-ஜூன்-26...
சனிக்கிழமை விடிகாலையிலே ஊர்வலத்தில் கலந்துகொண்ட பலரின் வீடுகளை நோக்கி பொலிஸ் குவிகிறது (பொலிசால் இவர்கள் ஏற்கனவே குறிப்பு எடுக்கப்பட்டிருப்பார்கள் என நம்புகிறேன்). தேடுதல் நடத்த எவ்வித உரிய பத்திரமும்(warrant) இல்லாது பல வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது; பலர் கைது செய்யப்படுகின்றார்கள். அலன் பூங்காவிலிருந்து குயின்ஸ் பார்க்கிற்கு செல்ல இருந்த No One Is Illegalன் பேச்சாளர் (spokesperson) ஹசனும், இன்னொருவரும் -சீருடை அணியாத- பொலிசால் கைவிலங்கிட்டு கைது செய்யப்பட்டு அடையாள இலக்கமில்லாத வாகனத்தில் ஏற்றப்படுகிறார்கள். ஹசனும், அவரது தோழியும் விடிகாலையில் நடந்த முறையற்ற கைதுகள் பற்றி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தச் செல்கின்றபோதே கைது செய்யப்படுகிறார்கள். இவர்களின் கைதால் குயின்ஸ் பார்க்கில் நடைபெறவிருந்த பத்திரிகையாளர் சந்திப்பு இரத்துச் செய்யப்படுகிறது. கைதுசெய்யப்பட்ட ஹசனின் தோழியை -சீருடை அணியாத பொலிஸ்- ரக்ஸியில் ஏற்றி ரொறொண்டோ நகருக்குள் 40-50 நிமிடங்கள் வைத்து ஓடித்திரிந்துவிட்டு வீதியின் ஒரு மூலையில் இறக்கிவிடுகின்றார்கள்.
இதற்கிடையில் G20 தற்காலிக சிறைச்சாலைக்கு முன், கைதுசெய்யப்பட்டவர்களின் நண்பர்கள் கூடி பத்திரிகைகளுக்கும், வெளி உலகிற்கும் நடந்தவை பற்றிக் கூறுகின்றார்கள். தமது நண்பர்கள், உரிய அனுமதியோ/காரணங்களோ இன்றி கைதுசெய்யப்படுவது எந்தவகையில் நியாயம் எனக் கேட்கிறார்கள். நேரஞ் செல்லச் செல்ல நிறையப்பேர் சிறையின் முன் கூடி கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். நிறையப் பொலிஸ் சிறைச்சாலையின் முன் கூடுகின்றார்கள். கலவரத் தடுப்பு பொலிஸ் ஒருகட்டத்தில் கண்ணீர்ப்புகைகையையும், பிளாஸ்ரிக் தோட்டாக்களையும் ஏவுகிறார்கள். பல G20 எதிர்ப்பாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின்போதும் கைது செயயப்படுகிறார்கள்.
எனினும் ஏற்கனவே தீர்மானித்தப்படி குயின்ஸ் பார்க்கிலிருந்து மாபெரும் பேரணி ஒன்று மதியம் 1.00 மணியளவில் தொடங்குகின்றது. வெள்ளி நிகழ்ந்ததுபோலவே ப்லவேறுவிதமான தொழிலாளர் அமைப்புக்கள், சிறுபான்மையின அமைப்புக்கள் சேர்ந்து ஊர்வலத்தை நகர்த்துகின்றனர். முன்னணியில் செல்லும் பெண்கள் அமைப்பு 'தேவாலயங்களோ அரசோ எம்மை கட்டுப்படுத்த முடியாது' என குரலெழுப்புகிறார்கள். ஹர்ப்பரின் அரசாங்கம் 3ம் உலகநாடுகளில் நடக்கும் கருத்தடைக்கு இதுவரை வழங்கிவந்த உதவிகளை நிறுத்துவதாக அறிவித்ததை நாம் இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.
ஒருகட்டத்தில் ஊர்வலம் பல்வேறு பகுதிகளாகப் பிரிகின்றது. முக்கியமாய் வெள்ளி அலன்ஸ் பூங்காவில் தம்மை முற்றுமுழுதாக கறுப்பு ஆடைகளாலும் முகமூடிகளாலும் மூடிய அதே குழு (Black Bloc என பின்னர் ஊடகங்களால் அடையாளங் காட்டப்பட்டனர்) குயின்ஸ் பார்க்கிலும் இருந்தது. அது தனியே ஊர்வலத்திலிருந்து பிரிந்து ஆனால் பிறரை தங்களைச் சுற்றி பாதுகாப்பிற்காய் வரும்படி கேட்கின்றது. குயின் (Queen), யங் (Yonge), பே (Bay), கொலிஜ்(Collge) என்கின்ற ரொறொண்டோ நகரின் முக்கிய வீதிகளில் இருக்கும் பெருந்தேசிய நிறுவனங்களின் கடை கண்ணாடிகளை உடைக்கிறது. Urban Outfitters, American Apparel, Adidas Store, Starbucks, Rogers போன்றவற்றின் கடைகளும், பல வங்கிகளும் இவர்களும் முக்கிய குறிகளாகின்றன.இக்கடைகளுக்கு இடையில் அப்பாவியாக இருந்த சிறு வர்த்தக கடைகள் சிலவற்றின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டதை திங்கட்கிழமை சென்று பார்த்தபோது தெரிந்தது. இதன் தொடர்ச்சியில் பொலிஸ் கார்கள் பல்வேறு சந்திகளில் எரிக்கப்படுகின்றன. மொத்தமாக 4 பொலிஸ் கார்கள் எரிக்கப்படுகின்றன. இவர்கள்தான் முதலாளித்துவ எதிர்ப்பின் கோபத்தில் எரித்தார்கள் என்ற சாதாரண -AntiG20 ஊர்வலத்தில் பங்குபெறாத- மக்களும் சிரித்தபடி எரியும் பொலிஸ் கார்களை படங்களாய் எடுக்கிறார்கள்,தரித்து நின்று இரசிக்கிறார்கள். ஆக எல்லோருக்கும் பொலிஸின் அதிகாரம் மீதான எரிச்சல் உள்ளுக்குள் ஊறியபடித்தான் இருந்திருக்கிறது போலும். எந்த தெருவில் போனாலும் நூற்றுக்கணக்காய் சீருடையிலும் மற்றும் சீருடை இல்லாதும் நிற்கும் பொலிஸ், கார்கள் எரிந்த நீண்டநேரத்தின் பின்னே ஆற அமர ஏன் வந்தார்கள் என்பது முதல் கேள்வி. மற்றது எரிக்கப்பட்ட 20/30 நிமிடங்களுக்குப் பின்னே தீயணைப்புப்படையே வந்து சேர்கின்றது. எந்த அவசர உதவி என்றாலும் நிமிடங்களில் பொலிசுடன் வரக்கூடிய தீயணைப்புப்படைக்கு இவ்வளவு நேரம் ஏன் எடுக்கிறது என்பது இன்னொரு கேள்வி.
