கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Argentina Fans Kaattoorkadavu (மலையாளம்)

Sunday, July 28, 2019

டந்தவருடம் உலகக்கிண்ணக் கால்பந்தாட்டத்தின் இறுதியாட்டம் முடிந்த அடுத்த நாள் கேரளாவிற்கு விமானம் எடுத்திருந்தேன் நான் உலாத்தித் திரிந்த பாதை எங்கினும் கால்பந்தாட்டத்தை கேரளா எப்படிக் கொண்டாடியது என்பதற்கான எல்லா அடையாளங்களும்  இருந்தன. ஆர்ஜெண்டீனா அணியும், பிரேஸில் அணியும் இல்லாது ஒரு தெருச்சந்தியும் இல்லாததுபோல 'பிளெக்ஸ்'கள் நீலமும், மஞ்சளுமாக எங்கும் மினுங்கிக்கொண்டிருந்தன.

இந்தப் படத்தின் தலைப்பைப் போல இது கால்பந்தாட்ட இரசிகர்களின் கதை. 2010 உலகக் கிண்ணத்திலிருந்து 2018 உலகக்கிண்ண ஆட்டங்களை இரசிகர்களின் கொண்டாட்டங்களிலிருந்து ஒரு மெல்லிய காதலுடன் சொல்கின்ற படம்.   இப்படத்தின் முக்கிய பாத்திரம் தன் கனவுகளை/விருப்புக்களைக் கதைக்க ஒரு கற்பனைப் பாத்திரமாக கொலம்பியாவின் உதைபந்தாட்ட வீரர் எஸ்கோபரைக் கொண்டுவந்ததும் அருமையானது. கொலம்பியாவின் புகழ்பெற்ற எஸ்கோபர் 1994 உலகக்கிண்ணப்போட்டியில் own goal போட்டதால் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டவர். அவருக்கு ஆத்மசாந்திப் பூசையை தேவாலயத்தில் கொடுக்கவேண்டுமென இரவில் ஃபாதரை எழுப்பி பூசை செய்யக் கோருகின்ற ஒரு நிகழ்வுடனேயே திரைப்படமும் தொடங்கின்றது.

முக்கிய பாத்திரம் ஆர்ஜெண்டீனா இரசிகராகவும், அவர் காதலிக்கின்ற பெண் பிரேஸில் இரசிகராகவும் இருக்க முதற்பாதி கழிகின்றது. பின்னர் அந்தப் பெண் காதலிக்கின்ற ஒரு பிரேஸில் இரசிகரோடு பிணக்கு வந்து நம் நாயகன் இருக்கும் ஆர்ஜெண்டீனா அணியின் இரசிகராக மாறுவதும், அவரை உடனே தங்களுக்குள் எடுத்துக்கொள்ளாது நேர்காணல் எல்லாம் செய்து வடிகட்டி ஆர்ஜெண்டீனா இரசிகராக்குவதெல்லாம் இரசிக்கக்கூடிய காட்சிகள்.

ர்ஜெண்டீனா இரசிகர் குழுவும், பிரேஸில் இரசிகர் குழுவும் எப்போதும் எலியும் பூனையும் சண்டைபிடித்துக்கொண்டிருக்க, சட்டென்று 2014 ஜேர்மனி உலகக்கிண்ணக் கோப்பையை வென்றவுடன் கேரளாவில் ஜேர்மனிய புதிய இரசிகர் அணி தோன்றுகின்றது. இப்போது ஆர்ஜெண்டீனாக் குழுவுக்கு  ஜேர்மனிக் குழுவை சமாளிப்பது என்பது பிரேஸிலைச் சமாளிப்பதைவிட சிக்கலாகிவிடுகின்றது.2018 உலகக்கிண்ணக் கோப்பை நடக்கின்றபோது கதை முடிகின்றது. ஆர்ஜெண்டீனா இரசிகர்கள் ஆட்டங்கள் தொடங்கமுன்னர் தேசியகீதம் இசைக்கும்போது எழுந்து நின்று மரியாதை கொடுப்பதிலிருந்து, 'வாமோஸ் ஆர்ஜெண்டீனா' என்ற வெற்றிக்கோசம் இடுவதிலிருந்து, மெஸ்ஸிக்காய் கோயிலில் அர்ச்சனை செய்வதுவரை என அதி தீவிர இரசிகர்கள் இவர்கள்.

