நன்றி: IRIN
தமிழாக்கம்: டிசே தமிழன்
கணேஸ்வரி சந்தானம் (31),சுதந்திர தமிழ் நாடு அமைப்பதற்காய் 25 வருடங்களுக்கு மேலாய் போராடி,அண்மையில் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்களில் ஒருவர்.
-பல நாடுகளால் தீவிரவாத அமைப்பென அழைக்கப்பட்ட- இயக்கத்தில் இணைந்த இவர், சமாதான காலத்தில் இயக்கத்திலிருந்து விலகி, சக போராளி ஒருவரைத் திருமணஞ் செய்து ஒரு குழந்தையையும் -மீண்டும் இயக்கத்தில் 20006ல் அழுத்தத்தால் இணையும்போது- பெற்றிருந்தார். இன்று ஆயிரக்கணக்கானவர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைப் போல, தானும் ஒரு நல்லதொரு எதிர்காலத்தை கட்டியமைக்க முடியுமென இவர் நம்புகிறார்.
'நான் 10 வருடங்களுக்கு முன் தமிழ் மக்களின் விடுதலைக்கான போருக்காய் புலிகளிடம் சேர்ந்தேன் எனது பெற்றோர் எனது முடிவு குறித்து அவ்வளவு சந்தோசமடையவில்லை. போரின் காரணமாக நான் பாடசாலையிலிருந்து விலகினேன். ஒரு பரத நாட்டியக்காரியாக வருவதே எனது குழந்தைப் பருவக் கனவாக இருந்தது; ஆனால் எனது கனவு ஒருபோதும் நிறைவேறியதில்லை.'
'கிட்டத்தட்ட பத்து வருடத்திற்கு மேலாக இயக்கத்தில் இருந்தபின், 2002ல் ஏற்பட்ட சமாதானக் காலத்தில் நான் புலிகளிடமிருந்து விலகினேன். புலிகளின் போராளியொருவரை மணந்து, ஒரு குழந்தையையும் பெற்று நாங்கள் மகிழ்ச்சியான தம்பதிகளாக இருந்தோம்.
'ஆனால் 2006ல் வாழ்வின் இயல்புநிலை மாறி நான் மீண்டும் இயக்கத்தில் இணைய அழுத்தம் கொடுக்கப்பட்டேன். இக்காலகட்டத்தில், கிராமத்தில் மிகக் கடுமையான பயிற்சி எனக்கு மற்றப் பெண்களோடு தரப்பட்டு, மற்றையவர்களை விட சிறந்ததொரு போராளியாக என்னை நான் நிரூபித்துக் காட்டினேன்.'
'அதே நேரம் இது மிகவும் கடினமாக இருந்தது எனெனில் நான் எனது குடும்பம் பற்றி மிகவும் கவலைப்பட்டேன். இப்போரில் நான் கொல்லப்பட்டால் யார் எனது குடும்பத்தைக் கவனிப்பார்கள் என எப்போதும் நான் யோசிப்பேன். போர்க்களத்தில் நான் நிற்கும்போதும்,எனது குடும்பம் பற்றிய நினைவுகளே எப்போதும் எனது மனதில் இருந்தன.இன்னொரு புறத்தில் இது நான் தீர்மானித்து தெரிவு செய்யும் ஒன்றாக இருக்கவில்லை; நான் தொடர்ச்சியாக சண்டைபிடித்தேன். கடவுளிடம் எனது கணவனையும் மகனையும் வாழ விடும்படி நான் பிரார்த்தித்தேன். பின்னர், எனது குடும்பமும் நானும் எங்கள் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்தோம். இன்னொரு மகனைப் பிரசவித்த நான் இப்போது எனது கணவரைப் போலவே தொழில் எதுவுமின்றி இருக்கின்றேன்.'
'போர் மிகவும் கொடூரமாயிருந்தது, நிறைய காயங்களும், இழப்புக்களும். நான் எனது பிள்ளைகளை படிப்பித்து நல்ல பிள்ளைகளாக்க விரும்புகிறேன். கசப்பான கடந்தகாலத்தை மறந்துவிட்டும் மற்றவர்களை மன்னித்துவிட்டும் அமைதியான வாழ்வை நான் (வாழ) விரும்புகிறேன்.
'நான் போர்க்களத்தில் சமராடியிருக்கிறேன்,ஆனால் என்னால் எவ்விதக் காயங்களுமின்றி தப்ப முடிந்திருக்கிறது, அதேவேளை எனது சகபோராளிகள் நிறையப் பேர் அந்த இடத்திலேயே இறந்திருக்கின்றார்கள். இது ஒரு கடவுளின் அதிசயம். நான் உயிர்வாழ்வதற்காய் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.'
"நான் உயிர்வாழ்வதற்காய் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றேன்" - கணேஸ்வரி சந்தானம்
In தமிழாக்கம்Wednesday, May 26, 2010
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment