1.
தான் உருவாக்க விரும்பிய கலைக்கும், உள்மனதின் கொந்தளிப்புக்களுக்கும் இடையில் அல்லாடிய ஒரு கலைஞன் வான்கோ. ஒல்லாந்தில் பிறந்து, பிரான்சில் கோதுமை வயலுக்குள் தன்னைத்தானே சுட்டு வீழ்ந்து கிடந்த வான்கோவின் வாழ்வு முழுவதும் ஒழுங்குகளைக் குலைத்தவை, உலகோடு ஒட்டாது தனக்கான வெளியைக் கண்டுபிடிக்க முயற்சித்தவை. ஆகவேதான் தான் நேசித்த (கர்ப்பிணியாக இருந்த) பாலியல் தொழிலாளியை வீட்டுக்கு கொண்டு வந்து தங்க வைக்க வான்கோவினால் முடிந்தது; இன்னொரு சமயத்தில் சக ஓவியனோடு வாக்குவாதப்பட்டு, தன் காதை அறுத்து ஒரு பெண்ணிடம் அவரால் கொடுக்கவும் முடிந்திருந்தது. அநேக கலைஞர்களைப் போல உயரிய படைப்பு நிலைக்கும் பித்த நிலைக்கும் இடையிலிருக்கும் நூலிழையின் தருணங்களுக்குத் தன்னையே தாரை வார்த்து, இளவயதிலேயே மரணித்துபோன ஒரு படைப்பாளிதான் வான்கோ.
இன்றைய மதிப்பில் மில்லியன் டொலர்களுக்கும் மேலாக விற்கக்கூடிய ஓவியங்களை வரைந்திருக்கும் வான்கோ, தனது வாழ்க்கைக்காலத்தில் ஒரேயொரு ஓவியத்தை மட்டுமே விற்க முடிந்திருக்கின்றது என்பது கசப்பான கடந்தகால வரலாறு. 'படைப்பைப் பார் படைப்பாளியைப் பார்க்காதே' என்கிற காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும், வான்கோவின் தனிப்பட்ட வாழ்வை அறியும்போது அவரது ஓவியங்களின் அடர்த்தி நமக்கு இன்னும் அதிக நெருக்கத்தையும் நெகிழ்வையும் தருபவையாக மாறிவிடவும் செய்கின்றன. தனது வாழ்வின் கசப்புக்களையும், பிறழ்வுகளையும் வர்ணங்களில் குழைத்து தன் சுயத்தை விடுதலை செய்ய முயன்ற ஒரு கலைஞனாகவும் வான்கோவை நாம் அடையாளங் கண்டு கொள்ள முடியும். 'எனது படைப்புக்களே எனது வாழ்க்கை' எனக் குறிப்பிடும் வான்கோ, 'படைப்பாளி ஒவ்வொருவரினதும் உன்னத படைப்புக்களின் அர்த்தங்களை விளங்குவதன் மூலம் கடவுளை நோக்கி நாம் நகரமுடியுமென' தன் சகோதரான தியோவிற்கு எழுதும் கடிதமொன்றிலும் குறிப்பிடுகின்றார்.
வான்கோ அவர் வரைந்த ஓவியங்களின் அளவுக்கு, நிறையக் கடிதங்களையும் எழுதியிருக்கின்றார் என்பதை நீண்டகால உழைப்பின் பின், அண்மையில் ஆய்வாளர்கள் உலகிற்கு வெளிக்கொணர்ந்திருக்கின்றார்கள். கிட்டத்தட்ட ஆறு தொகுதிகளாக வெளிவந்த கடிதங்களின் பெரும் தொகுப்பில் வான்கோவை இன்னும் நெருக்கமாக உணர்ந்து கொள்ளவும் முடியும்.. வான்கோ தான் வரைந்து தியோவிற்கு அனுப்பிய ஒவ்வொரு ஓவியத்தோடும், அவை பற்றிய தனது நீண்ட குறிப்புக்களையும் எழுதி அனுப்பியிருக்கின்றார் என்பது கூடுதல் செய்தி. அது மட்டுமில்லாது, இந்தக் கடிதங்களை ஆதாரமாகக் கொண்டு, வான்கோவின் விரிவான வாழ்க்கை வரலாற்று நூல் (Van Gogh: The Life) சென்ற ஆண்டு வெளியிடப்பட்டும் உள்ளது.