காற்பந்தாட்டங்களைப் பற்றிச் சொல்வதால் ஒரளவு சுவாரசியமாக இதைப் பார்க்கலாம் என்றாலும், Sudani from Nigeriaவின் படத்தைப் போன்ற அவ்வளவு சிறப்பான படமல்ல. அது உதைபந்தாட்டத்தோடு ஒரு வாழ்வியலையே நெகிழ்வாகச் சொன்ன படம். இத்திரைப்படத்தையும் அவ்வாறாக ஒன்றாக இரசிகர்களினூடு இன்னும் சுவாரசியமாக ஆக்கியிருக்கலாமென்றாலும் திரைக்கதையை வலுவாக்காது விட்டதால் அவ்வாறான சந்தர்ப்பத்தைத் தவற விட்டுவிட்டார்கள்.

கால்பந்தாட்டத்திற்கு நீங்கள் ஒரு இரசிகர் என்றால், அதுபோலவே உங்கள் காதலியோ/துணையோ இந்த ஆட்டங்களை உங்களோடு சேர்ந்திருந்து பார்த்து இரசித்திருப்பவரென்றால் அது வேறுவகையான உற்சாகத்தையும், மகிழ்வையும் தரக்கூடியது. அவ்வாறு உலகக்கிண்ணப் போட்டிகளை தம் நேசத்துக்குரியவர்களுடன் இருந்து இரசித்த அனுபவம் உள்ளவர்களை இந்தப் படம்  கட்டாயம் ஏதோ ஒருவகையில் கவரத்தான் செய்யும்.

தி.ஜானகிராமனின் 'அடி'

Friday, July 26, 2019

ஆண்- பெண் உறவுகள் என்பது எப்போதும் புதிர்த்தன்மை வாய்ந்தவை. புதிரை அவிழ்க்கின்றோம் என்று தம் உறவுகளுக்குள் போகின்றவர்களும் அதை இன்னுமின்னும் சிக்கலாக்குகின்றவர்களாகவே மாறுகின்றார்கள். ஆகவே இந்த எதிர்ப்பால் ஈர்ப்பு என்பது விந்தை நிறைந்ததாக காலம் காலமாக இழுபட்டபடியே இருக்கின்றது. தி.ஜானகிராமனுக்கு இந்தப் பாலின இச்சை ஏன் திருமணம் ஆகியபின்னும் வருகின்றது என்பது குறித்த நிறையக் கேள்விகள் இருந்திருக்கவேண்டும். ஆகவே அவர் எழுதிய பல்வேறு நாவல்களில் இதுவே முக்கிய பேசுபொருளாகின்றது.

'அம்மா வந்தாளில்' திருமணத்துக்குப் பிறகு அலங்காரத்தம்மாளுக்கு இன்னொரு உறவும் அதன் நிமித்தம் பிள்ளைகளும் பிறக்கின்றன. 'மரப்பசு'வில் அம்மணி ஏற்கனவே திருமணமான கோபாலியுடன் உறவை வைத்துக்கொள்கின்றார். 'உயிர்த்தேனில்' திருமணமான பூவராகவனுக்கு, செங்கம்மா மீது (அது உடல்சார்ந்து நிகழாவிட்டாலும்) காதலும் காமமும் இருக்கிறது. 'மோகமுள்ளிலும்', 'அன்பே ஆரமுதே'யிலும் கூட பால்யத்தில் நேசிக்கப்பட்டவர்கள் மத்தியவயதடையும்போது அவர்கள் தம் உடல்களைப் பரிமாறிய/பரிமாற விரும்பிய வேட்கைகள் இருக்கின்றன.

இவ்வகையில் தி.ஜா இறுதியாக எழுதிய நாவலெனச் சொல்லப்படும் 'அடி'யும் மேற்கூறிய நாவல்களின் பேசுபொருளை, மிகக் குறைந்த பாத்திரங்களுடன் பேசமுயல்வதைப் பார்க்கலாம். செல்லப்பா,  வறுமையின் நிமித்தம் வீட்டுவேலை செய்யும் தாயுக்குப் பிறந்தவர். பிற்காலத்தில் தாயும்,அவரும் இந்தத் தரித்திரத்தில் இருந்து விடுபடுகின்றனர். வடக்குக்குப் போய் நல்ல உத்தியோகம் பார்க்கும் செல்லப்பா, அவரின் அம்மாவையே பெண் பார்க்கச் சொல்கின்றார். திருமண நாளன்று வடக்கிலிருந்து வரும் செல்லப்பாவுக்கு அம்மா இப்படியொரு வசீகரமற்ற பெண்ணை ஏன் திருமணம் செய்துவைக்கின்றார் என்கின்ற கவலை இருக்கின்றது. செல்லப்பா தன் 'வேண்டா' மனைவியுடன் வடக்குக்குப் போகின்றார். தாயும் ஊரில் ஒரு வீட்டை செல்லப்பாவின் உதவியுடன் கட்டிக்கொள்கின்றார்.

