கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

செவ்வ‌ர‌த்த‌ம்பூ குறிப்புக‌ள்

Monday, June 06, 2011

1. வானம்
அண்மையில் வெளிவ‌ந்த‌ ப‌ட‌ங்க‌ளில் 'வான‌ம்' க‌வ‌னிக்க‌த்த‌தொரு ப‌ட‌ம். ஐந்து வெவ்வேறான‌வ‌ர்க‌ளின் க‌தைக‌ள் அந்த‌ந்த‌ கதாபாத்திர‌ங்க‌ளின் பின்புல‌ங்க‌ளில் வைத்து மிக‌ இய‌ல்பாக‌ச் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. அட‌க்க‌முடியாக் குதிரையாய் த‌ன் ப‌ட‌ங்க‌ளில் திமிறிக்கொண்டிருக்கும் சிம்புவை இப்ப‌டி ஒரு பாத்திர‌த்திற்குள் பார்ப்ப‌து கூட‌ சில‌வேளைக‌ளில் க‌ன‌வுபோல‌த்தான் இருக்கிற‌து. இவ்வ‌ள‌வு சிர‌த்தையாக‌ திரைக்க‌தைய‌மைத்த‌வ‌ர்க‌ள், இப்ப‌ட‌த்தின் முடிவை வேறுவித‌மாக‌ எடுத்திருந்தால் இன்னும் பாராட்டியிருக்க‌த் தோன்றியிருக்கும். இதையேன் கூறுகின்றேன் என்றால் முஸ்லிம்க‌ள் மீதான் பொதுவான பிம்ப‌ம் எப்ப‌டியிருக்குமோ அத‌ன் வ‌ழியே ப‌ட‌த்தின் முடிவில் காட்டுகின்றார்க‌ள். ஆர்.எஸ்.எஸ்சின் அடாவ‌டித்த‌ன‌ங்க‌ளையுந்தானே இப்ப‌ட‌த்தில் காட்டுகின்றார்க‌ள் என‌ ஒருவ‌ர் எதிர் விவாத‌ம் இவ்விட‌த்தில் செய்ய‌க்கூடும். ஒடுக்க‌ப்ப‌டும் சிறுபான்மையின‌ர்/விளிம்புநிலையின‌ரை நாம் பொதுவெளிக்கு எடுத்துவ‌ரும்போது அவ‌ர்க‌ள் ப‌ற்றிய‌ சித்த‌ரிப்புக்க‌ளை நாம் மிக‌வும் க‌வ‌ன‌மாக‌ முன்வைக்க‌வேண்டும் என்ப‌தை முத‌லில் அவ‌ர்க‌ளுக்கு நினைவூட்ட‌ விரும்புகின்றேன்.

முஸ்லிம்க‌ளின் ஒருப‌குதியின‌ர் தீவிர‌ அடிப்ப‌டைவாத‌த்திற்கு செல்கின்றார்க‌ள் என்ப‌து உண்மையே. ஆனால் அந்த‌ அடிப்ப‌டைவாத‌ம் நோக்கிப் ப‌ய‌ணிப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ள் சிக்க‌லான‌தும், ஆழ‌மான‌தும் என்ப‌தை நாம் ம‌ற‌ந்துவிட‌க்கூடாது. இப்ப‌ட‌த்தில் பிர‌காஷ்ராஜின் த‌ம்பி ஒரு 'தீவிர‌வாதி'யாக‌ மாறுவ‌த‌ற்குக் கார‌ண‌ம் ஆர்.எஸ்.எஸின் விநாய‌க‌ர் ச‌துர்த்தியும்(?) பொலிஸ் அராஜ‌க‌மும்தான் என‌க் கூற‌ப்ப‌டுகின்ற‌து. அவ்வாறு வ‌ன்ம‌ம் கொள்ளும் ஒருவ‌ர் பொலிஸையும், ஆர்.எஸ்.எஸ்சையும் தாக்க‌/கொல்ல‌ முய‌ற்சிப்ப‌ரே த‌விர‌ எல்லா ம‌த‌ ம‌க்க‌ளும் கூடும், ஒரு வைத்திய‌சாலைக்குப் போய் எல்லோரையும் போட்டுத்த‌ள்ள‌ விரும்பியிருக்க‌மாட்டார் என‌ அவ‌ர்க‌ளின் எளிய‌ வாத‌த்தை நாமும் எளிய‌ ஒரு கேள்வி மூல‌ம் இல்லாம‌ற் செய்துவிட‌லாம்.  பொதும‌க்க‌ள் கூடும் இட‌ங்க‌ளின் குண்டுவெடிப்புக‌ள்/தாக்குத‌ல்க‌ள் என்ப‌தை அதை யார் செய்தாலும் எத‌ன் பொருட்டும் நாம் நியாய‌ப்ப‌டுத்த‌முடியாதுதான். ஆனால் 9/11 தாக்குத‌லின் பின்னும் கூட‌, அமெரிக்கா/க‌ன‌டா போன்ற‌ நாடுக‌ளில் நாம் ஒரு 'தீவிர‌வாத‌'த் தாக்குத‌லினால் கொல்ல‌ப்ப‌டுவ‌தை விட‌, மோட்டார் வாக‌ன‌ விப‌த்தால் கொல்ல‌ப்ப‌டும் ச‌ந்த‌ர்ப்ப‌மே அதிக‌ம் இருப்ப‌தாக‌ த‌ர‌வுக‌ளின்ப‌டி நிரூபிக்க‌முடியும். இதை இங்கே ந‌கைச்சுவையாக‌ 'நாம் ஒரு தீவிர‌வாதியை எண்ணிக் க‌ல‌க்க‌முறுவ‌தைவிட‌ தெருவில் போகும் காரை நினைத்தே அதிக‌ம் க‌வ‌லைப்ப‌ட‌வேண்டும்' என்பார்க‌ள்.

