இந்த மூன்று தொடர்ச்சியான இறுதியாட்டங்களிலும் இருந்த ஒரேயொரு விளையாட்டு வீரராக பிரேசிலின் காஃபூ இருக்கின்றார். இவரே 2002இல் அணித்தலைவராக இருந்தபோது சாம்பியன்ஸை பிரேசில் வென்றும் இருக்கின்றது.

இப்போது மெஸ்ஸி மூன்று இறுதியாட்டங்களில் விளையாடும் இன்னொரு வீரராக உருவாகியிருக்கின்றார்.  எனக்கு மெஸ்ஸியைப் போல பிடித்த  இன்னொரு ஆர்ஜெண்டீனா வீரரான ஏஞ்சல் டீ மரியா (Ángel Di María ) இந்தச் சாதனையில் இடம்பெற்றிருக்கலாம். ஆனால் அவர் கடந்த உலகக்கிண்ண வெற்றியோடு ஓய்வுபெற்றுவிட்டார். இல்லாவிட்டால் மெஸ்ஸியைப் போல மூன்று உலகக்கிண்ண இறுதியாட்டங்களில் விளையாடும் ஒருவராக டீ மரியாவும் இருந்திருப்பார்.

இப்போது மெஸ்ஸியும், காஃபூவும் இந்தச் சாதனைப் பட்டியலில் இருக்கின்றனர். காஃபூவிற்கு இரண்டு சாம்பியன்ஸை வென்ற கிரீடம் இருக்கின்றது. மெஸ்ஸியிற்கு இரண்டு சாம்பியன்ஸ் வெல்லும் அதிஷ்டம் இருக்கா என்பதைப் பார்க்க இந்த ஞாயிறுவரை பொறுத்திருக்க வேண்டும்.

மரடோனா இரண்டு உலகக்கிண்ண இறுதியாட்டங்களை 1986, 1990 விளையாடியவர். ஆனால் ஒரு சாம்பியண்ஸையே அவரால் பெற முடிந்தது. ஆர்ஜெண்டீனா இந்தமுறையும் உலகக்கிண்ணத்தை வென்றால் மெஸ்ஸி, சாதனையில் மரடோனாவை முந்திவிடுவார்.

என்னைப் போன்றவர்களுக்கு பீலேயோ, மரடோனாவோ விளையாடும்போது அதே சமகாலத்தில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஆனால் மெஸ்ஸியின் ஆட்டங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இனி இவர்களைப் போல நீண்டகாலம் நிலைத்து நின்று சாதனை படைக்கும் வீரர்கள் மிக அரிதாகவே தோன்றுவார்கள்.

அந்தவகையில் மெஸ்ஸியின் ஆட்டங்களை மூன்று இறுதிப்போட்டிகளில் பார்க்க முடிவதில் ஒருவகையில் நாம் அதிஷ்டசாலிகள்தான்.

***
(Jul 15)