-மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு' நாவலை முன்வைத்து-
1.
ஈழத்தமிழரின் வாழ்வென்பது ஈழத்திலும் புலத்திலுமென பல்வேறு சிக்கல்களைத் தினமும் சந்திப்பது. நான்கு புறமும் கடல் சூழ்ந்த தீவொன்றில் இருந்து வலுக்கட்டாயமாய் புலம்பெயர்க்கப்பட்ட மக்களின் கதைகளில் அநேகம் கண்ணீரின் உவப்பு உடையனவை. புதிய வாழ்வு தேடிப்புறப்பட்ட பல ஈழத்தமிழரின் உயிர்கள் கடலிலும்,பனியிலும் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டு நினைவுகள் மட்டும் மிதந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு புதிய வாழ்வு தேடி அகதியாய்ப் புலம்பெயரும் ஒருவன் விமானநிலையத்தில் பிடிபட்டு நிர்வாணமாக்கப்பட்டு விசாரிக்கப்படுவதில் இருந்து தொடங்குகின்றது மெலிஞ்சி முத்தனின் 'வேருலகு' குறுநாவல். கதைசொல்லியான சீலன் நிர்வாணியாக்கப்பட்டு அடையாளத்துக்காய் புகைப்படமும், கைரேகையும் பொலிஸால் எடுக்கப்படுகின்றது. தன்னைப் புறவுலகாய் அடையாளங்காண முயற்சிக்கும் உங்களால் தன் தனித்துவமான கனவுகளுக்குள் நுழையமுடியுமா என சீலன் அவர்களை மனதுக்குள் கேலி செய்கின்றான்.
சீலன் ஈழத்திலிருந்து பிரான்சிற்கு புலம்பெயர்ந்த ஓர் அகதி. ஊரில் இருக்கும்போது பழக்கமான பவானி சீலனுக்கு தங்கிமிடத்தை வசதி செய்து கொடுக்கிறார். அவ்வீட்டில் வசிக்கும் பவானி உட்பட அனைவரும் குறைந்த வருமானத்தில் தங்கள் வாழ்வை நகர்த்திச் செல்பவர்கள். மேலும் ஊரிலிருக்கும் தம் குடும்பம்/உறவுகளுக்கு பணமும் அனுப்பவேண்டியவர்கள். மிகுந்த அவஸ்தைகளுடன் இவர்களுடன் காலம் கழிக்கும் சீலனுக்கு இரண்டாம் முறையும் அகதி அந்தஸ்து பிரான்சில் நிராகரிக்கப்பட பிரான்ஸிலிருந்து வேறு நாடுக்கு கள்ளமாக வெளிக்கிடத் தயாராகிறார். பவானி சீலனைத் திருமணம் செய்யும் தன் விருப்பைத் தெரிவிக்கிறார். தான் காதலியாக பவானியை நினைத்துப் பழகவில்லையெனக் கூறி சீலன் மறுத்தாலும், இதற்கு இன்னொரு முக்கிய காரணம் உண்டு. அது சாதி. பவானி, ஊரில் பனையேறும் தொழிலைச் செய்யும் பிறேமனின் மகள்.
ஸ்பெயினிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்லும் பயணம் இடைநடுவில் பிடிபட்டுத் தடைபட, வெறுமையோடு சிறைக்குள்ளிருக்கும் சீலனுக்குள் ஊர்பற்றிய நினைவுகள் ஊறத்தொடங்குகின்றன. ஸ்பெயினிலிருந்து கதை கடல்களையும் கண்டங்களையும் தாண்டி அரிப்புத்துறையில் போய் இறங்கி நகரத் தொடங்குகின்றது. அருவியாறு பாயும் அரிப்புத்துறையில் போரும் வறுமையும் மாறி மாறித் தம்மை விஞ்சுகின்ற வாழ்க்கை சீலனுக்கு. பெரியம்மா குடும்பத்தோடு அதிக காலம் கழிக்கும் சீலனுக்கு அருகிலிருக்கும் கண்மணி மாமி குடும்பத்துடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. கண்மணி மாமியின் குடும்பத்தை முன்னிலைப்படுத்தியபடி 'வேருலகு' பல்வேறு திசைகளில் பயணிக்கத் தொடங்குகின்றது. கண்மணி மாமி, மாமா, அவர்களின் பிள்ளைகளான சசியக்கா, சின்னன், அத்தான்பிள்ள மற்றும் கண்மணி மாமி வீட்டில் வேலை செய்கின்ற உலுந்தையின் பாத்திரமும் அதிகம் விவரிக்கப்படுகின்றன. இவர்களோடு சேமாலையண்ணன், சந்தியாக்கிழவன், பொன்னுக்கிழவி போன்றோரும் அறிமுகப்படுத்தப்படுகின்றார்கள். இம்மூவரும் சீலனின் வாழ்வில் ஆழமான பாதிப்பை ஏதோவொரு வகையில் ஏற்படுத்துபவர்கள்.
கண்மணி மாமி குளிப்பதை இரகசியமாக இரசிக்கும் உலுந்தை, வளர்ந்த தன் மகளான சசியக்காவுடன் ஒரே அறையில் படுத்து கைகளால் அளைகின்ற (கண்மணி)மாமா, சசியக்காவின் நெருப்புச் சுழியேற்றும் மார்புகளை நினைத்துத் தன் காற்சட்டைகளை நனைக்கும் கதைசொல்லியான சீலன் என எல்லோருக்குள்ளும் காமம் பல்வேறு புள்ளிகளில் குறுக்கிடுகின்றன. கண்மணி மாமியின் இருளான அறையினுள் ஆமைகள் புரள்வதைப் போல இவர்கள் எல்லோருக்குள்ளும் காமம் ஒரு இரகசிய நதியாய் நகர்ந்தபடியிருக்கின்றது. ஆனால் 'வேருலகு' காமத்தை மட்டும் உரையாடும் புனைவல்ல. போர் சார்ந்த வாழ்க்கையின் உள்ளும் காமம் தன்னளவிள் கசிந்தபடியிருக்கும் என்பதைப் படைப்பாளி சுட்டிக்காடிவிட்டு புறச்சூழலுக்குள் நகர்ந்துவிடுகின்றார்.
ஈழத்தில் பல்வேறு இயக்கங்கள் வெடித்துக் கிளம்புகின்ற காலம். 'தோழர்' என தங்கள் இயக்கத்தவரை அழைத்துக்கொள்ளும் இயக்கம் ஒன்றுக்கு கண்மணி மாமி குடும்பத்தினர் ஆதரவு கொடுக்கின்றனர். நள்ளிரவுகளில் கண்மணி மாமி, வீட்டில் புட்டு அவித்துக் கொட்டக் கொட்ட, சுடச்சுட எழுதப்படும் சுவரோட்டிகள் பகல் வேளைகளில் உணர்ச்சிகரமாய் போராட்டத்திற்கு சுவர்களில் அழைப்பு விடுகின்றன. அவ்வாறான காலப்பகுதியில் இயக்கத்தில் இருக்கின்ற சேமாலையண்ணனுக்கும் சசியக்காவிற்கும் காதல் அரும்புகின்றது. அவர்கள் திருமணம் செய்கின்ற நாளில் இராணுவம் ஊர்புக சனங்கள் அகதியாகின்றனர். இடையில் கண்மணி மாமி வீட்டில் வேலை செய்யும் உலுந்தை (கண்மணி)மாமாவிற்கு கத்தியால் குத்திவிட்டு ஓடிப்போய்விடுகின்றார். இவ்வாறு மாமா குத்தப்பட்டதற்கு மாமாவிற்கு உலுந்தையின் அக்காவோடு இருந்த இரகசிய உறவென்று ஊரில் பேசிக்கொள்கின்றார்கள். ஆனால் எவருக்குத் தெரியாத -சீலனுக்கு மட்டுந்தெரிந்த- மாமியின் உட்பாவாடையை களவாக எடுத்து இரகசியமாய் இரசிக்கின்ற உலுந்தையின் இன்னொரு கதையும் வேருலகில் சொல்லப்படுகின்றது.
