3.
எஸ்.ராமகிருஷ்ணனின் 'யாமம்' நாவலுக்கு விமர்சனம் எழுதியபோது, 'யாமம்' காலனித்துவத்தை ஒரு எதிர்மறையாக மட்டும் பார்க்கின்றது என்ற குறிப்பை எழுதியிருந்தேன். ஆனால் 'துயிலில்' காலனித்துவத்தின் இருபக்கங்களும் மிக அவதானமாக முன் வைக்கப்படுகின்றது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். உதாரணத்திற்கு தொக்காட்டை அண்டியிருக்கும் ஒரு பூசாரி (அவரே வைத்தியராகவும் அம்மக்களுக்கு இருக்கின்றார்) மனம் பிறழ்ந்த ஆண்/பெண்/குழந்தைகளைச் சங்கிலியால் கட்டி தான் அவர்களின் நோய்களைத் தீர்க்கின்றேன் என சவுக்கால் தினம் அடிக்கின்றார். இதனை அவதானிக்கும் ஏலன்பவர் இது மிருகத்தனமானது என வருந்துகின்றார். நடக்கும் சம்பவத்தை இப்படியே தொடரவிடாது நிறுத்தவேண்டும் என பாதிரியாரிடம் முறையிடும்போது, நாங்களும்(வெள்ளையர்களும்) அப்படித்தானே கடந்தகாலங்களில் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்திருக்கின்றோம் எனப் பாதர் குறிப்பிடுகின்றார். எப்போதும் கீழைத்தேய மக்களைக் 'காட்டுமிராண்டிகளாய்' விமர்சிக்கும் வெள்ளையினத்தவர்களின் தோன்றல்கள்தான் மிகக்கொடூரமான சிலுவைப்போர்களை நிகழ்த்தினார்கள் என்பதையும், தேவாலயங்களுக்கு எதிரான கருத்துரைத்த பெண்களைச் சூனியக்காரிகளாய் உயிரோடு எரித்தவர்களும் என்பதையும் நாம் மறந்துவிடமுடியாது அல்லவா?
அதுதான் இங்கே நினைவூட்டப்படுகின்றது. அதேபோன்று இந்திய(தமிழ்)மனங்களில் அகற்றமுடியாக் கசடாய் ஒளிந்திருக்கும் சாதி பற்றியும் துயிலில் நுட்பமாகப் பேசப்படுகின்றது. ஏலன் பவர் தன்னிடம் வரும் நோயாளிகளை ஒரே மாதிரியாய் நடத்துவது தொக்காடு கிராமத்திலிருக்கும் உயர்சாதியினரால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதிருக்கின்றது. ஏலன் பவரோடு வேலை செய்யும் சீபாளியின் குடும்பம் கிறிஸ்தவமதத்திற்கு மாறியபின்னர் கூட, சீபாளி எல்லோரும் வழிபடும் தேவாலயத்தினுள் உள்ளே வழிபட அனுமதிக்கப்படாமல்தான் இருக்கின்றார். இந்தச் சாதியின் அரசியலை அங்கே மேற்கிலிருந்து வரும் பாதிரியார் கூட மதம் மாற்ற நட்வடிக்கைக்காய் அவர்களைத் தந்திரமாய்ப் பிரித்து வைத்தே பாவிக்கின்றார் என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும். ஆனால் மானுடத்தின் மீதான உண்மையான அக்கறையுள்ள ஏலன் பவரால் அதை ஒருபோதும் ஏறுக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு எல்லா மக்களையும் சாதி அடிப்படையில் பகுக்காது, மனிதத்தின் அடிப்படையில் ஒன்றாகப் பாவித்ததே இறுதியில் ஏலன் பவரின் உயிரையும் பறித்திருக்கின்றது என்பதை நுட்பமாய் எஸ்.ரா நாவலில் எழுதியிருக்கின்றார்.
ஊர் மக்கள், தங்களுக்கு சீக்கு நோயைப் பரப்புகின்றார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண்ணை உயிரோடு அடித்துக்கொல்லும் முயற்சியில் ஈடுபடுவதை ஏலன் பவர் தடுத்து நிறுத்துகின்றார். அந்நிகழ்வே அதுவரை அவரை தங்களில் ஒருவராக நினைத்த ஊர்மக்களிடமிருந்து ஏலன் பவரை விலத்தி வைக்கின்றது மட்டுமின்றி, கத்தோலிக்கச் சபையிலிருந்தும் அவரை நீக்கச் சொல்லியும் கட்டளையும் இடப்படுகின்றது. ஒரு முக்கியமான பாதரால் ஏலன் பவர் நியமிக்கப்பட்டதால் வங்காளத்திலிருந்து ஒரு உயர்மட்டக்குழு இச்சம்பவத்தை தீர விசாரிக்க தொக்காட்டிற்கு அனுப்பப்படுகின்றது. அக்குழு இறுதியில் என்ன முடிவை எடுத்தது என்பதும், ஏலன் பவரின் இன்னொரு கனவான கல்வி கற்க வாய்ப்பேயில்லாத அம்மக்களுக்கு ஒரு பாடசாலை அமைத்துக்கொடுத்தல் நிகழ்ந்ததா என்பதையும் வாசிப்பவர்களுக்காய் விட்டுவிடலாம்.
தொக்காடு தேவாலயத்தின் திருவிழாவிற்காய் பலர் பல்வேறு திசைகளில் இருந்து வந்துகொண்டிருக்கின்றார்கள். தொக்காடு தேவாலயத்திற்கென ஒரு ஜதீகம் உண்டு. நோயாளிகள் தத்தம் இடங்களிலிருந்து கால்நடையாகவே நடந்து திருவிழாவிற்கு வந்துசேர்ந்தால் அவர்களின் தீர்க்கமுடியாப் பிணிகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்பது. ஆகவே பல்வேறு விதமான நோயாளிகள் திருவிழாவிற்காய் நடந்து வந்துகொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு வந்து சேரும் நோயாளிகள் இடையில் தங்கிச்செல்லும் இடமாக எட்டூர் இருக்கின்றது. அங்கே 'அக்கா' என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் பெண்மணி எல்லா நோயாளிகளையும் பரிவாகக் கவனிக்கின்றார்; அவர்களுக்கு உணவூட்டுகின்றார், ஆறாத காயங்களைச் சுத்தம் செய்கின்றார்; எல்லாவற்றுக்கும் மேலாக நோயாளிகள் மனந்திறந்து பேசுவதை பொறுமையாக இருந்து கேட்கின்றார். அக்கா ஒரு மருத்துவரல்ல, ஆனால் நோயுற்றவர்கள் எல்லோரும் தமது நோய்கள் பற்றிப் பேசவும், தம்மோடு பிறர் பரிவோக இருப்பதையும் விரும்புகின்றவர்கள் என்கிற நோயாளிகளின் உளவியியல் நன்கறிந்தவர்.
பிணியின் பாதி தீர்வது, நோயாளிக்குத் தான் தனியாள் அல்ல என்பதை உணரச்செய்வது, மிகுதிப் பாதியை கொடுக்கும் மருந்துகள் தீர்க்கும் என்பதை அக்கா நன்கறிந்தவர். ஆகவே நோயாளிகளை மனந்திறந்து பேசும்போது அவர்கள் ஏற்கனவே தம் வாழ்வில் செய்த பாவங்களும் கூடத்தான் ஒரு நோயாக கூட இருந்து உறுத்திக்கொண்டிருக்கின்றது என்பதை அக்கா அவர்களுக்குப் புரிய வைக்கின்றார். பாவங்களிலிருந்து விடுபடல் என்பது நாம் பாவம் செய்தது யாரிடமோ அவர்களைத் தேடிச்சென்று எமது தவறுகளைக் கூறி மண்டியிடுவதுதான் என்கின்றார். அக்காவைத் தேடி தொழுநோயாளிகள் மட்டுமின்றி பல்வேறு பிணிகளோடு இருப்பவர்களும் வருகின்றார்கள். ஒருமுறை எப்போதும் போதையில் மிதந்தபடி இருக்கும் ஒரு குடிகாரனைச் சந்திக்கின்றார் அக்கா. ஆனால் அவன் தனது அன்பு புறக்கணிக்கப்பட்டதாலேயே குடியைக் காரணங்காட்டி எல்லோரையும் வெறுக்கின்றான் போன்ற தந்திரத்தைச் செய்கின்றான் என்பதை அக்கா அவனிடம் கண்டுபிடிக்கின்றார். தான் இதுவரை நுட்பமாய் மறைத்துவைத்திருந்த உண்மையை அக்கா சட்டென்று கண்டுபிடித்ததைக் குடிகாரனால் தாங்கமுடியாதிருக்கின்றது. ஆகவே அக்காவை மூர்க்கமாய்த் தாக்குகின்றான். அதேபோன்று தமது 50 வயதுகளில் வீட்டால் துரத்தபட்ட 70 வயதுகளில் இருக்கும் இரு முதியவர்களும் அக்காவைத் தேடி வருகின்றார்கள். அவர்கள் தாங்கள் அக்கா செய்யும் நல்லபணிகளைக் கேள்விப்பட்டு அவருக்கு சில நாட்கள் உதவ வந்ததாகக் கூறுகின்றார். அக்கா நெகிழ்கின்றார். 50 வயதுவரை தாங்கள் வேலை, குடும்பம் என ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்துகொண்டிருந்தோம், வீட்டிலிருந்து துரத்தப்பட்டபின் தான் உலகம் எவ்வளவு விரிந்தது என்று தெரிகிறது எனச்சொல்லும் அம்முதியவர்கள் முதுமையிலும் வாழ்வு அழகுதானெனக் கூறுகின்றனர். இப்படி அக்காவின் எட்டூர் மண்டபத்திற்கு வருகின்ற பலரின் கதைகள் கூறப்படுகின்றன. ஒவ்வொருவரின் கதைகளும் ஏதோ ஒருவகையில் நம்மைப் பாதிக்கச் செய்கின்றதோடு அவர்கள் எமக்கு ஏற்கனவே தெரிந்த நம்மோடு உலாவுகின்ற மனிதர்கள் போன்ற நெருக்கத்தையும் வாசிக்கும் நமக்குள் ஏற்படுத்தவும் செய்கின்றனர்.
4.
இவ்வாறு இருநூற்றாண்டுகளில் நிகழும் கதைகள் வெவ்வேறு மாந்தர்களினூடாக இந்நாவலில் சொல்லப்படுகின்றது. தொக்காடு கிராமத்தில் எப்படி கிறிஸ்தவம் பரவுகின்றது என்பதிலிருந்து, தொக்காடு தேவாலயம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது வரை நுண்ணியமான தகவல்களால் துயிலில் எழுதப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு தனிமனிதனும் தன் வாழ்வையும் தான் சந்தித்த மனிதர்களையும் பற்றியும் எழுதத்தொடங்கினாலே அது எவ்வளவோ பக்கங்களுக்கு நீளக்கூடியதாக இருக்குமென்றால், இரு நூற்றாண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட தேவாலயத்தைப் பற்றிய கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் எழுதத்தொடங்கினால் ஒருபோதுமே முடிவடையாத அளவுக்கு கதைகள் என்றுமேந் நுரைத்துத் ததும்பக் கூடியனதான். எனவேதான் தொக்காடு தேவாலயத்தை ஒரு முக்கிய மையமாய் வைத்து எழுதப்பட்ட துயில் நாவலும் அது கூறுகின்ற கதைகளை விட சொல்லப்படாத கதைகளைத் தன்னகத்தில் உள்ளடக்கியிருக்கின்றது என்பதை நாம் உய்த்துணர்ந்து கொள்ளலாம். துயிலில் விடப்பட்ட இடைவெளிகளைக் கொண்டு நாம் எமக்கான கதைகளைக் கூட கட்டியெழுப்பிக்கொள்ளலாம். உதாரணமாக துயில் நாவலில் வருகின்ற முக்கிய பாத்திரமான அக்கா ஒரு குடிகாரனால் தாக்கப்பட்டு மயக்கமடைவதோடு இந்நாவலிலிருந்து இல்லாமற் போய்விடுகின்றார். ஆனால் அக்காவின் பாத்திரத்தை வாசிக்கும் நமக்கு, அந்த அக்காவிடம் நமக்குச் சொல்வதற்கு இன்னும் நிறையக் கதைகள் இருக்குமென்பதை அறிவோம். அழகரினதோ, ஜக்கியினதோ சிறுவயது அனுபவங்கள் விரிவாகச் சொல்லப்பட்டதுபோன்று அக்காவினது கடந்தகாலம் துயிலில் கூறப்படாது விடப்பட்டிருக்கும் இடைவெளியைக் கூட நாம் நமக்குத் தெரிந்த ஒரு அக்காவின் நினைவுகளை நனவிடைதோயச் செய்வதாகக்கூட மாற்றிக்கொள்ளலாம்.
