புத்தரும் நானும்

புத்தரும் நானும்
அனுபவப்புனைவு

சிறுகதைத்தொகுப்பு

சிறுகதைத்தொகுப்பு
திறனாய்வு

கள்ளி

கள்ளி
கதை

கவிதை

கவிதை
ஆங்கிலம்

வினோதினியின் 'முகமூடி செய்பவள்'

Tuesday, July 28, 2015


ப்போது தத்தளிக்கும், எப்போது நிதானமாகும் என்று அறியா மனது எனக்கு உரித்து. என்றும் போல விளிம்பில் சிதறத்துடிக்கும் கணங்களை வாசிப்புடன் தாண்டிச் செல்லவே இம்முறையும் முயற்சித்திருந்தேன்.

அண்மைக்காலமாய் கவிதைகளை நிதானமாய் இரசித்து முழுமையாய் வாசிக்கும் மனதையும் தொலைத்தே விட்டதாகவே உணர்ந்திருந்தேன். தமிழில்தான் இப்படித் தோன்றுகின்றதோ என யோசித்து, ஆங்கிலத்தில் வந்த தொகுப்புக்களையோ அல்லது சஞ்சிகைகளான American poetry review போன்றவற்றையோ வாசித்தாலும் அவற்றை வார்த்தைகளாய் மட்டும் இயந்திரத்தனமாய் வாசித்துக்கொண்டுபோகின்றேன் போன்ற நினைப்பே வந்தது. தற்செயலாய் இன்று சென்னைப்புத்தகக்கண்காட்சியில் வாங்கியிருந்த வினோதினியின் 'முகமூடி செய்பவள்' ஐ எடுத்து வாசிக்கத் தொடங்கியபோது சட்டென்று உற்சாகமான மனோநிலைக்கு வந்ததைப் பார்க்க அதிசயமாயிருந்தது. எப்போதும் ஒரு தொகுப்பை வாசிக்கும்போது அதில் ஐந்தோ/பத்தோ கவிதைகள் என் மனதிற்கு நெருக்கமானதாய் மாறிவிட்டால் அதை ஒரு முக்கிய தொகுப்பாய் நினைத்துக்கொள்கின்றவன், நான். இதில் இப்படி நிறையக் கவிதைகள் இருந்ததால் சோர்ந்த மனது குதூகல நிலையை அடைந்ததோ தெரியவில்லை.

இப்போது சில கவிதைகள்:

அடையாளம்

பிறந்த நாள் முதல்
இன்று வரை
எனக்கான அடையாளங்கள் பல.
அறிமுகங்கள் நிகழ்தலும்
அவற்றின் மூலமே

மகள் மருமகள் பெறாமகள் பேத்தி என
நீண்ட பட்டியல் இன்னும் நீள்கிறது
இற்றை வரை

பள்ளிக்கூடத்தில் ஒன்றல்ல இரண்டல்ல பல
அலுவலகத்தில் கறுப்பழகி
தலை நகரில்
பலர் இந்தியாக்காரி
சிலர் பறைத் தமிழச்சி என்றும் வியக்க
ஊரிலோ வேறு வழக்கு
திமிர் பிடித்தவள்
பெண்ணா இவள் என்றனர்

பெண்ணே என்றேன் உரத்து

(2001)


தமிழன்

மழை தொடாத வானம்
வெயில் சுகித்த நேரம்
நெடுந்தூரம் நடந்த களை
அலுவலக நண்பன் ஜோனும் நானுமாக
அவக்காடோ பழச்சாறு ருசிக்கையில்
அருகே வந்தான் அவன்

தமிழனுடையது கிடைக்கவில்லையோ
என்ற முணுமுணுப்புடன் காதுக்குள்

ஒரு கணம் உலகப் பெண்களின் கோபமெல்லாம்
என்னுள் ஊறியதை உணருமுன்
அவன் போய்விட்டிருந்தான்

இந்திரன் போல் உடலெங்கும் குறிகளோடு
அவனைப் படைத்து
ஒவ்வொன்றாய்ச் சீவி எறிதல் வேண்டும் நான்

(2003)

மேலே 'அடையாளம்' என்றெழுதப்பட்ட் கவிதை ஆழியாளின் 'பிறந்தவீட்டில் நானொரு கறுப்பி' எனத் தொடங்கும் கவிதையை ஞாபகமூட்டியது. இது ஒன்றின் பாதிப்பில் மற்றதில் இருக்கிறதென அதிகம் ஆராயாமல் எந்த ஒரு பெண்ணும் தனக்குரிய 'அடையாளம்' எதுவெனத் தேடும்/திணறும் வெவ்வேறு தனித்துவமான கவிதைகளாய் இவையிரண்டையும் நாம் பார்க்கமுடியும்.

ஒரு பெண்ணை எந்த ஒரு ஆணும் அடக்கிவிடமுடியும். ஆனால் அவளுக்கு மறைமுகமாய்ப் பழிவாங்கவும் தெரியும் என்பதை நுட்பமாய்ச் சொல்லும் ஒரு நீள்கவிதையில் முதற்பகுதி இவ்வாறாக...

அவன் அவளுக்கு ஒரு பொருட்டல்ல

காதலித்த நாட்களில்
பகிர்ந்த முத்தங்களும்
பேசிய பல கதைகளும்
இருவருமாக நட்சத்திரங்களை வியந்ததும்
கடலைப் பாடியதும்
அவன் நினைவினிலில்லை.

அவன் அவளுக்கு ஒரு பொருட்டல்ல.
இருளில் அவள் மீது படரும் அவன் மூச்சும்
அவள் விருப்பின்றித் தொடைகளைப் பிரிக்கும் விரல்களும்
அவளுக்கு ஒரு பொருட்டல்ல

நடு இரவில் தீச்சுடர்களென ஒளிரும்
இமைக்காத அவள் கண்களும்
தொடுகையில் நெகிழாத அவள் உடலும்
அவனை மறுதலிக்க
பெருமூச்சுடன் மறுபக்கம்
திரும்பித் துயில்கிறான் அவன்

புன்னகைத்தபடி யன்னலூடாகத் தெரியும்
நட்சத்திரங்களை எண்ணத் தொடங்குகின்றாள் அவள்.

.............

இத்தொகுப்பிலேயே எனக்கு மிக நெருக்கமாய் ஆன கவிதை ஒன்றிருக்கிறது, அது...

ஒரு நாள் ஒரு மனிதன் ஒரு கவிதை

கடந்த நாட்கள் போலவே
இதுவும் இன்னொரு நாள்
மழையோ பனியோ அன்றி உணர்வோ
அதை மாற்றவோ பிற்போடவோ முடியாது.

அவன் எப்போதும் போலவே விழிக்கிறான்
யன்னலில் படிந்திருக்கும் பனியை முதன் முதலாகப்
பார்ப்பது போலப் பார்க்கின்றான்

அறையைச் சுற்றிவர அளவெடுக்கின்றன அவன் கண்கள்
ஒரு மெழுகுவரத்தியோடு கேக் இருக்குமா என்ற ஆவலில்
அன்றி ஒற்றை மலராவது,
இல்லை, இல்லவே இல்லை. அதற்கு வாய்ப்பில்லை.

அவன் உடைகளையும் இரவு படித்த புத்தகத்தையும்
பியர்க் குவளையும் தவிர வேறென்ன?

தன் தனிமையை உணர்ந்துகொள்கிறான்
ஒற்றை வாழ்த்துக்கூட இல்லை.
அவனது அறைக்குள் வர அவை எதற்கும் அனுமதியில்லை.
ஒரு சிறு பரிவுக்கேனும் விதியின்றி
வெறுமை சூழந்ததாகவே அந்நாளும்.
இருந்தும் அது அவனது வாழ்க்கை
கண்களைத் துளைத்தபடி துளிர்த்து விழுகின்றன துளிகள்
அவனால் அந்த நாளையும் வரவேற்க முடியவில்லை
பதிலாக அவன் தனக்கான
வாழ்த்துப்பாவைப் புனையத் தொடங்குகின்றான்.


உண்மையில் இந்தக் கவிதை முடிகின்ற இடந்தான் இன்னும் பிடித்திருந்தது. இவ்வளவு தனிமையுடனும் துயரத்துடனும் இருக்கும் ஒருவன் பெரும்பாலும் தனக்கான சாவுப்பாடலைத்தான் பாடக்கூடியவனாக இருப்பான் என நாம் நினைக்கும்போது, வினோதினி அந்த 'ஒருவனுக்கு' வாழ்வதற்கான நம்பிக்கையைக் கொடுக்கின்றார். வாழ்தல் என்பது நம்மை நாமே நேசிப்பதிலிருந்தும் தொடங்கலாமென்கின்ற ஒரு சிறுவிதையை வாசிக்கும் நம்மிடையே ஊன்றவும் செய்கின்றார்.

பெண் என்கின்ற தனக்கான அடையாளத்தைத் தேடும், வேற்றின ஆணோடு பழகுவதைப் பிடிக்கவில்லையெனச் சொல்கின்றவனுக்கு சாபமிடுகின்ற, தன்னை உதாசீனம் செய்கின்ற ஆணை நுட்பமாய் பழிவாங்குகின்ற பெண் மனதுதான், தனித்து துயரத்தோடு இருக்கும் ஒரு ஆணைப் பரிவுடனும் அணுகச் செய்கின்றது. அந்த ஒரு மனிதனின் ஒரு நாளுக்கான கவிதையை நீயே புனையென அவனுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது.


( Mar 23, 2015)

0 comments: