கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ப‌னி

Tuesday, October 18, 2011

வ‌ன் ப‌ழைய‌ கிங்ஸ்ட‌ன் தெரு, 401 நெடுஞ்சாலையோடு இணைகின்ற‌ ப‌குதியில் ந‌ட‌ந்து கொண்டிருந்தான். மெல்லிய‌தாக‌ப் பெய்த ப‌னி, அணிந்திருந்த‌ க‌றுப்ப‌ங்கியின் மேல் ம‌ல்லிகைப் பூவைப் போல‌ விழுந்து க‌ரைந்து போய்க்கொண்டிருந்த‌து.  வான‌த்தை மூடியிருந்த‌ க‌ருஞ்சாம்ப‌ல் போர்வை ஒருவ‌கையான‌ நெகிழ்வை மாலை நேர‌த்துக்குக் கொடுக்க‌, இலைக‌ளை உதிர்த்த‌ ம‌ர‌ங்க‌ள் த‌லைவிரிகோலமாய் வானை நோக்கி எதையோ யாசிப்ப‌து போல‌வும் தோன்றிய‌து. தானும் எல்லா இழைகளும் அறுந்து தனித்துவிடப்பட்ட தனியன்தானோ என்கிற வெறுமை இவ‌னுக்குள் ப‌ர‌வ‌த் தொட‌ங்கிய‌து. தலைவிரிக்கோல ம‌ர‌ங்க‌ளைப் போன்று, பனித்திடலில் இரு கால்கள் புதைய ந‌ட‌மாடும் ம‌ர‌ந்தானோ தானும் என உருவ‌கித்துக் கொண்டான்.

இன்ன‌ கார‌ண‌ம் என்றில்லாது க‌ண்க‌ளிலிருந்து நீர் க‌சிய‌த்தொட‌ங்கும‌ள‌வுக்கு மிகவும் நெகிழ்ந்திருந்தான். க‌ண்ணீரைக் கையால் துடைக்காது, அது விழுகின்ற‌ ப‌னியோடு சேர்ந்து க‌ரைந்து போய்க்கொண்டிருந்ததை அச‌ட்டை செய்து ந‌ட‌ந்த‌ப‌டியிருந்தான். மெல்லிய‌ தூற‌லாய் விழும் ப‌னியை நாவை நீட்டி ருசிப்ப‌து அவ‌னுக்கு எப்போதும் பிடித்த‌மான‌ செய‌லென்ப‌தால் இன்றும் ப‌னியைச் சுவைத்துப் பார்த்தான். உவ‌ர்ப்ப‌து போல‌ப்ப‌ட்ட‌து. இது ப‌னியில் இய‌ல்ப‌ல்ல‌வே, த‌ன் நினைவுதான் அதைக் க‌ச‌ப்பாக்கிற‌து போலும் என‌ எண்ணிக்கொண்டான். இப்ப‌டியே நெகிழ்ந்த‌ நிலையில் தொட‌ர்ந்தும் ந‌ட‌ந்துபோனால், வாக‌ன‌ங்க‌ள் நூறு கிலோமீற்ற‌ருக்கு மேலாய் விரையும் நெடுஞ்சாலையில் குதித்துவிட‌க்கூடுமென‌ அஞ்சி இட‌துப‌க்க‌ வீதியிற்குள் இற‌ங்கினான். 86ம் இல‌க்க‌ ப‌ஸ் வ‌ந்துகொண்டிருந்த‌து, ச‌ட்டென்று ஏறி அத‌னுள் அம‌ர்ந்து கொண்டான்.

அவ‌ன் க‌ன‌டாவிற்கு வ‌ந்து இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாகி விட்ட‌ன‌. இல‌ங்கையில் இருந்து வெளிநாடுக‌ளுக்கு ஒழுங்கான‌ விஸா இல்லாது வ‌ரும் அனைவ‌ரைப் போல‌வே அவ‌னும் வ‌ந்து சேர்ந்திருந்தான். வ‌ருகின்ற‌ வ‌ழியில் க‌ள்ள‌ங்க‌ள் செய்த‌த‌ற்கு ப‌ய‌ப்பிட்ட‌தை விட‌, க‌ன‌டாவிற்கு வ‌ந்த‌பின் ப‌ய‌ண‌த்திற்காய் ப‌ல‌ரிட‌ம் வாங்கிய‌ க‌ட‌ன் காசுதான் இன்னும் அச்சுறுத்திய‌து. அது போதாதென்று இவ‌னின் தாயார், 'வெளிநாட்டுக்குப் போய் மாறிவிடாதை, உன‌க்குப் பின் இர‌ண்டு த‌ங்க‌ச்சிமார் இருக்கின‌ம் என்ப‌தை ம‌ற‌ந்துவிடாதே' என‌ அடிக்க‌டி நினைவுப‌டுத்தியுமிருந்தார். அம்மாவின் இந்த‌ ந‌ச்ச‌ரிப்புத் தாங்காம‌லே, 'அங்கை போன‌வுட‌னையே ஒவ்வொரு காலையும் ஒரு த‌ங்க‌ச்சிக்கென‌ தாரை வார்த்து, உழைத்துக் காசு அனுப்புகிறேன் க‌வ‌லைப்ப‌டாதைய‌னை' என‌ எரிச்ச‌லுட‌ன் இவ‌ன் சொன்னான்.

மொன்றிய‌ல் விமான‌ நிலைய‌த்தில்தான் முத‌லில் வ‌ந்திற‌ங்கினான். 'எங்கே பாஸ்போர்ட்?' என‌க் கேட்க‌, இல‌ங்கையில் உள்நாட்டுப் போர் தீவிர‌மாக‌ ந‌ட‌க்கின்ற‌தென‌ச் சொல்லி க‌ன‌டா இமிக்கிரேச‌னில் இர‌ண்டு கைக‌ளையும் உய‌ர்த்தினான். கிரேஹ‌வுண்ட் ப‌ஸ் எடுத்து ரொறொண்டோவிற்கு அடுத்த நாள் வ‌ந்து சேர்ந்திருந்தான். இவ‌னுக்குத் தெரிந்த‌ உற‌வினொருவ‌ர் ரொறொண்டோவில் இருந்த‌து ந‌ல்ல‌தாய்ப் போய்விட்ட‌து. ஓர் அறையுள்ள‌ அபார்ட்மெண்டில் ஏற்க‌ன‌வே இருந்த‌ மூன்று பேருட‌ன் நான்காவ‌து ஆளாக‌ இணைந்தான். ரொறொண்டோ போயிற‌ங்கிய‌ இர‌ண்டாம் நாளே, த‌ன் தாய் கூறிய‌தை ம‌ற‌ந்துவிடாது, 'அண்ணை என‌க்கொரு வேலை எடுத்துத் தாங்கோ' என‌ உறவுக்காரரிடம் கேட்டான். 'உன்ர‌ வ‌ய‌சுக்கு ஸ்கூலுக்குப் போற‌தை முத‌லில் பார். இல்லாட்டி பிற‌கு எங்க‌ளைப் போல‌ கிச்ச‌னுக்குள்ளேதான் முட‌ங்கிக் கிட‌க்க‌ வேண்டும்'  என‌ச் சிவா அண்ணா இவ‌னுக்குக் கூறினார். இவ‌னுக்கு ப‌தினேழு வ‌ய‌து அப்போதுதான் முடிந்திருந்த‌து.


வெஸ்ட் ஹில் உய‌ர்க‌ல்லூரிக்குப் ப‌டிப்ப‌த‌ற்காய் செப்ரெம்ப‌ரிலிருந்து போக‌த் தொட‌ங்கியிருந்தான். பாட‌சாலை முடிந்த மாலை நேர‌த்தில் ஒரு வேலையும் கிடைத்திருந்த‌து. 'கைக‌ளைத் தூக்கிய‌ கேஸ்' இன்னும் முடியாத‌தால் சிவா அண்ணாவின் ந‌ம்ப‌ரில்தான் வேலை செய்ய‌த் தொட‌ங்கினான். போக‌த் தொட‌ங்கியிருந்த‌ வேலைத்த‌ள‌த்தில் ஆடைக‌ள் தோய்ப்ப‌த‌ற்கான‌ இர‌சாய‌ன‌க்க‌ல‌வையைத் த‌யாரிப்பது நிகழ்ந்து கொண்டிருந்தது. இவ‌ன‌து தொழில், அந்தக் கெமிக்க‌லை நான்கு 2லீற்ற‌ர் க‌ல‌ன்க‌ளில் நிர‌ப்புவ‌தும், அதை எடுத்து ஒழுங்காய் பெட்டிக்குள் அடுக்கி வைப்ப‌தும் என்பதாய் இருந்தது. வேலை பார்க்க‌ எளிதாக‌ இருந்தாலும் ஒவ்வொரு 30செக்க‌ன்க‌ளில் நான்கு க‌ல‌ன்க‌ள் நிர‌ம்ப‌ நிர‌ம்ப‌ எடுத்து, முதுகு வலிக்க வலிக்க அடுக்க‌வேண்டும். கொஞ்ச‌ம் நேர‌ம் பிந்தினாலும் க‌ல‌ன்க‌ள் நிர‌ம்பி வ‌ழிய‌த் தொட‌ங்கிவிடும். இது போதாதென்று கண்க‌ளுக்கு பாதுகாப்புக் க‌ண்ணாடி எப்போதும் அணிந்து கொண்டும் இருக்க‌வேண்டும். த‌ப்பித் த‌வ‌றி கெமிக்க‌ல் சிந்தி க‌ண்க‌ளைப் பாதித்து விட‌க்கூடாதென்ப‌த‌ற்கான‌ முற்பாதுகாப்பு இது.

வேலைக்குப் போன‌ முத‌ல்நாள், வேலை முடியும்போது துடைப்ப‌த்தைத் த‌ந்து இட‌த்தைக் கூட்டிச் சுத்த‌மாக்கச் சொன்னார்கள். இல‌ங்கையில் இருந்த‌போது தும்புக்க‌ட்டை இருந்த திசைக்கே போகாத‌வ‌னுக்கு இது ஒரு மான‌ப் பிர‌ச்சினையாக‌ப் போய்விட்ட‌து. வீட்டில் அம்மாதான் இதையெல்லாம் செய்வார். அவ‌ருக்கும் ஏலாதென்றால் த‌ங்க‌ச்சிமார்தான் வீட்டைக் கூட்டுவ‌து பெருக்குவ‌து. க‌ன‌டாவில் இப்படியாயிற்றே தன் விதியென நொந்துகொண்டான். ஊரில் பெடிய‌ங்க‌ளுக்கு இருக்கும் எழுத‌ப்ப‌டாத‌ சொகுசான‌ வாழ்க்கையைக் க‌ண்டு, பொம்பிளைப்பிள்ளைக‌ள் மனமெரிந்து சாப‌ம் போட்டுத்தான் த‌ன்னைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ நிலை இப்போது வ‌ந்திருக்கின்ற‌தோ என‌ நினைத்துக் கொண்டான்.

பாட‌சாலைக்குப் போக‌ ஆறு ம‌ணித்தியால‌ம், வேலைக்கு எட்டு ம‌ணித்தியால‌ம், ப‌ஸ்சில் போய்வ‌ர‌ இர‌ண்டு ம‌ணித்தியால‌ம் என ஒருநாளில் ப‌தினாறு ம‌ணித்தியால‌ங்கள் இப்படியாகப் போய்விடும். ச‌னி ஞாயிறுக‌ளிலும் சும்மா இருக்காது வீடு வீடாக‌ப் போய் ஃபிளைய‌ர்ஸ் போட‌வும் தொட‌ங்கியிருந்தான். இவ‌ன் க‌ன‌டா வ‌ந்து ஒரு வ‌ருட‌ம் ஆன‌போதுதான் சிவா அண்ணா ஒரு யோச‌னை கூறினார். 'இப்ப‌டி நாங்க‌ள் நான்கு பேரும் வீணாய் வாட‌கைக்கு ப‌ண‌த்தைச் செல‌விடுவ‌தை விட‌, ஒரு வீட்டை நான்கு பேருமாய்ச் சேர்ந்து வாங்கி மோட்கேஜ் க‌ட்டுவோம்' என்றார். இவ‌ன் உட்ப‌ட‌ எல்லோரும் த‌லா 3000 டொல‌ர்க‌ள் ட‌வுன் பேமேண்ட் போட்டு வீடொன்றை மோர்னிங்சைட் ப‌க்க‌மாய் வாங்கினார்க‌ள். யாரேனும் ஒருவ‌ர் முத‌லில் திருமணம் செய்யும்போது, வீட்டை விற்றுவிட்டு எல்லோரும் ச‌ம‌னாக‌க் காசைப் பிரித்துக் கொள்வோம் என‌வும் தீர்மானித்திருந்த‌ன‌ர்.

ஒருநாள் பாட‌சாலைக்கு ந‌ட‌ந்து போய்க்கொண்டிருந்த‌போது பிலிப்பைன்கார‌ப் பெட்டை ஒருத்தி த‌ன் கையுறையைத் த‌வ‌றவிட்டு ஹெட்போனில் பாட்டுக் கேட்டபடி போய்க்கொண்டிருப்ப‌தைக் க‌ண்டான். இவ‌ன் ஓடிப்போய் நில‌த்தில் வீழ்ந்திருந்த‌ கையுறையை எடுத்து, முன்னே போய்க்கொண்டிருந்த‌ அவ‌ளின் தோளைத் த‌ட்டிக் கொடுத்தான். 'மிக்க‌ ந‌ன்றி.  இது என் அம்ம‌ம்மா மூன்று வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் கிறிஸ்ம‌ஸ் ப‌ரிசாக‌த் த‌ந்த‌து. இப்போது அம்ம‌ம்மா உயிரோடு இல்லை. அவ‌ரின் நினைவாக‌ இதை வைத்திருக்கின்றேன். தொலைத்திருந்தால் அம்ம‌ம்மாவைக் கைவிட்ட‌து போல‌ வ‌ருந்தியிருப்பேன். மீண்டும் ந‌ன்றி' என்றாள். 'நீங்க‌ள் அதிஷ்ட‌ம் செய்த‌வ‌ர்க‌ள். உங்க‌ளின் நெருங்கிய‌ உற‌வுக்கார‌ர்க‌ள் எல்லோரும் இங்கிருக்கின்றார்க‌ள். என‌க்கென்றுதான் எவ‌ரும் இங்கு இல்லை' என‌ இவ‌ன் சொன்னான். 'Aaah..I am really sorry to hear it' என உண்மையிலே இவன் நிலை கண்டு வருந்தினாள் அவ‌ள்.  பிற‌கு ஒருநாள்  ஹ‌லோவீனுக்கு த‌ன் த‌ம்பியோடு 'Trick or Treat' கேட்க‌, இவ‌ன் இருந்த‌ வீட்டுக் க‌தவைத் த‌ட்டினாள். 'நீ எங்க‌ளுக்கு அருகில்தான் வ‌சிக்கின்றாய் என்ப‌து என‌க்குத் தெரியாதே' என‌ இவன் கதவைத் திறந்ததைப் பார்த்து அவள் சொன்னாள். 'பேய்க‌ள் அருகில் வ‌சித்தால் தான் என்ன‌, தொலைவில் வ‌சித்தால் தான் என்ன‌? பேய்க‌ள் எப்போதும் பேய்க‌ள் தானில்லையா?' என‌ச் சிரித்தபடி இவ‌ன் கூறினான்.

