கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ரைனெர் ரில்க

Monday, May 11, 2026

 

'வசந்தம் வராத காட்டில்  பறவையின் ஓர் அழைப்பு'
தமிழாக்கம்: பிரசாந்தி சேகரம்

***

.ஒருமுறை ஸ்பெயினில் ப்ளமிங்கோ நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிய அரங்கு. முன்வரிசை இருக்கை. நடனமாடிய பெண் நுனிக்காலில் தரையை அழுத்தி எழுந்த தருணந்தோறும் என் இதயத்துடிப்பைத் துல்லியமாக உணர்ந்தேன். அவ்வளவு intense & intimate ஆன நடன நிகழ்வு. அந்த ஒன்றரை மணி நடனநிகழ்வைப் பார்த்த அந்த நாள் முழுதும் பரவசத்தின் திளைப்பில் அலைந்தபடி இருந்தேன்.
 

அந்த ஞாபகங்களை அப்படியே தத்ரூபமாக நினைவுபடுத்துவது போன்று பிரசாந்தி தமிழாக்கிய ரில்கவின் 'ஸ்பானிய நடனக்காரி' கவிதை இருந்தது.

"கையில் பிடித்திருக்கும் ஒரு தீக்குச்சி
வெண்மையில் இருந்தது
வெடிக்கும் தீப்பிழம்பாக மாறுமுன்
எவ்வாறு அங்குமிங்கும்
துடிக்கும் நாக்குகளை நீட்டுகிறதோ
அவ்வாறு தொடங்குகிறது
அவளின் நடனம்
பார்வையாளர்கள் சூழ்ந்திருக்க
வேகமும் வெளிச்சமும் வெப்பமும் பரப்பி
சுற்றிச் சுழல்கிறாள் அவள்
....

சட்டென சுற்றிலும் முற்றிலும்
அவளின் எல்லாமும் தீப்பிடிக்கிறது
ஒரெயொரு பார்வையில்
தன் கூந்தலைப் பற்றவைத்து
ஒரு சுற்றில்
திடீரெனத் தனது ஆடை முழுவதையும்
தனித்துவமான ஒரு கவித்துவத்துடன்
அடங்காத் தீயில் விசிறிவிடுகிறாள்
அதிலிருந்து
திடுக்கிட்டு விழித்தெழும்பிய
பாம்புகள் போல
நீள்கின்றன சடசடத்த நிர்வாணக் கைகள்
பிறகு அணையும் தருவாயில்
அந்தத் தீ இருக்கக் கண்டு
மிகுந்த ஆணவத்துடன்
ஆளுமை செழிக்கும் சைகையுடன்
அனைத்தையும் ஒருசேர அள்ளியெடுத்து
வீசியெறிகிறாள்."

என இன்னும் தொடரும் இக்கவிதையைப் பார்க்கும்போது ரில்கவும் நானும் ஒரே நடனத்தைத்தான் வெவ்வேறான கால நீட்சியில் பார்த்துக் கொண்டிருந்தோமா என்று எனக்கு இந்தக் கவிதை அவ்வளவு நெருக்கமானது.

ரைனர் ரில்க தமிழ்ச் சூழலில் அவரது கவிதைகளைப் போல, அவரின் 'இளம் கவிஞர்களுக்கு எழுதிய கடிதங்களாலும்' அறிமுகமானவர். அக்கடிதங்களை ரில்க அவரின் இருபதுகளில் எழுதியவர் என்பது மட்டுமின்றி அவரின் இறுதிக்காலம்வரை தொடர்ந்து பல்வேறு மனிதர்களுக்கு கடிதங்களை எழுதிக் கொண்டிருந்தவர். ஒருவகையில் பார்த்தால் ரில்கவிற்கு கவிதைகள் மீதிருந்து பித்தைப் போல கடிதங்கள் எழுதுவதிலும் இருந்ததோ என்று எண்ணத் தோன்றுமளவுக்கு கடிதங்களை காதலிகளுக்கு, தோழிகளுக்கு எண்ணிறைந்து எழுதியிருக்கின்றார்.

அநேக கவிஞர்களைப் போல ரில்கவின் வாழ்க்கை தத்தளிப்புக்களால நிரம்பி வழிந்திருக்கிறது. கவிதைகள் எழுதுவதும், பிறகு கவிதைகளை எழுதும் மனநிலையைத் தொலைப்பதும், அதை மீளக் கண்டுபிடிப்பதற்காகத் தொடர்ச்சியாகப் பயணிப்பதும் என்று தொடர்ந்து அலைபாயும் வாழ்வை அகமும் புறமாகக் கொண்டவர் ரில்க.

ரில்கவின் கவிதைகளை மேலோட்டமாகப் பார்த்தாலே அவர் எந்தளவுக்கு காதல் கவிதைகளை எழுதியிருந்தாரோ அந்தளவுக்கு தனிமை குறித்தும் எழுதியிருக்கின்றார் என்பது எளிதாகப் புரியும். ரில்க மறைந்து கிட்டத்தட்ட ஒரு நூறாண்டுகள் கடந்தபின்னும் ரில்க சமகாலத்தில் உயிர்த்தெழுவது அவர் தனிமனிதர்களின் அகவுலகின் தனிமையை அசலாக எழுதிச் சென்றிருப்பதால்தானோ என்று எனக்கு யோசிக்கத் தோன்றுகின்றது.

தமிழில் ரில்கவின் கவிதைகள் அவ்வப்போது தமிழாக்கப்பட்டிருந்தாலும், பிரசாந்தி சேகரத்தால் 'வசந்தம் வராத காட்டில் பறவையின் ஓர் அழைப்பு' என்கின்ற தொகுப்பில் ரில்கவில் ஒரு நூறு கவிதைகள் ஒரே நேரத்தில் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பதுதான் தனித்துவமானது. இந்நூலின் முதல் சிறப்பு என்பது ரில்கவின் கவிதைகள் அவர் எழுதிய மூலமொழியான ஜேர்மனிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டதாகும்.

ரில்க, காஃப்கா அனைவரும் செக்கில் பிறந்தவர்கள். முதலாம் உலக மகாயுத்ததின் முன் ஜேர்மன், ஆஸ்ரியா, ஹங்கேரி, செக் எல்லாவற்றையும் உலகப்படத்தில் விளங்கிக் கொள்வதென்பது சிக்கல் வரக்கூடியது. ரில்கவோ, காஃப்காவோ செக்கில் பிறந்து வளர்ந்திருந்தாலும், அவர்கள் ஜேர்மனியர்கள் என்கின்ற அடையாளத்தில் வருபவர்கள். ஒருவகையில் செக்கில்/ஆஸ்திரியாவில் பிறந்த அந்நியர்கள் இவர்கள் எனலாம். எனவேதான் அவர்கள் எப்போது நம்மைப் போன்ற புலம்பெயர்ந்தவர்கள் போல ஒரு விடுபட்ட தன்மையோடும், தனிமையோடும் அவர்கள் வாழ்ந்த சமூகத்தில் இருந்தார்கள். அது அவர்களின் படைப்புக்களிலும் பிரதிபலித்திருக்கின்றது. எங்கும் வேரூன்ற முடியாத அவதி என  இந்தத் தவிப்பைச் சொல்லலாம்.

அது ஹெர்மன் ஹெஸ்ஸேக்கும், மிலான் குந்தேராவுக்கும் வேறுவகையில் நடந்திருக்கின்றது. ஆகவேதான் ஹெஸ்ஸே சுவிற்சர்லாந்திலும், குந்தேரா பிரான்சிலும் தமது இறுதிக் காலங்களைக் கழித்தவர்கள். ரில்கவும் அப்படித்தான் ஒவ்வொரு நகராக அலைந்து இறுதியில் சுவிற்சர்லாந்தில் போய் அடைக்கலமானவர்.

ரில்கவின் முதல் காதல் லூவுடன் (Lou) தொடங்குகின்றது. ரில்க இருபதின் தொடக்கத்தில் இருக்கும்போது, லூவுக்கு முப்பதுகளின் மத்தி. ஆனால் அந்த மூன்று வருட உக்கிரமான காதல் ரில்க என்கின்ற கவிஞனை ஆளுமையுடையனாக வளர்த்தெடுத்திருக்கின்றது. ரஷ்ய பின்னணியில் இருந்து வந்த லூவால் அன்றைய ரஷ்யாவுக்கு அடிக்கடி ரில்கவினால் பயணிக்கவும் முடிந்திருக்கின்றது.

ரில்கவின் தளும்பும் மனது காதல்களை மட்டுமில்லை, அரசியல் சார்புகளையும் சிக்கலாகவே முடிவு எடுத்திருக்கின்றன. ஒருபக்கம் ரஷ்யப் புரட்சியை வரவேற்றவர், இன்னொருபுறம் முஸோலினியின் பாஸிசம் அந்த நாட்டுக்குத் தேவையென்று இறுதிக்காலத்தில் சொன்னவர்.  இதற்கிடையில் ஜேர்மன் (ஆஸ்திரியா) முதலாம் உலகப்போருக்குப் போனபோது,  படைவீரராகவும் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டவர். வயதின் காரணமாகவும், எழுத்தாளராக இருந்ததன் நிமித்தமும் இராணுவ சேவையில் இருந்து மிக விரைவில் விடுவிக்கப்பட்டவர். அது பிறகு அவரின் இறுதி பத்தாண்டு காலத்தில் மிகப் பெரும் உளவியல் பாதிப்பை ஏற்படுத்தியதும் என்றும் கூறுகின்றார்கள்.

ரில்க வாழ்க்கையில் இருத்தலியச் சிக்கலையும், இந்த அந்நியப்படுதலையும் தனது காதல்களாலும், பயணங்களாலும் கடந்து வந்தவராக ஒருவகையில் வகைப்படுத்தலாம். சிறுவயதுகளில் பெண்குழந்தை  இல்லாத காரணத்தால் பெண்களின் ஆடைகள் அணிவிக்கப்பட்டு தாயாரால் வளர்க்கப்பட்ட ரில்க, காலம் முழுதும் பெண்களின் கதகதப்புக்குள்ளேயே வாழ்ந்து முடித்தவர். மனைவி, காதலிகள், தோழிகள் ரில்கவின் ஆளுமையை மட்டுமின்றி அவரின் கவிதைகளைச் செதுக்குபவர்களாகவும், அவரை வறுமை எட்டவிடாது கனிவுடன் பராமரித்தவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள்.

*

பிரசாந்தி ஜேர்மனிக்கு சிறுவயதிலே சென்றவர். அவருக்கு பத்தாவது வகுப்பிலே ரில்க பாடசாலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றார். பிறகு பல்கலைக்கழகக் காலத்தில் மாலைநேர நண்பர்களின் கவிதை உரையாடல்களில் ரில்க அவருக்கு ஞாபகப்படுத்தப்பட்டிருக்கின்றார்.

இவ்வாறு ரில்க இளம்வயதில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவர் பின்னர் ரில்கவின் அசலான ஆவணங்களைத் தேடி மூன்று நாட்கள் தொலைதூர நகருக்குச் சென்று தங்கி நுணுக்கமாகப் பார்க்கின்றார்.

ஒரு படைப்பாளிக்கு இப்படி பிரசாந்தி போல ஓர் அணுக்கமான வாசகர் கிடைப்பது அவர்களின் பெரும்பேறெனச் சொல்வேன். அதிலும் பிரசாந்தியின் பின்னுரையை வாசிக்கும்போது அவர் கிட்டத்தட்ட ஒருதலைக்காதலாக ரில்கவை நேசிக்கின்றாரோ என்றளவுக்கு அவ்வளவு நெருக்கமாக நம்மை உணரவைக்கின்றார்.

ஒரு மொழியிலிருந்து இன்னொரு  மொழிக்கு அதன் சாரம் தொலைந்துவிடாது மொழிபெயர்ப்பது என்பது எளிதானதல்ல. அதிலும் கவிதைகளை தமிழாக்குவது என்பது இன்னும் சவாலானது. சிலவேளைகளில் நாம் அந்தப் படைப்பாளிகளில் தோய்ந்து அவர்களின் மூலமொழியில் வாசிக்கும்போது அப்படியொரு பரவசம் உணர்வைத் தரும். ஏனென்றால் நாம் தனித்து ஒரு கவிதையை மொழிபெயர்ப்பதில்லை. நாம் அந்தப் படைப்பாளியின் வாழ்கையில் தோய்ந்தெழுவதால் நமக்கு அவர்களின் ஒவ்வொரு வாக்கியங்களுக்கு அப்பால் தொக்கி நிற்கும் அர்த்தங்கள் தெரியும். ஆனால் சிலவேளைகளில் மொழிபெயர்த்துப் பார்க்கும்போது அது தனியே அந்தக் கவிதையாக வாசிக்கப்படும் ஆபத்து இருக்கின்றது. அல்லது ஏன் இந்த மிக எளிய கவிதையை மொழிபெயர்த்தார் என்று மொழியாக்கத்தை வாசிப்பவர் நினைக்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது.



சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கியை தமிழாக்கும்போது நான் கிட்டத்தட்ட அவரின் அனைத்து நாவல்களையும் வாசித்தும், நிறைய நேர்காணல்களைப் பார்த்தும் முடித்திருந்தேன். எனவே என்னால் அவரின் கவிதைகளின் பின்னால் ஒளிந்து நின்ற அர்த்தங்களை அல்லது இது எதனோடு தொடர்புகொண்டு நிற்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள எளிதாக முடிந்திருந்தது. ஆனால் அதை நான் தமிழ்ப்படுத்தியபோது சிலவேளை மிகச் சாதாரண கவிதைகளாக அதைத் தனித்து வாசிக்கும்போது தோன்றியுமிருக்கின்றது. மேலும் ப்யூகோவ்ஸ்கி அந்தமாதிரி கெட்டவார்த்தைகளைப் பாவிப்பவர். எம்மிடையே இருக்கும் கெட்டவார்த்தைகளை அதற்குப் பாவித்தால் அது ஆங்கிலத்தில் வாசிப்பதுபோல ஒருவகைப் பரவசத்தைத் தராது. இந்தச் சந்தர்ப்பங்களில் நான் ஒரு தோற்றுப்போன மொழிபெயர்ப்பாளராக ப்யூகோவ்ஸ்கியின் முன் நின்றிருக்கின்றேன்.

பிரசாந்தி இந்நூலின் பின்னிணைப்பில் மொழிபெயர்ப்பின் ஒரு புதுப்பரிணாமம் குறித்து உரையாடுகின்றார். ரஷ்ய மொழியாக்கங்களில் அந்த மொழிபெயர்ப்பாளரே இன்னொரு படைப்பாளியாக முகிழும் தருணங்களையும், அதுபோல 'ரில்கவிடமிருந்து', 'ப்ராஸ்டிடமிருந்து' என்று அழைத்து மொழியாக்கங்களைச் செய்வதைக் குறிப்பிடுவது மொழிபெயர்ப்பாளர்கள் கவனிக்க வேண்டியதொன்று.

மேலும் டொச்சில் ஒரு சொல்லிலே மூன்று அர்த்தங்களை இணைத்து எழுதுவார்கள், அதை எப்படி பிரித்து தமிழில் எழுவது என்கின்ற சிக்கல்களையும் பிரசாந்தி முன்வைத்து இதில் எழுதியிருப்பது சுவாரசியமானது.  நேரடி மொழிபெயர்ப்பில் 'காய்ந்த காடு' என்பதை, 'பூக்காத காடு' என்பதற்குச் சென்று இறுதியில் எப்படி 'வசந்தம் வராத காட்டை' அவர் வந்தடைந்தார் என்பது மொழிபெயர்க்கும்போது நாம் வந்தடைகின்ற பரவசமான தருணங்கள் எனச் சொல்வேன்.  இவ்வாறு 'Silent Spring' என்ற சொல்லுக்கு ஏ.ஜே.கனகரத்ன, 'ஒலிக்காத இளவேனில்' என்கின்ற அழகான தமிழாக்கத்தைக் கண்டுபிடித்தவர் என்பது இந்நேரத்தில் நினைவுக்கு வருகின்றது (இதே பெயரில் 17 ஈழ/புலம்பெயர் பெண் கவிஞர்களின் ஒரு தொகுப்பும் வெளிவந்திருக்கின்றது).

'காதல் கொண்ட பெண்' கவிதையின் ஒரு பகுதி இப்படி வரும்.

'..இருப்பினும்
இலைகள் துளிர்க்கும் இந்தப் பொழுதுகளில்
என்னுள் ஏதோவொன்று விடுவிக்கப்பட்டுள்ளது

அறிந்திராத இருண்ட காலத்திலிருந்த ஏதோவொன்று
அது எளிய கதகதப்பான என் வாழ்வை
யாரோ ஒருவரின்
கைகளில் கொடுத்துள்ளது
நேற்று நான் யாராக இருந்தேன்
என்றறியாத ஒருவரின் கைகளில்'

நாம் ஒவ்வொரு புதிய நேசத்துக்குப் போகும்போது இப்படித்தானே 'நேற்று நான் யாராக இருந்தேன்/ என்றறியாத ஒருவரின் கைகளில்'தான் எமது வாழ்க்கையை ஒப்படைக்கத் தயாராகச் செல்கின்றோம். அதுவே காதலின் அழகும் ஆபத்தும் எனக் கூடச் சொல்லலாம்.

பிரசாந்தி 'வசந்தம் வராத காட்டில் பறவையின் ஓர் அழைப்பை' நேரடியாக ஜெர்மனிலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்திருக்கின்றார். ஒருவகையில் வசந்தம் வந்துவிட்ட  தமிழ் எனும் பெருங்காட்டிற்கு, ரில்க என்னும் பறவையை பரவசமாக அழைத்துக் கொண்டு அவர் வந்திருக்கின்றார் எனச் சொல்லலாம்.

அந்தப் பறவையின் நூறு பாடல்களை நாம் ஆறவமர இருந்து இனி இரசிக்கலாம்.

***

தமிழ் சினிமாவில் சாதி எதிர்ப்பின் அழகியல்

Thursday, April 30, 2026

 

தமிழ் சினிமாவில் சாதி எதிர்ப்பின் அழகியல்'  (Anti- Caste Aesthetics in Tamil Cinema) முதல்நாள் நிகழ்வில் சொர்ணவேல் நல்லதொரு உரையை பா.ரஞ்சித்தினதும் ('தங்கலான்', 'சார்பட்டா பரம்பரை'), மாரி செல்வராஜ்ஜினதும் ('கர்ணன்', 'பைசன்') திரைப்படங்களை முன்வைத்து தந்திருந்தார். தமிழ்ச் சினிமாவை தத்துவ, வரலாற்றுப் பின்புலங்களில் வைத்து ஆராயும் உரைகள்/எழுத்துக்களை வாசிப்பது என்பது இப்போது அரிதாகிவிட்டது.

சொர்ணவேல் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராக அமெரிக்காவில் இருந்தாலும், தமிழ்ச்சூழலை முக்கியமாக சினிமாவுக்கு நெருக்கமாகவும் இருக்கின்ற ஒருவர். அதனாலேயே அவரால் இன்றைய தமிழ் சினிமாவை, பல்கலைக்கழப் பின்புலத்தில் வைத்தும் பேசவும் எழுதவும் முடிகின்றது. இப்படி முன்பு 'தமிழியல்' மாநாடுகள் ரொறொண்டோ பல்கலைக்கழகத்தில் நடக்கின்றபோதும் பேராசிரியர்கள் வந்து தமிழ் இலக்கியம்/கலாசார/பண்பாடுகள் பற்றிப் பேசுவார்கள். 

ஆனால் அவர்களுக்கு சமகால தமிழ் இலக்கியப் போக்குகள் குறித்து பெரும்பாலும் தெரியாதிருக்கும். அதனால் அவர்களின் பெரும்பாலான ஆய்வுக்கட்டுரைகள் 'கற்கால'த் தமிழுக்குப் பொருத்தமாக மட்டும் இருந்திருக்கின்றன. அந்தத் தவறை தமிழ்ச்சினிமா சார்ந்து செய்யாத ஒருவராக பேராசிரியர் சொர்ணவேல் இருப்பது மகிழ்ச்சிக்குரியது.

 

இன்றைய நிகழ்வின் முடிவில் கேள்வி-பதில் நேரத்தில் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ்ஜின் 'வெற்றிகரமான ஜனரஞ்சக' நோக்கத்திற்காக சிலவேளைகளில் அவர்கள் சொல்ல வந்ததன் அடிப்படை நோக்கங்களை நீர்த்துப் போகச் செய்கின்றனரா என்ற விவாதம் வந்திருந்தது. அதற்கு சொர்ணவேல் கூறிய கருத்து அல்லது அவர் எடுத்திருக்கும் சார்ப்பை ரஞ்சித்தினதும், மாரியினதும் திரைப்படங்களை முன்வைத்து எனக்குரியதாகவும் சொல்வேன். எனினும் அனைத்து கலைப்படைப்புகளும் உரையாடல்களுக்கும், இடைமறிப்புக்களுக்கும் உரியவை என்பதிலும் மாற்றுக் கருத்துக்களுமில்லை.

*

'தமிழ் சினிமாவில் சாதி எதிர்ப்பின் அழகியல்' இரண்டு நாள் நிகழ்வுக்கும் சென்றிருந்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு புதிதாக அல்லது அறிந்தவற்றை கேள்விக்குட்படுத்தும்  உரையாடல்களைக் கேட்க முடிந்தது என்னளவில் மகிழ்ச்சியானது.

எப்போதும் சொல்வதுதான், ஏதோ ஒன்றை வாசிக்கும்போதோ அல்லது ஒரு நிகழ்வில் பங்குபெறும்போதோ நாம் அங்கே ஏதேனும் புதிதாக ஒன்றை கற்றுக்கொள்வதாக இருக்க வேண்டும். அல்லாதுவிடின் அவற்றால் எந்தப் பயனுமில்லை, நேரமும் வீண் விரயம்.

இந்நிகழ்வில் சொர்ணவேலுடன், கங்காவுடன், மற்றும்  பல நண்பர்களுடன் உரையாடியது மனதுக்கு இதமாக இருந்தது. நிகழ்வுகளை நடத்துவது முக்கியமில்லை, அதை எப்படி constructive ஆக நடத்துவது என்பதற்கும் இந்நிகழ்வு நல்லதொரு முன்னுதாரணம்.

***

 

கார்காலக் குறிப்புகள் - 150

Tuesday, April 28, 2026

 

மது நகரில் (Toronto) நூறு நூலகங்கள் இருக்கின்றன. நூறாவது நூலகமாக புதிதாகத் திறக்கப்பட்டது, அதற்கு முன்னர் மாநகரசபையாக இயங்கிய கட்டடத்தின் ஒருபகுதி. இப்படி நூறு நூலகங்கள் இருக்கும் எங்கள் நகரில் நூலகங்கள் சிலதை மூடவேண்டும் என்று ஆட்சியிலிருக்கும் வலதுசாரி மாகாண (மாநில) அரசு முடிவெடுத்தபோது, அதற்கு பெரும் எதிர்ப்பு வந்திருந்தது. அந்த எதிர்ப்பை முன்னெடுத்தவர்களில் முன்னே நின்றவர் கனடாவின் பிரபல்யமான எழுத்தாளரான மார்க்கரெட் அட்வூட். அவரும் எமது நகரில் வசிப்பவர்.

நூறு நூலகங்களில் ஆகக்குறைந்தது 15-20 நூலகங்களில் தமிழ் நூல்களை இரவல் பெறமுடியும். அவ்வாறு அந்த நூலகங்களுக்கு அருகில் இல்லாவிட்டாலும் இணையத்தில் தேவை என்று பதிவு செய்துவிட்டால், அவர் எமக்கு அருகில் இருக்கும் நூலகத்தில் கொண்டுவந்து வைப்பார்கள். நாம் தொலைதூரத்துக்குப் போகாது அருகில் இருந்த நூலகத்திலே இந்த நூறு நூலகங்களில் இருக்கும் எந்தப் புத்தகத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.

 


அண்மையில் ஒரு பெண் (Marci), அவரின் காலமாகிவிட்ட தாயின் நினைவுகளுக்காக எமது நகரில் நூலகங்களுக்கு நடந்து போயிருக்கின்றார். கிட்டத்தட்ட பத்து நாட்களாக முந்நூறு கிலோமீற்றர்கள் நடந்திருக்கின்றார். தாயார் சிறுவயதில் தன்னை இந்த நூலகங்களுக்கு ஒவ்வொரு வாரமும் கூட்டிக் கொண்டு செல்வார். அதுமட்டுமில்லாது அவர் இறக்கும்வரை (50 ஆண்டுகளுக்கு மேலாக) நூலகங்களுக்கு சென்று கொண்டிருந்தவர். அவரின் ஞாபகங்களுக்கு மரியாதை செலுத்த இந்த நூலகங்களுக்கு நடந்து போயிருக்கின்றார்.

நடப்பது மட்டுமில்லாது விரும்பியவர்கள் ஏதேனும் நிதி பங்களிப்புச் செய்யலாம் என்று அது நூலகத்திற்கே செல்லுமென ஒரு குறிப்பிட்ட நிதியைச் சேகரித்தும் கொடுத்திருக்கின்றார்.

இதையேன் இங்கே எழுதுகின்றேன் என்றால் இலங்கையிலோ இந்தியாவிலோ எவ்வளவோ நூலகங்கள் இருக்கின்றன. ஆனால் அதை எந்தளவுக்கு நாங்கள் பயன்படுத்துகின்றோம் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டுமென்பதற்காகவே. என் அனுபவத்தின்படி எங்கள் வீட்டில் நிறைய நூல்கள் இருந்தாலும் நான் பல்வேறு நூலகங்களுக்கு போர்க்காலத்தின் நடுவிலும் போய் வந்திருக்கின்றேன். அவையே ஒருவகையில் யுத்த சூழலைத் தாண்டிய ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

போர் நடந்த/நடந்து கொண்டிருக்கும் சிரியா, பாலஸ்தீனம், லெபனான், ஈரான் போன்ற பகுதிகளில் நூல்களை எந்தளவுக்கு அந்த மக்கள் நேசிக்கின்றார்கள் என்பதை நாம் அறிந்திருப்போம். ஏன் ஈழத்தில் தொடக்க கால போராளிக்குழுக்களுக்கு நூல்களின் வாசிப்பு எவ்வளவு முக்கியமானதாக இருந்திருக்கின்றது என்பதை அன்றைய காலத்தவர்கள் மூலம் தெரிந்திருப்போம்.

ஆக அவ்வளவு கொடுமையான போர்ச்சூழலிலே வாசிப்பு என்பது எவ்வளவு நேசிப்புக்குரியதாக இருக்கும்போது, நாம் அப்படி கடும்சூழலுக்குள் வாழாதபோதும் ஏன் நூலகங்களுக்குச் செல்லத் தயங்குகின்றோம், நமது பிள்ளைகளுக்கு நூலகங்களை அறிமுகப்படுத்துவதில்லை என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவ்வாறான சூழ்நிலைகளை உருவாக்காது, இந்தச் சமூகம் தற்குறிகளையும், ரீல்ஸ் பார்க்கும் ஜென் ஸீக்களையும் உருவாக்குகின்றது என்று புலம்பதில் என்ன நியாயம் இருக்கப் போகின்றது? மேலும் வாசிப்பில் எப்போதும் பெரும்பான்மையானோர் திசை திருப்பவதில்லை என்ற உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் வாசிக்கவும் சிந்திக்கவும் விரும்புகின்ற ஒரு சிறுபான்மையினர் ஒவ்வொரு காலத்திலும் இருந்தபடியே இருக்கின்றார்கள்.

அந்த அரிய உயிரினங்கள் அழிந்துபோகாமல் இருப்பதற்காகவேனும் நாம் நூலகங்களிளனதும், வாசிப்பினதும் அருமையை மார்ஸி ஒரு நூறு நூலகங்களுக்கு நடந்துசென்று ஒரு விழிப்புணர்வை தன் தாயாரின் நினைவுகளின் நிமித்தம் செய்தது போல, ஏதேனும் வித்தியாசமாகச் செய்து பார்க்கலாம்

***

 

'புளியடி' சாமுவேலும் இளங்கோவும் - ரவீன்

Sunday, April 19, 2026

 

வின்சென்ட் வான்கோவின் தன்னுருவப் படமொன்று. அதில் அவர் புல்லுத் தொப்பியோடு, தங்க நிறத் (blond) தாடியுமாய் ஒரு கடைக்கண் பார்வையோடு இருப்பார். அந்த ஓவியத்தின் பார்வை திடீரென்று உயிர்பெற்று கண்கள் மூடித்திறக்கின்றன. அவரின் பார்வை போகும் திசையில் முகத்தைத் திருப்பி, எழுந்து நிற்பார்.

​பிறகு அறுவடைக்குத் தயாராக இருக்கும் தங்க நிறத்திலான கோதுமை வயல்களினூடே நடந்து செல்வார். அந்த நிறங்களின் ஒற்றுமையோடு அவரின் சாம்பல் நிறத்திலான மேலங்கியும் அற்புதமாகப் பொருந்திக்கொள்ளும். காற்றில் கோதுமைப் பயிர்கள் அங்குமிங்குமாக அலைபோல் அசைய, வான்கோ நடந்து செல்லும் காட்சியை அவர் இறந்து 130 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவன் கற்பனை செய்து, அதற்கு உயிர் கொடுத்து நினைவு கொள்கிறான்.

அதை வான்கோவால் அறிய முடியும் என்றால், அவர் தனக்குத் தானே, 'இதுவே எனக்குப் போதுமானது' என்று சொல்லிக்கொள்வாரா...?
 
​இந்தக் கதை, இரண்டாம் உலகப்போர் காலத்தில் இங்கிலாந்தில் சட்டத்துறை பயின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் சாமுவேலால் தன்னைப்பற்றிச் சொல்லப்படுகிறது. சாமுவேலுக்குச் சட்டத்துறையில் பணியாற்றுவதைவிட, சிறுகதை எழுதுவதும் பெண்களை ரசிப்பதும் இலக்கிய நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பதுமே மகிழ்ச்சியைத் தருகின்றன.

​அதை இப்போது உயிரோடு இல்லாத சாமுவேல் சொல்வதாக இளங்கோ எழுதுகிறார். இளங்கோ, எழுத்தாளர்களையும் அவர்களின் கதைகளையும் தொடர்ச்சியாக வாசித்துக் கட்டுரைகளாக எழுதுபவர் என்பது நாம் அறிந்ததே.

அண்மையில் 'படுபட்சி' ஒரு புனைவா, அபுனைவா அல்லது தன் வரலாறா? இதில் எழுத்துக்கென்று இருக்கும் 'அறத்தை' எதை வைத்துக் கணிப்பது என்றெல்லாம் விவாதங்கள் எழுந்தன.

​இளங்கோவின் 'புளியடி சாமுவேல்' ஒன்றும் ஒரு புதிய வகை உத்தியல்ல. ஆனால், இக்கதையில் வரும் பாத்திரங்களையும் அவர்களின் உளவியலையும் நன்றாக அறிந்தவர்களால் மட்டுமே அதை உண்மைக்கு நெருக்கமாகக் கொண்டு வர முடியும். அது இளங்கோவிடம் மட்டுமே இருக்கிறது. அவ்வளவுக்கு அவர் அவர்களை வாசிக்கிறார்.

​இருந்தும் ஒரு எழுத்தாளனின் புதினமோ அல்லது சிறுகதையோ அவனுக்குள் எந்தச் சந்தர்ப்பத்தில் கருக்கொண்டிருக்கும் என்பது அந்த எழுத்தாளனுக்கு மட்டுமே தெரிந்த விடயம். அதைக்கற்பனை செய்வதும், அந்தக் கதையையும் எழுத்தாளனையும் சம்பந்தப்படுத்தி ஒரு புதிய கதையை உருவாக்குவதும் மிகவும் சுவாரசியமான விடயம். இந்தச் சுவாரசியத்தை எழுதுபவன், தன்னை முழுமையாகத் தவிர்த்துவிட்டு எழுதிவிட முடியாது. ஆக, புளியடி சாமுவேலுக்குள் இளங்கோவும் இருக்கிறார்.

​'புளியடி சாமுவேல்' என்ற சிறுகதையில் இளங்கோ என்று ஒரு பாத்திரம் வருகிறது. ஆனால், இந்தச் சிறுகதையை எழுதிய இளங்கோ அல்ல அவர். இளங்கோ, சாமுவேலுக்குள்தான் இருக்கிறார். இது தவிர்க்க முடியாதது.
​கற்பனைகளை நம்ப வைப்பதற்காக உண்மைச் சம்பவங்களைச் சேர்த்து எழுதுவதும், உண்மைச் சம்பவங்களை வலுவாக்கக் கற்பனைகளைச் சேர்ப்பதும் எழுத்துலகில் புதியதல்ல. இதில் இரண்டாவது உத்தியை இளங்கோ தனது வாசிப்பு அனுபவங்களால் சிறப்பாக்க முயற்சித்துள்ளார்.

கட்டுரைகள் போலல்லாமல், இந்த கதையாக சொல்லும் உத்தியால் நாம் அறியாத எழுத்தாளர்களையும் எழுத்துகளையும் மறக்க முடியாத அனுபவங்களாக மாற்ற முடியுமென்று நான் நம்புகிறேன்.

​சிறுகதையில் 'புளியடி' சாமுவேல்:
​'நான் இறந்து ஒரு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொருவன் என்னை ஞாபகம் வைத்து ஒரு கதையை நனவிடை உத்தி முறையில் எழுதிக் கொண்டிருப்பானா?' என்று கேட்பார்.

​'எழுத்துதானே என்னை இன்னும் உயிர்ப்புடன் காலத்தோடு கரைந்து போகாமல் வைத்திருக்கின்றது. அதில் நான் தோற்றுப்போனவனாக, தொடர்ச்சியாக எழுதாதவனாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால், முப்பது கதைகள் மட்டும் எழுதிய ஒருவனை இந்தச் சமூகம் மறக்காமல், அவன் பிறந்த நூற்றாண்டிற்குப் பிறகு ஞாபகத்தில் வைத்திருப்பது வியப்பானதுதானே!'


​இதற்குள் இருக்கும் சாமுவேல் இளங்கோவால் கட்டமைக்கப்பட்டவர். கதையில் பாத்திரமாக வரும் இளங்கோவிடம், 'சாமுவேலிடம் உனக்கு அதிகம் பிடித்தது எது?' எனக் கேட்டால், உடனேயே 'வேறென்ன, பெண்களை ஆறவமர ரசிக்கும் அவரின் அந்த அழகியல்தான் என்னை அதிகம் கவர்ந்தது’ என்று ஒருகணம் கூடத் தயங்காமல் சொல்வான். அதற்கு, 'என்னை இவ்வாறாக நினைவு கொண்டால் கூடப் போதுமானதுதான்' என்பார் சாமுவேல்.

​உண்மையில் அந்தச் சாமுவேல் இவ்வளவு இலகுவாகத் திருப்திப்படக்கூடியவரா? அல்லது 'நான் அவ்வளவு மலிவானவனா…?' என்று அதிருப்தி அடையக்கூடியவரா என்பது யாருக்குமே தெரியாது. ஒரு மனிதனின் மனநிலை பல காரணிகளால் நீரைப் போல் உருக்கொள்கிறது.

​ஆனால், 1515-ஆம் ஆண்டில் வரையப்பட்ட மோனாலிசாவின் அந்த மௌனப் பார்வையும், அவளது உதடுகளுக்குள் மறைந்திருக்கும் ஒரு மெல்லிய புன்னகையும் இப்போது AI மூலம் மெதுவாக உயிர்பெறச் செய்து, தன் கண்களைச் சிமிட்டியபடி தனது முகத்தை நம் பக்கம் திருப்பிப் புன்னகைக்கிறாள்.

அதேபோல், 1920-களில் பிறந்த சாமுவேலை இப்போது உருவகப்படுத்துவது மிக அவதானமிக்க விடயம். ஏனெனில், இது அகம் சார்ந்து . அந்தக் கற்பனைப் பாத்திரம் உண்மையில் வாழ்ந்த ஒருவரைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற பொறுப்புடன் உருவாக்கப்படுகிறது.
அந்தப் பொறுப்பு 'புளியடி சாமூவேலில் புலப்படுகிறது.

***

நன்றி: ரவீன்

'புளியடி' சாமுவேல்

Saturday, April 18, 2026

 

நான் இங்கிலாந்துக்குப் போவதற்கு ஒரு காரணம் இருந்தது. ஆனால் ஏன் இலங்கைக்கு மீண்டும் வரத் துடித்தேன் என்பதற்கு என்ன காரணம் என்று இப்போதும் யோசித்துக் குழம்புவதுண்டு. சட்டம் படிப்பதற்காக இங்கிலாந்துக்குப் போனபோது எனக்கு இருபத்து மூன்று வயது. இருபதுகளுக்கு உரிய எல்லாக் குறும்புகளும் எனக்குள் அப்போது பொங்கிப் பிரவாகித்தபடி இருந்தது. சட்டப் பாடங்களைப் படிப்பதைவிட பெண்களை இரசிப்பதும், புத்தகங்களை வாசிப்பதும் எனக்கு மிகப் பிடித்தமாக இருந்தது.


சட்டத்தைப் படித்துக் கொண்டிருந்தபோதே எனக்கு ஒரு புத்தகக் கடையில் வேலை கிடைத்திருந்தது. அப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் கதைகளை ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியிருந்தேன். அவை இங்கிலாந்தில் வெளியாகிய சிறுபத்திரிகைகளில் பிரசுரமாகவும் தொடங்கியது. 
 

ஒரு சனிக்கிழமை, நான் புத்தகக் கடையில் தனியே வேலை செய்து கொண்டிருந்தபோது இளம்பெண் ஒருத்தி புத்தகம் வாங்க வந்தாள். நடையில் ஒருவித அலட்சியமும், பார்வையில் ஒருவித குறுகுறுப்பும் அவள் வசம் இருந்தது. அப்படி வந்தவள், சமகாலத்து சிறந்த சிறுகதைப் புத்தகம் ஒன்றைத் தரும்படி கேட்டாள். நான் நிறையப் புத்தகங்களை புத்தக அடுக்குகளில் இருந்து எடுத்துக் கொடுத்தபடியிருந்தேன். அவளோ ஒவ்வொரு புத்தகத்தையும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி நிராகரித்துக் கொண்டிருந்தாள். இறுதியில் எனக்குப் பிடித்த ஹெமிங்வேயின் கதைத் தொகுப்பையே வேண்டாம் என்று அவள் மறுத்தபோது எரிச்சல் எனக்குக் தலைக்கேறி விட்டது. 'உனக்கெல்லாம் வாசிப்பு ஒரு கேடா?' என்று அவள் ஒரு வாடிக்கையாளர் என்பதைக் கூட மறந்து கோபத்தில் கத்திவிட்டேன்.

அப்போதுதான் அவள் உண்மையான காரணத்தைச் சொன்னாள்; 'நான் உங்களின் சில கதைகளை சஞ்சிகைகளில் வாசித்திருந்தேன், அதனால்தான் உங்களைத் தேடி இங்கே வந்தேன்'. நான் அவளை என் அலுவலக அறைக்குள் வந்து அமரும்படி சொல்லிவிட்டு, பக்கத்துக் கடையில் அருந்துவதற்கு எங்கள் இருவருக்கும் சூடான கோப்பிகளை எடுத்து வந்தேன். அந்தக் கஃபேயில் இருந்த பெண், 'என்ன இந்தச் சனிக்கிழமையும் ஒரு பெண்ணோடா?' என்று கொஞ்சம் எள்ளலாகக் கேட்டாள். நானோ 'எல்லாச் சனிக்கிழமைகளும் இப்படி ஆசிர்வதிக்கப்படுவதில்லை, பொறாமை வேண்டாமே' என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு வந்தேன்.

வந்திருந்தவள் என் கதைகளைப் பற்றி உரையாட ஆவலாகவும், நான் அவளை வாசிக்க விருப்பமுடையவனாகவும் இருந்தேன். அரை மணித்தியாலத்துக்குள்ளேயே அவளின் சம்மதத்துடன் புத்தக அடுக்கின் மறைப்பில் அவளைச் சாய்த்து முத்தமிட்டு, நான் சிறந்ததொரு குறுங்கதையை அக்கணமே எழுதி முடித்தேன். இது எமக்கிடையே மட்டும் எழுதப்பட்ட அந்தரங்கமான காவியம். அவளே எனது இலண்டன் காதலியாக பின்னாளில் மாறியிருந்தாள். இந்த அனுபவத்தை எப்படியாவது பதிவு செய்ய வேண்டுமென்று விரும்பியபோதுதான் நான் எழுதியது ‘திரு.மூன்’ என்கின்ற குறுநாவல்.

*

இங்கிலாந்திலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் திரும்ப வந்து எங்கள் பூர்வீக வீட்டில் நான் வசித்ததை அனைவரும் அறிந்திருப்பீர்கள். எனக்கு இங்கிலாந்திலேயே நன்றாக மது அருந்தும் பழக்கம் வந்துவிட்டது. பகல்வேளையில் யாரேனும்  யாழ் மத்தியகல்லூரி மாணவனின் சைக்கிளை எடுத்துக்கொண்டு போய் பாரில் ஒரு ஷொட் எடுக்காவிட்டால் ஏதோ சூரியனுக்கு கோபம் வந்து என்னை எரித்துவிடுவது போல உடல் பரபரக்கத் தொடங்கிவிடும். அதனால் நான் ஒருபோதும் சூரியனைக் கோபப்படுத்தியதில்லை. 

மாலை நேரங்களில் நான், ஏ.ஜே.கனகரட்ன, டொமினிக் ஜீவா என எல்லோரும் பறங்கித் தெருவிலுள்ள பிரீமியர் கஃபேயில் சந்தித்துப் பேசுவோம். உங்களுக்குத் தெரிந்திருக்கும் நான் இங்கிலாந்தில் இருந்தபோது ஒரு வெள்ளைக்காரப் பெண்ணை விரும்பியிருந்தேன் என்று. அன்று இலண்டனில் ஜேர்மன் விமானங்கள் குண்டுவீசும் அலறல்களுக்கிடையிலும் நாங்கள் நேசித்துக் கொண்டிருந்தோம். ஒருமுறை நாங்கள் தங்கியிருந்த அடுக்குமனைக்கு அருகில் குண்டு விழுந்தபோது பெற்ற அனுபவத்தை 'அபாயச்சத்தம்' என்ற கதையில் எழுதியிருந்தேன்.

என்னதான் என்னை இலண்டனுக்கு பெற்றோர் அனுப்பி சட்டம் படிக்க வைத்தாலும், அவர்களுக்கு கொழுத்த சீதனத்தோடு நானொரு தமிழ்ப் பெண்ணைக் கல்யாணம் செய்ய வேண்டும் என்று ஒரு கனவிருந்தது. இலண்டன் பெண்ணுடனான எனது காதல் வீட்டுக்குத் தெரிந்தவுடன், அவர்கள் எனக்குச் சொல்லாது நேராகவே என் காதலிக்கு கடிதம் அனுப்பி தங்கள் விருப்பமின்மையைத் தெரிவித்துவிட்டார்கள். அவளும் இதற்குப் பிறகு சரி வராது என்று என்னுடனான உறவை முறித்துவிட்டாள்.

இரண்டாம் உலக மகாயுத்தம் முடிந்து, கொஞ்சம் அமைதியும் வந்தபின் நான் இங்கிலாந்திலேயே வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கலாம். அந்தக் காலத்தில் என் கதைகள் நிறையச் சஞ்சிகைகளில் அங்கே வெளிவரத் தொடங்கியிருந்தன. என்னைவிட ஐந்து வயது மூத்தவரான கவிஞர் எம்.ஜே.தம்பிமுத்துவும் அப்போது இங்கிலாந்தில் பிரபல்யமாக இருந்தார். கவிதைக்கென்று ஒரு சஞ்சிகையை இங்கிலாந்தில் அவர் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

தம்பிமுத்துவுக்குக் கிடைக்காத ஓர் ஆசிர்வாதம் எனக்கு அப்போது கிடைத்திருந்தது. வர்ஜீனா வூல்ஃப், அவரின் கணவர் லெனாட் வூல்ஃப் ஆகியோரின் நட்புத்தான் அது. அவர்கள் தொடங்கிய 'ப்ளூம்ஸ்பெரி' இலக்கிய அமைப்பிலும் நான் இருந்திருக்கின்றேன். அந்தக் காலத்தில் பிரிட்டனின் அடிமைத்தனம், கீழைத்தேய காலனித்துவ நீக்கம் குறித்தெல்லாம் நாங்கள் நாட்கணக்காய் மது அருந்தியபடி, சிகரெட் புகைத்தபடி விவாதித்திருக்கின்றோம். அப்போதுதான் எனக்கு இந்தியாவின் முல்க் ராஜ் ஆனந்த் நல்லதொரு நண்பரானார். இவையெல்லாம் இந்தியாவும், இலங்கையும் பிரிட்டன்காரர்களிடமிருந்து விடுதலை பெறமுன்னர் நிகழ்ந்த சம்பவங்கள்.

சிலவேளைகளில் என் கதைகளை வர்ஜீனா வூல்ஃப் எடிட் செய்து கூடத் தருவார். ஆனால் நான் பங்குபற்றிய ப்ளூம்ஸ்பெரி அமைப்புப் பற்றி ஒருமுறை என்னிடம் யாரோ ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, 'இந்த அமைப்பு முற்போக்கானது. இது காலனித்துவ நீக்கல் பற்றிய ஆரம்ப உரையாடலுக்கு ஏற்ற அமைப்புத்தான். ஆனால் இந்த அறிவுஜீவிகளால் நீண்ட தொலைவுக்குப் பயணித்துப் போகமுடியாது' என்று சொன்னேன். இப்படிப் பேசியது வர்ஜினியாவுக்கும் அவரின் கணவருக்கும் அவ்வளவு பிடிக்கவில்லை என்பது தெரியும். அதற்காக உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா என்ன?

ஒருமுறை நான், எஸ்.பொ, ஏஜே என பறங்கித் தெருவில் இருக்கும் பிரீமியர் பாரில் மதுவருந்திக் கொண்டிருந்தபோது, எஸ்.பொ, ஏஜேவைப் பார்த்து, 'எப்போது நீங்கள் திருமணம் செய்யப் போகின்றீர்கள்?' எனக் கேட்டார். அதற்கு ஏஜே 'சாமுவேலைப் போன்ற ஒருவனே இந்த யாழ்ப்பாணச் சமூகத்துக்குப் போதும், நானும் யாரையேனும் கல்யாணம் செய்து மற்றவர் வாழ்வை பாழாக்கக் கூடாது' என்று என்னைச் சுட்டி நகைச்சுவையாகச் சொன்னார். நான் ஏஜேவைப் பார்த்து, ‘ஏஜே நீங்கள் ஏதோ ஒரு காதல்  தோல்வியால்தான் திருமணம் வேண்டாமென்று சொல்கின்றீர்கள் என்கின்றார்களே, உண்மையா? எனக் கேட்டேன். ஏஜே தன் இளந்தாடி நனைக்க பியரை அருந்திவிட்டு மெளனத்தின் ஆழத்துக்குப் போயிருந்தார்.

பதினான்கு வருடங்கள் இலண்டனில் கழித்துவிட்டு, எனது முப்பத்தேழாவது வயதில் நான் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பியிருந்தேன். எனக்குக் கல்யாணமோ என் நாற்பந்தைந்து வயதுக்குப் பிற்பாடுதான் நடந்தது. இதைப் பார்த்துவிட்டுத்தான் ஏஜே அப்படிச் சொல்லியிருக்க வேண்டும். எனக்கும் ஏஜேவுக்கும் ஒரு இருபது வயதுகள் வித்தியாசமாவது இருக்கும். ஆனால் நாங்கள் வயது வித்தியாசம் இல்லாமல் மிக நெருக்கமான நண்பர்களைப் போலப் பழகினோம்.

உங்களுக்கு முன் ஒரு விடயத்தை ஒத்துக்கொள்வதில் எனக்கு அவமானமில்லை. எனக்கு பெண்களைப் பார்த்து இரசிப்பதென்றால் கொள்ளைப் பிரியம். எனது மச்சான் கூட நகைச்சுவையாக பெண்களை இரசிப்பதைத் தவிர்ப்பதற்காக இவனை நாங்கள் அடிக்கடி வீட்டுக்குள் மறைத்து வைத்திருப்போம் என்று சொல்வான். அந்தளவுக்கு நான் அந்த விடயத்தில் பலவீனமாக இருந்தேன். எனக்கே இது அவ்வளவு நல்லதில்லை என்று தெரிந்தாலும் இதில் இருந்து வெளியேற முடிந்ததில்லை. ஒரு மலரை அதைத் தொந்தரவுபடுத்தாது அப்படியே இரசிப்பதில் என்ன தவறிருக்கின்றதோ தெரியவில்லை.

எனக்கு எழுதுவதும் வாசிப்பதும் என்னிடமிருந்து பிரிக்கமுடியாத கர்ணனின் கவசகுண்டலம் மாதிரி இருந்தது. அதனால் எனக்கு வக்கீல் வேலைக்குப் போவதில் அவ்வளவாக விருப்பம் இருக்கவில்லை. மேலும் பகல் வேளைகளிலே நன்றாக மதுவை அருந்திவிட்டு எப்படி நீதிமன்றத்துக்குப் போவது? ஒருநாள் ஏதோ ஒரு சின்ன குற்றத்துக்காக நான் ஒரு வழக்கறிஞர் என்றும் பார்க்காது என்னைக் குற்றவாளிக் கூட்டில் ஏற்றிவிட்டனர். அதற்கு முன்னர்தான் கொஞ்சம் ‘பிறிமியர் பார்’ பக்கம் எட்டிப் பார்த்துவிட்டு வந்திருந்தேன்.

தீர்ப்பு வழங்கும் நீதிபதி வந்துவிட்டார். 'நீங்கள் செய்த குற்றம் என்ன?' என்று கேட்டபோது நான் ஷேக்ஸ்பியரின், வெனிஸ் நகரத்து வணிகனில் வரும், போர்ட்டரின் தனிமையுரையை 'The quality of mercy is not strain’d, /It droppeth as the gentle rain from heaven..” என முழுமையாகச் சொல்லத் தொடங்க, நீதிபதி தலையில் அடித்தபடி யார் இவன் என்று என்னைப் பார்த்துக் கேட்டார். நீதிமன்றத்தில் எனது வரலாற்றை மட்டுமில்லை, நீதிபதியாக இருந்த என் தந்தையாரின் பூர்வீகமும் சொல்லப்பட, 'அந்த நல்ல மனுசனுக்கு இப்படியொரு மகனா?' என்று அதிர்ச்சியடைந்தபடி, இன்னொருமுறை நீதிமன்றப் படி ஏறக்கூடாதென்று எச்சரித்து அனுப்பி வைத்திருந்தார்.


*

பார்வதி என்கின்ற ஓர் இந்துப்பிள்ளை புளியடிப் பாடசாலை விடுதியில் தங்கிப் படிக்கத் தொடங்குவார். அந்தப் பிள்ளைக்கு ஜீசஸின் உருவப்படத்தை விடுதி வார்டன் அங்கேதான் முதன்முதலில் அறிமுகப்படுத்துவார். 'ஜீசஸ் பாவிகளாகிய எங்களை இரட்சிப்பதற்கென உதித்தவர். எங்களைப் பாவங்களிலிருந்து மீட்பதற்காக அவர் சிலுவையில் மரித்தவர்' என்று சொல்லிவிட்டு, ''குழந்தையின் உலகந்தான் கடவுளின் ராஜ்ஜியம் என்று வார்டன் பார்வதியிடம் கூறுவார்.

அத்தோடு நிற்காமல் ஜீசஸிடந்தான் நீ இனி எப்போதும் போகவேண்டும், உனக்கு அவர்தான் அடைக்கலம் தருவாரென்று அந்த வார்டன் சொல்லியும் கொடுப்பார். பார்வதிக்கு எல்லாமே குழப்பமாக இருக்கும். ஒருவரிடம் அடைக்கலம் அடையவேண்டுமென்றால் அவரை நான் நேரில் சந்திக்க வேண்டுமே, எப்போது ஜீசஸ் பாடசாலைக்கு வருவார் என்று அந்தப் பிள்ளை அப்பாவித்தனமாய்க் கேட்கும். 'இதென்ன முட்டாள்தனம், ஒரு கிறிஸ்தவப் பிள்ளைக்கு இதெல்லாம் நன்கு தெரியும். நீ நல்லவிதமாக உனது பெற்றோரால் வளர்க்கப்படவில்லை' என்று வார்டன் திட்டுவார்.

பிள்ளைக்கு அதற்குப் பிறகும் சந்தேகம் தீராது. 'வார்டன் அக்கா, ஜீசஸ் கடவுளென்றால், அவரின் மனைவிகள் எங்கே? படத்தில் அவர்களைக் காணவில்லையே?' என்று அந்தப் பிள்ளை கேட்கும். 'என்னுடைய கர்த்தாவே, இப்படி கேட்டு மிகப்பெரும் தெய்வநிந்தனையை நீ செய்துவிட்டாய்' என்று அந்த வார்டன் ஜீசஸின் உருவப்படத்தின் முன் மண்டியிட்டு பாவமன்னிப்புக் கேட்கத் தொடங்குவார். இந்தக் கதையில் உள்ளோடும் நகைச்சுவை எனக்கு மிகப் பிடிக்கும் என்று ஒருநாள் எஸ்.பொ என்னுடைய 'முள்' கதையைச் சிலாகித்துப்  பேசினார்.

அந்தக் கதையின் தொடர்ச்சியில், 'நான் என்ன தவறு செய்தேனென்று தெரியவில்லையே, உங்கள் கடவுளுக்கு எத்தனை மனைவிகள் இருக்கின்றார்களென்று கேட்டது அவ்வளவு பெரும் குற்றமா? இதனை ஏன் கேட்டேனென்றால் எங்கள் கடவுளுக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றார்கள்' என்று அந்தப் பிள்ளை கேட்கும். அதற்கு விடுதி வார்டன் 'அது எந்தக் கடவுள்?' என்று வினாவுவார். 'வேறு யார்? எங்களின் முருகப் பெருமான்தான்' என்று அந்தப் பிள்ளை சொல்வதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும், இதில் சாமுவல் இரண்டு மதங்களையும் விமர்சனத்துக்குள்ளாக்கின்றார் என்று ஏஜே இந்தக் கதையை விவரித்துப் பேசியதும் எனக்கு நன்கு நினைவில் இருக்கின்றது.

எஸ்.பொவும், ஏஜேவும் என் கதைகளை என் முன்னிலையில் விதந்து பாராட்டியது கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், அவர்களின் எழுத்துக்கள் மீது ஆழ்ந்த மதிப்பு இருந்ததால், இதைவிட எந்த புகழாரமும் என் எழுத்துக்குத் தேவையில்லை என்ற மிதப்பு, அவர்கள் பேசியபோது எனக்குள் செம்மதுவைப் போல ஊறியது என்பதுவும் உண்மைதான்.

இலங்கை ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை அடையாத காலத்தில், இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது இங்கிலாந்தில் நான் வசித்திருந்தேன். அங்கிருந்து வெள்ளைக்காரர்கள் பார்த்த காலனித்துவ இலங்கையையோ அல்லது இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் 'நாசூக்காய்’ சொன்ன உயர்குடிகளின் கதைகளையோ ஒருபோதும் நான் எழுத விரும்பவில்லை. இப்போது பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் விதந்து பேசிக் கொண்டிருக்கும் என் கதையான ''தேர்ந்த ஒப்பாரி வைப்பவர்களில்’ ஆதிக்கச்சாதியின் திமிரைத்தான் அப்போதே கேள்வி கேட்டு எழுதியிருந்திருப்பேன்.

ஒருமுறை இளங்கோ கூட கேட்டான். 'நான் ஒன்பதாம் வகுப்பில் ஆங்கில இலக்கியம் படிக்கும்போது ஆர்.கே.நாராயணனின் 'தக்கூரின் கிணறு' என்றொரு கதையை பாடப்புத்தகத்தில் படித்தேன். அதைவிட நெருக்கமான, நமது மண்ணில் நிகழும் சாதிக் கொடுமையை இந்த "தேர்ந்த ஒப்பாரி வைப்பவர்கள்" கதை தருகின்றதே, ஏன் இவர்கள் இதைச் சேர்க்கவில்லை' என்று கேட்டான். ‘இந்தக் கதையைப் பாடத்தில் வைத்தால், யாழ்ப்பாணத்தவர்களின் பெருமையை நினைத்து நாடு முழுதும் சிரித்துவிடுமே, அந்த அவமானத்தில் என் கதையைச் சேர்க்கவில்லையோ தெரியாது' என்று சொல்லிப் புன்னகைத்தேன்.

இளங்கோ, எனது எழுத்து வாழ்க்கை இரண்டு தமிழ் எழுத்தாளர்களைத் தனக்கு நினைவுபடுத்துகிறது என்பான். நான் எழுதிய முப்பது கதைகளால், ஒருவகையில் தமிழில் இருபத்து நான்கு கதைகளை மட்டுமே எழுதிய மெளனி தனக்கு ஞாபகத்துக்கு வருகின்றதென்பான் அவன். அதுபோலவே தனது சொந்த நாடு திரும்பியபின் சிறந்த இரண்டு படைப்புக்களை எழுதிவிட்டு பிறகு வேறெதுவும் எழுதாது மறைந்து போன ப.சிங்காரத்தைப் போல, நானும் யாழ்ப்பாணம் திரும்பி கொஞ்சக் காலம் எழுதிவிட்டு பின்னர் ஒன்றுமே எழுதாமல் உறங்குநிலைக்குப் போனதும் ஒன்றெனப் போல இருக்கின்றது என்பான்.

உண்மையில் எனக்கு தமிழில் அவ்வளவான விரிந்த வாசிப்பு இல்லை. ஒருமுறை வாசகர் ஒருவரோடு நான் மதுவருந்திக் கொண்டிருந்தபோது, 'நீங்கள் திருவள்ளுவரைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?' எனக் கேட்டேன். பிறகு 'தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்/தோன்றலின் தோன்றாமை நன்று' என்ற குறளைச் சொல்லி பொருள் என்னவெனக் கேட்டேன். அதன் பொருளை அந்த வாசகர் விரித்துச் சொன்னபோது, நான் 'இக்குறள் நாஸிசத்தை அல்லவா பிரச்சாரம் செய்கிறது. ஹிட்லருக்கும், வள்ளுவருக்கும் இந்த விடயத்தில் பெரிதாக வித்தியாசமில்லை' என்று சொன்னேன். அந்த வாசகருக்கு அது அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் நான் இரண்டாம் உலகமகாயுத்தத்தை நேரடியாக இங்கிலாந்திலிருந்து பார்த்தவன். ஒரு தனிப்பட்ட மனிதனான ஹிட்லரின் பேராசையால் எத்தனை இலட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக இறந்திருக்கின்றார்கள். புகழ் என்பதே மாயை. அது ஒருவரின் தன்முனைப்பை இன்னுமின்னும் உச்சத்தில் கொண்டுபோய் இறுதியில் பாதாளத்தில் தள்ளிவிடும் என்பதற்கு வரலாற்றில் எத்தனையோ பேர் உதாரணங்களாக இருக்கின்றனர் அல்லவா?