அவ்வப்போது ஊருக்கு மனைவி, பிள்ளைகளுடன் வரும் செல்லப்பா அங்கே வறுமையில் வாழும் பட்டு என்கின்ற பெண்ணுக்கும், அவரது கணவரான சிவசாமிக்கும் உதவி செய்கின்றார். அவர்களும் செல்லப்பா குடும்பத்தோடு வடக்குக்கு குடிபெயர்ந்து நல்லதொரு வாழ்வை அமைத்துக்கொள்கின்றார்.

இதுவரை 'நல்லவராகவே' இருந்துவிட்ட செல்லப்பாவுக்கு, பட்டு தன் வறுமையிலிருந்து வெளிவந்து செழுமையில் தளும்ப, ஆசை நுரைக்கின்றது. அந்தக் காதலையும், காமத்தையும் தி.ஜா மிக இயல்பாகவே எழுதிச் செல்கின்றார். ஆணாகிய செல்லப்பாவுக்கு இருக்கும் தேவையற்ற குற்றவுணர்வு கூட, அவரோடு உடலைப் பகிரும் பட்டுவுக்கு இருப்பதில்லை. காமம் என்பது தேடும்வரைதான் சுவாரசியம், கிடைத்தபின் எப்போது அதிலிருந்து விலகியோடலாம் போலத் தோன்றும் எனத் தெளிவாகப் பேசுகின்றவராகவே பட்டு இருக்கின்றார். மோகமுள்ளில் இது பாபு யமுனாவின் உடலைச் சுகித்து முடிக்கின்றபோது 'இதற்குத்தானா' என்கின்ற ஒருவகைச் சலிப்பை நாம் இங்கே நினைவுகூர்ந்தும் கொள்ளலாம்.

எப்போது இந்த உறவை முடிப்பது என்ற தெளிவின்மையால், இனிச் சுவாரசியம் இல்லை என இருவரும் சொன்னாலும் அதற்குப் பிறகும் உறவு இருவருக்குமிடையில் தொடர்கின்றது. ஒருகட்டத்தில் செல்லப்பாவின் மனைவி மங்களம் இதைக் கண்டுபிடிக்கின்றார். மங்களம் மீது மதிப்பிருக்கும் பட்டு எவ்விதத் தயக்கமுமில்லாது செல்லப்பாவோடு தனக்கிருக்கும் உறவை ஒப்புக்கொள்கின்றார். செல்லப்பா -மங்களத்தின் ஆன்மீகக்குருவைப் போல இருக்கின்ற மங்களத்தின் மாமாவின் முன்னிலையில்-  தன் பிள்ளைகளையும் சாட்சியமாக வைத்து, தனக்கு பட்டுவுடன் 'தகாத' உறவு இருந்ததெனச் சொல்லி பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்கின்றார்.

தி.ஜானகிராமன், திருமணத்துக்குப் பிறகு வரும் உறவை பல்வேறுபட்டவர்களின் பார்வையில் நின்று அவரது நாவல்களில் பார்த்திருக்கின்றார். அவரின் அநேகமான பாத்திரங்கள் 'அந்த நேரத்து நியாயம்' எனத்  தம் இச்சையைச் சொல்லிக்கொள்ளவும் தயங்காதேயிருக்கின்றார்கள். ஆனால் தி.ஜாவின் இந்தக் கடைசிநாவலில் அது 'அந்த நேரத்து நியாயமாக' இருந்தாலும், மனமுருகி பொதுவெளியில் மன்னிப்பைக் கோருகின்றார்கள். ஒருவகையில் 'அடி'யில் தான், தி.ஜா இதுவரையான நாவல்களில் ஆராய்ந்து பார்த்த விடயத்துக்கு பொதுச்சமூகம் விரும்பும் ஒரு முடிவைச் சிபார்சு செய்கின்றாரோ போலவும் தோன்றுகின்றது.

பட்டுவின் பாத்திரத்தை விட பெரிதாகச் சிலாகிப்பதற்கு இதில் எதுவும் இல்லையெனினும், 'அடி'யையும் வாசிப்பதினூடாக தி.ஜாவின் படைப்புலகம் பற்றிய  முழுமையான ஒரு சித்திரத்தை நாம் நிறைவுசெய்து கொள்ளலாம்.


(July 05)

கோடைப் பயணம்

கோடை வந்தால் மனம் எங்காவது வெளியில் சென்றுவிட ஏங்கும். வெயிலின் பிரகாசமும், பறவைகளின் சிறகடிப்பும், மரங்களின் பசுமையும் இயற்கையின் விந்தைகளைச் செப்பிச் செல்லும். ஐம்பெரும் வாவிகளெனும் உலகின் பிரமாண்டமான வாவிகளைக் கொண்ட ஒரு மாகாணத்தில் வாழ ஒருவகையில் நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒன்ராறியோ வாவியை வழமைபோல முக்கால்வாசி தொழிற்சாலைக் கழிவுகளால் மாசுபடுத்திவிட்டோம். மற்ற ஏரிகள் இன்னும் நம்மைக் கைவிடாது குளிப்பதற்கும், கும்மாளமிடுவதற்கும், உலாத்துவதற்குமாய் இருக்கின்றன.

எனக்குப் பயணம் செய்யப்பிடிக்கும். ஆனால் எல்லா நேரங்களிலும் இல்லை. பயணத்தை விட வாசிப்பில் மூழ்க இன்னும் பிடிக்கும். இந்த வாரவிறுதியில் பெரிதாக எதையும் திட்டமிடவில்லை. ஆனால் அருமையாகக் கழிந்திருந்தன . வெகுதொலைவுக்குப் பயணிக்காமல் பார்ப்பதற்கு அருமையான இடங்கள் அருகிலேயே இருக்கின்றன. நம்மில் பலருக்கு அவற்றைத் தேடிப்போவதற்குப் பொறுமையில்லை அல்லது ஒரு குறிப்பிட்ட இடங்களுக்கே திரும்பித் திரும்பிப் போவார்கள்; அதிலொன்று நயாகரா.

சனிக்கிழமை 150 கிலோமீற்றர்கள் பயணித்து Port Dover போக முடிந்தது. ஒன்ராறியோவில் இங்கே Palm Trees முதன்முதலில் கண்டபோது வியப்பாயிருந்தது. இந்தவகை மரங்கள் கனடாவின் காலநிலைக்கு உரியவை அல்ல. நான்கு மாதங்கள் மட்டுமே கோடை இருக்கும் ஒரு நாட்டில் இதைக் காண்பது அதிசயம். எங்கிருந்தோ கொண்டு வந்து நட்டிருந்தார்கள். காலிமுகத்திடலில் ராஜபக்ச சகோதரர்கள் வளர்ந்த பனைமரங்கள் போல ஆகாவிட்டால் சரி.

Erie வாவிக்கரை நடை, மீனும் உருளைக் கிழங்கும் சேர்ந்த இரவுணவு, இடையில் ஜஸ்கிறிம் சுவைத்தல் என பொழுது உலாத்தலும் கதைத்தலுமாகக் கழிந்தது. திரும்புகையில் சோவென்று பெய்யத் தொடங்கிய மழையும் அவ்விரவுக்கு அழகு கொடுத்தது.

அடுத்தநாள் ரொறொண்டோ நடுப்பகுதியில் இருக்கும் Leslie Pit ற்குப் போக முடிந்தது. 1950களில் துறைமுகமாக நீட்சிக்க இருந்த பகுதியில் பிறகு நகரசபை தனது கட்டுமானக் கழிவுகளைக் கொட்ட ஒருவரும் பாவிக்கமுடியாத பகுதியாக நெடுங்காலமாக இது இருந்திருக்கின்றது.. இப்போது அந்தக் கழிவுகளிலிருந்து ஒரு அற்புதமான இயற்கைச் சூழலை உருவாக்கியிருக்கின்றனர்.. ஒன்ராறியோ வாவியின் கரையில் அமைந்திருக்கும் இங்கிருந்து கனடாவின் உயரமான சி.என்.என் டவரை வேறொரு கோணத்தில் பார்க்கலாம். சைக்கிளோடுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த இடம் தவறவிடக்கூடாத ஒன்று. இப்போது நிறையப் பறவைகளுக்கான வாழ்விடமாக இது மாறியிருக்கின்றது.

இங்கு ஒரளவு உலாத்திவிட்டு வூட்பைன் பூங்காவில் நடந்த Afro Festivalற்குப் போய் இசையோடும் நடனங்களோடும் ஆபிரிக்கன் ஸ்டைல் கோழிக்கறியோடு சோற்றை வெட்டிவிட்டு வந்தால் சொர்க்கத்தை நினைத்தெல்லாம் கனவு காணத்தேவையில்லை.

