1.
ஞாயிறு, Jun 27...
சனிக்கிழமை நிகழ்ந்த வன்முறைகளும், வகைதொகையில்லாக் கைதுகளும் விடிகின்ற ஞாயிறுக்கு மிகுந்த அடர்த்தியைக் கொடுக்கிறது. ஞாயிறின் விடிகாலையில் கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து கிட்டத்தட்ட 900 பேர் சிறைக்குள் இருக்கின்றார்கள் என்றது என்றது பொலிஸ். இதுவரை கனடா வரலாற்றில் முன் எப்போதும் நிகழாத அதிகளவு கைது என்ற செய்தியையும் வரலாறு இந்நாளில் எழுதிக்கொள்கிறது.G20 மாநாடு கோலாகலமாக மூடப்பட்ட அரங்கினுள் ஞாயிறின் பிற்பகல் வரை நடந்தாலும், தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான/ஒன்று கூடுவதற்கான மனிதவலு எதிர்ப்பாளர்களிடம் இருக்கவில்லை. கைதாகியவர்களுக்கு என்ன நடந்தது/நடக்கின்றது என்று பார்ப்பதற்கும், எப்படி அவர்களை விடுதலையாக்குவது என்பதிலும் பலரின் பகலில் பொழுது கழிகிறது.
சனிக்கிழமை நடைபெற்ற சில வன்முறை நிகழ்வுகளால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட அரசும்/பொலிசும் இப்படி ஞாயிறு அமைதியாக விடிகிறதேயென நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கக் கூடும். ஞாயிற்றுக்கிழமை ரொறொண்டோவின் மையத்தில் திறந்திருந்த கடைகள் பல, சனி நிகழ்வால் தம் கடைகளைப் பூட்ட நகர் வெறிச்சோடிப்போயிருந்தது. மெட்ரோ ரொறொண்டோவில் இருந்த மக்கள் தம் அத்தியாவசிய தேவைகளுக்காய் அங்குமிங்குமாய் போவதையும், அன்றைய நாளில் நடந்த உலக காற்பந்தாட்டதைப் பார்களில் பார்க்கப் போகின்ற இரசிகர்களைத் தவிர நகர் களையிழந்து கிடந்தது.
மதியத்திற்கு பின்பான பொழுதுகளில் சிலர் தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்குகின்றனர். கிட்டத்தட்ட 40-50 வரையான ஒரு எதிர்ப்புக் குழு Spadina-Queen சந்தியை அடைத்து ஆர்ப்பாட்டம் செய்கிறது. மிகவும் அமைதியான முறையில் எதிர்ப்புக் காட்டப்படுகிறது. பொலிஸ் அவர்களை ஒரு திசையில் தடுத்து நிறுத்துகிறது. ஆனால் நேரஞ்செல்ல செல்ல சனம் அச்சந்தியில் என்ன நடக்கிறது என விடுப்புப் பார்க்கக் கூடுகிறது. இப்போது கூட்டம் 200ற்கு கிட்டவாக ஆகிறது. சடுதியாக பொலிஸ் ஒரு புதிய முயற்சி செய்து சந்தியில் கூடி நின்றவர்களை நான்கு பக்கமாய் பொலிஸ் சூழ்கிறது. அவர்களை வெளியே செல்லவிடாது தனது கரங்களை இறுக்குகிறது. கிட்டத்தட்ட 4 மணித்தியாலங்களுக்கு மேலாய் பொலிஸ் இந்த முற்றுகையை வைத்திருக்கிறது. ஒருகட்டத்தில் கலவரம் தடுக்கும் பொலிஸ் இந்த மக்களைப் பொறுப்பெடுத்து அவர்களை மிகச்சிறிய இடத்தில் ஒடுக்கி வைக்கிறது. 'நாங்கள் சாதாரணமானவர்கள் எங்களைப் போகவிடுங்கள்' என்றபோதும் எவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. 'எங்களால் இந்த முற்றுகைக்குள் நிற்கமுடியாது' என்பவர்கள் முற்றுகைக்குள் வெளியே எடுக்கப்பட்டு கைகள் பிளாஸ்ரிக் நூலால கட்டபப்ட்டு இன்னொரு வரிசையில் நிறுத்தப்படுகிறார்கள். அதற்கு பொலிஸ் சொன்ன நியாயம்: 'disturbance of peace'. உண்மையில் அந்த 200ற்கு மேற்பட்டவர்களில் 90% மானவர்கள் சாதாரண பொதுமக்கள். காற்பந்தாட்டத்தைப் பார்த்துவிட்டு வந்தவர்கள், மாலை உடற்பயிற்சிக்காய் உலாத்தப்போந்தவர்கள், கடைகளில் பொருட்கள் வாங்கச் சென்றவர்கள்' போன்றவர்களே இக்கூட்டத்தில் கணிசமாய் இருந்தனர். கூடும் ஒரு கூட்டத்தை பொலிஸ் கலைக்க விரும்பினாலோ, தடியடிப் பிரயோகம் செய்யப் போகின்றதோ என்றாலோ ஆகக்குறைந்தது 3 தடவையாவது எச்சரிக்கை கொடுக்கப்பட்டே செயற்பாட்டைத் தொடங்கவேண்டும் என்கின்ற விதியிருக்கிறது. ஆனால் இந்த எச்சரிக்கை எதுவும் கொடுக்காமலேயே பொலிஸ் தன் முற்றுகையை இங்கே நிகழ்த்தியிருந்தமை கவனிக்கத்தது.
இப்படி முற்றுகை மணித்தியாலக்கணக்கில் நீண்டபோது பெருமழையும் பொழியத்தொடங்குகின்றது. அன்றைய தினம் Thunder Storm Warning கொடுக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தது. இவ்வாறு இந்த மக்கள் முற்றுகையிடப்பட்டு பெருமழையில் நின்றபோது அவர்களுக்குரிய எந்த அடிப்படை உரிமைகள் கூட விட்டுக்கொடுக்கவில்லை. இயற்கையின் உபாதையிற்கோ அல்லது தாகத்திற்கு தண்ணீர் குடிக்கவோ அனுமதிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 3 மணித்தியாலங்கள் மேலாகத் தொடர்ச்சியாக பெயத மழையில் நனைந்தபடியும் நடுங்கியபடியும் பொதுமக்கள் நடுவீதியில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந்த 4 மணித்தியாலய பொலிஸ் 'நாடகத்தை' இங்கிருக்கும் உள்ளூர் தொலைகாட்சி(CityTV) நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தது. ஏன் இப்படி சாதாரண மக்களை முற்றுகையிட்டு மணித்தியாலக்கணக்கில் வைத்திருக்கின்றீர்களென ஊடகவியலாளர் பொலிஸிடம் கேட்டபோது அதைப் பற்றி எதுவும் கூறாது சும்மா மழுப்பிக்கொண்டிருந்தது பொலிஸ். G20 மாநாட்டை முன்னிட்டு இதுநாள்வரை தடுப்பு வேலிக்கு அருகில் போனால் கைது செய்யும் உரிமை பொலிசுக்கு இருக்கிறது என்ற நிலையிலிருந்து சாதாரண வீதிகளில் நடந்தால் கூட உங்களை எந்தக் கேள்வியுமில்லாது முற்றுகையிட்டு வைத்திருக்கும் உச்ச அதிகார நிலைக்கு பொலிசின் கொடுங்கரங்கள் நீளத்தொடங்கியது (அப்படியொரு சட்டம் இருக்கவில்லை; ஆனால் அப்படியொரு அதிகாரம் தங்களுக்கு இருந்ததாய் காட்டிக்கொண்டதாய் Liar பிளேயர் பிறகு ஒப்புக்கொண்டார்.)
சனிக்கிழமை நிகழ்ந்த சில வன்முறை நிகழ்வுகளால் G20 எதிர்ப்பாளருக்கு எதிராக மாறிய பொதுமக்களின் மனோநிலை இப்போது இந்த தன்னிச்சையான அதிகார ஆணவப்போக்கால் பொலிசுக்கு எதிராக மாறுகின்றது. மேலும் இம்முற்றுகை நிகழ்ந்துகொண்டிருக்கும்போது சிறைகளில் இருந்து சிலர் விடுதலை செய்யப்படுகின்றார்கள். அவர்கள் சிறையின் உள்ளே இருக்கும் நிலைமைகள் குறித்தும், தாங்கள் நடத்தப்படுவது குறித்தும் சொல்வது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்படுகிறது. பெண்கள் தாங்கள் -ஆண் பொலிஸ் காவலுக்கு நிற்க- கதவுகளில்லாத கழிப்பறைகளிற்குப் போகவேண்டியிருக்கும் நிலையைக் கூறுகின்றனர். தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 மணிகளுக்கு மேலாய், முறையான உணவு கொடுக்கப்படாது வைத்திருக்கப்பட்டிருந்தனர் என்பதோடு சில under-age பெண்களை ஆண் பொலிஸ் உடல் தேடுதலும் (body checkup) செய்திருக்கின்றது என்றும் கூறப்படுகின்றது. முற்றுகை நிகழ்வும், சிறைக்குள் நடந்த நிகழ்வுகளும் தெருவில் நடக்கும் தங்களுக்கும் ஏதாவது நடக்கலாமென்ற அச்சத்தை சாதாரண மக்களிடம் விதைக்கிறது.
2.
திங்கட்கிழமை பொலிசின் கைதுகள்/முற்றுகை பற்றியும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மேலதிக அதிகாரம் குறித்தும் ஊடகங்கள்/அரசியல்வாதிகள்/மனித உரிமைவாதிகள் கேள்விகளை எழுப்புகின்றனர். இம்முற்றுகையினுள் ஆர்ப்பாட்டக்காராக அல்லாது சாதாரண ஒருவராக அகப்பட்ட ரொறொண்டோ பல்கலைக்கழக பேராசிரியர் எவ்வாறு பல்வேறு அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன என்று தன அனுபவங்களை எழுதுகிறார். இதுவரையான நிகழ்வுகளில் கள்ள மவுனம் காத்த ஒன்ராறியோ மாநில முதல்வர் Dalton McGuinty பொலிசின் செயல்களை நியாயப்படுத்துகிறார். பொலிசின் தலைவர் பிளேயர் Black Bloc ஐ 'தீவிரவாதி'களென குறிப்பிட்டு குற்றஞ்சாட்டுகிறார். இதுவரை பொலிசுக்கு/நடுவண் அரசுக்கு ஆதரவாக பேசிய ரொறொண்டோ மேயர் தனது குரலைச் சற்று மாற்றுகிறார். எனெனில் ரொறொண்டோவில் நடக்கும் G20ற்கான அனைத்துப் பொறுப்புக்களும் தங்களுக்கென கூறிய பிரதம மந்திரி வன்செயல்களின் பின் உடைக்கப்பட்ட கடைகளுக்கு நடுவண் அரசு நஷ்ட ஈடு கொடுக்காதென மறைமுகமாய்ச் சொல்கிறார்.
மேயர் David Miller, 'நாங்கள் ரொறொண்டோவில் G20 நடத்தவேண்டாமெனச் சொன்னபோதும் நடத்திக் காட்டிய ஹார்ப்பர் அரசு இப்போது நஷ்ட ஈடு தருவதில் இழுத்தடிக்கிறதென' இன்னொரு நாடகத்தை அரங்கேற்றுகிறார்.
பொலிசின் அராஜகத்தையும், வகைதொகையில்லாக் கைதுகளையும் கண்டித்து ஒரு கண்டனப்பேரணி பொலிஸ் தலைமையகத்திற்கு முன் திங்கள் (Jun 28) மாலை கூடுகின்றது. 1000ற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பொலிசுக்கு எதிரான தமது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். பிறகு இப்பேரணி குயின்ஸ் பார்க் வரை பல்வேறு வீதிகளில் நடந்துசென்று கலைகின்றது. பொலிசின் நடவடிக்கைகள் மீதான பொது விசாரணை (Public Inquiry) நடத்தப்படவேண்டுமென அழுத்தம் பலமாகப் பிரயோகிப்படுகிறது.
இதற்கு அடுத்த வாரம் Gay Pride Parade நடக்கவிருக்கிறது. அதற்கு பொலிசும் தன் பங்களிப்பை ஒவ்வொரு வருடமும் கொடுக்கின்றது. மில்லியன்கணக்கில் மக்கள் பங்குபெறும் இந்நிகழ்விற்கான கூட்டமொன்றிற்கு பொலிஸ் தலைவர் வந்தபோது அவரை முற்றுகையிட்டு Queer நண்பர்கள் அவரைப் பொலிஸ் தலைமைப் பொறுப்பிலிருந்து இராஜினாமாச் செய்யச் சொல்கின்றனர். பிறகு சென்ற வியாழன் Canada Dayயின்போது 1000ற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இன்னொரு கண்டனப்பேரணி குயின்ஸ் பார்க்கில் தொடங்கி பொலிஸ் தலைமையத்தைப் போய்ச் சேர்கிறது. ரொறொண்டோ பொலிசின் அத்துமீறிய அராஜத்தை எதிர்த்து மொன்றியலிலும் Anit Capitalists என்ற குழு ஆர்ப்பாட்டம் செய்கிறது. இவ்வாறு பல எதிர்ப்பு ஊர்வலங்கள் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தப்படுகின்றன.
பொலிஸ் மீதான எரிச்சலில் மக்களும், ஆர்ப்பாட்டக்காரர்களும் இருக்கின்றார்கள் என்ற பயத்தில் வழமையாக ஒவ்வொரு வருடமும் Gay Pride Paradeல் கலந்துகொள்ளும் பொலிஸ் தலைவர் Paradeன் எந்நிகழ்விலும் பங்குபெறவில்லை. பொலிஸ் Pride Paradeன் ஒரு பகுதியாகக் கலந்துகொண்டாலும், பொலிசை 'இப்பேரணியிலிருந்து வெளியே போ' என்று கூறிய சுலோக அட்டைகள் சிலரால் எழுப்பப்பட்டிருந்தன.
நேற்று வந்த அறிக்கையின்படி G20 முன்னிட்டு 1070 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். 250 பேரின் மேல் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கின்றது. 800வரையானோர் எவ்வித குற்றங்களுமில்லாது விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் எனச் சொல்லப்படுகின்றது. இன்னமும் சிறையில் 20 பேருக்கு மேற்பட்டவர்கள் G20 ஆர்ப்பாட்டங்கள் முடிந்து ஒரு வாரத்திற்குப்பின்னும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னும் பல்வேறு மனித உரிமைக்குழுக்கள் பொது விசாரணை வேண்டுமென பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தியிருக்கின்றது. நம்மில் பலருக்கு G20 எதிர்ப்பு ஊர்வலங்கள் நிகழ்த்தப்பட்டது குறித்து பல்வேறுவிதமான கேள்விகள் இருந்தாலும், பொலிஸுக்கு மேலதிகமாகக் கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் குறித்தும் அதை அவர்கள் துஷ்பிரயோகம் செய்தது குறித்தும் ஒன்றிணைந்த குரலே இருக்குமென நம்புகிறேன்.
ரொறொண்டோ இப்படித்தான் சிலநாட்களாய் 'பொலிஸ் நகராக' இருந்தது
Black Blocல் பொலிஸ் Under cover ஆக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் இங்கே எழுப்பப்படுகிறது. பொலிஸ் ஏற்கனவே இவ்வாறான 'சதி'களில் ஈடுபட்டிருப்பது ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டுமிருக்கிறது என்பதையும் நாம் அவ்வளவு எளிதாக மறந்தும் விடமுடியாது.
இத்தொடரை எழுதுவதற்கு உதவியவை:
(1) CitvTV
(2) Toronto Star
(3) TVO
(4) ஒளிப்படங்கள்/காணொளி எடுத்தாளப்பட்ட உரிய தளங்கள்
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
G-20 குறித்து நண்பர் அருண்மொழிவர்மன் எழுதியது:
7/08/2010 11:57:00 AMhttp://solvathellamunmai.blogspot.com/2010/07/g8-g20-g20.html
Black Blocல் பொலிஸ் Under cover ஆக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் இங்கே எழுப்பப்படுகிறது. பொலிஸ் ஏற்கனவே இவ்வாறான 'சதி'களில் ஈடுபட்டிருப்பது ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டுமிருக்கிறது என்பதையும் நாம் அவ்வளவு எளிதாக மறந்தும் விடமுடியாது.//
7/09/2010 12:57:00 AMஇந்த சந்தேகம் எனக்கும் உண்டு.
அன்று கார்கள் எரிக்கப்பட்டபோது, கடை உடைப்புகளின்போது அருகில் காவல் துறை இல்லாதது இப்படியான சந்தேகத்தைக் கூட்டுகின்றது
நீங்கள் எழுதிய இந்த 3 கட்டுரைகளும் முக்கியமானவை ந்ன்றி
Post a Comment