Alejandro Zambra
"She knows that very soon Ernesto won't come back. She imagines herself disconcerted, then furious, and finally invaded by a decisive calm. It's all right, there was no commitment, as it should be: one loves in order to stop loving, and one stops loving in order to start loving others, or to end up alone, for a while or forever. That is the law. The only law."
(The Private Lives of Trees, P 75)
Alejandro Zambra சிலியின் முக்கியமான ஒரு எழுத்தாளராக - ரொபர்தோ பாலானோவிற்குப் பிறகு- குறிப்பிடப்படுகின்றார். அவரது எழுத்துக்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. 1975ல் பிறந்த Alejandro Zambra தொடக்கத்தில் கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டு இப்போது நாவல் உலகினுள் நுழைந்திருக்கின்றார். Bonsai, The Private Lives of Trees, Ways of Going Home என்பவை அவர் எழுதிய நாவல்கள். நான் அவரின் நாவல்களில் Bonsai தவிர மிகுதி இரண்டையும் வாசித்திருக்கின்றேன். Alejandroவின் நாவல்களில் பாத்திரங்கள் அதிகம் இருப்பதில்லை என்பதோடு அநேகமான பாத்திரங்கள் தமக்குள்ளேயே உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கும்.
Secondary Characters தனக்குப் பிடித்தமானது எனச் சொல்லும் Alejandroவின் புனைவுகளில் கதைகளுக்குள் கதைகளென நீண்டபடியிருக்கும். போர்ஹேஸ் மீதும் பாலானோ மீதும் மதிப்புடைய Alejandroவின் நாவல்கள் நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்ட பெரும் நாவல்களுமில்லை. ஒருவகையில் சொல்வதென்றால் அவை நாவல்லா (Novella) வகையைச் சேர்ந்தவை. ஆயிரம் பக்கங்களைத் தொடுமளவில் எழுதினாலே சிறந்த நாவல்களென தற்காலத்தில் 'பிரமை' பிடித்தலையும் தமிழ்கூறும் நல்லுலகம், புதிய கதை சொல்லல் முறையால் சுருங்கச் சொல்லி உலகின் கவனத்தைக் கோரும் Alejandro Zambra போன்றவர்களையும் கவனிக்கக் கடவுக.
SAAAC Art Exhibition
மதியிறுக்கம் எனப்படும் ஆட்டிசம் (Autism) குறித்து நம்மிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை. ஆகவேதான் அது ஒருவகையான tabooவாய் இன்னமும் நம் சமூகத்தில் இருக்கின்றது. ஆனால் இன்றைய காலத்தில் முன்னரைவிட மிக அதிகமான குழந்தைகள் ஆட்டிசத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆட்டிசத்தில் பல்வேறு நிலைகள் இருக்கின்றன. இதனால் பாதிக்கப்படும் பிள்ளைகளை 24 மணித்தியாலமும் பராமரிக்கவேண்டிய தேவை பெற்றோருக்கு இருக்கின்றது. எனவே பெற்றோர் எத்தகை மனவுளைச்சல்களுக்கும் தத்தளிப்புக்களுக்கும் போகவேண்டியிருக்கும் என்பதை மேலும் விரித்துச் சொல்லத்தேவையில்லை.
அண்மையில் பாலபாரதி தமிழகத்தில் 'சந்துருவுக்கு என்னாச்சு' என்ற தலைப்பில் வெளியிட்ட நூலும் ஆட்டிசம் பற்றியே உரையாடுகின்றதென நினைக்கின்றேன் (நானின்னும் அதை வாசிக்கவில்லை).
*South Asian Autism Awareness Centre (SAAAC)
Boyhood
ஒரு நல்ல படைப்புக்காய் எத்தனை வருடங்கள் என்றாலும் காத்திருக்கலாம் என்பதற்கிணங்க ஒரு சிறுவனின் பன்னிரண்டுகால வாழ்வை பின் தொடர்கின்ற படம். அதற்காகவே ஒரு 6 வயதுச் சிறுவனை முக்கியபாத்திரமாக்கி, யதார்த்தத்தில் 12 வருடங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் அவரைத் தொடர்ந்து சென்று திரைப்படமாக்கியிருக்கின்றனர். எல்லாத்துயரங்களின் பின்னாலும், எல்லா குழப்படிகளின் பின்னாலும் திளைத்துப் பெருகும் வாழ்வை நாம் இந்தப் படத்தில் தரிசிக்கமுடியும்.
எல்லாம் நமக்காய்ச் செய்யும் அம்மாக்களை விலத்தி நடக்கின்ற பருவம் வருகையில் நம்மைவிட அம்மாக்களே நிறையக் கவலைப்படுகின்றார்கள். வளாகத்திற்கு புறப்படும் மேசனிடம் 'இனியென்ன, எல்லாம் முடிந்துவிட்டது, இனி என் மரணவீட்டுக்குத்தானே வரப்போகின்றாய்?' என அழத்தொடங்குகின்ற மேசனின் அம்மாவின் விழிகளைத் தாண்டி நாம் அவ்வளவு எளிதாய் வெளியேறவிடவும் முடியாது.
மேசனிற்குப் பிடித்த காதலி முரண்களின் நிமித்தம் விலகிப்போய்விட, வளாக வாழ்வு தொடங்கும் நாளில் நண்பியொருத்தியுடன் மலையேற்றம் செய்யயும்போது, seize the moment என்பதல்ல சரியானது, moment seizes us என்பதே சரி என்று இருவரும் மாற்றி யோசிப்பார்கள். ஒருவகையில் பார்த்தால் அதுதான் உண்மை அல்லவா? நமக்கான கடந்தபருவங்களை ஏதோ ஒருவகையில் நிச்சயம் ஞாபகப்படுத்தும் இத்திரைப்படம், தவறவிடப்படக்கூடாத ஒன்று.
"It's not a documentary, it's a story!"
தேர்தல் - அல்பேர்ட்டா
பழமைவாதகட்சியின் (Progressive Conservative) கோட்டையாக நெடுங்காலமிருந்த (44 வருடங்கள்) அல்பேர்டா மாகாணத்தை புதிய ஜனநாயக் கட்சி (New Democratic Party) பெரும்பான்மை இருக்கைகளுடன் (53/87) சுவீகரித்திருக்கின்றது. இந்த வெற்றியைப் பார்த்து, கொன்சர்வேடிவ் ஆதரவாளர்கள் எல்லாம் தமது நம்பிக்கைகளிலிருந்து மாறிவிட்டார்கள் என்றெல்லாம் எடுத்துக்கொள்ளமுடியாதெனினும், மாற்றத்தை விரும்பியிருக்கின்றார்கள் என்பது மட்டும் தெரிகின்றது. பழமைவாதக் கட்சியைவிட இன்னும் அடிப்படைவாதக் கட்சியான WildRose, தாராளவாத கட்சியான Liberal போன்ற கட்சிகளைத் தேர்ந்தெடுக்காமல் ஏன் என்டிபியைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது வியப்புத் தருகின்ற விடயம்.
இவ்வாறான ஒரு பெரும் அலை ஜாக் லேய்ட்டன் தலைவராக மத்தியில் இருந்தபோது கியூபெக் மாகாணத்தில் நிகழ்ந்திருக்கின்றது. அதற்கு ஜாக்கின் தலைமைப்பண்பு மீதிருந்த வசீகரமும் ஒரு முக்கிய காரணம். கியூபெக்கில் கூட தனிநாட்டுக் கோரிக்கையுடன் தொடங்கிய Parti Québécois இருந்தபோதும் பெருந்தொகையாக என்டிபியினரை கியூபெக் மக்கள் அன்று மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தனர்.
இவ்வாறு பழமைவாதக் கட்சி பலமாக இருக்கும் அல்பேர்டாவிலும், தனிநாட்டுக்குக் கோரிக்கை/விரிவான சுயாட்சி என்பது எப்போதும் தேர்தல்களத்தில் முக்கியபுள்ளியாக வைக்கும் அதை பெரும்பான்மையினர் ஆதரிக்கும் கியுபெக்கிலும் என்டிபியினரைத் தேர்ந்தெடுக்கும்போது, ஏன் இன்னும் குடிவரவாளர்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒன்ராறியோவில் என்டிபியினரை நீண்டகாலமாய் மாகாண/மத்தியரீதியில் தேர்ந்தெடுக்காது இருக்கின்றனர் என்பது சுவாரசியமான ஒரு கேள்வி.
அல்பேர்ட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 53 என்டிபியினரில் 27பேர் பெண் வேட்பாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கனடா அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கிய புள்ளி.
-----------------