19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஒரு பெண் அநியாயமாக தொக்காடு தேவாலய முன்றலில் கொல்லப்படுகின்றார். அவரின் அதுவரை காலச்சேவையை நினைவூட்டிக்கொண்டிருந்த கட்டடமும் பின்னாட்களில் அடையாளமின்றிப்போகின்றது. ஆனால் அவர் எழுதிக்கொண்டிருந்த கடிதங்களின் மூலம் அவரின் நினைவுகள் மீண்டும் தூசி தட்டப்படுகின்றன. கடிதம் ஒரு முக்கிய ஆவணமாய் கடந்தகால வரலாற்றை மீளக் கட்டியெழுப்புகிறது. அதேபோன்று கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பின்னாலும் தொக்காடு தேவாலயச் சூழலில் கொலையொன்று நிகழ்கின்றது. ஆனால் சென்ற நூற்றாண்டைப் போலல்லாது, தனக்குச் செய்யப்படும் அநியாயம் கண்டு பொங்கியெழுந்து ஒரு பெண்ணே அக்கொலையைச் செய்கின்றாள். ஒரு நூற்றாண்டு இடைவெளியில் காலம் மாறிக்கொண்டிருப்பதை இதைவிட நுட்பமாக உணர்த்தி விடமுடியுமா என்ன?
துயில் நாவல் நோய்மையை மட்டும் பேசாது வெவ்வேறுவிதமான மருத்துவமுறைகள் பற்றியும் ஆழ விவாதிக்கின்றது. மேலைத்தேய மருத்துவ முறையில் தேர்ச்சி பெற்ற ஏலன் பவர், கீழைத்தேய நாடுகளில் தலைமுறை தலைமுறையாக குறிப்பிட்ட குடும்பங்களிடையே கற்றுக்கொடுக்கப்படும் கீழைத்தேய மருத்துவ முறைகளைப் பற்றி அறியவும் ஆவல் உள்ளவராக இருக்கின்றார். இம்மருத்துவமுறை இந்திய சமூகங்களில் ஒதுக்கப்பட்ட சாதிகளிடையே இருந்து வருவதையும் அதனால் இவர்களிடம் சிகிச்சை பெற உயர்சாதி மக்கள் விரும்புவதில்லை என்பதையும் அவதானிக்கின்றார். மேலும் இந்திய மருத்துவமுறைகள், மேலைத்தேய மருத்துவத்தைப் போல தனிப்பட்ட நோயிற்கு மட்டும் சிகிச்சையைத் தேடுவதை விடுத்து, அது முழுமனிதனுக்குமான உடல்நலத்தைக் கவனத்தில் கொள்கின்றது என்கின்ற புரிதலுக்கும் ஏலன்பவர் வருகின்றார். இயற்கையோடு அதிகம் வாழும் இந்திய மக்கள் தமது மருந்துகளையும் இயற்கை வளங்களிலிருந்து பெற்றே தயாரிக்கின்றார்கள் என்பதையும், அவ்வாறு மேலைத்தேய மருந்துகள் தயாரிக்கப்படுவதில்லை என்கின்றபோது, துயிலில் வரும் உள்ளூர் மருத்துவர் அதை நம்பமுடியாதவராக இருக்கின்றார் என்பதும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் துயில் நாவலில் தொக்காடு தேவாலயத்தின் திருவிழா பற்றிய வர்ணனைகள் விதந்து கூறக்கூடியது. தேர்ந்த ஒரு ஒளிப்பதிவாளர் காட்சிப்படிமங்களாக்குவதைப் போன்ற நேர்த்தியுடன் திருவிழா நாட்கள் எஸ்.ராவின் எழுத்தால் காட்சிப்படுத்தப்படுகின்றன. இன்னுஞ்சொல்லப்போனால் தேவாலயத்தின் உள்ளே நிகழும் திருவிழாவைவிட, அதன் சுற்றுச்சூழலே அதிகம் வர்ணிக்கப்படுகின்றது. ஒருவகையில் பார்த்தால் இந்நாவல் விளிம்புநிலை மனிதர்களை முக்கிய பாத்திரங்களாகக் கொண்டே கட்டியெழுப்பப்படுகின்றது எனக்கூடச் சொல்லலாம். ஓரு நிரந்தரமான இருப்பில்லாது எப்போது அலைந்துகொண்டிருக்கும் அழகர், பாலியல் தொழில் செய்யும் ஜக்கி மற்றும் டோலி, நோயாளிகளைப் மிகக் கனிவுடன் பராமரித்து அனுப்பும் அக்கா, தனக்கான எல்லா வசதி வாய்ப்புக்களையும் உதறிவிட்டு சேவை செய்வதற்கென வரும் ஏலன்பவர் என அனைவருமே விளிம்புநிலை மனிதர்களாக இருக்கின்றார்கள், அல்லது விளிம்புநிலை மனிதர்களோடு சேர்ந்து வாழ விரும்புகின்றவர்களாக இருக்கின்றார்கள். மேலும் எஸ்.ராவின் அநேக நாவல்களில் வருபவர்கள் தங்கள் இயல்புக்கு அப்பால் சென்று தங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதுமில்லை. அவர்களின் தினவாழ்வென்பதென்பதே புற நெருக்கடிப் பெருஞ்சுழிகளுக்கு எதிராகத் துடுப்புப் போடுவதாக இருக்கும்போது உள்மனத் தரிசனங்களுக்காய் நின்று நிதானிக்கவும் முடியாது. அந்த இயல்பு துயிலின் பாத்திரங்களுக்கு இருப்பதால் தான் நாவல் வாசிப்பவர்களை உள்ளிழுத்துக் கொள்கிறது.
இந்நாவலை வாசித்துக்கொண்டிருந்தபோது காணக்கிடைத்த சில எதிர்மறையான புள்ளிகளையும் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு சில எழுத்துப் பிழைகளென நாவல் முழுதும் எழுத்துப்பிழைகள் மலிந்து கிடக்கின்றன. எஸ்.ராவின் 'உபபாண்டவம்' வாசித்த நாட்களிலிருந்து இதை அவதானிக்கின்றேன் என்றாலும், இவ்வளவு கடும் உழைப்போடு எழுதப்படும் ஒரு நாவலில் இவ்வாறான விடயங்களையும் களையவேண்டுமெனக் கறாராக கூறவேண்டியிருக்கின்றது. அதைவிட, சிலவேளைகளில் பாத்திரங்களில் பெயர்கள் மாற்றி மாற்றி வந்திருக்கின்றன. உதாரணத்திற்கு ஜக்கி தான் அவரின் தகப்பனோடு மிகவும் நெருக்கமாயிருக்கின்றார். ஆனால் சில பக்கங்களைத் தாண்டியபின் ஜக்கியின் தங்கையான டோலிதான் தகப்பனுக்கு நெருக்கமாயிருக்கின்றார் என்பதுபோல பெயர் ஆள்மாறாட்டம் நடந்திருக்கும். இவ்வாறான விடயங்கள் வாசிப்பவரை நிச்சயம் குழப்பவே செய்யும்.
எங்கோ தொலைவில் முற்றிலும் வேறுபட்ட பண்பாட்டுச் சூழலில் பிறந்து இந்தியாவிற்கு சேவையாற்ற வரும் ஏலன் பவர், தன் துணையை வெட்டிவிட்டுப் போவதற்கான எத்தனையோ சந்தர்ப்பங்கள் வாய்த்தும், தன்னைப் பயன்படுத்துகின்றான் கணவன் என்கின்ற புரிதலோடு அழகரோடு அலையும் சின்னராணி, நோயாளிகளை ஆற்றுப்படுத்தவும், அவர்களுக்கு விருந்தளிப்பதுமே தன் கடனென அதற்காய் தன் வாழ்நாளை முற்றுமுழுதாக செலவழிக்கின்றன கொண்டலு அக்கா...என இந்நாவலில் முக்கிய பெண் பாத்திரங்கள் அனைத்துமே தம் வாழ்வைப் பிறருக்காய் அர்ப்பணித்து அதில் ஏதோ ஒருவகையில் நிறைவைக் காண்பவர்களாய் இருக்கின்றார்கள். தனிநபர் சார்ந்து எல்லாமே வலியுறுத்தப்படும் இன்றைய உலக ஒழுங்கில் மேற்குறித்த பாத்திரங்கள் சிலவேளைகளில் விசித்திரப் புதிர்களாக வாசிப்பவர்களுக்குத் தெரியவும் கூடும். அதன் நிமித்தம் வரும் வியப்பே, அண்மையில் வாசித்தவற்றில் 'துயிலை' ஒரு முக்கிய நாவலாக வைத்துப் பார்க்கத் தோன்றுகின்றதோ தெரியவில்லை.
எழுதியது: ஆனி/2011
இறுதியாய்த் திருத்தியது: ஆவணி/2011