நான் Alpha ஆணாக மாறிய கதை!
தை மாதமும் முடியபப் போகின்றது, இந்த வருடத்தில் எந்தப் பதிவையும் என் (இணையத்)தளத்தில் எழுதவில்லை. ஆனாலும் இந்த மாதத்தில் அங்கே 1,700 பக்கங்கள் வாசிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். ஆகக்குறைந்தது இந்த 1,700 பக்கங்கள் வாசிப்பில் ஒரு நூறு பேராவது அங்கு போய் எதையோ வாசித்திருக்கின்றார்கள் என எடுத்துக் கொள்ளலாம். இன்னமும் என்னைக் கைவிடாத இருக்கும் அந்த நூறு பேருக்காவது புதிதாக எதையாவது எழுத வேண்டும் என்றுதான் இந்த வாரவிறுதியில் ஆசைப்பட்டேன்.
இதற்குள் என் பதிவுகளை வாசித்துவிட்டு ஒரு நண்பர் புதிய வடிவமைப்பில் ஓர் இணையதளத்தைச் செய்து தருகின்றேன் என்று முன்வந்தார். எதிலும் இப்போது அவ்வளவு மனம் குவிக்க முடியா ஒரு மனோநிலையாலும், கையைக் கடிக்கும் நிதிப்பற்றாக்குறையினாலும் அந்தத் திட்டத்தைக் கொஞ்சம் ஒத்திவைக்கலாமென அவருக்குச் சொன்னேன். யாரென்றே தெரியாது எழுத்தின் வழி என்னை கண்டெடுத்த அந்த நண்பருக்கு என் அன்பு!
தேவிபாரதியின் 'நீர்வழிப் படூஉம்'மை பல்வேறு முறை வாசிக்கத் தொடங்கி இடையில் கைவிட்டிருந்தேன். கதாபாத்திரங்களின் வட்டாரமொழியும், தொடக்கத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்ட நிறைய பாத்திரங்களும் வாசிப்பைத் தொடரமுடியாது என்னைக் கடினப்படுத்தியது. மிக மெதுவாகவே பக்கங்களை எண்ணி வாசிக்க வேண்டியிருந்தது. ஆனால் இம்முறை தன் முயற்சியில் சற்றுந்தளராத விக்கிரமாத்தியன் போல வேதாளத்தை வெட்டி வீழ்த்திவிட்டேன். என் வாசிப்பில் தேவிபாரதியின் 'நட்ராஜ் மகராஜ்'ஜை அவரின் முக்கியமான படைப்பாக இதுவரை வைத்துக் கொண்டிருந்தேன். அதற்குச் சமாந்திரமாக 'நீர்வழிப் படூஉம்மை'யும் வைத்துக் கொள்ளலாமென அதை வாசித்து முடித்தபோது தோன்றியது. காருமாமா, பெரியம்மா, அம்மா, கதைசொல்லி, கடைசியில் ராசம்மா அத்தை உருட்டிய தாயத்தில் அந்த இரண்டு விழுந்ததா என்கின்ற புதிர் என எல்லாவற்றையும் ஒருமுறை மீள நினைத்து எழுதலாம் என்ற விருப்பை, இந்த 'அனிமல்' அசைத்துப் போட்டுவிட்டது.
'அனிமலை' அரைமணித்தியாலம் பார்த்திருக்கும்போதே நண்பரிடம் இருந்து ஓர் அழைப்பு. காரெடுத்துப் போகும்போதே மனதெல்லாம் ஜிவ் என்றிருந்தது. ஒவ்வொரு சிக்னல் விளக்கிலும் பிரேக்கைக் குத்திக் குத்தி கிறிச்சிட்டு நிறுத்தினேன். பக்கத்தில் வந்தவர்கள் எல்லாம் பதறிப் போய்ப் பார்த்தார்கள். நெருங்கியவர்களாக இருந்தாலும் கண் பார்த்துப் பேசுவதில் எப்போதும் தயக்கமிருக்கும் எனக்கு, அன்று அருகில் காரில் போனவர்கள், தெருவில் நடந்து போனவர்கள் என எல்லோரையும் உற்று உற்று அல்ல, உறுமி உறுமிப் பார்த்தேன். இது நிச்சயம் நான் ஒரு ஆல்பா ஆணாக மாறிவிட்டேன் என்பதற்கான சாட்சியம் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. பார்த்த பெண்களின் பாதங்கள் எல்லாம் நீளமாக இருக்க, இவர்களோடு டேட்டிங் செய்தால் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்பதுவரைக்கும் நான் போய்விட்டேன். நல்லவேளையாக என் பக்கத்தில் இருந்த நண்பர்தான் எல்லாக் காலும் அப்படித்தான் தெரியும், ஏன் என்றால் அவர்கள் இந்தக் குளிர்காலத்தில் Winter Boots அணிந்திருக்கின்றார்கள் என்பதை நினைவுபடுத்தினார்.
அனிமலைப் பார்த்த அரை மணித்தியாலத்துக்கே இவ்வளவு மாற்றம் என்றால் மூன்றரை மணித்தியால முழுப்படத்தையும் பார்த்த பின் என்னவாகுமோ என்று இந்த ஆல்பா ஆணுக்குப் வியர்க்கத் தொடங்கிவிட்டது.
இதுவரை materialistic ஆக இருப்பது பற்றி துளியும் சிந்திக்காதவன் இப்போது ஒரு விடயத்துக்காய்ப் பணம் சேமிப்பது என முடிவு செய்துவிட்டேன். சொந்தமாக ஒரு இணையத்தளம் வைத்திருக்கத்தான் கையில் அவ்வளவு பணமில்லை. நான் இன்றிலிருந்து ஒரு தனியார் ஜெட் வாங்குவதற்காக கடுமையாக உழைப்பதெனச் சபதமெடுத்துவிட்டேன். இனி இந்த வாசிப்பு, கவிதை, கதை எல்லாம் நேரத்தை வீணாக்கப் போவதில்லை. ஆல்பா ஆணாக இருக்க முடியாதவர்கள்தான் இப்படி கலை இலக்கியமெனச் சொல்லி ஏமாத்துவார்கள் என்று நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்லிவிட்டார்கள்.
ஒரு பெண், அவள் உளவாளியா என்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க அவளோடு புவியீர்ப்பு விசையோடு புணர்தலை ஆல்பா ஆணால் மட்டுந்தான் செய்யமுடியுமென்று அறிந்தபோது நான் பரிபூர்ண நிர்வாணமடைந்துவிட்டேன். அதை மனைவியும் ஏற்றுக்கொள்வாள் என்பதுதான் எமக்கான பெரும் விடுதலை. இனி நான் தேடிப் போகின்ற பெண்கள் எல்லாம் உளவாளிகள்தான். அதில் எந்தச் சந்தேகமும் எனக்கு இருக்கப் போவதில்லை. அவர்களில் ஏற்படுத்தப்போகும் Love bitsஇற்கு அதே வர்ணத்தில் அவர்களுக்கு என்னால் ஒரு கார் வாங்கிக் கொடுக்க முடியாது போயினும் அதே நிறத்தில் nail polish ஆவது வாங்கிக் கொடுக்கலாமென நினைக்கின்றேன்.
மேலும் நான் இலக்கியத்துக்கு வந்த தொடக்க காலத்தில் தனது CK உள்ளாடைக்காய் அன்றைய காலத்திலேயே 5,000 ரூபாய் செலவழித்ததாய் எழுதி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய என் ஆல்பா ஆசானாகிய சாருவையும் இக்கணத்தில் நன்றியுடன் நினைவு கொள்கின்றேன்.
***********
கடல்கன்னிக்குப் பதிலாக மீன்மாதர் என்ற அழகான சொல்லை பொன்னி அரசு, ஷரண்யா மணிவண்ணனின் நூலுக்கான தமிழ் மொழிபெயர்ப்பில் பயன்படுத்தியிருப்பார். தமிழ்க்கன்னி, கடல்கன்னி போன்ற இந்த 'கன்னி' (virgin) வகை சொற்களைப் பாவிப்பதில் எனக்குச் சிக்கலுண்டு. அந்த வார்த்தைகள் மூலம் நாமறியாமலே பெண் பிள்ளைகளுக்கு தேவையில்லாப் பாரங்களை சிறுவயதுகளிலேயே ஏற்றிவிடுகின்றோம் என நினைப்பதுண்டு.
'நிலவொளியில் மீன்மாதர்' ஓர் அருமையான புத்தகம். மட்டக்களப்பு பின்னணியில் இருந்து வந்த ஷரண்யா, மட்டுநகரில் இசைபாடும் மீன் மாதரிலிருந்து உலகின் பல்வேறு கலாசார மீன்மாதர்களின் கதைகளை, மட்டுநகருக்கு பயணம் செய்யும் ஒரு தாய், தன் மகளுக்குக் சொல்வது போல எழுதியிருப்பார்.
அழகான ஓவியங்களுடன் மீன்மாதர்களைப் பற்றிய இந்த நூலை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் சுவாரசியமாக வாசிக்கலாம். இவ்வருட சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 'எதிர்' வெளியீடாக வெளிவந்த இதை நான் வாங்க வேண்டிய புத்தகமாக குறித்து வைத்திருந்தேன். நண்பரினுடாக இந்நூல் பின்னர் எனக்குக் கிடைத்திருந்தது.
******
சாரு நிவேதிதாவிடம் இன்றைய காலங்களில் புதிதாகப் பெறுவதற்கு ஒன்றுமில்லையெனினும் நான் அவரைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கின்றேன். அவரின் அண்மைக்கால நாவலான 'பெட்டீயோ' வரை அனைத்துப் புனைவுகளையும் வாசித்திருக்கின்றேன். ஹருகி முரகாமியின் 'நோர்வேஜியன் வூட்'டை மட்டும் வாசித்துவிட்டு முரகாமிக்கு எழுதத் தெரியாதென்று சாரு சொல்வதெல்லாம் அழிச்சாட்டியம். 'உங்களுக்கு இந்தத் தலைமுறைக்கேற்ப எழுதத் தெரியாது' என்று சொல்லியதை சவாலாக எடுத்து முரகாமி எழுதியதே 'நோர்வேஜியன் வூட்'டே தவிர, அது அவரது இயல்பான புனைவுலகத்துக்குள் வருகின்ற எழுத்து நடையே அல்ல. 'நோர்வேஜியன் வூட்' போன்ற எழுத்துநடையிலும் என்னால் எழுதமுடியுமென்று எழுதிக்காட்டியது, முரகாமியின் பின்னவீனத்துவ எள்ளல் என்று வேண்டுமானால் மட்டும் சொல்லிக் கொள்ளலாம்.
சாரு, கடந்த சில பதிவுகளில் ப்யூகோவ்ஸ்கியைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கின்றார். 'ஏன் நான் ப்யூக்கின் மனைவி லிண்டா எழுதிய சுயசரிதத்தை வாசிக்கவேண்டும், என் வாழ்வை ப்யூக்கின் வாழ்வைப் போலத்தான் இருக்கின்றது' என்கின்றார். ப்யூக்கிற்கு மனிதர்களோடு இருப்பது அவ்வளவு பிடிப்பதில்லையெனினும் அவரது எழுத்தைப் போல, அவரின் வாழ்வும் சுவாரசியமானது. முக்கியமாக 'கண்ணாயிரம் பெருமாள்' போல தனது மனைவி பற்றியோ காதலிகள் பற்றியோ சதா முறைப்பாடுகள் சினாஸ்கி செய்தவருமில்லை. பெருமாளுக்கு சுதந்திரமும் வேண்டும், மனைவியைத் திட்டிக்கொண்டு அவரோடு ஒட்டிக் கொண்டும் இருக்கவேண்டும். அதை,பெருமாள் தன் தனிப்பட்ட வாழ்வின் அல்லாடல் என்று வைத்துக் கொண்டால் கூடப் பரவாயில்லை. எல்லாப் புனைவுகளிலும் அதையே திருப்பத் திருப்ப எழுதி அவரின் மனைவியை விட, எங்களையே நொய்நொய் என்கின்ற பெருமாளுக்கு செவிட்டில் இரண்டு கொடுத்தால் என்னவென்று நினைக்க வைக்கின்றார்.
இப்போது 'என்னையும் என் எழுத்தையும் புரிந்து கொள்ள ஒரு எளிய வழி' (https://www.charuonline.com/blog/?p=14457) என்றொரு கட்டுரையில் சாரு ப்யூக்கோவ்ஸ்கியின் ஒரு கவிதையைப் பகிர்ந்திருக்கின்றார்.
அது காமத்தை அப்படியே நேரடியாகச் சொன்ன கவிதை. நான் இக்கவிதையை தமிழாக்கி 'ப்யூகோவ்ஸ்கி கவிதைகள்' தொகுப்பில் சேர்த்திருக்கின்றேன். முதலில் அதே ஸ்லாங்கில் தமிழில் Rawவான கெட்டவார்த்தைகளைப் பாவித்தே தமிழாக்கம் செய்திருந்தேன் என் நண்பருக்கு அதன் முதல்வரைவை அனுப்பியபோது பயந்துவிட்டார். அடுத்த வரைவுகளில் தமிழில் 'நாகரீகமான' வார்த்தைகளைப் பாவித்து முழுமையாகத் திருத்தியமைத்திருந்தேன்.. இருந்தபோதும் தொகுப்பில் இந்தக் கவிதை உட்பட வேறு சில 'காம'க் கவிதைகளைச் சேர்ப்பதற்கு முன் எனக்குத் தெரிந்த 3இற்கும் மேற்பட்ட தோழிகளிடம் அனுப்பி கருத்துக் கேட்டிருந்தேன். அத்தொகுப்பை இவ்வாறான கவிதைகள் இல்லாது கொண்டு வந்திருக்கலாம். ஆனால் இந்தக் கவிதைகளும் சேர்த்துத்தான் ப்யூகோவ்ஸ்கி என்பதால் அவற்றைச் சேர்ந்திருந்தேன்.
ப்யூகோவ்ஸ்கியால் தனது இறுதிக்காலம் வரை எழுத்தின் சாறு (juiciness) குறையாது எழுத முடிந்தது. ப்யூக்கின் 'சினாஸ்கி' போல கண்ணாயிரம் பெருமாள் ஆவது அவ்வளவு எளிதுமில்லை. வாழ்க்கையில் மட்டுமில்லை எழுத்திலுந்தான்.
அந்த 'காதல் பாட்டை' இங்கே இணைத்திருக்கின்றேன்.
***********