உலுந்தையின் அக்காவோடு தன் கணவனுக்கு இருந்த தொடர்புபற்றிப் பேசும் ஊர் வாயை மூட முடியாத கண்மணி மாமி சாவதற்குக் கிணற்றுக்குள் குதிக்கிறார். இதை முதலில் கண்டாலும், அவரை விட சாதியின் படிநிலையில் குறைந்திருக்கின்ற பிறேமனால் கிணற்றுக்குள் குதித்து கண்மணி மாமியை விட காப்பாற்ற முடியாதிருக்கின்றது. சேமாலையண்ணன் வரும்வரை காத்திருக்கவேண்டியிருக்கிறது. 'எங்கிருந்தோ எழும் மிடுக்கும' என்று மஹாகவி பாடியதைப் போல இழப்புக்கள், இடம்பெயர்தல்கள் போன்ற துயர்களுக்கும் அப்பால், உயிர்ப்புடன் அரிப்புத்துறைச் சனம் தொழில் செய்ய கடலுக்குப் போகத்தொடங்குகின்றனர். ஒரு நாள் கடலுக்குள் தொழில் செய்யப் புறப்பட்ட படகுகள் இராணுவத்தால் கொல்லப்பட்ட உடலங்களோடு கரை திரும்புகின்றன. அன்று ஊரில் 12 பேர் விதவையாயிற்றார்களெனக் கதைசொல்லி கூறுகின்றார். அதில் போன சேமாலையண்ணன் உட்பட ஒருசிலரின் உடல்கள் தவிர மிகுதி உடல்கள் அடையாளங் காணப்படுகின்றன. சேமாலையன்ணன் உயிருடன் வருவார் என்று சசியக்காவும், கண்மணி மாமியும் நம்புகின்றனர். கர்ப்பணியாயிருக்கும் சசியக்காவிற்கும் குழந்தை இறந்து பிறக்கின்றது.
இவ்வாறான கொடுங்கனவுகள் சூழந்த காலத்தில், மாமாவைக் குத்திவிட்ட உலுந்தையை சீலன் ஓரிடத்தில் சந்திக்கின்றார். தன்னோடு கூடவே வரும்படி அழைக்கின்ற உலுந்தையோடு போகின்ற சீலன், தண்ணீர் அள்ளத் தனித்து வருகின்ற ஒரு இராணுவத்தின் தலையை உலுந்தை வெட்டுவதை நேரடிச் சாட்சியாகப் பார்க்கின்றார். எநத அறத்தைச் சமன்பாடாக வைத்தும் கொலையை நியாயம் செய்யமுடியாது நம்புகின்ற சீலனுக்கு உலுந்தையின் இச்செயல் மிகுந்த அதிர்ச்சியைத் தருகின்றது.
பூச்சியாடும் தானுமாய்த் திரிகின்ற பொன்னுக்கிழவி பல தொன்மக் கதைகளை சீலனுக்குக் கூறுகின்றார். அதிலொரு கதை அல்லி ராணியின் கதை. அரிப்புத்துறையில் குறுநில அரசர்களாய் இருந்த பரம்பரையில் வந்த அல்லியையும் அவளது கணவனையும், அல்லியில் ஆசை வைக்கும் ஓர் அதிகாரி நயவஞ்சகமாகக் கொல்கின்றான். ஆனால் அல்லிகளுக்கு மரணம் நிகழ்வதேயில்லை; துரோகிகளை அழிப்பதற்காக காலந்தோறும் அல்லி ராணி உயிர்த்தபடியேயிருக்கிறாள் என்கிறார் பொன்னுக்கிழவி. தனக்குள்ளே அதிகம் பேசுகின்ற சந்தியாக் கிழவனை, ஊர் மனம்பிறழ்ந்தவர் என்று கூறிக்கொண்டாலும் சீலனுக்கு அவரே எதையும் அதிகம் அறிந்தவரென்று அவருடன் நெருங்கிப்பழகுகிறான்.
ஒருநாள் சந்தியாக் கிழவன் காணாமற்போகின்றார். சனம் முற்றுமுழுதாய் ஊர் விட்டு அகதியாக இடம்பெயர்கிறது. பொன்னுக்கிழவி என்ன நிகழ்ந்தாலும் ஊரைவிட்டு நீங்குவதில்லையென சந்தியாக் கிழவனின் மீள்வருகைக்காய் ஊரிலேயே தங்கிவிடுகின்றார். ஆமைகள் மீண்டும் புரண்டு புரண்டு இருட்டு அறைகளில் படுக்கின்றன. பூனைகளும் எவ்வளவு தடுத்தும் குட்டிகளைப் போடுவதை வீடுகளில் நிறுத்துவதாய் இல்லை. சசியக்கா அகதி முகாமில் இருக்கின்ற செல்வனோடு எங்கையோ வன்னிப்பக்கமாய் ஓடிப்போய்விடுகின்றார்.
