1.
உனக்கான இடம் இதுவல்லவென உனக்கு நன்கு தெரியும். பலமுறை பலவேறு சந்தர்ப்பங்களில் அது நிரூபிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனாலும் நீ சாமர்த்தியமாய் சில காரணங்களை உருவாக்கி அவற்றுக்காய்த்தான் இங்கே தொங்கி பிடித்துக்கொண்டிருக்கின்றேன் என்று கூறிக்கொண்டிருக்கின்றாய். உனது சுயம், உனது கர்வம், உனது கோபம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நீ நன்கறிவாய். இனி முதுகை இன்னுமாய் வளைப்பதற்கு முள்ளந்தண்டும், போலியாய்ச் சிரிப்பதற்கு உதடுகளும் இல்லையென்றாலும் ஒவ்வொரு முறையும் புதிய புதிய முகமூடிகளை அணிந்துகொள்வதற்கு நீ தயாராக இருக்கிறாய். உன்னுடைய கனவுகள் வேறுவிதமானவை என்று நீ செம்மண் தரைகளில் காற்சட்டை கழன்று விழ விழ ஓடிய நாட்களிலிருந்தே நாமனைவரும் அறிவோம். ஆனால் ஒரு மத்தியான நாளில் உனது மண்ணையும், (அரைக்)காற்சட்டைகளையும் நீ கைவிட்டு வந்தபின், உனது கனவுகளையும் கைவிட்டு வந்துவிட்டாயோ என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது. ஆனால் குளிர்காலத்தில் பெருங்காற்று வீச உனது அறைக்கண்ணாடி யன்னல் அலறுவதுபோல, உனக்கும் உனக்கான கனவுகள் அவ்வப்போது ஞாபகங்களில் வந்து போகின்றன. நீ தனிமையையும், உரையாடும் மெல்லிய குரல்களையும் விரும்புகின்றவனாய் இருந்திருக்கின்றாய். இப்போது எழும் உனது கடுமையான குரல்களில் நீ நீயில்லாதவனாகிப் போய்க்கொண்டேயிருக்கின்றாய். உன்னோடு உரையாடும் பிறரோடு அளவிறந்த அன்போடு உரையாடலைத் தொடரும் நீ, சடுதியாய் ஒருபுள்ளியில் ஏதோ சூனியத்தில் தனித்தலைபவனாய் மிக மிக அமைதியாகிப் போகின்றாய். அந்தத் திடீர் மவுனம் எதிரே உரையாடிக்கொண்டிருப்பவரை மட்டுமல்ல உன்னையும் மிகவும் அச்சமூட்டச் செய்கின்றது. ஆனால் உன்னைப் புரிந்துகொள்பவர்களாய் உன்னோடு உரையாடுபவர்கள் இருப்பதால் அவர்கள் மீண்டும் உன்னோடு உரையாடப் பிரியத்தோடு வருகின்றார்கள். அது உனக்குச் சற்று ஆசுவாசமாய் இருக்கிறது.
ஒரு காலத்தில் நீ விதந்து ஏற்றியவையெல்லாம் உன்னை விட்டுத் தொலைதூரத்தில் போயிருப்பதைப் பார்க்க உனக்கு மிகவும் விசனமாக இருக்கிறது. உண்மையில் அவைகள் உன்னைவிட்டு விலகிப்போகவில்லை; நீதான் அவைகளை விட்டு வெகுதொலைவுக்கு வந்துவிட்டாய். பெண்கள், இயற்கை, பயணம், மது அருந்துதல் (குடித்தல் அல்ல) என்று உனக்கு விருப்பமான பட்டியலை எழுதத் தொடங்கினால் அது முடிவற்றுப் போய்க்கொண்டிருக்கக்கூடும். ஒரு குழந்தையிடம் அதற்குப் பிடித்தமானது எவை என்றால் அது தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் எவ்வித முன்முடிவுகளின்றி சொல்லிக்கொண்டிருக்குமோ அதுபோல நீயும் இந்த உலகை ஒருகாலத்தில் அதன் அழகியலோடும் குரூரத்தோடும் சேர்த்தே நேசித்திருக்கின்றாய். நல்லதும் கெட்டதும், அழகும் அழகின்மையும், மகிழ்ச்சியும் துக்கமும் கலந்தவையே 'உண்மையானவை' என்றும், அவ்வாறான கலவைகளை எதிர்கொள்வதும் அனுபவிப்பதும், கடந்துசெல்லலுமே வாழ்க்கையின் அற்புதமென நீ ஒரு காலத்தில் சொல்லிக்கொண்டு திரிந்தது உனக்கு நினைவு இருக்கிறதோ தெரியாது எனக்கு நன்கு நினைவிலுண்டு. நீ இன்று ஒற்றை இலக்கைக் கொண்டவனாய், ஒற்றைத் தன்மைக்குள் எல்லாம் அடங்கிவிடுமென நம்புபவனாய் மட்டும் கண்ணும் கருத்தாய் இருப்பதைப் பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது. ஆனால் இதைவிட மிகச் சோகமானது என்னவென்றால் இவ்வாறு ஒன்றுக்காய் மட்டுமே ஓடிக்கொண்டிருப்பது உனது இயல்பு இல்லை என்பதால் ஒவ்வோரு முயற்சியிலும் நீ தோற்றுக்கொண்டேயிருக்கிறாய். முயற்சிப்பதோ, தோல்விகளைச் சந்திப்பதோ தவறு என்று எவரும் சொல்லப்போவதில்லை. ஆனால் தோல்விகளிலிருந்து எதையாவது கற்றுக்கொள்ளும்போது தான் உனது முயற்சிகள் ஆக்கபூர்வமானதாய் மாறும் என்பதை நீ ஒருகாலத்தில் அறிந்ததை நீ இப்போது மறந்துவிட்டாய். எனெனில் நீ ஒற்றை இலக்குடைய ஒற்றைத் தன்மையுடையவனாய் மாறிவிட்டாய். இதற்காய் நீ உனது எல்லா இயல்புகளையும் கலைத்து நிற்பவனாய்ப் பார்க்கும்போது, எனக்கு இலைகளை உதிர்ந்த இலையுதிர்காலத்து மரங்கள்தான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் இலையுதிர்காலத்து மரங்களுக்கு பருவங்களுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக்கொள்ளும் இயல்பு உள்ளதால் அவை மீண்டும் வசந்த காலத்தில் தங்களை இலைகளைத் துளிர்க்கச் செய்து, தம் வாழ்வைக் கொண்டாடுபவையாக இருக்கின்றன. ஆனால் நீ அப்படியில்லை, இலைதுளிர்காலம், வசந்தகாலம், இலையுதிர்காலம், பனிக்காலம் என எல்லாக்காலங்களிலும் ஒற்றை இலட்சியத்தோடே ஓடிக்கொண்டிருப்பதால், உன்னால் உனது தோல்விகளின்போது உன்னை மீண்டும் புத்துயிர்வாக்க முடிவதில்லை.
2.
இன்று ஒரு மாதிரியாக நீ பணம் சம்பாதிப்பதன் மூலம் உனது இடத்தை நிரூபித்துவிட்டாய். ஒரு விடயத்தின் வெற்றியை/தோல்வியை பிறரோ பிறதோ தீர்மானிப்பதில்லை. அது நமது மனம் சம்பந்தப்பட்டது என நானும் நீயும் பில்லியட்ஸ் விளையாடியபடி விவாதித்தது நினைவுக்கு வருகின்றது. நாம் ஒரு முயற்சியில் ஈடுபட்டு அதில் நாம் எதிர்பார்த்த விளைவு கிடைக்காவிட்டாலும், எமதளவில் நாம் முழுதாய் முயற்சித்தோம் என்று வரும் நம்பிக்கை, நாம் ஒரு விடயத்தில் 'தோற்றிருந்தாலும்', நம்மைப் பொருத்தவரை அது மகிழ்ச்சி தரக்கூடிய 'வெற்றியே' எனத்தான் புதிதாய் வரையறையும் செய்திருந்தோம். இன்னும் விரிவாய் விளங்குவதற்காய் நாம் ஒவ்வொரு செம்ஸ்டரிலும் எழுதும் பரீட்சையை உதாரணத்திற்கு எடுத்திருந்தோம். பரீட்சையில் அதிக புள்ளிகள் என்பதிலல்ல நமது வெற்றி, நாம் ஒரு பரீட்சையை திருப்பதியாய் எம்மளவில் செய்திருக்கின்றோம் என்று வருகின்ற நிம்மதியே நமக்கான வெற்றியெனச் சொல்லியபடி ரீடோ ஆற்றங்கரையிலும், பொறியியல் பீடமிருந்த மெக்கன்ஸி வளாகத்திலும் கணட கண்ட சக நண்பர்களுக்கு விளக்கம் கொடுத்து அவர்களைக் 'கொடுமை'யும்படுத்தியிருக்கின்றோம். ஆக நமதான வரையறுப்பில் ஒரு பாடத்தில் குறைய புள்ளிகள் எடுத்தாலும் (சிலவேளைகளில் தேர்ச்சியடையாமல் போனால் கூட) நமதளவில் திருப்பதியாய்ச் செய்திருக்கின்றோம் என்றால் எமதான வெற்றியே. இவ்வாறாக வெற்றி X தோல்வியை வரையறுத்த நாம், நீ 'பணத்தைச் சேகரிப்பதில் மட்டுமே நமது எல்லாப் பெருமிதங்களும், சந்தோசங்களும் இருக்கிறது' என்கின்றபோது கேட்கச் சங்கடமாகவே இருக்கிறது. இதன் பொருட்டு உனது உழைப்பையோ அல்லது பொதுவாக உழைப்பையோ கேவலப்படுத்துவதல்ல எனது நோக்கம. மிகக்குறைந்த சம்பளத்தின் காரணமாக ஏழு நாட்களாக வேலை செய்பவர்களையோ, ஒரு நாளில் 12 மணித்தியாலத்துக்கு மேலாய் இரண்டு ஷிப்ட்(shift) செய்பவர்களையோ நாமெல்லோரும் மதிக்கவே செய்கின்றோம் என்பதை நீயறிவாய். ஆனால் உனது வரையறுக்கப்பட்ட எட்டு மணித்தியால வேலையிலேயே உனக்குப் போதுமான பணத்தை உழைத்தும் இன்னும் வேண்டுமென நீ அலையத்தொடங்கியபோது உனக்கும் எனக்குமிடையில் விரிசல் வந்திருக்கவேண்டும் போலும். நீ உனது எட்டு மணித்தியால வேலைக்குப் பிறகும் புதிய புதிய வேலைகளைச் செய்யத்தொடங்கினாய். அவ்வாறான உதிரிவேலைகளைப் பட்டியலிட்டால் உனது சிறுவயதுக் கனவுகளைப் போல அவையும் நீண்டுகொண்டே போகக்கூடியதாக இருக்கும். ஒரு பல்பொருள் அங்காடியில் போய் எல்லாப் பொருட்களையும் எடுக்கமுடிவதுபோல உன்னிடம் வரும் வாடிக்கையாளரிடம் நீயே அவர்களின் வாழ்க்கைகுத் தேவையான எல்லாவற்றையும் செய்து தருகின்றேன் என்கின்றபோதுதான் பயமுறுத்துகின்றது. எல்லாவற்றையும்... சாமர்த்திய வீட்டிலிருந்து கலியாண் வீடுவரை பக்கேட்ஜாக (package) கொடுப்பதைப் போல, நீ அவர்களுக்கு எல்லாவற்றையும் செய்துகொடுப்பவனாக இருக்கின்றாய். நீ ஒருகாலத்தில் பணத்தை ருசிப்பவனாக இருந்து, இப்போது பணம் உன்னை உருசிப்பதாய் இருக்கும்போது, அந்த வெறியில் நீ புதிய மனிதர்களை (உனது மொழியில் சொல்வதனால் வாடிக்கையாளர்களை)தேடி ஓடத்தொடங்குபவனாய் ஆகிவிட்டாய். இப்போது உன்னோடு உரையாடும்போது -தொலைபேசியில் வரும் ஒரு ரெலிமார்க்கெட்டிங் குரலுக்கும்- உன்னுடைய குரலுக்கும் அவ்வளவு வித்தியாசம் தெரியாது -மிக இயந்தரத்தனமாய்ப்- போய்விட்டது. உனது எல்லாப் பேச்சும் பணத்தை இன்னும் இன்னும் எப்படி அதிகமாய்ச் சம்பாதிப்பது என்பதாய் இருக்கிறது. தொலைபேசி -ரெலி மார்க்கெட்டிங்- குரலை ஆக இயலாத பட்சத்தில் சட்டென்று துண்டித்து அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடலாம். ஆனால் என்னால் உனக்கு அதைச் செய்யமுடியாது; எனெனில் நீ எனக்கு ஒரு காலத்தில் எல்லாவற்றையும் பகிரும் உண்மையான நண்பனாக இருந்தவன்.
உனக்கான புகழ், நீ விரும்பிய அந்தஸ்து எல்லாம் இப்போது வந்துவிட்டன. ஒரு கையடக்கமான விசிட்டிங் கார்ட்டில் எவ்வளவுதான் எழுத்தை நுணுக்கி நுணுகி எழுதினாலும் நீ செய்துகொண்டிருக்கும் பலவேறு வேலைகளுக்கான விபரங்களை எழுதிவிடுதல் கடினமாய் இருக்கிறது. உன்னைப் போன்றவர்களுக்காய் இனி வருங்காலத்தில் விசிட்டிங் கார்டுகள் 11 X14 பக்க சாதாரண பக்கமாய் மாறவும் கூடும். நீ விரும்பிய ஒற்றைக் குறிகோளின் உச்சக்கட்டத்தில் சமூகம் முழுதாய் உன்னை மதிப்பதற்கு ஏதோ ஒன்று குறைகிறதென்றாய். ஒருநாள் நீ சொன்னாய், சமூகத்தில் மதிப்புள்ள மனிதன் என்றால் அவன் சுற்றம் சூழல் சூழ ஒரு பிரமாணடத் திருமணத்தைச் செய்பவனாக இருந்தாக வேண்டும். நீ உனது வாடிக்கையாளருக்கு எல்லாவற்றையும் பக்கேட்ஜாக கொடுப்பதைப் போல திருமணத்தை ஒரு ஆடம்பர பக்கேட்ஜாக செய்வதில் உனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால் எனக்கிருக்கும் கவலை என்ன என்றால் இன்னும் சில வருடங்களில் திருமண மண்டபம், வீடியோ, சடங்கு செய்யும் அய்யர், வருபவர்களுக்கான விருந்துணவு என எல்லாம் சேர்ந்தே வரும் பக்கேட்ஜ்களில் இருப்பதுபோல, மணமகன் தேடுபவர்களுக்கு மணமகனும், மணமகள் தேடுபவர்களுக்கு மணமகளும் சேர்ந்த ஒரு சிறப்புப் பக்கேட்ஜ் வரக்கூடுமோ என்பதே. உனது திருமணத்தின்போது நீ சீதனம் வாங்கவில்லை என்பது சிறு நிம்மதியாக இருந்தது. எனது நண்பனின் சில இயல்புகள் இன்னும் மாறாமல் இருக்கிறது என்பதில் என்னைவிட வேறு யார் அதிகம் குதூகலிக்க முடியும்? எனினும் சிலர் நீ உனது மணமகளைத் தேர்ந்தெடுக்கும்போது பெண் அக்குடும்பத்தில் ஒரெயொரு பிள்ளையாக இருக்கவேண்டுமென்பதில் உறுதியாய இருந்ததாகவும் அதற்கான காரணம் எப்போதோ ஒரு காலத்தில் அவர்களின் முழுக்குடும்பச் சொத்தும் உனக்கு வரும் என்கின்ற மறைவான திட்டம் இருந்ததாகவும் பேசியிருக்கின்றார்கள். ஆனால் அது குறித்து நானதிகம் கவலைப்படவில்லை. எனெனில் எல்லாவற்றையும் ஆகவும் அலசி ஆராய்ந்தால் எவனுமே யோக்கியன் இல்லையென்பதை நாமெல்லோருமே அறிவோம். ஆக குறைந்தபட்சம் எம்மால இயலக்கூடியவற்றை நாம் நம்பியவற்றை கைவிடாதிருப்பது ஒவ்வொரு மனிதருக்கு அவசியமானது என்பதை உணர்ந்து வைத்திருக்கின்றேன்.
உனக்குத் துணையாக வந்த பெண் அவ்வளவு அருமையானவள் என்பதைவிட, நாம் தானே ஒருவர் நல்லவராக அல்லது அல்லாதவராக இருப்பதற்கான காரணங்களை உருவாக்குவதாய் இருக்கின்றோம். 'தீதும் நன்றும் பிறர் தரா' என்பது எவ்வளவு அருமையான வரிகள். நமதான வாழ்வை நாமே அமைக்கும்போது எல்லா விளைவுகளுக்கும் நாமேதானே பொறுப்பாக முடியும். ஓரிடத்தில் நிலையாக இருக்கும் கதிரையைக் கவனிக்காது, நமது கால்கள் அடிபட்டவுடன், கதிரை அடித்துவிட்டதென்று கூறுவது எவ்வளவு அபத்தமானது. நமது கால்கள கதிரையை அடித்துவிட்டதென்று சொல்வதல்லவா சாலச்சிறந்தது. இந்தத் 'தேற்றம்' குறித்து விரிவாக உரையாடியது, தே(ர்)மோ டைனமிக்ஸ் (Thermo Dynamics) எக்சாமிற்குப் படிப்பதற்காய் அமர்ந்த ஒரு நாளில் என்பது எனக்கு நனறாக நினைவிருக்கிறது. இப்போது தேர்மோ டைனமிக்ஸில் என்ன படித்தோம் என்பது ஞாபக அடுக்குகளில் இருப்பதைவிட இந்த விதண்டாவாதங்கள் தான் அதிகமாய் நினைவில் ஓடியபடியிருக்கிறது. நம்மைப் போலவே நாம் படிக்கத் தேர்ந்தெடுத்த துறையும் தவறானது என்று கூறுவதைவிட வேறென்ன சாட்டைச் சொல்லி நம்மை நாமே ஆறுதற்படுத்துவது? எனக்குத் தெரியும் நான் இப்படிக்கூறுவது உனக்குப் பிடிக்காது என்று. 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்றிருக்கும்போது இப்படிச் சாட்டுக்கள் கூறிக்கொண்டிருப்பது என்பது ஒருவகைத் தப்பித்தல் என்றுதான் நீ அடிக்கடி கூறுவாய். உண்மையாயிருக்கலாம். போரிலிருந்து, நேசத்திலிருந்து, கற்பதிலிருந்து என்று எத்தனை விதமான விடயங்களிலிருந்து தப்பித்து ஓடிக்கொண்டிருக்கும்போது இதுவும் இன்னொரு தப்பித்தலாய் இருக்கலாம்தான்.
3.
நீ உழைத்துப் பெறும் பணத்தைப் போலவே உனது துணையையும் சடப்பொருளாக நினைத்து நடத்தியபோதுதான் எல்லாச் சிக்கல்களும் உனது திருமண வாழ்வில் வரத்தொடங்கின. பணத்தைப் போல பெண்ணையும் நீயுனது உடமையாக்கியபோது உயிருள்ள எந்த ஆத்மாவால்தான் தாங்க முடியும்? உனது பணம் சேகரிக்கும் ஆசையில் பகல்- பின்னேரம் என்று ஓட ஓட உனது துணை மிகப்பெரும் தனிமையில் விடப்பட்டிருக்கிறாள். திருமணமான பெண்ணை நண்பர்கள் மட்டுமில்லை, அதுவரை எல்லாவற்றையும் கவனித்து கவனித்துக் கொடுக்கின்ற பெற்றோர் கூட அவளை வேறொருத்தியாய் பார்க்கும் நிலையை என்னவென்று சொல்வது? ஒருநாள் நீ விட்டுக்கு வந்தபோது அவள் தனது மாமியின் மகனோடு வீட்டிற்குள் கதைத்துக்கொண்டிருந்தது உனக்குள் பல சந்தேகங்களை விதைக்கத் தொடங்கின. பிள்ளை இல்லாதபடியால்தானே இவள் இப்படி மற்றவரோடு பல்லைக்காட்டிச் சிரித்துக்கொண்டிருக்கிறாள் என்று விரைவில் உங்களுக்கான பிள்ளையைப் பெறும் முயற்சியில் ஈடுபடத்தொடங்கினாய். பிள்ளை வந்தால் எல்லாப் பிரச்சினையும் தீருமென்ற காலம் காலமாய் சொல்லப்பட்டத்தை நீயும் நம்புவதாயிருந்தபோது, நாம் கவிதையொன்றில் விவாதித்த வளாக காலத்து நண்பனாய் நீ இல்லையோ என எனக்குத் தோன்றியது. உனது துணை மீதான சந்தேகம், அவள் தன்னை அழகுபடுத்துவதில், தனியே வெளியே செல்வதில், தொலைபேசுவதில் என எல்லாவற்றிலும் சந்தேகப்படத்தொடங்கினாய். அவள் செய்யும் ஒவ்வொரு விடயத்திற்கும் நீ விளக்கம் கேட்கத்தொடங்கினாய்.
ஒரு நாள் நானும் நீயும் செகண்ட கப்பில் (Second Cup) தேநீரந்திக்கொண்டிருந்தபோது, 'இவளவை வெளியே எல்லாத்தையும் மூடிக்கொண்டு உள்ளே எல்லாவற்றையும் திறந்துகொண்டு திரிகிறாளவை' என்றாய். இதைக்கேட்ட ஆத்திரத்தில் 'ஏன் நாங்களுந்தானே எவள் திறந்து காட்டமாட்டாளென்று எங்கடையளை துருத்திக்கொண்டு திரிகிறோம்' என்று நான் சொன்னபோது உன் கண்களில் தெரிந்து வியப்பா கோபமா என்பது குறித்து நான் அக்கறை கொள்ளவில்லை. உனக்கு ஞாபகம் இருக்குமோ இல்லையோ தெரியாது, ஒரு காலத்தில் நாங்களுந்தானே ஒரு பெட்டையாவது எங்களோடு கதைக்கா மாட்டாளா.., சேர்ந்து கூடத்திரிய மாட்டாளா என்று ஏங்கிக்கொண்டிருந்திருக்கின்றோம். ஒருமுறை நல்ல வடிவான பெட்டை short skirtம், white topமுமாய் பஸ்சில் ஏறியபோது, வகுப்புக்காய் கம்பஸில் இறங்காமல் அவள் எங்கே இறங்குவாளோ அங்கே போய் இறங்குவோம் என்று, அவளோடு போய் அவளை அவள் வீடு வரை பத்திரமாய்க் கொண்டுபோய் விட்டதை மறந்துவிட்டாயா? அப்படித் திரும்பி வருகையில் ஒரு பல்லக்கு மட்டும் இல்லை; இருந்திருந்தால் அவளை இந்த நகர் பூரா நாங்கள் அடிமைகள்போல தூக்கிக்கொண்டு திரியவும் தயாராயிருந்திருப்போம் என்று எங்கள நிலையை நாங்களே நக்கலடித்த அந்தப் பின்னேரப்பொழுதை மறந்து, எப்படி 'இவளவை எல்லாவற்றையும் விரித்துக் காட்டிக்கொண்டு திரிகிறாளாவை' என்கிறாய்.
4.
செய்கின்ற எல்லாவற்றுக்கும் விளக்கங்கள் கொடுத்துக்கொண்டிருக்க முடியுமா என்ன? அவள் சிலவேளைகளில் உனது கேள்விகளுக்கு எதையும்பேசாது மவுனமாகும்போது வார்த்தைகள் தடிக்கப் பேசிய உன் வன்முறை மெல்ல மெல்ல உடலில் கைவக்குமளவுக்கு மாறிப்போய்விட்டது. 911 ஜ அழைப்பதோ, தனது பெற்றோரை அழைத்து தனது நிலைமைகளைச் சொல்வதோ அவளுக்குக் அவ்வளவு ஒன்றும் கடினமான விடயமில்லை. உன் மீதான அன்பின் நிமித்தமோ அல்லது பெண் என்றால் பொறுத்துதான் ஆகவேண்டும் என்ற கற்பிக்கப்பட்டபடியாலோ அவள் எதுவும் எதிர்வினை செய்யாததை உனக்கு வசதியானதாய் ஆக்கிக்கொண்டாய். ஒருநாள் இவ்வாறு நீ ஆம்பிளைத்தனத்தைக் காட்டிய மறுநாள் நான் உங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது அவளின் வலதுபக்க வாய் மிகவும் வீங்கியிருப்பதை அவதானித்திருதிருக்கின்றேன். 'என்ன நடந்தது' என்று கேட்டதற்கு 'ஒன்றுமில்லை பல்லு வலி அதான்' அப்படியென்றிருக்கிறாள். ஆனால் மூக்கின் மேலே பிளாஸ்ரர் ஒட்டப்பட்டிருந்ததற்கும் பல் வலிதானா காரணமா என்று கேட்க விரும்பிய வார்த்தைகளை நான் எனக்குள் விழுங்கிக்கொண்டேன். இப்படி மூர்க்கமாய் வனமுறை செய்பவர்கள் மூர்க்கமாகவே அன்பும் செய்து வன்முறைக்குள்ளாவர்களை தங்களுக்கு ஏற்றவாறு அடக்கி வைத்திருப்பார்கள் என்பது குறித்து தெளிவிருந்தாலும், பாதிக்கப்பட்டவள் வாய் திறந்து முறைப்பாடு செய்யாதிருக்கும்வரை பிறரால் எதுவும் உதவ முடிவதில்லை என்பதே யதார்த்தமாயிருக்கிறது. அத்தோடு அப்போது உனது துணை கர்ப்பமாகவுமிருந்தாள். ஆகவே நானும் 'எல்லோரையும்போல' பிளளை பிறந்தவுடன் உங்கள் இருவருக்குமான உறவு சுமுகமாகிவிடுமென நம்பியிருந்தேன். பிள்ளை பிறந்து அவனுக்கு ஒரு வயது வந்தவுடன் ஒரு பெரிய பிறந்தநாள் விழாவைக் கொண்டாடச் செய்திருந்தாய். சாமர்த்திய வீடுகள் போல பிறந்தநாட்களுக்குப் போவதும் எனக்குப்பிடிப்பதில்லை என்பதால், நான் மொன்றியலுக்குப் போக இருப்பதால் வரமுடியாதிருக்கென ஒரு சாட்டுச் சொன்னேன். நீ என்னோடு நெருங்கிப் பழகியவன் என்பதால் உனக்கு எது உண்மையெனப் புரியுமென எனக்கு நன்கு தெரியும். ஆனால் மனித மனது -முக்கியமாய் உனது மனது- ஏதோ ஒரு காரணத்தை, அது பொய்யாக இருந்தாலும் அதைக்கேட்கவே விரும்புகிறது. வள்ளுவரும் சூழலைப் பொறுத்து பொய் சொல்வதையும் ஏற்றுக்கொள்ளலாம் என்கிறார். கூடக்குடித்து கூழ்ப்பானைக்குள் விழுந்ததைவிட அறப்பானைக்குள் விழுந்தெழும்பியது இவ்வாறான சந்தர்ப்பங்களில் எப்படி உதவுகிறது பார்த்தாயா?
இப்படி உனது துணையை கன்னம் வீங்கியும், மூக்கும் உடைந்ததுமான சில வாரங்களின் பின் அவள் எனது செல்போனுக்கு அழைத்திருந்தாள். என்னை அழைத்தற்கான விசேட காரணம் எதாவது இருக்கிறதா என வினாவியபோது எதையோ சொல்வதற்குத் தயங்கிக்கொண்டிருப்பது மறுமுனையின் மவுனத்தின் மூலம் விளங்கியது. 'இப்படியே சும்மா போனை காதில் வைத்துக்கொண்டிருக்காமல் சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்' என்று வற்புறுத்தியபோதுதான், நீ, அவள் என்னோடு படுத்தாளா? என்று கேட்டு சண்டைபிடித்ததாய் மெல்லிய குரலில் சொன்னாள். 'உங்களை இப்படிக் கேட்டுவிட்டு நண்பன் அடித்தானா?' என்று கேட்டேன். 'இல்லை' என்று எச்சிலை விழுங்கியபோது என்ன பிறகு நடந்திருக்குமென்று ஊகித்தறிவது அவ்வளவு கடினமாயிருக்கவில்லை. உன்னைப் போன்ற ஆணாகவே நானிருப்பதால் துணையாக வரும் பெண் மீது சந்தேகம் கொள்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எமக்கு எம்மோடு இருப்பவை முழுமையாகவும், எமக்கு மட்டுமே உரித்தாகவும் இருக்கவேண்டும் என்று கனவுகள் கண்டுகொண்டிருப்பவர்கள் என்பதால் உனக்கு வந்த சந்தேகம் எனக்கு வராது/வரப்போவதில்லை என்றும் சொல்லப்போவதில்லை. ஆனாலும் படுக்க வேறு பெண்கள் இல்லாது உனது துணையோடு படுக்க தூண்டில் போடுவேன் என்று நீ நினைத்திருக்கிறாய் என்றபோதுதான் உன் மீதான என் மதிப்பீடுகள் அதலபாதாளத்தில் போனது போலத் தோன்றியது. ரொரண்டோவின் யங் ஸ்ரிட்டில் இருந்த ஸான்சிபாரில் ஸ்ரிப் டான்ஸ் பார்த்துவிட்டு, விடுதியை மூடியநேரத்தில், அங்கே ஆடிய பெண்ணைக் கூட்டிக்கொண்டு வெவரி மோட்டலுக்குப் போனது பற்றி உனக்கு இன்னொரு முறை நினைவூட்டவா? வேண்டாம், திருமணத்தின்பின் அநேகரைப் போல நானும் புனிதமாகப் போகின்றேன், எந்தக்காரணத்தை முன்னிட்டும் என் துணையிடம் எனது கடந்தகாலங்களைப் பேசக்கூடாதென நீ கேட்டுக்கொண்டது இப்போது ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது. நான் உனது துணையோடு படுத்தேனா என்று நீ கேட்டதை அவள் தொலைபேசியில் சொன்னபோது, ஏன் அடிக்கடி நீ ஸான்சிபாருக்கு திருமணத்துக்கு முன்பு போனாய் என்று கேட்கும்படி அவளிடம் சொல்ல விரும்பியதை மறுமுனையில் எதற்காகவோ அழுத உனது மகனின் குரல் தடுத்து நிறுத்தியிருந்தது.
இதன்பிறகு ஒருநாள் நாங்கள் தற்செயலாய் உனது வீட்டுக்கருகிலிருந்த தெருவில் சந்தித்தபோது 'வா பாருக்குச் சென்று மது அருந்துவோம்' என்று வற்புறுத்தி நீயெனது காரில் ஏறிக்கொண்டாய். மதுவின் உச்சத்தில், 'நான் உன் மனுசியோடு படுத்தேனா என்று கேட்டிருக்கிறாய் நீ மட்டும் என்ன திறமா?' என்று கத்தினேன். எதையும் திருப்பப்பேசாத உனது மவுனம் எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. அன்றிரவு உன்னை உனது வீட்டடியில் இறக்கிவிட்டுத் திரும்பிய பத்து நிமிடத்தில், 'நீ பாரில் கேட்ட கேள்விக்கு இப்போது பதில் சொல்லுகிறேன் துணிவிருந்தால் என் வீட்டுக்கு வாடா?' என்றாய். உனது வீட்டுக்குள் வந்தபோது ஒரு பிரளயம் நடந்தமாதிரி எல்லாம் குலைக்கப்பட்டிருந்தன. வரவேற்பறையிலிருந்த தொலைபேசி இரண்டாக உடைக்கப்பட்டு அது வைக்கப்பட்டிருந்த முக்காலியும் காலில்லாது இருந்தது. 'எங்கையடா உனது மனுசி?' என்று கேட்டபோது உன்னவள் குசினிக்குள் மூச்சுப்பேச்சில்லாமல் கிடப்பதைச் சைகையால் காட்டினாய். அவளுக்கு நெற்றியிலும், பின்னந்தலையிலும் காயங்கள் ஏற்பட்டு இரத்தம் கசியத்தொடங்கியிருந்தது. What the F***.என்று 911ஐ அழைக்கத்தொடங்கினேன். அதன்பிறகு சட்டம் வரையறுத்தபடி எல்லாம் நிகழ்ந்து முடிந்திருந்தது. ஆனால் நாம் எவருமே எதிர்பாராத ஒன்று பிறகு நிகழ்ந்தது. உனக்குரிய தண்டனை முடிந்து, குறிப்பிட்ட ஊரடங்குடன் நீ வெளியே வந்த ஒரு சனிக்கிழமை நீ தற்கொலை செய்துகொண்டாய். இதற்கான காரணங்களைத் தேடிப்போவதில் எனக்கு விருப்பமில்லை. எல்லோரும் உன்னைப் போல ஒரு ஒற்றைக் காரணத்தை கண்டுபிடித்து தங்களை சட்டத்தின் தேவர்களாக் ஆக்கிக்கொண்டனர். ஆனால் உனது முடிவுக்குக் காரணத்தை ஆராய வேண்டுமெனில் எம்மைப் போர் துரத்திய காலத்திலிருந்து ஆரம்பித்த, எமது பிறழ்ந்த மனோநிலைகளை ஆதியோடு அந்தமாய் ஆராய வேண்டும்.
ஆனாலும் நாம் வீழ்ச்சியின் நாயகர்களாய் ஆனோம். கடந்தகாலத்தில் நாம் பேசிய, வரையறுத்த எல்லாமே வீழ்ச்சி என்ற புள்ளியில் முடிந்துபோனதை என்னவெனச் சொல்வது? அப்படியெனில் நாம் நம்பியவையெல்லாம் கற்பனையின் விளைநிலத்திலிருந்தா முளைத்து எழும்பியிருக்கின்றன? நாம் வளாகத்தில் எமது துறைக்கு அப்பால் கற்ற அந்திரோபோலஜியும், சோஸியலாஜியும், அரசியல் விஞ்ஞானமும் எமக்குக் கற்றுத்தந்ததுதான் என்ன? உனது தற்கொலை எனது வாழ்வில் இனி நிகழப்போவது எல்லாம் மிகப்பெரும் வீழ்ச்சியென்றுதான் மறைமுகமாகக் கூறுகின்றதா? எனெனில் நானும் நீயும் ஒத்த அலைவரிசையிலே இருந்திருக்கின்றோம். ஒருவர் நினைத்து உரையாடுவதை இன்னொருவர் இடைவெளி நிரப்பக்கூடியவராக இருந்திருக்கின்றோம். எனக்கு மிகப்பயமாயிருக்கிறது, நாம் நம்பியவைகள் பிழைத்துப்போய்விடுவதற்குள் கொஞ்ச காலமாவது 'வாழ்ந்துவிட்டுப் போக ஆசைப்படுகின்றேன். இப்போது நான் உனது துணையோடும், மகனோடுந்தான் சேர்ந்து இருக்கிறேன். என்னைப் போலவோ உன்னைப் போலவோ அன்றி, எல்லாவற்றையும் கடந்துபோய் வாழ்வதில் என்றுமே நம்பிக்கைகொள்கின்ற நமது துணையைப் போல அவன் வளரட்டும். எனக்குத் தெரியும், 'பார்த்தாயா நான் நினைத்ததுபோல அவள் உன்னோடு படுத்துவிட்டாள் தானே' என்று நீ சொல்லப்போகின்றாய் என்று. ம்...எல்லா ஆண்களும் கிட்டத்தட்ட ஒரேமாதிரித்தான் சிந்திக்கின்றோம் தானில்லையா?
இங்கே என்னையொரு புனிதனாய் உருவகித்து எழுதிய பிரதிக்கு எதிர்மறையான பிரதியை நீ எழுதுவதற்கு உள்ளாய் என்பதும் நானறிவேன். இப்போதெல்லாம் பனி பொழிந்து கொண்டிருக்கும் இந்த வீதியில் யாரோ நள்ளிரவில் நடந்துபோய்க்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் காலடித்தடங்களை மட்டும் விட்டு விட்டு தன்னை மறைத்துக்கொண்டு போவது நீயாகத்தான் இருக்கவேண்டும். என்னுடைய அச்சமெல்லாம் நானில்லாத ஒரு நாளில் நீயெழுதிய பிரதியை எங்களின் பையனுக்கு வாசிக்கக்கொடுத்து -அவன் சொல்லப்படாத இன்னொரு உண்மையை- அறிந்த அச்சத்தில் நானும் உன்னைப் போல தற்கொலை செய்துவிடுவோனோ என்பதாக இருக்கிறது.
-----------
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
வாழ்க்கை இப்படியாகிவிட்டது இல்லையா அண்ணன்...?
3/13/2009 10:20:00 AMயுத்தம் நமக்கு கொடுத்த,நாம் நமக்கு ஏற்படுத்திக்கொண்ட வரையறைகள் நாம் வாழ்கின்ற தருணங்களை குறைத்துக்கொண்டே இரப்பதை உணர்ந்தும் நிர்ப்பந்தங்களின் மத்தியில்தான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...
இதுல எக்கச்சக்கமான பிரச்சனைகள் இருக்கும் என்பது உண்மை.
3/13/2009 10:35:00 AMமற்றபடி ஒன்று சொல்கிறேன் இலங்கையின் அனேகமான ஆண்கள் ஒரே மாதிரித்தான் இருக்கிறார்கள் அப்படியே புனிதப்பிம்பங்களை சுமந்து கொண்டு போலிகளாய்...
"கதவு தட்டும் ஓசை கேட்டால் ...
3/18/2009 01:22:00 AMயார் என்று கேட்காதே - ஒருவேளை
அது நீயாகவும் இருக்கலாம்."
( அப்துல் ரகுமான்)
குற்றச்சாட்டுகளின் வடிவமும் இடமும் மாறுகின்றது தன்மை மட்டும் கெடவேயில்லை இல்லை என்றாள் ஒருத்தி ஒரு கனமான கருத்துமுரண்பாட்டில்..அவ்அவ்போது இதுபோல ஏதாவது ஒன்று நிரூபித்துக்கொண்டோ குறைந்த பட்சம் நினைவூட்டிக்கொண்டோ இருக்கிறது.
இதில் நீயார் உன் நண்பன் யார் என்றெல்லாம் தேடவேண்டிய தேவையின்மையை இன்றெமக்கு பழகும் சூழலும் பகுத்தறிவும் சாத்தியப்படுத்தியிருப்பினும் சகா இன்னும் சாகவேயில்லை என்றே தோன்றுகிறது..தட்டிக்கொண்டே இருக்கிறான் உள்ளிருந்து. நீங்கள் அங்கீகரீக்கிறீர்களோ நிராகரிக்கிறீர்களோ உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் எழுதப்பட இப்போது ஆரம்பித்திருக்கும் என்றே தோன்றுகிறது. அது படிக்கப்படத்தான் வேண்டும் என்ற எந்த அவசியமும் அற்று...
உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பர்களே.
3/18/2009 10:51:00 AMஎனது தற்போதைய மனநிலையை ஒத்திருப்பதால் பதிவை மனதுக்கு மிகவும் நெருக்கமாகக் காண்கிறேன்..!
3/29/2009 01:41:00 PMநன்றி !
நன்றி ரிஷான்.
3/30/2009 09:13:00 AMமேலே எழுதிய துர்க்காவின் வாசிப்பும் எனக்குப் பிடித்தமாயிருந்தது.
Post a Comment