சமர்ப்பணம்:
'விதியினை நகுவன, அயில் விழி; பிடியின்
கதியினை நகுவன, அவர் நடை; கமலப்
பொதியினை நகுவன, புணர் முலை, கலை வாழ்
மதியினை நகுவன, வனிதையர் வதனம்.'
முன்னீடு
சென்ற மாதம் 'மழைக்குள் காடு' நிகழ்வில் கவிதைகள் பற்றிய ஓர் உரையாடல் நடைபெற்றிருந்தது. எனக்குப் பிரியமான செல்வம் புதிதாய்க் கவிதை எழுத வருகின்றவர்கள் கட்டாயம் கம்ப இராமாயணத்தை வாசிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். கம்பராமாயணத்தில் இருக்கும் சனாதனக் கருத்துக்களை மறுத்துக்கொண்டே அதேசமயம் கம்பனில் ஊற்றாய்ப் பெருகும் அழகுத் தமிழுக்காய்த்தான் செல்வம் அவ்வாறு கூறியிருப்பார் என நினைக்கின்றேன். மரபுகளையும் தொன்மங்களையும் கற்றுத்தேர்வதால் நாம் எதையாவது அடையக்கூடுமே தவிர இழக்கப்போவது எதுவுமில்லைத்தான். எனினும் எனக்கு இந்த 'வரலாற்றை'க் கற்றுக்கொள்வதால் நமக்கு ஊட்டப்படும் பழம்பெருமைகளும், வீரமும், தியாகமும் இன்னமின்னமும் அநேகமாய் எம்மை எதிர்காலத்தில் வெறியூட்டப் பயன்படுபவையே என்ற எண்ணமேயுண்டு.
செல்வம் என் பிரியத்துக்குரியவர் என்று கூறியதற்குக் காரணம், அவர்மீது எவ்வளவு விமர்சனம் எழுத்திலும் நேரிலும் வைத்தால்கூட அதே நேசத்துடன் தொடர்ந்து பழக்கூடியவர் என்பது மட்டுமின்றி கதைப்பதற்கான வெளியைத் தந்து எனது கருத்துக்களைச் செவிமடுப்பவர். ஆனால் இந்தப் பிரியம் என்பது உண்மையில் எங்களின் எதிர்மறைகளினூடே உருவானது என்றுதான் கூறவேண்டும். உதாரணத்திற்கு செல்வத்திற்கு ஜெயமோகனைச் சுத்தமாகப் பிடிக்காது எனக்கு ஜெமோவை பிற எந்த படைப்பாளியை விடவும் மிகவும் பிடிக்கும். எந்தச் சபையிலும் ஜெமோவை நான் ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை. செல்வத்திற்கு ஜெமோவில் இருக்கும் எரிச்சலினால்தான், அவர் தன் வீட்டில் குடிபெயர்ந்த ஒரு பெண்மணிக்கு 'விஷ்ணுபுரம்' வாசிக்கக் கொடுத்திருக்கின்றார். அடுத்த ஓரிரு வாரங்களில் அப்பெண்மணி பேயறைந்தமாதிரி வீட்டையே காலி செய்து போயிருக்கின்றார். இப்படியொரு 'கதை' நடந்ததாக கனடாவில் இருப்பவர்கள் பேசிக்கொள்கின்றார்கள் என செல்வமே 'கூர்' நேர்காணலில் கூறியிருக்கிறார். இதன் மூலம் செல்வம், 'உங்களுக்குப் பிடிக்காதவர்கள் எவரேனும் வீட்டில் இருந்தால் 'விஷ்ணுபுரத்தை'க் கொடுத்து எளிதாக வெளியேற்றுங்கள்' என்பதை மறைமுகமாய்ச் சொல்லவருகின்றார் என்பதை -ஜெமோவின் தீவிர வாசகனாக- என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால்தான் சொல்கின்றேன் செல்வத்துடனான எனது நட்பும் பிரியமும் முரண்களின் அடுக்குகளில் கட்டப்படுபவை.
கம்பராமாயணத்தைப் செல்வம் படிக்கச் சொன்னது இது முதற் தடவையுமல்ல. எனது தொகுப்பான 'கழுதைகளின் குறிப்புகளுக்கான' விமர்சனக்கூட்டமொன்றிலும் இதையே அவர் கூறியுமிருந்தார். ஆகவே எங்கள் மீதிருக்கும் பிரியத்தில்தான் செல்வம் வலியுறுத்துகிறார் என்பதில் எனக்கு எவ்விதச் சந்தேகமுமில்லை. ஆகவே நான் இப்போது கம்பராமாயணத்தைப் பற்றி ஒரு கதை சொல்லப்போகின்றேன்.
உள்ளீடு
1.
'தேரிடைக் கொண்ட அல்குல், தெங்கிடைக் கொண்ட கொங்கை,
ஆரிடைச் சென்றும் கொள்ள ஒண்கிலா அழகு கொண்டாள்,
வாரிடைத் தனம் மீது ஆட மூழ்கினாள்; வதனம், மை தீர்
நீரிடைத் தோன்றும் திங்கள் நிழல் என, பொலிந்தது அன்றே! '
(கம்பராமாயணம்; பாலகாண்டம்)
தமிழின் தொன்மங்களையும் மரபுகளையும் அழகாய்த் தன் கவிதைகளில் பொருத்தியவர் சு.வில்வரத்தினம். 'சொற்றுணை வேதியன்' என்ற தேவாரத்தை மனப்பாடம் செய்வதே வேப்பங்காயாக இருந்தவனுக்கு காற்றுவெளிக்கிராமத்தில் 'சொற்றுணை வேதியன்' கலந்தொரு கவிதையை சு.வி எழுதியபோது வியப்பில் புருவம் உயர்ந்து வில்லாய் வளைந்தது (மன்னிக்க: கம்பனை வாசித்த பாதிப்பு). அதே போன்று நாட்டுப்புறப்பாடல்களிலும் மரபுக்கவிதைகளிலும் இருந்த பரிட்சயம் வ.ஜ.ச.ஜெயபாலனின் கவிதைகளில் சந்தத்தையும் இலயத்தையும் நேர்த்தியாகக் கொண்ர்ந்திருந்தன. ஆகவே பழம் இலக்கியங்களைக் கற்றுக்கொள்வதால் மொழிவளம் விரியும் என்பதில் எனக்கும் சந்தேகம் எதுவும் இருக்கவில்லை.
நான் கம்பனையும் கம்பராமாயணத்தையும் முதன்முதலில் அறிந்துகொண்டதென்றால் அளவெட்டிக் கும்பிளாவளைப் பிள்ளையார் கோயிலில்தான். அனுமான வரவேண்டிய இடத்தில் இதென்ன பிள்ளையார் குறுக்கே புகுந்துவிட்டார் என்று எண்ணுகின்றீர்களா? பொறுமை! பொறுமை! வியாசர் மகாபாரதம் சொல்லச் சொல்ல பிள்ளையார்தான் வியாசரின் வேகத்திற்கு ஈடுகொடுத்து எழுதினார் என்பது ஜதீகம். அதுவும் ஒருகட்டத்தில் எழுத்தாணி முறிய வியாசர் பாரதம் பாடுவதை ஒருகணம்கூட நிறுத்தக்கூடாது என்பதற்காய் தன் தந்தத்தையே முறித்து எழுதிய அற்புத மனிதரல்லவா பிள்ளையார்? மேலும் நாங்கள் போரின் நிமித்தம் இடம்பெயர்ந்திருந்த அளவெட்டியில் அம்மன்கோயில்களுக்கும் பிள்ளையார் கோயில்களுக்கும் பஞ்சமில்லாது இருந்தது. எனினும் எனக்குப் பிடித்தது பெருமாக்கடவைப் பிள்ளையார் கோயில்தான். வயல்களுக்குள் நடுவில் இருக்கும் அதன் அமைதியும் செழுமையும் என்றுமே மறக்கமுடியாதது. மேலும் ஊரில் வீதிக்கு மறுபுறமாய் விரிந்திருந்த பெரும்வயலை விட்டுவந்திருந்த எனக்கு, பெருமாக்கடவை பிள்ளையார் கோயில் எப்போதும் இழந்துவந்த ஊரை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. 80களில் தொடங்கிய இயக்கங்களின் உள் முரண்பாடுகளில் சுட்டுக்கொல்லப்பட்ட இறைகுமாரனும் உமைகுமாரனும் இங்கேதான் உடலமாகப் போடப்பட்டிருந்தனர். கம்ப இராமாயணம் பற்றிச் சொல்ல வந்து பிள்ளையார் கோயில்களைப் பற்றிக் கதைக்கிறேன் என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. நீங்கள் எப்போதாவது சொன்ன இடத்திற்கோ சொன்ன விடயத்தையோ குறித்த நேரத்தில் செய்து முடித்திருக்கின்றீர்களா? இல்லைத்தானே!
'பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள்தன் படர் அல்குல்
ஆகக் கண்டு, ஓர் ஆடு அரவு ஆம் என்று, அயல் நண்ணும்
தோகைக்கு அஞ்சி, கொம்பின் ஒதுங்கி, துணர் ஈன்ற
சாகைத் தம் கை, கண்கள் புதைத்தே தளர்வாளும்; '
(கம்பராமாயணம்; பாலகாண்டம்)
சரி கம்பராமாயணத்திற்கு மீண்டும் வருவோம். கும்பிளாவளைப் பிள்ளையார் கோயில் திருவிழாக்காலங்களில் கம்பராமாயணக் கதாட்சேபம் நடைபெறும். ஒவ்வொருநாளும் ஒரு கதையென 12 நாட்களும் இராமன் கதை சொல்லப்படும். இந்தக் கதையை கம்பவாரிதியோ புழுதியோதான் சொல்லிக்கொண்டிருப்பார். மனுசனுக்கு நல்ல குரல்தான். பேச்சால் கேட்பவர்களைக் கட்டிப்போடும் வித்தை தெரிந்தவர்கள் ஈழத்தில் சொற்பப் பேர்தான். பின்னாளில் சுன்னாகத்தில் இடம்பெயர்ந்து இருந்தபோது ஆறு.திருமுருகன் 'திருமுருகாற்றுப்படை'(?)யைச் செப்பி, தான் 'புழுதியை அடக்க வந்த தூறல்' என நிரூபிக்க முயன்றிருக்கிறார். ஆனால் நான் கும்பிளாவளைப் பிள்ளையார் கோயிலுக்குப் போனது கம்பராமாயணம் கேட்பதற்காய் அல்ல. ஒவ்வொரு இரவும் புழுதியும் -மன்னிக்க- வாரிதியும் புயலும் பூசையும் ஓய்ந்தபின், இறுதியில் நிகழும் பாட்டுக் கச்சேரிதான் என் விருப்புக்குரிய தேர்வு.
