Kali (மலையாளம்)
சடுதியாக வந்துவிடும் கோபந்தான் முக்கிய பேசுபொருள் என்றாலும், படம் வெவ்வேறு புள்ளிகளில் ஓரிடமில்லாது அலைந்தபடியே இருக்கிறது. எந்த வகையான கோபம் என்றாலும் அது உறவை/பிறதைப் பாதிக்கும் என்பதை இன்னும் ஆழமாய்க் கொண்டுசெல்லக்கூடியதை , பின்பாதியில் அதிக நேரத்தை தேவையேயில்லாததில் மினக்கெடுத்தி விடுகின்றனர். கோபத்தின் விளைவுகளை அவதானித்தபடி அதை மீறி நேசிக்கும் ஒரு பெண், தன் கோபத்தால் அவளை எந்தப் பொழுதிலும் இழக்கலாம் என்ற பதற்றங்கள் இருக்கும் ஒரு ஆண், அந்தப் புள்ளியில் தொடர்ச்சியாகப் பயணித்திருந்தால் மறக்கமுடியாத ஒரு திரைப்படமாக இது மாறியிருக்கும்.
இடைவெளியின் பின் திணிக்கப்பட்ட ஒரு சம்பவத்தைச் சுற்றியே கதை ஓடிக்கொண்டிருப்பதால் எப்போது அந்தக்காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்கப்போகின்றதென்று என எண்ணுவதற்குள் படம் நிறைவடைந்துவிடுகின்றது. அதுவரை ஆண் கோபமடையும்போது உருவேற்றும் இசை , இப்போது பெண்ணுக்குள் ஒலிக்கத் தொடங்கிவிடுகின்றது. எது அவசியமற்றது, எதனால் ஒரு அழகான உறவு இழந்து போகப்போகின்றது என்ற அடிப்படையே மறந்து அந்தச் சடுதியாக வரும் கோபத்தையே நியாயப்படுத்துவதாகக் காட்டும்போது, இதற்காகவா இவ்வளவு நேரமும் அந்தப் புள்ளியில் ஒன்றிப் படத்தைப் பார்த்தோம் என்ற சலிப்பு வருகிறது. 'பிரேமம்' சாய் பல்லவிக்கு சிரிக்க வருகிறது,
எளிமையாகவும் அதிக அலங்காரமும் இல்லாதும் இருக்கிறார். ஆனால் 'பிரேமத்தில்' வந்த மடோனா செபஸ்டியான் நடிப்பில் 'காதலும் கடந்து போகுமில்' எளிதாய்க் கடந்துபோனதைப் போல, சாய் பல்லவி தாண்ட இன்னும் சில படங்கள் வேண்டியிருக்கும் போலத்தோன்றுகிறது.
'நீல ஆகாசம், பச்சைக்கடல் சுவர்ணபூமி' எடுத்த சமீர் தஹீரே இத்திரைப்படத்தையும் எடுத்திருக்கின்றார். அந்தப் படமும் சுவாரசியமாகத் தொடங்கி, பிறகு அதை எப்படித் தொடர்வது/முடிப்பது என்ற அதே சிக்கலே இந்தப் படத்திலும் நெறியாளர் முகங்கொடுக்க வேண்டியிருக்கின்றது. துல்காரின் கோபத்திற்கும் நேசத்திற்கும் மாறிமாறி அலைபாயும் பாத்திரத்தைப் பார்த்தபோது ஃபகத் ஃபாசில் நடித்த North 24 Kaatham நினைவிற்கு வந்தது. அதில் ஃபகத் ஃபாசிலின் பாத்திரம் அவ்வளவு எளிதில் எவரையும் கவர்ந்திழுக்காத ஒரு பாத்திரம். ஆனால் தன் நடிப்பின் மூலம் படம் முடிகின்றபோது நாயகியிற்கு மட்டுமில்லை நமக்கும் நெருக்கமான ஒரு பாத்திரமாய் ஃபகத் அதை மாற்றியிருப்பார். இங்கே துல்காரின் பாத்திரத்தோடு நம்மால் அவ்வளவு நெருக்கமாய் உணரமுடியாதது இன்னொரு பலவீனம் போலத்தெரிந்தது. எனினும் பிரேமத்தில் வந்ததைப் போலவே இதிலும் பருக்களோடும் சிரிப்போடும் இருக்கும் சாய் பல்லவிக்காய் வரும் இரசிகர்களுக்கு இந்தப்படம் பிடிக்கவும்கூடும்.
Udta Punjab (இந்தி)
பஞ்சாப்பில் ஒருகாலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போதைமருந்துகளின் பாவனையை அப்படியே இயன்றளவு rawவாக தந்திருக்கின்றனர். அரசியல்வாதிகள், பொலிஸிலிருந்து எல்லோரும் அதற்கு உடந்தையாகி ஒரு தலைமுறையை பாழாக்கிக்கொண்டிருந்ததை, தம்மை, தமது குடும்பங்களை போதை தீண்டும்போது திகைக்கும் மனிதர்களை, மாற்றங்களுக்காய்ப் போராட விரும்பும் சிலரையென மிக தத்ரூபமாய்க் காட்சிகளில் கொண்டுவருகின்றனர்.
Highway படத்தைப் பார்த்தபோதே அலியா இன்னும் உயரங்களைத் தாண்டுவார் என நினைத்திருந்தேன். இந்தப் படத்தில் இன்னொரு காலடியை முன்நோக்கி வைத்திருக்கின்றார். இந்த வயதிலேயே அவர் ஏற்றிருக்கும் இந்தப் பாத்திரத்தை அவ்வளவு எளிதாய் எவராலும் நடிக்கமுடியாது. ஒரு பீகார் அகதியாக, வறுமை காரணமாய் பஞ்சாபிற்குள் தோட்டத்தில் வேலை செய்யவந்து தற்செயலாய் போதைப்பொருட்கள் கடத்துபவர்களின் வளையத்திற்குள் சிக்கி, அவர்களால் தனித்தும் கூட்டாகவும் பாலியல் வன்புணர்ச்சியிற்கு ஆளாகி, போதையிலிருந்து மீள்வேன் எனவும், எந்தப்பொழுதிலும் தற்கொலை செய்யமாட்டேனெனவும் உறுதியாக இருக்கும் அந்தப் பாத்திரத்தை நாம் நீண்டகாலத்திற்கு நினைவில் வைத்திருப்போம்.
இந்தப் படத்தை நான்கைந்து பஞ்சாபி நண்பர்களோடுதான் சேர்ந்து பார்த்தோம். பஞ்சாப்பில் இப்படியான நிலவரம் இருந்ததா எனக் கேட்டிருந்தேன். இந்தளவிற்கு முழுப்பகுதியிலும் இல்லாவிட்டாலும் இருந்தது உண்மை என்றனர். திரைப்படத்தின் முடிவு கூட அருமையாக இருக்கும். அடுத்த தலைமுறையின் ஒருவன் கையில் போதையினதும் கொலைகளினதும் கறைகளுடன் முன்னுக்கு நிற்கின்றான். ஆனால் அவனை மீண்டும் சமுகத்திற்குள் இணைத்த சிலர் அவனுக்காய்க் காவும் கொடுக்கப்பட்டிருக்கின்றனர்.
ஒரு தலைமுறையைக் காக்க/ விடுவிக்க நமக்குத் தெரியாத பலர் தம்மைப் பலிகொடுக்கின்றனர். அவர்களைப் பற்றிப் பெரிதாக நாம் அறிவதில்லை. ஆனால் அவர்களின் சாம்பல் மேடுகளிலிருந்தே நமக்கான நம்பிக்கையான வாழ்வொன்று முகிழ்கிறது.
(நன்றி: 'தீபம்)