-இரவியின் 'பாலைகள் நூறு' கதைகள் மீதான வாசிப்பு-
1.
வரலாற்றின் துயரங்களில் நாங்கள் சாட்சிகளாக நின்றிருக்கின்றோம். சிலவேளைகளில் அவ்வாறு நிற்க வற்புறுத்தவும் செய்யப்பட்டிருக்கின்றோம். திணிக்கப்பட்ட யுத்தத்தை எவ்விதத் தேர்வுகளுமில்லாது ஏற்றுக்கொள்ள எங்கள் தலைமுறை நிர்ப்பந்திக்கவும்பட்டிருக்கிறது. ஆனால் இரவி போன்றவர்கள் எமக்கு முன்னைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வாழ்வில் அழகிய இளவேனில் காலங்கள் மலர்ந்திருக்கின்றன. கோயில்களில் திருவிழாக்கள் இரவிரவாய் நடந்ததைக் கண்டு களித்திருக்கின்றார்கள். கீரிமலைக் கேணியிலும், கசூனாக் கடற்கரையிலும் பயமின்றிக் குளித்த அனுபவம் அவர்களின் தலைமுறைகளுக்கு வாய்த்தும் இருக்கின்றது. அதேபோன்று, இந்த வாழ்வின் வசந்தங்கள் கருகி எரிவதை நேரடிச் சாட்சிகளாய்ப் பார்த்தவர்களும் அவர்களே. தமக்குப் பின் வரும் தலைமுறைகள் ஒடுக்குதலின்றி நிம்மதியாக வாழவேண்டுமென ஆசைப்பட்டு, சுயநலமின்றிப் போராட்டக்களங்களைத் தேர்ந்தெடுத்த முன்னோடிகளும் அவர்களே.
காலம் செல்லச் செல்ல எதிரி ஒருவனே என்ற நிலை மறைந்து, எதிரிகள் பல்கிப் பெருக யாரோடு பொருத யாரிடமிருந்து தப்பிக்க, என மனம் நொந்து போராட்டம் செல்லும் திசை கண்டு மனம் வெம்பியுமிருக்கின்றார்கள். போராட்டத்திற்காய் காதலைத் துறந்து களத்தில் இறங்கியவர்கள், இறுதியில் மாற்று இயக்கத்தவர்களே தோழர்களைத் துரத்திச் துரத்திச் சுட, 'எம் போராட்டமும் போயிற்று நம் காதலும் போயிற்று' என வாழ்வின் வெறுமைக்குள் விழுந்தவர்களும் இரவியின் தலைமுறையைச் சேர்ந்தவர்களே. பின்னர் போராட்டக் களங்களிலிருந்து வேறு வழிகளின்றி முற்றாக வெளியேறியுமிருக்கின்றார்கள்.
இத்தொகுப்பிலுள்ள அநேக கதைகள் வாழ்வின் அழகிய வசந்தங்கள் எவ்வாறு சூறையாடப்படுகின்றன என்பதையும் பிரியமான மனிதர்கள் எவ்வாறு சலனமற்று உதிர்ந்துபோகின்றார்கள் என்பதையும் பதிவு செய்கின்றன. சோளகம் எப்போதும் போலத்தான் வீசுகின்றது. ஆனால் அது மகிழ்ச்சியிற்கும் துயரத்திற்குமான படிமங்களாக இரவியின் கதைகளில் மாறி மாறி வருகின்றது. இத்தொகுப்பிலுள்ள பதினெட்டுக் கதைகளும் ஒரு காலத்தின் பதிவுகள் எனலாம். ஆனால் எல்லாக் கதைகளிலும் சொல்ல முடியா ஒரு துயரம் உறைந்து போய்க் கிடக்கிறது. தகப்பனை இழந்த சிறுவர்கள், புலம்பெயர்ந்து போகும் நண்பர்களுக்கு விடைகொடுக்கும் மனிதர்கள், வெளிநாட்டில் ஒழுங்காய் ஒரு வாழ்வு கிடைக்காது உழல்கின்ற அகதிகள், மொழி பரிட்சயமற்ற தேசத்தில் உடல் உழைப்பைச் சுரண்டுகின்ற சொந்த இனத்தையே சேர்ந்த மனிதர்கள், அனைவருடனும் இனிமையாகவும், மனிதாபிமானத்துடனும் இருக்கும் வேற்றினத்து ஒருவரின் தற்கொலைச் சாவு என பற்பல மனிதர்களிடையும் பல்வேறு பின்புலங்களிலும், பல்வேறு உணர்வுத் தளங்களினூடும் 'பாலைகள் நூறு' தொகுப்புக் கதைகள் நகர்கின்றன.