இந்த வாசகரை நான் முதன்முதலில் சந்தித்ததும் நினைவில் இருக்கிறது. ஏஜேயும், ஜீவாவும் பக்கத்தில் இருக்க, ஒரு சுவரில் காலை வைத்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். ஜீவாதான், வருகின்றவர் சாமுவேல், காலை ஒழுங்காக எடுத்து விட்டிட்டு, சிகரெட்டைத் தூர எறி என்று சொல்லியிருக்கின்றார். இவன் வேண்டா வெறுப்பாக இரண்டையும் செய்வதை நான் தூரத்தில் வரும்போதே அவதானித்தேன். எனக்கு வெளியில் எங்கு போவதென்றாலும் நேர்த்தியாக ஆடை அணிந்து போகவேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். அதிலும் யாழ்ப்பாண வெக்கைக்கு தொடர்பேயில்லாத ஒரு ஸ்காப்ஃவை என் கழுத்தில் சுற்றிக் கொண்டுதான் வெளிக்கிடுவேன்.

அன்று யாழ் நகரசபை முன்றலில் ஏதோ கார்னிவல் நடப்பதாய் விளம்பரம் வந்திருந்தது. நாங்கள் அனைவரும் இதற்காகத்தான் போய்க் கொண்டிருந்தோம். அந்த மக்கள் திரளுக்குள் தொலைந்துபோகாமல் நாங்கள் ஓரமாக நடைபாதையின் அருகில் ஒதுங்கி நின்றோம். நான் வழமை போல, போகின்ற, வருகின்ற பெண்களை கண்களால் ஆராதித்தபடி இருந்தேன்.  சட்டென்று, 'புனிதரோ, அல்லாதவரோ அவர்களுக்கும் ஓர் இதயம் இருக்கின்றது என்கின்ற விசுவாசம் நம்மவர்களுக்கு இருக்குமானால் அழகினை இரசிப்பதில் தவறொன்றுமில்லை' என்று சொன்னேன். 'உண்மைதான், அப்படி இரசிக்கலாம், ஆனால் அது பெண்களுக்கு இடைஞ்சல் கொடுப்பதாக இருக்கக் கூடாது' என்று அந்த வாசகர் சொன்னார். 'ஆ, அதேதான், சரியாகச் சொன்னீர்கள், நீங்கள்தான் என்னை நன்றாகப் புரிந்துகொண்ட வாசகர்' என்று அவரின் முதுகைத் தட்டி நான் பாராட்டினேன்.

*

எனது கடைசி பத்து வருடங்கள் மிகக் கடுமையாக இருந்தது. நான் குணப்படுத்த முடியாத ஒரு நோயோடு போராட வேண்டியிருந்தது. ஏஜே தனித்து வாழ்ந்ததால், அவரை எப்படி கிருஷ்ணகுமார்  குடும்பம் கைவிடாது காத்து நின்றதோ, அப்படிதான் என்னையும் என் மனைவி வைத்துக் காப்பாற்றினார். நான் திருமணம் ஆனவுடன் யாழ் நகரை விட்டு இன்னொரு தொலைவான நகருக்கு இடம்பெயர்ந்திருந்தேன். எங்கள் பூர்விக வேம்படிப் பாடசாலை அருகில் இருந்த -  என் கதைகளில் எதற்கு வீண் பிரச்சினை என்று இதைப் புளியடிப் பாடசாலை என்று மாற்றியிருப்பேன் - வீட்டை விட்டு, மனைவி கட்டிய வீட்டில் நாங்கள் புதுமனை புகுந்திருந்தோம். அங்கே நண்பர்கள் வருவது குறைவாக இருக்கும். பக்கத்தில் நிம்மதியாக இருந்து மது அருந்துவதற்குப் பெரிதாக நல்லதொரு பாரும் இருக்கவில்லை.

அத்தோடு என் கண்களின் பார்வையும் மங்கி ஒருவித இருளுக்குள் நான் அமிழத் தொடங்கியிருந்தேன். பார்வையை முற்றாக இழக்க முன்னர், எப்படியாவது என் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பை வெளியிட வேண்டுமென்று தொகுக்கப்படாத கதைகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டிருந்தேன்.

என் உடல்நிலை அறிந்து ஏஜேயும் ஜீவாவும் ஒருநாள் வந்திருந்தனர். இரண்டாவது தொகுப்பை வெளியிட இரண்டு பேரும் தங்களால் இயன்றளவு உதவுவதாக உறுதியளித்தனர். என் மனைவியும் அதை விரைவில் வெளியிடவேண்டும் என்று விரும்பியிருந்தார். புத்தகச் செலவை எப்படியேனும் மனைவி ஏற்றுக்கொள்கின்றேன் என்றபோதும், நான் தான் ஜீவாவிடம், 'இந்த வீட்டுக்காக வாங்கிய கடனை மட்டுமில்லை எனக்கான மருத்துவச் செலவுகளையும் அவள்தான் அடைத்துக் கொண்டிருக்கின்றாள், பாவம் அவள்' என்று சொன்னேன். கடைசியில் என் புதுக் கதைகளின் தொகுப்பு வந்தபோது, அதை என் மனைவிக்குத்தான் சமர்ப்பித்திருந்தேன்.

ஒருமுறை கொழும்பிலிருந்து வெளிவரும் ஏதோ ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் யாரோ  என்னைப் பற்றி எழுதியபோது, 'சாமுவேலுக்கு இப்போது கிறுக்குப் பிடித்துவிட்டது' என்று எழுதியிருந்தார்கள். நான் அதை வாசித்தவுடன் சிரித்துவிட்டேன். 'இப்போதுதான் கிறுக்குப் பிடித்தது என்பது தவறு, எப்போதுமே நான் கிறுக்கன்' என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். இல்லாவிட்டால் ஒருவன் இங்கிலாந்தில் சட்டத்தில் பட்டம் பெற்றபோதும், எழுத்துத்தான் வாழ்க்கையில் பெரும் விடுதலை என்று எல்லாவற்றையும் துறந்து எழுதப் போயிருப்பானா? நல்லதொரு வாழ்க்கை வேண்டுமென்றால் இங்கிலாந்திலேயே தங்கியிருக்க மாட்டேனா. இலங்கைக்கு வந்த பிறகாவது ஒழுங்காக வழக்கறிஞராகப் பணியாற்றி மற்றவர்களைப் போல ஓர் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்திருக்க மாட்டேனா என்ன?

ஆனால் பாருங்கள். நானொரு வழக்கறிஞராகவோ, இல்லை அத்தொழிலில் தேர்ந்த என் தந்தையைப் போல ஒரு நீதிபதியாகக் கூட வந்திருக்கலாம். அப்படி வந்திருந்தால் நீங்கள் என்னை நினைவில் வைத்திருப்பீர்களா? நான் இறந்து ஒரு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொருத்தன் என்னை ஞாபகம் வைத்து ஒரு கதையை நனவிடை உத்தியில் எழுதிக் கொண்டிருப்பானா?

எழுத்துத்தானே என்னை இன்னும் உயிர்ப்புடன் காலத்தோடு கரைந்துபோகாது வைத்திருக்கின்றது. அதில் நான் தோற்றுப்போனவனாக, தொடர்ச்சியாக எழுதாதவனாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் முப்பது கதைகள் மட்டும் எழுதிய ஒருவனை இந்தச் சமூகம் மறக்காமல் அவன் பிறந்த நூறாண்டுக்குப் பிறகு ஞாபகத்தில் வைத்திருப்பது வியப்பானதுதானே.

இறுதியில் என் நேசத்துக்குரிய ஏஜே எனக்காக எழுதிய அஞ்சலி வார்த்தைகளோடு முடிக்கலாமென நினைக்கின்றேன். 'சாமுவேல் செய்த தவறு அவர் தாயகம் திரும்பி வந்ததுதான் என்று நான் சிலவேளைகளில் நினைப்பதுண்டு. ஆனால் தன்னல நோக்கோடு பார்க்கையில் அத்'தவறு' எங்களுக்கு எவ்வளவு ஆதாயமாயிற்று' என்று சொல்லியிருப்பார். ஏஜே ஒரு புனிதமான, யாரையும் காயப்படுத்தாத ஆத்மா. அவனின் இந்தச் சொற்ப வார்த்தைகள் நான் கல்லறைக்குள் நிம்மதியாக உறங்கப் போதும்.

என் கதைகளில் இலங்கையைப் பின்னணியாக வைத்த கதைகளை விட, இங்கிலாந்தைப் பின்புலமாக வைத்து எழுதிய கதைகள்தான் தனக்கு அதிகம் பிடிக்கும் என்கின்ற இளங்கோவிடம், 'சாமுவேலிடம் உனக்கு அதிகம் பிடித்தது' என்னவெனக் கேட்டால், உடனேயே 'வேறென்ன, பெண்களை ஆறவமர இரசிக்கும் அவரின் அந்த அழகியல்தான் என்னை அதிகம் கவர்ந்தது’ என்று ஒருகணம் கூட தயங்காமல் சொல்வான். என்னை இவ்வாறாக நினைவு கொண்டால் கூட போதுமானதுதான்.

சிலவேளைகளில் இந்த வாழ்க்கை என்பது சின்னஞ்சிறு அழகிய தருணங்களின் கலவையால் காவியச் சுவையின் உச்சத்தை அடையக் கூடியது என்பதைக் கண்டிருப்பீர்கள். அதைத்தான் என் எழுத்துக்களின் உள்ளே ஓடும் நதியாக மறைத்தும் வைத்திருந்திருக்கின்றேன். ஒரு காடோ காதலோ எந்தக் கணத்தில் முழுதாக மலர்கின்றது என்பது யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் அந்த முகிழ்தல் என்பது ஓர் அற்புதம். நம் அகமெங்கும் அந்த உணர்வுப்பிரகாரம் இதழ்களாய் விரிக்கும் அனுபவத்துக்காகத்தான் நாங்கள் மனிதராகப் பிறந்து வருகின்றோமோ என்று கூட நான் சிலவேளைகளில் நினைப்பதுண்டு.

அரை நூற்றாண்டுக்கு முன்பாக இவ்வுலக வாழ்விலிருந்து நீங்கிப் போன ஒருவனின் கதையை அல்லவா நீங்கள் இப்போது வாசித்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் வாழ்க்கையில் அகமகிழும் தருணங்கள் இன்னுமின்னும் நிறையட்டும். நீங்கள் வாழ்கின்ற நிலத்து மழையாகவோ அல்லது பனியாகவோ என் ஆசிர்வாதங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன். நனைய மறந்துவிடாதீர்கள். அந்தத் துளிகளில் இருப்பவை என்னைப் போன்று வாழ்ந்து முடித்தவர்களின் சின்னஞ்சிறு ஞாபகங்கள்.

***

நன்றி: 'காலம்' இதழ் - 63
ஓவியம்: Soorya TK

 

கார்காலக் குறிப்புகள் - 149

Friday, April 17, 2026

 

தம்பி என்று ஆங்கில இலக்கிய உலகில் அழைக்கப்பட்ட தம்பிமுத்துவைப் பற்றி (Thurairajah Tambimuttu) கடந்த ஒரு வாரமாக தேடித்தேடி வாசித்துக் கொண்டிருந்தேன். தம்பிமுத்துவைப் பற்றி ஏற்கனவே அறிந்திருக்கின்றேன்/வாசித்திருக்கின்றேன் என்றபோதும் அவரைப் பற்றி பிறரின் அபிப்பிராயங்களை அறிவது என்பது என்னளவில் சுவாரசியமாக இருந்தது.

 
 

அப்படி வாசித்துக் கொண்டிருந்தபோது தம்பிமுத்துவின் மனைவி ஓரிடத்தில் 'Time Magazine தம்பியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார்கள். அதற்காக எங்கள் வீட்டுக்கு வந்து அறுபதுக்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்தார்கள், ஆனால் ஒரு புகைப்படம் மட்டும் அச்சில் வந்திருந்தது' என்று குறிப்பிட்டிருந்தார். என்னால் தம்பிமுத்துவின் அந்தக் கட்டுரையை கண்டுபிடிக்க முடிந்தபோதும், தம்பிமுத்துவினதும் மனைவியினதும் எந்தப் புகைப்படம் பிரசுரமானது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்காக Time இன்  50களின் இதழ்களைத் தேடிப் பார்ப்பது கூட ஆர்வமூட்டுவதாக இருந்தது. இறுதியில் ஒருமாதிரியாக அந்தப் புகைப்படத்தைக் கண்டுபிடித்துவிட்டதில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

இப்போதுகூட இலக்கியவாதி ஒருவரின் புகைப்படத்துடன் அவரைப் பற்றிய கட்டுரை வருவதென்பது Times இல் அரிதான விடயம். ஐம்பதுகளில் ஓர் ஈழத்துப் படைப்பாளி அவரின் புகைப்படத்தோடு பிரசுரமாவது என்பது எப்படிப்பட்ட ஓரு சாதனை.

*

தம்பிமுத்துவுக்கு ரி.எஸ்.எலியட் எழுதிய கடிதங்களில் ஒன்று:

Dear Tambimuttu,

I am writing to hear whether you have yet received the permissions from the remaining authors on your list. Meanwhile I have had a revised version of poems from Miss Chamberlain and some alternative poems which Miss Lynette Roberts wishes to substitute for those selected. I should be glad if you could come in soon and have a talk with me about the final arrangements for the anthology and if you would ring up my secretary and arrange a time to see me some day next week.
With best wishes,
Yours sincerely,
T. S. Eliot

அதேபோல தம்பிமுத்து இறந்தபோது New York Times  நீண்டதொரு அஞ்சலிக் குறிப்பொன்றை வெளியிட்டு 1983இல் அவரைக் கெளரவப்படுத்தியது.

*

ஈழத்தமிழர்களாகிய எமக்கு தமிழில் ஓர் நீண்ட இலக்கியப் பராம்பரியம் இருப்பதுபோல, ஆங்கிலத்திலும் தம்பிமுத்து, அழகு சுப்பிரமணியம் என்று தொடங்கி அண்மையில் மான் புக்கர் விருதுக்கு குறும்பட்டியலில் ஐவரில் ஒன்றாக இடம்பெற்ற அனுக் அருட்பிரகாசம் வரை ஒரு செழுமையான மரபு இருக்கின்றது. அத்தோடு  ஷ்யாம் செல்வதுரை, சங்கரி சந்திரன், பாலா சாரோன், வி.வி.கணேசானந்தன் என்று உயரிய இலக்கிய விருதுகளைப் பெற்ற எழுத்தாளர் பட்டியலும் நமக்கிருப்பதை மறந்துவிடக்கூடாது.

பிற அடையாளங்களில் அல்ல,  இந்த 'Lineage' இல், ஒரு துளி நீட்சியாக நின்று எழுதுவது மட்டுமே எனக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது,.

*

கார்காலக் குறிப்புகள் - 148

Wednesday, April 15, 2026

காதலுக்கான முடிதுறப்பும், நாஸிக்களின் மீதான காதலும்!
***


என்னுடைய பத்தோ,பதினொராவதோ வயதில் மஹாகவியின் 'கோடை' பாநாடகத்தைப் பார்த்திருந்தேன். அது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால், நகருக்குச் சற்றுத் தொலைவிலிருந்த எங்கள் ஊர்ப் பாடசாலையில் நிகழ்ந்திருந்தது.

மஹாகவி உருத்திரமூர்த்தி தனது நாற்பத்து நான்காவது வயதில் காலமாகியிருந்தவர் (1927-1971). எங்கள் ஊர்ப் பாடசாலையிலே படித்தவர் என்பதாலோ என்னவோ 'கோடை' நாடகத்துக்கு இரண்டு காட்சிகள் அன்று நடத்தப்பட்டன. ஒன்று எங்களைப் போன்ற பாடசாலை மாணவர்க்குரியது. மற்றது பொதுப் பார்வையாளர்க்குரியது.

எங்கள் வீட்டையும், பாடசாலை மதிலையும் பிரிப்பது ஒரு குச்சொழுங்கைதான். நான் பாடசாலை நேரத்தில்  'கோடை'யின் முதல்காட்சியைப் பார்த்துவிட்டு, பிறகு மாலையில் நடந்த மற்றக்காட்சியையும், வீடு பக்கத்திலிருந்ததால் பார்த்தேன். 



கதை மேள/நாதஸ்வரக் கலைஞர்களின் பின்னணியில் நிகழ்வது. நாயனக்கார ஆசான் மாணிக்கத்திடம் சிஷ்யனாக சோமு இருக்கின்றார். ஆசான் மாணிக்கத்தின் மகளான கமலிக்கு, சோமு மீது காதல். அந்தக் காதல் ஏற்றத்தாழ்வுகளைத் தாண்டி நிகழ்கின்றதா இல்லையா என்பதுதான் நாடகம்.

எனக்கு அந்த வயதில் இப்போது 'கறைபட்ட மனசு' வந்திருக்கவில்லை. ஏன் இந்தக் கதையின் ஆழம் கூட அப்போது விளங்கவில்லை. கமலியின் குறும்புக்கார தம்பியாக வரும் சிறுவன் கணேசு மீதுதான் அந்தப் பத்து வயதில் முழுக்கவனமும் இருந்தது.  அவன் சும்மா கிடக்கும் தவிலை எடுத்து அடிப்பான். அக்கா 'சைட்' அடிக்கும் சோமுவோடு தனவுவான். அவனது சேஷ்டைகள் எனக்கு அந்த வயதில் நான் வாசித்த குட்டிக்குரங்கு கபிஷை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது.

நாடகத்தில், சிறுவன் கணேசு  படித்துக் கொண்டிருக்கும்போது (கதை 1937இல் நிகழ்கிறது), பாடப்புத்தகத்தில் 'இங்கிலாந்து தேசத்தில் எங்கள் மன்னர் இருக்கிறார். இவரது பேர் ஐந்தாம் யோர்ச்சாம்' என்று வாசித்துவிட்டு, 'என்ன இதெல்லாம் பழசாய் இருக்கே? அம்மன்னவர் செத்து மறு ஆளும் வந்து, போய்விட்டாரே! என்ன விசர்ப் புத்தகம் இது ?' என்று கூறி, ஒரு பாட்டைப் பாடத் தொடங்குவான்.

அது:
"எட்டாம் எற்வேட்டை எனக்குத் தெரியும்! அவர்-
முடிதுறந்தாரே! மன்னர்
முடிதுறந்தாரே! சிம்சன்
உடன் பறந்தாரே!
ஆயிரத்து எண்ணூற்றுத் தொண்ணுற்றைந்திலே
அவதரித்த எங்கள் வெள்ளை அரச வள்ளலே
ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்தாறிலே
அரசை விட்டு மணமுடித்தார் - அதுவும் நல்லதே!
முடிதுறந்தாரே! சிம்சன்
உடன் பறந்தாரே!"

எனக்கு 'கோடை' நாடகத்தில் மிகவும் நினைவில் நின்ற பாடலாக இதுவே நெடுங்காலத்துக்கு நின்றது. அந்தச் சிறுவன் இந்த பாட்டைப் பாடி  சிறப்பாக நடித்த விடயம் மட்டுமில்லை, ஒரு அரசனாக முடிசூட இருந்த இங்கிலாந்து இளவரசன் காதலுக்காக முடி துறந்திருக்கின்றானே என்ற வரலாறு இதில் இருந்ததும் சுவாரசியமாக இருந்தது.

நான் 'முடிதுறந்தானே மன்னன் முடிதுறந்தானே எட்டாம் எட்வேர்ட் முடிதுறந்தானே' என்று அந்தக் காலத்தில் பாடிக் கொண்டிருந்தது ஞாபகத்தில் இருக்கின்றது. இந்தப் பாடலில் வந்த சிம்ப்சன் தான் அவரின் காதலி (பின்னாளில் மனைவி) என்றறிய எனக்கு மேலும் சில வருடங்கள் எடுத்தது வேறுவிடயம்.

அன்றைய ஐக்கிய இராச்சியத்தில் அரசனாக வரவேண்டிய எட்டாம் எட்வேர்ட், அமெரிக்கப் பெண்ணான  சிம்ப்சன் (Wallis Simpson) மீது காதல்வயப்படுகின்றார். ஓர் அரசன் இன்னொரு அரச தகுதியுள்ள பெண்ணெடுப்பதே வழமையாக இருந்த காலத்தில் அதற்கு எவ்விதப் பொருத்தமும் இல்லாத சிம்ப்சனை எட்வேர்ட் காதலித்தது மட்டுமின்றி, சிம்ப்சன் ஏற்கனவே திருமணமாகி இருந்ததுதான் இன்னும் சிக்கலாக இருந்தது.

சிம்ப்சன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகி, இரண்டாம் திருமணம் விவாகரத்துக்குப் போய்க் கொண்டிருந்தகாலத்தில் எட்வேர்ட் சிம்ப்சன் மீதான காதலில் விழுந்ததார். ஒரு முடிக்குரிய அரசர் இப்படி திருமணமான பெண்ணை மீண்டும் திருமணம் செய்வது என்பதற்கு அரசவிதிகளில் நடைமுறை இல்லை.

சட்டென்று எட்வேர்ட்டின் தகப்பனும் அடுத்த முடிசூட்டவேண்டியவர் எட்வேர்ட் இருக்கும்போது, பிரித்தானியா அவருக்கு மூன்று தெரிவுகளைக் கொடுத்தன.

(1) காதலி சிம்ப்சனைக் கைவிட்டு முடிசூடுவது
(2) அன்று இருந்த இங்கிலாந்து பாராளுமன்றம், அவர் அரசராக இருக்கும் கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டிஷ் பேரரசு அரசோச்சிய இந்தியா, இலங்கை  நாடுகளின் விருப்புக்கெதிராக காதலி சிம்பசனை திருமணம் செய்தல். இதனால் இங்கிலாந்துப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீள தேர்தல் நடைபெறும்.
(3) முடிக்குரிய வாரிசாக இருப்பதை கைவிடுதல் (Abdication)

நமது ஆள் இலேசுப்பட்ட ஆளா என்ன? முடியைத் துறந்து துறவறத்துக்குப் போன இளங்கோவடிகள் போல, காதலில்தான் மோட்சம் இருக்கின்றதென்று முடியைத் துறந்த காதலி சிம்ப்சனைக் கைபிடித்தார்.

இப்படி அன்றைய கால ரோமியோ-ஜூலியட், லைலா-மஜ்னு போல நாம் நவீன காதலுக்கு எட்வேர்ட் -சிம்ப்சன் காதலை உதாரணம் சொல்லலாம் என்றாலும், எட்வேர்க்கு நமக்கு அன்று சொல்லப்படாத இன்னொரு இருண்ட பக்கமும் இருக்கின்றது.

அது எட்வேர்ட் தீவிர நாஸி ஆதரவாளராக இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது இருந்ததாகும்.

எட்வேர்ட் இப்படி காதலின் பொருட்டு தனது அரச குடும்பத்தாரால் பழிவாங்கப்பட்டார் என்ற கோபத்தாலோ அல்லது அதற்கு முன்னரோ அவருக்கு நாஸிகள் மீது காதல் வந்ததா என்று சரியாக கண்டுபிடிக்க முடியவில்லையெனினும், அவர் முடியைத் துறந்தபின் 1937 இல் ஹிட்லரைப் போய் ஜேர்மனியில் சந்தித்திருக்கின்றார். நாஸிகளின் அணிவகுப்பை ஏற்று அந்தப் பிரபல்ய ஹிட்லர் சல்யூட்டும் அடித்திருக்கின்றார்.

இது இங்கிலாந்து ஜேர்மனியோடு போருக்குப் போவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருந்தாலும், பிறகு நடந்தவைகள்தான் இன்னும் சுவாரசியமானவை.

*

இங்கிலாந்து ஜேர்மனியோடு போரைப் பிரகடனப்படுத்தியபோது, எட்வேர்ட் தனது குரலில் ஜேர்மனியோடு நாம் சமாதானத்துக்குப் போகவேண்டும் என்று பதிவுசெய்து பிபிஸியில் ஒலிபரப்ப அனுப்பியிருக்கின்றார். பிபிஸி அதை ஒலிபரப்பக்கூடாது என்று அடிக்கோடிட்டு தமது ஆவணகத்தில் சேகரித்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

 


எட்வேர்ட் முடிதுறந்தபின் பிரான்சில் வசிக்கத் தொடங்கியவர் 2ம் உலகப். போர் தொடங்கியபின் அவர் தன்னையும் இங்கிலாந்து இராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று கேட்டு இணைந்திருக்கின்றார். இன்றைக்கு கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களின்படி எட்வேர்ட் கொடுத்த இரகசிய தகவல்களின்படிதான் இங்கிலாந்து இராணுவம் குறித்த நிறையத் தகவல்கள் ஹிட்லருக்குப் போயிருப்பது  தெரிந்திருக்கின்றது. முக்கியமாக நேசநாடுகள் பெரும் இழப்புக்களைச் சந்தித்த Dunkirk இல் எட்வேர்ட் கொடுத்த தகவல்களால்தான் ஜேர்மனி நேசநாடுகளின் தாக்குதல்களை முற்கூட்டியதாக அறிந்ததாகச் சொல்லப்படுகின்றது.

இப்படி எட்வேர்ட் உதவியதால், அவரின் பிரான்ஸ் அரண்மனைகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாதென்று பிரான்ஸை ஜேர்மனி கைப்பற்றியபோது நாஸிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. இதைவிட அதிர்ச்சியான இன்னொருவிடயம். யுத்தத்தால் உலகமே பட்டினிக்குள் போய்க்கொண்டிருந்தபோது, எட்வேர்ட் பின்னாளில் லிஸ்பனில் இருந்தபோது நாஸிக்களே அவருக்கும் சிம்ப்சனுக்குமான உணவுப்பொருட்களை அனுப்பியதாகத் தெரிய வந்துள்ளன. அத்தோடு சமகாலத்தில் ஈரானில் போரைத் தொடங்கிவிட்டு சொகுசாக கோல்ஃப் விளையாடும் டிரம்ப் போல, எட்வேர்ட்டும் ஒருபக்கம் யுத்தம் நடக்கும்போது கோல்ஃப் ஆட்டம்,  இரவு விருந்துகள் என்று ஆடம்பரமாக வாழ்ந்தும் கொண்டிருந்திருக்கின்றார்.

எட்வேர்ட் தனக்குள் ஜேர்மனிய இரத்தமே ஓடியது என்று எண்ணவும் தொடங்கியிருந்ததவர். ஒருகட்டத்தில் 'இங்கிலாந்தைப் பணிய வைக்கவேண்டுமென்றால், நீங்கள் இன்னும் விமானத் தாக்குதலை பக்கிங்காம் அரண்மணை உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிரமாக நடத்தவேண்டுமென' நாஸிகளுக்கு கடிதமும் எழுதியிருக்கின்றார்.

எட்வேர்ட் எழுதிய கடிதங்களை, அவர் லிஸ்பனில் இருந்த ஜேர்மனியத் தூதராலயம் ஊடு அனுப்பிய தந்திகளை, நேசப்படைகள் ஜேர்மனியைக் கைப்பற்றியபோது கண்டெடுத்த ஆவணங்களில் இருந்து வெளிவந்திருக்கின்றது. இந்த முக்கிய ஆவணங்களை ஜேர்மனியர்கள் யுத்தத்தின் முடிவில் அழிப்பார்கள் என்றே நினைத்திருக்கின்றனர். ஆனால் காலம் அதைக் கைப்பற்றி கவனமாக வைத்திருந்திருக்கின்றது.

எட்வேர்ட்டின் இந்த நாஸிக்காதல் இங்கிலாந்துக்காரருக்கு தெரியாமலில்லை. ஆனால் அவர் அரசபரம்பரைக்காரயாயிற்றே, எளிதில் அவரைக் கைவிடவும் முடியாது. அப்போதைய பிரதமர் வின்ஸன்ட் சேர்ச்சில் ஒருமுறை  இப்படியே நாஸில்காதலில் இருந்தால் எட்வேர்ட் மீது இராணுவத்தின் court-martial பிரயோகிக்கப்படுமென்று எச்சரித்ததும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அரசர்களின் வழக்கில் அங்கே பிரச்சினைக்குரிய குடும்ப உறுப்பினர்களை நாடு கடத்துவதுதானே வழமையாக இருந்தது. அப்படி வட இந்தியாவில் துஷ்டனாக இருந்த விஜயனை படகிலேற்றி அனுப்பியததால்தானே இலங்கையில் நாமெல்லாம் இப்போதுவரை கஷ்டப்பட வேண்டியிருக்கின்றது. அப்படித்தான் நாஸிக்காதலர் எட்வேர்டையும் இப்படியே ஐரோப்பாவுக்குள் வைத்திருந்தால் சிக்கல் என்று, தொலைதூரத்திலிருந்து பஹாமாஸிற்கு கவர்னர் ஜெனரலாக பதவி இறக்கி அனுப்பி வைத்து அவரின் கதையை இங்கிலாந்து அடக்கி வைத்தது.

அதன்பிறகு பஹாமாஸில் இருந்து பிரான்ஸில் எட்வேர்ட் இறக்கும்வரை வாழ்ந்தாலும், அவர் ஒருபோதும் இங்கிலாந்துக்குப் போய் வாழ விரும்பியதில்லை. அவர் அதன் பிறகும் ஆடம்பர வாழ்க்கையை பிரான்ஸ், அமெரிக்கா என்று வாழ்ந்திருக்கின்றார்.

நாஸிக்களின் ஆவணங்களில், நாங்கள் போர் தொடுக்கும்போது எட்வேர் மன்னனாக இருந்திருந்தால் இங்கிலாந்துடனான போர் எளிதில் வென்றிருக்க முடியும் என்று எழுதப்பட்டிருக்கின்றது. மேலும், நாஸிக்கள் இங்கிலாந்தை வென்றபின், அதை ஆளும் தகுதியுடய ஒருவராக எட்வேர்ட்டே பிரேரிக்கப்பட்டும் இருப்பதாகச் சொல்கின்றார்கள்.

அவர் இப்படியொரு நாஸிக்களின் தீவிர விசுவாசியாக, தனது நாடு/குடும்பம் அழிந்தால் கூட பரவாயில்லை, குண்டை வீசுக என்று கடிதம் எழுதி ஒரு 'பயங்கரவாதி'யாக இருந்தாலும், நல்லதொரு காதலனாகவே இருந்திருக்கின்றார் போலும். கடைசிவரை அவர் சிம்ப்சன் மீதான காதலில் அந்த திருமண வாழ்க்கையிலே இருந்து காலமாகியிருக்கின்றார்.

நான் சிறுவயதுகளில் பாடிய அதே பாடலைத் திரும்பப் பாடுவேன்,

'முடிதுறந்தாரே! மன்னர்
முடிதுறந்தாரே! சிம்சன்
உடன் பறந்தாரே!'

ஆனால் இத்துடன் இன்னொன்றைச் சேர்ப்பேன்.

'சிம்ப்சனைப் போல நாஸிக்களையும் காதலித்து
கடைசியில் நாசமாய்ப்  போனாரே
நம் எட்டாம் எட்வேர்ட் மன்னன்!'

***

 

கார்காலக் குறிப்புகள் - 147

Monday, April 13, 2026

 

பத்து வருடங்களுக்கு முன் எம்.டி.முத்துக்குமாரசுவாமியின் (எம்.டி.எம்)'நிலவொளி எனும் இரகசிய துணை'  வெளிவந்திருந்தது. அந்தத் தொகுப்பிலிருக்கும் கட்டுரைகள் சிலதைச் சேர்த்தும், வேறு புதிய பலதைச் சேர்த்தும் அண்மையில் வெளிவந்த தொகுப்புதான் எம்.டி.எம்மின் 'காட்டிலோர் பொந்தினில் வைத்தேன்'. இதில் நாற்பது கலை இலக்கிய கட்டுரைகள் இருக்கின்றன. திரைப்படங்கள் சார்ந்த ஒரு சில  கட்டுரைகளைத் தவிர்த்துப் பார்த்தால் மிகுதி அனைத்தும் எழுத்தாளர்களையும், அவர்களின் முக்கிய நூல்களையும் அறிமுகப்படுத்தும்/உசாவும் ஆக்கங்களென இத்தொகுப்பைச் சொல்லலாம்.

இன்றைக்கு தமிழில் முன்னெப்போதும் இல்லாதவளவுக்கு மொழிபெயர்ப்பு நூல்கள் வருகின்றபோதும், அவை பெரும்பாலும் புனைவு சார்ந்தே இருக்கின்றன. மேலும் தமிழ்ச் சிற்றிதழ் மரபு கிட்டத்தட்டவே மறைந்துபோய்விட்ட காலத்தில் சமகாலத்தில் உலக இலக்கியப்பரப்பில் நிகழும் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் ஆழமான கட்டுரைகள் அரிதாகவே வாசிக்கக் கிடைக்கின்றன. அப்படி எழுதப்படும் கட்டுரைகளையும் பெரும்பாலும் ஒற்றைப்படையாக 'இரசனை விமர்சனத்துக்குள்'  கொண்டுவந்து வரும் எத்தனங்களே இருக்கின்றன.


இந்த ஆபத்தை எம்.டி.எம், பாரதியார் குறித்த ஓர் உரையாடலில் '‘இரசனை விமர்சனம் என்பது சந்தைப் பொருளாதாரத்தின் அரசியலை அப்படியே இலக்கியத்திற்குள் கொண்டு வருகிற விமர்சன முறையாகும்’ என்று 'நிலவொளி எனும் இரகசிய துணை'யிலே எச்சரித்திருக்கின்றார். இந்த இரசனை விமர்சனம் மட்டுமில்லை,  வழக்கொழிந்த இலக்கிய விமர்சன முறைகளையும் தமிழுக்கு இப்போதுதான் புதிதாய்க் கண்டுபிடித்த பாவனையில் எழுதுகின்றனர். அதில் நம் 'இரசனை விமர்சனக் குழு' கண்டுபிடித்த ஒருவர் ஹெரால்ட் ப்ளூம்.
 

 
'யூத மத நூல்களில் கொடுக்கப்பட்ட மேதைகளுக்கான குணநலன்களை வைத்து ஷேக்ஸ்பியரும் மற்றவர்களும் மேதைகள் என ப்ளூம் விளக்குகிறாராம். பாயிண்ட் 1, பாயிண்ட் 2 என box checking  வேலையைச் செய்திருக்கிறார் ப்ளூம். ஷேக்ஸ்பியரின் மேதமை என்ன என்பது ப்ளூம் லிஸ்ட் இல்லாமலேயே நமக்குத் தெரியாதா என்ன? ப்ளூம் ஒரு கற்றுச் சொல்லி, சார்த்தர் அசல் சிந்தனையாளர். அசல் சிந்தனையாளர்கள் சிந்தனை முறையையே மாற்றுகிறார்கள்;புதுப்பிக்கிறார்கள். கற்றுச்சொல்லிகள் தண்டி தண்டியான புத்தகங்களினால் கலாசார மேலாண்மையை நிறுவுகிறார்கள் (ப. 94).' என எம்.டி.எம் எழுதுகின்றார்.

இதை அவர் எங்கே எழுதிச் செல்கின்றார் என்பதையும் பார்க்க வேண்டும். 'சார்த்தரின் No Exit நாடகத்தில் வரும்  Other is Hell ஏன் மிகவும் பிற்போக்கானது' என்ற கட்டுரையில் அதை விமர்சித்துவிட்டுத்தான் சார்த்தரின் மேதமையை அவரின் தத்துவச் சறுக்கலுக்கிடையில் வைத்து எம்.டி.எம் மதிப்பிடுகிறார். அப்படி சார்த்தர் சில இடங்களில் சறுக்கியிருந்தாலும், இந்த ஜெரால்ட் ப்ளூம் போன்றவர்களைப் போலவன்றி சார்த்தர் அசல் சிந்தனையாளரே என்று நிரூபிக்கவும் எம்.டி.எம் செய்கின்றார். இதைத்தான் அசலான வாசிப்புகளும், மதிப்பாய்வும் செய்யும்.

*

இந்த நூலிலிருக்கும் நாற்பது கட்டுரைகளில் முதன்மைப் படைப்பாளிகளைத் தவிர்த்து, எம்.டி.எம் அவற்றில் 'உப பாத்திரங்களாக' குறிப்பிடும் பிற எழுத்தாளர்களின் படைப்புக்களையும் நாம் தேடி நமது வாசிப்பை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் (நாம் இந்தளவு காலமாக எழுதுகின்றோம், இந்தளவு புத்தகங்களை வெளியிட்டிருக்கின்றோம்) ஒருபுறம் பிரகடனங்களை  வெளியிட்டு தம்மைத்தானே  சிறந்த எழுத்தாளர்கள் அறிவித்துக்கொள்ளும் புகழ் விரும்பிகளும், இன்னொருபுறம் தமது ஆசான்களின் நீண்டகால உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அசட்டைசெய்து தாங்களும் ஆசான்களாகிவிட்டோமென 'இந்த இலக்கியம் என் இரத்தத்தையே பலி கேட்கிறது' என அலட்டும் (முக்கியமாக யாழ்ப்பாண/புலம்பெயர்) கத்துக்குட்டிகளுக்கும் இடையில், நீண்ட வரலாறுடைய தமிழ் இலக்கியம் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. உலக இலக்கியப் பரிட்சயம் சிறிதும் இல்லாது, ஒரு சிலர் சொல்வதையே மனப்பாடம் செய்து கிணற்றுத்தவளைகளாக இருக்கும் இவர்களைப் பார்க்க உண்மையிலே கவலையாகத்தான் இருக்கிறது.  

பரவாயில்லை இன்னும் கற்றுக்கொள்ளவும், தன்முனைப்பின் உணர்கொம்புகளைச் சுருட்டிக் கொள்ளவும் சந்தர்ப்பம் இருக்கின்றது என்பதற்குத்தான், இப்படி 'காட்டிலோர் பொந்தினில் வைத்தேன்' போன்ற அல்புனைவு நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன, தயவுசெய்து கவனியுங்கள் எனச் சொல்கிறேன்.  உலக இலக்கியம் எங்கோ போய்க்கொண்டிருக்கும்போது நீங்கள் எவ்வளவு கட்டுப்பெட்டித்தனமாக 'இரசனை விமர்சனம்' மட்டுமே போதுமென இலக்கியத்தை அதன் வழிமட்டும் வாசிப்பது நியாயமா என்று கொஞ்சம் பரிசீலனை செய்யுங்களென அவர்களிடம் மன்றாட வேண்டியிருக்கின்றது.

இந்த நூலில் புத்தகங்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் எவ்வளவு முக்கியமானதோ அந்தளவுக்கு திரைப்படங்களைப் பற்றிய கட்டுரைகளும் வசீகரிப்பவை. நோர்வேஜிய நெறியாளாரான யோக்கிம் திரீயரின் 'The worst person in the world' திரைப்படத்தின் கட்டுரையில் எம்.டி.எம் பலமுறை சென்றிருந்தும் பிடிக்காத நோர்வே இந்தப் படத்தின் மூலம் வேறொரு பார்வையைத் தந்ததென்று ஆராய்கிறார். அதுபோல அப்பாஸ் கியரோஸ்டாமியின் 'The wind will carry us' குறித்த கட்டுரையை வாசித்தபோது, ஏற்கனவெ இத்திரைப்படத்தைப் பார்த்தபோதும், மீண்டும் இக்கட்டுரை நினைவுபடுத்தும் ஈரான்/குர்டிஷ் நிலப்பரப்பைப் பார்க்கும் உந்துதல் வந்து அத்திரைப்படத்தை மீளவும்  நான் பார்க்கத் தொடங்கியிருந்தேன்.

ஏற்கனவே வாசித்திருந்த கோபே அப்பேயின் 'மணற்குன்றுகளின் பெண்', ஜூலியா கிறிஸ்தவாவின் கவித்துவ மொழியில் புரட்சி' , காவபட்டாவின் 'நாவல்களை முன்வைத்து' போன்றவற்றை இன்னொருமுறை வாசித்தபோதும், அவை புத்துணர்ச்சி தருகின்ற ஆக்கங்களாகவே எனக்கு இருந்தன.

காஃப்காவின் பாதிப்பு எப்படி மார்க்வெஸின் படைப்புக்களில் இருந்தது என்பதை 'காலராக் காலத்தில் காதல்' நாவலை முன்வைத்து எம்.டி.எம் எழுதியிருப்பது கவனத்துக்குரியது. அதன் முடிவில் 'மார்க்வெஸின் நாவல்கள் தமிழுக்கு அறிமுகமாகி முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட பின்பு இப்போது பின்னோக்கிப் பார்க்கும் நான் காஃப்காவின் செல்வாக்கு மார்க்வெஸின் மேல் இருந்தது நமக்கு அறிமுக நிலையிலே தெரிய வந்திருந்தால் தமிழிலக்கியத்தின் போக்கு வேறு திசையில் சென்றிருக்குமோ என வியக்கின்றேன் (ப 41)' என எம்.டி.எம் எழுதியிருப்பது சுவாரசியமான உரையாடலுக்குரியது.

நானும் ஒரான் பாமுக்கின் அல்புனைவுக் கட்டுரைகளை வாசித்தபோது அவருக்கு ரஷ்ய பேரிலக்கியங்கள் (முக்கியமாக தால்ஸ்தயேவ்ஸ்கி) மீது பெரு மதிப்பிலிருந்தாலும், அவர் எப்படி அதன் பாதிப்புக்களிலிருந்து துருக்கிக்குரியதான தனித்துவமான நாவல்களை உருவாக்கினார் என்று வியப்பதுண்டு. நாம் தமிழில் ரஷ்யப் பேரிலக்கியங்களைப் பேசியவளவுக்கு அப்படி தமிழ்ச்சூழலுக்குரிய தனித்துவமான பேரிலக்கியங்களை அதன் பாதிப்பில் இருந்து கூட, உலக இலக்கியப் பரப்பில் வைத்துப் பேச  ஏன் இன்னும் உருவாக்கவில்லை என்று யோசித்திருக்கிறேன்.

எம்.டி.எம் எழுதிய 'நிலவொளி எனும் இரகசிய துணை' நூல் எனக்கு மிகப்பிடித்தமான நூல்களில் ஒன்றெனவும், எப்போது மனம் சோர்வுற்றாலும் அதை எடுத்து வாசிப்பதற்காக அருகிலேயே வைத்திருப்பேன் எனவும் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றேன். அதன் இன்னொரு நீட்சித்த வடிவமென 'காட்டிலோர் பொந்தினில் வைத்தேனை'யும்' நான் நினைவில் வைத்திருக்க இதில் அரிய பல ஆக்கங்கள் இருக்கின்றன என்பது மகிழ்ச்சி தருகின்றது.

***

 

கார்காலக் குறிப்புகள் - 146

Sunday, April 12, 2026

 

ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனின்  வாழ்வின் ஒரு காலகட்டத்தை விவரிக்கும் திரைப்படமான  'Springsteen: Deliver Me from Nowhere ஐ அண்மையில் பார்த்திருந்தேன். இது ஸ்பிரிங்ஸ்டீன் அவரது முதல் இசைக் கச்சேரிகளைப் பல்வேறு நகரங்களில் வெற்றிகரமாக நடத்திவிட்டு மிகுந்த சலிப்புடனும், சோர்வுடனும் திரும்புகின்ற காலத்தைப் பற்றியது. அவரது தயாரிப்பாளர்கள் இந்த வெற்றியின் சூட்டோடு சூட்டாக அடுத்த ஆல்பத்தைத் தயாரிக்கச் சொல்கின்றனர். ஆனால் அவரோ ஆரவாரத்தையும் புகழையும் தவிர்த்துவிட்டு அவரது சொந்த நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்குகின்றார். வீடு திரும்புதல் என்பது ஸ்பிரிங்ஸ்டீன் எளிதாக அமைவதில்லை. அவருக்கு அவரின் தந்தையார் தாய் மீது நிகழ்த்திய குடும்ப வன்முறைகள் நினைவுக்கு வருகின்றது. 
 
 

 
இவ்வாறு கடந்தகால உளவடுக்களோடும், தனிமையிலும் உழலும் ஸ்பிரிங்ஸ்டீன் தனது படுக்கையறையில் இருந்து மிகக் குறைந்த இசைக்கருவிகளை வைத்துப் புதிய பாடல்களை உருவாக்கின்றார். அவற்றை வழமைக்கு மாறாக ஆடியோ காஸெட்டுக்களில் பதிவு செய்துகொள்கிறார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு உணவகத்தில் வேலை செய்யும் பெண்ணோடு உறவு முகிழ்கிறது.
 
காஸெட்டுக்களில் பதிவு செய்யப்பட்ட பாடல்களை மேலும் இசைக்கருவிகளின் ஒலியைச் சேர்த்து ரெக்கார்டிங் நிலையத்தில் பதிவு செய்யும்போது ஸ்பிரிங்ஸ்டீனுக்கு அந்த வடிவம் பிடிக்கவில்லை.

எனவே எப்படி அவர் சாதாரண காஸெட்டுக்களில் பாடல்களைப் பதிவு செய்தாரோ அதன் வடிவத்திலே புதிய ஆல்பமாக வெளிவருகின்றது. அதுவே 1980களில் வெளிவந்த 'Nebraska' ஆல்பம். இதை வெளியிட்டபோது அன்றைய கால வழமைக்கு மாற்றாக ஆல்பத்தின் முகப்பில் தனது புகைப்படம் வெளிவரக்கூடாது என்பதோடு, இந்த ஆல்பத்துக்காக எந்த விளம்பரப்படுத்தல்களோ, இந்த ஆல்பத்தை முன்னிலைபப்டுத்தும் எவ்விதமான இசைக்கச்சேரியையும் செய்யமாட்டேன் என்று பிடிவாதமாக ஸ்பிரிங்ஸ்டீன் இருந்திருக்கின்றார். இவற்றைத் தாண்டியும் அது ஒரு வெற்றிகரமான இசைத்தட்டாக அன்றைய்காலத்தில் மாறியிருந்தது.

*

எனது பதிமங்களில் ஸ்பிரிங்ஸ்டீன், 'The boss' ஆக அறிமுகமாகியிருந்தார். அவரின் பாடல்களை விட கிட்டாரை வானத்தை நோக்கி உயர்த்தி நிற்கும் அவரின் அந்த கம்பீரமே என்னை அப்போது வசீகரித்திருந்தது. இப்போது ஸ்பிரிங்ஸ்டீனைப் பற்றிப் பேச விழைந்தது அவரின் பாடல்களுக்காக அல்ல. அவர் இசையோடு எப்படி தனது அரசியலை வெளிப்படையாகப் பேசிக் கொண்டிருக்கின்றார் என்று நினைவுபடுத்துவதற்கேயாகும். அன்றைய வியட்னாமிய போருக்கு எதிராக மட்டுமின்றி, தொடர்ச்சியாக அமெரிக்காவிற்குள் நிகழும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றவர் ஸ்பிரிங்ஸ்டீன்.

அண்மைக்காலமாக அமெரிக்காவில் குடியேறிகளின் மீது அமெரிக்க அரசும் அதன் கொடும் அமைப்பான ICE ம் பெரும் வன்முறையைப் பிரயோகித்தபோது அதை எதிர்த்து நின்ற ஒரு பெண்ணும், இன்னொரு ஆண் தாதியும்  (Renee Good and Alex Pretti)  மினோஸ்டாவில் கொல்லப்பட்டிருந்தார்கள். 

 
அது பெரும் அதிர்ச்சியையும், எழுச்சியையும் அமெரிக்காவில் ஏற்படுத்தியிருந்தது. அப்போது 'மினியப்பாலிஸின் தெருக்கள்'  (Streets of Minneapolis)  என்ற அமெரிக்க அரச அதிகாரத்தை எதிர்க்கும் பாடலோடு ஸ்பிரிங்ஸ்டீன் வந்திருந்தார்.

முதலீட்டிய நாடாகவும், பெரும் நிறுவனங்களின் இராட்சதக் கரங்களால் நடத்தப்படும் அரசாகவும் அமெரிக்கா இருந்தாலும், அதன் மறுபக்கம் என்று ஒன்றிருக்கின்றது. அப்படி அதிகாரத்துக்கு அடிபணியாத ஒரு தரப்பு மிக உறுதியாக இருப்பதால்தான் அமெரிக்கா ஒரு சர்வாதிகாரத்தை நோக்கி அடிப்படை உரிமைகள் சார்ந்து நகராத ஓர் இடத்தில் இருக்கின்றது. இல்லாதுவிட்டால் டொனால்ட் டிரம்ப் போன்றவர்களால் அவர்களுக்குக் கிடைக்கும் அதிகாரத்தை வைத்து  எளிதில் ஹிட்லரைப் போன்ற சர்வாதிகாரி நிலையை எளிதில் அடைந்துவிட முடியும்.

அமெரிக்காவின் இந்த மறுபக்க தரப்பின்  எதிர்ப்பு, தலைமுறை தலைமுறையான சனநாயகத்துக்கான அவர்களின் தொடர் போராட்டம், அமெரிக்கா முற்றுமுழுதாக ஓர் வலதுசாரி நிலைக்குப் போகாது எப்போதும் காப்பாற்றியபடி இருக்கின்றது.

அதுவே ஒடுக்கப்பட்ட அமெரிக்க கறுப்பின மக்களின் சிவில் உரிமைகளுக்காகப் போராடச் செய்தது.  வியட்னாமிய போருக்கெதிரான பெரும் அலையாக எழ வைத்தது. எந்த வெள்ளையின பெரும்பான்மை நாட்டிலும் அவ்வளவு எளிதில் சாத்தியப்படாத ஓர் கறுப்பினத்தவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கவும் செய்தது.

இன்றைக்கு டிரம்பின் அரசு சர்வாதிகாரத்திலும் போர்வெறியிலும்  (குடிவரவாளர்கள் உள்ளிட்ட விடயங்களில்) நிறவெறியிலும் மிதந்து கொண்டிருந்தாலும் அமெரிக்காவில் உள்ளேயிருந்து எழும் குரல்கள் அவ்வளவு தீவிரமானவை.

இன்று மில்லியன்கணக்கான அமெரிக்க மக்கள் ஐம்பது மாநிலங்களிலும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஈரானில் நடத்தப்படும் போருக்கும், உள்நாட்டில் குடியேறிகள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைக்கும் எதிராக 'No Kings' ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியிருக்கின்றனர்.  இந்தப் பெயரில் கடந்த வருடம் டிரம்ப் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்திருந்தார்கள். No Kings என்பது எந்த அமெரிக்க ஜனாதிபதியும் அமெரிக்காவின் அரசியல் சட்ட சாசனதுக்கு மேலானவர் அல்ல என்பதை வலியுறுத்துவதாகும். நீங்கள் ஜனாதிபதியாக இருந்தாலும் அமெரிக்கச் சட்டத்தை ஏற்று நடக்கவேண்டும், சர்வாதிகாரியாக அல்ல என்ற இந்த 'கோஷம்' இன்றைய நாளில் இரண்டாவது பெரும் ஆர்ப்பாட்டத்தை மில்லியன்கணக்கான மக்களை பல்வேறு நகர்களின் தெருக்களுக்கு அழைத்து வந்திருக்கின்றது.

இன்றும் ஸ்பிரிங்ஸ்டீன்  தனது 77 வயதிலும் மக்களுக்காக தெருவுக்கு வந்து அமெரிக்க அரசுக்கெதிரான பாடலை மினோஸ்டாவில் No Kings பேரணியில் பாடிக் கொண்டிருந்தார்.

அதனால்தான் அவர் என்னைப் போன்றவர்க்கு The Boss!

***

கார்காலக் குறிப்புகள் - 145

Saturday, April 11, 2026

 

பா.திருச்செந்தாழையின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரேதம்' 2008இல் வந்தபோது அன்றையகாலங்களில் அதை வாசித்து ஒரு சிறுகுறிப்பை எழுதியிருக்கின்றேன். என் நினைவு சரியாக இருக்குமெனில் அதன் முன்னுரையில் வாசித்து எழுத ஓர் அமைதியான சூழ்நிலையும், எதிர்காலம் குறித்து அச்சப்படுத்தாத ஓர் குடும்பமும் அமைந்தால் நன்றாக இருக்குமென்று திருச்செந்தாழை கவலைப்பட்டு எழுதியதாக ஞாபகம் இருக்கிறது. திருச்செந்தாழையின் முதல் தொகுப்பு பலரால் கவனப்படுத்தப்பட்ட ஒரு தொகுப்பு. தொடக்கநிலை எழுத்தாளர் ஒருவருக்கு அவ்வளவு எளிதாகக் கிடைக்காத வரவேற்பு திருச்செந்தாழைக்குக் கிடைத்தபோதும் அவரின் அடுத்த தொகுப்பான 'விலாஸம்' வர கிட்டத்தட்ட 14 வருடங்கள் எடுத்திருந்தன.  



இந்த இடைவெளியை தமிழ்ச்சூழலில் இருந்து எழுதும் பலருக்கு ஏன் நிகழ்கின்றது என்று புரிந்துகொள்ள முடிந்தாலும் இது பெரும் உறங்குநிலைக் காலம்தான். ஆனாலும் திருச்செந்தாழையின் இரண்டாம் தொகுப்பான 'விலாஸம்' வந்தபோது அதற்குரிய வரவேற்பைத் தமிழ்ச்சூழலில் கொடுத்திருக்கின்றது. இப்போது 'நெருப்பில் வளர்ந்தவை' என்கின்ற திருச்செந்தாழையின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கின்றது.

திருச்செந்தாழையின் கதைகளில் அவர் பரபரப்பு தரும் கதைகளையோ அல்லது இறுதியில் அதிர்ச்சி தரும் முடிவுகளையோ எளிதில் தவிர்த்துவிடுகின்றார். மிக நிதானமாகவே தனது கதைகளை உருவாக்கியபடி, ஒரு சூழலை நமக்கு விரிவாக தர முயற்சிக்கின்றார். ஒருவகையில் நான் திருச்செந்தாழையின் கதைகளை 'கணங்களை உறையவைக்கும் மாயஜாலம்' எனச் சொல்வேன்.

ஏன் இந்த உறையவைக்கும் கணங்கள்  எப்போது மாயஜாலமாகின்றது என்றால் அவர் அதை கவித்துவ மொழியில் விரித்துச் சொல்லும்போதாகும்.  பலமாக இருக்கும் அதுவே சிலவேளைகளில் பலவீனமாகப் போகும் அபாயம் இருந்தாலும் அதுவே திருச்செந்தாழையின் தனித்துவமாக அமைகின்றது. கவித்துவ மொழியாக இருப்பதால் அது நீண்ட வாக்கியங்களாகவும் பல கதைகளில் இயல்பாக வந்துவிடுகின்றது. 'வருகை' கதையில் 'சிறியதும் பெரியதுமான எண்ணற்ற கடைகள் மஞ்சள் குண்டுபல்புகளுக்குக் கீழே விழித்துக் கொள்கிற யானைக்கல் பழமண்டியின் உலகம் வெற்றிலைக் கறை படிந்த சிரிப்புகளை, நிதானிக்கக் கூட நேரமில்லாத முகத்தைக் கிழித்துவிடுவதுபோலப் பழங்களும் கிழங்குகளும் நிலக்கடலையும் நிறைந்த மூடைகளைத் தூக்கி உரசி விரைகின்ற சுமைகளால் ஆனது' என திருச்செந்தாழை எழுதிச் செல்கின்றார். ஒருவகையில் இது ஆங்கிலத்தில் எழுதும் அனுக் அருட்பிரகாசத்தின் எழுத்து நடையை நினைவுபடுத்தியது. அவரும் இவ்வாறு நீண்ட வாக்கியங்களால் புனைவுகளை எழுத விரும்புகின்ற ஒருவர்

இன்னொரு இடத்தில் 'கண்ணாடியால் தங்களை வேய்ந்து எண்ணிலா கட்டிடங்கள் எழுந்து நின்றாலும், எதிர்பாராது எப்போதேனும் மின்சாரம் போய்ச் சட்டெனச் சூழ்ந்து கொளிற இருளில், சரசரவெனப் பல நூற்றாண்டுகள் பின் நகர்ந்து தனது புராதனமான முகத்தோடு கோயில் கோபுரங்கள் நிழலுருவாக எழுந்து வருகிற மதுரையின் தொன்மைக்குள் வைகை மட்டுமே காலத்தில் தொலைந்தவள்' என்று எழுதப்பட்டிருக்கும்.

இவ்வாறான நீண்ட வாக்கியங்களின் அழகென்பது கவித்துவத்தோடு அதற்குள் பல விடயங்களை/நிகழ்வுகளைப் புகுத்துவதென்பது. அதேவேளை இந்த நீண்டவாக்கியங்களால் சிலவேளைகளில் Lost in translation மாதிரி, வாசகர்கள் சொல்லவந்ததன்  முக்கிய விடயத்தை தவறவிட்டு காட்சிப் படிமங்களில் மட்டும்  சிக்கி விடுவதாக அமைந்துவிடவும் கூடும்.

'நெருப்பில் வளர்பவை' கதைத் தொகுப்பின் கதைகளை விரித்து சொல்லப்போவதில்லை. அவை புத்துணர்ச்சி தருகின்ற கதை மொழி. திருச்செந்தாழை இந்தக் கதைகள் மீது சாதாரண மனிதர்களையே உலாவ விடுகின்றார். அம்மானிடர் மனம் பிறழ்ந்தவர்களாகவோ, திருமணம் தாண்டிய உறவுகளில் திளைப்பவர்களாகவோ, வியாபாரத்தில் நொடித்துப் போனவர்களாக இருந்தாலும், அவர்களுக்கென்று அமைந்துவிட்ட வாழ்க்கையை, அவர்களின் சூழலுக்குள் நின்று எவ்வித தீர்ப்புக்களையும் அவசரமாக வழங்கிவிடாது நிதானமாகப் பார்க்க நம்மை அழைக்கின்றார்.

அப்பாவுக்கு இருக்கும் இன்னொரு உறவை அறிந்தும் அறியாமலும் விளங்கிக் கொள்ளும் ஒரு சிறுவனின் கதையைச் சொல்லும் 'அப்பா' கதையும், 'வியாபாரத்தில் தோற்றுப்போய் மனைவியின் குடும்பத்தில் மதிப்பற்றிருக்கும் மருமகனை ஏதோ ஒருவகையில் புரிந்துகொள்ளும் மாமியைப் பற்றிய 'ஒரு பிடி வெளிச்சமும்', தகப்பன் இறந்துபோக அந்தக் கடைக்கு வியாபாரம் சொல்லிக்கொடுக்க வரும் திருமணமானவன் மீது சோதிக்கு வரும் உறவு குறித்து விபரிக்கும் 'நிறைசூலி'யும்,  இரண்டு பிள்ளைகளைப் பெற்று நன்றாக இருந்து தாயிற்கு சட்டென்று மனப்பிறழ்வு வந்து அவர் அடிக்கடி வீட்டை விட்டு ஓடுவதும் திரும்பலுமாக இருக்க அவரைப் புரிந்து கொள்ளும் லோகுவின் அவனின் இரண்டு பிள்ளைகளைப் பற்றிச் சொல்லும் 'வருகை'யும், மலமள்ளிப் பிழைக்கும் பூம்பிடாகை பாட்டியின் பேர்த்தி எப்படி அவமானங்களைத் தாங்கி தன்னையே நெருப்பாக்கி பிறர் தன்னை எவ்விதத்திலும் தீண்டவிடாதிருக்கும் 'சாம்பலில் கனல்வது'ம் இத்தொகுப்பில் என்னை அதிகம் கவர்ந்த கதைகள்.

இந்தவருடம் வெளிவந்த சிறுகதைத் தொகுப்புக்களில் இதை முதன்மையான ஒன்றாக மட்டுமில்லை, தமிழ் இலக்கிய உலகு பெருமைகொள்ளக்கூடிய ஒரு படைப்பாகவும் இதை முன்மொழிவேன்.



***