நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

போத்ரியாரும், 'தீவிரவாதமும்'

Thursday, May 08, 2008

-ழான் போத்ரியாரின் The Spirit of Terrorism & Other Essays தொகுப்பை முன்வைத்து-

நாமின்று நான்காவது உலகப்போர்க் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதாக ழான் போத்ரியார் கூறுகின்றார். முதலாவது உலகப்போரும், இரண்டாவது உலகப்போரும் நேரடியான செவ்வியல் போர் முறைகளைக் கொண்டதுபோலவன்றி மூன்றாம் நான்காம் உலகப்போர்கள் வேறு முறையில் நிகழ்ந்தன/ நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்கின்றார். முதலாம் உலகப்போர் ஐரோப்பிய நாடுகளின் மேலாதிக்கத்தையும், காலானியாதிக்கத்தையும் முடிவுக்கு கொண்டுவந்ததுபோல, இரண்டாம் உலகப்போர் நாஸிசத்தை முடிவுக்கு கொண்டு வந்ததென்கின்றார். அதேபோன்று, மூன்றாம் உலகப்போர், பனிப்போரும் (cold war), அதைத் தடுப்பதுமாக நிகழ்ந்தது எனவும், அதன் இறுதியில் கொம்யூனிசம் முடிவுக்கு வந்தது என்ற அவதானங்கள் அவரால் முன்வைக்கப்படுகின்றன. நான்காம் உலகப்போர் உலகமயமாதலின் மூலம் நிகழ்கின்றதெனக்கூறும் போத்ரியார், 'வெற்றி கொள்ளப்பட்ட ஒவ்வொரு உலகப்போரின் பின்னாலும்' நாங்கள் ஒற்றை உலக ஒழுங்கிற்குள் (single world order) செல்ல மிகவும் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றோம் என்பதோடு, நிகழ்ந்துகொண்டிருக்கும் நான்காம் உலகப்போர் பெரும் நெருக்கடிகளை நம் எல்லோருக்கும் கொண்டுவரும் எனவும் எச்சரிக்கிறார்.


போத்ரியார், 'தீவிரவாதத்தை' மீமெய்யின் (hyper-real) மூலம் வரையறுக்க முயல்வதோடு, மேற்கின் தத்துவவியல், அறிவொளிக்காலத்தின் தவறான விளங்கிக்கொள்ளல்கள் மூலம் ஆரம்பிக்கின்றதென்கின்றார். அதாவது அறிவொளிக்காலத்தில் நல்லது x தீயது (Good X Evil) என்பதற்கான ஊடாடல்களே அதிகம் விவாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதைக் கவனப்படுத்துகிறார். 'நல்லதை' எல்லா இடங்களிலும் பரவச்செய்வதன் மூலம் 'கெட்டதை'த் தோற்கடிக்க முடியும் என்று அங்கே சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் உண்மையில் நல்லதும் கெட்டதும் ஒன்றாய்ச் சேர்ந்தே வளர்கின்றது. 'நல்லது' என்பது ஒருபோதும் 'தீயதை' வெற்றிகொள்வதில்லை; அதேபோன்று 'தீயதும்', 'நல்லதை' வெற்றி கொள்வதில்லை. இவையிரண்டும் எதிரெதிரான முனையில், ஆனால் ஒன்றையொன்று சார்ந்து -ஒன்றில்லாது மற்றதில்லை என்பதுமாதிரி- இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆகவே உண்மையில் 'நல்லதை' எவ்வளவுக்கு எவ்வளவு வளர்க்கின்றோமோ அதேயளவு 'தீயதும்' தானாகவே அதனோடு சேர்ந்து வளரத்தொடங்கிவிடுகின்றது என்ற அபாயத்தை நாமனைவரும் மறந்துவிடுகின்றோம் என்கிறார் போத்ரியார். அதற்கான ஒரு எளிய உதாரணமாய் 9/11 பின் ஆப்கானிஸ்தான், ஈராக்கில் நடந்த அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்களைக் குறிப்பிடுகின்றார். 'தீவிரவாதத்தை' அழித்து 'நல்லதை' நிலைநாட்ட எனக்கூறப்பட்ட தாக்குதல்கள் இனனுமின்னும் அதிகமாய் 'கெட்டதை', அதாவது 'தீவிரவாதிகளாய்' மாற வழிவகுத்தது என்கிறார்.

ஒரு வழக்கான பிரபஞ்சத்தில் நல்லதும் கெட்டதும் ஒரு சமநிலையில் (equilibrium) தங்களுக்கான இடங்களில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவ்வாறு குழப்பமடையாமல் இயங்கும் சூழலே உலகின் அரசியல்களுக்கும் அவசியம், ஆனால் அது பனிப்போர்க்காலத்தில் இரண்டு வல்லரசுகளால் பேணிக்காக்கப்பட்ட சமநிலை போன்றது அல்ல என்கிறார் போத்ரியார். ஏனெனில் அவ்வாறான சமநிலை (ஒரு வல்லரசின் மேலாதிக்கம்) குழப்பப்பட்டபோது இன்னொரு வல்லரசின் மேலாதிக்கத்தால் அது சொல்வது/செய்வது மட்டுமே 'நல்லது' என்பதை நாம் எல்லோரும் வலிந்து ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம் என மேலும் குறிப்பிடுகிறார். இவ்வாறான ஒற்றைத்தன்மைக்குள் போனபடியால், கெட்டது நமக்குப் புலப்படாத இடங்களிலிருந்து வளர்ந்து 'தீவிரவாதமாய்' வெடித்துக் கிளம்பியிருக்கின்றது என்பது அவரது கருத்தாகிறது.

இவ்வாறான புள்ளிகளிலிருந்தே 'தீவிரவாதம்' உருவாகின்றது என விளக்க முயல்பவர், இன்று இஸ்லாம் -அமெரிக்காவுக்குப் பதிலாக- மேலாதிக்க நிலையில் இருந்திருந்தால் கூட இஸ்லாமிற்கெதிரான 'தீவிரவாதம்' உருவாகியிருக்கும் எனக் குறிப்பிடுகின்றார். உலகமயமாதலின் துரித வளர்ச்சியால் இன்றைய 'தீவிரவாதம்', அமெரிக்கா X இஸ்லாம் என்ற எல்லையைத் தாண்டிச் சென்றுவிட்டதென கூடவே எச்சரிக்கவும் செய்கின்றார். போத்ரியாரால் முன்வைக்கப்பட்ட, பலரால் மிகவும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட, 'வளைகுடாப் போர் நிகழவேயில்லை' என்பதன் தொடர்ச்சியிலிருந்து போத்ரியார் 9/11 தாக்குதல்களைப் பார்க்கின்றார்.. அதில் அவர், வளைகுடாப்போர் களத்தில் நிகழ முன்னரே, ஊடகங்களால் தீர்மானிக்கப்பட்டு, இப்படியிப்படி நிகழப்போகின்றதென்றது என ஒழுங்கமைக்கப்பட்டுவிட்டது. எனவே அவ்விதத்தில் பார்க்கும்போது, வளைகுடாப் போர் நிகழவில்லை அல்லது 'உண்மையான போர்' நிகழ முன்னரே ஊடகங்களால் போர் நிகழ்த்தப்பட்டு முடிந்துவிட்டதென்கிறார். அவ்வாறு கூறியவர், 9/11 தாக்குதல்தான் இவை எல்லாவற்றுக்குமான தாய்ப் போர் என்கிறார். ஏனெனில் 9/11 போர் எவராலும் எதிர்பார்க்கப்படாத, இப்படி நிகழுமென்ற எந்த சாத்தியங்களுமற்று நிகழ்ந்ததென்கிறார்.

உண்மையில் இன்று மேற்கு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 'தீவிரவாதம்' மேற்கு நாடுகளாலேயே உருவாக்கப்பட்டது. அது எப்படியெனில் ஒரு அமைப்பு தன்னளவில அளவுக்கதிகமான அதிகாரங்களைக் கொண்டிருக்கும்போது, அவ்வமைப்பு தீர்க்கமுடியாத/விடையளிக்க முடியாத பல சவால்களைச் சந்திக்கத் தொடங்குகின்றது. அப்படிப்பட்ட சவால்களின் மூலம் எதிர்முனையில் வளர்ச்சியடைந்தவர்களே 9/11 தாக்குதல்களின் மூலம் மேற்குக்கு எதிர்வினை ஆற்றியுள்ளார்கள் என்கிறார் போத்ரியார். அதன் ஆரம்ப அதிர்வு, கணக்கிட்டுப் பார்க்கமுடியாத எண்ணற்ற விளைவுகளை உலகெங்கிலும் உருவாக்கியிருக்கின்றதென்கிறார்.

இதுவரை தமது ஆட்டத்தை, தமக்கான விதிகளுடன் தம்பாட்டில் ஆடிக்கொண்டிருந்தவர்களை, இத்தாக்குதல் (9/11) மூலம் குழப்பியவர்கள், மேற்கு தனது ஆதிக்கமாய் வைத்திருந்த அதன் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி அவற்றை அவர்களுக்கு எதிராகவே 'தீவிரவாதிகள்' பயன்படுத்தியுள்ளார்கள் என மேலும் கூறுகிறார். அது எப்படியெனில் மேற்குலகின் விமானங்கள், கணனி தொழில்நுட்ப அறிவு போன்றவற்றோடு, தாக்குதலுக்கான நேரம் வரும்வரை அவர்கள் மேற்குலகில் ஒருவராகவே உண்டு உறங்கி மேற்குலகோடு இருந்திருக்கின்றார்கள் (அதாவது இனி தனியே 'தீவிரவாதிகள்' என்று தேடுவதோ, அழித்தலோ முழுதாய் சாத்தியப்படாது அல்லது அப்படி கூறி நடந்துகொண்டிருக்கும் 'தீவிரவாதத்திற்கான போர்' ஒரு ஏமாற்று வித்தையே என்பதைப் போத்ரியார் கவனப்படுத்த விரும்புகின்றார் என்பதாகவும் நாம் வாசித்துக்கொள்ளலாம்). உலகின் வர்த்தக மையமாகக் கொள்ளப்பட்ட இரட்டைக் கோபுரங்களின் மீது துல்லியமாகத் தாக்குதல்கள நடத்தி, உலகமயமாதலிற்கும், மேற்கின் முதலாளித்துவத்திற்கும், அதன் கலாசாரத்திற்கும் எப்போதும் எங்கேயும் தாக்குதல்களை நடத்திக் குழப்பமுடியும் என்பதை 'தீவிரவாதிகள்' நிரூபித்துள்ளார்கள் என்பதை போத்ரியார் குறிப்பிடுகிறார்.

மேற்குலகந்தான் தீவிரவாதத்தை உருவாக்கியது என்று விவாதிக்கும் -இத்தொகுப்பிலுள்ள -The spirit of Terrorism & Requiem for the twin towers -ஆகிய கட்டுரைகளுக்காய், போத்ரியார் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றார் என்று பலரால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோது அவர் அதை மறுத்திருக்கிறார். 'நான் ஒருபோதும் இவ்வாறான கொலைகாரத் தாக்குதல்களை விதந்து உரைத்ததில்லை; அது முட்டாள்தனமானதுங்கூட. தீவிரவாதம், ஒடுக்குதலுக்கும், முதலாளித்துவதற்கும் எதிராகப் போராடக்கூடிய ஒரு புரட்சிக்குரிய வழியுமல்ல. அது எந்த வகையான கருத்தாக்கத்தையோ, ஒடுக்குதலுக்கு எதிராய் போராடக்கூடிய உரிய வழியைக் கொண்டதோ அல்ல, இன்னுஞ் சொல்லப்போனால அடிப்படைவாத இஸ்லாமால் கூட, இதை விளங்கப்படுத்த முடியாது. நான் எதையும் பெருப்பிக்கவில்லை, எவரையும் குற்றஞ்சாட்டவுமில்லை, எதையும் நியாயப்படுத்தவுமில்லை. நான், எல்லைகளற்று விரிந்து கொண்டிருக்கும் உலகமயமாதல் அதன் அழிவிற்கான காரணங்களைத் தனக்குள் உருவாக்கத் தொடங்கிவிட்டதென மட்டுமே இந்நிகழ்வுகளின் மூலம் (9/11) ஆராய முயன்றிருக்கின்றேன்' என்கிறார்.

போத்ரியாரின் இந்த நூலைப்போலவே, நோம் சோம்ஸ்கியின், 9/11 நூலும், அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட தீவிரவாதம் குறித்து மிக விரிவாக -நேரடியாக- பேசுகிறது 1995-ஒக்லஹோமா குண்டுவெடிப்பில் அமெரிக்க புலனாய்வுத்துறை குண்டு வைத்தவருக்கும், இஸ்லாமுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்று கண்டுபிடிக்க மிகவும் பிரயத்தனப்பட்டது எனவும் அவ்வாறு ஒரு சிறு துரும்பு கிடைத்திருந்தால் கூட, அப்போதே அமெரிக்கா எண்ணெய் வளமிருக்கும் ஏதேனுமொரு இஸ்லாமிய நாட்டை ஆக்கிரமித்திருக்கும் என்றும் சோம்ஸ்கி குறிப்பிடுகிறார். இன்னும் ஒக்லஹோமா குண்டுவெடிப்பு நிகழ்த்தியவரை தனியே பிரித்தெடுத்து அவரைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியது போலவன்றி ஏன் 9/11 தாக்குதலை முழு இஸ்லாமிற்கும் எதிரான போராக பிரகடனப்படுத்தி நாடுகளை ஆக்கிரமிக்கவேண்டும் எனவும் சோம்ஸ்கி கேட்கச் செய்கிறார். இவ்வாறான முரண்பாடுகளை, விம்பங்களைப் பெருக்குவதில் ஆர்வங்காட்டும் ஊடகங்கள் கவனிக்காது, ' தீவிரவாதத்திற்கான போர்' என்று அலறிக்கொண்டே பார்க்கும்/கேட்கும் எங்களையும் விம்பங்களின் உலகில் வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன என்பதும், நாமும் அவையேதான் உண்மையென நம்பிக்கொண்டிருப்பதுந்தான் எவ்வளவு கவலையானது.


...தொடர்பாய் வாசித்தவை/உதவியவை:
(i) 9/11, Noam Chomsky

(ii) America, Jean Baudrillard
(iii) Baudrillard, Globalization and Terrorism, Douglas Kellner
(iv) போத்ரியாவை மறந்துவிடுங்கள், ரவிக்குமார் (காலச்சுவடு)
(v) ஐந்தாண்டுக்காலப் போர்-2,
நாகார்ஜூனன் (திணை, இசை, சமிக்ஞை)

(வைகறைக்காய் எழுதியது)

2 comments:

ரவி ஸ்ரீநிவாஸ் said...

மிகவும் கவர்ச்சிகரமான எளிமைப்படுத்தலாக இந்தக் கருத்துக்களை கருதுகிறேன்.
இந்த இஸ்லாமிய தீவிரவாதம்
மேற்கிற்கு எதிரானது மட்டுமல்ல,
இந்தியா போன்ற நாடுகளுக்கும்
எதிரானது. இதைப் புரிந்து
கொள்ள போத்ரியாரும்,சோம்ஸ்கியும்
எழுதியுள்ளவை உதவாது என்று
கருதுகிறேன்.

5/09/2008 10:12:00 AM
இளங்கோ-டிசே said...

இரவி, போத்ரியாரும், சோம்ஸ்கியும் இந்த விடயங்கள் குறித்து விரிவாகவே எழுதியிருக்கின்றார்கள்; அது நீங்கள் அறியாததுமல்ல. எளிமைப்படுத்தலாயும் கவர்ச்சிகரமானதிற்கும் நான் உள்வாங்கிக்கொண்டதன் பலவீனமே தவிர அவர்களின் பலவீனங்களல்ல. ஆனால் இவர்களின் கருத்துக்களுக்கு நிகராகத்தான் எட்வேர்ட் சையது, அருந்ததி ரோய் போன்ற மூன்றாகவுலக நாடுகளில் வாழ்ந்தவர்கள்/வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் சொல்கின்றார்கள் என்பதும் ஒரு குறிப்பாய்.
....
'தீவிரவாதத்தின்' இன்றைய நிலையை ஆராயும்போது எங்கே, எவரால் ஆரம்பிக்கப்பட்டது என்றும் யோசித்துப் பார்க்கத்தானே வேண்டும். எய்தவன் இருக்க அம்பை மட்டும் நோவதில் பயனில்லையெனத்தான் இவர்கள் கூறவருகின்றார்கள் என விளங்கிக்கொள்கின்றேன். நன்றி.

5/11/2008 06:29:00 PM