(எஸ்.பொ - பகுதி -02)
1.
எஸ்.பொ, அவரின் முதலாவது புதினமான 'தீ'யை எழுதியபோது அவரது இருபதுகளில் இருந்திருக்கின்றார். அது பின்னர் அவரது 29 வயதில், சரஸ்வதி பதிப்பகத்தால் 1961இல் வெளிவந்திருக்கின்றது. தீ வெளிவந்தபோது அது உருவாக்கிய உரையாடல்களும் சர்ச்சைகளும் அன்றையகாலத்தில் வெகு பிரபல்யம் பெற்றவை. " 'தீ'யைத் தீயிலிட்டுக் கொளுத்துங்கள்" என்று ஈழத்தில் மட்டுமில்லை, தமிழகத்தில் 'எழுத்து' போன்ற சிற்றிதழ்களிலும் பிரமிள். மு.தளையசிங்கம் போன்றவர்கள் இந்த நாவல் குறித்து விரிவாக விவாதித்திருக்கின்றார்கள்.
இன்றைக்குக் கிட்டத்தட்ட தீ வெளிவந்த 60 வருடங்கள் ஆகியபின், 'தீ'யிற்கான மதிப்பு என்னவாக இருக்கின்றது எனவும் யோசித்துப் பார்க்கலாம். இவ்வளவு தசாப்தகாலம் ஆகியபின்னும் 'தீ'யை நாம் எளிதாகப் புறக்கணிக்கமுடியாது. அதேவேளை தீ அன்றையகாலத்தில் ஒரு உடைப்பை ஏற்படுத்தியதே தவிர, ஒரு பெரும் பாய்ச்சலை உருவாக்கவில்லை என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். அன்றைய கால எழுத்துமுறை, மரபு, பாலியல் விடயங்களை எழுதுவதற்கு இருந்த தயக்கம் போன்ற விடயங்களில் இருந்து தன்னை 'தீ' வித்தியாசப்படுத்தியிருக்கின்றது என்பதால் அது ஓரு முக்கியமான உடைப்பு. ஆனால் அந்த உடைப்பு ஒரு பெரும் பாய்ச்சலாக நடக்கவில்லை என்கின்ற பலவீனத்தையும் நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். பாய்ச்சல் என்பது அன்றையகாலத்தில் இலக்கியம் போய்க்கொண்டிருந்த திசைக்கு மாற்றாக இன்னொரு பாதையின் புதிய வழித்தடத்தை உருவாக்குவது என்ற அர்த்தத்தில் சொல்கின்றேன். 'தீ' - அன்றைய வழமைக்கு எதிராக 'தீ'யா என ஒரு வியப்பை வாசிப்பவரிடையே ஏற்படுத்தியதே தவிர, பொங்கிப் பிரவாகரித்த ஒரு புதிய எழுத்து முறையை அது உருவாக்கவில்லை என்பதையே 60 வருடங்களின் பின்னிருந்து 'தீ'யை மதிப்பிடும்போது இப்போது தோன்றுகின்றது.
அதேவேளை அன்றைய காலத்தில் வைத்துப் பார்க்கும்போது, அப்போது வெளிவந்த தீ ஒரு
முக்கிய நாவலாகும் என்பது எளிதில் புலப்படும். எஸ்.பொ கிட்டத்தட்ட அவரது 25 வயதில் எழுதி முடித்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
அந்தவகையில் ஒருவர் இவ்வளவு இளமையில், பாலியல் விடயங்களைப்
பேசுகின்ற ஒரு புதினத்தை, முதல் நாவலாக வெளியிடுவதற்குப் பெரும் துணிச்சல்
வேண்டும். எஸ்.பொவின் மொழியில் சொல்வது என்றால் நிறைந்த 'ஓர்மம்' வேண்டும். அந்த ஓர்மம் எப்போதும் ஒரு
எழுத்தூழியக்காரனுக்கு இருக்கவேண்டும் என்று தொடர்ந்து எஸ்.பொ வற்புறுத்திவந்தவரும்
கூட.
தனது கருத்துக்கள் சரியா பிழையா என்பதைவிட
தனக்கு என்ன தோன்றுகின்றதோ அதைப் பாசாங்குகின்றி எந்தச் சபையில் என்றாலும் சொல்லக்கூடியவராக
இருந்ததாலேயே அவரால் தொடர்ந்து கலகக்காரனாக தமிழ் இலக்கியச் சூழலில்
இருக்கமுடிந்தது. இந்தக் 'கலகக்காரத்தனத்தை' மு.தளையசிங்கம் பின்னாட்களில் கடுமையாக விமர்சித்தாலும்,
இதுவே எஸ்.பொவின் ஓர் அடையாளமாக எப்போதும்
இருந்திருக்கின்றது. ஆகவேதான் புறக்காரணிகளைப் பற்றிக் கூட அதிகம் யோசிக்காது 2000ஆண்டுகளில், 'புத்தாயிரத்தில்
புலம்பெயர்ந்தவர்களே தமிழ் இலக்கியத்துக்குத் தலைமை தாங்குவார்கள்' என்று எல்லாச் சபைகளிலும் சொல்லியும் திரிந்தவர்.
2.
ஒருவனுக்கு அவனது சிறார் பருவத்தில் இருந்து
அவன் திருமணம் செய்தபின்புங் கூட, அவனுக்கு வரும் பாலியல் இச்சைகளை கவித்துவமான
மொழியில் சொல்கின்ற ஒரு புதினம் 'தீ' எனச் சொல்லலாம்.
எஸ்.பொ அவரது இளமைக்காலத்தில் தமிழை மூன்றாம் பாடமாக ஆங்கிலம், இலத்தீனுக்கு அடுத்து ஒரு பாடமாக எடுத்தவர் என்பதை நாமறிவோம். அத்தோடு
அவருக்கு அன்றைய காலத்தில் செல்வாக்காக இருந்த மணிப்பிரவாள நடையில் இருந்த மோகத்தையும் நாம் தீயில் தெளிவாகக் காணலாம்.
'நான்' என்ற தன்மையிலே கதை
சொல்லப்படுகின்றது. குழப்படிக்காரனாக இருந்த சிறுவன் அவனது தந்தையால் தொடர்ந்து
அடித்து ஒடுக்கப்படுவனாக இருக்கின்றான். அவனை அவன் பாட்டியும், அவர் இறந்தபின் தாயும், தகப்பனின் இந்த வன்முறைகளிலிருந்து
காப்பாற்றுபவர்களாக இருக்கின்றார்கள். அவனது பாலியல் விழிப்பு அல்லது அருட்டல்,
அவனது வயதொத்த சிறுமியான கமலாவோடு
ஆரம்பிக்கின்றது. பின்னர் இவனது குழப்படி நிமித்தம் படிப்பதற்காக ஹொஸ்டலுக்கு
அனுப்பப்படும்போது அங்கே யோசெப் சுவாமிகளால் வேறுவகையில் அருட்டப்படுகின்றது.
இதைச் சிறுவனாக அவன் எப்படி எடுத்துக்கொள்கின்றான்
என்பதை எஸ்.பொ ஒரு மயக்கமான எழுத்தில் தந்தாலும், நாம் அதை பெரியோர் சிறுவர் செய்யும் துஷ்பிரயோகம் என்பதை
எளிதாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால் அதேவேளை இவனே தனது திருமணத்தின் பின், திலகா என்கின்ற பருவமடையாப் பெண்ணின் மீது இதே துஷ்பிரயோகப்
பாலியல் ஈர்ப்பைச் செய்கின்றான். திலகாவை இதிலிருந்து தப்பச் செய்கின்ற பெண்ணாகம, சரசு என்கின்ற பெண் அங்கே வந்து சேர்கின்றார். திலகாவைக் காப்பாற்றி தன் உடலை இந்த
நானின் தேவைகளைத் தீர்க்க, சரசு முன்வைக்கின்றார்.
ஆக, இந்த 'நான்' என்கின்ற கதாபாத்திரத்தை எந்தவகையில் வைத்துப் பார்ப்பது என்கின்ற சிக்கல், வாசிக்கும் நமக்கு வருகின்றது.
கமலா, யோசெப் சுவாமிகள் போன்றவர்களால் அருட்டப்படும்
பாலியல் ஈர்ப்பு, பின்னர் 'அகங்காரியும்', அழுங்குப்பிடியரும்,
அக்கிரமி'யுமான தந்தையின் தென்னந்தோட்டத்தில் வேளை செய்யும் இந்த 'நானை'விட வயதுகூடிய பெண்ணான பாக்கியத்தோடு கூடுவதோடு போய்
முடிகின்றது. பாக்கியம் கணவன் எங்கையோ ஓடிப்போய்விட, இவ்வாறான வேலைகளையும், அவை கிடைக்காதபோது பிற ஆண்களோடும் பாலியல் தொழிலைச்
செய்கின்றவராகவும் இருக்கின்றார். இந்த 'நான்' பாக்கியத்தின் வழமையான வாடிக்கையாளராகிவிட அது இவரது தந்தையால்
கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுகின்றார்.
பிறகு இந்த 'நான்' உயர்வகுப்புக்களில் படித்துக்கொண்டிருந்த
சாந்தியைக் கண்டுகொள்கின்றார். சாந்தி இவர் இதுவரை தன்னைப் பற்றிக்
கட்டிவைத்திருந்த பிம்பங்களையெல்லாம் உடைத்து, முதலில் இவரின் ஈர்ப்பை நிராகரித்துக்கொள்கின்றார். எனினும்
வலையை இவர் கவனமாகப் பின்னர் இரை எளிதாக சிக்கிக்கொள்கின்றது. அந்தப் பாலியல்
வேட்கை, தன்னை இவர்தான் திருமணஞ்செய்வார் என்ற
நம்பிக்கையை சாந்தியில் ஏற்படுத்துகின்றது.
மேற்படிப்புக்காக இந்த 'நான்' சென்னைக்கு- தாம்பரத்துக்கு வருகின்றார். சாந்தி தான் நம்பிக்கையோடு காத்திருப்பேன் என்று இவரின் கையில் அணிவித்த கணையாழி இருந்தாலும், இவருக்குத் தமிழ் கற்பித்த ஒருவரின் பேத்தியான லில்லி மீது ஈர்ப்பு வருகின்றது. லில்லி ஒரு கிறிஸ்தவப் பெண். இவர் தனிமையையும், அவ்வப்போது வரும் நோயையும் அருகிலிருந்து விரட்டுகின்ற கனிந்த பெண். லில்லிக்கும் இவர் மீது காதல் இருக்கின்றது. தாத்தாவும், லில்லியும் ஒருநாள் சொல்லிக்கொள்ளாமல் சென்னையை விட்டுப் போய்விட, இவர் அவர்களைத் தேடி உதகைக்குத் தனித்துப் பயணித்து லில்லியைச் சந்திக்கின்றார். இந்த 'நான்' முதன்முதலாக காதலையும், மணம் புரியும் வேட்கையையும் லில்லியிலே கண்டடைய முடிகிறது. ஆனால் இவர் எப்படி சாந்தியின் நம்பிக்கையை நொறுக்கி லில்லியிடம் வந்து சேர்ந்தாரோ, அவ்வாறே லில்லிக்குச் சிறுவயதில் நிச்சயிக்கப்பட்ட உறவுமுறைத் திருமணப் பந்தம் இருப்பதாக, இவருக்குப் பேரிடியாக தாத்தாவினூடாகச் சொல்லப்படுகின்றது. முதன்முதலாக ஏமாற்றத்தைக் காணும் இந்த நான் இதை படுவான்கரையில் இருந்து மாட்டைப் போல அசைபோகின்றது.
மீண்டும் ஈழம் திரும்பும் இந்த நான், புனிதம் என்ற பெண்ணில் லில்லியைக் கண்டுகொள்கின்றது. ஆனால்
லில்லியின் மீது ஈர்ப்புப் பொங்கிப் பிரவாகரித்ததுபோல புனிதத்தில் வரவில்லை.
பாலியல் உறவு எதுவுமில்லாது திருமணப் பந்தம் என்றவகையில் நீளும் அந்த உறவின்
இறுதியில் புனிதம் இறந்துபோய்விடுகின்றார். ஈழம் வந்தபோது எப்படியோ யாருக்கு
இலஞ்சம் கொடுத்து ஆசிரியர்ப் பணியில் இருக்கும் இந்த நானுக்கு அவரிம்ட
கல்விகற்கும் திலகா என்றொரு சிறுமி மீது ஈர்ப்பு வருகின்றது. அவர் மீதான பாலியல்
உறவு (துஷ்பிரயோகம்) தவறாகப் போகும்பொது சரசு என்றொரு பெண் வந்து
காப்பாற்றிவிடுகின்றார். "ஒரு குஞ்சுச் சிறுமியை இப்படி நாசமாக்கிறாயே.
உன்னைப் போன்ற ஆசாமியிடம் இப்படிப் பயிற்சி பெற்றால், அவள் கடசியில் என்னைப்போல சாமியாகத்தான் வாழவேண்டும்"
என்று பாலியல் தொழிலாளியான சரசு திட்டி இந்த நானை தன் வசம் திருப்புகின்றார்.
திலகாவிடம் சில்மிஷமாக இருக்கும்போது, இந்த நான் யோசெப் சுவாமியை நினைத்துக்கொள்கிறது.
"இந்தப் பிஞ்சு உள்ளங்களில், காலப்போக்கில் எவ்வளவு அழுக்கும் தூசும் ஒட்டிக்கொள்கிறது?
யோசெப் சுவாமியார், என் மொட்டு உள்ளத்தில்...' என்றும் 'ஐயோ யோசெப் சுவாமியாரே! எத்தனை சிறுவர்கள்
உங்கள் லோப்புக்குள் தஞ்சம்' எனவும் கசப்பான நனவிடை தோய்தலும் இந்த
நானுக்குள் நிகழ்கிறது. தீ தன் இறுதிப்பகுதியை நெருங்கும்போது இந்த 'நான்' யோசெப் சுவாமியாரால் அதன் விருப்புக்கு மாறாக
பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றார் என்று விளங்குகின்றது. ஆனால் காலம்
விசித்திரமானது. அப்படிப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த இந்த நானே, பின்னர் வளர்ந்து திலகா என்றுல் பருவமடையாச் சிறுமி மீது
அதே வேலையைச் செய்துகொள்ளவும் முடிகிறது. பெற்றோர் வன்முறையாளராக இருப்பதைப்
பார்த்து வளரும் குழந்தைகள் அதனிடமிருந்து தப்பிக்க விரும்பினாலும் தங்களையறியாமலே
வளர்ந்தபின் வரும் துணைகளிடமும், தம் குழந்தைகளிடமும் வன்முறையாளராக நடக்கும்
உளவியல் சிக்கலை, இங்கும் இந்த நானில் நாங்கள் பார்க்கின்றோம்.
3.
இவ்வாறு பல பெண்களையும், யோசெப் சுவாமியாரையும் சந்தித்த நான், ஒரு மாட்டைப் போன்று கடந்தகாலத்தை படுவான்கரையின் நிழலில்
இருந்து
"என் வாழ்க்கையில் - செக்ஸ் வாழ்க்கையில் -
எதிர்ப்பட்ட பெண்களெல்லாம் மலர்களா? வாழ்க்கை ஒரு மாலை?
நான் ஒரு நார்!
நான் நாரென்றால் எங்கே மலர்கள்? எல்லா மலர்களும் அகல அலர்ந்து, இதழ் இதழாகக் கருகி, சுழன்று, உதிர்ந்து...வெறும் தண்டுகள்! நிழல் நினைவுகள்
மட்டும் மீதம், மலர் வாழ்ந்த தண்டுகளும், அவற்றை ஈனைத்து வைத்திருக்கும் நாரும் இல்லை. அக்கினியில்
வெந்து பொங்கிய நார்.
(ப 146-147) என்று அசைபோடுகின்றது.
பின்னர் இன்னும் மனம் குவித்து, பாலியலைக் கிளர்த்திய ஒவ்வொருவரையும் அவர்கள் எவ்வாறு தீயை
தனக்குள் உருவாக்கினார்கள் என்றும் நெருக்கமாய் நின்றும் பார்க்கின்றது.
"யோசெப் சுவாமியாரே, நீ என் பிஞ்சு நெஞ்சிலே அக்கினிப் பொறிகளைத் தூவினாய்.
பாக்கியம்! நீ அந்தப் பொறிகளில் சுளகு வீசித் தீயை வளர்த்தாயா?
சாந்தி! நீ நெய்யூற்றி வளர்த்த தீயின் நிறம்
என்ன?
லில்லி, நீ என் உள்ளத்திலே
கொழுந்து விடச் செய்த தீ எத்தகையது?
புனிதம்! நீ மட்டும் விதிவிலக்கா? நீ மூட்டிய தீ மட்டும் சுடாதா?
திலகா! நெருப்பின் கங்கிலேயே ஓமாக்கினி
எழுப்பினாயே? அதற்கு நிறமுண்டா?
மொத்தத்தில் அக்கினி மலர்கள் வளர்க்கும்
காமத்தீ!
அதில், தேகத்தில்
புல்லரிக்கும் குளிர் காய்கிறோம் என்ற நினைப்பில் தோலைப் பொசுக்கி விடுகிறோம்
(ப 148-149),
இவ்வாறு ஒரு சிறுவனிலிருந்து வயது
முதிர்கின்றவரை சந்தித்த பெண்களை/ஆணை அசைபோடும் இந்த நான் எத்தகைய படிப்பினைகளைக்
காண்பது என்பதுதான் சற்று சிக்கலானது. அதுதான் பட்டினத்தார் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்
சென்றடைந்த பாதையாகும்.
"பெண்கள் வெறும் தோல் ஜடங்கள்! அந்த ஜடங்களின்
மிருதுத் தோலின் ஸ்பரிச உணர்ச்சிகள்தான் ஆண்களுக்குத் தேவை!
வெறும் தோல்தானே? அதற்குத் தசையும் உயிரும் ஏன்? காற்றில் ஊதிய ரப்பர் பெண் போதாது? எல்லா விந்துக்களும் உட்சென்று பந்தாக வெளிவருவது கிடையாதே. எத்தனை விதைகள் நிலத்தில் விரயமாக்கப்படுகின்றன?" என்று அந்த நான் சொல்கின்றது.
இங்கேதான் தீயை முக்கியமான நாவலாக
வைக்கமுடியாத சிக்கல் நமக்கு வருகின்றது. இதை ஏன் ஓர் 'ஆன்மீகத் தேடலாக' நாம்
எடுத்துக்கொள்ளக்கூடாதெனவும் யாரேனும் வினாவக்கூடும். முக்கியமாய் இந்து மதத்தில் ஆணுக்கெனக் கூறப்படுகின்ற பிரமச்சாரியம்,
இல்லறம், வானபிரஸ்தம், துறவறம் என்ற நான்கு
நிலைகளில் எஸ்.பொ தீயில் முன்வைக்கின்ற நான் என்கின்ற பாத்திரம், பிரமச்சாரியத்தையும், இல்லறத்தையும் கடந்து துறவுக்குப் போவதற்கு முன்பான
வானப்பிரஸ்தம் என்ற நிலையில் இருப்பதாக வாசிக்கக்கூடாதா எனக் கேட்பின் அதில் ஒரளவு
நியாயமிருக்கின்றது. ஆனல் துறவறத்துக்குப் போவதற்கு இப்படிப் பல்வேறு அனுபவங்களைத்
தந்த பெண்களை வெறும் தோலாக மட்டும் பார்ப்பதில் என்ன 'புத்துயிர்ப்பும், விடுதலையும்' இருக்கப்போகின்றது. இத்தனைக்கும் இதில் வரும் எந்தப்
பெண்ணும், 'உனது விடுதலைக்குத்தான் எங்களைப் பரிசோதனைப்
பொருட்களாக ஆக்கினாய்' என்று பின்னாட்களில் இந்த நானைத் துரத்தித் தொல்லை
கொடுப்பவர்களுமில்லை என்கின்றபோது, இந்த நான் கற்றுக்கொண்ட பாடங்களின் சாரமே
இடறுகிறதே என்றுதான் நாம் எண்ணவேண்டியிருக்கின்றது. அதே வேளை இதை எஸ்.பொ தனது
இருபதுகளில் எழுதியிருக்கின்றார் என்பதால் அதில் ஒரு முதிராத்தன்மை இருப்பதையும் நாம் கவனித்தாகவேண்டும்.
எஸ்.பொ நாவல்களில் வெகு எளிதாக 'தீ'யை, அவரின் அடுத்த புதினமான 'சடங்கு' மூலம் கடந்துசெல்கின்றார். பின்னர் சில காலங்களில் வந்த 'வீ' என்ற கதைகளின் மூலம் தன்னைச் சிறந்த
கதைசொல்லியாகவும் முன்வைக்கின்றார். புனைவுகள் மட்டுமில்லை தான் அரசியலிலும்
அங்கதத்திலும் சலித்தவனல்ல என்பதை அவரின் '?' என்ற நூலில் பார்க்கின்றோம். பின்னர் புலம்பெயர்ந்தபின் 'நனவிடைதோய்தல்' என்ற புதுவகையான
எழுத்து வகைமையை நமக்குத் தந்திருக்கின்றார்.
ஒரு படைப்பாளிக்கு முன்னாலுள்ள மிகப்பெரும்
சவால் அவர் தான் எழுதிய படைப்புக்களைத் தாண்டுவதில்தான் இருக்கின்றது. தீ முதன்
நாவலாகவும், எஸ்.பொவின் அச்சில் வெளிவந்த முதல் நூலாகவும்
இருக்கின்றது. அதை எஸ்.பொ எளிதாக அடுத்த 5 வருடங்களில் வெளிவந்த 'சடங்கு' மூலமாகவும், 'வீ' மூலமாகவும் எட்டித் தாண்டிச் செல்கின்றார். ஆகவேதான் எஸ்.பொவின் 'தீ'யை மதிப்பிடும்போது அது அன்றைய காலத்தில் ஒரு
உடைப்பை ஏற்படுத்தி இருக்கின்றதே தவிர, ஒரு புதிய பாய்ச்சலை
ஏற்படுத்தி தனித்துவமான பாதையைப் போடவில்லை என்று கூறுகின்றேன். மேலும் 'தீ'யை எஸ்.பொவின் கிளாஸிக்களில் ஒன்றெனச் சொல்லவும் தயங்குவேன். ஆனால் ஒருவர் தனது இருபதுகளில் எழுதிய நாவல்
இது என்பதாலும், இன்றைக்கு 60 வருடங்களுக்கு முன்னிலிருந்த இலக்கியச் சூழலையும் வைத்துப்
பார்த்தால் தீயுக்கு அதற்கான ஒரு மதிப்பு இருக்கின்றது என்பதையும் நாம் மறுக்கத்
தேவையில்லை.
.............................................
(2019)
புகைப்படங்கள்: இணையம்