கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பயணக்குறிப்புகள் - 05 (India)

Monday, March 23, 2015

-பரதேசியின் கனவு

கொச்சினில் Paradesi Synagogue என்கின்ற ஓரிடம் இருக்கின்றது. அங்கே பல்வேறு வரலாற்றுப்புகழ் பெற்ற இடங்களும் சம்பவங்களும் புதைந்து இருக்கின்றன. அத்துடன் cobbleகற்கள் பதிக்கப்பட்ட தெருக்களில் கலைப்படைப்புக்கள் காட்சிப்படுத்தல்களையும், விற்பனை செய்வதையும் செய்கின்றனர். நானுமொரு பரதேசி ஆனபடியால் எனக்கு அந்தத் தெருக்களில் நடந்து திரிவது பரவசமான நிலையைத் தந்துகொண்டிருந்தது. ஒருவகையில் கனடாவின் Old Montreal ஐ இது நினைவுபடுத்தியது. அதுவும் கிட்டத்தட்ட இதேமாதிரித்தான், கலரிகளால் நிரம்பியிருக்கும். ஒவ்வொரு கலரிக்கும் உள்ளே போய்விட்டு வரவே நிறைய நேரம் எடுக்கும் என்பதோடு பல்வேறு வகைப் பாணியிலான ஓவியங்களை அருகருகிலேயே கண்டு இரசிக்கவும் முடியும்.

கொச்சினில் சந்துகளில் சுவரோவியங்களை (murals)   இளைஞர்களும், யுவதிகளும் சேர்ந்து உற்சாகமாக வரைவதைப் பார்த்தேன். ஓவியக்கூடங்களில் முன்வாசலில் இருந்து மகிழ்ச்சியாக பலர் கதைத்துக்கொண்டிருந்தார்கள். செதுக்கப்பட்ட சிற்பங்கள் விற்கப்பட்ட கடைகளில் நின்ற பெண்கள் கூட ஒருவகையில் அசைகின்ற கலைப்பொருட்கள் போலவே தென்பட்டனர். புத்தர் சிலைகளை விற்றுக்கொண்டிருந்த ஒருகடையில் நின்றவரைப் பார்த்தபோது "விழிமூடிப் பிரார்த்திக்கும் அழகில்/ துளித்துளியாய்ப் புத்தரின் சாந்தத்தை / மனதிற்குள் இறக்குபவள் நீயல்லவா' என்று எப்போதோ எழுதிய கவிதையொன்றுதான் ஞாபகத்திற்கு வந்தது. அப்படி பொழுதை அழகாக்கிக்கொண்டிருந்தவர்க்கு நன்றி செலுத்தும் விதமான சிற்பமெதுவும் வாங்கமுடியவில்லையென்றாலும், இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட சவர்க்காரத்தை வாங்கி என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன்.

ரு கண்காட்சியறையில், பல்வேறுபட்ட கலைஞர்களை அவர்களின் சிறுவயது ஊர்கள்/வீடுகளுக்கு அழைத்துச்சென்று படமெடுத்து அவர்களின் நினைவுகளின் வரிகளோடு சில புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதிலெனக்கு இருவர் தமது கடந்தகால நினைவுகளைக் கூறியிருந்தது பிடித்தமாயிருந்தன.

எழுத்தாளரான தான்யா ஆபிரகாம், தான் வாழ்ந்த வீட்டைப் பற்றிச் சொல்லும்போது, 'இது ஒரு வரலாற்று வீடு. எனது முன்னோர்கள் நடந்து திரிந்த வீடு, பெற்றோர்கள் (எங்களை) நேசித்த, சகோதரகள் நடனமாடித் திரிந்த வீடு. அவர்கள் அப்படிச் செய்யும்போது, நான் ஒரு மெளனமான இடமாக இதைப் பாவித்துக்கொண்டேன். அங்கே சூரியஒளி ஊடுருவ, தூண்கள் உறைந்திருந்தன. அவற்றோடு சேர்த்து நான் கனவு கண்டேன்.. எப்படி வாழ்வது, சிரிப்பது, நேசிப்பது என்பது பற்றி....இந்தக் கணத்தைப் போல, இப்போதும் எப்போதும்' என்கின்றார்.

ஓடுகளால் வேய்ந்திருந்த அந்த நாற்சார வீட்டில், சூரிய ஒளி ஊடுருவ நிலம் பார்த்து சுருள் சுருளான தலைமயிரோடு தான்யா உட்கார்ந்திருந்த புகைப்படத்தில் நானும் ஒரு நிழலாகி அவரருகில் நிற்பது போன்ற பிரமையே எனக்கு ஏற்பட்டிருந்தது. சிலவேளை சாதாரண ஒரு புகைப்படமாய் தாண்டிப்போயிருக்கக்கூடிய சாத்தியமுள்ள இதை, தான்யாவின் வார்த்தைகள் இன்னும் ஆழமாய் ஊடுருவிச்செல்ல, எழுத்துக்கு இருக்கும் இடம் புரிந்தது.

இவ்வாறு சுவாரசியமான பலரின் புகைப்படங்கள் இருந்தன. சிறுவயதிலிருந்தே மோகினியாட்டம் ஆடுபவர், வீட்டு மரமொன்றின் கதை சொன்ன (அவர் அம்மரத்தின் மேல் ஏறி நின்றே புகைப்படம் எடுத்திருந்தார்) இன்னொருவர் என பல்வகைப்பட்டவர்களின் புகைப்படங்களும், அவை பெருக்கும் நினைவுகளும்.

என்னைக் கவர்ந்த இன்னொரு புகைப்படம் எழுத்தாளரும் கார்ட்டுனீஸ்டுமான பொனி தோமஸ் கல்லறைக்குள் நின்று எடுத்த புகைப்படம். அது என்னைக் கவர்ந்ததற்கு, அவர் மார்குவெஸ்ஸின் தீவிர இரசிகர் என்பதும் ஒரு காரணம். இதில் அவர் மார்குவெஸ்ஸின் நாவலில் நடந்தது எப்படி தனது தீவான ஊரில் நிஜமாக நடந்தது என்பது பற்றிக் கூறுகின்றார்.
மார்குவெஸ்ஸின் Of Love and Other Demons நாவலை வாசித்தவர்களுக்கு தெரியும் அதில் வரும் சிறுமியிற்கு மனப்பிறழ்வு இல்லாமலே பல்வேறு கொடும் சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு எப்படி கஷ்டப்படுத்தப்படுகின்றார் என்றும், இறுதியில் தேவாலயமொன்றில் சிகிச்சை அளிக்கப்படும்போது அங்கிருக்கும் இளம் பாதிரியார் ஒருவருக்கு இப்பிள்ளை மீது மெல்லிய காதல் வருகின்றது என்பது பற்றியும். தேவாலயத்தில் அளிக்கப்படும் 'சாத்தனை விரட்டும்' சிகிச்சையில் ஏற்கனவே பலர் இறந்திருந்தாலும், இப்பிள்ளையும் அச்சிகிச்சையின் மூலம் இறக்கவே போகின்றார் என்று வாசிக்கும் நாம் நினைக்கும்போது, சிகிச்சை நாளுக்கு முன்பாகவே அவர் தலைமயிர் அறுக்கப்பட்டு தூக்கத்தின்போது இறந்திருப்பார். அது இயற்கையான இறப்பா அல்லது கொலையா என்று சந்தேகம் வரும்படியாக மார்க்குவெஸ் எழுதியிருப்பார். ஆனால் அந்தப்பிள்ளை இறந்தபின்னும், அவருக்கு தலைமயிர் வளர்ந்துகொண்டிருப்பதாய், இன்னும் இறக்கவில்லை போன்று ஒருவித மாயயதார்த்ததில் நாவல் எழுதப்பட்டிருக்கும்.

அது போலவே பொனி தோமஸ் தனது தீவிலும் நிலக்கிழாரின் மகளொருவர் இளம்வயதில் இறந்ததாகவும், மிகுந்த தாராளமனதுடைய அந்தப் பிள்ளையின் மரணம் ஊர் மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும், பிறகு தற்செயலாக அவரின் இறந்த உடல் புதைக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்வதற்காய் தோண்டியபோது, அந்தப் பிள்ளையின் உடல் பழுதாகாமல் அப்படியேயிருந்ததாகவும், அவருக்கு தலைமயிர் முளைத்திருப்பதைக் கண்டதாகவும் ஒரு 'செய்தி' தீயாக எங்கும் பரவியதாகக் கூறுகின்றார்.

தனது ஊரில் நடந்த இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட பொனி தோமஸ், பின்னர் 95ல் மார்குவெஸின் Of Love and Other Demons நாவலை வாசிக்கும்போது, கொலம்பியா என்னும் உலகின் இன்னொரு மூலையிலிருந்து மாந்தீரிக யதார்த்தம் என்ற மைதொட்டு எழுதிய மார்கவெஸ்ஸின் கதை உலகின் மறுபக்கத்தில் ஒரு தீவில் நடந்த நிகழ்வாக இருந்திருக்கின்றதே என வியக்கின்றார். எழுத்து என்பதன்  அழகும், ஆழமும் இதுவன்றோ.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்து மனதை விரிக்கத் தொடங்கியபோது, இவர்களுக்கெல்லாம் எப்போது விரும்பினாலும் திரும்பக்கூடிய ஓரு வீடிருக்கிறதே. எனக்கு நான் சிறுவயதுகளில் வளர்ந்த வீடு முற்றாக அழிவுற்று, மரங்கள் வீட்டின் அத்திவாரங்களுக்கு மேலாய் வளர்ந்து ஒரு ஞாபகமாக மட்டுமே எஞ்சியிருக்கின்றது என்ற சிறுதுயர் எட்டிப்பார்த்தது.

அது சில கணங்கள் மட்டுமே. நாமெல்லாம் பரதேசிகள்; பிறரின் வாழ்வில், கலையில் நமது விம்பங்களைப் பார்த்து மனம் நெகிழ்பவர்கள் அல்லவா? மேலும், அலைந்துகொண்டிருக்கும் வாழ்வென்பது எல்லோருக்கும் வாய்ப்பதுமில்லைத்தானே.

பயணக்குறிப்புகள் - 04 (Cuba)

Wednesday, March 18, 2015

ஒரு குதிரை 'வீரனின்' அவலக்கதை

Holguin லில் (Cuba) சைக்கிளில் சுற்றிக்கொண்டு திரிந்தபோது ஓர் உள்ளூர்க்காரரைச் சந்தித்தோம். அவர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று சிகார், ரம்மிலிருந்து, விரும்பினால் எங்களுக்கு கடலுணவுடன் விருந்தும் அளிக்கத் தயாரெனச் சொன்னார். உங்கள் வீட்டுக்கு  எங்களை அழைத்து வந்ததற்கு நன்றி, இப்போதைக்கு மலையிலுள்ள -முன்பு பூர்வீகக்குடிகள் வசித்த- குகைகளை மட்டும் பார்க்க இன்னொரு பொழுது வருவதாகச் சொல்லி விடைபெற்றுக்கொண்டோம்.

மாலைப் பொழுதொன்றில், மலையேறிப் பார்ப்பதற்காய் இரண்டு குதிரைகளோடு அவர் தயாராக இருந்தார். என்னோடு கூடவே திரிந்த நண்பர் ஒரு ஐரோப்பாக்காரர். இந்த நாட்டுக்கு அவர் வந்ததும் இதுவே முதன்முறை. கியூபாவிற்கு சிலமுறை ஏலவே பயணித்தவன் என்ற மிதப்போடு, குதிரையிலேறி ஏற்கனவே நீர்வீழ்ச்சியிற்குப் போனவன் என்றும் என் அனுபவத்தையும் சேர்த்து உயர்வுநவிற்சியுடன் எடுத்து விட்டுக்கொண்டிருந்தேன். நண்பர் ஐரோப்பாக்காரர் என்றபோதும், இதுவரையில் குதிரையில் ஏறவில்லை என்று அவர் சொன்னபோது எனக்குச் சற்று ஆச்சரியமாயிருந்தது. 'ஒவ்வொரு பயணங்களிலும் புதிதாக எதையாவது அறிவேண்டும், அப்போதுதான் அது நினைவில் மறவாதிருக்கும், உங்களுக்கு இம்முறை குதிரைப்பயணம்' என்று அவரிடம் சொன்னேன்.

ரண்டு குதிரைகளோடு எங்களுக்காய்க் காத்துக்கொண்டிருந்த உள்ளூர்க்காரர் ஒரு சைக்கிளோடு வந்திருந்தார். குதிரைகளும் மலையேற்றத்திற்கு பழகிய மாதிரி தெரியவில்லை. எங்கையோ மேய்ந்துகொண்டிருந்த குதிரைகளை இழுத்துக்கொண்டு வந்தமாதிரி இருந்தது. எங்கள் ஊர்களில் மாடுகள் மேய்ந்து கொண்டிருப்பதைப்போல, இங்கே குதிரைகள் அலைந்துகொண்டிருப்பதை எங்கும் காணலாம்.

ரிஸ்க் எடுப்பதெல்லாம், எனக்கு தேத்தண்ணியில் பணிஸைத் தோய்த்துச் சாப்பிடுவதைப் போல என்பதால் இவை எது குறித்தும் அச்சப்படாமல் குதிரையேற்றத்திற்குத் தயாரானேன். நானேறிய குதிரையோ ஒரு முரட்டுக்குதிரை. அது முன்னே போனதை விட, திரும்பிப் போன தூரந்தான் அதிகம். உள்ளூர்க்காரரோ சிறு தடி ஒன்றை முறித்துத்தந்து 'இப்படிப் பின்னால் தட்டு, குதிரை தன்பாட்டில் முன்னே போகும்' என்றார். முரண்டுபிடிக்கும் குதிரையிற்கு சற்றுப் பலமாகத் தட்டவும் பயமாயிருந்தது, அது கோபத்தில் வேகமெடுத்தால் என் நிலைதான் என்னாவது?

கரடுமுரடான சரளைக்கற்கள் பாவியிருந்த ஒழுங்கைகளில் போய்க்கொண்டிருந்தபோது, குதிரையிலேறி போர் பிடித்தவர்களைப் பற்றி நினைத்துக்கொண்டேன். எனக்கென்றால் உயிரே போகின்றமாதிரி உடலின் பின்பாகங்கள் வலித்தன. இப்படியான ஒரு பாதையில் போய் யுத்தம் செய்யவேண்டும் என எனக்கு ஒரு நிலை வந்திருந்தால், யுத்தகளத்திற்குப் போகமுன்னரே  நான் உடல்வலியில் இறந்துபோயிருப்பேன் என நினைத்துக்கொண்டேன். என் எண்ணங்கள் வேகமெடுத்தாலும் எனது குதிரை செல்லவேண்டிய பாதையை விட்டு விலகி அடிக்கடி குச்சொழுங்கைகளுக்குள் போகப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது. உள்ளூர்க்காரர் 'கா-பாயோ கா-பாயோ என்று கூறு, அது சொல்வழி கேட்கும்' என்றார். நான் மெல்லிய குரலிலிருந்து கடும்குரல் வரை கத்திப் பார்த்தேன். அது கேட்பதாய்க் காணோம்.

இந்தக் குதிரையிற்கு ஊர்முழுக்கத் தெரிந்தவர்கள் போலும். எல்லோர் வீட்டின் முன்னாலும் நின்று நின்று ஓய்வெடுத்துச் சுகம் விசாரித்துக் கொண்டிருந்தது.
எனக்கு வந்த விசருக்கு, ஒருக்காய் பின்பக்கம் இறுக்கித் தட்டி 'கா-பாயோ' என்றேன். அவ்வளவுதான். அது காற்றைப் போல ஓடத்தொடங்கியது. ஆனால் நாம் போக வேண்டிய பாதையில் அல்ல. நாலைந்து வீடுகள் பக்கம் பக்கமாய்க் கட்டப்பட்டிருந்த குச்சொழுங்கை ஒன்றிற்குள்ளால்.

வீட்டுச் சனம் எல்லாம் சிரிக்கிறதுகள். இதைவிட எனக்கு அவமானம் என்னவென்றால், நான் இந்த ஐரோப்பாக்கார நண்பருக்கு ஏற்கனவே குதிரையில் போன வீரன் எனக் கதை சொல்லியிருந்தேன். அந்த நண்பரின் முன்னும் தலைகுனிய வேண்டியிருக்கிறதே என்று. குதிரையிடம் 'கா-பாயோ' என்று அதட்டுவதை விட்டுவிட்டு, நான் மனசுக்குள் மானசீகமாய் 'என்ரை குஞ்சல்லோ, என்னை அவமானப்படுத்துகிறதென்றால் தனியே வைத்து அவமானப்படுத்து, ஆனால் இப்படி பப்ளிக்கில் வைத்து செய்யாதே' எனக் கெஞ்சினேன். அது எங்கே கேட்டால்தானே. ஏதோ தன் காதலியை யாரோ நாலைந்து வீட்டுக்கு அப்பால் சிறைவைத்தது மாதிரியும், அவரை விடுதலை செய்கின்ற பாவனையிலும் அல்லவா ஓடியது.

நான் இனி குதிரையை நம்பி எதுவும் நடவாது என்று கையில் அகப்பட்ட மரத்தைக் கட்டிப்பிடிக்கப் பார்த்தேன். ஆனால் குதிரை இன்னும் வேகமாய் ஓடியது. ஒன்று நான் மரத்தில் தொங்கவேண்டும். இல்லை குதிரையோடு சேர்ந்து அள்ளுப்பட்டுப் போகவேண்டும் என்ற நிலை. கடைசியாய் ஒரு வீட்டின் பின்வளவில் கட்டியிருந்த இன்னொரு குதிரையைக் கண்டுதான் ஓட்டத்தை நிறுத்தியது. சரி, காதலிக்கு 'ஹாய்' தான் கூறிவிட்டாய், திரும்பலாம்தானே என்றால் அதுதான் இல்லை. கிட்டப்போய் கொஞ்சிக்கொண்டு விட்டுவரமாட்டேன் என் முரண்டு பிடித்து நின்றது.

பிறகு ஒருமாதிரி அந்த வீட்டில் நின்ற ஒருபெண்தான் சிரித்தபடி ஸ்பானிஸில் கதைத்தபடி குதிரையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து ஒழுங்கையிற்குள் விட்டுவிட்டார். குதிரை இப்படிச் செய்துவிட்டதில் கோபமிருந்தாலும், சிலவேளை குதிரை இந்த அழகான பெண்ணை எனக்கு அறிமுகப்படுத்தத்தான் இப்படி தெறிகெட்டு ஓடியிருக்கிறது என நினைத்து அதை மன்னித்தும் விட்டேன்.

ஒழுங்கையிற்கு வந்து பார்த்தால், உள்ளூர்க்காரரும், நண்பரும் சிரித்துக்கொண்டு நிற்கின்றார்கள். நான் இனி இந்தக்குதிரையோடு மலையேறப்போவதில்லை, திரும்பிப் போகப்போகின்றேன் என்று அறுதியும் உறுதியுமாய்க் கூறிவிட்டேன். நண்பர்தான், வேண்டுமெனில் குதிரையை மாற்றிக் கொஞ்சதூரம் வந்துபார், ஆகக்கஷ்டமென்றால் திரும்பிப்போய்விடுவோம் என்றார்.

நான் நண்பரிடம் நீங்கள் முதல் தடவைதான் குதிரையில் ஏறுகின்றீர்கள் என்கின்றீர்கள். ஆனால் நிதானமாய்க் குதிரையை ஓட்டமுடிகிறதே, எப்படி என்றேன். அவர் தான் நிறைய படங்களில் குதிரையேற்றத்தைப் பார்த்திருக்கின்றேன்; அதை இங்கே பிரயோகித்துப் பார்த்தேன் என்றார். நானுந்தான் நிறையக் குதிரைகளை ரீவியில் பார்த்திருக்கின்றேனே, ஏன் எதையும் கற்கவில்லை என யோசித்தேன். பிறகுதான் குதிரையைவிட குதிரையில் போகும் பெண்களைத்தான் உற்றுப் பார்த்திருக்கின்றேன் என்ற உண்மை உறைத்தது.

இப்படியே எங்களோடு மலையேறினால் அடுத்தநாள்தான் போய்ச்சேர முடியும் என்பதாலோ என்னவோ, உள்ளூர்க்காரர் இன்னொரு வயதுபோன ஐயாவையும் எங்களுடன் கூட வரச்சொன்னார். அவர் தன் குதிரையில் எங்களோடு வர, பிறகு குதிரைச்சவாரி எளிதாகப் போனது. 'கஷ்டப்பட்டு' குதிரையேற்றம் செய்த எங்களுக்கு அந்த ஐயா இளநீரும் வெட்டித்தநதார்.
இவ்வாறாக நான் மீண்டுமொரு 'வெற்றி' பெற்ற குதிரை வீரனானேன்.

பயணக்குறிப்புகள் - 03 (India)

Monday, March 16, 2015

சூட்டிங் பார்க்கப்போன கதை

சென்னையை நானும் இன்னொரு நண்பருமாய் பஸ்சில் சுற்றிக்கொண்டிருந்தோம். சென்னையில் பார்க்கவேண்டிய இடங்களென பயணிப்பவர்க்கெனக் குறிப்பிட்ட சில கோயில்களைப் பார்ப்பதே எங்கள் நோக்கமாய் இருந்தது. நண்பர் திருத்தணிகைக்காரர், சினிமாத் துறையில் இருப்பவர். சில வருடங்களுக்கு முன் சினிமாத் துறையில் தீவிரமாய் இருந்து, இடையில் தங்கை/தம்பிகளின் பொருட்டு ஊர் திரும்பி உழைத்து அவர்களைக் 'கரையேற்றி'விட்டு இப்போது மீண்டும் சினிமாவில் முழுமூச்சில் இயங்க வந்திருப்பவர். நாங்கள் திருவல்லிக்கேணியில் நின்றபோது எங்களுக்குப் பொதுவான இன்னொரு நண்பர் தரமணியில் சூட்டிங்கொன்று நடக்கிறது, அங்கே வாருங்களெனச் சொன்னார்.

என்னோடு இருந்த நண்பர் சினிமாத்துறையிலிருந்தாலும், சென்னையைக் கரைத்துக் குடித்தவரல்ல. தரமணிக்குப் போவதற்காய் பஸ்களை மாறி மாறியேறி ஏறிப் பார்த்தோம். இப்படி தவறாகத் திசை தொலைந்து போய்க்கொண்டிருந்ததிலும் ஒரு நன்மை விளைந்திருந்தது. ஏதோ ஓரிடத்தில் நின்றபோது நிறையப் பொலிஸ்காரர்கள் நின்று வீதியை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு முக்கிய இடம்போலும். போக்குவரத்து நிறுத்தப்பட்டு சில கார்கள் சட்டென்று விரைந்துபோக, அதில் ஒன்றில் -கண்ணாடி கீழிறக்கப்பட்ட காரில் - பன்னீர்செல்வம் போய்க்கொண்டிருந்தார். தமிழக முதல்வரை இப்படி எளிதாய்ப் பார்த்துவிட்டேன், இன்னும் 'மக்களின் முதல்வரை'த்தான் பார்க்க முடியவில்லையே என நினைத்துக்கொண்டேன். மக்களோடு மக்களாய் கரைந்து நிற்பதால் காணமுடியவில்லைப் போலும்.

சென்னை வந்த புதிதில் சுவர்களை மேய்ந்துகொண்டு திரிந்தபோது இன்னொரு நண்பரிடம் இப்படி ஜெயலலிதாவைப் பற்றி அனைத்து இடங்களிலும் பதிவு செய்து வைத்திருக்கின்றனரே, சும்மா ஒரு முதல்வர் என்பதற்காகவேனும் பன்னீர்செல்வத்தின் பெயரையோ படத்தையோ எங்கும் காணவில்லையே என்றேன். நண்பரோ சிரித்துக்கொண்டு அப்படி ஒருவன் சுவரில் எழுதினான் என்றால் ஒழுங்காய் இருந்துவிடமுடியுமா? என்றார். அம்மா, உணவகத்தையும், டாஸ்மாக்கையும் ஒழுங்காய் நடத்தி மக்களை வாழவைத்துக்கொண்டிருக்கும்போது நமக்கு எதற்கு அவசியமில்லாக் கேள்விகள் என்று அத்தோடு 'அரசியல்' பேசுவதைத் தவிர்த்துவிட்டேன்.

பஸ்சில் இப்படி மாறி மாறி ஏறித்தொலைந்தால் அடுத்தநாள்தான் தரமணிக்குப் போய்ச் சேரமுடியும் என்பது எங்கள் இருவருக்கும் விளங்கியதால், ரெயினெடுத்து தரமணிக்குப் போனோம். தரமணியில் நின்று, மற்ற நண்பரை அழைத்தால், அங்கேயில்லை இந்திராநகருக்கு அருகில் ஷூட்டிங் நடக்கிறதென்றார். இப்படியே அலைந்தால், இனி அப்படியே கனடாவுக்குப் பிளைட் எடுக்கவேண்டியதுதான் என்று நினைத்தேன். என்றாலும் தரமணியைப் பார்த்தவுடன், இந்தப் பெயரில்தானே நமது அன்ட்ரியா படமொன்றில் நடிக்கிறார் என்பது நினைவுவர அன்ட்ரியா இந்தப் பக்கம் படப்பிடிப்பிற்கு வருவாரா, காத்திருப்போமா என்றேன். நண்பரோ திசை தொலைத்த குழப்பத்தில், தண்டவாளத்தில் தலையை வை என்றால் கூட செய்கின்றேன், ஆனால் இங்கேயெல்லாம் ஆன்ட்ரியாவிற்காய்க் காத்திருக்கமுடியாதென இந்திரா நகருக்கு இழுத்துச் சென்றுவிட்டார். அப்படி அங்கே ரெயினிலிருந்து இறங்கி நடந்துகொண்டிருந்தபோது ரோஜா முத்தையா நூலகம் இருப்பதையும் கண்டேன்.

ஒருமாதிரியாக படப்பிடிப்பு நடக்கும் இடத்தைக் கண்டுபிடித்து யுரேகா யுரேகா என்று கத்தாத குறைதான். எங்களின் மற்ற நண்பர் சூட்டிங் நடந்துகொண்டிருக்கும் படத்தின் இசையமைப்பாளர் மற்றும் இன்னுஞ்சிலரை அறிமுகப்படுத்தினார். தம்பி ராமையா மாலை நேர படப்பிடிப்பிற்காய் தயாராகிக்கொண்டிருந்தார். இவ்வளவு கஷ்டப்பட்டு இடத்தைக் கண்டுபிடித்ததற்காய், நண்பர் production ஆட்களிடமிருந்து தேநீரும் வாங்கித் தந்து களைப்பையும் போக்கினார்.

நாயகனுக்கும் நாயகியிற்கும் ஏதோ ஆலமரக் காட்சி. நாயகன் கொஞ்சம் பேசி கோபித்துவிட்டுப் போவதைக் காட்சிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். பாடசாலை முடிந்துபோன மாணவர்கள் உற்சாகமாய் நின்று இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இடைவெளியில் நடிக்கும் நாயகனோடு புகைப்படங்களும் அவர்கள் எடுக்க, சூரியன் மறைவதற்குள் காட்சிகளை எடுத்து முடிக்கவேண்டுமென பரபரப்போடு எல்லோரும் இயங்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது காலசுப்பிரமணியமும், சரவணனும் தெருவில் நடந்துபோய்க்கொண்டிருப்பதையும் பார்த்தேன் அவர்களுக்கு வணக்கம் சொல்ல விருப்பமிருந்தபோதும், தன்னைப் பார்க்காது உனக்கு என்ன உருப்படாத இலக்கியப்பேச்சு என நாயகி கோபித்து விடப்போகின்றாரோ என்ற அச்சத்தில் அமைதியாகிவிட்டேன்.

நாயகன் பெயரைச் சொன்னபோது, அவரைக் கேள்விப்பட்டிருந்தாலும் என்ன படத்தில் நடித்திருக்கின்றாரென மறந்துவிட்டேனென நண்பர்களிடம் கூறியபோது 'மைனா'வை நினைவுபடுத்தினர். நாயகியையும் எங்கேயோ பார்த்திருக்கின்றேனே யாரவர் எனக் கேட்பதற்குள் கூட்டத்தில் நின்ற ஒரு நடமாடும் விக்கிபீடியா, இவர் பேராண்மையில் ஐந்து நாயகிகளில் ஒருவர், பரதேசியில் இரண்டு நாயகிகளில் ஒருவர், அரவானில் இவரே தனித்த நாயகி' என பக்கத்தில் நின்ற யாருக்கோ சொல்லி எனக்கும் கூடவே அறிவூட்டினார். இவரைப் பார்க்க சின்னப்பிள்ளை மாதிரி இருக்கிறார், என்ன இவருக்கு ஒரு பதினெட்டு பத்தொன்பது வயசு இருக்குமா என்றேன். நண்பரோ இல்லை இருபத்தைந்தளவு இருக்கும் என்றார். அவர் பாவாடை சட்டையில் இருந்ததாலும், ஆலமரத்தைச் சுற்றி சூட்டிங் நடந்ததாலும் எனக்கு 'ஆத்தங்கரை மரமே' நினைவு வந்ததாலும் மிக இளமையாகத் தோன்றியதோ தெரியாது.

நாயகனோடு எல்லோரும் விழுந்து விழுந்து படம் எடுத்துக்கொண்டிருந்தனர். யாரோ ஒரு பையன் ரேஸிங் பைக் ஒன்றைக் கொண்டு வந்து நாயகனை ஓட்டச்சொல்லி பின்னால் அமர்ந்து இமயமலையைத் தொட்டுவிட்ட குதூகலத்தோடு போய்க்கொண்டிருந்தான். ஆனால் ஒருவரும் நாயகியின் பக்கம் நகர்வதாயில்லை. என்னதான் இருந்தாலும் தமிழனுக்கு இவ்வளவு வெட்கம் வேலைக்கு ஆகாது என நினைத்து, நண்பரிடம் நாயகியிடம் என்னை அறிமுகப்படுத்திவிடுங்கள் எனக் கேட்டேன்.

நண்பர் என்னை நாயகியின் அருகில் கூட்டிச்சென்று, இவர் ....., கனடாவிலிருந்து வந்திருக்கின்றார் என்றார். நான் கொஞ்சம் திருத்தி, கனடாவிலிருந்து உங்களைப் பார்ப்பதற்காய்தான் இங்கே (படப்பிடிப்பிற்கு) வந்திருக்கின்றேன் என்றேன். பிறகு கொஞ்சநேரம் அரவானில் இப்படி நடித்திருந்தீர்கள், பரதேசியில் அப்படி அசத்தினீர்கள் எனச் சிலாகிக்கத் தொடங்கினேன்ன். பக்கத்திலிருந்த நண்பர், அட பரதேசியே, இப்போது அரை மணித்தியாலம் முன்னர்தானே இந்த நாயகி எந்தப் படங்களில் நடித்ததென்றே தெரியாமல் இருந்தாய், இப்படிப் படங்காட்டுகின்றாயே என வியந்திருப்பார். அதையெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தால் நமது 'சுயமரியாதையிற்கு' ஆகாது என்று நான் 'பொளந்து' கட்டிக்கொண்டிருந்தேன். அப்போது நாயகி, உங்களுக்குப் பிடித்த நாயகி யார் எனக் கேட்டார் (கவனிக்க: நாயகி நன்கு தமிழ் பேசுபவர்). எனக்கு, இந்தக்கணத்தில் பிடித்தவர் நீங்கள்தான் எனச் சொல்லப் பிரியப்பட்டாலும், அஸின் என்று வாய் தவறிச் சொல்லிவிட்டேன்.

அவ்வளவுதான். அதற்குப் பிறகு அவர் என்னோடு அவ்வளவாய் முகங்கொடுத்துப் பேசவில்லை. அவரோடு புகைப்படம் எடுக்க விரும்பினாலும், ஏன் போய் அஸினோடு எடுக்கவேண்டியதுதானே? என அவர் சூடாய்க் கேட்டுவிடுவாரோ என்ற பயத்தில் அதற்கும் பின்வாங்கிவிட்டேன்.

சரி, அன்பான நாயகியே, நான் உங்களுக்காய் விழித்து இருந்து நிச்சயம் இப்படம் வெளிவரும்போது பார்த்துவிடுகின்றேன். கோபிக்கவேண்டாம், சிரியுங்கள்; அதுவல்லவா உங்களுக்கு இன்னும் அழகைக் கூட்டுகிறது.

(பி.கு: இதில் எவை நடந்தன/நடக்கவில்லை என்பதை நாயகியோடு பேசும்போதிருந்த நண்பர் மட்டுமே அறிவார். மற்றது, இந்தப் படத்தின் இயக்குநருக்கு நன்றியும் கூறவேண்டும். நான் சென்னையை விட்டு பிற இடங்களுக்குப் போனபோது அவரது பிளாட்ஸிலேயே எனது luggagesஐ வைத்திருந்தேன். இடந்தந்து உதவியமைக்காய்)

எஸ்.பொ என்னும் 'காலமாகாத' ஆளுமை

Sunday, March 01, 2015

2011ல் கனடாவில் இயல்விருது வழங்கும் விழா. வாழ்நாள் சாதனையாளருக்கான விருது எஸ்.பொ என அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரையிற்கு வழங்கப்படுகின்றது.  எந்த சபை மீதிருக்கின்றேன் என்ற எவ்வித அக்கறையுமில்லாது எஸ்.பொ உரையாற்றுகிறார். அறிஞர் குழாம் என அழைக்கப்படும் குழுவிற்கு அவ்வளவு பிடிக்காத ஒருவகையான பேச்சு. ஆனால் அதுதான் எஸ்.பொவின் தனித்துவம். அந்த தனித்துவமே அவரை ஓய்வு உளைச்சலின்றி தமிழ் ஊழியத்திற்காய் காலமாகும்வரை இயங்க வைத்திருக்கின்றது.

எஸ்.பொவின் 'ஆண்மை' சிறுகதைத் தொகுப்பும், சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே.சிலகுறிப்புகளுமே' என் வாசிப்பின் திசையை மாற்றியதென அடிக்கடி நினைப்பதுண்டு. 'ஆண்மை' தொகுப்பில் பதினைந்தாவது கதையான 'மித்தி'யை அவ்வளவு எளிதாய் எவரும் கடந்துபோய்விடவும் முடியாது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து இளம்வயதில் மரணித்துப்போன தன் மகன் மித்ரவுடன் எஸ்.பொ நிகழ்த்தும் அந்தரங்கமான உரையாடலே அந்தக் கதை.  'ஆண்மை'யிலிருந்து எஸ்.பொவை வாசிக்கத் தொடங்கிய நான் பின்னர்  'தீ'யும், 'சடங்கும்' வாசிக்கத் தொடங்கியபோது எஸ்.பொ  இன்னும் என்னை வசீகரித்திருக்கின்றார். ஈழத்தமிழருக்குள்ளிருந்தும் இவ்வகையான புதுவகை மொழியாடலோடும், பாலியலை வெளிப்படையாக முன்வைக்கும் தன்மையும் வியப்பைத் தந்திருக்கின்றது.

ஈழப்படைப்பாளிகளில்,  இளமையிலிருந்து காலமாகும்வரை தொடர்ச்சியாக இயங்கிய படைப்பாளிகள் எத்தனைபேரென்று பார்த்தால் கையை விரித்தே எண்ணி முடித்துவிடலாம். அதிலும் ஈழத்தில் இருந்து எழுதிவிட்டு,  புலம்பெயர்ந்தபின்னும் படைப்பின் மொழியை இழக்காமல் இருந்தவர்கள் என்று பார்த்தால் இன்னும் அரிதானவர்களே எஞ்சுவர்.  எஸ்.பொ அந்த அரிதான வகையைச் சேர்ந்தவர். ஆகவேதான் ஈழத்திலிருந்தபோது 'தீ'யும் 'சடங்கும்' 'வீ'யும், '?'யும் எழுதிய அவரால, புலம்பெயர்ந்து வந்தபின்னும் 'ஆண்மை'யும், 'நனவிடைதோய்தலும்', வ'ரலாற்றில் வாழ்தலை'யும் எழுத முடிந்திருக்கின்றது.

ழத்தில் இருந்தபோது எப்படி முற்போக்கு இலக்கியவாதிகளோடு முரண்பட்டு தனக்குச் சரியென நினைப்பதிலும் எந்தச் சபையென்றாலும் உரத்துச் சொன்னாரோ, அதேபோன்று புலம்பெயர்ந்தபின் சர்ச்சைக்குரிய 'புத்தாயிரத்தில் (2000ல்) புலம்பெயர்ந்தோரே தமிழ் இலக்கியத்திற்குத் தலைமை தாங்குவார்' எனவும் கிடைத்த எல்லாத்தளங்களிலும் சொல்லவும் செய்தார். ஆனால் எவ்வாறு எஸ்.பொ ஒருகாலத்தில் முன்வைத்த 'நற்போக்கு இலக்கியம்' பின்னாளில் தன்னியல்பில் காலவதியாகிப் போனதோ, அவ்வாறே 'புலம்பெயர்ந்தோர் தலைமை தாங்குவார்' என்பதும் தன்னியல்பில் உதிர்ந்துபோனது. ஆனால் அதேசமயம்  ஈழ/புலம்பெயர் படைப்புக்கள் பற்றி தமிழகத்தில் ஒற்றைப்படையாக வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் தனியாளாக நின்று சலிப்பின்றிப் பதில் கொடுத்துமிருக்கின்றார்.

எஸ்பொ நாவல், சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என ஒவ்வொரு தளத்திலும் தன் சுவடுகளை ஆழமாகப் பதித்தவர். இவ்வளவிற்கப்பாலும் ஒரு பெரும் வாசிப்பாளராக இருந்தார். அதுமட்டுமின்றி 'மித்ர' பதிப்பகத்தை தன் மகன்களோடு சேர்ந்து தொடங்கி நூற்றுக்கணக்கான ஈழ/புலம்பெயர் படைப்பாளிகளின் நூற்களை வெளியிட்டுமிருக்கின்றார்.   எஸ்.பொ, இந்திரா பார்த்தசாரதியுடன் இணைந்து 94ல் வெளியிட்ட புலம்பெயர் படைப்புக்களின் தொகுப்பான 'பனியும் பனையும்' முக்கியமானதொரு நூல். புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய ஒரு குறுக்குவெட்டான பார்வையை இதை வாசிக்கும் எவரும் கண்டுணர முடியும்.

ன்னைத்தானே விமர்சிக்காத , உரசிப்பார்க்காத எந்தப் படைப்பாளியும் அவ்வளவு எளிதில் முன்னே நகர்ந்து போய்விடமுடியாதென்பதற்கிணங்க, எஸ்.பொ 'சடங்கு' நாவலில் தன்னையோ ஒரு பாத்திரமாய் -பட்டதாரி ஆசிரியராயிருந்தாலும்- குடிகாரனாயும், சாறம் அணிந்து கொண்டு ரெயினில் வருகின்ற ஒருவராகவும் சித்தரிக்கின்றார். அவரின் நாடகமான 'முறுவலில்' விசுவாமித்திரையும் மேனகையையும் பாத்திரமாய்க் கொண்டு அவர்களின் உறவை வர்ணித்துவிட்டு, மூன்றாம் குரலாய் 'சீச்சி...என்ன எல்லாம் ஓரே ஆபாசமாய்க் கிடக்குது. எஸ்.பொ. எழுதினால் இப்படித்தான்' என்றும் தன்னையே எள்ளல் செய்துகொண்டும் போகின்றார்.

எஸ்.பொ எழுத்தாளுமையை வியக்கின்ற அதேசமயம், அவரால் ஏன் இறுதிவரை கைலாசபதி, சிவத்தம்பி மீதான கோபங்களை கைவிடமுடியாதிருந்தது என்பதும் சற்று வியப்பானது. இத்தனைக்கும் எஸ்.பொ தன்னை எவரும் உதாசீனம் செய்துவிடாத ஒரு நிலையை இலக்கிய உலகில் அடைந்தபிறகும், தன்னைப்போன்றே விமர்சனத்துறையில் கைலாசபதியிற்கும், சிவத்தம்பியிற்கும் முக்கிய இடம் இருக்கிறதென்பதை அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மேலும் எஸ்.பொ முன்வைத்த 'நற்போக்குவாதம்' என்பது முற்போக்குவாதத்திற்கான ஒரு எதிர்வினையாக இருந்ததேயன்றி அவர் அதை ஒரு துறையாக வளர்க்கவுமில்லை.

இந்த இடத்தில் மிகக்குறைந்த வயதில் மறைந்தபோன மு.தளையசிங்கம் முற்போக்குவாதம், நற்போக்குவாதம் என்ற இரண்டு போக்குகளையும் நிராகரித்து அவர்  மூன்றாம்போக்காய் தனது வாதத்தை 'முற்போக்கு இலக்கியம்', 'மூன்றாம் பக்கம்' என்ற நெடுங்கட்டுரைகளில் வைத்திருக்கின்றார்.  தனது நிலையை உறுதிப்படுத்த மு.த 'மெய்முதல்வாதத்தை' எழுதியிருக்கின்றார். அதை இன்னும் நீட்சித்து விரிவாக 'மெய்யுளாக'வும் எழுதிப் பார்த்திருக்கின்றார். அந்தவகையில் மு.தவோ ஒப்பிடும்போது எஸ்போ முன்வைத்த நற்போக்குவாதம் ஒரு எதிர்வினை என்பதற்கப்பால் எதையும் தனித்துவமாகக் கொண்டதில்லை. இன்னும் எளிதாகச் சொல்லப்போனால்  'முற்போக்குவாதம் - (சிவத்தம்பி+கைலாசபதி) = நற்போக்குவாதம்' எனத்தான் அவர் சொல்லியுமிருக்கின்றார்.  அதுமட்டுமின்றி முற்போக்குவாதம் நீர்த்துப்போனபோது, தான் முன்வைத்த நற்போக்குவாதத்திற்கு, அதற்குப் பிறகு ஆயுள் நீட்சிக்கவேண்டிய தேவையும் இருக்கவில்லை என்பதையும் எஸ்.பொவே ஒத்துக்கொண்டிருக்கின்றார்.

எஸ்.பொ அடிப்படையில் ஒரு விமர்சகரல்ல. அவர் நீண்டதூரம் பயணிக்க விரும்பியது புனைவின் வழியேதான் என்பதை அவரின் எழுத்துக்களினூடாக நாம் எளிதாக் அடையாளங்கண்டு கொள்ளமுடியும் . தவிர்க்கமுடியாத வகையில் அவர் அன்றையகாலத்தில் விமர்சகக் கோலம் பூணவேண்டியிருந்தது. ஆனால் எஸ்.பொ தனக்கு அவ்வளவு உவப்பில்லாத விமர்சனத்திற்குள் சிக்கிக்கொள்ளாது  பின்னாளில் வெளியே வந்திருக்கின்றார். அதனால்தான் அவரால் பின்னாட்களில் ஆண்மையையோ நனவிடைதோய்தலையோ எழுதமுடிந்தது. 

யாழ்ப்பாணச் சமூகத்தையே அவரது படைப்புக்கள் நிறைய பிரசவித்திருக்கின்றதென்றாலும், யாழ்ப்பாணத்தைத் தாண்டி வேறிடங்களில் வாழ்ந்த அனுபவம், தன்னையொரு மூன்றாம் மனிதராக இருந்து யாழ் சூழலைப் பார்க்க வைத்திருக்கின்றதென எஸ்.பொ கூறியிருக்கின்றார். ஈழத்துச் சூழலில் இன்னொரு முக்கிய படைப்பாளியான டானியலின் படைப்புக்களையோ அல்லது டானியலை சிறுபான்மைத்தமிழர்களின்(தலித்துக்களின்) முன்னோடியாகக் கொள்ளவோ எஸ்.பொவினால் அவ்வளவு எளிதாக முடிந்ததில்லை என்பதும் வியப்பைத் தரும் ஒரு விடயந்தான்.

எஸ்.பொ தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட அறுபதாண்டுகள் எழுத்துலகிலேயே வாழ்ந்தவர். நிறைய எழுதியவர், வாசித்தவர். பல்வேறு தளங்களில் ஆழமாய் இயங்கியவர். எனவே அவரைப் பற்றி எழுதவும் ஆராயவும் நிறைய விடயங்கள் நமக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். கைலாசபதி, சிவத்தம்பி, தளையசிங்கம், எஸ்.பொ போன்ற ஆளுமைமிக்க மூத்த தலைமுறையின் இறுதி மரத்தையும் இப்போது இழந்துவிட்டோம் ஆனால் அவர்கள் தொடர்ந்துவரும் தலைமுறைக்கு வேருமாகி விழுதுமாகி முன்னே நின்று வழிகாட்டுவார்கள். என் ஆசான்களில் ஒருவராகிய எஸ்.பொவிற்கு எனது அஞ்சலி.

('அம்ருதா' - மார்கழி, 2014)