-வாசிப்பு-
கொரிய எழுத்தாளரான ஜி முன்-யோல் (Yi Mun-Yol) எழுதிய 'ஓர் அநாமதேயத் தீவு' (An Anonymous Island) சிறுகதை அண்மையில் நியூயோர்க்கர் இதழில் வெளிவந்திருக்கின்றது. இதுவே நியூயோர்க்கரில் வெளிவந்த முதலாவது கொரியக் கதை என்கிறார்கள். ஜி முன்-யோல் 1948ம் ஆண்டு சியோலில் பிறந்தவர்.
'ஓர் அநாமதேயத் தீவு' கதை, ஆணொருவர் தொலைக்காட்சியைப் பார்த்து இன்றைய இளைஞர்கள் எல்லாம் கெட்டுப் போய்விட்டார்கள் என்று அங்கலாய்ப்பதுடன் தொடங்குகின்றது. கிளப்பில் நடனமாடும் இளைஞர்களைக் கூட, 'நடனமாடுபவர்கள்' என்று கூறாது தொலைக்காட்சி 'உடல்கள் உரசுபவர்கள்' எனப் புதுப்பெயர் சூட்டி விமர்சிக்கின்றது. ஆணும்((கணவர்), தொலைக்காட்சியும் இப்பெண்ணுக்கு பழைய நினைவுகள் சிலவற்றைக் கிளறிவிடுகின்றன.
சில காலத்திற்கு முன், இப்பெண் ஆசிரியத்தொழில் பார்ப்பதற்காய் நகரத்தை விட்டொதுங்கிய ஒரு தொலைதூர மலைக்கிராமத்திற்குச் செல்கின்றார். அக்கிராமத்திற்குச் சென்றிறங்கும்போது ஒரு கடைக்காரர், அழுக்கான ஆடையுடனும் தாறுமாறான தலைமயிருடனும் இருக்கும் ஒருவனைத் திட்டிக் கொண்டேயிருக்கின்றார். அவன் அதைப் பற்றிக் கவலைப்படாது எதுவும் பேசாது தன்பாட்டில் இருக்கின்றான். இப்பெண், தான் இங்குள்ள பாடசாலைக்கு புதிய ஆசிரியராக வந்திருக்கின்றேன் என்கின்றார். கிராமம் ஓர் ஒதுக்குப்புறத்தில் இருக்கின்றதென்றால் மறுபக்கம் பாடசாலையும் இன்னும் மோசமான நிலையில் இருக்கிறது. ஆசிரியத் தொழிலில் ஒன்றிப்போகும் இப்பெண், அந்தத் தறுதலை இளைஞன் எவ்வித வேலையும் செய்யாமல், தங்குவதற்கு ஓர் ஒழுங்கான வீடும் இல்லாமலும் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறார். ஆனால் அவனுக்கு மூன்று நேரமும் சாப்பாடும், தங்கிப் படுப்பதற்கு இடங்களும் அந்த ஊரில் கிடைத்துக்கொண்டிருப்பதுதான் இவருக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கின்றது. எந்த வீட்டுக்குச் சாப்பாடு வேண்டும் என்று போனாலும் அங்கிருக்கும் பெண்கள் அவனுக்கு மனமுவந்து உணவு பரிமாறுகின்றார்கள். தடை எதுவும் கூறாமல் ஆண்களும் அவனைத் தங்கள் வீட்டுக்குள் அனுமதிக்கின்றனர்.
நாட்கள் செல்லச் செல்ல ஓர் உண்மையை இந்த ஆசிரியர் கண்டுகொள்கின்றார். இக்கிராமம் முழுதும் ஒரேயொரு இனக்குழு (Clan) மட்டுமே இருக்கின்றது. ஆக எல்லோருக்கும் எல்லோருமே உறவினர்களாகவோ, தெரிந்தவர்களாகவோ இருக்கின்றார்கள். இந்த இளைஞன் மட்டுமே வெளியில் இருந்து வந்தவனாக இருக்கின்றான். அப்படியெனில் எப்படி இவனை இவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்? எதற்காய் மனங்கோணாமல் மூன்று வேளையும் உணவு பரிமாறுகின்றார்கள்?
இந்த இளைஞனுக்கும் அந்த ஊரில் இருக்கும் அநேக பெண்களுக்கும் இடையில் இரகசிய(?) உறவு இருக்கின்றது. சில பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் கூட அவனின் சாயலுடன் இருப்பதாய் ஊர்ப்பெண்கள் தங்களுக்குள் கிசுகிசுத்தும் கொள்கின்றார்கள். அவனிடம் எழுதப்படாத ஒரு கொள்கை இருக்கின்றது. அநேகமாய் மத்திய வயதில் இருக்கும் பெண்களோடே உறவு கொள்கின்றவனாகவும், ஒரு முறை உறவு கொண்ட பெண்களிடம் மீண்டும் சென்று அவர்களை சிக்கலில் மாட்டிவிடாமலும் இருக்கின்றான். இப்போது இந்த ஆசிரியருக்கு அவன் இங்கே இருப்பதற்கான அரைவாசிக்காரணம் புரிந்துவிடுகின்றது; பெண்கள் எதற்காக அவனைத் தங்களுக்கு அருகாமையில் வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதை. ஆனால் அவன் இவ்வாறு தம் பெண்களுடன் உறவு கொள்கின்றான் என்று தெரிந்தும் ஆண்கள் ஏன் அவனை அடித்துத் துரத்தாமல் தங்கள் கிராமத்திற்குள் வைத்திருக்கின்றார்கள் என்பதைத்தான் இந்த ஆசிரியரால் புரிந்துகொள்ள முடியாதிருக்கின்றது.
இந்த ஆசிரியர் படிக்கும் காலத்திலேயே ஒருவரைக் காதலிக்கின்றார். திருமண நிச்சயார்த்தம் முடிந்திருக்கும் பொழுதில் காதலனுக்கு வியட்னாமில் யுத்தம் செய்வதற்கான அழைப்பு வருகின்றது. ஒருமுறை இவரின் காதலன் விடுமுறையில் இவரைப் பார்க்க இந்த மலைக்கிராமத்திற்கு வருவதாய்க் கடிதம் எழுதுகின்றார். காதலன் வந்திறங்கவேண்டிய அந்தக் கிராமத்திற்கான கடைசிப் பேரூந்தும் வந்து போய்விட்டது. இந்தப் பெண் பஸ் நிலையத்தில் காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடன் தன் வீட்டுக்குத் திரும்புகின்றார். மழை பொழியத்தொடங்குகின்றது. கிடைக்காத தாபம் மனதிற்குள் பெருகத் தொடங்குகிறது.
ஓரிடத்தில் மழைக்காய் ஒதுங்கும்போது ஓருடல் தன்னை இழுத்து அணைப்பதைக் காண்கிறார். ஆசிரியர் தன் எதிர்ப்பைக் காட்டுகின்றார். யாரென முகத்தைப் பார்க்கும்போது அது அந்த தறுதலை இளைஞனாக இருப்பதைக் காண்கின்றார். 'நீ என்னைத் துரத்தாதே, உனது உடல் இன்னும் கொதித்துக் கொண்டிருப்பதை என்னால் உணரமுடிகின்றது. நீ யாரையோ எதிர்ப்பார்த்து அவர் வரவில்லையென்ற ஏமாற்றத்துடன் இருப்பதையும் நான் அறிவேன்' என்கின்றான். இவர்கள் இருவருக்கும் இடையில் உடலுறவு நிகழ்கிறது. இப்போது நினைத்துப் பார்த்தால், 'அந்த முயக்கம் நினைவில் நிற்கக்கூடிய மகிழ்ச்சி தரும் விடயமாக இல்லாவிட்டாலும், அவன் என்னை வற்புறுத்திப் புணரவில்லை; அந்த நேரத்தில் அது எனக்கும் தேவையாக இருந்தது' என இப்பெண் நினைத்துக் கொள்கின்றார். இந்த உறவு நிகழ்ந்து முடிந்தபின் இப்பெண் இவன் தன் உறவைப் பற்றிக் கிராமத்தவர்களிடம் கூறிவிடுவானோ என்று அஞ்சுகின்றார். அவன் வேறு எவருக்கும் இவர்களின் உறவைச் சொல்லாததைப் போல, பிறகு ஒருமுறை கூட இந்த ஆசிரியரைத் தேடி மீண்டும் உறவுக்காய் வரவும் இல்லை.
இப்போது இந்த ஆசிரியருக்கு, யார் எது கேட்டாலும் அவன் வாய் திறந்து பேசாது மவுனமாய் இருப்பதன் காரணம் விளங்குகின்றது. அவன் தனது இரகசியங்களை யாருக்கும் சொல்ல விரும்புபவனும் இல்லை, யாரையும் காட்டிக் கொடுப்பவனும் இல்லை. இறுதியில் இந்த இளைஞனை அந்த ஊர் ஆண்கள் ஏன் சகித்துக் கொள்கின்றார்கள் என்பதற்கான காரணமும் தெரிகிறது. இந்தக் கிராமம் முழுதும் ஒரேயொரு இனக்குழு மட்டும் இருப்பதால், ஒரு பெண் வேறு ஆணைத் தேடிப் போனால் அது உடனே கிராமத்திற்குத் தெரிந்துவிடும்; தேவையில்லாத சிக்கல்கள் உறவுகளுக்குள் ஏற்பட்டுவிடும். மற்றக் காரணம், இவ்வளவு அலங்கோலமான ஒருவனைத் தேடி ஒரு பெண் போகின்றாள் என்றால், அப்பெண்ணின் கணவன் பாலியல் விடயத்தில் எவ்வளவு செயலற்றவனாக இருக்கின்றான் என்பது விளங்கும். ஆக இந்த விடயத்தை பொதுவில் வெளிப்படுத்த ஆண்கள் ஒருபோதும் விரும்புவதில்லை; எனெனில் பிறகு அவர்களின் மதிப்புச் சமூகத்தில் இல்லாமற் போய்விடும் (அதாவது இந்த தறுதலையிடமே உனது மனைவி போகின்றாள் என்றால் உனது பெறுமதி தான் என்ன?' என பிறர் கேள்விகளால் துளைத்துவிடுவார்கள்). ஆக இந்தக்காரணங்கள்தான் ஆண்களும் அந்த இளைஞனை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்கின்றார்கள்.
இறுதியில் இந்த ஆசிரியர் தன் காதலனை மணமுடிப்பதற்காய் இக்கிராமத்தை விட்டு நகரத்திற்குத் திரும்புகின்றார். இவர் போகும்போது, புதிய ஓர் ஆசிரியை ஊருக்குள் வருகின்றார். இவர் கிராமத்திற்கு முதற்தடவை வந்தபோது எப்படி அந்த இளைஞனைக் கண்டு முகஞ்சுழித்தாரோ அப்படியே இந்தப் புதிய ஆசிரியையும் அவனின் தறுதலைக் கோலங்கண்டு முகஞ்சுழிக்கின்றார். அவனைப் பற்றி தான் அறிந்த எல்லா விடயங்களையும் இவருக்குக் கூறிவிடுவோமா என இந்த ஆசிரியர் நினைக்கின்றார். இறுதியில் அவராகவே அவருக்குரிய தேர்வைப் பொறுத்து அவனை அறிந்துகொள்ளட்டுமென நினைத்து ஒன்றும் கூறாமல் இந்த ஆசிரியர் கிராமத்தை விட்டுப் போகின்றார். அவன் ஓர் அரசனைப் போல புன்னகைத்து ஆசிரியருக்கு விடைகொடுக்கின்றான். அந்த ஊரில் அவன் ஓர் 'அநாமதேயத் தீவாக' என்றும் இருப்பான் என்பதாய்க் கதை முடியும்.
..........
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
An Anonymous Island...Fell in love when I read it...தமிழில் வாசிப்பதும் சுகம் தான்...
10/06/2011 01:58:00 PMஒரு கனியின் கனிவான கனிரசத்தை
10/14/2011 03:17:00 AMகணிணி மூலம் கண்ணுற்ற என் கண்ணீன் மேல் சிகை உயர்ந்தது சிவந்த கண்களுடன் நன்றி ,
மிக அருமை...
Post a Comment