கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Genius திரைப்படமும், தமிழில் எடிட்டர்களும்..

Friday, January 20, 2017

மிழ்ச்சூழலில் இன்னும் படைப்புக்களைச் செம்மையாக்கும் எடிட்டருக்கான தேவை உணரப்படவேயில்லை. எத்தனையோ சுமாரான நாவல்களை நல்ல நாவல்களாக்குவதற்கும், நல்ல படைப்புக்களை சிறந்த படைப்புக்களாக்குவதற்கும் ஒரு எடிட்டர் அவசியம் தேவைப்படுகின்றார். படைப்பாளிக்கும் எடிட்டருக்குமான உறவு என்பதும் கத்திமுனையில் நடப்பது போலத்தான். படைப்பவருக்கு தான் கஷ்டப்பட்டு எழுதியதை கத்தரிக்கின்றார் என எடிட்டர் மீதும், தேவைக்கு அதிகமின்றி இருப்பதை வெட்ட ஏன் இவரேன் தயங்குகின்றாரென படைப்பாளி பற்றி எடிட்டரும் நினைப்பதால் வரும் மனவருத்தங்கள், இரண்டு பேருக்குமான நல்ல பரஸ்பரப்புரிந்துணர்வால் மட்டுமே கடந்துபோகக்கூடியவை.
Genius என்கின்ற இந்தப்படம் Max Perkins என்கின்ற எடிட்டரைப் பற்றிய படம். அவர் Ernest Hemingway, Scott Fitzgerald, Thomas Wolfe போன்ற புகழ்பெற்ற படைப்பாளிகளின் சில நூற்களை திருத்திச் செம்மையாக்கி வெளியிட்டிருக்கிறார். பல்வேறு பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டு தமது முதற்படைப்பை வெளியிடத் திணறிய Scott Fitzgerald, Thomas Wolfe போன்றவர்களை Max Perkinsயே முதன்முதலில் கண்டுபிடித்து நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றார்.
இந்தப் படத்தில் எர்னஸ்ட், ஸ்கொட் போன்றவர்கள் இருந்தாலும் அவர்கள் உபபாத்திரங்களாய் இருக்க, Thomas Wolfeற்கும் Max Perkinற்கும் இடையிலான படைப்பாளி-எடிட்டர் உறவே இதில் முக்கியப்படுத்தப்படுகின்றது. எர்னஸ்ட்டும், ஸ்கொட்டும் மிகக் கச்சிதமான சொற்களில் சிறிய நாவல்களை எழுதிக்கொண்டிருக்க, தோமஸோ சொற்கள் வழிந்தோட பெரும் நாவல்கள் எழுதுகின்றார். எப்போதும் எழுதிக்கொண்டிருப்பதில் பித்துப்பிடித்தவரோ என்று நினைக்குமளவிற்கு தோமஸ் நிறைய எழுதித் தள்ளுகின்றார். அதன்பொருட்டு தன் காதலியை, இன்னபிற வாழ்வின் உன்னதமான விடயங்களைக் கூட இழக்கின்றார். ஒருவகையில் எழுத்தைத் தவிர வேறொன்றுமே அவருக்குப் பெரும் விடயங்களாகத் தெரிவதேயில்லை. முதல் நாவலில் ஏதோ ஒருவகையில் அவரது குடும்ப உறவினர்களையும், அவர் வாழ்ந்த நகரையும் பிழையாகச் சித்தரித்து அவமானப்படுத்திவிட்டார் எனக் கோபத்தில் இருந்த அவரது நகர மக்கள், இரண்டாவது நாவலில் அவர் தமது நகரத்தைப் பற்றி எதையும் எழுதவில்லை என்றும் கோபித்திருக்கின்றனர் என்பது ஒரு முரண்நகை.
Look Homeward, Angel மற்றும் Of Time and the River ஆகிய தோமஸின் இரண்டு நாவல்களும் மக்ஸால் மிக நுட்பமாகத் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டு பெரும் புகழை தோமஸ் வாழ்ந்த காலத்திலே பெற்றிருக்கின்றன. பின்னர் மக்ஸோடு ஏற்பட்ட முரண்பாடுகளாலும், பெரும் பதிப்பகங்கள் தேடி வந்ததாலும் தோமஸ் வேறு பதிப்பகங்கள் மூலம் தன் படைப்புக்களை வெளியிட்டாலும், அவரது நாவல்கள் முன்னரைப் போல அந்தளவு பிரபல்யம் அடையவில்லை. மேலும் தோமஸ் தனது இளவயதில்(37) காசநோயால் மரணமடைய, அவரின் இறப்பின் பின்னாலே அவர் எழுதிமுடித்த பல படைப்புக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. தோமஸின் எழுத்து, அவருக்குப் பின்னால் வந்த பல படைப்பாளிகளில் ( Jack Kerouac, Ray Bradbury) பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. காசநோய் முற்றி, மரணம் நெருங்கிவிட்டதென்பதை அறியும் தோமஸ், சில காலம் தொடர்புகளின்றி இருக்கும், தனது தொடக்க எடிட்டரான மக்ஸிற்கு எழுதும் இறுதிக் கடிதம் மிகவும் உருக்கமானது.
இத்திரைப்படத்தைப் பார்க்கும்போது சென்ற ஆண்டு வாசித்த நாவல்களான தேவிபாரதியின் 'நட்ராஜ் மகராஜ்'ஜையும், தேவகாந்தனின் 'கந்தில் பாவை' பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தேன். இவ்விரு நாவல்களுக்கும் நல்ல எடிட்டர்கள் கிடைத்திருந்தால் 50-100 பக்கங்களைக் கறாராகக் கத்தரித்து, சில மாற்றங்களை உட்புகுத்தி செம்மையாக்கியிருந்தால், தமிழில் மிகச்சிறந்த நாவல்களாக இவற்றை ஆக்கியிருக்கலாம் போலத் தோன்றியது.

அல்லிப்பூ குறிப்புகள்

Tuesday, January 17, 2017

ன்குலாப் அவர்கள் காலமானபோது, அவரது கவிதைகளில் பிடித்த ஒரு கவிதையான 'பவுர்ணமி இரவில் வந்தவரே' கவிதையைப் பகிர்வதற்காய் 'இன்குலாப் கவிதைகள்' தொகுப்பைத் தேடிக்கொண்டிருந்தேன். வீடு மாறியபின் ஐந்தாறு பெட்டிகளில் திறக்கப்படாது புத்தகங்கள் இருட்டறைக்குள் பதுங்கியிருக்கையில் அவற்றுள் பொறுமையாய் இதைத் தேடி எடுக்கவும் முடியவில்லை. அத்தோடு ஒவ்வொருமுறையும் எதையோ தேடப்போய் எவற்றையோ எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிடுவேன். அசதா மொழிபெயர்த்த 'வீழ்த்தப்பட்டவர்களும்' பிரேம்-ரமேஷின் 'மகாமுனி'யும், ஷோபா சக்தியின் 'எம்.ஜி.ஆர்.கொலைவழக்கு'ம் மீள்வாசிப்பிறகாய் வெளிச்சத்திற்கு வந்ததுதான் மிச்சம்.

இன்குலாப் கனடாவிற்கு 2000களின் தொடக்கத்தில் வந்தபோது, அவரை நேரடியாகச் சந்திக்காவிட்டாலும் அந்த நிகழ்வில், 'ஈழத்தில் உங்களுக்கென ஒரு நாடு கிடைத்தாலும் போராட்டம் முடிந்துவிடாது. அதற்குப்பிறகு சாதிக்கு எதிரான போராட்டம் உங்களுக்காய்க் காத்திருக்கிறது' என அவர் அன்றைக்குச் சொன்னதைக் கேள்விப்பட்டபோது, ஓர் அசலனான போராட்டக்காரர் இப்படித்தான் இருக்கவேண்டுமென மகிழ்ந்திருக்கின்றேன்.

இப்போது நான் தேடிய கவிதையை ரசூல் தன் பக்கத்தில் பகிர்ந்திருப்பதைக் கண்டேன்.

"பவுர்ணமி இரவில் படகில் வந்தவரே
நதியலை மோதும் நாணல் புதரின் மறைவில்
வெண்மலர் விரிப்பில் நான் இருந்தேன்.
தண்ணீரில் உறங்கும் தாமரையின் கனவுகளாய்
அல்லிகள் விழிக்கும் தடாகத்தின் அருகில் தங்கள்
இதழ்களின் தீண்டுதலை எதிர்பார்த்திருந்தேன்.
உயிரின் ராகங்கள் உதடுகளில் உருகின.
புல்லாங்குழல் நான் புல்லரித்துப் போனேன்
வானத்தின் மீன்கள் வான முந்தானை சோர தங்கள்
கீத லயங்களில் கிறங்கிக் கிடந்தன.
இரவின் கனவுகள் ஓய்ந்து போகும் கருக்கலில்
தங்கள் கானம் நின்றது.
பவுர்ணமி இரவின் படகுக்காரரே
நதி நுரை அலைக்கும்
நாணல் புதர்களை விலக்கிச் செல்கையில்
மெதுவாய் செல்லுங்கள்
வழியில் தண்ணீர் வாத்துகள் அடைகாத்த
முட்டைகள் கிடக்கலாம்.
கால்கள் மோதிவிடாதிருக்கட்டும்"

இதில் வருபவன் சாதாரணக் காதலனாகவோ அல்லது ஒரு தலைமறைவுப் போராளியாகவோ இருக்கலாம். ஆனால் காதலி, வழியில் தண்ணீர் வாத்துக்கள் அடைகாத்த முட்டைகள் கிடக்கலாம், கவனமாக அதை விலத்திச் செல்லுங்கள்' எனச் சொல்கிறார். நீயெனக்குத் தந்த காதலின் அற்புதமான அனுபவத்தைப் போல, பிற உயிர்களின் மீதும் அன்பும் கவனமும் வையெனச் சொல்லும் நெகிழ்வான கவிதை. பத்து வருடங்களுக்கு முன் வாசித்தபோதும், இன்றும் நினைவில் வைத்துத் தேடினேனென்றால் அது ஆழ்மனதில் எங்கோ ஓரிடத்தில் தங்கியிருக்கின்றதெனத்தானே அர்த்தம்.
-------------------------

அளவெட்டி என்னும் அழகான ஊர்

அளவெட்டியோடு எனக்கு முதலில் பந்தம் ஏற்பட்டது எப்போது என்றால், இந்திய இராணுவகாலத்தில் பாடசாலை மூடப்பட்ட காலங்களில் அம்பலவாணர்(?) வீதியில் இருந்த வீடொன்றில் தங்கியிருந்த கணித ஆசிரியரின் வீட்டில் போய்ப் படித்ததோடு என்று நினைக்கின்றேன். கணிதமும் ஆங்கிலமும் படித்ததுபோக, மிகுதி நேரங்களில் அவரின் மகளோடான crushலில் பொழுதுபோக அளவெட்டி மறக்கமுடியாத ஊரானது. பத்து வயதிற்குள்ளேயே crush ஆ என வாய் பிளக்கக்கூடாது. 15/16 வயதுகளில் இயக்கத்திற்குப் போவதென்பது அன்றைய காலங்களில் சாதாரண நிகழ்வாக நடந்துகொண்டிருந்தது.

பின்னர் இந்திய இராணுவம் போனபின், இலங்கை இராணுவம் பலாலி, காங்கேசந்துறை, கீரிமலை என எல்லாப் பகுதிகளிலுமிருந்து வலிகாமம் வடக்கின் இடங்களைப் பிடிக்கத் தொடங்கிய காலத்தில், இரவுகளில் வீட்டில் தங்கப் பயந்து இரவில் சாப்பிட்டுவிட்டோ அல்லது சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு நாமெல்லோரும் போய் அளவெட்டியில் தெரிந்த ஒரு வீட்டில் போய் இரவில் தூங்கிவிட்டு விடிகாலையில் வருவோம்.
பின்னர் போர் முற்றி வீட்டு முற்றத்திற்கு வந்தபின், ஊரில் இருக்கமுடியாதென்று சங்கானை அங்கே இங்கேயென்று அலைந்துவிட்டு, அக்கா கற்பித்துக்கொண்டிருந்த அளவெட்டியிலிருந்த பாடசாலைக்கருகில் வந்து தங்கியிருந்தோம்.

அந்த வீட்டின் முன் சிறுவிறாந்தையும் ஒரு அறையும் எங்களுக்குக் கிடைத்திருந்தது. சமைப்பதற்கான குசினியாக முன்பு ஆடு, மாடுகளில் கொட்டிலாய் இருந்த இடத்தை வீட்டின் மறுகரையில் தந்திருந்தார்கள். அம்மா, மரத்தூளினால் நிரம்பிய அடுப்பில் ஊதியூதி சமைத்ததும், மழைக்காலங்களில் உணவை வீட்டிற்குள் எடுத்து வரக் கஷ்டப்பட்டதும் இன்றும் நினைவிலிருக்கிறது.
அப்போது எங்களது பாடசாலையும் மாலை நேரமாக அருணோதயாக் கல்லூரியில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்தமுறை அதைக் கடந்தபோனபோதும் நாங்கள் மதியத்தில் பாடசாலை தொடங்கக் காத்திருக்கும் அந்தப் பெருமரமும் கோயிலும் இப்போதும் அப்படியே நிற்பது தெரிய காலம் ஏதோ உறைந்துபோனது போலத் தோன்றியது.

அளவெட்டி எனக்கு மிகப்பிடித்த ஊர். இயற்கை வளங்களுக்கு மட்டுமில்லை, கலைகளுக்கும் குறைவில்லாத ஊர். மகாஜன சபையிற்கு அருகிலிருந்த சங்கக்கடையில் நிவாரணங்கள் வாங்கியதும், அதற்கருகில் இருந்த ஒரு கட்டடத்தில் தெல்லிப்பளை நூலகம் இடம்பெயர்ந்து இயங்கிய காலத்தில் நிறையப் புத்தகங்களை அங்கேயே வாசித்து முடித்ததும் மறக்கமுடியாத அனுபவங்கள். சுன்னாகத்திற்கு சென்று மிருதங்கம் பழகிய ஆசிரியர் அளவெட்டிக்கு வந்து வகுப்பெடுக்க, அவரின் மிருதங்க வகுப்பைக் கற்றத்தைவிட, கும்பிளாவளைக் கோயிலுக்கு வந்த பிள்ளைகளில் மனம் அலைபாய்ந்ததுதான் அதிகம்.

இதையெல்லாவற்றையும் விட எனது முதற்காதலியும் அளவெட்டியைச் சேர்ந்தவர் என்பதால் அந்த ஊருக்குத் நன்றி கூறாதிருத்தல் அழகில்லை. இது எத்தனையாவது 'முதற்காதல்' எனக் கேட்கக்கூடாது. வழமையான என் ஒருதலைக்காதல்களைப் போலவில்லாது (நன்றி மடலேறும் நிலைக்கு கொண்டுவராமையிற்கு) அவருக்கும் ஏதோ 'பேய்' பிடித்து என்னை ஒருகாலத்தில் நேசித்திருந்தார். பொன்னொச்சி மரங்கள் பூச்சொரிய மறந்தாலும் அவரின் அந்த அழகிய சிரிப்பை அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது.

ஒரு புகைப்படம், இவ்வளவு நினைவுகளைக் கிளர்த்துமா தெரியாது; நினைவூட்டிற்று நண்பனின் இந்த அளவெட்டிப் படம்.
(photo- Dinesh)
------------------

'அச்சம் என்பது மடமையடா' எடுத்து, எங்கள் தலையையும் அச்சமின்றி சுவரில் மோதவைத்த கெளதம் வாசுதேவனிற்காய் 2 குறிப்புகள்.

(1) வேலைத்தளங்களில் conflict of interest என்ற ஒருவிடயம் இருக்கின்றது. அதாவது வேலையிடங்களில் ஒருவருக்கு இருக்கும் தகுதியை வைத்து அதன் மூலம் மற்றவர்களில் advantage எடுக்கக்கூடாது என்று சுருக்கமாக இப்போது வைத்துக் கொள்வோம். அதில் ஒருவிடயம் எவ்வகையான தனிப்பட்ட உறவிற்கும் அங்கே இடமில்லை என்பது. அதுபோலவே உங்களின் படங்களில் இனி தயவு செய்து மேல்வீடு, கீழ்வீடு, பக்கத்து வீடு மட்டுமில்லாது அந்தத் தெரு முழுதும், வந்து தங்கும் எந்தப் பெண்ணோடும் காதல் வந்து எங்களைக் கழுத்தறுக்காது விடவேண்டும் என வேண்டிக்கொள்கின்றோம்.

(2) உங்களின் படங்களில் பொலிஸை glorify செய்வது, என்கவுண்டர் செய்வதை நியாயப்படுத்துவது என அலுக்கும் வரை மட்டுமல்ல எங்களுக்கு எரிச்சல்வரும்வரை சொல்லிக்கொண்டேயிருக்கின்றீர்கள். இதிலும், கெட்டவர்களாயிருந்ததால் எல்லாரையும் போட்டுத்தள்ளுகின்றீர்கள், ஆனால் பொலிஸ் மட்டும் கெட்டவராக இருக்கும்போது அவரைப் போட்டுத்தள்ள, 4 வருடங்கள் காத்திருந்து (எங்களுக்கும் கொட்டாவி வரச்செய்து) பொலிஸாகிப் போட்டுத்தள்ளுகின்றீர்கள். அது என்ன பொலிஸுக்கு மட்டும் விதிவிலக்கு. ரெளடியாக இருந்தாலும் அவர்கள் மனிதர்களில்லையா? அல்லது பொலிஸாக இருந்தாலும் அவர் ரெளடியில்லையா?

இங்கேதான் குசும்புத்தனம் அல்ல, வாழைப்பழத்தில் விஷத்தை ஊற்றுவதைப் போன்ற விசமத்தனம் உங்களிலிருக்கின்றது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகின்றோம்.. தமிழர்கள் என்றாலே மலையாள மேனன், நாயர்மார்களுக்கு கண்ணிலே அவ்வளவு காட்டக்கூடாது என்று உளவுத்துறையில் இருப்பவர்களைப் பார்த்தாலே (அவர்கள் செய்வது/எழுதுவதைப் பார்த்தாலே) தெரியும். அதுவும் மலையாள ரா ஆசாமிகளுக்கு ஈழத்தமிழர்கள் என்றாலே உச்சிமோர்ந்து முத்தமிடுகின்ற அளவுக்கு அந்தளவு அன்பிருக்கின்றது.

சீமான் போன்றவர்களே 'நான் தமிழன்டா' என்று ஒரு வார்த்தையை அவர்களின் படங்களில் வைத்ததாய் நினைவினில்லை. நீங்கள் மட்டும் இந்திபேசும் பொலிஸ்காரனிடம் 'நான் தமிழண்டா' என்று ஒரு டயலாக்கை வைக்கும்போது ஆகா, அடடா எங்களுக்குப் புல்லரிப்புத்தான் வருகின்றது. சரி 'நான் தமிழண்டா' என்று சொல்லி பெருமைகொள்வது உங்களின் விருப்பெனவே வைத்துக்கொள்வோம். அப்படிச் சொல்ல வரும்போது நீங்களும் அந்த வாசுதேவ 'மேனனை' எடுத்துவிட்டு வரலாமே அன்பரே.
---------------------

கனகாம்பரம்பூ குறிப்புகள்

Thursday, January 12, 2017

Rezeta

மெக்ஸிக்கோப் படம் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். மெக்ஸிகோவிற்கு தன் இருபதுகளில் வருகின்ற மொடலிங் செய்கின்ற ஒரு பெண்ணுடைய கதை. அல்பேனியாவில் பிறந்து (அமெரிக்காவிற்கு பதின்மங்களில் அகதியாகப் புலம்பெயர்ந்த) இந்தப் பெண் மெக்ஸிகோவிற்கு வரும்போது சந்திக்கும் புதிய காதல்கள்/காதலர்களைப் பற்றிய படமிது.

இந்தப் பெண்ணின் காதலர்களில் ஒருவர் அறிவுஜீவியாக இருப்பார். அவரின் நண்பர்கள் கூட எந்த நேரமும் அரசியல் பேசிக்கொண்டிருப்பவர்களும் கூட. நெருக்கமாய் இருவரும் இருக்கும் ஒரு சமயத்தில் இவர் அந்தப் பெண்ணோடு அல்பேனியா/கொசோவா நிலவரங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, Rezeta அதிகம் அக்கறை காட்டாதிருப்பார். ஒருகட்டத்தில் அந்தக்காதலர் பொறுமையிழந்து உனக்கு உனது நாட்டில் நடப்பது குறித்து அக்கறையில்லையா என வினாவுவார். அப்போது Rezeta , எனக்கு அதுகுறித்து அக்கறையிருக்கிறது, ஆனால் கடந்தகாலத்தில் எப்போதும் வாழ்வதில் பிடிப்பதுமில்லை. எனக்கு பலருக்குக் கிடைக்காத பயணஞ்செய்வதற்குக் கிடைத்திருக்கின்றது. அதனால் நான் வாழ்வைக் கொண்டாட விரும்புகின்றேன் என்பார். சிலவேளைகளில் ஒருவர் மீது எவ்வளவு அக்கறையிருந்தாலும், அவர்களின் கடந்தகாலத்தை/துயரத்தை அவர்கள் செளகரியமாக உணராத வேளைகளில் நாங்கள் பேசுவதோ அல்லது கேள்வி கேட்பதோ அவ்வளவு நல்லதில்லை என்பதை உணர்த்துகின்ற ஓரிடமிது.

காதல், அதுவும் மொழிகளை/கலாசாரங்களை கடக்கின்றபோது இன்னும் அழகாகின்றது. பிரிதலின் வலிகளென்பதும் அது நாடுகளை/எல்லைகளைக் கடந்தபின்னும் மனதிலிருந்து எளிதில் இல்லாமற் போவதென்பதும் இல்லை.

இத்திரைப்படத்தைப் பார்த்தபின், இது குறித்துத் தேடிய விடயங்கள் இன்னும் சுவாரசியமானவையாக இருந்தன. இதில் நடித்தவர் மொடலிங் செய்பவர் என்பதோடு, அல்பேனியாவில் பிறந்த அவரின் உண்மைக்கதையுமாகும். மெக்ஸிக்கோவிற்கு மொடலிங்கிற்கு வந்து மெக்ஸிக்கோவின் மீது ஈர்ப்பு வந்து இப்போது அங்கே வசிக்கத் தொடங்கியுமிருக்கின்றார். இத்திரைப்படத்தில் நடித்த இந்த மொடல் மட்டுமில்லாது இதில் நடித்த அனைவரும் புதியவர்கள் என்பதோடு, இயக்குநருக்கும் இதுவே முதற்படம். மெக்ஸிக்கோ சிட்டியில் Rezetaவை சந்தித்தபோது அவர் தனது கதையைச் சொல்ல, அந்தப் பாதிப்பில் இதைப் பின்பு இந்த இயக்குநர் படமாக்கியிருக்கின்றார்.


Divines

பிரான்சிற்கு கலைகளின் தேசம் என்ற ஒரு முகமிருப்பதுபோல, இன்னமும் விளிம்புநிலை மனிதர்களை எட்டிவைத்துப் பார்க்கும் பக்கமொன்றும் அதற்கு உள்ளது. 'Divines' என்கின்ற திரைப்படம் இரண்டு முஸ்லிம் பதின்மப்பெண்களின் வாழ்வைப் பின் தொடர்ந்தபடி செல்கின்றது. குடிக்கு அடிமையாகிய single motherல் வளர்க்கப்படும் பெண், பாடசாலையிலும் ஒழுங்காக தன்னை தகவமைத்துக்கொள்ளாது தவிர்க்கின்றார். அதன் நீட்சியில் போதைமருந்து விற்கும் கும்பலோடு சேர்ந்து, அவரின் வாழ்வு எங்கெங்கோ எல்லாம் அலைகின்றது. பாரிஸின் புறநகர்ப்பகுதியில், புறாக்கூண்டுகளைப் போன்ற வீடுகளில் மனிதர்கள் இப்படியா வாழ்கின்றார்கள் என்பதை மேற்குலகக் கனவிலிருக்கும் பலரால் அவ்வளவு எளிதாக நம்பமுடியாது.

ஒரு கனவு வாழ்க்கையிற்காய் எல்லாவற்றையும் துச்சமாக உதறித்தள்ளும் இந்தப் பதின்மப்பெண்ணினதும், அவரது தோழியினதும் வாழ்க்கை என்னவாகியது என்பதை ஒருவித விறுவிறுப்புடன் படமாக்கும்போது நமக்கு பிரான்ஸின் இன்னொருமுகம் தெரிகின்றது. இதில் பதின்மப் பெண்ணாக நடிக்கும் Oulaya வின் நடிப்பை அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது. பெண் நெறியாளரால் இயக்கப்பட்ட இப்படம் கான்ஸ் திரைப்படவிழா, ரொறண்டோ திரைப்பட விழா போன்றவற்றில் தேர்தெடுக்கப்பட்டு இவ்வாண்டில் திரையிடப்பட்டிருக்கின்றது.


Dangal

நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அதுவும் ஒரு விளையாட்டை முக்கியபொருளாகக் கொண்டு இறுக்கமான திரைப்படத்தை எடுத்தலென்பது எளிதில்லை. அதுவும் இந்தியா/இலங்கை போன்ற கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு என்ற பிரமை இருக்கின்ற நாடுகளில் வேறு விளையாட்டைப்பற்றி ஒரு திரைப்படம் எடுப்பதென்பதே பெரும் சிரமமானது. மேலும் பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு விளையாட்டுச் சம்பந்தமான படங்கள் வருவது எளிதுமன்று. அவ்வாறு ஏற்கனவே வந்த இறுதிச்சுற்று ஒரு முக்கியமான படமென்றால் அமீர்கான் என்கின்ற பெரும் நாயகன் இருந்தாலும் அவர் அடக்கிவாசித்து பெண் பாத்திரங்களுக்கு முக்கியம் கொடுத்து வந்திருக்கின்றது Dangal.

அமீர்கான் National Champion ஆன, முன்னாள் மல்யுத்தவீரர் என்றாலும் அவருக்கான பகுதிகளை சில காட்சிகளில் கூறிவிட்டு முக்கியமான பாத்திரங்களான இரு பெண்களையும் பின் தொடர்ந்தபடி இப்படமிருக்கின்றது. அமீர்கானின் அந்தத் தந்தைப் பாத்திரம், பயிற்றினராக இருப்பதா அல்லது ஒரு தந்தையாக இருப்பதா என்கின்ற குழப்பம், பெண்பிள்ளைகளை ஒருசிறு கிராமத்திலிருந்து மல்யுத்த வீரர்களாய் ஆக்குவதாய் அவரும் அந்தப் பெண்பிள்ளைகளும் பெறுகின்ற அவமானம், ஒருகட்டத்தில் வெளியே உலகம் தெரியும்போது பிள்ளைகள் தந்தையிடமிருந்து விலகிப்போகும் கட்டமென எல்லாவற்றையும் மிகச் கச்சிதமாய் அமைத்திருக்கின்றனர். அப்பாவிற்கும் பெண்பிள்ளைகளுக்குமான நெருக்கம் அவ்வளவு வெளிப்படையாகக் காட்டப்படாவிட்டாலும், அதை மிகநுட்பமாக சில காட்சிகளால் கொணரும்போது நம்மையறியாமலே ஏதோ ஒருவகை உணர்ச்சியிற்குள் விழுந்துவிடுகின்றோம்.

இப்படத்தின் சில காட்சிகள் மட்டுமில்லாது இறுதிக்காட்சி கூட ஒருவகையில் இறுதிச்சுற்றை நினைவுபடுத்தினாலும், மல்யுத்தப்போட்டிகளை படமாக்கியவிதத்தில் நாமும் அதை நேரே பார்க்கின்ற பார்வையாளரைப் போல ஆகிவிடுகின்றோம். அண்மைய ஒலிப்பிக்கில் இந்தியாவிற்கான பதக்கங்களைப் பெண்களே பெற்றுக்கொடுத்து நாட்டின் மரியாதையைக் கொஞ்சமாவது காப்பாற்றியிருந்தார்கள். நம் நாடுகளில் பெண்களுக்கு அவர்கள் விரும்பியதைச் செய்வதற்கான ஒரு சுதந்திரமான வெளியை நாம் கொடுத்தாலே போதும், அவர்கள் தாம் விரும்பிய துறைகளில் நிறையச் சாதித்து நம்மையும் பெருமை கொள்ளச் செய்வார்கள் என்பதை உணர்த்துகின்ற/உதாரணமாக இருக்கக்கூடிய ஒரு படம் Dangal .


Adi Kapyare Kootamani

ஆண்களின் ஹொஸ்டலுக்குள் ஒரு பெண் தற்செயலாக வந்துவிடுகின்றார். அவரை அங்கிருந்து எப்படி மற்றவர்க்குத் தெரியாது வெளியே கொண்டு செல்ல சில நண்பர்கள் முயற்சிக்கின்றார்கள் என்பதே இதன் கதை. . இடையில் அப்பெண்ணின் தமிழ்க்குடும்பம், அவருக்கிருக்கும் காதலனோடு சேர்ந்துதான் இந்த பெண் ஓடிவிட்டாரென அடியாட்களுடன் தேடுகின்றனர். இந்த இரண்டு சிறிய விடயங்களை வைத்து சிரிக்க சிரிக்கச் சுவாரசியமாகப் படத்தை எடுத்திருக்கின்றார்கள். யட்ஷி என்ற விடயத்தை முதலில் நகைச்சுவையாக கையாண்டு அது இருக்கா இல்லையா என இறுதியில் ஒரு மர்மத்தை எழுப்பியபடி முடிக்கின்றார்கள்.

இதில் நடிக்கும் Namitha Pramod ஐ வினீத்தின் 'ஒர்மாயுண்டே ஈ முகம்' என்ற படத்தில் நடித்தபோது, நன்றாக நடிக்கின்றார் ஆனால் எதற்கு இப்படி மிகையாக மேக்கப் போட்டிருக்கின்றார் என நினைத்திருக்கின்றேன். அந்தப்படம் 50 datesன் மலையாள தழுவலெனச் சொல்லலாம். அந்தப்பெண்ணுக்கு ஒருநாள் மட்டும் நினைவில் நின்று அடுத்தநாள் எல்லாமே மறந்துபோகும் ஞாபகமறதியை, 50 dates/கஜினி படங்களினது பெயர்களைச் சொல்லி மூலத்தை மறைக்காமல் இருப்பதைப் பாராட்டத்தான் வேண்டும்..
குணச்சித்திர /நகைச்சுவை வேடங்களில் நடிக்கும் அயூ வாகீசின் நடிப்பிற்கு நானொரு இரசிகனாகிக்கொண்டேயிருக்கின்றேன்.
------------------------------

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு

Tuesday, January 10, 2017

1.
இந்தத் தொகுப்பின் முன்னட்டையில் கூறப்பட்டதுபோல சுதா குப்தா துப்பறிகின்ற கதைகளே இந்நூலினுள் இருக்கின்றன. மூன்று வெவ்வேறு வழக்குகளை தமிழ் பேசுகின்ற சுதா எடுத்துக்கொள்கின்றார். அதன் முடிச்சுக்களை எவ்வாறு அவிழ்க்கின்றார் என்பது பற்றியும் இந்த விடயங்களோடு நிகழும் வேறு விடயங்கள் பற்றியும் சுவாரசியமாக அம்பை எழுதிப் போகின்றார்.
முதல் கதையான 'மைமல் பொழுதில்' சிக்கலைத் தீர்த்து முடிக்கும்போது, பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுவிடுகின்றன. சிலவேளைகளில் நேரத்தில் கிடைக்காத நீதி பின்னர் காலம் பிந்தி கிடைக்கும்போது அது பலனற்றுப்போய்விடுகின்றதோ, அப்படி கடந்தகாலத்தில் நடந்த சம்பவம் ஒன்று மூடிமறைக்கப்படுவதால், அது மீளவும் நிகந்து, நிகழ்காலத்தில் பலரைப் பலிகொடுக்கவேண்டிய அவலநிலை ஏற்படுகின்றது. சுதா தன் துப்பறியும் செய்யும் வேலை செய்பவர் என்றாலும், பொலிசும் தன் உதவியை அவ்வப்போது நாடுகின்றது. சுதாவின் பாத்திரத்தினூடு அம்பை காவல்துறையில் நடக்கும் நிகழ்வுகளையும் மெல்லிய நகைச்சுவையோடு விமர்சனம் செய்கின்றார்.
ஒரு வியாபாரியின் பிள்ளைகள் கடத்தப்பட்டு போலிஸ் தேடத்தொடங்குகின்றது....
'பரவாயில்லை கோவிந்த். வேகமாகத்தான் செயல்பட்டிருக்கீங்க." (சுதா)
"நாங்கள் அவ்வளவு மோசமில்லை தீதி." (இன்ஸ்பெக்டர் கோவிந்த்)
"யாராவது பெண் பலாத்காரம் செய்யப்பட்டா மட்டும் அவள் நடத்தை சரியில்லைன்னு சொல்லி பலாத்காரம் செய்தவனை விருந்து வைச்சு அனுப்பிடுவீங்க" (சுதா)
(ப 25-26)
இன்னோரிடத்தில்,பிள்ளைகள் காணாமற்போனதன் பிற்பாடு, அவர்களின் தாயார் தனியே இருந்தால் ஏதாவது அசம்பாவிதமாய்ச் செய்துவிடுவாரோ என்ற அச்சத்தில் சுதா, கோவிந்திடம் அவருக்குத் துணையாக பொலிஸொருவரை அனுப்பக் கேட்கின்றார். கோவிந்த அப்படியொருவரை ஏற்கனவே அனுப்பியாயிற்று எனச் சொல்லும்போது,
"இந்த பொலீசுக்கு இல்லாத நல்ல குணமெல்லாம் உங்க மனைவிகிட்ட இருந்துதான் வந்திருக்கு கோவிந்த்." (ப 39)
என பொலீஸ் மீதான விமர்சனங்கள் ஆங்காங்கே தெளித்தபடி அம்பை எழுதிச் செல்கின்றார்.

2.
'காகிதக் கப்பல் செய்பவன்' கதையில், ஒரு திருமணம் செய்யப்போகும் ஆணின் நடத்தை எப்படியென துப்பறியப்போகும்போது பல சுவாரசியமான விடயங்கள் நடக்கின்றன. அந்த ஆண் ஒரு தமிழனாகவும், எழுதுவதில் பித்துப்பிடித்தலைகின்றவனாகவும் இருக்கின்றான். அதேசமயம் சுதாவிடம் வரும் இன்னொரு வழக்கோடு இந்த ஆணின் தாயார் சம்பந்தப்பட்டிருப்பதால் கதை இன்னும் சுவாரசியமாகின்றது. எந்தப் பெண்ணுக்கு மணம் செய்ய சிங்காரவேலு என்ற ஆணைத் துப்பறிய சுதாவும் அவரின் உதவியாளருமான ஸ்டெல்லாவும் போகின்றரோ, அதே சிங்காரவேலு பிறகு ஸ்டெல்லாவிற்குப் பிடித்த ஒரு துணையாகிப் போவது கதையின் இன்னொரு முக்கிய திருப்பமாகின்றது.
அதுபோலவே சிங்காரவேலுவின் அம்மாவிற்கு நிகழ்கின்ற இன்னொரு உறவைக் கூட, மிக எளிமையாகக் காட்டிவிட்டு அம்பை கடந்துசெல்லும் விடயத்தை, ஆண் எழுத்தாளர்களால் தேவைக்கதிகமாக எழுதாது இப்படி விபரிக்கமுடியுமா என்பதை யோசித்தும் பார்க்கவேண்டும். எவரும் எவரையும் குற்றஞ்சாட்டாது, அந்த நேரத்தில் அவ்வாறு நிகழ்ந்ததென, மிக இயல்பாய் எடுத்துக்கொண்டு போயிருந்தால் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தேவைக்கதிகமான வன்மத்தையும், கோபத்தையும் காவிக்கொண்டிருக்கத் தேவையில்லை என்பதை அழகாக இந்தக்கதையில் அம்பை கொண்டுவந்திருப்பார்.

மூன்றாவது கதையான 'அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு' வீட்டை விட்டு வெளியேறிய 60களில் இருக்கும் பெண்ணின் ஒரு சிக்கலான விடயத்தைப் பற்றிப் பேசுகின்றது. தன் சகோதரியோடு கிராமத்தில் அழகான வாழ்க்கை வாழ்ந்த இந்தப்பெண் திருமணம் செய்து நகரத்திற்கு வருகின்றார். அவருக்குப் பிறந்த பிள்ளைகளும் வளர்ந்து திருமணம் செய்துவிடுகின்றனர். சட்டென்று ஒருநாள் இவை எல்லாவற்றையும் விடுத்து தனது சொந்தக் கிராமத்திற்கு செல்ல அந்தப் பெண்மணிக்கு ஆசை பெருகுகின்றது. ஆனால் கணவரும் பிள்ளைகளும் இது நடக்காத கனவு என்று சொல்வதோடு, ஒருகட்டத்தில் அவருக்கு மனோநிலை பிறழ்ந்துவிட்டதெனவும் கூறத்தொடங்குகின்றனர். சுதாவின் உதவியுடன் இந்தப்பெண்மணி தனக்கு விரும்பியதை சாதிக்கின்றாரா இல்லையா என்பதே இந்தக் கதை.
இறுதியில் எவரையும் குற்றஞ்சாட்டாது
அந்தப் பெண்மணி எழுதுகின்ற கடிதம் அருமையானது. அதில் ஓரிடத்தில் ' இந்த அன்னம் பறக்க ஆரம்பித்தாகிவிட்டது. உடன் இருப்பது எல்லையில்லாத விசும்பு மட்டுமே' என்கின்ற வார்த்தைகள் நம் எல்லோருக்கும் பொருந்துகின்றதும் அல்லவா? நாம் நமக்குப் பிடித்தவர்களை/பிடித்த இடங்களை எங்கள் வாழ்க்கையின் இன்னொரு மாற்றத்திற்காய் இழக்கவேண்டியிருக்கின்றது. நமக்கு விரும்பியதைச் செய்வதற்காய் சிலவேளைகளில் நமக்கு நெருக்கமானவர்களை எல்லாம் விட்டு விலகவும் தேவையாயிருக்கிறது. ஆனால் அதன் அர்த்தம் அவர்களை வெறுத்தோ/கோபித்தோ வெளியேறுகின்றோம் என்பதல்ல.
இந்தப் பெண்மணி கூறுவதுபோல அன்னம் பறக்க ஆரம்பிக்கும்போது அதற்கான உலகமும் விரிந்துபோய்விடுகின்றது. விசும்பைத் துணையாகக் கொண்டு பறக்கவேண்டியதுதான். பறத்தலில் பல தடுமாற்றங்கள்/தடங்கல்கள் வரலாம். ஆனால் பறத்தல் என்பது என்பது நம் எல்லோரினதும் மிகப்பெரும் விருப்பல்லவா?

3.
இந்தத் தொகுதியில் அம்பை, மராத்தியைச் சில உரையாடல்களில் பாவிக்கும்போதோ அல்லது இந்திப்பாடல்களை(?) பயன்படுத்தும்போதோ, அர்த்தம் விளங்காது அவ்வப்போது சற்றுத்திகைத்து நிற்கவேண்டியிருக்கின்றது. அதைப் பாவிப்பது தவறென்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. அவையின்னும் விளங்கியிருந்தால் நன்றாக இருக்குமோ என்று நினைக்கத்தோன்றியது. அம்பையின் இந்தத் தொகுதியில் என்றில்லை, அம்பையின் மற்றச் சிறுகதைத் தொகுப்புக்களிலும் இப்படிப் பல இடங்களில் இருந்திருக்கின்றன. ஒருவகையில் இவை அம்பையின் தனித்துவம் எனக்கூடச் சொல்லலாம் போலும்.
அம்பையின் இந்தத் தொகுப்பு என்றில்லை ஏனைய தொகுப்புக்களிலும் பிடித்த மிக முக்கிய ஒருவிடயம் என்னவென்றால், தமிழ் பேசாத நிலப்பரப்புக்களில் இருந்துகொண்டு அம்பையின் கதைசொல்லிகள் கதையைத் தமிழ்ச்சாயலில் சொல்வதுதான். என்னைப் போன்ற புலம்பெயர்ந்தவர்களுடைய நிலையும் அம்பையின் கதைசொல்லிகளைப் போன்ற ஒருவகை நிலைதான். தமிழால் சிந்தித்தபடி, தமிழ் சூழ்ந்த நிலப்பரப்புக்களை கற்பனை செய்தபடி, இவற்றுக்குச் சம்பந்தமில்லாத ஒரு சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். அந்தவகையில் பிறர் சொல்லும் கதைகளைப் போலவல்லாது தமிழ்மனதோடு இயைந்தும் அவ்வப்போது விலகியும் செல்லும் அம்பையின் கதைகள் இன்னும் எனக்கு நெருக்கமாகின்றன.
சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்களை தொடர்ந்து அம்பை எழுதவேண்டும். ஆர்ப்பாட்டமாய் இல்லாது, ' கெட்டிலைப் போட்டு லவங்கப்பட்டை தேநீர்ப்பைகளை கோப்யையில் நிரப்பி அதன் நறுமணம் மேலெழும்பி வருவதை' நம்மையும் உணரவைத்து, துப்பறியும் கதைகளைச் சொல்லும்போது யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்?