தற்செயலாய் ஒருநாள் சீலன் சேமாலையண்ணனை உயிருடன் காண்கிறார். அவர் தன்னை மீன்பிடிக்க கடலுக்குள் போனபோது கைது செய்த இராணுவம் தள்ளாடி முகாமிலும் பின்னர் வெலிக்கடையிலும் வைத்திருந்து விடுவித்தது என்கின்றார். வறுமையின் நிமித்தம் கூலித்தொழிலாளியாக பல இடங்களில் வேலை செய்து 'முட்டாள்' எனப்பட்டம் வாங்கி தற்போது இராணுவத்தோடு சேர்ந்தியங்கும் இயக்கம் ஒன்றோடு சம்பளத்திற்காய் சேர்ந்திருக்கின்றேன் என்கிறார். இவை எல்லாவற்றுக்கும் மேலான சோகமாய், சேமாலையண்ணனை இராணுவம் பிடிபடமுன்னர் சேர்ந்து இயங்கிய இயக்கம், சேமாலையண்ணன் விடுதலையாகி வந்தபோது கரைந்து காணாமற்போய்விட்டது. 'ஈழ விடுதலைப் போராட்டம் என்ற நீரோட்டத்தில் தெறித்து வெறும் குமிழிகளாய் சலனற்றுப் போன எத்தனையோ துளிகளில் ஒருதுளிதான்' சேமாலையண்ணன் என்று நினைத்து கவலைப்படுகிறார் சீலன்.
ஒருநாள் அல்லி ராணி அருவியாற்றில் நீராடுவதை சீலன் காண்கிறார். நெருங்கிப் போய்ப்பார்க்கும்போது அது -கண்மணி மாமியின் மகளான- சின்னன் என்பது தெரிகின்றது. அல்லிகள் மீண்டும் தோன்றுவது துரோகிகளைப் பூண்டோடு அழிக்கவே என்ற பொன்னுக்கிழவியின் தொன்மக் கதை கடந்து போகின்றது. சின்னன் ஒருநாள் சேமாலையண்ணனை ஏழு துண்டாய் வெட்டிவிட்டு நதியில் இறங்கி இரத்தக்கறையைக் கழுவிக்கொள்கிறார்.
2.
வேருலகின்' கதாபாத்திரங்கள் குறித்தும் அவை நகரும் திசை குறித்தும் ஒரு எளிமையான வரைபடத்தை இவ்வாறு வழங்கினாலும் இக்குறுநாவலில் வரும் பல பாத்திரங்கள் தம்மளவில் தனியே விரிந்து பல கதைகளைக் கூறக்கூடியன. முக்கியமாய் சேமாலையண்ணன், உலுந்தை, சசியக்கா தங்களின் கதையைத் தமதளவில் சொல்லக்கூடிய இடைவெளிகளை படைப்பாளி தந்திருக்கின்றார். அதிகமான உரையாடல்களாலும்,எளிமையான மொழியிலும் எழுதப்படும் பெரும்பான்மையான ஈழப்படைப்புக்களிலிருந்து விலகி நிறையப் படிமங்களோடும், மிக இறுக்கமான உரைநடையோடும் 'வேருலகு' தனித்துவமாய் மிளிர்கின்றது. 'காடு பச்சை மேகங்களாய் அவதாரமெடுத்திருந்த அவ்விடத்தில் வானம் இறங்கித் தன் கூரலகால் நதி நீர் அருந்திக்கொண்டிருந்தது' (ப26), 'கடல் பல கோணல்மாணல்களின் அழகு. காமத்தையும் கோபத்தையும் ஒருங்கே சேர்த்த திமிறலின் வடிவம். கடற்கரை முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கின்றது ஒரு படுக்கையறையின் முனகற்சத்தம்' (ப25) 'பொறுக்கப்படாத எருக்கட்டிகளோடு பொக்கிளிப்பான் வந்ததொரு முகத்தைப் போலக் கிடந்தது பனங்கூடல்' (ப58) என்பவை ஒரு சில உதாரணங்கள்.