'மகிந்தாவின் சாவு' என்கின்ற கதை என்னளவில் முக்கியமான ஒரு கதை. கதைசொல்லியான தமிழர் தன் குடும்பத்தினரோடு கொழும்பின் ஒதுக்குப்புறத்திலிருக்கும் ஒரு வீட்டில் வசித்து வருகின்றார். அந்த வீடு மகிந்தா என்கின்ற சிங்களவருக்கு உரியது. போர் நடந்துகொண்டிருக்கும் காலம். டென்சில் கொப்பேகடுவ கண்ணிவெடியில் மாண்ட காலத்தில், சிங்களவர் பெரும்பான்மையினராக அயலில் இருக்க, ஒரு குழு கோபத்தில் கதைசொல்லியின் வீட்டைக் கற்களால் தாக்குகின்றது. ஆனால் இவை எதற்கும் அஞ்சாது மகிந்தா தமிழ்க் குடும்பத்தினரைக் காப்பாற்றுகின்றார். கல்லெறியும் கும்பலை இழுத்து அடித்து, 'உனக்கு புலியை அடிக்கவேண்டும் என்றால் யாழ்ப்பாணத்துப் போய் சண்டைபிடி, இப்படி அப்பாவிக் குடும்பங்களைத் தாக்காதே' எனச் சொல்கிறார். இது போல பிரேமதாசா இறந்த காலத்திலும், கொழும்பில் தமிழர்கள் வெளியே வர அஞ்சிய நேரத்தில், மகிந்தா கயிற்றுக் கட்டிலை கதைசொல்லியின் வீட்டின் முன் போட்டு படுத்துக்கொண்டு எவரும் அவர்களைத் தாக்க விடாது பாதுகாப்பளிக்கிறார். மகிந்தாவின் மனிதாபிமானத்தால் அயலவர்கள் பலரும் இத்தமிழ்க் குடும்பத்திற்கு நண்பர்களாகின்றார்கள். ஆனால் ஒருநாள் மகிந்தா தற்கொலை செய்துகொள்கின்றார். மகிந்தாவின் மரணத்தின் பின் அயலவர்கள் மெல்ல மெல்ல இனம் சார்ந்த வன்மத்தைக் காட்டத் தொடங்க, இனி இவ்விடத்தில் வசிக்கமுடியாதென தமிழரான கதைசொல்லி வேறிடம் நோக்கி நகர்வதோடு கதை முடிகின்றது. மகிந்தாவைப் போன்றவர்கள் இக்கதையில் வருவது போல மட்டுமின்றி, 83 ஜூலைக் கலவரங்களிலும் பல தமிழர்களைக் காப்பாற்றியிருக்கின்றார்கள். மேலும் இயலாமையோடு சக மனிதர்கள் ஒடுக்கப்படுவதைப் பார்தது வருந்தியுமிருக்கின்றார்கள். இந்தக் கதை, சிங்களவர்களை ஒற்றைப் படையாக புரிந்துகொண்டு ஒரு ஜாடிக்குள் போட்டு எல்லோரையும் குலுக்க முடியாது என்பதற்கு நல்லதொரு உதாரணம்.
யாழ்ப்பாணத்தவர்கள் அநேகருக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அவர்களை வேலை நிமித்தம் வன்னிக்கோ, கிழக்கு மாகாணத்திற்கோ அல்லது மலையகத்திற்கோ அனுப்பிவிட்டால் ஏதோ அந்த இடங்களில் தம் வாழ்வு பறிபோயிற்று என்கின்றமாதிரியான மனோபாவம் அவர்களில் அநேகருக்கு வருவதுண்டு. இத்தொகுப்பில் இரண்டு கதைகள் கிளிநொச்சியை மையமாகக் கொண்டு நகர்கிறது. ஒரு கதையில் கதைசொல்லிக்கு கிளிநொச்சியில் ஆசிரியர் வேலை கிடைக்கிறது. முதலில் கிளிநொச்சிக்குப் போவதா வேண்டாமா எனக் கதைசொல்லி குழம்பினாலும், நாட்போக்கில் கிளிநொச்சியில் ஆசிரியராகப் பணிபுரிதல் பிடித்துப் போகிறது. குளிப்பதற்கு நீரோடைகளும், சுற்றித் திரிவதற்குக் காடுகளும், பாடங் கேட்கின்ற கள்ளமில்லா பிள்ளைகளும் கதைசொல்லியின் மனதை நிரப்பிக் கொள்கின்றனர். ஆனால் அந்த அழகான வாழ்வு நெடுங்காலம் நீடிக்கவில்லை. பொம்மரடிக்கிறது. செல்கள் சீறியபடி விழுந்து வெடிக்கின்றன, இயல்புநிலை பாதிக்கப்படுகிறது. பொம்மரடியில் ஒரு காலை இழந்த பள்ளிச் சிறுவனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும்போது, அந்தச் சிறுவன், 'நான் இறந்துவிடுவேனா சேர்' என்கிறான். கூட இருந்த இன்னொரு ஆசிரியர் உடைந்துபோய் அழத் தொடங்குகின்றார். எதற்காய்ப் பலியிடப்படுகின்றோம் என்று அறியாமலே பலிவாங்கப்படும் வாழ்வுதான் எத்தகை கொடுமையானது. அந்தக் கால் இழந்த சிறுவனிடமிருந்து எழும் படிமத்தை விலத்தி நாம் எளிதாய்க் கடந்து போய்விடமுடியாது. அது நம் மனச்சாட்சிகளின் கதவை -போர் குறித்து பேசும் ஒவ்வொரு உரையாடல்களிலும்- ஓங்கி அறைந்தபடிதான் இருக்குமல்லவா?
நம் சமூகத்தில் ஆசிரியர்களை உயர்வான இடத்தில் வைத்திருக்கின்றோம். ஆனால் எல்லா ஆசிரியர்களும் அதற்கான தகுதிகளைக் கொண்டிருக்கின்றார்களா? அப்படி இல்லை என்ச் சொல்கின்ற கதைதான் 'குதிரை முடக்கு'. இக்கதையில் வரும் கதைசொல்லி ஓ/எல் பரீட்சையில் முதலிருமுறை தோற்று, மூன்றாவது முறை நல்ல பெறுபேறுகளுடன் சித்தியடைந்து உயர்கல்வி கற்கப் பாடசாலைக்கு வருகின்றார். ஆனால் இவரைப் போன்றவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் இவர்கள் 'குதிரை ஓடி' பாஸானாவர்கள் என்கின்ற சித்திரத்தோடே அவர்களுக்குக் கற்பிக்கின்றார்கள். தொடர்ந்து வார்த்தைகளால் அம்மாணவர்களை வாதை செய்கின்றார்கள். ஒருநாள் பொறுமை எல்லை மீறிப்போய் ஆசிரியரைக் கதிரையால் தூக்கியடிக்கின்ற நிலைக்கு கதை சொல்லி போய்விடுகின்றார்.
ஆசிரியர்கள் எவ்வளவு கொடுமையானவர்களாய் இருந்தாலும் அவர்களை மதிக்கத்தான் நம் சமூகம் தொடர்ந்து வலியுறுத்துக்கின்றது, எவ்வளவு கொடுமைக்காரனாய் கணவன் இருந்தாலும் நீ பணிந்துதான போகவேண்டும் என மனைவிக்கு அறிவுரை கூறும் சமூகத்தைப் போல. சில ஆசிரியர்கள் பல மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாய் இருந்து சரியான திசையைக் காட்டியிருக்கின்றார்கள். வேறு சில ஆசிரியர்கள் இந்தக் கதையில் வரும் ஆசிரியர்களைப் போன்று மாணவர்களின் வாழ்க்கையைப் பாழடித்துமிருக்கின்றார்கள், இக்கதையில் கதைசொல்லி குறிப்பிடுகின்ற துரையப்பா பிள்ளை மண்டபமும், வயலிலிருந்து சோளகம் வீசும் வகுப்பறைகளும் கொண்ட பாடசாலையிலேயே நானும் ஒருகாலத்தில் படித்திருக்கின்றேன். ஆனால் எனக்கு இதைப் போன்ற சம்பவம் நடந்தபோது பாடசாலை இடம்பெயர்ந்து இன்னொரு இடத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. எங்களுக்கு ஒரு ஆசிரியர் வாய்த்திருந்தார். அவருக்கு எப்போது கோபம் வரும் எதற்காய்க் கோபம் வரும் என்பதை ஒருபோதும் கணித்துவிடமுடியாது. தினமும் யாரோ ஒரு மாணவரின் கொப்பி வகுப்பறையைத் தாண்டிப் பறக்கும். எல்லாப் பக்கமும் திறந்த ஓலைக்கொட்டில் வகுப்பென்பதால் கொப்பி அன்றன்றைய காற்று வீச்சுக்கேற்ப வெவ்வேறு தூரங்களில் போய்க் கிடக்கும். பிறகு அந்த வகுப்பு முழுதும் தண்டிக்கப்பட்ட மாணவன் வெளியே நிற்கவேண்டும். தினமும் அவரது வகுப்புத் தொடங்குகிறதென்றால் எங்களுக்கு உடலெல்லாம் நடுங்கத் தொடங்கிவிடும். இன்றைக்கு யார் அவர் கையில் மாட்டுப்படப்போகின்றோம் என்று நினைக்கவே நேரம் போய்விட எப்படி ஒழுங்காய்ப் பாடம் படிக்கமுடியும்?
'யாவும் கற்பனை' என்கின்ற கதை புலம்பெயர் தேசத்தில் நிகழும் கதை. கதைசொல்லி தன் பால்யகாலத்து நண்பனை நண்பனை நீண்டகாலத்திற்குப் பிறகு சந்திக்கின்றார். அந் நண்பரோ மதம்மாறி, அம்மதத்தின் நடைமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுவர். தம்மை மதத்தின் பெயரால் ஒடுக்குவது மட்டுமின்றி, உலகை இன்னுமே அறியாத தம் பிள்ளைகளையும் மதத்தின் பேரால் எதையும் இயல்பாய்ச் செய்யவிடாது அடக்கிவைத்திருக்கின்றார்கள். கதைசொல்லி, பிள்ளைகளையாவது அவர்கள்பாட்டில் விடு என அவருடன் விவாதிக்கின்றார். ஒருமுறை ஒரு நிகழ்விற்குப் போகும்போது நண்பரின் மதத்தைச் சேர்ந்த ஒருவர், தன் பழைய இயக்கக் கதையைச் சொல்கிறார். அதாவது அவர் ஒரு இயக்கத்தில் இருந்தபோது, இன்னொரு இயக்கத்தில் இருந்தவரை பிடித்து வந்திருக்கின்றார். பிறகு பிடித்துவந்தவரையே பங்கர் வெட்டச் சொல்லிவிட்டு, அதற்குள்ளேயே அவரைச் சுட்டுவிட்டு அங்கேயே தாட்டுமிருக்கின்றார். இக்கதையைச் சொல்கிறவர், தான் இது நடந்தபோது இப்படிச் செய்ததற்காய் வருந்தவில்லை. பிறகுதான் மிக வருந்தினேன். ஆனால் இப்போது இந்த மதத்தில் சேர்ந்ததால் எனது எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிட்டன என்கிறார். இதைக் கதைசொல்லியால் தாங்கமுடியவில்லை. அவ்வளவு எளிதாக இச்சம்பவத்தைக் கடந்து போய்விடமுடியுமா என மனங்குமுறுகிறார். ஒரு பக்கத்தில் கதைசொல்லியின் உணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதற்கு இன்னொரு பக்கமும் உள்ளதென்பதையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.
இன்று முன்னொருகாலத்தில் ஏதோவொரு இயக்கத்தில் இருந்தவர்கள் அவரவர் செய்த தவறுகளைத் தாண்டிச் சென்று, தொடர்ந்து வாழ ஏதோ ஒன்று பிடிமானமாக வேண்டி இருக்கின்றது. ஒரு சிலர் தம் தவறுகளுக்காய் குடித்துக் குடித்து அழிந்துமிருக்கின்றார்கள். சிலர் தம் தவறுகளை வெளியே கூறினால் சமூகம் எப்படித் தங்களை எடுத்துக்கொள்ளும் எனத் தெரியாது, தம் தவறுகளைத் தங்களுக்குள்ளேயே பூட்டி மறுகிக்கொண்டிருப்பவர்களாகவும் இருக்கவும் செய்கின்றார்கள். ஆக இந்தக்கதையில் வரும் ஒருவர் இன்னொரு மதத்திற்கு மாறி தன் பாவங்களுக்கு ஏதோவொருவகையில் மன்னிப்பை வேண்டியிருக்கின்றார் என்பதை என்னால் எதிர்மறையாகப் பார்க்கமுடியாதிருக்கின்றது. இவ்வாறான மனிதர்கள் விலத்தி வைக்கவோ கேலி செய்யப்பட வேண்டியவர்களோ அல்ல, அவர்கள் தம் தவறுகளை ஏற்றுக்கொள்கின்றபோது, புரிந்துகொள்ளப்பட வேண்டியவர்கள் என்பதே என் நிலைப்பாடாகும்.
2.
இரவி நல்லதொரு கதைசொல்லி. இரவியை இரஞ்சகுமார், உமா வரதராஜனின் தொடர்ச்சியில் வைத்தே நான் பார்க்கின்றேன். அலுப்பான வாழ்வைக் கூட அற்புதமான மொழியால் அழகாக்கக் கூடியவர்கள் இவர்கள் மூவரும். வாசிக்கும் நமக்குப் பரிட்சமற்ற சூழலாயினும் தம் எழுத்து நடையால் நம்மை அந்தச் சூழலுக்குள் எளிதாக இழுத்துச் செல்லக் கூடியவர்கள். இவர்களுக்குப் பின்னால் எழுத வந்த தலைமுறை இவர்களிடமிருந்து சிலவற்றையாவது கற்றுக் கொண்டிருக்கவேண்டுமென இவர்களின் கதைகளை வாசிக்கும்போது நினைத்துக் கொள்வதுண்டு. முக்கியமாய் இறுதியில் ஒரு எதிர்பாராத அல்லது அதிர்ச்சியான முடிவைக் கொண்ட கதைகளை இவர்கள் அவ்வளவாக எழுதியவர்கள் அல்ல. இரண்டாவது, நகைச்சுவையும் எள்ளலும் கதைக்கேற்ற வகையில் சிறுபகுதியாக இருக்குமே தவிர முழுக்கதையுமே அவ்வாறான ஒரு நடையைக் கொண்டு எழுதியவர்களுமல்ல. முக்கியமாய் இன்றைய புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களில் அநேகர் சம்பவங்களினூடாக கதைகளை நகர்த்திச் செல்கின்றார்கள். அவ்வாறு சம்பவங்களுக்கு முக்கியத்தைக் கொடுக்கும்போது பின்னணிச் சூழலை மெருகூட்டவோ நிலவியலைச் செதுக்கவோ அதிகம் மினக்கெடுவதில்லை. ஆகவேதான் இன்றைய காலத்துப் பெரும்பான்மையான ஈழக்கதைகள் பாதிப்பை ஏற்படுத்தாது, ஒரு சம்பவமாய் மட்டும் வாசிக்கும் அனுபவத்தைத் தருகின்றதாய் அமைந்துவிடுகின்றன.