2.
சென்ற வருடத்தின் இறுதியில் ஜரோப்பாவிற்குப் போகும் என் பயணத்தில் சில நாட்கள் ஹொலன்டில் கழிக்கலாமென நானும் நண்பரும் திட்டமிருந்தோம். குறுகியகால தரித்தலில் முக்கியமாய் ஆம்ஸ்டடாமில் எதைப் பார்க்கவேண்டுமென எண்ணியபோது முதலில் நினைவுக்கு வந்தது வான்கோ மியூசியம். வான்கோவின் அசலான 200ற்கு மேற்பட்ட முக்கிய ஓவியங்களையும் 400ற்கு மேற்பட்ட கோட்டோவியங்களையும் அங்கே தரிசிக்க முடியுமென்பது மிகவும் கிளர்ச்சியைத் தந்துகொண்டிருந்தது. மிகவும் சொற்ப காலமே (37வயதுவரை) வாழ்ந்த வான்கோ, ஓவியங்களை வரையத் தொடங்கியதே தனது இருபதுகளின் பிற்பகுதியில் என்பதை நம்மில் பலர் அறிந்துமிருப்போம். பத்து வருடங்களுக்கும் குறைவான காலப் பகுதியில் முறையான ஓவியக் கற்கையே இல்லாது எப்படி வான்கோவினால் உச்சத்தை அடைய முடிந்திருக்கின்றது எனபது எனக்குள் எப்போதும் சுவாரசியமூட்டுகின்ற வினாவாக இருந்து கொண்டிருக்கின்றது. தொடக்கத்தில் இருண்ட வர்ணங்களைப் பயன்படுத்துகின்ற வான்கோ (உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்கள் : Potato Eaters), பிரான்சுப் பயணத்தின்பின் பிரகாசமான நிறங்களைத் தேர்வு செய்து கொள்ளத் தொடங்குகின்றார். அதனால்தான் வான்கோவின் பிரபல்யமான சூரியகாந்திகள் மட்டுமின்றி, அடர்ந்த இரவில் தெறிகும் நிலவு கூட (The Starry Night) சூரியனைப் போன்று பிரகாசமாய் இருக்கின்றது. தனது சகோதரரான தியோவிற்கு குழந்தை பிறந்துவிட்டது என அறிந்து அப்பிள்ளையின் நினைவாக அவர் அனுப்பி வைக்கின்ற பூக்கள் நிரம்பிய அல்மண்ட்ஸ் (Almond Blossom) ஓவியத்தில் கூட அந்தப் பிரகாசத்தை அனுபவிக்க முடியும்.
ஆம்ஸ்டடாமில் அமைந்திருக்கும் 'வான்கோ மியூசியம்' சுவாரசியம் மிகுந்ததாக இருந்தது. அங்கே வான்கோ வரைந்த ஓவியங்களை மட்டுமின்றி, வான்கோவைப் பாதித்த யப்பானிய ஓவியங்கள், வான்கோவின் பாதிப்பில் அவரைப் பின்பற்றி வரைந்த ஓவியர்களின் ஓவியங்கள், வான்கோவின் வாழ்க்கை வரலாறு எனப் பன்முகப்பட்ட காட்சியறைகளுடன் அந்த மியூசியம் இருந்தது. எந்த உயரிய கலைஞனும் வானத்திலிருந்து வந்து குதிப்பவனல்ல என்பதற்கிணங்க வான்கோ நகல் செய்து வரைந்து பழகிய ஓவியங்களும், அதன் அசல் பிரதிமைகளும் இந்த மியூசியத்தில் காணக்கிடைப்பதென்பதும் சுவாரசியமானது. வான்கோவின் ஓவியங்கள் அவரது மரணத்தின் பின் பிரபல்யமடையக் காரணமாக இருந்த தியோவின் மனைவியின் புகைப்படங்களிலிருந்து, வான்கோவின் அரிதான் ஒரு புகைப்படமும் இங்கே காணக்கிடைக்கின்றது. அந்தக் கறுப்பு வெள்ளைப் புகைப்படம் தொலைவிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றது; வான்கோ தன் தோழியொருவருடன் உரையாடிபடி நீண்டு விரியும் தெருவில் நடந்துகொண்டிருக்கின்றார்.