இங்கே Black Bloc 'அமைப்பு' பற்றி மிகச் சுருக்கமாகப் பார்ப்போம். Black Bloc என்ற பெயர் ஜேர்மனியில் அணுச்சக்தி பரிசோதனைக்கு எதிராக கூடிய எதிர்ப்பாளர்களிலிருந்து தொடங்குகின்றது. தொடர்ந்து பெருந்தேசிய நிறுவங்களுக்கும், உலக வங்கி போன்றவற்றிற்கும் எதிர்ப்புத் தெரிவித்து பல இடங்களில் இவ்வமைப்பினர் தமது இருப்பைக் காட்டியிருக்கின்றார். 1999ல் மிகப் பிரசித்தி பெற்ற சியாட்டில் (Anti WTO)ல் இவர்கள் பல பெருந்தேசிய நிறுவனங்களைச் சேதப்படுத்தியிருக்கிறார்கள். Black Bloc எப்படி இயங்குகிறது என்பது குறித்து இன்னும் தெளிவான ஆதாரங்கள் எடுக்கப்படவில்லை. இது அமைப்பற்றதாகவும், தலைவர் போன்றவை இல்லாது இயங்குகின்றன எனவும், நிலவரங்களுக்கு ஏற்ப 'உறுப்பினர்கள்'ஓரிடத்தில் கூடி இயங்குபவர்களாய் இருக்கின்றார்கள் எனச் சொல்லப்படுகிறது. உறுப்பினர்களைச் சேர்க்கும்போது இரகசியமான முறையில் சேர்க்கப்பட்டு செயற்பாடுகளின் போது ஒருவித சங்கேத மொழி அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. ரொறொண்டோவில் தமது செயற்பாடுகளை நிகழ்த்தும்போது 'umberlla' என்ற சொல் பயன்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
சாதாரண G20 எதிர்ப்பாளர்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பைக் காட்டுவதற்கு மாறாக, எதையும் செவிமடுக்காத அரசிடம்/பொலிசிடம் வன்முறையான வழிகளே சரியாக இருக்கும் நம்புபவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். முதலாளித்துவத்திற்கு/ பொலிசுக்கு/காலனித்துவதற்கு எதிரானவர்கள் எனத் தங்களைப் பிரகடனப்படுத்தும் இவர்களின் பிரசித்தமான கோசமாக 'முதலாளித்துவம் கொல்ல முன்னர், முதலாளித்துவத்தைக் கொல்' என்பது இருக்கிறது. எப்படி கறுப்பாடை அணிந்து தங்களை வேற்றாட்களாக காட்டிக்கொள்கிறார்களே அவ்வளவு விரைவாக அதைக் களைந்து தம்மைச் சாதாரணமானவர்களாய் தங்கள் அவதாரத்தை மாற்றியும் கொள்கிறார்கள்.
வெள்ளி வரை அரசு/பொலிசுக்கோ அல்லது G20 எதிர்ப்பாளருக்கோ ஆதரவு நிலை என்ற அந்தரமான நிலையிலிருந்த பொதுமக்களின் 'மனோநிலை' Black Blocன் வன்முறையின் பின் அரசு/பொலிசுக்கு ஆதரவாக மாறுகின்றது. ஊர்வலத்தில் கலந்துகொண்ட அனைவரும் வன்முறையை ஆதரிப்பவர்களாய் இருக்கவில்லை என்பதும் உண்மை. ஆனால் ஏன் இக்கடைகளை உடைக்கின்றீர்கள் என்று Black Bloc இடம் ஊடகம் ஒன்று கேட்கும்போது இப்பெருநிறுவனங்கள் சாத்தான்களைப் போன்றது' என்று அவர்களில் கூறியதில் உண்மை இல்லாமலும் இல்லை. அமைதியான முறையில் G20 எதிர்ப்பைக் காட்டிக்கொண்டிருந்த சிலர் கடை உடைப்பு நிகழ்வின்போது, 'நீங்கள் அரசு G20 பாதுகாப்பிற்காய் செல்வு செய்த 1.24 பில்லியன் டொலரை நியாயப்படுத்தப்போகின்றீர்கள்' என எச்சரிக்கை செய்ததையும் நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
வன்முறையோடு வாழ்ந்த நம்மைப் போன்ற 3ம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்க்கு பொலிஸ் கார்களை எரிப்பது நிகழ்வது என்பது பெரிய விடயமல்ல; ஆனால் கனடா போன்ற நாடுகளில் இருப்பவர்க்கு இது அதிர்ச்சிதான். பொலிஸ் கார்களை எரித்தவுடன் உலக எங்கும் இச்செய்தி பரவுகின்றது. இந்த தீவிர எதிர்ப்பாளர்களும் G20 எதிரான தமது செய்தியை வெளி உலகிறகு தெளிவாக அறிவிக்கின்றனர். இப்போது G20 நாட்டுத் தலைவர்கள் உள்ளே என்ன உரையாடுகின்றார்கள் என்பதைவிட தெருக்களில் இந்த -Black Bloc- எதிர்ப்பாளர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்று ஊடகங்களும் உள்ளூர் மக்களும் உலக மக்களும் அவதானிக்கச் செய்கின்றனர்.
சனிக்கிழமை நடந்த நிகழ்வுகள் தம் கையை மீறி நடந்ததை (அல்லது அவர்களாகவே அப்படி நடக்கட்டுமென இருந்திருக்கலாம், இவ்வளவு பில்லியன் பாதுகாப்புக்குச் செல்வு செய்து ஒன்றுமே நிகழ்வில்லை என்றால் அரசும் பொலிசுமல்லவா மக்களிடம் பதில் சொல்லவேண்டும். எனெனில் இந்தப்பணம் அனைத்தும் உழைக்கும் மக்களின் வரியிலிருந்து அல்லவா சுரண்டப்பட்டது) பொலிஸ் அதிகாரி கேள்விகளால் துளைக்கப்படுகின்றார். ரொறொண்டோ மேயர் கையாலகத்தனத்துடன் இந்த வன்முறை ரொறொண்டோவிற்கு வெளியில் வந்தவர்களால் நிகழ்த்தப்படுகின்றது என்கிறார். அன்றைய இரவே பொலிஸ் தன் அதிகாரத்தின் கரத்தை இறுக்குகிறது. கிட்டத்தட்ட 400 மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு அடைக்கப்படுகிறார்கள். பல அப்பாவி மக்கள் வீடுகளில் எவ்வித அனுமதியுமின்றி விசாரிக்கப்படுகின்றனர். அவ்வாறு ஊர்வலம் எதிலும் பங்குபெறாத மிருக வைத்தியர் ஒருவர் கைகள் கயிறால் கட்டப்பட்டு 1/2 மணிக்கு மேலாய் அவருக்கே தெரியாத ஒருவர் பற்றிய விபரத்தைத் தருமாறு பொலிஸால் மிரட்டப்படுகிறார். பலர் நித்திரையிலேயே வைத்து கைது செய்யப்படுகிறார்கள். இதுவரை எப்போதுமே நிகழ்ந்திராத பெரும் பொலிஸ் தேடுதல் வேட்டை ரொறொண்டோ பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்த்தப்பட்டு கிட்டத்தட்ட 70ற்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
மிகவும் கொந்தளிப்பான பகலாகவும் இரவாகவும் ஜூன் 26 சனி கழிகிறது.
(தொடரும்)
நன்றி: படங்கள்
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
They waste billions in this and introduce HST for reforms... no one is supposed to offend? I'm not saying this is a total waste, but could've done it differently. Trying to show how powerful they're in front of world I guess. Nice post
7/05/2010 04:50:00 PMதங்களது பில்லியன் டாலருக்கும் அதிகமான செலவை நியாயப்
7/05/2010 09:20:00 PMபடுத்துவதற்க்காக போலீஸாரே தங்கள் காரை எரித்ததாக ஒரு சந்தேகம் உண்டு.
போராட்டக்காரர்களின் ஊர்வலம் அமைதியாக நடந்தால் தங்களது செலவிற்க்கு காரணம் சொல்வேண்டும் என்பதற்க்காகவே போலீஸ் வன்முறையை ஆரம்பித்தது.
இதன் மூலம் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை பயங்கரவாதிகளாக!!!சித்தரிக்கவும் போலீஸ் முனைந்தது.
போலீஸ் கார் எரிக்கப்படும் போது போலீஸ்காரர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்விக்கு, மழுப்பலான பதில்களே வருகின்றன.
இன்றைய காலகட்டத்தில் அரசிற்க்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகளே என்ற எண்ணம் அரசாங்கங்களினால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது, அது அமைதியான வழியில் நீங்கள் போராடினாலும் கூட!!
Post a Comment