கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பிரமிள்

Sunday, August 19, 2018


1.
ழத்திலக்கியம் என வரும்போது தொடர்ந்து வாசிக்கவும் உரையாடவும் வேண்டியவர்களென நான் மு.தளையசிங்கத்தையும் (மு.த), எஸ்.பொன்னுத்துரையையும் (எஸ்.பொ)  முன்மொழிந்து வருகின்றவன் . இவர்கள் இருவரையும் விட இன்னொருவரையும் இதில் சேர்க்கலாமோ, விடலாமோ என்கின்ற தயக்கங்கள் எப்போதும் எனக்குண்டு. அது தருமு சிவராம் என்கின்ற பிரமிள். 57 வயதுகள் வரை வாழ்ந்த பிரமிளின் 30 வருடங்கள் இலங்கையிலே கழிந்திருக்கின்றன என வரும்போது அவரை நம்மவராகவே கொள்ளமுடியும். ஒருவகையில் பார்த்தால் அவருடைய மேதமை அவருடைய 20களிலேயே - நிகழ்ந்துமிருக்கின்றது. பிறகான காலங்களில் அவர் அதை விரித்து எடுத்துச் சென்றதையே நாம் எளிதாகப் பார்க்கமுடியும்.

பிரமிள், அவரின் 20களின் தொடக்கத்தில் 'எழுத்தில்' எழுதியவை எல்லாம் 'அசுரத்தனமான'வை. இலங்கையில் இருந்துகொண்டே அந்தக்காலத்தில், எவ்வாறு இவ்வாறான விரிவான வாசிப்பும், அதை அற்புதமாக தொகுத்து எழுத்தில் வைக்கும் திறமையும் வந்ததென நான் வியந்து பார்க்கும் ஒருவர் மு.த என்றால் இன்னொருவர் பிரமிள். ஒருவகையில் பார்த்தால் பிரமிளே (சி.சு.செல்லப்பாவைத் தவிர்த்து) அன்றைய காலங்களில் தமிழகத்தில் மெளினியைக் கண்டுபிடித்தவர் எனச் சொல்லலாம். 

மெளனியினுடனான அவரது உறவு பல்வேறு நிலைகளை உடையது எனினும், பிரமிள் தன் இறுதிக்காலங்கள் வரை மெளனியை விட்டுக்கொடுக்காததை, அவர் 'எழுத்தி'ல் எழுதிய கட்டுரைகளிலிருந்து, 'மெளனி கதைகளுக்கு' எழுதிய முன்னுரையிலிருந்து, மெளனியின் மறைவின்போது எழுதிய பதிவிலிருந்து,'மெளனியும், மவ்னியும்' என 1992ல் சற்று நகைச்சுவையாக எழுதிய கட்டுரைவரை நாம் கண்டுகொள்ளலாம். பிரமிள், மெளனியை ஒரேயொருவருக்கு முன் மட்டும் கொஞ்சம் கீழிறக்கின்றார் என்றால் அது புதுமைப்பித்தனுக்கு முன்னால் மட்டுமேயாகும்.

பிரமிளுக்கு மெளனியின் கதைகளின் அறிமுகம் 'எழுத்தி'ன் மூலம் கிடைத்து, அவரை 60களில் இந்தியாவிற்கு அவ்வப்போது போகும்போது சந்திக்கின்றார். பிரமிளினதும், சி.செ.செல்லப்பாவினதும் எழுத்துக் கட்டுரைகளில் மூலம் மெளனி மீளக்கண்டுபிடிக்கப்படும்போது, மெளனியின் கதைகள் அவ்வளவு கிடைக்காததால் (மெளனியின் முதல்தொகுப்பு: 'அழியாச்சுடர்'), மெளனி என்ற ஒருவரே இல்லை என்கின்ற பேச்சு காற்றுவாக்கில் வெளிக்கிளம்பும்போதே, பிரமிள் அவரது கதைகளை மீண்டும் பிரசுரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைக்கின்றார். பிரமிளின் உற்சாகப்படுத்தலோடும் மற்றும் அவரின் பிரபல்யம் வாய்ந்த முன்னுரையோடும் அந்தத் தொகுப்பு வெளிவருகின்றது. மெளனி பரவலாக அறிமுகஞ்செய்யப்படவேண்டும் என்பதற்காய் தனது வழமையான எழுத்துப்பாணியில் இருந்து விலகியே தான் அந்த அறிமுகத்தை எழுதியதாகவும் பிரமிள் ஓரிடத்தில் தெரிவிக்கின்றார். அதேபோன்று மெளனி தனித்து இருக்கின்றார்/இயங்குகின்றார் அவரைக் கவனிக்கவேண்டுமென ந.முத்துச்சாமியையும், வெங்கட்சாமிநாதனையும் மெளனியைச் சந்திக்க வைக்கின்றவராகவும் பிரமிளே இருக்கின்றார்.

ஒருவகையான புகைமூட்டமாக மெளனி பற்றிய சித்திரம் நம் தமிழ்ச்சூழலில் இருக்கையில், பிரமிள் எழுதிய மெளனி பற்றிய கட்டுரைகளினூடாக நாம் மெளனி பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தைக் கண்டறிந்துகொள்ளலாம். இன்னொருவகையில், மெளனி பற்றி இன்று 'கேள்விப்பட்டதாய்க்  கூறப்படுகின்ற' கதைகள் எல்லாம் பிரமிளின் எழுத்துக்களினூடாக - அதற்குரிய நன்றி கொடுக்காமலே- பகிரப்படுவதையும் நாம் பிரமிளை வாசிப்பதினூடாக அறிந்துகொள்ளலாம்.

பிரமிள், சி.சு.செல்லப்பா, வெங்கட்சாமிநாதன், சுந்தர ராமசாமி ஏன் மெளனியுடன் கூட ஒன்றாக அவர்களின் கருத்தியல் தளங்களில் இயங்கி, பிறகு அவர்கள் அனைவர் பற்றியும் எடுத்தெறிந்து எழுதியதும் வரலாறு.  நமது கருத்தியல் தளங்களை, நாம் பின் தொடர்ந்த ஆளுமைகளை விமர்சித்து விலகிப்போவது, எழுத்தின் போக்கில் இயல்பாக நடப்பதெனினும், ஒருவரின் மீதான கோபத்தால் காழ்ப்புணர்வாகி சில இடங்களில் தறிகெட்டுப்போன சறுக்கலையும் பிரமிள் பிற்காலங்களில் சந்தித்தவர் என்பதையும் நாம் மறுக்கவேண்டியதில்லை. ஆனால் அவ்வாறு எழுதிய எழுத்துக்களில்கூட, பிரமிளின் ஆளுமை அவரில் சுழன்றாடிய காழ்ப்புணர்வைத்தாண்டி விகசித்து எழுந்தது என்பதுதான் -என்னளவில் - முக்கியமானது.

2.
ங்களுக்குப் பிடித்த ஆளுமைகளை, ஒருவர் சுழற்றி சுழற்றி அடிக்கும்போது கூட, அவரின் எழுத்தில் ஒரு வசீகரம் இருக்கின்றது என்று எப்போதாவது நினைத்திருக்கின்றீர்களா? எனக்கு அப்படி பிரமிளின் எழுத்தில் தோன்றியிருக்கின்றது. என்னை வசீகரிக்கும் ஆளுமைகளான எஸ்.பொவையும், மு.தவையும் இந்தளவிற்கு ஒருவர் தாக்குவாரா என்றளவிற்குப் பிரமிள் போட்டு மிதிக்கும்போதும் கூட,  ஒரு புன்னகையுடன் அவற்றை என்னால் வாசிக்கமுடிகிறது. ஏனெனில் அங்கே அவர்,  நான் கவனிக்கத் தவறிய இன்னொரு பக்கத்தை எவ்வித சமரசமுமின்றி காட்டுகின்றார் என்பதே எனக்கு  முக்கியமாகின்றது. எஸ்.பொவின் 'தீ' வந்தபோது, அது ஒரு குப்பை என மு.தவின் கட்டுரைக்கு பிரமிள் எதிர்வினை எழுதுகின்றார். பின்னர் மு.தவைத் திருஉருவாக்கும் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் மற்றும் பூரணி குழுவினர் உட்பட எல்லோரையும் பிரமிள், மு.தவை நிர்மூலமாக்குவதன் மூலம் இடையூறு செய்கின்றார். இன்று ஜெயமோகன் தான், மு.தவை முதன்நிலைச் சிந்தனையாளராக முதன்முதலில் வைத்ததான ஒரு மாயை சிலரால் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் பிரமிளை வாசிக்கும் ஒருவர் அது சுந்தர ராமசாமியால் முன்வைக்கப்பட்டு, வெ.சாவினால் நிலை நிறுத்தப்பட்டது என்பதை எளிதாக அறியமுடியும். ஆகவேதான் கூறுகின்றேன், பிரமிள் சிலவேளைகளில் 'விதண்டாவாதம்' செய்கின்றார் என்று தோன்றினாலும், அதனூடாக பல புதிய விடயங்களை நாம் அறிந்துகொள்ளமுடியும்.

மு.தவை முக்கியமானவராகக் கொள்ளும் என்னைக்கூட பிரமிள் அவரின் 'மனோவியாதி மண்டலம்' என்ற கட்டுரையை எளிதாகத் தாண்டவிடாமல் செய்கின்றார் என்பதில்தான் பிரமிள் தொகுத்து வைக்கும் கருத்துக்களின் வீரியம்  இருக்கின்றது. இதில்தான் மு.தவை ஒரு ஆஸ்மாகாரராக, சிறைத்தண்டனை பெற்றவராகப் பேசும் தரப்பிற்கு எதிராக, 'கலைத்துவம் அவ்வளவு இல்லாதபோதும், பாதாள இரகசிய வாழ்க்கையும், கடும் சிறைத்தண்டை பெற்று வாழ்ந்ததற்குமாய்' கே.டானியலை நாம் அதிகம் சிலாகிக்கவேண்டும் என்கின்றார். தன் பிறப்பால் மு.தவிற்கு வந்த 'சிறப்புக்கூட' இல்லாது, சாதியால் ஒடுக்கப்பட்ட கே.டானியனுக்கே அதற்கான 'உரிமை' இருக்கின்றதென்கிறார்.  'வர்ணாச்சிர தர்மம் என்பதே ஒருவகையில் செக்ஸ் கட்டுமானம், இந்த செக்ஸ் கட்டுமானம் சாதி, வர்க்கம் போன்றவற்றைத் தாண்டுவதை, முழுமையாக இல்லாதபோதும் கே.டானியல் தன் எழுத்துக்களினூடாக செய்து பார்க்க விழைந்தவர்' என்று பிரமிள் முன்வைக்கும் வாசிப்பு சிலாகிக்கக்கூடியது.

அதேவேளை, மு.த, எஸ்.பொவின் 'தீ'யிற்கு ஆதரவாய் எழுதியவுடன் இரண்டுபேரும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என பிரமிள் நம்புகின்றார். உண்மையில் 'தீ' பற்றியும், எஸ்.பொவின் பிற கதைகள் குறித்தும் மு.தவிற்கும், எஸ்.பொவிற்கும் இடையில் முரண்கள் இருந்ததை நாம் எஸ்.பொவ மற்றும் மு.தவின் தொகுக்கப்பட்ட எழுத்துக்களை வாசிக்கும்போது அறியலாம். மேலும் 1985யில் 'மனோவியாதி மண்டலம்' எழுதும் பிரமிள் - முக்கியமாய் மு.த மறைந்து நெடுங்காலம் ஆனபின் - மு.த தன் தரப்பை முன்வைக்கும் இடமில்லாததை அறிந்தபின், இன்னும் நிதானமாக மு.தபற்றி எழுதியிருக்கலாம். பிரமிளின் சிக்கல் என்னவென்றால் மு.தவை விமர்சிப்பதைவிட, அவரை முன்வைக்கும் சு.ரா, வெ.சா மீதிருக்கும் மூர்க்கமே ஒருவகையில் முன்னிற்கின்றது என்பதையும் ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.