அவ்வ‌ப்போது பாட‌சாலையில் இருவரும் ச‌ந்தித்துக் க‌தைத்துக் கொண்டார்க‌ள். அவ‌ளுக்காக‌வே இவ‌ன் பாட‌சாலை தொடங்குவதற்கு அரை ம‌ணித்தியால‌ம் முன்பாகப் க‌ல்லூரிக்குப் போக‌த் தொட‌ங்கினான். பாடசாலை முடிந்து மாலையில் நின்றும் அவ‌ளோடு ஆறுத‌லாக‌ப் பேச‌லாம் என்றாலும், மாலை நேர‌ வேலை அத‌ற்கு இட‌ங்கொடுப்ப‌தில்லை. ஒருநாள் அவ‌ள் Thanks Giving டின்ன‌ருக்கு அழைத்தாள். இவ‌ன் தனிமையில் இருக்கின்றான் என்றெண்ணியோ என்ன‌வோ தெரியாது, க‌ட்டாய‌ம் வ‌ர‌வேண்டுமென கைகளைப் பிடித்தபடி சொன்னாள். இவ‌ன் த‌ன்னை அவ‌ளின் குடும்ப‌த்துக்கு கலாதியாக அறிமுக‌ம் செய்ய‌வேண்டும் என்ப‌த‌ற்காய் Levi's ஜீன்ஸும், CK ஷேர்ட்டும் அணிந்து கொண்டு போயிருந்தான். க‌ன‌டா வ‌ந்து ரீவியை அவ்வ‌ப்போது பார்த்த‌தில் Thanks Giving டின்னருக்கு விருந்தாளிக‌ளாக‌ப் போகின்றவ‌ர்க‌ள் அநேக‌மாய் வைன் போத்த‌ல்களைக் கொண்டு போவ‌தை அவதானித்திருந்தான். அவ‌ள் வீட்டுக்குப் போக‌முன்ன‌ர் லிக்க‌ர் ஸ்ரோரிற்கு போய் கொஞ்ச‌ம் விலைகூடிய‌ வைனையும் வாங்கினான். தான் வைன் வாங்கும்போது தெரிந்த‌ முக‌ங்க‌ள் எதுவும் கடையில் தெரிகிற‌தா என‌ச் சுற்றுமுற்றும் நோட்ட‌மும் விட்டான். தெரிந்த‌ ச‌னம் தான் வைன் வாங்குவதைக் க‌ண்டு, இந்த‌க் க‌தை இல‌ங்கைக்குப் போனால், இவ‌ன் முழுநேர‌க் குடிகார‌ன் ஆகிவிட்டான் என‌ப் புல‌ம்பி புல‌ம்பி த‌ன்ரை தாய் ம‌னுசி கோயில் கோயிலாக‌ ஏறக்கூடுமென‌கிற‌ ப‌ய‌ம் தான் இத‌ற்குக் கார‌ண‌ம். தாய்க்காரி அங்கையிருக்கின்ற கோயில்க‌ளில் வைக்கின்ற‌ நேத்திக்கும், அபிசேசங்க‌ளுக்கும் இவ‌ன் தானே மாய்ந்து மாய்ந்து உழைத்து, அத‌ற்கும் ப‌ண‌ம் அனுப்ப‌ வேண்டியிருக்கும்.

அவ‌ளின் வீட்டுக்குள் போன‌போது ஒரே அல்லோலகல்லோலமாய் இருந்தது. ஏதோ பிலிப்பையின்சையே அப்ப‌டியே க‌ன‌டாவிற்குத் தூக்கிக் கொண்டுவ‌ந்த‌மாதிரி வீடு முழுக்க‌ச் ச‌ன‌மாய் இருந்த‌து. அவ‌ளின் அம்மா, 'நீ சோறு சாப்பிடும் பழக்கமுடையவனா?' என்றொரு முக்கியமான கேள்வியைக் கேட்டார். 'ஓம். ஒருநாளைக்கு ஒருமுறை...' என்றான் இவ‌ன். 'நாங்க‌ள் மூன்று நேர‌மும் சாப்பிடுகின்ற‌வ‌ர்க‌ள். அத‌னால்தான் திட‌காத்திர‌மாய் இருக்கின்றோம்' என்றார். இவ‌னுக்கு அவ‌ரின் உட‌லின் அள‌வைப் பார்த்த‌போது சூமோ வீர‌ர்க‌ள்தான் நினைவுக்கு வந்தார்கள். இதைத்தான் திட‌காத்திர‌ம் என்று இவா கூறுகின்ற‌வோ என‌ நினைத்து இவ‌னுக்குச் சிரிப்பு வ‌ந்த‌து. 'எங்க‌ளின் குடும்ப‌த்தின் அள‌வைப் பார்த்து, இதைவிட‌ த‌னியே இருப்ப‌து ந‌ல்ல‌தென‌ யோசிக்கின்றாயோ' என‌க் கேட்டப‌டி இவனை அவள் விருந்திற்குக் கூட்டிச் சென்றாள். 'அப்ப‌டி என்றில்லை, எப்போதும் இல்லாத‌ ஒன்றுக்காய்தானே ம‌ன‌ம் ஆலாய்ப் ப‌ற‌க்கும்' என்றான் இவ‌ன்.

பிற‌கான நாட்களில், இவன் ஆட்க‌ள் குறைவாக‌ இருக்கும் ஷோக்க‌ளுக்கு அவ‌ளோடு ப‌ட‌ம் பார்க்க‌ச் சென்றான். ஆட்க‌ள் நிறைய‌க் கூடும் கிள‌ப்புக்க‌ளுக்கும் நில‌வு ஒளிந்த‌ இர‌வுக‌ளில் அவளை கூட்டிப் போக‌த் தொட‌ங்கினான்.  இலங்கையில் இருக்கும் தன் குடும்ப‌த்திற்கு ஆறு நாள், இவ‌ளுக்கு ஒரு நாளென‌ ச‌னிக்கிழ‌மைக‌ளில் வேலை செய்வ‌தையும் த‌விர்த்தான். செஞ்சோற்றுக் கட‌ன் போல‌,  இர‌ண்டு த‌ங்க‌ச்சிமாருக்குச் செய்ய‌வேண்டிய‌ க‌டமைக‌ள் முன்னே இருக்க‌, அதுவ‌ரை அவ‌ள் காத்திருப்பாளா என்ப‌து குறித்த நிச்சய‌மின்மைக‌ளும் தெரிந்த‌ன. இத‌ற்கிடையில் இவ‌னுடைய‌ ப‌ள்ளிக்கூட‌ ந‌ண்ப‌ர்க‌ள், 'எந்த‌ப் பெட்டைக‌ளோடு என்றாலும் திரிய‌டா, ஆனால் பிலிப்பீனோ பெட்டைக‌ளோடு ம‌ட்டும் ச‌க‌வாச‌ம் வைத்துக்கொள்ளாதே. செல்ல‌ம் கொஞ்சிக் கொஞ்சியே க‌ற‌க்க‌ வேண்டிய‌தை க‌ற‌ந்துவிட்டு வெறுங்கையோடுதான் அனுப்புவார்க‌ள்' என‌வும் எச்சரித்தார்க‌ள். தான் வேலை செய்கிற‌ ப‌க்ர‌றியில் இருக்கிற‌ சூப்ப‌ர்வைச‌ர் திட்டிக்கொண்டும் சுர‌ண்டிக்கொண்டும் தானிருக்கிறார். அதையே ச‌கித்துக் கொண்டுதானே இருக்கிறேன். இவ‌ள் என்னிட‌ம் இருந்து எதைச் சுர‌ண்டிக் கொண்டு போனாலும் செல்ல‌ம் கொஞ்சித்தானே கொண்டு போக‌ப்போகிறாள்; போனால் போக‌ட்டும் என‌ எண்ணிக் கொண்டான். ந‌ண்ப‌ர்க‌ள் கூறிய‌துபோல‌ அவ‌ள் எதையும் இவ‌னிட‌மிருந்து சுர‌ண்ட‌வும் இல்லை, தானாகக் க‌ழ‌ற்றிக் கொள்ள‌வும் இல்லை. இவ‌ன் தான் அவ‌ள் உற‌வை வெட்ட வேண்டியதாகப் போயிற்று.


சிவா அண்ண‌ன் திரும‌ண‌ம் செய்ய‌ப் போகின்றேன் என்றார். அவ‌ர் இந்த வீட்டில் மூன்று இள‌ந்தாரிப் பெடிய‌ங்க‌ளோடு மனைவியைக் கூட்டிக்கொண்டு வந்து இருக்க‌ அவ்வ‌ள‌வாய் விரும்ப‌வில்லை. வ‌சிக்கும் வீட்டை விற்ப‌தென‌த் தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து. இவ‌ன் மோர்னிங்சைட்டிலிருந்து 50 கிலோமீற்ற‌ருக்கு அப்பாலிருந்த‌ மிஸிசாக்கா ப‌க்க‌மாய் இட‌ம்பெய‌ர்ந்தான். அவ‌ளோடு உற‌வைத் தொட‌ர‌ முடியாம‌ற் போன‌த‌ற்கு தூர‌ம் ம‌ட்டும் ஒரு கார‌ணமில்லை; நீண்ட‌கால‌ உற‌வாய் அது இருக்க‌முடியாது என்று ய‌தார்த்த‌மே இவ‌னை இன்னும் ப‌ய‌முறுத்திய‌து. த‌ங்கைக‌ள் இருவ‌ருக்கும் திரும‌ண‌ஞ் செய்துவைத்த‌ பின்னே எதையும் த‌ன‌க்காய்ச் செய்ய‌லாம் என்கிற‌ ச‌ம்பிர‌தாய‌ம் ஒருப‌க்க‌ம் துன்புறுத்தியது. க‌லாச்சார‌மும், த‌ன் ச‌மூக‌மும் த‌ன்னை எல்லாத் திசைக‌ளிலும் இறுக்குகின்ற‌து என்ப‌தை எல்லாம் விரிவாக‌ விள‌க்கிச் சொல்லாது, தான் மிஸிசாக்காவிற்கு இட‌ம்பெய‌ர்கிறேன் என்ப‌தை ம‌ட்டும் இவ‌ன் அவ‌ளுக்குச் சொன்னாள். அவ‌ளுக்கும் இனி என்ன‌ நிக‌ழும் என்ப‌து விள‌ங்கியிருக்க‌க் கூடும். 'உட‌லின் மூலைகளுக்குள் ஒடுங்கியிருந்த காமத்தின் அரும்புகளை கிளர்த்தி, என்னுடன் த‌ன் உட‌லைப் ப‌கிர்ந்த‌வ‌ள் அவள்' என்கின்ற‌ நினைவை இவ‌ன் த‌ன‌க்குள் என்றைக்குமாய்ப் ப‌த்திர‌ப்ப‌டுத்திக் கொண்டான்.

மீண்டும் ச‌னிக்கிழ‌மைக‌ளிலும் வேலைக்குப் போக‌த் தொட‌ங்கினான். ப‌குதி நேர‌மாய் ஹ‌ம்ப‌ர் கொலீஜுக்கு ப‌டிக்க‌ப் போனான். ஒரு த‌ங்க‌ச்சிக்கு பிரான்சில் இருந்து பொருத்த‌ம் ஒன்று பொருந்தி வ‌ர‌ பாரிஸூக்கு நிறைய‌ச் சீத‌ன‌க்காசு கொடுத்து தங்கச்சியை அனுப்பி வைத்தான். பிரான்ஸ் போன‌ த‌ங்க‌ச்சி சிலவருடங்களின் பின், த‌ன் ம‌னுச‌னின் உற‌வுக‌ள் யாரோ சுவிசிலாந்திலிருக்கும் ஒருவ‌ருக்குப் பெண் தேடுகின்ற‌ன‌ர் என்று அறிந்து இவ‌னுக்குச் சொன்னாள். ஆனால் அவ‌ர் ஏதோ இய‌க்க‌த்திலிருந்தவ‌ர் என்றாள். 'முன்னாள் இய‌க்க‌மோ இன்னாள் இய‌க்க‌மோ, ஆள் ஒழுங்கான‌வ‌ராய் இருந்தால் போதும்' என்று அவரைப் பற்றி விசாரித்து அறிந்து, தன் ம‌ற்ற‌த் த‌ங்க‌ச்சியை சுவிசிலாந்திற்கு அனுப்பி வைத்தான். 'இய‌க்க‌த்திலிருந்தார்க‌ளோ அல்லது இல்லையோ, ஆனால் சீத‌னம் வாங்குகின்ற‌ க‌லாச்சார‌த்தை ம‌ட்டும் ம‌ற‌க்காம‌ல் இருக்கின்றார்க‌ள்' என்று இவ‌ன் சீதனமாய் அனுப்பக் கேட்ட‌ காசின் அளவைப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

த‌ங்க‌ச்சிமார் இர‌ண்டு பேரும் வெளிநாட்டுக்குப் போன‌பிற‌கு இல‌ங்கையில் தாயும் த‌க‌ப்ப‌னும் ம‌ட்டும் த‌னியே இருந்தார்க‌ள். இவ‌ன் ஹ‌ம்ப‌ர் கொலீஜில் இர‌ண்டு வ‌ருட‌ங்களில் ப‌டித்து முடிக்க வேண்டிய பாடங்களை ஐந்து வருடங்களாய் எடுத்து, டிப்ளோமா பெற்றான். ப‌ட்ட‌ம‌ளிப்பு விழாவிற்கென‌ த‌ன் தாயையும் த‌க‌ப்ப‌னையும் இல‌ங்கையிலிருந்து எடுப்பித்தான். வ‌ந்த‌ அவ‌ர்க‌ளை 'இனி அங்கே போய் என்ன‌ செய்ய‌ப்போகின்றீர்க‌ள்' என‌க் சொல்லிவிட்டு அவ‌ர்க‌ளைத் தானே கன‌டாவிற்குள் வைத்து ஸ்பொன்ச‌ரும் செய்தான். வீட்டுக்கு வருகின்ற‌ ச‌ன‌ம் எல்லாம் 'இவ‌னுக்கு எப்போது திரும‌ண‌ம்?' என்ப‌தை ம‌ட்டும் ம‌ற‌க்காம‌ல் கேட்டு விட்டுச் செல்வார்க‌ள். இந்த‌ ந‌ச்ச‌ரிப்புத் தாங்காமலே உற‌வின‌ர்க‌ள் வீட்டுக்கு வ‌ருகின்றார்க‌ள் என்றால் வீட்டை விட்டு வெளியே போகின்ற‌வ‌னாய் இவன் மாறிப்போனான். தாய் ம‌னுசியும்,'த‌ம்பி நான் க‌ண்ணை மூடுகிற‌துக்குள்ளை பேர‌ப்பிள்ளைக‌ளை பார்த்துவிட்டு க‌ண்ணை மூட‌னோனும‌டா' என‌ த‌மிழ்ப்ப‌ட‌ சென்டிமென்ட‌லில் அடிக்க‌டி சொல்ல‌த் தொட‌ங்கிவிட்டார். பிலிப்பைன்காரியைத் திரும‌ண‌ம் செய்வோமோ என்றுகூட‌ இவ‌ன் ஒருக‌ண‌ம் நினைத்தான். ஆனால் அவ‌ளைத் திரும‌ண‌ஞ்செய்தால் த‌மிழ் ஆண்க‌ளுக்குக் கிடைக்கக்கூடிய‌ செளக‌ரிய‌ங்க‌ள் ஒன்றும் கிடைக்காது என்று ஆழ‌மாய் யோசித்து அந்த‌ எண்ண‌த்தைக் கைவிட்டான்.

ஊரிலையே பெண் பார்ப்ப‌தே எல்லா வ‌ழிக‌ளிலும் மிக‌ச் சிற‌ந்த‌தென‌ முடிவெடுத்து, அப்போது அதிக‌ ப‌ட‌ங்க‌ளில் ந‌டித்துக்கொண்டிருந்த‌ சிநேகா மாதிரி ஒரு பெண் பார்க்க‌ச் சொன்னான். 'சிநேகா மாதிரி என்றால் என்ன‌மாதிரி?' என‌ அங்கே இவ‌னுக்காய்ப் பெண் பார்த்துக்கொண்டிருந்த‌ சித்த‌ப்பா ரெலிபோனில் கேட்டார். அப்போதுதான், சினிமாவே பார்க்காத‌ சித்த‌ப்பாவை பெண் பார்க்க‌ புரோக்க‌ராய் வைத்திருப்ப‌து எவ்வ‌ள‌வு ஆப‌த்து என்று விள‌ங்கிய‌து. அவ‌ர் அப்ப‌டிக் கேட்ட‌தால் வ‌ந்த‌ எரிச்ச‌லில், 'பார்த்திப‌ன் க‌ன‌வில் வ‌ந்த‌ சிநேகா மாதிரி' என்றான். 'ச‌ரி த‌ம்பி, நான் உந்த‌ச் சினிமாப் ப‌ட‌ம் ஒன்றும் பார்ப்ப‌தில்லைத்தானே, சித்தி தான் ஒன்றுவிடாம‌ல் எல்லாம் பார்க்கிற‌வா. அவாவிட‌ம் கேட்டு சிநேகாவைத் தெரிஞ்சு கொள்கிறேன்' என்றார் சித்த‌ப்பா. இவ‌ன் இதைச் சொன்ன‌த‌ன் பிற‌குதான் அந்த‌ப் ப‌ட‌த்தில் வ‌ருகிற‌ சிநேகாவிற்கு இடுப்பைத் தொடும் வ‌ரை இருந்த‌ த‌லைம‌யிர் உண்மையான‌தா அல்ல‌து போலியான‌தா என்ற‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்த‌து.

இர‌ண்டு வ‌ருட‌ டிப்ளோமா கோர்ஸை ஹ‌ம்ப‌ர் கொலிஜீல் செய்த‌தை, நான்கு வ‌ருட‌ம் யூனிவ‌சிற்றியில் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு டிகிரி வாங்கிய‌ அள‌வுக்கு க‌தையை மாற்றினான். மெஷின் ஒப்பிரேட்ட‌ராய் வேலை செய்வ‌தை 'மெஷின் எஞ்சினிய‌ர்' என்று புதுப்பெய‌ரும் கொடுத்தான். த‌குதிக‌ளைப் பொலிஷ் ஆக்க‌ ஆக்க‌ த‌ரப்ப‌டும் சீத‌ன‌த்தின் அள‌வையும் கூட்ட‌லாம் என்ப‌தே இத‌ற்குக் கார‌ண‌ம். த‌ங்க‌ச்சிமாருக்குச் சீத‌ன‌ம் கொடுத்த‌போது ம‌ன‌மெரிஞ்சு எரிஞ்சு கொடுத்த‌ த‌ன் க‌ட‌ந்த‌ கால‌த்தை ஒருமுறை நினைத்துப் பார்த்தான். 'கொடுத்த‌ காசை எப்ப‌டியேனும் திருப்பி எடுக்க‌த்தானே வேண்டும்' என‌ பிற‌கு த‌ன‌க்குத்தானே ச‌மாதான‌மும் செய்து கொண்டான்.


சுக‌ந்தியின் பொருத்த‌த்தோடு இவ‌னின் ஜாத‌க‌ம் பொருந்தியிருந்த‌து. சுக‌ந்தியின் புகைப்ப‌ட‌த்தைப் பார்த்த‌போது சிநேகாவின் எந்த‌ச் சாய‌லும் இல்லாம‌லிருந்த‌து. சில‌வேளைக‌ளில் நேரில் பார்க்கும்போது சிநேகா போல‌ இருக்க‌க்கூடுமென‌த் த‌ன்னைத் தேற்றிக் கொண்டான். சுக‌ந்தியை இல‌ங்கையில் போய் க‌லியாண‌ங்க‌ட்ட‌ வேலையில் இர‌ண்டு வார‌ங்க‌ள்தான் விடுமுறை கொடுத்திருந்தார்க‌ள். புது மெஷின் ஒன்றை ப‌க்ர‌றியில் இற‌க்கியிருந்ததால், அத‌ற்கு மேல் லீவு த‌ர‌மாட்டோம் என‌ உறுதியாய்க் கூறியிருந்தார்க‌ள். இல‌ங்கைக்குப் போகமுன்ன‌ர், சுக‌ந்தியை பிற‌கு கனடாவிற்கு ஸ்பொன்ச‌ர் செய்யும்போது, ஒரு பிர‌ச்சினையும் வ‌ர‌க்கூடாதென்ப‌த‌ற்காய் லோய‌ரைப் பார்க்க‌ச் சென்றான். லோய‌ர் 'திரும‌ண‌த்திற்கு இலங்கை போக‌முன்ன‌ரே க‌டித‌ங்க‌ளை மாறி மாறி உங்களுக்குள் அனுப்பிக் கொள்ளுங்கள்' என்றார். தொலைபேசியில் சுகந்தியோடு க‌தைப்ப‌தை பேப்ப‌ர் ஸ்டேட்ன்மென்டில் சான்றாதார‌ங்க‌ளாய் வைத்திருங்க‌ள் என்றும் சொன்னார். திரும‌ண‌ம் ந‌ட‌க்கும்போது இன்ன‌ இன‌ன‌ கோண‌த்தில் ப‌ட‌ங்க‌ள் எடுக்க எடுக்க‌வேண்டுமென‌க் கூறிவிட்டு, க‌ட்டாய‌மாய் ஒரு புகைப்ப‌ட‌ம் தாலியை போக‌ஸ் ப‌ண்ணி நல்ல தெளிவாய் எடுக்க‌வேண்டும், ம‌ற‌ந்துவிடாதீர்க‌ள் என‌வும் ப‌ய‌முறுத்தினார். இதைவிட‌ ஹ‌னிமூன் போகும்போது நிற்கும் ஹொட்ட‌லுக்குக் கட்டும் பில்,  இரண்டு பேரும் இயற்கைக் காட்சிகளின் பின்னணியில், சற்று நெருக்க‌மாய் நின்று கொஞ்ச‌ப் ப‌ட‌ங்க‌ள்... என‌ ஒரு நீண்ட‌ ப‌ட்டிய‌லைய‌க் கொடுத்தார். இவ‌னுக்கு இதையெல்லாம் பார்த்து, இன்னும் கொஞ்ச‌க் கால‌ம் போனால் 'ஹ‌னிமூனில் க‌ட்டிலில் என்ன‌ ந‌ட‌ந்த‌து?' என்பதற்கும் புகைப்ப‌ட‌ச் சான்று இமிக்கிரேசன்காரன் கேட்பான் போல‌க் கிட‌க்கிற‌து என நினைத்துக் கொண்டான்.

இவ‌ன் இல‌ங்கைக்குப் போய் தன் விருப்புக்கேற்றமாதிரி இல்லாது, க‌ன‌டா இமிக்கிரேச‌னின் 'யாப்புக்கு' ஏற்ற‌மாதிரி திரும‌ண‌த்தைச் செய்துகொண்டான். நுவ‌ரெலியாவிற்கு இவனும் சுகந்தியும் ஹ‌னிமூனுக்குப் போனார்க‌ள். 'இந்த‌ ஹொட்ட‌லுக்குத்தான் சிறிமா ப‌ண்டார‌நாய‌க்காவின் குடும்ப‌ம் விடுமுறைக்கு வ‌ருகின்ற‌வ‌ர்க‌ள்' என‌க் ஹொட்ட‌ல் மானேஜ‌ர் சொன்னார். 'ப‌ர‌வாயில்லை, மாமா ந‌ல்ல‌ வசதியான இட‌மாய்ப் பார்த்துத்தான் புக் செய்திருக்கின்றார்' என‌ இவன் சிரித்த‌ப‌டி சுக‌ந்திக்குச் சொன்னான். இர‌வு சுக‌ந்தியோடு முதன்முதலாக முய‌ங்கிய‌போது, இவ‌னுக்கு வேலை செய்யுமிட‌த்தின் மெஷின் ச‌த்த‌ம்தான் மூளைக்குள் ஓடிய‌து. க‌ன‌டாவில் வேலை, காசு என ஓடியோடி த‌ன் மென்னுண‌ர்வுக‌ளைத் தொலைத்துவிட்டேன் என‌ச் ச‌லித்துக்கொண்டான். இனி க‌ன‌டா போய் நிறைய‌த் த‌மிழ் ப‌ட‌ங்க‌ள் பார்த்துத் த‌ன் காத‌ல் உண‌ர்வை மீட்டெடுக்க‌வேண்டுமென‌ அந்தவேளையிலும் த‌ன‌க்குள் ச‌ப‌த‌மும் எடுத்தான்.

சுக‌ந்தி க‌ன‌டா வ‌ந்த‌போது, க‌ன‌டாவிலிருப்ப‌வ‌ர்க‌ளுக்கென‌ ஒரு ரிஷ‌ப்சன் வைத்தான். சுக‌ந்திதான் எதையோ ப‌றிகொடுத்த‌வ‌ள் போல‌ சோகமாய் இருந்தாள். இப்போது எல்லாம் புதிதாக‌ இருக்கும் போக‌ப் போக‌ எல்லாம் ச‌ரியாகிவிடுமென‌ இவ‌ன் நினைத்தான். நிறைய‌த் த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளைப் பார்த்து 'காத‌ல்' உண‌ர்வை வ‌ள‌ர்த்த‌போதும் சுக‌ந்திக்கு பெரிதாய் அந்த‌ விட‌ய‌த்தில் ஆர்வ‌மிருக்க‌வில்லை. க‌லியாண‌ஞ்செய்வ‌தே முக்கியமாய் அத‌ற்கென‌ நினைத்துக் கொண்ட‌வ‌னுக்கு இப்ப‌டி சுக‌ந்தி இருப்ப‌தைக் க‌ண்டு எரிச்ச‌ல் வ‌ந்த‌து. ஒருநாள் நேரே கேட்டும் விட்டான். 'நீங்க‌ள் இப்ப‌டி ஹ‌வேயில் போகின்ற‌ வேக‌த்தில், எல்லாம் வேண்டும் என்றால் என்னாலை எப்ப‌டி ச‌மாளிக்க‌ முடியும்' என‌ அவள் ஒரு சாட்டுச் சொன்னாள்.  ஓ...அதுதான் சிக்க‌லா என்று ரெசிடென்சிய‌ல் ஏரியாவில் போகின்ற‌மாதிரி 40 கிலோமீற்ற‌ர் ஆமை வேக‌த்தில் கட்டிலில் திருவிளையாடலைக் காட்டினான். அப்போதும் சுக‌ந்தி முன்னர் மாதிரியே அதே துல‌ங்க‌லைக் காட்டினாள்.

அதுவும் சில‌நாட்க‌ளில் இவ‌னின் ஆக்கினை தாங்காம‌ல், 'உங்க‌ளுக்கு என்ரை உட‌ம்புதானே வேண்டும்' என்று சொல்லிவிட்டு ஆடைக‌ளை எல்லாம் கடகடவென்று க‌ளைந்துவிட்டு நிர்வாண‌மாய்க் கிடப்பாள். என்ன செய்தாலும், த‌ன் கண்ணை மூடாது, விழிக‌ளால் வெறித்த‌ப‌டி இவ‌னின் அசைவுகளை அவதானித்தபடியே இருப்பாள். இவ‌னுக்கு கோயில்க‌ளில் நாக்கை நீட்டிய‌ப‌டி கையில் சூலாயுத‌ங்க‌ளோடு நிற்கும் அம்ம‌ன் சிலைதான் அந்த‌ நேர‌த்தில் சுகந்தியைப் பார்க்கும்போது நினைவுக்கு வ‌ரும்.

சுக‌ந்தி க‌ன‌டாவிற்கு வ‌ந்து ஆறேழு மாத‌ங்க‌ள் இருக்கும். ஒருநாள்,  இவ‌ன் வேலை செய்துகொண்டிருந்த‌போது இவனது செல்லுக்குச் சுக‌ந்தியிட‌மிருந்து ஓர் அழைப்பு வ‌ந்த‌து. 'உங்க‌ளோடு கொஞ்ச‌ம் க‌தைக்க‌வேண்டும்' என்று சொல்லிவிட்டு, 'என‌க்கு டிவோர்ஸ் வேண்டும். என‌க்குக் க‌ன‌டா பிடிக்கவில்லை. நான் திரும்பிப் போக‌ப் போகின்றேன்' என்றாள். இவ‌னுக்கு மேல்த‌ள‌த்தில் ஓடிக்கொண்டிருந்த‌ மெஷின் த‌ன் த‌லையில் விழுந்த‌மாதிரி இருந்த‌து. அரைநாள் லீவு எடுத்துக்கொண்டு வீட்டை அர‌க்க‌ப் ப‌ர‌க்க‌ ஓடிவ‌ந்தான். சுக‌ந்தி, தான் ஒருவ‌ரை இல‌ங்கையில் காத‌லித்த‌தாக‌வும், வீட்டில் ஒருவ‌ருக்கும் அந்த‌ப் பெடிய‌னைப் பிடிக்காத‌தால்தான் இவ‌னைத் திரும‌ண‌ம் செய்ய‌ச் ச‌ம்ம‌தித்தாக‌வும் கூறினாள். 'அப்ப‌டியெனில் ஏன் என்னை விருப்பமில்லாமல் கலியாணஞ் செய்த‌னீர்?' என‌ இவ‌ன் திரும்பிக் கேட்டான். 'உங்க‌ளைத் திரும‌ண‌ம் செய்யும்போது எல்லாவ‌ற்றையும் ம‌ற‌ந்துவிட‌லாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் என்னால் முடிய‌வில்லை. எப்போதும் அவ‌ன் நினைப்பே இருக்கிற‌து. அவ‌ன் அள‌வுக்கு என்னை ஒருவராலும் நேசிக்க‌ முடியாது' என்றாள் உறுதியாய். 'உங்க‌ளின் நாசமாய்ப்போன காதலுக்கு, நானா ப‌லிக்கடா ஆனேன்' என‌ இவ‌ன் கோப‌த்தில் சுகந்தியைப் பார்த்துக் க‌த்தினான். அந்த நேர‌த்திலும் இவ‌னுக்குள் ஓர் எண்ண‌ம் ஓடிய‌து. 'அப்ப‌டியெனில் நீர் என்னைக் க‌லியாண‌ங்க‌ட்டும்போது வேர்ஜின் இல்லையா?' எனக் கேட்டான். 'இப்போது தானே எங்க‌ளுக்குள் எல்லாமே முடிந்துவிட்ட‌து. அதைய‌றிந்து நீங்கள் என்ன‌ செய்ய‌ப் போகின்றீர்க‌ள்?' என்றாள் சுகந்தி.

இதெல்லாம் ந‌ட‌ந்து ஒரு வார‌த்தில் சுக‌ந்தி க‌ன‌டாவிலிருந்த‌ த‌ன் பெரிய‌ம்மா வீட்டுக்குப் போய்விட்டாள். சுக‌ந்தி போகும்போது த‌ன் வாழ்வையும் எடுத்துக்கொண்டு போய்விட்டாள் என்ற‌வாறு இவ‌ன் க‌வ‌லைப்ப‌ட்டான். உற‌வுக‌ள் ம‌ட்டுமில்லை ந‌ண்ப‌ர்க‌ளும் கூட‌, 'ஒரு பொம்பிளைப் பிள்ளை இல‌ங்கையில் இருந்து வ‌ந்து ஆறேழு மாத‌ங்க‌ளில் விட்டு விட்டுப் போகின்றாள் என்றால் இவ‌னில்தான் ஏதோ பிழையிருக்கிற‌து' என‌ இவ‌ன் காதுப‌ட‌வே க‌தைக்க‌த் தொட‌ங்கினார்க‌ள். இவ‌னுக்கு இதையெல்லாம் கேட்க‌ அவ‌மான‌ம் அவ‌மான‌மாய் இருந்த‌து. ம‌ன‌ம் ஆறுத‌ல‌டைவ‌த‌ற்காக‌வேனும் சுக‌ந்தியைப் பார்த்து நான்கு வார்த்தை தூச‌ண‌த்தோடு திட்ட‌லாம் என்றாலும் அத‌ற்கும் ம‌ன‌ம் விட‌வில்லை. சுக‌ந்தி இவ‌னுக்கு என்ன‌ த‌வ‌றைச் செய்தாள்? அவ‌ள் ஒருவ‌னை ம‌ன‌தார‌ விரும்பியிருக்கிறாள் என்ப‌தை விட‌ வேறெதுவும் செய்ய‌வில்லையே. 'நானுந்தானே ஒருகால‌த்தில் பிலிப்பைன்காரியைக் காத‌லித்திருக்கின்றேன். என்னால் பிலிப்பைன்காரியைப் பிரிந்து வ‌ர‌முடிந்த‌ மாதிரி சுக‌ந்தியால் அவ‌ள் காத‌லித்த‌வ‌னை விட்டு வ‌ர‌முடிய‌வில்லை அவ்வ‌ள‌வு தான் வித்தியாச‌ம்' என‌ நினைத்துக்கொண்டான்.

ஆனால் இவ‌னால் சுக‌ந்தியை அவ்வ‌ள‌வு எளிதாய் ம‌ற‌க்க‌ முடிய‌வில்லை. ம‌னைவி எங்கே என‌க் கேட்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் நினைவுப‌டுத்திய‌து ஒருபுற‌மிருந்தாலும் இவ‌ன‌ள‌வில் கூட‌ சுக‌ந்தியின் நினைவுக‌ளைத் தூக்கியெறிய‌ முடியாதிருந்த‌து. 'எல்லோருடைய‌ வாழ்விலும் ஒரு பெண் ம‌ற‌க்க‌முடியாத‌வ‌ள் ஆகிவிடுகின்றாள்' என‌ எங்கையோ ப‌டித்த‌து இவனுக்குள் நினைவில் இருந்த‌து. 'அவ்வாறு த‌ன் வாழ்வில் ம‌ற‌க்க‌ முடியாத‌ பெண் சுக‌ந்தி' என‌ எண்ணிக்கொண்டான். அவ‌ளுடைய‌ செல்ல‌ம் கொஞ்சும் ம‌ழ‌லைக்குர‌ல் மெஷின் ச‌த்த‌த்தை விட‌வும் இவ‌னுள் அதிக‌ம் ஒலிக்க‌த் தொட‌ங்கிய‌து. க‌ன‌டா வ‌ந்த‌ தொட‌க்க‌ நாளில் காலில் கொலுசு போட்டுக்கொண்டு சுக‌ந்தி திரிந்த‌ பொழுதுக‌ள், இருட்டிலும் ஒரு மின்மினியாய் ஒளிர்ந்து கொண்டிருந்த‌ அவ‌ள‌து மூக்குத்தி,  இடுப்பில் ஒரு பொட்டைப்போல‌ இருந்த‌ ம‌ச்ச‌மென‌ எல்லாமே இவ‌னை விடாது துர‌த்த‌த் தொட‌ங்கின‌. அவ்வ‌ப்போது மூளை விறைக்க‌த் தொட‌ங்கிய‌வ‌னாக‌ மாறிப் போக‌த் தொட‌ங்கினான். இர‌வில் நித்திரை ஒழுங்காய் வ‌ராது ப‌க‌லில் வேலை செய்ய‌வும் க‌ஷ்ட‌ப்ப‌ட‌த் தொட‌ங்கினான். இவ‌னின் த‌டுமாற்ற‌ங்க‌ளைக் க‌ண்டு வேலைத்த‌ள‌த்தில் நின்ற‌ ஒருத்த‌ன் தான் கொஞ்ச‌ம் ம‌ரிஜூவ‌னா பாவித்துப்பார் என‌ அறிமுக‌ப்ப‌டுத்தினான்.

முத‌லில் த‌ன் நினைவு த‌றிகெட்டும் அலைவ‌தை ஒழுங்காக்க‌ வேண்டும் என்று போதையைப் பாவித்த‌வ‌னுக்கு பிறகு அது இல்லாம‌ல் இருக்க‌முடியாது போல‌த் தோன்றியது. வேலைக்குப் போவ‌து ஒழுங்கில்லாது போக‌, கையில் காசும் இல்லாது கஷ்டப்படத் தொடங்கினான். நாலைந்து மாத‌ங்க‌ளில் சுக‌ந்தி விவாக‌ர‌த்துப் பெற்று திரும்ப‌வும் இல‌ங்கைக்கும் போய்விட்டாள். சுக‌ந்தி இனி அருகில் என்றும் இருக்க‌மாட்டாள் என்ற‌ நினைப்பு இவ‌னை இன்னும் அதிக‌ம் அலைக்க‌ழிக்க‌த் தொட‌ங்கிய‌து.


நான் அப்போதுதான் வின்ச‌ரில் நான்காண்டுக‌ள் ப‌டிப்ப‌தாய்ப் பாவ‌னை செய்துவிட்டு ரொறொண்டோவிற்குத் திரும்பி வ‌ந்திருந்தேன். வேலை எதுவும் கிடைக்காம‌ல் எல்லாத் திசைகளிலும் மனம் நொந்து அலைந்துகொண்டிருந்தேன். ஒரு பெப்ர‌வ‌ரி மாத‌த்திலிருந்து நான் காத‌லித்துக் கொண்டிருந்த‌வ‌ளும் என்னைப் பார்ப்ப‌தைத் த‌விர்த்துக் கொண்டிருந்தாள். என்ன‌ கார‌ண‌மென‌க் கேட்டு அவ‌ளுக்கு ஆக்கினை மேல் ஆக்கினை கொடுத்த‌போதுதான், ஒருநாள் அவ‌ளின் தோழி தொலைபேசியில் அழைத்து, '....... இன்னொருவ‌ரைக் காத‌லிக்க‌த் தொட‌ங்கியிருக்கிறாள். அவ‌ளை இனியும் தொட‌ர்புகொண்டு தயவு செய்து தொல்லை கொடுக்க‌வேண்டாம்' என்றாள். ஒழுங்கான‌ வேலை இல்லை, குளிர்க் கால‌நிலை என‌ எல்லாமே ம‌ன‌திற்கு இனம்புரியாத அழுத்த‌ம் கொடுத்துக்கொண்டிருக்க‌, இப்போது எல்லாமுமாய் இருந்த‌ அவ‌ளும் இல்லையென்ற‌போது எதையும் சிந்திக்க‌ முடியாத‌ள‌வுக்கு எனக்கு மூளை இறுக‌த் தொட‌ங்கிய‌து.

'.... யாரையோ காதலிக்கத் தொடங்கிவிட்டாள்' என்ற செய்தியை அறிந்த மூன்றாம் நாள், வேலை தேட‌ப் போகின்றேன் என‌ வீட்டில் கூறிவிட்டு ட‌வுன்ர‌வுணுக்குப் போனேன். காலையிலிருந்து வெளியே குளிருக்குள் அலைந்து, ச‌ட்டென்று ஒருக‌ண‌த்தில் இனி வீட்டுக்கு என்றைக்குமாய்த் திரும்புவ‌தில்லையென‌ முடிவு செய்தேன். யூனிய‌ன் ஸ்ரேசினில் 'கோ' ப‌ஸ்ஸை எடுத்து த‌மிழாக்க‌ள் அவ்வளவு திரியாத‌ ஒரு ந‌க‌ருக்குப் போனேன். அங்கே போய்ச் சேரும்போது இர‌வு ஒன்ப‌து ம‌ணியாகியிருக்கும். ஒவ்வொரு க‌டைக‌ளுக்கும் இடையில் இருந்த‌ இடைவெளியில் வீடுக‌ளைத் தொலைத்த ஒரு சில‌ர் ப‌டுத்திருப்ப‌து தெரிந்த‌து. ஒன்றிர‌ண்டு பேர் குளிரைப் புறக்கணித்துப் பாடிக் கொண்டுமிருந்தார்க‌ள். என்னால் குளிர் தாங்க‌ முடியாதிருந்த‌து. கதவுகள் சாத்தியிருந்த மூட‌ப்ப‌ட்ட‌ மொன்றிய‌ல் பாங்கிற்குள் ப‌டுப்ப‌த‌ற்காக‌ப் போனேன்.