இந்த‌த் 'தீவிர‌வாதிக‌ள்' என்ப‌வ‌ர்க‌ள் கூட்ட‌மாய் ஒரே நேர‌த்தில் தாக்குத‌ல்க‌ள் ந‌ட‌த்தும்போது அவை மிக‌ப்பெரும் நிக‌ழ்வாக‌ ஊடக‌ங்க‌ளால் காட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. ஆனால் அதேச‌ம‌ய‌ம் இந்திய‌ இராணுவ‌மோ/ அமெரிக்க இராணுவ‌மோ நாளாந்த‌ம் காஸ்மீர், ஈழ‌ம், ஈராக், ஆப்கானிஸ்தானில் செய்த‌/செய்யும் கொலைக‌ள்/தாக்குத‌ல்க‌ள்/பாலிய‌ல் வ‌ன்புண‌ர்வுக‌ளை ஒரு வ‌ருட‌த்திற்கு,,, என்ற‌ எல்லையில் வைத்துப் பார்த்தால் நாம் 'தீவிர‌வாதிக‌ள்' என‌ அழைக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளை விட‌ இவ்வாறான‌ இராணுவ‌ங்க‌ளின் அட்டூழிய‌த்தால் பாதிக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளே எண்ணிக்கையில் அதிக‌மாய் இருப்பார்க‌ள் என்ற‌ முடிவுக்கு வ‌ர‌முடியும்.

இதைத்தான் 'வான‌ம்' பட‌மும் முஸ்லிம்க‌ள் என்கின்ற‌ சிறுபான்மையின‌ரை பொதுவெளிக்குள் வைக்கும்போது த‌வ‌றவிட்ட‌ விட‌ய‌ம் என‌ நினைக்கின்றேன். இது முஸ்லிம்க‌ள் என்ற‌ விட‌ய‌த்தில் ம‌ட்டுமில்லை, இந்தியா இராணுவ‌ம் ஈழ‌த்தில் செய்த அட்டூழிய‌ங்க‌ளைப் ப‌ற்றிப் பேசும்போது இராஜீவ்காந்தியின் கொலையை அத‌ற்கு நிக‌ராய்ச் ச‌ம‌ன‌ப்ப‌டுத்தி எல்லா அழிவுக‌ளையும் ம‌றைக்க‌ முய‌ல்வ‌தையும் க‌வ‌ன‌ப்ப‌டுத்த‌ விரும்புகின்றேன். ஆக‌வேதான் ஆர்.எஸ்.எஸ்/பொலிஸ் என்ப‌வை முஸ்லிம்க‌ளை எப்ப‌டி ஒடுக்குவ‌தை ஒரு உள்ளூர‌ள‌வில் காட்ட‌ப்ப‌ட்ட‌தோ அத‌ற்கு நிக‌ரான‌ த‌ள‌த்தில் வைத்தே முஸ்லிம் பிர‌ச்சினையும் இப்ப‌ட‌த்தில் பேச‌ப்ப‌ட்டிருக்க‌ வேண்டுமே த‌விர‌, அவ‌ர்க‌ளை ஒரு ச‌ர்வ‌தேச‌ 'தீவிர‌வாத‌' அளவில் வைத்துப் பேசுவ‌து (நிறைய‌ ந‌வீன‌ ஆயுத‌ங்க‌ளோடு வைத்திய‌சாலையைத் தாக்குவ‌து) அப‌த்த‌மான‌து என‌க் குறிப்பிட‌ விரும்புகின்றேன்.

இப்ப‌ட‌த்தைப் பார்க்கும் ஒரு முஸ்லிம், இப்ப‌டி எங்க‌ளின் ஒருப‌குதியின‌ரை மிலேச்ச‌ன‌த்த‌ன‌மான‌ தீவிர‌வாதிக‌ளாய்ச் சித்த‌ரிக்கின்றீர்க‌ளே, அப்ப‌டியெனில் ஏன் உங்க‌ளால் இப்ப‌ட‌த்தில் ஒரு இட‌த்தில் கூட‌ குஜ‌ராத்தில் ந‌ட‌ந்த‌ கொடூரமான‌ ப‌டுகொலைக‌ளைக் காட்ட‌வில்லை எனக் கேள்வி எழுப்பினால் 'வான‌ம்'  ப‌ட‌த்தோடு ச‌ம்ப‌ந்த‌ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ப‌திலேதுமின்றி ம‌ண்ணுக்குள் தீக்கோழிபோல‌த் த‌லையைப் புதைக்க‌த்தான் வேண்டி வ‌ரும். மேலும் முஸ்லிம் 'தீவிர‌வாத‌' இய‌க்க‌ம் எங்காவ‌து வைத்திய‌சாலையில் தாக்குத‌லைச் செய்ததா என்பதை நான் அறியேன். ஆனால் உல‌கின் மிக‌ப்பெரும் ஜ‌ன‌நாய‌க‌ நாடென‌ப் பெருமித‌ப்ப‌டும் இந்தியாவின் இராணுவ‌ம் யாழ் வைத்திய‌சாலைக்குள் உள்நுழைந்து வைத்திய‌ர்/தாதிக‌ள்/நோயாளிக‌ள் என‌ எந்தப் பிரிப்புமில்லாது சுட்டுக்கொன்றிருக்கின்ற‌து. 2009ல் ஈழ‌த்தில் இறுதியுத்த‌த்தில் இல‌ங்கை இராணுவ‌ம் துல்லிய‌மாக‌க் குறிபார்த்து த‌ன் ப‌ல்குழ‌ல் ஆட்லறித்த்தாக்குத‌ல்க‌ளை வ‌ன்னியிலிருந்த‌ வைத்தியசாலைக‌ளை நோக்கி ந‌ட‌த்தியிருக்கிற‌து. ஆனால் இவ‌ர்க‌ள் எவ‌ருமே தீவிர‌வாதிக‌ள் இல்லைத்தானில்லையா?

2.ஆடைக‌ள் அணிவ‌த‌ற்கான‌ சுத‌ந்திர‌ம்
ஒவ்வொரு அர‌சும் காவ‌ல்துறை, இராணுவ‌ம் என‌ த‌ன் நாட்டு ம‌க்க‌ளைப் பாதுகாக்க‌வும், ச‌ட்ட‌ஒழுங்கை நிலை நிறுத்தவும் வைத்திருக்கின்ற‌து. காவ‌ல்துறை/இராணுவ‌ம் இல்லாவிட்டால் ச‌மூக‌த்தில் ந‌ம்மால் நிம்ம‌தியான‌ ம‌னித‌ர்க‌ளான‌ வாழ‌முடியாது என‌ க‌ற்பிக்க‌ப‌ட்டு, இதையே முற்றுமுழுதாக‌ ந‌ம்புகின்ற‌ நிலைக்குள் நாம் த‌ள்ள‌ப்ப‌ட்டும் விட்டோம். உண்மையில் இவ்வாறான‌ அதிகார‌ ம‌ற்றும் க‌ண்காணிப்பு நிறுவ‌ன‌ங்க‌ள் இல்லாது ந‌ம்மால் வாழ‌ முடியாதா என்கின்ற‌ கேள்வியை ஜோஸ் ச‌ர‌மாகோவின் 'Blindness'  ம‌ற்றும் 'Seeing' ஆகிய‌ இரு நாவ‌ல்க‌ளும் முன்வைக்கின்ற‌ன‌. எந்த‌ ஒரு அர‌சையும் தேர்ந்தெடுக்க‌ விரும்பாது த‌ம்பாட்டில் வாழ‌ விரும்பும் ம‌க்க‌ளை எப்ப‌டி அர‌சும்,இராணுவ‌மும் த‌ங்க‌ளின் க‌ட்டுப்பாட்டுக்குள் கொண்டுவ‌ர‌ முய‌ற்சிக்கின்ற‌ன‌ என்ப‌தை இந்நாவ‌ல்க‌ள் பேசுகின்ற‌ன‌. த‌மிழில் இந்நாவ‌ல்க‌ளுக்கு எஸ்.வி.ராஜதுரை எழுதிய‌ அறிமுக‌த்தை ஆர்வ‌முள்ள‌வ‌ர்க‌ள் நிச்சய‌ம் வாசிக்க‌வேண்டும்.

இவ்வாறு க‌ண்காணிப்பாள‌ர்க‌ளாக‌வும், க‌ட்டுப்ப‌டுத்துப‌வ‌ர்க‌ளாக‌வும் நிறுவ‌ன‌ம‌ய‌மாக்க‌ப்ப‌ட்ட‌ மைய‌ங்க‌ள் ம‌ட்டுமில்லாது, த‌னிப்ப‌ட்ட‌ ஒவ்வொரு ம‌னித‌ர்க‌ளுமே நாள‌டைவில் ச‌மூக‌த்தில் காவ‌ல‌ர்க‌ளாகி விடுகின்றார்க‌ள். அதுவும் ஆண்க‌ளாகிய‌ எம‌க்கு 'க‌லாசார‌ காவ‌ல‌ர்க‌ளாகி' விடுவ‌தென்ப‌து ந‌ம் 'ம‌ர‌ப‌ணுக்க‌ளிலே'யே புகுத்த‌ப்ப‌ட்டுவிடுகின்ற‌து போலும்.  ந‌ம் வீட்டுக்குள் இருக்கும் பிர‌ச்சினைக‌ளைத் தீர்ப்ப‌திலும் பார்க்க‌, ப‌க்க‌த்துவீட்டுக்கார‌ர் வீட்டுப்பிர‌ச்சினைக‌ளுக்குள் நுழைவ‌திலும், ஆலோச‌னை கூறுவ‌திலும், கிசுகிசுப்ப‌திலும் ந‌ம‌க்கு நாமே முன்னோடிக‌ள்தான்.

