(காலம், இதழ்-30 -எஸ்.பொ சிறப்பிதழில்- வெளிவந்தவை)
சேற்றில் சேமிக்கப்படும் நேசத்தின் கதகதப்பு
சிக்கலான ஆட்டமொன்றின்
புதிர்களாகும் நாம்
நிசங்களை
சுவரிலேறும் எறும்புகள் இழுத்துச்செல்வதை
கனவுகளெனப் பெயரிட்டோம்
சரசரவென்று வாழையைப்போல
வளர்ந்த நமது அறிதல்
எல்லா விரிசல்களும் சிறுவதிர்வில் தொடங்குவதான வரிகளை
வாழை பொத்தியாய் வெளித்தள்ளியவோர்
பருவமழைநாளில் வடிந்துபோயிற்று
அடியோடு வாழையை இல்லாமலொழிக்க
கீழே வளரும் புகையிலைக்கன்றுகள் விடுவதில்லை
இலைகிழித்து நாருரித்து காற்றின் வசைச்சொல் கேட்டு
நிலைத்திருப்பதன் வேதனையில்
சிறுமீன்குளத்து ஆம்பல்களும் சோர்கின்றன
வோட்டர்பம்ப் இறைக்க
மண்ணெண்ணெய் வாசனை நுகர்ந்து
பாத்திகளில் சேறப்ப
நீரைப்போலச் சுழித்தோடிய சிறுவனுக்கு
குறி ஒரு அடையாளமாவதில்லை
தண்ணென்றிருக்கும்
ஈரப்பலா முலைகளில்
முகம் புதைதிருக்குமென்னிடம்
நீ பிரிந்து போவதற்கான கடைசிவார்த்தைகளை அவிழ்க்கிறாய்
வாசனையற்று உதிர்கின்றன மல்லிகைப்பூக்கள்.
(May 14, 2007)
---------------------------------------
கொழும்பு
(அல்லது A Tale of Hell City)
வந்திறங்கியபோது
எழும்பிய இரண்டு கிபீர்கள்
இது என் நாடல்லவென்ற குரலை
இரைச்சலில் நெரித்துச் செரித்தன
வாசலில்நின்று கப்பம்கேட்டு கடத்திச்செல்லும் சகோதரமுகங்கள்
அந்நியனெனும் அடையாளத்தை
மரணத்தின் மொழியிலென் பயணப்பொதிகளிலெழுதிப்போந்தனர்
இங்கேதான்... இப்படித்தான்... வாழ்ந்துகொண்டிருக்கின்றோமென
தெருக்களில் குருதிதேடியலையும் வெயில்
வீட்டிற்குள் நுழையாதிருக்கும் ப-த-ட்-ட-த்-து-ட-ன்
சாளரங்களை இறுக்கிச் சாத்துகிறாய்
தாபத்தை வியர்வை கரைத்துக்கொண்டிருந்த நிசப்தப்பெருவெளியில்
நெருங்கிய உதடுகளை
வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த சுவர்ப்பல்லி
தீராப்பசியுடன் விழுங்கிற்று
'இனந்தெரியாதோரால்' கொல்லப்பட்ட மூவரின் உடலங்களை.
(Oct 03, 2007)
---------------------------------------
வதை
நா பிடுங்கப்பட்டு
வார்த்தைகள் சிதைக்கப்பட்ட நாளில்
மூன்று சிறகுகளுடைய பறவையொன்று
மொழியைக் காவியபடி பறக்கக்கண்டேன்
என்னைப் பிரகடனப்படுத்துவதென்பது
உனதிருத்தலை மறுப்பதல்லவெனும் கதகதப்பான சொற்களை
காற்றின் நாவுகள் ஈவிரக்கமில்லாது விழுங்கிச்செல்கின்றன
எப்போதுமித்தனிமையும் அலட்சியமும்
யாரையோ காயபடுத்திக்கொண்டிருக்க
மொழியைச் சாம்பர்வானத்தில் தூவிச்செல்லும் பறவைமீது
கல்லெறிந்து தம் வன்மத்தைக் கரைத்துக்கொள்கின்றனர்
மூன்றிலொரு சிறகை இலையுதிர்காலவிலையாய்
நீளுமிரவுகளின் மீது உதிர்க்குமென் பிரியபறவையின் செஞ்சொண்டறியும்:
சொற்களோடு இடையறாது போரிட்டுத்தோற்பதை
தனிமையெனப் பெயரிட்டென்னைத் தேற்று'வதை'.
(Oct 23, 2007)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
//நீ பிரிந்து போவதற்கான கடைசிவார்த்தைகளை அவிழ்க்கிறாய்
5/22/2008 11:13:00 AMவாசனையற்று உதிர்கின்றன மல்லிகைப்பூக்கள்.//
இது பிடித்துள்ளது.
அது சரி எறும்பிலிருந்து வாழை பின் பலாவா? வினோதக்கவிதை
பின்னிரண்டும் அருமை!
தொடர்ச்சியாக உங்களுடைய பதிவுகளுக்கு வந்தாலும் பின்னூட்டம் எழுதாமல் போய்விடுவேன் ஏனெனில் நான் அவற்றை வாசித்து விளங்கிக்கொள்கையில் அந்தப்பதிவுகள் நாட்பட்ட பதிவுகளாகிவிடும் ஆனால் இனி எத்தனைநாள் கடந்தாலும் பின்னூட்டம் போடுவது என்று முடுடிவு செய்திருக்கிறேன் உங்களோடு நிறைய பேசவேண்டும் என்று நினைப்பேன் ஆனால் நேரம்தான் கிடைப்பதில்லை...சரி சரி இந்தப்பதிவுக்கு வருவோம்...
5/22/2008 01:05:00 PMமுதல் கவிதையை எப்படி கோர்த்தீர்கள்...இப்படியான விடயங்களையும் கவிதைக்குள் சேர்க்க எப்படி கூடிற்று உங்களுக்கு இவ்வளவு சொற்களையும் எப்படி நினைவுகளில் சேமிக்கிறீர்கள்...!
மூன்றாவது கவிதையில் எதனை சொல்ல வருகிறீர்கள்?
கார்த்திக் & கிங் நன்றி.
5/23/2008 08:51:00 AM...
கிங், நமக்குப் பழக்கமான/பாதித்த விடயங்கள் அதிகம் நம் நினைவில் நிற்குந்தானே...மற்றது எழுதியவற்றுக்கு விளக்கங்கூறிக்கொண்டிருந்தால் அது வாசிப்பவர்களின் சுதந்திரத்தில் குறுக்கிடுவதாகிவிடும். உங்களுக்கு விளங்கிக்கொண்டதையே அதன் வாசிப்பாகக் கொள்ளுங்கள். ஒருவேளை நான் நினைத்து எழுதியதும், நீங்கள் விளங்கிக்கொண்டதும் ஒரே தளத்தில் சந்தித்துக்கொண்டால் அது இன்னும் இதத்தைத் தரக் கூடியதாகத்தானிருக்குமில்லையா? நன்றி.
Post a Comment