கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்க்காலக் குறிப்புகள் - 74

Monday, February 17, 2025

 

ஷர்மிளா ஸெய்யத்தின் 'சிவப்புச் சட்டை சிறுமி'
**************

மரணத்துடன் ஒரு புனைவு தொடங்குவதை வாசிப்பது அந்தரமாக இருக்குமல்லவா? அப்படித்தான் ராணி என்கின்ற மர்ஜானி தனது இறப்பைப் பற்றிப் பேசுவதுடன் ஷர்மிளாவின் 'சிவப்புச் சட்டை சிறுமி' நாவல் தொடங்குகின்றது. வெவ்வேறு காலத்தில், ஒருபோதும் சந்தித்திருக்காத மர்ஜானி மற்றும் அய்லி என்கின்ற இரண்டு சிறுமிகளினதும் கதைகள் இதில் சொல்லப்படுகின்றன.

மர்ஜானி, மர்ஜநாயின் தாய் ஜெய்நூர், அய்லி, அய்லியின் தாய் நிஸா ஆகியோரோ இந்தப் புனைவில் முக்கிய பாத்திரங்களாகின்றனர். அய்லி சிறுமியாக இருப்பதிலிருந்தே எல்லோராலும் 'வித்தியாசமாக'ப் பார்க்கப்படுகின்றார். அந்தச் சிறுமி நிறைய வாசிப்பவளாகவும், கதைகளைச் சொல்பவளாகவும், எல்லாவற்றின் மீதும் கேள்விகள் கேட்பவளாகவும் மட்டுமின்றி, தனித்திருந்து 'யாரோடு' பேசிக்கொள்பவளாகவும் இருக்கின்றாள். தொடக்க காலத்தில் அய்லியை மற்றச் சிறுமிகளைப் போல மாற்ற விரும்பிய பெற்றோர் பிறகான காலங்களில் அவளின் இந்த 'அசாதாரண' இயல்புகளை ஒருவகையில் ஏற்றுக் கொள்கின்றனர்.

அய்லிக்கு அவள் குடும்பத்தில் அவள் வாழ்ந்திராத கடந்தகாலம் உள்ளுணர்வினால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. அவள் மூலம் அந்தக் குடும்பத்தில் வெளிப்படையாகப் பேசப்படாது மூடிப் புதைக்கப்பட்ட இரகசியம் ஒன்று வெளியாகின்றது. அந்த இரகசியம் மட்டுமின்றி, அய்லி தொடர்ச்சியாக அவள் வளர்த்தெடுக்கப்படும் மதம் பற்றிய கதைகளில் மறைக்கப்பட்டோ/மறக்கடிக்கப்பட்டோ போன பெண்களின் வகிபாகம் பற்றியும் மற்றக் குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றாள்.

90களின் மத்தியில் அய்லி பதின்மத்தில் இருக்கும்போது நூலகத்தில் அவளின் குடும்பத்து இரகசியத்தோடு சம்பந்தப்பட்டசரைத் தற்செயலாகச் சந்திக்கின்றாள். அதுவரை தனது ஆண் பெருமையில் 'தலைநிமிர்ந்து' வாழும் அவர் முதன்முறையாக அய்லியினூடாக வெளிப்படுத்தப்படும் இன்னொரு கடந்தகால உருவத்தின் முன் திகைத்து நிற்கின்றார். அவரின் அத்தனை ஆணவமும் கரைந்து கண்ணீர் மல்கி அய்லியின் முன் நிற்பதுடன் ஒருவகை 'பாவமன்னிப்பை' அவர் தன்னளவில் அடைந்திருக்கக்கூடும். ஆனால் அவர் 20 ஆண்டுகளின் முன் நிகழ்த்திவிட்ட பாவத்தினால் இழந்துபோனது எதுவும் ஜெய்நூரின் குடும்பத்துக்குத் திருப்பி வரப்போவதில்லை என்பது யதார்த்தம்.

அய்லிக்குள் ஒலிக்கும் குரல் இந்த மனிதரை மட்டுமில்லை, அதுவரை காலமும் தனக்குள் இந்தத் துயரத்தைப் புதைத்து மறுகிக்கொண்டிருக்கும் அய்லியின் உம்மம்மாவான ஜெய்நூருக்கும் ஒருவகை விடுதலையை அளிக்கின்றது. இந்த விடுபடலினால், அதுவரை எவ்வளவு முயற்சிகள் செய்தும் பூத்துக் காய்க்காத அய்லி வீட்டு முற்றத்துப் பலாமரம் முதன்முறையாகப் பூக்கின்றது. அந்த வீடு தனக்கான துயரத்திலிருந்து ஏதோ ஒருவகையான ஆற்றுப்படுத்தலை இவ்வாறாக 20 வருடங்களின் பின் பெற்றுக்கொள்கின்றது. பலாமரத்தை கட்டியணைப்பதன் மூலம் அந்த வீட்டுப் பெண்கள் அதுவரைகாலமும் மூடிவைத்திருந்த இரகசியத்திலிருந்து விட்டு விடுதலையாகின்றனர்.

இந்த நாவலை ஒருவகையில் வயதுக்கு வரும் (Coming of Age) பருவத்து நாவல் எனவும் சொல்லலாம். சிறுமியாக இருக்கின்ற அய்லி பதின்மத்தில் வருகின்றபோது இந்த நாவல் முடிகின்றது. எனக்கு இந்த நாவலில் ஷர்மிளா ஸெய்யித் எழுதிச் செல்கின்ற மொழி பிடித்தமாக இருந்தது. சிலவேளைகளில் நாவல் மெதுவாக நகர்வது போல தோற்றமளித்தாலும், இந்த வகை நடையே இப்படிப்பட்ட நாவலுக்குப் பொருத்தமானது என்பேன். தமிழ் நாவல்களில் - குறிப்பாக ஈழத்து நாவல்களில்- அரிதாகச் சித்தரிக்கப்படுகின்ற முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை முறையை மிக அழகாக ஷர்மிளா இங்கே சித்தரித்துச் செல்கின்றார்.

மேலும் இஸ்லாமிய தொல்மரபுகளில் இருந்து சமகாலத்துக் கதையோடு சமாந்திரமாக பல்வேறு கதைகளை ஷர்மிளா அய்லியினூடாக தொட்டுச் செல்வது குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. அதில் ஒரு கதையில் பல்கீஸ் ராணியை, சுலைமான் நபி முஸ்லிம் மதத்திற்கு மாறும்படி சொல்லும் ஓரிடம் வருகின்றது. இத்தனைக்கும் பல்கீஸ் ராணியிடம் பெரும் படை இருந்தபோதும், சுலைமான் நபிகளின் ஆணைக்கு உடன்படுகின்றார். அதற்கு பல்கீஸ் ராணி, 'அரசர்கள் ஒரு நகரத்துள் நுழைவார்களானால் நிச்சயமாக அதைச் சீரழித்துவிடுவார்கள். கண்ணியமிக்கவர்களை இழிவானவார்களாக்கிவிடுவார்கள்' எனச் சொல்லி போரொன்றை நிகழ்த்தித் தனது மக்களின் நிம்மதியான வாழ்வைக் கெடுத்துக் கொள்ள அவள் விரும்பாதிருக்கின்றாள். ஒரு பெரும் படையை வைத்திருக்கும் பல்கீஸ் இப்படி போருக்கு எதிரான பிரகடனத்தை அன்றே செய்திருக்கின்றார் என்பது எத்தகை வியப்பானது. அதுபோலவே ஏமானில் ராணிகளாக இருந்த அஸ்மா, அர்வாவின் கதைகளும் சுவாரசியமானது. இந்தக் கதைகளை ஷர்மிளா இந்த நாவலோடு இணைத்திருக்கும் இடங்களும் அழகாக பொருந்திக் கொள்கின்றன.

இவையெல்லாவற்றையும் விட ஷர்மிளா, ஒரு முக்கிய ஈழத்து இலக்கிய ஆளுமையை நேரடியாகப் பெயர் சொல்லியே எழுதிச் செல்லும் வியப்பும் (ஒருவகையில் அதிர்ச்சியும்) எனக்கு இதை வாசிக்கும்போது வந்துகொண்டிருந்தது. எந்த ஒரு நபரும் விமர்சனதுக்கு அப்பாற்பட்டவரல்ல. ஒருவர் ஒரு துறையில் பிரகாசித்துக் கொண்டிருந்தால், எல்லா விடயங்களிலும் 'மாமனிதராக' இருக்க வேண்டும் என்கின்ற பொதுப்புத்தி நம்மிடம் இருக்கின்றது. அவ்வாறெல்லாம் நாம் மெளனமாக இருக்கத்தேவையில்லை என ஒரு முக்கிய ஈழத்து ஆளுமையின் இன்னொரு பக்கத்தை ஷர்மிளா நமக்கு இனங்காட்டியிருக்கின்றார். இந்த நாவல் ஒருவகையில் நாம் புனிதம் பூசி வைத்திருக்கும் பலரின் மற்றப்பக்கங்களை மறுவாசிப்புச் செய்யும் உந்துதலை எங்களில் பலருக்கு கொடுக்கும் என நம்புகின்றேன். அதுபோல கடந்தகாலத்தில் மனிதர்கள் இழைத்துவிட்டுப் போகும் தவறுகளுக்கு, மன்னித்தலையும், தண்டனை கொடுத்தலையும், ஆற்றுப்படுத்தலையும் பல்வேறு வகையில் இதில் விரிவாக எழுதி ஷர்மிளா விவாதிப்பதும் கவனிக்கத்தக்கது.

ஒருகாலத்தில் தேங்கிப்போன ஈழத்துக் கவிதைகளின் தேக்கத்தை உடைத்தவர்களாக ஈழத்துப் பெண் கவிஞர்கள் இருந்தார்கள். அதுபோலவே ஈழத்து நாவல்கள் என்றாலே போரின் பின்னணியின் எழுதப்படவேண்டும் என்கின்ற மறைமுகமான அழுத்தத்தில் இருந்து (அவ்வாறு எழுதுவது பிழையில்லை; ஆனால் அவற்றை மட்டுமே ஈழத்து புனைவுகளாக கொள்ளவேண்டியதில்லை), நம் பெண்களே அதையும் மீட்பார்கள் என்ற நம்பிக்கை இப்போது வருகின்றது.

மாஜிதாவின் 'ஃபர்தா', ஷர்மிளாவின் 'சிவப்புச் சட்டை சிறுமி', தில்லையின் 'தாயைத்தின்னி' (இதை இன்னும் வாசிக்கவில்லை) போன்ற புனைவுகள் இதற்கான தொடக்கமாக அமையும் என்பதில் நம்பிக்கை கொள்கின்றேன். இவர்களின் புனைவுகளோடு முழுதும் நாம் உடன்படவேண்டும் என்கின்ற அவசியம் கூட இல்லை. ஆனால் இந்தப் பிரதிகள் நமக்குள் உரையாடல்களை கிளர்த்தெழச் செய்கின்றவை. இதுவரை சொல்லப்பட்ட எழுத்துகளுக்கு மாற்றான குரல்களில் நமக்கான கதைகளைச் சொல்லவேண்டும் என்ற உந்துதலை இந்தப் பெண்களின் பிரதிகள் நமக்குள் ஏற்படுத்துகின்றன.

மேலும், கடந்தகாலங்களில் பெண்களின் குரல்களை உற்றுக் கேட்காது, கலாசார/பண்பாட்டு/வன்முறை அழிவுகளுக்குள் நம்மை அழைத்துச் சென்ற மோசமான பாதைகளை மறுதலிக்கவேனும் நமக்கு இவ்வாறான வகை எழுத்துக்கள் நிறையத் தேவையாகவும் இருக்கின்றன.

**************

 

(Feb 07, 2025)

கார்காலக் குறிப்புகள் - 73

Saturday, February 15, 2025

 

ன்று இரண்டு நூல்களை வாசித்து முடித்திருந்தேன். ஒன்று புனைவு மற்றொன்று அ(ல்)புனைவு. இரண்டுமே எழுபது/எண்பது பக்கங்களுக்குள் முடிந்து போகின்றவை. நர்மியின் 'கல்கத்தா நாட்களை' வாசித்தபோது, இடைநடுவில் என் நண்பரிடம் கொல்கத்தாவுக்குப் போகவேண்டும் என்று சொல்லுமளவுக்கு இந்நூலிற்குள் அமிழ்ந்திருந்தேன். புறவயமாக சுற்றுலாப் பயணி போல நின்று எழுதாதது மட்டுமின்றி, நான் விரும்பும் Slow-travel ஊடாக அந்நிலப்பரப்பையும், மக்களையும் அணுகியதோடு, பலவேறு எழுத்தாளர்களையும் பயணக்குறிப்பிடையே நினைவூட்டியபடி நர்மி எழுதியிருப்பது இதற்கு ஒரு தனித்துவத்தைக் கொடுக்கின்றது. தமிழில் வெளிவந்த நல்லதொரு பயண நூல்களிலொன்றெனத் தயங்காமல் இதைச் சொல்வேன்.

மற்றது வயலட்டின் 'இதோ நம் தாய்'. அவ்வளவு நெகிழ்ச்சி தந்த ஒரு படைப்பு. எல்லாமே ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டிருக்கின்றதென புத்தர் சொன்னார் என்றால், ஏன் ஒருவரது உடல் தம்மியல்பிலே மாற்றமடைவதை, மற்றமைகளால் உணர முடியாது இருக்கின்றது என்ற கேள்வியுடன் அன்னை மேரியின் தாய்மையையும் சொந்தத் தாயுடனான உறவையும் இணைத்து புரிந்துகொள்ள விழைகின்ற ஒரு திருநங்கையினது அந்தரங்கமான உரையாடல்கள் என்று இப்புனைவை ஓர் எளிமைக்காக சொல்லிக் கொள்ளலாம்.

"நாம் ஒரேயொரு நாள் இத்தனை மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்றால், அதற்காக ஆயிரமாயிரம் நாட்கள் வெறுமனே சேர்ந்திருக்கும் துயரத்தை ஏற்பாயா? என்று இப்புனைவில் ஆனந்தியிடம் கேட்கப்படுவது நம் எல்லோருக்குமானது. மிகக் குறைந்த பக்கங்களிலும், எளிமையான சொற்களாலும் எழுதப்பட்டிருந்தாலும் நமது வாழ்வை மட்டுமில்லை, நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் எந்தளவுக்கு புரிந்துகொண்டிருக்கின்றோம் என்கின்ற குழப்பங்கள் நம் இருத்தலை/இருப்பை 'கடவுளற்ற' கடவுளிடம் நிராதரவாக மண்டியிடச் செய்கின்றன. அது 'இதோ நம் தாய்' எனவும் ஆகின்றது!


0000000000000

'காதல் என்பது பொதுவுடமை'  போன்ற திரைப்படங்கள் பொதுவெளியில், அதுவும் தியேட்டர்களில் வெளியிடப்படுவது பாராட்டப்பட வேண்டியது. நம் சக மனிதர்களை, அவர்களின் காதலை/உணர்ச்சிகளை காட்சி ஊடகங்களில் காட்டுவதைக் கூட ஏதோ 'வித்தியாசமாக'ச் செய்வதாகச் சொல்லித்தான் அறிமுகப்படுத்த வேண்டியிருப்பது, நாம் ஒரு முன்னேறிய சமூகமாக முன்னே செல்வதற்கு இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கின்றது என்பதைத்தான் காட்டுகிறது.

அதற்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என்கின்ற பாகுபாடுகளே இல்லை. என்ன அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இவற்றுக்கான போராட்டங்களை முன்னரே தொடங்கி 'இயல்பாக்கம்' செய்ய எப்போதோ தொடங்கி விட்டார்கள் என்பது மட்டுமே வித்தியாசம். இல்லாவிட்டால் அமெரிக்காவில் தற்போது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் பாலினத்தில் ஆண்/பெண் மட்டுமே இருக்கின்றதென்று முட்டாள்தனமாக சட்டம் இயற்றமுடியுமா என்ன? எங்கேயும் மனிதர்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாகத்தான் இருக்கின்றார்கள். தமக்கு விதிக்கப்பட்ட வாழ்வு மட்டுமே 'அசலான' வாழ்வென்று நம்புகின்றவர்களாக இருக்கின்றார்கள். அதைத் தாண்டி ஒருவர் வாழ்ந்துவிடக்கூடாது என்று அனைத்துத் தடைகளையும் பிறர் மீது போடுவதில் அவர்கள் எவ்வித அவமானமோ குற்றவுணர்வோ அடைவதில்லை.

'காதல் என்பது பொதுவுடமை' தற்பாலினர் பற்றி தமிழில் வெளிவரும் முதல் திரைப்படம் அல்ல. இதற்கு முன் நண்பர் சொர்ணவேல் (Swarnavel Eswaran) 'கட்டுமரம்' என்ற திரைப்படத்தை கடல் பின்னணியில் வைத்து எடுத்திருக்கின்றார். அது பல திரைப்பட விழாக்களிலும் பங்குபற்றியிருக்கின்றது. மிஷ்கின் போன்றவர்கள் நடித்துமிருக்கின்றனர். மேலும் 'காதல் என்பது பொதுவுடமை' டிரெயிலரைப் பார்க்கும்போது, நகரத்தின் பின்னணியில் இருக்கும் இரண்டு பெண்களின் காதலைச் சித்தரிப்பது போலத் தோன்றுகின்றது.

'கட்டுமரம்' திரைப்படம் சூனாமி ஆழிப்பேரலை நடந்த ஒரு கிராமத்தில் வாழும் பெண்ணுக்கும், புகைப்படம் எடுத்து அலைந்துகொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்குமான காதல். அவ்வாறான கலாசார/வர்க்க/மொழி வித்தியாசமுள்ள காதல்கள் இன்னும் சிக்கலானவை என்பது நமக்கு நன்கு புரியும்.

'கட்டுமரம்', 'காதல் என்பது பொதுவுடமை' போன்ற நிறையத் திரைப்படங்கள் தமிழில் வரவேண்டும். ஆனால் எனக்கு இன்னொரு கேள்வியும் இருக்கின்றது. இன்றைக்கு லெஸ்பியன் காதல்களைச் சொல்கின்ற துணிவு ஒரளவு தமிழ்ச்சூழலுக்கு வந்துவிட்டது; ஆனால் எப்போது இரண்டு ஆண்களுக்கிடையிலான காதலை இயல்பாகச் சொல்லும் காலம் நம் தமிழ்த்திரைப்படச் சூழலுக்கு வரும்?

**********

கார்காலக் குறிப்புகள் - 72

Thursday, February 13, 2025

 

 அனோஜனின் 'தீக்குடுக்கை'
****************************

ஈழப்போராட்டப் பின்னணியை முன்வைத்து சமகாலத்தில் எழுதப்படும் படைப்புகளுக்கு, அவை தாண்டி வரவேண்டிய ஒரு பெரும் சவால் இருக்கின்றது. ஏற்கனவே இந்தப் பெரும்யுத்தத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட புனைவும்/புனைவல்லாத நூல்களிலிருந்து விலத்தி எப்படி தனித்துவமாக அதை எழுதுவதென்பதாகும். ஏனெனில் ஒரு வாசக மனதானது எவ்வாறானாயினும் ஏற்கனவே வாசித்த நூல்களோடு புதிய படைப்புக்களை ஒப்பீடு செய்யவே விரும்பும். மேலும் என்னைப் போன்ற இந்த ஈழயுத்தத்தோடு வாழ்ந்தவர்களும், அதன் ஒவ்வொரு காலகட்டத்திலும் பின் தொடர்ந்தவர்களும் கடந்தகால வாசிப்பால் மட்டுமின்றி, அனுபவங்களாலும் இவ்வாறான நூல்களை ஒப்பிடவும், அதன் இழைகளை பிரித்து அறியவும் விரும்புகின்றவர்களாக இருப்போம்.

இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியாததால்தான் கடந்த சில வருடங்களாக ஈழப்போராட்டத்தை பின்னணியாக வைத்து எழுதப்பட்ட பல நூல்கள் தனித்துக் கவனம் பெறமுடியாமல் போயிருக்கின்றன. சொல்வதற்குக் கதைகள் நிறைய இருந்தாலும் அதை தனித்துவமாகச் சொல்ல முடியாமல் 'வழமையாக சொல்லப்பட்ட பாதைகளில்' பயணிப்பவையாக மாறி அவை அலுப்பூட்டவும் செய்திருக்கின்றன. கதைகளைச் சொல்லவேண்டும் என்கின்ற பெருந்தவிப்பு இருக்கின்றதே தவிர, அதை ஒரு சிறந்த படைப்பாக மாற்றவேண்டிய சிருஷ்டிகளுக்குள் நுழைய நமது படைப்பாளிகள் பலர் பஞ்சிப்படுகின்றனர்.

அனோஜனின் 'தீக்குடுவை'யும் ஈழப்போராட்டப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட ஒரு நாவலாகும். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பெற்றோருக்கு இங்கிலாந்தில் பிறந்த ஆதன் என்கின்றவன் ஈழப்போராட்டத்தின் இறுதியுத்தத்தில் பங்குபெறச் செல்வதும், அங்கே அவனுக்கு நிகழ்வதும், அவனைச் சுற்றியுள்ளவர்கள் இதனை எப்படி எதிர்கொள்கின்றார்கள் என்பதுவுமே இந்நாவலின் சாராம்சம் என எடுத்துக் கொள்ளலாம்.

இதில் ஆதனும், அவனது இங்கிலாந்துக் காதலியான எரிக்காவை விட வரும் மற்ற எல்லோரினதும் வாழ்க்கை, நமக்கு ஏற்கனவே எழுத்துக்களினூடாக பரிட்சயமானவை. மேலும் ஈழப்போராட்டக் களத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதும்போது அறிந்த உண்மைகளை மாற்றி எழுதிவிடவும் முடியாது. எவ்வளவு கற்பனையை நாம் விரித்துப் பறந்தாலும், நாம் 'நடந்த சம்பவங்கள்' என வரும்போது தரையை நோக்கி எழுத்தைக் கொண்டு வந்துவிடவும் வேண்டியிருக்கும். ஆகவே அந்த பறத்தலில்தான் எமது எழுத்தின் சாத்தியங்களை விரித்துக் கொள்கின்ற வெளி இருக்கின்றது.

'தீக்குடுக்கை'யில் பல பாத்திரங்கள் வந்து போனாலும், ஆதன், எரிக்கா, காந்தன், ரிமாஸ் போன்றவர்களே நாவல் முடியும்வரை தொடர்ந்து வரும் பாத்திரங்களாக இருக்கின்றன. காந்தன் பாத்திரம் தொடக்கத்தில் ஒரு முக்கிய பாத்திரமாக வரப்போகின்றதென்று நம்பும்போது, அது இடைநடுவில் இரண்டாம் பாத்திரமாக (secondary character) மாறிவிடுகின்றது. இப்படியொரு உப பாத்திரமாக வரும் ரிமாஸின் பாத்திரமே ஒரளவு முழுமையாக இருக்கின்றது. ஆதனின் கதை என்றாலும், எரிக்காவின் பாத்திரமும் அதற்கு நிகராகக் கொண்டு வந்திருக்கக் கூடிய வெளி இருந்திருக்கின்றது. ஆனால் அது நம் அகத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது ஒரு புறவயமான பாத்திரமாகவே நின்று விடுகின்றது. எனவே இந்த நாவலென்பதே ஆதன் என்கின்ற ஒரு தனிப்பாத்திரத்தால் மட்டுமே தாங்கிக் கொள்ளவேண்டிய ஒன்றாக மாறிவிடுகின்றது.

இந்த நாவலில் எனக்கு ஈழத்தில் நடக்கும் விடயங்களை விட, இங்கிலாந்தில் ஆதன், எரிக்காவிற்குள் நடக்கும் நிகழ்வுகளே அதிகம் பிடித்திருந்தன. ஆதன் ஈழத்துக்குப் போய் புலிகளோடு இணைந்ததிலிருந்து நடைபெறும் அனைத்துக்கும் எனக்கு ஏற்கனவே வாசித்தவைகளின் references கள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்ததால் என்னால் அதற்குள் பெரிதாக ஒன்றமுடியவில்லை. அதை இப்படைப்பின் பலவீனமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. எமது ஈழப்போராட்டம் குறித்து அவ்வளவு அறியாதவர்க்கு இது வேறொரு வாசிப்பைத் தரக்கூடும். இதைத் தாண்டி அனோஜனுக்கு கதைகளைச் சொல்லும் ஒரு படைப்பு மொழி வாய்த்திருக்கின்றது. அவர் காலத்தைய பலருக்கு அது எளிதில் சாத்தியமாவதில்லை (அவர்களின் பெயர்கள் வேண்டாம்).

இந்த நாவலின் தனித்துவமே ஆதன் என்கின்ற இங்கிலாந்தில் பிறந்து, புலம்பெயர் தமிழ்ச் சூழலில் இருந்து அந்நியமாகி, தனது வாழ்க்கையை ஓர் ஆங்கிலேயன் போல அமைத்துக் கொண்டவன், ஏன் சட்டென்று ஈழத்துக்கு அவ்வளவு உக்கிரமான சண்டைக்களத்துக்குப் போராடப் போகின்றான் என்பதாகும். ஆனால் அதே தனித்துவமே, ஆதன் இப்படியொரு பெரும் முடிவை எடுக்கின்றான் என்பதற்கான பின்னணியை வாசகர்களுக்கு ஆழப்பதிக்காமல் எழுதப்பட்டிருப்பதால் ஒரு பலவீனமாகவும் ஆகியிருக்கின்றது.

இந்த நாவலில் நிறைய எழுத்துப் பிழைகள் இருப்பதையும் அவை வாசிப்பையும் உறுத்திக் கொண்டிருப்பதையும் சொல்லியாக வேண்டும் (உதாரணம் கண்ணிவெடி, 'கன்னி வெடி' என்று எல்லா இடங்களிலும் எழுதப்பட்டிருக்கின்றது). ஒரு நாவல் எழுதுவதற்காய் ஒரு படைப்பாளி எவ்வளவு உழைப்பைக் கொடுக்கின்றார். அதைப் போல பதிப்பகங்களுக்கு கொஞ்ச நேரமெடுத்தேனும் கவனமெடுத்து இவ்வாறான படைப்புக்களுக்கு ஒரு மதிப்பை நிச்சயம் கொடுக்க வேண்டும் (அனோஜனின் இந்த நாவலில் என்றில்லை, இம்முறை வாங்கிய பல புதிய நூல்களில் கண்களை உறுத்துமளவுக்கு நிறைய எழுத்துப்பிழைகள் மலிந்து கிடக்கின்றன).

'தீக்குடுக்கை' என்பது குண்டுகளுக்கான அழகான பழந்தமிழ்ச் சொல். இந்த நாவலில் கூட வான்படையை புலிகள் வெற்றிகரமாக அமைத்தபின் பொட்டம்மான் 'தீக்குடுக்கைகளை வானிலிருந்து வீசும் நேரம் வந்துவிட்டது' என்று சொல்வதாகத்தான் வரும். அவ்வாறான 'தீக்குடுக்கை'க்கு நெருப்புப்பெட்டியாலும், எரிந்துபோன குச்சுகளாலும் ஏன் ஒரு முகப்பை அமைத்தார்கள் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.

இவ்வாறான சில பலவீனங்கள் இருந்தாலும் -இவற்றைக் கூட அனோஜனை தொடர்ந்து வாசித்து அவரின் படைப்பு மொழி மீது அதிக நம்பிக்கை இருப்பதால்தான் குறிப்பிடுகின்றேனே தவிர- இந்நாவல் தவறவிடாது வாசிக்கவேண்டிய ஒரு படைப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஏனெனில் இன்று அழகியலும், அரசியலும், ஆழமும் இல்லாது ஈழப்போராட்டத்தை பின்னணியாக வைத்து எழுதப்படும் சில படைப்புக்கள் அளவுக்கதிகமாக தமிழ்ச் சூழலில் விதந்தேற்றப்படுகின்றன. அந்தவகையில் அனோஜனின் 'தீக்குடுக்கை'யை மொழியின் வசீகரத்தாலும், சொல் முறையாலும் அண்மையில் வெளிவந்தவற்றில் கவனிக்கத்தக்கதொரு படைப்பாகவே என் வாசிப்பில் நான் கொள்வேன்.

************

 

(Jan 23, 2025)

கார்காலக் குறிப்புகள் - 71

Saturday, February 08, 2025

 

 குணா கந்தசாமியின் 'டாங்கோ'
***************

பெளத்தத்தில் நிரந்தரத் துக்கம், அன்றாடத் துக்கம் என வகுத்துக் கொள்ளும் பார்வை இருக்கின்றது. மகிழ்ச்சியை அப்படி வகுத்தெல்லாம் எவரும் அனுபவிப்பதாகச் சொல்வதில்லை. நமது நினைவுகளால்தான் இந்த துயரங்களும், துன்பங்களும் என்றும் பெளத்தம் சொல்லும். சிலவேளை ஆறறிவொன்று இருப்பதால்தான் மனிதர்களாகிய நாம் இந்த வாழ்க்கையை இயல்பாகக் கொண்டாடத் தெரியாமல் இருக்கின்றோமோ தெரியவில்லை.

குணா கந்தசாமியின் 'டாங்கோ'விலும் வரும் ஆனந்துக்கும் வாழ்விவை அனுபவிக்க வசதிகளும் வாய்ப்புக்களும் இருந்தாலும் தனிமை பெரும் இருளாய் அவனைச் சூழ்ந்து கொள்கின்றது. அவன் மென்பொருள் வேலை நிமித்தம் உலகின் மறுகரையான உருகுவேயுக்கு வருகின்றபோதும் அவனைக் கடந்தகாலம் துரத்தியபடி வருகின்றது. அகற்றவே முடியாத ஓர் இருள் அவனின் அகத்தில் தொடர்ந்து வளர்ந்தபடியே இருக்கின்றது. அதன் நிமித்தம் குடியிலும், கஞ்சா புகைப்பதிலும் தன்னிலையைத் தொலைக்கின்றான்.

அவன் இந்த வாழ்வின் கொண்டாட்டங்களைத் துய்ப்பதற்கான அத்தனை வழிகளிலும் திறக்கப்பட்ட ஓர் அந்நிய நிலத்திலும், தனித்தலைபவனாகவும், தனித்திருப்பவர்களின் மீது விருப்புக் கொண்டு நட்புக் கொள்கின்றவனாகவும் இருக்கின்றான்.

பெற்றோரை சிறுவயதில் இழந்தும், மாமா/அத்தையினால் வளர்க்கப்பட்ட ஆனந்துக்கு அவனது கடந்தகாலம் தாண்டி வர முடியாதது. அவன் தனது இருபதுகளின் மத்தியில் தனக்கான வசதியான வாழ்வை மென்பொருள் கல்வியினால் அமைத்துக் கொண்டாலும், அவனது மனது கீழைத்தேய கிராமமொன்றில் அடைபட்டு விடுதலை பெறத்துடிக்கும் ஒரு பறவையைப் போல இருக்கின்றது.

அவனது சிக்கல் என்பது, அவனுக்கு இந்த இன்பங்களை அனுபவிக்க ஆசையும், அதேவேளை அவற்றை நோக்கிச் செல்லும்போது அவனறியாத கண்ணிகளால் அவன் இழுத்து வீழ்த்தப்படுகின்றவனாகவும் இருக்கின்றான். ஆனால் எல்லாமே மனம் போடுகின்ற வேடங்கள்தான் என அவன் தன்னிலை அறிகின்றபோது எதையெல்லாம் வேண்டாம் என்று தனது சமூகத்தின்/ஒழுக்கத்தின் நிமித்தம் மறுத்தானோ அவையெல்லாவற்றையும் அனுபவித்துப் பார்க்கின்றான்.

இன்றைய நவீன மனிதனின் பெரும் சிக்கலே, அவனு(ளு)க்கு கிடைக்க வேண்டிய எல்லாம் கிடைத்தபின்னும் எஞ்சுகின்ற பெரும் வெறுமை. அறிவைப் பெறுவதையும், செல்வத்தைப் பெருக்குவதையும், கொண்டாடங்களில் திளைப்பதையும் சொல்லித் தருகின்ற இந்த நவீன வாழ்வு நம் அகத்தில் பொங்கும் வெறுமையையும் தனிமையையும் எப்படிக் கையாள்வது என்று சொல்லித் தருவதில்லை.

இதன் நிமித்தம் இன்னுமின்னும் இன்றையகாலத்து மனிதர்களாகிய நாம் எல்லாவற்றிலிருந்தும் அந்நியமாகின்றோம். அது சாதாரண நமக்கு மட்டுமான சிக்கல் இல்லை, இன்று அவ்வளவு பிரபல்யமாக இருந்தும் தற்கொலையை நாடிச் செல்கின்ற/தம்மை அழித்துக் கொள்கின்ற, வசதி படைத்தவர்க்குமான பொதுப் பிரச்சினையாக இது இருக்கின்றது.

குணா 'டாங்கோ' வில் வரும் ஆனந்தின் மூலம் ஒரு வரைபடத்தை விரித்துக் காட்டுகின்றார். அது நம் தமிழ் மனதுக்கு பழக்கமில்லாத புதிய நிலப்பரப்பில், றாம்பலாவின் வீதிகளிலும், உருகுவேயின் கடற்கரைகளிலும் சந்திக்கும் மனிதர்களில் இருந்து, காந்திச் சிலையோடு தனித்து அளவாளவதுவரை என அழகாக காட்சிப்படுத்தப்படுகின்றது. அங்குள்ள மத்திய தர வர்க்கத்தினூடாக மட்டுமில்லாது, விளிம்புநிலை மனிதர்களினூடாகவும் நமக்கு வேறொரு உலகை குணா அவ்வளவு நெருக்கமாகக் காட்டுகின்றார்.

'யாதும் ஊரை யாவரும் கேளிர்' என்று நினைக்கும், அதன் தாற்பர்யத்தை ஸ்பானிய நண்பருக்கும் எடுத்துச் சொல்லும் ஆனந்ததால் ஏன் கீழைத்தேய மனநிலையைத் துறந்து ஓரு 'வேரற்ற' மனிதனாக அகமும்/புறமும் சார்ந்து மாறமுடியவில்லை என்ற கேள்வியிலிருந்து நமது இருத்தலியம் சார்ந்த சிக்கல்களும், அந்நியமாதலின் பிணக்குப்பாடும் துல்லியமாகின்றன. ஒருவகையில் நவீனம் கடந்த பின்னவீனத்துவ வாழ்க்கையை வாழ்வதாக நம்பும் நாமின்னும் கடந்தகாலத்தில்தான் உறைந்து போய் இருக்கின்றோமா என ஆனந்தனின் இருப்பு நமக்குச் சுட்டிக் காட்ட முயல்கின்றன.

இன்றைக்கு குடும்பம் என்ற அமைப்பும், ஆண்-பெண் உறவுகளும் எவ்வாறு நாளுக்கொரு தடவை மாறி சிக்கலாகிக் கொண்டிருக்கின்றன என்பது நாம் கண்கூடாகப் பார்க்கலாம். ஆனந்த் ஒரு புதிய நிலப்பரப்பில் வாழ்கின்றபோதும் அவனால் சில அடிப்படைகளைத் துறக்க முடியவில்லை. முரண்நகையாக அவன் குடிக்கு மட்டுமில்லை, கஞ்சாவுக்கும் அடிமையாகின்ற நிலைமைக்கு வந்துவிட்டான்; ஆனால் அவன் விரும்பும் பெண்ணோ குடும்பம் என்ற அமைப்புக்குள்ளும், அவனால் ஏற்பட்ட கருவுக்குத் தாயாகாவும் ஆகவேண்டும் என்/ரும் தீவிரமாக நம்புகின்ற ஒருவனாகவே இருக்கின்றான். ஒருவகையில் ஆனந்தில் பிரதிபலிப்பது சமகாலத்து பெரும்பாலான தமிழ் ஆண்களின் மனதென்பதால் அவனை விலத்தி வைத்து தூற்றவெல்லாம் தேவையில்லை.

மேலும் இன்று முற்போக்கு பேசும் ஆண்களில் அரைவாசிப்பேர் இப்படி மரபுகளோடும் சடங்களோடும் தம்மைப் பிணைத்தபடியே குடும்பம் என்ற அமைப்புக்குள் அடைக்கலம் பெறுகின்றவர்களாகவே இருக்கின்றனர். ஒருவகையில் பார்த்தால், சந்தியா திருமணம் செய்த விவாகரத்துப் பெற்ற அவளின் முதல் கணவனுக்கும், ஆனந்துக்கும் கூட பெரும் வித்தியாசமில்லை என்ற எண்ணம் ஒருகணம் வந்து நம்மைத் திடுக்குறச் செய்கின்றது. அதாவது நாளை சந்தியா ஆனந்த்தைத் திருமணம் செய்தால் அவனும் ஏற்கனவே மணம்புரிந்த அந்தக் கணவனைப் போல ஆகிவிடமாட்டானா என்ன?

ஆனந்துக்கு ஒரு Redemption நடக்கின்றது. ஒருவர் தன்னை உடைத்துப் பார்க்கும்போது உடைந்த இடத்தில் வீழும் ஒளி அவ்வளவு பிரகாசமாக இருக்கும் என்பது போல அவன் இந்த இயற்கையைத் தன் நெருங்கிய துணையாகக் கொள்கின்றான். அவனுடைய பாவங்களுக்கு மட்டுமில்லை, தன்னிலை உணர்தல்களுக்கும் சாட்சி ரியோ தெ லா பிளாட்டா நதிதான். ஆகவேதான் அவன் இறுதியில் அங்கு நீராடும்போது அவன் அதைப் புனித நதியாக உருவகித்துக் கொள்கின்றான்.

மேலும் அவன் முதல் முத்தம் பெற்ற அவனின் மாமாவின் மகளான தீபாவைத் திருமணம் செய்து அவன் அகமனது அவாவும் குடும்பம் என்ற அமைப்புக்குள் அடங்கிக் கொள்வானா என்பது ambiguity ஆக இருப்பது இந்த நாவலின் பிறபகுதியில் அழகாகப் பொருந்திக் கொள்கின்றது.

நம் சமகாலத் தமிழ்ச் சூழலில் சரளமான வாசிப்பு மொழியில் எழுதப்பட்டால் அது ஆழமற்றதென நம்பும் 'கெட்ட வாசிப்பு' பழக்கமொன்று இருக்கின்றது. அதுபோலவே சில பாத்திரங்களோடு மட்டும் நாவல் இருந்தாலும் அது தட்டையானது என்ற பார்வையும் பலருக்கும் இருக்கின்றது. என்னைப் போன்றவரை ஒரு புனைவு பாசாங்கு செய்யாது genuine ஆக எழுதப்பட்டு என்னை உள்ளிழுத்துக் கொண்டாலே அது நல்லதொரு நாவலாகிவிடும்.

உண்மையில் புனைவின் சரளமான மொழியல்ல, அந்தப் புனைவு நம்மை உள்ளிழுத்து நாம் எளிதில் அதில் அமிழ்ந்துவிட்டதால்தான் நமக்கு வாசிப்பு எளிதாக இருக்கின்றதென்பது பலருக்குப் புரிவதில்லை. நான் குணாவின் 'டாங்கோ' வாசித்துக் கொண்டிருந்தபோது, எனது 'மெக்ஸிக்கோ' நாவலுக்கு வந்த விமர்சனங்களை குணாவும் எதிர்கொள்வார் என்றே நினைத்தபடியிருந்தேன். அதேவேளை எனக்கு 'மெக்ஸிக்கோ' நான் எதிர்பார்க்காத திசைகளிலிருந்து புதிய வாசகர்களைக் கொண்டு வந்தது சற்று வியப்பாக இருந்தது. அதுபோல குணாவின் 'டாங்கோ'வை நோக்கி அவரை இதுவரை வாசிக்காத புதிய வாசகர்கள் அவரிடம் வந்து சேர்வார்கள் என்று நம்புகின்றேன்.

பலர் இந்நாவலில் உண்மையிலே ஆனந்துக்கு என்னதான் பிரச்சினை, அப்படி ஒரு பெரும் பிரச்சினை இருந்தால் ஏன் குணா, அதை விவரிக்கவில்லை என்று கேட்கக்கூடும். ஆனால் என்னைப் பொருத்தவரை இவை சொல்லப்படாததன் இடைவெளிதான் இந்த நாவலை ஒரு முக்கிய புனைவாக்குகின்றது எனச் சொல்வேன். அந்தக் காரணங்கள் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தால் அது தனித்து ஆனந்துக்குரிய வாழ்க்கைச் சிக்கலாக சுருங்கிப் போயிருக்கும். அவை சொல்லப்படாததால்தான் வாசிக்கும் நாம் ஒவ்வொருவரும் ஆனந்தாக இருந்து நம் தனிமையையும், வெறுமையையும் உற்றுநோக்கும் ஒரு சந்தர்ப்பம் இங்கே வாய்க்கின்றது.

ஆக குணா, ஆனந்த் ஊடாக நம்மிடம் ஒரு முக்கிய வினாவை முன்வைக்கின்றார்; இன்றைக்கு நீங்கள் பரபரப்புடன் தேடி ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து விடயங்களும், என்றேனும் ஒருநாள் கிடைத்துவிட்டால், உங்களால் இந்த வாழ்வை அகம் ஊறி சந்தோசத்தில் திளைக்க முடியுமா? அல்லது ஆகக்குறைந்தது உங்கள் மனப்பிசாசை அடக்கி அமைதியாக மிஞ்சியுள்ள வாழ்க்கையை நிறைவாக வாழமுடியுமா என்பதுதான்.

***********

(Jan 20, 2025)

பனிக்காலத் தனிமை - 06

Thursday, February 06, 2025

 

ன்று முழுநாளும் தியானம் செய்வதற்கான நன்னாளாக அமைந்திருந்தது. காலை எட்டு மணிக்கு தியான வகுப்புத் தொடங்கியது. தியானத்தை கூட்டாகச் செய்வது, தனித்துச் செய்வதைப் போலனற்றி, வேறு வகை அனுபவத்தைத் தரக்கூடியது.

தியானம் நடைபெறும் இடத்துக்கு காலையில் எழுந்து 40 நிமிடம் பயணித்துப் போகும்போதே மனம் இலகுவாகத் தொடங்கியது. காலை 8 தொடக்கி 9.30 வரை கூட்டுத் தியானம். 50 பேருக்கு மேற்பட்டோர் அந்தக் காலையிலே பனிக்காலத்தையும் பொருட்படுத்தாது வந்திருந்தனர். தியானத்தை Breathing Meditation, Impermanent Meditation, Loving-Kindness Meditation, Walking Meditation என்று நான்காகப் பிரித்து வைத்திருந்தனர்.

முதல் தியான அமர்வு 'வழிகாட்டும் தியானமாக' (Guided meditation) தொடங்கினாலும், பின்னர் ஆசிரியர் நம்மை அமைதியில் விட்டுவிட்டது பிடித்திருந்தது. அடுத்து காலைச் சிற்றுண்டிக்காக அரை மணித்தியாலம் இடைவெளி விட்டு, இரண்டாவது அமர்வு தியானம் தொடங்கியது. இந்தத் தியான வேளையில் முதலில் கொஞ்சம் புத்த சூத்திரங்களை பாலியிலும், அதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் ஆசிரியர் சொல்லிச் செல்ல நாங்கள் அவரைப் பின் தொடர்ந்தோம்.

தியானத்தின்போது நாம் duality இற்குள் சிக்கி எதையும் discrimination செய்யாமல் இருப்பது முக்கியமானது. அதாவது non -dualism ஆக இருப்பது அவ்வளவு அவசியமானது. இந்த dualityஐ சில விடயங்களில் கொஞ்சம் அவதானித்துக் கடந்து போக முடிந்தது எனக்குப் புதிய பாடமாக அமைந்திருந்தது.

புத்தரின் போதனைகளை 'மந்திர உச்சாடானம்' செய்யும் <புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி> எனக்கு சிறுவயதில் ஒரு எதிர்ப்பின் அரசியலாக அறிமுகமானது. ஈழத்தில் இருக்கும்வரை, புத்தரைப் பின்பற்றுவர்கள் செய்த அட்டூழியங்களால், புத்தர் எனக்கு வெகு தொலைதூரத்திலேயே இருந்தவர். கொழும்பு போன்ற பல்லின மக்கள் வாழும் இடத்தில் இருந்தபோது விகாரைகளில் ஓதப்படும் இந்த வார்த்தைகள், <இதையேதான் சிங்கள இராணுவமும் ஓதிவிட்டு தமிழர்களைப் பிறகு கொல்லச் செல்வார்கள்> என்பதாக ஆழ்மனதில் தங்கியிருந்தது. ஆதனால் இந்த புத்தம்/தம்மம்/சங்கம் சரணம் கச்சாமியோடு என்னால் ஒருபோதும் ஒட்டமுடிந்ததில்லை.

ஆனால் இந்தப் போதனைகளை discrimination செய்யாது பார்க்கவேண்டுமென்ற ஓர் தெளிவு இன்று எனக்குள் வந்ததை அவதானித்தபோது சற்று வியப்பாயிருந்தது. அது தியானத்தில் இருந்தன் நீட்சியா அல்லது வேறெதுவா தெரியவில்லை. ஆனால் இந்த உச்சாடானத்தை பின்னர் அதன் இயல்பிலே -எவ்வித வெறுப்புமின்றி- அவதானிக்கத் தொடங்கியிருந்தேன்.

அதுபோல, இந்த விகாரையில் மாமிசம், கடலுணவு போன்றவற்றை மதிய உணவில் சேர்ப்பார்கள். வழமையாக நமது கோயில்கள், புனித நாட்களில் மரக்கறிச் சாப்பாடுகளைச் சாப்பிட்டு வந்த பழக்கத்தால், இம்முறை மதியவுணவில் கோழியையும், இறாலையும் விலத்துவோம் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் அதையும் அதன் இயல்பிலே அங்கே தரப்பட்டது எதையும் விலத்தக்கூடாது என்று கடைசி நேரத்திலே மனம் முடிவு செய்து மாமிசத்தையும் சேர்த்துக் கொண்டது.

மனம் என்று எளிமைக்காய்ச் சொன்னாலும், இந்த இரண்டு விடயங்களையும் மனதைத் தாண்டிய ஓர் 'மனம்' எடுத்தது என்று சொல்லலாம். சிலர் இதை ஆழ்மனதினதோ அல்லது பிரக்ஞையினதோ தெறிப்போ என்றும் சொல்லவும் கூடும்.



மாலை நேர தியான வகுப்புக்கு இன்னொரு ஆசிரியர் வந்திருந்தார். அவர் எங்களோடு உரையாடுவதில் ஆர்வமாக இருந்தார். இப்போது விளாசி எரிந்து கொண்டிருக்கும் கலிபோர்ணியா தீயைப் பற்றிய கடைசி நிலவரத்தைக் கேட்டறிந்து விட்டு, தீயைப் பற்றிய புத்தரின் கதையொன்று உள்ளதென்று சொல்லத் தொடங்கினார்.

புத்தரின் சீடர்கள் இருந்த மடாலயம் ஒன்றைச் சுற்றி தீ மூண்டபோது, புத்தர் அதை தடுத்து நிறுத்துகின்றார். பின்னர் புத்தர் தன் சீடர்களிடம், 'இது எனது சக்தியினால் நிறுத்தப்பட்டது என்று நீங்கள் நினைக்கலாம். அது என்னால் நிகழ்த்தப்பட்டதில்லை. இந்தத் தீ ஒரு சிறு குருவியின் ( baby quail) புண்ணியத்தால் நிறுத்தப்பட்டது என்றொரு கதையைச் சொல்கின்றார்.

இதற்கு முற்பிறப்பில் சிறுகுருவி பறக்கமுடியாது கூட்டில் இருக்கும்போது, பெருந்தீ காட்டில் மூள்கின்றது. எல்லாப் பறவைகளும் பறந்துபோனபின்னும் இந்தக் குட்டிக் குருவியின் பெற்றோர் அதனோடே இருக்கின்றனர். கடைசிக்கட்டத்தில் தீயின் உக்கிரம் தாங்கமுடியாது இனி இயலாது என்று அந்தப் பெற்றோரும் பறந்துவிடுகின்றனர். இந்தக் குருவிக்கு சிறகிருந்தும் பறக்க முடியாது. கால் இருந்தும் நடக்க முடியாது. அப்போது அது loving-kindness இன் மூலம், என் பெற்றோர் எனக்காக கூடும் கட்டி, இறுதி வரை எனக்காக இந்தத் தீயின்போது இருந்தார்கள் என்று உளம் குவித்து பெற்றோர் மீது நல்ல விதைகளை தூவிவிட்டுச் செல்கின்றது. இந்த குருவி இவ்வாறாக பல்வேறு பிறப்புக்களின்போது நல்ல விதைகளைத் தூவியபடி அவை மிகப்பெருமளாவில் சேகரம் ஆகின்றது. இந்த விடயத்தை புத்தர் அவர் போதிசத்துவராக இருந்த ஒரு பிறப்பில் அறிகின்றார்.

அந்தக் குருவி மாண்ட இடத்தில் நல்விதைகள் குவிந்துவிட்டது. அதனால் அந்த இடத்தை இனி ஒருபோதும் தீயால் தீண்டமுடியாமல் இருக்கின்றது. அங்கேதான் இப்போது இந்த மடாலாயம் அமைந்திருக்கின்றது, அதனால்தான் சுற்றியெங்கும் தீ பரவி அழிவைச் செய்த, இந்த இடத்தில் மட்டும் தீ பற்றாமல் அணைந்துவிட்டது.

புத்தரின் 'அதிசயமான சக்தி'யால் தீ நின்றது என்று நினைத்த சிஷ்யர்களுக்கு அசலான உண்மையைப் புத்தர் உரைத்தார் என்று இந்த ஆசிரியர் எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆகவே நாங்களும் தீயால் பாதிக்கபட்ட மக்களுக்காக நமது நல்ல விதைகளை தியானத்தாலும், பாடலாலும் அனுப்பிவைப்போம் என்று எங்களைப் பிரார்த்தனைக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது என் (dualism) மனம் மீண்டும் குறுக்கிடத் தொடங்கியது. கலிபோர்னியாவில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர், அவர்களுக்காகப் பிரார்த்திப்பதில் பிரச்சினையில்லை, அதுபோல நாங்கள் ஏன் பாலஸ்தீனத்தில் போரில் பாதிக்கப்படும் மக்களுக்காகவும் ஏன் நாம் இந்த நல்விதைகளைத் தூவக்கூடாதென்ற கேள்வி எழுந்தது. முன்பு ஒரு காலம் என்றால் வாயை இப்படியெல்லாம் மூடிக் கொண்டிருக்கமாட்டேன்.

இப்படியான ஒரு தியான வகுப்பில் தொடுபுழாவில் இருந்தபோது அந்த ஆசிரியரை இந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு முழுவகுப்பையுமே அதற்கான பதிலென்ன என்று சொல்லக் கேட்டு அந்த வகுப்பு முழுதையும் கேள்விகளால் 'பாழாக்கியவன் நான்.

இங்கே அப்படியொரு குறுக்கிடும் மனோநிலை எனக்குள் எழுந்து அதேவேகத்தில் பின்னர் கரைந்து போவதையும் கண்டேன். மற்றவர்கள் கலிபோர்ணியாவுக்காகவிற்காக தியானத்தைச் செய்யட்டும், நான் எனக்குப் பிடித்தமாதிரி பாலஸ்தீனர்களுக்காக தியானத்தைச் செய்யலாந்தானே என்று மனம் அமைதியடைந்தது.

இந்தப் பிரார்த்தனை முடிந்தபின், ஆசிரியர் எங்களை நடக்கும் தியானத்துக்காக (Walking Meditation) வெளியில் போய் நடந்துவிட்டு வாருங்களெனச் சொன்னார். பனி கொட்டி நிலம் முழுவதும் வெள்ளையாக இருந்தது. என்றாலும் 'குளிர் அவ்வளவாக இல்லை, ஒரு குறுகிய தூரத்துக்குள் நடந்தபடி பாளியில் இருக்கும் loving - kindness சுலோகத்தைச் சொல்லியபடி நடக்கும் தியானத்தைச் செய்யுங்கள்' என்றார் ஆசிரியர். மனதைக் காலடிகளில் குவித்தபடி 3000 அடிகளுக்கு மேலாக நடந்துவிட்டு வர, அடுத்து ஒரு மணித்தியாலம் இறுதி தியான அமர்வு நடந்து முடிந்தது.

இறுதியில் இந்த நாளை நீங்கள் வித்தியாசமான நாளாகத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று மகிழ்ச்சியடையுங்கள். எத்தனை பேர் இந்த முழுநாளை தியானத்துக்காக ஒதுக்கியிருப்பார்கள், உங்களுக்கு இப்படி அமைந்தது நல்லூழே, இந்நாளை உங்கள் வாழ்வில் முக்கிய நாளாக என்றேனும் நினைத்துக் கொள்வீர்கள். அமைதியும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் அமையட்டுமென தியானத்தை இந்த ஆசிரியர் முடித்து வாழ்த்தி எங்களை அனுப்பி வைத்தார்.

இந்த நாளில் நீ எதை அடைந்தாய் என்று ஒருவர் கேட்டால், நான் எதையுமே அடையவில்லை என்றுதான் சொல்வேன். ஆனால் இந்த நாளில் நான் நிகழுக்கு மிக அண்மையில் இருந்தேன். மனம் அமைதியில் இருக்கின்றேன் என்று உணராமலே ஓர்வகை அமைதியால் நிறைந்திருப்பதை அவதானிக்க முடிந்திருந்தது.

இன்றைய நிசப்தங்கள் நிரம்பிய உலகில் ஒருநாள் அமைதியாகக் கழிந்தது என்பது கூட ஒருவகையில் ஆசிர்வாதம் அல்லவா?

அந்த ஆசிர்வாதத்தை இந்த நாள் அள்ளிச் சொரிய நான் மனம் நிறைந்து பெற்றேன் என்க!

*************


(Jan 12, 2025)

கார்காலக் குறிப்புகள் - 70

Wednesday, February 05, 2025

 

மலரவனின் 'போர் உலா'வை முன்னிட்டு சில நினைவுகள்..

1.


மலரவன் எழுதிய 'போர் உலா'வை மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றேன். இதை எனது பதின்மத்தின் தொடக்கத்தில் தமிழில் வந்தபோது வாசித்திருக்கின்றேன். அப்போது யாழ்ப்பாணம் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. 'போர் உலா'வை சுன்னாகம் பேருந்து நிலையத்துக்கருகில் இருந்த புத்தகசாலையில் வாங்கி  வாசித்திருக்கின்றேன். 13/14 வயதுகளில் கையில் காசு புழங்குவதே அரிதென்பதால், புதுப் புத்தகங்களை வாங்கி வாசிப்பதென்பது பெரும் சாதனை போல அன்று இருக்கும். அப்படி காசு கொடுத்து  புதிதாய் வாங்கிய இன்னொரு புத்தகம் புதுவை இரத்தினதுரையின் ' பூவரம் வேலியும், புலுனிக் குஞ்சுகளும்' என்ற கவிதைகளின் பெருந்தொகுப்பு.



இப்போது 'எழுநா'வில் எழுதுவதற்காக ஆங்கிலத்தில் வந்த 'போர் உலா'வை மீண்டும் வாசிக்கின்றேன், இந்த நூலை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மாலதியை நான் வன்னியில் நேரில் சந்தித்திருக்கின்றேன்.
முப்பது வருடங்களுக்கு மேல் நியூசிலாந்தில் வசித்துவிட்டு மீண்டும் தாய்நிலம் திரும்பியிருந்தார். மனிதவுரிமைகள் சம்பந்தமாக செஞ்சோலைக்கு  வந்து பேசிக் கொண்டிருந்தார். மாலதி, செஞ்சோலைக்குப் பொறுப்பான ஜனனி அக்காவிடம், 'இப்படி அநாதரவராக இருக்கும் பெண்பிள்ளைகளை, இயக்கப் போராளிகளான நீங்கள் வளர்ப்பதால் அவர்களும் இயக்கத்தில் இயல்பாக சேர்ந்து விடுவார்களே, இது சரியில்லை அல்லவா?' எனக் கேட்டபோது நானும் சாட்சியாக இருந்திருக்கின்றேன்.

அதனால்தான் அவர்களை இப்போது உள்ளே வைத்து படிப்பிக்காமல், மற்றவர்களும் போகும் சாதாரண பாடசாலைகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றோம் என்று பல உதாரணங்களை ஜனனி அக்கா சொல்லிக் கொண்டிருந்தார். நானும் பின்னர் அங்கிருந்த பெண் போராளிகளிடம், இங்கே வளரும் பிள்ளைகள் இயக்கத்தில் போய்ச் சேர்வதில்லையா எனக் கேட்டேன். அவர்கள் அப்படிச் சேர நாங்கள் இயக்கத்தில் விடுவதில்லை. என்றாலும் சில பேர் அப்படி இங்கிருந்து தப்பியோடி வேறு பெயரில் இயக்கத்தில் இணைந்திருக்கின்றார்கள் என்றும், அவர்களை மீண்டும் இங்கே மீட்டுக் கொண்டு வந்திருக்கின்றோம் என்றும் சொன்னார்கள். அப்படி ஓடிப்போய் இயக்கத்தில் சேர்ந்து திரும்பி வந்த சிலரை செஞ்சோலைக்குள் சந்தித்திருக்கின்றேன். 


இவற்றையெல்லாம் ஏன் சொல்கின்றேன் என்றால் புலிகளை விளங்கிக் கொள்வதென்பது மிகச் சிக்கலான விடயம். அதுவும் 30 வருடங்களுக்கு மேலாக இயங்கிய, தம்மை மீறி எவரையும் இயங்க விடாத ஓர் இயக்கத்தை ஒற்றைப்படையாக வைத்து எதையும் எளிதில் விளங்கிவிடவும் முடியாது.  எனவேதான் இப்போது புலிகளை ஆதரித்தோ, எதிர்த்தோ மிகைப்படுத்தி வரும் படைப்புக்களை மெல்லிய புன்முறுவலோடு விமர்சிக்கக்கூட விருப்பில்லாது கடந்து போய்விட முடிகின்றது.

மனிதவுரிமைகள் சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்த இதே மாலதி வன்னிக்குள் இறுதியுத்தம் முடியும்வரை புலிகளின் சமாதானக் காரியாலத்தில் இயங்கியிருக்கின்றார் என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன். யுத்தம் மிக மோசமாக நடந்த காலங்களிலேயே, வேறு எதுவும் செய்வதற்கு வழியற்றபோது, மாலதி இந்தநூலை அங்கிருந்தபடி தமிழுக்கு ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றார் என்ற குறிப்பு இந்த ஆங்கில நூலில் இருக்கின்றது.
 

இறுதி யுத்தம் அவரை அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்ப விட்டிருக்கின்றது. அதனால்  மலரவனின் 'போர் உலா'வை நாங்கள் ஆங்கிலத்திலும் இப்போது வாசிக்க முடிகின்றது. ஆங்கிலப் பதிப்பை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது.



2.

ஈழப் போராட்ட வரலாற்றிலே 'போர் உலா' மிக முக்கியமான பிரதி. மாங்குளம் இலங்கை இராணுவம் முகாமை அழிக்க, மணலாற்றில் இருந்து (இப்போது சிங்களக்குடியேற்றம் நிகழ்ந்து வெலிஓயா என அழைக்கப்படுகிறது), மாங்குளம் செல்லும் பயணத்தையும், அம்முகாம் மீட்கப்பட்டதையும் மலரவன் இதில் லியோ என்கின்ற கதாபாத்திரத்தினூடாக எழுதுகின்றார். மணலாற்று காட்டிலிருந்து தொடங்கும் பயணம் இறுதியில் மாங்குளம் இராணுவத் தகர்ப்புடன் முடிவடைகின்றது. ஆனால் அந்தப் பயணத்தில் லியோ என்கின்ற பாத்திரம் சந்திக்கும் மக்கள், வறுமை/சாதியப் பெருமிதங்கள், இராணுவத்தால் கொல்லப்பட்ட மனிதர்களின் உறவுகள் என்று பலவற்றை அவர் தொட்டுச் செல்கின்றார். 

 

ஒருவகையில் இது அந்தக்காலத்தைய வன்னி மக்களின் வாழ்க்கையை சொல்லும் ஒரு முக்கிய ஆவணமாகவும் ஆகின்றது. மேலும் அவர் மக்களை/போராட்டத்தை/யுத்தத்தை மட்டுமில்லாது மிக நிதானமாக இயற்கையை விவரித்துச் செல்வது அவ்வளவு அருமையாக இருக்கின்றது. இதைவிட வியப்பாக இருப்பது, மலரவன் போர் உலா'வை எழுதும்போது அவருக்கு 18 வயதுதான். இத்தகைய ஓர் உண்மை கலந்த புனைவை ஒருவர் தனது பதின்மத்திலேயே எழுதிவிட்டார் என்கின்றபோது ஒரு வியப்பு வருகின்றது.


மலரவன் இதன் பிறகு இரண்டு வருடங்களில், அதாவது அவரது 20 வயதில் பலாலியில் நடந்த முக்கிய தாக்குதலில் இறந்துவிடுகின்றார். அந்தப் பலாலி தாக்குதல் என் நினைவில் நன்கு இருக்கின்றது. ஏனெனில் எங்கள் கிராமங்களை அச்சுறுத்தும் முக்கிய இராணுவ/விமானத் தளமாக பலாலி அன்று இருந்தது. அந்தத் தாக்குதலில் இயக்கத்தின் முக்கியமானவராக இருந்த சிலர் உள்ளிட்ட 50இற்கும் மேற்பட்ட போராளிகள் இறந்திருந்தனர். எனினும் அப்போது லியோ என்கின்ற மலரவன் இறந்தார் என்பதை அறிந்தவனில்லை.


இந்தப் பிரதி மலரவன் இறந்தபின்னே  அவரது உடமைகளோடு கண்டுபிடிக்கப்பட்டு இயக்கத்தால் வெளியிடப்படுகின்றது.
இந்த  போர் உலா என்கின்ற பிரதியை மலரவன் எழுதுகின்றபோது அவருக்கு 18 வயதேதான். நம்பவே முடியாதிருக்கின்றது அல்லவா?  அதன் பின் 20 வயதில் களத்தில் நின்றபோது விழுந்த ஷெல் தாக்குதலால் ஏற்பட்ட காயத்தால் மரணமடைந்தாலும், அதற்கு முன்னரான ஒரு சமரில் காயமடைந்து அவரது சிறுநீரகம் ஒன்றையும் இழந்திருக்கின்றார்.

இருபது வயதுக்குள் உக்கிரமான சமர்க்களத்தில்  களமாடியபடி மலரவன் தனியே 'போர் உலா' மட்டும் எழுதவில்லை. 'புயல் பறவை' என்ற நாவலையும், வேறு பல கவிதைகளையும் எழுதியிருக்கின்றார். அவரின் ஒன்றிரண்டு  நாவல்கள் கிடைக்காமலே அழிந்து போயிருக்கின்றன எனச் சொல்லப்படுகின்றது. 'போர் உலா' முடியும்போது அவர் அடுத்து பங்குபற்றிய சிலாவத்துறை  இராணுவ முகாம் தாக்குதல் பற்றியும் எழுத இருப்பதான குறிப்பையும் பார்க்கின்றோம். அதை எழுத முன்னர் மலரவன் காலமாகிவிட்டார் என்பது துயரமானது. அந்தச்  சிலாவத்துறை சமரில் மலரவன் படுகாயமுற்று தனது சிறுநீரகம் ஒன்றையும் இழக்கின்றார்.

 

'புயல் பறவை' நூல், பின்னர் மலரவனின் தாயால்  வெளியிடப்பட்டிருக்கின்றது. 'புயல் பறவை' நூலில் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து இயக்கத்துக்குப் போகின்றவர்களையும், இயக்கத்தில் பெண்களைச் சேர்ப்பது குறித்த உரையாடல்களும் இருக்கின்றன என அறிகின்றேன். (இந்நூல்களைத் தேடுபவர்க்கு, 'போர் உலா', 'புயல் பறவை' இரண்டையும் 'விடியல்' பதிப்பகம் இப்போது வெளியிட்டிருக்கின்றது).

மலரவன் சிலாவத்துறை சமரில் (சிறுநீரகம் இழந்தபோது) காயங்களை ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தபோது அவரின் தாயாரோடு இந்தப் பிரதிகளைப் பற்றிப் பேசியும், திருத்தங்களும் செய்திருக்கின்றார் என்று அவரது தாயான எழுத்தாளர் மலரன்னை ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். மலரவன் இயக்கத்தில் இருந்தபோது அப்போது முக்கிய ஒரு படைத்துறையாக வளர்ந்து கொண்டிருந்த பசீலன் 2000 பீரங்கிப்படையில் முன்னணிப் படைவீரராக இருந்தவர். இது இயக்கத்தின் உள்ளூர்த் தயாரிப்பு மோட்டார்களைக் கொண்டிருந்தது. யாழ் கோட்டையை அன்று இயக்கம் கைப்பற்றியதில் இந்தப் படையணியின் பங்கும் அளப்பரியது என்பதை அன்றையகாலத்தில் யாழில் இருந்தவர்க: அறிவர். பசீலன் என்பவர் வன்னி மாவட்டத் தளபதியாக இருந்து இந்திய இராணுவ காலத்தில் கொல்லப்பட்டவர். அவர் நினைவாக இந்தப் படையணி தொடங்கப்பட்டது.


போர் உலாவிலும் மலரவன் இந்தப் படையணியின் ஒருவராகவே தாக்குதலுக்கு வருகின்றார். மணலாற்றில் இருந்து பீரங்கிகளையும் நகர்த்த வேண்டும். அதேசமயம் இலங்கை இராணுவத்தின் விமானங்களின் கண்களுக்கும் தெரியக்கூடாது. இதை நகர்த்தும்போது சாதாரண மக்களும் காணக்கூடாது. இல்லாவிட்டால் ஒரு தாக்குதல் நடக்கப்போகின்றது என்ற செய்தி பரவி, முழுத்தாக்குதலுமே தோல்வியில் முடியும் ஆபத்தும் இருக்கின்றது. 



3.


மலரவன், மாங்குளம் முகாமில் பங்குபற்றியபின், அவருக்கு இருந்த எழுத்துத் திறமையால் புலிகள் அவரை ஒவ்வொரு சண்டையின்போதும் நடப்பவற்றையும், அதை ஆராய்ந்து எழுதுவதற்குமென நியமித்திருக்கின்றனர். அவர் எழுதிய முக்கிய இன்னொரு சண்டை அனுபவம், அவரின் பொறுப்பாளராக  அப்போது இருந்த தமிழ்ச்செல்வனால் பாராட்டப்பட்டபோதும், நிறைய இராணுவ இரகசியங்கள் அதில் இருந்ததால் அது பிரசுரிமாகாமலேயே போய்விட்டது. அதுவும் வெளிவந்திருந்தால் இன்னொரு 'போர் உலா' போல  முக்கியமான படைப்பாக ஆகியிருக்கும்.


மாங்குள முகாம் தகர்ப்பு பெரும் செய்தியாக எங்களின் காலத்தில் பேசப்பட்டது. அதில்தான் புலிகளின் முக்கியமான ஒருவராக இருந்த லெப்.கேணல் போர்க் தற்கொலைப்போராளியாக சென்று முகாம் தகர்ப்பைத் தொடக்கி வைத்தவர். எங்கள் காலத்தில் ஒருவருக்கு லெப்.கேணல் என்ற பதவி கொடுக்கப்பட்டால், பின்னரான காலத்தில் கேணல் போன்ற பெரும் தளபதிக்காக நிகர்த்தவர். புலிகளின் மாவட்டப் பொறுப்பாளர்களாக இருந்த தளபதிகளான ராதா, விக்டர் போன்ற மிகச் சிலருக்கே இந்த லெப்.கேணல் பதவி அப்போது கொடுக்கப்பட்டிருந்தது. (முதலாவது கேணல் பட்டம் பின்னர் கிட்டுவோடு தொடங்கியிருக்க வேண்டும்). போர்க்கின் புகைப்படத்தோடு வந்த மாங்குளம் முகாம் தகர்ப்பை அவ்வளவு பதைபதைப்புடன் அன்று வாசித்ததும் நினைவில் இருக்கின்றது.

இந்த வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது. அதுபோல இன்னொரு சுவாரசியமான (அப்படிச் சொல்லலாமோ தெரியாது) விடயமும் நினைவுக்கு வருகின்றது. வன்னியில் இருந்த சமயம், எனக்கு பால்ராஜோடு பேசும் ஒரு சந்தர்ப்பம் நண்பர்களோடு வாய்த்தது. அப்போது பிரிகேடியர் தரத்தில் இருந்த பால்ராஜ், தற்செயலாக மாங்குளம் முகாம் தகர்ப்புப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். மலரவன் எழுதிய போர் உலாவில் வந்த தாக்குதலை  முன்னின்று நடத்திய தளபதியாக பால்ராஜே இருந்தவர்.. 


பால்ராஜ் அங்கே நடந்த தாக்குதலையோ, அவருக்கு நெருக்கமாக இருந்த போர்க் தற்கொலைப்போராளியாகப் போனது பற்றியோ எதுவும் பேசவில்லை. அவர் எங்களுக்கு அந்த சமரில் களமாடிய வீரமிக்க இலங்கை இராணுவ மேஜர் ஒருவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த மேஜர்தான் அந்த இராணுவ முகாமிற்குப் பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவர். புலிகள் கிட்டத்தட்ட முகாமைத் தகர்த்து வெல்லும் நிலை வந்துவிட்டது. அந்த  இராணுவ மேஜர் உயிரோடு இருந்த மற்றவர்களையெல்லாம் தப்பிப் போகச் சொல்லிவிட்டு, அந்த முகாமைவிட்டு வெளியேறாமல் இறுதிவரை சண்டையிட்டு உயிர் நீத்தவர் என்று சொல்லிக் கொஞ்சம் இடைவெளி விட்டு, 'அவன் ஒரு மரியாதைக்குரிய வீரன்' என்றார். அப்போது நான் பார்த்தது எதிர்த்தரப்பின் வீரத்தை மதிக்கும் ஓர் உயரிய தளபதியின் ஆளுமையை.



4.


மலரவன் போல அன்றைய காலங்களில் பல போராளிகள், படைப்பாளிகளாகவும் பரிணமித்தார்கள். மேஜர் பாரதி, கப்டன் கஸ்தூரி, கப்டன் வானதி, பின்னர் மலைமகள் என பெண்களிடையேயும் வீரியமிக்க பல படைப்பாளிகள் தோன்றினார்கள். அவர்களின் பெரும்பாலான படைப்புக்கள் அன்றைய காலங்களில் தொகுப்புக்களாகியபோதும் இப்போதைய தலைமுறைக்குக் கிடைப்பதில்லை. இந்தப் பெண்களின் சிலர் இயக்கம் படுமோசமாக முதலில் தோற்ற ஆனையிறவு முகாம் ('ஆகாய கடல் வெளி சமர்') தகர்ப்பில் இறந்துபோனவர்கள்.

இன்று சிலர், தாம் ஒன்றிரண்டு வருடங்கள் இயக்கங்களில் இருந்து தம்மைத் தொடர்ந்து  முன்னாள் போராளிகளாக முன்வைக்கும்போது, மேலே குறிப்பிட்டப்பட்டவர்கள் போராளிகளாகவும் படைப்பாளிகளாகவும் இருந்து மரணித்தவர்கள் என்பதை நாம் நினைவில் இருத்தவேண்டும். அவர்கள் மிகுதி அனைவரையும் விட போராளிப் படைப்பாளிகளாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டியவர்கள்.  

ஒருவர் தன்னை கடந்தகாலத்தில் போராளியாகவோ அல்லது ஆதரவாளராகவோ முன்வைத்து பொதுவெளியில் பேசினால், அவர்கள் எந்தக்காலத்தில், எப்போது அப்படி இருந்தார்கள் என்பதை தமது நூல்களில் தம்மைப் பற்றிய அறிமுகத்தில் முன்வைக்க வேண்டியது குறைந்தபட்ச அறமாகும். ஏனெனில் அதுவே தமது முழு வாழ்க்கையையே களத்தில் காவுகொடுத்த மலரவன், பாரதி, கஸ்தூரி, வானதி, மலைமகள் என்கின்ற எண்ணற்ற போராளிப் படைப்பாளிகளுக்கு நாம் கொடுக்கக்கூடிய குறைந்தபட்ச மரியாதையாக இருக்கும்.

*****************

 

(நன்றி: உதயன் 'சஞ்சீவி')



கார்காலக் குறிப்புகள் - 69

Monday, February 03, 2025

 

 நர்மியின் 'கல்கத்தா நாட்கள்'
**************


எனக்குப் பயணங்கள் மீது விருப்பு வந்ததற்கு பயணித்தவர்கள் இணையத்தளங்களில் எழுதிய பயணக்கட்டுரைகளாலும், நூல்களாலும் என்று சொல்வேன். 10/15 வருடங்களுக்கு முன் இப்போது போல காணொளிகள் பிரபல்யம் ஆகவில்லை. மேலும் காட்சிகளை விட, எழுத்துக்களை வாசித்து எனக்கான உலகை அதனூடு கற்பனை செய்வது எனக்கு எப்போதும் பிடித்தமானதாக இருக்கிறது.

பிறகு பயணங்களைச் செய்யத் தொடங்கியபோதும், பயணிக்காத காலங்களிலும் என்னை இவ்வாறான பயண நூல்களே பயணங்கள் பற்றிய ஆசைகளை பெருக்கி வைத்திருக்கின்றன. மேலும் ஆண்களை விட, பெண்கள் எழுதிய பயண நூல்களே என்னை அதிகம் கவர்பவை. அவர்கள் சிறு விடயங்களைக் கூட மிகுந்த நுண்ணகியலோடு நேரமெடுத்து விபரிப்பது எனக்குப் பிடித்தமானது. ஆண்களுக்கு இந்த சின்ன விடயங்களின் அழகியல் அவ்வளவு எளிதில் பயண நூல்களில் கைவருவதில்லை.

பயணங்களைப் பற்றி தமிழில் இப்போது நிறைய எழுதப்படுகின்றது. ஆனால் அந்தக் கலை கைவரப் பெற்றவர்கள் மிக அரிதே. பலர் பயணிக்கும் இடங்களைப் பற்றி விரிவான தகவல்களாகத் தர முயல்கின்றார்களே தவிர, அதை ஒரு தனிப்பட்ட அனுபவமாக மாற்றமுடியாது திணறுகின்றனர். வேறு சில மிக எளிய மேலோட்டமான பயணக் குறிப்புகளாகத் தேங்கி விடுகின்றன. குமரி மாவட்டதை விரிவாக அறியலாமென ஆர்வமாக வாசிக்கத் தொடங்கிய 'ஊர் சுற்றிப் பறவை', அதை விட வாசிக்காமலே இருந்திருக்கலாமென்று நினைக்க வைக்குமளவுக்கு அதில் இருந்து புதிதாக அறிய ஒன்றுமில்லாது இருந்தது.. அவ்வாறே தமிழில் வெளிவந்த வெளிநாட்டுப் பயணங்களைப் பற்றிய நூல்கள் பலதை உதாரணங்களாகச் சொல்லலாம்.

இவற்றிலிருந்து விதிவிலகாக இருந்தது நர்மியின் 'கல்கத்தா நாட்கள்'. ஏனெனில் நர்மி இந்தப் பயணங்களை தனது தனிப்பட்ட அனுபவங்களாக மாற்றுகின்றார். அதேவேளை கல்கத்தாவின் அசலான முகத்தையும், அத்தனை வறுமையையும், குப்பை கூளங்களையும், பாழடைந்த புராதன் வீடுகளையும் நமக்கு விபரித்தபடியே செல்கிறார். ஒரு நகர் அது காட்ட விரும்பாத பக்கங்களைக் காட்டியபின்னும், அந்த நகர் நம்மைச் சென்று பார்க்க வசீகரிக்கின்றதென்றால் அது எழுத்தால் மட்டுமே சாத்தியமானது.

நர்மி தனியே கல்கத்தாவின் புகழ்பெற்ற் இடங்களை மட்டுமில்லை, வங்காளத்தின் பூர்வீகக் குடிகளை, தெருவோரக் குழந்தைகளை, பூக்கள் விற்பவர்களை, சாய்வாலாக்களை, பிச்சைக்கார்களை, கஞ்சாக் குடிக்கிகளை.. என விளிம்புநிலை மனிதர்களாக கைவிடப்பட்டவர்களை நெருங்கிப் பார்க்கின்றார். அவர்களுக்குள் இத்தனை அவதிகளுக்குள்ளும் இயங்கிக் கொண்டிருக்கும் அழகான வேறொரு உலகைக் காட்சிப்படுத்துகின்றார்.

ஒரு அத்தியாயம் முழுதும் தேநீர் (சாய்) குடிக்கும் இடங்களைப் பற்றி விபரித்து எழுதிக் கொண்டே போகின்றார். நீங்கள் என்னோடு (எழுத்தில்) வந்தால் சாய்களின் சுவையை அனுபவிப்பீர்களென்று நம் கைகளைப் பற்றி ஒவ்வொரு இடங்களுக்கும் அழைத்துச் செல்கின்றார். அவ்வாறே டார்ஜிலிங்கில் மலையில் தங்கியிருந்த மழைநாட்களில் தினம் தனக்கான பூக்களைப் பறித்துச் சென்று அழகு பார்க்கும் ஒரு நுண்ணுணர்வுள்ள பெண்ணாக நர்மி மாறுவதோடு அங்கேயிருக்கும் நேபாளியப் பின்புலமுள்ள பிள்ளைகளோடு பழகி அவர்களின் வாழ்க்கையையும் நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்.

வங்காளத்தில் நடக்கும் காளி பூஜைக்கும் துர்க்கா பூஜையும் எப்படி கிராமங்கள்/நகரங்களுக்கேற்ப வேறுபடுகின்றது என்று அப்பூஜை நிகழ்வுகளுக்கு சென்று விபரிக்கின்றார். முதல் தடவை பரவசத்துடன் காளி பூசை பார்த்தற்கும் அதற்கு அடுத்த வருடத்தில் நிதானமாக அதே நிகழ்வைப் பார்த்தற்குமான வித்தியாசங்களை எல்லோரும் எடுத்து சொல்லிக் காட்டப்போவதில்லை. ஆனால் நர்மி அதைச் செய்கின்றார். ஒருவகையில் இந்த பயணங்களை மிக நிதானமாக (slow travel) செய்வதால் இடங்களை மட்டுமில்லை, அங்கிருக்கும் மனிதர்களையும் ஆழமாகப் புரிந்து கொள்ள நர்மி முயற்சிக்கின்றார்.

தாகூர்பாரியையும், சாந்திநிகேதனையும் பற்றி வெவ்வேறு இரண்டு அத்தியாயங்கள் எழுதப்பட்டாலும், தாகூரின் காதம்பரிக்கு அன்று என்று நடந்திருக்கும் என்ற கேள்விகளை நர்மி எழுப்பச் செய்கின்றார். தாகூரினதும், விவேகானந்தரினதும் வரலாற்று இடங்களை அப்படியே பராமரிக்காது நவீனத்துக்கு மாற்றிவிட்டார்கள் என்றும் அவர் கவலைப்படுகின்றார். தாகூர் இறுதிமூச்சை விட்ட அறையினுள் நின்று கொண்டு, இன்னமும் திறக்கப்படாத காதம்பரி தற்கொலை செய்த அறை மட்டும் என்றேனும் ஒருநாள் திறக்கப்பட்டால், அங்கேதான் தாகூர் வாழ்ந்த அசலான வாழ்க்கையின் சுவடுகள் மிஞ்சியிருக்கும் எனவும் எழுதிச் செல்வது அருமையானது.

எப்படி கல்கத்தாவின் ஒருபக்கத்து வறுமையையும், வெயிலையையும், அழுக்குகளையும், பாழடைந்த வீடுகளையும் சொல்கின்றாரோ அதுபோல வங்காளம் தனித்து வங்காளிகளின் முகத்தை மட்டும் கொண்டதல்ல என்கின்ற அவதானத்தையும் முன்வைக்கின்றார். வங்காளம் வெவ்வேறு குடியேறிகளால் (பீகாரிகள்) மட்டுமில்லை கொஞ்சம் கிராமங்களுக்கு உள்ளே சென்றாலே அங்குள்ள பழங்குடிகள் வேறு மொழியில் பேசி வாழ்ந்து கொண்டிருப்பதையும் அவர்களையும் உள்ளடக்கியதுதான் வங்களாத்தின் அசல் முகம் என நமக்குக் காட்டுகின்றார்.

மேலும் இதையெல்லாம் விட ' சனநெரிசலில் இந்த இந்திய ஆண்கள் ஏதோவெல்லாம் ஜாலவித்தை காட்டிவிட்டு மறைவார்கள். நாக்கை நீட்டி ஏதோ அருவருப்பான சைகைகளை எல்லாம் செய்வார்கள். போகின்றபோக்கில் பெண்களின் குண்டிகளைத் தட்டுவதற்காகவே விரைவாக போவதைப் போல பாசாங்கு செய்வார்கள். இல்லையோ, அவர்களது கைகள் மார்பை உரசுவதைப் போல போவார்கள். இந்திய பயணங்கள் முழுதும் நான் எதிர்கொண்ட நெருக்கடி இது' என்று பெண்கள் பயணங்களிடையே எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் உள்ளபடி சொல்கின்றார்.

அதுபோல விஷ்ணுபூருக்கு கோயில்களைப் பார்க்கச் சென்றபோது ஆண்களின் வெறித்தனமான பார்வையில் சிக்குக்குப்பட்டு, உரிய அடையாள அட்டைகள் இல்லாது (நர்மி இலங்கையிலிருந்து மேற்படிப்புக்காக கல்கத்தா சென்றவர்) ஒரு அறை எடுத்துக்கூட தங்க விடாது வெளியேற்றப்பட்டு, நள்ளிரவு 2 மணிக்கு நெரிசலில் ரெயிலில் பீரியட்ஸும் தொடங்க நடந்த பயணத்தை அவர் விபரிக்கும்போது ஆண்களாகிய நமது privileges குறித்து வெட்கப்பட மட்டுமில்லை, 'இந்தப் பெண்கள் எல்லாவற்றுக்கும் முறைப்பாடு செய்கின்றார்கள், இங்கே எல்லாமே அவர்களுக்கு சமனாக இருக்கின்றது/கொடுக்கப்படுகின்றதுதானே' என்று எடுத்தவுடனே முன்முடிவுகளை எழுதுபவர்கள் தங்களைத் தாங்களே ஒருகணம் நிதானித்துப் பார்க்கவும் நர்மியின் இந்த 'கல்கத்தா நாட்கள்' சொல்கின்றது.

இவ்வாறு யதார்த்தத்தின் இருட்டுத் தன்மையுடன், ஆனால் அதேசமயம் பயணம் மீதான பித்தையும் ஒரு பிரதிக்குள் கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல. மேலும் நானும் கல்கத்தா பற்றி எதிர்மறையான அனுபவங்களையே நிறையப் பேர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இலக்கியம் சார்ந்ததல்ல, பயணங்களைப் பற்றி எழுதும்போது ஒரு நிதானத்துடன் எழுதக்கூடிய ஜெயமோகனே மேற்கு வங்காளம் ஒரு அசிங்கமான நகர் என்று எழுதியது உள்ளிட வேறு சில நண்பர்கள் அங்கே பயணித்துச் சொல்லியவை அவ்வளவு நேர்மறையானவையல்ல. இவற்றையும் மீறி நர்மியின் இச்சிறு நூலை நான் வாசித்தபோது என்னையறியாமலே என்றேனும் ஒருநாள் கல்கத்தாவுக்குப் பயணிக்கவேண்டும் என்ற பெருவிருப்பு எழத் தொடங்கியது (அதை என் நண்பருக்கும் உடனே சொன்னேன்). மேலும் இந்த நூலில், நர்மி சில்வியா பிளாத், கமலா தாஸ், ஜோவே கிமெரஸ் ரோஸா, கலீல் ஜிப்ரான், தாகூர் என பல படைப்பாளிகளின் எழுத்துக்களை நமக்கு நினைவூட்டிச் செல்வது எனக்கு மிக நெருக்கமாக இருந்தது.

இச்சிறு நூலை வாசிக்கும்போது, நர்மி இதை விரிவாக எழுதுவதற்கான அனுபவங்களும், களங்களும் அவருக்குள் ஊறிக்கிடக்கின்றது என்று அறிந்து கொள்ள முடிகின்றது. இனி வரும் பதிப்பில் அவர் இவற்றை விரித்து எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும். தமிழில் நீண்டகாலத்துக்குப் பேசக்கூடிய பயண நூலாக அது மாறவும் கூடும். அதுபோலவே இவ்வளவு அழகாக கல்கத்தாவின் இருளையும்-ஒளியையும் விவரித்துக் கொண்டுவந்த நர்மி இறுதி அத்தியாயத்தின் ஒரு துர்நினைவோடு முடித்திருக்கத் தேவையில்லை. அது இந்த நூலை ஒரு அந்தரத்தில் அல்லது கல்கத்தாவுக்குப் பயணம் செய்வது பாதுகாப்பானதா என்ற கேள்வியோடு நிறுத்திவிடுகின்ற ஆபத்தும் இருக்கின்றது. நிச்சயமாக அது நர்மியின் விருப்பாக இருக்காது என்பதைப் பயணங்கள் மீது பிரியமுள்ள நானறிவேன். ஆனால் ஆரம்பப் பயணிக்கு - முக்கியமாக பெண்களுக்கு- அச்சத்தின் நிமித்தம் கல்கத்தாவிற்கான நுழைவாயிலை சிலவேளைகளில் மூடிவிடவும் கூடும்.

இன்றைக்கு தமிழில் எழுத்தென்பது புனைவாக மட்டுமே குறுகிய எல்லைக்குள் பார்க்கப்படும்போது நர்மி போன்றவர்களின் அல்புனைவுகளை நாம் கவனித்துப் பேசுவதன் மூலம் தமிழில் புதிய செல்நெறிகளைத் திறக்கமுடியும். என் தனிப்பட்ட வாசிப்புத் தேர்வாக நம்மவர்களாகிய நர்மி, பிரசாந்தி (சேகரம்), றின்னோஸ்ஸா, ஷர்மிளா ஸெய்யத் (அவர் புனைவுகள் எழுதினால் கூட) போன்ற பலரின் அல்புனைவுகளை விருப்புடன் வாசித்துக் கொண்டிருக்கின்றேன். மேலும் அவர்களின் எழுத்துக்களை பெண் எழுத்து என்றெல்லாம் சுருக்கிவிடத் தேவையுமில்லை.

நர்மியின் இந்த 'கல்கத்தா நாட்களின்' நீட்சிதான், அவரை அண்மைக்காலத்தில் இலங்கையில் பலர் கவனிக்கத் தவறிய இடங்களுக்குச் சென்று விரிவான பயணக்கட்டுரைகளாக எழுதிக் கொண்டிருக்கும் திறப்பைச் செய்திருக்கலாமென்று நான் நம்புகின்றேன். பயணத்தை ஒரு மோஸ்தராக்கி அதை எழுத்தில் வைப்பவர்களே இங்கு பெரும்பான்மையினரே. ஆனால் நர்மி போன்றவர்கள் அதை தம் வாழ்வின் பகுதியாக, தமது சந்தோசத்தின், நிம்மதியின், விடுதலையின்,ஆற்றுப்படுத்தலின் ஒரு பாதையாக ஆக்கிக் கொள்வதை அவர்களின் எழுத்தினூடு நாமும் ஒரு பயணியாக மாறும்போது அறிந்து கொள்ள முடியும்.

**********


(Jan 17, 2025)

பனிக்காலத் தனிமை - 05

Friday, January 31, 2025

 

 1.

 
கடந்தகாலத்தினதும். எதிர்காலத்தினதும் பொறிகளில் அடிக்கடி அகப்படாதவர் மிகச் சிலரே. அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு, இந்தப் பூமியில் மனிதர்கள் வாழாது, தாவரங்களும், விலங்குகளும் மட்டும் இருந்தால் கடந்தகாலம்/எதிர்காலம் என்பது இருக்குமா? என்று யோசித்துப் பார்க்கலாம். அதாவது 'நேரம்' என்பதை அர்த்தமுள்ள முறையில் பேசமுடியுமா? இப்போது என்ன நேரம் என்றோ அல்லது என்ன திகதி என்றோ பேசுவதற்கு அர்த்தம் ஏதுமிருக்குமா? ஒரு மரத்திடமோ அல்லது ஏதேனும் விலங்கிடமோ, 'என்ன நேரம்?' என்று கேட்டால், அவை இந்த நேரம் என்பது இப்போதுதான் (Now), வேறென்னவாக இருக்கப் போகின்றது? என்றுதானே சொல்லக்கூடுமே தவிர, கடந்தகாலம்/நிகழ்காலத்தை முன்வைத்து காலத்தை நம்மைப்போலக் கணிக்கப் போவதில்லை.

இந்த உலகில் நாம் இயங்குவதற்கு மட்டுமே இந்த மனதும், நேரமும் அவசியமாக இருக்கின்றது. மேலும் நம் மனமானது எம்மைக் கட்டுப்படுத்துவதற்காய் தொடர்ந்து நிகழ்காலத்தை கடந்தகாலத்தோடும், எதிர்காலத்தோடும் தொடர்புபடுத்திக் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் நாம் நிகழில் இருக்கமுடியாது எமது அசலான 'மனதை' இழக்கின்றோம். இவ்வாறு நிகழில் இல்லாது அலைபாய்ந்து கொண்டிருப்பதால்தான் எமது எல்லாக் கடந்தகாலத் துயரங்களும், எதிர்கால ஏக்கங்களும் தொடங்குகின்றன.

ஸென்னில், நீங்கள் பிறப்பதற்கு முன் உங்கள் அசலான முகம் எதுவாக இருந்தது என்று ஆழமான கேள்வியொன்று இருக்கின்றது. இந்தக் கேள்வி நேரடியாகப் பதிலை அறிவற்குக் கேட்கப்படுவதில்லை. காலம்/வெளி என்கின்றவற்றை ஊடறுத்து நம்மை இந்தக் கணத்தில் இருக்க வைப்பதற்காய் நம்மிடம் கேட்கப்படுவது. இவ்வாறு கேட்பதன் மூலம் நாம் தன்னிலை உணர்தலையும் அடையமுடியும் என்று ஸென் கூறுகின்றது. இந்தக் கேள்வியுடன் தமது அசலான முகத்தைத் தேடத் தொடங்கி ஞானமடைந்தவர்களின் எழுநூறுக்கும் மேற்பட்ட கோவன்கள் (Koans) ஸென் மரபில் இருக்கின்றன .

ஒருவர் ஆறுவருடங்களில் பனி மலைகளில் தியானம் இருந்தவர் ஒருநாள் விடிவெள்ளியைப் பார்க்கும்போது ஞானமடைகின்றார். இன்னொருவர் பனியில் உறைந்துபோன கையை வெட்டும்போது ஞானமடைகின்றார். அவரே போதிதர்மரின் சீன மரபில் வரும் ஸானில் இரண்டாம் பரம்பரை ஆசிரியராக இருக்கின்றார். இன்னொருவர் தனது முகத்தின் விம்பத்தை நீரில் பார்க்கும்போது தன்னிலை அடைகின்றார். இவ்வாறு எண்ணற்ற கதைகள் அசல் முகம் எதுவாக பிறப்பதற்கு முன் இருந்தது எனத் தேடியபோது நடந்தவையென ஸென் மரபில் இருக்கின்றன.

எனக்குக் காலத்தை ஒரு நேர்கோட்டில் வைத்துப் பார்க்கும் கற்பனைகள் அடிக்கடி வருவதுண்டு. அதாவது கடந்தகாலத்தில், நிகழ்காலத்தில், எதிர்காலத்தில் தோன்றிய/தோன்றும்/தோன்றபோகும் அனைவரையும் ஒரு நேர்கோட்டுத் தெருவில் நடந்துபோகின்றவர்களாகக் கற்பனை செய்வதுண்டு. கடந்தகாலத்தில் காலமாகிப் போனவர்கள் இப்போதும் நடந்து கொண்டிருப்பார்கள் என்றும், இப்போது நடக்கும் நாங்கள் அவர்களைச் சந்திக்க முடியாவிட்டாலும் அதே பாதையில் நடமாடிக் கொண்டிருப்பதாகவும் நினைப்பதுண்டு.

மேலும் காலம் உறைந்து போகுமா அல்லது காலம் என்னவாகும் என்ற கேள்வியை சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சத்திரசிகிச்சைக்காக மயக்கத்தில் ஆழ்த்தியபோது எனக்குள் எழுந்திருந்தது. சில மணித்தியாலங்கள் என்னை மயக்கத்தில் ஆழ்த்தி சத்திரசிகிச்சை செய்தபோது எழுப்பியபோது, அப்போது எனக்குரிய காலம் என்னவாக இருந்தது. எனக்கு அப்போது இந்த உலகத்தில் நிகழ்ந்தது எதுவுமே தெரியாது. அப்போது எனக்குரிய காலம் என்னவாக இருந்தது. அந்த மணித்தியாலங்களில் எனக்கு கடந்தகாலமோ நிகழ்காலமோ, ஏன் நிகழ் என்பது கூட என் மனதுக்கு இருந்திருக்காது. அதை ஒரு 'பற்றற்ற மனோநிலை' எனச் சொல்லலாமா?

சிலவேளைகளில் ஞானமடைந்தவர்கள் இவ்வாறு ஒரு கடந்தகால/எதிர்காலமற்ற ஓர் அந்தரமான வெளியில்தான் தமது நிகழ்காலத்தைத் தரிசிப்பார்களோ என்று அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. நான் மீண்டும் 'மயக்க நிலையில் இருந்து மீள்வேன்' என்பதால் எவ்வித பதற்றமுமில்லாது என் சுயம் உறக்கத்திலிருந்தோ, அப்படித்தான் மரணத்தின்போதும் -இந்த வாழ்வை முழுமையாக ஏக்கங்களோ/ஏமாற்றங்களோ இல்லாது வாழ்ந்துவிட்டுப் போனால் - மரணங்கூட இப்படியான நிம்மதியான நிலையாயிருக்குமோ என்று எண்ணுவதுண்டு.



2.

எனக்குத் தெரிந்த சிலர் அவர்களுக்குத் தமது கடந்தகால வாழ்வு நன்கு தெரியும் என்று சொல்வார்கள். எனது நண்பர் ஒருவர் தான் கடந்த பிறப்பில் ஒரு வண்ணத்துப் பூச்சியாக இருந்தேன் என்று உறுதியாகச் சொல்வார். அவர் எங்கே வண்ணத்துப்பூச்சியைக் கண்டாலும் ஆழமாக அவற்றை இரசிக்கத் தொடங்கி விடுவார். நான் யாரென்றோ, எங்கே இருக்கின்றேன் என்ற பின்புலமோ தெரியாமலே அவர் என்னோடு முதன்முதலாகப் பேசத் தொடங்கியதே, ஒரு வண்ணத்துப்பூச்சியை நான் எடுத்த புகைப்படத்தின் மூலந்தான். 


அவர் கடந்த பிறப்பில் வண்ணத்துப்பூச்சியாக இருந்திருப்பின், என்னுடைய அசல் முகம் அப்போது எதுவாக இருந்திருக்கும்? அதை நான் அவ்வப்போது அவரோடு பழகிய காலங்களில் என்னிடமே கேட்டதுண்டு. அந்தக் நண்பருக்கு வண்ணத்துப்பூச்சி மட்டுமல்ல, அவரின் இளவயதில் இறந்துபோன அம்மா கூட ஒரு மரமாகக் காட்சியளிப்பார். அந்த மரத்தை நானும் நன்கறிவேன். நாங்கள் அதைக் கடந்துசெல்லும்போது அவர் அதனோடு (உள்மனதில்) பேச நிறைய நேரமெடுத்துக் கொள்வார். அந்த மரத்தைப் பார்த்து மனம் நெகிழ்ந்து கண்ணீர்விடக்கூடியவராகவும் அவ்வளவு நெருக்கமானவராக அதனோடு இருந்திருக்கின்றார்.

எனக்கும் இப்படியான பல 'பைத்தியக்காரத்தனங்கள்' இருப்பதால் அவரை எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. பின்னர் ஒருநாள் அவரது துணைவரோடும், குழந்தையோடும் நடந்து போனபோது அந்த மரத்தைக் கண்டு நெகிழ்ந்ததைப் பற்றி என்னோடு பகிர்ந்திருந்தார். அவர்களுக்கு அது சற்று வியப்பாக இருந்ததாகவும், அந்த மரத்தை தான் அணைத்துக்கொண்டதைப் புரிந்துகொள்ளக் கடினமாகவும் இருந்தது என்றும் சிரித்தபடி சொன்னார்.

அவரைப் போன்றவர்கள் எளிதில் தியானத்தில் அமிழமுடிவதையும் அவதானித்திருக்கின்றேன். அவரோடு பழகிய காலங்களில் அவருக்கு அறிமுகமான ஒரு தியான நிலையத்துக்கு என்னைக் கூட்டிச் செல்வார் (அதன் பெயர் வேண்டாம்). அவர்கள் கடவுள் என்ற எதையும் அடையாளப்படுத்திச் சொல்வதில்லை. தியானத்தின்போது மெளனமாகச் சுவரைப் பார்த்து இருக்க வேண்டியதுதான். ஆனால் தியானம் முடிந்தபின் வெவ்வேறுவகையான பின்-தியானச் செயற்பாடுகள் இருக்கும். அதில் ஒன்று வட்டமாக சுற்றி நடந்தபடி ஒவ்வொருவரின் முகத்தைப் பார்ப்பது.

சும்மாவே எனக்கு எவரின் கண்களை நேரடியாகப் பார்க்கும் சிக்கல் சிறுவயதுகளில் இருந்தே இருக்கின்றது. அதுவும் அறிமுகமற்ற மனிதர்களின் முகத்தை உற்று சில நொடிகள் பார்ப்பதும் பிறகு நடப்பதும் என்றால் எவ்வளவு கடினமாக இருக்கும்? ஆனால் இந்தப் பயிற்சியின்போது என் நண்பரின் முகத்தை நேரடியாகப் பார்க்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் என்னையறியாமலே சிரிப்பு வந்துவிடும் (நம்புங்கள் நண்பர்களே, சும்மா பொழுதில் சிரிக்கவே அடம்பிடிப்பவனுக்கு அப்போது சிரிப்பு நிறைய வந்தது). இதையேன் சொல்கின்றேன் என்றால், தியானத்தை விட, தியானத்துக்குப் பிறகான செயற்பாடுகளில் நான் நிகழில் நிறைய இருந்திருக்கின்றேன் என்று குறிப்பிடுவதற்காகத்தான்.



3.

நாம் கடந்தகாலத்தைக் காவிக் கொண்டிருவதால், நிகழ்காலத்தில் இருந்துகொண்டு, எதிர்காலத்தை பற்றித் திட்டமிடுகின்றோம். ஆகவேதான் தேவையற்ற நிறைய விடயங்களைக் கற்பனை செய்து கொள்கின்றோம். ஒருவகையில் நமது கடந்தகாலம் நம்மை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லும் பாடங்களைக் கற்பிப்பதாக மனம் நினைத்துக் கொள்கின்றது.

எனது ஆசிரியரான தாயிடம் இளவயதில் சென்று இப்போது பிரான்சிலிருக்கும் மடாலயத்தை நடத்தி வருபவர்களில் முதன்மையானவர் Brother Phap Huu. அவர் கனடாவுக்கு தப்பிவந்த வியட்னாமிய அகதிகளின் மகன். நான் இருக்கும் நகரிலேயே வளர்ந்தவர். அவர் தாயிடம் சேரும்போது, தொடக்க காலங்களில் தான் அவ்வளவு விரைவாகவும் நிறையவும் சாப்பிடுவேன் என்று சொல்லியிருக்கின்றார்.

எல்லா ஸென் இடங்களைப் போல, சாப்பிடுவது கூட தாயினுடைய இடத்தில் ஒரு தியானம் போன்றது. அவ்வளவு மெதுவாகவும், அமைதியாகவும் சாப்பிடவேண்டும். இது Phap Huuவை மிகக் கஷ்டப்படுத்துகின்றது. அவர் எவ்வளவு தன்னால் முயன்றபோதும் நிதானமாகச் சாப்பிட முடியவில்லை என்கின்றார். பின்னர் அவர் இதை ஆழமாக யோசித்தபோதுதான், அது தனது பெற்றோரிடமிருந்து வந்ததென்று கண்டுபிடிக்கின்றார். போர்க்காலத்தில் விரைவாகவும், நிறையச் சாப்பிடுவதும் முக்கியமானது. நாளைக்கு உணவிருக்குமா இல்லையா என்பதே பெரிய கேள்வியாக அங்கே இருக்கும். அதுவே தாங்கள் கனடாவுக்கு வந்தபோதும் விரைவாகவும், நிறையச் சாப்பிடுவதற்கும் முக்கிய காரணமாக இருந்தது என்கின்றார். ஒருவகையில் உணவென்பது போரின் மிச்சங்களைக் காவிக் கொண்டிருக்கின்றது; அதைக் கண்டுபிடிக்க தனக்கு நிறைய நாட்கள் எடுத்ததென்கின்றார்.

இவ்வாறு நாம் பல கடந்தகால விடயங்களை அச்சத்தினால் பாதுகாப்பு என்ற பெயரில் காவிக் கொண்டிருக்கின்றோம். ஈழத்தமிழர்களாகிய நம்மில் பலர் கையில் சிறு சேமிப்பு கூட இல்லாது போரின் காரணமாகப் புலம்பெயர்ந்துவிட்டு, அந்த அச்சம்/எதிர்காலப் பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்போது தமது வாழ்நாளையே பணம் சம்பாதிப்பதற்காக அர்ப்பணித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். இந்த நாட்டில் ஒரளவு உழைப்புடன் எளிய வாழ்வை - நாம் யுத்ததில் இருந்ததைவிட நிம்மதியாக- வாழலாம் என்றாலும் எங்களில் பெரும்பாலானோர்க்கு அது முடிவதில்லை. எங்களில் பலர் நாளைக்கு நாம் எமக்கு விருப்பமான வாழ்வை வாழமுடியும் என்று கனவுகளுடன் இன்றைய பொழுதுகளை தமக்குரியதாக வாழமுடியாது அந்தரப்பட்டு வாழ்ந்து கொண்டு இருப்பதையும் அறிவேன். இன்றில் வாழமுடியாது போனால், நாளை நமக்கு எதனைத்தான் அப்படி அர்த்தமுள்ளதாகக் கொண்டுவரப் போகின்றது?

ஆகவே நாமெல்லோரும் 'எமது அசலான முகம் நாம் பிறப்பதற்கு முன் எதுவாக இருந்தது?' என்று கேட்டுப் பார்ப்பது நல்லது. அது நம்மை மீண்டும் மீண்டும் நிகழுக்குக் கொண்டு வந்து சேர்க்கும். இந்த உடலும் மனமும் இந்தக் கணத்துக்குரியதே. இந்தப் பொழுதில் நாம் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இருக்கின்றோமா அல்லது நிம்மதியும் சந்தோசமும் நாளை வந்துவிடும் என்று கற்பனை செய்துகொண்டிருக்கின்றோமா அல்லது கடந்தவந்த காலங்கள் பொற்காலமென ஏங்கிக் கொண்டிருக்கின்றோமா என்று நிகழில் நின்று நிதானித்துப் பார்ப்பது அனைவர்க்கும் நன்மை பயக்கக் கூடியது.

***********


(Jan 07, 2025)

வாசகர் கடிதம்

Thursday, January 30, 2025

இறுதியில் எழுதிய பதிவான (மழைக்காலத் தனிமை - 04) இற்கு ராஜேஷ் அருமையான பின்னூட்டமொன்றை எழுதியிருந்தார். அதை இங்கே தனியே பதிந்து விடுகின்றேன். அந்தப் பதிவை எழுதி முடிக்கும்போது கிட்டத்தட்ட காலை மூன்று மணி. எனினும் நான் நினைத்ததை எழுத முடிந்ததா என்ற சந்தேகம் இருந்தது. இந்தக் காலையில் இதை வாசிக்கும்போது சிறு நிறைவு. மிக்க நன்றி ராஜேஷ்.
*******************

“நான் மிகச் சரியாக உங்களை என் சகனாக கண்டடைந்தேன்..நீங்கள், நான் தொகுக்க முயலாத, (உண்மையில் விரும்பாத) என் சில அக அனுபவங்களை எளிதாக வார்த்தைகளாக்குகிறீர்கள், மேலதிகமாக உங்களுக்கு ஒரு பரந்த தத்துவ மற்றும் இலக்கிய வாசிப்புத் தளமும், பயணமும், தீராத மெய்த் தேடலும் உள்ளது, மேலும் மிகவும் அச்சுறுத்தும் அல்லது வாழ்விலிருந்து கசப்பும், நொய்மையும் மட்டுமே எஞ்சும் ஒரு பின்புலம் கொண்டவராகிலும், வாழ்வின் மீது இன்னும் தீராத காதலும் கொண்டவராக உங்களைப் பார்க்கும் பொழுது சமயங்களில் எனக்கு அன்பு கலந்த பொறாமையுணர்வும் எழுகிறது.

மேலும், முகநூல் போன்ற எந்த உள்ளார்ந்த தனிநபர் அனுபவமும் மலினப்பட்டுவிடும் அவசர கதி ஊடகங்களில், யாதொன்று குறித்தும் அலட்டிக் கொள்ளாமல் உங்கள் மனதை முன் வைக்கும் திடம் நிச்சயம் என்னை பொறாமை கொள்ளச் செய்கிறது.

மனம், எண்ணம், வெறுமை, சுயம் போன்றவற்றை மிகச் சிரமப்பட்டு மறக்க விழைபவன் என்ற வகையில், நியாயமாக நான் உங்களை வாசிப்பதைத் தவிர்க்க வேண்டும்.ஏனோ, மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்.

குறிப்பாக நீங்கள் இன்று குறிப்பிட்ட Eckart Tolle யுடைய Power of Now புத்தகத்திலிருந்த அவரது அனுபவம், இந்த தவிப்பும், தனிமையும் கொண்டு ஒரு குருவைத் தேடி, கண்டடைந்தும் அவர்களிடம் தம் கேள்வியை முழுமையாகக் கூட முன் வைக்க முடியாமல் மருகும் பல Seekers அவர்களது அனுபவங்களை படிக்கும் பொழுதும் பார்க்கும் பொழுதும், சாமத்தில் தேம்பும் சிசுவுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும் போன்ற சுய பச்சாதாபத்தை அடைந்திருக்கிறேன்.

இது ஒரு சுழல், ஒரு வழிப்பாதை, நீங்கள் ஒன்று கண்டடைய வேண்டும், அல்லது அதன் யத்தனத்தில் காணாமல் போக வேண்டும்.இடையில் எஞ்சும் அனுபவங்களை எழுதி வைத்தால், யாருக்காவது உதவக் கூடும்.

நான் எதேச்சையாகக் கண்டடைந்த Wayne wirs என்ற நாடோடி வெகு நாட்கள் என்னை அலைக்கழித்தார்.

மெல்ல மெல்ல அத்வைதம் அல்லது Non Duality குறித்து அறிந்து கொண்டேன்.ரமணர் எனக்கு நெருக்கமாக இருந்தார்..ஒரு மாபெரும் தொடர்ச்சியை அவர் உருவாக்கியிருந்தார் என பின் அறிந்து கொண்டேன்.ஓஷோ ரமணர் குறித்து ஏதோ ஒரு உரையில் குறிப்பிட்டிருந்தார். ஆன்மீகத்தை ஏதோ ஒரு மலையுச்சி மூடு மந்திரமாக அன்றி, இயல்பான வாழ்கை முறையாக பகிர்ந்து கொள்ளும் பல விழிப்புணர்வு பெற்ற ஞானிகள் இக்காலத்திலும் இருக்கவே செய்கின்றனர்.

இப்பொழுது மனம் கொஞ்சம் ஓய்வில் இருக்கிறது.ஒருவகையில் இது கற்றதை மறக்கும் கால இடைவெளி, அந்த பேய் திரும்பும் நாள் குறித்த அச்சம் இன்னமும் இருக்கிறது..அது என்னை அல்லது நானென நான் நம்பிக் கொண்டிருக்கும் எதையும் இழப்பது குறித்த அச்சம்.

ஞானமடைந்த இருவர் சந்தித்துக் கொண்டால், அவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள் என அவ்வப்போது நினைப்பேன்..

சமீபத்தில் எம்.டி.எம்மின் ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொள்ளும் கவிதைத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மற்றொரு அச்சமூட்டும் அழகான தொகுப்பு.”


******

(Jan 05, 2025)

கார்காலக் குறிப்புகள் - 68

Wednesday, January 29, 2025

 

கலை அழைத்துச் செல்லும் பாதை
***************

உஷா ஜேயைப் (Usha Jey) பற்றி பலர் அறிந்திருப்பீர்கள். பரத நாட்டியத்தை ஹிப் ஹொப்போடு கலந்து Hybrid Bharatham என்கின்ற புதிய வகை நடனத்தை அறிமுகம் செய்கின்றார். அண்மையில் அவர் மும்பையில் கொடுத்த TedTalk ஐ பார்த்திருந்தேன். தானொரு தமிழர், யாழ்ப்பாணத்தில் பிறந்து பிரான்சில் வசிக்கின்றார் என்று ஓர் அறிமுகத்தைக் கொடுக்கின்றார். உஷா இந்த நடனங்களின் புகழால் பல முன்னணி நிறுவனங்களின் (Elle, Levis, Converse) விளம்பரங்களில் வந்திருக்கின்றார். ஒரு புலம்பெயர்ந்த அகதி வாழ்வில் தனது சொந்தத் திறமையால் ஒருவர் இந்தளவு உயரத்துக்கு பறப்பது அவ்வளவு எளிதல்ல.. நாம் இவ்வாறான இடங்களை அடைவதற்கு நமக்கு எந்த முன்னோடிகளும், பின்புலங்களும் இல்லை என்பதை அறிவோம் இல்லையா?

சில வருடங்களின் முன், இங்கிலாந்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு நிகழ்விலும் இவர் நடனம் ஆடியிருக்கின்றார். ஆங்கிலேயர் தம் காலனித்துவ பெருமைகளோடு இன்னுமிருக்கும் நாட்டில் தமிழ்க்கலாசாரத்தை பிரதிபலிக்கும் குத்துப்பாட்டுக்கு ஆடியதுதான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.

எனக்குத் தெரிந்து உஷா ஜே, நவனீ (Navz-47), ஷோபியா அக்கரா போன்ற பல பெண்கள் தங்களுக்கு முன்னோடி என்று மாயா அருட்பிரகாசத்தை (M.I.A) குறிப்பிடுகின்றார்கள். உஷா, நவனீ போன்றவர்கள் மாயாவின் இசை நிகழ்விலும் இப்போது பங்குபற்றியும், மாயாவோடு உரையாடல்களையும் செய்து கொண்டிருப்பார்கள். ஒரு பெண் (மாயா) முன்னோடியாகச் சென்று திறப்பைச் செய்யும்போது எத்தனை பேருக்கு அவர்களின் கதவுகள் திறக்கின்றன என்பது எவ்வளவு அருமையானது.

இதனோடு இன்னொரு புறமாக நோர்வேயிலிருந்து '9 Grader Nord' குழுவை உருவாக்கி நம்மிரு பெண்கள் பாடி நோர்வேயின் மிகப்பெரும் விழாவில் (அவர்களின் கிராமி போன்றது) வென்றிருக்கின்றனர். அத்தோடு நவனீ, 9 Grader Nord போன்றவர்கள் தனித்து தமிழில் பாடுபவர்கள். தமிழில் பாடிக்கொண்டு தமிழ் பேசாத அந்நிய நிலங்களில் தமது வேர்களை ஊன்றிக்கொள்வதென்பது எவ்வளவு அற்புதமானது.

எமது தமிழ்ச் சூழலில் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிக்கும்போது out of box ஆக நினைப்பது வெகு அரிது. வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும் விரும்பியவர்கள் வரட்டும். அதுவும் தேவையானதுதான். ஆனால் அதைத்தாண்டி வளரும் பிள்ளைகளை நாம் எந்தளவுக்கு ஒரு சமூகமாக ஆதரிக்கின்றோம் என்று யோசிக்க வேண்டும். எந்தப் பிள்ளைக்குத் திறமையிருந்தாலும் ஒருகட்டத்தில் அவர்களைத் தாங்கிக்கொள்ளும் சமூகப்பாதுகாப்பும், பொருளாதார நிலைமையும் வேண்டியிருக்கும். நாம் அந்தச் சமூகக்கட்டமைப்பை இத்தனை காலத்துக்குப் பிறகும் அவர்களுக்காக உருவாக்கவில்லை என்பதுதான் பெருஞ்சோகம் .

அவர்களாகவே எல்லாவற்றையும் தாங்கி, அடிபட்டு மேலோங்கி வரும்போது மட்டும் ஆகா ஓகோவென்று புகழ்கின்றோமே தவிர, அவர்களின் கலை சம்பந்தமான வளர்ச்சிப்பாதையில் சமூகமாக நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்று யோசிக்க வேண்டும். மாயா இசையில் செய்ததைப் போன்று இப்போது மைத்திரேய் ராமகிருஷ்ணன் ('Never Have I Ever:) ஒரு பெரும் உடைப்பை திரையில் செய்திருக்கின்றார். அவரை முன்னோடியாகக் கொண்டும் ஒரு தலைமுறை இனி திரையை நோக்கி ஆர்வமாக உழைக்கும் என்று நம்புகின்றேன்.

*******

(Jan 11, 2024)