- Sputnik Sweetheart மற்றும் Norwegian Woodsஐ முன்வைத்து-
“In dreams you don’t need to make any distinctions between things. Not at all. Boundaries don’t exist. So in dreams there are hardly ever collisions. Even if there are, they don’t hurt. Reality is different. Reality bites.”
— | Haruki Murakami, Sputnik Sweetheart |
1.
ஹருக்கி முரகாமியின் அநேக நாவல்கள் யதார்த்திற்கும் மாயயதார்த்திற்கும்
இடையே மாறி மாறி நகர்ந்து கொண்டே இருப்பவை. அதே போன்று கதையில் வரும் ஆண் கதாபாத்திரங்கள்
தனிமையில் இருந்தாலும் பெண்களின் அருகாமைக்காகவும், பிற உடல்களின் கதகதப்பிற்காகவும்
ஏங்கிக்கொண்டிருப்பவை. பெண் பாத்திரங்கள் எப்படி முரகாமியின் நாவல்களில் சடுதியாக
அறிமுகப்படுத்தப்படுகின்றார்களோ, அவ்வாறே பல்வேறுவகையான புதிர்களை வாசிப்பவர்களிடையே
விட்டுவிட்டு மர்மமாய் மறைந்தும் போய் விடுகின்றார்கள். மேலும் இப்பெண்களோ அவர்களைப்
பற்றி நாம் அறியாத பல இரகசியங்களைத் தங்களுக்கிடையே மறைத்து வைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
எப்போதாவது தம்மிடமிருக்கும் இரகசியங்களின் முடிச்சுக்களை இப்பெண்கள் அவிழ்த்துவிடுவார்கள்
என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தால் சிலவேளைகளில் 'Sputnik Sweetheart' ல் வரும் சுமரி போல என்றென்றைக்குமாய் 'புகையைப் போல மறைந்தும்'
போய் விடுகின்றார்கள்.
'Sputnik Sweetheart' என்கின்ற இந்நாவலில் 'கே' எனப்படும் ஒரு பாத்திரத்தால் கதை சொல்லப்படுகின்றது.
'கே' இப்போது சிறுவர்களுக்கான பள்ளியில் ஆசிரியராக இருக்கின்றார். அவருக்கு
தன் கல்லூரிக்கால தோழியான சுமரி மீது காதல் உளது. ஆனால் சுமரிக்கோ தன்னை விட
பதினேழு வயது மூத்த மியூ என்கின்ற பெண்மணி மீது ஈர்ப்பு இருக்கிறது. சுமரி தன்
கல்லூரி இறுதிக்காலங்களில் படிப்பை நிறுத்துவிட்டு, ஒரு நாவலாசிரியராக வருவதற்கு
கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்.
சுமரி, மியூவை ஒரு திருமணவிழாவில் முதன்முதலாகச் சந்திக்கின்றார். மியூ
மேற்கு நாடுகளிலிருந்து ஜப்பானிற்கு வைன் இறக்குமதி செய்யும் தொழிலைச் செய்கின்றவர்.
அதன் நிமித்தம் வெவ்வேறு நாடுகளுக்கும் பயணிப்பவர். சுமரிக்கு இத்தாலி,ஆங்கிலம்
பேசமுடியும் என்பதால் மியூ தனது உதவியாளராக அவரைச் சேரக் கேட்கின்றார். தன்
நாவலாசிரியராகும் கனவு கலைந்துவிடக்கூடாது என்று சுமரி நினைத்தாலும், மியூவின்
மீதிருக்கும் காதலால் உதவியாளராகச் சேர்ந்து கொள்கின்றார்.
2.
ஒருநாள் 'கே'யிற்கு வெளிநாடொன்றிலிருந்து கடிதம் வருகின்றது. அது சுமரி
எழுதிய கடிதம். மியூ ஜரோப்பியாவிற்குப் பயணம் செய்கின்றபோது சுமரியையும் உதவிக்காய்
அழைத்துச் சென்றிருக்கின்றார். வியாபார நிமித்தமாய் பல நாடுகளுக்குப் பயணிக்கும்
மியூவும் சுமரியும் கிறீக்கிலுள்ள ஒரு தீவிற்கு சில நாட்கள் ஒய்வெடுக்கச் செல்கின்றனர்.
அவ்வாறு ஓய்வில் இருந்தபோதுதான் சுமரி 'புகையைப் போல மறைந்து' விடுகின்றார்.
சுமரி காணாமற்போனதைத் தொடர்ந்து மியூ, இக்கதையைக் கூறும் 'கே'யிற்கு தொலைபேசியில்
அழைத்து அத்தீவிற்கு வரச் சொல்கின்றார். சுமரி ஏன் அப்படிச் சடுதியாய்க் காணாமற்போனார்?
மீளவும் கண்டுபிடிக்கப்பட்டாரா? அல்லது அநேக முரகாமியின் நாவல்களில் வருவதுபோல
மீண்டும் நாவலிற்குள் வராது தொலைந்துபோகின்றாரா என்பதையறிய நாவலின் இரண்டாம் பாகத்திற்கு
நாம் நுழைந்தாக வேண்டும்.
சுமரியைக் கண்டுபிடிக்க கிறீக் தீவுக்குப் போகும் கே, மியூ எழுதி வைத்திருக்கும்
இரண்டு ஆவணங்களைக் கணனியில் கண்டுபிடிக்கின்றார். அதில் ஓர் ஆவணம், மியூ சுமரியுடன்
பகிர்ந்துகொண்ட கதை பற்றிக் கூறப்படுகின்றது. பியானோ இசையில் இளவயதில் மிகுந்த
ஆர்வத்தில் இருந்த மியூ பிரான்சிற்கு பியானோவில் சிறப்புத் தேர்ச்சி பெறுவதற்காய்ச்
செல்கிறார். அப்போது சுவிஸில் மலைக்கிராமத்தில் நடக்கும் இசை நிகழ்விற்காய் ஒருவாரம்
தங்கி நிற்கின்றார். அந்தப் பொழுதில் நடுத்தரவயதுள்ள ஸ்பானிய மனிதர் ஒருவர்
அங்கே அறிமுகமாகின்றார். தொடர்ச்சியாக மியூவைப் பின் தொடரும் அந்த ஸ்பானியர்
தன்னை உடல்சார்ந்த தேவைக்காய் பாவிக்க விரும்புகின்றார் என மியூ சந்தேகிக்கின்றார்.
ஒருநாள் மியூ, தான் தங்கியிருக்கும் விடுதியிற்கு எதிரேயிருக்கும் இராட்டினத்தில்
இரவில் சவாரி செய்யும்போது, அவரை அந்தரத்தில் மேலேயே விட்டுவிட்டு கீழே இராட்டினத்தை இயக்கும்
மனிதர் போய்விடுகின்றார். உதவி என அழைத்தும் எவரும் வராதபோது இரவை அந்த இராட்டினத்திலேயே
கழிக்கவேண்டிய நிலை மியூவிற்கு. என்ன செய்வதென்று தெரியாது பொழுதுபோக்குவதற்காய்
எதிரேயிருக்கும் விடுதியில் இருக்கும் தனது அறையை மியூ வேடிக்கை பார்க்கத் தொடங்குகின்றார்.
மியூவின் அறையில் இப்போது அவருக்கு அறிமுகமான ஸ்பானிய மனிதர் ஆடைகளின்றி
நிர்வாணமாய் நடமாடுவது மியூவிற்கு -இராட்டினத்திலிருந்து பார்க்கும்போது- தெரிகிறது.
இன்னும் சற்று நேரத்தில் நிர்வாண மனிதர் ஒரு பெண்ணின் ஆடைகளை அகற்றுவதும் அப்பெண்ணோடு
உடலுறவு கொள்வதும் தெரிகிறது. யாரந்தப் பெணென அடையாளங் காண மியூ முயலும்போது,
அந்தப் பெண்ணின் சாயல் மீயூவை ஒத்ததாகவே இருக்கின்றது.
இராட்டினத்தில் இரவில் சிக்கிய மியூவை, அடுத்த நாள் காலையில் அங்கே வேலை
செய்பவர் -மயக்கநிலையில்- காப்பாற்றுகிறார். வைத்தியசாலையில் வைத்து தன்னை விசாரிக்கும்
பொலிசிடம், மியூ தனக்கு 25 வயது என்கின்றபோது அவர்கள் வியந்து தங்களுக்குள்
பேசிக்கொள்வது தெரிகிறது. கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கும்போது அவரது தலைமயிர்
முற்றிலுமாக வெள்ளை நிறத்தில் நரைத்துப் போயிருப்பது மீயூவிற்கு அதிர்ச்சியாக
இருக்கின்றது. இவ்வாறாகத்தான் ஒரேயொரு இரவில் மியூவின் தலைமயிர் வெள்ளை நிறத்திற்கு
மாறிவிடுகின்றது. அன்றைய நாளோடு மியூ தன்னில் ஒரு பகுதி மறைந்துவிட்டதென சுமரியிடம்
கூறுகின்றார். அதன்பின் தான் இரண்டாகப் பிரிந்துவிட்டேன், இப்போது கூட தன்னின் எந்தப்
பகுதி நிஜ உலகில் இருக்கிறது என்பது குழப்பமாகவே இருக்கிறது என்கின்றார்.
இதை கே, மியூவிற்குத் தெரியாது, சுமரி எழுதி வைத்த ஆவணத்திலிருந்து இரகசியமாய்
வாசிக்கின்றார். அடுத்த நாள் கேயிற்கு, சுமரி
காணாமற் போன நாளின் முதல் இரவில் நடந்த சில விடயங்களை மியூ கூறுகின்றார்.
அது இன்னும் மர்மத்தைக் பெருக்குவதாய் இருக்கின்றது. இந்நாவல் தொடங்குவதற்கு
முன் 'ஸ்புட்னிக்' பற்றி ஒரு குறிப்பு வருகின்றது.
ரஷ்யா விண்கலத்தை வான்வெளிக்கு அனுப்பியபோது, கூடவே சேர்த்து அனுப்பப்பட்ட
லைக்கா என்ற நாயைப் பற்றிய குறிப்பது.
அந்த நாய் இறுதியில் மனிதர்களின் புதிய கண்டுபிடிப்பிற்காய் வான்வெளியில் தொலைந்துபோய்விட்ட ஒரு உயிரினமாகப் போய்விட்டதெனக்
குறிப்பிடப்படுகின்றது.. சுமரியும், மியூ என்கின்ற விண்கலத்தோடு சேர்ந்து ஐரோப்பிவிற்குப்
போய், இறுதியிற் காணாமற் போன லைக்கா நாய் போலத்தான் கிறீக் தீவிலிருந்து மறைந்து
போய்விடுகின்றார்.
3.
ஹருக்கி முரகாமி எழுத்தாளராக ஆகியதே ஒரு தற்செயல் நிகழ்வுதான். பல்கலைக்கழகத்தில்
படித்துக்கொண்டிருந்த காலத்தில் தன்
21 வயதிலேயே தன் காதலியாக இருந்தவரைத் திருமணஞ்செய்து, ஜாஸ் கிளப்பொன்று
நடத்தியவர். ஒருநாள் தன் 29ம் வயதில் பேஸ்போல் ஆட்டம் பார்த்துக்கொண்டிருந்தபோது,
நாவல் எழுதினால் என்ன என்ற எண்ணம் தோன்றி எழுத்துலகத்திற்குள் 70களின் பிற்பகுதியில்
நுழைந்தவர். ஒருவித சர்ரியலிச முறையில் எழுதிக்கொண்டிருக்கின்றார் என்ற விமர்சனத்தை
உடைப்பதற்காய் முற்றுமுழுதான யதார்த்தப் பாணியிலான Norwegian Wood
ஐ 80களின் பிற்பகுதியில் எழுதுகின்றார். கிட்டத்தட்ட
3 மில்லியனுக்கு மேலே ஜப்பானில் விற்பனையான நோர்வேஜியன் வூட்டின் பின் ஹருக்கி
முரகாமி தொடமுடியாத உச்சத்தை அடைகிறார். ஜப்பானில் 90ன் நடுப்பகுதியில் சுரங்கப்புகையிரதப்பாதையில்
நடைபெற்ற Gas Attack பற்றியும் விரிவாக
கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். தனது நாவல் போட்டியொன்றில் வெற்றிபெற்ற பரிசை
ஜப்பானில் பூகம்பத்திற்குப் பாதிப்புற்ற மக்களுக்குப் பகிர்ந்தளித்திருக்கின்றார்.
அணு மின் நிலையங்களுக்கு எதிராகவும் தீவிரமாகப் பேசுகின்றார்.
இஸ்ரேலிற்குச் சென்று பரிசுபெறும்போது "Each of us possesses a tangible living soul. The system has no such
thing. We must not allow the system to exploit us." என இஸ்ரேலின் இறுக்கமான அரசியந்திரத்தை விமர்சிக்கின்றார். ஹரகாமி பொதுவெளியில் அவ்வளவு அதிகம் உலாவ
விரும்பாது ஒரு எளிய வாழ்வு முறையைத் தேர்ந்தெடுக்கின்றார். அதனால்தான் நோர்வேஜியன்
வூட் பெரும் வெற்றி பெற்று மிகவும் பிரபல்யம் அடைய, சிலவருடங்கள் ஜரோப்பா/அமெரிக்கா
எனத் தன்னை உருமறைத்துக்கொள்ளும் ஒரு வாழ்வுமுறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்.
இந்த வயதிலும் மரதன் ஓட்டங்களுக்குத் தன்னைத் தளராது தயார்ப்படுத்துகிறார்.
அது குறித்தும் விரிவாக எழுதுகிறார். அதேவேளை, தான் மிக இளவயதில் திருமணம் செய்தது
தன் பெற்றோருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை; இப்போது இவ்வளவு பிரபல்யம் அடைந்ததன்பின்
கூட, தன்னைத் தன் பெற்றோர்களால் விளங்கிக்கொள்ள முடிந்திருக்குமா எனக் கவலைப்படவும்
செய்கிறார்.
நோர்வேஜீயன் வூட்' கதையை எளிமையாகக் கூறுவதென்றால், பதின்மர்கள் மூவர்
வளர்ந்தவர்களின் உலகினுள் நுழைகின்ற காலகட்டத்தை விபரிக்கின்ற கதையெனக்
கூறிக்கொள்ளலாம். பதின்மர்களில் ஒருவரான ரோருவே இக்கதையைச் சொல்லிச் செல்கிறார்.
பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் ரோருவிற்கு உயர்கல்லூரிக்காலத்தில்
கிசூக்கி, நகாகோ என்னுமிரு நண்பர்கள் இருக்கின்றார்கள். கிசூக்கியும் நகாகோவும்
காதலர்கள். பதினேழு வயதில் கிசூக்கி தற்கொலை செய்துகொள்கின்றார். அதன் குற்றவுணர்ச்சியில்
கதைசொல்லியான ரோரு தமது ஊரைவிட்டு பெருநகரமான ரோக்கியோவிற்கு படிப்பதற்காய்
இடம்பெயர்கிறார். அங்கே தற்செயலாய் கிசூக்கியின் காதலியான நகாகோவைச் சந்திக்க
ரோருவிற்கு நகாகோவின் மீது காதல் வருகின்றது. ஆனால் ரோருவைத் தன் காதலனாக ஏற்க
நகாகோவினால் முடியவில்லை. எனெனில் அவரால் கடந்தகாலத்திலிருந்து வெளியே இன்னமும்
வரமுடியவில்லை. ஒருநாள் நகாகோ தற்செயலாய் ரோக்கியோவில் இருந்து மறைந்து போய்விடுகின்றார்.
சில மாதங்களுக்குப் பிறகு தானொரு மலைக்கிராமத்தில் மனநோயிற்கான உளவியல்
சிகிச்சை பெற்றுவருகிறேன நகாகோ ரோருவிற்குக் கடிதம் எழுதுகிறார்.
ரோருவின் மீது பல்கலைக்கழக்த்தில் படிக்கும் இன்னொரு பெண்ணுக்கு விருப்பமிருந்தாலும்,
நகாகோவின் மீதிருக்கும் காதலால் அக்காதலை மறுக்கின்றார். ரோரு யாருடன் இறுதியில்
சேர்கிறார்? நகாகோவை மலைக்கிராமத்தில் போய் ரோரு சந்திக்கின்றாரா? ரோரு எதிர்பாராமல்
சந்திக்கும் வேறொரு பெண்மணி எப்படி ரோருவின் வாழ்வைப் பாதிக்கின்றார் என்பதையெல்லாம்
நாவலை வாசிப்போரின் சுவாரசியத்திற்காய் விட்டுவிடலாம்.
பெருநகரொன்றில் தனித்துப் போகும் ஒரு மனிதனின் அலைக்கழிப்பையும், கடந்தகாலத்தை
முற்றாக உதறமுடியாப் பெரும்பாரத்தையும் முரகாமி இந்நாவலில் மிகவும் ஆழமாக விவரித்திருப்பார்.
இது பதின்மர்களுக்கும் மட்டும் பொருந்தக்கூடியதென்பதில்லை, எம்மைப் போல விருப்பமான
நாடுகளையும், ஊர்களையும் பிரிந்துவந்த புலம்பெயர்ந்தவர்களுக்கும் இந்த அல்லாடல்கள்
எளிதில் பொருந்தக்கூடியவையே. எத்தனையோ பெண்கள் காதலிப்பதற்கும், உறவு கொள்வதற்கும்
இருக்கும்போது இறுதியில் தன்னைவிட 20 வயது முதிர்ந்த பெண்ணோடு ரோரு உறவுகொள்கிறார்.
அந்தப் பெண், ரோருவிற்கும் நகாகோவிற்கும் பிடித்தமான பீடில்ஸின் 'நோர்வேஜியன்
வூட்' பாடலை அடிக்கடி இசைப்பவர் என்பது மட்டும் காரணமாய் இருந்திருக்கமுடியாது
என்பதை இந்நாவலை வாசிக்கும் நம் ஆழ்மனம் நன்கறியும்.
ஹருக்கி முரகாமி, தன் நாவல்களுக்கு வைக்கும் பெயர்களே மிகுந்த சுவாரசியமாக
இருக்கும். அநேகமாய் தன்னைப் பாதித்த பாடல்களினதோ அல்லது தான் வாசித்த நாவல்கள்/படைப்பாளிகள்/
மற்றும் முக்கியமான சம்பவங்களோடு சம்பந்தப்பட்டதாகவே வைத்துக்கொள்வார்.
முரகாமியின் நாவல்களில் சுவாரசியத்திற்குக் குறைவில்லாததுபோல, நகைச்சுவையும்
பக்கங்களில் தீர்ந்துபோய்விடாதிருக்கும். வாழ்வில் நாம் சந்திக்கும் எல்லாவற்றிற்கும்
தெளிவான தீர்வுகள் இல்லையென்பதைத் தன் நாவல்களில் உட்கிடக்கையாக முரகாமி
வெளிப்படுத்தினாலும், தீர்ந்து விடாக் கடல்
போல வாழ்வு வியப்பாகவும் சுவாரசியமாகவும் இன்னமும் இருக்கின்றது என்பதையும்
கூடவே தன் எழுத்துக்களால் முரகாமி அடையாளங்காட்டியும் விடுகின்றார்.
............
மார்கழி/2011