1.
போர் எல்லோரையும் பாதித்துவிட்டுச் செல்கின்றது. யுத்தம் ஒன்று முடிந்தபின்னும் 'தோற்றவர்கள்' ஏன் நாம் தோற்றோம் எனத் தங்களுக்குள் கேள்விகள் கேட்பவர்களாகவும், 'வென்றவர்கள்' அவர்கள் ஈட்டிய வெற்றியின் வழிமுறை குறித்து பிறர் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றார்கள். யுத்தத்தினால் வெற்றிகொள்ளப்பட்டு பெறப்படும் 'சமாதானம்' குறித்து அமெரிக்காவும், மேற்கு ஜரோப்பாவும் கொண்டிருக்கும் கருத்துநிலைகளும் மூன்றாமுலக ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகள் கொண்டிருக்கும் கருத்துநிலைகளும் வித்தியாசமானவை. முக்கியமாய் அமெரிக்காவும் மேற்கைரோப்பியா நாடுகளும் வரலாற்றில் தாம் செய்த காலனித்துவங்களை அவ்வளவாய்க் கணக்கில் எடுப்பதேயில்லை. நாடுகளுக்கிடையில் நடக்கும் யுத்தத்திற்கும், நாடொன்றிற்குள் நடக்கும் உள்நாட்டு யுத்தத்திற்கும் இடையில் பெறப்படும் படிப்பினைகளில் கூட வித்தியாசங்களுண்டு. ஆகவேதான் உள்நாட்டு யுத்தமொன்று முடிந்து வரும் 'சமாதான' காலத்தில் கூட, எப்போது என்றாலும் மீண்டும் வெடிக்கக் கூடிய போர் நீறுபூத்த நெருப்பாக இருக்கின்றது. யுத்தம் ஒன்றை வெற்றி கொண்டவர்கள் உண்மையான அக்கறையோடு சமாதானத்தைக் கொண்டுவராத போது, அவர்கள் அமர்ந்திருக்கும் வெற்றியின் சிம்மாசனங்களின் கீழே பூகம்பம் புகைந்து கொண்டிருப்பதையும், தலைக்கு மேலே துப்பாக்கிகள் வெடிக்கக் காத்திருப்பதையும் கண்டு பதற்றமடைகின்றார்கள். ஆகவேதான் மழைவிட்டும் தூவானம் இன்னும் விடாத பதகளிப்பான சூழ்நிலை, யுத்தங்கள் வெற்றிகொள்ளப்பட்டதாய்க் கூறப்படும் நாடுகள் பலவற்றில் இருக்கின்றன. அதற்கு அண்மைய ஓர் உதாரணம் ஈழம்.
போராளிகள் பற்றியும் போராட்டக் குழுக்குள் பற்றியும் பலருக்குப் பலவித அபிப்பிராயங்கள் இருக்கின்றன. போராளிகளைப் பிற போராளிகள் பார்ப்பதற்கும் பொதுமக்கள் பார்ப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. ஈழப்போராட்ட வரலாற்றின் தொடக்க காலங்களில் போராளிகளுக்கு மிக உயரிய இடம் மக்களால் வழங்கப்பட்டதையும், அதைப் பின்னாளில் அனைத்து இயக்கங்களும் தம் மேலாண்மைகளால் எவ்வாறு பாழடித்தன என்பதையும், இயக்கங்களில் இருந்தவர்கள் எழுதிய பல்வேறு பிரதிகள் சாட்சியங்கள் அளிக்கின்றன. மூன்று தசாப்தகாலம் நீண்ட போரின்போது மக்கள் ஆயுதங்களின் முன் மவுனிக்க வைக்கப்பட்டார்கள் என்கின்றபோதும், போராட்டப்போன அனைவர் மீதும் மக்களுக்குப் பரிவு இருந்தது. எவ்வளவுதான் தவறிழைத்தாலும் தன் பிள்ளைகளை மன்னித்து மீண்டும் அரவணைத்துக் கொள்ளும் தாய்மார்களைப் போல, என்றேனும் ஒருநாள் போராளிகளும் அவர்களின் தலைமைகளும் தம் அதிகாரங்களின் தளைகளிலிருந்து மீண்டு வருவார்கள் என்று மக்கள் நம்பியுமிருக்கின்றார்கள்.
ஆகவேதான் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு ஒரு பெரும் மக்கள் திரள் போராளிகளோடு ஒன்று சேர்ந்து வாழ்ந்திருக்கின்றார்கள். இயக்கத்தின் மிகப் பெரும் இராணுவ வெற்றிகளின் பின் தளத்தில் மக்களே நின்றிருக்கின்றார்கள். ஆனால் பின்னாட்களில் நடந்ததை -கொடுங்கனவை- மக்கள் மட்டுமில்லை போராளிகள் கூட நினைத்துப் பார்க்கக் கூட விரும்பமாட்டார்கள். ஆனால் அவற்றை எளிதாய்க் கடந்து போய்விடவும் முடியாது. அது குறித்து நிறையவே பேச வேண்டியிருக்கின்றது. நேரடிச் சாட்சியங்களின் வாக்குமூலங்களை -எமது எவ்வித அரசியல் கருத்துக்கள் தீர்ப்பெழுதவோ குறுக்கிடவோ செய்துவிடாது- செவிசாய்த்து முதலில் நாம் அமைதியாக கேட்கவேண்டியிருக்கின்றது.
போர் ஒன்று முடிந்தபின் போராளிகளை எவ்வாறு புரிந்துகொள்வது என்கின்ற கேள்விகள் எம் அனைவரின் முன்னும் இருக்கின்றது. அவர்களுக்கும் வாழ்க்கையில் நம்மைப் போன்று தேர்ந்தெடுக்க எத்தனையோ தெரிவுகள் இருந்தபோதும், அவற்றையெல்லாம் தவிர்த்து அனைவரும் சுதந்திரமான வாழ்வைப் பெறவேண்டும் என்பதற்காய் போராடப் போயிருக்கின்றார்கள் என்கின்ற அடிப்படையில் வைத்தே அவர்களைப் பார்க்கவேண்டியிருக்கின்றது. அதன் பிறகே அவர்கள் போராட்டத்தைச் சரியான திசையில் எடுத்தார்களா அல்லது இல்லையா போன்ற விமர்சனங்களுக்குப் போகவேண்டும். அத்துடன் நம்மை மேய்ப்பர்களாகவும் அவர்களை வழிதவறிய மந்தைகளுமாய்ப் பார்க்கின்ற பார்வைகளைத் துடைத்தெறிந்துவிட்டே நம் உரையாடல்களைத் தொடங்கவேண்டும்.
2.
ஈழத்தில் போர் முடிந்துவிட்டது என்கின்றார்கள். உண்மையிலேயே 'யுத்தம்' முடிந்துவிட்டதா என்பதை முன்னாள் போராளியொருவரின் வாழ்க்கையை முன்வைத்து அசோக ஹந்தகம 'இனி - அவன்' (இனியவன்) என்கின்ற திரைப்படம் மூலமாகப் பலவேறு கேள்விகளை எழுப்புகின்றார். யுத்தம் முடிந்து, திரும்பிவரும் போராளிகளை எவ்வாறு இச்சமூகம் பார்க்கின்றது என்பதையும் அவர்கள் எவ்வாறு நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது என்பதையும், அவர்களின் எதிர்காலம் எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதையும், போராளியினூடாக நகரும் கதையினூடு பார்ப்பவர்களையும் யோசிக்க வைப்பதில் அசோக ஹந்தகமவே வெற்றி பெற்றிருக்கின்றார் என்றே நினைக்கின்றேன். ஒரு பக்கம் 'எல்லாம் இயல்புநிலைக்கு வருகிறது' என்கின்ற சத்தத்திற்கும், இன்னொருபக்கம் 'மீண்டும் போர் வெடிக்கும்' என்கின்ற முழக்கத்திற்கும் இடையில் முன்னாள் போராளிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றிய உரையாடல்களை இன்னமும் நாம் காத்திரமாகத் தொடங்கவில்லை என்பது ஒருவகையில் துயரமானது. மேலும் அவர்களை நேரடியாகச் சந்தித்தவர்களினதோ அல்லது அப்போராளிகள் நேரடியாக என்ன கூறுகின்றார்கள் என்பதையோ சிறிதுகூட செவிமடுக்காத ஒரு சமூகம் நம்மிடையே உருவாகியிருக்கின்றதென்பது இன்னும் மோசமானது. இவ்வாறான சூழ்நிலையில் முன்னாள் போராளிகள் மீது ஒரு உரையாடலை நிகழ்த்தவேண்டிய அவசியத்தை 'இனியவன்' திரைப்படம் வெளிக்கொணர்வதை நாம் வரவேற்க வேண்டியிருக்கின்றது.
ஈழத்தில் ஒவ்வொரு பொதுசனத்திற்கும் வெவ்வேறு பார்வைகள் இருப்பதைப் போல ஒவ்வொரு முன்னாள் போராளிகளுக்கும் தாம் பங்குபெற்ற யுத்தத்தில் வெவ்வேறு பார்வைகள் இருக்கும் என்பதை நாம் புரிந்துகொண்டோமானால் உடனேயே ஒருவரை முத்திரை குத்தி இவர் இப்படியானவர் என ஒதுக்கிவைக்க மாட்டோம். இவை எல்லாவற்றையும்விட அவர்கள் போரின் சொல்லவொண்ணாத் துயரங்களையும், இழப்புக்களையும் நேரடியாகப் பார்த்தவர்கள். தடுப்பு முகாங்களில் நீண்டகாலம் இருந்தவர்கள். இன்னமும் விடுவிக்கப்படாது சிறைச்சாலைகளில் வாடிக்கொண்டிருப்பவர்களையும் இந்தக்கணத்த்இல் நாம் மறந்து விடவும்முடியாது. இதன் நீட்சியில் அவர்கள் பலவேறு விதமான உளவியல் நெருக்கடிகளையும் சிதைவுகளையும் அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் என்கின்ற உணர்வை நாம் அடைவோமாயின் அவர்களை நாம் ஒருபோதும் விலத்திவைத்துப் பார்க்கவே முடியாது.
இன்னமும் பதற்ற நிலையில் இருக்கும் ஈழத்திலாவது முன்னாள் போராளிகளை எவ்வாறு அணுகுவது என்பதிலுள்ள சிக்கல்களை ஒரளவாவது புரிந்துகொள்ள முடியும். ஆனால் புலம்பெயர் தேசத்தில் கூட, மீண்டும் சமூகத்தில் இணைகின்றபோது அவர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள், அவர்களுக்கான நீண்டகால பொருளாதார வசதிக்கான கட்டுமானங்களை அமைத்தல் போன்ற திசைகளில் சிந்திப்பவர்களை மிக அரிதாகவே காணமுடிகிறது. ஆனால் இதே புலம்பெயர் தேசத்தில்தான், பலவேறு இயக்கங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் சமூகத்தோடு இணைந்து வாழ முடிந்திருக்கின்றது என்பதை இங்கே நினைவுகூர வேண்டியிருக்கின்றது.. அவர்களிடமிருந்து பெற்ற படிப்பினைகளையும், அவர்கள் தொடக்க காலத்தில் பெற்ற சிக்கல்களையும் இணைத்துக் கொள்வதன் மூலமாகக் கூட, ஒருவகையில் நாம் இன்றைய முன்னாள் போராளிகளைப் புரிந்துகொள்ளவும், அவர்களுக்கு உதவவும் முடியும். ஆனால் துரதிஸ்டவசமாய் நாமெல்லோரும் துருவ அரசியல் புள்ளிகளில் சிக்கிக்கொண்டு இன்னமும் பிளவுற்றபடி ஓரடி முன்னால் கூட நகரமுடியாது மூச்சுத் திணறிக்கொண்டிருக்கின்றோம்.
3.
போரைக் களத்தில் நடத்தியவர்களுக்கு மட்டுமா போரில் நடைபெற்றவை குறித்துப் பொறுப்புக் கூறல் இருக்கின்றதா அல்லது அதன் புறச்சூழலில் இருந்த அனைவருக்கும் போரில் நிகழ்ந்தவைகளுக்கு பொறுப்புக் கூறல் இருக்கின்றதா என்பது சற்று சிக்கலான விடயம். அதை இப்போதைக்கு அவரவர்க்கான மனச்சாட்சியில் வழிநடத்தலுக்கு விட்டுவிடுவோம். ஆனால் ஒடுக்குமுறை இருந்ததன் காரணமாகவே இயக்கங்கள் பல தோன்றக்காரணமாக இருந்ததால் பொதுசனமாகிய நாங்களும் இயக்கங்களிற்கான அனைத்துச் செயற்பாட்டுக்களுக்குப் பொறுப்புக் கூறவும், மன்னிப்பைக் கேட்கவேண்டிய இடங்களில் மனச்சுத்தியாக -நமக்குள்ளும் பிற சமூகங்களிடையேயும் -மன்னிப்பையும் கேட்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம். அதேவேளை ஒவ்வொரு இயக்கத்திற்கும், அது சார்ந்து இயங்கிய போராளிகளுக்கும் தனிப்பட்ட பொறுப்புக் கூறல் இருப்பதையும், அதைத் தவிர்த்து அவர்கள் இன்னொரு புதிய அரசியல் செய்யும்போது அவர்களின் அறம் குறித்து கேள்விகள் எழுப்புதலும் தவிர்க்க முடியாததே. இதேயிடத்தில் இன்னொரு கேள்வியும் எழுவது இயல்பானதே. தாம் சார்ந்த இயக்கங்களில் இருந்து எழுதும் ஒருவர் நடந்தவற்றை அப்படியே கூறுகின்றாரா அல்லது தனக்கு வேண்டிய உண்மைகளை மட்டுமே கூறுகின்றாரா என்பது. ஒரு முன்னாள் போராளி எந்தவகையிலும் தான் சார்ந்த இயக்கத்தின் அனைத்தையும் கூறுவார் என்பதை நாம் எதிர்பார்க்கமுடியாது, ஆனால் அவர் தான் செயற்பட்ட தளங்களில் நடைபெற்றவற்றை முன்வைப்பவராக தனிப்பட்ட பொறுப்புக் கூறலுக்கு முதலில் தனனை ஈடுபடுத்தவேண்டும். இங்கே எழும் சிக்கல் என்னவென்றால் ஒரு முன்னாள் போராளி தன்னைச் சுயவிமர்சனம் செய்யும்போது வெளிச்சூழலில் இருப்பவர்கள் உடனேயே அவர் இதை மறைக்கிறார் அதைத் தவிர்க்கிறார் என -முதல் அடிவைக்க முன்னரே இழுத்துப் போட்டுத் துவைக்கத் தொடங்குகின்றனர். ஒவ்வொரு தனி மனிதரும் தனக்கான உண்மைகளைக் கூறுகின்றாரே தவிர எல்லோரினதும் உண்மைகளை முன்வைக்கவில்லை என்ற புரிதல் இருந்தாலே போதும். அவரை நாம் முதலில் பேச அனுமதிப்பவர்களாக இருப்போம். மேலும் இவ்வாறு பலரும், தமக்குத் தெரிந்த உண்மைகளை முன்வைக்கும்போது அதிலிருந்து யுத்தம் நடந்த/நடத்தப்பட்ட விதம் பற்றி ஒரு முழுச்சித்திரத்தை நாம் உருவாக்க முடியும்.
இவ்வாறு ஒருவர் தன் சாட்சியங்களை முன்வைக்கும்போது இன்னொரு சிக்கலும் எழுகின்றது. இச்சூழலோடு நேரடியாகச் சம்பந்தப்படாத ஒருவர் செய்யக் கூடியது என்ன? அவரின் சாட்சியங்கள் கூறி முடிக்கப்பட்டபின் ஒருவர் விமர்சனங்களை முன்வைக்க முடியுமா? இதற்கான ஓர் உதாரணமாக இன்ஃபிடல் (Infidel) எழுதிய அயான் ஹிருஸி அலியை உதாரணமாக எடுத்துக்கொள்கிறேன். அவர் அந்நூலில் எழுதியவை அவ்ரது அனுபவங்கள் என்றளவில் நாம் முதலில் அவற்றை மதித்தாகவேண்டும். ஆனால் அதேசமயம் அவர் அதைக் கொண்டு முழு இஸ்லாமையும் மதிப்பிடுவதை - முக்கியமாய் இஸ்லாமே ஓர் அடிப்படைவாத மதம் - என்று பொதுப்படையாக பேசுவதை எல்லாம் நாம் ஏற்றுக் கொள்ளத்தேவையில்லை. அதேபோன்று ஓர் அடிப்படைவாதத்திலிருந்து தப்பி இன்று இன்னொரு அடிப்படைவாதத்திற்கு (இஸ்லாமிய வெறுப்பு) அவர் துணை போய்க்கொண்டிருப்பதையும் நாம் விமர்சிக்கலாம். இந்த அடிப்படையிலேயே ஒரு முன்னாள் போராளியின் சாட்சியங்களையும் நாம் அணுகலாம். அவரது அனுபவங்களை ஏற்றுக்கொள்வதோடு, அவரின் சாட்சியங்கள் உள்ள உண்மைகளை மறைத்து அதிகாரத்தில் இருப்பவர்க்கு (அது அவர் சார்ந்த இயக்கமாயிருந்தாலென்ன, அரசாயிருந்தாலென்ன) துணைபோவதாய் இருந்தால் நாம் கேள்விகளை எழுப்பி அவரது நேர்மை மீதும், அவரது சாட்சியங்களின் அறம் குறித்தும் இடையீடுகளைச் செய்யலாம்.
4.
இனியவன் திரைப்படத்தில் வரும் போராளியை அவரது ஊரும் உறவுகளும் விலத்திவைக்கின்றது. அது - அவர் தனது சொந்த ஊருக்கு பஸ்ஸில் வந்திறங்கும்போதே ஒரு அந்நியனைப் போல பஸ் தரிப்பிடத்திலிருந்து வீடுவரை அவரைப் பார்க்கின்ற மக்களினூடாகத் தெளிவாகக் காட்டப்படுகின்றது. தாய் மட்டுமே முதலில் அப்போராளியை ஏற்றுக்கொள்கிறார். அயல் வீட்டுக்காரர் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளைப் போராடுவதற்காய்ப் பலிகொடுத்தவர். அவர் இப்போராளியைப் பார்க்கும்போதெல்லாம் 'என் பிள்ளைகள் எல்லோரும் செத்துவிட்டார்கள் நீ மட்டும் எப்படித் தப்பினாய் பாவி' என இவனைக் கண்டு தூற்றுகின்றார். அந்தவகையில் போராடப் போன பலர் இறக்க, தான் மட்டும் உயிரோடுக்கும் உளவியல் சிக்கல்களும் ஒவ்வொரு முன்னாள் போராளிக்கும் இருக்கின்றது என்பதைக் கொணர்ந்தமைக்காய் அசோக ஹந்தகமவைப் பாராட்டலாம். ஆனால் அதை இன்னும் செழுமைப்படுத்தாமல், அப்படிச் சபிக்கின்றவரை ஓரிடத்தில் இப்போராளி அடித்துத் துரத்துகின்றவராய் காட்டியிருப்பதுதான் சற்றுப் பிரச்சினைக்குரிய பகுதி. இதை இன்னொருவிதமாய் தன் முன்னாள் அதிகாரத்தைக் கைவிடாத ஒரு போராளியாக அவர் இன்னும் இருப்பதாய்க் கூட ஒருவர் பார்க்கமுடியும். எனினும் இப்படத்தில் இக்கதாபாத்திரம் அவ்வாறான ஒருவரல்ல. பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணின் மீது அக்கறை கொள்வதோடு அவரை ஒரு சக மனுசியாகவும் பார்க்கின்றவர் என்கின்றபோது, அவர் நிச்சயம் போரின் நிமித்தம் காவுகொள்ளப்பட்ட அயல் வீட்டவரின் பிள்ளைகளின் இழப்புப் பற்றியும் துயருற்றிருப்பவராகவே இருந்திருப்பார். அந்த முதியவரும் இந்தப் போராளியும் ஏதோ ஒருபுள்ளியில் புரிந்துகொள்வதான காட்சியை இயக்குனர் வைத்திருந்தால் இன்னும் சிறப்பாயிருந்திருக்கும்.
ஒழுங்கான ஒரு வேலை இல்லாது, வாழ்வை நகர்த்தமுடியாத இப்போராளியைப் பார்த்து தாயார் தான் புதைத்துவைத்திருந்த தாலிக்கொடியை அடகுவைத்து வேலையொன்றைப் பெறக் கூறுகின்றார். அவ்வாறு ஒரு நகைக்கடையிற்குப் போகும்போதே அவருக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் வேலை கிடைக்கின்றது. இந்நிகழ்வு, பிறகு என்றுமே வெளியேற முடியாத பெரும் சிக்கலில் இவரை மாட்ட வைக்கின்றது. இதற்கிடையில் பெருநகரில் இப்போராளி மீண்டும் தன் காதலியைக் காண்கின்றார். காதலி போர் உக்கிரமடைந்த காலத்தில் பலவந்தமாய் இயக்கத்தில் இணைத்துக்கொள்ளப்படுவதைத் தவிர்ப்பதற்காய் ஒரு முதியவருக்குத் கட்டிக்கொடுக்கப்பட்டவர். அந்தக் காட்சியில் வெளிப்படையாய், தமிழ் மக்களிடையே போரின் உக்கிரத்திற்குள்ளும் இருந்த சாதிவெறியைக் காட்டியதற்காய் இயக்குநரைப் பாராட்டவேண்டும். அதேபோன்று கணவனை இழந்த அந்தப்பெண் இப்போராளியிடம், 'உனக்கு இன்னமும் விருப்பமிருந்தால் என்னையும் குழந்தையையும் உன்னோடு கூட்டிச் செல்' எனச் சொல்கின்ற காட்சியை ஒரு தமிழ் இயக்குனருக்கு வைக்கும் தைரியம் இருந்திருக்குமா என்பதும் சந்தேகமே.
பாதுகாவலர் தொழிலுக்குப் போகும் போராளியை எவ்வாறு கடத்தல் தொழிலுக்கு நகை அடவுக்கடைக்காரர் பயன்படுத்துகின்றார் என்பதையும் இதற்கு உடந்தையாக எவ்வாறு புலம்பெயர் தேசத்திலிருந்து செல்லும் ஒரு பகுதியினர் இருக்கின்றார்கள் என்பதையும் படத்தின் நீட்சியில் பார்க்கலாம். எல்லாவித இழப்புக்களோடும் அனைததுத் துயரங்களையும் அனுபவித்து, வாழ்வதற்காய் பாலியல் தொழில் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் வந்துவிட்ட அந்தப் பெண் உடல்வன்முறையை அனுபவித்து வீதியின் ஓரத்தில் போடப்பட்டு இருக்கும்போது அப்பெண் மீது அக்கறையுள்ள இப்போராளி காப்பாற்றுகின்றபோது, 'இதென்ன பெரிய விடயம், இனி மேலும் வாழத்தானே வேண்டும்' என அப்பெண் சொல்கின்றபோது அறையும் யதார்த்ததின் முன் பார்வையாளராகிய நாம் தலைகுனிந்தே நிற்கவேண்டியவர்களாகின்றோம்.
5.
இப்படத்தில் அசோக ஹந்தகமக பல விடயங்களில் வழமையான தமிழ்த் திரைப்படச் சூழலில் இருந்து மீறியிருக்கின்றார். பாலியல் தொழில் செய்யும் பெண் நம்மில் ஒருவர்தான் என்கின்ற பார்வையை அப்பெண்ணின் பாத்திரத்தினூடாக கொண்டுவந்திருக்கின்றார். அதேபோன்று மறுமணத்தையும் எவ்வித புரட்சியோ ஆர்ப்பாட்டமோ இல்லாது சித்தரித்திருக்கின்றார். மேலும் ஒரு குழந்தைக்குத் தாயான இப்பெண் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பிவருவதை, தன் துணையின் முன்னும் மாமியாரின் முன்னும் அப்பெண் ஆடும் நடனக் காட்சியினூடாக நுட்பமாகக் கொண்டுவருகின்றார். முன்னாள் போராளிகளுக்கு இருக்கும் உளவியல் நெருக்கடிகளை, இரவில் இப்போராளி சைக்கிளில் வரும்போது பின்னால் தொடர்ந்துவரும் மூன்று பெண்களின் மோட்டார்சைக்கிள்கள் மூலமாக, இப்போராளிகளின் வாழ்வு இன்னும் பதற்றங்களின் மீதே நகர்ந்துகொண்டிருக்கின்றது என்பதையும் புரிந்துகொள்ளலாம். இப்போராளியைக் கடத்தல் தொழிலில் ஈடுபடுத்தும் பெரியவர் அவ்வப்போது கூறும் வார்த்தைகள் இயக்கம் மீதான் கூரிய விமர்சனமாகவும் இருக்கிறது (ஒரு விடயத்தைச் செய்யச் சொல்லும்போது இப்போராளி 'இயலாது' எனக் கூறுவார், அப்போது அப்பெரியவர், நீ இயக்கத்தில் இருந்தபோது எல்லாவற்றையும் எதிர்க்கேள்வி கேட்காது செய்துதானே முடித்தாய், பிறகு இப்ப மட்டும் என்ன?'). அதேபோன்று சிங்கள மக்களின் பிரசன்னம் தமிழ்ச்சூழலில் அதிகரித்திருப்பதையும் சில காட்சிகளினூடாக அசோக ஹந்தகமக கொண்டு வருகின்றார்.
அதேவேளை இப்படத்தில் எளிதாக விலத்திச் செல்லமுடியாத பல குறைகளும் இருக்கின்றன. திரைப்படத்தின் தொடக்கத்தில் பஸ்சில் வந்து இறங்கும்போதோ அல்லது ஊருக்குள் நுழையும்போதோ எவ்வித இராணுவ பிரசன்னத்தையும் காணவே இல்லை. அவ்வாறான நிலை காட்சிப்படுத்தப்படாதபோது, கதை நிகழும் பின்னணிச் சூழல் எது என்கின்ற சந்தேகம் எழுதல் இயல்பானதே. ஒரு 'சுற்றுலா' ப் பயணியாய் இறுதிப்போர் அவ்வளவாய்த் தீண்டாத தமிழ்ப் பகுதிகளுக்குச் செல்லும்போதே இராணுவத்தின் கண்காணிப்பிலிருந்து எவருமே தப்பிவிடமுடியாது என்கின்றபோது, எவ்வாறு போர் கோரமாய்த் தாண்டவமாடிய இப்போராளி வாழும் இடம் எதிலும் இராணுவத்தையே காணவில்லை என்பது முக்கியமான கேள்வி. இன்று இராணுவத்தால் முற்றுகையிடப்படாத ஒரு தமிழ்ப்பிரதேசத்தைக் காண்பதென்பதே அரிது எனச் சொல்லுமளவிற்கு பல்லாயிரக்கணக்கான இராணுவம் குவிக்கப்பட்டிருக்கின்ற சூழ்நிலையிலும், புத்தர் சிலைகள் நீக்கமற முளைத்திருக்கும் வேளையிலும் இது தவிர்க்கப்பட்டிருப்பதைப் பெரும் பலவீனமெனவே எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கின்றது. முன்னாள் போராளிகளை ஏற்றுக்கொள்வதில் நம் சமூகத்திற்கு இருக்கும் அலட்சியம் மட்டுமில்லை, இவ்வாறான இராணுவக் கண்காணிப்பு இருப்பதால்தான் இத்தகைய முன்னாள் போராளிகளோடு அநேக மக்கள் பழகவோ/பேசவோ விரும்புவதில்லை என்கின்ற யதார்த்தத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மேலும், முன்னாள் போராளிகள் இன்னமும் தங்களை ஒழுங்காய் இயல்புவாழ்க்கைக்குள் தகவமைக்க முடியாது திண்டாடுவதை நாமனைவருமே அறிவோம். ஆனால் அப்போராளிகளின் மீது அக்கறை கொள்கின்ற ஒரு படைப்பாளி, ஒரு முன்னாள் போராளி தன் வீட்டில் மறைத்துவைத்திருக்கும் துப்பாக்கியை எப்படிவெளிப்படையாகக் காட்டமுடிகிறது? இயக்குநரின் பொறுப்புணர்வு குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது. அதேசமயம் இவ்வாறு காட்டமுடிகின்ற அவரால் இராணுவத்தின் பிரசன்னத்தையே காட்டமுடியாதிருக்கின்றால் நாம் அவரின் அரசியல் புரிதல்கள் குறித்துச் சந்தேகம் கொள்ள வேண்டியேயிருக்கின்றது. பாதிக்கப்பட்டவரின் மனோநிலையில் நின்று ஒருவர் இப்படத்தை எடுக்கின்றார் என்றால் அவர் இராணுவத்தின் பிரசன்னத்தை நேரடியாகவும், ஆயுதத்தைப் பின்வளவில் ஒளித்துவைத்திருக்கும் காட்சியை மறைமுகமாகவும் காட்டியிருக்க வேண்டும். ஆனால் இங்கே நடந்திருப்பதோ அதற்கு எதிர்மாறானது. மேலும் இன்னும் அபத்தமாய் அந்தத் துப்பாக்கியை போராளியின் காதலி தூக்கிவைத்து கண்மூடித்தனமாய்ச் சுட்டுத்தள்ளுவது. இவ்வளவு இழப்புக்களைச் சந்தித்து வந்திருக்கும் ஒரு பெண், எந்தவொரு பொழுதிலும் இப்படியான ஒரு முட்டாள்தனத்திற்குப் போகவே மாட்டார். தனது துணைவரை கதறிக் கெஞ்சியேனும் அவரைக் கொல்ல வருகின்றவர்களிடமிருந்து காப்பாற்றப் பார்ப்பாரே தவிர துவக்கு எடுத்து வீரங்காட்ட மாட்டார். எனெனில் இப்படித் துவக்கு வைத்திருந்தால் பிறகென்ன பின் விளைவுகள் வருமென்று அவருக்கு நன்கு தெரியும். அதுவும் இராணுவத்தின் ஆசியோடு இயங்கும் துணைக்குழுக்கள் மீது துப்பாக்கி காட்டி பயமுறுத்தினால் இவர்களின் எதிர்கால வாழ்வு என்னவாகும் என்று எவரும் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.
இன்று முன்னாள் போராளிகளைப் புனர்வாழ்வு முகாங்களுக்கு அனுப்பி, சீர்திருத்தம் செய்தனுப்புகின்றோம் எனக் கூறும் அரசிற்கும் இப்போராளிகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் வரையும் பாரிய பொறுப்புண்டு. ஆனால் அது பற்றிய எந்த விமர்சனத்தையும் இயக்குநர் கொண்டு வரவேயில்லை. ஒரே நாட்டில் நாம் வெவ்வேறு மொழிகள் பேசும் இனங்களாய் இருந்தாலென்ன எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம் என கிடைக்கும் மேடை தோறும் முழங்கும் அரசியல் அதிகாரம் படைத்தவர்கள், இவ்வாறான முன்னாள் போராளிகள் மீது எவ்வளவு அக்கறையின்மையாய் இருக்கின்றார்கள் என்பதற்கான எந்தக் காட்சியும் இப்படத்தில் இல்லை. அசோக ஹந்தகம காட்டுவதைப் போலத் தமிழ்ச் சமூகம் முன்னாள் போராளிகள் மீது பாராமுகமாய் இருப்பது உண்மை என்றாலும், இன்று ஈழத்தில் யாருடைய கரங்களில் சர்வ அதிகாரங்களும் இருக்கின்றன என்பதை முதலில் கவனித்தாக வேண்டும். ஆக, இப்படம் பிரச்சினை என்கின்ற ஆலமரத்தின் விழுதுகளை நோக்கி வெட்டரிவாள் வீசுகிறதே தவிர, ஆலமரத்தின் ஆணிவேரை நோக்கி எட்டியே பார்க்கவில்லை. இதுதான் இப்படத்தின் மிகப்பெரும் பலவீனமாய் இருக்கிறது, ஒரளவு ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளைத் தெரிந்த/பார்த்த என்னைப் போன்றவர்களுக்கு இது இன்னும் நெருடலைத் தருகிறது.
இவ்வாறான குறைகளுக்கு அப்பாலும் முன்னாள் போராளியின் இன்றைய வாழ்க்கையினை காட்சியில் கொண்டுவந்தற்காய் அசோக ஹந்தகமவைப் பாராட்ட வேண்டும். எல்லா உண்மைகளையும் அல்லது எல்லோரையும் திருப்திப்ப்டுததக் கூடிய ஒரு படைப்பை ஒரு படைப்பாளியில் வழங்கிட முடியாது என்றாலும், போராளிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும் உள்ள அக்கறையினாலும் இப்படத்தை எடுக்க முன் வந்திருப்பதற்காய் இயக்குநனரை நாம் மதிக்க வேண்டும். ஆனால் அந்த அக்கறை -சில தமிழ்நாட்டுக்காரர் எங்கள் போராட்டத்தை விளங்கிவைத்திருப்தைப் போல- ஒரு பக்கமாய் மட்டும் மாறிவிடக்கூடிய அபத்தத்தை அடையாதிருப்பதற்காக நாம் நம் விமர்சனங்களையும் -இயக்குநனரின் அக்கறையையும் மீறி - முன் வைக்க வேண்டியவர்களாகின்றோம். ஆகக் குறைந்தது, நம் தமிழ்ச் சூழலில் இருந்து காத்திரமான உரையாடல்கள் இம் முன்னால் போராளிகளைப் பற்றி இன்னமும் ஒழுங்காய்த் தொடங்காதபோது, தன் படைப்பின் மூலம் இதை நிகழ்த்த நம்மை முன் தள்ளியிருக்கும் அசோக ஹந்தகமவின் கரங்களைப் பரிவுடன் நாம் பற்றிக்கொள்ளலாம்.
இறுதிக்காட்சியில் முன்னாள் போராளியும், பாலியல் தொழில் செய்ய நிர்ப்பந்திக்கப்படும் பெண்ணும் போகும் மோட்டார் சைக்கிள் பழுதாகி நிற்கும்போது அவர்களுக்கு உதவ சிங்களப் பயணிகள் முன் வருவார்கள். ஆனால் அதை மறுத்து மோட்டார் சைக்கிளைத் தானே திருத்தும் போராளியினூடாக ஈழத்தமிழர் எவரின் துணையுமின்றி சொந்தக்காலிலே நிற்க விரும்பும் வைராக்கியத்தையும், ஒரு வார்த்தை அவர்களுடன் ஆதரவாகப் பேசாத போராளியினூடு இன்னமும் ஓழுங்காய் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் ஏற்படாததையும், அதேசமயம் 'உதவி கேட்டமைக்கு நன்றி' கூறி சிரிக்கும் தமிழ்ப்பெண்ணினூடு உங்களை(சிங்களவரை) நாங்கள் வெறுக்கவில்லை என்பதைச் சொல்வதாய்க் கூட எடுத்துக் கொள்ளலாம். இனி அவன் என்கின்ற அப்போராளியின் வாழ்க்கை என்னவாகப் போகின்றது என்பதோ, தன் உயிர்வாழ்தலுக்காய் பாலியில் தொழில் செய்யும் பெண்ணின் நிலை எவ்வாறு நாளை இருக்கும் என்பதோ, எவ்வளவு தீர்க்கமின்றித் தெரிகிறதோ அவ்வாறே ஈழத்தில் உண்மையான சமாதானம் தோன்றக்கூடிய காலமும் தெளிவற்றே தெரிகிறது என்பதுதான் நம் காலத்தைய பெருஞ்சோகம்.
------------
செப்/19-20 (2012)
நன்றி: எழுநா - இதழ் -01
புகைப்படங்கள்: கூகுள் தேடல்