ஈழத்தின் உள்ளே போரினால் நடைபெறும் இடம்பெயர்வுகள் பல்வகைப்பட்டது. ஒரளவு வசதியானவர்கள் இடம்பெயர்ந்து தங்கள் உறவினர் வீடுகளிலோ வேறு வீடுகளிலோ தங்கிவிடுவது ஒருவகை. இன்னொரு வகையினருக்கு இவ்வாறான வசதிகள் கிடைப்பதில்லை. ஆகவே அவர்கள் இடம்பெயரும்போது யாராலும் கவனிக்கப்படாத கைவிடப்பட்ட நிலப்பரப்புக்களில் குடில்களை அமைத்து முகாங்களை நிறுவிக்கொள்வார்கள். இவ்வாறான அகதி முகாங்களில் அடிப்படை வசதிகள் கூட இருப்பதில்லை. இயற்கைக்கடனிற்காய் பற்றைகளைத் தேடவேண்டியிருக்கும். மழை, வெள்ளம் போன்றவை நிகழும்போது இன்னொருவகையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதுவரை எழுத்தில் அவ்வளவு பதியப்படாத இந்த இரண்டாம் வகையான அகதிமுகாம் வாழ்வு 'வேருலகில்' மிக அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 'வறுமை உறிஞ்சிய செரிக்காத வயிறுகளும், கன்னங்கள் ஒட்டி முன்னோக்கி நிற்கும் பற்களும், குழி விழுந்த கண்களும், அவிந்த வாய்களும், நரம்பு புடைத்திருக்கும் நெற்றிப் பள்ளங்களும்' இவ்வாறான அகதி முகாம் வாழ்க்கைக்குள் இருந்தவர்களுக்கு 'கொடையாக' அளிக்கப்பட்டிருக்கின்றது.
இப்புனைவில் போராட்டத்தில் உண்மையாய் தங்களை அர்ப்பணித்தவர்கள் அனைவரும் விருப்பு வெறுப்பின்றி இயல்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். காலமும் வறுமையும் திசை மாறிப்போக சேமாலையண்ணனைத் துரத்தினாலும், அவர் ஒரு வேற்றாளாக இக்குறுநாவலில் சித்தரிக்கப்படாது முக்கியமானது. 'துரோகி' எனப்பெயரிட்டு ஒழித்துக்கட்டப்பட்ட அநேகரிலும், இரத்தமும் சதையுமான தமிழ்மக்களின் விடுதலை சார்ந்த கனவுகளே இருந்திருக்கின்றன என்பதை சேமாலையண்ணன் பாத்திரம் காட்டுகின்றது. சேமாலையண்ணன போல காலத்தின் சுழியில் சிக்குப்பட்டு சின்னாபின்னாமாகிப் போனவர்கள்தான் எத்தனை பேர்? அதேபோல எதிரிகளாக கட்டமைக்கப்பட்டவர்கள் மீது நாம் நிகழ்த்திய மிகக்கொடூரமான வன்முறையின் படிமந்தான் உலுந்தையின் பாத்திரம். தனியே வரும் இராணுவத்தின் கழுத்தை வெட்டி தலையை கிணற்று வாளிக்குள் வைத்து இரத்தம் தெறிக்கக் கொண்டு ஓடுகையில் நாம் இழந்துபோயிருந்த மனிதாபிமானம் நினைவூட்டப்படுகின்றது.
நான்கு கால்களின் கதையைச் சொல்லப்போகின்றேன் என்று இக்குறுநாவலின் இடையில் கதைசொல்லி சொல்வது இந்த நான்கு காலிலிருந்து நீளும் ஆயிரக்கான கால்களின் துயரத்தைத்தான்; ஒற்றைக் காலிழந்த புறா, ஒரு காலை மிதிவெடிக்கு பலி கொடுத்த ஒரு கூத்துக்கலைஞன் மற்றும் இராணுவத்தின் பகுதியிற்குள் வந்து சுடப்பட்டு மரணித்த ஒரு போராளியின் கால்கள். இந்தக் கால்கள் தமது கதையை மட்டும் நமக்குக் கூறுவன அல்ல, அதற்குப் பின்னால் நாம் தவறவிட்ட பல கால்களின் கதையையும் அக்கறையுடன் கவனிக்கச் சொல்கின்றன.
ஈழத்தின் நிகழ்காலக் கதையைச் சொல்ல வரும் ஒருவருக்கு மிகுந்த சிரமங்கள் இருக்கின்றன. ஏதோவொரு புள்ளியில் படைப்பாளி ஒரு சார்பை எடுக்கவேண்டிய நிலையை வந்தடையவே செய்வர். ஆனால் போரை வெறுக்கின்ற, கொலைகளை எந்த அறத்தின் பொருட்டும் நியாயப்படுத்த விரும்பாத ஒரு படைப்பாளி தான் சொல்லவேண்டிய கதையை மட்டும் கூறிவிட்டு எவரின் மீதும் தீர்ப்பு எழுதாது விலகிவிடுவார். அந்தவகையில் மெலிஞ்சி முத்தனின் 'வேருலகு' இருப்பது குறிப்பிடவேண்டியது. 'ஒற்றைக் காலிழந்த புறாவே துயரத்துடன் அலையாதே, உனக்குப் பறப்பதற்கு சிறகுகள் இருக்கின்றன என்பதையும் மறந்துவிடாதே' என்று பெரும் இழப்புக்களின் பின்னால் வரும் விரக்தியிற்கு அப்பாலும் வாழ்வின் மீது நம்பிக்கை கொள்ளச் சொல்கிறது இப்புனைவு. இதனால்தான் அண்மைக்காலத்தில் வெளிவந்த படைப்புக்களில் கவனிக்கத்தக்க படைப்பாகவும் பல்வேறு வாசிப்புக்களைச் செய்யக்கூடிய புனைவாகவும் வேருலகு தெரிகின்றது.
(தீராநதி - ஜீன்,2010 இதழில் இதன் சுருக்கிய வடிவம் பிரசுரமானது)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நீங்கள் சொன்னது போலவே ஈழத்து இலக்கியப் படைப்புகளில் இது ஒரு பாய்ச்சல் என்றே சொல்லவேண்டும். தவிர பல்வேறு வாசிப்புகளை இது கொண்டிருப்பதால் வாசிக்கும் போதும், மீண்டும் மீட்டுப் பார்க்கும்போதும் எப்போதும் புதியதாகவே இருக்கின்றது. இந்நாவல் பற்றிய விமர்சனக் கூட்டத்திலும் நேரிலும் சிலர் பாராட்டினால் எழுதாமல் விட்டுவிடுவார் / எழுத்தின் தரம் குறைந்துவிடும் அதனால் பாராட்டமாட்டோம் என்று சொல்லி என்னென்னவோ சொன்னார்கள். இது போன்ற சாபங்களையும் மீறி மெலிஞ்சி தொடர்ந்து எழுதவேண்டும்...
6/28/2010 06:56:00 PMஎன் கவனம் எங்கேயோ சிதறுகிறதோ??? சூசை மரியதாசன் (பக்கம் 13 பத்தி 2, 4வது வரி)... சீலனை எங்கே தொலைத்தேன்?
6/29/2010 05:14:00 PMநன்றி அருண்.
6/29/2010 11:55:00 PM...
கிருத்திகன்,
நீங்கள் குறிப்பிடுவதும் சரி. சூசை மரியதாசனுக்கு இன்னொரு பெயராக சீலனும் இருக்கிறது.
'டேய் சீலன் பெரியம்மாவ கைவிட்டிராதயடா...நீதானேயெடா அவளின்ர சொத்து' என்று -இப்போதைக்கு- புரட்டிய 56ம் பக்கத்தில் இருக்கிறது. வேறு இடங்களிலும் இருக்கலாம்; தேடிப்பார்க்கவேண்டும்.
இன்னுமொரு இடம்:
6/30/2010 12:01:00 AM'சசியக்காவ சுடுதண்ணிப் போத்திலயும், தலையணை, வெற்சீற்றையும் எடுத்துக்கொண்டு ஆசுப்பத்திரிக்கு வரச்சொல்லடா சீலன்' என்று சொல்லிக்கொண்டே போனார் கண்மணி மாமி. நான் தலையாட்டிக்கொண்டே கண்மணி மாமி வீட்டைத்தேடி ஓடினேன் (ப 39).
Post a Comment