பிரான்சிலிருந்த காலப்பகுதியில் வான்கோ இம்பிரஸனிச (Impressionism) பாதிப்பில் ஓவியங்களை வரையத் தொடங்கினாலும், அவரின் ஓவியங்கள் இம்பிரஸனிசத்தின் பிறகான காலத்துக்குரியதாக (Post Impressionism) விமர்சகர்கள் வரையறுக்கின்றார்கள். வான்கோ பயன்படுத்தும் தூரிகையின் கீறல்கள் தனித்துவமானவை. ஓவியங்களுக்கு அருகில் நெருங்கி நின்று பார்க்கும்போது அலையலையாய், சுருள்சுருளாய் வான்கோவின் தூரிகை நிகழ்த்தும் மாயஜாலங்களை அறிந்துகொள்ளலாம். அதேசமயம் எந்தவொரு ஓவியத்தைப் பார்க்கும்போதும் அததற்கான இடைவெளியில் நின்று பார்க்கவேண்டும் என்பதை, வான்கோவின் 'கோதுமைவயலில் காகங்கள்' எமக்கு உணர்த்தியிருந்தது. அருகில் நின்று பார்க்கும்போது சாதாரண 'வர்ணப்பூச்சாய்'த் தெரிந்த இந்த ஓவியம், இடைவெளியை அதிகரித்தபோது மிகத் தத்ரூபமான படைப்பாய் மனதில் வியாபித்ததையும் குறிப்பிடத்தான் வேண்டும்.
முக்கியமாய் அவர் உளவியல் சிகிச்சை பெறத் தொடங்கிய காலத்தின் பின் அவரது ஓவியங்கள் பெரும் மாற்றத்தை அடைந்திருக்கின்றன. ஒரு கடிதத்தில் 'நான் தூரிகையால் அல்ல எனது இதயத்தால் வரைபவன்' என எழுதுகின்ற வான்கோவின் தூரிகையின் அலைவுறும் வர்ணங்கள், அவருக்குள்ளே கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற மனதைப் பிரதிபலிப்பவையாகக் கூட இருந்திருக்கலாம். எப்போதும் தனக்குள்ளிருக்கும் திறமையைப் பிறருக்கும் பகிர்ந்து கொள்ளவேண்டுமென ஆசைப்படுகின்றவராய் இருந்த வான்கோ ஓவியம் வரைவதற்கான தாள்கள்/தூரிகைகள் போன்றவற்றை இளஓவியர்களுக்கு வழங்கியிருக்கின்றார்; மேலும் தான் வரையும் ஓவியங்களை பிறரும் பார்க்க வேண்டுமென்பதற்காய் தன் வீட்டு யன்னல்களில் காட்சிக்காய் வைத்துமிருக்கின்றார். அது மட்டுமின்றி பல ஓவியர்களை இணைத்து கூட்டாக வாழும் முறையை பிரான்சிலிருந்தபோது நடைமுறைப்படுத்த முயன்றிருக்கின்றார்.
இறுதியில் அவரின் கனவுக்கு இணங்கி அவரது இடத்திற்கு இன்னொரு பிரபல்யமான ஓவியரான போல் காகெயின் (Paul Gaugain) வந்திருக்கின்றார். அந்தக் கனவு முயற்சி எப்படித் துயர முடிவுக்கு வந்தது என்பதும், அதன் நீட்சியில் வான்கோ தன் காதை வெட்டி ஒரு பாலியல் தொழிலாளிக்குக் கொடுத்தார் என்பதும் இன்னொரு கிளைக்கதை. காகெயின் வந்து தங்கியிருந்த காலப் பகுதியில் -காகெயின் அறையை அழகாக்கத்தான்- வான்கோ தன் பிரபல்யம் வாய்ந்த சூரியகாந்திகளை வரையந்தொடங்கினார் என்பதையும் நாம் நினைவு கூர்ந்துகொள்ளலாம்.
3.
வான்கோ மியூசியத்தில் ஒரு பகுதியில், வான்கோ பிரான்சில் தான் இருந்த அறையை வரைந்த மாதிரி (Bedroom in Arles) அமைத்திருக்கின்றார்கள். இந்த அறையை -சிறுசிறு மாற்றங்களுடன் - மூன்றுவிதமான வடிவங்களில் வான்கோ வரைந்திருக்கின்றார். அதன் முதல் பிரதிமை ஆம்ஸ்டடாம் மியூசியத்திலும் ஏனையவை பாரிஸ், சிகாகோ போன்றவற்றிலும் இருக்கின்றன. அன்றைய காலத்தில் கான்வாஸ் தாள்களின் விலை காரணமாக அநேக ஓவியர்கள் தாம் ஏற்கனவே வரைந்த ஓவியங்களின் மேல் வேறு ஓவியங்களை செலவைக் குறைப்பதற்காய் வரைந்திருக்கின்றார்கள். வான்கோவும் அவ்வாறு ஒரேதாளில் ஒன்றுக்கு மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கின்றார். அந்த ஓவியங்களை இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் எப்படிப் பிரித்தெடுத்தார்கள் என்பதை விரிவான படிமுறையுடன் வான்கோ மியூசியத்தில் காட்சிப்படுத்தியிருந்தார்கள். இந்த விடயத்தை வியந்து சில நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்கனவே வரைந்த ஓவியம் அவசியமில்லையெனத்தானே அதன் மேல் இன்னொரு ஓவியத்தை வான்கோ வரைந்திருப்பார், அவ்வாறு மறைந்து கிடக்கும் ஓவியத்தைக் கண்டுபிடிப்பதென்பது ஓவியர் ஒருவரின் தனிப்பட்ட உரிமையை மீறுவதாக அல்லவா இருக்கிறதென ஒரு நண்பர் கேட்டிருந்தார். நண்பரின் வாதமும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். ஆனால் விதிவிலக்குகளும் இருக்கின்றதுதான் அல்லவா? இல்லாதுவிட்டால் தங்கள் படைப்புக்களைத் தம் மரணத்தோடு எரித்துவிடவேண்டும் என்று கூறிய காஃப்காவையோ சிவரமணியையோ நாம் இன்று வாசித்துக் கொண்டிருக்க முடியாதல்லவா?
இறுதியாய் 'ஸ்ராரி நைட்' (இது ஆம்ஸ்டடாமில் இல்லை) பற்றியும் 'கோதுமை வயலில் காகங்கள்' பற்றியும் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. 'கோதுமை வயலில் காகங்கள்' வான்கோவின் இறுதிக்காலங்களில் வரையப்பட்டிருக்கின்றது. மேற்கு வாழ்வில் காகங்கள் மரணத்தின் குறியீடு என்பதும் வான்கோ தன் மரணம் நெருங்குவதைத்தான் இவ்வோவியம் மூலம் குறிப்பால் உணர்த்த விரும்புகின்றார் எனவும் நாம் விளங்கிக் கொள்ளலாம். உயரிய கலைக்கும் பித்த நிலைக்கும் எப்போதும் தொடர்பு இருப்பது எனறு கூறப்படுவதுபோல மனதின் பெரும் கொந்தளிப்பால் தத்தளித்த வான்கோ தன் 37 வயதில் தன்னைத் தானே சுட்டுக் கொல்கிறார். ஆனால் சூரியகாந்திகளில், கோதுமைவயல்களில், நட்சத்திர இரவுகளில் தன் தனித்துவத்தை உணர்ந்திப் போந்த ஒரு கலைஞன், தன் மரணத்தின் ஒரு நூற்றாண்டு தாண்டியும் இன்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றான்.
------------------
நன்றி: அம்ருதா (பெப்ரவரி/2012)
ஓவியங்கள்: வான்கோ
வர்ணங்களில் தெறிக்கும் வாழ்க்கை : வின்சென்ட் வான்கோ
In ஓவியம், In பத்தி - 'அம்ருதா'Friday, February 03, 2012
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
super paththi. I could get more from this writing.
2/03/2012 01:07:00 PM-ravi (swiss)
'நான் தூரிகையால் அல்ல எனது இதயத்தால் வரைபவன்'...
2/03/2012 10:55:00 PMஇவரைப்போலவே ஆதிகால எகிப்பதியர்கள், "தாம் இதயத்தால் சிந்திப்பவர்கள்" எனக் கருதியாதாக குறிப்பிடப்படுகின்றது....
வான்கோவின் இறப்பு தொடர்பாக அண்மையில் புதிய செய்தி ஒன்றை பிபிசி வெளியிட்டிருந்தது....இளம் வாலிபர்கள் சிலருடன் அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் வைத்திருந்த தூப்பாக்கி தவறுதலாக வெடித்ததாகவும் அதனால்தான் வான்கோ காயப்பட்டார். தற்செயலாக நடந்த இந்த நிகழ்வால் அந்த வாலிபர் தேவையில்லாத தண்டனைக்கு உள்ளாகி அவரது வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது என்பதற்காக தானே தன்னை சுட்டுக் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு பொய்யான வாக்கு மூலத்தை வான்கோ கொடுத்ததாக ஆய்வுகளின் மூலம் கூறுகின்றார்கள்.
நன்றி ரவி மற்றும் மீராபாரதி.
2/07/2012 12:39:00 PM.........
மீரா, நீங்கள் குறிப்பிடும் வான்கோவின் தற்கொலை சம்பந்தமான மேற்கூறிய கதையை நானும் வாசித்திருந்தேன். Van Gogh: THe Life ஐ எழுதிய இரு ஆசிரியர்களும் இவ்வாறு நிகழ்ந்திருக்கலாமென எழுதியிருக்கின்றார்கள். இந்த இளைஞர்கள் ரஷ்யாவிலிருந்த ஏதோ ஒரு மதம் மீதான நம்பிக்கையாளர்கள் எனவும் எழுதியிருந்ததாய் நினைவு (முழுப்புத்தமும் வாசிக்கவில்லை). ஆனால் அநேக விமர்சகர்கள் இது வான்கோவின் நூலுக்கு ஒருவித சுவை சேர்ப்பதற்காய் சேர்க்கப்பட்டதாய்க் கூறுகின்றார்கள். வான்கோவின் கடிதங்களில் அவர் தற்கொலை செய்வது பற்றித் தொடர்ந்து குறிப்பிட்டபடியே இருந்திருக்கின்றார். மேலும் அவரது வாழ்வே தொடர் கொந்தளிப்புக்களின் மேலே கட்டியமைக்கப்பட்டிருந்தது. அதேசமயம், மேலேயுள்ள சிபிசி கட்டுரையில் வான்கோ மியூசியத்தைச் சேர்ந்தவர் கூறுகின்றமாதிரி ஏன் அப்படி நடந்திருக்கக்கூடாது என்பதையும் எளிதாகக் கடந்து போகமுடியாது. முக்கியமாய் வான்கோ தற்கொலை செய்துகொண்ட பொழுதில் உளவியல் சிகிச்சையெடுத்துவிட்டு ஒரளவு இயல்பான நிலையில் அவருக்குப் பிடித்தமான சகோதரர் தியோவின் வீட்டில் தங்கியிருந்தார் என்பதையும் கவனித்தாகவேண்டும்.
Post a Comment