இரவி தன் முன்னுரையில் இத்தொகுப்பிலுள்ள மூன்று கதைகளைப் பற்றிய பின்னணியைத் தருகின்றார். ஒரு கதை கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவனால் சிறுகதைப் போட்டிக்கு எழுதப்பட்டு தன்னால் செம்மைப்படுத்தப்பட்ட கதை என்றும், இன்னொரு கதை ஒரு பெண் நண்பர் தன் கொப்பியில் எழுதித் தந்ததை தான் கதையாக மாற்றினேன் எனவும் எழுதுகிறார். இவ்வாறு எழுதப்பட்ட குறிப்புக்களின் நேர்மைக்காய் இரவியை நாம் முதலில் மதித்தாகத்தான் வேண்டும். ஆனால் இதை இரவி தனது கதைகளாய்ச் சொந்தம் கொண்டாடுவதையும் அதை அரங்கியல்படி நியாயப்படுத்துவதையும் தான் ஏற்றுக் கொள்ள முடியாதிருப்பதை இங்கே மனவருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. கதைகளின் தரம் எவ்வாறு இருப்பினும் அதை மாற்றி எழுதியவுடன் அக்கதைகள் இரவிக்கு ஒருபோதும் சொந்தமாக முடியாது. அது அவர்களின் (எழுதியவர்களின்) படைப்பே. நாம் அதை எந்த வகை வியாக்கியானத்தை முன் வைத்தும் சொந்தம் கொண்டாடிவிட முடியாது. இரவி நியாயம் கற்பிக்கின்ற அரங்கியலில் கூட நாடகத்திற்கேற்ப கதை மாற்றப்பட்டால் கூட, மூலக்கதை என எழுதியவருக்கே உரிமை கொடுத்து அவரையும் முன்னிலைப்படுத்துகின்றார்கள் என்பதையும் நினைவுபடுத்த வேண்டியிருக்கின்றது.
மேலும் இக்கதைகளின் மூலம் தேடி நான் இக்கதைகள் பிரசுரிக்கப்பட்ட பழைய இதழ்களைத் தேடியபோது அங்கே கிடைத்த விடயங்களும் எனக்கு அவ்வளவு உவப்பானதல்ல. உதாரணமாக 'நாச்சியார் திருமொழி' கதை பவானி என்கின்ற -இக்கதையை கொப்பியில் எழுதியவரின் பெயரிலேயே பதிவாகி- புதுசு (09) சஞ்சிகையில் வெளியாகி இருக்கின்றது. மேலும் அந்தக் கதையிற்கும் இத் தொகுப்பிலிருக்கும் கதையிற்கும் பிற்பகுதியில் மிகப்பெரும் வித்தியாசம் இருக்கிறது. இத்தொகுப்பில் இருக்கும் கதையின் இறுதியில், பாசமாயிருக்கும் தகப்பனே மகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்வது போன்று முடிந்திருக்கும். இப்படியான எந்தக் குறிப்பும் அசல் பிரதியில் இல்லை. ஆக, பிரசுரமான ஒரு கதையை திரும்பவும் -பல பகுதிகளை அப்படியே எடுத்துக் கொண்டு- இன்னொரு கதை எழுதபட்டிருக்கின்றது. இது மிகவும் மோசமானது. இரவி தனக்கு இப்படியான கருவில் எழுதவேண்டுமென நினைத்திருந்தால் புதிய கதையொன்றை எழுதியிருக்கலாம் அதைவிட்டு. ஏற்கனவே பவானி என்ற பெயரில் பிரசுரமான கதையில் கைவைத்தது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அதேபோன்று 1985ம் ஆண்டு பத்தாவது இதழான புதுசுவில் வந்த ' பாலை நிலம்' கதைக்கும் இப்போது பிரசுரமான கதைக்கும் இடையில் மாற்றம் சில இருக்கின்றன. சில பகுதிகள் விலத்தி வைக்கபட்டிருக்கின்றது. முக்கியமாய் இந்தப் பகுதி... "அவர்களின் வீடு பறைமேளப் பின்னணியில் இருக்கும் போலப்பட்டது. அப்படி இருக்குமளவிற்கு எங்கள் போராட்டம் எவ்வளவு 'வலு'ப்படுத்தப்பட்டிருக்கிறது. போராடப் புறப்படுகின்றவர் ஒரு இறந்தவராகக் கருதப்படுமளவிற்கு, போராட்டம் எங்களுடையது என்று கொஞ்சம் கூட நினைக்காதவளவிற்கு, போராட என்று புறப்படுகின்றவரும் யாருக்கும் தெரியாமல் இரவில் இருளில் ஒரு துண்டு எழுதி வைத்துவிட்டு ஓருகின்ற அளவுக்கு, ஒருவருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து வாழ்கின்ற அளவிற்கு எப்படிக் கேவலமாகிப் போனோம்' என இன்னும் நீளும் பகுதியில் புதிய 'பாலை'யில் இல்லை. இதையேன் விரிவாகக் குறிப்பிடுகின்றேன் என்றால் இது எமது ஆயுதப்போராட்டக் காலம் பற்றிய முக்கியமான ஒரு விமர்சனக் குறிப்பு. நமது போராட்டம் மக்களிடமிருந்து அந்நியமாகிக்கொண்டிருக்கின்றது என்பதற்கான சாட்சியம் இது. இரவி இன்று வந்தடைந்திருக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கு சிலவேளைகளில் இப்பகுதி உவப்பாய் இருக்காதென்றாலும் இவ்வாறு கடந்த காலத்து கதையைத் தணிக்கை செய்திருக்க வேண்டியதில்லை. எல்லோரும் காலத்தோடு மாறுதல் அடைதல் இயல்பே. அதற்காய் நாம் எப்படியிருந்தோம் என்கின்ற அடையாளங்களை மறைத்துத்தான் நம் மாற்றங்க்ளைக் காட்டவேண்டும் என்கின்ற அவசியம் இல்லைத்தானே. ஒரு இருபது ஆண்டுக்குள்ளேயே இவ்வாறு தணிக்கைகளும், மறைப்புக்களும் நிகழும் என்றால், பிறகு நாம் கடந்த கால வரலாற்றை எல்லாம் அதிகாரத்திலிருப்பவர்கள் மாற்றிவிட்டார்கள் என்று புலம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லாமற் போய்விடும்.
மேலும் 50 களுக்கு மேற்பட்ட கதைகளை இரவி எழுதியதாக தொகுப்பிற்கான குறிப்பில் கூறப்படுகின்றது. இத்தொகுப்பில் 18 கதைகள் மட்டுமே தொகுக்கபட்டிருக்கின்றன. ஆக இவ்வாறான ஒரு தொகுப்பில் மற்றவர்களின் (ஒரு மாணவன் மற்றும் பெண் தோழரின்) கதைகளைச் சேர்த்துத்தான் தொகுப்பை நிரப்பவேண்டிய அவசியமும் இரவி இருந்திருக்காது எனவே நம்புகிறேன்.அவ்வாறிருந்தும் பிறர் எழுதிய கதைகளைச் சேர்த்திருப்பதால், நல்லதொரு சிறுகதை ஆசிரியரான இரவி சற்று இடறி வீழ்ந்துபோன இடமாகவே இதனை நான் கணிக்கிறேன்.
இத்தகைய விமர்சனங்களுக்கு அப்பாலும் இத்தொகுப்பு என்னைப் பொறுத்தவரை மிக முக்கியமானது. இரவி என்கின்ற சிறுகதை ஆசிரியரிடமிருந்து கற்றுக்கொள்ள இத்தொகுப்பில் பல விடயங்கள் இருக்கின்றன. இத்தொகுப்பை வாசித்த பொழுதுகளில் கதைகள் நிகழும் சூழலுக்குள்ளே நானும் ஒரு கதாபாத்திரம் போல உணர்ந்திருக்கின்றேன்; இருந்திருக்கின்றேன். அவ்வாறு ஒரு வாசகரை உள்ளிழுப்பது அவ்வளவு எளிதல்ல. அமைதி நிறைந்த வளமான வாழ்வு எவ்வாறு பின்னாட்களில் ஈழத்தில் சூறையாடப்பட்டது என்பதற்கான ஒரு குறுக்குவெட்டுப் பரப்பை அறிவதற்காகவேனும் இத்தொகுப்பை நிச்சயமாக அனைவரும் வாசித்துப் பார்க்கவேண்டும்.
(இதன் சுருக்கிய வடிவம், ஒக்ரோபர் மாத 'அம்ருதா'வில் வெளிவந்தது)