இப்படி இரண்டு நாட்களும் வெவ்வேறு ஏரிக்கரையில் நின்றபோது
ஐஸக் அஸிமோவ் எழுதியது ஒன்றுதான் நினைவுக்கு வந்தது:


மகிழ்ச்சி என்பது சிலவேளைகளில் நீங்கள் எங்கையோ போய், எதையாவது செய்துகொண்டோ, யாருடனோ இருக்கவேண்டும் என்று உணராமல் இருக்கச் செய்வதாகும். எளிமையாகச் சொல்வது என்றால் ஓரிடத்தில் இருந்துகொண்டு இன்னொரு இடத்தை/இன்னொரு நபரை/இன்னொரு விடயத்தை நினைக்காமல் இருந்தீர்கள் என்றால் நீங்கள் இந்த இடத்தில் இந்தக் கணத்தில் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள் என்பதாகும்.

கடந்த இரண்டு நாட்களிலும் அப்படித்தான் இருந்தேன்.

(July 08)

சிற்றிதழ்கள்: 'காலம்' மற்றும் 'அம்மா'

Sunday, July 14, 2019


மிழில் சிற்றிதழ்கள் சில குறிப்பிட்ட எழுத்தாளர்கள் எழுதுவதற்கெனத் தொடங்கப்பட்டிருக்கின்றது (வெங்கட் சாமிநாதன், பிரமிள், சுந்தர ராமசாமி). அதேபோல சில எழுத்தாளர்கள் ஒரு குறிப்பிட்ட சிற்றிதழோடு வளர்ந்துமிருக்கின்றார்கள். உதாரணத்திற்கு 'காலம்' தொடக்க இதழ்களில் (90-95) குமார் மூர்த்தியும், 'அம்மா' இதழ்களோடு ஷோபாசக்தியும் படைப்பாளிகளாக பரிணமிப்பதை நாம் அவதானிக்கலாம்.

1990-95ம் காலப்பகுதியில் காலம் - 10 இதழ்களைப் புரட்டினால் பல சுவாரசியமான விடயங்களை நாங்கள் பார்க்கலாம். முதலாம் இதழிலேயே சுகுமாரனின் கவிதையையும், அவர் மொழிபெயர்த்த பிற கவிதைகளையும் பார்க்கலாம்.  இரண்டாம் இதழில் 'கடவுளின் கடந்த காலம்' - கோபி கிருஷ்ணனின் கதை வருகின்றது. அதேபோல 'அரைக்கணத்தின் புத்தகம்' என்கின்ற சமயவேலின் கவனிக்கத்தக்க கவிதையும் 2ம் இதழில் இருக்கிறது. அடுத்தடுத்த இதழ்களில் எஸ்.ராமகிருஷ்ணனின் 'தாவரங்களின் உரையாடல்' கதை இருக்கின்றது. காலம் இதழில் ஜெயமோகன் நுழைந்தது ஒரு காதல் கவிதை ஊடாக.  நாம் எதையெழுதினாலும் எங்களைப் பாராட்டும் 'காலம்' செல்வம், அன்று ஜெயமோகனையும், நீங்களொரு நல்ல காதல் கவிஞரென  உசுப்பேத்தியிருந்தால் நமக்கு நல்லதொரு கவிஞர் (மட்டும்) கிடைத்திருப்பார். அருந்தப்பில் வரலாறு பிசகிவிட்டது.

ஒன்றுசேர்ந்து வந்த 'காலம்' இதழ் 3-4ல் ஜி.நாகராஜனின் 'குறத்தி முடுக்கு' மீளப் பிரசுரமானது முக்கியமானது. இப்போது அந்தக் குறத்தி முடுக்கு கிடைப்பதே அரிதென்ற குறிப்புடன் அது பிரசுரமானதோடு, (கோணங்கியிடம்) இருந்த பிரதியில் கடைசிப்பக்கம் இல்லாததால் அது இல்லாமலும் பிரசுரமாயிருக்கின்றது. பின்னர் 5 வது இதழில் சுரேஷ்குமார இந்திரஜித்தின் உதவியுடன் விடுபட்ட பகுதி பிரசுரமாயிருக்கின்றது என்பது சுவாரசியமானது.

பின்னாட்களில் காலத்தில் வெளிவந்த படைப்புக்களில் தலைப்புக்களிலேயே எஸ்.ரா 'தாவரங்களின் உரையாடல்' என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுப்பையும், சமயவேல் 'அரைக் கணத்தின் புத்தகம்' என்ற பெயரில் கவிதைத்தொகுப்பையும் வெளியிட்டதையும் நாமறிவோம்.

1990ம் ஆண்டிலிருந்து இற்றைவரை (கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகவும் போகிறது) எவ்விதச் சலிப்புமில்லாது, இன்னமும் சிற்றிதழின் வேரையும் இழக்கவிரும்பாது காலத்தைக் கொண்டுவரும் செல்வத்தின் உழைப்பு -அனைத்து விமர்சனங்களையும் தாண்டி- சிலாகிக்கவேண்டியதுதான். இன்று எந்த இதழைத் தொடங்கினாலும், அடுத்தடுத்த இதழ்களிலேயே ஆசிரியர் குழுக்களில் உள்ளவர்கள் திசைக்கொன்றாய் ஓடுவதைப் பார்க்கும்போதும், இதழ்கள் படைப்புக்களின் செழுமையில்லாது சேடமிழுக்கும்போதும், செல்வத்தின் பொறுமை மீது ஒருவகைப் பொறாமைதான் வருகின்றது.

தேபோன்று தமிழ்ச்சூழலில் எந்தச் சிற்றிதழாவது, சிறுகதைகளுக்காய் மட்டும் நடத்தப்பட்டதா என்பதை நான் அறிவேன். ஆனால் பாரிஸிலிருந்து அப்படி 90களின் நடுப்பகுதியில் 'அம்மா' வந்திருக்கின்றது. தனியே சிறுகதைகளுக்கும், அதுகுறித்த உரையாடல்களுக்கும் என்று அந்தக் காலப்பகுதியில் தொடங்குவதற்கு ஒரு 'திமிர்'த்தனம் கட்டாயம் தேவைப்பட்டிருக்கும். அதைத் தொடங்கியவர் மனோ (புவனன்).
அத்தோடு தனது கதைகளைக்கூட கதைகளாக வராமல் ஏன் சிலவேளைகளில் அனுபவங்களாக மட்டும் தேங்கிவிடுகின்றன எனவும் (அ.இரவியுடன்)  பொதுவெளியில் விவாதிக்கின்றார்.

ஷோபாசக்தியின் கதைகள்/கட்டுரைகள் இல்லாது வந்த 'அம்மா' ஓரிதழ் மட்டுமே என்று நினைக்கின்றேன். 8வது இதழிலிருந்து கவிதைகளுக்கும், நாடகத்திற்கும் இடங்கொடுத்து விரைவில் 'அம்மா' தன் ஆயுளை அதன் பிறகு சில இதழ்களோடு முடித்துவிடுகின்றது. மனோ, பார்த்திபன், அ.இரவி போன்றோர் அனுபவமுள்ள படைப்பாளிகளாக அப்போது இருந்தாலும், புதியவராக வரும் ஷோபாசக்தியின் கதைகளை மனமுவந்து (சிலவேளைகளில் தம் கதைகளை விட சிறந்தது என்று கூட) பாராட்டுவதை  'அம்மா' இதழ்களை வாசிக்கும்போது அறியலாம். அப்படிச் சக/புதிய படைப்பாளியைப் பாராட்டும் ஒரு சூழல் இன்று அருகிப்போயிருப்பதைக் காணமுடியும். ஷோபாசக்தி போல, ஓட்டமாவடி அறபாத்தும், அ.இரவியும் நிறையக் கதைகளை 'அம்மா'வில் எழுதியிருக்கின்றனர்.

அதிசயமாக ஜெயமோகன் (கிழக்கு மேற்கும் தொகுப்புப்பற்றி எழுதும்போது)அதில் வந்த அ.முத்துலிங்கத்தின் கதை அனுபவமாக மட்டும் தேங்கிவிட்டது என்று 'உள்ளதை உள்ளபடி சொல்கின்றார். அந்தக் காலத்தில் எடுக்கவா கோர்க்கவா என்ற அ.மு-ஜெயமோகன் , துரியோதனன்-கர்ணன் போன்ற நட்பாக இல்லாததையெல்லாம் பார்த்து, ஆ அந்தக்காலம் மலையேறிப் போச்சுதே என்ற பெருமூச்சு வருகின்றது.

ஜெமோ எழுதியது:
"அ.முவின் கதை சுவாரசியமான சித்தரிப்பாக இருந்த அளவுக்கு மனத்தூண்டலை தருவதாக இல்லை. ஆக்கம் அழிவு என்ற இரு இயக்கங்கள் பரஸ்பரம் பொருந்தப்போவதை, கூற அவர் முற்பட்டிருக்கலாம். ஆனால் அது அழுத்தமாகச் சித்தரிக்கப்படவில்லை. நிறைய சாத்தியங்கள் கொண்ட கரு அரட்டைப்பாங்கான சித்தரிப்பால் தவறிவிட்டது என்ற வருத்தம் ஏற்படுகிறது."

அதிசயமாக யமுனா ராஜேந்திரனின் கதையொன்றைக் கூட இதில் வாசிக்கலாம். அ.இரவியின் கதைகள் தொகுக்கப்பட வேண்டும் என்று நட்சத்திரன் செவ்விந்தியன் மனமுருகி வேண்டுகின்றார். இப்படி எத்தனை எத்தனை 'வரலாற்று'ச் சம்பவங்கள்.

சிற்றிதழ்கள் முக்கியமானவை என்றே எப்போதும் சொல்லிவருகின்றேன். எனக்கு 2000களின் தொடக்கத்தில் கவிஞர் திருமாவளவனினால் அறிமுகப்பட்ட 'உயிர்நிழல்' இதழ்கள், வாசிப்பின் புதிய திசைகளைத் திறந்துவிட்டிருந்தது. அதில் அரைவாசிப்பக்கங்களில் அக்கப்போர்கள் நடந்துகொண்டிருந்தாலும், வேறு நல்ல விடயங்களும் புதிதாய் ஒரு வாசகர் அறிந்துகொள்வதற்கு வந்துகொண்டிருந்தன. எழுத விரும்புபவர்க்கும், தம்மை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்க்கும் சிற்றிதழ்கள் கொடுக்கும் சுதந்திரம் அளப்பரியது. அதைவிட சில எழுத்தாளர்கள் தம் விம்பங்களையோ/பிரதிகளையோ புனிதமாக உருவாக்கும்போது, அதைக் கட்டவிழ்ப்பதற்கும் சிற்றிதழ்களே நமக்குத் தேவைப்படுகின்றன.

(July, 2018)

இமையத்தின் 'செல்லாத பணம்'

Friday, July 12, 2019

வாழ்க்கை நாம் நினைத்த எந்த ஒழுங்கிலும் போவதில்லை. எவையெல்லாம் அடுத்து நிகழும் என்பதும் நமக்குத் தெரிவதில்லை. சம்பவங்கள் ஒவ்வொன்றும் நடந்தபின்னும் இப்படி நடந்திருந்தால் அல்லது நடக்காதிருந்தால் என்னவாகியிருக்குமென பின்னோக்கிப் பார்க்க மட்டுமே மனிதர்களாகிய நம்மால் முடியும். 'செல்லாத பணத்திலும்' ரேவதி தீக்குளித்து வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்படும்போதுதான் நமக்குத் தெரிகிறது. அவ்வாறு ரேவதி தீக்குளிப்புடன் போராடும்போது அவரோடு சம்பந்தப்பட்ட மனிதர்கள் தீக்குளிப்பு நடக்க முன்னர் நடந்த நிகழ்வுகளை ஒவ்வொரு திசைகளிலிருந்து அசைபோடுகின்றனர், உரையாடுகின்றனர். ரேவதியின் இந்த நிலைக்காகக் கோபப்படுகின்றனர், பரிதாபப்படுகின்றனர், இரக்கம் கொள்கின்றனர், இறுதியில் தாம் ரேவதியின் இந்த நிலைக்குக் காரணமில்லையென பிறரின் மீது விரலைச் சுட்டித் தம் குற்ற உணர்வுகளைத் தாண்டிச் செல்லவும் முயல்கின்றனர்.


பணத்திலும் சாதியிலும் ஆதிக்கத்திலிருக்கும் ஒரு குடும்பப் பின்னணியில் பிறந்த ரேவதி, பர்மாவிலிருந்து அகதியாக வந்த ஆட்டோக்காரான ரவியோடு ஒருநாள் ஓடிப்போகின்றார். அவ்வாறு ஓடிப்போய், இரண்டு குழந்தைகளின் தாயுமாகிய ரேவதி ஆறுவருடங்களின் பின் தீயில் கருகின்றார். அவரது வன்முறையான கணவனான ரவியால் தீமுட்டிக் கொல்லப்பட்டாரா, ரேவதி தன்னைத்தானே தீமூட்டினாரா, அல்லது தற்செயலாக தீவிபத்து ஏற்பட்டதா என்பது கதையும் முடிவுவரை நமக்கு, இமையம் தெளிவாகச் சொல்வதில்லை. கதையின் நீட்சியில் அவரவர் அவரவர்க்கான முடிவை எடுத்துக்கொள்ளலாம் அல்லது எந்த முடிவையும் எடுக்காது ரேவதி நம் மீது சுமத்திவிட்டுச் செல்லும் பெருஞ்சுமையுடனும் சென்றுவிடலாம். இந்த இடைவெளி அல்லது தெளிவின்மையே செல்லாத பணத்தை முடிவுவரை தொடர்ந்து வாசிக்க வைக்கின்றது.

இமையத்தின் எழுத்து நடையின் பலமும் பலவீனமுமாக இருப்பது அவர் உரையாடல்களின் மீது அதிக நம்பிக்கை கொண்டு அவற்றினூடு தன் படைப்புக்களை வழிநடத்திச் செல்வதாகும். இந்த நாவல் ஒரு குறுகிய பின்னணியில் (வைத்தியசாலையில்), ஒரு குறுகிய காலப்பகுதியில் (சில நாட்கள்) நடக்கின்றபோதும், இமையம் உரையாடல்களை வீரியமுள்ளதாகக் கொண்டுசெல்வதைக் குறிப்பிட்டாக வேண்டும் ('எங் கதெ'யில் இவ்வாறான உரையாடல்கள் எனக்குப் பலவீனமாகத் தெரிந்ததை முன்னர் குறிப்பிட்டிருக்கின்றேன்). எவர் மீதும் வலிந்து குற்றஞ் சாட்டாமல் அல்லது எவரையும் குற்றத்திற்கு ஆளாக்காமல் ரேவதியோடு அதிக நெருக்கமாக இருக்கும் ஒவ்வொரு பாத்திரத்தையும் அவரவர்களின் குரல்களிலேயே பேசவிட்டிருப்பது செல்லாத பணத்தை கவனிக்கத்ததொரு படைப்பாக்கின்றது.

இவ்வளவு வசதியும், படிப்புமுடைய ரேவதி ஏன் ரவி போன்ற ஒருவரைத் தேர்ந்தெடுக்கின்றார் என்பதற்கான காரணங்கள் நம் தர்க்கநியாயங்களுக்கு அப்பாற்பட்டவையாகவும், இவ்வாறு தனது குடும்பம், படிப்பு, வசதி போன்றவற்றைத் துறந்து வரும் ரேவதியை ஏன் ரவியாலும் புரிந்துகொள்ளமுடியாது பிறகு வன்முறையை ரேவதி மீது ஏவுகின்றார் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ளமுடியாதே இருக்கின்றது. இறுதியில் இந்தப் பணத்தை வைத்து எதையும் பெற்றுவிடமுடியாது என்றும், காசு 'பாதாளம் வரை பாயாது', அதற்கும் கூட ஒரு எல்லை உண்டு என்பதும் இந்நாவலை வாசிக்கும் நமக்கு உணர்த்தப்பட்டிருக்கும்.

செல்லாத பணம் நாவலில் விடுபட்ட (அல்லது இப்படி நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதே) இம்மாத (ஜூலை) தடம் இதழில் வந்த இமையத்தின் 'அம்மாவின் விரதம்' கதை எனச் சொல்லலாம். இங்கேயும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவருடன் ஓடிப்போன பெண் தன்னிரு குழந்தைகளுடன் ஆறுவருடங்களின் பின் வீட்டுக்கு வருகின்றாள். அப்படிக் குழந்தைகளுடன் வரும் தன் மகளைத் தாயார் மாட்டுக்கொட்டகையில் வைத்து எப்படி வழிமறித்து திருப்பி அனுப்பிவிடுகின்றார் என்பதும் அதனூடாக அம்மா என்கின்ற 'புனிதப்பாத்திரம்' கூட சாதி வெறியில் உழல்வதை இன்னொரு மகள் உணர்ந்துகொள்கின்றதுமாகக் கதை நீளும்.

இமையத்தை முழுமையாக நான் வாசிக்காவிட்டாலும், அவரின் வாசித்த படைப்புக்களில் - முக்கியமாய் பல கதைகள்- இப்படிப் பெண்கள் யாரோ ஒரு சாதி குறைந்த ஆண்களோடு ஓடுவதுபோலவும், அவர்கள் ஓடிப்போவதினூடாக வாழ்வே அழிந்தே போனவர்கள் என்கின்ற ஒரு காட்சி அடிக்கடி வருவது போலவும் தோன்றுகின்றது. இமையம் இவ்வாறான கதைகளினூடாக சாதியின் கொடூரத்தைச் சொல்ல விரும்பினாலும், அவர் இனிவரும் காலங்களில் இவ்வாறு சாதி மாறி ஓடியவர்களும், திருமணம் செய்தவர்களுமாகிய பலர் அற்புதமான வாழ்வை வாழ்கின்றார்கள் என்பதையும் முன்வைக்கவேண்டும். ஏனெனில் சாதி வெறியர்களுக்கு அவர்களின் சாதியின் திமிரை மட்டுமே நினைவூட்டாது, சாதியைத்தாண்டி ஓடிச்சென்று வாழும் மனிதர்களின் அருமையான வாழ்வென்பதும் இவ்வெறியர்களின் முகங்களின் மீது திரும்பித் துப்புகின்ற எச்சிலாகக்கூடவும் இருக்கும் அல்லவா?
...........................

(July, 2019)