வவுனியாவிலுள்ள முகாங்களைப் பற்றிய நேரடி அனுபவம்
In ஈழம், In தமிழாக்கம்Sunday, February 22, 2009
வவுனியா 'உள்ளே இடம்பெயர்ந்த மக்கள்' (IDP) நல்வாழ்வு மையங்களுக்கான எனது பயணம்
-வைத்தியர் தயா தங்கராஜா
தமிழில்: டிசே தமிழன்
வன்னியில் நடக்கும் போர் பற்றியும், அதனால் மனித உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி அறிந்துகொண்டிருந்தாலும், நான் நேரே சென்று அறியும்வரை இவ்வளவு கொடூரமாய் அது இருக்குமென ஒருபோதும் நினைத்ததில்லை. எங்கள் வளர்ப்புப் பிள்ளையொருவர் போரில் கொல்லப்பட்டுவிட்டாரென்று ஒரு அழைப்பு தற்காலிக (அகதி)முகாமிலிருந்த சபை உறுப்பினரிடமிருந்து வந்திருந்தது. துயரத்தைப் பற்றி நான் எனது மாணவர்களிடம் பலமுறை விரிவுரை செய்திருந்தாலும், துயரத்தின் ஆழத்தை அறிவது இதுவே எனக்கு முதல்முறையாக இருந்தது. 'இல்லை, இல்லை, இப்படி (நடந்து) இருக்க முடியாது' என நான் அழுதேன். நான் நேராக அங்கிலிக்கன் ஆயரின் அலுவலகத்திற்குச் சென்றேன். மதிப்புக்குரிய நேசகுமாரை நான் சந்தித்தபோது என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவர் (வளர்ப்புப் பிள்ளை) தப்பிவிட்டார் என்றும் இப்போது ஏதோ ஒரு முகாமில் இருக்கின்றார் எனவும் அவர்கள் சொன்னார்கள்.
அடுத்த நாள் ஒரு இருக்கையைப் பதிவுசெய்து வவுனியாவிற்கு புகைவண்டியில் போனேன்.அதிகாலையில் வெளிக்கிட்டு நான் வவுனியாவைப் பிற்பகலில் போய்ச்சேர்ந்தேன். எனது வளர்ப்புப் பெண் எனக்காக ஸ்ரேசனின் காத்துக்கொண்டிருந்தார். நான் நேராகவே முகாமுக்குச் சென்றேன். ஒருவரும் முகாமிற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
பாடசாலைகள் தற்காலிக முகாங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை கொட்டகைகளாக அமைக்கப்பட்டிருந்தன; எப்படிச் சொல்வதென்றால் 5-6 மீற்றர் உள்ள கூடாரங்களைப் போன்று. இராணுவ முகாங்களைச் சுற்றி எப்படி முள்ளுக்கமபிகள் இருக்குமோ அப்படியே இந்த (அகதி) முகாங்களைச் சுற்றியும் முள்ளுக்கம்பிகள் இருந்தன. உள்ளேயிருப்பவர்களை வீதியின் மற்றப்பக்கத்தால் மட்டுமே பார்க்க முடியும். பாதுகாப்பு மிகவும் இறுக்கமாய் இருந்தது. 'கிட்ட வரத் துணியாதே, இங்கிருந்து போ, இங்கிருந்து போ' என்ற மற்ற இராணுவத்தினரின் வெருட்டல்களை அசட்டை செய்து, நான் முகாமுக்குப் பொறுப்பான இராணுவ வீரரை நோக்கிச் சென்றேன்.
நான் அவரை அணுகி, எனது சிங்களம் மிகவும் மோசமாக இருந்ததால் ஆங்கிலத்தில் பேசினேன். நான் இம்முகாமிலுள்ள மதகுருவாயுள்ள எனது மகனைப் பார்க்க விரும்புவதாய் அவரிடம் கூறினேன். அவர் எனது வார்த்தைகளை எனது மகனிடம் கொண்டுசெல்லக்கூடிய கனிவானவராய் இருந்தார், ஆனால் என்னை வீதியின் மறுமுனையில் நிற்கச் சொன்னதோடு, எனக்கு ஜந்து நிமிடங்கள் மட்டுமே தருவேன் என்றும் சொன்னார். பத்து நிமிடத்தில் டானி வெளியே வந்தார். அவர் மிகவும் களைப்பாகவும், மன உளைச்சலுக்குள்ளானவர் போலவும் இருந்தார்.
அவர்கள் தமது உயிர்களைக் காப்பாற்றுவதற்காய் ஒவ்வொரு இடங்களாய் ஓடியிருந்தனர். எறிகணைகள் மிகவும் கோரமாய் இருந்ததால் அவர்களால் பதுங்குகுழியை விட்டு வெளியே வருவதே மிகவும் கடினமாய் இருந்தது. ஒவ்வொரு கணமும் (விமானக்)குண்டு வீச்சாகவும் துப்பாக்கி வேட்டுக்களாகவும் இருந்தன. அவர் கருணா நிலையத்தின் பொறுப்பாளாராக இருந்தார். கருணா நிலையத்தில் உளநிலை குறைந்தவர்களோடு பாடசாலைக்குப் போகும் சிறுமிகளும் தங்கியிருந்தனர். ஒரு ஞாயிறு இரவு (பெப்ரவரி 15, 2009) சிறிய பிரார்த்தனையின் பின், மாலையில் (வன்னியை விட்டு)வெளியேறுவதாய் முடிவு செய்தனர். எனினும் விடிகாலை 1.30க்கே வெளியேறினர். எவ்வளவு கொடூரமாய் அது இருந்திருக்குமென்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.
நாங்கள் வன்னிக்குள் வேலை செய்ததால், என்னால் மழையாகப் பொழியும் எறிகணைகளினதும், விமானக்குண்டுகளினதும் ஆபத்துக்களை எண்ணிப் பார்க்க முடிகிறது. அவர்கள் அடர்ந்த காடுகளிலுள்ள யானையிலிருந்து விசமுள்ள பாம்புகள் வரை சிறியதும் பெரியதுமான எல்லாப் பிராணிகள் மீதும் அவதானமாக இருக்கவேண்டியிருந்தது. இருட்டில் பல மணித்தியாலங்கள் நடந்து, கொல்லப்பட்ட உடலங்கள் மீதும், அங்குமிங்குமாய் பரவியிருந்த மனிதவுடலின் பகுதிகள் மீதும் சரிந்து விழாமல் வரவேண்டியிருந்தது. அவர்கள் இறுதியில் வவுனியாவுக்கு வருகின்ற பேருந்துகளைக் கண்டார்கள். அவர்கள் பேருந்து ஒன்றில் ஏறியபோது, எறிகணை ஒன்று வந்து இன்னொரு பேருந்தின் மீது வெடித்தது. தங்களோடு (கருணா நிலையத்தில்) தங்கிருந்த பதினான்கு பேரைக் காணவில்லை என்று அவர் சொன்னார். (பிறகு ஆறு பேர் கண்டுபிடிக்கப்பட்டார்கள்).
நாங்கள் (அகதிமுகாமில்) காத்திருந்தபோது, மதியவுணவுப் பொதிகள் வானிலிருந்து கொண்டுவரப்பட்டன. மதிய உணவுக்கான பொதி மிகவும் சிறியதாக இருந்ததை நாம் கவனித்தோம். ஒரு உணவுப்பொதி 650 கிராமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டதாக பின்னர் நான் நம்பத்தகுந்த ஒரு நபரிடமிருந்து கேள்விப்பட்டேன். ஆனால் ஒவ்வொரு பொதியும் கிட்டத்தட்ட 300 கிராமாகவே இருந்தது.
அவ்வாறே நான் மற்ற முகாங்களுக்குச் சென்றபோது, வீதியின் மறுமுனையிலிருந்து பார்த்தபோது, நூற்றுக்கணக்கான ஆண்கள் குளித்துக்கொண்டிருந்தார்கள், சிலவேளைகள் இதுவே நீண்ட நாட்களுக்குப் பிறகான முதல் குளியலாகவும் அவர்களுக்கு இருக்கலாம். திறந்த வெளியில் பத்து ஷவர்கள் இருக்கையில், எல்லோரும் தண்ணீருக்காய்த் தள்ளுப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு தண்ணீர் நிறுத்தப்பட்டுவிடும். ஆண்களும் இராணுவத்தினரும் இருக்கும் இவ்வாறான ஒரு திறந்தவெளியில் எப்படிப் பெண்களால் சமாளிக்க முடியுமென்று நான் யோசித்தேன்! என்ன கழிவறை வசதிகள் அவர்களுக்காய் செய்யப்பட்டிருக்கும்?
வைத்தியசாலைக்கான எனது பயணம் மனதை உலுக்கக்கூடியதாக இருந்தது. விபத்துப் பகுதியிலிருந்தவர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே (ஏதோவொரு) உறுப்பை இழந்தவராக இருந்தார்கள். வெளியே இருந்தும் வேறு எவரும் உள்ளே வந்து இவர்களைப் பார்க்க அவ்வளவாய் அனுமதிக்கப்படவில்லை. நோயாளிகளுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்கள் எங்கேயிருக்கின்றார்கள் என்பதும் தெரியாது. அவர்கள் மிகவும் மன உளைச்சலுக்குள்ளானவர்கள் போல இருந்தார்கள். தங்கள் வலியின் காரணமாகவும், கெட்ட கனவுகள் காரணமாகவும் இரவுகளில் அவர்கள் கத்துபவர்களாகவும் அழுபவர்களாகவும் இருந்தார்கள். நிறையப் பேர் தங்கள் இரண்டு கால்களை இழந்தவர்களாகவும், சிலர் தங்கள் கைகளை இழந்தவர்களாகவும் இருந்தார்கள்.
ஒரு கர்ப்பிணித் தாய் தனது இரண்டு கால்களையும் இரண்டு கைகளையும் இழந்ததோடு, தாதிப்பெண்கள் தான் சாவதற்கு உதவவேண்டுமென கதறிக்கொண்டிருந்தார். இன்னுஞ் சிலர், அவர்களின் முள்ளந்தண்டில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பின் காரணமாக முற்றுமுழுதாக செயலிழந்திருந்தனர். அங்கிருந்த சிறுவன்களில் ஒருவன் என்னை ஈர்த்தான். அவனது தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. நான் அவனை நோக்கிப் போனபோது அவனது கன்னத்தில் கண்ணீர் உருண்டோடியது.
அவனுக்கு மூளையில் ஒரு சத்திர சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அவன் என்னிடம் தனது தகப்பனும் இளைய சகோதரியையும் எங்கேயிருக்கின்றார்களென கண்டுபிடிக்கமுடியுமா எனக்கேட்டான். அவனது தாயும், இரண்டு சகோதரர்களும் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார்கள். அவனது மற்ற குடும்ப உறுப்பினர்கள் எங்கேயிருக்கின்றார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதும் கடினமானது. கிண்ணியா, பொலனறுவை, மன்னார், இன்னும் வெவ்வேறு இடங்களுக்கு (வன்னிக்குள்ளிலிருந்து) வந்தவர்கள் அனுப்பப்பட்டபோது, குடும்பத்தினர் ஒன்று சேருவதற்கான சிறு சந்தர்ப்பம் என்பது கேள்விக்குரியதே.
ஒரு தாய் வெறுமையான பார்வையுடன் அமர்ந்திருந்தார். அவர்கள் ஓடத்தொடங்கியபோது, அவரின் ஒரு குழந்தை கொல்லப்பட்டுவிட்டது. அதற்கிடையிலும் ஒரு மண்வெட்டியை எடுத்து மண்ணைத் தோண்டி தனது குழந்தையைப் புதைக்கும் துணிவு அவருக்கு இருந்திருக்கிறது. அவர் தனது குழந்தையின் உடல், காட்டு விலங்குகளால் உண்ணப்படுவதை விரும்பவில்லை. அவர் அழவில்லை ஆனால் உளவியல் பிரச்சினைகளுக்குட்பட்டிருந்தார் என்பது உறுதி. எறிகணைகள் நேரே பதுங்குகுழிக்குள் வந்து விழுந்த பல சம்பவங்கள் இருக்கின்றன.. ஆயிரக்கணக்கானவர்கள் இதனால் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இன்னமும் வன்னிக்குள் தங்கியிருப்பவர்கள் பல்வேறு காரணங்களால் பயத்துடன் (வன்னிக்கு) வெளியே வராது இருக்கின்றார்கள். அவர்களுக்கு தாங்கள் கொல்லப்படுவது (வெளியே வந்து) சித்திரவதை செய்யப்படுவதை விட மேலானதாய் இருக்கிறது.
தீவின் எல்லாப் பக்கமும், முக்கியமாய் கொழும்பில், இராணுவத்தின் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரு நபரின் அடையாள அட்டையில் அவரின் பிறந்த இடம் வன்னியாகவோ, முல்லைத்தீவாகவோ, கிளிநொச்சியாகவோ, ஏன் யாழ்ப்பாணமாயிருந்தாலோ, அவனோ/அவளோ பிரச்சினைக்குரியவராகிவிடுவார். எங்கள் குடியிருப்பு சென்ற வாரம் முழுமையாகச் சோதிக்கப்பட்டு, எனது பதினாறு வயது மகளின் அலுமாரி, ஆடைகள் வைக்குமிடமெல்லாம் சோதிக்கப்பட்டு அவளும் விசாரிக்கப்பட்டாள். அவ்வண்ணமே மக்கள் வன்னியை விட்டு வெளியே வரவிரும்பினாலும், இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
இப்போது இங்கே இனப்படுகொலை பல்வேறு நிலைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. தெரியாத பிரதேசங்களிலும், பழக்கப்படாத இடங்களிலும் சிதறடிக்கப்பட்ட மக்கள், இறுதியில் வலுவற்ற குடிமக்களாகி, அதன் விளைவால் எங்கள் கலாசாரம், கல்வி, உறவு முறைகளில் மிகப்பெரும் பாதிப்பு வரப்போகின்றது என்பதைச் சொல்லவேண்டிய அவசியமில்லை. வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சந்ததிக்கு இனி எதிர்காலத்தில் எந்த நம்பிக்கையும் இல்லை என்பதைத்தான் என்னால் உணர்ந்து சொல்லமுடியும். சர்வதேச சமுகங்களால் அறிக்கைகளை வெளியிடமுடியும், ஆனால் அவை எவையும் எந்தக் கவனத்தையும் பெறாது. எனக்கு எதிர்காலம் இருண்டதாகவும் பயங்கரமானதாகவும் தெரிகிறது.
Thanks: TransCurrents
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
யுத்தத்தின் மூலம் இனப்பிரச்சனையை கொண்டு வருவதாகக் கூறும் இராணுவ ஆட்சியாளர்கள் திறந்த வெளிச் சிறையில் நாம் எதிர்பார்த்ததைப் போலவே மக்களை வைத்திருக்கின்றனர்.
2/22/2009 04:46:00 PMNathan
இதை வாசிக்க கூட எமது மன நிலையால் முடியாமல் உள்ளபோது ....
2/23/2009 11:27:00 PMஇனப்படுகொலையின் வலியை இதை விட எப்படி வெளிப்படுத்த முடியும்?
2/24/2009 07:26:00 AMபடிக்கவே முடியவில்லை நண்பரே. எந்த ஒரு உயிர் பிராணியும் அனுபவித்திருக்காத கொடுமைகளாக இருக்கிறது. நாகரிக உலகம் என்று சொல்லிக்கொள்கிற/ ஜடங்கள் வாழ்கின்ற இந்த பூமியில் இதற்கான தீர்வை எங்கிருந்து பெறுவது என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.
ஐ.நாவும் ஐரோப்பிய நாடுகளும் போர் நிறுத்தம் என்கிற வெற்று அறிவிப்பை விடுத்துக்கொண்டு இருப்பதை விட, அடுத்தக் கட்டத்துக்கான முயற்சியை எடுக்காவிட்டால் தமிழினம் அழிக்கப்பட்டு விடும்.
Post a Comment