கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கலாதீபம் லொட்ஜ்

Friday, August 23, 2019

க இனமொன்றின் மீது  தேவையற்ற காழ்ப்புணர்வுடன் முதல் நாவலை எழுதிய ஒருவர், தனது அடுத்த நாவலில் மீண்டு வருவது என்பது எல்லோருக்கும் நிகழ்வதில்லை. அந்த வகையில் வாசு முருகவேலுக்கு 'கலாதீபம் லொட்ஜ்' மூலம் சாத்தியமாகியிருப்பது சற்று வியப்பாக இருக்கிறது. யாழ்ப்பாணத்தின் தீவுகளில் ஒன்றான நயினாதீவிலிருந்து, போர் நிமித்தம் கொழும்புக்கு வந்து தங்கி கனடாவுக்கு வந்து சேரும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதையை, சிறுவன் சந்திரனின் பார்வையிலிருந்து இந்தப் பனுவல் பேசுகிறது. சாதாரண பாதைகளினால் வரமுடியாது, கப்பலினால் திருகோணமலைக்கு சென்று, அங்கிருந்து கொழும்புக்கு வந்து லொட்ஜியில் தங்கிநிற்கும்போது சந்திரனின் அனுபவங்களினூடாக 90களின் பிற்பகுதியிலான ஒரு காலம் இங்கே பேசப்படுகின்றது.

வாசு முருகவேல் 'ஜப்னா பேக்கரியில்' ஒருவித முன்முடிவுகளுடன் சக இனத்தை எதிர்முனையில் வைத்துப் பேசியதைப் போலில்லாமல், இதில் வியாபாரத் தெருக்களில் சந்திக்கும் சிங்களப்பெரியவரையும், கிரிக்கெட் விளையாடும் சிங்களப் பையனையும், விளையாட்டின் நடுவராக இருக்கும் குடு தர்மபாலாவையும் அவர்களின் இயல்பில் பேசவிட்டிருப்பதோடு, பிரேமதாசா எப்படி உழைக்கும் தொழிலாளிகளின் அடையாளமாக அவரின் இறப்பின் பின்னும் இருக்கின்றார் என்பதையும்  பதிவு செய்திருக்கின்றார்.

தாயை இழந்த சிறுவனான சந்திரனுக்கு, அக்காவோடு இருக்கும் நெருக்கமும், கள்ளுக்குடித்து வயிறு வளர்ந்த தன் தந்தையை எள்ளல் செய்வதும் என்று ஒரு சிறுவனின் உலகம் அழகாக இந்த நாவலில் விரிந்திருக்கின்றது. முற்றுமுழுதாக போரின் நிமித்தம் கிராமங்களிடையே அடைபட்ட சிறுவர்க்கு, கொழும்பும் அதனைச் சுற்றிய நகர்களும் எவ்வளவு அதிர்ச்சியையும், வியப்பையும் முதன்முதலில் தரும் என்பதை பதின்ம காலங்களில் போரின் நிமித்தம் கொழும்புக்குச் சென்று வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட என்னைப் போன்றோர் நன்கு அறிவோம். 

வீட்டுக்குள்(லொட்ஜுக்குள்) வந்து  நடக்கும் இராணுவச் சோதனைகள், சுற்றிவளைப்புக்கள், அதிக இடங்களுக்கு வெளியே செல்லமுடியாத புறச்சூழல் என்பவற்றால் கொழும்பு லொட்ஜ் வாழ்க்கை சுருங்கினாலும், சந்திரனும், அவனது சகோதரியான தாரிணியும் அந்த வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்றும், தோட்டம் செய்து சுதந்திரமாக வாழும் விசாகருக்கு அது எவ்வளவு துயரமாக மாறுகின்றது என்பதுவும் எளிய வர்ணனைகளால் வாசிப்பவருக்கு கடத்தி வரப்படுகின்றது.

சிறுவனின் பார்வையால் விரிகின்றதாலோ என்னவோ, இந்தக் கதையின் மாந்தர்களின் மனிதாபிமான பக்கங்களை, அவர்களுக்கு இருக்கும்/இருக்கக்கூடிய இருண்ட பக்கங்களை விலத்திச் சொல்லப்படுவது வாசிக்கும் நம்மையும் லொட்ஜுக்குள் ஒரு பாத்திரமாக்கின்றது. தற்கொலை குண்டுதாரி, காதல், காதலினால் மூன்றாம் மாடிக்கு அழைத்துச் செல்லப்படல், அப்பாவியாய் மகஸின் சிறைக்குள் அடைப்பட்ட மகன் திரும்பி வந்துவிடுவார் எனத் தேடும் தாயார்,  அவர் தன் துயரை மறைத்து மற்றவர்களுக்கு உதவும் மனிதாபிமானம் என்பவை இந்த நாவலில் இயல்பாக வந்திருக்கின்றது. அநேகமான நம் கதைகளில் எதிர்மறைப் பாத்திரமாக வரும் லொட்ஜ் மானேஜர் கூட ஈரத்தன்மையுடையவராகவே இங்கே இருக்கின்றார்.

கனடாப் பயணங்களுக்குச் செய்யும் சுத்துமாத்துகள். வைத்திய சோதனையில் வைத்தியர்களையே ஏமாற்றும் சாதுர்யம் என்பவை போகின்றபோக்கில் சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு பயணமும் எவ்வளவு கடுமையானது என்பதை இவ்வாறான அனுபவங்கள் ஏதுமில்லாத ஒருவர் கூட இந்தப் புதினத்தை வாசிப்பதினூடாக உணர்ந்துகொள்ளக்கூடும்.

இப்போது ஈழம்/புலம்பெயர்ந்து எழுதப்படும் நாவல்கள் நூற்றுக்கணக்கான பக்கங்களில் எழுதப்படுவதையும் அதை வாசிக்கும்போது வரும் சோர்வையும் தொடர்ந்து கூறிக்கொண்டிருப்பவன் என்றவகையில் இந்தநாவல் 150 பக்கங்களுக்குள்ளேயே முடிந்திருப்பதும் மகிழ்ச்சி தரக்கூடியது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழும் அனுபவங்களுக்கு இதுவே போதுமானது. நம்மவர் பலருக்கு புனைவுகளில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் தேவையில்லாமலே மொழியைச் சிக்கலாக்குவது. அதைக் கூட வாசு முருகவேல் இதில் தாண்டியிருப்பது குறிப்பிடவேண்டியது.

கடந்த வருடத்தில் வந்த நம்மவரின் புனைவுகள் ஏதும்  குறிப்பிடும்படியாக இல்லை என்ற ஏமாற்றத்தை, ஒரு சிறு வெளிச்சம் போல வந்து 'கலாதீபம் லொட்ஜ்' நம்பிக்கை தருகின்றது. துவேஷம் நிறைந்த முதல் நாவலை எழுதிய ஒருவர் தனது அடுத்த நாவலில் அதைத் தாண்டி வருவது அவ்வளவு எளிதல்ல. வாசு முருகவேல் தனது முதல் நாவலின் சரிவை இதில் ஒரளவு நேர்செய்திருக்கின்றார். இன்னும் அவர் அவரது அரசியல் பார்வைகளை விரித்துச் செல்லும்போது கவனிக்கத்தக்கதொரு எழுத்தாளராகவும் அவர் விரைவில் மாறிவிடக்கூடும்.
.................................

(சித்திரை, 2019)

0 comments: