கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மட்டக்களப்பு – 03

Wednesday, August 30, 2023


றாவூர்ப் புத்தகக் கொண்டாட்டத்திற்காக, ஊறணியில் இருந்து பஸ் காலையில் எடுத்தாலும் வெயில் சுட்டெரித்தது. ஏறிய பஸ்சில் மருதமுனையில் இருந்து வந்த ஜமீலும் இருந்தார். வடகோவையார் அவரோடு பேச்சுக் கொடுக்க, நான் வாவியை யன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டுப் போனேன். ஏறாவூரில் இறங்கி ஒரு கடையில் தண்ணீர் வாங்கியபோது, அந்தக் கடைக்காரர் எங்கே போகின்றீர்கள் எனக் கேட்டார். போகும் இடத்தைச் சொன்னபோது, முதல்நாள் இரவு வாசிப்பின் அவசியம்பற்றி, ‘அலைபேசிகளைச் சும்மா துழாவுவதை விட்டுவிட்டு  புத்தகங்களைத் தேடி வாசியுங்கள்என்ற பஷீர் ஷேகுவின் பேச்சைப் பற்றி அந்த கடைக்காரர் நினைவூட்டிப் பேச எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவரோடு கொஞ்ச நேரம் புத்தக வாசிப்புப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, நடுத்தெருவில் கத்தரி வெயிலில் காய்ந்துகொண்டிருந்த வடகோவையாரும், ஜமீலும் எங்கே என்னைக் காணவில்லை எனத் தேடி வந்தனர்.


பஸ்சில் இருந்து இறங்கி உள்ளே கொஞ்சத்தூரம் வாவிக்கரையோரமாக நடந்துபோய்த்தான் புத்தகக் கண்காட்சியை அடைய முடியும். ஏற்கனவே கால் நோவோடு (காதல் நோவல்ல) அல்லாடிக் கொண்டிருந்த வடகோவையார் கஷ்டப்படத் தொடங்கினார். கண்காட்சியை அடைந்தபோது வெயிலின் உக்கிரத்தைத் தணிக்க, கடற்கரையோரமாகப் போவோம் என்று இருவரையும் கூட்டிச் சென்றேன். மருதமரங்களை நிறைய நாட்டி ஓர் அழகான பூங்காவை அருகில் உருவாக்கியிருந்தார்கள். வெயிலுக்கு அது நன்கு இதமாக இருந்தது. ஜமீலிடம் உங்கள் ஊரின் பெயரும் மருதமுனை என்றால் நிறைய மருதமரங்கள் இருக்குமே எனக் கேட்டேன். இல்லை, இப்போது வீடுகள் நிறையக்கட்டி, மருதமரங்களே கிட்டத்தட்ட அடையாளம் இல்லாமல் போய்விட்டன என்றார். சில வருடங்களுக்கு முன் அக்கரைப்பற்றில் ஹசீனின் வீட்டில் நின்று, ரியாஸ் குரானாவோடு அவரின் மோட்டார்சைக்கிளில் சென்று மருதமுனைக் கடற்கரையில் நண்பர்கள் சிலரைச் சந்தித்தது நினைவில் மேலேறி வந்து மிதந்தது.

மருதமரங்களோடு கொஞ்சம் சல்லாபித்து விட்டு கண்காட்சிக்குப் போனபோது கூத்து மீளுருவாக்கம்குறித்து நல்லதொரு கருத்தரங்கு போய்க்கொண்டிருந்தது. பேசிய அனைவரும் அந்தத் துறைசார்ந்தவர்கள் என்பதால் சுவையானதாகவும் சுவாரசியமானதாகவும் நிகழ்வு இருந்தது. என்ன சிக்கல் அங்கே இருந்ததென்றால், ஒரு சிலர் நேரக்கட்டுப்பாடில்லாது நீண்ட பேச்சுக்களை அளிக்கையில் மூளை தகவல்களைச் செரிக்கச் சிரமப்படத் தொடங்கியது. காலை 11இற்குத் தொடங்கிய அமர்வு, வரவாளர்கள் பேசி முடிக்க மதியம் 2இற்கு மேலாகிவிட்டது. விளையாட்டு மைதானத்தில் நடுவில் கூடாரம் அமைத்த அரங்கின் மேலே வெயிலோன் கூடவே நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தார். வாரவிறுதி என்பதால் மைதானத்துக்கு வந்த மாணவர்கள் ஓட்டம்/தடைதாண்டிய ஓட்டம்/குண்டெறிதல் போன்றவற்றில் பயிற்சியும் பெற்றுக் கொண்டிருந்தனர். அது யாழில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கழிந்த என் பதின்மக் காலங்களை நினைவுபடுத்தியது.

கூத்து மீளுருவாக்கத்தில், நான் நிதானமாகக் கேட்ட ஓரிரு உரையை வைத்து சில கேள்விகளை அரங்கில் கேட்டேன். அளிக்கப்பட்ட ஒரு பேப்பரில், கூத்து மீளுருவாக்கம், சு.வித்தியானந்தனால் செய்யப்பட்டது என்று கருத்தை மறுத்து, அது 2000களில் ஜெய்சங்கரால் கிழக்கில் செய்யப்பட்டது என்று கூறப்பட்டது. எல்லாக் கலைகளிலும் ஏற்பும் மறுப்பும் இருப்பது இயல்பானதே. ஒன்றையென்று ஏற்றும் மறுத்தும் வளர்வதே கலை. என் கேள்வியாக கூத்து மீளுருவாக்கம் 2000களில் செய்யப்பட்டது என்றால் அது மற்றப் பகுதிகளிலும் (மலையகம், வன்னி, யாழ்) இந்த மீளுருவாக்கம் ஒரே நேரத்தில் நடைபெற்றதா? அவ்வாறு நடைபெறாமல் 2000களில் கிழக்கில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் செய்யப்பட்டது என்றால் பொதுவாக கூத்தில் மீளுருவாக்கம் செய்யப்பட்டது என்று சொல்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்று கேட்டேன். அதன் தொடர்ச்சியில் கூத்து மீளுருவாக்கம் கிழக்கில் செய்யப்பட்டபோது என்னென்ன சவால்களை நீங்கள் எதிர்கொண்டீர்கள் எனவும் கேட்டேன்.

என் மட்டுப்படுத்தப்பட்ட கூத்து அறிவைப் பொறுத்தவரை (புலம்பெயர்தேசத்திலே
யே அதிகம் கூத்துக்களைப் பார்த்திருக்கின்றேன்) யாழ்ப்பாணத்தவர்களிலே ஊருக்கு ஊர் கூத்துக்களின் தனித்துவமான தன்மைகளும், அவர்களிடையே மரபுமான பிரதிகள் மீளுருவாக்கம் செய்யப்படும்போது சர்ச்சைகள் தோன்றுவதையும் அறிந்திருக்கின்றேன். 
கிழக்கில் மரபான பிரதிகளும், கூத்துக்கான ஆட்டமும்/இசையும் மாற்றப்படும்போது எவ்வாறு அது உள்வாங்கப்பட்டதென்றும் எனது கேள்வியை இன்னும் விரித்துக் கேட்டேன். ஜெய்சங்கர் இதற்கான விளக்கத்தை தன் கள ஆய்வுகளையும் அனுபவங்களையும் முன்வைத்தும் விரிவாகத் தந்திருந்தார்.

ஜெய்சங்கர் இதற்கு விளக்கந் தந்தனால், அவரைப் போன்றவர்கள் ஒரு தசாப்தத்திற்கு முன் பறையை பல்கலைக்கழக மட்டங்களில் கொண்டு வந்தபோது ஏற்பட்ட சர்ச்சையை முன்வைத்தும் கேள்வி கேட்டேன். ஒரு சமூகம் பறையடிப்பதாலேயே இழிவாக்கம் செய்யப்பட்டு அதை ஒருபொழுது கைவிட்டபோது இதை அதன் பாதிப்பு/அவமானங்களைத் தாங்காதவர்கள் நம் தமிழர் இசைஎன அதை முன்னோக்கி எடுத்து செல்வது நியாயமா என்பதே என் கேள்வியாக இருந்தது. இன்றைக்கு பறை பழக்குபவர்கள்/பழகுபவர்கள் இந்தக் கேள்வியை எதிர்கொண்டு அதற்கு உகந்த நியாயத்தை அளிக்காது அதை எடுத்துக் கொண்டு செல்வதில் சிக்கல்கள் புலம்பெயர் தேசங்களிலும் இருக்கின்றது என்றும் குறிப்பிட்டேன்.

ஜெய்சங்கர் இது குறித்து ஒரு நீண்ட விளக்கத்தைத் தந்தார். நான் அதில் உடன்படவும் மறுக்கவும் நிறையப் புள்ளிகள் இருந்தாலும், ஜெய்சங்கர் நிதானமாக என் கேள்வியை எதிர்கொண்டு பதிலளித்தது நிறைவாக இருந்தது. இவ்வாறான விடயங்கள் இன்னும் இவ்வாறான பொதுக்களத்தில் நிதானமாக பல்வேறு தரப்புக்களுடன் உரையாடப்பட வேண்டியவை. அந்த அரங்கில் இருந்த அனைவரும் கூத்து மீளுருவாக்கம்குறித்து எதிர்க்கருத்துக்களாயினும் அதைச் செவிமடுத்து உரையாடக் கூடியவர்களாக இருந்தது மகிழ்ச்சியைத் தந்தது. இந்நிகழ்வில் கிழக்குப் பழங்குடி மக்களைப் பிரதிநிதிப்படுத்துபவர்களும் வந்திருந்தனர். அவர்களும் கூத்துக்கள் குறித்தும், மீளுருவாக்கம் பற்றியும் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இவ்வாறு இந்நிகழ்வு நீண்டதால் புத்தகக் கண்காட்சிக்கு இடையில் வந்துபோன சில நண்பர்களுடன் பேசமுடியாதும் போனது சற்றுக் கவலைதான். வடகோவையாரும், அம்ரிதா ஏயெமும், நானும் சற்று நேரம் அரங்கில் இருந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு அம்ரிதா ஏயெம் பஸ்ஸெடுத்து அவரது வீட்டுக்குப் போக, நாங்கள் அருகிலிருந்த ஒரு கடையில் சாப்பிட்டுவிட்டு ஊறணிக்குப் பஸ்ஸில் புறப்படத் தொடங்கினோம்.


மாலை 4 மணியளவில் குறும்பட விழா ஒன்று ஊறணி அமெரிக்கன் மிஷன் தேவாலயத்தில் நடக்க இருந்தது. அதில் பார்வையாளராகக் கலந்துகொள்ள கேஷாயினி எனக்கும் வடகோவையாருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். விடுதிக்கு வந்த வடகோவையார் வெயிலில் நடந்து உருகி, 'என்னால் குறும்பட விழாவுக்கு வரமுடியாது, அவ்வளவு களைப்பாக இருக்கிறது, அறைக்குள் இருந்து ஓய்வெடுக்கப்போகின்றேன். நீ மட்டும் அங்கே போய்விட்டு வா' என்றார். அத்துடன் மாலையில் மீண்டும் புத்தகக் கண்காட்சிக்குப் போகவும் வேண்டியிருந்தது. நமது பிரியத்துக்குரிய எஸ்.எல்.எம்.ஹனீபா நம் இருவரையும் சந்திப்பதற்காய் ஓட்டமாவடியில் இருந்து அங்கே வருவதாகச் சொல்லியிருந்தார்.

நான் குறும்பட விழாவுக்கு செல்வதற்கு ஆயத்தமாகத் தொடங்கினேன்.

*************************************


(Jun, 2023)


0 comments: