கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கலைஞர்களின் தளம்பல்கள்

Wednesday, December 18, 2013

('அரங்காடல்' இறுதியில் வரும்)
1
கலைஞர்கள் எப்போதும் தளம்பல்களையும் தடுமாற்றங்களையும் கொண்டவர்கள். ஒரே நிலையில் என்றுமே  இருக்கமுடியாதத் தன்மைதான் அவர்களை இன்னுமின்னும் அவர்கள் சார்ந்த கலைகள் மீது தேடல்களைச் செய்ய நிர்ப்பந்திக்கின்றன போலும். ஆகவே கலைஞர்கள் மற்றவர்களை விட ஏதோ ஒருவகையில் வித்தியாசமானவர்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் வித்தியாசமாக இருப்பதனால் அவர்கள் சாதாரணர்களை விட மேலோரானவர்களாய் இருக்கவேண்டும் என்கின்ற எந்த அவசியமுமில்லை. சிலவேளைகளில் அவர்களின் படைப்புக்களினூடாக வசீகரிக்கப்பட்டு அவர்களின் தனிவாழ்வை அறிய நேரும்போது நமக்கு அவர்கள் எதிர்மறையான விம்பத்தையோ, ஏமாற்றத்தையோ  தரவும் கூடும். 'நானொரு கலைஞன் என்னை நீங்கள் மதிக்கவேண்டும்' என்று சமூகத்தை நோக்கி அறைகூவல் விடுபவர்களை விட, 'இந்தச் சமூகம் எப்படி என்னை நடத்தினாலும், நானொரு கலைஞன்' என மெளனத்தின் மூலம் சலனங்களை ஏற்படுத்துபவர்கள் மீது எனக்கு எப்போதும் மிகுந்த மதிப்புண்டு.

உண்மையில் பெரும்பான்மையான கலைஞர்களின் வாழ்வு இருளின் வர்ணத்தைப் பூசியது. சிலவேளைகளில் இத்தகைய நெருக்கடிக்குள்ளும், துயரத்திலிருந்தும் எப்படி அவர்களால் இவ்வளவு அருமையான படைப்புக்களைத் தரமுடிந்ததென வியந்துமிருப்போம். எதற்காய் பாரதி உணவு சமைப்பதற்காய் இரவல் வாங்கிய தானியத்தைச் சிட்டுக்குருவிகளுக்குப் போட்டார்? ஏன் சி.செல்லப்பா தன் சொத்துக்களை இழந்து  தெருத்தெருவாக 'எழுத்தை' விற்றுத் திரிந்தார்? ஏன் நகுலன் எப்போதும் தன்னோடு பேசுவதில் அளவற்ற ஆர்வத்துடன் இருந்தார்? எதற்காய் வான்கோ காகினோடு சண்டைபிடித்து தன் காதின் நுனியை வெட்டிக்கொண்டார்? ஏன் காப்ஃகா கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய அதிகாரங்களுடன் தளராது சமர் செய்துகொண்டிருந்தார்? ஏன் எங்களின் ஏ.ஜே தன்னைப் புகழ்ந்தெழுதிய பத்தியை premature obituary என்றும், அவரைப் பற்றி வெளியிட்ட சிறப்பிதழை தீண்டியும் பார்க்காமல் இருந்தார்?

நமக்கு இந்த 'ஏன்'களுக்குத் தெளிவான பதில் தெரியாது. வேண்டுமெனில் எங்களை நாங்கள் சமாதானப்படுத்திக்கொள்வதற்காய் 'இதெல்லாம் பைத்தியக்காரத்தனங்கள்' எனச் சொல்லி நம்மை நாமே ஆற்றுப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்த மனிதர்களுக்கெல்லாம் சாதாரணமானவர்களைப் போல வாழும் ஆசை இருந்திருக்காதா என் எப்போதாவது யோசித்துப் பார்த்திருப்போமா? அப்படி அவர்களால் இருக்கமுடியாது, அவர்களைக் கலை    - கோயிலுக்கு நேர்ந்துவிட்ட தேவதாசிகளைப் போல- தேர்ந்தெடுத்துக்கொண்டது என நாம் அவர்களை இனியாவது கனிவுடன் பார்க்கக்கூடாதா? அவர்கள் தம் பெரு விருப்பங்களையும், மீளமுடியா வலிகளையும் முன்வைத்திருப்பதால்தான், நாம் அவர்களை வாசிப்பதன் மூலம் எங்களின் துயரங்களையும், சரிவுகளையும் தேற்றிக்கொண்டு மீள எழுந்து வாழமுடிகிறது என எப்போதாவது நினைத்திருக்கின்றோமா?

அன்னா கரினீனா என்கின்ற மாபெரும் காவியப்பெண்ணை உருவாக்கிய டாஸ்டாயினால் ஏன் அவரின் துணைவியான ஸோபியாவை புரிந்துகொள்ள முடியாமல் போனது? அதிகாரத்தின் நுண்தளங்களில் பயணித்துப் பார்த்த காப்ஃகா ஏன் இரண்டு முறையும் பெலிசியுடனான தன் திருமணத்தை இடைநிறுத்தினார்? இரண்டு தடவையும் திருமணஞ்செயய சம்மதித்த பெலிசி காப்ஃகா மீது எவ்வளவு காதலுடன் இருந்திருப்பார். ஏன் அவரை அந்தளவிற்குத்  துயருற வைத்தார்? காப்ஃகா பெலிசியிற்கு எழுதிய கடிதங்களில் எத்தகைய மோசமானவராக காப்ஃகா இருந்திருக்கின்றார் என் இன்றும் சாட்சியம் சொல்கின்றனவே? கலைஞர்களையும் அவர்களின் நடைமுறை வாழ்க்கையையும் எப்படிப் புரிந்துகொள்வதென்கின்ற குழப்பம் இப்போது நமக்கு வருகிறதல்லவா?

ஸோபியாவைப் புரிந்துகொள்ளாத டாஸ்டாயின் அன்னா கரீனீனாவை நம்மால ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொள்ள முடிகிறது. பெலிசியின் உணர்வுகளை உதறித்தள்ளிய காப்ஃகாவின் 'விசாரணை'யை நாம் கொண்டாடத்தான் செய்கின்றோம். ஏனெனில் கலைஞர்கள் வானத்திலிருந்து தோன்றிய சுயம்புகள் அல்ல என எமக்குத் தெரிகிறது. அவர்களும் நம்மைப் போலவே பலவீனங்களும், தடுமாற்றங்களும் கொண்டவர்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். சிலவேளைகளில் இப்படித் தளம்பல்களைக் கொண்டவர்களாய் இருப்பதனால்தான் அவர்கள் இன்னுமின்னும் எங்களை வசீகரிக்கின்றார்களோ தெரியவில்லை. ஏற்கனவே பயணிக்காத பாதைகளில் கலைஞர்கள் தம் தேடல்களை நிகழ்த்தவே விரும்புவர். தீ சுடும் என்று நமக்குச் சொல்லித்தராத வரை தீயைத் தீண்டியல்லவா பார்த்திருப்போம். அப்படித்தான் இந்தக் கலைஞர்களும் நாமறியாத பாதைகளில் பயணித்து கலைகளினூடு தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றார்கள்.

ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கான தனித்துவமான பயணங்கள் இருப்பதை நாம் நன்கறிவோம் நமகான பாதைகளில் நாம் பயணிக்கும்போது ஏற்கனவே அறிந்ததை உணரும்போது சிலிர்க்கின்றோம். அந்த அறிதலை இந்தக் கலைப்படைப்புக்கள் நமக்குத் தருகின்றன. ஆனால் இவை அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. இதற்காய்ச் சிலவேளைகளில் பல கலைஞர்கள் தமது முழுவாழ்க்கையையும் தொலைத்திருக்கின்றனர் என்றறியும்போது நமக்கு இன்னும் இந்தக் கலைஞர்கள் மீது நேசம் வருகின்றதல்லவா?  தன்னையே அழித்தழித்து 'மூலதனம்'  போன்றவற்றைத் தந்த மார்க்ஸை விட நாமின்னொரு உதாரணத்தைத் தந்துவிடமுடியுமா என்ன?

2.
மீள்வாசிப்பை நாம் எப்படியும் எதிலும் நிகழ்த்த முடியும். ஆனால் சில இடங்களில் நாம் கையே வைக்கமுடியாது. அவ்வாறு செய்யும்போது அது வேறொரு பிரதியாக  மாறிவிடுகின்றது. இராவணன் எவ்வளவு நல்லவராக, சிவபக்தனாக இருந்தாலும், இராவணன் இராமனைக் கொன்றார் என மாற்றிவிடமுடியாது. எவ்வளவுதான் மறுவாசிப்பைச் செய்தாலும் இறுதியில் பாண்டவர்கள் கெளரவர்களை வென்றாகத்தான் வேண்டும். அவ்வாறுதான் நாம் அன்னா கரினீனாவை எவ்வளவு மறுவாசிப்பை நிகழ்த்தினாலும் கரினீனா ரெயினின் முன் விழுந்து தற்கொலை செய்வதை மாற்றிவிடமுடியாது. டாஸ்டாய், ஸோபியாவை தன் மரணத்தருவாயிலும் இரெயின் நிலையத்தில் வைத்துச் சந்திக்க விரும்பவில்லை என்பதையும் மாற்றிவிடவே முடியாது. ஆகவே  நாம் மாற்றவே முடியாச் சில சம்பவங்கள் எல்லாப் பிரதிகளிலும் இருப்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

கரினீனா தனக்கு விருப்பமான வாழ்வை வாழ்ந்ததுபோலவே, தனக்குப் பிடித்தமான முறையிலே தனது தற்கொலையைத் தேர்ந்தெடுத்தாரென நாம் கூறிக்கொள்ளலாம். ஆனால் அதேயே இன்னொருவர் இல்லை, கரினீனா இப்படி தற்கொலையைச் செய்தவர் என்பதால் அவருக்குள் பகிரமுடியாத பெரும் துயரம் இருக்கிறதெனக் கூறினாலும் -நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ- அது இன்னொருவரின்  வாசிப்புச் சுதந்திரம் என விளங்கிக்கொண்டாக வேண்டும். வாழ்வை சாகசங்கள் மூலம் கொண்டாடிய எர்னாஸ்ட் ஹெமிங்வே கூட தற்கொலையே செய்துகொண்டார், அப்படியெனில் அவரது  வாழ்வுதான் தோற்றுவிட்டதா என்ன? இல்லைத்தானே. ஆகவே கரினீனாவை நாம் எமக்கு விரும்பியமாதிரி எப்படியும் வாசித்துக்கொள்ளலாம். ஆனால் எமது வாசிப்புக்கள் மட்டுமே சரியென்று கூறினால், நாம் மகாபாரதம்/இராமாயணம் போன்ற காவியங்கள் பற்றி எழுதப்பட்ட பன்முகப்பிரதிகளை மறுத்துவிடுகின்ற ஆபத்தான நிலைக்குப் போய்விடுவோம்.

ஆகவே நான் செழியனிடம் நீங்கள் இப்படி கரினீனாவின் பாத்திரத்தைப் படைத்தது நியாயமா எனக் கேட்கப் போவதில்லை. ஆனால் அன்னா கரினீனா போன்ற பல்வேறு உள்ளடக்குகள் கொண்ட பாத்திரத்தைப் படைத்த டாஸ்டாயை இன்னொரு பாத்திரமாகப் பிரதியில் படைத்திருக்கலாம். அங்கே டாஸ்டாய் 'அன்னா கரினீனாவைச் சிருஷ்டித்த என்னால் அருகிலிருந்த சோபியாவைப் புரிந்துகொள்ளமுடியவில்லையே. இறுதியில் என்னைப் பார்க்க ஆவலோடு ஓடோடிவந்த ஸோபியாவை இரெயின் நிலையத்தில் வைத்துக்கூட சந்திக்க மறுத்தேனே, அந்தத் துயரத்தைக் காவியபடி இன்றும் தூங்காது அலைந்து கொண்டிருக்கின்றேனே' என டாஸ்டாய் தோன்றி நம்மிடம் கூறியிருந்தால், செழியன் என்கின்ற கலைஞனை இன்னும் நெருக்கமாய் உணர்ந்திருப்பேன். செழியன் தவறவிட்டது இந்தப்புள்ளியைத்தான்.

எனெனில் ஏற்கனவே பயணிக்காத திசைகளில் பயணிக்கின்றபோதுதான் ஒருவர் உன்னதக் கலைஞர் ஆகின்றார்.
................

(Oct 18, 2013)

எனக்குப் பிடித்த திரைப்படம்- கற்றது தமிழ்

Saturday, December 07, 2013

வாழ்வென்பது எரிந்துகொண்டிருக்கும் ஒரு மெழுகுதிரியைப் போலவோ என நினைப்பதுண்டு. ஒரு குச்சியின் உரசலில் எரியத்தொடங்கும் மெழுகுதிரி குறிப்பிட்ட நேரத்தில் மெழுகு முழுதும் உருகி அணைந்துவிடத்தான் செய்யும். எரிந்து அணையும் அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு இடையில் கூட, மெழுகுதிரி எந்தக் கணத்திலும் அணைந்துவிடலாம். அதுபோலவே வாழ்க்கையில் சாவு என்பது இன்னொரு கரையில் நிச்சயம் இருக்கிறது என்று தெரிந்து பயணித்தாலும், நம் பயணங்கள் எல்லாம் அந்தக் கரையைப் போய்ச் சேரும் என்பதும் அவ்வளவு உறுதியானதில்லை. இடையிலும் எதுவும் நடக்கலாம், சுவடுகளற்று நாம் போகலாம். மிக எளிய கனவுகளோடு வாழத்துடிக்கின்ற ஆனந்தியும், பிரபாகரும் இடைநடுவில் அணைந்துபோகின்ற இரண்டு மெழுகுதிரிகளாய் ஆவதை 'கற்றது தமிழ்' திரைப்படத்தில் பார்க்கின்றேன்.

ஒவ்வொருவருக்கும் முதன்முதலாகத் தாம் பார்த்த திரைப்படங்கள் பற்றிய அனுபவம் மறக்கமுடியாது இருக்கும். நான் ஈழத்தில் வாழ்ந்த காலங்களில் தியேட்டர்கள் ஒரு வரலாற்றுச்சின்னம் போல எவ்விதத் திரைப்படங்களும் திரையிடப்படாது தோற்றமளித்துக் கொண்டிருக்கின்றன. போர் எதைத்தான் விட்டுவைக்கின்றது. மின்சாரம் மட்டுமின்றி, விளக்குகளுக்கு வேண்டிய மண்ணெண்ணெயே தட்டுப்பாடாக இருந்த காலமே என்னுடைய சிறுவயதுப் பருவம். அப்படி இருக்கும்போது தியேட்டர்களில் எல்லாம் படம் ஓடுமா என்று எதிர்ப்பார்ப்பதே சற்று அதிகப்படியானதுதான். 

அப்படியிருந்தும் 'மழை நின்றபோதும் தூவானம் நிற்கவில்லை' போல அவ்வபோது சமாதானக் காலங்கள் வரும்போது மின்சாரம் வரும். அத்தகைய காலப்பகுதியில், ஊரே திருவிழாக்கோலம் பூண்டதுபோல -தொலைக்காட்சி, விசிஆர்- வாடகைக்கு எடுத்து இரவிரவாய் யாருடைய வீட்டிலாவது நான்கைந்து படங்கள் இடைவெளியில்லாது 'திரை'யிடப்பட்டிருக்கின்றன.  அதில் எப்போதும், முதற்படமாய் ஒரு ஆங்கில வீரதீரப்படம் இருக்கும். இரண்டாவதாய் நிறைய சண்டைகள் இருக்கும் தமிழ்ப் படம் கட்டாயம் இருக்கும். இந்த இரண்டு படங்களைப் பார்ப்பதற்குள்ளேயே என்னை நித்திராதேவி ஆரத்தழுவி அரவணைத்திருப்பார். இப்படிப் படங்களைத் திரையிடும்போது இன்னொரு சிக்கலும் இருக்கின்றது. ரீவி,விசிஆர் போன்றவற்றை வாடகைக்கு எடுப்பதற்கு அன்றைக்கு யார் உபயக்காரர்களாய்  இருக்கின்றார்களோ அவர்களின் செல்வாக்கு தெரிவுசெய்யப்படும் படங்களில் அதிகமிருக்கும். சிலவேளைகளில் அவர்களுக்கு வெளிநாட்டில் யாரேனும் உறவுக்காரர் இருந்தால், முதற்காட்சியாய் வெளிநாட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தையோ, பூப்புனித நீராட்டுவிழாவையோ பார்க்கும் சித்திரவதையும் கிடைக்கும். எனவே திரைப்படம் பார்ப்பது எப்போதும் எனக்கு ஓர் இனிய நிகழ்வாக இருக்கிறதென நீங்கள் நினைக்கக்கூடாது.  சில திரைப்படங்களைப் பார்க்கும்போது, அவர்கள் எங்களைத் துண்டு துண்டாக அறுத்து வதைப்பார்கள் என்று நீங்கள் முணுமுணுப்பதும் கேட்கிறது. எல்லாம் சேர்ந்ததுதான் வாழ்க்கை எனக்கூறப்படுவதைப் போல, எல்லாம் கூடியதுதான் திரைப்படங்களுமென நம்மை நாமே ஆறுதற்படுத்தவேண்டியதுதான்.

இவ்வாறாக நிறையச் சண்டைகாட்சிகளும், நகைச்சுவைக்காட்சிகளும் அமைந்த படங்களே மிகச்சிறந்தவை என நினைத்துக்கொண்டிருந்த என் கலைப்பார்வையை 'உழைப்பாளி'தான் மாற்றியது என்று கூறினால் நீங்கள் நம்பத்தான் வேண்டும். எப்போது மண்ணெண்ணெயில் இயங்கிக்கொண்டிருந்த ஜெனரேட்டர் நிற்கப்போகின்றதோ என்கின்ற பதற்றத்துடன் 'உழைப்பாளி' பார்த்துக்கொண்டிருந்தபோதுதான், ஏற்கனவே இந்தப் படத்தைப் பார்த்திருந்த நண்பன், 'இப்போது இந்தப்பாட்டில் பார், ரஜனியை ரோஜா தன் முன்பக்கத்தால் முட்டுவா' என்றான். அதன்பிறகு எனக்குச் சண்டைக்காட்சிகள் பிடிக்காமல் பாடல் காட்சிகள் நன்கு பிடிக்கத் தொடங்க பதின்மத்திற்குள் நான் நுழைந்திருந்தேன்.இவ்வாறாக என் 'கலைப்பார்வை' காலத்துக் காலம் மாறிக்கொண்டிருக்கையில், நான் எப்படி  இப்படியிருப்பதுதான் சிறந்த திரைப்படம் என அறுதியும் இறுதியுமாய்க் கூறமுடியும்? 

திரைப்படம் சார்ந்த கோட்பாட்டு விளக்கங்களை விரும்பி வாசிக்கும் ஒருவன் எனினும் அவை கூட ஒரு சிறந்தபடம் இதுதான்  எனக்கூறுவதில்லை. வேண்டுமெனில் இக்கோட்பாடுகள் நமக்குப் பிடித்த திரைப்படங்களில் நாம் தவறவிட்ட பக்கங்களைக் கண்டுகொள்ளவும், ஆழமாய் விளங்கிக்கொள்ளவும் உதவுகிறதென  கூறிக்கொள்ளலாம். மேலும் வெகுசனச் சினிமா, கலைப்படம் என்ற பிரிப்புக்களில் கூட நான் அவ்வளவு அக்கறைகொண்டதில்லை. எனக்குப் பிடித்த சினிமா, பிடிக்காத சினிமா என்று ஒரு எளிய புரிதலிற்காய் வேண்டுமானால் பிரித்துக் கொள்ளலாம்.

த்தனையோ தமிழ்த்திரைப்படங்களைப் பார்த்த நான் ஏன் 'கற்றது தமிழ்'ஐ பிடித்த ஒரு திரைப்படமாகத் தேர்ந்தெடுத்தேன் என யோசித்துப் பார்க்கின்றேன். முதலாவது இந்தத் தருணத்தில் 'கற்றது தமிழ்' பிடித்திருக்கின்றது. சிலவேளை இதை எழுதிமுடிக்கும்போது எனக்கு வேறொரு திரைப்படம் பிடித்திருக்கவும் கூடும். நாம் கடந்து வந்த பாதையில் தீர்க்கமாய் நம்பிய எத்தனை விடயங்களை காலப்போக்கில்  உதறிவிட்டு வரும்போது, எது பிடித்த திரைப்படம் என்பதில் குழப்பங்கள் வருவதென்பது இயல்பானதுதான் அல்லவா? 'கற்றது தமிழ்' ஏன் தவிர்க்கமுடியாத ஒரு திரைப்படமாய் எனக்குள் வந்தமர்ந்திருக்கிறது என்றால், இத்திரைப்படம் ஒவ்வொருகாட்சியிலும் நாம் ஒரு ஆனந்தியாகவோ, பிரபாகரராகவோ எந்தக்கணத்திலும் ஆகிவிடலாம் என்கின்ற பதற்றத்தைக் கொண்டுவருவதாலேயே எனக்கு நெருக்கமான உணர்வைத் தந்திருக்கின்றது என நினைக்கின்றேன். 

படம் தொடங்கும்போதே எந்த வம்புக்கும் போகாத ஓர் அப்பாவியான- பிள்ளைகளுக்கு 'மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமான்' எனச் சொல்லிக்கொடுக்கின்ற ஆசிரியர், யாரோ இருவரின் காதல் ஆட்டத்திற்கு பலியாகின்றவராகக் காண்பிக்கப்படுகின்றார். அதனால் எல்லோர் முன்னிலையிலும் அவமானப்பட்டு பொலிஸ் ஸ்டேசனில் சித்திரவதைக்குள்ளாகும் பிரபாகர், நீதிமன்றம் செல்லும் வழியில் தப்பிச்செல்லும் ஓட்டம், இறுதியில் அவரும் ஆனந்தியும் இரெயினொன்றை இருட்குகையில் சந்திக்கும்வரை முடிவதேயில்லை.  முக்கியமாய் அநேக மனிதர்களுக்கு வாழ்க்கையில் தாம் ஏதும் தவறு செய்யாமல், எவரையும் ஏமாற்றாமல் இருந்தால் அமைதியான வாழ்வொன்று கிடைத்துவிடும் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது. அதை இப்படம், நல்லவர்களாய் இருப்பதால் நல்லதொரு வாழ்க்கை அமைந்துவிடுமா என்பதைக் கேள்விக்குட்படுத்துகிறது. இன்னும் நீட்டித்துப்பார்த்தால், நாம் எல்லோரும் கொண்டாடுகின்ற 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதையே ஒருவகையில் ஆட்டங்காணச் செய்கிறது.  நாம் தனியர்களாய் இருக்கவிரும்பினாலும் நமது வாழ்வு நம்மால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை, பிறராலும் தீர்மானிக்கப்படுகின்றது என்பதைப் பிரபாகரின் வாழ்வு திசைமாறிப்போகும்போது நமக்குப் புரிகிறது.

எல்லார் முன்னும் அவமானப்பட்டும், மயிர் நீங்கின் உயிர் வாழாக் கவரிமானாய் ஆக விரும்பி தற்கொலை செய்ய முயற்சித்தும் கூட பிரபாகரனுக்கு வாழ்வு நெடியது என்கின்றது விதி. ஆனால் தற்கொலை முயற்சியில் தப்பித்த பிரபாகர் முன்னைய பிரபாகர் அல்ல. 'நான் சிவனாகிறேன்' என தனக்குத்தானே சமாதானம் சொல்லி யார் யாரையெல்லாம் கொல்ல விரும்புகின்றாரோ அவர்களைக் கொன்று தன்னையொரு உருத்திரனாகப் பாவனையும் செய்துகொள்கிறார். இவ்வாறு பிரபாகர் ரிக்கெட் விற்பவரையும், ரெயினுக்குள் ரிக்கெட் பரிசோதிப்பவரையும் எழுந்தமானமாய் திரைப்படத்தின் தொடக்கத்திலேயே கொல்லும்போது, இப்படத்தைப் பார்ப்பவருக்கு அதிர்ச்சி வரத்தான் செய்யும். எல்லாவற்றுக்கும் பின்னாலும் ஒரு காரணமிருக்கும் என்கின்றதை இப்படத்தில் நடைபெறும் கொலைகள் உடைத்து நொறுக்குகின்றன. இப்படிக் கூட நாம் யோசித்துப் பார்க்கலாம், எத்தனை பேர் வாழவேண்டிய இளவயதில் எல்லாம் சட்டென்று மறைந்துபோகின்றார்கள். அவை ஏன் அவ்வாறு நிகழ்கின்றதென்பதும் நமக்குத் தெரிவதில்லை. அதை விளங்கிக்கொள்ளும் அல்லது விளங்கிக்கொள்ள முயற்சிக்கும் நாம்,  தான் சிவனாகியதாய் எண்ணிக்கொள்ளும் பிரபாகர்  எழுந்தமானமாய்ச் செய்யும் கொலைகளையும் ஏதோ ஒருவகையில் புரிந்து கொள்ள நிர்ப்பந்திக்கபடுகின்றோம். 

பிரபாகர் இளவயதில் நேசிக்கும் ஓவ்வொருவரும் இடைநடுவில் இறந்துகொண்டிருப்பதால் அவருக்கு ஏற்படக்கூடிய மனப்பிறழ்வு விளங்கிக்கொள்ளக்கூடியதென்றாலும், இத்திரைப்படத்தில் இன்னொரு முக்கிய பகுதியும் இருக்கிறது. அது எவ்வாறு இன்றைய உலகமயமாதலில், பிளவுகள் ஏற்பட்டு நமது மனிதாபிமானம் எப்படிச் சுருங்கிக்கொண்டு போய்க்கொண்டிருக்கின்றது என்பது பற்றியது. 'கற்றது தமிழ்' - பிரபாகர் என்னும் அன்புக்கு ஏங்கும், சற்று மனப்பிறழ்வுக்கு உள்ளாகும் சாத்தியமுள்ள ஒருவரைப் படைத்திருந்தாலும், பிரபாகரைப் போல நாம் எவருமே - மனச்சிதைவுக்கு ஆளாகாமல் விட்டால்கூட-  இவ்வாறு கொலைகளைச்  செய்யும் ஒருவராய் மாறிவிடும் அபாயத்தைத்தான் இத்திரைப்படம் முன்வைக்கிறது என்பதையும் கவனித்தாகவேண்டும். பணம் தேடும் வாழ்வில் மிகப்பெரும் இடைவெளிகள் மனிதர்களுக்கிடையில் எப்படி  உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதையும், நாம் எப்படி பிறமனிதர்கள் மீது வைக்கும் அன்பையும் நம்பிக்கையையும் இழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதையும் ஒவ்வொரு காட்சியிலும் 'கற்றது தமிழ்' சொல்லிக்கொண்டேயிருக்கிறது.

பிரபாகர் மட்டுமில்லை, இப்படத்தில் வரும் அநேக கதாபாத்திரங்கள் பலமும் பலவீனமும் உள்ளவர்களாய்த்தான் படைக்கப்ப்ட்டிருக்கின்றனர். எந்த இடத்திலும் பிரபாகருக்கு 'நாயக விம்பம்' வழங்கப்படவேயில்லை. அவருக்கு ஆனந்தி மட்டுமே பரிசுத்தமான ஒர் உயிர். ஆகவே ஆனந்தியை அவரால் மனம் நிறைந்து நேசிக்கவும் முடியும்; அவள் காலத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டு செய்த தவறுகளைக்கூட பிரபாகரால் மன்னிக்கவும் முடிகிறது. ஆனால் அதே பிரபாகருக்கு, 'உனக்கு துணிச்சலிருந்தால் என்னைத் தொட்டுப்பார்' என்ற ரீ-சேர்ட்டை அணிந்த பெண் எரிச்சலூட்டுகிறாள். எனக்குத் தைரியமிருக்கிறது என அவளின் மார்புகளைத் தொடவும் செய்கிறான்.

இங்கேதான் நமக்கு பிரபாகரை எப்படிப் பார்ப்பது என்னும் குழப்பம் வருகிறது. நமது காதலிகளைத் தேவதைகளாக்கியபடி, பிற பெண்களைப் பாலியல் சுரண்டல் செய்ய விரும்பும் நம் உள்மன ஆசைகள் பெருகத்தொடங்குகின்றன. நாம் தான் அந்தப் பிரபாகரோ என நினைக்கும் புள்ளி நம்மையின்னும் பதற்றமடையச் செய்கிறது. அது மட்டுமில்லை, பிரபாகர் ஆனந்தியோடு பஸ்சில் பயணிக்கும்போது, ஆனந்தி ஒரு விலைமாது எனத் தெரிந்து சேட்டை செய்கின்ற மனிதரை பிரபாகர் அடித்து உதைப்பதேயில்லை. மென்மையாக 'அவள் எனக்குரியவள்' என்பதைச் சொல்லிவிட்டு அந்த நபரை விட்டுவிடுகின்றார். ஒரு பெண்  'உனக்குத் தைரியமிருந்தால் என்னைத் தொட்டுப் பார்' என்றோ அல்லது 'என் பட்டன்களை கழற்று' என்கின்ற வாசகங்களையுடைய ஆடையை அணிந்திருப்பதோ உறுத்தச் செய்யவும், அதனால் பதற்றடையும் பிரபாகர் ஏன் பாலியல் சேட்டை செய்யும் ஆணோடு மூர்க்கமே கொள்வதில்லை? இதைவிட ஆண் மனதின் பெண்களில் அதிகாரம் செலுததும் வேட்கையை தெளிவாகச் சொல்லிவிடமுடியுமா? இன்றும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாவதற்கு, அவர்கள் அணியும் ஆடைகளே என தம் வக்கிரகங்களை மறைக்கக் காரணம் சொல்லிக்கொண்டிருக்கும் ஆண்கள் இருக்கின்றார்களா இல்லையா?  

தமிழைக் கற்பதால் எவ்வளவு அவமானப்பட வேண்டியிருக்கிறது என்பது பற்றி வரும் காட்சிகளும் கவனத்தில் கொள்ளவேண்டியது. வெளியிடங்களில் மட்டுமில்லை, தமிழ்த்துறையிலேயே ஒருவன் நல்ல புள்ளிகள் எடுத்தும் -தமிழைக் கற்கவிரும்புகின்றான் என்பதற்காய்- எவ்வளவு அவமானப்படுத்தப்படுகிறான். ஆனால் பிரபாகர் தனக்குப் பிடித்த தமிழைக்கற்று ஓரு ஆசிரியராகவும் ஆகி விடுன்றான். அவன் ஓரிடத்தில் தமிழ் சாந்தத்தைக் கற்றுத்தரும், அதேவேளை தேவையெனில் ரெளத்திரமாய் இருக்கவும் முடியுமெனச் சொல்கின்ற இடம் அற்புதமான தருணம்.

இதைத் தவிர்த்து இந்தப் படத்தில் ஒலிக்கமுனையும் பன்மைக்குரல்களையும் நாம் அவதானிக்கலாம். பிரபாகர் தனது சாட்சியத்தைப் பதிவுசெய்து தொலைக்காட்சியில் ஒளிபரப்ப்பான பின், ஏதோ வாசகம் எழுதிய ரீசேர்ட் அணிந்த ஒரு பெண்  கருத்துக் கூறுவார் 'நாங்கள் இப்படி எதுவும் எழுதாத ஆடைகள் அணிந்து வந்தால் கூட,   இவங்கள் ஏதோ அங்கே பார்க்காமலா இருக்கபோகிறாங்கள்' என்பதெல்லாம் பிரபாகரின் சாட்சியத்தை குலைக்கமுயல்பவை. அதேசமயம் இன்னொருகுரல், வளர்ச்சி என்பது இயல்பான நிலையில் நடக்கவேண்டும். உடலில் கால்மட்டும் வீங்கினால் அது வளர்ச்சியல்ல வியாதி எனக்கூறுவது கவனத்தில் கொள்ளவேண்டியது. அந்நியமோகத்தையும், ஐடி தொழிலையும் விமர்சிக்கும் பிரபாகருக்கு, அவர்கள் இறுதிக்கச்சாய்ப் பொருளே தவிர, இதற்கு முதன்மைக்காரணங்கள் அரச இயந்திரமும் அரசியல்வாதிகளும் என்பதை எவ்வளவு எளிதாகக் கடந்துபோகமுடிகிறது? தமிழை இன்னும் தாழ்த்தியதும், வருமானத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியதும்  இந்த ஜ.டிக்காரகளா? தமிழ் தமிழ் என்று தமிழுக்காய்த் தீக்குளிப்போம் என் அப்பாவி இளைஞர்களை பலியாக்கவும் தயங்காத அரசியல் கட்சிகள் அல்லவா இவற்றுக்கு முக்கிய காரணம்? அவர்களை நோக்கியல்லவா பிரபாகர் பேசியிருக்கவேண்டும்?  இதையொரு பலவீனமாய்த்தான் கொள்ளவேண்டியிருக்கிறது. இதையெல்லாவற்றையும் விட பிரபாகர் இறுதியில் கூறுவதைத்தான் நாம் இன்னும் கவனத்துடன் கேட்கவேண்டும். இப்போது ஏழைகள் பணக்காரர் என்று இருபெரும் பிரிவுகள் வந்துவிட்டன. இனி சின்ன விசயத்திற்குக்கூட மனிதர்களை மாறி மாறி கொல்லவும் துணியத் தயங்கமாட்டார்கள் என்னும் குரல்.

னந்தியின் பாத்திரம் அவ்வளவு இயல்பாய் 'கற்றது தமிழில்' இருக்கிறது. காதலிக்க விரும்பும் மனதையும், அதை வெளிப்படையாகக் காட்ட முடியாத அவதியோடு அவரது வாழ்வு நூலறுந்து பட்டம் போல அலைகிறது. ஆனந்தியாக நடிக்கும் அஞ்சலி ஒவ்வொருமுறையும் 'நிஜமாய்த்தான் சொல்கிறியா' எனக் கேட்கும் ஒவ்வொரு தருணங்களும் கவிதைக்கு நிகர்த்தது.காலத்தின் நிர்ப்பந்தத்தால் ஆனந்தி பாலியல் தொழிலாளியாக மாறியபோது - தான் எழுந்தமானமாய் கடற்கரையில் சுட்டுக்கொன்ற காதலர்களில்- ஆனந்தியும் ஒருத்தியாக இருந்திருந்தால் என்னவாயிருக்குமென பிரபாகர் எண்ணிப்பார்த்திருப்பாரா? அப்படி அவர் தன் ஆனந்தியைப் போலத்தான் பிறரும்... என நினைத்திருந்தால் எந்தப் பெண்ணையும் வெறுத்திருக்கமாட்டார் அல்லவா?  ஆகவேதான் சொல்கிறேன் பிரபாகரை எப்படிப் புரிந்துகொள்வதென்ற சிக்கலே இன்னுமின்னும் என்னை இப்படத்தைப் பற்றி யோசிக்க வைக்கிறது. 

பிரபாகர் தனக்கான அறத்தோடு வாழும் ஒருவரே தவிர,  பொது அறம் என நாம் விவாதிக்கும் எவற்றிலும் அவருக்கு அக்கறையே இருப்பதேயில்லை.எனவேதான் பிரபாகர் என்கின்ற பாத்திரம் ஒவ்வொருமுறையும் இதுதான் அவர் என நினைக்கின்றபோது இன்னொரு வடிவம் எடுத்துவிடுகின்றது. அது இத்திரைப்படத்தைப் பார்க்கும் நமக்குத் திகைப்பூட்டுவதாய் இருக்கிறது. மேலும் மேலும் இதுகுறித்து உரையாடும் வெளியைத் திறந்தபடி 'கற்றது தமிழ்' ஆகிவிடுகிறது. நாம் ஒவ்வொருவரும் பல்வேறு தன்னிலைகளால் ஆக்கப்பட்டவர்கள். வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வும், வாழ விரும்பும் வாழ்வும் கூட இருவேறு துவிதங்களாய்க்  இருக்கலாம். அது இன்னும் நம் தன்னிலைகளை அடித்துத் துவசம் செய்கின்றன. 

நாம் நம் தன்னிலைகளில் பிரபாகரைப் பார்க்கின்றோம். நம்மால் செய்யமுடியாததைப் பிரபாகர் செய்யும்போது நெருக்கத்தையும், ஆனால் அதேசமயம் பிரபாகர் நாம் விரும்பி  ஆகும் பாத்திரம் அல்ல என்று உணர்கின்றபோது விலகலையும் அடைகின்றோம்.  எனவேதான் இந்தத் தருணத்தில் 'கற்றது தமிழ்' எனக்குப் பிடித்த திரைப்படமாய் அமைந்திருக்கிறது போலும்.


(நன்றி: 'காட்சிப்பிழை' - ஒக்ரோபர் 2013)

கோபிகா செய்தது என்ன? -ஜெயமோகன்

Monday, November 11, 2013


’அம்ருதா’ அக்டோபர் 2013 இதழில் இளங்கோ எழுதிய ‘கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்?’ சமீபத்தில் வாசிக்க நேர்ந்த நல்ல கதை. டி.சே.தமிழன் என்ற பேரில் எழுதி வந்தவர்தான் இளங்கோ என்ற பேரில் எழுதுகிறார் என்று தோன்றுகிறது. கனடாவில் இருந்து போர் முடிந்த யாழ்ப்பாணத்துக்கு திரும்பிவந்து சிலநாள் இருந்து மீண்டு செல்லும் ஒருவனின் அனுபவக்குறிப்புகளின் வடிவில் அமைந்த கதை.

ஆனால் நேரடியாக சமகால யதார்த்தத்தைச் சொல்லவில்லை. செல்பவனின் பார்வையில் உள்ள மனக்கசப்பு படிந்த விலகல்தான் கதையின் மைய உணர்ச்சி. இயக்கம் இருந்த நாட்களை, இயக்கம் அழிந்தபின் மக்களுக்கு இருக்கும் உணர்ச்சிகளை பல்வேறு சில்லறை நிகழ்ச்சிகளின் வழியாக மென்மையாகத் தொட்டுச் செல்கிறது கதை.

மாம்பழமும் புட்டும் மீன்கறியுமாக யாழ்ப்பாணச்சாப்பாடு சாப்பிட்டு பழைய நினைவுகளை அலசியபடி போடும் மதியத்தூக்கம். இயக்கத்திற்குச்சென்ற கனவுநிறைந்த மனிதர்களின் துளித்துளி நினைவுகள். இயக்கத்தில் இருந்து அடிபட்டு மீண்டு வந்திருப்பவர்கள் இயக்கத்தில் இருந்து ஓடிப்போய் என்னென்னவோ ஆகி இப்போது முக்கால்வாசி பீலாவுடன் வாழ்பவர்கள் என நுட்பமாக முடையப்பட்ட சித்திரங்கள். அதன் வழியாக ஒரு விடுதலை – வன்முறை இயக்கத்துடன் எளிய லௌகீகர்களுக்கு இருக்கும் விருப்பும் வெறுப்பும் கலந்த உறவின் அந்தரங்கமும் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது.

அந்தக்காலகட்டத்தை முதிரா இளமையின் காதலின் மனக்கிளர்ச்சியுடன் ஒப்பிடுகிறது இக்கதை. ஆணின் முரட்டுவிளையாட்டுத்தனத்தை காதலிக்கும் எளிய நடுத்தவர்க்க பெண்ணின் மனநிலையை ஈழமக்களின் மனநிலையுடன் ஒப்பிடுகிறது. அந்த மனநிலையை கடைசிவரை நீட்டி அவனுடைய வன்முறையையும் கூட மன்னித்துவிடும் ‘புரிந்துகொள்ள முடியாத’ தன்மையை யாழ்ப்பாண மக்களின் இயல்புக்கு சமானமாகச் சுட்டிக்காட்டுகிறது. யோசிக்க யோசிக்க விரியும் ஒரு கற்பனை. விளையாட்டுக் கண்ணன் மீது பித்தான கோபிகை என்ற பொருளில் போடப்பட்டிருக்கும் தலைப்பும் அழகு.

போருக்குப்பிந்தைய ஈழ இலக்கியத்தில் சயந்தன் [ஆறாவடு], அகிலன், யோ.கர்ணன் போன்ற சிலர் முக்கியமாக கவனம் ஈர்க்கிறார்கள். இளங்கோவையும் அவ்வரிசையில் வைக்கமுடியும்.

நன்றி: http://www.jeyamohan.in/?p=41049 (Oct 25, 2013)

வாழ்க்கை அல்லது காதல் இப்படியும் இருக்கலாம்...

Saturday, September 14, 2013


Before sunrise (1995)

இருபதுகளில் இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் புத்தபெஸ்டிலிருந்து வியன்னா போகும் ரெயினொன்றில் தற்செயலாய் சந்தித்துக்கொள்கின்றார்கள். இளைஞர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். ஸ்பெயினில் படித்துக்கொண்டிருக்கும் காதலியைப் பார்க்க மெட்ரிக் போக, காதலி இவரைச் சந்திப்பதைத் தவிர்க்கும் துயரத்துடன் ஜரோப்பிய நாடுகளுக்குள் அலைகின்றார். ரெயினில் சந்திக்கும் பெண்ணோ பாரிஸில் படித்துக்கொண்டிருப்பவர். ஹங்கேரியில் இருக்கும் பாட்டியைச் சந்தித்து பாரிஸிற்குத் திரும்பும் வழியிலேயே இந்த அமெரிக்க இளைஞரைச் சந்திக்கின்றார்.

இயல்பான உரையாடலில் தொடங்கும் அறிமுகம், அவர்களின் விருப்புகள், எதிர்காலக் கனவுகள், நிகழ்காலத் தடுமாற்றங்கள் என பகிர்ந்து கொள்வதென நீள்கிறது. பாரிஸிற்கு ரெயினில் போகும் பெண்ணை, தன்னிடம் இரவு அறை எடுத்துத் தங்கக் காசில்லை, விமானம் ஏறும்வரை தெருக்களிலேயே அலையப்போகின்றேன், என்னோடு கூடவே கொஞ்ச நேரம் கழிப்பாயா எனக் கேட்க, வியன்னாவில் தெருக்களில் இருவரும் அலைந்து திரிவதுடன் படம் முடிகிறது.

 மெல்லிய காதல் அந்த சில மணித்தியாலங்களில் முகிழ்ந்தாலும் அமெரிக்க இளைஞன், 'நாங்கள் திருமணம் செய்தால் கூட இன்னும் 10,20 வருடங்களில் எமக்கு அந்தத் திருமண வாழ்க்கை கசந்து போய்விடும் என  அரும்பத் துடிக்கும் எதிர்காலக் கனவுகளைக் கலைக்கிறான். எனினும் அவர்களுக்குள் ஊற்றெடுத்துக் கிளம்பும் காதலை மறுதலிக்க முடியாமல், இன்னும் 6 மாதங்களில் இதேயிடத்தில் இன்னதிகதியில் சந்திப்போம் எனக்கூறி, அதைத் தவிர எவ்விதத் தொடர்புகளையும் பகிராமல் பிரிகின்றனர்.

முற்றுமுழுதாக சில மணித்தியாலங்களுக்குள் நிகழும் கதை மட்டுமின்றி, இரண்டே இரண்டு முக்கிய பாத்திரங்களைக் கொண்டு நகர்த்தப்பட்ட இப்படத்தை முன்னொருபொழுது தற்செயலாகப் பார்த்தபோது மிகவும் வசீகரித்திருந்தது. அதுவும் உரையாடல்களால் மட்டும் இப்படியொரு சுவாரசியமான படத்தை எடுக்கமுடியுமா என்ற வியப்பும் கூடவே வந்திருந்தது. இதில் இரு பாத்திரங்களும் மிக நேர்த்தியாகவும், ஒன்றுக்கொன்று தங்களை விட்டுக்கொடுக்காதும் படைக்கப்பட்டிருக்கும். இந்த உலகில் அனைத்தையும் ஒரு பெரும் புரட்சியினால் மாற்றிவிடமுடியும் என்கின்ற பெரும்பான்மையான ஆண்களின் பிரதிநிதியாக ஜெசி படைக்கப்பட்டதையும், பெரும் புரட்சிகள் எப்போதும் நிகழுமென்று தெரியாது, அதற்கு முன்னர் செய்யவேண்டிய சிறுசிறுவிடயங்கள் இருக்கின்றன, பெரும் புரட்சிக்காய் காத்திருப்பதை விட இவைதான் இன்னும் முக்கியமானவை எனத் துணிந்து கூறும் பெண்ணான செலினையும் கண்டு -என்றென்றைக்குமாய் நினைவில் கொள்ளும் ஒரு படமாக- எனக்குள் இதைச் சேகரம் செய்திருந்தேன்.


Before Sunset (2004)

Before sunrise கொடுத்த உற்சாகத்தின் மிகுதியில் அதன் தொடர்ச்சியாக வந்த Before Sunset ஐ  தேடத்தொடங்கினேன். அந்தப் படமும் எனக்கு அவ்வளவு ஏமாற்றத்தைத் தராது மிகவும் கவர்ந்திருந்தது. இப்போது ஜெசி அவரின் முப்பதுகளில் இருக்கின்றார். இடைப்பட்ட காலங்களில் அவர் ஒரு நாவலாசியருமாகிவிட்டார். அவர், தான் செலினை வியன்னாவில் சந்தித்த நிகழ்வை மையமாகக் கொண்டு நாவலொன்றும் எழுதியிருக்கின்றார். அத்துடன் ஜெசி அமெரிக்காவில் ஒருவரைத் திருமணம் செய்து அவர்களுக்கு இப்போது ஒரு குழந்தையும் இருக்கின்றது. தன் நாவலை அறிமுகப்படுத்த ஜெசி பாரிசுக்கு வந்த பொழுதில், புத்தகக் கூட்டத்தில் இந்த நாவலில் வருகின்ற பெண்ணை அந்த ஆண் பாத்திரம் மீண்டும் சந்திக்கின்றதா ஒரு கேள்வி கேட்கப்படுகின்றது. அதற்கு பதிலளிக்க முற்படும் ஜெஸி, ஓரு ஓரத்தில் புன்ன்கையோடு காத்திருக்கின்ற செலினை –கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களின் பின் -கண்டுகொள்கிறார். ஜெசிக்கு அன்றிரவு அமெரிக்காவிற்குச் செல்வதற்கான விமானம் இருக்கின்றது.

வியன்னாவின் தெருக்களில் அலைந்தமாதிரி ஜெசியும் செலினும் பாரிஸ் தெருக்களில் நிறையக் கதைத்தபடி அலையத் தொடங்குகின்றனர். ஜெசிக்கு திருமணம் ஆகியதுபோல, செலினுக்கும் ஒரு புகைப்படக்கலைஞர் காதலராக இருக்கின்றார். செலின் அவருக்கு எப்போதும் ஆர்வம் இருக்கும் சூழலியல் துறையில் வேலை செய்துகொண்டிருக்கின்றார்.

ஒரு கட்டத்தில் ஜெசி, தன் திருமண வாழ்வில் சந்தோசம் எதுவுமில்லை, மகனுக்காய் மட்டுமே திருமண வாழ்க்கை தொடர்கிறது என்கிறார். செலினும் தன் காதலர் அடிக்கடி வெவ்வேறு நாடுகளுக்கிடையில் அலைவதால் தங்களுக்குள்ளும் இடைவெளி விழுந்துவிட்டதென்கிறார். இடையில் ஜெசி, வியன்னாவிற்கு தாங்கள் சந்தித்த ஆறு மாதங்களுக்குப் பின் அதேயிடத்திற்கு வந்தபோது செலின் ஏன் வரவில்லை எனக் கேட்கிறார். அதே நேரத்தில் செலினின் பாட்டியார் இறந்துவிட்டதால்  தன்னால் வரமுடியவில்லையென இயலாமையுடன் கூறுகின்றார். ஒரு குறிப்பிட்ட நாளில் சந்திப்பதைத் தவிர வேறு எந்தத் தொடர்புகளும் அவர்களுக்கிடையில் இல்லை என்பதும் ஏற்கனவே நாம் அறிந்ததே.

செலினின் அபார்ட்மென்டிற்கு ஜெசி போகின்றார். கிற்றாரில் தேர்ச்சி பெற்ற செலினை தனக்காக கிற்றாரை இசைக்கச் சொல்கிறார் ஜெசி. செலின் இசைக்கிறார். பிறகு ஜெசி ஸ்ரிரீயோவில் போடும் பாடலுக்கு செலின் நடனமாடுகின்றார். பாடலின் நடுவில் செலின், 'உனக்கான விமானத்திற்கு நேரமாகிவிட்டது' என்கின்றார். 'எனக்குத் தெரியும்' என தன் திருமண மோதிரத்தை ஒருவித அந்தரத்துடன் ஜெசி பார்ப்பதுடன் படம் முடிகிறது.


Before Midnight (2013)

ஜெசிக்கும் செலினுக்கும் இப்போது திருமணமாகிவிட்டது. அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகளும் இருக்கின்றன.  செலினும் ஜெசியும் முதன்முதலாக வியன்னாவில் சந்தித்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகிவிட்டன என்பது நமது ஞாபகத்திற்காய்.

ஒரளவு பிரபல்யமான எழுத்தாளராகிவிட்ட ஜெசியை, கிறீக்கிலிருக்கும் ஒரு எழுத்தாளர் தனது இருப்பிடத்திற்கு கோடையைக் கழிக்க அழைப்பு விடுகின்றார். ஜெசி, செலினோடு, ஜெசியின் முதல் திருமணத்தில் பிறந்த மகனுடனும் சேர்ந்து விடுமுறையைக் கிறீக்கில் கழிக்கிறார். மகனை அமெரிக்காவிற்கு விமானம் ஏற்றிவிடும் ஜெசிக்கு தனது மகன் பதினமத்தில் இருக்கும் பருவத்தில் தான் தன் மகனுக்கு அருகில் இல்லையே என்ற ஏக்கம் வருகின்றது.

மகனை விமானம் ஏற்றிவிட்டு திரும்பும்வழியில் தன் ஏக்கத்தை செலினுக்குச் சொல்கிறார். அதிலொரு திட்டமாய் அமெரிக்காவில் போய் இருக்கலாமா என செலினிடம் ஜெசி கேட்க, ஜெசி தனது வேலை/கனவு அமெரிக்காவிற்குப் போனால் கலைந்துவிடுமெனச் சொல்கிறார். உரையாடல் தீவிரமாய் ஒருகட்டத்தில் நீள, இது நாம் இருவரும் பிரிந்துபோகின்றதற்கான புள்ளி போலும் என செலின் கூறுகின்றார் (குண்டு வெடிப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது).

இப்படியே உரையாடி உரையாடி எழுத்தாளரின் வீட்டை அவர்கள் அடைகின்றார்கள். அங்கே பல்வேறு எழுத்தாளர்களுடன் வைனும் மதிய உணவுமாய் உற்சாகமான பேச்சு நடக்கின்றது. சிலர் தமது இழந்துபோன துணைகளின் துயரங்களைப் பகிர்கின்றார்கள். அங்கேயிருக்கும் எழுத்தாளரின் பேரனும் அவரது காதலியும் -செலின்/ஜெசி- போன்றவர்களின் பார்வையைப் போன்று அல்லாத வேறு ஒரு வாழ்க்கையின் திசையைப் பற்றி உரையாடுகின்றார்கள்.

 இதன் தொடர்ச்சியில், கிறீக் நண்பர்கள், ஜெசியும், செலினும் ஓர் இரவைக் குழந்தைகளின் தொல்லையில்லாது தனிமையைக் கழிக்க ஒரு உயர்ந்த ஹொட்டலை பதிவு செய்து கொடுக்கின்றார்கள். ஏற்கனவே உறவு உடைகின்ற நிலையில் இருப்பதாய் நினைக்கின்ற செலின் தாங்கள் இரவு  அங்கே போய்த் தங்கப்போவதில்லை என முதலில் மறுக்கின்றார். பின்னர் நண்பர்களின் வற்புறுத்தலால் இருவரும் ஹொட்டலுக்குச் செல்கின்றார்கள்

அங்கே அழகாய்த் தொடங்கும் இரவு, ஜெசியின் மகன் தொலைபேசியில் பேசும்போது, செலின் ஜெசியிடம் பேசக்கொடுக்காது விடுவதுடன் வேறு நிறத்தைப் பூசிக்கொள்ளத் தொடங்குகின்றது. ஒரு எழுத்தாளனாய் இருக்கும் ஜெசி, புத்தகம் எழுதுவதிலும், அதைப் பிரபல்யமாக்க வெவ்வேறு நகரங்களுக்கு அலைவதிலும் மட்டுமே கவனமாய் இருக்கிறானே தவிர, தன்னையோ தன் பிள்ளைகளையோ கவனிப்பதில்லை எனக் குற்றஞ்சாட்டுகின்றார் செலின். மேலும் ஜெசியினால் தன் career முற்றாக அழிந்துவிட்டது எனவும் அவர் பட்டியலிடுகின்றார். இப்போது கூட தனக்குக் கிறீக்கிற்கு கோடை விடுமுறைக்கு வர விருப்பமிருக்கவில்லை. நீங்கள் எழுத்தாள ஆண்கள் உங்கள் நாவல்களைப் பற்றி உரையாடுவதிலும் அடுத்து என்ன எழுதுவது எனக் கதைத்துக்கொண்டும் உலாத்திக்கொண்டும் இருக்கின்றீர்கள், என்னைப் போன்ற பெண்கள் சமையலறையில் இருந்துகொண்டு சாலாட் செய்தும், குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு காலத்தை வீணாக்க வேண்டுமென தொடர்ந்து செலின் குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போகின்றார்.

ஜெசி இடைமறித்து, செலின் வேலைக்குப் போகும் நேரத்தில் எல்லாம் தானே வீட்டிலிருந்து குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் என்றும், உங்கள் மீதிருக்கும் காதலால்தான் அமெரிக்கா கூட போகாமல் பாரிஸில் இருக்கின்றேன் எனவும் கூறுகின்றார். இடையில் செலின் யாரோ ஒரு புத்தக விற்பனையாளப் பெண்ணோடு ஜெசி உறவு கொண்டவரா எனக் கேட்கிறார். அதை ஓமென ஒப்புக்கொள்ளும் ஜெசி, நீ கூட உன் பழைய காதலனைச் சந்தித்தபோது உறவுகொண்டாய் என்பதை அறிவேன், ஆனால் இவற்றை எல்லாம் மீறி எனக்கு உன் மீதும் நம் இரட்டைக் குழந்தைகள் மீதும் நேசம் இருக்கின்றது' என்கிறார்.

மேலும் செலின் - ஜெசி உறவு சிக்கலாகின்றது.  தான் சொல்லும் எதையும் செவிமடுக்காதவன் ஜெசி என மேலும் மேலும் செலின் குற்றஞ்சாட்டுகின்றார். உரையாடல் ஓரிடத்தில் தீவிரமாகி, 'இனி என்னிடம் உனக்கான காதல் எதுவும் இல்லை' என அந்தக் ஹொட்டலை விட்டு செலின் வெளியே போய்விடுகின்றார்.

செலினும் ஜெசியும் சேர்ந்தார்களா? திரைப்படம் முடியும்போது அவர்களின் பாத்திரங்கள் எந்தப் புள்ளியில் விடப்படுகின்றன என்பதை இன்னும் இப்படத்தைப் பார்க்காதவர்களுக்காய் விட்டுவிடுவோம். இரண்டு மணித்தியாலயம் நீளும் இப்படத்தில் தொடக்கத்தில் உள்ளே நுழைய சற்று அலுப்பாயிருந்தாலும், ஜெசியும் செலினும் தங்களுக்கிடையில் உரையாடத் தொடங்க நேரம் போனதே தெரியாமல் படம் முடிந்திருந்தது. அவ்வளவு ஆழமாய் உரையாடலை மட்டும்  முன்வைத்தே படத்தை நகர்த்தியிருப்பார்கள். இப்படத்தில் தெரிந்த ஒரு குறைபாடு என்னவென்றால், முதல் 2 படங்களிலும் ஆண் பாத்திரத்திற்கு நிகராய் படைக்கப்பட்ட பெண் பாத்திரம -சற்று விலத்திவைக்கப்பட்டு- எப்போதும் குறைகளை மட்டும் ஒப்புவிக்கும் பெண்ணாய் செலின் ஆக்கப்பட்டுவிட்டாரோ போலத் தோன்றியது.

எங்கோ ஓரிடத்தில் இருவரும் சமரசமாக வேண்டும் என்பதே குடும்ப அமைப்பு முன்வைக்கும் நிபந்தனை. படத்தைப் பார்க்கும்போது பாத்திரங்கள் குடும்ப அமைப்புக் குறித்து நிறையக் கேள்விக்குட்படுத்தும் என நினைத்துக்கொண்டிருந்தேன். விரும்பிச் செய்யும் சமரசங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே. ஆனால் பிடிக்காமல் செய்யும் சமரசங்கள் பிறகு குற்றச்சாட்டுக்களாய் அலையத் தொடங்கும்போது, அது எல்லோரையும் காயப்படுத்தச் செய்வதுடன் கடந்த காலத்து இனிமையான நாட்களைச் சிதைக்கவும் செய்கின்றன.

இப்படம் முடிந்துவரும்போது, நண்பர் கூறினார், 'இவ்வாறான படங்களைப் பார்க்கும்போது மனது எங்கும் வெற்றிடமே உருவாகிறது' என்று. எனக்கென்னவோ இவ்வாறான படங்கள் இந்த வாழ்க்கை - முக்கியமாய் குடும்ப அமைப்பு- எவ்வளவு சிக்கலானது என்பதையும், அங்கே பரஸ்பர புரிந்துணர்வும் விட்டுக்கொடுத்தலும் இன்றி எதுவுமே சாத்தியப்படாது' என்பதை மீளவும் நினைவுபடுத்துகிறது போலவும் தோன்றியது.

0000000000000000000000000000000

'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்' கதைகளின் தொகுப்பு குறித்து...

Friday, August 16, 2013

-பாரதி வடிவேல்

இள‌ங்கோ.. உங்களின்‌ க‌தைக‌ள் எல்லாவ‌ற்றையும் நேற்றுத்தான் ப‌டித்து முடித்தேன்..க‌தைக‌ள் என‌க்கு மிக‌ மிக‌ நெருக்க‌மாக‌ இருப்ப‌தாக‌‌ உண‌ர்கிறேன்.. நான் வாசித்த‌ம‌ட்டில் "ச‌க்க‌ர‌வ‌ர்த்தியின் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு சார்ந்த‌ சிறுக‌தைக‌ள் ம‌ற்றும் க‌ச‌க‌றண‌ம் ஆகிய‌வை எங்க‌ளின்‌ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு பிர‌தேச‌ வாச‌னை கார‌ண‌மாக‌ நெருக்க‌மாக‌ இருந்த‌து..

இப்பொழுது உங்க‌ளின்‌ க‌தைக‌ளும் அதுவும் குறிப்பாக, தொகுப்பில் பின்னால் வரும்‌ க‌தைக‌ள் டொர‌ண்டோவின்‌ கிள‌ப்..ரெஸ்டூர‌ண்ட் ல‌ கோப்பை க‌ழுவிற‌து.. உச்சியிலிருந்து பார்க்கும் ட‌வுன் டவுன் ச‌ன‌ திர‌ள் .. ம‌ற்றும் ச‌ப் வே இட‌ங்க‌ள். ந‌வ் ப‌த்திரிகையின் க‌டைசி ப‌க்க‌ங்க‌ள் எல்லாம் மிக‌வும்  என‌க்கு நெருங்கிய‌ த‌ள‌ங்க‌ள்.. அதும‌ட்டும‌ல்ல‌ என‌க்கு வ‌ரும் எண்ண‌ங்க‌ளும் பெரும்பாலும் உங்களின்‌ எழுத்திலும் காண‌ப்ப‌ட்ட‌து ம‌கிழ்ச்சியும் ஆச்ச‌ரிய‌மும்.. நானும் சில‌ வ‌ருட‌ங்க‌ள் முன்பு கோப்பை க‌ழுவிக்கொண்டிருந்த‌போதும், ப‌க்ட‌ரியில் இய‌ந்திர‌த்த‌ன‌மாக‌ வேலைசெய்து கொண்டிருந்த‌போதும் இதெல்லாம் ஏன் இல‌க்கிய‌த்தில‌ ந‌ம்ம‌ட‌ ஆக்க‌ள் எழுதுவ‌தில்லை யாராவ‌து க‌ண்டிப்பா எழுதவும் வேணும் எண்டு யோசிப்பேன்.. என்னுடைய‌ வாசிப்புப் ப‌ர‌ப்பும் குறைவு என்ப‌தால் நான் அப்ப‌டி யாரும் எழுதி வாசிக்க‌வில்லையோ தெரியாது..

ம‌ற்றும் உங்க‌ளின்‌ தொகுப்பில‌ ஆர‌ம்ப‌த்தில்‌ இருந்து க‌டைசி க‌தைக‌ள் செல்ல‌ செல்ல‌ க‌தையின் அட‌ர்த்தி கூடி செல்வ‌தாயும் ஆழமான‌ க‌தைக‌ளாக‌ ஆழ‌ம்கூடி செல்வ‌தாக‌வும் என‌து‌ வாசிப்ப‌றிவுக்கு உண‌ர‌ப்ப‌ட்ட‌து.. "சிற‌கு வள‌ர்ந்த‌ குர‌ல்க‌ளுட‌ன் ப‌ற‌ந்து போன‌வ‌ன்" என்னை மிக‌வும் தூக்கிப்போட்ட‌ ஒரு க‌தை..அதை‌ வாசித்த‌ததும் ஒரு குறும்ப‌ட‌மாக் சிற‌ப்பாக‌ எடுக்க‌லாம் என்று ஒரு எண்ண‌மும் வ‌ந்த‌து..! கேங்ஸ்ட‌ர் ப‌ற்றிய‌ க‌தையும் நான் கேள்விப்ப‌ட்ட‌ ஒரு விச‌ய‌த்தை நீங்க‌ சொன்ன‌ வித‌ம் மிக‌வும் பிடித்திருந்த‌து..

ம‌ற்றும் இக்க‌தைக‌ளெல்லாம் வாசிக்கும்போது‌ உங்க‌ளின் சொந்த‌ அனுபவ‌ம் என்று நினைத்தே என்னால் வாசிக்க‌ முடிந்த‌து.. க‌தைசொல்லியையும் நூலாசிரிய‌ரையும் பிரித்துப்பார்க்கும் ஆழமான‌ அறிவு என‌க்கு இன்னும் வ‌ர‌வில்லையோ தெரியாது.. நான் உங்க‌ளோடு அதிக‌ம் க‌தைத்த‌தில்லை.. அதிக‌மாக‌ உங்க‌ளின் விம‌ர்ச‌ன‌ க‌ட்டுரைக‌ள் வாசிப்பேன்.. இப்பொழுது‌ இந்த‌ க‌தைத்தொகுப்பை 2 நாட்க‌ளாக‌ ர‌க் ல‌ வேலைக்கு கொண்டு சென்று வாசித்த‌போது‌ நீங்க‌ள் என்னுட‌ன்‌ 2 நாட்க‌ளாக‌ ர‌க்கில் கூட‌ வ‌ந்து ம‌ன‌ம் விட்டு க‌தைத்த‌து போல‌‌ ஒரு உண‌ர்வும்.. என் எண்ணங்க‌ளையொத்த‌ ஒருவ‌ரை க‌ண்டுபிடித்த‌ திருப்தியும் வ‌ருகிற‌து..இனிமேல் உங்க‌ளின் இணைய‌ப் ப‌திவுக‌ளில் உங்க‌ளின்‌ சிறுக‌தைக‌ளையும் வாசிக்க‌ வேண்டும்.. தொட‌ர்ந்தும் எழுதுங்க‌ள்.. வாழ்த்துக்க‌ள்..!

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் – கறுப்பி

Wednesday, August 14, 2013


ளங்கோ ஆளுமைமிக்க கவிஞனாக, பத்தி எழுத்தாளனாக, விமர்சகனாக அறிமுகமாகித் தற்போது  ”சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்” எனும் சிறுகதைத் தொகுப்பின் மூலம் ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளனாகவும் எம்மிடையே அறிமுகமாகியுள்ளார். நேர்மையும், தீவிரமும் கொண்டு சளைக்காமல் இயங்கிவரும் இவரது படைப்புக்கள் புலம்பெயர் தமிழ் இலக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும்.

விமர்சனக் கட்டுரைகளை மூன்று வகையாக நான் பிரித்துப் பார்ப்பதுண்டு.
முதலாவது கல்வியாளர்களின் கோட்பாட்டு விமர்சனம், அல்லது திறனாய்வு முறை, இரண்டாவது வரலாற்றுப் பதிவு முறை, மூன்றாவது இரசனை அல்லது அழகியல் முறை. திறனாய்வு முறை என்பது ஆழமான மொழியோடு அமைந்திருக்கும் ஆனால் உணர்வு வழி விமர்சனமாக அது இருப்பதில்லை. வரலாற்றுப் பதிவு முறையில் ஈழத்து சிறுகதைகளுக்கான விமர்சனம் எனும் போது தாம் அறிந்த எழுத்தாளர்கள் அனைவரையும் குறிப்பிட்டு விமர்சிப்பது. மூன்றாவது வகை இரசனை அல்லது அழகியல் முறை. இது இலக்கியத்தின் மீதான ஆளுமை, பயிற்சி நேசம் போன்றவற்றினால் உந்தப்பட்டு வைக்கப்படுவது..

இந்த மூன்று விமர்சனங்களையும் இன்னும் இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம். அதாவது ஒன்று சார்புநிலை, மற்றது குரோதநிலை. நடுநிலையான விமர்சனங்கள் என்பது மிகவும் அபூர்வமாகவே காணப்படுகின்றன. விமர்சனங்களை படிக்கும் போதோ, உரையாகக் கேட்கும் போதே சில வினாடிகளின் பின்னர் இது எந்தவகையான விமரச்னம் என்பதை இலகுவில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

ழ இலக்கியத்தில் 80களுக்குப் பின்னான காலத்தில் போர்சூழல் காரணமாக எழுத்தாளர்களின் வருகை அதிகரித்ததாலும், எழுதுவதற்கான தளங்கள், காரணிகள் அதிகரித்ததாலும் இக்காலத்தில் தோன்றிய போர்க்கால இலக்கியங்கள் அதிகம் கவனிக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வந்துள்ளன. இருந்தும் இவை இலக்கிய நயமற்ற வெறும் ஒப்பாரிகள், கூச்சல்கள் என்றும் விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. இக்கால கட்டத்தில் ரஞ்சகுமார், உமா வரதராஜன் அ. இரவி போன்றோர் ஈழத்தமிழ் இலக்கிய வாசகர்களால் பரவலாகப் பேசப்பட்டவர்கள். இவர்களைத் தொடர்ந்து தனித்துவமான தனது புனைவு மொழியால் தனக்கென்று ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டவர் சோபாசக்தி. அவரின் எழுத்து வீச்சின் பாதிப்பில் உருவானவர்களே அவரைத் தொடர்ந்து போர்ச்சூழலை மையமாகக்கொண்டு பல தரமான சிறுகதைகள், நாவல் போன்றவற்றைப் படைத்துக்கொண்டிருக்கும் த.அகிலன், யோ. கர்ணன், சயந்தன் போன்றோர் என்பது எனது கருத்து. கருணை ரவியின் கடவுளின் மரணத்தையும் இதற்குள் அடக்கலாம்.

இதே கால கட்டத்தில் சமாந்தரமாக புலம்பெயர் இலக்கியமும் தோற்றமளிக்கின்றது, போர்ச்சூழலால் ஏற்பட்ட வடு அவர்களையும் ஈழத்தை மையமாகக் கொண்ட போர்சூழல் இலக்கியத்தையே படைக்கத் துாண்டிக்கொண்டிருக்கின்றது. அன்றேல் ஈழ மையப்படுத்தப் படாத போர்சூழல் அற்ற, இலக்கியங்கள் வாசகர்களால் நிராகரிக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் அவர்களை அதற்குள்ளேயே உழல வைத்துக் கொண்டிருக்கின்றது.

மிகக் குறைந்த அளவிலேயே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ்மக்களின் வாழ்வு கதைக்காரணியாகப் பதியப்பட்டிருக்கின்றது. புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் வாழ்வு என்பது கூட, போர்சூழல் இலக்கியம் என்பதே என் எண்ணம். புலம்பெயர்ந்து வாழும் அத்தனை தமிழ் மக்களின் அவலங்களும், பாதிப்புக்களும், ஏற்ற இறக்கங்களும் ஈழத்தை மையமாகக் கொண்ட போர்ச்சூழலின் எச்சங்கள்தான். இந்த வகையில் சாம்பல் வானதில் மறையும் வைரவர் தொகுப்பில் பல சிறுகதைகள் புலம்பெயர் மக்களின், குறிப்பாக இளைஞர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கினது என்பதனால் தனித்துவமான முக்கியத்தைப் பெறுகின்றது.

எந்த அளவிற்கு ஈழப்போராட்ட அவலங்கள் பதியப்பட வேண்டுமோ, அதே அளவிற்கு புலம்பெயர் வாழ்நிலையும் பதியப்பட வேண்டிய ஒன்றே. ஆனால்  போர்ச்சூழல், இயக்க முரண், முள்ளிவாய்க்கால் உண்மைகள், போருக்குப் பின்னான ஈழமக்கள் வாழ்வு என்பனவே இன்றைக்கு கதைக் காரணிகளுக்கான முன்நிலையில் நிற்பதனால் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களும் அக்காரணிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த இடத்தில் தேவகாந்தனின் விமர்சனத்தின் பகுதி ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன்
”நிலமற்றவரென்று பெரும்பாலும் எந்தக் குடும்பமும் இலங்கையில் இல்லையென்பது இந்தியத் தமிழனுக்குத் தெரியுமா? 'குண்டி குத்த' ஒரு முழம் மண் அங்கே எல்லோருக்கும் இருக்கிறது. ஆனாலும் அவற்றின் வகை தொகை வேறு வேறுதான்.”

ஈழ மண்ணில் வாழும் மனிதர்களின் அவலங்கள் வெளிப்படையானவை அவற்றை இலகுவில் எழுத்தில் கொண்டுவர முடியும். புலம்பெயர் மண்ணில் வாழும் மனிதர்களின் அவலங்களின் வகை தொகைகள் வேறு வேறு.. அவற்றை அடையாளம் கண்டு எழுத்தில் கொண்டுவருவதென்பது பெரும் சவாலான விடயம். இதைப் புலம்பெயர் இலக்கியவாதிகள் நிச்சயம் செய்தே தீரவேண்டும் என்பேன்.

இளங்கோ இளம் வயதில் கனடாவிற்குப்  புலம்பெயர்ந்தவர், பாடசாலை, பல்கலைக்கழ அனுவங்கள் கனடாவில் அவருக்கு இருப்பதனால், ”ஆட்டுக் குட்டிகளும், உதிர்ந்த சில பழுப்பு இலைகளும், சிறகு வளர்ந்த குரல்களுடன் பறந்து போனவன், யாழ்ப்பாணியின் சோக வாக்கு மூலம் போன்ற கதை புனைதல் இலகுவில் அவருக்கு சாத்தியப்படுகின்றது. இது முக்கியமான ஒன்று, குறும்படங்களின் மூலம், அல்லது ஆய்வுக்கட்டுரைகளின் மூலம் மட்டும் பதியப்பட்டு வந்திருக்கும் புலம்பெயர் இளைஞர் சமுதாயத்தின் வாழ்வியல், மனநிலை இளங்கோ போன்ற இளைய எழுத்தாளர்களால் பதியப்பட்டுக்கொண்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

ஹேமா அக்கா, மினி, கோபிகா ஏன் அப்படிச் செய்தாள், போன்ற சிறுகதைகளில் கதைசொல்லி ஆண் பாத்திரத்தின் மூலம் கதையை நகர்த்தினாலும் மையப் பாத்திரங்கள் பெண்களாகவே இருப்பது, கதைசொல்லி பெண்களை எவ்வளவு துல்லியமாக அவதானித்துக்கொண்டும் அவர்களின் உணர்வுகளோடு உறவாடிக்கொண்டுமிருக்கின்றார்  என்பதனைக் காட்டுகின்றது.

இவரின் ஆரம்ப காலக் கதைகளுக்கும், அண்மைக்காலக் கதைகளுக்குமிடையில் புனைவு மொழியில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. ஆரம்ப காலக் கதைகள் எளிமையான முறையிலான கதைகளாக சம்பவங்களை நேரடியாகப் பதிவு செய்பவையாகவும், அண்மைக் காலக் கதைகள் பல பரிசோதனை முயற்சிக் கதைகளாகவும் காணப்படுகின்றன. எளிமையான நேரடிக் கதைகளைத் தீவிர இலக்கியவட்டம் அலட்சியம் செய்வதனால் பல நல்ல எழுத்தாளர்கள் தமது புனைவுப் போக்கினை மாற்றியமைக்க முயல்கின்றார்கள். இதனால் பல நல்ல கதைகள் அடிபட்டுப் போவதோடு எழுத்தாளர்களைக் குழப்பத்திற்குள்ளாக்கி பரிசோதனை முயற்சிக் கதைகளுக்குள் தள்ளி விடுகின்றது. சிறந்த கதை என்பது அதன் வடிவத்தில் காணப்படுவதில்லை என்பதற்கு நல்ல உதாரணம் டால்ஸ்ரோயின் எழுத்து முறை. அவரது பெயர் பெற்ற அனாகரணீனா எளிமைத் தன்மைகொண்டது என்று விமர்சனத்தைப் பெற்றிருக்கின்றது.

இளங்கோவின் பரிசோதனை முயற்சிக் கதைகள் உலக இலக்கியத்துடனான அவரது பரிச்சயத்தை அடையாளம் காட்டுகின்றது. கதை சொல்லியின் ஒவ்வொரு கதையும் தனக்கான ஒரு புனைவு மொழியைக் கண்டடையும் நோக்கத்துடனான முயற்சியாக அமைந்திருப்பது நேர் எதிர் இரண்டு விளைவுகளையும் தரக்கூடியன. எந்த ஒரு புனைவாளரும் தனக்கான ஒரு புனைவு மொழியைக் கண்டடைந்து சொற்களோடு விளையாடுவதையே விரும்புவார் இக் கதையாக்கல் முறையைத்தான் எழுத்தாளர் மெலிஞ்சிமுத்தனும் தனது குறுநாவல்கள், சிறுகதைகளின் கையாண்டிருக்கின்றார்.

அந்த வகையில் இளங்கோவும் தனக்கான ஒரு நிரந்தர புனைவு மொழியைக் கண்டடையும் நோக்கோடு பல புனைவு மொழிகளை கையாண்டு பார்த்துள்ளார். இவரது இப்பரிசோதனை முயற்சி ”சிறகு வளர்த்த குரல்களுடன் பறந்து போனவன்”, மூன்று தீவுகள், கள்ளி போன்ற சில நல்ல கதைகளை வாசகர்களுக்கு விட்டுச் சென்றுள்ளது.

தொகுப்பு முழுவதுமே பரிசோதனை முயற்சியால் நிறைந்து கிடப்பின் வாசகர்களுக்கு கதைக்குள் புக முடியாத சலிப்பும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளது. எந்த ஒரு படைப்பும் ஆரம்பமாகி சில நிமிடங்களில் பாத்திரங்களை அடையாளம் கண்டு படைப்பிற்குள் உள்செல்லும் சௌகர்யத்தை வாசகர்கள், பார்வையாளர்கள். ரசிகர்களிற்கு கொடுத்து விடுதல் முக்கியம் என்பேன். படைப்பாளியே தனக்கான மொழியைக் கண்டு கொள்ளாமல் குழம்பிப் போகும் நிலை ஏற்படின், அவரது நம்பிக்கையின்மை வாசகர்களுக்குள்ளும் புகுந்து கொள்ளும். இது போன்ற பரிசோதனை முயற்சிகள் எதிர்மறை விளைவுகளை படைப்புக்களுக்கு கொடுத்துவிடும் அபாயமும் இருக்கின்றது. இளங்கோ சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் எனும் சிறுகதை எழுதிய அனுபவத்தின் மூலம் தனக்கான ஒரு புனைவு மொழியைக் கண்டடைந்திருப்பார் என்றே நம்புகின்றேன்.

ஒரு சிறுகதைத் தொகுப்பின் 12 சிறுகதைகள் இருப்பினும், அவை அனைத்தும் ஏதோ ஒருவகையில் ஊடாட்டமாகவேணும் தொடர்பு பட்டிருத்தல் அவசியம். அதுவே வாசகரை படைப்பினுள் இழுத்துச் செல்லும். சில படைப்புக்களைத் திறந்தால் நேரம் போவது தெரியாமல் வாசித்துக்கொண்டிருப்போம். சில படைப்புக்கள் எத்தனை தத்துவம் நிறைந்திருந்தாலும், எத்தனை சமூக அக்கறையோடு படைக்கப்பட்டிருந்தாலும் இரண்டு பக்கத்திற்கு மேல் நகர முடியாத அவஸ்தையைத் தரும். இங்குதான் புனைவு மொழி தனது இலக்கியத் தரத்தை நிர்ணயித்துக் கொள்கின்றது. சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் சிறுகதைத் தொகுதி தனது ஏற்ற இறக்கங்களோடு புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் தனக்கான ஓர் இடத்தைப் பெற்றிருக்கின்றது என்பேன்.

கா.நா.சுப்ரமணியம்.அவர்கள் சரஸ்வரி ஓகஸ்ட் 1958 சஞ்சிகையில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார். ”தமிழ் தமிழ் என்று பெருமைப் பட்டுக்கொண்டால் போதாது. தமிழில் பழசுக்கும் புதுசுக்கும் இலக்கிய விமர்சனம் தேவை. நல்லது கெட்டது பார்த்துத் தரம் சொல்லி, நல்லதில் சிறந்தது எது எதனால் என்று சொல்லுகிற விமர்சன வளம் நமக்கு இப்போது உடனடியான தேவை.” இதுதான் எனது கருத்தும்.

ஈழ புலம்பெயர் தமிழ் இலக்கியத்தைப் பல இந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் விமர்சனம் செய்திருக்கின்றார்கள். குறிப்பாக காலம் 15இல் வெளியான வேதசகாய குமாரின் விமர்சனமும், ஜெயமோகன், சுந்தரராமசுவாமி போன்றோரின் விமர்சனங்களும் பலரின் கவனத்தைப் பெற்றிருக்கின்றன.

வேதசகாயகுமாரின் விமர்சனத்தைத் தொடர்ந்து பதிவுகள் தளத்தில் வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் சம்பூர்ண நிராகரணம் கட்டுரையும் எதிர்வினையும் அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகனின் எதிர்வினையும் ஈழ இலக்கியத்திற்கான முக்கியமான பதிவுகள். இந்தியப் பெண் எழுத்தாளர்கள் ஈழ இலக்கியம் பற்றிய விமர்சனக் கட்டுரை பதிந்திருக்கின்றார்களா என்பது எனக்குத்  தெரியாது நான் அறிந்தவரை இல்லை என்றே நம்புகின்றேன். அதே போன்று சிறுகதை எழுத்திலும் ஈழத்துப் பெண்கள் தொடர்ந்து எழுதுவது மிக அபூர்வமாகவே உள்ளது..

அனைத்து விமர்சகர்களுமே தமக்கான சார்புநிலையிலிருந்து கொண்டுதான் விமர்சனங்களைப் பதித்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை அவர்களது விமர்சனங்களை அவதானித்துக் கொண்டுவருபவர்களால் இலகுவில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். ஜெயமோகன் தனது சிறுகதை விமர்சனம் ஒன்றில் இப்படிக் கூறுகின்றார். "தமிழ்ச் சிற்றிதழ்களில் நல்ல சிறுகதைகளை வாசிக்க நேர்வது மிக அபூர்வமாகவே இருக்கிறது. இருந்தாலும் எப்போதும் ஒரு தேடலுடன் வாசித்துக்கொண்டே இருக்கிறேன்."
தேடலுடன் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் எனும் இவரின் கூற்றில் நிச்சயம் ஈழத்து, புலம்பெயர் இலக்கியங்களும் அடங்கும் என்றே நம்புகின்றேன்.  ஆழமாக, நுணுக்கத்துடன் தனது விமர்சனங்களைப் பதிந்து  கொண்டிருக்கும் ஜெயமோகனால் ஏன் த.அகிலனையோ, யோ.கர்ணனையோ, சயந்தனையோ, இளங்கோவையோ, மெலிஞ்சி முத்தனையோ அடையாளம் காணமுடியவில்லை. இவர்களின் அங்கீகாரம் வேண்டுமா வேண்டாமா என்பது வேறு வாதம்.

ஆனால் மேற்கூறியவர்களின் எழுத்து தரமில்லை என்று வாதத்தை ஜெயமோகன் முன் வைப்பின், அ.முத்துலிங்கத்தின் கதைகள் பற்றி இவர் இப்படிச் சொல்கின்றார்  ”ஓர் இலக்கிய விமர்சகனாக நான் ஒன்றைச் சொல்வேன், ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே.” பின்னர் அவரே இப்படியும் கூறுகின்றார்.. "விமர்சனங்களில் அண்மை ஒரு பெரும் பிரச்சனையாகவே இருக்கும். தனிப்பட்ட முறையில் தெரிந்த எழுத்தாளர்கள் எழுதும் எழுத்துக்கள், தெரிந்த சூழல் சார்ந்த எழுத்துக்கள், ஏற்கெனவே ஈடுபாடுள்ள விஷயங்கள் குறித்த எழுத்துக்கள், அவை நம்மை அவற்றின் இலக்கியத் தரம் மீறி கவரக்கூடும். இந்த அபாயம் எல்லா விமர்சகர்களுக்கும் உண்டு."  இந்த இடத்தில் ஜெயமோகன் மிக நியாயமான விமர்சனத்தை வைத்துள்ளார் என்பது என் கருத்து. இந்த வேளை சுந்தர ராமசுவாமி தனது உரையொன்றில் குறிப்பிட்டிருந்து எனது ஞாபகத்திற்கு வருகின்றது. "நீ என் முதுகைச் சொறிந்து விடு நான் உன் முதுகைச் சொறிந்து விடுகின்றேன்" என்ற பாணியில் மாறி மாறி முதுகு சொறிவதே பல படைப்பாளிகள் விமர்சகர்களின் வேலையாகிப் போய்விட்டது. மீறி உண்மையாக விமர்சித்தால் கோபக்காரார்கள் ஆகிவிடுகின்றோம்.

ஏதோ ஒரு வகையில் சார்புநிலையில்தான் அனைத்து விமர்சகர்களுமே இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள் எனும் போது சிறுகதை, கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் போன்றவற்றிற்கு விமர்சனக் கூட்டம் வைப்பது போல் இனிமேல் விமர்சனங்களுக்கான விமர்சனக் கூட்டமும் தேவை என்று கூறிக்கொண்டு எனது விமர்சனத்தை முடிக்கின்றேன்.

('அம்ருதா' - ஜூலை 2013 இதழில் வெளியானது)

இருள் தின்ற ஈழம்

Monday, July 15, 2013

தேவஅபிராவின் 'இருள் தின்ற ஈழம்' கவிதைத் தொகுப்பை முன்வைத்து...

1.
கவிதைகளை எவ்வாறு வாசிப்பது என்பது நம் எல்லோருக்கும் முன்னாலுள்ள கேள்வி. இன்று தமிழ்ச்சூழலில் எழுதப்படும் வகைமையில் கவிதைகளே நிறைய எழுதப்படுகின்றன . மேலும் கவிதைகளுக்கு சங்ககாலம் தொடக்கம் நீண்டகால தொடர்ச்சியும் தொன்மையும் இருக்கின்றன. ஆகவே நீண்டகால பராம்பரியம் உள்ள கவிதை உலகில், இவற்றில் எவற்றை வாசிப்பது என்னும்போதே நம்மையறியாமலே நாம் சில  தேர்வுகள் செய்து கொள்ளத் தொடங்குகின்றோம். அந்தத் தேர்வுகளின் அடிப்படையில் எது நல்ல கவிதை, எது நல்லது அல்ல என்கின்ற பிரிப்புக்களை நம்மையறியாமலே ஏற்படுத்திக் கொள்கிறோம். நான் இப்போது அந்த பிரிப்புக்களில் இறங்க விரும்பவில்லை. நம் வாசிப்பிற்கும் இரசனைக்கும் ஏற்ப நாம் தேர்ந்தெடுக்கும் கவிதைகள் மாறுபடும் என்பதை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நாம் வாசிக்கும் கவிதைகள், நம் இரசனைகளுக்கு ஏற்பத்தான் நமக்குப் பிடித்துப் போகின்றனவா? எனவும் யோசித்துப் பார்க்கலாம். சிலவேளைகளில் கவிதைகள் நம் அகமனத்தூண்டலுக்கும் , புறச்சூழலுக்கும் ஏற்ப நமக்கு நெருக்கமாகிக் கூடப் போய்விடலாம். உதாரணமாக பிரிவுத் துயரில் இருந்தபோது றஷ்மியின் 'காவு கொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள்' தொகுப்பு எனக்கு நெருக்கத்தைத் தந்திருந்தது. இப்போது சிலவேளைகளில் அதை மீண்டும் வாசித்தால், நான் சாதாரணமாய்க் கடந்து போய் விடவும் கூடும். அவ்வாறே வாசுதேவனின் 'தொலைவில்' என்கின்ற தொகுப்பை முதலில் வெகு எளிதாய் ஒரு பத்திரிகையைச் செய்திகளை வாசிப்பதுபோலக் கடந்து சென்றிருந்தேன். பின்னொரு பொழுது  தீராத் தனிமையும்  சுயம் குறித்த தேடலுமாயிருந்த பொழுதில் அது எனக்கு  நெருக்கமான ஒரு தொகுப்பாயிருந்தது. ஆக தனிமனிதர் ஒருவருக்கே அக/புறச்சூழலிற்கு ஏற்ப கவிதை வாசிப்பு நெருக்கத்தையும் விலகலையும் த்ருகின்றதென்றால் நம்மால் எது நல்ல கவிதை எது நல்லது அல்லாத கவிதை எனப் பிரிப்பதில் சிக்கல்கள் வருகின்றன தான் அல்லவா?

மேலும் கடந்த மூன்று தசாப்தகாலமாய் போரிற்குள் இருந்த ஈழத்தமிழர்களுக்கு இன்று போர் சார்ந்து வருகின்ற படைப்புக்கள் முக்கியமாய் இருக்கின்றன. ஆனால் இன்னும் 10/20 வருடங்களின் பின் இந்தப் படைப்புக்களிற்கான வாசிப்பு எப்படியிருக்கும்? இதன் அர்த்தம் போர்ச்சூழலைப் பதிவு செய்யக்கூடாது  என்பதல்ல. சிலவேளைகளில் காலம் நாமறியாத வேகத்திலேயே சுழன்று சென்று, நாம் கவனிக்காத ஊற்றுக்களைக் கூட திறந்துவிடக்கூடும் என நினைவூட்டுவதற்காய் இதைக் குறிப்பிடுகிறேன்.  எனவே எவை சிறந்த கவிதையென உரையாடுவதைவிட எவை எமக்குப் பிடித்தமான கவிதைகள், ஏன் அவை எங்களுக்குப் பிடித்தவையாக இருக்கின்றன என்றவகையில் கவிதைகளில் வாசிப்பை நிகழ்த்தவே நான் விரும்புவேன். சிலவேளைகளில் கவிதைகளுக்கு காலமோ வடிவமோ கூட அவ்வளவு முக்கியமில்லையென நினைப்பதுண்டு. காலம் முக்கியமானது என்றால் நமக்கு அண்மையாய் இருக்கும்  மரபுக்கவிதைகள் பற்றி அல்லவா நாம் நிறையப் பேசியிருக்கவேண்டும். ஆனால் அதையும் தாண்டி நூற்றாண்டுகள் தாண்டிய சங்கப்பாடல்களைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசுகின்றோம் என்றால் கவிதை நமக்குள் அவிழ்த்துவிடுகின்ற பல்வேறு வாசிப்புக்களே முக்கியம் என்றுதான் நினைக்கின்றேன்

என் இலக்கிய வாசிப்பில் நான் தொடர்ந்து ஒருவர் தொடர்ச்சியாகவும் நிறையவோ எழுதவேண்டும் என்கின்ற அவசியமில்லை என்பதை வலியுறுத்துகின்ற ஒருவன் . படைப்பாளியொருவரை நினைவுகொள்ள அவர் ஒன்றிரண்டு நல்ல படைப்புக்களைத் தந்தால் கூட என்னளவில் போதுமானது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கின்ற கணியன் பூங்குன்றனிடமிருந்து, 'கோணேஸ்வரிகள்' எழுதிய கலா வரை இதற்கு நிறைய உதாரணங்களை முன்வைக்க முடியும்.

2.
'இருள் தின்ற ஈழம்' என்கின்ற தேவஅபிராவின் இத்தொகுப்பில் அவர் 89ம் ஆண்டிலிருந்து 2013 வரை -கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக- எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஈழத்தில் நா.பஞ்சாட்ரம் அவர்களின் பாதிப்பில் மரபுக்கவிதைகளை எழுதத்தொடங்கியவர் என்பதால் தேவஅபிராவின் கவிதைகளின் இன்னும் மரபின் நீட்சியைக் காணலாம். அது பலவேளைகளில் கவிதைகளுக்குச் சிறப்பியல்பாகவும் சிலவேளைகளில் பலவீனமாகவும் தெரிகிறது. தேவஅபிராவின் கவிதைகளை வாசிக்கும்போது சு.வில்வரத்தினம், வ.ஜ.ச.ஜெயபாலன் ஒரு தொடர்ச்சியில் வைத்துப் பார்க்கலாமோ என்று தோன்றியது. அதற்கும் முன்னால் போகவிரும்புபவர்கள் மஹகவியிடமும், முருகையனிடத்தும் போகவும் கூடும். சு.வியும், ஜெயபாலனும்  மரபுக் கவிதையுலகிலிருந்தும், பண்ணோடு பாடும் பாடல்களிலிருந்தும் தமக்கான வடிவங்களை நவீன கவிதையுலகில் செதுக்கிக் கொண்டவர்கள்.  இந்தத் தொடர்ச்சியை தேவஅபிரா கவிதைகளில் நாம் காணலாம்.  இதை ஒரு எளிய புரிதலுக்காய்ச் சொல்கின்றேனே தவிர, அவரது முழுத்தொகுப்பையும் அப்படி அடையாளப்படுத்தி விட முடியாது

'ஒரு கவிதை எங்கே ஆரம்பிக்கின்றது?'  எனும்  93ம் ஆண்டு எழுதப்பட்ட கவிதை,  கவிதை உருவாகும் தருணங்களை முதலில் இப்படிப் பட்டியலிடுகிறது.'யாழ்ப்பாணத்தில் என்றால்/ மாவீரர் துயிலும் இல்லத்தை/ எவனும் சுட்டிக் காட்டுவான்/ யாரேனும் ஒருவன் தன்னிலை மறந்து/ இன்னும் உடைக்கப்படாத பள்ளிவாசலையும் காட்டக் கூடும்/  கொழும்பிலோ என்றால்/ நெரிசலான பேருந்துக்குள்/  முன்னும் பின்னும் நெரிக்கும்/ ஆண் குறிகளுக்கிடையில்/ தவிக்கும் பெண்ணிலிருந்தோ....' தொடங்கக்கூடும் என நீளும் கவிதை...'அது சரி/ ஒரு கவிதை எங்கே முடிகிறது?/ அங்கே...அதோ.../ 'நிறுத்து' என்றறிவித்தல் பலகையை நீட்டியபடி/ சீருடை அணிந்தவொருவன் மறிக்கிறானே/ அங்கே....' என முடிகிறது.  இதைத்தான் இன்னொருவகையில் மரணத்தில் வாழ்வது என்பது. உயிருக்கே எந்தக்கணமும் உத்தரவாதம் இல்லையென்கின்றபோது ஒரு கவிதையை எவர்தான் நிம்மதியாக எழுதிவிடமுடியும்?அதைத்தான் தேவஅபிராவின் இந்தக் கவிதை பிரதிபலிக்கிறது.

'ஈழக்காளி' என்கின்ற இன்னொரு கவிதை, எப்படி தமிழர்கள் முஸ்லிம்களை யாழிலிருந்து துரத்தினார்கள் என்பதை 'குருதியிற் சிவந்த கோர உதடுகள்.../நரமாமிசம் தொங்கும் நீண்ட பற்கள்..../ சிசுக்களை இரண்டாய்க் கிழித்த கைகள்.../ மானுட விழுமியம் மீது/ இரத்தக் கோடுகள் வரைந்தாள்/ ஈழக்காளி...என மானுடத்தின் பெரும் அவலத்தை நரபலி கேட்க எழுந்த காளியிற்கு படிமமாக்குகின்றார் தேவஅபிரா. இவ்வாறு குறிக்கப்பட்ட மணித்தியாலங்களுக்குள் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்களின் உடமைகளுக்கு என்ன நடந்தது என்பதை... 'இரத்தத்தில் நனைந்த எல்லாப் பொருட்களும்/ 'எழிலக்த்திலும் தமிழருவியிரும்'/மலிவு விற்பனையில்... எனத் தொடர்ந்து அந்தக் காலத்தைப் பதிவு செய்கிறார். இறுதியில் 'ஈழக்காளி உன் ஆத்மாவையும் பிடுங்கி/ அங்காடியில் வில்/ என முடிக்கிறார். ஒருவரின் சுயத்தை/ஆன்மாவையும் அங்காடியில் விற்கப்போகின்ற நிலை என்பது எவ்வளவு வெட்கக்கேடானது. முஸ்லிம்களின் விடயத்திலும் நாமெல்லோரும் தமிழர்கள் எனச் சொல்லவே அவமானப்பட்டு தலைகுனிந்து அல்லவா நிற்கவேண்டும். மேலும் இக்கவிதை எப்போது பிரசுரமானது என்று தெரியவில்லை, ஆனால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட அதேயாண்டு எழுதப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று.

'இரவின் பாடல்' என்கின்ற கவிதை எப்படி ஒரு காலத்தில் நம் நாடுகளை காலனித்துவமாக்கினார்களோ, இப்போது அவர்களில் நாட்டிலும் நாம் விளிம்புநிலை வாழும் அவலத்தைச் சொல்கிறது.
'சில நூறு ஆண்டுகளின் முன்பு
எமது கிராமங்களில் அள்ளி வந்த
பொற்கழஞ்சுகள் சிதறச் சிதற
சீமான்களும் சீமாட்டிகளும் ஆடிய நடனத்தின் ஒலி இன்னும்
அடங்காது திரிகிறது
நானோ
கனவுகள் வெடித்த காலக்கிழவியின் நெற்றியெனக் கற்கள் நெருக்கி
புல்லும் கருக மருந்தடித்த இரவு வீதியில்
திமிறிக்கிடந்த வரலாற்று வேர்களில் தடக்கி
புலத்தைப் பாடும் துருக்கிக்காரன் இரவுப்பாட்டில் சில்லறையென விழுந்தேன்'
என கவனிக்கத்தக்கப் படிமமாய் தேவஅபிரா மாற்றுகிறார்.

நதி என்னும் கவிதை தான் பிறந்தபோது தனக்குள்ளேயே ஒரு நதியும் பிறந்தது. அதை தன் வாழும் ஒவ்வொரு காலங்களிலும் இடங்களிலும் காவிக்கொண்டிருப்பதையும் குறிப்பிட்டு, ஆனால் என்றேனும் ஒருநாள் தன் மகன், 'என்னை நீயேன் அகதியாக்கினாய் அப்பா?' எனக் கேட்கும்போது அந்நதி இறந்துபோய்விடும் என்கிறார். அகதிகளாக்கப்பட்டது மட்டுமில்லை அண்மையில் நடந்துமுடிந்த கோர யுத்தத்தின் சுவடுகள் பற்றியும் அடுத்த தலைமுறை தொடுக்கும் கேள்விகளுக்கு நமக்குப் பதில் சொல்லும் தைரியந்தான் இருக்கிறதா என்ன?

வேறு சில கவிதைகளில் வந்துவிழும் சில வரிகள் என்னைக் கவர்ந்திருக்கின்றன....
'வாழ்வென்று எவர் சொன்ன வாழ்வும் வாழ்வல்ல
என்றறைகிறது ஆழி'
என ஓரிடத்திலும், இன்னொரிடத்தில்
'நாங்களறியா ஆழத்துள் வேரோடிய திமிரில்
போர் கைகொட்டிச் சிரிக்கிறது'
எனவும்
'தனக்குள் ஒரு நதியைக் கொண்டிருக்கின்ற
எவரும் தலைநிமிர்ந்தே நடப்பர்'
எனப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

மேலே கூறியவை ஒன்றிரண்டு வாசிப்புக்களில் நான் கண்டுகொண்ட எனக்குப் பிடித்த தேவஅபிராவின் சில கவிதைகள். இத்தொகுப்பை வாசிக்கும் நீங்களும் உங்களுக்குப் பிடித்தமான சில கவிதைகளையேனும் அடையாளங் கண்டுகொள்வீர்கள் எனவே நம்புகிறேன்.

இத்தொகுப்பிலில் தவிர்த்துக்கொள்ளக்கூடிய சில குறைகளும் இருக்கின்றன. உதாரணமாக நீண்டவரிகள் உடைய கவிதைகளை தேவஅபிரா எழுதும்போது புத்தக வடிவமைப்பின் காரணத்தால் கீழே உடைத்துப் போடும்போது பல பக்கங்களில் கவிதைகள் வாசிக்கும் உணர்வைத் தராது தடுக்கின்றது.  மேலும் மரபுக்கவிதையின் மிச்சமான சில வரிகளின் பின் வரும் நிறையப் புள்ளிகளும்...ஆச்சரியக்குறிகளும் சிலவேளைகளில் அலுப்பைத் தருகின்றன.

'எனது தனிமைக்கு எதிராக நான் எழுதுகிறேன்' என்றார் ஒரு படைப்பாளி. இன்னொருவர். 'எனக்கு மகிழ்ச்சியாக இருக்கத் தெரியாது, மகிழ்ச்சியாக இருப்பதற்காக எழுதுகிறேன்' என்றார். அதுபோல் தான் எதற்காக எழுதுகிறேன் என்பதை தேவஅபிரா உட்கிடக்கையாகச் சொல்வதை இத்தொகுப்பை வாசிக்கும் நீங்களும் சிலவேளைகளில் கண்டுகொள்ளக்கூடும். அவ்வாறு கண்டுகொள்ளும்போது அந்த அலைவரிசையில் நீங்களும் இருந்தால் தேவஅபிராவின் கவிதைகளை உங்களுக்கு  நெருக்கமாய் உணரவும் கூடும்.

(ஜூன் மாதம் கனடாவில்  நிகழ்ந்த தேவஅபிராவின் 'இருள் தின்ற ஈழம்' நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

வடுக்களின் அடையாளமாக.....

Thursday, July 11, 2013

இளங்கோவின் ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ -
-க. நவம்
   
புறநடைகளிருப்பினும், பொதுவாக ஒரு தொகுப்பிலுள்ள கதைகளில், ஒரு கதையின் தலைப்பே புத்தகத்தின் பெயராய் இருப்பது வழக்கம். ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்என்ற பெயரை பொருளடக்கத்தில் தேடினேன்; காணவில்லை. கதைகளுக்குள் அதன் அடிமுடி தேடியலைந்தேன்; அகப்படவில்லை. எமது உடலின் Central Nervous System எனப்படும் மைய நரம்புத் தொகுதியின் நடுப்பகுதியில் உள்ள Grey Matter எனப்படும் நரைச் சடலத்திற்கும் இந்தக் கதைகளுக்கும் சம்பந்தமிருக்க வாய்ப்பில்லை. பதிலாக ஒரு தெளிவோ, நிச்சயமோ அற்ற இடைநிலையின் குறியீடாகவே சாம்பல் நிறத்தைக் கருதவேண்டியுள்ளது.

ஆனால், வைரவர் எப்படி இங்கு வந்து சேர்ந்தார்? யாழ்ப்பாணத்தில் பாவம், வைரவர் ஒரு சாதி குறைஞ்ச சாமி; பஞ்சக் கடவுள். ஆனாலும் சமூகத்தின் காவல் கடவுள். இனி, இந்த நிச்சயமற்ற சாம்பல் நிறவானத்தையும் அல்லது எல்லாம் எரிந்து முடிந்துபோய் சாம்பலாய் மிதக்கும் வானத்தையும்அதில் மறையும் வைரவரையும் பொருத்தி ஊகிக்கும் பொறுப்பை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

இந்த நூலின் நாலாம் பக்கத்தில்சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ – சிறுகதைகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நிகழ்வின் அழைப்புப் பிரசுரத்தில்கதைகளின் தொகுப்பு வெளியீடுஎன்றுதான் கூறப்பட்டுள்ளது. இது தற்செயலானதோ அல்லது இளங்கோவின் கடைசி நேர self realization னோ சொல்லத் தெரியவில்லை. இந்தக் கதைகளைப் படித்தபோது கதைகளின் தொகுப்பு’ எனச் சுட்டுவதே பொருத்தமெ எனக்கும் தோன்றியது.

உருவத்திலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி, சிறுகதைக்களுக்கான மரபார்ந்த கட்டுக்கோப்பை இளங்கோ இதில் உடைத்தெறிந்திருக்கிறார். 4 பக்கக் கதையுமுண்டு; 16 பக்கக் கதையும் இதிலுண்டு.

பிரபல ஐரிஷ் எழுத்தாளரான Joseph O Corner சொல்வதுபோன்று, A moment of profound realizationனாக - ஆழ உணர்ந்தறியும் ஒரு கணப்பொழுதாக, ஒரு நிசப்த வெடிகுண்டாக, ஒரு சின்னஞ்சிறு நிலநடுக்கமாக அதிரும் சிறுகதையும் உண்டு. அதேவேளை, சிறுகதை வரம்புகளை மீறி, ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களினதும் அவற்றின் பின்புலங்களினதும் வளர்த்தெடுப்பினூடாக, வாழ்வியலின் பெருங்கூறுகளை சுவைபடச் சொல்லும் நெடுங்கதையும் இதில் உண்டு. ஆக, கட்டற்ற சுதந்திரத்துடன்கூடிய - மரபை மீறிய, கட்டுடுடைப்பு முயற்சியை இத்திரட்டில் இளங்கோ மேற்கொண்டிருகின்றார். படைப்பிலக்கிய இயங்கியலின் யதார்த்த பூர்வமான ஒரு முன்னகர்வாகவே இதனைக் கொள்ளவேண்டும்.

இதிலுள்ள 12 கதைகளையும் ஒட்டுமொத்தமாக உற்று நோக்கும்போது, இரண்டு முக்கிய விடயங்களை அவதானிக்கலாம். போர்க்காலக் கொடூரங்கள் குறித்து, ஈழத்துப் படைப்பாளிகள் பலரும் தமது மௌனம் கலைத்து, பக்கச் சார்பற்ற விமர்சனங்களையும் கண்டனங்களையும் இப்போது முன்வைக்கத் துவங்கியுள்ளதன் குறியீடாக இந்தக் கதைகளைப் பார்க்க முடிகின்றது. மௌனத்துக்கெதிரான போராட்டம்தானே உண்மையான எழுத்து! அந்த வகையில், புதிய தலைமுறைப் படைப்பாளி ஒருவரின் கதைகளினூடாக, ஈழத்தில் இடம்பெற்ற இனமோதல்களினதும் யுத்தத்தினதும் வலியையும் வேதனையையும் உணர்ந்தறிய முடிவது முதலாவது விடயம். ‘ஹேமா அக்கா,’ ’கொட்டியா,’ ’மினி,’ ’சிறகுவளர்ந்த குஞ்சுகளுடன் பறந்து போனவன்,’ ’கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்?’ போன்ற கதைகளை உதாரணங்களாகச் சொல்லலாம்.

அடுத்ததாக, அதே புதிய தலைமுறையைச் சார்ந்த படைப்பாளியின் அனுபவத்தினூடாக, கனடா போன்ற புலம்பெயர் தேசங்களில் வந்திறங்கிய இளம் தமிழ்ச் சந்ததியினர் சந்திக்கும் சமூக, அரசியல், பொருளியல், உளவியல், கல்வியியல், பண்பாட்டியல் சிக்கல்களையும் போராட்டங்களையும் இனங்காணமுடிதல் இரண்டாவதம்சம். பழகிப்போன வாழ்வியல் கட்டுமானத்தைத் தகர்த்தெறிந்து புதிய வாழிடச் சூழலுக்கு ஏற்ப தம்மை இசைவாக்கம் செய்துகொள்ளவதற்கென இவர்கள் மேற்கொள்ளும் எத்தனங்கள் எல்லாமே எல்லாருக்கும் உவப்பானவையல்ல. ஆயினும் சமூக அசைவியக்கத்தின் தவிர்க்க முடியாத கூறுகள் எனும் வகையில் அவற்றைச் சகித்துக்கொள்வதை விட வேறு வழியுமில்லை. ’ஆட்டுக் குட்டிகளும் உதிர்ந்த சில பழுப்பு இலைகளும்,’ ’யாழ்ப்பாணியின் சோக வாக்கு மூலம்,’ ’சிறகுவளர்ந்த குஞ்சுகளுடன் பறந்து போனவன்,’ ’துரோகி,’ ’பனி,’ ’கள்ளி’ ஆகியவற்றை அவ்வகைப்பட்ட கதைகளுக்கு உதாரணங்களாகச் சொல்லாம்.

இத்தொகுதியிலுள்ள அநேகமான கதைகளை, இளங்கோ தனது சொந்தக் கதைகளைச் சொல்கின்றாரோ என எண்ணி வியக்கும் விதத்தில், உண்மைத் தன்மையுடன் சொல்லியிருப்பது வாசகர்களுடன் மிகுந்த அணுக்கத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் யுத்தமும், வன்செயலும், மரணமும், பிரிவும், தனிமையும், அகதி வாழ்வின் அலைக்கழிவும், வேர்கொள்ள முடியாத வெறுமையும் ஒன்று திரண்ட துயர வெளிப்பாடுகளாகக் காணப்படும் பெரும்பாலான கதைகளில் வரும் கதை சொல்லி, ஒரு சிறுவனாகவோ அல்லது ஒரு பதின்ம வயதினனாகவோ அல்லது ஒரு பச்சை இளைஞனாகவோ இருப்பதன் காரணமாக, அக்கதை சொல்லியின் ஆற்றாமையையும், இயலாமையையும், கையாலாகாத் தன்மையையும் அநேகமான கதைகளில் உணரமுடிகின்றது. இக்கதைகள் கிளர்த்திவிடும் ஒருவித பச்சாதாபம் கலந்த துயரத்திற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம்.

இவற்றுடன், வயதால் மூத்த தமிழ் மாணவியுடன் பேரம்பேசி முத்தம் பெறுதல், ஆடையவிழ்ப்பு நடனங்களில் ஆர்வம் காண்பித்தல், பல நண்பிகளுடன் படுக்கையைப் பகிர்தல், உடலுறவுகள் - அந்தரங்க உடலுறுப்புகள் பற்றிப் பச்சை பச்சையாகப் பேசுதல், பதின்ம வயதினருக்கே உரிய விருப்பங்களையும் வேட்கைகளையும் ஒளிவு மறைவின்றி விபரித்தல் போன்ற சம்பவங்கள் இத்திரட்டில் சர்வ சாதாரணமாக இடம்பெறுகின்றன. அடக்கமானவர்களுக்கும் அளவு கடந்த மரபுவாதிகளுக்கும் இது அசூசையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தலாம். ஆயினும் புதிய வாழிடத்தின் பண்பாட்டு நெருக்கடிகளையும் சிக்கல்களையும் தரிசிக்க மனங் கொள்பவர்களுக்கு, இவை விரசமற்ற புதிய அனுபவ வெளிப்பாடுகளாகவே தென்படும். மனித நடத்தைகள் அனைத்தினதும் மூலமுன்மாதிரி பாலியல் தானே என Sigmund Freud சொன்னதையும்I don’t know the question but definitely sex is the answer என்று ஹொலிவூட் பிரபலம் Woody Allen ஒருமுறை சொன்னதையும் ஒப்புக்கொள்பவர்களுக்கு இது ஒரு பிரச்சினையாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை.

க.நவம்
கௌரவக் கொலைக்கு ஆளாகவிருந்த பெண்ணொருத்தியின் உயிரைத் தனது தனது சொந்தக் கௌரவம் காரணமாகக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்ற குற்ற உணர்வைக் கோடிட்டுக் காட்டும்கள்ளிஎன்ற கதையானது, வாசனையால் கவரப்படுதல் மனிதர்களிடத்து மட்டுமன்றி எல்லா உயிரினங்களிடத்தும் காணப்படும் ஓர் உள்ளார்ந்த இயல்பூக்கம். எங்களை அறியாமலே எங்கள் உடலில் Pheromones எனப்படும் இரசாயனத் திரவம் ஒன்று சுரக்கப்படுகின்றது. இதன் வாசனையை எமது மூக்கிலுள்ள முகர்வுக் கலங்கள் இனங்கண்டு, மூளையின் Olfactory lobes எனப்படும் மணவுணர்ச்சிக் கோளங்களுக்கு அனுப்பி வைக்கின்றன. உடலில் இருந்து இவ்வாறாக வெளிப்படும் சிலவகை வாசனைகள் சிலருக்கு பாலியல் உணர்வைத் தூண்டவல்லன. ஒருமுறை கிடைத்த வாசனை அனுபவத் தூண்டல், மீண்டும் எந்நேரத்திலும் எவ்வளவு தூரத்திலிருந்தும் ஏற்படலாம். இது மலரின் வாசனையையோ அல்லது மசாலாத் தோசையின் மணத்தையோ அல்லது மாட்டுச் சாணத்தின் நெடியையோ ஒத்ததாக இருக்கலாம். இதனால்தான், எத்தியோப்பியா போன்ற நாடுகளில் எதிர்ப்பாலாரைக் கவர்ந்திழுக்கவென ஆண்கள் பசுமாட்டெருவை உடலிலும், பெண்கள் பசு நெய்யைத் தலையிலும் தடவிக்கொள்ளும் ஒரு பாரம்பரியம் உண்டு. ’கள்ளிகதையில் வரும் நாயகனும் ரொறொன்ரோ நகரின் பஸ் வண்டிகளிலும் சப்வே வாகனங்களிலும் தனது மனதுக்குப் பிடித்த வாசனையைத் தேடியலைதல் ஒரு சுவாரசியம் மிக்க வித்தியாசமான கதையாகும்.

இவை அனைத்திற்கும் மேலாக, இளங்கோவிடம் இயல்பாகவே காணப்படும் சுயவிமர்சனமும், எள்ளலும், அங்கதமும் அலாதியானவை. மனதுக்கு உவப்பில்லாத விடயங்களைக்கூட வாசகரது மனக் குளத்தில் நாசூக்காக விட்டெறிந்து சட்டென விலகிச்சென்றுவிட இவை அவருக்கு உதவுகின்றன. அலுப்புச் சலிப்பின்றி இவரது கதைகளை ஒரே மூச்சில் படித்து முடிக்க வேண்டும் என்ற உந்துதலை இவை எமக்குத் தருகின்றன. இதனால், ஒரே தன்மையதான எம்மவர்களது கதைகளைப் படித்துப் படித்துக் கண்ணயர்ந்துவிடும் வாசகனுக்கு, இளங்கோவின் கதைகள் ஒருவித மாறுபட்ட அனுபவத்தையும், உற்சாகத்தையும் தருகின்றன

ஆயினும், ‘ஒரு கருத்தைச் சொல்வதற்கு ஒரே சொல் போதும் என்று இருக்கும்போது, இரண்டு சொற்களைச் செலவு செய்யாதேஎன்று யாரோ ஒருவர் சொல்லி வைத்ததை இங்கு நானும் சொல்லியாக வேண்டும். எந்தவொரு கலைப் படைப்புக்கும் காத்திரமான உள்ளடக்கத்துடன், கலைத்துவமும் கட்டிறுக்கமும் மிக்க உருவமும் முக்கியமாகும். ‘மினி,’ ‘கொட்டியா,’ ‘மூன்று தீவுகள்’ போன்ற சில கதைகளில் கட்டிறுக்கம் போதாமைக் குறைபாடு தூக்கலாக வெளித்தெரிவதை, இளங்கோ கவனதில் கொள்வாரென நம்புகிறேன்.

முடிவாக, யாழ்ப்பாணத்தில் அதிலும் வல்வெட்டித்துறையில் அதிலும் விசேடமாகப் பொலிகண்டியில் பிறந்து வளர்ந்த நான், துவக்குத் தூக்கித் திரிந்த ஒருபோராளியைத் தன்னிலும் ஒருபோதும் கண்டதில்லை. எனது கடைசிக் கால இலங்கை வாழ்க்கை கொழும்பில்தான் கழிந்திருந்த போதிலும் நெடியால் பெயர்பெற்ற களுபோவிலை கால்வாயை நான் நேரில் போய்க் கண்டதேயில்லை. கால்நூற்றாண்டுக்கு மேலாக ரொறொன்ரோவில் வாழ்ந்தவிட்ட போதிலும் சீஎன் கோபுரத்தையே இன்னமும் நான் போய்ப் பார்க்கக் கிடைக்கவில்லை. இந்த இலட்சணத்தில், கியூபாவுக்குச் சுற்றுலா சென்றேன் என்று சும்மா சொன்னலும் நீங்கள் நம்பமாட்டீர்கள். அப்படிபட்ட எனக்கு, கியூபாவின் இயற்கை அழகையும், வன்னிமண்ணின் போர்ச் சுழலையும், களுபோவிலைப் பாலத்தையும் இதுபோன்ற ஏனைய பல பின்புலங்களையும் அச்சொட்டாகக் கண்முன்னே வரவழைத்துக் காட்சிப்படுத்தி, மனதில் வாசிப்புப் பரவசத்தை ஏற்படுத்துகின்றார், இளங்கோ.

கவித்துவமும் கற்பனைத்திறனும் மிக்க ஒரு நல்ல படைப்பாளியாக இருப்பதற்கு சரஸ்வதி கடாட்சம் தேவை என்பதில் எனக்குச் சற்றேனும் நம்பிக்கை இல்லை. ஒரு கொஞ்சத் திறமையும் தேடலும் இருந்தால் போதும். இவற்றிற்கு மேலாக, வாழ்வின் வடுக்களை நினைவில் வைத்திருக்கும் ஆற்றல் இருக்கவேண்டும் என்பதில்தான் எனக்கு அளவிறந்த நம்பிக்கை உண்டு. அந்த ஆற்றல் இந்த நூலின் ஆசிரியர் இளங்கோவுக்கு நிறையவே உண்டு! ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்அதற்கு ஒரு நல்ல சாட்சியம்!

-------------------------------
(இதன் சுருக்கிய வடிவம் ஜூலை மாத 'தீராநதி'யில் வெளியானது)