உயிர்த் தியாகிகள் தூங்கச் செல்லும்போது
உயிர் தியாகிகள் தூங்கச் செல்லும்போது
கூலிக்கு மாரடிப்போரிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக
நான் விழித்திருக்கிறேன்
நான் அவர்களுக்குச் சொல்கிறேன்:
நீங்கள் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுவீர்கள் என்று நம்புகின்றேன்
அங்கு முகில்களும், மரங்களும், கானலும், நீரும் இருக்கும்
நம்பமுடியாத நிகழ்விலிருந்து,
படுகொலைகளின் உபரி மதிப்பிலிருந்து
அவர்கள் பாதுகாப்பாய் இருப்பதையிட்டு
நான் அவர்களைப் பாராட்டுகிறேன்
நான் காலத்தைத் திருடுகிறேன்
ஆகவே அவர்கள் என்னைக் காலத்திலிருந்து இழுத்தெடுக்க முடியும்
நாம் எல்லோரும் உயிர்த்தியாகிகளா?
நான் குசுகுசுக்கிறேன்: நண்பர்களே,
ஒரு சுவரைத் துணிக்கொடி கட்டுவதற்கு விட்டுவையுங்கள்,
ஒரு இரவைப் பாடுவதற்கு விட்டுவையுங்கள்
நீங்கள் விரும்பும் இடத்தில் உங்கள் பெயர்களைத் தொங்கவிடுவேன்,
ஆகவே சற்றுத் தூங்குங்கள்
புளித் திராட்சையின் ஏணிப்படியில் தூங்குங்கள்
உங்கள் காவலரின் குத்துவாளிலிருந்து
நான் உங்கள் கனவுகளைப் பாதுகாப்பேன்
தீர்க்கதரிசிகளுக்கு எதிரான புத்தகத்தின் சதியிலிருந்து
நான் உங்ளைப் பாதுகாப்பேன்
இன்றிரவு தூங்கச் செல்கையில்
பாடல் இல்லாதவர்களின் பாடலாய் இருங்கள்
நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
நீங்கள் ஒரு புதிய தேசத்தில் விழித்தெழுவீர்கள் என்று நம்புகின்றேன்
ஆனால், அதை ஒரு பாய்ந்து செல்லும் பெண் குதிரையின்மீது வையுங்கள்
நான் குசுகுசுக்கிறேன்: நண்பர்களே,
நீங்கள் எம்மைப்போல் ஒருபோதும் இனந்தெரியாத
தூக்குமேடையின்
சுருக்குக் கயிறாக இருக்கமாட்டீர்கள்.
மனிதனைப் பற்றி
அவனது வாயில் துணிகளை அடைத்தனர்
கைகளைப் பிணைத்து
மரணப் பாறையுடன் இறுகக் கட்டினர்
பின்னர் கூறினர்
நீ ஒரு கொலைகாரன் என்று
அவனது உணவையும் உடைகளையும்
கொடிகளையும் கவர்ந்து சென்றனர்
மரண கூடத்தினுள் அவனை வீசி எறிந்தனர்
பின்னர் கூறினர்
நீ ஒரு திருடன் என்று
அவன் எல்லாத் துறைமுகங்களில் இருந்தும்
துரத்தப்பட்டான்
அவனது அன்புக்குரியவளையும்
அவர்கள் தூக்கிச் சென்றனர்
பின்னர் கூறினர்
நீ ஒரு அகதி என்று
தீப்பொறி கனலும் விழிகளும்
இரத்தம் படிந்த கரங்களும் உடையவனே
இரவு குறுகியது
சிறைச்சாலைகள்
என்றென்றைக்கும் எஞ்சியிரா
சங்கிலிக் கணுக்களும் எஞ்சியிரா
நீரோ இறந்துவிட்டான்
ரோம் இன்னும் இறக்கவில்லை
அவள் தன் கண்களாலேயே இன்றும் போரிடுகிறாள்
காய்ந்து போன ஒரு கோதுமைக் கதிரின் விதைகள்
கோடிக்கணக்கில் பசிய கதிர்களால்
சமவெளியை நிரப்பவே செய்யும்.
தாய்நாடு
ஈச்சைமரத்தின் பாளைகளில் என்னைத் தொங்கவிடு
என்னைத் தூக்கிலிடு,
நான் ஈச்சையை வஞ்சிக்கமாட்டேன்
இந்த நாடு எனது.
நீண்ட காலத்துக்கு முன்பு நல்ல, கெட்ட மனநிலைகளில்
நான் ஒட்டகங்களில் பால் கறந்திருக்கின்றேன்
என் தாய்நாடு வீரப்பழங்கதைகளின் ஒரு பொதியல்ல
அது ஒரு நினைவோ, இளம்பிறைகளின் ஒரு வயலோ அல்ல
எனது தாய்நாடு ஒரு கதையோ அல்லது கீதமோ அல்ல
ஏதோ மல்லிகைச் செடியின் கிளையில் விழும் வெளிச்சமும் அல்ல
எனது தாய்நாடு, நாடு கடத்தப்பட்டவனின் கோபம்
முத்தமும் அரவணைப்பும் வேண்டும் ஒரு குழந்தை.
ஒரு சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்ட காற்று
தன் மகன்களுக்கும் தன் வயலுக்குமாகத்
துக்கம் அனுஷ்டிக்கும் ஒரு கிழவன்
இந்த நாடு என் எலும்புகளைப் போர்த்தியிருக்கும் தோல்
என் இதயம் ஒரு தேனீபோல் அதன் புற்களுக்கு மேலால் பறக்கிறது
ஈச்சைமரத்தின் பாளைகளில் என்னைத் தொங்கவிடு
என்னைத் தூக்கிலிடு
நான் ஈச்சையை வஞ்சிக்கமாட்டேன்.
நான் அங்கு பிறந்தேன்
நான் அங்குதான் பிறந்தேன்
எனக்கு நினைவுகள் உள்ளன
மனிதர்கள் போலவே நான் பிறந்தேன்
எனக்கு ஒரு தாய் இருக்கிறாள்
பல ஜன்னல்கள் உள்ள ஒரு வீடும் உண்டு
சகோதரர்களும் நண்பர்களும் உள்ளனர்
இதயமற்ற ஜன்னலுடன் ஒரு சிறைக்கூடமும் உள்ளது
நீர்ப்பறவை எழுப்பிய அலை எனதுதான்
எனக்கென்று சொந்தப்பார்வை உண்டு
ஒரு மேலதிக புல் இதழும் உண்டு
உலகின் தொலைதூரச் சந்திரன் எனதுதான்
பறவைக் கூட்டங்களும்
அழிவற்ற ஒலிவ மரமும் எனதுதான்
வாள்களுக்கு முன்பு நான் இந்த மண்ணில் நடந்தேன்
அதன் வாழும் உடலை ஒரு துயர மேசையாக்கினேன்
நான் அங்குதான் பிறந்தேன்
வானம் தன் தாய்க்காக அழுதபோது
நான் வானத்தை அதன் தாயாக மாற்றினேன்.
திரும்பிவரும் மேகம் என்னைத் தெரிந்துகொள்வதற்காக
நானும் அழுதேன்.
இரத்த நீதிமன்றத்துக்குரிய எல்லாச் சொற்களையும் கற்றேன்
அதனால் விதியை என்னால் மீறமுடிந்தது
நான் எல்லாச் சொற்களையும் கற்று
பின்னர் அவற்றை உடைத்தேன்
ஒரேயொரு சொல்லை உருவாக்க: அதுதான் என் தாய்நாடு
நன்றி: மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள் (அடையாளம் பதிப்பகம்)
குறிப்பு: 'இந்நூலில் உள்ள ஏதாவது ஒரு பகுதியைப் பயன்படுத்துவோர் மொழிபெயர்ப்பாளருக்கோ வெளியீட்டாளருக்கோ தெரிவிக்க வேண்டுகிறோம்' என்ற குறிப்பு நூலில் உள்ளது. தனிப்பட்டு எம்.ஏ.நுஃமானிடம் இவற்றைப் பதிவிடுவதற்காய் அனுமதி வாங்கியிருந்தேன். எவராவது இவற்றை மீள்பிரசுரம் செய்வதாயின் தயவுசெய்து உரியவர்களிடம் அனுமதி பெறவும். நன்றி
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//'இந்நூலில் உள்ள ஏதாவது ஒரு பகுதியைப் பயன்படுத்துவோர் மொழிபெயர்ப்பாளருக்கோ வெளியீட்டாளருக்கோ தெரிவிக்க வேண்டுகிறோம்' என்ற குறிப்பு நூலில் உள்ளது. தனிப்பட்டு எம்.ஏ.நுஃமானிடம் இவற்றைப் பதிவிடுவதற்காய் அனுமதி வாங்கியிருந்தேன். எவராவது இவற்றை மீள்பிரசுரம் செய்வதாயின் தயவுசெய்து உரியவர்களிடம் அனுமதி பெறவும். நன்றி//
5/25/2009 10:40:00 AMஒருவர் தன் சொந்த வலியை எழுதும்போது,அதை மொழிபெயர்த்துக் காசாக்கியவர்கள்-அல்லது இன்னொரு மொழிக்குள் கொணர்ந்தவர்கள் எங்ஙனம் மானுடப் பொதுவனுபவத்தைத் தமது உரிமை-அல்லது பொறுப்பு என மொழிய முடியும்?
இக் கவிதையை எவரும் பாவிக்கலாம்.அதற்கு, எவரது உரிமையும் அவசியமில்லை.
பூமியிலுள்ள கனிவளங்களைக் கொள்ளையிட்டுத் தனியுடமையாக்குவதுபோன்று,இக்கவிதையையும் தனியுடமை ஆக்குவது எப்படிச் சரியாகமுடியும்?
மானுட வலிகள் பொதுவானவை.
அதை உரிமைகூறித் தமது ஆளுமைக்குள் கொணர எவருக்கும் உரித்தில்லை.
நண்பர் உடைப்பு,
5/25/2009 02:42:00 PMநீங்கள் கூறுவதை ஒருவிதத்தில் ஏற்றுக்கொள்கிறேன். எனினும் தமிழாக்கம் செய்வதற்கும் உழைப்புத் தேவைப்படும்விதத்தில் நாம் நூலில் குறிப்பிடுவதை இன்னொருவகையில் மறுத்துவிடவும் முடியாது.
அண்மையில் வாசித்த கவிதைத் தொகுப்பில், அதிகம் பாதித்த தொகுப்பாய் இது இருந்தது. இன்றைய நம் சூழலோடு பொருத்தக்கூடிய அதிக கவிதைகளுள்ள இத்தொகுப்பைப் பிறருடன் பகிரவேண்டும் என்ற ஆவலிலேயே, நுஃமானிடம் இணையத்தில் பதிவேற்ற அனுமதி கோரியிருந்தேன். 'தாராளமாய்ப் பயன்படுத்தலாம்' என்று அனுமதி தந்திருந்தார்.
நிச்சயமாக நுஃமான் பிறர் பகிர்வதை/பதிவதைத் தடுக்கமாட்டார் என்றே நினைக்கின்றேன். எனெனில் மஹ்மூட் தர்வீஷின் கவிதைகள் சில ஏற்கனவே 'பாலஸ்தீனக் கவிதைகள்' என்ற தொகுப்பில் வெளி வந்திருக்கின்றன. எவருமே வாசிக்கலாம்/பகிரலாம் என்றுதானே நுஃமான், நூலகம் நெற்றில் தனது வெளியீடுகளை பதிப்பிக்க அனுமதித்திருக்கின்றார் அல்லவா?
//இன்றைய நம் சூழலோடு பொருத்தக்கூடிய அதிக கவிதைகளுள்ள இத்தொகுப்பைப் பிறருடன் பகிரவேண்டும் என்ற ஆவலிலேயே...//
5/26/2009 04:52:00 AMபகிர்தலுக்கு நன்றி டி.ஜே
அவமானங்களை உடுத்த வக்கின்றி நிர்வாணமாகும் ஒரு இனத்தின் பிரதிபலிப்பாய் இந்தக் கவிதைகள் எம்மோடு (?) (என்னோடு) பொருந்திப்போவதை ஆறுதல் என்றும் ஆற்றாமை என்றும் இருவேறாய் ஒரே சமயம் பொருள் கொள்ளப்படுதலே விசித்திரமாக இருக்கிறது.
//நான் எல்லாச் சொற்களையும் கற்று
பின்னர் அவற்றை உடைத்தேன்
ஒரேயொரு சொல்லை உருவாக்க: அதுதான் என் தாய்நாடு//
எல்லா அஸ்தமனங்களினுள்ளும் நினைவுகள் வாழ்கிறது ஒரு விலகாத கனவாக, உணரச் சிலவேளை நாளாகலாம்.....
கவிஞர் மஹ்மூத் தர்வீஷின் கவிதைகளை இங்கு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே !
5/26/2009 02:58:00 PMநன்றி: துர்க்கா & ரிஷான்.
6/01/2009 11:36:00 AM...
ரிஷான்: நீங்கள் நலமாக இருப்பது குறித்தறிவது நிம்மதியாக இருக்கிறது.
Post a Comment