முக‌ம் முழுதும் தாடி வள‌ர்ந்து நீண்ட‌ த‌லைமுடியுட‌ன் ஒருவ‌ர் காசு எடுக்கும் மெஷினடியில் ப‌டுத்திருந்தார்.  நான் வ‌ந்த‌ ச‌த்த‌ம் கேட்டு என்னை நிமிர்ந்து பார்த்தார். ச‌ட்டென்று எனக்கு க‌ட‌ந்த‌கால‌ம் மின்ன‌லாய் வெட்டிப் போன‌து.  இது ச‌ட‌கோப‌ன் அண்ணா. நான் வெஸ்ட் ஹில்லில் ப‌த்தாம் வ‌குப்பு ப‌டிக்கும்போது இவ‌ர் ப‌தின்மூன்றாம் த‌ர‌ம் ப‌டித்துக் கொண்டிருந்த‌வ‌ர். அவ‌ரின் க‌தை கூட‌ என‌க்குத் தெரியும். பின்னாளில் சுகந்தியோ யாரையோ க‌லியாண‌ங்க‌ட்டி அந்த‌ப் பெண் அவ‌ரை விட்டு இல‌ங்கைக்குப் போன‌துவ‌ரை அறிந்து வைத்திருந்தேன். ஆனால் ச‌ட‌கோப‌ன் அண்ணாவை இப்ப‌டியான‌ நிலையில் ச‌ந்திப்பேன் என‌ நினைத்தும் பார்க்க‌வில்லை. அவ‌ரின் க‌தையை அறிந்த‌போது கூட, 'ஒரு பெட்டைக்காய் இப்ப‌டி யாரும் த‌ம் வாழ்வைத் தொலைப்பார்களா?' என‌ என் நண்ப‌ன் ந‌க்க‌ல‌டித்த‌தும் நினைவுக்கு வ‌ந்த‌து. ஆனால் ச‌ட‌கோப‌ன் அண்ணாவிற்கு என்னை நினைவில் இல்லை. அவ‌ர் யாரோ பாங் மெஷினில் காசு எடுக்க‌ வ‌ந்திருக்கின்றார் என‌ நினைத்திருக்கின்றார். 'Can you buy a coffee for me?' என‌க் கேட்டார். அவரின் கோலமே அவர் வீட்டை விட்டு எப்பவோ ஓடிவந்து விட்டார் என்பதைச் சொல்லியது. என‌க்கு என்ன‌ செய்வ‌தென்று தெரிய‌வில்லை. இனி வீட்டை என்றுமே திரும்பிப் போவ‌தில்லை என‌ முடிவு செய்த‌வ‌னுக்கு அடுத்து என்ன‌ செய்வ‌தென்று ஒரே குழ‌ப்பாய் இருந்த‌து. முத‌லில் ச‌ட‌கோப‌ன் அண்ணாவிற்கு கோப்பி வாங்கிக்கொடுப்போம் என‌ செக‌ண்ட் க‌ப்பில் கோப்பி ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு, அவரைத் திரும்பிப் பார்க்காது ந‌ட‌க்க‌த் தொட‌ங்கினேன்.

வெளியே இப்போது ப‌னி கொட்ட‌த் தொட‌ங்கியிருந்த‌து. இலைக‌ளில்லாத‌ ம‌ர‌ங்க‌ள் அங்கும் இங்குமாய்த் தெரிந்த‌ன. நான் அணிந்திருந்த‌ க‌றுப்புக் குளிர‌ங்கியின் மேல் ப‌னி விழுந்து க‌ரைந்து கொண்டிருந்த‌து. அட‌க்க‌ப்ப‌ட்ட‌ எல்லா உண‌ர்வுக‌ளும் ம‌டைதிற‌ந்தாற் போல‌ எனக்கு க‌ண்ணீர் வ‌ர‌த்தொட‌ங்கியிருந்த‌து. எதற்காய் அழுதுகொண்டிருக்கின்றேன் எனவும் தெரியவில்லை. நான் கண்ணீரைக் க‌வ‌னிக்காம‌ல் ந‌ட‌ந்து போய்க் கொண்டிருந்தேன். உத‌டுக‌ளில் விழுந்த‌ ப‌னி கண்ணீரோடு சேர்ந்து உவ‌ர்ப்ப‌து போல‌த் தோன்றிய‌து.

மனம் விட்டு அழ‌ அழ‌ எல்லாம் வெளிப்ப‌து போல‌த் தோன்றிய‌து. ப‌தினாறு வ‌ய‌தில் ஒருவ‌ரைக் காத‌லித்து அது தொலைந்துபோன‌போது சாவ‌த‌ற்கு மாடியில் இருந்து குதிக்க‌ முய‌ற்சித்த‌து நினைவில் வ‌ந்த‌து. அடுத்த‌ முறை க‌ச்சித‌மாய் த‌ற்கொலையைச் செய்ய‌வேண்டும் என‌ நினைத்துக்கொண்டிருந்த‌ போது, என் ந‌ண்ப‌ன் ஒருவன் என்ன காரணத்திற்காகவோ, நான் முயற்சித்த நான்காம் நாள் த‌ற்கொலை செய்திருந்தான்.  இப்போது இன்னொரு காத‌லில் தோற்று வீடே வேண்டாம் என‌ தீர்மானித்து வீதிக்கு வ‌ந்த‌போது ச‌ட‌கோப‌ன் அண்ணாவை இந்த‌ நிலையில் சந்திக்க வேண்டியிருந்தது. என் ஒவ்வொரு காத‌ல் தோல்வியின் பொருட்டும், நான் ப‌லியாவ‌த‌ற்கு முன் யாரோ என‌க்காய்த் த‌ம் வாழ்வைப் ப‌லி கொடுக்கின்றார்க‌ளோ என்ற‌ யோச‌னை எனக்குள் ஓடிய‌து.

ச‌ட‌கோப‌ன் அண்ணாவையும், என் ந‌ண்ப‌னையும் நினைத்து நெஞ்சு ஒருக‌ண‌ம் ந‌டுங்கி விதிர்விதிர்த்த‌து. நான் அப்போது பால‌மொன்றைக் க‌ட‌க்க‌ வேண்டியிருந்த‌து. கீழே ந‌தி உறைந்தும் உறையாத‌மாதிரி ஓடிக்கொண்டிருந்த‌து. அதற்குள் குதித்துவிடுவேனோ என்று என‌க்கே என்னில் நம்பிக்கை இல்லாது இருந்த‌து. ப‌ஸ்சொன்று எதிர்த்திசையில் வ‌ந்து கொண்டிருந்த‌து. உட‌னேயே ஓடிப்போய் அதற்குள் ஏறிக்கொண்டேன். வீட்டை திரும்பிப் போய்ச் சேர‌ ந‌ள்ளிர‌வு ப‌ன்னிர‌ண்ட‌ரை ம‌ணியாகிவிட்ட‌து. அம்மா நித்திரை கொள்ளாது என‌க்காய்க் காத்துக்கொண்டிருந்தார். 'இவ்வ‌ள‌வு நேர‌மும் எங்கே போயிருந்தாய்?' எனக் கேட்டார். 'ச‌ட‌கோப‌ன் அண்ணை வீட்டை போயிருந்தேன்' என்றேன். 'ச‌ட‌கோப‌னா, அவ‌ன் யார்?' என்று அம்மா என்னிடம் திரும்பிக் கேட்க‌வில்லை.
...........................................

0 comments: