வழமையாக நடக்கும்போது நான்கைந்து கிலோமீற்றர்கள் நடப்பதுண்டு. இடையில் ஓய்வெடுத்து/இரசித்து/தரிசித்து/படங்காட்டிப் போனால் கூட ஒன்று/ஒன்றரை மணித்தியாலங்கள்தான் எடுக்கும். இன்று சூரிய ஒளியோடு தொடங்கிய நடையை முடித்து வருவதற்குள் இருண்டு நேரமாகிவிட்டது.
அப்படி ஆனதற்கு, நான் நடந்தபடி கேட்கத் தொடங்கிய அலன் வாட்ஸின் 'The way of Zen' என்னை அமைதிக்கு அழைத்துச் சென்று, அது தற்செயலாக புத்த பூர்ணிமாகவும் இருந்து எனக்கும் புண்ணியம் கிடைத்திருந்தால் கூட, பரவாயில்லை என்றிருந்திருப்பேன்.
ஆனால் நடந்தது அதுவல்ல!
நடந்து கொண்டிருக்கும்போது 'காலம்' செல்வத்தார் அழைத்து, 'என்னடா செய்கிறாய்' என்றார். "நடந்தபடி 'மான்'களை இரசித்துக் கொண்டிருக்கின்றேன்" என்றேன் நான்.
இந்தப் பாதையில் அவ்வப்போது மான்கள் தென்பட்டாலும், நான் சொன்னது அந்த 'மான்'களை அல்ல. செல்வத்தாரும் பாரிஸ் தெருக்களிலே 'மான்'களைத் தேடித் திரிந்த அனுபவம் உள்ளவர் என்பதால் அவருக்கு இந்தவகையான code words நன்கு விளங்கும்.
'நானொருத்தன் என்ன செய்வதென்ற பதைபதைப்பில் இங்கே இருக்கிறேன், உனக்கு இப்போது மான்கள்தான் தேவைப்படுகிறதா' என்றார் செல்வத்தார். 'அப்படி என்ன நடந்தது? அடுத்த இயல்விருதை முத்துலிங்கத்தார் ஞாபக மறதியில் தனக்குத்தானே அறிவித்து விட்டாரோ?' என்று கேட்டேன்.
ஏன் நான் அப்படிக் கேட்டேன் என்றால், ஏற்கனவே தமிழ் விக்கிபீடியாவுக்கு இயல்விருது கொடுத்துவிட்டு, இப்போது அ.மு தமிழ் விக்கி என்று அதே பெயரில் ஏதோ தொடங்குகின்றார்கள் என்று அதற்கும் வாழ்த்துமேல் வாழ்த்து எழுதி அனுப்பிக்கொண்டிருப்பதை அவதானித்திருந்தேன்.
சிலவேளை இலக்கிய உலகில் முதலில் விருதைக் கொடுத்துவிட்டு, பிறகு சில ஆண்டுகளுக்குப் பின் நித்திரையில் இருந்து விழித்தமாதிரி 'இப்போது தொடங்கியதற்கு' வாழ்த்து எனச் சொல்வார்களோ தெரியாது.
'உந்த விசர்க்கதைகளை விட்டிட்டு, நான் சொல்லுறதை கேளடா?' என்று செல்வத்தார் கொஞ்சம் கோபத்தோடு சொன்னார்.
'சரி சொல்லுங்கள்' என்றேன்.
'இல்லையடா. நான் சியா-60 இற்கு ஒரு வாழ்த்து அனுப்பியதிலிருந்து எனக்கு சிங்காரச் சென்னை, சிங்கப்பூர் என எல்லா இடத்திலிருந்தும் நிறைய வாசகிகள் கடிதம் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். என் துணைவியார் இதைப் பார்த்துவிட்டால் என்னவாகும் என்று எனக்கு ஒரே பதட்டமாயிருக்கிறது' என்றார்.
பத்து வருடங்களுக்கு முன் செல்வத்தார் ஒரு வீட்டில் வசித்துக் கொண்டிருந்தார். அதன் நிலவறையை ஒரு பெண்மணிக்கு வாடகைக்குக் கொடுத்திருந்தார். என் வீட்டை விற்கப்போகின்றேன், நீங்களும் காலி செய்யவேண்டும் என்று செல்வத்தார் சொன்னபோது, அந்தப் பெண்மணி ஆயிரம் law கதைத்து வீட்டை விட்டுப் போகமாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பெயர் சியாமளா.
சியாமளாவை எப்படி துரத்துவது என்று மூளையைக் கசக்கிப் பிழிந்ததில் இறுதியாய் செல்வத்தார் கண்டடைந்த ஒரே வழி, தன்னிடம் விற்காமல் இருந்த புத்தகங்களை அவரின் கதவுக்கு முன்னால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகமாய் அடுக்கிவிடுவதுதான். அவை அப்படியே உயர்ந்து உயர்ந்து ஒருநாள் சியாமளாவால் கதவைத் திறக்க முடியாமல் யன்னலை உடைத்து தப்பி ஓடிவிடுவார் என்பதாக செல்வத்தாரின் திட்டமிருந்தது.
ஆனால் எத்தனையோ புத்தகங்கள் அடுக்கியும் அசையாத சியாமளா, ஒரேயொரு புத்தகத்தைக் கண்டு வெருண்டு, அடுத்தநாளே அறையைக் காலி செய்துவிட்டு போய்விட்டார். அது என்ன புத்தகம் என்றால், பின் தொடரும் நிழலின் குரல். அதை வாசித்துத்தான் சியாமளா பயந்து போனார் என்று நீங்கள் நினைத்தால் தவறு. அவர் அந்தப் பெயரை முன்னட்டையில் பார்த்தவுடனேயே ஏதோ மலையாள மாந்தீரிகத்தில் ஆயிரம் பக்கத்தில் சூனியம் வைத்துவிட்டார்கள் என்று கிலி பிடித்துத்தான் ஓடியிருக்கின்றார்.
என்றாலும் ஏன் செல்வத்தார் இப்போது பதைபதைக்கின்றார் என்பது எனக்கு இன்னும் சரியாக விளங்காததால்,
' கனடாவில் இருக்கின்ற சியாமளாக்காவுக்கு 60 என்று நீங்கள் வாழ்த்து எழுதினால் ஏன் உங்களுக்கு வாசகிகள் சிங்கப்பூரில் இருந்தெல்லாம் கடிதம் எழுதுகின்றார்கள்' என்று கேட்டேன்.
'நாசமாய்ப் போறவனே. நான் சியா-60 என்று ஸ்டைலாகச் சொன்னது சியாமளாவுக்கு 60 வயதாகியதை அல்ல, சியமந்தகம்-60 என்று ஜெயமோகனுக்கு வாழ்த்தெழுதியது பற்றி' என்று செல்வத்தார் மறுமுனையில் இருந்து ஆக்ரோஷமாகக் கத்தினார்.
'இப்படிக் கத்தினால் இப்போது அமெரிக்காவில் நிற்கின்ற உங்கள் நண்பர் ஜெமோ எல்லாவற்றையும் விட்டுவிட்டு, நயாகரா நீர்வீழ்ச்சியால் எம்பிக் குதித்து உங்களுக்கு ஏதோ ஆபத்தென பறந்து வந்துவிடுவார், கவனம்' என்றேன். உடனே செல்வத்தார் 'ஓம் சாந்தி ஓம் சாந்தி' என்று தன்னை அமைதிப்படுத்தத் தொடங்கவும் அவரது துணைவியார் அருகில் வரவும் சரியாக இருந்தது.
'அங்காலை இருந்து ஒருத்தன் சியாமளா சியாமளா என்கின்றான். இங்காலை இருந்து நீங்கள் சாந்தி சாந்தி என்கிறீர்கள். எந்த வயதில்தான் திருந்தப்போகின்றீர்கள்' என்று திட்டு விழுவதும் எனக்கு நன்கு கேட்டது.
'இல்லையப்பா சியாமளாவுக்கு வாழ்த்தெழுதியது பற்றி..ச்ச்சீ..சியமந்தகத்திற்கு பதிவெழுதியது பற்றி நாங்கள் இரண்டு பேரும் கதைத்துக் கொண்டிருந்தம்' என்று செல்வத்தார் மறுமுனையில் பம்மத் தொடங்கினார்.
இதுக்குப் பிறகும் இனி வாசகிகள் கடிதங்களை எழுத, செல்வத்தார் வாசிப்பார் என்று நம்பிக்கை எனக்கு இல்லாமல் போய்விட்டது.
என்றபோதும் நான் நம்பிக்கை இழக்காமல், 'இஞ்சை போனை கட் செய்யமுன்னர், எனக்கும் உங்களுக்கு அனுப்பியதுபோல, வாசகிகள் கடிதம் எழுதுவது எப்படி என்று ஜடியா தாருங்கள்' எனக் கேட்டேன்.
'உன்னுடைய கொழுப்புக்கு, உனக்கு அறுபது வயசானாலும் ஒருத்தியும் எழுதமாட்டாள்கள், இருந்து பார்' என்று போனை அவர் நிலத்தில் கோபத்தில் எறிந்தது கேட்டது.
அப்போது நிலவு வானில் எழுந்ததைப் பார்த்தேன். புத்தர் ஞானமடைந்தபோது பார்த்த அதே நிலவு.
புத்தருக்கு ஞானம் அவரின் 35 வயதில் கிடைத்ததென்கின்றனர். எனக்கு 60இல் இல்லாவிட்டாலும், என் 61வது வயதிலாவது யாரேனும் சியாமளாவோ, சாந்தியோ ஒரு வாசகர் கடிதம் எழுதாமலா போய்விடுவார்கள் என்று என்னைத் தேற்றியபடி நடக்கத் தொடங்கினேன்.
ஓம் சாந்தி, ஓம் சாந்தி!
*********************
(May 16, 2022)