அண்மையில் யோர்க் வ‌ளாக‌த்தில் பாதுகாவ‌ல‌ர்க‌ள் ப‌ற்றிய‌ வ‌குப்பில் உரையாற்றிய‌ ஒரு பொலிஸ் 'பெண்க‌ள் தாம் பாதிக்க‌ப்ப‌டுவ‌திலிருந்து த‌விர்க்க‌வேண்டுமென்றால் ஒழுக்க‌ம‌ற்ற‌ பெண்க‌ளைப் போல் ஆடைக‌ள் அணிவ‌தைத் த‌விர்க்க‌வேண்டும்' ("women should avoid dressing like sluts in order not to be victimized") என்றிருக்கின்றார்.

இந்த‌க் க‌ருத்து மிகுந்த‌ ச‌ர்ச்சைக்குள்ளாகி, ரொற‌ண்டோ பொலிஸ் தலைமை அதிகாரியே த‌லையிட‌வேண்டிய‌ நிலை வ‌ந்த‌தும், குறிப்பிட்ட‌ பொலிஸ்கார‌ர் த‌ன‌து க‌ருத்துக்காய் பிற‌கு ம‌ன்னிப்புக் கேட்ட‌தும் ப‌ல‌ரும் அறிந்திருக்கூடிய‌தே. எனினும் இவ்வாற‌ க‌ருத்துக்க‌ள் த‌னிந‌ப‌ர் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌த‌ல்ல‌; பொலிஸ் துறையிலே இவ்வாறான‌ க‌ருத்துக்க‌ளே ஆழ‌மாய் வேரூன்றியிருக்கின்ற‌தென‌, இத‌ற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிர‌த்திற்கும் மேற்ப‌ட்ட‌ பெண்க‌ள் ஏப்ர‌ல் மாத‌த்தில் ரொறொண்டோவில் ஆர்ப்பாட்ட‌ம் செய்திருந்த‌ன‌ர். அத‌ற்கு அவ‌ர்க‌ள் வைத்த‌ பெய‌ரே 'Slut Walk' என்ப‌தாகும்.

முத‌லில் நாம் இந்த‌ப் பொலிஸ்கார‌ர் கூறிய‌ க‌ருத்தை ச‌ற்று ஆழ‌மாய்ப் பார்க்க‌வேண்டும். பெண்க‌ள் உட‌ல்/ம‌ன‌ ரீதியாக வ‌ன்முறைக்குள்ளாக்க‌ப்ப‌டுவ‌தில் இவ்வாறு பெண்க‌ள் 'அப்ப‌டியும் இப்ப‌டியுமாக‌' ஆடைக‌ள் அணிவ‌துதான் முக்கிய‌ கார‌ணிக‌ளில் ஒன்றாக‌ இருக்கின்ற‌தாக‌ இதில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. அதாவ‌து பெண்க‌ள் ஒரு 'இர‌க‌சிய‌மான‌' ச‌மிக்ஞையை இவ்வாறு வ‌ன்முறை செய்யும் ஆண்க‌ளுக்கு த‌ம‌து ஆடைக‌ள் மூல‌ம் தெரிவிக்கின்றார்க‌ள் என்ப‌து இத‌ன் உட்கிடை. அதைவிட‌ இன்னொரு முக்கிய‌மான‌ விட‌ய‌த்தைத்தான் நாம் இன்னும் அதிக‌ம் க‌வனிக்க‌வேண்டும். அதாவ‌து எந்த‌ப் பெண்ணும் 'ஒழுக்க‌ம‌ற்ற‌ ஒரு பெண்ணை'ப் போல‌ ஆடை அணிந்தால் அவ‌ரைச் சிதைக்க‌ எந்த‌ ஆணுக்கும் உரிமை இருக்கின்ற‌து என்கின்ற‌ தொனி பொலிஸின் க‌ருத்தில் ஆழ‌ உட்பொதிந்து இருக்கின்ற‌து. இந்த‌க்க‌ருத்தை நாம் எப்ப‌டி க‌ட்டவிழ்ப்புச் செய்ய‌வேண்டும் என்றால், முத‌லில் 'யார் ஒழுக்க‌ம‌ற்ற‌ பெண்?' எனக் கேட்க‌ வேண்டும். ஒழுக்க‌மான‌/ஒழுக்க‌ம‌ற்ற‌ பெண் என்று பிரிக்க‌ உங்க‌ளுக்கு யார் அந்த் அதிகார‌த்தைத் த‌ந்த‌து என்ற‌ புள்ளியில் உரையாட‌த் தொட‌ங்கினாலே அத‌ற்கு பின்னால் வ‌ரும் எந்த‌க்க‌ருத்தும் அப‌த்த‌ம் என‌த் தெரிய‌வ‌ரும்.

அவ‌ர்க‌ள் 'ஒழுக்க‌ம‌ற்ற‌ பெண்'ணிற்கு ஒரு வ‌ரைவில‌க்க‌ண‌த்தைத் த‌ந்து இன்னும் அடம்பிடிப்பார்க‌ளாயின் 'ஒழுக்க‌ம‌ற்ற‌ ஆணை' வ‌ரைய‌றுக்க‌ச் சொல்லி நாம் கேட்க‌லாம். அவ்வாறு வ‌ரைய‌றுக்க‌ப்ப‌ட்ட‌ 'ஒழுக்க‌ம‌ற்ற‌ ஆண்' அப்ப‌டியும் இப்ப‌டியுமாக‌ ஆடை அணிவ‌தில்லையா?' என‌க் கேட்க‌லாம். அப்ப‌டி ஆடைய‌ணிந்து ச‌மிக்ஞை கொடுத்தும் எந்த‌ ஆணுக்கும் உட‌ல்/உள‌ரீதியில் ஏன் எந்த‌ப் பெண்ணுமே பாதிப்பை ஏற்ப‌டுத்துவ‌தில்லை என‌க் கேட்க‌லாம். இறுதியில் ச‌மூக‌த்தின் உய‌ர்நிலையில் (hierarchy) ஆண்க‌ளே இருந்து எல்லாவ‌ற்றையும் தீர்மானிக்கவும் க‌ட்டுப்ப‌டுத்த‌வும் செய்கின்றார்க‌ள் என்ற‌ புரித‌லுக்கு எளிதில் வ‌ந்துவிட‌லாம்.

ரொற‌ண்டோவில் தொட‌க்க‌ப்ப‌ட்ட‌ Slut Walk ப‌ல்வேறு நாடுக‌ளிலும் எதிரொலித்திருக்கின்ற‌ன‌. உல‌கில் ஆண்க‌ளாகிய‌ நாம் எங்கு வாழ்ந்தாலென்ன‌, எல்லோரும் ஒரேமாதிரியாக‌த்தானே இருக்கின்றோம். என‌வே எல்லா இட‌ங்க‌ளிலும் பெண்க‌ள் த‌ம் எதிர்ப்பைக் காட்ட‌த்தான் விரும்புவார்க‌ள். விரைவில் இதே பெய‌ரில் நியூயோர்க்கிலும் இல‌ண‌ட‌னிலும் பெண்க‌ள் ஆர்ப்பாட்ட‌ம் செய்ய‌ப் போகின்றார்க‌ள் என்ற‌ செய்தியையும் வாசித்தேன். ரொறொண்டோவில் 'Slut Walk' ந‌ட‌ந்த‌போது எத்த‌னையோ எரியும் விட‌ய‌ங்க‌ள் இருக்கும்போது ஏன் இதை பெரிதுப‌டுத்துகின்றார்க‌ள் என‌ ப‌ல‌ர் க‌ருத்துத் தெரிவித்திருந்த‌ன‌ர். ஒருவ‌கையில் ஏற்றுக்கொள்ள‌க்கூடிய‌ க‌ருத்துத்தான். ஆனால் பின் ந‌வீன‌த்துவ‌ச் சூழ்நிலையில் வாழ்கின்ற‌ நாம் எங்கிருந்தும் ஒரு எதிர்ப்பைத் தொட‌ங்கலாம். அத‌ற்கு ஒரு தெளிவான‌ தொட‌க்க‌மோ அல்ல‌து முடிவோ இருக்க‌வேண்டும் என்கின்ற‌ எந்த‌ அவ‌சிய‌மும் இல்லை. மேலும் ஒரு எதிர்ப்பை உறுதியாக‌க் காட்டுகின்றோம் என்றால் இனி இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளில் எழுந்த‌மான‌மாய்க் க‌ருத்துச் சொல்ல‌ விழைப‌வ‌ர்க‌ளை ச‌ற்று யோசிக்க‌வைக்கும், நிதான‌மாய்ப் ப‌தில‌ளிக்க‌ வைக்கும். இவ்வாறான‌ எதிர்ப்புக்க‌ள் எம் த‌மிழ்ச்சூழ‌லில் சாதி/பெண்/த‌ற்பாலின‌ர்/மூன்றாம்பால் போன்ற‌ விட‌ய‌ங்க‌ளில் தொட‌ர்ச்சியாக‌ வைக்க‌ப்ப‌ட்டிருந்தால் நாம் எத்த‌னையோ அப‌த்த‌மான‌ க‌ருத்துக்க‌ளை இன்று வாசிக்க‌வோ/கேட்க‌வோ வேண்டியிருக்காது அல்ல‌வா?

இந்தச் செய்தியோடு தொட‌ர்பில்லாதுவிட்டாலும், 'சுட‌ருள் இருள்' நிக‌ழ்வில் வ‌.கீதா கூறிய‌ ஒரு க‌ருத்துதான் நினைவுக்கு வ‌ந்த‌து. த‌மிழ்ச்சூழ‌லில் த‌னித்து பெண்ணிய‌ம் சார்ந்து பேசுவ‌து என்ப‌து மிக‌வும் க‌டின‌மான‌து. அத‌ற்கான‌ வெளியை ஒருபோதும் த‌மிழ்ச்சூழ‌ல் த‌ந்த‌தில்லை என்றார். என‌வே வேறு எத‌னோடு இணைத்துத்தான் பெண்ணிய‌த்தைப் பேச‌வேண்டியிருக்கின்ற‌து. த‌ன‌க்குப் பெரியாரைக் க‌வ‌ச‌மாக்கித்தான் பெண்ணிய‌த்தைப் பேச‌க்கூடிய‌தாக‌ இருக்கின்ற‌து எனக் கூறியிருந்தார். த‌னித்துப் பெரியாரிய‌த்தைப் பேசுவ‌தைப் போல‌ த‌னித்துப் பெண்ணிய‌த்தைப் பேசினால் கேட‌க்க‌க்கூடிய‌வ‌ர்க‌ள் சொற்ப‌மான‌வ‌ர்க‌ளே இருப்பார்க‌ள் என‌ த‌மிழ்ச்சூழ‌லின் அவ‌ல‌த்தைத் த‌ன்பேச்சில் க‌வ‌ன‌ப்ப‌டுத்தியிருந்தார். தான் கூட‌ பொதுச்சூழ‌லில் ஒரு பெண்ணிய‌லாராக‌ அன்றி, பெரியாரிய‌ வாசிப்பாள‌ராக‌வே அதிக‌ம் க‌வ‌ன‌ப்ப‌டுத்துவ‌தாக‌ த‌ன‌து பேச்சில் வ‌.கீதா வெளிப்ப‌டுத்தியிருந்தார். த‌மிழ்ச்சூழ‌லில் அறிய‌ப்ப‌ட்ட‌ பெண்ணிய‌லாள‌ரான‌ கீதாவே இவ்வ‌ள‌வு ஆத‌ங்க‌த்தையும், த‌டைக‌ளையும் கொண்டிருக்கின்றார் என்றால் சாதார‌ண‌ ஒரு பெண் தான் விரும்பிய‌தைப் பேசுவ‌த‌ற்கு இருக்கும் வெளி குறித்து நாம் யோசித்துப்பார்க்க‌லாம்.

ப‌ல்வேறு ‌புள்ளிக‌ளில் வைத்து விவாதிக்க‌வேண்டிய‌ இன்னொரு செய்தி இருக்கின்ற‌து. க‌ன‌டாவிலேயே பொறியிய‌ல் ப‌டிப்புக்குப் பிர‌பல்ய‌ம் வாய்ந்த‌ ஒரு ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌மாக‌ வோட்ட‌லூ வ‌ளாக‌ம் இருக்கின்ற‌து. ஒவ்வொரு வ‌ருட‌மும் ச‌ர்வ‌தேச‌ அள‌வில் மாண‌வ‌ர்க‌ளுக்கிடையில் ந‌ட‌க்கும் ப‌ந்த‌ய‌க் கார் போட்டியில் வோட்ட‌லூ பொறியிய‌ல் மாண‌வ‌ர்க‌ளும் ப‌ங்குப‌ற்றுவார்க‌ள்.மிக‌க்குறைந்த‌ செல‌வில், புதிய‌ க‌ண்டுபிடிப்புக்க‌ளுட‌ன் விலையுய‌ர்ந்த‌ உய‌ர்த‌ர‌ ப‌ந்த‌ய‌க்காரைப் போன்று ஒரு வ‌டிவ‌த்தை உள்ளூர் அள‌வில் வ‌டிவ‌மைப்ப‌தே இப்போட்டியின் நோக்க‌ம். மாண‌வ‌ர்க‌ளும் ப‌ல‌மாத‌ங்க‌ளாய் இத‌ற்காய் ஆய்வுகூட‌த்தில் உழைப்பார்க‌ள். இவ்வாறு கடுமையாக‌ உழைத்து போட்டியில் ப‌ங்குபெற‌ சில‌ மாத‌ங்க‌ளே இருக்கும்போது இந்த‌ வ‌டிவமைப்புக் குழு, வோட்ட‌லூ ப‌ல்க‌லைக்க‌ழ‌க நிர்வாக‌த்தால் போட்டில் ப‌ங்குபெறுவ‌திலிருந்து நிறுத்திவைக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. இத‌ற்கான‌ கார‌ண‌ம் இந்த‌ வ‌டிவ‌மைப்புக் குழுவிலிருந்த‌ ஒரு பெண் ப‌ந்த‌ய‌க்காருக்கு முன் பிகினியுட‌ன் நின்று காட்சிய‌ளித்த‌ ஒரு புகைப்ப‌ட‌ம். இந்த‌ப் பெண்ணும் அவ‌ர‌து ந‌ண்ப‌ரும் புற்றுநோயுக்கான‌ நிதி திர‌ட்டும் ஒரு நிக‌ழ்வுக்காய் இந்த‌ப் புகைப்ப‌ட‌த்தை எடுத்திருக்கின்றார்க‌ள். அதைப் புகைப்ப‌ட‌த்தை எடுத்த‌ ந‌ண்ப‌ர் த‌ன் இணைய‌த‌ள‌த்தில் இதைப் பிர‌சுரிக்க‌ விட‌ய‌ம் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ துணைவேந்த‌ர் வ‌ரை சென்று இந்த‌ வ‌டிவ‌மைப்புக் குழு ஆய்வுகூட‌த்திற்குள் (அதாவ‌து போட்டி முடியும்வரை) நுழைவ‌து த‌டுக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. இப்பெண் மீது ஒழுக்காற்று விசார‌ணை ந‌ட‌க்கிற‌து என‌ நினைக்கின்றேன்.

இந்த‌ விட‌ய‌த்தை ப‌ல்வேறு நிலைக‌ளில் வைத்து விவாதிக்க‌லாம் எனினும் இவ்விட‌ய‌ம் குறித்து பெண்க‌ள் என்ன‌ கூறுகின்றார்க‌ள் என்ப‌தே என‌க்கு முக்கியமாக‌ப்ப‌ட்ட‌து. அவ்வாறான‌ ஒரு தேடுத‌லில் இந்த‌ச் சுவார‌சிய‌மான‌ க‌ட்டுரையை வாசிக்க‌ நேர்ந்த‌து. மேற்ப‌டி க‌ட்டுரையை எழுதிய‌வ‌ர் ஒரு பெண் ம‌ட்டுமில்லாது ஒரு வ‌ரைப‌ட நிபுண‌ருமாவார். அவ‌ர் குறிப்பிடும் ஒரு முக்கிய‌ ஒரு புள்ளி சுவார‌சிய‌மான‌து. பொதுப்புத்தியில் பொறியிய‌ல் ப‌டிக்கும் பெண்க‌ள் எல்லாம் Tom Boy வ‌கையைச் சார்ந்த‌வ‌ர்க‌ள் என்ற‌ விட‌ய‌ம் புகுத்த‌ப்ப‌ட்டுவிட்ட‌து. ஆண்க‌ள் ஆதிக்க‌ம் செலுத்தும் பொறிய‌ல்துறையில் பெண்க‌ள் அறிவாளிகளாக‌வும், த‌ம் உட‌லை ஆராதிப்ப‌வ‌ர்க‌ளாக‌வும் இருப்ப‌தை ஆண்க‌ள் ம‌ட்டுமில்லை பிற‌ பெண்க‌ளும் கூட‌ பொறாமையாக‌த்தான் பார்க்கின்ற‌ன‌ர்; இந்த‌ப் பொதுப்புத்தி சார்ந்த‌ சிந்த‌னையே எவ்வித‌ முறையான‌ விசார‌ணைக‌ளுமின்றி உட‌னேயே இப்பெண்மீதும் அவ‌ர் சார்ந்திருந்த‌ வ‌டிவ‌மைப்புக்குழு மீதும் வ‌ளாக‌ நிர்வாக‌ம் த‌ண்ட‌னை வ‌ழ‌ங்கியிருக்கின்ற‌து என்கின்றார். இது கூட‌ ஒரு பெண் தான் விரும்பிய‌ ஆடையை அணிவ‌த‌ற்கான‌ சுத‌ந்திர‌ம் என்ற‌வகையில் நீண்ட‌ விவாத‌திற்குரிய‌ ஒரு ச‌ம்ப‌வ‌ந்தான்.

3.பூச‌ல்
எழுத‌ப்ப‌டும் விம‌ர்ச‌ன‌ங்க‌ள் ஏதோ ஒரு பாதிப்பிலிருந்து எழுகின்ற‌து என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம். அது நிச்ச‌ய‌ம் நேர்ம‌றையாக‌ இருக்க‌வேண்டும் என்கின்ற‌ அவ‌சிய‌மில்லை; எதிர்ம‌றையாக‌க் கூட‌விருக்கலாம். அந்த‌வ‌கையில் ஜெய‌மோக‌ன் எழுதிய‌ இந்த‌ விம‌ர்ச‌ன‌த்திற்கு முத‌லில் ந‌ன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவ‌ர் அதில் என‌க்காய்க் கூறிய‌வ‌ற்றை க‌வ‌ன‌மாக‌ உள்வாங்கிக்கொள்கின்றேன். எந்த‌க் க‌ருத்தோ/சிந்த‌னை நிலையோ எப்போதும் நிர‌ந்த‌ன‌மான‌த‌ல்ல‌; மாறிக்கொண்டேயிருப்ப‌ன‌. என‌வே இப்போது ந‌ம்மிருவ‌ருக்குமான‌ அலைவ‌ரிசை ஒத்திய‌ங்காவிட்டாலும், என்றேனும் ஒருகால‌த்தில் இடைவெட்ட‌க்கூடிய‌ புள்ளி இருந்தால் அத்த‌ருண‌த்தில் அவ‌ரின் ப‌திவை ந‌ன்றியுட‌ன் மீண்டும் நினைவுகூர்வேன் என‌ ம‌ட்டும் இப்போதைக்கு கூறிக்கொள்ள‌ விழைகின்றேன்.

இந்த‌க்க‌ட்டுரை குறித்த‌ இர‌ண்டு புள்ளிக‌ளை ம‌ட்டும்....! 
(i) "டி.செ.தமிழன் மறக்க வேண்டியது அவர் நெஞ்சில் நிறைந்திருக்கும் அந்த அரசியல் காழ்ப்புகளையே. எளிய தரப்புகளாக அனைத்தையும் பிரித்துப் பார்க்கும் பார்வையை. அந்த பார்வையைக் கொண்டு அவரால் ஒரு நல்ல நாலு வரி கவிதை கூட எழுதி விட முடியாது." என‌ ஜெய‌மோக‌ன் எழுதியிருக்கின்றார்.

இவ்விட‌த்தில் நான் எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் 'யாம‌ம்' நாவ‌லுக்கு எழுதிய‌ விம‌ர்ச‌ன‌த்திற்கு எஸ்.ரா எழுதிய‌ பின்னூட்ட‌த்தை நினைவூட்ட‌ விரும்புகின்றேன்.

"எனது நாவல் யாமம் குறித்து நீங்கள் எழுதிய விமர்சனகட்டுரையை வாசித்தேன். மிக நுட்பமாகவும் கூர்ந்த விமர்சனப் பார்வையோடும் எழுதப்பட்டிருக்கிறது. நாவலின் விடுபடல்கள் மற்றும் இடைவெளிகள் குறித்து உங்கள் சுட்டிகாட்டுதல் கவனத்திற்குரியவை.

ஆனால் ஒருநாவலாசிரியனாக இதை திருத்திக் கொள்கிறேன் என்று ஒரு போதும் கூறமாட்டேன். மாறாக நாவல் எழுத்து என்பது முன்கூட்டிய திட்டங்கள் மற்றும் கணக்குகள் கோட்பாடுகள் மீறவேண்டிய பட்டியல்கள் வழியாக உருவாவதில்லை. அதை ஒரு கவிஞராக நீங்கள் உணர்வீர்கள். நாவலை வாசகர்கள் எவ்விதம் அணுகுவார்கள் என்பது குறித்து எந்த விமர்சன முடிவுகளும் நாவலின் வாசிப்பை தடை செய்யப்போவதில்லை. அது தான் எப்போதும் நடைபெற்று வருகின்றது.

தங்கள் கவிதைகள் மற்றும் கட்டுரைகளை தொடர்ந்து உங்கள் வலைப்பக்கத்தில் வாசித்து வருகிறேன். சமீபமாக நான் படித்த கவிதைகளில் வெகு தனித்துவமானவை உங்கள் கவிதைகள். குறிப்பாக நீங்கள் கையாளும் மொழி மற்றும் கவிதையின் வழி பீறிடும் உள்ளார்ந்த கோபம் கவிதையை மிக நெருக்கமானதாக்குகிறது."

என இதில் "எழுத்து என்பது முன்கூட்டிய திட்டங்கள் மற்றும் கணக்குகள் கோட்பாடுகள் மீறவேண்டிய பட்டியல்கள் வழியாக உருவாவதில்லை" என‌ எஸ்.ரா குறிப்பிடுவ‌தையே ஜெய‌மோக‌னும் த‌ன் க‌ட்டுரையில் எழுதியிருக்கின்றார் என‌ நினைக்கின்றேன்.  அதேபோன்றே என்னாலும் எஸ்.ராவிற்கு என் க‌விதைக‌ள் பிடிக்கின்ற‌ன‌ என்ப‌த‌ற்காய் அதேபாணியில் வ‌லிந்து எழுதுத‌ல் எவ்வ‌ள‌வு சாத்திய‌மில்லையோ அவ்வாறே ஜெய‌மோகனிற்குப் பிடிக்க‌வில்லை என்ப‌த‌ற்காய்  நான் எழுதுப‌வ‌ற்றை மாற்றிய‌மைக்க‌ வேண்டும் என்கின்ற‌ அவ‌சிய‌மில்லை என்றே -அவ்வ‌ப்போது- எழுதுகின்ற‌வ‌ன் என்ற‌வ‌கையில்  புரிந்துகொள்கின்றேன்.

இர‌ண்டாவ‌து, ஜெய‌மோக‌ன் ஓரிட‌த்தில் 'வளரும் எழுத்தாளனுக்கு பூசல் போல தீங்களிப்பது எதுவுமே இல்லை. அவன் உளச்சக்தி முற்றாகவே வீணாகும்.' என்கின்றார். பூச‌ல் என்ப‌தை எந்த‌ அர்த்த‌த்தில் ஜெய‌மோக‌ன் கூறுகின்றாரே தெரியாது. நான் அதை விவாத‌ம் என‌ எடுத்துக்கொள்கின்றேன். ஆனால் ஜெய‌மோக‌னின் த‌ள‌த்தைத் தொட‌ர்ந்து வாசிக்கும் ஒருவ‌ர், அவ‌ர் இள‌ம்ப‌டைப்பாளிக‌ள் பிற‌ப‌டைப்பாளிக‌ளுட‌ன் உரையாட‌லைச் செய்ய‌வேண்டும் என்று வ‌லியுறுத்துப‌வ‌ராக‌வே இருக்கின்றார் என‌வே நினைப்பார். ஜெய‌மோக‌ன் கூட‌ த‌ன் ஆளுமை, தான் சுந்த‌ர‌ ராம‌சாமியோடும், நித்யாவோடும் விவாதித்த‌வைக‌ளின் அடிப்ப‌டையில் உருவாகிய‌வை என்று ப‌ல‌ இட‌ங்க‌ளிலும் குறிப்பிட்டுச் சொல்கின்றார். ஆக‌,  இது ஒன்றுக்குப் பின் முர‌ணாக‌ இருக்கிற‌தே? இத‌ற்கும் ஜெய‌மோக‌ன் ஏதேனும் விள‌க்க‌ம் வைத்திருக்க‌க்கூடும். அதைத் தெளிவுப‌டுத்தினால் ந‌ன்று.  ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்த்தால் க‌ன‌டாவிற்கு வ‌ரும் ஜெய‌மோக‌னிட‌ம் இதை நேரில் கேட்டுப்பார்க்க‌ முய‌ற்சிக்கின்றேன்.