கண்ணன், சாந்தன் என்று அன்றையகாலத்தில் புகழின் உச்சியிலிருந்தவர்கள் இசைக்குழுவோடு வந்து பாடுவார்கள். நான் பாட்டுக்களைக் கேட்ட காலத்தில் சாந்தன் ஏதோ பிரச்சினையில் மாட்டுப்பட்டு புலிகளின் 'பங்கருக்குள்' இருந்து, பாடுவதற்காய் மட்டும் வெளியே வர அனுமதிக்கப்பட்ட காலமாய் இருந்தது. எனவே உயிரைக்கொடுத்து உணர்ச்சியாகப் பாடியேனும் வெளியே வந்துவிடும் நிர்ப்பந்தம் அவருக்கு இருந்திருக்கலாம். இவர்களின் கச்சேரியைக் கேட்பது மிகவும் பிடித்தது என்றாலும் கச்சேரி தொடங்க நள்ளிரவு ஆகிவிடும். அதற்குள் நான் நித்திரையாகிவிடுவேன். ஆனாலும் 'இந்த மண் எங்களின் சொந்தமண், இதன் எல்லையை மீறி யார் வந்தவன்?' என்றோ 'நடரா ராசா மயிலைக் காளை பொழுது விடியப் போகிறது' என்றோ பாடும்போதோ நான் விழித்தெழும்பிவிடுவேன். (தமிழ்) 'உணர்வுள்ள தமிழன் ஒருபோதும் உறங்கமாட்டான்' என்பதற்கு நான் நல்லதொரு உதாரணமாக இருந்தேன். நான் திடுக்கிட்டு விழித்தெழும்போது முக்கால்வாசி சனம் நித்திரா தேவியினதோ/தேவனதோ கதகதப்பான அணைப்பிலிருப்பார்கள். எனினும் மன்மதனின் அருட்டலில் இளம் அணங்குகளும் அனகர்களும் (நன்றி கம்பன்) விழித்தபடி தத்தம் காதற்காரியத்தை விழியசைவாலும் நளினச்சிரிப்பாலும் தீவிரமாகச் செய்துகொண்டிருப்பார்கள். இராமனைப் பார்த்த நொடியிலே காதலெனும் பெருந்தீயில் ஜானகியே விழுந்து துடித்தபோது, இச்சின்னஞ்சிறு மானிடப்பதர்கள் என்னதான் செய்யும்? ஆனால் இராமனை முதற்பார்வையிலே கண்டு காதலில் வீழும் சீதையின் நிலையை கமபன் வர்ணித்ததைப் பார்க்கும்போது சீதையை இனியெவராலும் காப்பாற்றமுடியாது என Intensive Care Unitல் போடப்பட்டிருந்ததை மாதிரித்தான் உணர்ந்தேன். நல்லவேளை நமக்கு இராமன் என்னும் ஒருகடவுள் மட்டும் மானிடராய்ப் பிறக்கப் பணிக்கப்பட்டிருந்திருக்கின்றார். இந்து சமயத்திலுள்ள எல்லாக்கடவுளும் இப்படி வந்திருந்தால் எத்தனை பெண்கள் காதலின் பசலையில் தற்கொலையை நாடியிருப்பார்கள்?
செம்மாந்த தெங்கின் இளநீரை, ஓர் செம்மல் நோக்கி,
'அம்மா! இவை மங்கையர் கொங்கைகள் ஆகும்' என்ன,
'எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன?' என்று, ஒர் ஏழை,
விம்மா, வெதும்பா, வெயரா, முகம் வெய்துயிர்த்தாள்.
(கம்பராமாயணம்; பாலகாண்டம்)
கம்பவாரிதியின் சொற்பிளம்பின் வெம்மையிலிருந்து தப்பிவிட்டேன் என்ற என் நிம்மதிப் பெருமூச்சை 9ம் வகுப்பில் நான் கற்கவேண்டியிருந்த தமிழ் இலக்கியம் விதி என்ற பெயரில் குறுக்கே மறித்து நின்று எக்காளித்துச் சிரித்தது. கம்பராமாயணப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. கமபனின் இராமாயணமும் வான்மீகியின் இராமாயணமும் எவ்விடங்களில் மாறுபடுகின்றது என்று படித்ததும் அன்றைய காலங்களில்தான். இப்போதும் கம்பனின் அவையடக்கப் பாடல்கள் சில நினைவில் வருகின்றன.'ஒரு சமுத்திரத்தை நக்கிக் குடிக்கமுடியுமென பூனை நினைப்பதுபோல நானும் வான்மீகியின் இராமாயணத்தைப் பாடப் புறப்பட்டுவிட்டேன்' எனவும் 'மரங்கள் ஏழையும் தன் அம்பால் துளைத்தவனின் பெருங்கதையை நொய்மையிலும் நொய்மையான சொற்களால் சொல்ல வந்தேன்' எனவும், 'அன்பெனும் மதுவை அளவுக்கதிகமாய்க் குடித்தவன் வான்மீகி எழுதிய இராமாயணத்தை தன் மூக்கால் பாட வந்திருக்கின்றேன்' எனவும் கம்பன் அவை அடக்கம் பாடுவது நினைவினிலுண்டு.
சரயு நதியின் வளமையைப் பாடும் பாடல்கள் கூட எங்கள் பாடப்புத்தகத்தில் இருந்திருக்கிறது.. கோசலை நாட்டையோ அயோத்தியையோ விபரிக்கும்போது 'வாளை உள்ளிட்ட பலவகை மீனினங்கள் வளர்ந்து நிற்கும் கமுகம் மரங்களுக்கு மேலாய்த் தாவி விளையாடுகின்றன' என்று வரும் இதைப் படிப்பித்த எங்களின் தமிழ் வாத்தி இது அந்நாட்டின் செழுமையைச் சித்தரிக்கின்றது எனத்தான் சொல்லித்தந்தார். ஆனால் இப்போது யோசிக்கும்போது கமுகம் மரத்திற்கு மேலால் மீன்கள் பாய்கின்றன என்றால், சுனாமி போன்ற இயற்கையின் அழிவுகள் நிகழும்போது மட்டுமே நடக்கச் சாத்தியமுண்டு போலத் தெரிகிறது. ஓர் அனர்த்தத்தை அழகியலாக்க கம்பன் போன்ற கவிஞர்களால் முடியும், 'கவிதைக்குப் பொய்யழகு' என்று அவர்கள் நியாயப்படுத்தவும் கூடும். ஆனால் எங்களின் தமிழ் வாத்தி எங்களுக்கு அந்த வயதிலேயே பொய் சொல்லக் கற்றுத்தந்தார் என்பதைத்தான் என்னால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது.
இவற்றைக் கூட மன்னிக்கலாம்; ஆனால் என்றைக்குமே மன்னிக்கமுடியாத ஒரு குற்றத்தை எங்களுக்கு கம்பராமயணத்தைக் கற்றுத்தந்தவர்கள் இழைத்திருக்கின்றார்கள் என்பதைக் கம்ப ராமாயணத்தைப் படித்தபோதுதான் அறியமுடிந்தது. சின்ன வயதில் எனக்குத் தமிழ்ப்படங்களில் 'ஆ...ஊ' என்று கத்திக்கொண்டு சண்டைபிடிக்கும் படங்கள்தான் அதிகம் பிடிக்கும். ஒரு படத்தில் சண்டைக்காட்சிகள் இல்லாவிட்டால் அது பார்ப்பதற்குரிய படமே அல்ல என்பதுதான் என் அளவுகோலாக இருந்தது. 'ராம்போ', 'கொமண்டோ' போன்ற படங்களைப் பார்த்துவிட்டு 'அட இயக்கத்தில் நாலைந்து பேர் இப்படி இருந்தாற்கூடப் போதும் நாங்கள் விரைவில் தமிழீழம் அடைந்துவிடலாம்' என்றும் நினைத்துமிருக்கிறேன். ஆனால் 8ம் வகுப்பிற்கு வந்தபின் தமிழ்ப்படங்களின் சண்டைக்காட்சிகளை விட பாட்டுக்காட்சிகள் பிடிக்கத் தொடங்கிவிட்டன. அதுவரை 'அப்பாவி'யாய் சண்டைக்காட்சிகளையும் நகைச்சுவைக்காட்சிகளையும் பார்த்துக்கொண்டிருந்த என்னை வயது மூத்த ஒரு நண்பரொருவன் 'உழைப்பாளி' படம் மூலம் மாற்றிவிட்டான். மண்ணெண்ணெயில் மூசிமூசி ஜெனரேட்டர் இயங்கிக்கொண்டிருக்க எப்ப கரண்ட் நிற்கப்போகின்றதோ என்ற பதற்றத்தில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் நண்பன் மெல்லிய குரலில் சொன்னான் 'பாருடா இன்னும் கொஞ்ச நேரத்தில் ரோஜா தன்ரை முன்பக்கத்தாலே ரஜினியை முட்டுவா' என்று. அதற்குப் பிறகு எந்தப் படத்தில் எந்த சண்டைக்காட்சி இருக்கும் என்பதை நினைவுபடுத்துவதற்குப் பதிலாக எந்தப் பாடலில் எந்த நடிகை தன் மார்பகங்களைக் குலுக்குவா என்பதுதான் நினைவில் நிற்கத்தொடங்கியது. ஆனால் இவ்வாறான காட்சிகளைப் பார்ப்பது என்பது அன்றையகாலத்தில் மிகவும் கடினமாக இருந்தது. எங்களிடம் ரீவியோ டெக்கோ(VCR) ஜெனரேட்டரோ இல்லாதது அல்ல முக்கிய காரணம். நண்பர்களின் வீட்டில் படம் போட்டால் கூட 'மண்ணெண்ணெய் விற்கின்ற விலைக்கு படம் பார்ப்பது ஒரு கேடா?' என்று சனம் பேசும். மேலும் புலிகள் தணிக்கையைக் அறிமுகப்படுத்தி, கண்ணுக்குள் விளக்கெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு 'ஒருமாதிரி'யான பாடல்களை எல்லாம் கவனமாகக் கத்தரித்தும் விடுவார்கள்.
இந்த அல்லாடல்களுக்கு இடையில் எங்களுக்கு கிடைத்த ஒரு செய்தி இன்னும் அச்சமூட்டக்கூடியதாக இருந்தது. சுண்டிக்குழிப்பக்கமாய் பெண்கள் சிலர் ஒன்றாய்ச்சேர்ந்து 'தணிக்கை' செய்யாத ஒரு படத்தைப் பார்த்துக்கொண்டிருந்திருக்கின்றார்கள். படம் திரையிடப்பட்ட வீட்டில் பெண்ணின் பெற்றோர் திருமணாத்துக்கு எங்கையோ போயிருக்கின்றார்கள். அந்த சமயத்தில் ஜெனரேட்டரோ டெக்கோ இடையில் நின்றுவிட பெற்றோர் வரமுன்னர் டெக்கிற்குள் இருக்கும் கசெட்டை எடுத்துவிட வேண்டிய நிர்ப்பந்தம். பெற்றோர் வந்துவிட்டால் இவர்களின் கள்ளம் பிடிபட்டுவிடும். யாரிடமாவது உதவி கேட்டு கசெட்டை வெளியில் எடுத்தால் போதும் என்ற அவசரத்தில் ரோட்டில் சைக்கிளில் போன பெடியன் ஒருவனை மறித்து டெக்கைக் கழற்றி கஸெட்டை எடுத்துத் தரும்படிக் கேட்டிருக்கின்றனர். பெடியனும் எடுத்துக் கொடுத்திருக்கின்றான். ஆனால் அவன் ஓர் இயக்கப்பெடியன். புலி மூளை உடனே வேலை செய்ய, பிறகென்ன கடைசியில் பெட்டையளைப் பங்கருக்குள் பனிஷ்மென்டிற்காய் போட்டுவிட்டிட்டாங்களாம். நான் இந்தக் கதையைக் கேள்விப்பட்டுவிட்டு 'இது சும்மா புளுகுக்கதையடா, பெட்டையளை இயக்கம் பங்களுக்குள் போடமாட்டங்கள்' என்றேன். இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒருத்தன் 'அப்ப நீ இப்படியொரு கசட்டை கையில் வைத்துக்கொண்டிரு, அவங்கள் உன்னைக்கொண்டுபோய் பங்கருக்குள் போடட்டும். பிறகு உள்ளே பெட்டையள் இருக்கினமா இல்லையா என்று தெரிந்துவிடும்' என்றான். உந்தக் கோதாரிகளோடு இதுதான் ஒரு பிரச்சினை, ஒன்றை ஏதும் மறுத்துச் சொன்னால் போதும், உடனே வேள்விக்குப் போகின்ற பலியாடாக எங்களையே அனுப்பிவிடுவாங்கள்.
வம்பின் பொங்கும் கொங்கை சுமக்கும் வலி இன்றிக்
கம்பிக்கின்ற நுண் இடை நோவ, கசிவாளும்;
பைம் பொன் கிண்ணம் மெல் விரல் தாங்கி, பயில்கின்ற
கொம்பில் கிள்ளைப் பிள்ளை ஒளிக்க, குழைவாளும்;
(கம்பராமாயணம்; பாலகாண்டம்)
இப்போது கம்பராமாயணத்தை வாசிக்கும்போதுதான் நாங்கள் கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்யிற்காய் அலைந்திருக்கின்றோம் என்பது நன்கு புரிகிறது. கம்பர் பெண்களை விபரித்து எழுதியதைப் படிக்கும்போதுதான் அவன் கவிச்சக்கரவர்த்தியல்ல, காதல் பேரரசனாகவோ பேராசனாகவோ இருக்கத் தகுதியுரியவன் போலத் தோன்றுகிறது. நல்ல காதல் சுவை கொட்டும் கம்பராமாயணப்பாடல்களை எங்கள் பாடத்திட்டத்தில் வைத்திருந்தால் நாங்கள் 'தனங்களைப் பற்றி அறிகின்ற ஆர்வத்தில் தமிழையும் கற்றிருப்போம்' அல்லவா? இப்படியொரு வரலாற்றைத் தவறைச் செய்த நம் தமிழ்ச்சமூகத்தையோ ஆசிரியர்களையோ என்னால் இனி எப்படி மன்னிக்கமுடியும்?
2.
இடையீடு
கதையோடு கதையாக என் திருக்குறள் கதையையும் சொல்லிவிடவேண்டும். தெல்லிப்பளையில் துர்க்கையம்மன் கோயில் இருக்கிறது. அப்போது தங்கம்மா அப்பாக்குட்டிதான் அக்கோயிலை நிர்வகித்து வந்தார். மாணவர்களுக்கு நன்னெறி காட்டுவதற்காகவும், 'மேன்மை கொள் சைவ நீதி' யாழ்ப்பாணம் எங்கும் விளங்குவதற்காகவும் அடிக்கடி திருக்குறள் போட்டிகள் வைப்பார்கள். 5, 10 அதிகாரங்களை மனனம் செய்துவிட்டு அவற்றை மறந்துவிடாது போட்டியின்போது எழுதவேண்டும். சிலவேளைகளில் அதன் பொருளையும் எழுதவேண்டும். நானும் இந்தப் போட்டிகளில் பங்குபெறுதலில் சிக்குப்பட்டுவிட்டேன். அறிவுடமை, ஒழுக்கமுடமை, கல்வியுடமை என்று அறத்துப்பாலில்தான் தெரிவு செய்து பாடமாக்கச் சொல்வார்கள். இப்போது என்றல்ல அப்போதே 'ஐந்தில் வளையாது ஐம்பதில் வளையாது' என்பதுமாதிரி எனக்கு இந்த 'நன்னெறி' விடயங்களை எவ்வளவு பாடமாக்கினாலும் மனப்பாடமாகாது. ஆனால் மனந்தளராத விக்கிரமாதித்தனாகப் பங்குபெற எனது பெற்றோரால் தொடர்ந்தும் நிர்பந்திக்கப்பட்டிருந்தேன்.
திருக்குறளும், கம்பராமாயணம் போல ஓர் அமுதசுரபி தான் என்பது நான் கனடாவிற்கு வந்து பதின்மவயதில் ஒரு பெண்ணைத் 'தீவிரமாய்க்' காதலித்துக்கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது. ஈழத்திலிருந்து வரும்போது 9ம் வகுப்பில் 6 பாடங்களில் முதன்மைச் சித்தி பெற்றதற்காய் ஒரு திருக்குறள் புத்தகத்தைப் பரிசளித்திருந்தனர். அதையொரு பொக்கிசமாய் நான் கனடாவிற்கு கண்டங்களும் கடல்களுந்தாண்டிக் கொண்டுவந்திருந்தேன். காதலித்துக்கொண்டிருக்கும் பெண்ணிற்கு என் காதலைக் கவிதையாய்ச் செப்ப, அவரை வர்ணிக்க புதிய புதிய சொற்கள தேவைப்பட்டிருந்தன. ஒருநாள் தற்செயலாய் திருக்குறளை காமத்துப்பாலைப் புரட்டிக்கொண்டிருந்தபோதுதான் திருவள்ளுவர் மன்மதனிற்குப் பக்கத்துவீட்டுக்காரன் என்பது புரிந்தது. அறத்துப்பால் என்ற அலுப்பான விடயங்களை எழுதிய இந்த மனுசன் தானா இப்படி காதலில் புகுந்துவிளையாடுகின்றார் என்ற திகைப்பு வந்தது. பெண்களைப் பற்றி என்ன வர்ணிப்பு, விரகத்தவிப்பை பற்றி என்ன எழுத்து...ஆகா ஆகா? பிறகென்ன திருக்குறள் என்னும் வற்றாச் சுரங்கத்திலிருந்து தங்கக்குவியல் கிடைக்க நான் காதல் வானில் தங்கு தடையின்றி பறக்கத் தொடங்கினேன். இவ்வாறு நான் திருக்குறளின் கருத்துக்களை அங்குமிங்குமாய்த் தெளித்து நூற்றுக்கணக்கில் கவிதைகள் எழுதிக்கொடுத்த பெண்ணிடம், 'எப்படியிருக்கிறது என் கவிதைகள்?' என்கின்றபோது ஒரு புன்னகையாலோ வெட்கத்தோலோ மட்டும் பதில் கூறுவார். அடடா கனடா பறந்து வந்தபோதும் பருப்பு சோறு கறி எப்படிச் சமைக்கிறது என்ற பெண்ணாக மட்டுமின்றி அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு போன்றவை கலந்துருவாகிய தமிழ் அணங்காகவும் இவர் இருக்கிறார் போலும் என நினைத்து வியந்தேன்.
வழமையாக என் 25 காதல்களுக்கும் நிகழ்ந்ததுபோல இவரும் பிரிந்து போன பிற்பாடுதான் அறிந்துகொண்டேன், அந்தப் பெண்ணுக்குத் தமிழில் கதைக்க மட்டுந்தான் முடியும், ஆனால் தமிழ் எழுத வாசிக்கத் தெரியாது என்று. என்ன ஒரு கொடுமை? எனினும் எனக்கும் வள்ளுவருக்கும் மனம் நோகக்கூடாது என்பதற்காய், எந்த மறுப்புத் தெரிவிக்காது நாம் எழுதிய கவிதைகளை ஏற்றுக்கொண்ட அவரை நன்றியுடன் நினைவில் இருந்திக்கொள்ளத்தான் வேண்டும் (எங்கிருந்தாலும் வாழ்க; என் பெயரை உங்கள் பிள்ளைக்குச் சூட்டுக).
'கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்'
(குறள்)
அண்மையில் நல்லூர்க்கோயிலுக்கு வரும் பெண்களுக்கு(கவனிக்க: பெண்களுக்கு மட்டும்)ஆடைக் கட்டுப்பாட்டு விதிகள் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. இது குறித்த விவாதத்தில் இவ்வாறான ஆடைக்கட்டுப்பாடு தங்கமம்மா அப்பாக்குட்டியால் பல வருடங்கள் முன்பே தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோயிலில் விதிக்கப்பட்டிருந்தது என நண்பர் ஒருவர் நினைவூட்டினார். 'சிவத்தமிழ்ச்செல்வி' தங்கம்மா அப்பாக்குட்டி இப்படியான விடயங்களில் இராணுவக் கட்டுப்பாடோடுதான் நடந்துகொள்வார் என்றே நினைக்கிறேன். சிறுவர்களாயிருக்கும்போது கோயிலுக்குப் போய் ஏதும் சத்தம் போட்டு விளையாடினாலோ ஏதேனும் கஞ்சல் போட்டாலோ மனுஷி கத்தத் தொடங்கிவிடும். ஆனால் இவற்றுக்கப்பால் பெற்றோரை இழந்த அநாதரவான நிறையப் பெண்பிள்ளைகளை -வருகின்ற கோயில் வருமானத்தில் வைத்து -பராமரித்துக்கொண்டிருந்தது எனக்கு நன்கு நினைவிலுண்டு. பிறகு பிரச்சினையின் நிமித்தம் தெல்லிப்பளையில் இருந்து இடம்பெயர்ந்தபோதும் அப்பிள்ளைகளை மருதனாமடத்தில் வைத்துக் கவனித்திருக்கின்றார். ஆனால் நல்லூரில் ஒரு ஆதினம் இருக்கின்றதைத் தவிர அங்கே அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை நானறியேன்.
நல்லூர்க்கோயிலுக்குள் நான் போனதில்லை. ஈழத்தில் இருந்தகாலங்களில் அப்பாவின் சைக்கிளில் இருந்து அதன் வெளிவீதிகளால் போன ஞாபகங்களுண்டு. அப்பா ஒரு நாத்திகராக இருந்ததால் கோயில்களுக்குள் அழைத்துப் போவதில்லை. ஆனால் எனக்கு நல்லூர்க்கோயிலை நன்றாக நினைவில் வைக்க ஒரு சம்பவம் இருக்கிறது. அது திலீபனின் உண்ணாவிரத மரணம் நிகழ்ந்த காலம். திலீபன் இறந்தபோது மக்கள் உண்மையில் தன்னெழுச்சியாக அலையலையாகவே வந்தனர். யாழ் நகரத்தை விட்டொதுங்கிய ஒதுக்குப்புறச் சிறு ஊரிலிருந்து நாங்கள் கூட ஒரு வான் பிடித்து நல்லூருக்குப் போயிருந்தோம். அப்போது எனக்கு ஏழெட்டு வயது இருக்கும். காலையில் போன நாங்கள் வரிசையில் நின்று திலீபன் உடலைப் பார்ப்பதற்குள் இருள் கவிழ்ந்துவிட்டிருந்தது. அவ்வளவு சனம்; நெடுமாறன் உரையாற்றிக்கொண்டிருந்தார். கறுத்தும் சுருங்கியும் போயிருந்த திலீபனின் உடலைப் பார்த்தபோது 'ஓ மரணித்த வீரனே உனது ஆயுதங்களை எனக்குத்தா உனது காலணிகளை எனக்குத்தா' என்ற பாடல் ஒலிபரப்பானது மட்டுமில்லை; 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும், நான் வானிலிருந்து 690? போராளியாக இருந்து சுதந்திர தமிழீழம் மலருவதைப் பார்ப்பேன்' என்ற திலீபனின் வாசகங்கள் கூட எனக்கு அந்த வயதில் நன்கு நினைவிருந்தது. ஏழு எட்டு வயதில் இப்படி அரசியல் தெரிய நீயென்ன உமையின் முலைப்பால் குடித்த ஞானப்பழமா அல்லது வாழைப்பழமா என்று சிலர் முத்திரை குத்தவும் கூடும் என்பதால் இங்கே மேலும் அரசியல் பேசுவதைத் தவிர்க்கிறேன். சரி விடயத்திற்கு மீண்டும் வருகிறேன், ஆண்களை அரை நிர்வாணமாக (மேலாடை இல்லாது) வரச்சொல்கின்ற நல்லூர்க்கந்தன் பெண்களையும் தாவணியோ சேலையோ கட்டாது ப்ளவுஸும் பாவாடையுமாக அல்லவா வரச்சொல்லியிருக்கவேண்டும்? பெண்கள் சேலையோ half சாறியோ அணியாமல் வந்தால் "என்ன கெட்டுப்போகுமென்று" நினைக்கின்றார்களே அதையே ஆண்கள் மேலாடையின்றி வரும்போது கெட்டுவிடாதா என்ன? மேலும் இப்படி செக்சியாய் மேலாடை இல்லாது வரும் ஒரு ஆணைப் பார்த்து யாரேனும் பெண் -கம்பனையோ வள்ளுவனையோ வாசித்த பாதிப்பில்- ஏக்கமாய்ப் பெருமூச்சுவிட்டு ஏதும் ஏடாகூடாமாய் கோயிலுக்குள் நடந்துவிட்டால் பிறகு அப்பெண்ணின் பெற்றோருக்கு கந்தனா பதில் சொல்லுவார்?
இப்போது என்னைப்போன்ற யாழ்ப்பாணிகள் நிறையத் தமிழ்ப்படம் பார்ப்பதாகவும் புதுப்படங்கள் வந்தால் நடிகர்/நடிகைகளுக்கு பாலாபிஷேகம் செய்வதாவும் சொல்கின்றனர். படங்களில் அநேகமாய் நாயகிகள்தான் -இயல்பு வாழ்க்கைக்கு மாறாய்- 'ஏய் மாமோய் வாய்யா போ'வ்'வோம் ஆத்துப்பக்கமாய் அல்லது guest house பக்கமாய்' என்று ஒரு 'ஹிக்'காய் அழைப்பு விடுகின்றவர்களாய் இருக்கின்றார்கள். இதையே வேதவாக்காக நல்லூர்க் கோயிலுக்குப் போகின்ற பெண்கள் செய்துவிடும் அபாயமும் உண்டு என்பதையும் ஆடைகள் அணிய சட்டம் கொண்டு வந்த நீதிக்குச் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது.
3.
இது கம்ப இராமாயணம் படித்த கதையல்ல; கம்பனின் காமரசம் சொட்டும் பாடல்களை இடையில் புகுத்தி எழுதிய, ஒரு நீலப்படம் பார்த்த கதையென யாரேனும் ஒரு விமர்சகர் என் மீதான காழ்ப்புணர்வில் எழுதலாம். நிச்சயமாக எவரும் இந்தக் கதையை விமர்சிக்கலாம், ஆனால் அதற்கு முன் நீங்கள் இதேமாதிரியான 'நொந்த இராமயணம் அல்லது வெந்த இராமாயணம் வாசித்த அனுபவம்' என்றொரு கதையை எழுதியிருந்தாலே நீங்கள் கூறுவது சபையிலேறும் என்பதை அவையடக்கத்துடன் கூற விரும்புகின்றேன். கம்பன் எத்தனையோ காண்டங்கள் எழுதியிருக்க பாலகாண்டத்தில் மட்டுமே நிறுத்திக்கொண்ட பன்னாடையென என்னைத்திட்டப் போகின்றவர்கள் தயவுசெய்து -நாகரிகமாக- நீரை மட்டும் அருந்திவிட்டு பாலை விட்ட அன்னப்பறவையென புதிய உதாரணத்தைப் பயன்படுத்துமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். எனக்கு பாலகாண்டமே தேவர்களும் அசுரர்களும் கடைந்த பாற்கடலாக இருக்கும்போது, அதில் நீச்சலடித்தே என்னால் கரைதாண்ட முடியாதிருக்கும்போது எப்படி என்னால் பிற காண்டங்களைத் தாண்டமுடியும் என்பதையும் நீங்கள் நினைவில் இருத்திக் கொள்ளவேண்டும்.
உண்மையில் இந்தக்கதையை எழுதியதற்கு எனது ஆசான் Xமோவிற்கு நன்றி கூறவேண்டும். எனெனில் அவர்தான் தினமும் 2 மணித்தியாலம் காலையும் மாலையும் எழுதுகின்றார் என்று பலர் முன்னுரையிலும் முகப்புநூல்களிலும் பதிவுசெய்கின்றனர். எனக்கு காலைப்பொழுதின் 1 மணித்தியாலம் காலைக்கடன்களிலும் குளிப்பதிலும் போய்விடுகின்றது. ஏன் எவரும் 'கவிதை எழுதுவது, கதை எழுதுவது போல' மிக உன்னதமானது காலைக்கடன் கழிப்பதும் குளிப்பதும் எனச் சொல்லவில்லை? இது போன்ற இருட்டடிப்புக்கள் வரலாற்றின் பல்வேறு கட்டங்களில் நிகழ்ந்திருக்கின்றன என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டத் தேவையில்லை என நினைக்கிறேன்.
இவ்வாறாகக் கூறப்படாததால்தான் நான் இன்று காலை இந்தக் கதையை -எனது காலைக்கடனிற்கான நேரத்தில்- எழுதவேண்டியதாகப் போய்விட்டது. சில ஆண் கவிஞர்கள் கவிதை ஒன்றை எழுதி முடிப்பது பிரசவவேதனையைப் போன்றது என்கின்றனர். ஏன் காலைக்கடன் கழிப்பது கூட சிலருக்கு மாபெரும் வேதனையாக இருக்கின்றது என்பதை இவர்களால் புரிந்துகொள்ள முடியாதிருக்கின்றது?
இறுதியாக இக்கதையை முடித்தாக வேண்டியிருக்கிறது. நான் 'திருக்குறளாய்க் காதலித்த' பெண் வரும் மாதம் தனக்குத் திருமணம்,,, வரச்சொல்லி அழைப்பு விடுத்திருக்கின்றார். அவர் என்னைச் சில மாதம் காதலித்திருந்தார். பிறகு என் நண்பனை 6 வருடங்கள் நேசித்திருந்தார். இப்போது எனக்கும் எனது நண்பனுக்கும் தெரிந்த எங்களின் நண்பன் ஒருவனை மனதார நேசித்து மணவிழாக் காணப்போகின்றார். எனது '25 தடவைகள் காதலித்த சாதனை'யை முறியடிக்க இவரும் முயற்சித்திருக்கின்றார் என்ற வகையில் மிகுந்த பாசம் இவர் மீது எனக்குத் தனிப்பட்டவளவில் உண்டு. இப்போது இங்கே திருமண விழாக்களின்போது தென்னிந்தியத் திரைப்படப்பாடல்களைப் போல இணைகள் ஆடுவதாகவும் அபிநயம் பிடிப்பதாகவும் ஒளிப்பதிவு செய்து திரையிடுகின்றார்கள். குறள் மீது அபினாக நான் இருப்பதால் என்னைத் தங்களை வாழ்த்தியொரு கவிதை பாடச்சொல்லிக் கேட்டிருக்கின்றார். உங்கள் வாழ்வு எனக்கு 'ஆட்டோகிராப்' படத்தை நினைவுபடுத்துவதால் 'ஞாபகம் வருகிறதே' பாடட்டுமா என்று கேட்டிருந்தேன். அவர் புன்னகைத்தார். அந்தப் புன்னகை வீட்டில் ரொறொண்டோத் தெருவில் பிரபஞ்சவெளியில் அலையலையாய் நம் முடியாக் காதலின் துயரை நிரப்பிச் செல்கிறது.
000000000000000
மேலும் இந்தக்கதை தமிழ்ச்சினிமாவில் இறுதியில் வந்து முடிவதால் இஃதொரு புலம்பெயர்கதைதான் என்பதை நீங்கள் உறுதியாக நமபலாம்.
(என் தமிழ் ஊழியம் இப்போதைக்கு நிறைவுற்றது)
'விதியினை நகுவன, அயில் விழி; பிடியின்
கதியினை நகுவன, அவர் நடை; கமலப்
பொதியினை நகுவன, புணர் முலை, கலை வாழ்
மதியினை நகுவன, வனிதையர் வதனம்.'
எனக் கம்பன் கண்ட பெண்டிர்க்கு...!