-'வன்னி யுத்தம்' என்கின்ற நேரடிச் சாட்சியின் நூலைப் பற்றிய பதிவு-
1.
யுத்தங்களில் நியாயமாய் நடந்த போர்கள், நியாயமற்று நடந்த போர்கள் என்கின்ற வரலாறே இல்லை. போர் என்பது எப்போதுமே அழிவுகளேயே தரக்கூடியயையே. போர் ஒன்றில் வென்றவர்களாய் இருந்தாலென்ன தோற்றவர்களாய் இருந்தாலென்ன யுத்தத்தின் நினைவுகளிலிருந்து அவ்வளவு எளிதில் எவருமே வெளியேறி விடமுடியாது. வென்றவர்கள் தம் வெற்றிக்களிப்பின் போதையில் அது நிகழ்த்திய அழிவுகளை மறந்தமாதிரி ஒரு நாடகத்தை நிகழ்த்தலாம். ஆனால் அது உண்மையல்ல, ஒரு மாயத் தோற்றம் மட்டுமே. தோற்றவர்கள் இந்த வலிகளோடும் வடுக்களோடும் மிஞ்சியுள்ள காலங்களை வாழத்தான் வேண்டியிருக்கின்றது. 'வன்னி யுத்தம்' என்கின்ற இந்நூல் ஈழத்தில் இறுதியாய் நடந்து முடிந்த ஆயுதப்போராட்டத்தில், ஒரு நேரடிச் சாட்சியாய் முள்ளிவாய்க்கால் முடிவுவரை நின்ற ஒருவரால் எழுதப்பட்டிருக்கின்றது. இவர் ஓர் சாதாரணப் பொதுமகனாகவும், செயற்பாட்டாளராகவும் இருந்ததால் இந்நூல் இதுவரை சொல்லப்படாத புதியதொரு எழுத்துச் சாட்சியமாய் நம் முன்னே வைக்கப்ப்ட்டிருக்கிறது.
ஒரு நிழல் அரசாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வன்னி நிலப்பரப்பு நீண்டகாலமாய் இருந்திருக்கின்றது. மன்னாரிலிருந்து தொடங்கிய இலங்கை இராணுவத்தின் முன்னேற்றம் புலிகளையும் மக்களையும் மிகச் சிறிய நிலப்பரப்ப்பான வட்டுவாகல், புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதியிற்குள் முடக்கி பெரும் அழிவுகளைக் கொணர்ந்ததை அப்பு (புனைபெயர்) நேரடிச் சாட்சியமாய் இருந்து எழுதியிருக்கின்றார். இந்நூலில் தொடக்கப்பகுதியிலும், இடையிலும் அவ்வப்போது வலிந்து குறிப்பிட்ட சிலர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மீது ஒருவகையில் விமர்சனமிருக்கின்றது. அத்தோடு நடந்ததைக் கூறுவதையே முக்கியமாய் எடுத்துக்கொண்ட இந்நூலிற்கு அந்தப் பகுதிகள் அவசியமும் அற்றது. எனெனில் நடந்ததே என்ன என்பது சரியான முறையில் பதியப்படாமல் இருக்கும் காலகட்டத்தில் நடந்ததற்கு இவர்கள்/இவைகள்தான் காரணங்களென அவ்வளவு எளிதில் ஒரு பகுதியினரை மட்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது இன்னும் அபத்தமாகிவிடும் ஆபத்தும் இருக்கிறது. மேலும் நடந்தவற்றை அலசுவதும் ஆராய்வதும், அரசியல் ஆய்வாளர்களுக்கும், வரலாற்றாசிரியர்களுக்கும் உரியதே தவிர, இன்னமும் இரத்தத்தின் வர்ணம் காயவோ, இழப்பின் அழுகுரல்கள் ஓயாமல் இருப்பதாகவோ நினைக்கும் ஒருவர் செய்யக்கூடியதல்ல..
நூலை வாசித்து முடிக்கும்போது வரும் வெறுமையையும் விரக்தியையும் எழுத்தில் முன்வைக்கவே முடியாது. ஈழத்தில் இறுதி யுத்தத்தில் நடந்தவற்றை எழுத்தில் ஒருவர் முன்வைக்கும்போது, அதை வாசிக்கும்போதே இவ்வளவு மன உளைச்சல் ஏற்படுகின்றதென்றால், இப்போர் நிகழ்ந்தபோது இறந்துபோனவர்களும், இப்போது மிஞ்சியிருப்பவர்களும் எவ்வளவு துயரங்களை அனுபவித்திருப்பார்கள்/ அனுபவித்துக்கொண்டிருப்பார்கள் என எண்ணிப் பார்த்தாலே நாம் இன்னொரு ஆயுதப்போராட்டம் பற்றிய கதையாடல்களைத் தொடங்கவே மறுதலிப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும்.. அருகில் இருக்கும் மனிதர்கள் கொத்துக் கொத்துக்காய் எறிகணை வீச்சாலும் துப்பாக்கிக் குண்டாலும், விமானக்குண்டு வீச்சாலும் இறந்துகொண்டிருக்கும்போது, இந்த நூலை எழுதிய ஆசிரியர் அடிக்கடி எல்லோருக்கும் நினைவுபடுத்தியபடி இருக்கும் ஒருவிடயம், 'மரணத்தை விட மரண பயந்தான் மிகவும் பயங்கரமானது. எனெனில் மரணம் ஒருபொழுது மட்டும் நிகழக்கூடியது. மரணபயம் அவ்வாறில்லை' என்கிறார். அதே மாதிரித்தான், இந்த யுத்தம் முடிந்தபின் இன்னமும் அதன் வடுக்களோடு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் பற்றி நாம் ஒரு கணம் நினைத்துப் பார்க்கவேண்டும். அவ்வாறு யோசித்தோமானால் -அவர்களின் நிலையைப் புரிந்துகொள்வோமானால்- இன்று எழுந்தமானமாய் கருத்துக்களை உதிர்த்துக்கொண்டோ, யுத்த களத்திலிருந்தவர்களை குற்றவாளிக் கூண்டிலேற்றி இன்னொருமுறை இறக்கும்படியான மனோநிலையை ஏற்படுத்திக்கொண்டோ இருக்கமாட்டோம் என்பது மட்டும் உறுதி.
2.
மனிதர்கள் கண்முன்னே விழுந்து இறக்க இறக்க அதைப் பார்த்துக்கொண்டு தப்பித்தவர்களின் பிறகான வாழ்வு என்பது எவ்வாறு இருக்கும்? இறந்துகொண்டிருக்கும் மனிதர்கள் எழுந்தமானமாய் இறக்கின்றார்கள் என்கின்றபோது எப்படித் தப்பிப் பிழைத்தோம் என்பதே அவர்களுக்குப் பெரும் புதிராகத்தான் இருக்கும். இந்த நூலை எழுதியவர் எறிகணைகள் வீழ்ந்து ஓய்ந்த சொற்ப இடைவெளியில் தரப்பாள் கொட்டகைகளைக் கடந்து போய்க்கொண்டிருக்கின்றார். ஒரு கொட்டகையில் அந்தச் சிறிய காலப்பகுதியிற்குள் -சேமிப்பிலிருந்த உணவைப் பகிர்ந்தபடி- ஒரு குடும்பம் சற்றுச் சிரித்துக் கதைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இவ்வளவு அவதியிற்குள்ளும் மனிதர்கள் இன்னமும் சிரிப்பதை மறக்கவில்லையென நினைத்தபடி நடக்கின்றார். இந்நூலின் ஆசிரியர், சற்றுத் தூரம் போயிருப்பார், திடீரரென்று எறிகணையொன்று வீழ்ந்து -சிரித்துச் சாப்பிட்டபடி இருந்த- முழுக்குடும்பமே சிதறிப் பலியாகின்றது. இவ்வாறாக மிகுந்த கொடூரத்துடன் போர் நிகழ்கிறது. இன்னொரு சமயத்தில் இந்தச் நேரடிச் சாட்சியிருக்கும் பதுங்குகுழியிற்கு இவரது நண்பர் வந்து கவனமாக இருக்கும்படி கூறிவிட்டு அந்த நண்பர் தான் பதுங்கியிருந்த பதுங்குகுழிக்குப் போகின்றார். அந்த இடைவெளிக்குள் எறிகணை வீழ்ந்து இவரின் நண்பர் இறந்து போகின்றார். இந்நூல் முழுக்க இப்படிக் கண்ணெதிரே சிதறி இறக்கும் மனிதர்களைப் பற்றியே நிறையக் குறிப்புக்கள் இருக்கின்றன. குழந்தையைப் பற்றியபடி தலை சிதறி இறந்த தாய் முதல், சாப்பிடுவதற்கு உரலில் எதையோ இடித்துக்கொண்டிருந்த சிறுமி தசைகளாகிப் போவது வரை இந்நூலே இரத்தத்தின் சாட்சியாகவே எழுதப்பட்டிருக்கின்றது. வாசித்து முடிக்கும்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் நாகரீகமானதா என்ற கேள்வியையும், நம் மனச்சாட்சி அதிர்வதையும் ஒருபோதும் நிறுத்தவே முடியாது.
ஆக இவ்வாறான எத்தனையோ அழிவுகளிலிருந்து தப்பி இறுதி யுத்தத்திலிருந்து வெளிவந்திருப்பவர்களின் வாழ்க்கை என்பது எந்த விதிகளினாலும்/நம்பிக்கைகளாலும் சமனப்படுத்திவிடமுடியாது. இவ்வளவு உயிரிழப்புக்களின் பின்னும் ஒருவர் தப்பியிருக்கின்றார் என்றால் அதொரு அதிசயமாய்த்தானிருக்கவேண்டும் என்பது இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணரவே செய்வர். அதே போன்று இது தப்பிவந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளிலிருந்து வந்த ஒருவரினது சாட்சியம் மட்டுமே என்கின்றபோது முழு மக்கள் கூட்டத்தினரும் தம் ஒவ்வொருவரினதும் கதையைச் சொல்ல/எழுதத் தொடங்கினால் நம்மால் அவற்றின் அதிர்வுகளைத் தாங்கவே முடியாதிருக்கக் கூடும்.
இவ்வளவு கொடும் அனுபவங்களினூடு தப்பி வந்தவர்களின் வடுக்களுக்கு என்னமாதிரியான ஆறுதலை நாம் வழங்கப்போகின்றோம். இந்நூலின் ஆசிரியர், மரணத்தைவிட மரணபயமே இன்னும் கொடூரமானது என்பதுபோல யுத்தத்தைப் போலவே யுத்தம் நடந்தபின் அதன் அனுபவங்களோடு இருப்பதென்பது இன்னும் அவலமானது. இரண்டு தலைமுறையே போருக்கு காவு கொடுத்த நாம், இன்னொரு தலைமுறையை போரின் வடுக்களுக்கு காவு கொடுக்கவேண்டியிருக்கின்றதோ என அஞ்ச வேண்டியிருக்கின்றது. யுத்தம் முடிந்த மூன்று வருடங்களான பின்னும், இன்னும் உருப்படியான காயங்கள் ஆற்றும் எந்தவொரு வேலைத்திட்டமும் செய்யப்படவேயில்லை என்பதுதான் இன்றைய யதார்த்தம். மேலும் இன்னுமே இராணுவக் கண்காணிப்பும், கண்களுக்குப் புலப்படாத நுண்ணிய ஒடுக்குமுறையும் இருக்கும் ஈழத்தில் எப்படி ஆகக்குறைந்தது அங்கிருக்கும் பாதிக்கபப்ட்ட மக்கள், தம் சக உறவுகளோடோ அயலவர்களோடு நடந்தவற்றை மனம் விட்டுக் கதைக்க முடியும்? எதைக் கதைத்தாலும் எவரைப் பார்த்தாலும் சந்தேகிக்கவேண்டிய நிலையில் சூழ்நிலையில் வாழும்போது எந்தவகையில்தான் யுத்ததிற்குள் வாழ்ந்த மக்கள் தம் மனதிலுள்ள பாரங்களை இறக்கிவைக்க முடியும்?
3..
இந்நூல் எழுதப்பட தொனி குறித்து சில விமர்சனங்கள் இருக்கின்றன, சாதாரண மக்கள் கூட்டத்திலிருந்து வரும் முக்கியமான ஒரு சாட்சியத்தின் முன், விமர்சனத்தை வைக்கவேண்டுமா என்கின்ற தயக்கங்களும் இருக்கின்றன. இந்த ஆசிரியர் தொடக்கத்திலிருந்தே ஒரு குறிப்பிட்டவரைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டிக் கொண்டேயிருக்கின்றார். அவர்களை வன்னிக்குள் இருந்த வலதுசாரிகளாகவும், அறிவுஜீவிகளாகவும் அடையாளப்படுத்துகின்றார். அது எந்தவகையிலும் இச்சாட்சிய நூலிற்கு அவசியமில்லையெனவே நினைக்கின்றேன். எனெனில் யாரை யாரையெல்லாம் இத்தகைய அழிவுகளுக்குக் குற்றஞ்சாட்டவேண்டுமென்பதை வாசிப்பவர்கள் தாங்களாகவே அறிந்து கொள்வதற்கான வெளியை விட்டிருக்கலாம். மேலும் இந்த அழிவுகளுக்கு நாமெல்லோருமே முதலில் கூட்டுப் பொறுப்பை ஏற்றாக வேண்டும். இப்பொறுப்பு ஈழத்தில் யுத்த பிரதேசத்திலிருந்தவர்க்கு மட்டுமில்லை, போரின் நிமித்தம் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஈழம் பற்றிய பிரக்ஞையுடன் தமிழ்நாட்டில் இருந்தவர்கள் என அனைவரையும் சேரும். அந்தக் கூட்டுப்பொறுப்பை எடுக்காத எந்த ஒருவரிடமிருந்தும் இனி ஈழம் பற்றி வரும் கருத்துக்களை நாம் சந்தேகத்துடனேயே பார்க்கவேண்டியிருக்கிறதென்பதையும் ஒரு கவனக்குறிப்பாக சொல்ல விழைகிறேன்.
வெவ்வேறு ஆயுதப்போராடங்கள் நடந்த நாடுகளின் வரலாற்றை மானுடவியலூடாக கற்கின்ற நண்பர் ஒருவர் கூறியது போல, புலம்பெயர்ந்தோ அல்லது அந்த யுத்தப்பகுதியிலிருந்து வெளியே இருக்கும் நமக்கு, வெளியிலிருந்து எதையும் சொல்லும்/செய்யும் பல்வேறு தெரிவுகள் இருக்கின்றன. ஆனால் ஈழத்தில் யுத்ததிற்குள் அகப்பட்டு இன்று உயிரோடு எஞ்சியிருக்கும் மக்களுக்கு அவ்வாறான எந்தத் தேர்வுகளுமில்லை (There is no luxury of choices). அவர்கள், தங்களுக்கு வாய்க்கக்கூடிய வளங்கள்/சூழலோடு தொடர்ந்து வாழ்ந்து போகத்தான் வேண்டியிருக்கும். அவ்வாறான அவர்களின் வாழ்க்கை முறையை, தெரிவுகள் பல உள்ள சூழலில் வாழும் என்னைப்போன்ற புலம்பெயர்ந்தவர்கள் கட்டாயமாக விளங்கிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தாயகத்திலிருப்பவர்க்கும் புலம்பெயர்ந்தவர்க்கும் இடையே விழுந்துகொண்டிருக்கும் இடைவெளி இன்னும் பெரிதாக விரிசலாவதை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது போய்விடும்.
இந்த நூலை வாசித்து முடித்தபோது இரண்டு விடயங்கள் என் முன்னே தாண்டிப்போக முடியாத கேள்விகளாய் முன்னே விழுந்தன. ஒன்று இனியெந்தக் காலத்திலும் ஆயுதம் கொண்டு தொடக்கப்படும் எந்தப் போராட்டத்திற்கும் மனமுவந்து ஆதரவு கொடுக்கமுடியுமா என்பது. இரண்டாவது இவ்வளவு கோரமான அழிவுகளைக் கொடுத்த ஒரு அரசோடு மக்களால இணைந்து வாழமுடியுமா? என்பது. ஆனால் இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டியவர்கள் அந்த மக்களே. அவர்களே எல்லாவற்றையும் அனுபவித்தார்கள். இனி தம் வாழ்வை எப்படிக் கொண்டு போவது என்பதைத் தீர்மானிக்கவேண்டியவர்களும் அவர்களேயன்றி நாமல்ல. எனெனில் இவ்வளவு அழிவுகள் நிகழ்ந்த சமகாலத்தில் நாம் கையறு நிலையில்தான் இருந்தோம் என்ற குற்றவுணர்விலிருந்தே அவ்வளவு எளிதாக எம்மால் தப்பிப் போய், எதைத்தான் பேசிவிடமுடியும்?
இந்நூலை மிகுந்த துயரத்தோடு வாசித்துக்கொண்டிருந்தாலும், இந்நூலின் ஆசிரியர் காயப்பட்டு காலை நகர்த்தமுடியாது, இனி தானும் தன் மனைவியும் சாகப்போகின்றோம் என எண்ணி மனைவிக்குத் தாம் வாழ்ந்த காலங்களை நினைவுபடுத்திக்கொண்டிருந்த இடத்தில் கண்கள் தானாகக் கலங்கியதைத் தடுக்கவேமுடியவில்லை. அவ்வாறாறு இறந்துபோன/காயப்பட்ட ஒவ்வொருவருக்குமாய் கலங்கினால் கடல்களைத்தான் நாம் கடன்வாங்கவேண்டியிருக்கும். ஈழத்தின் இன்றும் நடந்ததைச் சொல்லி அழவும் முடியுமால், மறக்கவும் முடியாமல் தம மனதில் ஆழமனப்படிமங்களாய் நினைவுகளை வைத்திருக்கும் மக்களின் ஒவ்வொரு பெருமுச்சின் பின்னும் சொல்லப்படாத ஆயிரமாயிரம் கதைகள் உறங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை நாம் என்றென்றைக்கும் மறந்துவிடவும் முடியாது.
நன்றி: அம்ருதா - மாசி/2013