-எஸ்.கே.விக்னேஸ்வரன்
2007 இல், சரிநிகர் பத்திரிகையை மீண்டும் சஞ்சிகை வடிவில் கொண்டுவரத் தொடங்கியபோது, தமது வலைத்தளங்களில் எழுதிவரும் கவனத்துக்குரிய ஒருசில படைப்பாளிகளின் படைப்புக்களை சந்தர்ப்பம் கருதி சரிநிகரில் மறுபிரசுரம் செய்வதம் மூலம் சரிநிகர் வாசகப் பரப்புக்கும் அவர்களை அறிமுகம் செய்யலாம் என்ற எண்ணத்துடன் ஒருசில படைப்புக்களை வெளியிடத்தொடங்கியிருந்தோம். இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புக்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு அப்போதுதான் வெளிவந்திருந்தது, கவிதை மட்டுமன்றி, கதைகளும், டிசே தமிழன் என்ற பெயரில் கட்டுரைகளும் தனது வலைத்தளத்தில் எழுதிவருவதன் மூலம் அவர் ஒரு கவனத்துக்குரிய இளந்தலைமுறைப் படைப்பாளியாக அப்போது இனங்காணப்பட்டிருந்தார். அசோக கந்தகமவின் ‘இவ்வழியால் வாருங்கள்’ என்ற திரைப்படம் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரை ஒன்று சரிநிகரில் வெளியிடுவதற்காக நண்பர் சிவகுமாரால் தெரிவுசெய்யப்பட்டிருந்தது.
இந்தக் கட்டுரை ஏற்கனவே அவரது வலைதளத்தில் வெளியாகிவிட்டிருந்ததா அல்லது சரிநிகருக்காக அவரால் அனுப்பப்பட்டதா என்பது தற்போது ஞாபகத்தில் இல்லை. ஆனால் அந்தக் கட்டுரை வெளிவந்த போது தான் அவர் எனக்குத் தெரிந்த நட்பு வட்டத்தை சேர்ந்த ஒருவர்தான் என்பதை அறிந்து கொண்டேன். (அந்தக் கட்டுரை இந்தத் தொகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது). ஆயினும், அவரைச் சந்திக்கவோ, பேசிக்கொள்ளவோ அப்போது சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அந்தச் சந்தர்ப்பம் 7 வருடங்கள் கழித்து, கனடாவில் தான் கிடைத்தது.
000
இளங்கோ தனக்கென தனித்துவமான புனைவு மொழியில் கவிதைகளையும், கதைகளையும் எழுதிவருபவர். ஏற்கனவே அவரது கவித்தொகுப்பு ஒன்றும், சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் வெளிவந்துள்ளன. அளவில் சிறியவை என்றாலும் அதற்கு நேரெதிரான விதத்தில் பரவான கவனிப்பை பெற்றவை அவை. தனது படைப்புக்களாலும் பத்தி எழுத்துக்களாலும் பரவலான கவனத்தையீர்த்துள்ள படைப்பாளியான அவரது இந்த நூல், முழுக்க முழுக்க புனைவுசாராத, அரசியல்,இலக்கியம், இசை, சினிமா மற்றும் பயணங்கள் சார்ந்த அவரது எழுத்துக்களில் அவரே தேர்ந்தெடுத்த சிலவற்றின் தொகுப்பாகும். 2002 முதல் 2013 வரையான கிட்டத்தட்ட பத்தாண்டு காலப்பகுதியில் அவர் எழுதியிருக்கக் கூடிய கட்டுரைகள் அல்லது பத்தி எழுத்துக்களில் 31 ஆக்கங்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அனுபவம், அலசல், வாசிப்பு, இசை, திரை, புலம்பெயர்வு என்ற தலைப்புக்களின் கீழ் அவர் எழுதியுள்ள இவ்வாக்கங்களில், அவை பேசும்பொருள் சார்ந்த அவரது கருத்துக்கள், சந்தேகங்கள் மற்றும் எண்ணப் போக்குகளை ஒரு வாசகர் தெரிந்துகொள்ளப் போதுமான அளவுக்கு பேசப்பட்டுள்ளன. அந்த வகையில் இது ஒரு எழுத்தாளரின் பன்முகப் பரிமாணத்தையும் பத்தாண்டு காலத்துள் அவரில் ஏற்பட்டுள்ள பரிணாமத்தையும் அடையாளம் காட்டும் தொகுப்பாக இது அமைந்துள்ளது கவனத்துக்குரியது.
000
அவர் மேற்குறிப்பிட்டுள்ள ' அனுபவம், அலசல், வாசிப்பு, இசை, திரை, புலம்பெயர்வு' என்ற தலைப்புக்களில் தொகுக்கப்பட்ட ஆக்கங்களும் வெவ்வேறு காலப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்டுள்ளன.இந்தக் கட்டுரைகளை வசிக்கும் ஒருவர், ஈழத்தில் எண்பதுகளின் ஆரம்பத்துக்குச் சற்று முன் பின்னாக பிறந்த சந்ததியினரின் சிந்தனைப் போக்கின் விசேட தன்மைக்குரிய அடையாளங்களைக் காணமுடியும், எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு புதிய பரம்பரை உருவாகிறது என்பதில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன, ஒரு பிரதேசத்தில் ஏற்படும் அரசியல் சமூக மற்றும் உற்பத்தி மாற்றங்களுக்கமைய இது வேறுபடலாம். ஈழத்தில் எமது நிலமைகளைப் பொறுத்தவரை கடந்த 1980 முதல் 2010 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற பாரிய மாற்றங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை ஒரு தனித்துவமான பரம்பரை உருவாகியிருப்பதாக பொதுமைப்படுத்தி எடுத்துக் கொள்ள முடியும் என்று கருதுகிறேன். 1980இன் ஆரம்பங்களில் பிறந்த குழந்தைகளும், 1990 ஆரம்பங்களில் பிறந்த குழந்தைகளும், 2000 ஆரம்பத்தில் பிறந்த குழந்தைகளும் மூன்று வேறுவேறான வாழ்க்கை அனுபவங்களினூடாக உருவாகி வளர்ந்திருக்கிறார்கள்.
இவர்களை, மூன்று பரம்பரையை சேர்ந்த குழந்தைகள் என்று எடுத்துக்கொண்டால், இவர்கள் தமது குழந்தைப்பராயங்களில் மூன்றுவிதமான சமூக நெருக்கடிகளையும், வாழ்வியல் மாற்றங்களையும், எதிர்கொண்டவர்களாக வளர்ந்துள்ளனர். முதற் தொகுதியினர், இனக்கலவரம், போராளிகளின் உருவாக்கம், யுத்தம், விமானக் குண்டுவீச்சு, தரைப்படை நகர்வு என்று விரிவுபெற்றதும், வகை தொகையற்ற கைதுகள், துப்பக்கிச் சூடுகள், இடப்பெயர்வு, பதுங்குகுழி வாழ்க்கை, இலங்கை இராணுவம், இந்தியப்படை இரண்டினதும் நெருக்கடிகள், போராளிகளின் வளர்ச்சி, அவர்களிடையேயான தாக்குதல்கள் என்பவற்றை, தமக்கு முன்னைய பரம்பரையினருடன் சேர்ந்து நேருக்கு நேராக முதன்முறையாகக் கண்டவர்கள். இந்த யுத்தகாலம், முழு சமூகத்திடமிருந்து, இப் புதிய பரம்பரை தன் வாழ்க்கை தொடர்பான விழுமியங்கள், பண்பாட்டு நடவடிக்கைகள், மற்றும் கல்வியும் அனுபவமும் சார்ந்த, காலதிகாலமாக வளர்ந்துவந்த தொகுக்கப்பட்ட அறிவாற்றல் என்பவற்றைப் பெற்றுக்கொள்ளும் அவகாசம் அற்றதாக, உயிர் பிழைப்பதற்கான நாளாந்த நெருக்கடிக்குள்ளிருந்து தப்புவதற்கான ஓட்டத்தோடு வளர்ந்த பரம்பரை. இந்தப் பரம்பரை தமது வளரிளம் பருவத்தை அண்மிக்கையில், அதற்கு அதன் பட்டறிவு மற்றும் தாம் தேடிப் பெற்ற அறிவு மட்டுமே வழிகாட்டும் அறிவாக அமைகிறது. சமூகத்தில் நிலவிய பல்வேறு கருத்து மற்றும் சிந்தனைப் போக்குகள் பற்றிய அறிமுகமோ,அலசலோ செய்வதற்கு அவகாசமற்ற வேகத்துடன் ஓடவேண்டிய நெருக்கடியை அவர்கள் எதிர்கொண்டனர்.
இதற்கடுத்த 90களில் பிறந்தவர்கள் இலங்கை அரசின் முழு அளவிலான யுத்த நெருக்கடி மற்றும் சமாதான முயற்சிகள், நம்பிக்கையும் ஏமாற்றமும் மலிந்த காலகட்டத்தை தமது சிறு பராயத்தில் கடந்தவர்கள், விடுதலைப் போராட்டம் முழுக்க முழுக்க ஒரே தலைமையின்கீழ் ஒரே அரசியற் கோட்பாட்டின் மூலம் தான் சாத்தியம், மற்றெல்லாம் எதிரிக் கருத்துக்கள் என்ற அடிப்படையில், வளர்ந்து வந்த பரம்பரை. மாற்றுக் கருத்துக்களை உள்வாங்குவதோ, அவைபற்றி சிந்திப்பதோ கூட, விடுதலைக்கு எதிரானதோ என்று நினைத்துச் செயற்படவேண்டிய சூழலில் அவர்கள் வளர்ந்தனர். அரசின் தொடர்ச்சியான யுத்தத்தை எதிர்த்து போராடுதல் என்பது, ஜனநாயக விரோத, மனிதாபிமானமற்ற செய்கைகளைக் கூட நியாயப்படுத்துமளவுக்கு முக்கியமான ஒன்று என்ற நம்பிக்கையுடன் இந்த சந்ததி வளர்ந்தது.
2000 த்தின் பின்னான பரம்பரை முழுச் சமூகமுமே யுத்தம் புரியும் சமூகமாக மாறிவிட்டஒரு நிலையினை எதிர் கொண்டு வளர்ந்த பரம்பரை. யுத்தத்தை நடாத்துவதற்காக முழுச் சமூகமுமே களத்தில் இறங்க வேண்டிய, கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையை எதிர்கொண்டு வளர்ந்த பரம்பரை இது. இந்தப்பரம்பரைக்கு, யுத்தத்திற்கான காரணம், அதற்கான வரலாற்றுப் பின்னணி என்பவைகள் எவையுமே தெரிந்திருக்க வேண்டியிருக்கவில்லை. வாழ்வா சாவா என்ற நிலையில், கண்முன்னே உலவித்திரியும் ஆயுதமேந்திய எதிரியிடமிருந்து மண்ணை மீட்பதற்காக யுத்தமிடுதல் ஒன்றே அவர்களது குறிக்கோளாக இருந்தது.
இந்த மூன்று பரம்பரைகளும், தமது சமூகத்தின் அரசியல்,கலை பண்பாடு மற்றும் வாழ்வியல் விழுமியங்கள் பற்றிய திரட்டப்பட்ட அனுபவத்தையோ, அவைபற்றிய அறிவையோ, தமக்கு முந்தைய பரம்பரையிடமிருந்து அதன் இயல்பான கைமாற்றலூடாகப் பெற்றுக் கொள்ளவில்லை. ஆக இந்த பரம்பரையினர் மத்தியில் இருந்து எழுந்துவந்த படைப்பாளிகள், அவர்களின் படைப்புக்களில் இவர்களுக்கு முன்னான படைப்பாளிகளின் அறிவு அனுபவச் செழுமை ,பேசும் மொழி என்பவற்றினைப் பெற்று இயல்பான வளர்ச்சியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அற்றவர்களாகவே வளர்ந்தனர். மாறாக, அச்சம், நிச்சயமின்மை, தொடர்ச்சியான இடப்பெயர்வு, கல்விக்கூடங்களின் சிதைவும் கல்வியின் வீழ்ச்சியும் என்று அவர்கள் அவர்கள் எதிர்கொண்ட சவால்களின் செல்வாக்கினூடாகவே அவர்களது உலகப்பார்வையும், சிந்தனையும் வளர்ச்சி பெறுகின்றன.
குறிப்பாக முதலாவது அணியை சேர்ந்த பரம்பரையினருக்கு, அவர்கள் தமது பதின்ம வயதுக்கு வருகையில், அதாவது தொண்ணூறுகளில், இரண்டே தெரிவுகள் தான் இருந்தன. போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் இணைவது, அல்லது போராட்டக் களத்திலிருந்து வெளியேறிவிடுவது. இந்த இரண்டையும் தவிர்ந்த இன்னொரு பாதை இருக்கவில்லை. போராட்டக் களமோ, அனைத்து மக்களது நலன்களின் குரலை ஒலிக்கும் களமாக, மாற்றுச் சிந்தனைகளுக்கும் இடமளித்து ஜனநாயக வழிப்பட்ட நடைமுறையைக் கொண்டு மக்களை அணிதிரட்டும் சக்தியாக அமைந்திருக்கவும் இல்லை. போராட்டம் எவ்வளவுக்கு எவ்வளவு தவிர்க்கமுடியாத அவசியமான ஒரு வரலாற்றுத் தேவையாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது முழுமக்களதும் பங்களிப்பையும் உள்வாங்கி ஜனநாயக பூர்வமாக அணிதிரட்டிச் செல்லும் சக்திவாய்ந்த்தாக இருப்பதும், அதன் வெற்றிக்கு மிகவும் அவசியமாகும். ஆயினும், அங்கு நிலவிய யதார்த்தம் இந்தத் தன்மைகளைக் கொண்டதாக இருக்கவில்லை.
போராட்டத்தில் நிலவிய இந்தப் பலவீனம், சந்தேகங்களையும், நம்பிக்கை வரட்சியையும், மன நெருக்கடிகளை கொண்டதுமான ஒரு பக்கத்தையும் போராட்ட வளர்ச்சியுடன் சேர்த்தே வளர்த்து வந்ததென்பதை மறுக்க முடியாது. இது போராட்டக் களத்தில் வளமான பங்கினை ஆற்றக்கூடிய கணிசமான மக்கட் தொகுதியை களத்தை விட்டு வெளியேறும் நிலைக்குத்தள்ளியது. முதலில் இடப்பெயர்வாகவும் பின்னர் புலம்பெயர்வாகவும் இது வளர்ச்சி பெற்றது. இந்தவரலாற்று நிகழ்வு, ஈழத்தின் படைப்புச் செயற்பாட்டில் ஒரு தனித்துவமான, இதுவரைகாலமும் ஈழத்தில் நிலவிய இலக்கிய படைப்பு முயற்சிகளிலிருந்தும் வேறுபட்ட, புதிய உருவம், புதிய உள்ளடக்கம், புதிய பார்வை,புதிய சிந்தனை என்று முற்றிலும் தனித்துவமான ஒரு போக்கை அல்லது போக்குகளை உருவாக்கிவிட்டுள்ளது என்று சொல்ல்லாம். இவ்வாறு வெளியேறியவர்களில், 60பது 70பது களின் ஆரம்ப காலப்பகுதிகளில் பிறந்தவர்களும் கூட வெளியேறி இருப்பினும், இந்தக் காலகட்டத்தவர்களது படைப்புகளிலிருந்து, 80 களில் பிறந்த சந்ததியினரின் எழுத்துக்களை தெளிவாக வேறுபிரித்துக் காணமுடியும்.
000
இளங்கோ இந்த 80களின் பரம்பரையினைச் சேர்ந்தவர். போராட்டக் களத்தை விட்டு இடம்பெயர்ந்த இந்தப் பரம்பரையினர் தமது வாசிப்புக்களை வளர்த்துக் கொண்ட காலத்தில், அதாவது 90களில், ஏற்கனவே தவிர்க்க முடியாமல் புலம்பெயர்ந்த மாற்று கருத்துக் கொண்டோர்களின் ஆக்கங்களைத் தாங்கிய 25 க்கும் மேற்பட்ட சஞ்சிகைகள் புலம்பெயர் தேசங்களிலிருந்து வெளிவரத் தொடங்கியிருந்தன. அவற்றில் வெளிவந்த விமர்சனங்கள் மற்றும் அரசியற் கருத்துக்கள் இந்தப் பரம்பரையின் முக்கிய கவனத்துக்குரிய வாசிப்புக்கான விடயங்களாக இருந்தன. இவை தவிர, அப்போது தமிழ் நாட்டிலிருந்து வெளியிடப்பட்ட பின்னவீனத்துவ சிந்தனைகள் தொடர்பான நூல்கள் மற்றும் தலித்திய சிந்தனைகள் தொடர்பான கருத்துக்கள் என்பவை இந்தப் பரம்பரையினரின் ஆளுமையில் செல்வாக்குச் செலுத்தும் தன்மையைக் கொண்டிருந்தன எனலாம். இந்த வாசிப்புப் பின்னணிகளும், தமது இளமைக்கால அனுபவங்களும் இணைந்து உருவான ஆளுமைகளில் ஒருவராக இளங்கோவை அடையாளம் காணலாம். அவரது கனடிய கல்விச் சூழலும்,வாழ்க்கை சூழலும் இந்த ஆளுமை விருத்தியை மேலும் வளர்த்தெடுத்திருப்பதை அவரது எழுத்துக்களில் அடையாளம் காணமுடியும்.
இந்தப் பரம்பரையினருக்குக் கிடைத்தவை இதற்கு முன்பிருந்த பரம்பரையினரை விட வேறான அனுபவங்கள். எமது வரலாற்றின் புதிய அனுபவங்கள். முந்திய பரம்பரைக்கு போராட்டம் ஒரு தவிர்க்க முடியாத வரலாற்றுத் தேவையாக இருந்தது. ஆனால் இவர்களுக்கு அது இவர்களது பிள்ளைப்பருவத்தை அச்சத்திலும் இடப்பெயர்விலும் கழியவைத்தது. தம்மைச் சுற்றி நடப்பவைகளால் அவர்களின் மனது தமது குழந்தைப்பராயக் கற்றுக்கொள்ளல்களை வேறுவிதமாகவே பெற்றுக் கொண்டார்கள்..ஆனால் இவர்களுக்கு அடுத்த பரம்பரைக்கு இல்லாத இன்னொரு வாய்ப்பு இருந்தது. இவர்கள் தமது வளர்ச்சியினூடே, ஏன் போராட்டம் அவசியம் என்றதற்கான வரலாற்றியும் ஓரளவுக்காவது அறிந்துகொள்ளும் வாய்ப்பு இருந்தது. இதற்கு அடுத்த சந்த்திக்கு அதுவும் இருக்கவில்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம், கண்முன்னே நிலைகொண்டிருக்கும் எதிரியுடன் யுத்தம் செய்யாமல் வாழமுடியாது என்பது மட்டுமே!
000
இந்தப் பின்னணியில் இளங்கோவின் ’பேயாய் உழலும் சிறுமனமே’ என்ற நூற் தலைப்பைக் கண்டபோது எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள், பேய் என்ற சொல் எம்மால் 'மிக அதிகமாக' என்ற அர்த்தத்தில் பாவிக்கப்படும் ஒன்றுதான். பேய் வெயில். பேய் மழை, என்று பேசுவது கிராமவழக்கு. பேயாய் உழலும் மனம் இல்லாமல் ஒருவர் நல்ல படைப்பாளியாக இருக்க முடியாது என்பது இதற்கு ஒரு காரணம்.
இரண்டாவது இது பாரதியின் வரி என்பது. அறுபதுகளில் வெளிவந்த பாரதியார் கவிதைகள் தொகுப்பொன்றிற்கு பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் ஒரு அணிந்துரை வழங்கியிருந்தார். அந்த அணிந்துரையில், பாரதியின் ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ என்ற பாடல் இன்னுமொரு கால் நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு பாடப் பெற்றால் அதை அனுபவிக்க முடியாது என்றும், ஆனால் அவரது தோத்திரப் பாடல்கள்,வேதாந்தப் பாடல்கள்,கண்ணன் பாடல்கள், குயில் பாடல்கள், பாஞ்சாலி சபதம் என்பவை என்றும் நிலைபெற்று வாழும் என்றும் எழுதியிருந்தார். இத்தனை காலம் கடந்தும் பாரதியின் வேதாந்தப் பாடல் பேராசிரியர் சொன்னதுபோல நிலைத்து நிற்கிறது என்பதற்கு இளங்கோவின் இந்தத் தலைப்பு ஒரு சான்று என்றும். அதனால் தான் இது எனக்கு ஆச்சரியமூட்டவில்லை என்றும் நான் இங்கு சொல்ல வரவில்லை. பேராசிரியரின் அந்தக் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடும் இல்லை. எனக்கு இது ஆச்சரியமளிக்காததற்குக் காரணம், இதுதான் இளங்கோவின் இயல்பு, சிந்தனை, எழுத்து அனைத்துக்கும் அடிநாதமாக இருந்து வெளித்தெரியும், தன்னை குறித்தான அவரது உணர்வு நிலை என்பதுதான்.
இந்த நூலுக்கு பாரதியின் வரி ஒன்றைத்தான் தலைப்பாக வைக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால், அதற்கு பொருத்தமான பல வரிகளை அவரால் கண்டுபிடித்திருக்க முடியும். நூலில் உள்ள கட்டுரைகளுக்குப் பொருத்தமான வரியை. ஆனால், அவர் இந்த வரியை பாவிக்க வேண்டும் என்று விரும்பியபடியால் தான், இந்தக் கட்டுரைகளுக்கல்ல, கட்டுரை ஆசிரியனுக்கே பொருந்துகின்ற அல்லது அவர் தன்னை வெளிக்காட்ட்ட விரும்புகின்ற வரியான அதை தெரிவு செய்துள்ளார் என்று எனக்குத் தோன்றியது. அது பொருத்தமானதும் கூட என்று எனக்கும் தோன்றியதால், நான் ஆச்சரியப்படவில்லை. பாரதி தனது மனதுக்குக் கட்டளையிடுவதாக அமைந்த இந்தப் பாடலில், 'நான் சொல்வதை செய், நினது தலைவன் நானே காண்’ என்று அவர் தனது மனதுக்கு அறிவுறுத்துகிறார். இளங்கோ அந்தப் பேயாய் உழலும் தனது மனதின் எண்ணங்களை அனுபவங்களை, உணர்வுகளை இந்தத் தொகுப்பில் தொகுத்துத் தந்திருக்கிறார்.
அவரது நூல் முழுவதிலும் அவர் தான் நேரடியாகப் பேசுவதை விட தனது மனதுநினைப்பது எது என்ற விதத்தில் தான் அவரது எழுத்துக்கள் உரையாடல்கள் அமைந்திருப்பதை காணலாம். அதாவது அவரது எழுத்துக்களில், அவர் தனது கருத்துக்களுக்கு அழுத்தம் தருவதை விட தமது மன உணர்வுகளுக்கு அழுத்தம் தருவதே அதிகமாயிருக்கும். அல்லது இன்னொரு வகையில் சொல்வதானால், அவர் தனது கருத்துக்களைக்கூட தமது மன உணர்தலின் வழியாகவே வெளிப்படுத்துகிறார். கவிதைகளிலும், கதைகளிலும் அவர் கையாளும் புனைவு மொழியிலும் மட்டுமல்ல, கட்டுரைகளிலும் கூட அதையே அவர் கையாளுகிறார். இதுவே இளங்கோவின் தனித்துவமான மொழிக்கும், அவரது ஆளுமையின் வெளிப்பாட்டுக்கும் அடிப்படைகளாக அமைகின்றன,
பாருங்கள், எனக்கான தெருக்கள் என்ற பதிவில் இப்படி எழுதுகிறார்:
"புத்தனுக்கு பின்னால் ஒளிரும் வட்டத்தைப் போல, நிலவு மிகப்பிரமாண்டமாய் இந்நெடுங்கட்டடத்தின் பின்னால் விகசித்தெழுகின்றது. தெருவில் விழும் இக்கீற்றுக்களை உங்களுக்கு பிடித்தமான உருவங்களாய் நீங்கள் கற்பனை செய்து கொள்ளவும் கூடும். இயற்கையின் ஆலிங்கனத்தால் சிலிர்த்து சிவப்பும் செம்மஞ்சளுமாய் வெட்கிக்கின்ற மரங்களின் இலைகளினூடாக நீளும் நிலவின் கீற்றுக்கள் எனக்குள் சீன எழுத்துக்களாய் / கிறுக்கல்களாய் உருமாற்றம் பெறுகின்றன. சிறுவயதில் மிகவும் பாதித்த சீன ஓவியங்களும், அவற்றில் அதிகம் தோன்றும் மூங்கில்களும் பண்டாக்கரடிகளும் இப்போதும் நினைவில் தேயாமல் கைகோர்த்து வருகின்றன போலும்.”
'வாளின் நுனியில் சிதறும் வாழ்வில்' இப்படி எழுதுகிறார்:
"என்றேனும் ஒருநாள் நான் படுத்திருக்கும் அறையின் துருப்பிடித்த யன்னல் கம்பிகளுக்குள்ளால் துப்பாக்கி நீட்டியபடி ஒரு இராணுவத்தினன் நிற்பான் என்ற பயத்தில்தான் பல இரவுகளில் தூங்கியிருக்கின்றேன். அந்தப் பீதி அதிகரித்து அதிகரித்து மரங்கள் காற்றில் அசையும் நிழலைக்கூடக் கண்டு பயந்து அம்மாவின் முதுகின் பின்னால் சிறுவயதில் முடங்கிப் படுத்துமிருக்கின்றேன்."
இந்த இரண்டு கட்டுரைகளும், அவரது ஆரம்பகாலக் கட்டுரைகள். தவிரவும் அவை அவரது சொந்த அனுபவங்கள். பின்னால் வந்த கட்டுரைகளில் இந்தச் சொல்லும் முறைகளில், குறிப்பாக,அலசல், வாசிப்பு,திரை என்ற பிரிப்புக்குள் வரும் கட்டுரைகளில் இந்தப் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது ஆயினும், அவரது மனதின் உழலலோடு சம்பந்தப்பட்ட முத்திரைத் தன்மை முற்றாக இல்லாமல் போகவில்லை. இவை இரண்டிலும் கட்டுரையாளர் தான் சொல்லவரும் விடயத்தை முழுக்க முழுக்க தன்னுடைய சொந்த அனுபவத்தோடு சம்பந்தப்பட்ட மன உணர்வுகளை அடிப்படையாக வைத்து வெளிப்படுத்துவதைக் காணலாம். இராணுவத்தினின் பிரசன்னம் அச்சத்தை ஏற்படுத்துவதும்,அதிலிருந்து விடுபடுவதற்கான துணையைத் தேடுவதுமான வாழ்வு ஏற்படுத்தும் யுத்தசூழல் தொடர்பான பார்வை, எப்படி தன்னை தற்காத்துக்கொள்ளும் கையறு நிலையில் தன்னை வைத்திருக்கிறது என்ற விசனத்துடன் கலந்ததாக அந்தச் சிந்தனை வளர்கிறது. இது ஒரு வளர்ந்த படைப்பாளியாகிவிட்ட பின்னாளில், அவரது சிந்தனையில் எப்படி ஒரு தயக்கத்துடன் கூடிய மொழியில் தனது கருத்தை முன்வைக்கக் காரணமாக அமைகிறது என்பதை நாம் காணலாம். உதாரணமாக வன்னியுத்தம் என்ற நூல் பற்றிய குறிப்பில் அவர் இவ்வாறு எழுதுகிறார்:
”இந்நூலை வாசித்து முடித்த போது, இரண்டு விடயங்கள் தாண்டிப் போகமுடியாத கேள்விகளாய் முன்னே விழுந்தன. இனியெந்தக் காலத்திலும் ஆயுதம் கொண்டு தொடங்கப்படும் எந்தப் போராட்டத்திலும் மனமுவந்து ஆதரவுகொடுக்க முடியுமா என்பது. இரண்டாவது இவ்வளவு கோரமான அழிவுகளைக் கொடுத்த ஒரு அரசோடு மக்களால் இணைந்து வாழ முடியுமா என்பது. ஆனால் இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியது அந்த மக்களே. அவர்களே எல்லாவற்றையும் அனுபவித்தார்கள். இனி தம் வாழ்வை எப்படிக் கொண்டு போவது என்பதை தீர்மானிக்க வேண்டியவர்களும் அவர்களேயன்றி நாமல்ல. ஏனென்றால் இவ்வளவு அழிவுகளும் நிகழ்ந்தகாலத்தில் நாம் கையறு நிலையில் தான் இருந்தோம் என்ற குற்ற உணர்விலிருந்து அவ்வளவு எளிதாக எம்மால் தப்பிப் போய் எதைதான் பேசிவிட முடியும்.”
ஆம். தாம் இருந்த கையறு நிலை காரணமாக, இந்தக் கேள்விகளுக்கான பதில் என்ன என்பதை எம்ம்மால் முன்வைக்க முடியுமா? என்று கேட்டு முடியாது என்ற முடிவை நோக்கி அவர் செல்கிறார். அவர் தேடிக்கொண்ட வரலாற்றறிவு, அதன் காரணமான அரசியல் ரீதியான யதார்த்தம் பற்றிய அவரது கணிப்பீடு என்பவை அவரை நியாயமான கேள்விகளை எழுப்ப வைக்கின்றன, ஆயினும் அவற்றுக்கான விடை தேடலில், அவர் தனது முடிவு என்ன என்பதை தெரியாமலோ சொல்ல விரும்பாமலோ, அதை சொல்லாமல் விடவில்லை. ஏனென்றால், அதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் அங்கு வாழும் மக்களே என்பதை மிகத் தெளிவாக முன்வைக்கின்றார். ஆனால் மாறாக அதை சொல்ல நாமெல்லாம் யார். என்ற கேள்வியையும் பதிலாக அவர் தருகிறார். இதற்கு நாமிருந்த கையறு நிலையையும்
இவ்வாறு பல இடங்களில் நாம் இதை அவதானிக்கலாம்.
இது அவரது மொழியினதும் சிந்தனையினதும் முத்திரை. ஆனால் இந்த வகையான எழுத்து அவரை சமூக அரசியல் நியாயங்களின் போது, நியாயத்தின் பக்கம் நிற்பதை தடுத்துவிடவில்லை. தனது ஆதரவு நிலைப்பாட்டை அவர் தனக்கேயுரிய மொழியில் வெளிப்படுத்தத் தவறவில்லை தனது மாறுபாடான கருத்துக்களையும், விமர்சனம் சார்ந்த கேள்விகளையும் அவர் தமக்கேயுரிய மொழியில் முன்வைக்காமலும் இல்லை. சி.புஷ்பராஜா எழுதிய 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் 'பற்றிய நூல் தொடர்பான விமர்சனத்தில், அவர் சொல்லாது விட்ட விடயங்களின் பின்னால் இருக்கக்கூடிய அரசியலையிட்டு கேள்வி எழுப்புகிறார். புலம்பெயர் தேசங்களில் குறிப்பாக கனடாவில் நடந்த யுத்த ஆதரவு, மற்றும் பெண்களின் தாம் அணியும் ஆடைமீதான கருத்து போன்றவற்றை விமர்சிப்பதிலும், மக்களினதும்,பெண்களதும் உரிமை தொடர்பான நியாயமான பக்கத்தை சார்ந்து நின்று அவர் தனது கருத்தை முன்வைக்கிறார்.
000
இந்த நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையையும், இவை தொடர்பாக அல்லது இவை போன்ற விடயம் தொடர்பாக இவருக்கு முந்திய சந்ததியினர் எழுதியிருக்கக் கூடிய கட்டுரைகளை ஒப்பிட்டு வாசிப்பது ஒரு சுவாரசியமான, இரண்டு சந்த்தியினரதும் பார்வை,மொழி, சிந்தனை என்பவற்றின் தெளிவான வேறுபாட்டை அடையாளம் காட்டும் அனுபவத்தைக் காணலாம். இவற்றில் எது சிறந்ததென்று கூறுவதல்ல எனது நோக்கம், இந்த இரண்டு வேறுபாடுகளுக்கும் காரணமாக அமைந்த சமுக நிலவரம் பற்றி வலியுறுத்தவே இதை முன்வைக்கிறேன். இதன் முக்கிய வேறுபாடு, இவர்கள் எதையும் கண்மூடித்தனமாக நம்பத் தயராக இல்லை.
முன்னைய பரம்பரை,தமக்கு மிகத் தெளிவாக தெரிந்ததெனக் கூறும் எந்த விடயத்தையும் இவர்கள் கேள்வியின்றி நம்பத் தயராக இல்லை. தமது எந்தக் கருத்தையும் மாற்றுக் கருத்துக்கு இடம்வைத்து சொல்ல வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள். இதனால் இவர்கள் தமது கருத்திலேயே நம்பிக்கை அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதாக தோன்றும். ஆயினும் அவர்கள் அப்படிப் பேசுவதையே தெரிவு செய்கிறார்கள்.
இந்த நூலிலுள்ள எனக்குப் மிகப் பிடித்த கட்டுரையாக’வரலாற்றின் தடங்களில் நடத்தல்’ என்ற கட்டுரையைச் சொல்வேன்.
கிறிஸ்தோப்பர் ஒண்டாச்சியின் ’வூல்ப் இன் சிலோன்’ என்ற நூல் பற்றிய ஒரு முக்கியமான, விபரமான அறிமுகமாக இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஆங்கில நூல்களை இவ்வாறு தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது ஒரு வகையில் மிக முக்கியமான ஒரு பணி. இளங்கோ, தனது பயணங்கள், வாசிப்புகள், திரைப்படங்கள் பற்றிய குறிப்புக்கள் என்பவற்றினூடாக இத்தகைய ஒரு பணியைத் தொடர்ந்து செய்துவருகிறார். அவரது அத்தகைய எழுத்துக்களிலும் கூட, இளங்கோவின் இந்த மேற்சொன்ன முத்திரையைக் காணமுடியும். உதாரணமாக ஒண்டாச்சியின் நூல் பற்றிய இந்தக் கட்டுரையை முடிக்கையில் இவ்வாறு எழுதுகிறார்.
” காலனியாதிக்கம் நமக்கு நல்லதல்லாதவற்றை மட்டுமின்றி சில சந்தர்ப்பங்களில் நல்லதையும் நமக்குத் தந்திருக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ளமுடிகின்றது. ஆங்கிலம் ஆரம்பத்தில் உயர்சாதி மேல்வர்க்கங்களால் கற்கப்பட்டாலும், பின்னாட்களில் காலனியாதிக்கவாதிகளால் பரப்பப்பட்ட கிறிஸ்தவ மதம், மிஸனரிகள் மூலம் அது ஒரளவேனும் தாழ்த்தப்பட்ட மக்களையும் போய்ச் சேர்ந்து பரவலான கல்வியறிவை அவர்கள் பெற உதவிசெய்திருக்கின்றது. இதன்மூலம் தங்களுக்கு மட்டுமே சொந்தமென உயர்சாதிகள் (முக்கியமாய் யாழ்ச்சமூகத்தில்) கொண்டாடிய அறிவு/கல்வி அனைத்துச் சமூகங்களுக்கும் பகிரப்பட்டிருப்பது நல்லதொரு விடயமே. ஆனால் அதேசமயம் ஆங்கிலத்தைக் கற்பதாலும், ஆங்கில இலக்கிய/தத்துவ உரையாடல்களை அப்படி இறக்குமதி செய்வதாலும் மட்டுமே அறிவிஜீவிகள் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நமது தமிழ்ச்சமூகம் குறித்தும் நாம் யோசித்துப்பார்க்க வேண்டியிருக்கின்றது. காலனியாதிக்கத்தின் அரசியலை எப்படிப் புரிந்துகொள்வது என்ற உரையாடல்களை வளர்த்தெடுக்கும்போது, நாம் காலனியாதிக்கத்தின் தேவையற்ற எச்சங்களை உதிர்த்துவிட்டு தேவையான மிச்சங்களோடு நகரக்கூடிய ஒரு சுமுகமான சூழல் சிலவேளைகளில் அமையவும்கூடும்."
மேலே நான் காட்டியுள்ள விடயங்களில் வெளித்தெரியும் இளங்கோவின் முத்திரையான இந்த ஐயம் தோய்ந்த கருத்து வெளிப்பாட்டு நடைதான் அவரிடம் இருக்கும் தனித்துவம். கேள்விகளில் உள்ள வேகமும் உறுதியும், முடிவுகளில் அல்லது தீர்வுகளில் வெளிப்படாமல் இருத்தல் என்பது இந்தப் பரம்பரையினரிடையே ஆங்காங்கு நான் அவதானித்திருக்கிறேன். அவற்றை விவரிக்கும் இடம் இதுவல்ல ஆயினும் அது இயல்பானதும் நியாயமானதும் கூட. ஐயம் இன்றேல் தெளிவு இல்லை அல்லவா?
தொகுப்பிலுள்ள பல கட்டுரைகள் நான் ஏற்கனவே படித்தவை சில புதியவை. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் முக்கியமான சில இலக்கிய,அரசியல் மற்றும் சமூக நிலமைகள் பற்றிய எதிர்வினைகளை இந்த நூல் பேசுகிறது. இந்தக் கட்டுரைகள் முன்வைக்கும் கருத்துக்கள் உணர்வுகள் அவதானிப்புக்களுடன் உடன்படமுடியாத, மாற்று அபிப்பிராயங்களைக் கொண்டவர்களுக்கும் கூட ஒன்றிப்போன வாசிப்பனுபவத்தை தரக்கூடிய நூல் இது.
நூலில், மனதில் உறுத்திய ஒரே மாதிரியான தவறுகள் ஒருசில இடங்களில் வந்துள்ளன. எழுவாயும் பயனிலையும் ஒருமை பன்மைத் தவறைக் கொண்ட வசனங்கள் சிலவற்றையும் பார்த்தேன். இப்போதெல்லாம் இது ஒன்றும் பெரிய தவறல்ல என்று கருதும் போக்கு வளர்ந்து வருகிறது. ஆனால் இளங்கோ அந்தக் கருத்துடன் உடன்பாடுள்ளவரல்ல.என்பது எனக்குத் தெரியும் என்பதால் சொல்கிறேன் மற்றப்படி இந்த நூல் தீவிர வாசகர்களுக்கு மட்டுமல்லாது, ஒரு ஆரம்ப வாசகருக்குக் கூட பல முக்கியமான நூல்கள், படைப்பாளிகள், திரைப்படங்கள் போன்ற பல விடயங்களை அறிமுகப்படுத்தவும் செய்கிறது. அந்தவகையிலும் இது ஒரு முக்கியமான நூல் என்றே நினைக்கிறேன். ஆக, இளங்கோவின் தலைமையில் அவரது பேயாய் உழலும் மனம், அள்ளிவந்த விடயங்களிற்காக அதற்கு நன்றி சொல்வோம்.
--------------------------------------------------
('அம்ருதா' - கார்த்திகை, 2017)