எனக்குப் பிடித்த எஸ்.பொவையும், மு.தவையும் சுட்டெரிக்கும் பிரமிளின் கட்டுரையையே சுவாரசியமாக வாசிக்கக்கூடிய நான், சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே.சிலகுறிப்புகளை' கிழிகிழியென்று கிழிக்கும் 'புதிய புட்டியில் பழைய புளுகு: ஜே.ஜே. சில குறிப்புகள்'  என்கின்ற பிரமிளின் கட்டுரையை கவனிக்காமல் இருக்கமுடியுமா என்ன? அதுவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு படைப்பாக 'ஜே.ஜே.சிலகுறிப்புகளை' கொண்டாடும் என்னைப்போன்ற ஒருவனைக் கூட, இவையெல்லாம் 'ஜே.ஜே.சிலகுறிப்புகளில்' இருந்தனவா என வியக்க வைத்து வாசிக்கவைத்த கட்டுரையென பிரமிளின் இந்தக் கட்டுரையைக் குறிக்கலாம். ஜே.ஜே.சில குறிப்புகளுக்கு பிரமிள் வைத்த இந்த விமர்சனம், சு.ராவை ஆளுமையாகக் கொள்பவர்களால் கூட விலத்திவைக்க முடியாதளவிற்கு மிகக்கூர்மையானது.

3.
பிரமிள் இளமையிலே விகசித்த ஒரு துருவ நட்சத்திரம் என்பதை அவர் தனது 20களில் எழுதிய கட்டுரைகள் பலவற்றில் நாம் கண்டுகொள்ளலாம். இன்னொருவகையில் அப்போது அவருக்குள் எவ்வித காழ்ப்புணர்வும், பக்கச்சார்பு எடுக்கவேண்டிய அவசியமுமில்லாத ஒரு 'பரிசுத்தமான மனது'  இருந்ததைக் காணலாம். மெளனியை முதன்முதலில் சந்திக்கும்போது (21 அல்லது 22 ஆக இருக்கலாம்), மெளனி பிரமிளைச் சந்திக்க அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. அப்படியான மெளனி சட்டென்று 'K என்றால் யார்?' என்கின்றார். 'காஃப்காவின் 'Trail', 'White Castle' நாயகர்களுக்குப் பெயர் இருக்காது. K என்றுதான் இருக்கும்." என பிரமிள் பதிலளிக்கின்றார். தான் இது பற்றி எழுதியதால்,  உண்மையில் அவற்றை வாசித்தேனா, இல்லை இவை வெறும் பெயர் உதிர்ப்புக்கள்தானா என மெளனி தன்னிடம் பரிட்சித்துப் பார்த்தார் என்கின்றார் பிரமிள். மெளினிக்கும், பிரமிளுக்கும் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கான இடைவெளி என்பதையும் நாம் கவனித்தாகவேண்டும். அதேபோன்று பிரமிள், தன்னை இப்படி மெளனி பரிட்சித்துப் பார்த்ததுபோல, தானும் பின்னாளில் செய்திருப்பின் எத்தனையோ பெயர் உதிர்ப்பாளர்களின் தொல்லைகளிலிருந்து தப்பியிருக்கலாமென நகைச்சுவையாகக் குறிப்பிடுகின்றார்.

பிரமிளின் ஆளுமைக்கு அவர் தன் 20களின் தொடக்கத்தில் 'புனித ஜெனே' என்கின்ற கட்டுரையை உதாரணமாகச் சொல்லலாம். ஜெனே பற்றி அவர் நமக்குக் காட்டும் சித்திரம் அவ்வளவு எளிதில் நம்மை விட்டு அகலாதது. அதேபோன்று டி.ராமநாதன் என்கின்ற இலங்கை எழுத்தாளரைப் பற்றிய பிரமிளின் குறிப்பு முக்கியமானது. இங்கிலாந்தில் இருக்கும் என்கெளண்டர் பத்திரிகை வைக்கும் சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு வென்ற கதையை எழுதியவர் டி.ராமநாதன். அந்த முதல்கதையைத் தேர்ந்தெடுத்தவர் விளடீமர் நபக்கோவ் என்பது இன்னுஞ்சிறப்பு. அந்த டி.ராமநாதன் பின்னாட்களில் காந்தியத்தின் மீது ஆர்வமேற்பட்டு, இயற்கை விவசாயம் செய்வதெனச் சென்று இறுதியில் யாழ்ப்பாணத்தில் 87ல் மரணமாகின்றார். பிரமிளுக்கு, டி.ராமநாதனோடு கொழும்பில் இருக்கும்போது பழக்கம் இருந்திருக்கின்றது.

பிரமிளுக்கு, புதுமைப்பித்தனின் மீது இருக்கும் பித்தம் சொல்லிமாளாது. எந்த ஒரு பொழுதிலும் பு.பித்தனை விட்டுக்கொடுக்க முடியாதவராகவே இருக்கின்றார். இன்னொருவகையில் அசோகமித்திரன், ஞானக்கூத்தன் மற்றும் கசடதபறக்குழு, பு.பித்தனை கீழிறக்கும்போது இன்னும் அந்தப்பிடிப்பு பிரமிளில் இறுக்கமாகின்றது. ஒருகட்டத்தில் இந்தப் 'பிராமண' எழுத்தாளர்க்கு எதிராக புதுமைப்பித்தனை முன்வைத்தல் மிக அவசியமென்கின்ற ஒரு நிலைக்குக்கூட வருகின்றார் என்பதை நாம் அவதானிக்கமுடியும். அதேவேளை பு.பித்தனை, க.நா.சு, சு.ரா போன்றவர்கள் முன்வைக்கும் திசைகளிலிருந்து வேறுபட்டு வேறொரு திசையில் பு.பித்தனை நமக்காய் வாசிப்புச் செய்துகாட்டுகின்றார்.

என்னைப் பொறுத்தவரை பிரமிளின் ஆளுமை விகசித்து என்றால் அவரது 20களிலும், 30களிலும் என்றுதான் சொல்வேன். பிறகான காலங்களில் தான் கட்டிய பலவற்றை உடைப்பதிலும், தனிப்பட்ட கோபதாபங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதிலும் காலத்தை வீணடித்த ஒரு பிரமிளை என்னால் எளிதாகக் கண்டுகொள்ள முடியும்.  பசிய புல்வெளியில் நன்று மேய்ந்துவிட்ட ஒரு மாடு, பிறகு ஆறுதலாக அதை அசை போடுவதைப்போலத்தான் பின்னாட்களிலான பிரமிளைக் கொள்வேன். ஆனால் பிரமிள் நம் இலக்கியச்சூழலில் தோன்றி மறைந்த ஓர் அரிய துருவ நட்சத்திரம் என்பது குறித்து எந்தச் சந்தேகமுமில்லை.

நான் முக்கிய ஆளுமைகளாகக் கொள்ளும் எஸ்.பொவோ, மு.தவோ அல்லது பிரமிளோ அவர்கள் தமது புனைவுகளில் மட்டும் நின்றவர்களில்லை. பல்வேறு வடிவங்களைத் தொடர்ந்து முயற்சித்துப் பார்த்தவர்கள்.  தம் படைப்புச் சார்ந்து அல்லாது, நிறைய பிறவற்றை எழுதியவர்கள். ஒருவகையில் பார்த்தால் புனைவுகளில் நான் எஸ்.பொவை அவரின் 'சடங்கு' மற்றும் அவரது சில கதைகளுக்காகவும், மு.தவை அவரின் சில சிறுகதைகளுக்காகவும், பிரமிளை அவரின் குறிப்பிட்ட கவிதைகளுக்காகவுமே கொண்டாடுவேன். ஆனால் அவர்கள் எனக்கு ஆளுமைகளாக, என்னோடு எப்போது உரையாடிக்கொண்டிருப்பவர்களாக இருப்பது அவர்களது அபுனைவுகளினூடாகத்தான்.

தாம் வாழ்ந்த காலங்களில் எந்த அதிகாரத்தின் பின்னால் செல்லாது, எவரையும் ஆசானாக்கிக்கொண்டு சாமரம் வீசாது, தாமே தனித்து நின்று, பின்விளைவுகள் குறித்து கிஞ்சித்தும் யோசிக்காது  எழுதி, அன்றைய காலத்து விடயங்கள் பலதையும்/பலரையும் இடையூறு செய்தவர்கள் இந்த மூவரும். அவ்வாறு அவர்கள் இருந்தபடியால்தான், இன்று அவர்களே தனித்துவ ஆளுமைகளாகி  நம் முன்னே நின்று விகசித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

(பிரமிளின் கட்டுரைகளை 'அடையாளம்' பதிப்பித்த தொகுப்பினூடாக, ஏற்கனவே வாசித்தபோதும், இப்போது 'வம்சி' பதிப்பகத்தால் 'வெயிலும் நிழலும்' என்கின்ற தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைத்தொகுப்பு இன்னும் சிறப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. அதை வாசித்ததின் பாதிப்பில் இது எழுதப்பட்டது)
.........................................
(நன்றி: ‘அம்ருதா’ - ஆடி, 2018)

0 comments: